Tuesday 1 March 2011

அனாரின் 'எனக்குக் கவிதை முகம்பிரதிக்குப் பின்னரான அரசியல்

- சாரா (இலங்கை)
-------------------------------------------------------------------------------------------------------------

01.

கவிதை நமக்கு சாதாரண நிகழ்வாகிவிட்டது. ஆனால் எப்போதும் அது அசாதாரணங்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது|| அனாரின் கவிதைகளை வாசிக்கும்போது இப்படியாக ஏதாவதொரு மேற்கோளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டு விடுகிறது. சம காலத்தில் இலங்கையின் முக்கிய பெண் கவிஞர்களுள் ஒருவராக அனார் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பது இம்மேற்கோளுக்கான கூடுதல் தகுதி என்று கருதிக் கொள்ளலாம்.

நமது வாழ்வியல் மாறிக்கொண்டு வருவதைப்போல கவிதைகளும் மாறிக்கொண்டு வருகின்றன. ஆனால் வாழ்வியலின் வேகத்திற்கு முன்னே இன்னும் பல மடங்கு குதிரை வேகம் கொண்டு கவிதைகள் ஓடிக் கொண்டிருக் கின்றன. கவிதைகளுக்காக வாழ்வதென்றால் நமக்கு விதிக்கப்பட்ட வாழ்வைத் தாண்டி மூச்சுப்பிடித்துக்கொண்டு இன்னும் பல வருடங்கள் வாழ்ந்தாக வேண்டும். அனாரி னுடைய கவிதைகள் ஷஎனக்கு கவிதை முகம்| முதலில் சொல்லும் சேதி இதுதான்.

இன்றைய வாழ்வு போர், அரசியல், ஆக்கிரமிப்பு, எதேச்சதிகாரம் போன்றவைகளினால் சூழப்பட்டிருக்கிறது. எனினும் இவற்றின் விடுதலையே கவிதைக்குரல் என்றவாக ஒலித்த காலம் சற்று அடங்கிப்போயிருக்கிறது. உரத்து ஒலித்த காலத்தில் மரணத்துள் வாழ்வோம் தொகுதி முதல் மீஸான் கட்டைகளில் மீள எழும்பும் பாடல் வரையான கவிதைக் குரல்கள் ஏராளம். இப்போது போரைத் தின்று வளரும் கவிதைகளுக்குப் பெரும் பஞ்சம் நிலவுகிறது. போர் பற்றிய, போரிடும் நிறுவனங்கள் பற்றிய பல்வேறு அபிப்பிராயங்கள் இக்கவிதைக் குரல்கள் உரத்தொலிக்கச் செய்வதை தடைசெய்திருக்கலாம். அல்லது அப்படி ஒலிக்கச் செய்பவர்களது இருப்பு கேள்விக்குட்படுத்தப் பட்டிருக்கலாம்.

இங்கு, போர்பற்றிப் பாடுகின்ற கவிஞர்களுக்கு அறச்சிக்கலை ஏற்படுத்தி வருகின்றது என அனாரின் கவிதை முகங்கள் முன்னுரையில் சேரன் கூறுகின்றமை முக்கியமானது. இதனூடாக அவர் சொல்ல வருகின்ற அல்லது சொல்ல விரும்பாத சேதி போரைப்பாடுவதினால் எழுகின்ற அறச்சிக்கலா? பாடாததினால் தோன்றுகின்ற அறச்சிக்கலா? என்பதுதான்.

விலைபோகின்ற சரக்காக இருந்தாலும் 'போர்| அனாரின் கவிதைகளுக்குள் இல்லை. ஒரு காலத்தில் பெண் உணர்வையும் தாண்டி போர் பற்றிய வாழ்வியலே இலங்கைப் பெண் கவிஞர்களுக்குள் இருந்தது போல கிழக்கில் சாய்ந்தமருது எனும் முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும் அனாருக்கு போரின் முகங்கள் தொலைவு. சங்கரி, ஊர்வசி, மைத்ரேயி, ஒளவை, ஆழியாள் கலா - இன்னும் பிறரும் போராட்டத்தில் இணைந்து கொண்டு ஒரு தொகைக் கவிதைகளை எழுதிய பெண் கவிஞர்;களையும் தாண்டிய அடுத்த கட்டத்தில் அனாரின் கவிதைகள் முக்கியம் பெறுகின்றன. சிலவேளை 90 காலப்பகுதிகளில் அனார் எழுத வெளிக்கிட்டிருப்பாரானால் அவரும் மேற் குறித்த பெண்கள் வரிசையில் சேர்ந்திருப்பார். சிங்கள பேரினவாதத்திற் கெதிராகவும், அது சார்ந்து தன்னுணர்ச்சியாகவும் எழுந்த பெண்களின் குரல்கள் போன்று கிழக்கில் தாண்டவமாடிய தமிழ் ஒடுக்குமுறைக்கான கவிதைகள் பல அவரிடம் இருந்தி ருக்கும். ஆக அனார் இந்த அறச்சிக் கலில் இருந்து தற்போதைக்கு தப்பித்துக் கொள்கிறார். (கவிஞர்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்கின்றதென்றால் மூதூர் வெளியேற்றம், படுகொலைகள், பள்ளிவாசல் குண்டுவெடிப்புகள், சிங்கள ஆக்கிரமிப்பு போன்றவை பற்றி அனார் கூறாத கருத்துக்க ளுக்கு அவர் தப்பித்துக் கொள்ள முடியாது என்று கொள்வோமாக)

02.

அனாரின் கவிதைகள் மொழியின் வசீகரத்தை தாங்கி நிற்பதைச் சொல்ல வேண்டும். அனாரை மறைத்து விட்டுப் பார்த்தால் அதற்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் பெண் மனம், நான் என்று சொல்வதிலுள்ள மென்மை, துணிவு - நீ என்று சொல்வதில் உள்ள கண்டிப்பு, மாயலோலக் காதல், சுட்டு விரல் நீட்டும் அதிகாரம் என்பனவெல்லாம் இங்கு உரத்தொலிக்கக் காணலாம். நான் பெண் என்கிற கவிதை - அனாரின் பெண்மொழி குறித்த பார்வைக்குச் சான்று. பெண் தன் இருப்பை நிறுவ வேண்டிய அவசியம் அனாரின் கவிதைகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. வெகுவான ஆணாதிக்க சூழலில் இப்படியாக பெண் தன்னை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருப்பது தற்போதைய தமிழகக் கவிதை மரபின் தொடர்ச்சியாகும். தாய்வழிச் சமூக மரபையும், ஆதிபராசக்தியையும், கண்ணகியையும் இணைத்து பாடும் தன்மைக்குச் சமமான இது பெண் படைப்பின் ரகசியம் குறித்த மதங்களின் பார்வைக்கு எதிரானது. ஆனால் பெண்ணுக்குள் இருக்கும் தாய்மை, பொறுமை, இரக்க குணம் என்பவற்றிற்கு மதிப்பளிக்கப் படாத போது அவள் வெளிப்பட்டு நிற்பது,

ஒரு காட்டாறு
ஒரு பேரருவி
ஓர் ஆழக் கடல்
ஓர் அடை மழை
நீர் நான்
கரும் பாறை மலை
பசும் வயல் வெளி
ஒரு விதை
ஒரு காடு
நிலம் நான்
உடல் காலம்
உள்ளம் காற்று
கண்கள் நெருப்பு
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான் பெண்

எல்லைகளற்ற உலகத்தை சிருஷ்டிக்க விரும்பும் கவிமனம் பொதுவானது என்றால், அந்த உலகம் இன்று கேள்விக்குட் படுத்தப்பட்டிருக்கிறது. அடையாள அரசியலின் அடியாகத் தோன்றிய சிறுபான்மைக் கதையாடல் துண்டாடப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்கள் சார்பாக பேச விரும்பியபோது. பொதுமைப்படுத்தப்பட்ட இலக்கிய அடையாளங்கள் தகர்த்தெறியப்பட்டன. விளிம்படையாளமுள்ள சிற்றினங்கள், தலித்கள், பெண்கள் என்றவாறாக சிறு குழுமங்கள் தங்களின் விடுதலைக்காக இலக்கியங்களோடு மேற்கிளம்பினர்;. தமிழகச் சூழல் இக்கருத்தாக்கங்களை முதலில் சிறுவாரியாக ஒதுக்கியும் பின்னர் பெருவாரியாக ஏற்றுக் கொள்ளவும் செய்தது. இச்சூழலில் பேசப்பட்ட பெண்ணியம் மிக உக்கிரமான எதிர்ப்புக் கோஷங்களோடு வெளிவந்தது. பெண் அடையாளம், பெண் மொழி, பெண் உடல் குறித்த கருத்துக்கள் தழிலுலகம் காணாத சர்ச்சைகளாகின. மாலதி மைத்ரி, சுகிர்தராணி, குட்டிரேவதி போன்றோரின் கவிதைகள் அச்சர்ச்சைகளுக்குள் விரும்பிப் புகுந்தன. இதே நிலை இலங்கையில் உள்ள பெண் கவிஞர்கள் மத்தியிலும் புகுந்துவிட்டதாக, அவர்கள் தமிழக பெண்களை பாவனை செய்வதாக சுட்டுவிரல் நீட்டப்பட்டது. இப்படி நீட்டப்பட்டவர்களில் அனார் முக்கிய மானவர்.

03.

அடிப்படையில் இஸ்லாமியப் பெண்ணான இவரின் கவிதைகளை எப்படி வாசிப்புச் செய்வதென்ற கேள்வியின் பின்னனயில் இக்கருத்தை நோக்கலாம். அனாரின் கவிதைகளில் வெளிப்படும் பெண் உடல், பெண்மொழி சார் கூறுகள் அவரின் 'காதலைச் சொல்லும் கவிதைகள்' அல்லது ஷவிரக தாபக் கவிதைகள்| சார்ந்து எழுந்தது கவனிப்புக்குரியது. இவரின் சில கவிதைகள் சிற்றிதழ்களில், இணையத் தளங்களில் வெளிவந்தபோது அது குறித்து எழுந்த சலசலப்புகள் அதிகமானவை. பிச்சி, பெண்பலி, உரித்தில்லா காட்டின் அரசன், தணல் நதி, அறைக்கு வெளியே அலையும் உறக்கம், ஒளியில்லாத இடங்கள், மேலும் சில இரத்தக் குறிப்புக்கள் போன்ற கவிதைகள் இவ்வகையில் சொல்லக்கூடிய உதாரணங்கள்.

இஸ்லாமியப் பெண் எழுதுகின்ற காதல் கவிதைகள் குறித்த நேர்மையான மதப்பார்வையோ, சமூகப் பார்வையோ இங்கு சரியாக முறைப்படுத்தப்படவில்லை. மாறாக உணர்ச்சி வசப்பட்ட பல கருத்து நிலைகளே இங்குள்ளன. அனாரின் எனக்கு கவிதை முகம் வெளியீட்டு விழாவில் ஆய்வுரை நிகழ்த்திய எம்..எம். ஜாபிர் (ஆத்மா) தனக்கு பிடித்த அனாரின் கவிதைகன் இரண்டினை வாசித்துக் காட்டினார். அறைக்கு வெளியே அலையும் உறக்கம், வரு(ந்)த்துதல் என்ற இவ்விரு கவிதைகளையும்; அவற்றின் இனிய ஓசைக்காகவே பிடித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இது பிரவாகம் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வாசிப்பு ஓசையுடைய கவிதைகளைத் தேர்ந்து அவர் வாசிப்பதன் பழக்கமாக இருக்கலாம் என்றுபட்டது. ஆனால் இவ்விரண்டும் சீரிய விவாதங்களைக் கோரி நிற்கின்ற கவிதைகள் என்பததையோ, அது எழுப்பும் அதிர்வுகளையோ சொல்ல ஆத்மா வசதியாக மறந்து விட்டார். இதற்குள் ஷஷஇங்குள்ள முஸ்லிம் கவிஞர் களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். இனி எல்லோரும் முஸ்லிம் தேசக் கவிதைகளையே எழுத வேண்டும்|| என்று வேறு கட்டளையிட்டார், இக்கருத்தை முதல்முதலாக தானே சொல்வது போன்ற பாணியில். முஸ்லிம் தேசக் கவிதைச் செயற்பாட்டில் அனார் எங்கிருக்கிறார் என்பது பற்றி எக்கருத்தும் அவர் சொல்லவில்லை. அப்படிச் சொல்வது சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்ற என். ஆத்மாவை அவமதிப்பது போலாகும் என்று நினைத்திருந்தாரோ என்னவோ?

04.

அனாரின் காதல் சார் , விரக தாபக் கவிதைகள் பெண்ணின் நூற்றாண்டுகால உள்ளடங்கிய நினைவுகளை மேற்கிளர்த்தும் தன்மையானவை. சங்கப் பெண்கவி தொடங்கி ஆண்டாளின் நிலைபெற்று கொள்ளும் புராணகாலத் தாகம் கொண்டவை. உடலை வெல்லும் போராட்டத்தில் போர்வாட்களையும், கள்ளச் சாவிகளையும் தயாரிப்பவை.

காதலையும் காமத்தையும் கடக்க அவற்றை கொல்லுகின்ற கொலைப்பழியிலிருந்து விடுபட்டு ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்ற நிலை இங்குள்ள பெண் கவிஞர்கள் சிலருக்கு மட்டுமே சொந்தமானவை. ஒரு ஆணின் துணைகொண்டுதான் அவற்றைக் கடக்க வேண்டும் என நினைக்கின்ற இப்பக்குவம் அனாரின் கவிதைகளுக்குப் பின்னால் இருப்பது முக்கியமானது. இது இன்றைய தமிழகப் பெண் கவிஞர்கள் உடலைக் கடப்பது பற்றிப் பேசுகின்ற முறைக்கு எதிரானது. விதி விலக்காக, அனாருடைய 'உரித்தில்லா காட்டின் அரசன்|, 'பிச்சி| போன்றவை இந்த அபாயத்தின் மலையுச்சியில் உடல் தற்கொலைக்காக காத்து நிற்கின்றவை. சுகிர்தராணியின் கவிதைகளில் வெளிப்படை யாகவே வரும் உடலின் விளையாட்டு, கலவி போன்றவை யெல்லாம் அனாரின் கவிதை முகத்திற்குள் தேடிச் சலிக்க வேண்டும். சுகிர்தராணியின் 'உடலெழுத்து| மிக வெளிப்படையான லெஸ்பியனை நியாயப்படுத்தும் கவிதை. உடலின் மீட்சிக்காக இதுவே வழியென அக்கவிதை பரிந்துரை செய்கிறது. (நீண்ட யுகங்களுக்குப் பிறகு அன்றுதால் என்னுடல் என்னிடமிருந்தது) உடலைக் கடப்பதற்குரிய இந்த உபாயங்கள் எள்ளளவும் அனாரின் கவிதைகளுக்குள் இல்லை. வெறும் ஏக்கங்கள்தான் உண்டு.

கடக்க முடியாமல்
என்முன் தொங்குகின்றது
தணல் நதியாய் இரவு
(தணல் நதி)

விசமேறிய இரவின் பாணம்
என் தாகத்தின் முன் உள்ளது
ருசிகள் ஊறிய கனவுகளுடன்
(அறைக்கு வெளியே அலையும் உறக்கம்)

தனது உடலின் சுதந்திரம் மீறப்படும்போது அனார் சொல்லும் வலிகொண்ட இரவை தின்பதினூடாக பிரதி விடுதலையைக் கோருகின்றது.

வெளிச்சத்தை இருட்டை
தின்று வளர்கிறது கனவு
(வெறித்தபடி இருக்க முடியாது)

நீ இரவைத் தின்பவன்
நான் இரவு தின்னும் இரை
(வரு(ந்)த்துதல்)

நீ வரைந்து காட்டு
அடைய முடியா அந்த இரவை
(பூக்கவிரும்புகின்ற கவிதை)

இப்படியாக 'இரவுகள்' அனாரின் கவிதைகளெங்கும் கரியைப் பூசி அலைகின்றன. எல்லாக் கவிதைகளிலும் ஏதோ ஒரு வகையில் இருள் படர்கிறது. அநேக கவிதைகளில் இருளுக்குப் பக்கத்தில் வெளிச்சம் வந்து இருளைத் துரத்துகிறது. அல்லது வெளிச்சத்தின் பிரகாசத்தை உணர்ந்த இருள் பின்னணியாக பதுங்குகிறது.

இருள் அடந்து இறுகி பிசாசுகளின் தோற்றங்களுடன்
மல்லாந்து கிடக்கும் மலைகளை கடந்து செல்கிறேன்
எவ்வளவு பிரகாசம் நீ
(மண்புழு)

இரவு மின்விளக்குகளில்
வெளிச்சம் பூத்துக் கிடக்கிறது
(இல்லாத ஒன்று)

இதமும் புதிரும் பூசிடும்
இருள் பிரியா வைகறை மெல்லப் பதுங்குகிறது
(மனமந்திரம்)

இருள் துவாரங்களுக்குள் விரியும்
உன் வெளியில் வியாபித்தேன்
(நிழலின் அலறல்)

இருளை துக்கமான சகுனத்தின் குறியீடாகவும், துன்பத்தின் குறியீடாகவும் பார்க்கின்ற மரபு சார்ந்த வெளிப்பாட்டு முறையை அனாரின் கவிதைகள் கொண் டுள்ளன. இதனால் இருட்டை விரட்டுவதும், அதைக் கடந்து விடியலை அடைவதும் அவருக்கு பிடித்தமான செயல்களாக மாறிவிடுகிறது. இரவு அவருக்கு வலியைப் போல சுமையாகிறது.

குளிர்மை விரிகின்ற மார்கழி மாத இரவுகளை
அதன் செறிவை, வனப்பை
அதன் மாற்றமுடியா வலியை உனக்கு விட்டுச் செல்கிறேன்
(மாற்ற முடியா வலி)

காதலின் தாகம், அதன் எதிர்பார்ப்பு, கனவு எல்லாமே அந்த இரவுச் சிறைக்குள் அகப்பட்டுக் கிடப்பதாக அனார் உணர்வதும் அடைய முடியா நெடுங்கதவாய் இருள் தூரத்தில் வியாபித்துக் கொள்வதும் சாத்தியமாகிறது. இருளைக் கடப்பது சிறாதுல் முஸ்தகீம் பாலத்தைக் கடப்பது போன்றதொரு பணியாகிறது. (சிறாதுல் முஸ்தஹீம் - மறுமை நாளில் உலக மக்கள் அனைவரும் கடக்க வேண்டிய மிக அபாயகரமான பாலம்)

05.

சமயலறையை சிறைக்கூடங்களாக பார்க்கின்ற மரபு இன்றுவரை தொடர்வதாகச் சொல்வதற்குரிய இன்னும் பல சான்றுகள் அனாருடைய கவிதைகளுக்குள்ளும் உண்டு. அரசி கவிதையில்,

ஆணையிடுகிறேன் சூரியனுக்கு
ஒரு இனத்தையே விழுங்கிக் கொண்டிருக்கும்
சமயலறையின் பிளந்தவாயைப் பொசுக்கிவிடுமாறு

எனச்சொல்வதில் உள்ள வன்மமும், காதலைக்
கொல்லும் தேவையில்,

அடுப்புச் சாம்பலுக்குள் ஒளித்தாயிற்று
உடைத்த நினைவுச் சின்னங்களை

எனச் சொல்வதில் உள்ள பாதுகாப்புணர்வும் நேரெதிரா னவை. பெண்கள் சமயலறையைக் கைவிட நினைக்கின்ற சூழலில் இன்றைய தொலைக்காட்சிகளில் சமயற்கலை நிகழ்ச்சிகளுக்கே அதிக மௌசு கூடியுள்ளன. வீட்டுப் பெண்கள் பாடக் கொப்பிகளுடன் தொலைக் காட்சி களுக்கு முன்னமர்ந்து எடுத்துக் கொண்டிருக்கும் குறிப்புக்களுக்கு அனார் போன்றவர்கள் நிறைய வகுப்பெடுக்க வேண்டும்.

ஒருமுறை சமையற்கட்டு கவிதைகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, நண்பரொருவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது 'வீட்டில் தனது மனைவி சமைக்க வேண்டுமென்பதிற்கெதிராக ஹோட்டல்களில் சமையற் காரர்களாக வேலை பார்க்கும் ஒரு தொகைக் கணவன்மார்கள் பற்றிய கவிதைகளும் இங்கு எழுதப்படவேண்டும்||

06.

'மேலும் சில இரத்தக் குறிப்புகள்| அனாருடைய கவிதைளின் வெளிப்படைத் தன்மைக்காக பலராலும் ஏதோ ஒரு விதத்தில் பேசப்பட்டது. ஒரு பெண்ணின் எழுத்தில் காணப்படுகின்ற இத்தகைய தன்மை இங்கு எழுதுகின்ற ஆண்கள் பலரின் முகத்தில் விழுகின்ற அடி போன்றது. கொதித்தெழாக் குறையாக சிலர் இது பற்றி முறைப்பாடு செய்ததுமுண்டு. ஆனால் நாம் நினைக்கின்ற அளவுக்கு அக்கவிதை அதிகமான இரத்தத்தைப் பூசிக்கொள்ளவில்லை. இங்கு நடக்கின்ற யுத்தம், வன்முறைகள், கொலைகள் என்பனவற்றைத் தாண்டி மாதாந்தம் வெளிப்படும் இரத்தம் அபாயகரமானதில்லை என்கிறது கவிதை. இரத்தம் ஒரே நிறமென்று நம்பிக் கொண்டிருக்கின்ற பலரது கவனமும் இக்கவிதையின் மூலம் சிதைவடைக் கூடும். இரத்தத்தை உடலோடு சேர்த்துப் பார்ப்பதும், தவிர்த்துப் பார்ப்பதும் முக்கியமானது. யுத்தத்தில், வன்முறையில் வெளிப்பட்டு நிற்கும் இரத்தத்தை அதிர்;ச்சியுற்றுப் பார்ப்பதுபோல் நாம் யாரும் வைத்தியசாலையில் பைந்துக் கணக்கில் தொங்கிக் கொண்டிருக்கும் இரத்தத்தை பார்ப்பதில்லை.

'இரத்தம்| கருணையை, பரிதவிப்பினை
அவாவுகிறது
இயலாiமையை வெளிப்படுத்துகிறது

என்பது இதுதானா எனவும் இன்னொரு வாசிப்புண்டு. வாழ்கை முழுக்க பின்தொடர்ந்து கொண்டிருக்கும் இரத்தம் சாவின் தடயமாய் அனாருக்குத் தெரிந்ததில் வியப்பில்லை. ஆனால்; ஓரிடத்தில்

வன்கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்
செத்த கொட்டுப் பூச்சியின் அருவருப்பூட்டும் இரத்தமாயும்

தோன்றுவது கவிதையின் ஓட்டத்தில் மறுவாசிப்பை வேண்டி நிற்கிறது. வன்கலவி புரியப்பட்டவளின் பக்கம் நின்று கவிஞர் ஏன் பேசவில்லை? என மனம் நினைக்கிறது. அப்பெண்ணின் இரத்தம் ஏன் கருணையின் இரத்தமாகத் தோன்றவில்லை? என கேட்கத் தோன்றுகிறது.

07.

கலாச்சாரப் பாதிப்புக்களை இன்றை இலக்கியங்களில் தேடுவது கட்டாயம் போன்றதொன்றாகிவிட்டது. தலித் இலக்கியம், கறுப்பர் இலக்கியம், தென்னமெரிக்க இலக்கியங்கள் தங்களுடைய அடையாளங்களை மீட்டுக் கொண்டே மேலெழும்பின. இன்றைய முஸ்லிம்; தேச இலக்கியமும் இத்தகையதொரு பார்வையை முன் வைக்கத் தொடங்கி ஆழ்ந்த விசாரணைகளில் ஈடுபட்டுள்ளது. பிரதிகளில் ஊடறுக்கும் முஸ்லிம் தேச கலாசாரக் கூறுகள், இன்றைய இலக்கிய அடையாளத்தின் முக்கியமான அம்சமானதும் இதனால்தான். பெருவெளியின் வருகைக்குப் பின்னர் இதுசார்ந்து எழுதுகின்ற ஒரு அணி உண்டாகியிருப்பதைக் காணக்கூடியதாயிருக்கிறது. அனாரின்  'மண்புழுவின் இரவு| கவிதையில் தூர அகன்ற வயல்களின் நடுவே 'றபான்| இசைக்கின்ற முதியவரைத் தரிசிக்கிறோம். அல்குர்ஆனின் வசனம் ஒன்றை அடியொற்றி, 'நீளமான நூலாய் தெரிகின்றது இரவு........ தொடர்ந்து நீளமான வெள்ளை நூல் தெரியும் வரை| போன்ற வரிகள் முஸ்லிம்தேச அடையாளத்தின் மீட்புக் குரல்களாக ஒலிக்கின்றன.

08.

சிலவேளை அனாரையும் சுகிர்தராணியையும் சேர்ந்து வாசிக்கும்போது கிளர்க்கின்ற உணர்வு ஒற்iயானதாகத் தெரிகிறது. 'உன் குரலுக்கு இன்று நீ புரவிகளைப் பூட்டவில்லை?|| என்று அனார் கேட்பதற்குப் பின்னால் அக்குரல் 'சமன் செய்யப்படாத களத்தில் புரவிகளேடு வந்திறங்குகிறாய்|| என ஒலிக்கிறது.

பாணனின் இசையில் அனார் மயங்க, வெட்சிப் பூக்கள் அணிந்தபடி வருகிறார் சுகிர்தராணி. 'தளர்வான இரவா டையை அணிந்தேன்|| என்பது அனார் என்றால் 'விரகத்தின் இழைகளால் நெய்யப்பட்ட இரவாடையை நான் அணிந்திருக்கிறேன்|| என சுகிர்தராணி சொல்வது போலிருக் கிறது. தவிர இருள், பனிப்பாறைகள், போர்வாட்கள், குரல்கள், இசை, பாம்புகள் எல்லாமே மிக நெருக்கமாக உலவுகின்றன. இருவரும் சேர்ந்து ஒரு கவிதையை எழுதி விட முனைவது போன்ற பாவனை நம்மை மயக்கத்திலாழ்த்துகிறது.

09.

கவிதையை மொழியின் அழகியலில் காணும் தரிசனம் அனாரின் பிரதிகளில் நிறையவே உண்டு. 'மழை ஒவ்வொரு சொல்லாகப் பெய்கிறது|, ஷஇரு விழிகளைக் கெளுத்தி உயிரூற்றி எழுதுகிறேன் உயிரைக் கொளுத்தி வைத்து விழிகளால் வாசி| போன்றவை இதற்கு நல்ல சான்று.

பெரும்பாலான கவிதைகள் காட்சிப் படிமங்களுடனே விரிகின்றன. அவை யதார்த்தங்களைத் தாண்டிய கனவுகளாக உருக்கொள்கின்றன. இரத்தம் சிந்தாத போர்க்களக் காட்சிகள், பனிப்பொழிவுகள், வர்ண ஜாலங்கள், அரச சாம்ராஜ்ஜியங்கள் எல்லாமே நாம் தரிசிக்க விரும்புகின்ற மாயலோகங்கள். இவையெல்லாம் பின்நவீனத்துவ சாயல் கொண்டது என்றால் இங்குள்ள பேராசிரியர்களும், தொலைக்காட்சி தயாரிப்பாளர்களும் கற்களால் எறிவார்களோ தெரியவில்லை.


( பெருவெளி - ஆகஸ்ட் 2008 )

-------------------------------------------------------------------------------------------------------------

No comments: