Saturday 20 February 2016

'கவிதையானது ஒரு பைத்தியச்சுவை'
----------------------------------------------------------------------------------------------------------------

- அனார்


எனக்கான விளையாட்டுகள், எனக்கான கல்வி, சென்றுவரக்கூடிய ஒரே இடமாகவிருந்த பாடசாலை எல்லாம் என்னை விட்டகன்றபோது வெறுமை மெல்ல மெல்ல தின்னத் தொடங்கியது. நான் நானாக மாறிக் கொண்டிருந்தேன். முன்னோடிக் கவிஞர்களை வாசித்துவிட்டோ இலக்கியப் பரிச்சயத்தோடோ எழுத வந்தவள் அல்ல நான். ஆனால் கவிதை என்னை வந்தடைய சில விடயங்கள் ஆதாராமாக இருந்திருக்கிறது என இப்போது உணருகிறேன். என்னுடைய பால்யகால அழகியவருடங்கள், மதரீதியான வரலாற்றுத் தொன்மங்களும் மரபுகளும் கவிதைகளுக்கான பல திறவுகோல்களைக் கொண்டிருந்தது. மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் என்னுடைய கவிதைகளில் அவை வெளிப்படுகின்றன. என்னைப் பாதித்த வலுவான காரணங்களாக எங்கள் மண்ணின் நாட்டார்பாடல்கள் அதாவது நாட்டுப்புறக் கவிகள் மூன்று நான்கு வயதிலிருந்தே எனக்குள் புகுந்தவை. இவைகள் கவிதை களுக்குரிய கற்பனைகளையும் காதலையும் வளர்த்தெடுத்திருக்கின்ற என்றே நம்புகின்றேன்.

90 காலப்பகுதியில் எழுதவந்தவள் நான். எனது ஊர் பல கலவரங்களைக் கண்டிருக்கிறது. அரசியல் கொந்தளிப்புகளைக் கடந்திருக்கிறது. எனவே எழுதுவது தப்பித்தலுக்கான ஒரு தற்காலிக ஏமாற்று வழியாக எனக்கிருந்தது. இன்றுவரை கவிதையைத் தொடர்வேன் என்றெல்லாம் அன்று நான் திட்டமிட்டதோ எண்ணியதோ கிடையாது. பூட்டப்பட்ட கதவுகளுக்குள் இருந்தபடி எப்படி சுதந்திரத்தை அடைவது என கவிதை எனக்கு சொல்லிக் கொண்டிருந்தது. கவிதை எழுதுவதற்கு புதிய காரணங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. மரணங்கள் வித்தைகளைப்போல நிகழ்ந்தன. எதை எழுத வேண்டுமோ அதை நேரடியாக எழுதமுடியாது என்ற போதும் பலரும் எழுதிக் கொண்டுதான் இருந்தனர்.

கவிதை, சொல்ல முடியாததை சொல்வது, பகிர்ந்து கொள்ள முடியாததை பகிர்நதுகொள்வது. பெறமுடியாததை தருவது. கிடைக்காததை கேட்பது. இருப்பின் அடையாளத்திற்காகவும் அரசியல் ரீதியான முன்னகர்விற்காகவும் வாழ்வை எதிர்கொண்டு முன்னெடுப்பதற்காகவும் கவிதைகள் எழுதும் புதிய ஒரு எழுச்சிமிக்க புதியவர்களோடு நானும் இணைந்து கொண்டிருந்தேன். இறப்பின் பின்னரும் பிறப்பின் முன்னரும் இருக்கக்கூடிய அரூப உயிர் கவிதை. பல இலக்கிய வடிவங்கள் ஒன்றிணைந்து இயங்கக்கூடிய வடிவம் என நான் நினைக்கிறேன். ஐம்பூதங்களும் ஐம்புலன்களும் சங்கமிக்கின்ற வளமிக்க செயல்பாட்டு வடிவம். மொழியின் ஆகச்சிறந்தவெளிப்பாடு. ஆனால் அதனைக் கையாள்பவர்களிடமுள்ள திறனைப்பொறுத்தே இக்காலங்களில் கவிதைக்குரிய கணிப்பீடுகளை முன்னெடுக்க முடியும். எல்லையற்ற ஒன்றை எப்படி வரையறை செய்வது? அந்த விதமான அளவுகோலை முழுமையாக செயலிழக்கச் செய்வது கவிதை.

அன்றாடச் சுமைகள் நெருக்கடிகள் கசக்கிப் பிழியக்கூடிய சாதாரண பெண்ணாக இருந்து கொண்டுதான் என் கனவு மாளிகையின் முற்றத்தில் கவிதைப்புறாக்களை வளர்க்கின்றேன். அவை கொறிக்கும் தானியங்களால் என் கூடை நிரம்பியுள்ளன. புறாக்கள் கோதுவதும் கொஞ்சுவதும் குறு குறுப்பதும் பார்த்துப் பார்த்து அவைகள் மயங்கும்படி இசைக்கின்றேன். எப்படிப்பட்ட இசை அது! புறாக்களின் அரவணைப்பும் நெருக்கமும் மென் இறகுகளின் கதகதப்பும் தனிமையின் நிறங்களுக்குள் என்னை அடைகாக்கின்றன. என் கனவுகளில் அவை இருக்கிறதென்றும் இல்லையென்றும் தோன்றுகின்றது. சிலவேளை புறாக்கள் வேறெங்கும் திசைமாறிச் செல்வதில்லை. என்னுடைய கனவுகளின் ருசிக்கு பழக்கப்பட்டிருக்கின்றன. அவை எங்கே எத்திசையில் செல்கின்றன? புதிய புறாக்களுடன் எப்போது திரும்புகின்றன? என்பதை கணிக்க முடியாது. மாயப் புறாக்கள் என்னிடம் வருவதுபோல் ஒருநாள் வராமலும் போகலாம். எதுவும் நிச்சயமில்லாதது….

கவிதையானது ஒரு பைத்தியச்சுவை. தெளிவான பாதையில் நேராகப் பயணிப்பவரை கவிதை போதையுறச் செய்கிறது. தடுமாறச் செய்கின்றது. ஒருவருக்கு கவிதை பிடிப்பதற்கும் பைத்தியம் பிடிப்பதற்கும் அதிகம் வேறுபாடுகள் இல்லை. பைத்தியத்தைக் கூட்டுவதற்கான வழிமுறைகளை அதிகரிப்பவர்களால் எழுதப்படும் கவிதைகள், சமகாலத்திலும் எதிர்காலத்திலும் நிலைக்கின்றன. பைத்தியமாக நடிப்பவர்களாலும் பைத்தியம் முற்றாக குணமானவர்களாலும் எழுதப்படுகின்ற கவிதைகளில் ஆர்வமும் ஈடுபாடும் ஏற்படுவதில்லை.

எப்போதும் உணர்விலிருந்து வெளிப்படுகின்ற கவிதைகளோடு எனக்கு தனியொரு இணக்கம் ஏற்பட்டு விடுகின்றது. கவிதையில் உள்ள அரசியல் நிலைப்பாடுகளை ஆராய்வதைவிட, கவிதையின் உள்ளுறைந்திருக்கும் ஆன்மாவின் அனுபவக் கணங்களைப்பற்றித்தான் நான் ஆராய்கிறேன். ஒரு கவிதையை அறிந்துகொள்வதானது அந்தக் கவிதை அனுபவத்தினூடாக, வாழ்வின் உயிர்ப்பான தருணத்தை உள்வாங்குதலாகும். நம்மையும் நம்முடைய ரசனை அடிப்படைகளையும், மாற்றங்களை நோக்கி கூடவே நகர்த்திச் செல்லுகின்றவை.

தேசம், இயற்கை, பண்பாடு, கலாச்சாரம், மனிதன் இவைகள் அனைத்தையும் புரிந்துகொள்ள விழைவதும், கவிதையொன்றை புரிந்துகொள்ள முயல்வதும் ஒரேவிதமானதுதான். ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு மனம் வெவ்வேறு உருவங்களுடன் ஊசலாடுவதை ஒருவருக்கு உணரமுடியுமாகவிருந்தால், கவிதையினை இரசிப்பது பெரும் வாழ்பனுபவமாக மாறிப்போய்விடும். உக்கிரமானக் கருத்து நிலைப்பாடுகள் கொண்ட கவிதைகள் சமகாலத்தையும், அரசியலையும், வரலாற்றையும் கொண்டமைவதால் சுடும் உண்மைகளின் எரிவை எமக்குள் ஊன்றிப் பற்றவைக்கின்றன. இருண்மையானது, பூடகமானது, புரியாதது எனும் கூற்றுக்கள் வலுவற்றனவாகும். வாழ்க்கையைப் போன்றதே கவிதை. சக மனிதரைப் புரிந்துகொள்ள நாம் எடுக்கின்ற முயற்சி எல்லாச் சமயங்களிலும் வெற்றியளிப்பதில்லை. கவிதையைப் புரிந்துகொள்வதும் அவ்வாறுதான். எடுக்கின்ற முயற்சியைப் பொறுத்தே புரிதலும் விசாலமடைகின்றது.

பிறரால் உருவான, நாமே உருவாக்கிய வலிகளிலிருந்து, தனிமைப் படுவதிலிருந்து வசப்படும் பரவசத்தின் மெய்நிலையிலிருந்தும் கவிதைகளுக்கான பொறிகள் உரசப்படுகின்றன. மனதின் நுண்ணிய உணர்திறனையும் அசைக்கும் மாயக்காற்று வீசும் அளவுக்கு, சுடராய் எரிவதும், காட்டுத் தீயாவதும், கண நேரத்தில் அணைவதும் நிகழ்கின்றது.

கவிதை என்பது வாழ்தல் என்றான பின் அதற்குரிய சவால்களும் தோன்றிவிடுகின்றன. ஒரு பெண்ணிடம் வருகின்ற கவிதைகளின் தருணங்கள் அவளுடைய நெற்றிக் கண்ணாகவும் உயிரில் துளிர்க்கின்ற கண்ணீராகவும் அவளுக்கான சிறகுகளாகவும் சாளரங்களாகவும் மாற்று வடிவ உருக்களை கொண்டிருக்கின்றன. ஒரு ஆண் எதிர்கொள்ள சாத்தியமற்ற பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

பிற பெண் எழுத்தாளர்களிலிருந்தும் அது கூடியும் குறைந்தும் மாறுபட்டும் என்னைத் தாக்குகின்றது. எனது இலக்கியப் பயணவழியில் அவ்விதமான பலியிடல்கள் ஓசையற்று நிகழ்வன. ஏன் நிகழ்கின்றன? ஏன் ஓசையற்று நிகழ்கின்றன? என்பதெல்லாம் அந்தரங்கமான அடிப்படைகளை கொண்டிருக்கின்றது. என் சதை கீறும் கத்தியை சத்தமிடாமல் பிடுங்கியெறியும் பக்குவத்தை காலம் கற்றுத்தந்திருக்கிறது. மனித கீழ்மைகளை அதிர்ச்சியுடன் கற்றுக்கொள்ள புறவாழ்வின் வெற்றிடத்தை இலக்கியச் சூழல் நிரப்பி வருகின்றது. இத்தகைய சூழல்களுக்கிடையே இருந்தபடி நான் வெளிப்படவும் ஒளிந்துகொள்ளவும் எனது கவிதைகளுக்குள்ளே குகையும் பள்ளத்தாக்குகளும் வனமும் வெளிகளும் உள்ளன. இருப்பினை தக்கவைக்க ஆசுவாசம்கொள்ள புதுப்பிப்பதற்கான தேவையும் தோன்றுகிறது. அனைவருக்குமான பார்வையிடலையும் மறுத்துவிட்டு நமது ஜன்னலால் நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பது என்றும் கூறலாம். கவிதையுடனான நம் உறவு அல்லது அவ்வுணர்வு தோற்றுவிக்கின்ற மனதின் எழுச்சிகள், அங்கே ஊசலாடும் மெல்லக்கவியும், ரகசியமாயூரும், கனவின் நெருடல்களை திரும்பத் திரும்ப அனுபவிப்பதற்காகவும் அதன் உள் உறைவதற்காகவும், தொலைந்து கரைவதற்காகவும் எடுக்கின்ற பிரயத்தனங்களே சில நேரங்களில் சில கவிதைகளை எழுத வைத்துவிடுகின்றன. கவிதை எழுதப்படுவதற்கான தேவைகளை மனதின் சமிக்ஞைகளே தீர்மானிக்கின்றன. என்னைப் பொறுத்தவரை சமபங்கு அனுபவம், சமபங்கு கற்பனை.

மொழி ஒரு வகைச்சிறகு, கவிதை ஒரு வகைச் சுதந்திரம். அதனால் அந்த சுதந்திரத்தை எனக்கு நானே வழங்கிக்கொண்டேன். மொழியின் சிறகால் பறக்கத் தொடங்கினேன். அதற்கு காதல், காமம், அன்பு, நிர்வாணம், துரோகம், உடல், உண்மை, எதிர்ப்பு, பெண், கனவு என்றெல்லாம் பெயரிடமுடியும். எனது ஆன்மாவின் விழிப்புநிலை உண்மையின் வெம்மைக்கருகே எப்போதும் தவித்தது என்பதற்கான ஆதாரமே என்னுடைய கவிதைகள். ஆனால் அந்த உண்மையானது அகத்தின் வெளிக்காட்ட முடியாத மறைவான நிஜத்தையா? அல்லது புறத்தே தெரியும் உண்மை போன்ற போலியையா? என்பது அவ்வப்போது எதிர்கொள்ளும் வாழ்க்கை அனுபவத்தினதும், எழுதப்படும் கணத்தினதும் வசம்தான் பெரும்பாலும் சார்ந்துள்ளது.

என்னை அர்த்தப்படுத்திக்கொள்ள பெண் எனும் அடையாளத்தை பெருமையுடன் முன்வைக்க என்னை நானே கொண்டாட விழைந்ததன் வழியாக கவிதைக்கு வந்தடைந்தபோதிலும் அதனை அதற்கே உள்ளபொறுப்புடன் கையாளவும் விரும்புகிறேன். எனது சிந்தனைகளை வளர்த்தெடுக்கவும், ஆற்றலை தனித்தன்மையுடன் வெளிப்படுத்தவும் இலக்கிய வாசிப்பிற்கு பிரத்தியேகமான பெரும்பங்குண்டு. அத்தோடு பல எழுத்தாளர்களுக்கும் இலக்கிய இதழ்களுக்கும் நண்பர்களுக்கும் எனது வளர்ச்சியில் முக்கிய இடமுண்டு. அவற்றை நான் பட்டியலிட விரும்பாவிடினும் நன்றியுடன் இவ்விடம் நினைவு கூறவிரும்புகிறேன்.

இன்று முற்றிலும் புதிய சிந்தனைகளோடு பலர் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். நானும் ஒரு புதியவள்போல அவர்களுடன் எழுதவும் அவர்களைப் பயிலவும் தொடங்குகிறேன்.

நான் வாழுகிறேன் என்பதற்கும் நான் எழுதுகிறேன் என்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கக் கூடாது என்பதே எனது கவிதைகளின் நோக்கமாகும்.

எந்தவொரு கவிதைமனதிற்கும் கட்டாயங்களில்லை. நம்மை கட்டுப்படுத்தும் சமூகக் கட்டமைப்புக்கள் வரையறைகள் சட்டதிட்டங்களுக்கும், கலைத் தன்மைகளுக்கும் மத்தியில் பெரும் இடைவெளிகள் உள்ளன. இந்த இடைவெளியில்தான் கலையின் படைப்பூக்கம் செயற்படுகின்றது. கடவுளாகவோ, சாத்தானாகவோ விரும்பிய அடையாளங்களை அது எடுத்துக்கொள்ளும். அன்றி தூண்டிலாகவும், மீனாகவும், நீராகவும்கூட…., ஒரே சமயத்தில் அனைத்துமாய் மாற, அல்லது தனித் தனியாய் இருக்க. இது தான் என் கவிதைகள் நிகழும் இடம். ஒரு நாள் என் சுயம் என்பது அவ்வாறே ஆகிவிடும் என நம்புகின்றேன். நான் முயற்சிப்பதும் அடைய விரும்புவதும்கூட என் கவிதைகளிடம் கூட்டிச் செல்லும்படி வேண்டுவதும் இந்த இடம்தான். அதாவது……………

தீமை நன்மை என்ற பிரிப்புகள் அற்ற இடம் !
ஆண் பெண் என்ற வேறுபாடுகள் அற்ற இடம் !
வாழ்வு மரணம் என்ற எல்லைகள் அற்ற இடம் !

----------------------------------------------------------------------------------------------------------
நன்றி : கபாடபுரம்-பெண்மொழி(http://www.kapaadapuram.com), செந்தில், றாம் சந்தோஷ்

No comments: