Saturday, 29 September 2012


மிதக்கும் வெண்ணிற இசை......
 -----------------------------------------------------------------------

- அனார்ஒருவருடைய ஆன்மாவிற்குள் நுழைவதற்கு அறிவியல் கற்கை நெறிகளை பயின்று பாண்டித்தியம் அடைந்திருக்கத் தேவையில்லை. ஓர் இசையின்... கவிதையின்.... ஒளித்துவாரம் வழியாக எந்தவொரு உயிரின் ஆன்மாவிற்குள்ளும் நுழையலாம்... உயிரைத் தொட்டுத் திரும்பலாம் என்பது அனுபவத்தின் வழியாக நான் உணர்ந்த விடயம். புதிரான... அந்தரங்கமான... நுண்மையான... மிக மென்மையான செயற்பாடு இது.


அந்த ஒளியை சிலரின் கண்களில் பார்த்திருக்கிறேன்... சிலரின் சொற்களில் கேட்டிருக்கிறேன்.... மிகக் கணிசமான எழுத்தாளர்களின் படைப்புக்களில் கண்டிருக்கின்றேன். யாருடையதோ கனத்த மௌனத்திலும்.... எவருடையதோ இசையிலும்... அந்த ஒளியை உணர்ந்திருக்கிறேன். இசையின் ஒளியோடு வாழ்ந்து வருகின்ற நண்பர் ஷாஜியை அண்மையில் என் வீட்டில் சந்தித்தேன்.கவிதையின் ஒளியால் இசையின் ஒளியை உணர முடிமென்பதால் இந்த சந்திப்பிற்கு அர்த்தமும் அழகும் மிகை இல்லாமல் இருந்தது. விளக்குகளை அணைத்துவிட்ட வீடு முழுக்க அனைவரின் நடுவேயும் ஷாஜியின் இசைஒளி மாத்திரமே ஒளிர்ந்து கொண்டிருந்தது. அன்றைய இரவின் பிரகாசத்தில்,  இசையின் நிழலில் கண்ணீர் துளிர்திருந்தது. ஜன்னல் கண்ணாடிகளில்... வெப்பத்தின் ஆவி படிந்திருந்தது. ஷாஜி கஸல், மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழிப்பாடல்களை பாடிக்காட்டுவதும்... கவிதைகளை மொழிபெயர்த்துச் சொன்னபடியும் உரையாடிக் கொண்டிருந்தார்.

இசையைப் பேசுவதன் இன்பமும்... இசையைப் பாடுவதன் துயரமும்... ஒன்றையொன்று முந்திக்கொண்டிருந்தன.

ஈர மணல்வெளியும்
கடல் அலைகளும்
சாம்பல் மேகங்களும்
தனியே கரையில் கிடக்கும் தோணியும்
உப்புக் கரிக்கும் காற்றும்
உணர்வைக் கருக்கும் காதலும்
நீலமும் வெண்மையும்
குன்றுகளும் நீண்ட பாதையும்
பொடுபொடுத்த மழையும் தனித் பனைமரமும்
குறுக்கே ஓடுகின்ற மயில்களும்
காதுகள் முளைத்துக் கேட்டிருந்தன

அன்று வெயிலும் இருந்தது
மழையும் இருந்தது
அபூர்வமான நாள்

இசையை நேசிப்பதானது.... இசைப்பவர்களின் குரல்களை, இசைபற்றி விபரிப்பவர்களை, இசைக்கருவியின் தனித்த ஓசைகளை என விரிந்து... வாழ்வே, இயற்கையே இசைதான் என வியக்கிறேன்.

இசை பற்றிய அறிவுபூர்வமான தெளிவுகளை அடைவதற்கும், நுணுக்கமான ரசனைக்குரிய வழிமுறைகளை நெருங்குவதற்கும் தமிழில் ஷாஜியின் கட்டுரைகள் உதவுகின்றன. அவருடைய கட்டுரைகள் இலக்கியப் படைப்பினைப் போன்றே முழுமையான தாக்கத்தை தருகின்றவை.

இதுவரை மூன்று தொகுப்புகள் தமிழுக்கு கிடைத்திருக்கின்றன. ரசனையாக மட்டுமன்றி பெரும் அனுபவமாக விரிந்துசெல்லும் திறன் மிக்க கட்டுரைகள் மூன்று தொகுப்புகளிலும் இருக்கின்றன. ஷாஜியின் மேன்மையான சிந்தனைகளோடு, ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும்  அவருடைய ஒவ்வொரு எழுத்துக்களிலும் காணலாம்.


அன்பின் மையத்தில் விலகாத புள்ளியாக... அவருடைய பணி இருக்கின்றது. உண்மையில் அனைத்தையும் அன்புதான் தொடங்கி வைக்கின்றது... இசை அதனை அழகாக்கி நிலைக்கச் செய்கின்றது.
Friday, 7 September 2012

அமைதியான தீச்சுடர் கவிஞர். சுகுமாரன்
--------------------------------------------------------------------------------------------------------

- அனார்கவிஞர். சுகுமாரன் அவர்கள் மொழிபெயர்த்த அயல்மொழிச் சிறுகதைகள் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். 'லயோலா என்ற பெரும்பாம்பின் கதை' - இன்நூலின் அட்டை வடிவமைப்பைக் கண்டு ,கடந்த ஜனவரி சென்னை புத்தகச்சந்தையில் காலச்சுவடு அரங்கில் வாங்கியிருந்தேன். மிக நேர்த்தியான, இலக்கிய நூலுக்குரிய அட்டை வடிவமைப்புடன் இச்சிறுகதைத் தொகுப்பு இருந்தது. இவ்வளவு அழகான வடிவமைப்புடன் அமைந்த இந்நூலுக்குள் உள்ள சிறுதைகள்.... தமிழுக்கு அத்தனை புதியதாக எனக்குத் தோன்றுகிறது. 


விருந்து - என்ற கதையைப் படித்தபொழுது ஒரு கணம் முழுதுமாக நொறுங்கிப் போனேன். 

மேஜை மேஜை தான், மிகயீலின் இதயம் நின்றுவிட்டது, கருங்குறிப்புகள்...., இப்படியான கதைகளின் ஆழம்பற்றி சொல்வதற்கு முடியாதுள்ளது. 

உனக்கு விருப்பமென்றால் என்னை அழை - இக்கதையின் இயல்பான மொழி, அந்த மனிதர்கள், காதல், மனம்... கதை நிகழுவதை கண்ணாடியில் பார்ப்பதுபோல இருந்தது. அந்தக் காட்சிகளை மொழியில் வரைந்து தந்துள்ளனர். 

வீடு திரும்புதல் - கதைபோன்றதொரு கதையை எழுத வேண்டும்போல் எனக்குத் தோண்றியது. காலச்சுவடுக்கு நன்றி. 

சுகுமாரன் அவர்களின் இலக்கியப் பணிகள் பரந்து விரிந்த ஒன்று. இவ்விடத்தில் அவரது இலக்கிய வாழ்க்கைப் பணிகள் தொடர்பாக முழுமையாக எழுத இயலாது . இச்சிறுகதை நூலுக்கு முன்பு அவருடைய இன்னொரு மொழி பெயர்ப்பு நூலை நான் பல நூறு முறைகள் வாசித்திருக்கிறேன். என்றும் என்னுடைய மற்றொரு அங்கம் போன்றிருந்த அந்த நூலின் பெயர் 'பாப்போல நெரூதா கவிதைகள்' - உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருந்தது. 


சாம்பல் நிற அட்டை வடிவமைப்பில் இருந்த அந்த நூல் என்னுடைய தலையணைக்கருகில் எப்போதும் இருந்தது. சுகுமாரன் அவர்களது மனவெளி கவிதை உலகம் மிக நுண்மையாது. பன்முகம் வாய்ந்ததும், வெளிப்படையானதும் ஆகும். அதிக தடவைகள் அவருடன் பேசியிருந்தாலும் சென்ற ஜனவரியில் தான் நேரில் பேசுவதற்கு பல சந்தர்ப்பங்கள் வாய்த்தன. அந்த உரையாடல்கள் மிகுந்த பயனுள்ளவை. என்னுடைய எழுத்துக்களுக்கு நன்மைகள் சேர்ப்பவை. 

சுகுமாரன் அவர்களது தளும்பாத இலக்கியப் பணிகள்... மௌனத்திலும், அமைதியிலும் உருவாகின்றவை. ஒரு தீச்சுடரைப்போல் சத்தமின்றி ஒளிர்பவை. அந்த உயிர் எரிதல்.... அவருடைய ஒவ்வொரு எழுத்துக்களினதும் வெளிச்சம். 

நவீன இலக்கிய எழுத்து வடிவங்களை, அவருடைய தொகுப்புகள் அடையாளப்படுத்துகின்றன. அவரது கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கள் அனைத்தும் இதற்கு சாட்சியாகும். 

வேறு என்ன சொல்வது? 

நான் எப்படி பாராட்டுவது ? Wednesday, 25 July 2012

கொனாரக் சில நினைவுகள்.......
-------------------------------------------------------------------------------------------------ஒரிசா சென்றேபோது கொனாரக் எனும் கோயிலை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார்கள். இந்தப்பயணத்தில் பல முக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒவ்வொன்றாக எழுதலாம் என நினைக்கிறேன். பெரும் பெண் கவிஞரான மனோரமா பிஷ்வால் அவர்களைச் சந்தித்ததும், பழம் பெரும் கவிஞரான சீதாகாந் மஹாபத்தராவுடன் இருநாள் இரயில் பயணம் செய்ததும் மறக்கமுடியாத நிகழ்வுகளாகும். சார்க் நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பிற மானிநிலங்களிலிருந்தும் பல கவிஞர்ள் கலந்துகொண்ட சிறப்பான ஒரு கலை நிகழ்வு.


சூரியக் கோயிலைப் பார்த்தபிறகு எழுதிய கவிதை இது:


சூரியக்கோயில்
_______________


முதுகினில் இறக்கை முளைத்த வனதேவதை
மெழுகுபோன்று முளைத்துவருகின்ற
தன் ஒற்றைக் கொம்புடன் தலையை நிமிர்த்திப் பார்க்கிறாள்

‘கொனாரக்’ அதிசயங்கள் விளையும் நிலம்

அளவற்ற வியப்புடன் ஸ்பரிசிக்கின்றாள்
அப்போது தொன்மையான அவளது ஆன்மா
கண்களில் எட்டி எட்டிப் பார்த்தது
சூரியக்கோயிலைத் தழுவி வீசும் ஆதிக்காற்றின் காதுகளுக்குள்
பேருணர்ச்சியைக் கூவினாள்
முதலும் கடைசியுமான வாழ்த்துகளைச்
சிற்பங்களுக்குச் செலுத்தினாள்

வசந்தகாலப் பனியில் உணர்வில் மூழ்கி
இன்னும் இறுகத் தழுவிக்கொண்டிருந்தன
இரண்டு பெண் சிற்பங்கள்

பிணைந்தது பிணைந்தவாறே கற்பனையிலிருக்கும்
திவ்யமான அந்தரங்க ஓசைகளைப் புதிதாய்க் கேட்டு
புலன்கள் பூரித்து நிரம்பிற்று
அமானுஸ்யப் பரிவாரங்கள் ஆட்சி செய்யும்
சுதந்திரசதுக்கத்தில்
கண் கோர்த்து... கைகோர்த்து...
கற்சிலைகள் பூரணத்தில் ததும்புகின்றன

செதுக்கப்பட்ட வடிவங்களில் ஒன்றில் விடுதலை
மற்றொன்றில் நித்யம் இன்னொன்றில் ஆற்றல்
தீர்க்கமாய், தெளிவாய் உயர்ந்து நிற்கிறது
சூரியக்கோயில்

வலப்புறமாக இரு யானைகளின் முதுகினில்
சிம்மங்கள் பூட்டிய தேர்
கம்பீரமாகக் காவல் புரிகின்றது
பனியில் உயிர் குளிர்ந்து
குதூகலத்தை அபிநயித்து
அருகருகே ஆதிச் சம்பாசணைகள் புரிகின்றன சிற்பங்கள்

உவகையும் சல்லாபமும் மிகுந்திருந்த
அபூர்வமான அனுபவம்
புராதனக் கலை மேன்மைகள் பொதிந்த அவ்விடம்
சூரியக் கிரணங்களில் முயங்கிப் பொலிகின்றது
அதி இயற்கையின் மாயக்கம்பளத்தில்
சிற்பங்களின் பொற்காலம் மறைவதேயில்லை

முதுகின் இறக்கையை உயர்த்தி மொய்க்கிறாள்
யாரும் ஏறாத கனவின் உச்சியை
அரூபமான பிரமாண்டத்தினுள்
கண்கூசும் புதையல்களைக் கண்டெடுக்கிறாள்

விலை மதிப்பற்ற அதிர்ஷ்டத்தை
பெரும் வல்லமையை... விடுதலையை...
தனது கனவின் மொழிகளில் விதைக்கின்றாள்

=

(அனார் – உடல் பச்சை வானம், காலச்சுவடு வெளியீடு)

_______________________________________________________________________________


இந்தியாவின் ஒரிஸ்ஸாவில் இருக்கும் சூரியக் கோயில் கொனாரக், இது கங்கைநதி தீரத்தில் அமைந்துள்ளது. இந்தக்கோயில் பலதடவைகள் படையெடுப்பால் சூறையாடப்பட்டு அதன் பல பாகங்கள் சிதிலமடைந்துவிட்டது. தவிர இயற்கையின் சீற்றத்தாலும் கடல் கொந்தளிப்பாலும் பாதிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இன்றைக்கும் பிரமாண்டமான அதிசயக் கலைவடிவமாக இக்கோயில் காணப்படுகின்றது.


பல வெளி நாட்டவர்களை ஈர்க்கின்ற அதன் கட்டடக்கலை அம்சங்கள் மிகச்சிறப்பு வாய்ந்தது. கலை நுட்பம் மிகுந்த சிற்பங்களும் வியப்படைய வைக்கின்றன. முதலாம் நரசிம்மதேவன் 13ம் நூற்றாண்டில் மிகவும் வித்தியாசமான முறையில் இதைக் கட்டினான். கற்கள் நடுவே இரும்புத்துண்டுகளின் இணைப்புக் கொடுத்துக்கட்டப்பட்டுள்ளது. சூரியன் ஏழு குதிரைகள் கொண்ட தேரில் பவனி வருகிறான். அந்தத் தேரின் 24 சக்கரங்களின் வேலைப்பாடு மனதைக்கவர்கின்றது. இந்த கோயிலில் விலங்குகள், பறவைகளின் சிலைகள் அதைத் தவிர பெண் சிற்பங்கள் எல்லாம் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. இக்கோயிலை யுனெஸ்கோ, உலகப் பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாத்து வருகின்றது.
Sunday, 24 June 2012

கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது விழா - 2012
-------------------------------------------------------------------------------------மேலதிக தகவலுக்கு :

http://tamilliterarygarden.com/

Friday, 8 June 2012


என் அன்பு SLM
---------------------------------------------------------------------------------------------------சிலந்தி அவ்வளவு மெல்லிய நூல் இழைகளால் தனக்கென ஒரு வலையைப் பின்னும். மறைப்புகள் இல்லாத கடினமில்லாத கண்ணாடி நூல் இழைகளால். அது தன்னளவில் மிக வலிமையான அழகான வலையாகவும் இருக்கும். 

SLM அவர்களின் ஆழ்ந்த அன்புவலை என்னைச்சுற்றிய கண்ணாடி இழைகளால் ஆனது. அவ்விழைகளால் எனது குடும்பமே பின்னப்பட்டிருக்கிறது. 

என்னுடைய வாழ்நாளில் மனநிறைவைத்தந்த அரிய தோழமைகளில் SLM அவர்களின் அன்பிற்கும் நட்பிற்கும் தனியொரு இடமும் மரியாதையும் உள்ளது. 

வாழ்வின் பண்புகளைப் புரிந்து கொள்வதன் வழியாக SLM மையும், SLM மைப் புரிந்துகொள்வதன் வழியாக வாழ்வின் பண்பாடுகளையும் புரிந்துகொண்டவள் நான். 

எனக்கு முன்பும் பின்னும் ஒரு பிசாசென தன் இரு தலைகளையும் விரித்து வாய்பிளந்து நிற்கிறது காலம். எனக்கு முன்னாலுள்ள பிசாசின் வாய்க்குள் விழுந்துவிட்டால், எனக்குத்தெரியும் அதன்பிறகு என்னுடைய கவிதைகள், கனவுகள், என்னுடைய மனிதர்கள், நட்பு, காதல் எதுவும் எஞ்சப்போவதில்லை. அதன்பிறகு நான் என்று எதுவுமில்லை. அந்தப்பிசாசின் தலை என்பக்கம் எப்போது திரும்புமோ நானறியேன். ஆனால் இப்பாதையில் ஓட்டமும் நடையுமாக என்னைக்கடந்துபோகும் ஓராயிரம் பேர்களை காண்கின்றேன். மிகச்சிலரை என் பாதையில் தடுத்து நிறுத்திக்கொள்கிறேன். பிறகெப்போதும் அவர்களை மறக்க விரும்பாதவளாக மாறிவிடுகின்றேன். 

வாழ்வு எவ்வளவு சவாலானது ! எத்தனை எளிமையானது ! புதிதாயும் அதிசயம் மிகுந்தும் இருப்பது ? இவற்றைக் காண்பதற்கும் உணர்வதற்கும் இதயத்தில் ஐந்தாவதாக மேலதிக அறையொன்று தேவைப்படுகின்றது. 

கலையுணர்ச்சி அன்பின் வலிமைதான் என்று நம்புகின்றவள் நான். அன்பு என்கின்ற அந்தப் பழைய பண்டம் இன்று யாருக்குத்தான் தேவை ?. அன்பே இயல்பாக, பழக்கமாக, நாகரீகமாக, உளவளமாக கொடுக்கவும் பெறவும் வேண்டிய கொடையாக நான் அறிந்து வைத்திருக்கிறேன். 

SLM ! 

நானும் நீங்களும் அண்மையில் உள்ள ஊர்களிலேயே வசிக்கின்றோம். ஆனால் உங்களை எனக்கு அறிமுகப்படுத்த ஆறேழு வருடங்களுக்குமுன் கனடாவிலிருந்து சேரன் வரவேண்டியிருந்தது. 

சேரனின் செல்போனிலிருந்துதான் முதல்முறையாக ஒரு இரவு என்னுடன் பேசினீர்கள். எனக்கு ஞாகமிருக்கிறது... 

“உன்னுடைய கவிதைகளை ரசிப்பதற்கு வேறொரு மனமும் அறிவும் வேணும்பிள்ள” என நீங்கள் கூறியது. 

என் அன்பு SLM ! இந்த வார்த்தைகளை இன்னும் நான் நம்புகின்றேன். பல சந்திப்புகளும் பயணங்களும் SLM என்ற கதைசொல்லியுடன் கழிந்திருக்கிறன. அவ்விதமான ஓர் இரவில் அஸீமும், நானும் நீங்களும் வீட்டுவாசலில் நிலவை நிறுத்தி வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தோம். ஊரே நிசப்தமான அன்று இரவு நீங்கள் சில பாடல்களைப் பாடிய படி பேசிக் கொண்டிருந்தீர்கள். அந்தப் பழைய பாடல்களை உண்மையில் மிக அருமையாகப் பாடினீர்கள். எனது விருப்பமாக ஸ்ரீனிவாசின் பாடல்களைப் பாடினீர்கள். ஆனால் அன்று தேர்ந்த பாடகனாய் மாறி “எசமான் பெத்த செல்வமே என் சின்ன எசமானே“ பாட்டை நீங்கள் பாடியபோது நிலவை மேகங்கள் மூடி சாம்பல் ஒளியுடன் மேகத்திடல்கள் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தன. பூங்காரமான நிலா வெளிச்சத்தில் அந்தப்பாடல் கண்ணீரென மிதந்தது. 

பனியும் ஒளியும் சொட்டிய மாவிலைகளின் கீழ் இன்றும் சில இரவுகளில் உங்கள் பாடல்கள் கேட்கின்றன. 

உங்களைப்பற்றிய நினைவுகள்..... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதம். ஊர்ப்பெண்களிடமும், ஆண்களிடமும், இளைஞர்களிடமும் இருப்பவை எண்ணிடலங்காதவை. எப்போதும் ரசிகர்களும், நண்பர்களும் தேன் கூட்டைச் சுற்றிய தேனீக்களைப்போல, உங்களைச்சுற்றியவாறு வருகின்றனர். சிரிப்பொலியும் லயித்துக்கிடக்கும் உங்கள் பேச்சும் பாரபட்சமின்றி இம்மண்ணில தொடர்கின்றது. 

மக்கத்துச்சால்வை ஹனீபா என்னும் புகழ்பெற்ற பெயரோ 

சிறுகதை எழுத்தாளர் 

சமூக அரசியல் விமர்சகர் என்ற முகமோ 

ஆற்றல் மிகுந்த மேடைப்பேச்சாளர் 

அற்புதமான கதைசொல்லி என்கின்ற படிமங்களோ அல்ல என் கண்களுக்குள் தோன்றுவது. 

விடிந்தும் விடியாத ஓர் அதிகாலையில் தேனும், பழங்களும் நிறைந்த உவப்பும் ருசியுமான உணவுவகைகளின் வாசனைகளோடு இரண்டு கைகளிலும் இரு பைகளுடன் என் வாசலில் கேட்கின்ற மிடுக்கான குரல். எனது மகன் உம்மாப்பா என அழைத்தபடி ஓடிவரும் ஆதரவும் பாசமும் அக்கறையும் நிறைந்த உருவம், 

SLM என்று நான் அழைக்கும் கனிவான உருவம்தான். 

சந்தேகமில்லாமல் அது என் அன்புத் தந்தையின் உருவம்தான்.


- அனார்


Monday, 14 May 2012

மழை நாள்
------------------------------------------------------------------------------------------------------------

மிகுந்த வரட்சியான என்னுடைய ஊரின் இந்தநாட்களில் மழைநாள் வருமென எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் வீட்டுத் தென்னை, மா, பலா, நெல்லி, மாதுளை மரங்களும்கூட மழை வரவேண்டுமென்றுதான் வேண்டிக் கொண்டு நின்றன. எப்போதும் எதிர்பார்க்கும் வேளைகளில் மழை வருவதில்லை.


உள்ளே பெய்கின்ற மழை
வெளியே தெரிவதில்லை
வெளியே பெய்கின்ற மழைஉள்ளே
நனைப்பதில்லை
அதனாலென்ன ?

என் பேரன்பிற்கும் பெரும் மரியாதைக்குமுரிய பேராசிரியர் – கவிஞர். எம்.ஏ. நுஃமான் சேர் அவர்கள், அவரது அன்புத் துணைவியாருடன் முதன் முறையாக என் வீட்டுக்கு வந்தபோது மிகப்புதிய மழைத்தூவலில் என் உயிர் குளிர்ந்தது.
கடந்த ஐந்தாறு வருடங்களாக நுஃமான் சேர் அவர்களின் நட்புறவும் தோழமையும் என்னைத் தொடர்ந்து வருகிறது. அந்த அன்பின் ஈரம் விடாது பெய்யும் மழையென என் ஞாபகங்களில் நிலைத்திருக்கும்.


- அனார்

Wednesday, 2 May 2012

எழுத்தாளர் அ. யேசுராசா
-----------------------------------------------------------------------------------------------------------

என்னுடைய வாழ்நாளில் நான் சந்திக்கவிரும்பிய மிகச் சில ஆளுமைகள் இன்று இவ்வுலகில் இல்லை. இந்த இழப்பினால் எனக்குள் நேர்கின்ற வெற்றிடம் அளப்பெரியது. 

சிலரைச் சந்தித்த பிறகு ஏன் சந்தித்தோம் என்று இருக்கும்... இன்னும் சிலரை மீண்டும் பலமுறை சந்திக்க மனம் விரும்பும்... அவ்விதம் திரும்பவும் நான் சந்திக்கவிரும்பும் ஒரு ஆளுமையை அண்மையில் சந்தித்தேன். திரு. அ. யேசுராசா அவர்களை சந்திக்கக் கிடைத்ததையிட்டு மிகுந்த பெருமிதமும் உவகையும் எனக்குள் ஏற்பட்டது. அவருடன் உரையாடக்கிடைத்த பகல்ப்பொழுது தன்னிகரற்றது. 

அவருடைய “பதிவுகள்” நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய கட்டுரையிலிருந்து சில பகுதி...

வாழ்வில் உள்ளது கலை. இலக்கியத்தில் மட்டும் ஏன் வெளிப்பாடடைய முடியாது ? குறித்த தனி மனித உணர்வுகளுக்கு உட்படுவதையோ, வெளிப்படுத்துவதனையோ ஒப்புக்கொள்ள வெட்கமுறுபவர்களுக்கு, ரஷ்யத் திரைப்பட இயக்குனரும் கவிஞருமான அலெக்சாந்தர் தொவ்ஷெங்கோ சோவியத் எழுத்தாளர்களின் 2வது கோங்கிரசில் பேசிய சில வாசகங்களை சமர்ப்பிக்கலாம்.

- உங்களைப்போலவே நானும் மக்களை நேசிக்கிறேன், மக்களுக்கு பணியாற்றுவதில்த்தான் எனது சொந்த வாழ்க்கைக்கு அர்த்தமிருக்கிறது என்பதை உணர்கிறேன். நான் அனைத்து தேசங்களுக்கிடையே சகோதரத்துவத்தின் வெற்றியை நம்புகிறேன், கம்யூனிசத்தை நம்புகிறேன். ஆனால் செவ்வாய்க் கிரகத்தை வெற்றிகொள்ளும் முதற் பயணத்தில் எனது அன்புக்குரிய சகோதரனோ, மகனோ பிரபஞ்ச வெளியில் எங்கோ ஓரிடத்தில் மரணத்தைத் தழுவ நேர்ந்தால், அந்த இழப்பின் கஷ்டங்களை வெற்றி கொண்டுவிட்டேன் என்று சொல்லமாட்டேன். என் துயரத்தை நான் அவர்களுக்குச் சொல்லுவேன். அந்த பிரபஞ்சவெளிகளை நான் சபிப்பேன். இரவு முழுவதும் என் தோட்டத்தில் அமர்ந்து, பூத்துக் குலுங்கும் செர்ரியின்மேல் உள்ள வானம்பாடிகள் அஞ்சிவிடாமலிருப்பதற்காக, அதன் கீழ் முத்தமிட்டுக் கொள்கிற காதலருகளுக்கு இடையூறு இல்லாமலிருப்பதற்காக, எனது விம்மல்களை தொப்பியினால் மறைத்துக் கொண்டு நான் அழுது கொண்டிருப்பேன்.


-  அனார்

Thursday, 26 April 2012

20.04. 2012 இல் மறைந்த கவிஞர். சண்முகம் சிவலிங்கம்(சசி) அவர்களின் நினைவாக, கனேடிய வானொலியில் (ctr24.com ) ஒலிபரப்பாகிய நிகழ்ச்சியில் பேராசிரியர். எம்.ஏ. நுஃமான், கவிஞர். சோலைக்கிளி, கவிஞர். சேரன், அனார் பங்குகொண்டு நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். 
--------------------------------------------------------------------------


அனாரின் ‘எனக்குக் கவிதை முகம்’ புத்தகம் குறித்து...

- இரவீந்திர பாரதி (இந்தியா)

-----------------------------------------------------------------------------------------------------------

இந்தப் பத்தாண்டுகளில் தமிழ்க்கவிதை புதிய ஒளியையும், வெளியையும் அடைந்திருக்கிறது. இதில் பெண் கவிஞர்களின் பங்களிப்பு கணிசமானது. ஒரு வகையில் இவர்களின் அதிரடி நுழைவால் நவீன தமிழ் இலக்கியத்தின் நோக்கிலும், போக்கிலும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது எனலாம். உடல் மொழி, பெண் அரசியல் என்று தங்களுக்கான மொழியையும் அரசியலையும் கட்டமைத்த போது, கலக்காரர்கள் கவிழ்த்துப் போடு பவர்கள் என்பது போன்ற கணைகள் இவர்கள் மீது வீசப்பட்டன. அவை இப்பொழுது முனை மழுங்கிய நிலையில், இவர்கள் அடுத்தக் கட்ட நகர்தலுக்கான உந்துதலில் முற்படுவதற்காக இருக்கிறார்கள். 

நுட்பமும், செறிவும் கொண்டு சொல்லுக்குள் புதிய சாரத்தை ஏற்றி வருவதை அவதானிக்க முடிகிறது. தமிழ்க் கவிதை உலகக் கவிதையாகவும் பரிமாணம் கொண்டிருப் பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் அவசியமாகும். உலக அளவில் கவிதையின் இருப்பை அவதானிக்கையில் ஈழத்தின் பங்களிப்பை யாராலும் ஒதுக்கிவிட முடியாது. ஈழக்கவிஞர்கள், மண்சார்ந்த கவிஞர்களாகவும், புலம் பெயர்ந்த கவிஞர் களாகவும் இருப்பதால் இருவகை அனுபவம் அவர்களின் படைப்புகளுக்குள் சேர்மானமாகின்றன. 

ஈழக்கவிஞர்களிலும், பெண் கவிஞர்களின் வருகையால் இலக்கியவானில் ஒளி கூடி வருகிறது. ஈழத்துப் பெண் கவிஞர்கள் இலக்கிய உலகை வெகுவாக அசைவுக்குள்ளாக்கி யிருப்பதையும் பார்க்கமுடிகிறது. 

போர்ச்சூழலும், போருக்குப் பின்னான இன்றைய சூழலும் துன்பங்களாலும், துயரங்களாலும் அமைந்தவை. தமிழகத்துத் தமிழர்களுக்கு ஏற்படாத கொடிய அனுபவங்கள் ஈழத்தமிழர் களுடையவை. போரிலும் கொடுமை, போருக்குப் பின்னரும் கொடுமை என்றால் அவர்தம் வாழ்வு எத்தகையதாக இருக்கும்: இருந்திருக்கும்? இந்த அனுபவங்களின் சாரம் அவர்களது படைப்புகளில் கசியாமல் இருக்க இயலுமோ? இத்தகைய அனுபவங்களிலேயே தமிழ் பேசும் முஸ்லீம்களின் துயரம் என்பது சொல்லுந்தர மன்று. தமிழ்பேசும் மக்கள் என்பதால் பேரின வாதக்கொடுமை ஒருபுறம் முஸ்லீம் என்பதால் சைவ இந்துத் தமிழர்களின் ஒதுக்கல் ஒருபுறம் என திரும்பும் பக்கமெல்லாம் துயரத்தின் கொடிய தாக்குதலுக்குள்ளான சூழலிலிருந்து முகிழ்த்த கவிதைகள் அனாருடையவை. 

அனாரின் கவி புதிது; அதன் முகம் புதிது. புதிய சொல்லாட்சி, புதிய மொழியாளுமை, ஆண்டாளின் கவிசொல்லும் பாணிகூட கைவருகிறது. களமும், மொழியப்படும் முறையும் தனித்துவமானது. நவீனத்தின் நவீனத்துவம் எனத்தகும் கவிதைகள் இந்தத் தொகுப்பு முழுக்க அணி வகுக்கின்றன. தானே கவிதையாகவும் சிறகடிக்க முடிகிறது அனாருக்கு. 

“வண்ணத்துப் பூச்சியின் பிரம்மாண்டமான
கனாக் காலக் கவிதை நானென்பதில்
உனக்குச் சந்தேகமிருக்கிறதா இனியும்?” 

இரத்தம் சிந்துதல் ஈழத்தமிழ் வாழ்வுக்குப் புதிதல்ல. ஒரு குழந்தையின் கைவிரல் தற்செயலாக அறுத்துக்கொண்டு அலறி வருகையில், விரல் சிந்தும் ரத்தத்துளிகள் இந்தக் காலத்தின் அளவிடமுடியாத பேரினவாத கொலைக்களத்தில் வன்கல்வியால் சிந்தும் ரத்தமாகவும் அநியாயமாகப் போரில் கொல்லப்படும் குழந்தையின் கொட்டும் இரத்தமாகவும் படுகிறது அனாருக்கு. 

“வன் கலவி புரியப்பட்ட பெண்ணின் ரத்தமாயும்
செத்தக் கொட்டுப் பூச்சியின் அருவருப்பூட்டும் ரத்தமாயும்
கொல்லப்பட்ட குழந்தையின் உடலி லிருந்து கொட்டுகின்றது இரத்தம்.” 

மிக நிசப்தமாக, குழந்தைத்தனமாக கவிதைகளில் நீரோட்டமாயும் மறை பொருளாயும் சமூக அரசியல் பார்வை செயல்படுவதையும் பார்க்கலாம். அரசி என்ற கவிதையில் 

“ஆணையிடுகிறேன் சூரியனுக்கு ஓர் இனத்தையே விழுங்கிக் கொண்டிருக்கும்
சமையலறையின் பிளந்தவாயை பொசுக்கி விடுமாறு” 

துன்பமும் துயரமும் மூடுபனிபோல் சூழ்ந்திருந்தாலும் வாழ்வின் மீதும் இயற்கையின் மீதும் கொள்ளும் ஆவல் கவிதையில் முகங்காட்டி நிற்பதை காணமுடிகிறது. 

“பாவனைகளோடு கொஞ்சிய முத்தம்
கண்களாகவும்
பெயர்சொல்லி அழைத்த கணங்கள்
நிறங்களாகவும் கொண்டொரு வண்ணத்துப்பூச்சி
நினைவெல்லாம்பறந்து திரிவதை
எப்படிச் சொல்லுவது
எனக்குச் சொல்லித்தா.” 

இயற்கையை எப்படி கவிதைப்படுத்துகிறார் பாருங்கள்... 

“நீண்டு உயர்ந்த மரங்களுக்கிடையில் 
விழுந்து முகம் பார்த்தேங்குகிற 
அந்திவெயில் துண்டங்களில்
என் தனிமையின் பெரும்பாரம்
கசிகின்றது.” 

இயற்கை மனித உயிருடன், வாழ்வுடன் எப்படி பிரிக்க முடியாமல் ஒன்றிவிடுகிறது என்பதைக் கவிதைக்கண் கொண்டுதான் பார்க்க முடியும் போல. இப்படி ஒரே சமயத்தில் துயரமும் வலியும் கூடி, நிழலும் வெயிலுமாக, இதம் பதமாக தமிழ்க் கவிதைக்கு மெருகேற்றிக் கொண்டிருக்கின்றன அனாரின் கவி வரிகள். 

அனாரின் எனக்குக் கவிதை முகம் (காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு) 


( கீற்று - 24.04.2012)

கனேடிய தமிழ் வானொலியில் (www.ctr24.com
ஒலிபரப்பாகிய நேர்காணல்.
--------------------------------------------------------------------------

Saturday, 7 April 2012

நாட்டுப்புறப் பாடகி


ஒரு வார்த்தைக்குள் ஒளித்துக்கொண்டேன்
நமது அந்தரங்கத்தை

கனிக்குள் புழுவாகி
அச்சொல் இனிப்பில் ஊறி நெளிகிறது

கனிகளைத் தராத ...... மௌன மரமாகி
நீ மரத்துப் போகத் தொடங்கிய நாளில்
அந்த வார்த்தை
பெரும் மலையாக மாறிவிட்டிருந்தது
இறுகவும் பாழ்படவும் தொடங்கியது

தனியே நாட்டுப்புறப் பாடலைப் பாடிக்கொண்டே
மலையைச் சுற்றத் தொடங்கினேன்

ஆன்மாவின் செவிகளுக்கு கேட்கின்ற
உன் மிருதுவான இசைக்கருவி
மௌனத்தின் உறுப்பாகிவிட்டதா

வனப்பறவைகளது தானியங்களால்
பசி தணிக்கிறேன்
எதிர்ப்படும் அபாய விலங்குகளின் கண்களில்
உன் இசையிலிருந்து மந்திரித்த
பொடிகளைத் தூவுகிறேன்

“பாலாய் கொதிக்கிறேனே ....
பச்சைபோல் வாடுறேனே ....
நெய்யாய் உருகுறேனே ....
உன் நினைவு வந்த நேரமெல்லாம் ....“

என் நாட்டுப்புறப் பாடல்
மலையில் எதிரொலித்து வீழ்கிறது
12 பெப்ரவரி 2012

Friday, 3 February 2012

சென்னைப் புத்தகக் கண்காட்சி நூல் வெளியீடுகள் - 2012
அனார், ஞானி, சேரன், அருந்ததி ராய், ரோகினிமணி,ஸ்டாலின் ராஜாங்கம்,மைதிலி

                                
  கோணங்கியுடன் அனார்

                           
அழகியபெரியவன், அனார், தமயந்தி, குட்டிரேவதி