Saturday, 17 February 2018

ஜின்னின் இரு தோகை :


Dinesh Rajeshwari - (Vellore, India)

--------------------------------------------------------------------------------------------------------------------

இஸ்லாம் அல்லாத மாற்று மதத்தினருக்கு சற்று பழக்கமில்லாத வார்த்தை 'ஜின்'. இஸ்லாத்தில் ஜின் என்றால் மறைந்திருக்கும் ஒரு உயிர் என்கிறார்கள். அதன் அரபு சொல்லில் இருந்து பெறப்படும் மூல விளக்கம் மறைவான ஒன்றுக்கு ஜின் என்று பெயர்.


அனாரின் கவிதைகள் ஜின்னை போல மறைந்துதான் இருக்கிறது. அநேகமாக எல்லா கவிதைகளுமே ஒரே வாசிப்பில் புரிந்து விடாத பூடகமான ஒன்றுதான். எல்லா கவிதைகளும் ஜின்னே. கலையின் முக்கியமான சிறப்புகளில் ஒன்று அது மறைவாய் பொருளுணர்த வேண்டும். அதை எல்லா கவிதைகளிலும் பார்க்கலாம். வெறும் 47 பக்கங்களே உடைய இந்த தொகுப்பை நான் நிறைய முறை படித்து விட்டு புரியாமல் வைத்து விடுவேன். மீண்டும் ஏதாவதொரு இடைவெளியில் எடுத்து படிப்பேன். அந்த நேரத்தில் எனக்கொன்று புரியும். எனக்குள்ளாக நிறையும் என்றே கூட சொல்லலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல் ஏற்பட அதிகமான சாத்தியங்கள் கொண்டுள்ளது இந்த தொகுப்பு.
பின்னட்டையில் வரும் வரிகள் போல அகத்தின் மாயச்சுழல்கள் கவிதைகளாய் மேவிப்பாயும் தொகுதி இது. மௌனத்துக்கும் உரையாடலுக்கும் இடையில் பெறப்பட்ட முத்தங்களாகவும் மாந்த்ரீக வனப்புகளாகவும் அனாரின் கவிதைகள் உருமாற்றம் பெறுகின்றன. புதிய காட்சிப் படிமங்களாலும் சாதரணமாய் பிடிபடாத உருவங்களாலும் நம்மைத் தொடர்ந்து ஈர்த்து கொண்டிருக்கின்றன அவரது கவிதைகள்.

--------------------------------------------------------------------------------------------------------------------


Wednesday, 14 February 2018

எழுதிச் செல்லும் கரங்கள் :   அத்யந்தத்தின் ஞாபகங்கள்

- ஆத்மார்த்தி (மதுரை, இந்தியா)---------------------------------------------------------------------------------------------------------------------------


அனார் நான் வாசித்த கவிஞர்களில் எனக்குப் பிடித்தமானவர்களின் பட்டியலில் எப்போதும் இடம்பெறுகிற ஒருவர். இவரது சமீபத்தியக் கவிதைகள் காலச்சுவடு பதிப்பக வெளியீடாகஜின்னின் இரு தோகை’ என்ற தலைப்பில் வந்திருக்கிறது. எண்ணிக்கையில் குறைவான கவிதைகளே கொண்டிருந்தாலும் கவிதைகளின் வீர்யத்தாலும் அவை அழைத்துச் சென்று ஆட்படுத்துகிற அனுபவவெளியின் ஒளிர்விலகல்களாலும் முக்கியமான தொகுதியாகிறது. அனாரின் பலம் சொல்ல வருவதை மிக உறுதியாக சொல்ல முனைகிறார். மேலும் அனாரின் கவிதைப் பொருட்கள் அலாதியானவையாக இருக்கின்றன. இயல்பின் சொல் மலர்களை எடுப்பதிலும் கோர்ப்பதிலும் அனாயாசம் காட்டுகிற அனார் அவற்றின் மீது பரபரப்பேதுமின்றிக் கவிதை செய்வதையே விரும்புகிறார். இன்னும் சொல்வதானால் ஒருவகையில் தன் சொந்த மொழியின் அருகாமையும் ஆன்ம உறவாடலும் கைவரப் பெற்ற அனார் அனிச்சையாகவே தன் கவிதை நிகழ்ந்து நிறைவதை எப்போதும் உறுதி செய்கிறார். ஒரு சொல்லை அதன் பகுதியைக் கூடத் தீர்மானிப்பதோ நிர்ப்பந்திப்பதோ இல்லாமல் மிக எளிமையான அதே நேரத்தில் தன்னியல்பின் பெருக்கத்தில் வந்து நிறைகின்றன அனாரின் கவிதைகள். மேலோட்டம் என்று கடக்கவே முடியாத ஆழ்கவனப் பார்வையை ஒவ்வொரு கவிதையிலும் அழுத்தமாய் எதிர் நோக்குகின்றன இக்கவிதைகள். மாற்றாக முடிந்து வெளியேறும் போழ்துகளில் சன்னவொலித்தலில் விருப்பப் பாடலின் வார்த்தைகளை மாற்றியும் தத்தகாரம் கொண்டு நிரப்பியும் தனிமையும் தானுமாய் விளையாடிப் பார்க்கிற அத்யந்தத்தின் ஞாபகங்களாக இக்கவிதைகள் வாசகனுக்குள் நிரம்புகின்றன.

இந்தத் தொகுதியில் அனார் எழுதி இருக்கிறகால்களால் ருசியறியும் நடனம்’ என்ற கவிதை என் கண்டறிதலில் சமீபத்தில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த கவிதைகளில் முக்கியமான ஒன்று. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை அடுத்த அத்தியாயத்தில் காணலாம். இப்போது தமிழில் அனார் எழுதிய கவிதை.


கால்களால் ருசியறியும் நடனம்
------------------------------------------------------------
அந்திப்பூச்சியின் மந்திரம்
பலிக்கத் தொடங்குகையில்
கோடை நடனம் செக்கச் செவேலென
கரைந்துருகுகின்றது

உருவம்
பொன்னொளி உருக்கென வியாபிக்க
வெள்ளை ஆடை அகன்று குடைவிரிய
உயிர் எனும் வெள்ளிப்பூச்சியே
ஜோதியை மொய்த்திடு

உருக்கொண்டு முற்றி வெடிக்கின்ற
நிறச் சுளைகளின் மீது
கால்களால் ருசியறியும் நடனம் சுழலட்டும்

ஆவி கவ்விடும் பார்வையில்
நிசப்தவெளி விரிய
மஞ்சள் புல்வெளியாளின்
சிறகுகள் படபடக்கின்றன

களிநடனமிடும் நர்த்தகியின்
தெய்வீகப் பனிமுத்துக்கள் உறிஞ்சி
மஞ்சள் சிறகன் உணர்வின் ஆழத்திற்கு
நித்தியத்தின் கிருபையை கொண்டு செல்கிறான்

--


இதன் தலைப்பில் தொடங்குகிற தனித்துவத்தின் வசீகரம் ஒரு பெருமலைப் பாதையின் மழைச்சாரல் பொழிவின் பொழுது நிகழ்கிற கண்ணறியா நகர்தலின் போது ஒவ்வொரு வளைவிலும் உயிர் போய் உயிர் வருகிற நிச்சயமின்மையின் பொழுதான மிதமான அலறலுடன் நிகழ்கிற பெயரற்ற மகிழ்வொன்றிற்குச் சற்றும் குறைவற்றது. இந்தக் கவிதையின் சொற்களை அவற்றின் வழமையிலிருந்து பெற்றுக் கொள்கிற மன அருகாமை ஒன்று நிகழ்வதன் வாயிலாகவே இக்கவிதையின் முழுமை வரைக்கும் பிரயாணிக்க முடியும். இதன் உருவகங்கள் பன்முக சாத்திய வெளிகளில் நம்மைத் தள்ளுகின்றன. ஒவ்வொரு சொல்லும் பேயுருக் கொள்வது மொழியின் நன்கு ஒத்திகை செய்த பிற்பாடு நிகழ்த்தப் படுகிற நடனம் போன்ற லாவகம்.

முற்றி வெடிக்கின்ற நிறச்சுளைகளின் மீது கால்களால் ருசியறியும் நடனம் சுழலட்டும் என்பது அபாரமாய் வெடிப்புறுகிறது. மஞ்சள் புல்வெளியாளும் மஞ்சள் சிறகனும் நம்முள் நாளும் நிதானத்தில் பெருக்கெடுக்கிற மஞ்சளின் அத்தனை நிகழ்தகவுகளையும் அறுத்தெறிந்து வேறொரு ஒற்றையாகத் தன்னை நேர்த்துகிறது. நித்தியத்தின் கிருபை உணரப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். உயிர் எனும் வெள்ளிப்பூச்சியை எங்கனம் எப்படி ஜோதியோடு சேர்ப்பிப்பது என்பது தான் சூட்சுமத்தின் முன் கோரல் ஞானம் என்பதாகிறது.

சொற்களுக்கு ஒப்புக் கொடுப்பதென்பது இப்படித் தான் சுயம் அழித்துக் கரைத்து விடுவதற்கான நிகழ்சாத்தியம் என்பது. இன்னொரு சொல்லாய்ச் சொல்வதானால் சுயம் அழிதலின் பெயர் தான் மாயமாதல் என்பது. இக்கவிதை மொழிவழி மாயமாதலை சாத்தியமாக்குகிறது.
 --------------------------------------------------------------------------------------------
நன்றி : http://aathmaarthi.com/index.php?option=com_content&view=article&id=312&Itemid=322Saturday, 27 January 2018

ஜின்னின் இரு தோகை - அனார்

Muthuprakash Ravindran ( Chennai, India)


--------------------------------------------------------------------------------------------------------


தமிழில் தற்சமயம் எழுதும் கவிஞர்களில் அனார் மற்றும் தேன் மொழி தாஸ் மட்டுமே சிறந்த கவிஞர்கள் என்பது என் கருத்து. அதிலும் அனார் நம் முன் கொண்டு வரும் உலகம் மிகவும் ரசிக்க வேண்டியது.அனாரின் கவிதைகள் அவரே சொல்வது போல் 'மௌனத்திற்கும் உரையாடலுக்கும்' நடுவே உள்ள வெளியில் இருப்பவை. பெரும்பாலும் காதல் கவிதைகள். Impressionism போன்று மனதில் காதலின் நிலையை வார்த்தைகளில் வடிப்பவை. வான் கோவின் சித்திரங்கள் போல இவை எழுத்தில் வரையப்பட்டவை.

காதல் கவிதைகளில் அனார் ஒரு தனித்துவமிக்க கவிஞராகவே இருக்கிறார். அவர் வரையும் காதல் கோடுகள் இதுவரை இடப்படாதவை. 'ஒற்றை முத்தம்' ஒரு எடுத்துக்காட்டு.


'மரத்தின் இடைவெளிக்கூடாக விழுந்த
இறந்தகால வெட்கங்களின்
வெளிச்சத் தீற்றல்களைத்
திரும்ப நினைத்து நாணமுறுகிறேன்
..
கற்களின் இடுக்குகளுக்குள்ளே
தாப திவலைகளின்
நீர் வளையங்களாகிறேன்.

உன் கண்கள் ரகசியங்களுடன்
சுழலும் பொழுதெல்லாம்
இரவின் சதுப்பு நாணல்களுக்குள்
புதைகின்றன நட்சத்திரங்கள்.'


அனார் உருவாக்கும் காட்சி படிமங்கள் இதுவரை இல்லாதவை. அவரின் கவிதைகளின் உலகம் இத்தகைய மாய தோற்றங்களில் உருவாகும் படிமங்களின் வழியே வெளிப்படுகிறது.


பெரும்பாலும் காதலின் மெல்லிய வெளிப்பாடாகவே அவரது கவிதைகள் இருக்கின்றன. துயரங்கள் ஒரு நீர் கோடாக வழிந்தாலும், காதல் மனதின் வெளிப்பாடாகவே அவர் எழுதுகிறார்.


'பல்லாயிரம் உப்புக்கோடுகளாக
மழைக்கொட்டும் தனித்த இரவொன்றில்
கண்களில் இருந்து பெருகும்
உப்புக்கோடுகளை
வெளிப்படாமல் அழிக்கிறாள்..'


போன்ற வரிகள் வேறு சிலவே. அனாரின் மாய உலகம் வசீகரமானது. நம்மை ஈர்த்து அதனுள்ளேயே வைத்துக் கொள்வது. இதுவே அவரின் கவிதையின் வெற்றி எனலாம்.


'மௌனத்திற்கும் உரையாடலுக்குமிடையே
பெறப்படாத முத்தங்கள்
நம் கண்கள்'

----------------------------------------------------------------------

நன்றி : https://sibipranav.blogspot.com/2018/01/by.html?spref=fbSunday, 5 November 2017

கவிதை முழுமையடையும் தருணம்
------------------------------------------------------------

- பேரா. அ. ராமசாமிஇப்போது வரும் கவிதைத்தொகுதிகளில் ஒன்றைக் கையில்கொடுத்து விமர்சனம் செய்யவேண்டும் அல்லது விளக்கிப்பேசவேண்டுமென்றால் திணறல் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. அந்தத் திணறல் காரணமாகவே தமிழின் முக்கியக் கவிகள் பலரைப்பற்றியும் எனது வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளாமல் தவிர்த்துக் / தவித்துக்கொண்டிருக்கிறேன். அனாரின் கவிதைகளின் தொகுதியும்சரி, தனித்தனிக் கவிதைகளும்சரி அந்தத் திணறலை ஏற்படுத்துவதில்லை.

அச்சில் ( தடம், நவம்பர், 2016 ) வந்திருக்கும் தனது கவிதையொன்றை அனார் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தக் கவிதையின் தலைப்பு,
" ஆழ்தொலைவின் பேய்மை"

’ நீயொரு மாறுதலற்ற நிழல்
நான் பகலை முந்திச்செல்லும் இரவு’

என்பதான இருமைக்குள் விரியும் படிமக் காட்சிகள் பிறன்மை(Other) யையும் தன்னிலை(Self)யையும் அடுக்கிக் காட்டுகின்றன.

பகலை முந்திச்செல்லும் இரவு எனத் தன்னை ( ) முன்னிலைப்படுத்திக்கொண்டு, பிறன்மையை ஆழ்தொலைவின் பேய்மையாக உருவகித்துக்கொண்டு உரையாடலை நிகழ்த்துகிறது. தனக்கும் அதற்குமான தூரம் வெகுதூரமாக இருந்தபோதிலும் தனது இருப்பு, 'வெம்புக்காட்டின் சுருள்களுக்குள்
நாகத்தின் சீற்றம்' மின்வெட்டு, கரைந்தபடி அலையும் ஒற்றைக்காகம், ஜொலிஜொலிப்பாக விரியும் அமிர்தத்தின் குடுவை எனச்சொல்கிறது. என்றாலும் கணத்தில் சூழும் பேய்மைகள், மரணத்தை நினைவூட்டும் அச்சமாகச் சூழ்கிறது என விரிகிறது.


கவிதைக்குள் இருக்கும் ‘சொல்லி’யின் தவிப்பும் நிலைப்பாடும் தனியொருவருக்குரியதாக இல்லாமல் பொதுநிலைக்குரியதாக ஆவதில், ஒவ்வொரு அகக்கவிதையும், பொதுநிலைக்கவிதையாக மாறிவிடும். அனாரின் இந்தக் கவிதை அதைத்துல்லியமாகச் செய்துகாட்டியிருக்கிறது.ஆணைச்சார்ந்து வாழும் பெண்மையாக மட்டுமல்லாமல், தனது படைப்பாற்றல், உற்பத்தித்திறன், பயணம் தரும் கொண்டாட்டத்தை அனுபவிக்கும் மனுசியாக உலகத்தின் பரப்பிற்குள் விரிக்கும் ஒரு பெண்ணைச் சூழும் பேய்ம்மைகள் பலவிதமானவை. அவற்றின்மீது அந்தப்பெண் கொள்ளும் கோபத்தின் ஆவேசத்தை, ஆவேசமான சொற்களைத்தவிர்த்து அதன் வீர்யம் குறையாத வேறுசொற்களால் நிரல்படுத்துவதில் அனார் கவனம் செலுத்துபவர். அந்த நிரல்படுத்தலில் தான் வாழும் நிலம்சார்ந்த காட்சிச்சித்திரங்களையும் தந்துவிடுவார். இந்தக்கவிதையிலும் அதை உறுதிசெய்திருக்கிறார். அச்சத்தின் சாயலும் பெருமிதத்தின் நிமிர்வுமெனக் கசியும் இந்தக் கவிதையில் ஒரு தமிழ்க்கவிதையின் அழகியலான முதல், கரு, உரி என்ற மூன்றும் சம அளவில் வெளிப்பட்டுள்ளது. அந்தச் சமநிலையில்தான் கவிதை முழுமையாகும். இந்தக் கவிதை அப்படியொரு முழுமையான கவிதை:


இனி முழுமையாக அந்தக் கவிதையைத் தருகிறேன்.


வெம்புக்காட்டின் சுருள்களுக்குள்
நாகத்தின் சீற்றமாக இருக்கிறேன்

மேகப்படைகள்
மழையை விரித்துக்கொண்டும்
சுருட்டிக்கொண்டும் இருந்தவேளை
மின்வெட்டாக….

சாம்பல் அந்திகளில் கரைந்தபடி
குறுக்கு மறுக்காக பறக்கும்
ஒற்றைக் காகத்தின் பரிதவிப்பாக
இரு மலை உச்சிகளின் நடுவே
விழும் பெருநீர்ப்பரப்பின் ஜொலி ஜொலிப்பு
குறைவான அமிர்தத்தின் குடுவை
கணத்தில் காணும் விபத்து

மரணத்தைக்கொண்டு நினைவூட்டும் அச்சம்

மிளகுக்கொடியின் அருகே பிறந்த
மலைப் பூனையின் வாசம்

பொங்கிவரும் நுரைத்துளிகளை 
காய்ந்துறையச் செய்யும்
நினைவுகளின் வறண்ட பள்ளங்களில்
தேங்கிய கானல்

மலையைச் சுற்றிப்போகும் குளம்
ஆழ் தொலைவில் 
பேய்த்தனமாய்ச் சிவந்து நீர்ச்சுடர்கள் மினுங்கும்
நீயொரு மாறுதலற்ற நிழல் 
நான் பகலை முந்திச்செல்லும் இரவு’


-------------------------------------------------------------

நன்றி :  பேரா. அ. ராமசாமி 


Thursday, 19 October 2017

பிரவாகத்தில் மிதக்கும் காட்சி அடுக்குகள்- பெருமாள்முருகன்

-----------------------------------------------------------------------------------------------------------

நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள், நான்கு தொகுப்புகள் எனத் தொடர்ந்து இயங்கிவரும் அனாரின் கவிதைகளைப் பற்றி மரபான முறையில் ‘அனாரின் கவிதை உலகம் இப்படியானது’ என ஒற்றைப் புள்ளியை மையமாக்கிக் கட்டுரை எழுதுவது இயலாத காரியம். அவர் கவிதைகளை வாசிக்க வாசிக்கப் ‘பிடிக்குள் அடங்காத பிரவாகம்’ என்னும் தொடர் எனக்குள் தோன்றியது. சொற்சிக்கனம், சொற்செறிவு எனக் கவிதைக்குரிய இலக்கணம் பற்றி முன்கூட்டி அமைத்துக்கொண்ட தீர்மானங்கள் யாவற்றையும் கலைத்துப் போட்டுவிட்டு அனாரின் கவிதைகளை அணுக வேண்டியிருக்கிறது. அவ்விலக்கண வரையறைகளுக்கு எதிராகச் சொன்னால் அனாரின் கவிதைகளைச் ‘சொற்பெருக்கு’ என்று சொல்ல வேண்டும். ‘மானுட மனதின் சொற்பெருக்கு இந்தக் கவிதைகளின் ஆதாரம்’ எனப் ‘பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்பின் பிற்குறிப்பு கூறுகிறது.

கவிதைத் தலைப்புகளும் ஓரிரு சொற்களுக்குள் அடங்குவதில்லை. ‘குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்’, ‘வண்ணத்துப்பூச்சியின் கனாக்காலக் கவிதை’, ‘இருப்பின் பின்னால் வாழ்வின் வெளி’, ‘பருவ காலங்களைச் சூடித் திரியும் கடற்கன்னி’ என விரிகின்றன அவை. ஓரிரு சொற்களுக்குள் அடங்கிய தலைப்புகள் அவரால் கட்டுப்படுத்தப்பட்டவை என்று தோன்றுகின்றன. ‘உனது பெயருக்கு வண்ணத்துபூச்சியென்றொரு அர்த்தமிருப்பது எவ்வளவு பொருத்தம்’ எனத் தொடங்கும் கவிதை தங்கு தடையில்லாமல் ‘உன் தந்திரத்தின் மாயம் அளவற்றது, உள்ளே பாடல் போல மிதக்கின்ற வண்ணத்துப் பூச்சி, வெளியே பிடித்துவைக்க முடியாத கனா’ என்றெல்லாம் விரிந்து பரவி ‘வண்ணத்துப்பூச்சியின் பிரம்மாண்டமான கனாக்காலக் கவிதை நானென்பதில் உனக்குச் சந்தேகமிருக்கிறதா இனியும்’ என முடிவென்று தோன்றாத வரிகளில் முட்டி மோதி நிற்கிறது. அனாரின் கவிதைகள் ‘முத்தாய்ப்பு முடிவு’ என்னும் இலக்கணத்தையும் ஓரளவு மீறுகின்றன. இன்னும் ஏதோ இருக்கிறது எனத் தேடினால் ஏமாற்றம் மிஞ்சும் வண்ணம் முடிந்து விடுகின்றன.

பிரவாகமும் சொற்பெருக்கும் படிப்படியாக நிதானம் பெறுவதே இயல்பு. ஆனால் அனாரின் ‘உடல் பச்சை வானம்’ தொகுப்பிலும் சரி இப்போது வெளிவந்திருக்கும் ‘பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்பிலும் சரி ஆற்றோட்டத்தைக் காண இயலவில்லை. இன்னும் பிரவாகம்தான். ஆனால் ஆற்றோட்டமாக்க அவர் முயன்றிருக்கிறார் என்பது தெரிகிறது. ‘கொக்கோ மரங்கள் பூக்கின்ற மலைமுகடுகளில் தேனீக்கள் ஒன்றையொன்று சுற்றி ஆனந்தத்தைக் கூட்டாக இரைகின்றன’ எனத் தொடங்கி விரிந்து செல்லும் கவிதை ‘இரவுத் தேன்கூடு நிரம்பியிருக்கிறது, கனவில் இருந்தபடி, முதலாவது நீலத்தேனைப் பருகிடும் தருணம், மலை நகர்ந்து போகிறது’ என சற்றே ஆசுவாசத்துடன் முடிகிறது. சிறிய தொடர்கள், பத்தி பிரித்தல், குறைந்த சொற்களில் தலைப்பு என தம் கவிதைகளுக்கு நிதான நடையைக் கொடுக்க முயல்கிறார் அவர். ஆனால் அவை முறுக்கிக்கொண்டும் உடைத்துக் கொண்டும் வெளிப்படுவதையே விரும்புகின்றன.

அனாரின் கவிதைகளைப் பல கோணங்களில் அணுகச் சாத்தியங்கள் உள்ளன. ஈழத்து வாழ்க்கைப் பின்னணி, காதல், இயற்கை, கவிதை காட்டும் ஆண்கள், பெண் உலகம், பெண்மொழி – இப்படிப் பல. பெண்ணைப் பற்றிய கவிதைகளில் நேரடித்தன்மை கொண்டவை, மறைமுகமானவை எனப் பகுத்துப் பார்க்கலாம். ‘பெண் பலி’, ‘நான் பெண்’ முதலியவை நேரடியானவை. பெண் உடலைப் பற்றி ‘என் முன் தான் நிகழ்கின்றது என் மீதான கொலை’ என்று எழுதுகிறார். ‘நான் பெண்’ கவிதையில் ‘எனக்கென்ன எல்லைகள் நான் இயற்கை, நான் பெண்’ எனப் பிரகடனம் செய்கிறார். ‘சுலைஹா’ போலப் பெண் பாத்திர நோக்குக் கவிதைகளும் உள்ளன. ‘மேலும் சில இரத்தக் குறிப்புகள்’ கவிதையும் நேரடியானதுதான். ஆனால் அதில் பிரகடனம் ஏதுமில்லை. அவ்விதம் பெண் நோக்கிலிருந்து எதையும் காணும் பார்வை கொண்ட மறைமுகக் கவிதைகளே முக்கியமானவை. இவ்விதம் ஒற்றைக்குள் அடங்காமல் பல்கி நிற்கும் தன்மை கொண்ட கவிதைகளின் ஒவ்வொரு வகைமை பற்றியும் விரிவாகப் பேசலாம்.

அனாரைப் பொருத்தவரை அனைத்துமே கவிப்பொருள்தான். எல்லாவற்றின் மீதும் பார்வை பதிந்து அவற்றைப் பற்றிய பார்வை ஒன்றை உருவாக்கிவிடுகிறது. அதனால்தான் காட்சி அடுக்குகள் நிரம்பிக் கிடக்கும் கவிதைகளாக இவை இருக்கின்றன. நிசப்தம் பற்றிப் பேசும் கவிதை ஒன்றில் எத்தனையோ காட்சிகள் கிடைக்கின்றன. மழைக்காடுகள், குளிர்ந்த ஆற்றங்கரை, நட்சத்திரங்கள், தீய்க்கும் கோடை, பள்ளத்தாக்குகள், முயல்கள், புல்வெளி, குளிர்கடல், மழைக்குரல், அறைகள், சிறுத்தையின் புள்ளிகள், முட்டைகளைப் பெருக்கும் ஆமை, கொலைவாள், தொங்கும் கயிறு, ஆலகால விசம் எனக் காட்சி அடுக்குகள். ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் இடையே பெரும் தாவல் இருக்கிறது. வாசக மனமும் அவ்விதம் தாவுகிற பயிற்சிக்குத் தயாராக வேண்டும்.

இந்தக் காட்சிகளுக்கிடையே ஒருமையை எதிர்பார்த்தால் பெரும் ஏமாற்றமே மிஞ்சும். இவை கவிதையில் பெறும் இடம், கவிதைக்கு இவை தரும் இடம் ஆகியவை குறித்த விவாதம் தேவை. அது ஒருபுறமிருக்கட்டும். இத்தனை காட்சிகள் பதிவாகும் விதத்தில் நவீன கவிதை எழுதப்படுவது ஒருவகையில் மகிழ்ச்சி தருகிறது. காட்சிப் பதிவுகளை மையப்படுத்திய தமிழ்க் கவிதை மரபின் இழை நவீன கவிதையில் அறுபட்டுவிட்டதோ என்னும் கேள்விக்கு ‘இல்லை’ எனச் சொல்லி அனாரின் கவிதைகளை முன்வைக்கலாம். காட்சி ஒருமை கொண்ட கவிதைகளையும் அனார் நிறையவே எழுதியுள்ளார். அவை கவிதை பழகிய மனதுக்கு ஆதர்சமாக அமைகின்றன.

‘புள்ளக்கூடு’ என்றொரு கவிதை. ‘கிழக்கிலங்கை கல்முனைப் பிரதேச முஸ்லிம் வீடுகளில் குளவி கூடு கட்டியிருந்தால் அதே வீட்டில் அல்லது அயலில் பெண் கருத்தரித்திருக்கிறாள் என நம்பும் வழக்கம் இருக்கிறது’ எனக் கவிதையின் அடிக்குறிப்பு கூறுகிறது. குளவி கூடு கட்டினால் அவ்வீட்டுப் பெண் கருத்தரிப்பாள் என்னும் நம்பிக்கை தமிழகத்திலும் உண்டு. வீட்டில் வந்து கட்டும் குளவிக்கூடு, குருவிக்கூடு ஆகியவற்றைக் கலைக்கும் வழக்கமும் இல்லை. அவ்வாறு கலைத்தால் அவ்வீட்டில் கலகம் உண்டாகும், பிள்ளைப்பேறு இருக்காது என்னும் நம்பிக்கைகள் உள்ளன. இந்நம்பிக்கையை மையமாக்கி கருக்கலைப்பு ஒன்றைப் பற்றிப் பேசுகிறது கவிதை. முரணுக்குக் குளவிக்கூடு பயன்படுகிறது. குளவிக்கூட்டுக்குத்தான் இன்னொரு பெயர் ‘புள்ளக்கூடு (பிள்ளைக்கூடு).’

வண்டுகள் வரிசையாகத் திரும்பி மடியில், கையில், தலைமுடியில், காதுகளில், தோளில், வயிற்றில் இறங்கும் காட்சி அடுக்கு. புண்ணைத் துளைத்து ஏறும் வண்டுகள். இங்கே வண்டுகள் இரைச்சலும் அருவருப்பும் தொந்தரவும் தருபவை. கருத்தரிப்பு எவ்விதம் நிகழ்ந்தது என்பதை உணர்த்தும் குறியீடாகக் கறுப்பு வண்டுகளைக் கொண்ட காட்சிகள் அமைந்து கவிதை ஒருமைக்கு உதவுகின்றன. இயல்பில் நிகழ்ந்த கருத்தரிப்பு அல்ல அது. புண்ணைத் துளைத்து ஏறிய வண்டுகளால் நேர்ந்த கருத்தரிப்பு அது. ஆகவே பலா, அன்னாசி, எள்ளு என ஏதேதோ தின்றும் பலமுறை மாடிப்படிகளில் ஏறி இறங்கியும் மூன்று நாட்களில் ஆறு மாத்திரை விழுங்கியும் கலைக்கப்படுகிறது. ‘எல்லாம் முடிந்துவிட்டது வெற்றிகரமாக.’ முரணை உணர்த்தும் கடைசிக் காட்சி இது: ‘கதவு மூலைக்குள் உள்ளது அப்படியே குளவிக்கூடு.’ இந்தக் காட்சியோடு முடிந்திருந்தால் கவிதை இன்னும் சிறந்திருக்கும். ஆனால் அடிக்குறிப்பில் வரும் விளக்கம் கவிதையின் இறுதியிலும் இவ்விதம் வந்து சேர்கிறது: ‘குளவி வட்டமாகக் கூடு கட்டினால் பெண் குழந்தை. நீளமாகப் பூரானின் வடிவில் அடுக்கி அடுக்கிக் கட்டினால் ஆண் குழந்தை.’

காட்சிகளில் பிரியமுடைய கவிஞருக்குப் பயணத்தில் ஈடுபாடு இருப்பது இயல்பு. ‘எனக்குக் கவிதை முகம்’ நூல் ‘மண்புழுவின் இரவு’ என்னும் கவிதையில் தொடங்குகிறது. அக்கவிதை மாலையில் தொடங்கி இரவில் நீளும் பயணம் ஒன்றை விவரிக்கிறது. இருந்த இடத்தில் இருந்தே செல்லும் பயணம். காட்சிகளால் நிரம்பும் பயணம். மழை ஈரம் காயாத தார்வீதியில் தொடங்கும் காட்சி, மாலை, அடரிருள், மல்லாந்து கிடக்கும் மலைகள், கூதல் காற்று, மணக்கும் நன்னாரி வேர் என விரிகிறது. ‘றபான்’ இசைக்கும் முதியவர், நிறுத்தி வைக்கப்பட்ட வைக்கோல் பொம்மைகள், அடி பெருத்த விருட்சங்கள், கரும்புக்காடு, மணல் பாதை, மஞ்சள் நிறப் பூனை, பிறை நிலா, நட்சத்திரம் என இன்னும் இன்னும் செல்கிறது.

ஒருவகையில் இந்தக் கவிதை சங்க இலக்கியப் பாடல் போன்று பிரிவில் துஞ்சாத பெண்ணின் இரவைப் பேசுவதுதான். ஆனால் காட்சிகள் பிரிவுத்துயரைப் போக்கிவிடுகின்றன. அதற்குக் காரணம் ‘இருளின் இருளுக்குள்ளே எவ்வளவு பிரகாசம் நீ, கூதல் காற்றுக் கற்றைகளில் நாசியில் நன்னாரி வேர் மணக்க மணக்க மிதந்து வரும்’ இணை பற்றிய காட்சித் தோற்றம்தான். அவ்விதம் தோன்றுவதால் எல்லாக் காட்சிகளும் இன்பமாகிவிடுகின்றன. ‘இந்தப் பொழுதை ஒரு பூக்கூடையாய்த் தூக்கி நடக்கின்றேன்’ என்று அதனால் சொல்ல முடிகிறது. ஆனால் தனிமையில் நீளும் இரவு அது. அந்தத் துயர் காட்சிகளில் படியாமல் பார்த்துக்கொள்கிறது கவிமனம். எனினும் கவிதையின் முடிவு துயரையே தருகின்றது. ‘நீளமான நூலாய் தெரிகின்றது இரவு, நான் தனித்த மண்புழு, சிறுகச் சிறுக நீளுகின்றேன், தொடர்ந்து நீளமான வெள்ளை நூல் தெரியும்வரை.’ வரப் போகும் பகலும் நீளம்தான். அது வெள்ளை நூல். அதுதான் வேறுபாடு.

காட்சிகளில் ஈடுபாடுள்ள கவிஞருக்கு இயற்கை மீது இருக்கும் அன்புக்கு அளவில்லை. எங்கெங்கும் இயற்கை கொட்டிக் கிடக்கிறது. இயற்கை எவ்விதமெல்லாம் அர்த்தப்படுகிறது, உருமாறுகிறது என்பதை அறிய அனாரின் கவிதைகளுக்குள் ஓர் உள்முகப் பயணம் நிகழ்த்தியாக வேண்டும். இயற்கையின் ஒவ்வொரு அம்சமும் மனிதரோடும் மனதோடும் அத்தனை நெருக்கமாக இருக்கின்றது. ‘கறிவேப்பிலை மரத்தில் அன்பைப் பழகுதல்’ என்னும் கவிதைக்குப் பொருள் வீட்டுக்குள் சமையலறையில் இருந்து ஜன்னல் வழியாகப் பார்த்தல் தெரியும் கறிவேப்பில்லை மரம். அது வெறும் மரமாகத் தெரியவில்லை. ‘அன்பின் பெருவிருட்சம்’ எனத் தெரிகிறது. அதனால்தான் அதை ‘எப்போதும் பார்த்துக்கொண்டிருக்க’ முடிகிறது. கறிவேப்பிலை மரம் என்னும் பெருவிருட்சம் காட்சியான பின் அதைச் சுற்றிச் சிறுகாட்சிகள் விரிகின்றன. அக்காட்சிகளில் வெளியாகும் மனோபாவங்கள் விதவிதமானவை.

அவ்வழியே செல்பவர்கள் அதை ஆராய்ந்து செல்கின்றனர். இலைகளைத் திருடுகின்றனர். கந்துகளை (கிளைகள்? குச்சிகள்?) முறிக்கின்றனர். பேராசை மிக்க வியாபாரி வருகிறான். எந்தவொரு இலையையும் விடாமல் உருவிச் செல்கிறான். ஆனால் மரம் துளிர்த்து அடர்ந்து செழித்துவிடுகிறது. எப்படி? ‘எதையுமே இழக்காத மாதிரி.’ செழித்த மரக் கந்துகளில் குருவிகள் புகுந்து பேசி விளையாடுகின்றன. அதன் காரணமாக மரத்தின் முகம் ஒளிர்கிறது. புது அழகுடன் மிளிர்கிறது. கறிவேப்பிலை மரத்தைக் கொண்டு அன்பை பழகும் வித்தையைக் கற்க முடியும் என்பது மாபெரும் தரிசனம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அனாரின் கவிதைகளை ஒற்றைக்குள் அடக்க இயலாது எனத் தொடங்கிய கட்டுரை ‘காட்சி அடுக்கு’ என்னும் ஒற்றைக்குள் தன்னையும் அறியாமல் நுழைந்துவிட்டது. எல்லாவற்றிலும் ஏதோ ஒரு பொதுமை இருக்கும் என்பதால் இது நிகழ்ந்ததா? எல்லாவற்றையும் ஏதொ ஒரு பொதுமைக்குள் அடக்கும் மனோபாவம் நமக்குள் இருக்கிறது என்பதால் இது நிகழ்ந்ததா? எப்படியாயினும் அனாரின் கவிதைகளை ‘பிரவாகத்தில் மிதக்கும் காட்சி அடுக்குகள்’ என்று சொல்லி முடிக்கின்றேன்.

-----------------------------------------------------------------------------------------------------------------

நன்றி -  அடவி - 2017 ஆத்மாநாம் விருது சிறப்பிதழ்