Friday, 7 January 2011

அனார் கவிதைகள்- கருணாகரன் (இலங்கை)

-------------------------------------------------------------------------------------------------------------

துக்கமும் அலைச்சலும் நிரம்பிய நாட்களில் எதிர்பாராத விதமாக மகிழ்ச்சியைப் பகிர்வதற்கென்ற மாதிரியாக வந்திருந்தது அனார் கவிதைகள் (எனக்குக் கவிதை முகம்).

தபாலில் இந்தக்கவிதைத் தொகுப்பு வந்தபோது நாங்கள் மீண்டும் இடம் பெயர்ந்திருந்தோம். கடிதத்தை தருவதற்காக தபாற்காரர் எங்களைத் தேடியலைந்திருக்கிறார். இடம்பெயரிகளுக்கென்று எப்போதும் நிரந்தர முகவரி இருக்க முடியாது. பலஸ்தீனிலும் ஈராக்கிலும் ஆப்கானிலும் கொசோவாவிலும் எப்படி சனங்கள் கடிதங்களை பெறுகிறார்கள் என்று தெரியவில்லை. எப்போதும் ஓடவேண்டியிருக்கும் வாழ்க்கையில் நிற்பதற்கேது தருணம். தரிப்பதற்கேது இடம். அதனால் சில நாட்கள் பிந்தியே புத்தகத்தைப்பார்க்கக் கிடைத்தது.

போர் மீண்டும் மீண்டும் எங்களை விரட்டுகிறது. அது தொடர்ந்து விரட்டுகிறது. எந்தக்குற்றமும் செய்யாத எங்களை விட்டுத் துரத்துகிறது. முடிவில்லாத ஓட்டம். ஓடி, ஓடியே எனது காலம் போய்க்கழிந்து விட்டது. அனாரும் போரை எரிச்சலுறுகிறார். அவருக்குள் இருக்கும் காதல் பொங்கும் மனதை இந்தப்போர்ச் சூழல் கெடுத்துக் கரைத்து விடுகிறது. அவர் பெண்ணாக நின்று இதை உணர்கிறார். பெண் உணர்கையின் வழியாக அதை மொழிகிறார். இதில்தான் அவர் அதிக கவனத்தை பெறுகிறார். அனாரின் கவிதைகள் பெறுகின்ற இடமும் இதில்தான் சிறப்பாகிறது.

அனாரின் 'மேலும் சில இரத்தக் குறிப்புகள்' கவிதை மிகவும் அலைக்கழிப்பதாயிருக்கிறது. அந்தக் கவிதைக்குள் கசிந்து கொண்டிருக்கிற குருதி, வாசிப்பின் பின்னான தருணங்களில் 'சாவின் தடயமாய் என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருந்தது'. அக்கவிதையில் நிசப்தமாய் விசும்பிக்கொண்டிருக்கிற பெண்மையின் சுவடுகள் வன்முறைக்கெதிரான வலிமையான பிரதியியல் நடவடிக்கைகளாகும். ஈழத்திலிருந்து வன்முறை-வலி தொடர்பில் பெண்களால் எழுதப் பட்டவற்றுள் மிகவும் சிறந்த கவிதைப் பிரதி அதுவெனலாம்.

வித்தியாசங்களை உணர்தல் - அறிதல் (recognition of differences) - பெரும்பாலும் ஆண்மை, பெண்மை என்கிற dichotomyia - என்பதிலிருந்தே பெண்மைய அரசியலும் அதற்கான கவிதையியலும் (feminist politics and it 's poetics ) கட்டமைய முடியும். வித்தியாசங்களை உணர்தல், வெளிப்படுத்துதல் என்று வருகையில் அனார் முக்கியமானவர். தனது வித்தியாசத்தின் இருப்பை சாராம்சப்படுத்துதலினூடாகவே அவர் கட்டமைக்கிறார் (essentialising). ஆனாலும் கூட, ஆண் புனைவுக்கு எதிரான எதிர்ப்புனைவாய் குறித்த சாராம்சப் படுத்துதல் அமைந்துபோவதால், ஒரே சமயத்தில் அது சுமை நீக்குவதாகவும் அவசியமானதாகவும் இருக்கிறது (காண்க: ' மை' தொகுப்பிலுள்ள ' பருவகாலங்களைச் சூடித்திரியும் ' கவிதை) அனாரின் கவிதைப் பெண் ' விலகி நிற்பவள்' . அவள் சொல்கிறாள்:

'இன்னும்
இந்த ஒரே உலகத்திலேயேதான் இருக்கின்றன
எனக்கும் அவனுக்குமான
வெள்வேறு உலகங்கள் '
(பக்.24)

வன்முறையைப் பதிவு செய்கிற போதிலும் கூட அனார் ' பெண்ணிலைப் பட்ட' படிமங்களையே கையாள்வதை இங்கு குறிப்பிட வேண்டும். 'மேலும் சில இரத்தக் குறிப்புகள் ' கவிதையில் வருகிற மாத உதிரம் பற்றிய சங்கேதமே அக்கவிதையின் ' பெண்மை ' யை மீள்வலியுறுத்திக் கொண்டியங்குகிற ஒன்றாய் அமைகிறது.

தனது வித்தியாசங்களைக் கொண்டாட அவர் முயல்வது மகிழ்ச்சி தருகிற விடயம். பெண்ணிய அரசியலிலும் கவிதையியலும் 'கொண்டாட்டம் ' என்பது மிக அவசியமான ஆயுதம். ' நான் பாடல், எனக்குக் கவிதை முகம் ' என்றெழுதுகிறார் அனார்.

இவ்வாறு அனாரின் மேலும் சில இரத்தக்குறிப்புகள் கவிதையைப்பற்றியும் அவருடைய படைப்பியலைப்பற்றியும் சொல்கிறார்; ஹரிகரசர்மா. அந்த அளவுக்கு அனாரின் உணர்வுலகமும் அனுபவப்பரப்பும் நிகழ்காலத்தின் கொந்தளிப்பான நிலைமைகளால் காயமடைந்து கன்றியுள்ளது. பதற்றம் நிறைந்த நாட்களில் வாழும் கவி அனார். அவருடைய கவிதைகளிலும் இந்தப்பதற்றமுண்டு. நெருக்கடியுண்டு. வாழ்வு நசியும் துயருண்டு. அத்துடன் பெண்ணாயிருத்தலின் விளைவாகப் பெறும் அனுபவத்தையும் அவர் அவர் பகிர்கிறார், அதுவும் பெண் மொழியில்.

ஹரி சொல்வதைப்போல பெண்ணுடலைக் கொண்டாடுதல், பெண் நிலைப்பட்ட படிமங்களைக் கொள்ளுதல் என்பதிலிருந்தே இந்த படைப்பியக்கத்தின் வலிமை திரள்கிறது. பெண்ணுடலைக் கொண்டாடுதல், பெண் உணர்வைக் கொண்டாடுதல், பெண்மொழியைக் கொண்டாடுதல் என்று இந்த வலிமையின் விரிதளம் பெருகுகிறது. இங்கே பெண் தன்னைத்தானே அங்கீகரிக்கிறாள். தன்னைத்தானே நிறுவுகிறாள். தான் மேலெழுந்து வருகிறாள். அனாரின் பல கவிதைகளிலும் இந்த அம்சம் உள்ளது. அவருடைய பிரக்ஞையின் இயங்குதளம் அத்தகைய நிலையிலேயே உருவாகியுள்ளது. னார் பெண்கவி. அதிலும் முஸ்லிம் பெண்கவி. சிலவேளை இப்படி பெண்கவி என்று தனி அடையாளத்தை வைப்பது தவறாகவும் அனாவசியமாகவும் படுகிறது. சிலபோது அது தவிர்க்க முடியாது. கட்டாயம் என்றும் தோன்றுகிறது.

அப்படி வைத்து பார்ப்பதனூடகப் பலபுதிய பிரதேசங்களையும் ஆழ்நிலைகளையும் அறியலாம் என்றும் படுகிறது. அதேவேளை பெண்கவி என்று பிரிப்பதனூடாக சார்பு நிலை அணுகுமுறை ஏற்பட்டுவிடுமோ என்றும் படுகிறது.

இதுவே ஒரு தத்தளிப்புத்தான். தீராத தத்தளிப்பு. சமூக விலகல்களும் ஏற்றத்தாழ்வுகளும் உருவாக்கிய தவறுகளால் இப்போது இப்படி நாம் கிடந்து எல்லாவற்றுக்குமாக தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாவற்றுக்கும் அதிகாரமும் அதன் குருட்டுத்தனமுமே காரணமாக இருந்திருக்கின்றன.

பொதுவான வாழ்க்கை அமைப்பில் இன்னும் பெண் கடக்க வேண்டிய எல்லைகள் நிறையவுள்ள சூழலில் ஒரு பெண்கவியாக தொடர்ந்து இருப்பதில் பல பிரச்சினைகளுண்டு. அதிலும் முஸ்லிம் பெண்கவிக்கு அதைவிடவும் அதிக சவால்களுண்டு. இன்னும் சொன்னால் அறத்தின் வழியாகவும் சமூக அரசியல் ரீதியாகவும் இயங்க முனைந்தால் இந்த நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். அதிலும் போர்க்காலத்தில் படைப்பாளிகளுக்கு ஏற்படும் பெரும் பிரச்சினையே அறம் எழுப்பும் சவால்தான். இதையே அனாரின் கவிதைத் தொகுப்பான எனக்குக் கவிதை முகம் நூலின் முன்னுரையிலும் சேரன் சொல்கிறார்.

அனார் இந்தமாதிரியான பிரச்சினைகள், நெருக்கடிகள் எல்லாவற்றையும் எதிர்கொண்டே தன்னுடைய கவிதைகளை எழுதுகிறார். அனாரின் பிரதிகளிலும் அவருடைய உரையாடலிலும் இந்த நெருக்கடிகளின் தாக்கத்தையும் அதற்கெதிரான, மாற்றான அவருடைய நிலைப்பாட்டையும் புரிந்து கொள்ளலாம்.

இப்போது எனக்குக் கவிதை முகம் என்ற அவருடைய இரண்டாவது கவிதை நூல் வந்திருக்கிறது. முதல் தொகுதி ஓவியம் வரையாத தூரிகை 2004 இல் வெளியானது. இந்த இரண்டு தொகுதிகளின் பிரதிகளுக்குமிடையில் அனாரின் கவிதைமொழியில் நிறைய மாறுதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. சொல்முறை, உணர்முறை, அவருடைய பார்வை, கருத்து, மொழி எல்லாவற்றிலும் மாற்றங்களும் முதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தொடர் பயணத்தை நிகழ்த்தும் படைப்பாளிகளிடத்தில் எப்போதும் இத்தகைய படிமலர்ச்சியையும் முதிர்ச்சியையும் காணலாம்.

முதல் தொகுதியில் அவர் செய்கிற பிரகடனங்களை இரண்டாவது தொகுதியில் செய்யவில்லை. பதிலாக அவர் அருகிருந்தும் உள்ளிருந்தும் பேசுவதைப்போல தோன்றும் கவியாக்க முறைமையைக்கையாள்கிறார்.

ஆனால் அவருடைய அனுபவத்தில் திரண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்த பதிவுகளை அவர் விட்டுவிடவில்லை. அவற்றை இப்போது வெகு சாமர்த்தியமாகவும் இயல்பாகவும் பக்குவமாகவும் சொல்ல முனைகிறார். அமைதியொலிக்கும் கவிதைகளாக தமிழ்ப்பரப்பில் இந்தக்கவிதைகளைத் தரும் அனார் அவற்றினுள்ளே தனது தீவிரத்தை குறையாமல் பரிமாற்றுகிறார். அவருடைய அரசியல் மனித மேன்மை குறித்தது. அதற்கான அறத்தை வலியுறுத்துவது. அதைக் கோருவது. சிறு வட்டங்கள், வளையங்களுக்குள் சிக்கிவிடாதது. இது இன்றைய ஈழத்தமிழ்க் கவிதைப்பரப்பில் மிக அபூர்வமானது.

ஈழக்கவிதைப்பரப்பில் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார். அவருடைய கவிதைகளைத் திருப்பித்திருப்பிப் படிக்கிறபோது வேட்கையும் காதலும் மேலெழுகின்றன. தனிமையும் காத்திருப்பும் எரித்தாலும் ஊடல் சுடர்விடுகிறது. பதற்றமும் பீதியும் சூழ்கின்றன. திசைகள் குழம்பித்தத்தளிக்கின்றன. உள்ளடங்கியிருந்தாலும் அனாருடைய கவிதைகள் தீட்டும் அரசியற் சித்திரம் மிகவும் முக்கியமானது என்று சேரன் முன்னுரையில் குறிப்பிடுவது கவனத்திற்குரியது.

அனார் ஈழத்துக்கவிதைப்பரப்பில் தனித்துத் துலங்கும் ஒரு பிரகாசமான அடையாளமே. அவருடைய கவிதை மொழியும் மொழிபும் அசாதாரணமானது. கனிவு நிரம்பிய உணர்வும் மொழியும் மொழிபுமானது. மீள மீள வாசிக்கக் கோரும் ஈர்ப்பை அனார் ஏற்படுத்துகிறார். அவருடைய பிரதி வேறுபட்ட தளத்தில் உணச்சிப்பரிமாற்றங்களை நிகழ்த்த முனைகிறது.
ஈழத்தின் பெண் கவிதை வெளிப்பாடு பிரக்ஞை பூர்வமாக இயங்கத்தொடங்கி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. சொல்லாத சேதிகளுக்குப்பின்னரான அல்லது அதன் தொடர்ச்சியான பெண் கவிக்குரலில் அனார் பெறுகிற இடம், அடையாளம் இந்தத் தொடர்ச்சியில் ஒரு முக்கிய புள்ளியாகவும் விலகித் தெரியும் தனித்த கோடாகவும் உள்ளது. மென் சொல் முறையில் தீவிர மன நிலையை ஏற்படுத்தும் இயல்பு கொண்ட கவியாக்கத்திறன் கொண்டவராக அனார் இருக்கிறார்.


ஒரு காட்டாறு
ஒரு பேரருவி
ஒரு ஆழக்கடல்
ஒரு அடை மழை
நீர் நான்
கரும் பாறை மலை
பசும் வயல் வெளி
ஒரு விதை
ஒரு காடு
நிலம் நான்
......
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான் பெண்
(நான் பெண்)

பெண்ணை அவர் பேரியற்கையின் அம்சங்களாகவே காணுகிறார். பெண்ணுடலும் பெண் மனமும் இந்த இயற்கையின் அம்சமே. அது எல்லையற்றது. விரிவும் ஆழமும் கூடியது. எல்லாக்காயங்களின் பின்னாலும் எல்லா அழிவுகளின் பின்னாலும் உயிர்ப்புடன் திரண்டெழுவது. பேராறாகவும் ஆழ் கடலாகவும் வெளியாகவும் காடாகவும் மலைப்பாறையாகவும் விதையாகவும் காயமாகவும் காற்றாகவும் நெருப்பாகவும் அவர் தன்னை உணர முடிகிறது.

ஒடுக்கப்பட்ட நாடுகளின் அல்லது ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கவிகள் எதிர்கொள்கிற சவால்கள் அனாருக்குமுண்டு. அதிலும் பெண்கவிகள் சந்திக்கின்ற அத்தனை வலிகளும் இடர்களும். அரசியல் ரீதியாக அவருடைய பார்வை பொது வரையறைக்குள்ளிருந்தாலும் உலகு தழுவிய, மானுட விடுதலை தழுவிய நேசமும் அக்கறையையும் இருக்கிறது. புதிய உலகத்தின் நுட்பமான வலையமைப்புகளையும் பொறிகளையும் அது பெண்களை இன்னொரு தளத்தில் சிறையிடுவது பற்றியும் அனார் அதிகம் பேசவில்லைத்தான். ஆனால், அவருக்குள்ள பிரச்சினைகளை அவர் சொல்லத்தயங்கவில்லை என்பது இங்கே முக்கியமானது.

வானவில் படிந்து உருகிக் கிடக்கும்
மலைகளின் தொன்மப் புதையல்களில்
மௌனம் குருதி சொட்ட ஒளிந்திருக்கிறேன்
......
பூங்கொத்துகளில் துளிர்த்துத் தேனூறும்
வண்ணத்துப் பூச்சியின் பிரமாண்டமான
கனாக்கால கவிதை நானென்பதில்
உனக்குச் சந்தேகமிருக்கிறதா இனியும்
(வண்ணத்துப் பூச்சியின் கனாக்காலக் கவிதை)

நாளாந்தம் எண்ணங்கள் வைத்து
நினைவும் மறதியும் ஆடுகிற சூதாட்டம்
கைதவறிச் சிதறிப்போகிற தேநீர்க் குவளை
தலைக்கு மேல் மிதந்து வருகிற பூச்சிறகு
அல்லது வெறும் அசைவற்ற ஒரு வெளி
எவ்விதமாகவும்
நான் தோன்றியிருக்கவும் கூடும்
உனக் கெதிரில்
எவ்வேளையும் பிசகாமல்
(இல்லாத ஒன்று)

பெண்ணின் இயல்பெழுச்சி ஆணினால் வரையறை செய்யப்படுவது அனாருக்கும் பிரச்சினையாகவே இருக்கிறது. அவர் அதனை மறுதலிக்கிறார். இத்தகைய மறுதலிப்பும் நிமிர்வும் நமது கவிதைப்பரப்பிலும் சமூகப்பரப்பிலும் இதற்கு முன்பே நிகழத் தொடங்கிவிட்டதுதான். ஆனால் அது இன்னும் சமூகத்தின் பொதுப்போக்காக பிரக்ஞை பூர்வமாகத் திரளவில்லை. பெண் சந்திக்கிற நெருக்கடிகளினதும் சவால்கள், பிரச்சினைகளினதும் தன்மைகள் அப்படியேதான் அநேகமாக இருக்கின்றன. ஆனால் அந்த வடிவம் மாறிவிட்டது. அதாவது இப்போதுள்ள பொது நிலைமைகளில் அறிவியலுக்கேற்ப நுட்பங்கள் அதிகரித்திருக்கின்றன. அவ்வளவுதான்.

மூன்றாமுலகின் பெண்படைப்பாளிகளுக்கு எப்போதும் பல பிரச்சினைகளுண்டு. அவர்கள் தங்களைச் சுற்றிய சூழலை எதிர் கொள்வதுடன் சர்வதேச ரீதியான அழுத்தங்கள் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. மூன்றாமுலகின் பண்பாட்டுச் சுமை அதாவது அது வளர்ச்சிக்கான தத்தளிப்பிலிருப்பதால், அதனால் எதையும் கடக்கவும் முடியாது எதனையும் ஏற்றுக் கொள்ளவும் முடியாது என்ற நிலையில், பெண்களே அந்தச் சுமையைக் காவ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஆண்கள் இதில் மிகவேகமாக மாற்றங்களின் பின்னோடும்போது பெண்ணுக்கு அந்தச்சந்தர்ப்பத்தை அந்தச் சமூகங்கள் கொடுப்பதில்லை. இந்த ஓர வஞ்சனை எந்தவகையான வெட்கமுமின்றி, கருணையுமின்றி ஆணாதிக்க உலகினால் தொடரப்படுகிறது. இதில் ஏற்படும் கொதிப்பு நிலையை அனார் துணிச்சலோடு முன்னீடாக்குகிறார். அவருடைய வாழ் களமான முஸ்லிம் சமுகத்தின் பிடிமானங்களைக்கடந்தும் அவருடைய உரையாடல் நிகழ்கிறது. இப்படி நிகழும்போது அவருடைய மொழி புது மொழியாக புதிய பிரதேசங்களைத் திறக்கிறது. இதில் அனாரின் சாவி நுட்பமானது. இதில் அனாரையும் விட சல்மா அதிக எல்லைகளில் விரிகிறார். அதுவும் பாலுறவு மற்றும் பாலுணர்வுத்தளத்திலும். அதிலும் அதிர்ச்சியும் வியப்பும் கவனமும் ஏற்படுகிற விதமாய். ஆனால் அனாரோ இன்னொரு புதிய தொடுகைப் பிரதேசத்தில் பயணிக்கிறார். ஒருவரின் பாதையில் இன்னொருவரும் பயணிக்க வேண்டும் என்பது இங்கே அர்த்தமில்லை. அவரவர்க்கான பயண வழிகளிலும் திசைகளிலும் அவரவர் செல்லும் சுதந்திரமுண்டு.

போரால் கட்டப்பட்ட அல்லது சுற்றிவளைக்கப்பட்ட வாழ்க்கையில் மனித அடையாளம் பெறுமதியற்றது. இந்த வருத்தம் எந்தப்படைப்பாளியையும் கொதிப்படைய வைக்கும். உலகின் சகல திசைகளிலும் நெருக்கடியான நிலைகளில் படைப்பாளிகள் மனித அடையாளத்துக்காகவும் இருப்புக்காகவும் தங்களின் குரலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் உண்மையான போராட்டமாக இருந்திருக்கிறது. அறத்தின் வழி நிற்பதற்காக அவர்கள் பெருத்த சவால்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். படைப்பாளியின் இயங்கு தளம் அப்படித்தான் இருக்கும். அறத்தை நிராகரித்து விட்டு அதிகாரத்துக்காக இயங்குவதென்பது அல்லது அதைச்சார்ந்து நிற்பது என்பது படைப்பாளி தன்னைத்தானே நிராகரிப்பதாகும். ஆகவே, இங்கே அனார் அறத்தை வலியுறுத்தியே தன்னை நிறுவுகிறார்.

அனாருடைய கவிமனம் அன்பும் பரிவும் நேசமும் கருணயும் நிரம்பியது. அவரிடம் வன்மனது இல்லை. அவருடைய மொழியிலும் மொழிபிலும் வன்னியல்பில்லை. ஆனால் தீர்மானங்களுண்டு. வலிமையுண்டு.

காற்றைத் தின்ன விடுகிறேன்
என்னை
என் கண்களை
குளிர்ந்த அதன் கன்னங்களை வருடினேன்
.....
(காற்றின் பிரகாசம்)

பேரியற்கையாக விரிந்திருக்கும் பூமியில் எல்லாவற்றையும் அவர் சிநேகம் கொள்ள முனைகிறார். அந்தச் சிநேகம் ஒரு பெருங்காதலாகப்பிரவாகிக்கிறது. அது மனிதரிடத்திலும்தான். இயற்கையினிடத்திலும்தான்.

அதனாலென்ன
அவன் வாள் உறைக்குள்
கனவை நிரப்புவது எப்படியென்று
எனக்குத் தெரியும்
மகத்துவம் மிகுந்த இசை
தீர்வதேயில்லை.
நான் பாடல்
எனக்குக் கவிதை முகம்

பெண்ணின் சேதி, பெண் அடையாளம் இயல்பான ஒன்றென்று உணர்த்தும் எளிய, நுட்பமான வரிகள் இவை. இதுவே அனார்.

எனக்குக் கவிதை முகம் அன்பூறும் சொற்களாலான நெகிழும் சித்திரங்களைக் கொண்டதொரு கவிதைத்தொகுதி. போரின் பேரோலங்களுக்கிடையில் அனார் எப்படி இத்தனை நெகிழ்ச்சியான மொழியைக் கொண்டிருக்கிறார் என்பது தீரா ஆச்சரியமே.


( சரிநிகர் - ஜன - பெப் 2008 )


-------------------------------------------------------------------------------------------------------------

No comments: