Thursday, 8 August 2013உமாவரதராஜனின் கதைகளுக்குள்ளே நிகழும் உள்மன யாத்திரை

--------------------------------------------------------------------------------------------------

- அனார்

‘புறப்படும் அவசரம் உனக்கு 
என்னையும் 
பறக்கச் சொல்கிறாயா பெண்ணே ?
ஒரு பாடல் முடிந்து
மறுபாடல் தொடங்கும்
ஒலி நாடாவின் இடைவெளியில்
என் குரல் உறைந்திருப்பது
உனக்குத் தெரியாதா ?
பின் ஏன் என்னைப் பாடச் சொல்கிறாய்?’உமாவரதராஜன் அவர்களின் இந்தக் கவிதையை முதன் முதலில் மூன்றாவது மனிதன் இதழில் நான் படிக்க நேர்ந்ததில் இருந்து, காலப்போக்கில் அவரது சிறுகதைகளுக்கு வாசகியாகினேன். கதைகள் என்பவை என்ன ? அது நமக்குள் இருந்து உருவாகின்ற ஒன்றா ? அல்லது பிறரிடம் நாம் காண்கின்றவைகளா ? இல்லையென்றால், நம்மிடமும் இல்லாமல் பிறரிடமும் இல்லாமல் ஒரு அரூபப் பிசாசுபோல கதை ஊரெல்லாம் அலைகிறதா ? கதை என்பது ஒரு வகை திண்மமா ? திரவமா ? அதனால் தானா அவை நம்மை கரையச்செய்கின்றன ? அதனால் தானா ? நமக்குள் பாரமாய் கனக்கின்றன ? இந்த வகையான கேள்விகளுக்கெல்லாம் அப்பால் கதைகள் நம் எல்லோருக்குமான வாழ்க்கையாக இருக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைதான். வாழ்நாளில் நாமே பார்த்து படிப்பதற்குப் பயப்படுகின்ற கதைகள்தான் நம் உள்ளே இருக்கின்றன. இவைகள்தான் எழுத்தாளனிடம் கலைப்படைப்புகளாக, சிறுகதைகளாக மாறுகின்றன. அனேகமாக சமூகத்தை கேள்வி கேட்கின்ற, பிறர் இன்னல்களைப் படைப்புகளாக்கி, படிப்பவர் மனதை உலுக்குகின்ற அல்லாதுவிடின் கதை எழுதுகிறேன் என்று புறப்பட்டு மற்றவர்களின் உயிரை வாங்குகின்ற, இப்படி பல்வேறு வகைப்பட்ட சிறுகதைகளை எழுதுகின்றவர்கள் நம் மத்தியில் இருக்கின்றனர்.

இவற்றிலிருந்தெல்லாம் உமாவரதராஜன் அவர்களின் சிறுகதை உலகம் தனித்துவமானது, வேறுபட்டிருப்பது. அவர் பின்பற்றுகின்ற கலைவடிவம், மொழி இயல்பு, காட்சிப்படுத்தல், சொல்முறை அனைத்தும் ஆன்மாவின் கண்ணாடி முன் நம்மைக் கொண்டு நிறுத்துபவை. அத்தனை அசாதாரணமான படைப்பு மனம், படைப்புவெளி அவருக்கு வாய்த்திருக்கிறது.

அவர் கேள்வி கேட்பதெல்லாம், அவரிடம் தான். அவருடைய உள்ளத்தின் உலுக்கலில் இருந்துதான் கதைகள் இரத்தமும் சதையுமாக வந்து விழுகின்றன. அவர் நிகழ்த்திக் கொண்டுவரும் உள்மன யாத்திரையில், அந்த நீண்ட தனித்த பயணத்தில் அவர், தன்னுள்ளே, தனக்காக அழுபவராகவும், தன்னை நோக்கியே சிரிப்பவராகவும், அவரது வாழ்க்கைப் போக்கில் பின் நகர்ந்து சென்று வேடிக்கை பார்ப்பவராகவும், கேலி செய்கின்றவராகவும் இருக்கிறார். இத்தகைய உணர்வு பூர்வமான மனம் கொண்டவர்கள்தான் சாதாரண கதையொன்றை உன்னதமிக்க கலைவெளிப்பாடாக ஆக்கத் தகுதி வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.

இவ்வாறான மனப்பதிவிலிருந்துதான் உமாவரதராஜன் அவர்களின் சிறுகதைகளை புரிந்து கொள்ளவும் தொடங்கினேன். என்னைப்பொறுத்தவரை, என்னை ஈர்க்கின்ற எந்தவொரு கலைபடைப்பும் கவிதை அனுபவத்தை எனக்குத் தருவதாகவே அமைந்துவிடுவதுண்டு. என்னுடைய ரசனையானது சுற்றிச் சுற்றி எங்கிருந்தும், கவிதையின் சாற்றினை உறுஞ்சும் தேன்பூச்சி போன்றதுதான். அனுபவமாகட்டும், சிறுகதைகளாகட்டும், இசையாகட்டும், ஓவியமாகட்டும் ஏன் ஒரு புகைப்படமோ, திரைப்படமோ அல்லது நடனமோ, நட்போ, கவிதைத் தன்மை கொண்டிராத, எவையும், எவரும், என் ஆன்மாவுடன் தொடர்ந்துவர முடிவதில்லை. தவிர, அத்தகையவைகள் எவையும் என்னுள்ளே படைப்பூக்கத்தையோ, மன அதிர்வுகளையோ ஏற்படுத்துவதுமில்லை.

உமாவரதராஜன் அவர்களது சிறுகதைத்தொகுப்பை... மீண்டும் படிக்கையில் அவருடைய பல கதைகள் அற்புதமான கவிதை அனுபவத்தை எனக்கு ஏற்படுத்தின. அதில் “கள்ளிச்சொட்டு“ என்னும் அவரது கதையிலிருந்து ஒரு சிறு பகுதி:

“ கோயிலின் பின்புறம் தீக்குழி. அடுக்கபட்ட விறகுகளை விழுங்கியபடி நெருப்பு மோகினி சுழன்று சுழன்று ஆட்டம் போடுகின்றது. அதன் தாபமும் தகிப்பும் எங்கும் பரவுகின்றது. தீக்குழியைச் சுற்றி சில மனிதர்கள் நிற்கின்றனர். நெருப்பில் உதித்தவர் போன்றும், நெருப்புடன் வாழ்பவராயும் அவர்கள் தோற்றம் காட்டினர். விறகுகளை விழுங்கிச் செந்தளலாகி ஒளிர்கிறது நெருப்பு. மட்டையினால் அடித்தடித்து எரி தளலின் உயரத்தை மண்ணோக்கிச் சரிப்பார்கள் அந்த மனிதர்கள். கால் நடைகளை விழுங்கி, அசைய இயலாமல் படுத்துக்கிடக்கும் மலைப்பாம்பை நினைவுபடுத்தும் அந்தியிலே இந்தத் தீக்குழி. அந்தியில் ஊர் எல்லைக் கடலில் நீராடி மஞ்சள் பூசி சங்கு, உடுக்கை, பறை மேளங்களுடன் வருவார்கள். தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், பாஞ்சாலி கொலுவினர். அவர்கள் நெருப்பில் நடப்பார்கள். மறுகரை அடைவார்கள்.

ஜனநெருசலில் தள்ளுண்டு நான் நடந்தேன். மரங்களின் கண்ணீர்த் துளிகளெனச் சருகுகள் பரவிக்கிடக்கின்றன. சருகுகள் நொறுங்க நொறுங்க மென்மேலும் முன்னேறுகின்றன என் பாதங்கள். செக்குமாட்டுத் தனத்துடன் கோயிலைச் சுற்றிச் சுற்றி இலக்கற்ற ஒரு பயணம்.”

இந்த சிறுகதைத் தொகுப்பினுள்ளே மாய வசீகரமாக திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும் கள்ளிச்சொட்டு கதையின் ஆரம்பப் பகுதி தான் மேலே குறிப்பிட்டது. கதையின் இறுதிப்பகுதியில் கனவுத் தன்மையான ஒரு காட்சி விபரிக்கப்படுகிறது,

“பலநூறு வருடங்களுக்கு முன்னால் சாத்தப்பட்ட ஜன்னலொன்று பெருமுயற்சியுடன் திறபடுவதைப்போன்ற சத்தம். நான் அண்ணார்ந்து பார்த்தேன். இருட்குகையில் ஒளிரும் மெழுகுவர்த்தி ஏந்தித் தோன்றுகிறாள் ஒருத்தி. முகலாயர் காலத்து மூடுபல்லக்கின் திரைவிலகித் தெரியும் ஒரு பெண்ணின் சோகம் கவிந்த முகம். முதுமையின் படிகளில் அவள் கால் வைத்திருந்தாள். வீட்டுப்படிகளில் அவள் ஏறத் தொடங்கினாள். மேகங்களை கையால் பிடிக்கப்போவதுபோல் அவள் போய்க் கொண்டே இருந்தாள். நான் பின்தொடர்ந்து கொண்டே இருந்தேன். முடிவிடம் தென்படாமல் படிகள், படிகள், படிகள்.”

இப்படித்தான் உமாவரதராஜன் அவர்கள் அவரைச் சுற்றுகின்ற கதைகளை நாம் சுற்றும்படி எழுதுகின்றார். ஆழ்ந்த அர்த்தச் செறிவிற்காவும், ஆர்ப்பாட்டமில்லாத, தலைமுடியை பியித்துக்கொள்ள வைக்காத அழகிய மொழி ஆற்றலுக்காகவும் என்னுள் பதிந்துபோன கதைகள் இவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் வெவ்வேறு மனநிலைகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் பயணிக்கின்றன. பயணம் என்பதே கதைக்குள் பயணிக்கின்ற ஒரு அழகிய படிமமாக தொடர்ந்து வருகிறது. அவருடைய சைக்கிள் பயணம் இடம்பெறுகின்ற கதைகளில் அந்த சைக்கிள் உணர்வும் உயிருமுள்ள அபூர்வமான தோழனாக மாறிவிடுகின்றது. அதேபோல மிகவும் கனவு பூர்வமான மழை கதைகளில் பெய்கிறன. ஒரு திரை வடிவத்தின் காட்சி மொழியாக பல தருணங்கள் கதைகளில் இடம்பெறுகின்றன. ஜெனி என்ற கதையில் இவ்விதமான காட்சிகள் நகர்வதை வாசிப்பனுபவத்தில் காணலாம்.

பள்ளமொன்றை நோக்கி நீளும் வீதியும், பசும் புல்வெளியும், மலைத்தொடரும், காலைப்பொழுதும், ஈரம் சொட்டி நிற்கும் கொய்யா மரமுமாக ஜெனி ஒரு மறக்க முடியாத கதையாக மாறிப்போகிறது எங்கள் மனதில். கைகளில் புகைந்தபடி இருக்கும் மந்திரக்கோல்போன்ற சிகரெட்டுடன் உரையாடுகின்ற ஜெனியின் அம்மா, அக்கதையில் வரும் ரயில் பற்றிய நினைவுகள், சூரியனின் தலை கடலினுள் இருந்து மெல்ல மெல்ல மேலெழுவதைத் தரிசிக்க கரையில் அதிகாலை வந்து குந்திவிட்ட பெண்போல தோற்றமளிக்கும் ஜெனி, அனைத்தும் கூடி, அக்கதையானது மெல்லிய துயர இசையாக ஒலிப்பதை உணரமுடிகின்றது.

அடுத்ததாக உமாவரதராஜன் அவர்களது கதைகளில் பல குணாதிசயங்கள் கொண்ட பெண்கள் வருகின்றனர். எனக்கு விருப்பமான பெண்பாத்திரமாய் அவருடைய அம்மா வருகின்ற இடங்கள் அல்லது அந்தப் பாத்திரங்களில் வருகின்ற அம்மாவைப் பற்றிய எண்ணங்கள், பாசாங்கற்ற தெளிவான குறிப்புகளாகும். அவை மகனின் பாசமாக மட்டும் இருப்பதில்லை.

தொகுப்பிலுள்ள பிற கதைகளை வெவ்வேறு பார்வைகளோடும் கருத்துக்களோடும் மற்றவர்கள் அணுகமுடியும். 1974இல் எழுதப்பட்ட முதல் கதையில் தொடங்கி முக்கியமான காலகட்டங்களான 80கள் மற்றும் 90களிலும் பல முக்கிய கதைகளை எமக்களித்திருக்கிறார். சவால்கள் மிகுந்த அக்கால கட்டங்களைத் தாண்டி இன்றைக்கும் இக்கதைகள் தன்நிகரற்ற தன்மைகளோடு ஒளிர்கின்றன.

இத்தொகுப்பில் காலத்தால் அழிக்கமுடியாத ஒரு கதையாக ‘அரசனின் வருகை’ சிறுகதை இடம்பெற்றிருக்கிறது. கணக்கற்ற துயரின் முகமாக, ஓலமாக, மனசாட்சியாக இருக்கும் அக்கதையில் இன்றும் பொருந்திப்போகும் ஒரு பகுதி

“பகலிலும் இரவிலும் கனவுகளில் அலைந்தான். கண்கள் தோண்டப்பட்ட நகங்கள் பிடுங்கப்பட்ட மனிதர்கள் ‘எங்களுக்கோர் நீதி சொல்’ என்று தள்ளாடித் தள்ளாடி அங்கே வந்தனர். அரைகுறையாக எரிந்த தெருச்சடலங்கள் வளைந்தெழுந்து ‘நாங்கள் என்ன குற்றம் செய்தோம்’ என முனகின. நீர் அள்ள உள்ளே இறங்கிய வாளியை கிணற்றுக்குள் கிடந்த பிணங்களிலிருந்து கையொன்று மெல்லப் பற்றிக்கொண்டது. கழுத்தை இழந்த கோழியொன்று துடிதுடித்து உயிரைத்தேடி அங்குமிங்கும் அலைந்து மண்ணில் சாயும். குட்டித்தாச்சி ஆட்டின் வயிறுமீது குதிரை வண்டிச் சக்கரங்கள் ஏறிச்செல்லும். மயிர்உதிர்த்த தெருநாய்களின் வாய்கள் மனிதர்களின் கையையோ காலையோ கவ்வி இருக்கும்”

முதிர்ச்சி மிகுந்த சிந்தனை வெளிப்பாடு அன்றே அவருக்கு இயல்பாக வாய்த்திருக்கிறது. இன்றைய புதியவர்களும் நாளைய பரம்பரையினரும் மதிக்கவும் ரசிக்கவும் தகுதிவாய்ந்த கலைவெளிப்பாடு என்றால் மிகையாகாது.

பல திசைகளில் பறக்கின்ற ஒரு ராட்சதப் பறவையாகவே உமாவரதராஜனின் படைப்புமனம் வாழ்வினது திசைகளை, இயற்கையின் வெளியை வியாபித்து சிறகு விரித்திருக்கிறது. இங்கு நான் குறிப்பிடுவது மிகச் சிலவற்றையே ஆகும். வாழ்க்கை மீதான நம்பிக்கை, மனிதர்கள் மீதான நம்பிக்கை, நம்பிக்கை மீதான தோல்விகள், இவற்றின் மீதான அளவுகோல்கள் என்பனவற்றில் கேள்விகளை எழுப்புகின்றன அவருடைய சிறுகதைகள்.

ஆனால் நாம் அனைவரும் மனிதன் மீதான நம்பிக்கை இன்மையை மறுபடி மறுபடி எழுதிக் கொண்டிருந்தாலும் அதே மனிதர்கள் மீதே நம்பிக்கை வைக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம் என்பதை வலியுறுத்தும் கதைகள் அவருடைய தொகுப்பில் இருக்கின்றன.

கதைகளின் உண்மையை, உண்மையின் கதைகளை அவருக்கான இன்றியமையாத அழகிய மொழியினூடாக எழுதியிருக்கின்றார். இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதைகளுமே ஒவ்வொரு ஜன்னல். ஜன்னலைத் திறந்து பார்த்தால் அங்கு நம் கண்களுக்கு பழைமையின் கறுப்பு வெள்ளை நிறமோ, கனவின் நிழல் குவியல்களோ, பருவத்தின் புன்சிரிப்போ, இமைக் கந்துகளில் விழக்காத்திருக்கும் கண்ணீரோ தெரியக்கூடும் அல்லது கீறலில் இருந்து பெருகும் குருதியோ இன்னும் வேறு ஏதேனும் ஒன்றோ....

--------------------------------------------------------------------------------------------------

காலச்சுவடு - ஆகஸ்ட் 2013

Thursday, 18 July 2013

பொடுபொடுத்த தூத்தலாகிப் புழுதியின் ஆதிமணங்கிளர்த்தும்
பாமரப்பாடல்கள்

-----------------------------------------------------------------


- கிண்ணியா எஸ். பாயிஸா அலி


கவிதையெனும் செயற்பாட்டுக்கான எந்தக் கோட்பாடுகளும் இஸங்களும் தோன்றியிராத ஒரு காலகட்டத்தில் எழுத்தின் வாசனையைக்கூட நுகர்ந்திராத பண்டைய நாட்டுப்புறச் சூழலில் வாழ்ந்து மறைந்த அன்புள்ளங்களின் உணர்ச்சிப்புலப்பாடுகளே இம்மழைத்தூறல்கள்.

சாய்ந்தமருது என்ற ஊரைச் சேர்ந்த அனார், தொண்ணூறுகளில் எழுத ஆரம்பித்தவர். இந்நாட்டார்பாடல் தொகுப்போடு, “ஓவியம் வரையாத தூரிகை“, “எனக்குக் கவிதை முகம்“, “உடல் பச்சை வானம்எனும் மூன்று கவிதைத் தொகுப்புகளுக்காகவும் அர்ப்பணிப்போடு உழைத்ததன்மூலம் ஏராளமான தேசிய, சர்வதேச விருதுகளையும் வென்றிருப்பவர்.

கவிதை தவிர சிறுகதை முயற்சிகளிலும் ஆர்வங்காட்டி வருகின்றமையை அவரது ஓரிரு சிறுகதைகளை வாசிக்கக் கிடைத்தன்மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. மேலும் சமூகம், இலக்கியம் சார்ந்த கட்டுரைகளையும் எழுதிவருகிறார். சர்வதேச அளவில் இவரது எழுத்தானது தனக்கென்றொரு வாசகவட்டத்தை தக்க வைத்திருப்பதோடு திறனாய்வாளர், கல்வியியலாளர் கவனத்தையும் கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்து இலக்கிய சஞ்சிகைகளிலும் இந்திய, புலம்பெயர் சிறுசஞ்சிகைகளிலும், இணையதளங்களிலும் இவரது ஆக்கங்கள் உலாவருகின்றன. தனக்கான வலைப்பூவிலும் (இதமி) இவரது ஆக்கங்கள் உலாவருகின்றன, மற்றும் முகநூலிலும் தனது கருத்துக்களை, கவிதைகளைத் தொடர்ச்சியாய் பதிவிட்டுவருகிறார்.

நவீன கவிதைகளுக்குள்ளேயே தொடர்ச்சியாய் செயற்படும் அனாரின் நாட்டார்பாடல் தொகுப்பு வெளியிடப்பட்டிருக்கிறது எனுஞ் செய்தியறிந்தபோது கொஞ்சம் வியப்பாகவும் உடனடியாக வாசிக்கவேணுமெனும் ஆவலாகவும் இருந்தது. இந்தியப் பதிப்பக வெளியீடுகளை அவசரமாகவெல்லாம் படித்துவிடமுடியாதே. ஆனாலும் எமது மரியாதைக்குரிய எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்கள் மூலமாக உடனடியாகவே வாசிக்கக் கிடைத்ததை நன்றியோடு சொல்லிக்கொள்கிறேன். அழகிய வடிவமைப்பும் நுண்ணுணர்வோடு மிளிரும் புகைப்படங்களுமாய் நேர்த்தியாக வந்திருக்கிறது இத்தெகுப்பு. பின்னிணைப்பாகத் தரப்பட்டிருக்கும் துணைநூற்பட்டியல், கிராமியச் சொற்களுக்கான பொருள்விளக்கம் என்பன இன்னொரு தேடலுக்கான புதிய கிளைகளாக விரிகின்றன.

ஒவ்வொரு சொல்லிலும் உள்ளுறைந்திருக்கும் ஆன்மாவின் பச்சை, காதலின் அப்பளுக்கற்ற வாசனை ஆணினதும் பெண்ணினதும் கண்களில் இருந்து தெறிக்கின்றது. அந்தக் கணத்தின் குரலில் இருந்த இசையின் உயிர் ஒருபோதும்  அழிவற்றது என்கிறார் அனார் இத்தொகுப்பிற்கான தன்குறிப்பில்.

அனாரின் எல்லாக் கவிதைக்குள்ளும் வற்றாத நீர்ச்சுனையாய் ஊறிக்கொண்டேயிருக்கும் காதலையும் அழகியலையும் அவரின் கவிமனம் எங்கிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை என்னால் இப்போதுதான் உணரமுடிகிறது.

உண்மைதான் அனார் சொல்வதுபோலஇன்றைய உலகமயமாக்கல், அறிவுப்பெருக்கம், நாகரீகவளர்ச்சி, இலக்கிய மாற்றங்கள் அனைத்தையும் தாண்டி இன்றைக்கும் இக்கவிகளிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ள ஏதோ ஒன்று நிச்சயம் இருக்கிறது. அதுதான் நாமின்னும் அடையமுடியாத ஒன்றாகவும் உள்ளது. அதை அடைவதற்கான பெருமுயற்சிதான் அனாரின் கவிதைகளை எவரும் திரும்பிப்பார்க்க்க் கூடியளவுக்கு வசீகரப்படுத்தியிருக்கிறது போலும்.

“நாட்டுப்புற இயலானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ, எதைப் பயிற்சிபெற்றதோ அவற்றைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும்“ என்கிறார் நாட்டாரியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர் எம்.எஸ். பினோஸா. இவரின் இக்கூற்றானது நாட்டாரியல் இயல்புகளை வெகு அழகாகச் சித்தரிக்கின்றது.

கிராமிய இலக்கியம். நாட்டாரிலக்கியம், பாமரப்பாடல்கள், எழுதாக்கவிதைகள், வாய்மொழி இலக்கியம், நாட்டுப்பாடல்கள், மக்கள் மரபியல், சிற்றூரியல், பாமரர் இலக்கியம், பொதுப் புராணவியம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்நாட்டாரியலை ஆய்வுக்குரிய இலக்கியமாக அனைத்துலகக் கல்விப் புலத்திற்குக் கொண்டுவந்த பெருமை “ஜேக்கப் கிரீம்“ என்ற மொழியியலாளரையே சாரும். ஐரோப்பியப் பாரம்பரியத்தில் ஜேர்மனியர்களே நாட்டாரிலக்கியத்துறையில் கூடுதலான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றனர். முதன் முதலாகத் தமிழில் உள்ள நாட்டுப்புற வழக்காறுகளைச் சேகரித்தவர் “பார்த்தலோமியுஸ் சீகன்பால்கு“ எனும் ஜேர்மனியரே (நன்றி கூர்மதி) என்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.

தமிழ்ப் பாரம்பரியத்தில் வழக்கிலிருந்துவரும் நாட்டாரியல் பண்புகள் சிந்துவெளிக்காலத்துப் பண்பாட்டு விழுமியங்கள், கிராமிய சிறு தெய்வ வழிபாட்டுமுறைகள, சடங்குகள். நம்பிக்கைகள் என்பவற்றின் எச்சங்களாகவே  கொள்ளப்படுகிறது.

வாய்மொழியாகப், பாரம்பரியமாக வழங்கிவரும் நாட்டுப்புறப்பாடல்கள் அக்காலத்திலிருந்தே குடிமக்களால் பாடப்பட்டு வந்திருப்பதைக் காணலாம். இதுபோல் பிறப்புமுதல் இறப்புவரையிலான எல்லாப் பருவங்களுக்குமான பாடல்கள் நாட்டாரிலக்கியத்தில் காணக்கிடைக்கின்றன. பயன்பாட்டின் அடிப்படையில் அவற்றை தாலாட்டுப்பாடல்கள், சிறுவர் பாடல்கள், தொழிற் பாடல்கள், காதற் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், கதை கூத்துப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் என வகைப்படுத்தலாம்.

இவ்வகையான நாட்டார் பாடல்களிலும் ஊடுபாவாய் உள்ளோடியிருப்பது அன்புணர்வொன்றேதான். அந்த அன்புணர்வுதான் காதலாகவும், கருணையாகவும், பாசமாகவும், பரிவாகவும் ஓர்மமாகவும் ஏன் கோபமாகவும்ங்கூட வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இவற்றுள் காதல் வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் தமது அன்புணர்ச்சியை சுய அனுபவங்கள் சார்ந்த கருத்துக்களோடு வெளிப்படுத்தப்படுவதைக் காதற்பாடல்களாகக் கொள்ளலாம்.  அத்தோடு தொழிற் களங்களிலோ வண்டிப் பயணங்களிலோ ஆண் பெண் இணைந்து பாடுவதுங்கூட காதற் பாடல்களே.

அனாரின் பொடுபொடுத்த மழைத்தூத்தலின் குவியப் புள்ளியுங்கூடக் காதல்தான். குறவஞ்சிப்பாடல்களை நினைவூட்டுகிறது கவிகள் தொகுக்கப்பட்ட வடிவமுறை. 160 காதல் பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில் நாட்டார்பாடல் தொகுப்போர் கவிஞராக இருப்பதில் பெரும்பாலான ஆய்வாளருக்கு உடன்பாடிருப்பதில்லை. ஏனெனில் அவர்கள் ஓசைக்கேற்பவோ அல்லது எதுகை மோனை கருதியோ தமக்கிசைவான சொற்களை இணைத்து அதன் மூலவடிவத்தை மாற்றிவிடக் கூடுமென்பதால்தான். எனினும் “தான் இதைத் தொகுக்க முனைந்தவேளையில் வடிவத்தை சிதைக்காமல் எளிமையாக அதன் முழுமையோடு தொகுப்பதில் தான் கவனமெடுத்ததாக அனார் கூறுவது நம்பிக்கை தருகிறது.

நாட்டார் காதல் பாடல்கள் உண்மையாகவே காதலர்களால்தான் பாடப்பட்டதா இல்லை பாவனையடிப்படையில் ஏனையோரால் பாடப்பட்டதா எனும் ஐயம் எழாமலில்லை. பண்டைய கிராமிய வாழ்க்கைச் சூழலில் காதலர் சந்தித்து இணைந்து கவிபாடி மகிழ்ந்திருக்கக்கூடும். அவர்தம் வாழவில் இப்பாடல்கள் நேரடிப்பயனைத் தந்திருக்கக் கூடும். எனினும் காலச்சுழற்சி தந்த சமுதாய வளர்ச்சியும் சூழல் மாற்றமும் சமூகக்கட்டுப்பாடுகளும் அடுத்துவந்த காலங்களில் இவற்றைப் பாவனையடிப்படைக்கு உட்படுத்தயிருக்கலாம்.

அன்றைய வாழ்க்கைமுறை, சமுதாயமரபுகள், தொழில்முறைகளை எவ்வித மாற்றமுமின்றி உட்பொருளாகக் கொண்ட இப்பாடல்களில் இப்பிரதேசத்தின் அக்காலத்தைய மக்களால் பிரதான பரம்பரைத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாயம், விலங்குவேளாண்மை, கடற்றொழில், கடல்வாணிபம், வியாபாரம், நெசவு, சிறுகைத்தொழில்கள் போன்றவற்றில் புளங்கும் சொற்களோடு கூடிய மரபுரீதியான சொல்லாட்சிகளும் இயற்கையோடொன்றிய உவமைகளுமாய் எளிமையோடு மிளிர்கின்றன இப்பாடல்கள். மொழிச்சிக்கலில்லா எளிமையும் அழகுணர்வுந்தானே உலக மொழியனைத்திலுமுள்ள நாட்டாரியலின் சிறப்பியல்பு.

ஒரு நாட்டின் இசைக்களஞ்சியமாகவும் இசைச் செல்வமாகவும் நாட்டார்பாடல்கள் கணிக்கப்படுகின்றன. மேற்குலகைப் பொறுத்தவரையில் நவீன விஞ்ஞான, தொழிநுட்ப மருத்துவத் துறைகளில் மேம்பட்டிருப்பதுபோலவே இசைத்துறைக்காவும் அதிக அக்கறையோடு உழைத்துவருகின்றனர். தமது நாட்டார்பாடல்களைக்கூட ஒலிப்பதிவுசெய்து அவற்றிற்கு ஒலிக்குறிமானமிட்டுப் பேணிவருகின்றனர்.

எமது நாட்டார்பாடல்களும் அதற்குரிய இசையோடு பதிவுசெய்யப்படவேண்டும். நாட்டார் பாடல்களின் உயிர்ப்பே அதன் இசையமைதலில் தானே தங்கியுள்ளது.

இந்தவகையில் “வெள்ளை முக்காடிட்ட அந்த முதிய பெண்ணுருவம் புகைபோல நெளிந்து காற்றில் கரைந்து போனாலும் காற்றை நீவிப் படபடக்கின்ற அந்தக்குரலின் ஓசையைக் கூர்ந்து கேட்கிறேன்...“ என்கிற கவிஞர் அனார்...

மிகுந்த வனப்பான இந்த நிலப்பகுதியின் பாரம்பரிய வாழ்க்கை முறைமைகளில் சொற்பமானவற்றைக் கண்கூடாகக்கண்ட, பெரும்பாலானவற்றை முதியோர்களிடமிருந்து செவிவழியாகக் கேட்டறிந்த கடைசிப் பரம்பரையில் ஒருத்தி“ தானென நம்புகிற கவிஞர் அனார்... அவரின் சொந்த மண்ணின் முதுசொமொன்றினற்கு உயிர்ப்பூட்டுவதற்குப் பொருத்தமான ஒருவரே. அத்தோடு கிழக்கிலங்கைக்கும் இந்தியாவின் கேரளப் பிரதேசத்திற்குமிடையிலுள்ள பண்பாட்டு கலை கலாசார ரீதியான ஒற்றுமைகள் தொடர்பில் ஏற்கனவே பேசப்பட்டிருக்கின்றது. இவ்விரு பிரதேச நாட்டாரியல்கூட பல்வேறு சொற்கள் குறியீடுகள் வடிவங்களை பெருமளவில் ஒத்திருக்கின்றன. இதுதொடர்பான ஆய்வுகள் கிழக்கிலங்கை நாட்டாரியலுக்குள் புதிய பார்வையைப் படியவிடலாம். அத்தோடு ஏற்கனவே தொகுக்கபட்டிருக்கும் தாலாட்டு, ஒப்பாரி, கூத்து, தொழில்பாடல்களும் புதிதாய் மறு பதிப்பிற்குள்ளாக்கப்படுவதும் காலத்தின் தேவையாகும்.

இதயத்துணர்வுகளை ஈர்த்தெடுக்கும் இவ்வாறான அழகிய கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்களைத் தொகுப்பாக்கித் தந்திருக்கிறார் கவிஞர். அனார். மெல்ல மெல்ல மங்கி மறைந்து கொண்டிருக்கும் எமது மண்ணின் முதுசொம்களிலொன்றுக்கு மீளவும் புதுப்பொலிவூட்டியிருக்கும் கவிஞர் அனாருக்கும் இத்தொகுப்பை அழகுறப் பதிப்பித்த “க்ரியா“ வுக்கும் இம்மண் சார்பான என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.


-------------------------------------------------------------------
நன்றி : காலம், இதழ் 42, July 2013

வெளியீடு         :

க்ரியா
புதிய  எண் 2, பழைய  எண்  25
முதல் தளம், 17வது கிழக்குத் தெரு
காமராஜர் நகர், திருவான்மியூர்
சென்னை - 600 041   
தொலைபேசி: 72999 05950
Email:
creapublishers@gmail.com
Website:
www.crea.inSunday, 26 May 2013

ஊடறு  றஞ்சியின்  தூய  உண்மைகளும் ,
(http://www.oodaru.com/?p=6265#more-6265)

அனாரின் ஆதாரங்களும்.... 
------------------------------------------------------------------------------------------------------------

காலச்சுவடில் வெளியான என்னுடைய 'காற்றின் பிரகாசம்' (http://www.kalachuvadu.com/issue-161/page62.asp ) கட்டுரையில் ஊடறு றஞ்சி என்பவர் நான் குறிப்பிட்ட ஒரு விடயத்தை பொய் என்று கூறி ஊடறுவில், றஞ்சி அப்பழுக்கற்ற சில 'உண்மைகளைத்' தெரிவிக்க முயன்றிருக்கிறார்.. அது ஏற்கனவே அவருக்குள்ள 'நற்பெயருக்கு' மேலும் வலுச்சேர்த்துள்ளது என்பதை நான் கூற விரும்புகிறேன்.


ஊடறு றஞ்சி : “ ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பை ஊடறு அமைப்பு வெளியிடுவதற்குக் கேட்டிருந்தது. சேரனிடம் முன்னுரை பெற்று, தொகுப்பைக் கொண்டுவர வேண்டும் என்பது எனக்கிருந்த நீண்ட நாள் ஆசை. அது சரிநிகர் ஊடாகவும் ‘மரணத்தினுள் வாழ்வோம்’ தொகுப்பினூடாகவும் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பு. எனவே ஊடறு றஞ்சி தன் அன்றைய அரசியல் நிலைப்பாட்டால் சேரனிடம் முன்னுரை வாங்கினால் என்னுடைய புத்தகத்தை அவர்கள் கொண்டுவர முடியாது எனத் தெரிவித்தார்.இந்தக் கட்டளையை மீறினால், ஊடறுவிலிருந்து என்றைக்குமாக என்னைத் தள்ளி வைப்பதாக றஞ்சி அன்பாக மிரட்டினார். நானும் அன்பாக விலகிக்கொண்டேன்.“ இதை வாசித்தபோது அதிர்ச்சியடைந்தேன். காரணம் இதில் சொல்லப்பட்டது அத்தனையும் பொய் என்பதுதான்.


1. ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பை ஊடறுவிற்கு கொடுக்கவில்லையென்பதால் பல முறை தொலைபேசியில் அவர் பிடித்த சண்டைகளை ... உடனுக்குடன் நான் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த நண்பர்களைத்தான் இப்போது சாட்சிக்கு அழைக்க முடியும்.அவர்களுக்கு அது இன்னமும் நினைவில் இருக்குமென்றே நான் நினைக்கின்றேன். நண்பர்களான என்.ஆத்மா, எம்.பௌசர், கவிஞர். சேரன், ஓட்டமாவடி அறபாத் ஆகியோர்களிடம், என்னுடைய தொகுப்பை கொண்டு வருவதற்கு முடிவு செய்வதற்கு முதல், இப் பிரச்சினைக்கான சில ஆலோசனைகளை பெற்றிருக்கிறேன். எனவே அவர்கள் இவ்விடயத்தை உறுதிப்படுத்துவார்கள் என நம்புகின்றேன். 


2. காலச்சுவடு கட்டுரை ஒன்றைக் கேட்டதன் நிமித்தமே, என்னுடைய அனுபவங்கள் சிலவற்றை அதனூடாகப் பகிர்ந்து கொண்டேன். எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து சுமார் 20 வருடங்கள் வரை சொல்வதற்கு பலவிடயங்கள் இருக்கின்றன. எனவே எதிர்வரும் காலங்களில் அவற்றைப்பற்றி அவ்வப்போது எழுத விரும்புகிறேன்.


ஊடறு றஞ்சி : அனார் பிரபல்யமான பதிப்பகங்களினூடாகத்தான் தனது கவிதைத் தொகுப்பைக் கொண்டு வரவேண்டும் என தம்மிடம் கூறியிருந்ததாக ஊடறுவின் சக தோழி ஆழியாள் கூறுகிறார் (அனார் ஆழியாளுக்கு எழுதிய கடிதம் இதற்குச் சாட்சி)


3. ஆழியாள் எப்போதும் என் மதிப்பிற்குரிய தோழி. எனவே றஞ்சி அவரை இவ்விடயத்தில் சேர்த்திழுப்பதில் எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை. என்னுடைய கடிதங்கள் அவரிடமும், அவருடைய கடிதங்கள் என்னிடமும் நிறைய இருக்கின்றன. றஞ்சியின் தொடர்பிற்கு முன்பே ஆழியாள் மிக நெருக்கமான நண்பி. (பிரபலமான பதிப்பகங்களில் வெளிவரவேண்டும் என நாம் தீர்மானிப்பதில்லை. நம்முடைய எழுத்துக்கள் ஆழமானதாகவும், அர்த்த பூர்வமானதாகவும், அனுபவச் செறிவுள்ளதாகவும் இருந்தால்... அந்தப் பதிப்பகங்களின் வாசல் நமக்காகத் திறந்திருக்கும் )


ஊடறு றஞ்சி : ஒருவேளை அனாரின் காழ்ப்புணர்வு இங்கிருந்து தொடங்கியுமிருக்கலாம். 2007ம் ஆண்டு எம்மால் வெளியிடப்பட்ட மலையகப்பெண்களின் கவிதைத்தொகுபப்பான „இசைபிழியப்பட்ட வீணை“ இல் இடம்பெற்ற சூரியகலா என்ற மலையகக் கவிஞையின் கவிதை தன்னுடைய கவிதை வரிகளை கொண்டிருக்கின்றது என்று எம்முடன் வாதிட்டார். அந்தக் கவிதையில் வந்த வரிகள் தன்னுடைய கவிதை வரிகள் என குற்றம் சாட்டினார். அத் தொகுப்புக்காக கவிதைகளை ஊடறுவுக்கு சேகரித்து அனுப்பிய தோழர் வே. தினகரனுக்கும் அனார் தொலைபேசியில் இதுபற்றி முறையிட்டு விமர்சித்துள்ளார். ஆனால் அந்தக் கவிதை பற்றி நாம் ஆராய்ந்தபோது, மலையகக் கவிஞை சூரியகலா 2003 இல் அந்தக் கவிதையை எழுதி அது மலையகப் பத்திரிகையில் ஏற்கனவே வெளிவந்துவிட்டது என அறிந்தோம். இதை நாம் அனாருக்கு தெரியப்படுத்தியுமிருந்தோம். அனாரின் தொகுப்பு ‘ஓவியம் வரையாத தூரிகை’ 2005 இல் வெளிவந்திருந்தது. மலையகக் கவிஞை சூரியகலா தன்; கவிதையை 2003 இல் எழுதியிருக்கிறார் என நாம் அனாருக்கு அறிவித்த போது கோபமாக “அப்போ நான் பார்த்து எழுதியதாக நினைக்கின்றீர்களா?“ என எம்முடன் விசனம் கொண்டார்.


4. அம்பலப் படுதல்,, காழ்ப்புணர்வு, அவதூறு காரணமாக றஞ்சி அடையும் பதட்டம்... கையூட்டம் பெற்ற பொய்சாட்சியொருவர் நீதி மன்றத்தில் மிரட்சியுடன் முழித்து , முக்கி முனகுவதுபோல இருக்கிறது. தகவல் அறிவீனமும் பொய்மையும் ரஞ்சியுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் இரட்டைக் குழந்தைகள். றஞ்சியின் இந்த இயல்பை எண்ணி நான் ஆச்சரியப்படவில்லை. மலையகக் கவிஞைகளின் படைப்புகளைக் கொண்ட 'இசை பிழியப் பட்ட வீணை ' என்ற தொகுப்பு 2007 இல் வெளி வந்தது. 2004 இல் வெளிவந்த எனது “ஓவியம் வரையாத தூரிகை“ தொகுப்பிலிருந்து “ம(ர)ணப் பந்தல்“ என்ற எனது கவிதை (பக்கம் 22,23), ஜே. அன்னால் குளோரி என்பவரால் திருடப்பட்டு, அக்கவிதை “ம(ர)ண பந்தம்“ என்ற இன்னொரு தலைப்பில் அத்தொகுப்பில் மீண்டும் பிரசுரமாகியிருக்கிறது. 2002 ஆகஸ்ட் 12வது “எக்ஸில்“ இதழில் எனது “ம(ர)ணப் பந்தல் கவிதை“ முதன் முதலாக பிரசுரமாகியிருப்தை அனைவரும் அறிவார்கள். றஞ்சி இப்போது அதனை சூரியகலா எழுதியதாக ஞாபகப் பிசகுடன் குறிப்பிடுகிறார். “இசை பிழியப்பட்ட வீணை' தொகுதியில் சூரியகலா என்ற பெயர் எங்குமே இல்லை.. ஜே. அன்னால் குளோரி என்ற பெயர்தான் அங்கு இருக்கிறது. இந்தப் பெயர்களைக் கொண்டவர்கள் றஞ்சியின் அவதாரங்களா? நேர்மையின் உருவமான றஞ்சியிடம் இதுபற்றி, நியாயமான கோபத்துடன் 6 வருடங்களுக்கு முன்பு நான்கேள்வி எழுப்பிய போது மழுப்பல் நிறைந்த பொறுப்பற்ற பதிலை வெளிப் படுத்தினார். பெண்ணிய நோக்கில் இன்று வரை செயற்படுவதாகக் கருதப் படும் இவர் , சக பெண் படைப்பாளரான எனக்கு இத்தகையதோர் அநீதி நிகழ்ந்த போது எந்த நியாத்தையும் கூறாமல் வேடிக்கை பார்த்தார்.. ஒரு பதிப்பாளராக இருக்கும் றஞ்சிக்கும் , தொகுப்பாளரான தினகரனுக்கும் இது பற்றிக் கிஞ்சித்தும் கூச்சமோ,குற்றவுணர்வோ இல்லை.. அனாமதேயியான “ஜே. அன்னால் குளோரி“ என்ற இலக்கியத் திருடிக்கு வெளிச்சம் பாய்ச்ச வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே இலட்சியம். . என்னுடைய ஆதாரபூர்வமான கேள்விகளைக் கூடப் பொருட் படுத்தாமல் அந்த நபருக்காக என் நட்பையும் பலி கொடுத்தவர் றஞ்சி. இன்று கூசாமல் மறுபடியும் தன்னுடைய 'பொய்க் கடையை' இங்கே வந்து பரப்புகிறார். என்னுடன் பேசியதாகக் கூறிய அனைத்தையம் மறு தலிக்கிறார் .தொடர்ச்சியாக அவருக்கு சில ஆதாயங்கள் தேவைப்பாடுகள் இதன் பின்னணியில் இருக்கக் கூடும் .. இந்த விடயம் தொடர்பாக “இசை பிழியப்பட்ட வீணை“ தொகுப்பு அச்சாக்கத்துக்கு உதவி புரிந்த ஆத்மாவிடம் 6 வருடங்களுக்கு முன்பே முறையிட்டேன். எக்ஸில் விஜியிடமும் இது பற்றிப் பேசியிருக்கிறேன். இதை பெரிதுபடுத்த் வேண்டாம். சில பிழைகள் தொகுப்பில் நேர்ந்து விட்டன என ஆத்மா குறிப்பிட்ட்டார். தினகரனிடம் கதைத்போது உரியபதில் தருவதாக அப்பொழுது கூறினார். நல்ல வேளையாக இந்த மோசடியை அம்பலப் படுத்தும் ஓர் அரிய வாய்ப்பை இந்த றஞ்சியே ஏற்படுத்தித் தந்திருக்கிறார். அப்போதும் இப்போதும் நான் கூறுவது ஒன்றுதான்.... தூங்குவது போல் பாவனை செய்யும் தினகரனுக்கும், றஞ்சிக்கும் புரிந்தும் புரிய மறுப்பது வாசகர்களுக்குப் புரியும் என்று நம்புகின்றேன். ஆதாரபூர்வமாக இதை இப்போது வெளிப்படுத்தியிருக்கிறேன்.என்னை இலக்கு வைத்து ஊடறுவில் றஞ்சி அவ்வப்போது எடுக்கின்ற வாந்திகளை நான் கண்டுகொள்வதில்லை.அவற்றை நக்கிச் செல்ல அவர் வளர்த்த நாய்கள் இருக்கின்றன. ஒரேயடியாக றஞ்சி இப்போது உண்மையின் திருவுருவம் எடுக்க முனைந்தது அரசியல் நோக்கம் அற்றது, காழ்புணர்ச்சியற்றது, அவதூறுகளற்றது, பொறாமைக்கு அப்பாற் பட்டது என்றே எடுத்து கொள்கிறேன்.


5. றஞ்சியின் கண்டுபிடிப்பின் படி , சூரியகலா 2003 இல் எழுதிப் பிரசுரமாகியதாக சொல்லப் படுகின்ற அந்தக் கவிதை... என்னால் 2002 இல் எழுதி அதே ஆண்டு ஆகஸ்ட் மாத எக்ஸிலில் பிரசுரமாகியுள்ளது. 
இசை பிழியப்பட்ட வீணை வெளி வந்த ஆண்டோ 2007. றஞ்சி குறிப்பிடுவது போல் அந்தக் கவிதை சூரியகலா என்ற பெயருடையவரால் எழுதப் பட்டதுமல்ல. திடீரெனத் தோன்றிய ஜே. அன்னால் குளோரி என்ற 'இலக்கிய மாய மோகினி' திருடி வெளியிட்ட கவிதை அது.  2004 இல் வெளி வந்த என்னுடைய முதல் நூலை 2005 இல் வெளி வந்தது என்ற தகவல் திரிபு வேறு. இந்தக் தகவலைக்கூட சரி,பிழை பார்க்கத் தெரியாத றஞ்சி.. தன் மேல் நான் காழ்ப்புணர்வுடன் இருப்பதாக கனவு காண்கிறார். றஞ்சியைப்போல் எனக்கு அரசியல் தேவைகள் இல்லை. பொய் கூறுவது நானா ,நீங்களா? உங்களுக்கு மேலும் நடக்க முடியவில்லையா , பரவாயில்லை. காலாற அமருங்கள். அதற்காகப் பயணிகளைத் தடுத்து தொந்தரவு செய்யாதீர்கள்.


ஊடறு றஞ்சி : சேரனிடம் முகவுரை வாங்கினால் ஊடறு அனாரின் தொகுப்பை கொண்டுவராது என்று கட்டளை (?) இட்டதாக சொல்வதும் முழுப்பொய். இன்னும் மேலே போய் இந்தக் கட்டளையை மீறினால் (?) ஊடறு தள்ளிவைக்கும்(?) என புனைந்து ஒரு அவதூறையே செய்திருக்கிறார். நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஊடறுவை சேரனுக்கு எதிராய் நிறுத்தும் மலிவான நோக்கம் தனது தொகுப்பை காலச்சுவட்டினூடாக வெளிக்கொணரத்தானோ என எண்ணத் தோன்றுகிறது. உண்மையில் 2008 இல் அனாரின் ‘எனக்குக் கவிதை முகம்’ கவிதைத் தொகுப்பு வெளிவந்த பிறகே அதற்கான முகவுரையை சேரன் எழுதியிருந்தது எமக்குத் தெரியும்.


6. 2007 இல் எனது 2வது கவிதைத்தொகுதி “எனக்கு கவிதை முகம்“ வெளிவந்திருக்கிறது. ஆனால் அவர் குறிப்பிடுகிறார், 2008இல் நூல் வெளிவந்த பினர்தான் சேரன் முன்னுரை எழுதியதாக. றஞ்சிக்குத் தெரிந்த இவ்விடயம் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் முன்னுரை பெற்றதன் பின்னர்தான் நூலை வெளியிடுவார்கள். இது எப்படிச் சாத்தியம்.....?? இது என்னவிதமான கண்டுபிடிப்பு..?


7. ஊடறுவிற்கு கொடுத்த எல்லா ஆக்கங்களும், அவரிடமிருந்து கவிதைகளோ.. பிற ஆக்கங்களோ.. கேட்டு கடிதங்கள் வந்த பிறகே நான் அனுப்பியவையாகும். 


(கவிதைகள் பிரசுரமான ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஜே. அன்னால் குளோரி - என்பவரின் பெயரி்ல் என்னுடைய கவிதை இடம்பெற்ற புத்தகம் இது (இசை பிழியப்பட்ட வீணை).

Wednesday, 22 May 2013

காலச்சுவடு 150-தொடரும் பயணங்கள் : காற்றின் பிரகாசம்

- அனார்
------------------------------------------------------------------------------------------------------------

1990களின் நடுப்பகுதியில் என் கவிதைமுயற்சிகளைத் திருட்டுக் காரியம் பண்ணும் பிரயத்தனங்களோடும், எனக்கிருந்தசவால்களோடும், இயலாமைகளோடும் எழுதத் தொடங்கியிருந்தேன். எனக்குள் சென்று என் ஆன்மா பேசியதை உற்றுக்கேட்பதற்கு எவரும் தயாராக இல்லாத சமயத்தில், நானே அதைக்கேட்க விரும்பினேன். மிக உன்னிப்பாக, கொஞ்சம் ஆதரவாக. என்னை நான் வளர்த்தெடுக்கும்கனவுகளோடு, கவிதையுடன் ஆழ்ந்த உடன்பாட்டிற்கு வந்தேன். யுத்தம் காதலைப் போலவும், காதல் யுத்தத்தைப் போலவும் வீட்டிற்குள்ளும் வெளியேயும் அவ்வப்போதுவெடித்துக் கொண்டிருந்தன.

திணறிக்கொண்டிருந்த அன்றைய காலச்சூழலுக்கு ‘மூன்றாவது மனிதன்’ சஞ்சிகையும், மிகஅரிதாகவே கிடைக்கும் ‘சரிநிகர்’பத்திரிகையும் அமைதி சேர்த்தன. அவற்றில் இடம்பெற்ற கட்டுரைகள், கவிதைகள்,எதிர்வினைகள் அவற்றை எழுதியவர்களுடைய, நான் கண்டும், கேள்விப்பட்டுமிராத பெயர்களும்விடயங்களும் அதிசய உலகத்தைக் காண்பித்தன. கனவிலும் அந்தப் பெயர்கள் ஒவ்வொரு உருவம்எடுத்து வந்து, என்னை அவ்வுலகிற்கு அழைத்துக் கொண்டிருந்தன. அந்தச்சந்தர்ப்பத்தில் 2001ஆம் ஆண்டு, கணவர் அஸீமுடன் சவூதி அரேபியாவில் வசிப்பதற்காகஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். சிறுகதை ஆசிரியராக அறியப்பட்ட என்னுடைய மாமனார் யூ. எல்.ஆதம்பாவா அவர்கள், அங்கே சென்று வாசிப்பதற்குக் சில காலச்சுவடின் பழைய இதழ்கள் சிலவற்றை எனக்குகொடுத்தார். அவற்றில் 1999க்கு முற்பட்ட சில இதழ்களும் அதன் பிறகான சிலவும் இருந்தன. அவற்றை அத்தனை தூரத்திற்குக் கொண்டுசென்றேன். காலச்சுவடு இழ்களின்முதல் பரிச்சயம் இவ்விதம்தான் தொடங்கியது. காலச்சுவடு இதழ் 47-பெண்கள் சிறப்பிதழாகவும், இன்னொரு இதழ்ஈழப்பெண்கள் கவிதைகளைக் கொண்ட தொகுப்பாகவும் வெளிவந்தது. அந்நேரத்தில் யார் கண்ணிலும் படாமல், எவருடைய மனதையும் உலுக்காமல் நானும் எழுதிக் கொண்டுதான் இருந்தேன்.

அவ்விதழை வாசித்தபோது சிறிய ஏமாற்றமும்துக்கமும் ஏற்பட்டன. அதற்கு காரணம் அந்நாட்களில் காலச்சுவடில் யாருடையகவிதையாவது இடம்பெற்றால் அவர் சந்தேகத்திற்கிடமில்லாமல் கவிஞராகப் போற்றப்பட்டுக்கொண்டிருந்தார். SLS முத்திரை குத்தப்பட்டதொரு மதிப்புமிக்க பொதிபோல அவரைப் பார்த்தார்கள். இன்னும் எனக்கு அவ்வளவு உயரமான கொம்புகள் வளரவில்லை என்று நான் நினைத்தேன். கொம்புகள் வளர என்ன செய்ய வேண்டும்? அல்லது எதைச் சாப்பிடவேண்டும்? என்ற கேள்விகளைஅப்போது யாரிடம் கேட்பதென எனக்குத் தெரியவில்லை.

காலச்சுவடு இதழ்களின் மூலம்தான் தலித்மக்களின் வாழ்வியல் அவை சம்மந்தமான விவாதங்களைத் தெரிந்து கொண்டேன். திருநங்கைகள்பற்றிய பெண்ணிய நோக்குகளையும் அவற்றை எழுதும் எழுத்தாளர்களைப் பற்றியும் கூடுதலாகவேறொரு தளத்தில் தெரிந்து கொள்ள முடிந்தது. மனித வதைகள், வன்முறைகள், அழிவுகள்தொடர்பான பதிவுகளைக் கவனமெடுத்து வெளியிட்டது. மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், சிறுகதை,கவிதைகள், ஓவியங்கள், இசை பற்றிய கட்டுரைகள் என காலச்சுவடு இதழ்கள் வாசிப்பதற்கு உகந்தனவாகஇருந்தன.

2004 இல் சவூதி அரேபியாவிலிருந்துவந்ததும், என் முதல் கவிதைத் தொகுப்பை “ஓவியம் வரையாத தூரிகை“ யை மூன்றாவது மனிதன்பதிப்பகம் வெளியிட்டது. இரண்டாம் தொகுப்பிற்கான கவிதைகள் எழுதப்பட்ட மூன்று வருடகாலத்தில், கொம்புகள் முளைக்கும்தருவாயில் இருந்த மான்போல, வசீகரமான மொழியுடன், மிடுக்குடன், பயமற்றுத் துள்ளித்துள்ளி எழுதிக் கொண்டிருந்தேன். காதலில், வாழ்க்கையில், அனுபவத்தில் விழுந்துகொண்டிருந்தேன். கொம்புகள் வளர்வதற்காக எதைச் சாப்பிட வேண்டுமோ அதைச் சாப்பிடத்தொடங்கியிருந்தேன்.

‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பை ‘ஊடறு’ அமைப்பு வெளியிடுவதற்கு கேட்டிருந்தது. சேரனிடம் முன்னுரை பெற்று,தொகுப்பைக் கொண்டுவரவேண்டும் என்பது எனக்கிருந்த நீண்ட நாள் ஆசை. அது ‘சரிநிகர்’ ஊடாகவும் ‘மரணத்தினுள்வாழ்வோம்’ தொகுப்பினூடகவும் கொழுந்துவிட்டு எரிந்தநெருப்பு. எனவே ஊடறு றஞ்சியி தன் அன்றைய அரசியல் நிலைப்பாட்டால் சேரனிடம் முன்னுரைவாங்கினால் என்னுடைய புத்தகத்தை அவர்கள் கொண்டுவரமுடியாது எனத் தெரிவித்தார். இந்தக் கட்டளையைமீறினால், ஊடறுவிலிருந்து என்றைக்குமாக என்னைத் தள்ளி வைப்பதாக றஞ்சி அன்பாகமிரட்டினார். நானும் அன்பாக விலகிக் கொண்டேன். அதன் பிறகு சேரனின் முழுமனதானமுன்னுரையோடு முழுமையான முயற்சிகளோடு (இலங்கை முஸ்லீம் பெண்களின் வரலாற்றிலேயேமுதல் முறையாக !) என் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பாக 2007இல்கொண்டுவரப்பட்டது. என் கவிதைத் தொகுப்பை ஒரு நல்ல நாளில், சேரன் என்னுடையவீட்டிற்கே கொண்டு வந்து தந்தார். அன்று என் புத்தகத்தின் அட்டை நிறமும்என் ஆடையின் நிறமும் ஒன்றாக இருந்தன. நான் அன்றெல்லாம் அதே நிறத்திலேயே சிரித்துக் கொண்டிருந்தேன்.. என்னுடைய உறக்கமும் அந்த நிறத்திற்கே மாறியிருந்தது.

2001 இலிருந்து காலச்சுவடு வாசகியாகஇருந்த என் கவிதைத் தொகுப்பை 2007இல் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு, பொற்காலத்தை தொடங்கி வைத்தது. என்றும்நீடித்திருக்கும் வகையில் அக்கறையும் உணர்வும் மிகுந்த நட்பு சேரனுடன் உருவாயிற்று.

ஒரு பெண்ணாக இருந்து காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் கவிதைத் தொகுப்பொன்றைக் கொண்டுவந்ததால் என்னைச் சுற்றி வீசப்பட்டிருந்த பலத்தசந்தேகங்களும் அவதூறுகளும் நாயின் வாந்தியைப்போலக் கிடந்த பாதையைக் கடந்து சென்றேன்.

ஆனால் அடுத்த வருடம் 2008 இல் ஒரு அழகியஇலக்கியப் பயணத்திற்கான ஒரு வாய்ப்பைப் பெற்றேன். தெற்காசிய நாடுகளின்இளம்கவிஞர்கள் மாநாட்டுக்காக ஒரிசா சென்றேன். அங்கிருந்து சென்னை திரும்பியதும் எழுத்தாள நண்பர்களுடன் ஒரு சந்திப்பையும், கலந்துரையாடலையும் கண்ணன் ஏற்பாடுசெய்திருந்தார். மறக்க முடியாத நிகழ்வாக அது இன்றும் சந்தோசத்தைத் தருகிறது. நண்பர் ரவிக்குமார் என் கவிதைகளைப்பற்றி பேசினார்.சல்மாவை முதல் முறையாகப் பார்த்துப் பேசினேன். சுகிர்தராணியைத் தழுவினேன். கவிதாமுரளிதரன், சேரன், ரேவதி, பாரதிமணி, குவளைக் கண்ணன், ஐயப்பமாதவன், யுவன்,இப்படிப்பல எழுத்தாளர்கள் மத்தியில் உரையாடியதும் கவிதை வாசித்ததும் அற்புதமானஅனுபவம்.

ஒரு பதிப்பாளராகக் கண்ணனிடம் உள்ள திறமை, கண்ணியம், நேர்மை அனைத்தையும் கருத்தில் கொண்டே எனது மூன்றாம் கவிதைத் தொகுப்பான ‘உடல் பச்சை வானம்’ தொகுப்பை 2009இல் காலச்சுவடுக்கு வெளியிடக் கொடுத்தேன். ‘எனக்குக் கவிதை முகம்’ இரண்டாம் பதிப்பும் வெளிவந்திருக்கிறது.

காலச்சுவடும் நானும் என்ன்னுடைய தனித் தன்மைமீது பற்றும் நம்பிக்கையும் கொண்டிருந்தோம். என் மொழியின், ஆற்றலின் தனித் தன்மையைக் கொம்புகளாக அல்ல மாதுளைமரமாக வளர்த்தெடுக்கவே முயன்று செயல்பட்டுவருகிறேன்.

ஒருவருக்குப் பிரபலமும் புகழும் கிடைக்கவேண்டுமென்றால் முதலாவதாகக் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் புத்தகம் கொண்டு வரவேண்டும்.அடுத்ததாகத் தமிழ்நாட்டிற்கு இலக்கியத்தின் பெயரில் ஒரு பயணம் போகவேண்டும். இலகுவாகக் கவிஞராகிவிட இவைதாம் வழியெனவும் நினைத்து முனைந்தவர்களினதும் குறைவாகமதிப்பிட்டவர்களின் பலவிதமான தப்பான அபிப்பிராயங்களையும் காலச்சுவடு நீக்கியிருக்கிறது. 

காலச்சுவடு பதிப்பகம் முன்பைவிடவும்அதிகமான புதிய இலங்கைத் தமிழ், முஸ்லிம் ஆண் பெண் கவிஞர்கள் எழுத்தாளர்களுக்குவாய்ப்பளிக்கிறது. வடக்கு- கிழக்கிலிருந்தும் பிற மாகாணங்களிலிருந்தும்படைப்புகளைப் பெற்று வெளியிடுகிறது. இவ்வருடம் இலங்கை அரசின் சாஹித்திய விருதைப்பெற்ற அதிகமான தமிழ்நூல்கள் காலச்சுவடுவெளியீடுகளே.

காலச்சுவடு என்னும் இலக்கிய இதழை என்னுடையவாசிப்பு அனுபவத்தை விரிந்துபோகச் செய்யவும், நுண்மையான அர்த்தங்களைக் கண்டெடுப்பதற்காகவுமே வாசிக்கிறேன். பொறுப்பாசிரியர் தேவிபாரதியின் உழைப்புசிறப்பானதும் மதிக்கத் தகுந்ததுமாகும்.

என்னிடம் 1988, 1989 இல் வெளியான காலச்சுவடுஇதழ்களின் இரு முழுத் தொகுப்புகளும் உள்ளன. சு.ரா. என்னும் ஆளுமை அந்த இதழை மிகுந்த படைப்பூக்கம்நிறைந்த பல்வகைமையான இலக்கியப் பங்களிப்புகளைத் தேர்ந்து பதிவு செய்திருக்கிறார்.சு.ரா இன்னும் அத்தொகுப்பினுள்ளே எழுதிக் கொண்டிருக்கிறார்.

என்னைப் பாதித்த காலச்சுவடு இதழ்கள்சிலவற்றையும் படைப்புக்களையும் நினவூட்ட விரும்புகிறேன். இதழ் 34இல் ஆனந்த் எழுதிய குறுநாவல் ‘நான்காவதுஆணி’, இதழ் 37இல் நிர்மல்வர்மாவின் நேர்காணல், இதழ்28இல் பா.வெங்கடேசன் எழுதிய ‘மழையின் குரல்தனிமை’ சிறுகதை, இதழ் 87இல் ‘சந்திரலேகாவின் மரணம் குறித்த பதிவுகளும் கண்ணுக்குள்விட்டுவிலாகாதிருக்கும் அவரது அரிதான புகைப்படங்களும்’,இதழ் 139இல் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் ‘மிகயீலின்இதயம் நின்றுவிட்டது’ சிறுகதை, அம்பையின் ‘வெப்பக்காற்றுஉன்மேல் வீசாதிருக்கட்டும்’, இதழ் 44இல் மலையாளக் கவிஞர் சுகதகுமாரி நேர்காணல், சு.ராவின் “வானகமே இளவெயிலே மரச்செறிவே“ பகுதி, இதழ் 132இல் ‘நீதியின் பெண்குரல், அருந்ததிராய் பற்றிய ’ மாலதி மைத்திரி கட்டுரை. இதழ் 117இல் அயல் இலக்கியம் விஸ்லா வாசிம்போர்காவின்‘உரையும் கவிதைகளும்,இதழ் 99இல் வைக்கம் முகம்மது பஷீர் நூற்றாண்டுச் சிறப்புப்பகுதி, இதழ் 153 இல் எம்.ஏ. நுஃமான் அவர்களின் நேர்காணல் என மிகச் சிலவற்றையே இங்கு குறிப்பிட முடியும்.

சென்ற ஜனவரி 2012இல் காலச்சுவடு பதிப்பித்த கவிஞர்.சேரனின் “காடாற்று“ கவிதை நூலை வெளியிட என்னை அழைத்ததின் பெயரில் மீண்டும் சென்னைசெல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

New Woodland Hotel இல் கண்ணன்எங்களை வரவேற்றார். காலச்சுவடுடன் தொடர்பு ஏற்பட்டு சுமார் ஆறு வருடங்களுக்குப்பிறகு முதன் முதலாக அவரைச்சந்திக்கக் கிடைத்ததில் நானும் அஸீமும் மகிழ்ச்சியடைந்திருந்தோம்.அருந்ததிராய்க்கும், நவயானா ஆனந்த் அவர்களுக்கும் கண்ணன் என்னை அறிமுகம் செய்துவைத்தார்.

சென்னைப் புத்தகக் கண்காட்சி, வேறு சிலநூல் வெளியீட்டு நிகழ்வுகள், ஆர்.எம். நௌசாத், உமாஷக்தியின் புத்தக வெளியீட்டுவிழா ஆகியவற்றில் கலந்துகொண்டோம். எழுத்தாளர் அசோகமித்திரன், கவிஞர். சுகுமாரன்,நெய்தல்கிருஷ்ணன், தேவிபாரதி, பெருந்தேவி, கோணங்கி, ஷாஜி எனப் பல எழுத்தாளர்களையும் என் அன்பிற்கும்மதிப்பிற்கும் உரியவர்களையும் சந்தித்தேன். ஒவ்வொன்றும் தனித் தனியான அர்த்தமுள்ளசந்திப்புகள்.

முதல் இலக்கியப் பயணத்தில் யாருக்கும் வாய்க்க முடியாத ஒரு சந்திப்புநேர்ந்தது. மாபெரும் ஒரியக் கவிஞரான சீதாகாந் மஹாபத்ரா அவர்களுடன் இரு நாள்கள்ரயிலில் பயணம் செய்யக் கிடைத்த ஒரு அதிஸ்டவசமான அனுபவத்துடன் திரும்பியிருந்தேன்.அடுத்த பயணத்தில் சின்ன விசயங்களின் கடவுள் எழுதிய பறவையைப் போன்ற மென்மையானபெண்ணான தன் அரசியல் கருத்துக்கள் செயற்பாடுகளால் தீப்பொறியைப்போல கனன்று கொண்டிருப்பவருமானஅருந்ததிராயைச் சந்தித்தேன். அவருடன் ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டதும் அவருடன்உணவருந்தி உரையாடியதும் வாழ்வின் முக்கியமான தருணங்கள். விவரித்தால் எங்கேதீர்ந்து போய்விடுமோ என கனவைப்போல் இந்த அனுபவங்களைப் பூட்டி வைத்திருக்கிறேன்.

என் கவிதைகள் ஊடாகக் கிடைத்த வெற்றிகள்,சந்தோசங்கள் நினைவுகளில் காலச்சுவடு சேர்ந்தே பயணிக்கிறது.

இந்தக் கைகோர்த்தல்... இந்த நடை... மிகஅழகானது... வலிமையானது... ஒரு கவிதையைப்போல !

-----------------------------------------------------------------------------------------------------------

காலச்சுவடு இதழ் - 161, மே 2013


Sunday, 19 May 2013

கவிதை முகம்

- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் (இந்தியா)

----------------------------------------------------------------------------------------------------------

இலங்கைக் கவிஞர் அனார் எழுதிய இரண்டாவது கவிதைத் தொகுதி “எனக்குக் கவிதை முகம்”. இதில் முப்பத்தொரு கவிதைகள் உள்ளன. இயற்கை, வன்முறை, பிரிவு, சுயம்பேசுதல், தத்துவம், காதல் என பாடுபொருள்கள் பல வகைப்படுகின்றன. இவரது மொழிநடை சற்றே முறுக்கேறி நிற்கிறது. புதுப்புது சொற்பிரயோகம் வியப்பளிக்கிறது. இதனாலேயே நல்ல கட்டமைப்பு கவிதைகளில் அமைந்து விடுகிறது. முதல் வாசிப்பில் பிடிபடாதவை, மீள்வாசிப்பில் நம்மைக் கவர்கின்றன. தன் சுதந்திரத்தை அளவோடு, அழகாய்ப் பயன்படுத்தும் அனார் நல்ல பல கவிதைகளுக்குச் சொந்தக்காரர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

“நான் பெண்” என்ற கவிதை முதலில் நகுலனை நினைவுபடுத்தி, பின் பாரதியாரை எண்ண வைக்கிறது.

கண்கள் நெருப்பு
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்

எனப் பெண்மை விஸ்வரூபம் காட்டுவது ரசிக்கத்தக்கது.

தாபம் பற்றி பேசும் “தணல் நதி” ஒரு நல்ல கவிதை.

விசமத்துடன் உதட்டைக் கடித்து
நெளியும் இவ்விரவில்
ஓர் முத்தத்தைப் பற்றவை

என்கிறார் கவிஞர்.

என் முன் தொங்குகிறது
தணல் நதியாய் இரவு

என்னும் போது ஓர் அழகான படிமம் அமைந்து விடுகிறது. மிகவும் தேர்ந்த சொற்கள் இக்கவிதையில் வந்து விழுந்துள்ளன.

மேகங்களை ஓட்டிச் செல்கிறது காற்று என்ற சொல்லாட்சி, லகானைக் கையில் பிடித்து மொழியை நடத்திச் செல்லும் அழகைக் காட்டுகிறது.

'குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்' சரியான கவிதை! “ஒரு வயல் வெளியளவு சொற்கள் இருந்தன என்னுள்” என்ற வரியின் ஆழ, அகல, உயரம் அசாதாரணமானவை. இது உருவாக்கும் அர்த்தவெளி பரந்துபட்டது. ஒரு மனிதக்குரல் இக்கவிதையில் ஆராதனை செய்யப்பட்டுள்ளது. அந்தக் குரலுக்குள் உட்கார்ந்து தவம் மேற்கொண்டிருக்கிறார் என்பது மிகையல்ல.

உன் குரலில் வைத்திருக்கிறாய்
முத்தங்களால் நிரம்பிய மாயப்புரம்

என்ற வரிகளில் அழகான படிமம் நம்மை மகிழ்விக்கிறது.

அனைத்து ருசிகளும் உள்ளதுதான்
உன் குரல் என்ற திராட்சை ரசம்

என்ற முத்தாய்ப்பு கவிதையை அதிக உயரத்துக்கு தூக்கிச் சென்றுவிட்டது. இத்தொகுப்பின் ஆகச் சிறந்த கவிதை என ஒன்றை மட்டும் குறிப்பிட முடியாது. ஆகவே இதுவும் ஓர் ஆகச் சிறந்த கவிதை என்பது என் துணிபு!

“மேலும் சில இரத்தக் குறிப்புகள்” என்ற கவிதை மனத்தை வருத்துகிறது. குழந்தை விரல் இரத்தம், பெண்ணின் இரத்தம், கொல்லப்பட்ட குழந்தையின் இரத்தம், வன்மத்தில் இரத்த வாடை, வேட்டையில் இரத்த நெடி எனப் பல வகையான இரத்தம் காண வேண்டியிருக்கிறது என்று ஆதங்கப்படுகிறார். “நிழலின் அலறல்” சிக்கலான வெளியீட்டு முறையில் அமைந்துள்ளது.

இழந்து விட்ட சொர்க்கத்தின்
சாபம் படிந்த மணல் திட்டுக்களில்
சபிக்கப்பட்ட தீர்ப்புகளாய்
எனதற்ற நீ
உனதற்ற நான்

என்ற முடிவில் முன் நிற்கிறது பிரிவு! இன்னும் தெளிவும், பத்தி பிரித்தலும் அமைந்தால் இக்கவிதை சென்று சேரும் வாசகர் வட்டம் பெரிதாகும்.

“காதலைக் கொல்லும் தேவை” அழுத்தமான காதல் கவிதை! வழக்கமான புதிய சிந்தனை, கவிதையின் இறுதியில் அற்புதமான படிமமாக அமைந்துள்ளது வண்ணத்துப்பூச்சி! என்ன மாதிரி வண்ணத்துப்பூச்சி தெரியுமா? முத்தம் கண்களாகவும், பெயர் சொல்லி அழைத்த கணங்கள் நிறங்களாகவும் கொண்டதொரு அபூர்வ வண்ணத்துப்பூச்சி!

காதலித்தவரை மணக்க முடியாமல் போகும் அனுபவம் பலருக்கும் பழக்கமானதுதான். அது போன்ற ஒரு சூழல் இக்கவிதையின் பாடுபொருளாகியுள்ளது.

உன் குரலின் இனிய ரகசியங்களை
சிரிப்பை
வானத்தில்
எறிந்து விட்டேன்

என்ற வரிகள் அப்படி ஒரு ஆசையை முன்வைக்கும் அதே நேரத்தில், அது சாத்தியமற்றது என்பதையும் சொல்லிவிடுகிறது. இக்கவிதையின் கட்டமைப்பு கவனத்தை ஈர்க்கிறது.

“பருவ காலங்களைச் சூடித்திரியும் கடற்கன்னி” என்ற கவிதையில் கதைத் தன்மை காணப்படுகிறது. “சிறுமிகளில் மடி கொள்ளாத வெண் சிப்பிகள்” அரிய யதார்த்தக் காட்சியாக உள்ளது. “மேகங்களை வேட்டையாடுகிறாள்” போன்ற புனைவுக் காட்சிகளும் இக்கவிதையில் இடம்பெற்றுள்ளன.

மின்னல்கள் கூக்குரலிட்டு கூவி வெடிப்பதெல்லாம்
கடற்கன்னியில் பெயரைத்தான்

என்பது நல்ல கற்பனை! இக்கவிதையை மீண்டும் மீண்டும் படித்தாலும் புதுமை மாறாமல் இருக்கிறது.

தலைப்புக் கவிதையான “எனக்குக் கவிதை முகம்” இருண்மையோடு காணப்படுகிறது. “அதோ வருகிறான் மாவீரன்…” என்னும் காட்சியும் அதைத் தொடரும் வரிகளும் தொடர்பில்லாமல் துண்டு துண்டாக நிற்பது போல் தெரிகின்றன. இரண்டு முயல்கள் என்னும் குறியீடு எதைக் குறிக்கிறது? “பெண் பலி” சமூக அவலத்தைச் சுட்டுகிறது. பெண்ணுரிமைக்கான குரல் பதிவாகியுள்ளது.

என் முன்தான் நிகழ்கிறது
என் மீதான கொலை!

என்னும் முத்தாய்ப்பு கவிதைக்கு வலிமையூட்டுகிறது.

தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்

என்ற பொருளாழமிக்க சினிமாப் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

“பிச்சி” ஒரு பாலியல் கவிதை. மறை பொருளாய், நாசூக்காக ஒரு கூடலைச் சொல்கிறது. பாணனின் இசை, மயக்க இழைகள், மாயத்திசை, கத்திகள் பய்ந்த கவிதை என எங்குதான் கிடைக்கின்றன இந்த சொல்லாடல்கள்?

வானம் பூனைக்குட்டியாகி
கடலை நக்குகிறது

என்ற கவிதையின் கடைசி வரிகள் தருகின்ற ஒரு பூதாகரமான படிமத்தை. “பசுமையின் உச்சமாகி நான் நிற்கிறேன்” என்ற வரி (கவிதை: “மின்னல்களைப் பரிசளிக்கும் மழை”) கவித்துவத்தை எல்லா சொற்களிலும் நிரப்பி, வாசகர்கள் முன் நீட்டுகிறது. இக்கவிதையின் தொடக்க வரிகள்,

மழையாய் பெய்து குளிர்ந்தன
எனக்குள் உன் பேச்சு

இந்த வரிகள்,

உன் பேச்சில்
மலர்களாய் தொடுக்கப்பட்டுள்ளன
எனக்கான ப்ரியங்கள்

என்ற கவிதை வரிகளை நினைவுபடுத்துகின்றன.

நிறைவாக, மொழி வளம் நன்கு கைவரப்பெற்றுள்ளது. சுயபாணி வலுவூட்டுகிறது. கலை நேர்த்தி பாராட்டுக்குரியது. கவிதைத் தலைப்புகள் அழகாக அமைந்துள்ளன. ரசமானவை! நல்ல மன நிறைவைத் தரும் தொகுப்பு.


----------------------------------------------------------------------------------------------------------

அம்ருதா ஏப்ரல் - 2013

Monday, 25 March 2013

பொடுபொடுத்த மழைத்தூத்தல் - தொகுப்பு: அனார்

- கிரி ராமசுப்ரமணியன்
------------------------------------------------------------------------------------------------------

வண்டறுத்த சோலையிலே
மரமழுது போறதுபோல்
நின்டழுவன் மச்சான்
உங்கெ நினைவுவாற நேரமெல்லாம்


இஸ்ஸத் ரீஹானா எம்.அஸீம் என்கிற 'அனார்'. இலங்கையைச் சேர்ந்த முக்கியமான இளம் தலைமுறைப் பெண் கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். கிழக்கு இலைங்கையின் சாய்ந்த மருது என்னும் ஊரைச் சேர்ந்த அனார் தொகுத்து 'க்ரியா' வெளியீடாக வெளிவந்திருக்கும் கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்களே 'பொடுபொடுத்த மழைத்தூத்தல்' என்னும் இந்தப் புத்தகம்.

நாட்டார் பாடல்கள் அல்லது கிராமியப் பாடல்கள் என்பவை நாட்டுப்புற மக்கள் தங்கள் வேலை நேரங்களின் இடையே வேலைப்பளு தெரியாமல் இருப்பதற்காகப் பாடுபவை. இவை எழுதிவைத்துப் பாடிய பாடல்கள் அல்ல. இவற்றைப் பாடியவர்கள் ஏட்டுக்கல்வி அறிந்தவர்களாக இருந்திருப்பார்களா என்பதுவும் சந்தேகமே. ஆக வாய் வழியே பாடி செவி வழியே கேட்டு சந்ததிகள் வழியே பயணப்பட்டு இவை காலங்காலமாய் வாழ்ந்து கொண்டு இருப்பவை. கைப்பேசியிலேயே வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கும் வசதி பணியாளர் அறைகளில் தொலைக்காட்சி பார்க்கும் வசதி என்று வளர்ந்துவிட்ட இன்றைய சூழலில் இந்தவகைப் பாடல்கள் இன்னமும் பரவலாகப் புழக்கத்தில் உள்ளனவா என்பதுவும் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு இவை வாய்வழிச் செவிவழி கொண்டு செல்லப்படுமா என்பதுவும் கேள்விக்குறியே. 

காலங்காலமாக நம் கிராமங்களில் வாழ்ந்து வரும் இப்பாடல்கள் நம்மவர்களின் நாகரிக வளர்ச்சியில் மூச்சடைத்து அழிந்திடாமல் இருக்க அவ்வப்போது சிலர் இவற்றை ஆவணப்படுத்துகிறார்கள்.

சிலப்பதிகாரம் போன்ற பெரும் காவியங்கள் கூட அடிப்படையில் நாட்டார் பாடல்களை ஆதாரமாகக் கொண்டு படைக்கப்பட்டவையே என்ற கருத்தும் உண்டு. 

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு நம்மிடையே பிரபலமானது நடிகர் சிவாஜிகணேசன் நடித்த படத்தின் மூலம் என்பது நாம் நன்கு அறிந்த விஷயம்தான். ஆனால் அதற்கு முன்னால் கிராமங்களில் கட்டபொம்மனின் வழிவந்த கிராமத்துக் கிழவிகள் அவன் வரலாறை நாட்டார் பாடல் தொனியில் பாடிக் கொண்டிருக்க அதைக் கேட்ட மபொசி அவற்றை ஆவணப்படுத்தி வெளிக் கொணர்ந்ததே கட்டபொம்மன் கதை வெளிவந்ததன் முதல்படி. மபொசி கட்டபொம்மன் வரலாறை வெளிக் கொணர்ந்திரா விடில் பத்தொடு பதினொன்றான சிற்றரசர்களுள் ஒருவனாக அவன் மறக்கப்பட்டிருப்பானோ என்னவோ.

(எட்டையாபுர வழி வந்தவர்கள் கட்டபொம்மனைக் கொள்ளையனாகப் பார்ப்பவர்கள். அவர்களுக்கு இந்த விஷயத்தில் மபொசி மீதும் சிவாஜிகணேசன் மீதும் தனிக் கோபம் இருப்பது தனிக்கதை)

இப்படி ஒரு சிற்றரசனின் வரலாறே காலப்போக்கில் மறந்து தொலைக்கக் கூடியது எனில்இ யார் ஆதிகாலத்தில் உருவாக்கினார்கள் என்றே தெரியாத இதர நாட்டார் பாடல்கள் எம்மாத்திரம்? ஆக இத்தகைய பாடல்களைத் தொகுத்துப் புத்தக வடிவில் கொண்டு வருபவர்கள் ஒருவகையில் ஒரு வட்டாரத்தின் ஒரு காலகட்டத்தின் வரலாறைப் பதிவு செய்கிறார்கள். 

வரலாறு? காலகட்டம்?

ஆம் பேரிலக்கியங்கள் மட்டுமல்ல சின்னச்சின்ன நாட்டார் பாடல்களும் அவை பாடப்பட்ட காலகட்டத்தின் மக்களின் வாழ்வியலை போகிற போக்கில் சொல்லிச் செல்பவைதானே.

நாட்டார் பாடல்களானவை நடவுக்கும் ஏருக்கும் உழவுக்கும் படகு வலிக்கவும் வண்டி ஓட்டும் வேளையிலும் பாடப்படுவது என்று வேலை நேரத்திற்கானது என்று மட்டுமே அல்லாமல் தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி வரை வாழ்வின் அனைத்து காலகட்டங்களுக்கும் பாடப்பட்டவை. கும்மிப்பாட்டு நெற்குத்திப்பாட்டு ஏற்றப்பாட்டு என்று இவற்றில் பல கிளைவகைகள் இருக்கின்றன.

கிழக்கிலைங்க நாட்டார் பாடல்களில் அனார் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருப்பவை காதல் சுவையை மட்டுமே. 

கத்தி எடுத்துக்
கதிர் அரியும் வேளையிலே
கள்ள எண்ணம் வந்து
என்ட கையறுத்துப் போட்டுதடி 

இப்படி தோராயமாக ஒவ்வொன்றும் நான்கு அடிகள் கொண்ட பாடல்கள். 160 பாடல்களை அனார் தொகுத்திருக்கிறார். படிக்க வசதியாக அவற்றை 'அவன்' பாடுவதாக 80 பாடல்களையும் 'அவள்' பாடுவதாக 80 பாடல்களையும் கோர்த்து ஜோடிப் பாடல்களாக ஒன்றுக்கு ஒன்று கேள்வியும் - பதிலுமாய்த் தந்திருப்பது படிக்க இனிமை.

உன்னை மணந்து
உயர்ந்த கட்டில்மேல் வைத்து
கன்னந்திருப்பிக்
கதைக்க வெகு நாட்களில்லை

என்று 'அவன்' காதற்சுவை பாடினால்....

ஏறப் பழுத்த
இரு சிவப்பு மாம்பழத்தை
என்ன வந்தாலும்
எடுத்தருந்து என்கிளியே

என்று 'அவள்' காமத்துப்பால் பருகச் சொல்கிறாள்.

நாட்டார் பாடல்களின் சிறப்பு ஒன்றேயொன்றுதான். இவை கவிஞனின் கவித்திறமையை உவமைத் திறனை இலக்கண சுத்தத்தை இலக்கிய ஆளுமையை என்று பெரிய விஷயங்களுக்குள் எல்லாம் நுழையாமல் ஒரு சாமானியனின் கணநேரச் சிந்தையை உள்ளதை உள்ளபடிக்கு மொழிபெயர்ப்பனவாக இருப்பதுதான். கவிக்கட்டமைப்பின் கவனச் சிதறலின்மை இவற்றைப் போலியற்ற கவிதையாக வாழ்வாங்கு வாழவைக்க உதவுகின்றன.

கிழக்கிலங்கை நாட்டார் பாடல்களைப் பாடினதில் முஸ்லிம் பெண்களின் பங்கு அதிகமானது என்கிறார் அனார். பிரிவு இரங்கல் தூதுப் பாடல்கள் அவற்றில் தூக்கலாகத் தெரிபவை.

இந்தப் புத்தகத்தின் மூலம் நமக்குக் கிடைப்பவை அந்த சுவைமிக்க நாட்டார் பாடல்கள் மட்டுமல்ல; கூடவே அவை ஒவ்வொன்றிலும் கையாளப்பட்டிருக்கும் கிழக்கிலங்கைப் பிராந்தியத்தின் பிரத்தியேக வார்த்தைகள் சிலவற்றுக்கான அர்த்தங்களும் கூடவே. சுமார் பத்து டஜன் வார்த்தைகளுக்கு பொருளும் சேர்த்தே தரப்பட்டுள்ளது.

சில உதாரணங்கள்:

பொடுபொடுத்த - துளித்துளியாய்ப் பெய்யும் மழை
ஒழுங்கை - வீதி
நுளம்பு - கொசு
பொறுதி - பொறுமை.

அள்ளினால் தங்கம்
அணைச்செடுத்தால் அமிர்த குணம்
கொஞ்சினால் இஞ்சி மணம்
கோவைசெய்தால் வேர்வை மணம்

ஆம்! வேர்வை மணத்தின் இனிமைதான் நாட்டார் பாடல்களின் இனிமையும் கூட!


பொடுபொடுத்த மழைத்தூத்தல்
(கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்கள்)
க்ரியா பதிப்பகம் 
தொகுப்பு: அனார்
72 பக்கங்கள் ஃ விலை ரூ. 150/=
------------------------------------------------------------------------------------------------------
நன்றி : http://omnibus.sasariri.com/2013/01/blog-post_30.html?spref=fb

Tuesday, 19 March 2013

Award for Excellence in the Filed of Literature
( Launched by Vijay TV – Sigaram Thotta Pengal - 2013 )

__________________________________________________________________________

பெண் தான் வாழ்வதற்கும், தன்னை நிரூபிப்பதற்கும் நிச்சய்ம் போராட வேண்டியிருக்கிறது. இதற்கு விதிவிலக்கான பெண்கள் எவரும் இல்லை என்றே எண்ணுகிறேன். 

அவள் கவிதை எழுதினாலும் எழுதாவிட்டாலும், சிறுமியாக இருந்தாலும், முதிர்ந்தவளானாலும், படித்தவளானாலும், பயிலாதவளானாலும், கிராமத்தில் வாழ்ந்தாலும், நகரத்தில் வாழ்ந்தாலும்... இனம், மொழி, மதம், நாடு கடந்து, உலகமெங்கும் பெண் மரணம் வரை போராட வேண்டியிருக்கிறது. அந்த சக்தியை அவள் பெற்றுமிருக்கிறாள்.

இந்நிகழ்வு, என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல உந்துதலையும், உறுதியையும் ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், நண்பர் திரு. அன்டனி மற்றும் திரு. சுந்தரராஜன் அவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறேன். மேலும் என்னுடைய நூல்களைப்பதிப்பித்த பதிப்பகங்களான காலச்சுவடு, க்ரியா, மூன்றாவது மனிதனுக்கும் நன்றிகள். குறிப்பாக காலச்சுவடு கண்ணன், க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களோடு இந்தப் பெருமிதத்தைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

அனைத்தையும் சாத்தியமாக்கித் தந்த இறைவனுக்கும் என் அஸீமிற்கும் நன்றி.
 
                                           
                                         நீயா நானா அன்ரனி, அஸீம், அனார்

                              நீயா நானா அன்ரனி, அஸீம், அனார், சுந்தரராஜன், வளர்மதி அம்மா                                          அனார், தமிழச்சி தங்கபாண்டியன்


- அனார்
18.03.2013
for more, please click the bellow link:

https://www.youtube.com/watch?v=E4PHAtdUuMo

Monday, 4 March 2013

சிகரம் தொட்ட பெண்கள் -பெண் சாதனையாளர் விருது விழா-2013
-------------------------------------------------------------------------------------------------


என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஒரு செய்தியை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். சமூக செயற்பாடு, விஞ்ஞானம்,தொழில் நுட்பம், அரச சேவை, மருத்துவம், கல்வி, களிப்பூட்டல், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளிலும் அசாதாரணமான அடைவுகள் மூலம் சாதனைகளை நிலை நாட்டிய இளைய தலைமுறைப் பெண்களை 'சிகரம் தொட்ட பெண்கள் ' என்ற தலைப்பில் விஜய் டி .வி . ஆண்டு தோறும் கௌரவித்து வருவதைப் பலரும் அறிந்திருப்பார்கள்.

இந்த வகையில் இவ் ஆண்டின் இலக்கியத் துறைக்கான சாதனைப் பெண்ணாக கவிஞர் அனார் அவர்கள் விஜய் டி .வி. யால் அறிவிக்கப் பட்டுள்ளார்.

அவரையும், வெவ் வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த இதர பெண்களையும் கௌரவிக்கும் நிகழ்வு 10.03.2013 அன்று சென்னை விஜய் டி .வி. கலையகத்தில் நடை பெறவிருக்கின்றது.

பெரும் பரப்பொன்றிலிருந்து அவர் தேர்வு செய்யப் பட்ட செய்தியானது மூன்று விதங்களில் என்னை மகிழ்ச்சி கொள்ள வைக்கின்றது.

1. விருது பெறத் தகுதியான எழுத்தாற்றலை அவர் கொண்டிருக்கிறார்.

2..அவர் ஓர் ஈழத்தவர் என்ற பிரதேசம் சார்ந்த பெருமிதம்.

3.அறிமுகமான நாள் தொட்டு இன்று வரை கீறல் விழாத அவருடனான இலக்கியம் சார்ந்த இனிய நட்பு.

அவருக்கு வழிகாட்டிகள் என யாரையும் என்னால் குறிப்பிட முடியவில்லை.அவர் சுயமாக உருவாக்கிக் கொண்ட ஈரம் ததும்பும் மொழியும், கவிதைகளூடாகப் பரவும் காதல் வாசனையுந்தான் இத்தகைய 'சிகரங்களை ' நோக்கி அவரை அழைத்துச் செல்கின்றன.

சிகரம் என்பது ஓர் எல்லையின் குறியீடு. அதற்குப் பின் எட்ட எதுவுமில்லை என்றாகி விடும்.ஆனால் அனாருக்கு எல்லை தாண்டும் வல்லமை உண்டு என்பதை நான் அறிவேன்.

என் மகிழ்ச்சியில் பங்கு கொண்டு அவரை வாழ்த்து மாறு அன்புடன் தோழர்களையும்,தோழியரையும் கேட்டுக் கொள்ளுகின்றேன். 

உமா வரதராஜன்,
கல்முனை ,
இலங்கை. 
27.02.2013

Saturday, 26 January 2013

பொடுபொடுத்த மழைத்தூத்தல் 
-------------------------------------------------------------------------------------------------


மந்திரப்பூச்சிகளோடு, ஒரு வெளி நிறைய இசை : 
பின்னுரையிலிருந்து

என்னுடைய குழந்தைப் பருவத்தை, மென்மையான கனவு போன்ற உலகம் சூழ்ந்து வியாபித்திருந்தது. அந்தக் கனவுக்குள்ளே தும்பிகளைப் போல அலைந்து திரியும் சிறுவர் படைக்கு நானே தலைவியாக இருந்தேன். 

அணில் மிச்சம் வைத்த பாதிப் பழங்களைத் தின்பதற்காகவோ, அணிலுக்கென எந்தவொரு பழத்தையும் விட்டுவைத்துவிடக் கூடாது என்ற பொறாமையினாலோ என்னுடைய மாலைப்பொழுதுகள் அனைத்தும் மரங்களிலேயே கழிந்தன. 

வீட்டுக்கருகே அமைந்திருந்த தாமரைக்குளத்தில் தூண்டில்போட்டு மீன் பிடிப்பது, ஆமைகளில் ஏறியிருந்து சவாரி போவதுபோல் பாவனை பண்ணுவது, புதிய உடைகள் தைத்து மீதமான துணிகளைச் சேகரித்து “பொண்ணும் மாப்பிள்ளையும்” விளையாட்டுக்காக பொம்மை செய்து கல்யாணம் பண்ணிவைப்பது, மண்ணில் குழி தோண்டி நீரூற்றிக் குடைக் கம்பியைத் துலாக்காலாக்கி நீர் இறைப்பது, பழுத்து விழுந்த பலா இலைகளைப் பணமாகப் பாவித்து தாமரைப்பூக்களையும் தட்டுச் செவ்விரத்தைகளையும் வியாபாரம் பண்ணுவது, சுடுசுடு மாம்பழம் விளையாடுவது என்றெல்லாம் அன்று விளையாட்டுக்கள் எங்களை விளையாடின. வானத்தைத் தொடுவதற்கென்றே ஆடியது எங்கள் பொன் ஊஞ்சல்.

இத்தனை நினைவுகளின் மத்தியிலும் அன்றைய நாளில் எனக்கு மாத்திரம் வேறொரு புதையல் வாய்த்திருந்தது. என்னுடைய வீட்டிற்கருகே மற்றொரு பகுதியில் சிறிய களிமண் குடிசை, குடிசையின் அருகே உயரமான மரம், மரத்தின் நடுப் பகுதியில் ஒரு அழகிய பரண் அமைந்திருந்தது. அந்தப் பரணில் எப்போதும் ஒரு இளைஞர் நிறைய புத்தகங்களோடும் நண்பர்களோடும் இருப்பார். அவரைச் சூழச் சிரிப்பும் பாடல்களும் கேட்டபடி இருக்கும். அவ்விளைஞர் இனிமையாகப் பாடுவார். குடிசைக்குள் மெலிந்த உடல்வாகு கொண்ட ஒரு மூதாட்டி இருந்தாள். மிகச் சிறுமியான என்னை யாருமே அந்தப் பரணில் ஏற விட்டதில்லை. பெத்தாவின் அருகே என்னை விட்டுவிடுவார்கள். அம்மூதாட்டியை பெத்தா என்றே அழைத்தேன்.

களிமண் தரையில் பன்பாயில் கால்களை நீட்டி பெத்தா அமர்ந்திருப்பார். அருகே செம்பு வட்டாவும், படிக்கமும், சிறிய வெற்றிலை உரலும், சிவப்பு நிற சாயம் ஊறிய பனை ஓலை விசிறியும் அவர் அருகே இருக்கும். சிறு உரலைப் பக்கத்தில் எடுத்து பாக்கு, சுண்ணாம்பு, சிறிது புகையிலை, இரு நீர்வெற்றிலைகள், கைப்பு, கராம்பு இப்படி கூட்டுச் சேர்த்து உரலில் இட்டு இடித்துக்கொண்டே ஒவ்வொரு கவியாகப் பாடிக்கொண்டே இருப்பார். வெத்திலாக்குச் சப்பும் மணம், இரத்தச் சிவப்பான நாக்கு மேலும் கீழும் அசைய, உதடுகளில் சிவப்புச்சாறு ஊறும்... பிறகென்ன பெத்தா பாடும் கவி காற்றில் மணக்கும். சிவந்த உதடுகளில் இருந்து வரும் இசையைக் கேட்டு மயங்கி இருப்பேன். கொஞ்ச நாட்களிலே நானும் பெத்தாவுடன் சேர்ந்து பாடத் தொடங்கிவிட்டேன். நாட்டுப்புறப் பாடலின் இசைதான் முதலில் என்னை ஆக்கிரமித்திருந்தது. பிறகு வந்த நாள்களில் சபைகளில் என்னை யாராவது கவி பாடும்படி கேட்டால், ஆர்வ மேலீட்டால் மனனமாகியிருந்த அத்தனை நாட்டார் பாடல்களையும் மூச்சுவிடாமல் பாடிக்காட்டும் சிறுமியாக நான் இருந்தேன். எனது வீட்டிலும் அயலிலும் இருந்த இளவயதினர் பல விதமான மத ரீதியாக அமைந்த இசை வகைகளில் ஆர்வமுற்றிருந்தனர் அல்லது திரை இசையைப் பாடும் நாகரிகம் தெரிந்தவர்களாக இருந்தனர். ஆகச் சிறுமியான நான் கிழவிகள்போல கவி இசைப்பது வீட்டில் விரும்பப்படவில்லை. வயதிற்குப் பொருத்தமற்ற செயலைச் செய்வதாகக் கருதினர். எங்கள் கிராமத்தில் சிறுவர்களின் ஏதேனும் ஒரு பழக்கத்தை நிறுத்துவதற்கு அன்றைய பெரியவர்கள் பலவகையான தண்டனைகளை வழங்குவதுண்டு. வேறொருபோதும் அப்பழக்கத்தை அல்லது அச்செயலைச் செய்யச் சிறுவர்கள் துணிவதில்லை. அனைத்துத் தண்டனைகளுக்கும் ஆரம்பமாக அவர்கள் செய்வது இதுதான் : “பழுத்த மிளகாயை” இரண்டாகப் பிளந்து, உதட்டில் வைத்து நன்றாகத் தேய்த்துவிடுவார்கள். வாயைக் கழுவுவதற்கோ தண்ணீர் குடிப்பதற்கோ அனுமதிப்பதில்லை. கவி படிப்பதாகச் சொல்லிக்கொண்டு, வாயைத் திறந்தால் “வாயில கொச்சிக்காய் போடுறது தப்பாது” என்று எனக்கும் பலமான எச்சரிக்கை விடப்பட்டது. ஒருமுறை ஏற்கனவே இக்கொடிய தண்டனை எனக்கு நிறைவேறியிருந்த அவமானத்திலும் பயத்திலும் முற்று முழுதாகக் கவி படிப்பதை அன்றோடு நிறுத்திவிட்டேன்.

வெள்ளை முக்காடிட்ட அந்த முதிய பெண் உருவம் புகைபோல நெளிந்து காற்றில் கரைந்துபோனாலும் காற்றை நீவிப் படபடக்கின்ற அக்குரலின் ஓசையைக் கூர்ந்து கேட்கின்றேன். இந்த நினைவை இவ்விதம் தீட்டித்தீட்டி வைரம் பாய்ந்த புதையலாக ஒளிரச் செய்யும் என்னுடைய கனவுகள். அந்த ஒளியின் முன் தீராத தனிமையை எடுத்து வைத்துவிட்டுக் கண்களை மூடிக்கொள்கிறேன்.

என் ஊரின் கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே வயற்பரப்பும் விரிந்து பரந்து கிடக்கின்றது. மிகுந்த வனப்பான இந்த நிலப்பகுதியின் பாரம்பரிய வாழ்க்கை முறைமைகளில், சொற்பமானவைகளைக் கண்கூடாகக் கண்ட, பெரும்பாலானவற்றை முதியோர்களிடமிருந்து செவி வழியாகக் கேட்டறிந்த கடைசிப் பரம்பரையில் ஒருத்தி நான் என நம்புகின்றேன்.

கிழக்கு இலங்கையில் பல தொன்மை வாய்ந்த கிராமங்கள் உள்ளன. இயற்கையிலேயே பாட்டு இயற்றும் மேதமை கொண்ட தமிழ், முஸ்லிம் மக்கள் இக்கிராமங்களில் இருக்கின்றனர். என்னுடைய தொன்மை வாய்ந்த கிராமமான சாய்ந்தமருதிலும் இருந்திருக்கின்றனர். முஸ்லிம்கள் இன்று பெருபான்மையாக வாழும் தென்கிழக்குப் பிராந்தியம் என்பது ஆதிகாலம்முதல் “ருகுனு” தேசத்தின் ஒரு முக்கியப் பிரிவாக இருந்திருக்கின்றது. “காவன்திஸ்ஸயின் ராசதானி” கி.மு. 100இல் உருவாக்கப்பட்டபோது இத் தென்கிழக்குப் பிரதேசம் விவசாய வளமிக்க இடமாக இருந்திருக்கின்றது. வர்த்தகம், வாணிபம் மேலோங்கிய இப்பிரதேசத்தில் அரேபியக் கப்பல்கள் தென்கிழக்குக் கரைக்கு “தங்கத் தளபாடங்களை துட்டகெமுனு” அரசனுக்கு எடுத்து வந்ததாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

முஸ்லிம் முன்னோர்களின் பரம்பரையினர் அரேபியர்கள், கேரள வியாபாரிகள், தென்னிந்திய வியாபாரிகள் இங்கு வந்து வாழ்ந்துள்ளதாக வரலாற்றில் சொல்லப்படுகின்றது. மிக நீண்ட காலமாக இம்மக்கள் விவசாயம், மாடு வளர்ப்பு, வியாபாரம், மீன்பிடித் தொழில் போன்றவற்றைப் பிரதான பரம்பரைத் தொழில்களாக கொண்டிருந்தனர். ஆரம்பத்திலிருந்தே நெசவுத் தொழிலும் கைப்பணித் தொழில்களும் கிழக்கு மாகாணக் கரையோரப் பகுதிகளின் தொழில்களாக இருந்துள்ளன.

முஸ்லிம் பெண்கள் வயல்களில் வேலைசெய்திருக்கின்றனர். கதிர் பொறுக்குதல், பூவலில் இருந்து தண்ணீர் சுமந்து வருதல், விறகு பொறுக்குதல், வீடுகளில் கைத்தொழில்கள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். பன்களைப் பிடுங்கிவந்து பாய்கள் இழைத்தல், கூடை பின்னுதல், தென்னோலைக் கிடுகு இழைத்தல், நெல் குற்றுதல், உரலில் மா இடித்தல், புடவை நெய்தல் ஆகிய பல தொழில்களைப் பெண்கள் செய்திருக்கின்றனர். ஆண்களும் பெண்களும் இவ்விதமான தொழில்களில் ஈடுபடும்பொழுது பிறந்தவைதான் இந்நாட்டுப்புறப் பாடல்கள். இந்நாட்டுப்புறக் கவிகளை பாடியதிலும், அடுத்த சந்ததிகளுக்குக் கையளித்ததிலும் முஸ்லிம் பெண்கள் பாரிய பங்களிப்பை செய்துள்ளனர். இக்கவிகளில் பெண்கள் பாடிய கவிகளே அதிகமாக காணப்படுகின்றன. மனனமிட்டு வாய் மொழியாக இவை பாடப்பட்டு ஒரு தலைமுறையினரிடமிருந்து அடுத்த தலைமுறையினருக்குக் கைமாறி வந்திருக்கின்றது. நாட்டார் பாடல்கள் பாடப்பட்ட காலம் எது என்பது நிச்சயமாகத் தெரியாது. 

வேலை நேரக் களைப்பை மறப்பதற்காகவும் தங்களுக்குத் தாங்களே உற்சாகமூட்டிக்கொள்வதற்காகவும் பலவிதமான சந்தர்ப்பங்களில் இப்பாடல்களைத் தொன்மையான கிராமிய மனிதர்கள் பாடியிருக்கின்றனர். அவர்களது இன்ப துன்பங்கள், வாழ்க்கை, பண்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்களையும் உள்ளடக்கிய மண்பாட்டுக்களாய் அவை உருவாகியிருக்கின்றன. பிரிவும் இரங்கலுமான நாட்டுப்புறப் பாடல்களையும், தூதுப் பாடல்களையும் அதிகம் பாடியவர்கள் பெண்களே ஆகும். அன்றைய காலத்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் உரையாடலைத் தொடங்குவதே இப்பாட்டின் மூலமாகவிருக்கும். பதில் சொல்வதுகூட மற்றொரு பாடல் மூலமாகவே இருந்திருக்கிறது. உடனுக்குடன் இப்படிப் பாடிப்பாடி உரையாடியிருக்கின்றனர் அக்காலப் பெண்கள். பெண்கள் கூடி ஒன்றாகக் குழுமியிருந்து பாய்களை இழைக்கையில், தென்னோலைக் கிடுகுகளை இழைக்கையில், தண்ணீர் அள்ளி வருகையில் ஒருவர் பாட, இன்னொருவர் அதற்கு பதில் பாடலைப் பாட அவர்களுடைய பொழுதுகள் முழுதும் பாட்டிலேயே கழிந்திருக்கின்றன. பெண்கள் இவ்வாறெனில் ஆண்களும் அவர்களுடைய வேலை இடங்களில் பாடியிருக்கின்றனர். வயல்வெளிகளிலும், கடல் மணலிலும், காவல் புரியும் இடங்களிலும் இவற்றைப் பாடித் தமது தனிமைகளை ஆற்றிக்கொண்டிருக்கின்றனர். அப்போதெல்லாம் நெல்முளை வண்டிகள் சேர்ந்து நள்ளிரவுக்குப் பின் வரிசையாகப் புறப்படும். முதல் வண்டிக்காரர் கிராமியக் கவிகளைப் பாடத் தொடங்குவார், அடுத்தது அதற்கு அடுத்தது என்று வண்டிகளின் வரிசையில் இப்பாடல்கள் பாடப்படும். கடைசி வண்டிக்காரர் பாடி முடித்ததும் திரும்ப முதல் வண்டிக்காரர் பாடுவார். இப்படியே பயணம் முடியும்வரை பாடல்கள் தொடர்ந்திருக்கின்றன. 

1950ஆம் ஆண்டுகளிலிருந்து இவை ஆய்வு ரீதியான புத்தகங்களாக தொகுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அனைத்து நாட்டுப்புறக் கலை இலக்கிய அம்சங்கள், பல பிரிவுகளாக உள்ளன. சுமார் 2000 நாட்டார் பாடல்கள் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளன. இன்றும் காதல் உணர்வுகள் அதிகம் செறிந்த பாடல்களே என்னுடைய பகுதிகளில் பிரபலமாக இருக்கின்றன. காதல் என்பது அன்று அனுபவமாக மட்டுமன்றி அர்ப்பணிப்பாகவும், அறச்செயலாகவும் இருந்துள்ளது. 

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் கிராமங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கும். இத்தொகுப்பிலும் இரண்டு மக்களுடைய கவிகளும் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கின்றன. இன்றைய உலகமயமாக்கல், அறிவுப் பெருக்கம், நாகரிக வளர்ச்சி, இலக்கிய மாற்றங்கள் அனைத்தையும் தாண்டி இன்றைக்கும் இக்கவிகளிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ள ஏதோ ஒன்று நிச்சயம் இருக்கின்றது. அதுதான் நாம் இன்னும் அடைய முடியாத ஒன்றாகவும் உள்ளது. தேசம், இயற்கை, மொழி, பண்பாடு, தொன்மையான மனிதனின் நாகரிகம் போன்றவற்றை அறிந்துகொள்ள முயல்வது இன்றைய தலைமுறைக்கு மிகுந்த அவசியம். முற்றிலும் இயற்கையான பசுமையுடனும், நீருடனும், காற்றுடனும், நெருப்புடனும், பறவைகளோடும், விலங்குகளோடும் பிணைந்த இன்னொரு வாழ்க்கையின் மணத்தைப் பூரணமாக உணர்ந்துகொள்ளவும் முடியும் என நம்புகின்றேன். முழுக்கமுழுக்க உணர்விலிருந்து வெளிப்படுகின்ற மண்பாட்டுக்கள் இவை. ஒவ்வொரு சொல்லிலும் உள்ளுறைந்திருக்கும் ஆன்மாவின் பச்சை, காதலின் அப்பழுக்கற்ற வாசனை, ஆணினதும் பெண்ணினதும் கண்களிலிருந்து காதலெனத் தெறிக்கின்றது. அந்தக் கணத்தின் குரலில் இருந்த இசையின் உயிர் ஒருபோதும் அழிவற்றது.

சொல்லில் உள்ள இன்பத்தையும், சொல்வதிலுள்ள இன்பத்தையும் இந்த மண் பாடல்களில் உணரமுடியும். கவியில் ஒவ்வொரு சொல்லும் உயிருடன் அசைந்து, நிறங்களை உதிர்க்கும் மந்திரப்பூச்சியாகிப் பறந்து என்முன் தோன்றுகிறது. இன்றும் கிழக்கிலங்கை மக்களின் பேச்சு மொழியில் ஒருவகை இசைத்தன்மை இருக்கிறது. எங்கள் முன்னோர்கள் அனைவரும் இந்தக் கவிகளோடு இரண்டறக்கலந்த அடையாளமாகத்தான் உரையாடல்களினூடே அந்த ஓசையும் இசையும் தொடர்ந்து வருகிறது. அன்றைய மனித வாழ்க்கையில் வித்தியாசங்கள் பெரிதாகத் தோன்றியிருக்கவில்லை. இருந்த வித்தியாசங்கள், இனங்களைப் பிரித்து வேறுபடுத்தி வைத்திருக்கவில்லை. உணர்வும், வாழ்வும், தேடலும், அக்கறையும் அனைவருக்கும் ஒன்றுபோலவே இருந்திருக்கிறது. இனம், மொழி, ஊர் என்ற பிரிப்பு எல்லைகளற்று, ஆண்களாகவும், பெண்களாகவும் அவர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அந்த அடையாளத்தை, ஆகவும் முதன்மையாக மதித்திருக்கிறார்கள். அத்தகைய ஆண்களினதும், பெண்களினதும் அழகிய பொழுதொன்றை நினைவூட்டிக்கொள்ளவும், அந்த பழமையை நெருங்கித் தொடவும் எனக்கு உதவிய மந்திரப்பூச்சிகள் உங்களுக்கும் உதவக்கூடும்.

இந்நாட்டுப்புற கவிகளைத் தொகுப்பதற்கு நினைத்தவுடன், அதன் வடிவத்தை சிதைக்காமல், எளிமையாக அதன் முழுமையோடு தொகுக்க வேண்டுமென விரும்பினேன். அதனால் கவிகளின் முன்னும், பின்னும் கதைச் சுருக்கங்களையோ, கற்பனை உரைகளையோ நான் இணைக்க விரும்பவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக, வரிசைப்படுத்தித் தருவதும் சாத்தியமில்லை. எனவே கவிகளின் உணர்வுகளை விளங்குவதற்கு வசதியாக ‘அவள்’ – ‘அவன்’ எனப் பிரித்து, ஒரு வடிவத்தை ஏற்படுத்தினேன். தொகுப்பதற்கும், வாசித்து விளங்குவதற்குமான வசதிக்காகவே இம்முறையைக் கையாண்டிருக்கிறேன்.

செறிவுள்ள அழகிய காதல் மண்பாடல்களைத் தேர்ந்து தனித்து வெளியிட எண்ணியிருந்தேன். நண்பர் ஆசையையும், ராமகிருஷ்ணனையும் சந்தித்துப் பேசிய சமயம், கிழக்கு முஸ்லிம் நாட்டார் பாடல்களைத் தொகுத்துத் தரும்படி கேட்டார்கள். மிகுந்த ஆர்வத்துடன் இவ்விடயத்தை ஏற்றுக்கொண்டேன். பலமுறை ராமகிருஷ்ணனிடம் இவ்விடயம் தொடர்பாகப் பேசியது என்னுடைய முயற்சிகள் முடிந்தவரை செம்மைப்பட உதவியது. நண்பர் ஆசை இத்தொகுப்பின் மீது கொண்டிருக்கும் அக்கறை மிகுந்த நன்றிக்குரியது. இந்நூலுக்காகப், சிரமங்களைப் பொருட்படுத்தாமல் பல கிராமங்களுக்குச் சென்று, புகைப்படங்களை எடுத்துத் தந்துதவிய எழுத்தாளர். எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களின் அளவற்ற அன்புக்கு மரியாதை செய்கிறேன். மேலும், அவ்வப்போது தேவைப்பட்ட தகவல்களை எனக்குத் தேடித்தந்து, அதைத் தட்டச்சுசெய்து, முழுப் பொறுப்புடனும் விருப்பத்துடனும் வடிவமைத்துத் தந்த என் அஸீமிற்கும் மனமார்ந்த நன்றிகள்.


- அனார்

Cre-A:
New No. 2 Old No. 25
First Floor, 17th East Street,
Kamarajar Nagar, Thiruvanmiyur
Chennai - 600 041.
Tel: 72999 05950 / 044 - 4202 0283
Email: creapublishers@gmail.com