கவிதை


மூங்கில் நிலம்


துளிர்த்த வெண்குருத்துக்களின் பனிக்குள்
திறந்து கொள்ளும் கனவு

மஞ்சள் பாய்ந்து முற்றிய நெடுமரங்களாய்
மூங்கிற் புதர்கள்
பச்சை மூட்டங்கள் மூடிய நெடுஞ்சாலை
குளிர்மையும் வெயிலும் தாவுகின்ற
"கலேவெல" ப் பாதை

கார்காலப் பனி ஈரலிப்புப் பரவிய
மெத்தென்ற சருகுகளின் மீதான நடை
பறப்பதற்குரிய மந்திரங்களை ஓதுகின்ற காற்று
காட்டின் தொலைவில்
பழங்குடிப் பெண்ணின் ஓங்காரக் குரலோசை

புள்ளிகள் கொண்டதும் சாம்பல் நிறமுமான
முட்டைகளின் கூடையொன்றுடன்
தோளில் கொழுவிய கைக்கோடரி
அசையாமல் நடக்கிறார் மரமேறி

புகையிலை வயல்களைத் தாண்டிவருகிற தாழ்நிலத்தில்
மூக்கில் வளையமிட்ட ரவிக்கை அணியாத
முதிர்ந்த பெண்கள் என்னை வரவேற்கின்றனர்

செம்புக் குவளையில்
துவர்ப்பும் காரமுமான பானமொன்றினை அருந்தினேன்
விதைப்புத் தானியங்கள் இட்ட
மண் கலயத்தை தருகிறாள் முதியவள்

நீண்ட கோடுகளாய் கூட்டிய மணல்வரிகளின்
முதலாம் வரிசையில்
என் வெறும் பாதங்களை வைத்து
தானியங்களை இரு திசைகளிலும் வீசத் தொடங்குகிறேன்

“ஊலுல்லு... ஊலுல்லு...” எனச்
சிதறும் பெண்களின் குரவை ஒலிகள்

உரி மட்டைகளின் மேல்
மண்பானைத் தலை கவிழ்த்து நிற்கிற
வெருட்டியை ஊடறுத்து மயில்கள் ஓடுகின்றன

துணுக்குற்றவாறு உடல் உதறி
இங்கும் அங்கும் குதிக்கின்றன…….
தொழுவத்தில் அடைபட்ட வெண்ணிறப் பன்றிக்குட்டிகள்




03 ஒக்டோபர் 2011

-------------------------------------------------------------------------


பொம்மைப் பௌர்ணமி


இரவு 8.30.......
அவள் சில மர்மக் குகைகளின் மலைகளுக்கப்பால்
தூக்கிப்போடும் பௌர்ணமி பொம்மையை
அவர் பிடித்துக்கொள்கிறார்

காதல் ததும்பியும்... அழுகைமுட்டியதுமான
பொம்மையின் கண்களை மறக்கமுடியாது

கடலைத்தாண்டி.... அவர் திருப்பி எறிந்த பொம்மையை
அவள் பிடித்திருப்பாளா ?

காதல் புகையும் சிகரெட்டினால்
தழும்புகளை....
சுட்டெரிக்கத் தொடங்குகிறார்

“செல்மாவின் ஜிப்ரான்“
ஈரப்பனிவிழும் பூப்பந்தலின் கீழ்
பித்தேறிய கண்களால்.....
“பௌர்ணமிகளை“ குடித்துக் கொண்டிருக்கிறான்

பனிவாள் கீறலின் இசையென
ஒற்றை ஆண் குரல்
மீனவர் குடிசையிலிருந்து
தபேலாவின் தாளத்தைக் கிளித்து வருகிறது

பிற்பகல்
ஆற்றின் கருங்கல் குன்றுகளில் அமர்ந்து
தோணி விடுபவனை ரசிக்கையில்........
நெடிதான ஒற்றையடிப் பாதையில்
ஒன்றுக்குள் ஒன்று மறைந்து கொள்ளும்
காட்டு மரங்களின் பெயர்ளை கேட்டு நடக்கையில்.......
அவரது வெறும் கைகளை
ஒருமுறை பற்றிக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்




1மார்ச் 2011

-------------------------------------------------------------------------


சுவர் ஓவியம்


மரமே வரைந்தது தன்னையும்...
தனக்கென கூடும், பறவையும்

நிறங்களை எதிரொலித்துக் கொண்டிருந்த சுவர் ஓவியத்தில்
இரண்டாகப் பிளந்த தாரகை ஒன்றுக்கொன்று
கதைசொல்லிக் கொண்டிருந்தது

கூட்டைக் கண்காணிக்கும் கழுகின் கண்கள் பற்றி

கூட்டினை தூக்கிக் கொண்டு கனவெல்லாம் அலைகிறேன்

நல்ல வெளிச்சம் இருக்கின்றது

குகையிலிருந்து பேரழுகை அதிர்வுகள் வந்து விழுகின்றன

நதிக்கரை அமைதியாக இருக்கிறது

கூட்டை மறந்து வைத்துவிட்டேன்
பறவை கதறுகின்றது

கனவுக்குள்ளே
முழு ஏமாற்றத்துடனும் முட்டி மோதுகிறேன்

உன் செல் அழைப்பு .....

மாலை நடையாக ஊர்கின்ற
வார்த்தைகளைப் பிடித்துப் பிடித்து
செவிகளுக்குள் நத்தைகள் ஏறுகின்றன

சந்திரனின் குறுக்காக
நாம் பயணிக்கும் மந்திரப் பாய்கள்
மரத்தை விட்டும் தொலைவிலே தெரிகின்றது
இப்போது சுவர் ஓவியத்தில்




ஏப்ரல் 2010


-------------------------------------------------------------------------

பெண் சிலந்திப்பூச்சியின் வீடு




ஒவ்வொரு கால்களிலும்
காமம் நடன ஊற்றாகி
கொடுக்கில் விசம் ஏற்றி... மயக்கி
மோகத் திளைப்பில் சுருளும்
ஆண் சிலந்தியைக் கலவி
ஆற அமர ஆசையாய்.... என்ன சுவையாய்.....
கொன்று................
இரத்தம் உறுஞ்சுகிறாள் பெண் சிலந்தி

நிலவில் துளையிட்ட ராட்சத முனையை
மலை முகட்டில் இழுத்துக்கட்டி
முடிகிறாள் மறுமுனையை

முதலையின் தருணக் காத்திருப்பில்
கோடித் தாபங்களாய் வலை விரித்திருக்கிறாள்

வெறும் கோதுகளாகிய பிற பூச்சிகளும்
ஆண் சிலந்திகளின் இறந்த உறுப்புகளும்
பெண் சிலந்தியின் சிறைவாசலில் எறியப்பட்டிருக்க

கனவின் துவாரங்கள் வழி
சொட்டித் தேங்கிய
காமக் கடல் அலைகள் பாய்கின்றது
சிலந்தி வயிற்றினுள்

சிலந்திப் பெண்ணிலிருந்து தோன்றி
நீளத் தொடங்குகிற நூலாம்படைகள்
மித மிஞ்சிய வல்லமைகளாய்ப் பொங்கி
உலகைத் தாண்டிப் பெரிதாகிறது....

*

19 மார்ச் 2011

-------------------------------------------------------------------------


அவள் பறவைகள் வாழும் உடல்

அவளது மூக்கில் முளைத்திருந்த வால்வெள்ளியை
என்னசெய்வதென்று மணிக்கணக்காகப் பார்த்து நின்றான்

முக்காடிட்ட மொகலாய ஓவியம்.........
தலை தாழ்ந்து..... சரிந்து......... உட்காந்திருந்தாள்

அவள் தோள்களில் இருந்த ராஜாளி
அவன் அரவம் கேட்டதும்
முதலில் அதிர்ந்து பறந்து சென்றது

குருத்து நாடியைத் திருப்பி
உதடுகளை முதல் முத்தமிட்டபொழுது
கணக்கற்ற புறாக்கள் பயந்து
ஒரே சமயத்தில் எழும்பிப் பறந்தன
தாமதித்து....... இன்னும் இரைதேடி
இன்னோர் இடத்தில் வந்திறங்கின

எட்டிப்பார்ப்பதும்
பின்வாங்குவதும்
அவள் பார்வை...... தீக்கோழிகள்

அவள் கைவிரல்க் கிளைகளில்
கீச்சிடும் சிட்டுக்குருவிகள்.....
நீண்டுகிடந்த கால்விரல்களில்
எதிரும் புதிருமாக
மாம்பழக் குருவிகள்

கார்காலப் பச்சைக்கிளிகள்
ஊர்வலம் செய்கின்ற ஒன்று...........

சொண்டு நீண்ட மரக்கொத்திகள்
சிறகுலர்த்தும் இன்னொன்று.........

நாட்டுப்புற காப்பிலிக் கோழிகள்
ஒன்றையொன்று கோதுவதாய் மற்றொன்று.........

மைனாக்கள்
அங்குமிங்கும் தாவுகின்ற கூந்தல்

வரிசை மாறாமல்
கொக்குகளும்....... நீர்க்காகங்களும்......
கிறு கிறுத்துப் பறக்கும் மீன் கொத்தியும்......

பெயர் தெரியா வண்ணங்களுடன் அலையும்
சிறிதும் பெரிதுமான எண்ணற்ற அபூர்வப் பறவைகள்

ஒலிதெறிக்கும் காடாகவும்........
காட்டின் வெளியாகவும்......
அந்தர ஆகாயமாகவும்.........
அமரும் நிலமாகவும்.........
அவள் பறவைகள் வாழும் உடல்

முதலில் பறவைகளைப் பழகவேண்டும்
.....................................
.........................................
.................................................

தடாகத்தில் நீந்தும் தாராக்களை
ஒவ்வொன்றாகப் பிடித்து
நீர் சொட்டச் சொட்ட
புல் தரையில்விட்டபடி விளையாடுவது
அவனுக்கும்
அவளுக்கும் விருப்பமாகவிருந்தது


*


25 மார்ச் 2011

-------------------------------------------------------------------------


எலுமிச்சை நிறப் பூ



இன்றைய பகலின் நிறப்பொலிவை
காதல் நிரம்பிய குரலால்
உஷ்ணமடையச் செய்கிறாய்

எனது முகநிறத்தின் ஒளிர்வுடன்
பளிர்ச்சிடுகின்ற பகலை
கெளித்தி மீன்கள் கொத்துகின்றன

நீர்க் குமிழிகள் கொப்பளிக்கும்
உடல் மலர்ந்து ஆடுகிறேன்

ஏறுவெயிலில் உன் பக்கமே சாய்கிறது
முற்றிய கதிர்களாய் தலைபூத்த என் காதல்

நாகப் புள்ளிகளிலிருந்து கிளம்பி வீசியது
மணம்.......
வியர்வையின்....... எச்சிலின் தீச்சுவை
மரைகளின் கொம்பு வரிகளை
என் உடலில் எழுதுகிறாய்

என்னைக் கடத்திப் பறக்கும் புரவியின்
மந்திரக் கடிவாளம்
உன்குரலில் உள்ளது

தங்கக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தேன்

மலை உச்சிகளின் மருத மரங்களைத் தாண்டி
வெள்ளைக் காளான்கள் பூத்த வானில்
மின்னல்க் கிளைகளை ஒடித்து வீசி……
மேகச் கருஞ் சுவர்களுக்கப்பால்
மனோரதியக் நிறக் குழைவுகள்
சௌந்தரியமாய் மிதக்கும் ஓரிடத்தில்……..
என் உதடுகளின் ருசி ஏறி
கூவுகிறாய் நீ.... என் பெயரை


*


19 ஜுன் 2011


-------------------------------------------------------------------------

மகுடி


மாதுளையின் கனிந்த சிவப்பு
ஊறிவிழும் நம் சொற்களை
முத்துக்களின் வரிசையாக
மாதுளை அரண்மனைக்குள்ளே அடுக்குகிறோம்

முதிர்ந்த சிற்பி மாளிகைச் சுவர்களில்
இதே மாதுளைச் சாறினால்
நம் சொற்களுக்கு நிகரான ஓவியங்களை
வரைந்து போயிருப்பதை வியக்கிறோம்

மாளிகை நிலவறை தீபந்தத்தை கையிலெடுத்து
நீ காண்பித்துச் செல்கின்ற
ரகசிய அதிசயங்களுக்கு
ஒவ்வொரு புலன்களையும் இழந்து
பிறகு ஓர் ””“இரசத்துளியாய்“ எஞ்சுகிறேன்

அரண்மனைத் தோப்பு மாதுளைக் கொப்பில்
கூட்டிலிருந்தபடி ஊஞ்சலாடும் கிளி
சிவந்த சொண்டின் கதவுகள் திறந்து
நம்மை உள் அழைக்கிறது

காற்றுப்பின்னிய நூலேணியைக் கடந்து
சமுத்திரத்திற்குள் குதித்தோம்

முட்டைகளை காவல் செய்யும்
நீர்ப்பாறைகளுக்கடியில்
மீன்கள் வண்ணங்களை உமிழ்ந்து
வால்களால் அடிக்கின்றன

சங்குகளும்... மினுங்கும் பாசிமணிகளும்
நீர்ச்செடிகளும் சூழ்ந்த பாதாளத்தில் நீந்தி
பவளம் குவிந்திருக்கும் சிப்பிக் குவியலருகே
என் மாயப் புதையலை உனக்காகத் திறக்கிறேன்

பிரபஞ்சத்தையே மூடி
இழுத்துவரும் ஒரு வலையை எனக்குப் பரிசளிப்பதாய்
கணத்திசைக்கு கூட்டிவருகிறாய்

மிக இரவு...
தண்டவாளம் தனிமையின் கதறலில்... நீண்டு கிடக்கிறது

மனிதர்களுடையது போலாகி
கால்களால் நடக்கின்றோம்

நீ உன் அம்மாவைப் பற்றி...
அவளது கண்களில்
உயிர் இருந்த இறுதிக் கணம் பற்றி...
ஜன்னலுக்கு வெளியே
திடீரெனத் தோன்றிய சிவந்த மின்மினிக் கூட்டம்பற்றி...
கதைத்துக் கொண்டே நடக்கிறாய்

அடிக்கடி சிவப்பு மீனை நினைவு கூர்கிறாய்
பிறகு
கூட்டிலிருந்த கிளியை
தனியே விட்டு விட்டதாகத் தத்தளிக்கிறாய்

கண்கள் தான்... கிளி
கிளியின் கூடு மாதுளை...
கண்களை மூடி... அமைதியாகத் தூங்கு
என்று விலகிப் பறந்தேன்


*


15 டிசம்பர் 2010

(கோணங்கியின் சரஸ்வதி அம்மாவுக்கு)



-------------------------------------------------------------------------

புள்ளக்கூடு



கலெண்டரில் இலக்கங்கள்...
வித விதமான அசைவுடன் சுற்றுகின்றன
மேல் கீழாக...  வட்டமாக...

கறுப்பு வண்டுகள் வரிசையாகத் திரும்பி
மடியில்...  கையில்...
தலைமுடியில்... காதுகளில்...
தோழில் ஒன்று... வயிற்றில் ஒன்றாக... இறங்குகின்றன
உடம்பு சிலிர்த்து உதறிக் கொள்கிறது

நினைவின் கொடுக்கினால்
புண்ணைத் துளைத்து வண்டுகள் ஏறுகின்றன
இரைச்சல்... அருவருப்பு... தொந்தரவு...

பப்பாசிக்காய்... முருங்கைக்காய்...
பலா... அன்னாசி... எள்ளு எனத் தின்றதும்
பலமுறை மாடிப்படிகளில் ஏறியதும்
இறங்கித் துள்ளியதும் போக...
கடைசியாக ஆறு மாத்திரைகள் மூன்று நாட்களுக்கு

எல்லாம் முடிந்துவிட்டது வெற்றிகரமாக

கதவு மூலைக்குள் உள்ளது... அப்படியே  குளவிக்கூடு

குளவி வட்டமாகக் கூடு கட்டினால் பெண் குழந்தை
நீளமாக பூரானின் வடிவில்
அடுக்கி அடுக்கிக் கட்டினால் ஆண் குழந்தை

*


ஜுன் 2010

-------------------------------------------------------------------------

புள்ளக்கூடு : (பிள்ளைக்கூடு ) கிழக்கிலங்கையின் கல்முனை பிரதேச முஸ்லீம் வீடுகளில் குளவி கூடு கட்டியிருந்தால்... அதே வீட்டில் அல்லது அயலில்... பெண் கருத்தரித்திருக்கிறாள் என நம்புவது வழக்கமாக இருக்கிறது.

-------------------------------------------------------------------------

காட்சி அறையிலிருந்து தப்பிவந்த நீர்ச்சிலை


மகத்தான நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது

என்னுடைய களஞ்சியங்களிலிருந்து
முதலில் எனக்கே எல்லாம்

என்னைக் கலைத்துப் போட்டு
உண்ணத் தொடங்கினேன்

மலைப்பொந்திலிருந்து கசியும் ஈரம்
திமிறும் குமிழிகள்
என் மீது நிரம்பி ஓடியது

நீர் வீழ்ச்சிகளின் ஆர்ப்பரிப்பை நிகழ்த்தும் ஓவியத்தில்
மீன்கள் இரைகளை உண்கின்றன

பூவரசம் பூக்கள் மிதந்து மிதந்து செல்கின்றன

மேலும் பசித்தது

ஒவ்வொரு புதிய கணங்களை
ஒவ்வொரு புதிய புன்னகைகளை
ஒவ்வொரு புது வானத்திலும்
ஒவ்வொரு பறவைகளாக்கி பறக்கவிடுகின்றேன்

என்னுடைய ஆனந்தத்தை
ஈரம் சொட்டச் சொட்ட உருவாக்குகின்றேன்
எல்லையற்ற அதன் எல்லையை நிர்ணயிக்கிறேன்

எனது ருசியின் முழுமையை
முழுமையின் ருசிக்கு பரிமாறுகின்றேன்

*


ஜனவரி 2010


-------------------------------------------------------------------------
நன்றி : காலச்சுவடு, கல்குதிரை, மணற்கேணி, தீராநதி, அம்ருதா, உன்னதம், காலம், வியூகம், மறுபாதி, சொல், கலைமுகம், மாற்றுப்பிரதி, ஆபிதீன் பக்கங்கள், காற்றுவெளி.
-------------------------------------------------------------------------

2 comments:

நந்தினி மருதம் said...

கவிஞர் அனார் கவிதைகள் தமிழ்க் கவிதையில் அழுத்தமான பதிவுகளை ஏறபடுத்து வருகின்றன .
ஆர்வாரமில்லாமல் ஒரு புதிய நெறிப்பாங்கு .
உள்ளுறை தேர்விலும் சொல்லாடலிலும் அணுகு முறைகளிலும் தனித்தன்மையுடன் விளங்குகின்றன
இடைவெளி இல்லாமல் அவர் தொடர்ந்து எழுத வேண்டும்
அவருக்கு வாழ்த்துக்கள்
----------------------------------
நந்தினிமருதம்
நியூயார்க
2012- சூன் 25

Gowri Shailendra said...

கொஞ்சும் தமிழில் யதார்த்த நிகழ்ச்சிகளுக்கு உயிரோவியம் தந்துள்ளார் அனார்."என்னைக் கடத்திப் பறக்கும் புரவியின் மந்திரக் கடிவாளம்
உன்குரலில் உள்ளது"-என்னை கவர்ந்த் வரிக்ள். இன்னும் பல புதிய படைப்புக்களை எதிர் நோக்கும்
கெளரி ஷைலேந்திரா
ஒடிசா
6.3.13