Wednesday 28 September 2011

“ஓவியம் வரையாத தூரிகை“ தொகுப்பிலிருந்து சில கவிதைகள் :
-----------------------------------------------------------------------------------------------------

ஓவியம்


ஒவ்வொரு வர்ணமாய்ப் பிரித்து
தரையில் கரைத்து
சிந்தும் ஓவியம் இது
இதன் இதயத்திலரும்பிய
கவிதைகளும் பாவப்பட்டவைதான்
வெறும் ஓவியத்தின் வாழ்வில்
என்ன அர்த்தமிருக்கமுடியும்
அசையமுடியாக் கைளும்
நகரமுடியாக் கால்களும்
பேசமுடியா உதடுகளும்
சந்தேகமே இல்லை
வாயில்லா ஜீவன்
ஆடாதசையாது
சுவரில் மாட்டப்பட்டிருந்தது
பல்லிகள் எச்சில் படுத்துவதையும் எதிர்க்காமல்
வருகிறவர்களுக்கென்ன
வரைந்தவனை
வாழ்த்திவிட்டுப் போகிறார்கள்
சட்டங்களால்
சிலுவையறையப்பட்டிருக்கும்
ஓவியத்தைப் பார்த்து
உண்மை தெரியாதவர்கள்
உயிரோவியம் என்றார்கள்

-----------------------------------------------------------------------------------------------------

யாருக்கும் கேட்பதேயில்லை


நிறுத்தாத சாட்டையின் விசையும்
ஓவியங்களின் பாடலும்
கேட்டபடியே தான் இருக்கின்றன
கடும் பாறைகளில் மோதி
ஓய்ந்து விடுகின்றது
ஆக்கிரமிப்பிலிருந்து
தப்பிச் செல்ல விரையும் அலைகள்
வாழ்க்கையின் நிழல்வரை
துயிலற்ற இருப்பின் பிண நெடி
மீட்சி பெறமுடியாக் காரிருளில்
இருண்ட சேற்றுப் பாதையைச் சமீபிக்கின்ற
அதிசயம் மிகு ஒளிச்சாரல்
இரட்சிக்குமென்ற ஆவலில்தான்
நால் திசைகளும்
திரும்பி மண்டியிட்டிருக்கின்றன
இருந்த போதிலும்
யாருக்கும் கேட்பதேயில்லை
துளைகள் அடைபட்ட
புல்லாங் குழலினுள்
செத்துக் கொண்டிருக்கிற கீதம்

-----------------------------------------------------------------------------------------------------

தாமரைக் குளத்துக் காதலி


உன் உள்ளங்கைக்குள் பொத்தும் 
தாமரைப் பூவின் அளவுதான் என் இதயம்              
குளிரில் கொடுகும் சிறு அணிற்பிள்ளை ஜீவன்
'சூ' என விரசுப்பட்டு(ம்)
நெல்மணி களவாடி
உனக்கு ஊட்ட
வரப்பில் வட்டமடிக்கும் சிட்டுக்குருவி நேசகி
உப்பு மூட்டை பிள்ளையென
உன் முதுகுச் சவாரிக்கேங்கும்
கனவுகளுக்குச் சொந்தக்காரி
கொச்சிக்காய் கடித்த உதடுகளாக
வாழ்க்கை எரிகையிலும்
உனக்காக பொறுத்திருக்கும் தனிமை எனது
தோளுரசிப் போகவும்
இறுக்கமாய் விரல் கோர்த்து
கரைகளை மிதிக்கவுமாய் ஆசை
மின்மினி வெளிச்சத்தில் விருந்து வைக்க
தூங்காமல் விழித்திருக்கும் தூக்கணாங் குருவி
நான்  தான்
உன் தூண்டிலில் மாட்டிய மான் குட்டி
நான் தான் நீ மயங்கி மூழ்கிய
உன் தாமரைக் குளத்துக் காதலி

-----------------------------------------------------------------------------------------------------

மலட்டுச் சித்திரங்கள்

பூக்களேயில்லாத சூன்ய வெளியில்
ஏன்  அலைகிறது இந்த வண்ணத்துப் பூச்சி
நிலவினில் உலர்ந்த கீதங்கள் பாதியில் அறுந்தன
வஸந்தங்கள் அழிந்து போன சுவடுகளில்
துளிர் விடுகின்றது கண்ணீர்
தழும்புகளைச் செதுக்கிடும் உளிகளின் சப்தங்களும்
கருநீல இருளிற் தெறித்து விழுகின்றது
ஆகாயத் தெருவினில்
வெறும் மலட்டுச் சித்திரங்களை
எழுதி எழுதித் தேய்கிறது
ஒரு வெண்ணிறப் பறவை
இரக்கமற்ற திசைகளின் மேல் தவறாமல் இயற்றப்படுகின்ற
வைகறை ஒவ்வொன்றும் பூசி வருகிறது
கண்விரிந்த வாழ்வின்
தீய்ந்து கருகும் அதே ஏக்கங்களை

-----------------------------------------------------------------------------------------------------

 ஓவியச் சிலந்திக் கூடு


ஒவ்வொரு நூலையும் நிறங்களாக்கி
சிரத்தையுடன் கீறிய கூடு
வாழ்வின் துடிப்புகளால்
வசித்தலுக்கான பிரயத்தனங்களால்
கால நூல் இழுத்து
கனவுச் சிலந்தி
காற்றில் கட்டியது
அது இரையின் தேடலினால்
வரைந்த பசியின் வலை
கண்ணீர்த் துளியிலிருந்து
பெருத்து விரிந்திட்ட முகம்
மௌனத் துயரினால் பூசி மெழுகப்பட்ட உதடுகள்
தன் இதயக் கற்பத்தில் தூரிகையைச் சுமந்தபடி
அபாயத்தை நோக்கி நகர்கிறது ஓவியச் சிலந்தி
அழிவுக்காகவே இட்ட அழகுக் கோலமது
ஏளனங்களாய் வர்ணங்களுக்குள் கரைந்தோடும்
அதன் வாழ்வின் பிம்பம்
மௌனச் சுமைக்குள்
ஜீவித வெடிப்புகளுக்கிடையில்
கூடு பின்னிய ஓவியச் சிலந்தி நானும்

-----------------------------------------------------------------------------------------------------

1 comment:

Anonymous said...

அத்தனை கவிதைகளையும் படித்தேன் ருசித்தேன் உங்களது சொல்லாட்சியின் முன் மண்டியிட்டிருக்கிறது பேனா. இருந்த போதும் எனக்கு மிகப் பிடித்தமான வன்மப்படுதல் சேர்க்கப்படாதது சற்று வருத்தமாக உள்ளது சகோதரியே.. .

அன்புடன் ஸமான்