Thursday 8 August 2013



உமாவரதராஜனின் கதைகளுக்குள்ளே நிகழும் உள்மன யாத்திரை

--------------------------------------------------------------------------------------------------

- அனார்

‘புறப்படும் அவசரம் உனக்கு 
என்னையும் 
பறக்கச் சொல்கிறாயா பெண்ணே ?
ஒரு பாடல் முடிந்து
மறுபாடல் தொடங்கும்
ஒலி நாடாவின் இடைவெளியில்
என் குரல் உறைந்திருப்பது
உனக்குத் தெரியாதா ?
பின் ஏன் என்னைப் பாடச் சொல்கிறாய்?’



உமாவரதராஜன் அவர்களின் இந்தக் கவிதையை முதன் முதலில் மூன்றாவது மனிதன் இதழில் நான் படிக்க நேர்ந்ததில் இருந்து, காலப்போக்கில் அவரது சிறுகதைகளுக்கு வாசகியாகினேன். கதைகள் என்பவை என்ன ? அது நமக்குள் இருந்து உருவாகின்ற ஒன்றா ? அல்லது பிறரிடம் நாம் காண்கின்றவைகளா ? இல்லையென்றால், நம்மிடமும் இல்லாமல் பிறரிடமும் இல்லாமல் ஒரு அரூபப் பிசாசுபோல கதை ஊரெல்லாம் அலைகிறதா ? கதை என்பது ஒரு வகை திண்மமா ? திரவமா ? அதனால் தானா அவை நம்மை கரையச்செய்கின்றன ? அதனால் தானா ? நமக்குள் பாரமாய் கனக்கின்றன ? இந்த வகையான கேள்விகளுக்கெல்லாம் அப்பால் கதைகள் நம் எல்லோருக்குமான வாழ்க்கையாக இருக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைதான். வாழ்நாளில் நாமே பார்த்து படிப்பதற்குப் பயப்படுகின்ற கதைகள்தான் நம் உள்ளே இருக்கின்றன. இவைகள்தான் எழுத்தாளனிடம் கலைப்படைப்புகளாக, சிறுகதைகளாக மாறுகின்றன. அனேகமாக சமூகத்தை கேள்வி கேட்கின்ற, பிறர் இன்னல்களைப் படைப்புகளாக்கி, படிப்பவர் மனதை உலுக்குகின்ற அல்லாதுவிடின் கதை எழுதுகிறேன் என்று புறப்பட்டு மற்றவர்களின் உயிரை வாங்குகின்ற, இப்படி பல்வேறு வகைப்பட்ட சிறுகதைகளை எழுதுகின்றவர்கள் நம் மத்தியில் இருக்கின்றனர்.

இவற்றிலிருந்தெல்லாம் உமாவரதராஜன் அவர்களின் சிறுகதை உலகம் தனித்துவமானது, வேறுபட்டிருப்பது. அவர் பின்பற்றுகின்ற கலைவடிவம், மொழி இயல்பு, காட்சிப்படுத்தல், சொல்முறை அனைத்தும் ஆன்மாவின் கண்ணாடி முன் நம்மைக் கொண்டு நிறுத்துபவை. அத்தனை அசாதாரணமான படைப்பு மனம், படைப்புவெளி அவருக்கு வாய்த்திருக்கிறது.

அவர் கேள்வி கேட்பதெல்லாம், அவரிடம் தான். அவருடைய உள்ளத்தின் உலுக்கலில் இருந்துதான் கதைகள் இரத்தமும் சதையுமாக வந்து விழுகின்றன. அவர் நிகழ்த்திக் கொண்டுவரும் உள்மன யாத்திரையில், அந்த நீண்ட தனித்த பயணத்தில் அவர், தன்னுள்ளே, தனக்காக அழுபவராகவும், தன்னை நோக்கியே சிரிப்பவராகவும், அவரது வாழ்க்கைப் போக்கில் பின் நகர்ந்து சென்று வேடிக்கை பார்ப்பவராகவும், கேலி செய்கின்றவராகவும் இருக்கிறார். இத்தகைய உணர்வு பூர்வமான மனம் கொண்டவர்கள்தான் சாதாரண கதையொன்றை உன்னதமிக்க கலைவெளிப்பாடாக ஆக்கத் தகுதி வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.

இவ்வாறான மனப்பதிவிலிருந்துதான் உமாவரதராஜன் அவர்களின் சிறுகதைகளை புரிந்து கொள்ளவும் தொடங்கினேன். என்னைப்பொறுத்தவரை, என்னை ஈர்க்கின்ற எந்தவொரு கலைபடைப்பும் கவிதை அனுபவத்தை எனக்குத் தருவதாகவே அமைந்துவிடுவதுண்டு. என்னுடைய ரசனையானது சுற்றிச் சுற்றி எங்கிருந்தும், கவிதையின் சாற்றினை உறுஞ்சும் தேன்பூச்சி போன்றதுதான். அனுபவமாகட்டும், சிறுகதைகளாகட்டும், இசையாகட்டும், ஓவியமாகட்டும் ஏன் ஒரு புகைப்படமோ, திரைப்படமோ அல்லது நடனமோ, நட்போ, கவிதைத் தன்மை கொண்டிராத, எவையும், எவரும், என் ஆன்மாவுடன் தொடர்ந்துவர முடிவதில்லை. தவிர, அத்தகையவைகள் எவையும் என்னுள்ளே படைப்பூக்கத்தையோ, மன அதிர்வுகளையோ ஏற்படுத்துவதுமில்லை.

உமாவரதராஜன் அவர்களது சிறுகதைத்தொகுப்பை... மீண்டும் படிக்கையில் அவருடைய பல கதைகள் அற்புதமான கவிதை அனுபவத்தை எனக்கு ஏற்படுத்தின. அதில் “கள்ளிச்சொட்டு“ என்னும் அவரது கதையிலிருந்து ஒரு சிறு பகுதி:

“ கோயிலின் பின்புறம் தீக்குழி. அடுக்கபட்ட விறகுகளை விழுங்கியபடி நெருப்பு மோகினி சுழன்று சுழன்று ஆட்டம் போடுகின்றது. அதன் தாபமும் தகிப்பும் எங்கும் பரவுகின்றது. தீக்குழியைச் சுற்றி சில மனிதர்கள் நிற்கின்றனர். நெருப்பில் உதித்தவர் போன்றும், நெருப்புடன் வாழ்பவராயும் அவர்கள் தோற்றம் காட்டினர். விறகுகளை விழுங்கிச் செந்தளலாகி ஒளிர்கிறது நெருப்பு. மட்டையினால் அடித்தடித்து எரி தளலின் உயரத்தை மண்ணோக்கிச் சரிப்பார்கள் அந்த மனிதர்கள். கால் நடைகளை விழுங்கி, அசைய இயலாமல் படுத்துக்கிடக்கும் மலைப்பாம்பை நினைவுபடுத்தும் அந்தியிலே இந்தத் தீக்குழி. அந்தியில் ஊர் எல்லைக் கடலில் நீராடி மஞ்சள் பூசி சங்கு, உடுக்கை, பறை மேளங்களுடன் வருவார்கள். தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், பாஞ்சாலி கொலுவினர். அவர்கள் நெருப்பில் நடப்பார்கள். மறுகரை அடைவார்கள்.

ஜனநெருசலில் தள்ளுண்டு நான் நடந்தேன். மரங்களின் கண்ணீர்த் துளிகளெனச் சருகுகள் பரவிக்கிடக்கின்றன. சருகுகள் நொறுங்க நொறுங்க மென்மேலும் முன்னேறுகின்றன என் பாதங்கள். செக்குமாட்டுத் தனத்துடன் கோயிலைச் சுற்றிச் சுற்றி இலக்கற்ற ஒரு பயணம்.”

இந்த சிறுகதைத் தொகுப்பினுள்ளே மாய வசீகரமாக திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும் கள்ளிச்சொட்டு கதையின் ஆரம்பப் பகுதி தான் மேலே குறிப்பிட்டது. கதையின் இறுதிப்பகுதியில் கனவுத் தன்மையான ஒரு காட்சி விபரிக்கப்படுகிறது,

“பலநூறு வருடங்களுக்கு முன்னால் சாத்தப்பட்ட ஜன்னலொன்று பெருமுயற்சியுடன் திறபடுவதைப்போன்ற சத்தம். நான் அண்ணார்ந்து பார்த்தேன். இருட்குகையில் ஒளிரும் மெழுகுவர்த்தி ஏந்தித் தோன்றுகிறாள் ஒருத்தி. முகலாயர் காலத்து மூடுபல்லக்கின் திரைவிலகித் தெரியும் ஒரு பெண்ணின் சோகம் கவிந்த முகம். முதுமையின் படிகளில் அவள் கால் வைத்திருந்தாள். வீட்டுப்படிகளில் அவள் ஏறத் தொடங்கினாள். மேகங்களை கையால் பிடிக்கப்போவதுபோல் அவள் போய்க் கொண்டே இருந்தாள். நான் பின்தொடர்ந்து கொண்டே இருந்தேன். முடிவிடம் தென்படாமல் படிகள், படிகள், படிகள்.”

இப்படித்தான் உமாவரதராஜன் அவர்கள் அவரைச் சுற்றுகின்ற கதைகளை நாம் சுற்றும்படி எழுதுகின்றார். ஆழ்ந்த அர்த்தச் செறிவிற்காவும், ஆர்ப்பாட்டமில்லாத, தலைமுடியை பியித்துக்கொள்ள வைக்காத அழகிய மொழி ஆற்றலுக்காகவும் என்னுள் பதிந்துபோன கதைகள் இவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் வெவ்வேறு மனநிலைகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் பயணிக்கின்றன. பயணம் என்பதே கதைக்குள் பயணிக்கின்ற ஒரு அழகிய படிமமாக தொடர்ந்து வருகிறது. அவருடைய சைக்கிள் பயணம் இடம்பெறுகின்ற கதைகளில் அந்த சைக்கிள் உணர்வும் உயிருமுள்ள அபூர்வமான தோழனாக மாறிவிடுகின்றது. அதேபோல மிகவும் கனவு பூர்வமான மழை கதைகளில் பெய்கிறன. ஒரு திரை வடிவத்தின் காட்சி மொழியாக பல தருணங்கள் கதைகளில் இடம்பெறுகின்றன. ஜெனி என்ற கதையில் இவ்விதமான காட்சிகள் நகர்வதை வாசிப்பனுபவத்தில் காணலாம்.

பள்ளமொன்றை நோக்கி நீளும் வீதியும், பசும் புல்வெளியும், மலைத்தொடரும், காலைப்பொழுதும், ஈரம் சொட்டி நிற்கும் கொய்யா மரமுமாக ஜெனி ஒரு மறக்க முடியாத கதையாக மாறிப்போகிறது எங்கள் மனதில். கைகளில் புகைந்தபடி இருக்கும் மந்திரக்கோல்போன்ற சிகரெட்டுடன் உரையாடுகின்ற ஜெனியின் அம்மா, அக்கதையில் வரும் ரயில் பற்றிய நினைவுகள், சூரியனின் தலை கடலினுள் இருந்து மெல்ல மெல்ல மேலெழுவதைத் தரிசிக்க கரையில் அதிகாலை வந்து குந்திவிட்ட பெண்போல தோற்றமளிக்கும் ஜெனி, அனைத்தும் கூடி, அக்கதையானது மெல்லிய துயர இசையாக ஒலிப்பதை உணரமுடிகின்றது.

அடுத்ததாக உமாவரதராஜன் அவர்களது கதைகளில் பல குணாதிசயங்கள் கொண்ட பெண்கள் வருகின்றனர். எனக்கு விருப்பமான பெண்பாத்திரமாய் அவருடைய அம்மா வருகின்ற இடங்கள் அல்லது அந்தப் பாத்திரங்களில் வருகின்ற அம்மாவைப் பற்றிய எண்ணங்கள், பாசாங்கற்ற தெளிவான குறிப்புகளாகும். அவை மகனின் பாசமாக மட்டும் இருப்பதில்லை.

தொகுப்பிலுள்ள பிற கதைகளை வெவ்வேறு பார்வைகளோடும் கருத்துக்களோடும் மற்றவர்கள் அணுகமுடியும். 1974இல் எழுதப்பட்ட முதல் கதையில் தொடங்கி முக்கியமான காலகட்டங்களான 80கள் மற்றும் 90களிலும் பல முக்கிய கதைகளை எமக்களித்திருக்கிறார். சவால்கள் மிகுந்த அக்கால கட்டங்களைத் தாண்டி இன்றைக்கும் இக்கதைகள் தன்நிகரற்ற தன்மைகளோடு ஒளிர்கின்றன.

இத்தொகுப்பில் காலத்தால் அழிக்கமுடியாத ஒரு கதையாக ‘அரசனின் வருகை’ சிறுகதை இடம்பெற்றிருக்கிறது. கணக்கற்ற துயரின் முகமாக, ஓலமாக, மனசாட்சியாக இருக்கும் அக்கதையில் இன்றும் பொருந்திப்போகும் ஒரு பகுதி

“பகலிலும் இரவிலும் கனவுகளில் அலைந்தான். கண்கள் தோண்டப்பட்ட நகங்கள் பிடுங்கப்பட்ட மனிதர்கள் ‘எங்களுக்கோர் நீதி சொல்’ என்று தள்ளாடித் தள்ளாடி அங்கே வந்தனர். அரைகுறையாக எரிந்த தெருச்சடலங்கள் வளைந்தெழுந்து ‘நாங்கள் என்ன குற்றம் செய்தோம்’ என முனகின. நீர் அள்ள உள்ளே இறங்கிய வாளியை கிணற்றுக்குள் கிடந்த பிணங்களிலிருந்து கையொன்று மெல்லப் பற்றிக்கொண்டது. கழுத்தை இழந்த கோழியொன்று துடிதுடித்து உயிரைத்தேடி அங்குமிங்கும் அலைந்து மண்ணில் சாயும். குட்டித்தாச்சி ஆட்டின் வயிறுமீது குதிரை வண்டிச் சக்கரங்கள் ஏறிச்செல்லும். மயிர்உதிர்த்த தெருநாய்களின் வாய்கள் மனிதர்களின் கையையோ காலையோ கவ்வி இருக்கும்”

முதிர்ச்சி மிகுந்த சிந்தனை வெளிப்பாடு அன்றே அவருக்கு இயல்பாக வாய்த்திருக்கிறது. இன்றைய புதியவர்களும் நாளைய பரம்பரையினரும் மதிக்கவும் ரசிக்கவும் தகுதிவாய்ந்த கலைவெளிப்பாடு என்றால் மிகையாகாது.

பல திசைகளில் பறக்கின்ற ஒரு ராட்சதப் பறவையாகவே உமாவரதராஜனின் படைப்புமனம் வாழ்வினது திசைகளை, இயற்கையின் வெளியை வியாபித்து சிறகு விரித்திருக்கிறது. இங்கு நான் குறிப்பிடுவது மிகச் சிலவற்றையே ஆகும். வாழ்க்கை மீதான நம்பிக்கை, மனிதர்கள் மீதான நம்பிக்கை, நம்பிக்கை மீதான தோல்விகள், இவற்றின் மீதான அளவுகோல்கள் என்பனவற்றில் கேள்விகளை எழுப்புகின்றன அவருடைய சிறுகதைகள்.

ஆனால் நாம் அனைவரும் மனிதன் மீதான நம்பிக்கை இன்மையை மறுபடி மறுபடி எழுதிக் கொண்டிருந்தாலும் அதே மனிதர்கள் மீதே நம்பிக்கை வைக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம் என்பதை வலியுறுத்தும் கதைகள் அவருடைய தொகுப்பில் இருக்கின்றன.

கதைகளின் உண்மையை, உண்மையின் கதைகளை அவருக்கான இன்றியமையாத அழகிய மொழியினூடாக எழுதியிருக்கின்றார். இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதைகளுமே ஒவ்வொரு ஜன்னல். ஜன்னலைத் திறந்து பார்த்தால் அங்கு நம் கண்களுக்கு பழைமையின் கறுப்பு வெள்ளை நிறமோ, கனவின் நிழல் குவியல்களோ, பருவத்தின் புன்சிரிப்போ, இமைக் கந்துகளில் விழக்காத்திருக்கும் கண்ணீரோ தெரியக்கூடும் அல்லது கீறலில் இருந்து பெருகும் குருதியோ இன்னும் வேறு ஏதேனும் ஒன்றோ....

--------------------------------------------------------------------------------------------------

காலச்சுவடு - ஆகஸ்ட் 2013

No comments: