இசை எரிக்காத தீ...
- அனார்
-------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------
“ உன்னை அன்றி வேறெதையும் நினைத்தறியேன் ......
உன் புகழ் கூறாத சொல் அறியேன் ......
அணை போட்டுத் தடுக்காத அருள் வெள்ளமே ......
நெஞ்சில் அலைமோதும் நினைவெல்லாம் நீ யல்லவோ ...... ”
என்ற காயல் ஷேக் முஹம்மது அவர்களின் இஸ்லாமிய கீதத்தை என் சிறுவயதில் கேட்டபோதெல்லாம் மிகவும் அந்தரங்கமான நெகிழ்வான ஒரு உணர்வு ஏற்படுவதுண்டு. இன்றும் மனம் கனத்திருக்கும் தனிமையில் இப்பாடலை கேட்கும்பொழுது அக்குரலின் உணர்வு ஒருவித பரிதவிப்பை தருவதுண்டு. அந்தப்பாடலின் இரண்டாம் பகுதியில் அழகானவரி ஒன்று பாடப்படும் :
“ தனிமைக்குள் தனிமையாய் இருப்பவனே ...... ”
இவ்வரியை அப்பாடகன் பாடும் தருணம், உருகி வந்துவிழும் கண்ணீர்த் துளிகள்… அவனுடைய குரலின் இனிமைக்காகவா ? அந்த வார்த்தையின் ஆழ்ந்த அர்த்தத்திற்காகவா ? பாடலின் மெட்டுக்காகவா ? என்று எனக்கு இப்போதும் சரியாகத் சொல்லத் தெரியவில்லை.
நான் மிகச் சிறுமியாக இருந்த நாட்களில், இசையை உணர்வதற்கான பல வாய்ப்புகள் வீட்டிலிருந்தன. எனது தந்தை மிக நேர்த்தியான அறபுமொழிப் பாடல்களை / ஹஸீதாக்களை பாடக் கேட்டு வளர்ந்தவள். எனது தந்தையின் தந்தையும் ஆலிமாக இருந்தவர். மாலைப்பொழுதுகளில் அவரது சாய்மணைக் கதிரையில் சாய்ந்தபடி பாடிக்கொண்டிருப்பார். அப்போதெல்லாம் அவரது மடிக்குள் அமர்ந்திருப்பேன். அறபுச் சொற்களுக்கிருக்கும் மாயத்தன்மை வசீகரிக்கக் கூடியதும் தனித்துமானதும் ஆகும். பள பளப்பான, கம்பீரமான, கூரான வாள்போன்றது அராபியமொழி.
தமிழ்மொழியும், அறபுமொழியும் இரண்டரக் கலந்து சொற்பொழிவுகள் கலைநிகழ்வுகள் என ஊரே களைகட்டியிருக்கும், இசைமயமான காலமொன்றுவரும் அது ‘றமழான்’ நோன்பு காலம். ஒரு மாதம் முழுவதும் சிறுவர்களாகிய நாங்கள் இரவில் தூங்குவதே இல்லை. றபானின் ஓசையைக் கேட்பதற்காக காதுகளைத் திறந்து வைத்து கண்களை மூடிக்கிடப்போம். நள்ளிரவு மின்சாரமில்லாத அந்நாளில் ஊரில் கைவிளக்கை சிறுவன் ஒருவன் கைகளில் பிடித்தபடி முன்னே நடக்க றபான் இசைப்பவர் ‘ பாவா ‘ தனது றபானை மிடுக்குடன் பிடித்து பலமாக தட்டித் தட்டி ஒலியெழுப்பி ஒவ்வொரு வீதியாக உறங்கும் மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பிச் செல்வார். அவரது வாயிலிருந்து ‘ஹஸீதா’ அதிர்ந்துவிழும். அவ்விரவின் தனிமைக்குள் அந்த முதிய பாடகன் தன் ஆண்மையான தீராத குரலைச் சிதறவிட்டு, வெறும் கால்களை மணலில் புதையும்படி நடந்து செல்வதை பச்சைநிறத் தலைப்பாகை மறையும்வரை நானும் கோடி நட்சத்திரங்களும் பார்த்து நிற்ப்போம். என்றைக்காவது ஒருநாள் அவரை அந்நள்ளிரவில் ‘ ஸஹர் ‘ நேரம் வீட்டுகழைத்து தேனீர் கொடுப்பார்கள். அவர் தேனீர் அருந்தும் வரை அந்த றபானை தொட்டு மெல்ல தட்டித் தட்டி அதிசயத்தைப் பார்த்து நிற்பேன்.
இன்று அந்த அற்புதங்கள் மெல்ல மெல்ல அருகி வருகின்றன. இருந்த இசை மரபுகளையும் முற்றாக இழந்து நிற்கிறோம். ‘ இஸ்லாத்தில் இசை ‘ எனும் இந்த நூலை வாசிக்கையில், என் சிறு வயது உணர்வுகள், மிகுந்த ஆதங்கத்துடன் நினைவின்மேல் எழுந்து வருவதை தவிர்க்க முடியவில்லை. நெடுங்காலமாக இசை தடைசெய்யப்பட்ட ஒன்று எனும் கருத்தே நிலவியது. இசை கேட்டால் “ நரகத்தில் இரு காதுகளிலும் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுமென“ பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடுங்கியவர்களாகவும், வெருண்டோடுபவர்களாகவும் இருந்தோம்.
எதற்குத்தான் அன்று இசை இருக்கவில்லை. பிறந்த குழந்தையை முக்காடிட்ட பெண் மெல்லிய குரலில் பாடிப்பாடி தூங்க வைப்பதிலிருந்தே இஸ்லாத்தில் இசை அல்லது பாடல் கேட்பதற்கான முதல் வாய்ப்பு உருவாகி விடுகின்றது. இசையுடன் தொடங்கி இசையுடன் முடியும் வாழ்வு முறையே எங்களது கிராமத்திலிருந்தது என, எனது தந்தை விபரிக்கக் கேட்டிருக்கிறேன்.
சுமார் 60 – 70 வருடங்களுக்கு முன்புள்ள திருமண நிகழ்வு : பறை அடிப்பவர் ஒலி எழுப்பி முன்செல்ல, குரவை இடும் முஸ்லீம் பெண்கள் கூட்டமாய் குரவையிடும் ஓசையோடு பின்னே நடந்துவர, நடுவில் மணமகனைச் சூழ்ந்தபடி ஆண்கள் அறபு கீதங்களைப் பாடியவாறு, கிராம வீதிகளில் ஊர்வலம் வருவார்கள்.
மரணித்தவரை சந்தூக்கில் கொண்டு செல்லும் போதும், ‘பைத்‘ ஐ பாடி நல்லடக்கத்திற்கு எடுத்துச் செல்லும் வழக்கமும் இருந்திருக்கிறது.
மகிழ்ச்சிகரமான நிகழ்வொன்று நடக்கும் வீட்டுக்கு, ‘ பக்கீர் பாவாக்களை ’ அழைத்துவந்து இரவில் தொடங்கி அதிகாலைவரை இடம்பெறும் இசையும், நடனமுமான கோலாட்டம் போன்றதான இசை வடிவங்களும் இருந்துள்ளன.
பெண்கள் தனித் தனி குழுக்களாக இசைத்துப் பாடுகின்ற ‘மௌலூது‘ எனப்படும் ஒருவித கதைப் பாடல்கள் இன்றும் சில இடங்களில் பெண்களால் பாடப்பட்டு வருகின்றன.
உலகில் இசையோடு சம்மந்தப்படாத மதங்கள் எவையுமில்லை. மதங்களை மனிதர்களிடம் எடுத்துச் சென்றதில் இசைக்கு தனிப் பங்குண்டு. ‘ சூஃபிகள் ‘ அவர்களுக்கான தனித்த இசை வடிவங்களையும், நிலவிவருகின்ற இசையில் நிறைந்த தாக்கத்தைச் செலுத்துபவர்களாகவும் காணப்படுகின்றனர்.
உலகின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் ஐந்து வேளைகளிலும் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்படுகின்றது. இந்த ‘ அதானை ‘ நபிகளின் காலத்தில் மிக இனிமையாக கூறியவர் கறுப்பினத்தவரான பிலால் (ரழி) அவர்களாகும். தன்னிகரற்ற அவரது குரல் வளமும், இசைத் தன்மையும் மிகப் பிரபலமானது. பிலால் (ரழி) அவர்கள் “ புல் புல் “ (பாடும் பறவை) என்று நபிகளால் செல்லப் பெயரிட்டு அழைக்கப் பட்டார்கள்.
தாவூத் (நபி) க்கு வழங்கப்பட்ட வேதத்தை, இசையினூடாக அவர் மொழியும் அழகில், மனிதர்கள் மயங்கினர். பறவைகளோ அவரது குரலின் இனிமை கேட்டு, சற்று நின்று தாமதித்து செவிமடுத்து பின் பறந்து சென்றன என்று சொல்லப்படுகின்றது.
“ எங்கள் மீது ஒரு பௌர்ணமி பிரகாசிக்கிறது
அது மக்காவிலிருந்து விடைபெற்று வருகிறது “
இவ்வரிகள் மக்காவிலிருந்து வெளியேறிய நபி அவர்களை, மதீனாவின் மக்கள் ஆணும் பெண்ணுமாய்க் கூடி, மகிழ்ச்சியில் பாடி வரவேற்று இசைக்கப்பட்ட பிரபலமான பாடலாகும்.
இசை என்பதே ஒருவகை ஆன்மீகம்தான்.
எம்முடைய இசையை அறிவதற்கான, ஓரளவு ஆறுதலான விடயங்கள் இந்தநூலில் உள்ளன. ஹறாம், ஹலாலுக்கிடையிலான தெளிவான பார்வை சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது. ஆகுமான இசை என்பது என்ன ? எத்தகைய இசை ஆகுமானதில்லை ? என்ற இரு கேள்விகளுக்கும் இந்நூலில் பதில் இருக்கிறது. நடு நிலமையான ஒரு சிந்தனையை வலிமையாக பதிவு செய்திருக்கிறது. பல ஆதாரங்களை முன்நிறுவி முற்றிலுமாக இசையை இஸ்லாம் மறுக்கவில்லை என்ற கருத்தை தெளிவு படுத்துகின்றது. ஆனபோதிலும், மேலும் தெளிவு பெறவேண்டிய விடயங்களுக்கான தேவைகள் காணப்படுகின்றன. எனவே இந்தநூலை ஆரம்ப முன்னெடுப்பாகக் கொள்ளமுடியும்.
மேலும் இந்நூலில் கூறப்பட்டது போல :
“ நதிக்கரைகளில் மரங்களின் நிழலில்
இசைக்கருவிகளின் நரம்புகள் இசைக்கும்
மெல்லிய கவிதைகளை
ரசிக்கத் தெரியாதவன்
கடின சித்தம் கொண்டவனும்
கழுதைக்கு நிகரானவனுமாவான் ! ”
வெளியீடு - நிகழ், இலங்கை
(உயிர்மை - ஏப்ரல் 2012)
-------------------------------------------------------------------------------------------------------------
ரவிக்குமாரின் “மழை மரம்”
- அனார்
-------------------------------------------------------------------------------------------------------------
“பொடு பொடுத்த மழைத் தூத்தல்
பூங்காரமான நிலா
கருமிருட்டு மாலை வெள்ளி
கதவு திற கண்மணியே.......“
எப்போதெல்லாம் மழை என்னைச் சந்திக்க வருகிறதோ அப்போதெல்லாம் எனது பிரதேசத்திற்கே உரிய பிரத்தியேகமான இந்த நாட்டார் பாடல் என் நினைவுக்கு வந்துவிடும்.
ரவிக்குமார் அவர்களின் “மழை மரம்“ தொகுப்பை மூன்று பிற்பகல்களில் படித்து முடித்தேன். அப்போது மூன்று முறையும் மழை பெய்தபடி இருந்தது.
ஏனோ என்னுடைய மண்பாட்டுக்கள் ஒன்றன் பின் ஒன்றாய் என் நினைவுக்கு வந்து கொண்டிருந்தன. வாசற்படிக்கட்டுகளில் குதித்து தெறித்த நீர் சாரங்களும், மழை மரத்தின் ரவிக்குமார் கவிதைகளும், பழைய நாட்டுப்புற கவிகளும் கூடவே ஆவி பறக்கும் “நன்னாரி வேர்“ தேனீருமாய் கலந்து கிடந்த இந்த மூன்று மாலைப் பொழுதுகளும் அதன் மிருதுவான தன்மைகளால் கவிதையாகியிருந்தன.
ரவிக்குமார் அவர்கள் பல்வேறு துறைகளில் தனது எழுத்து ஆளுமையை வெளிப்படுத்தியிருப்பவர். எனக்கு அவரது சிறுகதை, மொழிபெயர்ப்பு நூல்கள் மற்றும் கட்டுரைகளில் பெரும் மரியாதையுண்டு. க்ரியாவின் வெளியீடாக வந்துள்ள மழை மரம் கவிதைத் தொகுப்பில் உள்ளடங்கியுள்ள அவரது கவிதைகள் அனைத்திலும் நிறைந்த மண் வாசனையும், அவர் கையாண்டுள்ள படிமங்களில் கிராமியத் தன்மைகளும், சொல்முறைகளில் அவரது மண் மணமும் என்னை கவர்ந்திருந்தது.
கவிதையின் வெளிப்பாட்டு உருவ அமைப்பை விடுத்து, உள்ளடக்கமாய் உள்ள கவிமனதை உணர்ந்து வாசிக்கையில், எதிரெதிர் அமர்ந்துள்ள நான்கு கண்களின் பரிவும், பரிமாற்றங்களும், மௌனமும், தழும்பலும், தீவிரமும், வேட்கையும், கனிவும், காதலும் இளைய கவிமனத்தின் ஒரு பரிதவிப்பான ஓசையை எவராலும் செவி சாய்த்துக் கேட்க முடியும். தொகுப்பினில் எனக்குப்பிடித்த சிறந்த கவிதைகளில் ஒன்று...
நெய்யப்படுகிறது கல்யாணப் பாய்
அதில் ஏற்றப்படும் வண்ணங்களும்கூட
பிரத்தியேகமானவைதான்
ஆடையின்றித் துயிலும்போது
முதுகில் ஒட்டிக்கொள்ளக் கூடாதில்லையா?
எல்லாம் சரிதான்
அதில் ஏன் கிளிகளையும்
மான்களையும் நெய்ய வேண்டும்?
அவற்றுக்கிடையில்
படுக்கும்போது
நீயே ஒரு வனமாகிப்போகிறாய்
கிளிகள் பறந்தமர்கின்றன
உன் தோள்களில்
மான்கள் இளைப்பாறுகின்றன
உன் காலடியில்
விடியும்போது
வாசிக்கத் துவங்குகிறேன்
வெற்று முதுகில் கோரைகள் எழுதிய
காதலின் பின்னுரையை“
(பக்கம் – 64)
நுட்பமான நினைவை, மென்மையான மொழியாக்கத்தால் அவர் கூற விழைகிறார். அழகு துளிர்விட்டு பனி படர்ந்து கொட்டும் காலையின் இலைகளைப் போல மெல்ல அசைகின்ற கவிதைகள் ரவிக்குமாருடையவை. எல்லோராலும் புரிந்து கொள்ளக் கூடியவை. இருண்மை மறுத்த மிக மிக எளிமையான முயற்சி.
“மெளனித்துவிட்டன சுவர் பூச்சிகள்
உறங்கப் போய்விட்டதுஆந்தை
எங்கோ
பதறித் துடித்தழும் குழந்தையைச்
சொற்களற்ற மொழியால்
ஓய்ச்சுகிறாள்
தாலாட்டு தெரியாத தாயொருத்தி“
(பக்கம் – 68) எனவும்
“பட்டையுரிந்த தைல மரங்களில்
பெயர் பொறித்த பிராயம்
சருகுகளோடு உதிர்ந்துகிடக்கிறது“
(பக்கம் – 69)
“பின்வாசலில் விழும் வெளிச்சத்தில்
பேய்களின் வரவெண்ணிக்
காத்துக் கிடக்கிறது
வளர்ப்பு நாய்
அடர்ந்த அவரைப் பந்தலில்
சோழிகளாய்ச் சிதறிக் கிடக்கும் பூக்களைப்
பொறுக்குவதற்கு
மண் சுவரில் மாட்டியிருக்கும்
முருகனுக்குத் தெரியாமல்
நழுவிப் பறக்கிறது மயில்“
(பக்கம் – 71)
இவ்விதமெல்லாம் அழகும் எளிமையுமாய் இவரது கவிதைகள் அனுபவங்களைப் பதிகின்றன. நமது ஜன்னல் வானத்தில் வழிந்து நம்மை ஈரமாக்குகின்ற மழையை, நமது வாசல் மரங்களில் தாவி தென்னம் பூக்களை கொறித்துப்போடும் அணிலை நம் கை நீட்டித் தொட்டுப்பிடிக்க முடிகிறது. அவரது மனதின் எளிமை அவருடைய வார்த்தைகளிலும் கவிதைகளிலும் வலிமையான பிடிப்புடன் மிகையற்று பிணைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
“மரச் சட்டங்களால்
இழைத்திழைத்து
அழகிய கூண்டு ஒன்றைச் செய்தேன்
அது ஒரு கூண்டு எனத் தெரிந்துவிடாதிருக்க
பசிய நிறத்தைப் பூசினேன்
இலைகளையும் மலர்களையும்
தழைக்க விட்டேன்
கூண்டைத் தரையில் வைத்து
நீர்ப் பாய்ச்சினேன்
இழைத்த சட்டங்களால்
ஆழப் புதைந்தன
சில்லென வீசிய காற்றில்
ஆடி அசைந்தது கூண்டு
ஒரு அணில் குஞ்சு வந்தது
என்னை எடுத்துக் கூண்டுக்குள் விட்டு
கதவை மூடியது
அது கொண்டுவரப்போகும்
பழத்துக்காகக்
காத்திருக்கிறேன் இப்போது“
(பக்கம் – 22)
தாமரையோ அல்லியோ இல்லாத
நம் குளத்தில்தான்
வானம் குளிக்கும்
மேகங்களும் நீராடும்
விண்மீன்களுக்குப் பதிலாக
கெண்டைகள் விளையாடும்
கரையில் இருக்கும் நாணலைப் பறித்து
குளிக்கும் வானில்
உன் பெயரை எழுதுவேன்
பசிகொண்ட மீன்கள் அதை
இரையென்று கவ்வுவதைக்
கண்ணீர் மல்கப் பார்த்தபடி அமர்ந்திருப்பேன்“
(பக்கம் – 32)
காதலின் உருகும் உணர்வு நிலைகள் பாசாங்கற்று உண்மையின் ஆழத்தோடு ரவிக்குமார் கவிதைகளில் வெளிப்படுகின்றது.
மேலும் உடனடியான எண்ணங்களை எழுத்தில் வடித்து விடுவதனால் கவிதைகளில் ஒரு அவசரம் தெரிகின்றது. மரம், அணில் குஞ்சு, மழை, என்ற குறியீடுகள் திரும்பத் திரும்ப வருகின்றன. கவிஞர் இதனை தெரிந்தே செய்துள்ளார் எனத்தோன்றுகிறது. வலுவான காரணங்கள் இருக்கக் கூடுமோ ?
என்னைப் பொறுத்த வரையில் தொகுப்பாக வாசிக்கும் போது, முழுத்தொகுப்புமே ஓர் நீண்ட கவிதையாகத் தோன்றுகிறது.
‘மழை மரம்’ – 2010
( கவிதைத் தொகுதி )
ஆசிரியர்: ரவிக்குமார், இந்தியா
வெளியீடு : க்ரியா பதிப்பகம், இந்தியா
( தீராநதி - செப்டம்பர் 2011 )
-------------------------------------------------------------------------------------------------------------
“உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி”
- அனார்
-------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க்கையினால் எழுத்தை அர்த்தப்படுத்திக் கொள்வதும், எழுத்தினால் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவதும், நேர்மை மிக்க எழுத்தாளர்களின் முக்கிய பணியாக அமைந்து வந்திருக்கிறது. திட்டமிடல்களால் உருவாகக்கூடியதன்று இலக்கியச்செயற்பாடு. ஓர் எழுத்தாளனுக்குள் இயல்பாகவே அது உருவாகி இருக்கக் கூடியது மிகுந்த உறுதியான பண்பு இது. வெறும் கனவுகளில் மாத்திரம் மிதக்கின்ற எழுத்து வகைகளுக்கும், வாழ்வினைப் படைத்தளிக்கின்ற இலக்கியத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் இருக்கின்றன. இங்கே எழுத்துப் பணியின் சாரங்களில் ரசனை நுகர்ச்சியாக ஒன்றும், உன்னதமான நீடித்த அனுபவச் சாரம் மற்றொன்றுமாக நம்மிடையே அவை எஞ்சுகின்றன.
அனுபவங்களிலிருந்து தோன்றுகின்ற படைப்புக்களே நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றன. பதிவாகவும் பின் வரலாறுகளாகவும் மாறுகின்றன. காலத்தின் சாட்சியாகவும் தோன்றி நிலைக்கின்றன. உண்மையினது அசல் பிரதிகள் என்பவையின் உயிர்ப்பான உலகம். காலத்தைச் சுற்றி வருகின்ற மங்காத சூரிய ஒளியாக என்றுமிருக்கும். அது பிரிக்கமுடியாமல் எம்முடனேயே இறுகிவிடும். எழுத்தாளன் பிரதிபலிப்பாளனாக இருக்கின்றான். வாசகர்களைக் கற்றுக் கொள்பவர்களாக மாற்றுகின்றான். அல்லது அதற்கு தூண்டுகிறான்.
உணர்வு என்பது அறிவை முந்திக் கொண்டு பீறிடுகின்றது. அறபாத்தின் நோக்கம் மனிதர்களை நோக்கி உயர்ந்துள்ளது. அவருடைய உணர்வுகளே முதலில் முந்திக் கொள்வதை, அவருடைய கதைகள் காட்டி நிற்கின்றன. என்னைப் பொறுத்தவரை மனிதர்களினுடைய அந்தரங்கத்தை, மனச்சாட்சியை பிறாண்டிக் கொண்டிருக்கக் கூடிய கூர்விரல்கள் அவரது எழுத்துக்களிருக்கின்றன. அவருக்கு எதைச் சொல்ல வேண்டும் எவ்விதம் சொல்ல வேண்டும் என தெளிவாக தெரிகின்றது. அதில் அவருக்கு குழப்பங்கள் இல்லை. அத்தகைய எழுத்து வடிவங்களின் வௌ;வேறு மாதிரிகள் இத்தொகுப்பில் உள்ளன. அவரது அரசியல், சமூகம், சமயம், இலக்கியம் ஆகிய கண்ணோட்டங்கள் தனித்தனியாக, அதனதன் தனித்தன்மைகள் மற்றும் தெளிவுகளோடு அமைந்துள்ளது. அதுவே எழுத்தின் மிகச் சரியான,, வலுவான தருணம் ஆகும்.
அறபாத்தின் எழுத்துக்கள் அவரை நிறுத்தியிருக்கும் இந்தப் பருவகாலம் மிகுந்த அழகான கார்காலம் என நான் நினைக்கின்றேன். எழுத்துச் செயற்பாட்டின் மிக முக்கிய தருணங்களை அவர் தவறவிடாமல் அவற்றை முறையாக கையாண்டுமிருக்கின்றார்.
தனது சக மனிதனை அவனது மன அடுக்குகளை துல்லியமாகப் பார்க்க தெரிந்து வைத்திருக்கின்றார். மனித மனதின் அனைத்து விகாரங்களும் அதன் கவர்ச்சியான லயங்களும் அறபாத்தின் எழுத்துக்களில் ஆரவாரமில்லாமல் வந்து அமர்ந்துள்ளது. எப்போதும் தனக்கு இசைவான செல்லப் பிராணியைப் போல கதைகளை அவர் வளர்க்கின்ற அல்லது பராமரிக்கின்ற பக்குவம் அதன் கலைத் தன்மை பாராட்டத் தகுந்தது.
சமூகத்தின் நிறைவு அதன் திருப்தி என்பது தனிமனித வாழ்வின் அமைதியில் தான் தொடங்குகின்றது. ஒவ்வொரு வாழ்வும் ஒவ்வொரு உலகம். அன்பும், தோல்வியும், வெடிப்பும், விரிசலும், ஏமாற்றமும், துரோகமும், சிதைவும், இசையும் கொண்டதாகவே தான் இருக்கின்றது.
இங்கு ஓர் எழுத்தாளனின் பணி தீர்வு சொல்வதல்ல, யாருக்கு எதை உணர்த்த முடியுமோ, அதை உணர்த்துவது. மேலும் ஒருபடி உயர்ந்து 'தீமை எங்கு தொடங்குகின்றது?' என்ற கேள்வியைக் கேட்பது ?
இத்தகைய சில கேள்விகளயும் இவரது எழுத்தின் அரசியல் வெளிப்படுத்தியிருக்கிறது. எந்தவொரு சட்டகங்களுக்குள்ளும் நுழைந்து பிதுங்காமல், கிராமத்து ஆற்று நீரோடையைப்போன்று அறபாத்தின் கதை வெளிப்பாடுகள் மிக மிக இயற்கையானவை ? நீரில் விழுந்து மிதக்கின்ற பூக்களும் இலைகளுமான ரம்மியங்களும் கரைகளில் சேர்ந்திருக்கும் அழுகலும் துர்நாற்றங்களும் அருகருகிலேயே இருக்கின்றமை இதன் முக்கியமான அம்சம்.
அறபாத்தின் படைப்புலகை கவனித்து வந்த கடந்த காலங்களுக்கும் இனி வரும் காலங்களில் பெறப்பட இருக்கின்ற கவனிப்புகளுக்கும் அவை கொண்டிருந்த அர்த்தங்களுக்கு முற்றிலும் வேறு வேறு அர்த்தங்கள் இருக்கமுடியும். இனி வரும் காலங்களில் இதனை கண்டடைய வாய்ப்பிருக்கின்றது.
வாழ்வின் திருப்பங்களில் அடிபட்டுப் போகின்றவர்கள் மீதான அக்கறைகளை விட எது முதன்மையாக முடியும் ஒரு படைப்பாளிக்கு? வாழ்வுதானே கதை,கவிதை,கலை எல்லாம்.. நாம் அனைவரும் ஒரே மாதிரி இருப்பினும் அனைவரும் எப்படி ஒருவராக முடியும் ? அந்தக்கேள்விக்கான விடையைத்தேடிச்செல்லும் அறபாத்தின் கதைகளில், அவரைச்சுமந்து செல்லும் மாட்டு வண்டிலின் வியர்வையும் மண்ணின் 'கரகர' ஒலியும் நமது காதுகளின் ஜன்னல்களைத்தட்டுகிறது.
சோமாவின் தனிமை, துறவிகளின் அந்தப்புரம் என்ற கதைகளின் முடிவுகள்... வேட்டை, மோட்சம், ஜின், தனிமை போன்ற கதைகள் எழுதப்படுவதற்கான பின் புலங்கள், இக்கருப்பொருள் சார்ந்திருக்கும். அக்கறை என்பது கதைகளைவிட உன்னதமான ஒன்று. அந்த உன்னதம்தான் அறபாத்தின் மீதான மரியாதையை உயர்த்துவதாக எனக்குத் தோன்றுகிறது.
அடுத்து, வெளிப்படையான யுத்த கால நெருக்கடிகள் மற்றும் அதனூடான தாம் சார்ந்த சமூக, மனித அவலங்களை அரசியல் தீர்க்கத்துடன் எழுதிய கதைகளான: தேர்தல் கால குறிப்புகள், ஓணான்கள், திசைகளின் நடுவே, கழுதைகளின் விஜயம், மறுபடியும், ஆண்மரம்,அரங்கம் ஆகிய அரசியல் விமர்சன ரீதியிலான கதைகள். இவற்றுக்கு சரிநிகரானதும் மற்றொரு போர்க்களமானதுமான மன உலகை பிரதானப்படுத்துகின்ற சிறுகதைப் பிரதிகளாக சாட்சியங்களாகின்றன.
அவரது எழுத்தின் அறமும் அறபாத் என்ற மனிதனும் வேறு வேறல்ல என்பதை இவ்விடத்தில் அழுத்திச் சொல்ல முடியும்.
அடுத்ததாக, சிறுகதை முன்னோடிகளின் ஆகச் சிறந்த கதைகளுடன் வைத்துப் பார்க்கத் தக்க கதைகள் என நான் கருதும் கதைகளை குறிப்பிட விரும்புகிறேன். இத்தொகுப்பில் முழுமையான சிறுகதைத் தன்மையை கொண்டிருக்கின்ற அக்கதைகள்: மூத்தப்பாவின் மாட்டு வண்டி அடுத்தது ரெயில்வே ஸ்டேசன், நினைந்தழுதல், மூத்தம்மா ஆகியன ஒரு தேர்ந்த வாசகனை ஆகர்சிக்கும் தன்மைகளை கொண்டமைந்தவை. இக்கதைகள் நவீன மொழியும், பாரம்பரிய மொழியும் சேர்;ந்து ஒன்று கலந்துள்ள நேர்த்தியான கலை உருவம் எனலாம்.கலை என்பது மிகப்பெரிய போட்டி சிருஷ்டி என்பதை படிப்பவன் மனத்தில் உறைய வைக்கும் படைப்புகளாகும். இவைகள் வித்தியாசமான புது எழுத்து முயற்சியாக: 'ஏவாளின் தோட்டத்தில் கனிகள் மிச்சமிருக்கின்றன' அமைந்துள்ளது. கனவுத் தன்மை நிறைந்த கவிதை மொழியுடனான கதை கூறல், வாசிப்பனுபவத்தை மணமாக்குகின்ற கதை இது.
பின்பொரு நாளில், அவர் திரும்பிப் பார்க்கும் ஆழ்ந்து மூச்சுவிடக்கூடிய அனேக கதைகளை தந்திருகின்ற ஒரு நிறைவே இப்போதய அவரது வெற்றியுமாகும்.
முன் முடிவுகளற்று பாத்திரங்களை கையாண்டுள்ளமை, பெண்களை 'அவள்களாக' உலவ விட்டமை, இவராக சலுகைகளையோ கட்டளைகளையோ, தராத எழுத்து நேர்மை சிறுகதைகளை வலுவூட்டியுள்ளன.
இலங்கையின் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில்; நிராகரிக்க முடியாத காலத்தின் பதிவுகளாகி இக்கதைகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. வாழ்வின் உள் முகங்களை காட்டும் ஒவ்வொரு உடைந்த கண்ணாடிகளிலும் மறைந்திருக்கும் குருவி அச்சமூட்டக் கூடியது, வன்மம் மிக்கது, அழகின் மாயம் காட்டுவது.
‘உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி’ – 2008
( சிறுகதைத் தொகுதி )
ஆசிரியர்: ஓட்டமாவடி அறபாத், இலங்கை
வெளியீடு : அடையாளம் பதிப்பகம், இந்தியா
( சிறுகதைத் தொகுதி )
ஆசிரியர்: ஓட்டமாவடி அறபாத், இலங்கை
வெளியீடு : அடையாளம் பதிப்பகம், இந்தியா
(காலச்சுவடு - ஏப்ரல் 2010 )
No comments:
Post a Comment