Saturday 3 March 2018

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளி :  பின்-நவீன பெண் வெளி 



– ஜிஃப்ரி ஹாஸன் (இலங்கை)
-------------------------------------------------------------------------------------

பெண்ணின் தனித்தன்மையையும், சிறப்புத் தன்மையையும் உடைய கதையாடலை உருவாக்குவதன் மூலம் பெண்ணின் சுய அடையாளத்தை பின்-நவீனக் கவிதைச் செயற்பாட்டாளர்கள் பேசினர். இவர்களில் அனார், பஹீமா ஜஹான், பெண்ணியாபோன்றவர்கள் முக்கியமானவர்களாக விளங்குகின்றனர். ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனப் பெண்வெளியின் முன்னோடியாகவும், அதிக பங்களிப்பாளராகவும் அனார்விளங்குகிறார். ஆனால் இங்கு அளவுப் பொருத்தம் கருதி அனாரின் கவிதைகள் பற்றி மட்டுமே மிகச் சுருக்கமாக பேசப்படுகிறது. 

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியில் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட பெண்களின் பிரச்சினைகள் பற்றிய கவிதைகளும் காணப்படுகின்றன. பெண்களில் சிலர் விளிம்புகளை உருவாக்குகின்ற மையங்களாக மேற்கிளம்பி வரும் இன்றைய சூழலில் விளிம்புகளாக வாழும் பெண்கள்தான் இன்று சமூகத்தில் அதிகமாகவுள்ளனர். 

இங்கு பின்நவீன பெண்வெளி எனும்போது ஆணாதிக்க தந்தைவழி அமைப்பிலிருந்து அல்லது மேலாதிக்கம் கொண்ட ஆண் சொல்லாடலிலிருந்து பெண்கள் விலக்கப்பட்டிருக்கிறார்கள், அத்துடன் அவர்கள் கீழ்நிலைப்படுத்தப்பட்டவர்களாக வரையறுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அதன் வாதமாக இருந்தாலும் அதன் கருத்துநிலைக்குள் முழுiமையாக அள்ளுண்டு போய் அதற்கான கவிதைப் பிரதிகளை அனாரோ, பஹீமா ஜஹானோ செய்யவில்லை. 

உண்மையைச் சொல்லப் போனால், இந்த விடயங்களை பின்-நவீனக் கோட்பாடாகப் புரிவதற்கு முன்னரே அனார் இந்த நிலமைக்கெதிரான கலகக் கவிதைப் பிரதிகளைப் படைக்கலானார். முஸ்லிம் சமூகவெளியில் இஸ்லாமியக் கருத்துநிலைகள் வலுவாகக் கடைபிடிக்கப்படும் சூழலில் அனாரோ, பஹிமா ஜஹானோ தங்களது கவிதைப் பிரதிகளில், சமய சமூக வரையறைகளைத் தாண்டாது, ஏற்றுக்கொள்ளத்தக்க எல்லைகளுக்குள் நின்று கொண்டனர். இப்படி ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் நின்று கொண்டு அனார் அதில் உச்சத்தையும் தொட்டார். வரம்பு மீறும் பிரதிகளை அவர்கள் படைக்கவில்லை என்பதை அவர்களது கவிதைகளைப் பற்றி செவிவழியாக கேள்விப்பட்டவர்களன்றி உண்மையில் வாசித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். 

முஸ்லிம் பண்பாட்டின் பெண் குறித்த பொதுக்கூறுகளை மீறாமல் அனார் உருவாக்கும் பெண்வெளி ஒரே சமயத்தில் பெண் படைப்பாளியாகவும், அதன் பாத்திரமாகவும் இருப்பதன் சிக்கல்களையும் பேசுகிறது. அனார் உருவாக்கும் பெண்கள் தீவிர மேலைத்தேயப் பெண்ணிலைவாதிகளின் குரலிலன்றி தமக்குச் சொந்தமான குரலில் பேசுபவர்கள். 

‘கனவுகள் காண ஏங்கும் கனவு’ (சுலைஹா கவிதை) என தனக்குள்ளும் தனக்கு வெளியேயுமிருக்கும் பெண்ணை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் அனார். இன்னுமொரு கவிதையில், ‘தம் கனத்த வாழ்நாளின் நெடுங்கதையை’ ஆண் குரலின் முன்னால் மௌனித்துக்கிடந்த பெண்வெளியில் சீற்றத்துடன் பேசத் தொடங்குகிறார். பெண்ணின் உலகத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதற்கான கிட்டத்தட்ட எல்லா வகையான சாத்தியப்பாடுகளையும் அனார் தனது கவிதைகளில் செய்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. 

பெண் என்றால் யார் என்பதை அறிமுகப்படுத்தும் அனாரின் கவிதை ஒரு அறிவிப்பு போல் வெளியாகிறது. பெண்ணின் வாழ்வைச் சுற்றியுள்ள மாயக் கட்டுகளை அவிழ்த்து விடும் மர்மச் சொற்கள் சுதந்திரமாய் தெறித்து வருகின்றன. 

“நீளமான நூலாய்த் தெரிகின்றது இரவு
நான் தனித்த மண்புழு சிறுகச்சிறுக நீளுகின்றேன்
தொடர்ந்து நீளமான வௌ்ளை நூல் தெரியும் வரை”
(‘மண்புழுவின் இரவு‘) 

இந்தக் கவிதை ஒரே நேரத்தில் மண்புழு பற்றியதாகவும் மண்புழுவான பெண் பற்றியதாகவுமிருக்கிறது. இந்தக் குரல் ஒரு எதிர்பார்ப்பை, ஒரு மாற்றத்தை எதிரொலிக்கிறது. இருள் என்ற விளிம்புக்குள் தள்ளப்பட்ட பெண்களுக்கான வெளிச்சத்தைக் கோரும் கவிதை அது. 

“உன்னுடைய சொற்கள் அறுவடைக் காலத்தின்
நெற்கதிர்கள்” 

என இன்னொரு கவிதையில் குரல் தாழ்த்தப்பட்ட பெண்களின் சொற்களுக்கு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார். 

பொதுவான பார்வையில் கவிதைகளில் விபரிக்கப்படுவது போன்ற நெருக்கடிகளை பெண்கள் உண்மையில் அனுபவிப்பதில்லை என்ற பார்வை நமக்குள் இருக்கலாம். அது ஒருவகையில் உண்மையாக இருந்தாலும், பிரச்சினை என்பதை வெறுமனே உடல் சார்ந்த வன்முறையாக மட்டும் பார்க்காமல் பெண்ணின் அக உலகம் சார்ந்ததாகவும் பார்க்கப்பட வேண்டும் என்ற பார்வையையும் அனார் ஏற்படுத்துகிறார். 

அனாரை ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்நவீனக் கவிதைவெளியின் பெண் குரலாக மட்டுமே பார்ப்பதும் அவரது பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்துவிடும். ஈழத்து தமிழ் முஸ்லிம் பெண்வெளியானது அவரது முதன்மையான பங்களிப்பும் முன்னோடி நிகழ்ச்சியுமாகும் என்றளவில் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தது. மற்றபடி அவரது கவிதைகள் பன்முகப் பார்வை கொண்டவையாகவும் தமிழின் விரிந்த பரப்புக்குரியனவாகவும் விளங்குகின்றன. 

உலகக் கவிதைகளோடு எனக்குள்ள பரிச்சயத்தின்படி அனாரின் கவிதைகள் அந்தத் தரத்தில்தான் இருக்கின்றன என்பதை உறுதியாக கூற முடியும். 


-----------------------------------------------------------------------

நன்றி  : 
- கலைமுகம் - 2017
- ஜிஃப்ரி ஹாஸன் 

No comments: