Sunday 2 January 2011

படிமச் செறிவான கவிதை மொழி



- சுகுமாரன் (இந்தியா)
-------------------------------------------------------------------------------------------------------------

ஈழத்துச் சமகாலப் பெண்ணெழுத்தை அடையாளப்படுத்தும் முகங்களில் ஒன்று அனார். இந்தக் கவிதைகளைப் பெண்ணியக் கவிதைகள் என்று வகைப்படுத்த முடியுமா என்பதில் எனக்குத் தயக்கமிருக்கிறது. பெண்ணியம் என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாகப் பொருள்படுகிற கருத்தாக்கம். சொல்லும் வாய்களையும் உதடுகளையும் கேட்கும் காதுகளையும் பொறுத்து அது பொருள்படுகிறது. பெண்ணாக இருப்பதால் அனுபவிக்க நேரும் சமூகச் சிறுமைகளுக்கும் உடல்சார்ந்த புறக்கணிப்புகளுக்கும் பண்பாட்டுத் தரப்படுத்துதல்களுக்கும் மறுப்பான நிலை என்று தோராயமாகப் பொருள்கொள்ளலாம்.

பெண் காலங்காலமாக அவளுடைய உடல் சார்ந்தே மதிப்பிடப்படுகிறாள். இந்தப் பன்முகத்தன்மையில் அமைந்தவையல்ல 'எனக்குக் கவிதை முகம்' தொகுப்பிலுள்ள அனாரின் கவிதைகள். ஆனால் இந்தக் கவிதையாக்கத்தின் மையமாக உள்ள அனுபவங்கள் பெண்ணுக்குரியவை. 'பிச்சி' என்ற அனாரின் கவிதையை ஓர் ஆண்மனம் அனுமானிப்பது கடினம். இந்தக் கவிதைக்குப் பின்புலமாக உள்ள அனுபவம் இருபால் தன்மையுடையது. ஆனால் கவிதையனுபவமாக உருவாகியிருப்பது ஒரு பெண்ணின் உணர்வு நிலையிலிருந்துதான். இது வேறொரு அவதானிப்புக்கும் வழிகாட்டியது. பெண்நிலைக் கவிதையாக்கத்தில் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது பெண்ணெழுத்தின் உடல்தானே தவிர அவளுடைய உடலின் எழுத்தல்ல. இந்த உடலுக்குள் ஓர் ஆண்மனம் இயங்குவது இயற்கையாகவே அசாத்தியம். அனாரின் கவிதைகளைப் பொருட்படுத்திப் பேச வாய்ப்பளிப்பது இந்த அசாத்தியம்தான்.

இன்று கவிதையின் வகைகள் மாறியிருக்கின்றன. போக்குகள் மாறியிருக்கின்றன. வெளியாகும் கவிதைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. கவிதைக்கான பரப்பும் விரிவடைந்திருக்கிறது. கவிதையின் எல்லைக்குள் எல்லாவற்றுக்குமான இடமிருக்கிறது. கவிதையின் பேசு பொருட்களும் அபரிமிதமாக விரவியிருக்கின்றன. இவற்றிலிருந்து தன்னுடைய படைப்பியல் நோக்கங்களுக்கும் வாழ்வனுபவத்துக்கும் கூடுதல் பொருள் சேர்க்கக்கூடிய கவிதைகளை இனங் காணுவது கவிஞனுக்கும் வாசகனுக்கும் ஒரே சமயத்தில் அறைகூவலாகிறது. தன்னுடைய இருப்பை முன்வைக்கக் கூடிய கவிதைகளைக் கவிஞன் எழுதி ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தை இன்று கவிதை கோருகிறது. காலங்காலமாகக் கவிதை இந்த முன் நிபந்தனையை விதித்துக்கொண்டேதான் இருக்கிறது. அதை எதிர்கொள்ளும் மாற்றுமுறைகள்தாம் கவிதையை நிலைநிறுத்துகின்றன. இந்த மாற்றுமுறைகள் ஒவ்வொரு கவிஞனிடமும் ஒவ்வொன்றாக உருப்பெறுகின்றன.

அனாரிடம் அது ஒரே சமயத்தில் மொழிதலாகவும் முகமனாகவும் மாறுகின்றன. பெண்நிலையிலிருந்தே அனார் தன்னுடைய அனுபவங்களை முன்வைக்கிறார். அதற்கு இசைவான படிமச் செறிவான கவிதை மொழியைப் பயன்படுத்துகிறார். இது மொழிதல் சார்ந்தது. அனாரின் கவிதைகள் பெரும்பான்மையும் முன்னிலைப்படுத்தப்பட்ட ஒன்றை நோக்கியே மொழியப்படுபவை. அது அநேகமாக ஓர் ஆண் தன்னுடைய இருப்பைப் பொருட்படுத்தக் கோரும் இறைஞ்சுதலும் தன்னை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தும் வேட்கையும் தான் தவிர்க்கப்படும்போது எழும் சீற்றமும் பாராமுகமாக்கப்படும்போது ஏற்படும் ஊடலும் சக இருப்பு இல்லாதபோது உருவாகும் தனிமையும்தாம் அனாரின் கவிதைகளில் இடம்பெறும் பிரதான பேசுபொருட்கள். இதைக் காதலுணர்வு என்று மட்டுமாகச் சுருக்கி விட முடியாது என்றும் தோன்றுகிறது. இதே மனநிலையிலுள்ள உரிமை மறுக்கப்பட்ட இன்னொரு நபருக்கு இந்த உணர்வு வேறு அர்த்தங்கள் கொண்டதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இந்தத் தளமாற்றம் இதுவரை ஈழத்துக் கவிதைகளில் அரிதானதாக இருந்தது. அனுபவங்களை நேரடியாக முன்வைத்த கவிதைகளிலிருந்து சமகால ஈழத்துக் கவிதைகளை வேறுபடுத்தும் பொது அம்சமும் இதுவாக இருக்கலாம். இந்த அடிப்படையில்தான் அனாரை சமகால ஈழத்துக் கவிதையின் நவீன முகமாகப் பார்க்க முடிகிறது.

அனாரின் கவிதைகளில் இரண்டு மையங்கள் இருக்கின்றன. இரண்டும் ஒன்றுக்கொன்று முழுமைப்படுத்திக்கொள்ளும் மையங்கள். ஒரு பெண்ணிருப்பின் அனுபவங்களைக் கொண்ட மையம் ஒன்று. இதில் முதன்மையாக இயங்குவது காதலுணர்வு. ஆனால் இதன் தொனி நான் என்னவாக இருக்கிறேனோ அதுவாக ஏற்றுக்கொள் என்று வலியுறுத்துகிறது. அதைப் பொருட்படுத்தாத சகஜீவியின் நிலைப்பாட்டை விமர்சிப்பதாகவே அந்தத் தொனியும் இருக்கிறது. 'காதலைக் கொல்லும் தேவை' என்னும் கவிதை இந்த மனநிலையையும் தொனியையும் கொண்டிருக்கிறது.
காதலுணர்வின் பல கோணங்களைச் சொல்லும் அனாரின் கவிதைகளில் பெண்நிலை சார்ந்த விமர்சனம் மறைந்திருக்கிறது. இந்தக் கவிதைகளில் செயல்படும் நுட்பமான அரசியல் இது என்று வகைப்படுத்தலாம். இது கொடிபிடிக்கவோ முழக்கமிடவோ செய்வதில்லை. ஆனால் இந்த அரசியல் காலங்காலமாகக் கவிதையில் பயின்று வருகிறது. அனார் இன்னொரு காலத்தில் இன்னொரு பின்புலத்தில் இதைச் சொல்லுகிறார். இந்த நோக்கில் கவிதை என்றும் நிகழ்காலத்தின் ஊடகம் என்பதை வலியுறுத்தலாம்.

கவிதையில் அனார் கொண்டிருக்கும் இன்னொரு மையம் சமகால ஈழத்து அரசியல் சார்ந்தது. ஓர் இனத்தின் அடக்குமுறைக் கால அனுபவங்களிலிருந்து எழும் குமுறலைக்கொண்டிருக்கும் மையம் இது. இந்த மையத்தைச் சார்ந்த இரண்டு கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அவற்றில் பிற கவிதைகளில் தென்படும் ஈரக் கசிவைக் காண முடிவதில்லை. வெம்மையான வரிகளில் இயங்குகின்றன இந்தக் கவிதைகள். காதலிலும் யுத்தத்திலும் அதிகம் வதைக்கப்படுபவர்கள் பெண்கள் என்பது இந்த வெம்மைக்குக் காரணமாக இருக்கலாம். 'மேலும் சில இரத்தக் குறிப்புகள்' தீட்டிய வாளின் கூர்மையுடன் துலங்குகிறது. 'இரத்தத்தைச் சிந்தியவர்களையும் சிந்தவைத்தவர்களையும்' விமர்சிக்கிறது. அனார் வாழும் ஈழத்துப் பின்புலமின்றி இந்தக் கவிதை சாத்தியமாகியிராது. அதை மீறிய பொருத்தப்பாடும் கவிதையில் சாத்தியமாகியிருக்கிறது. தன்னிலையையும் சமூகத்தின் நிலையையும் ஒன்றாகக் கையாளும் 'பெண்பலி'யை அனார் கவிதைகளின் மொத்த இயல்பையும் அடையாளம் காட்டுகிற கவிதையாகக் கருதுகிறேன். 'அது போர்க்களம் / வசதியான பரி சோதனைக்கூடம் / வற்றாத களஞ்சியம் / நிரந்தரச் சிறைச்சாலை / அது பலிபீடம் / அது பெண்ணுடல் / உள்ளக் குமுறல் / உயிர்த்துடிப்பு / இருபாலருக்கும் ஒரே விதமானது எனினும் / பெண்ணுடையது என்பதனாலேயே / எந்த மரியாதையும் இருப்பதில்லை அதற்கு / என் முன்தான் நிகழ்கின்றது / என்மீதான கொலை'.

தன்னுடைய இருப்புக்கு எதிரான நிலவரங்களை விமர்சிக்கிற அனாரின் கவிதைகள் அந்த இருப்பை உன்னதமானதாகவே உணர்த்துகின்றன. இந்தச் சுதந்திரமான மனப்போக்குத் தான் இந்த விமர்சனங்களுக்கும் அடிப்படை.

2009 ஜூன் 27, 28
மதுரையில் நடைபெற்ற 'கடவு' கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

( காலச்சுவடு - ஓக்டோபர் 2009 )

-------------------------------------------------------------------------------------------------------------

No comments: