அனாரின் தொடரும் ஆளுமைப் பதிவுகள்
- எம். எம். எம். நூறுல்ஹக் (சாய்ந்தமருது)
----------------------------------------------------------------------------------------------------------
தமிழ் பேசும் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவரும் பரவலான வாசிப்பு செய்யப்படுபவருமான ஒருவர்தான் கவிதாயினி அனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இலக்கிய ஆளுமை ஈழத்து இலக்கிய வளத்திற்கு கிடைத்த இன்னுமொரு வலிமையாகும்.
- எம். எம். எம். நூறுல்ஹக் (சாய்ந்தமருது)
----------------------------------------------------------------------------------------------------------
தமிழ் பேசும் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவரும் பரவலான வாசிப்பு செய்யப்படுபவருமான ஒருவர்தான் கவிதாயினி அனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இலக்கிய ஆளுமை ஈழத்து இலக்கிய வளத்திற்கு கிடைத்த இன்னுமொரு வலிமையாகும்.
சாய்ந்தமருது மண்ணை பூர்வீகமாகக் கொண்டு 1990 களில் எழுத்துலகிற்கு வந்த பெண்படைப்பாளிகளுள் கவிதைத் துறையில் நமது ஆளுமை என்று சொல்லுமளவில் வளர்ந்தும், உயர்ந்தும் நிற்கின்ற ஒருவராகவும் அனார் அடையாளப்படுத்தப்படுகின்றார்.
இதுவரை மூன்று கவிதைத் தொகுதிகளை அனார் தந்திருக்கின்றார். இவரது முதல் கவிதைத் தொகுதி 2004 இல் ‘ஓவியம் வரையாத தூரிகை’ என்ற தலைப்பில் வெளிவந்தது. இத்தொகுதிக்கு 2005 ஆம் ஆண்டு இலங்கை அரசின் சாகித்திய விருதும் வடக்கு, கிழக்கு மாகாண அமைச்சின் சாகித்திய விருதும் கிடைக்கப்பெற்றன.
கவிதைத் துறைக்காக இவ்விருதைப் பெற்ற முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுப் பதிவையும் தமதாக்கிக் கொண்டுள்ளார். இவரது இரண்டாவது தொகுதி 2007 இல் ‘எனக்குக் கவிதை முகம்” என்ற தலைப்பில் வெளிவந்தது. இந்நூலினை கலச்சுவடு பதிப்பகம் தனது 203 வது வெளியீடாக வெளிக் கொணர்ந்தது. அதே பதிப்பகத்தின் 313 வது வெளியீடாக அனாரின் மூன்றாவது கவிதைத் தொகுதி “உடல் பச்சை வானம்” என்ற தலைப்பில் அண்மையில் வெளிவந்திருக்கின்றது.
64 பக்கங்களில் விரிந்திருக்கும் இந்நூல் 34 கவிதைகளைச் சுமந்து கொண்டிருக்கிறது. கவிதைத் தலைப்பு ஒவ்வொன்றும் கவிதையாக அமைந்திருக்கின்றன. ‘உடல் பச்சை வானம்’ என்ற நூலின் தலைப்புக் கூட வித்தியாசமாகவும் பல அர்த்தங்களை விரித்துக் கூறக்கூடியதாகவும் இருக்கின்றது.
அன்னாரின் இரண்டாவது நூலான “எனக்குக் கவிதைமுகம்” என்ற கவிதைத் தொகுதியில் இடம்பெற்றிருக்கும் கவிதைகளுக்கும் “உடல் பச்சைவானம்” தொகுதி கொண்டிருக்கும் கவிதைகளுக்குமிடையில் கருத்து நிலை உணர்வுகள் மாறுபட்டுக் காணப்பட்டாலும், கவிதை வெளிப்பாட்டு வடிவத்தில் பாரிய வித்தியாசத்தைக் காணமுடியவில்லை.
கவித்துவம், சொல்லாட்சி இறுக்கம், கருப்பொருள் என்ற தன்மைகளில் மிகவும் அவதானம் செலுத்தப்பட்டு செழுமையானதும் சூழ்நிலை கருத்தினைப் புலப்படுத்தும் வகையானதுமான கவிதைகளை யாப்பதில் அனாருக்கென்று ஒரு பக்குவமும், தனித்துவமும் இயல்பாக இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டுவதில் அவரது கவிதைத் தொகுதிகள் முக்கிய இடம்வகிக்கின்றன.
அனாரின் முதலாவது கவிதைத் தொகுதியான ‘ஓவியம் வரையாத தூரிகை’யினைத் தொடர்ந்து வெளிவந்த இரு தொகுதிகளிலும் இடம்பெற்றிருக்கும் கவிதைகளில், கவிதை வெளிப்படும் விதம் ஒரே சாயலைக் கொண்டிருக்கின்றன. அதுதான் அனாரின் கவிதைத் தனித்துவத்தை அடையாளப்படுத்தும் பாங்காகவும் அமைந்து விடுகின்றது.
கவிதைகளை வாசிப்புக்குட்படுத்துகின்ற போது வாசகனின் உணர்வு நிலையில் திடீர் ஆச்சரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் வரிகள் அமைந்துவிடுவதுண்டு.
இவ்வாறான நிறையக் கவிதைகளை ‘உடல் பச்சைவானம்’ தொகுதி கொண்டிருக்கின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் கவிதைகளை சுட்டிக்காட்டலாம்.
‘வளராத இறகுகளுடன்
அவனது சொற்கள் மின்னி மின்னிப் பறக்கின்றன’
(நிலாக்குட்டி - பக்கம் 20)
‘இசைபாறையாகிவிட்டது’
(நிசப்தத்தில் குளிரும் வார்த்தை - பக்கம் - 22)
................
உப்புச் சுவையாய் இரு உடல்கள் மாறினோம்
அலைகளை எழுப்பி எழுப்பி கடல் ஆகினோம்’
(வித்தைகள் நிகழ்த்தும் கடல் - பக்கம் 24)
‘அவளது கரங்கள்
எப்போதும் வற்றாது கிளை பிரிந்தோடும் நீரோடை’
(அக்காவுக்குப் பறவைபோல சிரிப்பு - பக்கம் 32)
‘.... தொன்மையான அவளது ஆன்மா
கண்களில் எட்டி எட்டிப் பார்த்து
சூரியக்கோயிலை தழுவி வீசும்
ஆதிக்காற்றின் காதுகளுக்குள்
பேருணர்ச்சியை கூவினாள்’
(சூரியக் கோயில் - பக்கம் 50)
மேற்சுட்டிக்காட்டிய கவிதைகளுடன் நீர் நடனம், குறிஞ்சியின் தலைவி, அதிசயத்தை ஒளியால் பேசிக்கொள்ளுதல், கனவுக்குள் அசையும் உடல் மொழி போன்ற தலைப்பிலான கவிதைகளும் அனாரின் கவித்துவ புனைவு ஆளுமைக்கு சான்றாக நிமிர்ந்து கொள்கின்றன.
இவையல்லாத கவிதைகளில் கவித்துவம் இல்லை என்று இந்தச் சுட்டுதலை அர்த்தப்படுத்திவிடக்கூடாது. ஏனெனில் வாசிப்பு என்பதும் ஈர்ப்பு மற்றும் நோக்கு என்பவைகளும் ஒருவருக்கொருவர் வேறுபட முடியும். அந்த வகையில் எனக்குள் ஏற்பட்ட ஆகர்ஷிப்பை மட்டுமே இங்கு பதிவாக்கியிருக்கின்றேன்.
ஒரு நிலையினை அடைந்து விட்டால், தம்மால் யாக்கப்படும் அனைத்துக் கவிதைகளும் பேசப்பட வேண்டியவை என்கின்ற போதைக்குள் நின்று கவி புனையும் கவிஞர்களை நாம் இன்று அதிகளவில் பார்க்கிறோம்.
இத்தகைய நிலைக்கு அனார் இன்னும் ஆளாகவில்லை. அவரது மூன்று கவிதைத் தொகுதிகளும் அவரது கவிதை முதிர்ச்சியையும் ஆளுமைப்பாங்கையும் எடைபோட்டுக் காட்டும் கண்ணாடிகளாகவே காணப்படுகின்றன. கருப்பொருள், கவிதை வெளிப்படும் பாங்கு, சிந்தனைப்பாங்கு, கையாளும் சொற்கள் என்று எல்லாமே அனாரிடம் புதிது புதிதாக பிறக்கின்றன. அவரது பெரும்பாலான கவிதைகளில் இவை கைகூடியும் வந்துள்ளன.
“உடல் பச்சை வானம்” தொகுதியில் இடம்பெற்றிருக்கின்ற ‘குறிஞ்சியின் தலைவி’ எனும் தலைப்பிலான கவிதையை வாசிப்புச் செய்யும் போது ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுதியில் இடம் பெற்றிருக்கும் ‘நான் பெண்’ என்ற கவிதையின் இன்னொரு வடிவமாகப் புலப்படுவதை அவதானிக்கலாம். இங்குதான் கவிஞனின் வெற்றியிருக்கிறது. ஏனெனில் ஒரே கருப்பொருளானாலும் அதனை வேறு விதமாகவும் வழங்க முடியும் என்பதையே இது நிரூபிக்கிறது.
இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கும் நிருபரின் அறிக்கை, இறுதி நிலைகள் ஆகிய இரு கவிதைகளிலும் அனாரின் தனித்துவ அடையாளங்களைக் காண முடியவில்லை. வெறும் வார்த்தைக் கோர்வைகளாக அமைந்திருந்தன. இவ்விரு கவிதைகளும் அனாரின் வழமையான கவித்துவ புலமைத்துவத்திலிருந்து விலகி நின்று வெறும் செயற்கைத்தன்மையை வெளிக்காட்டுவனவாக உள்ளன.
எது எப்படி இருப்பினும் ‘உடல் பச்சை வானம்’ தொகுதியில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் குறித்து சுகுமாரன் பின்னட்டையில் குறிப்பிடுவது அனார் கவிதையினுள் இயற்கைத் தன்மையை எடுத்துக்காட்டப்போதுமானது. அவற்றிலிருந்து...
“முந்தைய தொகுப்புகளில் வெளிப்பட்ட அவருடைய கவிதை முகம் இதில் வேறு தோற்றம் கொள்கிறது. முந்தைய கவிதைகளில் பெண்ணிருப்பின் உணர்வு நிலையில் உரையாடிய கவிஞர் இந்தத் தொகுப்பின் கவிதைகளில் ‘பெண்ணுடல் பூண்ட இயற்கை நான்’ எனப்பிரகடனம் செய்கிறார்.
தொகுப்பின் கவிதை வரிகளுக்கிடையில் பெண் நீராகிறாள், ஊற்றாக, நதியாக, மழையாக, கடலாக மாறுகிறாள். பெண் நிலமாகிறாள், மலையாக, வயல் வெளியாக உருவங்கொள்கிறாள். பெண் காற்றாகிறாள், மூச்சாக, ஊழிப்புயலாக வடிவெடுக்கிறாள். பெண் ஒளியாகிறாள். அனலாகிறாள், இயற்கை பெண்ணுடலாகிறது. இயற்கை பெண்ணாகிறது.” (சுகுமாரன்)
“உடல் பச்சைவானம்” நமது வாசிப்புக்கு வனப்பானது. ஈழத்து இலக்கிய களத்திற்கு வலிதானது. அனாரின் கவித்துவ ஆளுமையின் மற்றுமொரு தடம்.
( தினகரன் - 22 ஆகஸ்ட் 2010 )
----------------------------------------------------------------------------------------------------------