Wednesday 23 May 2018

சொற்களின் தோகை

- எஸ். ராமகிருஷ்ணன் ( இந்தியா )


-------------------------------------------------------------------------------------------------------------------------

அனார் எனக்குப் பிடித்தமான கவிஞர். சூபி கவிதையுலகின் நவீன வடிவம் போன்றவை அவரது கவிதைகள். பெண் மனத்தின் ஆழ்தவிப்புகளை, மகிழ்ச்சியை, துயரை வெளிப்படுத்துகின்றன அவரது கவிதைகள்.

அனார் கிழக்கிலங்கையின் சாய்ந்த மருதுவில் வசித்துவருகிறார். சமகால தமிழ் கவிஞர்களில் மிக முக்கியமானவர். நான்கு கவிதை தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார்.

ஜின்னின் இரு தோகை கவிதைநூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.



அனாரின் கவிதைகள் அன்றாட வாழ்விலிருந்து தாவிப் பறப்பவை. அவர் புறஉலகின் நிகழ்வுகளை விடவும் அகவுலகின் தத்தளிப்புகளை, எழுச்சிகளையே அதிகம் எழுதுகிறார். அது ஒரு வகைத் தனித்துவமான வெளிப்பாடு.

அனாரின் வசீகரம் அவரது கவிதைமொழி. பூத்தையல் போல அத்தனை நுட்பமானது. உணர்ச்சிகளை அவர் வெளிப்படுத்தும் விதம் அபாரம். சங்கப் பெண்கவிஞர்களிடம் காணப்பட்ட காதலின் வெளிப்பாட்டினை நவீனமுறையில் அனார் வெளிப்படுத்துகிறார் என்றே சொல்வேன்.

ஆம். நிலமும் வானும் பொழுதும் மழையும் கடலும் காற்றும் இவரது கவிதைகளில் உணர்வுகளின் வெளிப்பாட்டுகளமாகவே விரிகின்றன.

••

எப்போது அனாரின் கவிதையை வாசிக்கத் துவங்கினாலும் உஸ்தாத் பிஸ்மில்லாகானின் ஷெனாய் போலத் துயரமும் சந்தோஷமும் ஒன்றுகலந்தே ஒலிக்கிறது. இக்கவிதைகளைத் தனிமையின் உன்னதப் பாடல்கள் என்றே கூறுவேன்.

சொற்களே மனிதர்களை ஒன்று சேர்க்கின்றன. பிரித்தும் வைக்கின்றன. சொல் ஒரு ஜின். அதன் தோகை முடிவற்றது. இஸ்லாம் சொல்லும் ஜின் என்பது தீயுரு. அது அரூபமானது. நெருப்பிலிருந்து உருவானது. அனாரின் ஜின்னோ காதலுற்றது. வசீகரமானது. அரூபமானது. நெருப்பு தான் அதன் தோகை.

சொற்களால் எந்தப் பிரம்மாண்டத்தையும் நகர்த்தமுடியும் என்பதே கவியின் கூற்று. அனார் தொடர்ந்து கடலைப் பாடுகிறவர். கடல் ஒரு படிமம். முடிவற்ற, கடக்கமுடியாத. அறியமுடிந்தும் முடியாமலும் போன அலைக்கழிப்பின் அடையாளம்.

அலைகளின் வழியாகத் தன்னைவெளிப்படுத்தும் கடலின் இயல்பை போன்றதே அனாரின் கவிதை வெளிப்பாடும்.

சொற்கள் வானளாவ விரியும் இரு தோகையெனக் கவிதையில் எழுச்சி கொள்வது காதலின் அற்புதம் என்றே சொல்வேன். இசையும் வண்ணங்களும் கதைகளும் இணைந்து உருவானவை அனாரின் கவிதைகள்.

••

ஜின்னின் இரு தோகைகள் என்ற கவிதையின் முதல் மூன்று வரிகளைக் கடக்கவே முடியவில்லை.

நெருப்பு அனாரின் விளையாட்டுப் பொருள். நெருப்பின் பல்வேறு வடிவங்களை அவரது கவிதைகளில் காணமுடிகிறது. சொல்லும் நெருப்பமாகவே மாறுகின்றன.

சொற்கள் பிரம்மாண்டமான கடலையும் ராட்சத மலையையும் அருகருகே நகர்த்துகின்றன என அனார் கூறுகிறார். நிஜம், சொல் வழியாக உருப்பெறும் போதும் உலகம் எடையற்றதாகிவிடுகிறது. மிருதுவாகிவிடுகிறது. சொல்லை கவிஞன் உருக்குகிறான். குழைக்கிறான். கடினப்படுத்துகிறான். சில வேளைகளில் மாயப் பொருளாக்கி பறக்க விடுகிறான்.

••

மெருகேறிய இரண்டு மென்சொற்கள்

மாபெரும் கடலையும்
ராட்சத மலையையும் அருகருகே நகர்த்துகின்றன
பொன்னொளிர் நீலக்கடல் வாசனை
விண்மீன்கள் மினுங்கும் மலையுச்சியின் காரிருள்
அவனும் அவளுமாகினர்
தன் பிரம்மாண்டத்தில்
புதையுண்ட இரு உடல்களைப்
பிரமித்தபடியே
வானவில்லென
அவர்கள் மேல்பட்டுகிடந்தன இரு சொற்கள்
அவளது தோளில்
அலைகள் ஆர்ப்பரித்தன
அருள்பாலிக்கும் தன்னிகரில்லாத ஆலிங்கனத்தில்
மலை அதைக் கேட்டிருந்தது
அதி ரகசியமான அவ்விரு சொற்களும்
ஜின்னின் இரு தோகையென
வானளாவ விரிந்துகொண்டன

••

இன்னொரு கவிதையில் சிறகுகள் மறதிக்கும் நினைவிற்குமான அடையாளமாகிறது.

மறப்பதற்கும் நினைப்பதற்குமான இரண்டு சிறகுகளால் பறக்கிறேன் என்ற வரியை வாசிக்கையில் ஒன்று போலத் தோன்றும் இரண்டு சிறகுகளில் எது மறதியின் சிறகு எது நினைவின் சிறகு என யோசித்துக் கொண்டிருந்தேன்.

••

உதிர்ந்து விழும் ரகசியத்திற்கும்
அள்ளிச் செல்லும் வாசனைக்குமிடையே
வண்ணத்துப்பூச்சி
நிறங்களின் நடனத்தைத் தொடங்கியது
என்ற கவிதைவரியின் வழியே

வண்ணத்துப்பூச்சியின் பறத்தலை நிறங்களின் நடனமாகக் காணுவது கவிதையின் தனிச்சிறப்பு.

ஒரு பெண்ணாகக் கட்டுபாடுகளும் வரம்புகளும் எல்லைகோடுகளும் நெருக்கடிகளும் கொண்ட சிறிய உலகிற்குள் வாழ்கிறேன் என்ற தவிப்பு அனாரின் கவிதைகள் முழுவதிலும் கேட்கிறது. கடலைப்போலத் தன்னியல்பாகச் சீறி வெளிப்பட விரும்பும் அவரது வேட்கையே சொற்களைத் துணைகொள்கின்றன. முடிவிலா காதலுற்ற மனதின் பித்தேறியதாக இக்கவிதைகள் இருக்கின்றன.

••

ஒன்றாகி எரியும் சுடர் என்ற கவிதை இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமானது

உன்பொருட்டு
அந்தப்பாடல் என்னைத் தழுவி கொண்டிருந்தது
உயர்ந்து செல்லும் புகைபோல
மிதக்கின்ற படிகளில்
உன்னோட
உயர உயர நடக்கிறேன்
என் கண்ணீர் திரண்ட திரையில்
உன் நெற்றியை முட்டிக் கொள்கிறாய்
இருண்மைகளின் நிர்கதிக்கு முன்னே
நீ எனும் ஒற்றைச்சுடர்
அணையாதிருந்தாய்
நிறுத்தப்பட்டு
மறுகணம் ஆரம்பிக்கும்
இரு தாளத்தின் சத்தங்களுக்கிடையே
நெடுங்காலம் உறங்கிப்போயிருந்தேன்


உணர்வுக்குள்ளே மலையும் வானமும்
பிரபஞ்ச வெளியுமுண்டு

என ஒரு கவிதையில் கூறுகிறார் அனார்.

இது அவரது எல்லாக் கவிதைகளுக்கும் பொருத்தமான வரி என்றே கூறுவேன்.

ஜின்னின் இரு தோகை அனாரின் அடுத்தகட்ட நகர்வை நோக்கிய அற்புதமான கவிதைகளைக் கொண்டிருக்கிறது.

வாழ்த்துகள் அனார்.

••

--------------------------------------------------------------------------------------------------------------
நன்றி : 

http://www.sramakrishnan.com/?p=7401