Wednesday 12 January 2011

மற்றமையின் கவிதைகள்



- குவளைக் கண்ணன் (இந்தியா)

-------------------------------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு கவிதையும் ஒரு உலகம். உள்ளே உள்ள இனந்தெரியாத உணர்வுகளை சொற்களைக் கொண்டு தனதேயான காட்சிகளால் காட்டுகிறது ஒவ்வொரு கவிதையும். சொற்களல்ல கவிதை. காட்டப்படும் காட்சிகளல்ல கவிதை. அவை அந்தக் குறிப்பிட்ட கவிதையின், குறிப்பிட்ட உலகின் காட்சிகள். கவிதையில் காட்டப்படும் காட்சிகள் ஒரே வண்ணப் பின்னணி கொண்டவையாகவும் இருக்கலாம், பல்வேறு வண்ணங்களின் பின்னணி கொண்டவையாகவும் இருக்கலாம். காட்சிகளின் வண்ணப் பின்னணியில் ஒற்றுமை இருக்கலாம், ஒற்றுமை இல்லாதிருக்கலாம். ஒவ்வொரு கவிதையிலும் சொற்களாலான காட்சிகளைக் கொண்ட ஒரு உலகினுள் நீங்கள் நுழைகிறீர்கள், அல்லது ஒரு உலகம் உங்களுக்குள் நுழைகிறது.முதல் வரியிலிருந்து கடைசி வரிவரை ஒரு பயணம். நீங்கள் கவிதைக்குள் பயணம் செய்கிறீர்கள் அல்லது கவிதை உங்களுக்குள் பயணம் செய்கிறது. இந்தப் பயணத்தின் முடிவில் நீங்கள் லேசான பதற்றத்தை உணர்கிறீர்கள். ஏதோ ஒரு காட்சியை நீங்கள் மீண்டும் பார்த்தாக வேண்டும். மீண்டும் ஒரு குறிப்பிட்ட வரிக்குப் போகிறீர்கள். மீண்டும் படிக்கும்போது அந்தக் குறிப்பிட்ட காட்சிகளில் உங்களுக்குப் பரிச்சயமான ஏதோவொன்று, உங்கள் சாயலில் ஏதோவொன்று இருக்கிறது. காட்சிகளைக் கொண்டு உணர்த்தப்பட்ட இனந்தெரியாத உணர்வுகள் இனங்கண்டு கொள்ளப்பட்டுவிட்டன. அல்லது இனந்தெரியாத உணர்வுகள் இனந்தெரியாத உணர்வுகளோடு கலந்து போய்விட்டன. கவிதையின் உலகம் உங்களுடைய உலகத்திலிருந்து பிரிக்க முடியாதபடி கலந்து போய்விட்டது.

இந்தத் தொகுப்பில் `அரசி' என்னும் தலைப்பில் உள்ள கவிதையைப் பார்ப்போம்:

உன் கனவுகளில் / நீ காண விரும்புகின்றபடியே / நான் அரசி / அயல் நாட்டு மகாராஜாக்களின் அரியணைக்கு / சவால் விடும் பேரரசி / அடிபணிய அல்ல / கட்டளையிடப் பிறந்தவள் / ஆணையிடுகிறேன் மந்தைகளுக்கு / குகைகளிலிருந்து தப்பிச் செல்லுங்கள் / ஆணையிடுகிறேன் சூரியனுக்கு /ஒரு இனத்தையே விழுங்கிக்கொண்டிருக்கும் / சமையலறையின் பிளந்த வாயைப் பொசுக்கிவிடுமாறு / பெரும் மலைகளை நகர்த்தித் தளர்ந்துவிட்ட / மூதாட்டிகளின் பாரித்த பெருமூச்சுகளை / வருடிவிடுமாறு பறவைகளைப் பணிக்கிறேன் / ஒருத்தி சொல்கின்றாள் / `என்னிடமிருப்பது தீர்வற்ற புலம்பல் கசப்பு' / இன்னொருத்தி கூறுகின்றாள் / `குரலில் இறக்க முடியாச் சுமை' / இருண்டு வரும் பொழுதுகளில் நேர்ந்த / துஷ்பிரயோகங்களைக் காட்டுகிறாள் எளிய சிறுமி / நான் என்னுடைய வாளைக் கூர் தீட்டுகின்றேன் / சுயபலம் பொருந்திய தேவதைகள் / விடுதலை பெற்ற பரவச வாழ்வொன்றை / வென்றெடுத்ததாய் கொண்டாடுகிறார்கள் / பாட்டம்பாட்டமாய் / பெண்கள் குலவையிடும் ஓசை / பெரும் பேரிகைகளாய் கேட்கின்றன / நான் சாம்ராஜ்ஜியத்திலிருந்தபடியே / கைகளிரண்டையும் / மேலுயர்த்திக் கூவுகின்றேன் / நான் / நான் விரும்புகின்றபடியான பெண் / நான் எனக்குள் வசிக்கும் அரசி.

இந்தக் கவிதையைப் படித்து முடித்தவுடன் தான் சரியென்று நினைப்பதைச் செய்கிற, அலட்சியமான, கட்டளைத் தொனியுள்ள, அதிகார பாவமுள்ள ஒரு பெண்ணின் முகம் எனக்குத் தோன்றுகிறது. இதுவரை என் வாழ்வில் நான் சந்தித்திருக்கும் இந்த வகையான பெண் முகங்கள் நினைவுக்கு வருகின்றன. சில ஆசிரியைகள், சில அக்காக்கள், சில சமயத்து அம்மா, சில சமயத்து தங்கை, இவர்கள் முகங்களும், உடலசைவுகளும் நினைவுக்கு வருகின்றன. இவர்களது உருவக் காட்சியோடு இந்தக் கவிதையிலிருந்து கிடைத்துள்ள பெண்ணுருவக் காட்சி ஒத்திசைகிறதா என்று பார்க்கிறேன். என்னிடம் ஏற்கெனவே உள்ள பெண்ணுருவங்களோடு இந்தக் கவிதையில் கிடைத்துள்ள பெண்ணுருவம் ஒத்திசைகிறதா என்று பார்க்கிறேன். இந்தக் கவிதையிலிருந்து கிடைத்துள்ள பெண்ணுருவத்துக்கு என் மனத்தில் உள்ள பெண்ணுருவங்களின் சாயல் உள்ளது. இந்த உருவங்கள் பெருமளவுக்கு ஒத்திசைகின்றன. ஆனாலும் பெருமளவுக்கு ஒத்திசையாமலும் உள்ளன. அடிப்படையாக ஏதோ குறைகிறது. எனது மனத்தில் உள்ள பெண்ணுருவங்களிடம் ஏதோ போதாமை உள்ளது. ஒரு பதற்றம் உருவாகிறது.

கவிதையை மீண்டும் வாசிக்கிறேன். நானும் எனது மனத்திலுள்ள பெண்ணை ராணிபோல், ராசாத்திபோல் வைத்துக்கொள்ளத்தான் விரும்புகிறேன். அயல்நாட்டு அரியணைக்கு சவால். பிரச்சனையில்லை, பேரரசி சவால் விடட்டும், கட்டளை இடட்டும். மந்தைகளுக்கு ஆணையிடுகிறார், மந்தைகளுக்குத்தானே, ஆணையிடட்டும். சமையலறையின் பிளந்த வாயைப் பொசுக்கச் சொல்லி சூரியனுக்கு ஆணை, சரிதான். மலைகளை நகர்த்தித் தளர்ந்துவிட்ட மூதாட்டிகளின் பெருமூச்சுகளை வருடித்தந்து ஆசுவாசப்படுத்த பறவைகளைப் பணிக்கிறார். முதியவர்களை ஆசுவாசப்படுத்த வேண்டும் சரிதான். பின்னர் பெண்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு எளிய சிறுமி தனக்கு நடந்த துஷ்பிரயோகத்தைக் காட்டுகிறாள், அரசி வாளைக் கூர் தீட்டுகிறாள், நறுக்க வேண்டியதுதான், வெட்ட வேண்டியதுதான். விடுதலை பெற்ற பரவச வாழ்வொன்றை வென்றுவிட்டதாக சுயபலம் பொருந்திய தேவதைகள் குழுக் குழுவாகச் சேர்ந்து குலவை இடுகிறார்கள். அவர்களது குலவை பெரும் பேரிகை ஒலியாகக் கேட்கிறது, அரசி சாம்ராஜ்ஜியத்தில் இருந்தபடியே கைகளை உயர்த்திக் கூவுகிறார், கூவட்டும். அரசி தன்னைப் பற்றிச் சொல்கிறார். அவர் தான் விரும்புகிறபடியான பெண், தனக்குள் வசிக்கும் அரசி. நல்லது கவிதை முடிந்துவிட்டது. வரி வரியாகப் படித்தாகிவிட்டது. கவிதை புரிந்துவிட்டது. ஆனால் எனது பதற்றம் குறையாதது மட்டுமல்ல, கூடியுள்ளது.
இந்தக் கவிதையில் புரியாது போகும் வரிகள் ஏதுமில்லை. ஆகவே இது புரியாததால் வரும் பதற்றமல்ல. அரசி யாருக்கெல்லாம் ஆணையிடுகிறாள்? மந்தைகளுக்கு, சூரியனுக்கு, பறவைகளுக்கு. அதிகாரம் என்று நாம் அறிந்துள்ளதில் இருந்து இவற்றுக்கு ஆணையிட முடியாது. இதுவரை அரசியல், அதிகாரம் என்று நாம் அறிந்துள்ளது முழுக்க முழுக்க ஆண் தன்மையானது. இந்த ஆண் தன்மையான அதிகாரத்தை முற்றாக நிராகரிக்கும் மற்றமையின் அதிகாரம், பெண்மையின் அதிகாரம் இந்தக் கவிதையில் வெளிப்பட்டுள்ளது. இதுதான் எனது மனத்தின் ஆண் தன்மையானதற்குப் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. என் மனத்திலுள்ள பெண்ணுருவங்கள் என் விருப்பத்தின்படி ஆனவை. எனது சில ஆசிரியைகளை, சில அக்காக்களை, சில சமயத்து அம்மாவை, சில சமயத்துத் தங்கையை எனக்குப் பிடித்த மாதிரி என் மனத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். அவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியல்ல. அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று எனக்குத் தெரியாது. நான் விரும்புகிறபடியான ஆணாக நான் இருப்பதுபோல், பெண்ணும்தான் விரும்புகிறபடியான பெண்ணாக இருக்கலாம் அல்லவா. எனது மற்றமை விடுதலை அடைந்தால்தானே நான் விடுதலை அடையலாம்.

இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் முழுக்க இரண்டு பெண்கள் வருகிறார்கள். எண்ணங்களை வைத்து நினைவும், மறதியும் நாளாந்தம் சூதாடுகிற ஒரு பெண். அவளுக்கு தேநீர்க் குவளைகள் கை தவறிப் போகின்றன. இவளுக்கு பகிர்ந்து கொள்ளாத மாலைப் பொழுது தோல்வியைத் தழுவுகிறது. இவளது வெறுமைக்குள் வெயிலடிக்கிறது ஒரு முத்தத்தைப் பற்ற வைத்து தனது உயிர்க்காட்டை எரிக்கச் சொல்லிக் கேட்கும் பெண். இவளது அறைக்கு வெளியே அலைகிறது உறக்கம். இவள் வருந்தி வருத்துபவள், இரவு தின்னும் இரையாக இருப்பவள். சுட்டு வலிக்கின்ற ரகசிய ஞாபகங்களோடு தனிமையும், வெறுமையுமாக, தாகமும் தாபமுமாக இருக்கும் ஒரு சாதாரணப் பெண்.

அனாரின் கவிதைகளில் வேறொரு பெண்ணும் வருகிறார். பெரும் பெண், `நான் பெண்' எனும் கவிதையில் எனக்கென்ன எல்லைகள் என்று கேட்கும் இந்தப் பெண்ணுக்கு காலமே உடல். இவரது உள்ளம் காற்று, கண்கள் நெருப்பு, ஆகாயமாகவும் அண்டமாகவும் இருப்பவர்.தாகமும், தாபமுமாகப் பதற்றத்துடன் உள்ள சாதாரணப் பெண்ணோடு இந்த அசாதாரணப் பெரும் பெண் எப்படி வந்தார்?`மேலும் சில இரத்தக் குறிப்புகள்' எனும் தலைப்புள்ள கவிதை, மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்துப் பழக்கப்பட்டிருந்தும், குழந்தை விரலை அறுத்துக்கொண்டு அலறி வரும்போது அதிர்ச்சியுற்றுப் பதறுவதில் தொடங்கி, பின்னர் வன்கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம், கொல்லப்பட்ட குழந்தையின் இரத்தம், சித்திரவதை முகாம்களின் இரத்தம்,வெறிபிடித்த தெருக்களின் இரத்தம், வன்ம வேட்டையின் இரத்தம் என்று போகிறது. இந்தக் கவிதையில் இரத்தம் கருணையையும், பரிதவிப்பையும் அவாவுவதாகச் சொல்லப்படுகிறது. இரத்தம் இயலாமையின் வெளிப்பாடு எனப்படுகிறது. குழந்தை சிந்திய இரத்தத்தைப் பார்த்துப் பதறும் பெண்ணுக்கு இரத்தம் சிந்தும் அனைவரும் குழந்தையாகிவிடுகிறார்கள். இப்படித் தன் குழந்தையிடம் இருந்து விரியும் கருணையும், அன்பும் அனைவர் மீதும் படர்கிறது. இப்படித் தன்னுடையதில் இருந்து தொடங்கும் அன்பு அனைவர் மீதும் கவியும்போது பேரன்பாகிறது. சாதாரணப் பெண் அரசியாகி, அசாதாரணப் பெரும் பெண்ணாகி இருக்கிறாள்.

பெரும் போராட்டத்துக்குப் பின்னும் அறிவு சென்று அடைய முடியாததை, கனவு அடைந்துவிடும். கனவில் கண நேரம் தெரிவதை, அன்பு நித்தியமாக அடைந்துவிடும். அன்பு சென்று அடைய வேண்டியதில்லை. அனைத்தும் வந்து அன்பை அடைந்துவிடும். ஓரிடம் உள்ள அன்பு ஒவ்வொருவரிடத்துக்குமாகப் பரவவேண்டும். அனாரின் கவிதைகளில் அன்பின் அபரிமிதம் அன்பைப் பேரன்பாக்கி சாதாரணப் பெண்ணை அசாதாரணப் பெண்ணாக்கி இருக்கிறது. சாதாரணத்தில் ஒரு அகரம் கூட்டினால் அசாதாரணம்தானே. இங்கே இது அன்பின் அகரம்.

(தீராநதி - மே 2009)

-------------------------------------------------------------------------------------------------------------

No comments: