சிறுகதை

ப்லேட் (Blade)


- அனார்
-------------------------------------------------------------------------------------------------------------

வாழை மரத்தெச்சுத்தி கால் இறுகிக் கயித்துடன் அவதிப்பட்டுக் கிடந்தது சாவல்கோழி. நானும் தம்பியும் சோறு கறி ஆக்கி விளையாடுகிற இடத்தில கோழியக் கட்டிப்போட்டிருந்தாங்க.

உம்மா பிளிஞ்சதேங்காப்பூவ கோழிக்கு ஒரு தட்டில கொட்டியிருந்தாங்க.

வாளில தண்ணி எடுத்திட்டு பலாமரத்தடிக்குப் போற வாப்பாட கையில கத்திரிக்கி. முண்டுக்கல்லில கத்தி தீட்ற சத்தம் கேட்குது. எனைக்கிண்டா காது கூசுது. ரெண்டு காதயும் பொத்திக்கிட்டென்.

என்ட அல்லாவே ! நான் தான் இண்டைக்கிம் கோழியை அறுக்கிறதுக்கு பிடிக்கணும். தம்பியைப்போல எனக்கு கொஞ்சமும் அது விருப்பமில்ல. ஏனிண்டா கோழியைச் சமைச்சிச் சாப்பிடும்போது அறுக்கிறதுதான் ஞாபகத்தில வரும். என்ன செய்ற இப்பெ அறுக்கக்குள்ள கண்ண மூடிடனும்.

வாப்பா கூப்பிட்டார். நானும் தம்பியும் கோழிர கயித்த அவிழ்த்தோம். நான் சிறகில பிடிச்சி அமுக்கினன். தம்பி கால்களைப் பிடிச்சிருந்தான். அடித்தொண்டையிலரிந்து சாவல்கோழி வழமைக்கு மாறாக் கத்தியது. பாவம் நல்ல இளந்தாரிப் பாணிச் சாவல் என்று வாப்பாவிடம் தம்பி சொன்னான்.

வாப்பா கோழிய மல்லாக்கப் பிடிச்சி அவர்ர பக்கம் இருந்த அதன் சொண்டப் பிரித்து தண்ணீர் பருக்கினார். தொண்டையிலிருந்த சதைய சற்றுக் கிள்ளி உயர்த்திப் பிடித்தவர் கால்கள இறுக்கமாக என்னப் பிடித்துக் கொள்ளச் சொன்னார். இப்ப கோழியின் கழுத்தில் கூரான கத்திய வைத்து தக்பீர் சொல்லியபடி விடாமல் அறுத்தார். ரத்தம் என் சட்டையில தெறித்தது. மரத்தடியில கையை விடாமல் கோழிய கீழ வச்சதும் இறக்கைய சட சடவென அடித்து சாவல் துடித்திச்சி. அறுபட்ட கழுத்தோட பாய்ந்து எம்பி, பக்கத்து வேலியெல்லாம் மோதி ரத்தம் கொட்டி ஈரமண்ணுக்குள்ள கிடந்ததெ பார்ப்பதுக்கு கவலையா இருந்திச்சி.

வப்பாவே கோழிய உரிச்சி கழுவி உம்மாட்ட குடுப்பார். உம்மாவின் கோழிக்கறி ருசியும் மஞ்சச்சோறும் தின்னுவதை நினச்சாலே நாக்கு ஊறுது. நாங்க ரண்டுபேரும் எங்கட விளையாடும் இடத்துக்கு திரும்ப வந்து விளையாடத் தொடங்கினம்.

தம்பி கேட்டான் “ராத்தா கடை வைப்போமா?” சோறு கறி ஆக்குவமா? “நாமளும் இண்டகி சோறாக்கி விளையாடுவம்“ என்றேன். கறி ஆக்குவதற்காக கொச்சிக்காய்த்தூள் இடிச்சி தரச்சொன்னேன். அவன் சிரத்தையுடன் பெரிய செங்கல்லின் நடுவில் சிறிய செங்கல் துண்டொன்றை உரஞ்சி உரஞ்சி தூள் தயார் பண்ணிக்கெணடிருந்தான்.

அந்நேரம்தான் “வெள்ளத்தம்பியர்ர சல்மாட வீடு இதானா?” என்று சத்தமா கேட்டபடி பெத்தா ஒருவ வந்தா. இதுதான் என்றேன். ஆ.. நான் இரண்டு மூணு ஊடுலா தேடிப்போட்டு வாறன் என்று சிரித்தா. பெத்தாட முகம் சதையெல்லாம் சுருங்கி கோடு கோடாய் தொங்கி கிடந்திச்சி. வெத்தல போட்டு சிவந்த நாக்கு வெளிய தெரியும்படி உம்மாவ திருப்பி கூப்பிட்டா.... “உம்மா புதுச் தங்கச்சிக்கு பால் குடுக்காங்க சாப்பறைக்குள்ள போய்ப் பாருங்க“ என்று பெத்தாவ ஊட்டுக்குள்ள அனுப்பிட்டு நான் மற்ற வேலைகள செய்யத் தொடங்கினன்.

வேலி முருங்கை மரத்தில இலை கொஞ்சம் ஆஞ்சேன், விழுந்துகிடந்த விழிமாங்கா பழங்களையும் ஒரு சிரட்டைக்குள் பொறுக்கி எடுத்தேன். வேறொரு சிரட்டைக்குள் கறியக் கூட்டினேன். மண்ணடுப்பில் வச்சி கம்புக்குச்சியால் கிளறிவிட்டு... கிளறிவிட்டு... கறி ஆக்கினேன். நேத்தய பீட்ரூட் கிழங்கிட மிச்சம் மீதிய தண்ணீருக்குள்விட்டு நல்லாக் கழுவி சிவந்த நிறமான நீரை சர்பத்துக்களாக போத்தல் மூடிகளில் ஊத்தினேன். வெள்ளக் குருத்து மணலில் கொஞ்சமா அள்ளி சீனியாம் என்று அதனுள் போட்டு கலந்து வைத்தேன். கறி கொதிச்சிட்டு இருந்திச்சி. தம்பிய கொச்சிக்காய்த்தூள் தரும்படி சொன்னன். அவன் ஒரு பேப்பர்த்துண்டில செங்கல்த்தூளை எடுத்து வந்தான். அத வாங்கி கொதிக்கும் கறிக்குள்ளே கொட்டி கொஞ்சம் தண்ணீரும் ஊத்தினேன். முகத்த சுருக்கிக் கொண்டு “இப்ப கறி உறைக்கப்போகுது ராத்தா... கூடயா தூளைப் போட்டுட்டா“ என்றான்.

“நீ சும்மாகிடவன் நான் சோக்காத்தான் ஆக்கிறன். சரி... சோறு கறியெல்லம் ஆக்கி முடிஞ்சிட்டு.. இனிச் சாப்பிடலாம் வா... வா...“ என்றேன். அவன் சந்தோசமாக சிறிய வாழை இலைத்துண்டுகளை, வாசல்குருத்து மணல் மேல் வடிவா விரிச்சிப்போட்டான். நான் கோபித்துக் கொண்டால் விளையாட்டு இடையில குலைஞ்சு போயிடும் என்டு நினைச்சு தம்பி என்னுடன் இரக்கமாவும் அவதானமாவும் இருந்தான். ரெண்டுபேரும் மண்ணிலேயே இரிந்து சாப்பிட ஆரம்பித்தோம். அவன் களிசனில் பட்டன் இல்லாததால் ஓட்டைக்குள்ளால “குஞ்சு“ எட்டிப்பார்த்தது. எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு தம்பிக்கு சாப்பாடு போட்டன். அவன் விரல்களால் மணலயும் செங்கல்தூள்போட்ட புளிமாங்காய்க் கறியையும் பிசைந்து சும்மா சும்மா வாய்க்கருகே கொண்டு போவதும் பின்பு கீழே வைப்பதும் ஸ்... ஸ்... என்று வாயை உறிஞ்சி சாப்பிடுவதுமாக இருந்தான்.

“உரமா ச்சாக்கொட்டிறியே“ “ரசமா இருக்கா“ என்றேன். ம்... ம்... நல்ல ரசம்... உம்மாட கறிபோலயே இருக்கு ராத்தா என்றான். சாடயா உப்புத்தான் கொஞ்சம் காணா லா? என்றுட்டு என்னப் பார்த்தான். அது பரவால்ல, எனக்கு கணக்காத்தான் இருக்கு. கெதியா சர்பத்த குடிச்சிட்டு எடு. “வாப்பா வாறத்துக்கிடையில தண்ணி வாக்கணும் நாம“ எனச் சொல்லிட்டு சர்பத்தை குடிப்பதுபோல பாவனை செய்து வாய்க்கருகில் கொண்டு வந்தேன். ஒரு வித அவிந்த நாத்த வாசமே வந்திச்சி. அத தம்பிக்கு காட்டிக் கொள்ளாமல் சாட்டுக்கு குடிப்பதுபோல நடிச்சன். அவனும் குடிக்கும் வரை காத்திருந்தேன். தம்பியின் முகம் சர்பத்தை எடுத்ததும் “செப்பமில்ல... சீய்“ என்பதுபோல கோணினாலும் ஒன்றுமே சொல்லவில்லை அவன்.

“எஹாய்...“ . என்று இழுத்து ஒரு பென்னாம்பெரிய ஏவுறையை சத்தமாகவிட்டான். அது வாப்பா சாப்பிட்ட பிறகு விடுற சத்தம்போலயே இருந்திச்சி. வயிறு நிரம்பிட்டு போதும் என்று எழுந்துவிட்டான். வெயில் முகத்தைச் சுடத் தொடங்கியதும் இருவரும் விளையாட்டுச் சாமாங்களை ஒழுங்குபடுத்தத் தொடங்கினோம். தம்பியிடம் நீ கிணற்றடிக்கு தண்ணி வாக்கப் போ. நானும் தண்ணி வாக்க வாறன் என்றுட்டு வீட்டுக்குள்ள ஓடினேன். உம்மாவும் அந்தப் பெத்தாவும் முக்காட்டுக்குள்ளால் “குசு... குசு...“ என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உம்மா எல்லாத்துக்கும் தலையாட்டி கொண்டிருந்தா. நான் தொட்டிலில் உறங்கிய தங்கச்சிய தொட்டுப் பார்த்தன். அவள் குட்டி ரோசப்பூப்போல நித்திரையில் இருந்தாள். ரோஸ் நிறமான சின்ன முகமும் எலிக்குஞ்சைப்போல சுருண்ட விரல்களும் வடிவான மூங்கில்குருத்துப்போல கால்களும் என்ன செப்பம்... தொட்டிலை நான் மெதுவாக ஆட்டிவிட்டேன். மெல்லிய கீறுபோல சிரிப்பொன்று அவள் முகத்தில் தெரிந்தது. “இஞ்ச உம்மா” பிள்ள என்ன வடிவா சிரிக்குது என்றேன். “அது மலக்குகள் பூ கொடுக்காங்க மனே” என்றா பெத்தா. சரி.. “தங்கச்சி படுக்கட்டும்... கதச்சி... கதச்சி... அரட்டவேணா“ போய் தம்பியோட தண்ணிய வாருங்க மகள் என்றா உம்மா.

இந்த பெத்தா யாரு உம்மா ? என்று கேட்டேன். பிள்ளைக்கு ஊதிப்பாக்க வந்திருக்காங்க என்றா. தங்கச்சிக்கு காய்ச்சல் ஒண்டுமே இல்லயே... அப்ப எதுக்கு ஊதிப்பாக்கிற ? எனத் திருப்பிக் கேட்டேன். “கொள்ளயா கதகேட்காம சொன்னத்தச்செய் பார்ப்பம்“ என கோபமாய்ச் சொன்னா.

நானும் தம்பியும் கிணத்தடியில் இருந்த சிறிய தொட்டியில் நிரப்பிய தண்ணீருக்குள் விழுந்து, விளையாடி விளையாடி தண்ணி வாத்தோம். ஆமை ஊர்ந்து ஊர்ந்து விளையாடினோம். பழுத்த பலா இலைகளைப் போட்டு மீன் பிடித்தும் விளையாடினோம்.

வாப்பா சந்தைக்குப்போய் வந்து சாயமணையில் இளைப்பாறுவதற்காக சாய்ந்திருந்தார். நானும் தம்பியும் குளித்து முடித்துவிட்டு ஒரே ஓட்டமாக வீட்டுக்குள் ஓடினோம். தம்பியை கண்ட பெத்தா “குஞ்ச“ காட்டிட்டு ஓடுறான்டா என்ட பேரன் சீ..! என்று சொல்லி முக்காட்டால் முகத்த மூடிச் சிரித்தா. இவனுக்கு “சுன்னத்துக் கல்யாணம்” கெதியா வைக்கணும் பிள்ளேய்.. என்று உம்மாவிடம் கூவினா. தம்பி கோபத்துடன் வந்து என்னிடம் “நான் இப்படியே காட்டிட்டுத்தான் கிடப்பன்“ என்றுட்டு கொடுத்த உடுப்பை மூலையில தூக்கி எறிந்தான்.

உம்மா குட்டிச் தங்கச்சிய கழுவுவதற்கு சுடு தண்ணி எடுத்து வைத்துக் கொண்டிருந்தா. திண்ணயில குளிக்காமல் இண்டைக்கு அறைக்குள்ள தண்ணிவாக்கப் போறிங்களா உம்மா? எனக் கேட்டேன். அதற்கு என்ன கிட்ட ரகசியமான குரலில் கூப்பிட்டு யாருக்கும் கேட்காம காதுக்குள் மெதுவா “நல்ல பிள்ள மாதிரி தம்பிய கூட்டிக்கிட்டு பெரியம்மா வீட்டுக்குப் போயிட்டு வாங்க... இருவருக்கும் காசு தருவன். கொஞ்ச நேரம் ஊஞ்சல் விளையாடிட்டு வாங்க” என்று சொன்னா. “எனக்கு ஏலா” எனக்கேலாம்மா... என்று சிணுங்கினேன். என்ன முதுகில் பிடிச்சி... சொன்னதக் கேளு என்று தள்ளிவிட்டா. வாப்பா இருந்ததால் நான் சத்தம்போடல்ல. திரும்ப திரும்பத் என்ன எதுக்கு உம்மா துரத்தி விடுகிறா என யோசித்த படியே தம்பிய சமாதானம் செய்யப்போனேன். அவன் இப்பவும் கால்கள அகட்டிப்போட்டவனாக முகத்தை நீட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்தான்.

உம்மா தந்த காசை தம்பியிடம் கொடுத்து உடுப்பையும் அவனுக்கு போட்டுவிட்டேன். தம்பியிடம் கடைக்குப்போய் உனக்குப் விருப்பமான “உதக்காய் விழாங்கா வாங்கிச் சாப்பிடுகிளி... நல்லபிள்ளலா... கொஞ்சநேரம் பெரியம்மா வீட்டபோய் விளையாடு நான் சுணங்கி வாறன் சரியா“ என்று அவனை சமாளித்து அனுப்பி வைத்தேன். நான் சத்தம்போடாம அந்த அறைக்குள்ள கதவைச் சாத்திக்கொண்டு ஒளிஞ்சிருந்தன்.

தங்கச்சி எழும்பி குழர்ற சத்தம் கேட்டிச்சி. வழமையா அவள் குழறினா உம்மா என்னத்தான் கூப்பிடுவா. இல்லாட்டி வாப்பாவத்தான் கூப்பிடுவா... இந்த வாப்பா ஏன் ஒன்றும் தெரியாத மாதிரி இருக்கிறார் என்று யோசனையாக இருந்தது.

பெத்தாவும் உம்மாவும் தங்கச்சியின் அறைக்கதவை பூட்டிக்கொண்டார்கள். தொடர்ந்து அழுதுட்டே இருந்தாள். நேற்று உம்மா சொன்னா “தங்கச்சிட நாற்பதாம் நாளுக்கு உனக்கும் தம்பிக்கும் புது உடுப்புத் தாற. கோழிக் கறியும் கல்யாணச் சோறும் ஆக்கிற“ என்றெல்லாம் சொல்லிட்டு. அதையெல்லாம் செய்யாம கதவ பூட்டிக்கிட்டு என்னான் செய்றாவோ ? தங்கச்சிட குழறுவ கூடிக்கிட்டே போகிறது. விறைச்சி விறைச்சி குழறும் சத்தம் கேட்கயில் எனக்கிண்டா உயிர் போயிடும்போல் கஸ்டமா இருக்கி. உம்மாட குரலைவிட அறையிலிருந்து அந்தக் கிழவியின் குரல்தான் கேட்குது.

வாப்பாவோ வாசலில் போய் நின்றுட்டு சிகெரட்டை அவசர அவசரமாக ஊதுகிறார். கதவுட இடைவெளியால பார்த்துக்கிட்டிருந்தேன். உம்மா திடீரென கதவைத் திறந்து ஓடி வந்தா... வாப்பாவக் கூப்பிட்டு “இஞ்ச... நல்ல புது ப்லேட் ஒன்டு கெதியா தாங்க“ என்று கேட்டா. அவர் உடனே வந்து கிணத்தடி பூக்கல்லுக்குள் கையவிட்டு அவரது சேவிங் பெட்டிக்குள் இருந்து எடுத்துக் கொடுக்க... உம்மா குழறிக்கொண்டு உள்ள திரும்பி ஓடுறா. தங்கச்சிட குரல் வீறிட்டுக் கேட்கிது. உம்மா வெளியே வந்து ஜன்னல் கம்பியில தலையை முட்டி முட்டி குழர்றா. எனக்கும் குழறுவதான் வருகிது. வாயைப் பொத்திக் கொண்டு சத்தம் வராம குழறிட்டே நின்டேன். ஏதோ ஒரு பயத்தில என்ட கால்களும் நடுங்கிது. அந்த நாசமத்துப்போன கிழவிய அல்லாஹ் நரகத்தில்தான் தூக்கி எறிவான் என மனசுக்குள்ளே முனிகிறேன். சிறிது நேரத்தில் கதவைத் திறந்து “முடிஞ்சிட்டு ஒரு பிரச்சினயுமில்ல மகளே” என்றபடி அழுகின்ற என் தங்கச்சியை உம்மாவிடம் கொடுக்கின்றா. ஏங்கி... ஏங்கி... கத்தி குழறினதால தங்கச்சிட குரல் கம்மி தேய்ந்துபோயிட்டு, உம்மாட தோளில் அறுத்த கோழியின் கழுத்துப்போல தங்கச்சிட தலை கெழிஞ்சி கிடக்கு...

“முதல்ல தண்ணிய வாரு புள்ள“ என கிழவி சொல்ல உம்மா சரி மாமி என்று எழுந்து. ஒரு வட்டாவை கொண்டு வருகிறா. அதில வெத்தில பாக்கு பழம் காசு துணி எல்லாம் இருக்கி. அதை கிழவிக்கிட்ட கொடுக்கிறா. எல்லாத்தையும் சுருட்டி வேக்கில்போட்டு எடுத்துக் கொண்டு “அல்லாஹ் ரஃமத்துச் செய்யட்டும்” நான் போய்வாறன் என்றவ முந்தானையால ஒரு நீண்ட முக்காட்டை இழுத்துப்போட்டு வெளியேறிப் போகிறா.

O

( பூவரசி )

http://www.poovarashi.com/index.php?option=com_content&view=category&id=36&Itemid=88

-------------------------------------------------------------------------------------------------------------

பெத்தம்மா

-  அனார்
-------------------------------------------------------------------------------------------------------------

சற்று முன் இந்த அறைக்குள் என் கண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது. அவ்விதமே என் மூச்சுக்களும் தவிப்பும் வீணாகியபடியே இருக்கின்றது. எந்த ஆறுதலுமற்ற இந்த நாட்களையும் இனி வரப்போகின்ற நாட்களையும்  நான் விழுங்கி ஜீரணித்துக் கொள்வேனா? முடிவு எதுவும் எனக்குத் தோன்றவில்லை. இந்தக் கேள்விக்கு மட்டுமல்ல எந்தக் கேள்விக்கும் என்னிடம் இப்போது பதில்களில்லை. எனக்குத் தெரிந்திருக்கும் எல்லாப் பதில்களும் கடைசியில் என்னைக் கவிழ்த்துவிட்டிருக்கின்றன. ஏமாற்றியிருக்கின்றன. வாழ்வு என்னை வீணாக்கியதா? வாழ்வை நான் வீணாக்குகின்றேனா? அதற்கும் எனக்கு பதில் சொல்லத் தெரியாது! என்னைப் பொறுத்தவரை எல்லா உறவுகளுமே ஏதோ ஒரு நேரத்தில்  பொய்த்துவிடுகிற ஒன்றுதான்... அப்படி பொய்த்துவிடுகிற எதுதான் சாசுவதம்? அல்லது பொய்த்துவிடுகின்ற உறவுதான் சாசுவதமானதோ என்னவோ? உறவுகளின் வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்க முடியாத சூழ்நிலை வருமாயின், வீணாகிக் கொண்டிருப்பதென்றால் என்ன என்பதை முழுக்க தெரிந்து கொள்ள முடியும் ஒவ்வொருவராலும்!

ஒதுக்கப்பட்டு வெறும் மணல் கும்பமாக இருக்கும் தனித்த பிறவியின் நாள்களுக்கு வாசமும், பிரகாசமும் எங்கிருந்து வரும்? எதிர்பார்த்து நிற்க எவருமற்ற வாசல் கதவுகளை நம்பிக்கையோடும் ஆவலோடும் தட்ட முடியுமா? தனிமை அடுத்தது  மரணம்... இங்கே பொருட்டில்லாத துரதிஸ்டம் பிடித்த ஆத்மாவை பொருட்படுத்தக் கூடிய இடம் இவைதான். தனிமையில் என்றால் மீள விழித்துப்பார்க்கவும், காதுகொடுக்கவும் ஒரு வசதியிருக்கிறது. சமயத்தில் அந்த வசதியே தண்டனை ஆகியும் விடுகின்றது தான். ஆனால் மிக சில நாள்களுக்கு முன்னர் இந்த வாட்டமும் வெறுப்பும் எனக்குள்ளிருக்கவில்லை. ஆனந்தமான ஒரு நிகரற்ற துணையின் ஆறுதலில்... திளைத்தபடி என்னுடைய வாழ்வினைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். அன்றிருந்த வாழ்வின் நாட்களும் அந்த நாட்களில் இருந்த உயிரும் உயிர்மை ஊறி ஊறி என்னைச் சுற்றிப் படர்ந்த பசுமையும்... அளவில்லாததாக இருந்தது, காற்றின் சுவையும்... ஒளியின் மணமும்... என்னைத் தளுவி இருந்த கணங்கள் அவை. அதுதான் முதலும்... முடிவுமாக எனக்கு வாய்த்த அதிஸ்டம் போலும். மற்ற அனைத்தும் என்னைச்சூழ இருந்தபோதிலும் அது மாத்திரம் இல்லாத காரணத்தினால் தான் நான் வீணாகிக் கொண்டிருக்கிறேன்...

எனக்கு மிகத் தெளிவாகப் புரிகின்றது. எப்போதும் அதன் அருகாமையுடனே எனக்கு இருந்திருக்க முடிந்திருக்குமென்றால் வெறிபிடித்த தனிமை என்னுடைய நாள்களில் ஒரு நோயைப்போல பீடித்திருக்க மாட்டாதென்பது. எவ்வளவு விடயங்களை நான் பகிர்ந்து கொண்டேன். ஒழிவு மறைவில்லாமல்... அதனுடன் பொழுதெல்லாம்... அதிகம் அதிகமாய் என்னவெல்லாமோ பேசிக்கொண்டே இருந்தேனே? அப்போதெல்லாம் அயலில் விடுப்புப் பார்ப்பவர்கள் நான் ஒரு மூளைகெட்ட பைத்தியம் என்று கூறிச்சிரிப்பதை சிறிதும் நான் பொருட்படுத்துவதில்லை. பைத்தியமாக இருந்துவிடுவதே அப்போது எனக்கு விருப்பமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருந்தது. அந்த சுவாரஸ்யத்தையும்... அளப்பெரிய உவப்பையும் தந்தது எதுவாக இருக்கும்... என நினைக்கிறீர்கள்... என் குட்டிப் 'பெத்தம்மா' தான் அது.

எனக்கு என் பெத்தம்மா கிடைத்த நாள் பற்றி சொல்ல வேண்டும். அது பற்றி சொல்ல நினைப்பதில்தான் எவ்வளவு ஆனந்தம் நிறைந்திருக்கிறது. ஒரு உச்சி வெயிலின் நடுப்பொழுதில் கூடிக்கூடி காகங்கள் கரைவதைக் கேட்டு முன் வாசலுக்கு ஓடிவந்தேன். தவறுதலாக... காகக் குஞ்சுதான் கீழே விழுந்திருக்குமென நினைத்துக்கொண்டே... தேடினேன்... ஆனால்... அங்கே... தரையில் துடித்துக் கொண்டிருந்தது... அழகிய சிறிய பச்சைக்கிளி. வானிலிருந்து உதிர்ந்த அதிசயமான கவிதைபோல... பரவசம் பொங்க, மிகப்பெரிய பரிசு... மிகப்பெரிய பரிசு... இறைவன் அளித்திருக்கிறான் என்று வாரி எடுத்துக்கொண்டேன். காகங்கள் கொத்தி... அதன் தலை காயமாகிவிட்டிருந்தது. முதலில் காயத்தில் சிறிது ஒலிவ் எண்ணெய் தடவிவிட்டேன். அறிமுகமில்லாததால் அப்போது அந்தக் கிளி என் விரல்களை கொத்தியது. உடனே அதற்கு கம்பிக்கூடு செய்து வெள்ளிக்கரண்டியும், கிண்ணமும் எடுத்து பாலும் தேநீரும் வைத்தேன். வராமல் வந்த விருந்தாளியை கவனிக்கும் பதட்டமும் சந்தோசமும் எனக்கு அந்நேரம் ஏற்பட்டிருந்தது. என் வீட்டிற்கு திடீரென விண்ணுலகிலிருந்து தேவதையே இறங்கி வந்துவிட்டது போன்ற ஆனந்தக் களிப்பில் அதை உபசரித்தேன். அந்தச் சின்னஞ்சிறு தேவதை. நான் வைத்ததையெல்லாம் கொத்திக் கொத்தி கிழே வீசியது. இறக்கையை அடித்து... க்கீ... க்கீ... என இடைவிடாமல் கத்தியது. என்றாலும் என்ன? இரண்டே நாள்களில் அதனுடன் மிகவும் நெருங்கிவிட்டேன். நான் அதனை அளவற்ற விதத்தில் நேசித்தேன். ஆம்... அவ்விதமான உறவும் நெருக்கமும் அப்போது எங்களிருவருக்கும் மிக அவசியமானதாகத்தான் இருந்தது. என் குட்டிப் பெத்தம்மாவும் என்னை நேசிக்கின்றது என்பதை உணரமுடிந்தது.

அச்சிறு பறவையுடன் பழகப் பழக நானும் சிறுத்துவிட வேண்டும் போலவும், இறைவன் எனக்கு மட்டும் இரகசியமாய் இரு சிறகுகளை பரிசளித்தால்... என் பிரியமான பெத்தம்மாவுடன் பறந்துபோய்... கிளிக்கூடுகளில்... வகை வகையான தானியங்களைக் கொறித்து... பழங்களை தின்று மரக்கிளைகளில் அமர்ந்து தென்னோலைகளில் விளையாடி பசும் வயல்களில் நெல் கொறித்து விரிந்த ஆகாயத்தில் மிதந்தபடியும், திசைகள் யாவும் பறந்து திரிந்து கொண்டும், கிளிகளின் கூடுகளில் நானும் ஓர் கிளியாகி குடியிருந்திருப்பேன். நிர்ப்பந்தங்கள் அற்ற உறவு வார்த்தைகளின் ஜாலமும் திணறலும் குமட்டலும் ஏற்படாத உரையாடல் அங்கு கிடைத்திருக்கும். என்னை எவ்விதம் காதலிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டிருக்கக் கூடிய ஓர் கிளி அங்கிருந்திருக்கக் கூடுமோ... என்வோ? என பலவாறன கனவுகளைக் கண்டிருக்கிறேன். அவ்விதமான அதிசயங்கள் நிகழ்ந்திருக்குமானால் நான் தனித்து உழலும் இந்த நிலை எனக்கேன் வரப்போகின்றது? கைகூடும் கனவுகளை அதிஸ்டமற்ற நம் கண்கள் காண்பதேயில்லையே? உண்மையில் கூட்டிலிருந்ததைவிட அந்தக் கிளி என் தோள்களில் தான் இருந்தது. காலையில் வீட்டு வேலைகள் செய்து பூஞ்செடிகளுக்கு நீரூற்றும் வரை மாறி மாறி என் இரு தோள்களில் பேசிப்பேசி குந்தியிருக்கும். என் பெத்தம்மாவின் ஆசை விளையாட்டுகளில் ஒன்று, என் காதுகளில் தொங்கும் சிறிய தங்க மின்னிகளை கொத்திக் கொத்தி  இழுப்பது. தோளில் இருந்தபடி மின்னிகள் ஆடும்போது தன் சிவந்த சொண்டை நீட்டி நீட்டிப் பிடிப்பது. என்ன ஒரு பரவசமான துணை அது...!

அதன் கூட்டை சுத்தம் செய்து பாத்திரங்களில் நீர் நிறைத்து வைத்தால் பெரும் களிப்பும் உற்சாகமம் வந்துவிடும் என் பெத்தம்மாவிற்கு. இரண்டு சிறகுகளையும் அகல விரித்து முகத்தை நீரில் அமிழ்த்தி அமிழ்த்தி நீர் வார்க்கத் தொடங்கிவிடும். அது நீராடுவதும், ஈரம் உலர்த்துவதும் ஒரு தேர்ந்த நடனம்போல மிக அழகாக இருக்கும். சிறகுகளை வீசி வீசி சுற்றி வட்டமடிப்பதும்... காலை மாற்றி மாற்றி உயர்த்துவதும் தாழ்த்துவதும் அதனுடைய அழகின் அசைவுகளை என்னை மறந்து ரசித்தபடியே வாசற் படிகட்டு தூணில் சாய்ந்து கொண்டிருப்பேன். சிறிது நேரத்திற்கெல்லாம் காலை இளவெயிலில் முற்றாக ஈரம் உலர்த்தி உணவுண்ண அது தயாராகிவிடும. கொய்யாப் பழங்களையும் பயத்தம் விதைகளையும் தான் அது விரும்பிச் சாப்பிட்டது. அதன் உணவை தினமும் கடைக்காரன் எனக்கு விசேசமாக எடுத்து வந்து தருவான். நன்றாக  சாப்பிட்டு, நீர் அருந்திவிட்டால் அது கூட்டிற்குள்ளே இருக்காது... பெத்தம்மா... பெத்தம்மா... என்று நளினமாக இனிமை ஒழுக... என்னைக் கூப்பிடும். நான் பெத்தம்மா என்று அதனை அழைப்பது போன்றே அதுவும் என்னை பெத்தம்மா என்றே அழைத்தது. அதன் குரல் நீர்ச்சொட்டுக்கள் கண்ணாடியில் விழுவதுபோன்றதொரு போதையுடன் இருக்கும். கூட்டின் கதவை திறக்க நான் வருவது தெரிந்துவிட்டால் மகிழ்ச்சியில் சிரிக்க ஆரம்பித்துவிடும்... அந்தச் சிரிப்பில், விசித்திரம் மட்டுமல்ல, கள்ளத்தனமும் கோமாளித்தனமும் வெளிப்படுவதை தெரிந்தும் தெரியாததுபோன்று ரசிப்பேன். பிறகென்ன...? ஒரே தாவலில் என் தோள்களில் தொற்றிக் கொள்ளும் ஒரு விளையாட்டு வீரனைப்போல். என் தோளின் கழுத்துப் பகுதியில் அதன் கழுத்துப் பகுதியை உரசிக் கொண்டிருக்கும்... மிருதுவான இறகுகளிலிருந்து வரும் அப்பறவையின் இயற்கை மணம், என் நாசியுள்னுழைந்து மனதின் யன்னல்களை திறந்தது. எனது ஒரு கன்னத்தைக் கிழித்து அதன் மென்மையான முதுகை நீவி விடுவேன், அதற்கு நான் நன்றி தெரிவிப்பதுபோல. ம்ம்... ம்... என்று ஏற்றுக்கொண்டதாகவும் ஆமோதிப்பதாகவும் அது பதிலுக்கு ஓசை எழுப்பிக் கொண்டிருக்கும்.

அப்படியே அன்றைய உணவுக்காக சோறு சமைப்பதற்கு அரிசி கழுவும்போது, அசை போடுவதற்காக சில அரிசி மணிகளையும் வாயில் போட்டுக் கொள்வேன். அது தோள்களில் இருந்தபடி என்னைத் தின்ன விடுவதில்லை. தன் சொண்டுகளால் நோகாமல் என் உதடுகளைப் பிரித்து அரிசித் துணுக்குகளை கவ்வி எடுத்து ஆனந்தமாய் கொறித்தபடியிருக்கும்... நீ மோசமான கிளி... உனக்கு தைரியம் கூடிவிட்டது. பக்கத்து வீட்டுப் பூனையிடம் உன்னைப் பிடித்துக் கொடுக்கிறேன் பார். இப்படி நான் கோபமாய் கடிந்து கொண்டால் அதுவும் சட்டென கோபித்துவிடும். அதற்கு அடையாளமாக என் முதுகின் பின்னாக நகர்ந்து நகர்ந்து கொஞ்சம் பறந்து தேநீர் கோப்பையின் கைப்பிடியில் போய் நின்றுகொள்ளும். 'உம்'மென்று பேசாமலிருக்கும் போது சிறிது நேரத்துக்கெல்லாம் அதன் கழுத்து முடிகள் சிலிர்த்து எழுந்து கொள்ளும். அப்படி இருந்தால்... சண்டைக்கு தயார் என்று தான் அர்த்தம். 'கெக்கக்... கெக்கக்' இப்படி அது தனது  சொண்டுக்குள் குறுகுறுப்பது என்னை பழிந்துக் காட்டுவதற்குத்தான். பெத்தம்மா என்னுடன் கொள்கின்ற சிறு ஊடலும்கூட மிகுந்த வலியை உண்டாக்கிவிடும் எனக்கு. எத்தகைய ஈடற்ற ஒரு உயிர்த்துணை. அதன்... நெருக்கம் தான் எவ்வளவு அமைதியும் நிறைவும் கொண்டது. எனக்குத் தெரியும் கூண்டு என்பது எத்தனை இரக்கமில்லாதது. வன்மம் நிறைந்ததென்று. எந்தக்கூண்டுக்குத்தான் மனசாட்சி இருந்திருக்கிறது? அதனுள் இருக்கும் தனிமை கண்ணுக்குத் தெரியாத பிசாசுசின் குகை வாசலைப் போன்றதல்லவா? வாசல் மாமரக் கிளைகளின் நடுவே, கிளிக்கூட்டைப் பார்க்கும்போதெல்லாம், நானே அதற்குள் அடைபட்டிருப்பதான வேதனை தவிர்க்க முடியாமல் தோன்றுவதுண்டு. அவ்விதமான தருணம் என்னை உலுக்கி உறுத்தலாக மாறியபோது பலமுறை சிந்தித்து இறுதியில் ஒருநாள் ஓர் தீர்மானத்திற்கு வந்தேன். எல்லோருக்கும் வாழ்க்கையில் எப்படியும் ஒரு கட்டம் வரும். விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு, தீர்மானங்களை வலிந்து எடுக்கவும் நிறைவேற்றவும் வேண்டியிருக்குமொரு கட்டாயம் ஏற்படும். எனது துணிச்சலினால் அல்ல... பிரியத்தினால் தான் நான் அதைச் செய்யத் தயாராகினேன். நான் எவ்விதம் அவ்வளவு வலிமையான மனதுடன் அந்த முடிவை எடுத்தேன் என்பது எனக்கே என்மீது கனிவையும் ஆச்சரியத்தையும் தோன்றச் செய்தது. என் பெத்தம்மாவை பிந்தியவொரு மாலை வேளையில் எனது கைகளால் பறக்கும்படி மேலே வீசினேன்... அது எனது வழமையான விளையாட்டு என நினைத்து திரும்பவும் வந்து தோளில் இருந்து கொண்டது... ஏதோ சொண்டுக்குள் முணுமுணுத்தது... பிறகு ஒரு நேரம் நறுக்கென்று எனது விரலை கொத்தியது... தன் எதிர்ப்பை தெரிவித்தது போலும்... பலமுறை நான் மேலே வீசுவதும் அது திரும்புவதுமாக... துயரம் மிகுந்த விளையாட்டொன்றை இருவரும் விளையாடிக் கொண்டிருந்தோம். நான் அந்தக் கணத்தில் இறக்கை முளைக்காத மனித ஜென்மமாய் பிறந்துவிட்டதற்கான தண்டனையை அனுபவித்தேன். என்னைப் பிரிய அது அவ்வளவு எளிதில் விருப்பப்படவில்லை... என்பது ஒருபுறம் இன்றுவரை வாட்டுகிற வேதனையாகவும், அதுவே நெஞ்சின் மூலையில் சிறு ஆறுதலாகவும் இருக்கின்றது.

கடைசி முறையில் அது திரும்பி வராதபொழுது... இருள் கவியுமட்டும் அவ்விடத்திலேயே நின்றபடியிருந்தேன்... தீரா வலியுடன் கண்கள் முட்டக் கண்ணீருடன் அன்பு வெளிப்பாட்டில் பிரிவை ஏற்படுத்துவதும்... ஏற்றுக்கொள்வதும்... அது நம் கண்முன் நிகழ்வதும்... எத்தனை அறிவு பூர்வமானதாகவிருப்பினும் அது சாவுக்கு நிகரானது. அந்தக் கணம் மரணத்துக்கு நிகரான ஓர் கணம் தான் எனக்கு. அன்றாடம் என்னைக் காலை நித்திரையிலிருந்து எழுப்பும் அதன் வழமையான பழக்கத்தில் தினமும் விடியலில் என்முகம் அந்தக்கிளியின் சிறிய உருளும் கண்களில் தோன்றி மறையலாம். எந்த வயல் வெளியிலோ... எவருடைய தென்னோலைகளிலோ அமர்ந்து கூப்பிடவும் செய்யலாம். நான் இங்கு ஆகாயத்தில் என்னைத் தாண்டிப் போகும் கிளிக் கூட்டங்களின் மத்தியில் என் பெத்தம்மாவும் பறந்து போகாதாவென்று தேடுவதும்... சமயங்களில் உரத்துக் கூப்பிடுவதும் அதற்குத் தெரியுமா என்ன? என்றோ ஒருநாள் சிலிர்ப்பூட்டும் அந்த இனிய குரல் இம்மரக்கிளையில்  இருந்து கேட்கமாட்டாதா என்ற கிறுக்குத்தனமான ஏக்கமும் கணக்கற்ற எதிர்பார்ப்பும் அடிமனதில் மண்டிக்கிடக்கத்தான் செய்கிறது

இப்போது வெறுமையான அக்கூண்டிற்குள்ளே... அபூர்வமான வசீகரமான உயிர்த் துடிப்பில்லை. இனி வரப்போகின்ற என்னுடைய நாள்களின் கடுமை பூசிய வெற்றிடம் போலவும் நிரந்தரமான, பிசாசு பிடித்த என் தனிமையின் ஊசலாட்டம் போலவும் வெறிச்சோடிப் போய்க்கிடக்கின்றது அந்தக் கம்பிக்கூடு.( உயிர் எழுத்து - வீரகேசரி - 15.10.2006 )


----------------------------------------------------------------------------------------------------------------------------------- 

2 comments:

Abdul Munaf said...

ப்ளேட் கத மிக அரும. என்ட உம்மாக்கு கன்னியாக்குமரி, வாப்பாகு திருநெல்வேலி ஜில்லா. மொத மொறையா ஈழத்து தமிழுல படிக்கிறேன். எனக்குள்ள அவ்வளவு மகிழ்ச்சி! எல்லா வார்த்தைகளும் புரிஞ்சன. ஒவ்வொரு வார்த்தையயும் ரசிச்சி படிச்சன். வாழ்த்துக்கள் தோழி. பாரக்கலாஹூ லக்கி

Sharmila Seyyid said...

அருமையான உயிரோட்டமுள்ள கதைகள். கதைச்சூழலுக்குள் வாசகர்களை இழுத்துச் செல்லும் நடை. பிளேட் கதையின் பேச்சு நடையும், சிந்தனைக்கு இடமளித்துக் கதையை முடிக்கும் பாங்கும் அருமை.