Saturday 26 January 2013

பொடுபொடுத்த மழைத்தூத்தல் 
-------------------------------------------------------------------------------------------------






மந்திரப்பூச்சிகளோடு, ஒரு வெளி நிறைய இசை : 
பின்னுரையிலிருந்து

என்னுடைய குழந்தைப் பருவத்தை, மென்மையான கனவு போன்ற உலகம் சூழ்ந்து வியாபித்திருந்தது. அந்தக் கனவுக்குள்ளே தும்பிகளைப் போல அலைந்து திரியும் சிறுவர் படைக்கு நானே தலைவியாக இருந்தேன். 

அணில் மிச்சம் வைத்த பாதிப் பழங்களைத் தின்பதற்காகவோ, அணிலுக்கென எந்தவொரு பழத்தையும் விட்டுவைத்துவிடக் கூடாது என்ற பொறாமையினாலோ என்னுடைய மாலைப்பொழுதுகள் அனைத்தும் மரங்களிலேயே கழிந்தன. 

வீட்டுக்கருகே அமைந்திருந்த தாமரைக்குளத்தில் தூண்டில்போட்டு மீன் பிடிப்பது, ஆமைகளில் ஏறியிருந்து சவாரி போவதுபோல் பாவனை பண்ணுவது, புதிய உடைகள் தைத்து மீதமான துணிகளைச் சேகரித்து “பொண்ணும் மாப்பிள்ளையும்” விளையாட்டுக்காக பொம்மை செய்து கல்யாணம் பண்ணிவைப்பது, மண்ணில் குழி தோண்டி நீரூற்றிக் குடைக் கம்பியைத் துலாக்காலாக்கி நீர் இறைப்பது, பழுத்து விழுந்த பலா இலைகளைப் பணமாகப் பாவித்து தாமரைப்பூக்களையும் தட்டுச் செவ்விரத்தைகளையும் வியாபாரம் பண்ணுவது, சுடுசுடு மாம்பழம் விளையாடுவது என்றெல்லாம் அன்று விளையாட்டுக்கள் எங்களை விளையாடின. வானத்தைத் தொடுவதற்கென்றே ஆடியது எங்கள் பொன் ஊஞ்சல்.

இத்தனை நினைவுகளின் மத்தியிலும் அன்றைய நாளில் எனக்கு மாத்திரம் வேறொரு புதையல் வாய்த்திருந்தது. என்னுடைய வீட்டிற்கருகே மற்றொரு பகுதியில் சிறிய களிமண் குடிசை, குடிசையின் அருகே உயரமான மரம், மரத்தின் நடுப் பகுதியில் ஒரு அழகிய பரண் அமைந்திருந்தது. அந்தப் பரணில் எப்போதும் ஒரு இளைஞர் நிறைய புத்தகங்களோடும் நண்பர்களோடும் இருப்பார். அவரைச் சூழச் சிரிப்பும் பாடல்களும் கேட்டபடி இருக்கும். அவ்விளைஞர் இனிமையாகப் பாடுவார். குடிசைக்குள் மெலிந்த உடல்வாகு கொண்ட ஒரு மூதாட்டி இருந்தாள். மிகச் சிறுமியான என்னை யாருமே அந்தப் பரணில் ஏற விட்டதில்லை. பெத்தாவின் அருகே என்னை விட்டுவிடுவார்கள். அம்மூதாட்டியை பெத்தா என்றே அழைத்தேன்.

களிமண் தரையில் பன்பாயில் கால்களை நீட்டி பெத்தா அமர்ந்திருப்பார். அருகே செம்பு வட்டாவும், படிக்கமும், சிறிய வெற்றிலை உரலும், சிவப்பு நிற சாயம் ஊறிய பனை ஓலை விசிறியும் அவர் அருகே இருக்கும். சிறு உரலைப் பக்கத்தில் எடுத்து பாக்கு, சுண்ணாம்பு, சிறிது புகையிலை, இரு நீர்வெற்றிலைகள், கைப்பு, கராம்பு இப்படி கூட்டுச் சேர்த்து உரலில் இட்டு இடித்துக்கொண்டே ஒவ்வொரு கவியாகப் பாடிக்கொண்டே இருப்பார். வெத்திலாக்குச் சப்பும் மணம், இரத்தச் சிவப்பான நாக்கு மேலும் கீழும் அசைய, உதடுகளில் சிவப்புச்சாறு ஊறும்... பிறகென்ன பெத்தா பாடும் கவி காற்றில் மணக்கும். சிவந்த உதடுகளில் இருந்து வரும் இசையைக் கேட்டு மயங்கி இருப்பேன். கொஞ்ச நாட்களிலே நானும் பெத்தாவுடன் சேர்ந்து பாடத் தொடங்கிவிட்டேன். நாட்டுப்புறப் பாடலின் இசைதான் முதலில் என்னை ஆக்கிரமித்திருந்தது. பிறகு வந்த நாள்களில் சபைகளில் என்னை யாராவது கவி பாடும்படி கேட்டால், ஆர்வ மேலீட்டால் மனனமாகியிருந்த அத்தனை நாட்டார் பாடல்களையும் மூச்சுவிடாமல் பாடிக்காட்டும் சிறுமியாக நான் இருந்தேன். எனது வீட்டிலும் அயலிலும் இருந்த இளவயதினர் பல விதமான மத ரீதியாக அமைந்த இசை வகைகளில் ஆர்வமுற்றிருந்தனர் அல்லது திரை இசையைப் பாடும் நாகரிகம் தெரிந்தவர்களாக இருந்தனர். ஆகச் சிறுமியான நான் கிழவிகள்போல கவி இசைப்பது வீட்டில் விரும்பப்படவில்லை. வயதிற்குப் பொருத்தமற்ற செயலைச் செய்வதாகக் கருதினர். எங்கள் கிராமத்தில் சிறுவர்களின் ஏதேனும் ஒரு பழக்கத்தை நிறுத்துவதற்கு அன்றைய பெரியவர்கள் பலவகையான தண்டனைகளை வழங்குவதுண்டு. வேறொருபோதும் அப்பழக்கத்தை அல்லது அச்செயலைச் செய்யச் சிறுவர்கள் துணிவதில்லை. அனைத்துத் தண்டனைகளுக்கும் ஆரம்பமாக அவர்கள் செய்வது இதுதான் : “பழுத்த மிளகாயை” இரண்டாகப் பிளந்து, உதட்டில் வைத்து நன்றாகத் தேய்த்துவிடுவார்கள். வாயைக் கழுவுவதற்கோ தண்ணீர் குடிப்பதற்கோ அனுமதிப்பதில்லை. கவி படிப்பதாகச் சொல்லிக்கொண்டு, வாயைத் திறந்தால் “வாயில கொச்சிக்காய் போடுறது தப்பாது” என்று எனக்கும் பலமான எச்சரிக்கை விடப்பட்டது. ஒருமுறை ஏற்கனவே இக்கொடிய தண்டனை எனக்கு நிறைவேறியிருந்த அவமானத்திலும் பயத்திலும் முற்று முழுதாகக் கவி படிப்பதை அன்றோடு நிறுத்திவிட்டேன்.

வெள்ளை முக்காடிட்ட அந்த முதிய பெண் உருவம் புகைபோல நெளிந்து காற்றில் கரைந்துபோனாலும் காற்றை நீவிப் படபடக்கின்ற அக்குரலின் ஓசையைக் கூர்ந்து கேட்கின்றேன். இந்த நினைவை இவ்விதம் தீட்டித்தீட்டி வைரம் பாய்ந்த புதையலாக ஒளிரச் செய்யும் என்னுடைய கனவுகள். அந்த ஒளியின் முன் தீராத தனிமையை எடுத்து வைத்துவிட்டுக் கண்களை மூடிக்கொள்கிறேன்.

என் ஊரின் கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே வயற்பரப்பும் விரிந்து பரந்து கிடக்கின்றது. மிகுந்த வனப்பான இந்த நிலப்பகுதியின் பாரம்பரிய வாழ்க்கை முறைமைகளில், சொற்பமானவைகளைக் கண்கூடாகக் கண்ட, பெரும்பாலானவற்றை முதியோர்களிடமிருந்து செவி வழியாகக் கேட்டறிந்த கடைசிப் பரம்பரையில் ஒருத்தி நான் என நம்புகின்றேன்.

கிழக்கு இலங்கையில் பல தொன்மை வாய்ந்த கிராமங்கள் உள்ளன. இயற்கையிலேயே பாட்டு இயற்றும் மேதமை கொண்ட தமிழ், முஸ்லிம் மக்கள் இக்கிராமங்களில் இருக்கின்றனர். என்னுடைய தொன்மை வாய்ந்த கிராமமான சாய்ந்தமருதிலும் இருந்திருக்கின்றனர். முஸ்லிம்கள் இன்று பெருபான்மையாக வாழும் தென்கிழக்குப் பிராந்தியம் என்பது ஆதிகாலம்முதல் “ருகுனு” தேசத்தின் ஒரு முக்கியப் பிரிவாக இருந்திருக்கின்றது. “காவன்திஸ்ஸயின் ராசதானி” கி.மு. 100இல் உருவாக்கப்பட்டபோது இத் தென்கிழக்குப் பிரதேசம் விவசாய வளமிக்க இடமாக இருந்திருக்கின்றது. வர்த்தகம், வாணிபம் மேலோங்கிய இப்பிரதேசத்தில் அரேபியக் கப்பல்கள் தென்கிழக்குக் கரைக்கு “தங்கத் தளபாடங்களை துட்டகெமுனு” அரசனுக்கு எடுத்து வந்ததாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

முஸ்லிம் முன்னோர்களின் பரம்பரையினர் அரேபியர்கள், கேரள வியாபாரிகள், தென்னிந்திய வியாபாரிகள் இங்கு வந்து வாழ்ந்துள்ளதாக வரலாற்றில் சொல்லப்படுகின்றது. மிக நீண்ட காலமாக இம்மக்கள் விவசாயம், மாடு வளர்ப்பு, வியாபாரம், மீன்பிடித் தொழில் போன்றவற்றைப் பிரதான பரம்பரைத் தொழில்களாக கொண்டிருந்தனர். ஆரம்பத்திலிருந்தே நெசவுத் தொழிலும் கைப்பணித் தொழில்களும் கிழக்கு மாகாணக் கரையோரப் பகுதிகளின் தொழில்களாக இருந்துள்ளன.

முஸ்லிம் பெண்கள் வயல்களில் வேலைசெய்திருக்கின்றனர். கதிர் பொறுக்குதல், பூவலில் இருந்து தண்ணீர் சுமந்து வருதல், விறகு பொறுக்குதல், வீடுகளில் கைத்தொழில்கள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். பன்களைப் பிடுங்கிவந்து பாய்கள் இழைத்தல், கூடை பின்னுதல், தென்னோலைக் கிடுகு இழைத்தல், நெல் குற்றுதல், உரலில் மா இடித்தல், புடவை நெய்தல் ஆகிய பல தொழில்களைப் பெண்கள் செய்திருக்கின்றனர். ஆண்களும் பெண்களும் இவ்விதமான தொழில்களில் ஈடுபடும்பொழுது பிறந்தவைதான் இந்நாட்டுப்புறப் பாடல்கள். இந்நாட்டுப்புறக் கவிகளை பாடியதிலும், அடுத்த சந்ததிகளுக்குக் கையளித்ததிலும் முஸ்லிம் பெண்கள் பாரிய பங்களிப்பை செய்துள்ளனர். இக்கவிகளில் பெண்கள் பாடிய கவிகளே அதிகமாக காணப்படுகின்றன. மனனமிட்டு வாய் மொழியாக இவை பாடப்பட்டு ஒரு தலைமுறையினரிடமிருந்து அடுத்த தலைமுறையினருக்குக் கைமாறி வந்திருக்கின்றது. நாட்டார் பாடல்கள் பாடப்பட்ட காலம் எது என்பது நிச்சயமாகத் தெரியாது. 

வேலை நேரக் களைப்பை மறப்பதற்காகவும் தங்களுக்குத் தாங்களே உற்சாகமூட்டிக்கொள்வதற்காகவும் பலவிதமான சந்தர்ப்பங்களில் இப்பாடல்களைத் தொன்மையான கிராமிய மனிதர்கள் பாடியிருக்கின்றனர். அவர்களது இன்ப துன்பங்கள், வாழ்க்கை, பண்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்களையும் உள்ளடக்கிய மண்பாட்டுக்களாய் அவை உருவாகியிருக்கின்றன. பிரிவும் இரங்கலுமான நாட்டுப்புறப் பாடல்களையும், தூதுப் பாடல்களையும் அதிகம் பாடியவர்கள் பெண்களே ஆகும். அன்றைய காலத்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் உரையாடலைத் தொடங்குவதே இப்பாட்டின் மூலமாகவிருக்கும். பதில் சொல்வதுகூட மற்றொரு பாடல் மூலமாகவே இருந்திருக்கிறது. உடனுக்குடன் இப்படிப் பாடிப்பாடி உரையாடியிருக்கின்றனர் அக்காலப் பெண்கள். பெண்கள் கூடி ஒன்றாகக் குழுமியிருந்து பாய்களை இழைக்கையில், தென்னோலைக் கிடுகுகளை இழைக்கையில், தண்ணீர் அள்ளி வருகையில் ஒருவர் பாட, இன்னொருவர் அதற்கு பதில் பாடலைப் பாட அவர்களுடைய பொழுதுகள் முழுதும் பாட்டிலேயே கழிந்திருக்கின்றன. பெண்கள் இவ்வாறெனில் ஆண்களும் அவர்களுடைய வேலை இடங்களில் பாடியிருக்கின்றனர். வயல்வெளிகளிலும், கடல் மணலிலும், காவல் புரியும் இடங்களிலும் இவற்றைப் பாடித் தமது தனிமைகளை ஆற்றிக்கொண்டிருக்கின்றனர். அப்போதெல்லாம் நெல்முளை வண்டிகள் சேர்ந்து நள்ளிரவுக்குப் பின் வரிசையாகப் புறப்படும். முதல் வண்டிக்காரர் கிராமியக் கவிகளைப் பாடத் தொடங்குவார், அடுத்தது அதற்கு அடுத்தது என்று வண்டிகளின் வரிசையில் இப்பாடல்கள் பாடப்படும். கடைசி வண்டிக்காரர் பாடி முடித்ததும் திரும்ப முதல் வண்டிக்காரர் பாடுவார். இப்படியே பயணம் முடியும்வரை பாடல்கள் தொடர்ந்திருக்கின்றன. 

1950ஆம் ஆண்டுகளிலிருந்து இவை ஆய்வு ரீதியான புத்தகங்களாக தொகுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அனைத்து நாட்டுப்புறக் கலை இலக்கிய அம்சங்கள், பல பிரிவுகளாக உள்ளன. சுமார் 2000 நாட்டார் பாடல்கள் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளன. இன்றும் காதல் உணர்வுகள் அதிகம் செறிந்த பாடல்களே என்னுடைய பகுதிகளில் பிரபலமாக இருக்கின்றன. காதல் என்பது அன்று அனுபவமாக மட்டுமன்றி அர்ப்பணிப்பாகவும், அறச்செயலாகவும் இருந்துள்ளது. 

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் கிராமங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கும். இத்தொகுப்பிலும் இரண்டு மக்களுடைய கவிகளும் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கின்றன. இன்றைய உலகமயமாக்கல், அறிவுப் பெருக்கம், நாகரிக வளர்ச்சி, இலக்கிய மாற்றங்கள் அனைத்தையும் தாண்டி இன்றைக்கும் இக்கவிகளிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ள ஏதோ ஒன்று நிச்சயம் இருக்கின்றது. அதுதான் நாம் இன்னும் அடைய முடியாத ஒன்றாகவும் உள்ளது. தேசம், இயற்கை, மொழி, பண்பாடு, தொன்மையான மனிதனின் நாகரிகம் போன்றவற்றை அறிந்துகொள்ள முயல்வது இன்றைய தலைமுறைக்கு மிகுந்த அவசியம். முற்றிலும் இயற்கையான பசுமையுடனும், நீருடனும், காற்றுடனும், நெருப்புடனும், பறவைகளோடும், விலங்குகளோடும் பிணைந்த இன்னொரு வாழ்க்கையின் மணத்தைப் பூரணமாக உணர்ந்துகொள்ளவும் முடியும் என நம்புகின்றேன். முழுக்கமுழுக்க உணர்விலிருந்து வெளிப்படுகின்ற மண்பாட்டுக்கள் இவை. ஒவ்வொரு சொல்லிலும் உள்ளுறைந்திருக்கும் ஆன்மாவின் பச்சை, காதலின் அப்பழுக்கற்ற வாசனை, ஆணினதும் பெண்ணினதும் கண்களிலிருந்து காதலெனத் தெறிக்கின்றது. அந்தக் கணத்தின் குரலில் இருந்த இசையின் உயிர் ஒருபோதும் அழிவற்றது.

சொல்லில் உள்ள இன்பத்தையும், சொல்வதிலுள்ள இன்பத்தையும் இந்த மண் பாடல்களில் உணரமுடியும். கவியில் ஒவ்வொரு சொல்லும் உயிருடன் அசைந்து, நிறங்களை உதிர்க்கும் மந்திரப்பூச்சியாகிப் பறந்து என்முன் தோன்றுகிறது. இன்றும் கிழக்கிலங்கை மக்களின் பேச்சு மொழியில் ஒருவகை இசைத்தன்மை இருக்கிறது. எங்கள் முன்னோர்கள் அனைவரும் இந்தக் கவிகளோடு இரண்டறக்கலந்த அடையாளமாகத்தான் உரையாடல்களினூடே அந்த ஓசையும் இசையும் தொடர்ந்து வருகிறது. அன்றைய மனித வாழ்க்கையில் வித்தியாசங்கள் பெரிதாகத் தோன்றியிருக்கவில்லை. இருந்த வித்தியாசங்கள், இனங்களைப் பிரித்து வேறுபடுத்தி வைத்திருக்கவில்லை. உணர்வும், வாழ்வும், தேடலும், அக்கறையும் அனைவருக்கும் ஒன்றுபோலவே இருந்திருக்கிறது. இனம், மொழி, ஊர் என்ற பிரிப்பு எல்லைகளற்று, ஆண்களாகவும், பெண்களாகவும் அவர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அந்த அடையாளத்தை, ஆகவும் முதன்மையாக மதித்திருக்கிறார்கள். அத்தகைய ஆண்களினதும், பெண்களினதும் அழகிய பொழுதொன்றை நினைவூட்டிக்கொள்ளவும், அந்த பழமையை நெருங்கித் தொடவும் எனக்கு உதவிய மந்திரப்பூச்சிகள் உங்களுக்கும் உதவக்கூடும்.

இந்நாட்டுப்புற கவிகளைத் தொகுப்பதற்கு நினைத்தவுடன், அதன் வடிவத்தை சிதைக்காமல், எளிமையாக அதன் முழுமையோடு தொகுக்க வேண்டுமென விரும்பினேன். அதனால் கவிகளின் முன்னும், பின்னும் கதைச் சுருக்கங்களையோ, கற்பனை உரைகளையோ நான் இணைக்க விரும்பவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக, வரிசைப்படுத்தித் தருவதும் சாத்தியமில்லை. எனவே கவிகளின் உணர்வுகளை விளங்குவதற்கு வசதியாக ‘அவள்’ – ‘அவன்’ எனப் பிரித்து, ஒரு வடிவத்தை ஏற்படுத்தினேன். தொகுப்பதற்கும், வாசித்து விளங்குவதற்குமான வசதிக்காகவே இம்முறையைக் கையாண்டிருக்கிறேன்.

செறிவுள்ள அழகிய காதல் மண்பாடல்களைத் தேர்ந்து தனித்து வெளியிட எண்ணியிருந்தேன். நண்பர் ஆசையையும், ராமகிருஷ்ணனையும் சந்தித்துப் பேசிய சமயம், கிழக்கு முஸ்லிம் நாட்டார் பாடல்களைத் தொகுத்துத் தரும்படி கேட்டார்கள். மிகுந்த ஆர்வத்துடன் இவ்விடயத்தை ஏற்றுக்கொண்டேன். பலமுறை ராமகிருஷ்ணனிடம் இவ்விடயம் தொடர்பாகப் பேசியது என்னுடைய முயற்சிகள் முடிந்தவரை செம்மைப்பட உதவியது. நண்பர் ஆசை இத்தொகுப்பின் மீது கொண்டிருக்கும் அக்கறை மிகுந்த நன்றிக்குரியது. இந்நூலுக்காகப், சிரமங்களைப் பொருட்படுத்தாமல் பல கிராமங்களுக்குச் சென்று, புகைப்படங்களை எடுத்துத் தந்துதவிய எழுத்தாளர். எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களின் அளவற்ற அன்புக்கு மரியாதை செய்கிறேன். மேலும், அவ்வப்போது தேவைப்பட்ட தகவல்களை எனக்குத் தேடித்தந்து, அதைத் தட்டச்சுசெய்து, முழுப் பொறுப்புடனும் விருப்பத்துடனும் வடிவமைத்துத் தந்த என் அஸீமிற்கும் மனமார்ந்த நன்றிகள்.


- அனார்

Cre-A:
New No. 2 Old No. 25
First Floor, 17th East Street,
Kamarajar Nagar, Thiruvanmiyur
Chennai - 600 041.
Tel: 72999 05950 / 044 - 4202 0283
Email: creapublishers@gmail.com