Friday, 1 April 2011

உடலை எழுதுதலும் பெண்ணைக் கொண்டாடுதலும்


- முனைவர். க. இந்திரசித்து (இந்தியா)
--------------------------------------------------------------------------------------------------------

அண்மைக்கால நவீன பெண்ணியக் கவிஞர்கள் உடல் அரசியலையும் பெண் விடுதலையையும் எழுதுவதை முதன்மையான பாடு பொருளாகக் கொண்டுள்ளனர். சிலர் வெளிப்படையாகவும், சிலர் மறைமுகமாகவும் பாலியல் வேட்கையைப் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களிலிருந்து மாறுபட்டு புதிய கண்ணோட்டத்தில் பெண் உடலைப் பாடுவதிலும் பெண்ணைக் கொண்டாடுவதிலும் இலங்கைப் பெண் கவிஞர் அனார் வெற்றி பெற்றுள்ளார். 

“இஸ்ஸத் ரீஹானா முகம்மட் அஸீம்“ என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் “ஓவியம் வரையாத தூரிகை”, “எனக்குக் கவிதை முகம்” ஆகிய இரு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். தற்போது வெளிவந்துள்ள “உடல் பச்சை வானம்” என்னும் கவிதைத் தொகுதி தமிழின் மரபில் உயிர்த்தெழுந்த ஒளிப்பறவையாய் சிறகடிக்கிறது. காலச்சுவடு, அணங்கு, உயிர் எழுத்து, புதிய பார்வை, காலம், சொல், ஊடறு, உயிர் நிழல் போன்ற இதழ்களில் வெளிவந்த இக்கவிதைகள் நவீன கவிதையின் இன்னொரு முகத்தை அறிமுகப்படுத்துகின்றன. குறிஞ்சியின் தலைவி, பாணன், பாலை, மருதம் ஆகிய கவிதைகள் தமிழ்த் திணைக் கோட்பாட்டின் அடிப்படையில் நின்று பெண் உடலைப் பாடுகின்றன. இக் கவிதைத் தொகுப்பைப் பற்றி, “கவிதை வரிகளுக்கிடையில் பெண் நீராகிறாள். ஊற்றாக, நதியாக, மழையாக, கடலாக மாறுகிறாள். பெண் நிலமாகிறாள். மலையாக, வயல்வெளியாக உருவங்கொள்கிறாள். பெண் காற்றாகிறாள். மூச்சாக, ஊழிப்புயலாக வடிவெடுக்கிறாள். பெண் ஒளியாகிறாள். அனலாகிறாள். இயற்கை பெண் உடலாகிறது. இயற்கை பெண்ணாகிறது” என்று சுகுமாரன் கூறுவது முற்றிலும் பொருத்தமானதாகும். இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் இயற்கையை பெண் உடலாகப் பார்க்காமல் பெண் உடலை இயற்கையாகப் பார்க்கின்றன. “உடல் பச்சை வானம்“ என்னும் தலைப்பே உடலைக் கொண்டாடும் படிமமாக அமைந்துள்ளது. பெண்ணின் அந்தரங்கத்தை, பாலியல் வேட்கையை, இன்ப நுகர்ச்சியை, உயிரின் உள் ஆழம் வரை ஊடுருவிப் பார்க்கும் கூர் நோக்கை, கவிதை வரிகள் வெளிப்படுத்துகின்றன. பெண்ணை இயற்கையாக மட்டும் பார்க்காமல், இயற்கையோடு இயைபுபடுத்தி, பெண் உடலைக் கொண்டாடுகின்றார். பெண்ணின் உடலை நீர் நடனமாய் உருவகிக்கின்றார். (ப.11) 

“ஊறும் தன்மையாய் கட்டுப்படாத தன்மையாய்ப் பெருகி என் நீர் உடல் நடனமிடுகின்றது. 

கடவுளின் கனவென வடிவங்கள் வெவ்வேறு எடுத்து காட்டின் மறைவில் ஒளிந்து பாறைகளில் கசிந்து வடியும் அபிநயம்“ என்கிறார். இரண்டு பெண்கள் ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள உறவை கண்ணாடி வானமாகக் காண்கிறார். கண்ணாடி எதையும் மறைத்து வைப்பதில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாக வெளிப்படுத்திவிடும். அதைப்போலவே இரண்டு பெண்களும் எதையும் மறைத்து வைக்காமல் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். (ப.12) 

“முழு அர்த்தத்தில் நம்மைப் பகிர்ந்தபடி உரையாடிக் கொண்டிருந்தோம். 

கண்ணாடி வானம் நானுமாகி நீயுமாகியிருந்தோம் நம்மைத் தொந்தரவு செய்யாமல் மூன்று இரவுப் பறவைகள் ஒன்றையொன்று தொடர்ந்து செல்கின்றன” என்று கூறும் பொழுது கவிஞர் பெண்களின் ஓரினக் கலவியை (லெஸ்பியன்) கலகக் குரலில் முன்மொழிகின்றார். “உனது கூடு நிரம்பி தேன் வழிந்து கொண்டிருந்தது / தாகம் கொண்டு இரண்டு பெண்கள் அருந்தும் இவ்விரவு“ என்பன போன்ற வரிகள் ஆண்கள் ஆதிக்கச் சமுதாயத்திற்கு எதிராக ஒரு பால் புணர்ச்சியை அழுத்தமாகக் கட்டமைக்கின்றன. 

“காமத்தின் வேட்கை மிகுந்த சங்கீதம் உன் உடல் மாபெரும் இசை“ என்று கூறுவதன் மூலம் காமத்தை - உடல் இச்சையை எந்தவிதமான தயக்கமும் அச்சமும் இல்லாமல் கொண்டாடுவதைக் காணலாம். “என் ரகசிய வானம்“, “காயாத கசிவு”, “கனி பழுத்திருக்கிறது” போன்ற படிமத் தொடர்கள் பெண்ணின் உடல் அந்தரங்கத்தை வெளிப்படையாய்ப் பேசுகின்றன. யாருக்கும் தெரியாத – யாரும் கூற இயலாத அந்தரங்க உணர்வுகளை அனார் அதி அற்புதமாக விவரித்துக் கூறுகின்றார். கலவியின் பேரின்பத்தை மிகவும் எளிதான சொற்களால் எழுதிச் செல்கின்றார். 

“மயங்கி மயங்கிப் பொங்கும் கடல் / மௌனமாகவும் உரத்தும் பாய்கின்றது / மிரண்டு தெறித்தோடும் குதிரைகளென / அலைகள் துரத்தி வருகின்றன / உயரப் பறக்கின்றது நுரைப்பறவை / சம்மணமிட்டு உயிர் இரையும் பாற்கடலை / உன் கண்களால் திருப்பிவிட எத்தனிக்கிறாய் / மாபெரும் கடலை / கண்கள் சவாலுக்கு இழுக்கின்றன / நினைவு வரைபடங்களின் வழிகளில் / ஏதோ ஓர் புதிர் விரைகின்றது / எதுவுமே நிகழ முடியாத இருட்டில் / யுத்தம் தொடங்கி விட்டிருந்தது / நீ பாறைகளில் தெறித்தாய் / பாசியைத் தழுவினாய் / முழுவதுமான இழப்பிலும் / முழுவதுமான வெற்றியிலும் கடல் / கொந்தளிப்பதுபோல / ஓடிப்போய் கரையில் நின்று / வியர்த்து வழியும் காற்றை / மாயப் பொடியாக்கித் தூவினாய் / கடலுக்குள் வீசி எறிகின்றேன் / எல்லாம் மறைகின்றன / கண்ணில் படாத ஒரு சாகச நிழலில் / ஸ்தம்பித்துப் போயிருந்த கடலில் / சிறுதுண்டை வெட்டி உன் வாயுள் வைக்கிறேன் / நீ பூப்போல என்கிறாய் / உப்புச் சுவையாய் இரு உடல்கள் மாறினோம் / அலைகளை எழுப்பி எழுப்பிக் கடல் ஆகினோம்.“ 

என்னும் கவிதையை “வித்தைகள் நிகழ்த்தும் கடல் (ப.24) என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். இதில் பாலின்பக் கடலில் ஏற்படும் உச்ச இன்பத்தை ஒரு ஞானியின் நிலையில் இருந்து விருப்பு வெறுப்பு இன்றி, ஒரு பெரிய திரைச்சீலையில் எழுதப்பட்ட வண்ண ஓவியம் போல் வருணித்துச் செல்கின்றார். வாசிப்பவர்கள் பனுவல் (text) தரும் இன்பத்திற்கும் அதிகமாகவே நுகர்கின்றார்கள். வாசிப்பின் இறுதியில் அவன் இவனாகவும், அவள் இவளாகவும் மாறும் வேதியியல் மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாகும். கனவுக்குள் அசையும் உடல் மொழி, எல்லை வேலிகள், தடை செய்யப்பட்ட விடுகதை, பருத்திக்காய் வெடிக்கும் நாள் போன்ற தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் பெண்ணின் உடல் ஏக்கத்தை, உள்ளத்தின் துயரத்தை, வலையில் சிக்கிய பறவையின் துடிதுடிப்பாய், வெடித்துக் கிளம்பும் பெருமூச்சின் அருவிப் பாய்ச்சலாய் வார்த்தைகளில் வடித்தெடுத்துள்ளார். “கொனாரக்“ சூரியக் கோயிலின் சிற்ப அழகை பாலின்ப வீச்சோடும், தன்னுணர்ச்சியின் எழுச்சியோடு செதுக்கியுள்ளார். ஓரினக் கலவி செயல்பாட்டில் திளைத்திருக்கும் இரண்டு பெண் சிற்பங்களைக் கண்டு பரவச நிலையில், தயக்கங்கள், தடுமாற்றங்கள் இன்றி இயல்பாய் எழுதிச் செல்கின்றார். 

“முதுகினில் இறக்கை முளைத்த வனதேவதை / மெழுகுபோன்று முளைத்து வருகின்ற / தன் ஒற்றைக் கொம்புடன் / தலையை நிமிர்த்திப் பார்க்கிறாள் / 'கொனாரக்' அதிசயங்கள் விளையும் நிலம் / அளவற்ற வியப்புடன் ஸ்பரிசிக்கின்றாள் / அப்போது தொன்மையான அவளது ஆன்மா / கண்களில் எட்டி எட்டிப் பார்த்தது / சூரியக் கோயிலை தழுவி வீசும் / ஆதிக்காற்றின் காதுகளுக்குள் / பேருணர்ச்சியை கூவினாள் / முதலும் கடைசியுமான வாழ்த்துக்களை / சிற்பங்களுக்குச் செலுத்தினாள் / வசந்தகாலப் பனியில் உணர்வில் மூழ்கி / இன்னும் இறுகத் தழுவிக் கொண்டிருந்தன / இரண்டு பெண் சிற்பங்கள் / பிணைந்தது பிணைந்தவாறே கற்பனையிலிருக்கும் / திவ்யமான அந்தரங்க ஓசைகளை புதிதாய் கேட்டு / புலன்கள் பூரித்து நிரம்பிற்று / அமானுஷ்யப் பரிவாரங்கள் ஆட்சி செய்யும் / சுதந்திர சதுக்கத்தில் / கண் கோர்த்து கை கோர்த்து / கற்சிலைகள் பூரணத்தில் ததும்புகின்றன / செதுக்கப்பட்ட வடிவங்களில் ஒன்றில் விடுதலை / மற்றொன்றில் நித்யம் இன்னொன்றில் ஆற்றல் / தீர்க்கமாய் தெளிவாய் உயர்ந்து நிற்கிறது.” (ப.52) 

என்ற கவிதையில் வெளிப்படும் ஓரினக் கலவியின் பரவசத்தை உள்ளார்ந்த உணர்ச்சித் துடிப்போடு எழுதுகின்றார். குறிஞ்சியின் தலைவி (ப.28), பாணன் (ப.30), பாலை (ப.36), மருதம் (ப.46) போன்ற தலைப்புகள் சங்க இலக்கியத்தில் வரும் சொல்லாடல்களாக உள்ளன. குறிஞ்சி நிலத் தலைவி வாழும் இடச்சூழல் இயல்பாகவே வருணிக்கப்பட்டுள்ளது. குறிஞ்சி நிலத் தலைவியின் மார்பை குன்றுகள் என்றும், போர்த் தேவதையின் உருண்ட கண்கள் என்றும் கூறுவது ஆண்மையப் பார்வையாகவே வெளிப்படுத்துகின்றது. சங்க அக இலக்கிய மரபுகளைச் செறிவாக உள்வாங்கியிருந்தால், பாலை, மருதம் போன்ற கவிதைகளை இன்னும் அழகாக ஆழமாகப் படைத்திருக்கலாம். கவிதைத் தொகுப்பைப் படித்து முடிக்கும்போது இயற்கையும் பெண்ணும் ஒன்றென எண்ணும் பரவச மனநிலை பளிச்சென உருவாகிறது. இயற்கையை – பெண்ணை இவ்வளவு அழகியலோடு காட்சிப்படுத்தியுள்ள அண்மைக்கால கவிதைத் தொகுப்பு வேறெதுவும் இல்லை என்றே கூறலாம். ஆனால் பெண்ணை எதற்கு இயற்கையோடு ஒப்பிட வேண்டும் ? ஆணையும் இயற்கையோடு ஒப்பிடலாம், ஏன் என்றால் அனைத்தும் இயற்கையின் கூறுகளே, எனவே பெண்ணைப் பெண்ணாகவே பார்க்கலாம், பேசலாம், படைப்பின் பாடு பொருளாக்கலாம். பெண்ணை நேரடியாகவே பாடலாம். இயற்கைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு பெண்ணைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நவீன கவிஞர்களுக்கே உரிய வெற்றுச் சொற்கள், வார்த்தைகளில் குழப்பம், வாக்கிய அமைப்புகளில் தடுமாற்றம், சுற்றி வளைத்தல் சொற்கலப்பு, மொழி ஆளுமையின்மை போன்றவைகள் இத்தெகுப்பிலும் உள்ளன. ஆனாலும் அனைத்தையும் மீறி கவித்துவ அழகோடு பெண் உடலை எழுதுவதிலும், பெண்ணைக் கொண்டாடுவதிலும் “அனார்“ வெற்றி பெற்றுள்ளார் என்றே உறுதியாகக் கூறலாம். 


( தீராநதி – ஏப்ரல் 2011 )
--------------------------------------------------------------------------------------------------------