Thursday 12 October 2017




- அனார்


நம்பிக்கைகளுக்கும் அவநம்பிக்கைகளுக்குமிடையே கவிதைகளை அலையவிடுகிறோம்.

கவிஞர்களது மரணத்தின் பிறகான நினைவேந்தல் அவர்களது எழுதப்பட்ட கவிதைகளுக்கு ஏதோ ஒரு வகையான அடர்த்தியை ஏற்றிவிடுகின்றது.

வானம் நீலத்திலிருந்து வெண்மையை பிரித்தெடுப்பதற்கிடையில் அல்லது ஒரு அலையடித்து இன்னொரு அலை மேலுயர்வதற்கிடையில் கவிஞர் ரசூல் மரணித்திருந்தார். அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதே பெரும் திகைப்பாகிவிடுகிறது.


ரசூலின் சொற்களிலெல்லாம் சந்தண வாசமும் ரோசாப் பன்னீரும் மணக்கின்றன. அவரது கவிதைகளை நேசித்த அனைவரையுமே அவரது மரணம் மிகுந்த மனத்தாக்கத்தை ஏற்படுத்தியது. காலத்திற்குமான கவிதைகளை எழுதியவர். மரபார்ந்த வரலாற்றின் சம்பங்களோடும் காட்சிகளோடும் அவர் தன் கனவுகளை பிணைத்திருந்தார். ரசூலின் மொழி அவர் சொல்வதுபோல கருவண்டாய்ப் பறந்துபோகும் பிரபஞ்சவெளியில் சொற்களாக.

காலங்களின் தொலைவை மொழியால் கடந்துவிடும் வித்தையுடன் செயற்பட்டார். தமிழுக்கு கவிதைகளை இன்னொன்றாக மாற்றிக்கொடுத்தார். எதிர்காலத்தின் பசுந்தரையிலும் பாறைகளிலும் எதிரொலிக்கின்றது அவருடைய குரல்.

மதரீதியான அணுகுமுறைகளில் உள்ள பன்முகத்தன்மையின் சார்பாகவே ரசூல் அவர்கள் தனது பார்வையை முன் வைத்திருந்தார். அவருடைய ஆய்வுகளும் மிக விரிந்த பார்வையைக் கொண்டிருந்தவை. புனிதங்களைக் காப்பதன் கடமை தவறாத வரலாற்றின் தடத்தில் ஒருவழிப் பாதையில் நின்றபடி தனித்து தன் சொற்களின் கூர்மையால் கேள்விகளை எழுப்பியவர். அதனால் நன்கு சுடப்பட்ட மண்கலையம் போன்றதொரு மனம் ரசூலிடம் காணப்பட்டது.

கவிஞர் ரசூல் அவர்களிடம் நான் அவதானித்தது, தாய்மைகொண்ட பெண் மனதினை. அத்தோடு குழந்தையின் பார்வையிலிருந்து வரும் அப்பழுக்கற்ற கேள்விகளே, பாலினச் சமத்துவம்கொண்ட அவரது நிலைப்பாட்டை அனைத்துக்கு மேலாய் கலகத்தின் அறைகூவலாய் எழுந்த எதிர்க்குரலே. தன்னுடைய எழுத்தால் மரணத்தின் முகத்தை எல்லாப் பக்கங்களிலிருந்தும் வாசித்தவர் ரசூல். புனித தொன்மங்களுக்குள் இறந்துபோன சொற்களை கவிதைகளுக்குள் உயிரூற்றினார். வஞ்சிக்கப்பட்ட மனதிலிருந்து எழுந்த கவிதைகள் அவருடையவை. அநீதி இழைக்கப்பட்ட பக்கம் அவருடைய பேனா தலை தாழ்ந்திருந்தது. மரபிலிருந்து உருவான ரசூலின் விமர்சனப் பார்வை சமூகத்தின்முன் கருத்து ரீதியாக எதிர்கொள்ளப்பட வேண்டும். அவரது நூல்கள் பற்றி தொடர்ந்து உரையாடப்பட வேண்டும்.

அவருடைய செம்மண் மூடிய கஃப்ரின் மணல் அவருக்கு குளிர்ச்சியூட்டட்டும். எப்போதும் தணலாய் கனன்ற அவரது மொழி ரசூலின் உடலை நிழலாய்ப் போர்த்தியிருக்கட்டும்.


-------------------------------------------------------------------------------------------------------------

( 02.10.2017, சென்னையில் நடைபெற்ற ரசூலின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியது )

No comments: