Thursday 13 December 2018

அனார் கவிதைகளில் இருத்தலியலும் உளவியல் வெளிப்பாடும் 
----------------------------------------------------------------------------------------------------- 

- முனைவர். அரங்க மல்லிகா











பாலியம் என்பது முரண் நிறைந்தது. சமூக இருத்தலில் ஆண்களின் குணநலமும் பெண்களின் குணநலமும் அவர்களுடைய சமூகக் கலாச்சார வேறுபாடுகளுடன் பேசப்படுகின்றன. 1955இல் பாலிய வேறுபாடு (Gender discrimination) பற்றிப் பேசத்தொடங்கிய காலகட்டத்தில் சமூகத்தோடு பேசப்பட்டாலும் மிக நெருக்கமாக இலக்கியத்தில் அது பிரதிபலிக்கத் தொடங்கியது. மொழி சமூக இயக்கத்தை அதிலுள்ள பாலிய வேறுபாட்டோடு கட்டமைத்திருக்கிறது. இதனைப் பெண் மொழி என அடையாளப்படுத்தப்படுவர் பெணியலாளர்கள் அரங்க மல்லிகா, பிரேமா. 

பெண்மொழி எழுத்துக்கள் ஈழத்தில் அதிகம் பெண் கவிஞர்களால் அறிமுகமாகி உள்ளன. அனார் கவிதைகள் போருக்கான பிற்காலச் சூழலை எழுதினாலும் அவருடைய கவிதைகள் இருளின் எதிர்வான மொழியை மையப்படுத்தி அதனூடே தனிமை சார்ந்த வாழ்வும் இரக்கமும் சுயச் சார்பைத் தீர்மானித்தலும் போர்க்காலச் சூழலை எதிர்கொண்ட மனநிலையிலிருந்து தன்னை ஒரு பட்டாம்பூச்சியாக வைத்துக்கொள்ள கவிதையைப் பயன்படுத்துவது மிகுந்த கவனத்திற்குரியதாக இருக்கிறது. 

'அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் 
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர் கொள்ளார் 
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின் 
வென்று எறி முரசின் வேந்தரெம் 
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே' புறம்.112) 

என்னும் பாடலில் பாரின் ஆட்சி, அதிகாரம், கொடை பண்பு உள்ளிட்டவைகளைப் பெருமையோடு பார்த்துக்கொண்டிருந்த நிலா இன்றைக்குப் பாரியின் குன்று தொலைந்து ஆட்சி அதிகாரம் இழந்து அவர்களுடைய மகளிர் தனிமைப்பட்டு தந்தை இழந்த துயரைத் தன்னிரக்கமாகப் பாடிய சங்கப் புறப் பாடலின் தொடர்ச்சியே தமிழ் ஈழ பெண்கவிஞர்கள் இன அழிப்பை அடையாளப் படுத்துவதோடு ஈழத் தமிழ் விடுதலை வேட்கையை முன்னெடுக்கவும் தன்னிலை மாந்தர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும் கவிதை மொழியைக் கைக்கொண்டுள்ளனர். இதனை விரிவாக இக்கட்டுரை விவாதிக்கிறது. 

2009க்குக் பிறகான இலங்கையில் வாழும் மக்களின் போர்க்கால மன அழுத்தத்தை இக்கட்டுரை அனார் கவிதைகளின் துணையுடன் விவாதிக்கின்றது. இந்தக் கட்டுரையில் பெண்களின் உடல் ஆரோக்கியம், குழந்தைகள், மகப்பேறு பெண்களின் நிலை, காப்பகப் பெண்கள், இராணுவத்தில் ஈடுபட்ட பெண்கள் குறித்தான பதிவை இலக்கியங்கள் எவ்வாறு பதிவாக்கியுள்ளன என்பதையும் பேசுகிறது. பிரதிகள் பெண்ணின் உளவியலை எவ்வாறு பிரதிபலிக்கிறது அவர்கள் போர்க்காலச் சூழலை எவ்வாறு கடந்து தங்கள் இருப்பை உலகுக்கு எடுத்துக்காட்டுகிறார்கள் என்பதையும் ஆய்வுக்குட்படுத்துகின்றது. 


ஆய்வு மூலச்சொற்கள் :

போர் முன்னும் பின்னும், மன அழுத்தம் – நிலமிழப்பு – தன்னிலை மீட்டெடுப்பு. 


அறிமுகம் :

2009 இலங்கை - ஈழப்போரின் வரலாற்றுக் காலம். சிங்கள அரசு – தமிழ் ஈழம் ஆகிய இரண்டு அமைப்புகளுக்கு இடையே மக்கள் குற்றவாளிகளாக நின்று உயிர் துறந்த வரலாறு, காலத்தின் கரைந்த வரலாறு. எங்கெல்லாம் போர் நடந்ததோ அங்கெல்லாம் பொதுமக்கள் – பெண்கள் – குழந்தைகள் மிகக் கொடூரமான முறையில் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக போரில் விடுதலை புலிகளின் அமைப்பில் ஆண்கள் இருந்ததால் கூடுதல் பொறுப்பு பெண்களுக்காக மாறியது. 


விவாதம் ( Discussions ) :

பெரும்பாலும் பெண்கள்தான் போரில் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஈழப்போரில் பாதிக்கப்பட்ட வீரர்கள் உளவியல் அடிப்படையிலும் பாதிப்பை எதிர்க்கொண்டனர். 

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் தேர்ச்சிப் பெறுவது என்பது இயலாததாகவே இருக்கின்றது. 2009க்குப் பிறகும் 70 ஆயிரம் மக்கள் இடப்பெயர்வு நடந்திருக்கிறது. தொடர் வன்முறை, சந்தேகத்தின் அடிப்படையில் சிறை, காணாமல் போன நிலை, கொலை ஆகியன தொடர்கதையாகின்றன. பாலியப் பாகுபாடு நிறையவே உள்ளது. 

போருக்குப் பிறகு ஆண்களுக்கு வேலை இல்லாதபோது பெண்கள் வெளியில் வேலைக்குச் சென்றனர். அதனால் அவர்கள் பல ஆண்களை வெளியில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஒரு பெண் வெளியில் வேலைக்குச் செல்கிறாள் என்றால் அவள் மீதான பார்வை மாறுகிறது. அதனால் குடும்பத்தில் முரண் ஏற்படுகிறது. குடும்பத்தில் அவர்களின் பங்களிப்பு குறைவதால் ஆண் – பெண் உறவுக்குள் மன அழுத்தம் ஏற்படுகிறது. 

பாலிய உறவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. உழைப்பினால் வரும் பொருளாதாரத் தற்சார்பினால் கணவனைச் சார்ந்து வாழ்வது குறைவதாக ஆண்கள் நினைக்கிறார்கள். அதனால் குடும்பத்தில் முரண் ஏற்படுகிறது. யாரெல்லாம் வன்முறைகளைச் சந்தித்தார்களோ அவர்கள் வன்முறையாளர்களாக மாறுவார்கள். அவர்களுக்கு மாற்று வழி இல்லை. 

ஆண்கள் வறுமையினால் குடிக்கு அடிமையாகிறார்கள். அதனால் வீட்டில் முரண்பாடு ஏற்படுகிறது. வறுமையும் மதுப்பழக்கமும், குடும்ப உறவின் முறிவிற்குக் காரணமாகிறது. வன்முறை மற்றும் பாலியல் வன்முறை இலங்கை போர்க்காலப் பாதிப்பு பகுதிகளில் நிறைய நடைபெற்றுள்ளன. இத்தகைய சூழலைப் பெண் கவிஞர்களின் கவிதைப் பிரதிகளில் காணமுடிகின்றது. 

போர் இலக்கியங்களில் கவிதைகளின் பங்கு அவதானிக்கத்தக்கது. மூன்றாம் அலை பெண்ணியம் தோன்றிய பிறகு பெண்கள் பன்னோக்குப் பார்வையோடு விவாதிக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியப் பரப்பில் இந்தப் பாய்ச்சல் அகவெளி மற்றும் புறவெளி சார்ந்த பெண்களுடைய இருப்பை ஒரு கலகக் குரலோடு பதிவுசெய்திருப்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக 1983 இலிருந்து 2009 வரையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்கால அரசியல் அதனூடே தமக்கான தேசத்தின் விடுதலையை அல்லது உரிமைகளை மீட்டெடுக்க இலக்கியங்களை ஓர் ஆவணமாகப் பதிவுசெய்துள்ளனர். அதன்மூலம் உரிமைகளை மீட்டெடுக்க இழந்த உயிர்களையும் உரிமைகளையும் பற்றிப் பாடவும் பிரிதிகளைப் பயன்படுத்தினர். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இரண்டாம் உலகப்போர்களின் தாக்கத்தில் எழுந்த இருத்தல் இயல் சிந்தனை என்பது தொடர்ந்து பல்வைறு நாடுகளில் ஏற்பட்ட பெரும்பாலான போர்களின் தாக்கத்தினால் ஆதிக்க சக்திகளை எதிர்த்து நின்று போராடும் பொழுது போரில் வெகுவாகு பாதிக்கப்படக் கூடிய சாதாரண மனிதர்களின் அவலங்களும் உணர்வுகளும் பிரதிகளைக் கணப்படுத்துகின்றன. 

இச்சூழலில் ஈழத்திலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் அனார் 90 களில் தொடங்கி இயங்கி வருபவர். அவருடைய படைப்புகளில் பெண்களின் அடக்குமுறையும் அதை எதிர்கொண்ட அரசியலும் போரில் பாதிக்கப்பட்ட மனச்சிதைவிருலிருந்து மீண்டு பெண்ணின் தனித்துவதை அடையாளப்படுத்தியதும் தன்னுடைய பிரதிகளில் உயிரோட்டமாக்கி இருக்கிறார் என்பதை இக்கட்டுரை பேசுகிறது. 


'இலையுதிர் காலம் இல்லாமலேயே 
உதிர்கின்றன உயர்திணை மரங்கள் 
தனிமை நிறைந்த பொழுதுகளிலிருந்து 
தப்பிக்கின்ற அல்லது தனிமையின் வெறுமையினைத் 
தனக்குள் இருந்து மாற்றமுனைந்த குரலை 
கவிதை மீதான ஆர்வத்திலிருந்து அறிந்துகொள்ளமுடிகிறது' 

ஆதி பொதுவுடைமைச் சமூகம் தொடங்கி அதிநவீன அறிவியல் சமூகம் வரை மனிதன் தன்னிலைப் பெற்று செயல்பட முனைகிறான். இது உலகப்போர்களின் பின்னால் எழுந்த புரட்சிகளின் விளைவாகும். அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுதல் விடுதலையின் மைய அரசியலாகும். இருத்தலியம் அத்தகைய சித்தாந்தத்தை மனித விடுதலை அடையாளமாக உணர்த்துகிறது. இயற்கையின் வழிதான் மனிதன் செயல்படுகிறான். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் மனிதன் வெறுமை அடைவதை தவ்தெஸ்கி எடுத்துக் கூறுகிறார். இவ்வுலக வாழ்வில் மரணம் ஒன்று மட்டுமே மாறாதது. இத்தகைய மரணமுறுதலைச் சொல்லாததை அதை பற்றிய நியதிகள், சட்டங்கள் வரையறுக்கப்பட்ட மெய்ம்மை கோட்பாடுகள் பொருளற்றவையாகும் என்பதை அனார் கவிதைப் பிரதிகளின் ஊடாக அறிந்துகொள்ளலாம். கடந்த கால வரலாறும் பண்பாடும் மனிதனை அவன் உணர்வு இல்லாமலேயே சிறைப்படுத்துகின்றன. அடிமைப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் மனிதன் அடிமைப்பட்டுக் கிடக்கின்றான். இவ்வடிமைத் தளைகளை உடைத்தெறிந்து தாமே தனக்கான உரிமைகளோடு வாழவேண்டும் என்று தன்னெழுச்சியாக போராட வேண்டும் என்று சார்த்தர் குறிப்பிடுகிறார். மனித இருப்பானது அவள் சுதந்திரத்தை அவளே சுதந்திரத்தைப் பெற்றிடும் நிலையில் முழுமை அடைகிறது என்கிறார். 


'காதலுக்குப் பின் 
தொழிலின் இறுதியில் 
உலகை விட்டுப் பிரிகையில் 
சாவுக்கும் அப்பால் 
முதலுக்கும் முடிவுக்கும் 
முன்னும் பின்னும் 
முழுவதுமாக 
பின்னிப் பிணைந்து 
இல்லாமல் இருப்பது 
தெரியாமல் தெரிவது 
சொல்லாமல் சொல்லிக்கொள்வது 
எல்லோரும் நினைப்பது 
யாவரையும் கடந்தது 
புலனுக்குப் புரியாதது 
பொருளுக்குச் சிக்காதது 
எஞ்சி நிற்பது 
அது அதுவே!' 

என்னும் நகுலனின் கவிதை புறவாழ்வைச் சுட்டுகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் தனிமை, விரக்தி, வெறுப்பு போன்ற உணர்வுகள் போர்க்காலச் சூழலில் இருந்து அதிகரித்திருக்கிறது. இத்தகைய மனநிலை இடப்பெயர்வு புலம்பெயர்வு ஆகிய நிலைகளில் கூடுதலாக மனநோய்க்கு ஆளாகக் கூடிய நெருக்கடியைத் தந்திருக்கிறது. அகதியாய் வாழும் வாழ்க்கைப் பற்றியும் நிலத்தோடும் நீரோடும் இயற்கையோடும் வாழ்ந்த வாழ்க்கை சிதைந்துபோன நிலையையும் இருள் நிறைந்த இரவுகளாகவே பகலும் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அனார். போர்க் கவிதைகள் வெறும் வார்த்தைகளால் கட்டப்படுபவை அல்ல. அதனுடன் வரலாறு கடத்தப்படுகிறது. 

மரணத்தை இங்கு நாங்கள் சர்வ சாதாரணமானதாக எடுத்துக்கொள்வதுபோல் உங்களையும் நினைக்க வைக்கவே விரும்புகிறேன். அப்படியான ஒரு நிலையை அடையும்போது நீங்கள் மரணத்தை எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். எது குறித்தும் உங்களுக்கு அதிர்ச்சியோ ஆச்சரியமோ இருக்காது. 

ஜோரி கிரஹாம். 


அனார் எல்லா விதமான இருத்தலியல் சார்ந்த கவிதைகளில் பதிந்திருந்தாலும், 

வீடு தனிமைக்குள் கேட்காத 
கதறலாய் இருக்கிறது 
மூச்சு திணறும் அளவு பூட்டிய அறையினுள் 
தனிமையின் புகைச்சல்... 

என்று கூறும் அவர் தனிமையைப் பேசியிருந்தாலும் அவருடைய ஆரம்பகாலக் கவிதைகளிலிருந்து தற்காலத்தில் எழுதும் கவிதைகளில் புறச்சூழலின் அடர்த்தி மாறுபடுகிறது. போரும் போர்ப் புகைச்சலும் தனிமனித உளவியலைப் பாதித்திருந்தாலும், 


'ஒரு காட்டாறு 
ஒரு பேரருவி 
ஓர் ஆழக்கடல் 
ஓர் அடைமழை 
நீர் நான் 

கரும்பாறை மலை 
பசும் வயல்வெளி 
ஒரு விதை 
ஒரு காடு 
நிலம் நான் 

உடல் காலம் 
உள்ளம் காற்று 
கண்கள் நெருப்பு 
நானே ஆகாயம் 
நானே அண்டம் 
எனக்கென்ன எல்லைகள் 

நான் இயற்கை 
நான் பெண்' 

என்று அவர் கூறுவதிலிருந்து மன அழுத்தத்தில் இருந்து விடுபட்ட ஒரு பெண்ணியக் குரலாகக் காணமுடிகிறது. இயல்பான வார்த்தைகளின் கோர்வையாக இருந்தாலும் அதன் படிமம் ஒரு பெண்ணைச் சுயம்புவாக்கி விருச்சம் அடையச் செய்கிறது. 

❖ எனக்குக் கவிதை முகம் (2007) 
❖ உடல் பச்சை வானம் (2009) 
❖ பெருங்கடல் போடுகிறேன் (2013) 

என்னும் கவிதைத் தொகுப்புகளின் ஊடாகத் தனது முகத்தைப் பிற கவிஞர்களில் இருந்து வேறுபடுத்திக்காட்டுகிறார். அவருடைய வரிகள் வாசிப்பவரின் உளவியலைக் கட்டுடைக்கின்றது. 

வாழ்வு சார்ந்த மன அழுத்தங்கள் போரில் சிந்திய இரத்தம் அது தந்த அச்சம் பெண்கள் பலிக்கொள்ளக் கூடிய அவலச் சூழல் எல்லாம் படிமமாகப் பேசப்பட்டிருந்தாலும் அவை நெருப்புப் பொரிகளாகவே இருக்கின்றன. 


நிறைவாக... 


❖ பெண்களின் சமூகப் பொருளாதார மேம்பாடு, குடும்பத்தில் தலைமை, மாதாந்திர உதவித்தொகை, விதவைகளுக்கு நிலம் சொந்தமாக வழங்கல் ஆகியவற்றில் அரசு கவனம், பாதிக்கப்பட்ட பகுதிகளில், பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கல் அழிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் இன அடையாளம் நிலப்பத்திரம் முதலியவற்றை உடனடியாகத் திருப்பித் தருதல் மன உடல் ஆரோக்கியம் காத்தல் அரசு முறை சாரா தொண்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்தல் நினைவுச் சின்னம் அமைத்தல் ஆகியன கவனத்தில் கொள்ளப்படவேண்டும். 


❖ அமைதிசார் கட்டமைப்பு திட்டம் அமலுக்கு வரவேண்டும், பாலியல் தொல்லைகளைக் கட்டுப்படுத்த உறுதி வழங்கவேண்டும், கிழக்கு மற்றும் வாக்குப்பகுதிகளில் தமிழ்ப்பெண் காவலர் நியமனம் தேவை. 


❖ சிறப்பு உயர் நீதிமன்றம் மூலமாக பாலியல் குற்றங்கள் விசாரணைக்குட்படுத்தவேண்டும். 


--------------------------------------------------------------------------------------------------------------------------

சென்னையில் 23.06.2018 இல் நடந்த ”புலம்பெயர்ந்தோர் / அயலகத் தமிழ் இலக்கியம்” பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை. 

நன்றி : 

முனைவர். அரங்க மல்லிகா
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
இயக்குநர், மகளிர் கல்வி மையம்
எத்திராஜ் மகளிர் கல்லூரி (த),
சென்னை.