Sunday 9 August 2015

ஒட்டுமொத்த பெண்களின் ஆன்மக்குரலே கவிதை - அனார்
--------------------------------------------------------------------------------------------------


01. நீங்கள் எழுதவந்த பின்புலத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்?


பாரம்பரியங்களும் பண்பாடுகளும் மாறாமல் இருந்த எனது கிராமத்தில், 90களில் நடந்த அரசியல் மாற்றங்கள் எனது பாடசாலைக் கல்வியின் இழப்பு என்பவற்றோடு என்னை சூழ்ந்த தனிமையிலிருந்தும் அச்சங்களில் இருந்தும் தப்பிப்பதற்கான ஒரு ஏமாற்று வழியாக கவிதை எழுத ஆரம்பித்தேன். மிகுந்த கட்டுப்பாடுகள்கொண்ட எனது சமூகத்தில் எனது குடும்பம் மதரீதியான செல்வாக்கை கொண்டிருந்தது. எனது தந்தை ஒரு மௌலவி ஆசிரியராகவும் அவருடைய தந்தை மார்க்க கல்விபெற்ற ஆலிமாகவும் ஊரின் பள்ளிவாசல் தலைவர்களாகவும் இருந்தவர்கள். எனவே கவிதை எழுதுவதற்கு முழு எதிர்ப்பு வீட்டிலேயே இருந்தது.

பல புனைபெயர்களில் நான் எழுதினேன். ஒரு பெயர் கண்டுபிடிக்கப்பட்டால் மற்றொரு பெயர் என்பதாக. வானொலியில் மட்டும்தான் சிலவருடங்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். நிகழ்ச்சியில் என் கவிதை ஒலிபரப்பாகும் நேரம் காதோடு வைத்து எனது கவிதை ஒலிபரப்பாவதை கேட்பதுண்டு. எனது திருமணம் என்னை பல நெருக்கடிகளில் இருந்து மீட்டது என்பதே உண்மை. கணவர்தான் முதலாவது கவிதை நூலை தொகுத்து வெளியில் தெரியும்படி நான் சுதந்திரமாக எழுத ஊக்கமளித்தார். மற்றும் அதில் இன்றுவரை உறுதியாகவும் செயற்படுகிறார்.

கவிதை எழுதப்படும் தேவைக்கான பின்புலம் இல்லாதுவிட்டால் 90களில் ஆழமான வேதனைகளை கடந்து வந்திருக்க முடியாது. 80களில் எப்படி வடக்கில் புதிய கவிஞர்களின் காலமொன்று உருவாகியதோ, 90களில் அது கிழக்கில் முஸ்லீம் மக்களிடையே பல புதிய கவிஞர்களை உருவாக்கியது. என்னையும் இத்துறையில் அர்த்தபூர்வமாக செயற்படவைத்தது. 

ஒருவிதமான நெருக்கடி, வெறுமை எங்களைச் சூழும் பொழுது நாங்கள் புகுந்து கொள்ளும் தியானக்குகைபோன்றது இலக்கியத்தின் மீதான தேடல். குகைக்குள் எங்கிருந்தோ வந்து மின்னும் மின்மினிப்பூச்சிகள் எங்கள் கனவும் விடுதலையும். கவிதை என்பது அனைத்தையும் சாத்தியப்படுத்தும் இடம் என்பது எனது கருத்து.


02. நீங்கள் எழுத முற்பட்ட காலத்தில் தமிழில் பெண்ணிய எழுத்து எவ்வாறு இயங்கிக்கொண்டிருந்தது ? உங்களுக்கு அது எவ்வகையில் பாதை அமைத்தது?


என்னுடைய காலத்தில் 80களில் எழுதத் தொடங்கிய தலைமுறைப்பெண்கள் பலர் எழுதவில்லை. புதிய பெண்கள் எழுதத் தொடங்கியிருந்தனர். ஔவை, வினோதினி, ஆகர்ஷியா, .ஆழியாள், சுல்பிஃகா, கலா என மிகவும் விருப்பமான பெண்கவிஞர்கள் பெண்ணியக் கவிதைகளை நுட்பமான மொழியோடு எழுதியவர்கள். கலைத்துவமான பெண்ணிய வெளிப்பாட்டை எவ்வாறு மாறுபட்டு எழுதமுடியும் என அவர்கள் எழுத்தாக்கங்கள் வெளிப்பட்டன. பல பெண்கள் தனித்தன்மையோடு செறிவாக எழுதிக்கொண்டிருந்தனர். இலங்கையில், தமிழ்நாட்டில், புலம்பெயர்நாடுகளில் என எல்லாப் பெண்களின் எழுத்துக்களும் பெண்ணியக் கருத்துக்களின் வெவ்வேறு முகங்களை கொண்டிருந்தன. சல்மா, மாலதிமைத்திரி, சுகிர்தராணி, குட்டிரேவதி என தமிழ்நாட்டில் அந்த அலை மிகக்காத்திரமாக உருப்பெற்றிருந்தது. அவ்வளவு பெண்கள் எழுதியும் மேலும் புதிய புதிய பெண்கள் தோன்றிக்கொண்டிருந்தனர். மிக முக்கியமான பல படைப்புகள் வெளிவந்தகாலம் இதுவாகும். பெண்ணியா, பஹீமாஜஹான், நான் என புதிய பெண்கள் உருவாகிக்கொண்டிருந்தோம். எனவே என்னை அது பெருமளவு இணக்கமான மனநிலையுடன் தனித்து செயல்படும் உறுதியையும் ஏற்படுத்தியது. தேடலுடன் பெண்ணியக் கவிதைகளை வாசிப்பதற்கும், எனக்கென்ற ஒரு மொழியில் பெரிதும் மாறுபட்ட என் சூழலை எழுதவும் தொடங்கினேன். ஆண், பெண் வித்தியாசத்தையும் வேறுபாட்டையும் கடந்து எழுத்து செயற்பாடு எனும் தளத்தில் முன்செல்லவெண்டும் என்ற துணிவையும் வளர்த்துக்கொண்டேன். முஸ்லீம் பெண்ணுக்கான தனித்துவத்துடன் இலக்கியப்பயணத்தை தொடர எனது பாதையை நானே அமைக்க வேண்டியிருந்தது.

நவீன பெண்ணியக் கவிதையைப் பொறுத்தவரை, எனது சமூகத்தில் அதற்கு முதல் வேறொருவர் தொடர்ந்து தீவிரமாக செயற்பட்டிராத அந்த சூழ்நிலை எனக்கு அளவற்ற சவால்களை கடினமான வழிகளில் ஏற்படுத்தியிருந்தது. என்னுடைய எழுத்து, சிந்தனை, சொல்முறைகளில் நவீனத்தையும் வித்தியாசத்தையும் உள்வாங்கியிருந்தது. எதிர்ப்புகளை, காழ்ப்புணர்ச்சியை அவதூறுகளை எதிர்கொண்டவளாகவே எழுதிக்கொண்டிருந்தேன்.

சில தீவிர இலக்கிய இதழ்கள், பெண்ணியம் சார்ந்த எழுத்துக்களை ஊக்குவித்தன செயல்பட்டன. சரிநிகர், மூன்றாவது மனிதன் போன்றவையும் தனிநபர்கள் மூலம்வெளிப்படும் சிற்றிதழ்களிலும் எழுதினேன். குறிப்பாக ஏஜீஎம் ஸதக்கா கிழக்கிலும், எஸ். சுதாகர் வடக்கிலும் கொண்டுவந்த இதழ்களிலும், பெண் சஞ்சிகை போன்ற சிறுபத்திரிகைகள், இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் முனைப்போடு வெளிவந்து கொண்டுமிருந்தன. அவற்றில் எல்லாம் எழுதினேன். அதிகம் எக்ஸில் இதழில் எழுதிவந்தேன். என்னை அவர்கள் தொடர்ந்து மிகுந்த உற்சாகப்படுத்தினர்.


03. உங்களைப்பாதித்த பெண் எழுத்தாளர்கள், ஆளுமைகள் பற்றியும் உங்களை ஈர்த்த புத்தகங்கள் கவிதைகள் பற்றியும் சொல்லுங்கள்?


இலக்கியப் பரிச்சயம் வாசிப்பு என்பவற்றை நான் முதலியே பெற்றிருக்கிவில்லை. வாசிக்க ஆரம்பித்த பொழுது அனேகமான எழுத்துக்களும் மொழிபெயர்ப்புகளும் பழைய புதிய எழுத்தாளுமைகளும் என்னை ஈர்த்தவர்களாகவும் பாதிப்புச் செலுத்துகின்றவர்களாகவுமே இருந்தனர். அனைத்து இலக்கிய வடிவங்களிலும் என்னை கவிதை தான் ஆகர்ஷித்தது. சிறு கதையிலும் நாவலிலும் கட்டுரைகளிலும் நான் கவிதைகளையே கண்டு கொண்டுடிருந்தேன. பெண் தன்னை முழுக்க திறக்கும் இடம் கவிதை என நம்புகிறேன். ஒட்டுமொத்த பெண்களின் ஆன்மக் குரலாக கவிதை இருந்து வருகிறது. அத்தகைய பெண் ஆளுமைகளின் பெயர்களைக் குறிப்பிடலாம். பெண்கள் எழுத்துக்கள் மட்டுமே பாதிப்புச் செலுத்தியது என்று தனியாக பிரித்துக் கூறமுடியாது. வாசிப்பனுபவத்தில் ஆண் பெண் பிரிப்புகள் தேவையற்றது. மனிதர்களின் வாழ்வையும் மனங்களையும் நெருங்குவதற்கு முன்தடைகள், முன் தீர்மானங்கள் ஒன்றும் தேவையில்லை. கேள்வியின் அடிப்படையில் கூறும் பொழுது பேரா. எம்.ஏ. நுஃமான் மொழிபெயர்த்த பலஸ்தீனக்கவிதைகள், சொல்லாதசேதி கவிதைத் தொகுப்பையும், மரணத்தில் வாழ்வோம் தொகுப்பையும், இவ்விரண்டு தொகுப்புகளிலும் இடம்பெற்ற கவிஞர்களையும் முக்கியமாகக் குறிப்பிடலாம். சிவரமணியின் முனைப்பு கவிதையில்,

//பேய்களால் சிதைக்கப்படும் 
பிரேதத்தைப்போன்று சிதைக்கப்பட்டேன், 
ஆத்மாவின் உணர்ச்சிகளெல்லாம் 
இரத்தம் தீண்டிய கரங்களால் அசுத்தப்படுத்தப்பட்டன 
என்னை மேகதிற்குள்ளும் மண்ணிற்குள்ளும் 
மறைக்க எண்ணிய வேளையில் 
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர்// 

எனறெழுதுகிறார். இத்தகைய எழுத்துக்கள் புதிதாக எழுதவரும் பெண்ணுக்கு பாதிப்பையும் அதிர்ச்சியையும் நிச்சயம் ஏற்படுத்தும். என்னை வெகுவாக ஈர்த்த இன்னொரு பெண் ஊர்வசி. அவருடைய மொழி முழுக்க முழுக்க கலைத்தன்மை வாய்ந்தது. அழகியல் நிரம்பியது. இயற்கையின் நெருக்கத்தை கொண்டிருப்பது வேலி என்றொரு கவிதை என்னை வெகுவாக பாதித்த ஒன்று. ஒருவரது எழுத்தாளுமையில் இத்தகைய வீச்சும் நுண்மையான எழுத்துக்களைப் பின் தொடர்வது உள்ளுணர்ந்து வாசிப்பது மிகுந்த தாக்கம் செலுத்தக்கூடிய ஒன்றாகும். என்னுடைய வாசிப்புப் பட்டியல் மிக நீண்டது. பெண் எழுத்தாளர்களை மாத்திரமே வாசிக்கின்ற குறுகிய மனப்பான்மை எனக்கில்லை. நவீனத்துவம் பின்நவீனத்துவம் பெண்ணியம் தலித்தியம் என்ற வேறுபாடுகள் இல்லாது அனைவரையும் வாசிக்கின்றவள் நான். உணர்வும் கருத்தும் தனியாக இல்லாமல் முழுக் கலையாகப் பெருகும் புதிய எழுத்தாளர்கள் அதிகம். அவர்கள் அனைவரின் உழைப்பும் எழுத்துக்களும் என்னை பாதிக்கவே செய்கின்றன. என் சமகால எழுத்தாளர்கள் மீது வாஞ்சையும் மதிப்பும்முள்ளது. ஆரம்பநாட்களில் படித்த நுல்கள் இன்றைய எனது எழுத்து வளர்சிச்சிக்கு உரம்மூட்டியவை என நம்புகின்றேன். ஆனால் எப்பொழுதும் மொழிபெயர்ப்பு நூல்களை கவனமெடுத்து வாசிக்கிறேன். கமலாதாஸ், அருந்திராய், சில்வியாபிளாத், அன்னா அக்மதோவா, சிமோன்தீபவார், மஹ்மூத் தர்வீஸ், ஜோர்ஜ் லூயி போர்ஹே, பப்லோநெரூதா, சதாத் ஹசன்மாண்டோ இப்படிக் கூறிக்கொண்டே போகலாம். இவர்களைப்போல எழுத முடியாதா என்னும் ஏக்கமும் எழுத வேண்டுமென்ற பேராசையும் உண்டு. மேலும் எனக்கு விருப்பமான சில புத்தகங்களையும் பெயர்களையும் குறிப்பிடாலம் கவிஞர் சேரனின் தொகுப்புகள், பா. அகிலன் கவிதைகள், வைக்கம் முகம்மது பசீர் தொகுப்புகள், சுந்தர ராமசாமியின் கவிதைகள், ஜேஜே சில குறிப்புகள், கோணங்கி, மௌனி என்றொரு நீண்ட வரிசை இருக்கிறது. இந்தக் கேள்விக்கான பதில் ஒரு கட்டுரையாக எழுத வேண்டியயொன்று என்று நினைக்கிறேன்.




04. நீங்கள் எழுதத் துவங்கியபோது ஏற்பட்ட தடைகளை விமர்சன எதிர்ப்புகளை எப்படி எதிர் கொண்டீர்கள் ? இஸ்லாமிய பெண் படைப்பாளியாக சமூகத்திலும் குடும்பத்திலும் ஏற்பட்ட சவால்களை எப்படி அணுகினீர்கள்? 


ஒவ்வொரு சமுகப்பெண்ணும் எதிர்கொள்ளக்கூடியவைதான் இந்த நெருக்கடிகள் ஆயினும் முஸ்லீம்பெண் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் கூடுதலான வேறுபாடுகள் காணப்படுகின்றன. முஸ்லீம் பெண் திருமணத்தின் பிறகு தன்னுடைய எழுத்துச் செயற்பாட்டை முன்னெடுப்பது சாகவும் பிழைக்கவுமான போராட்டம் என்றுதான் கூறமுடியும். மிக நுட்பமான வலைப்பின்னல்களை பின்னிவைத்திருக்கும் சமுதாயத்தில் கவிதைகளை எழுதுவதற்கு மன உறுதி இரண்டு மடங்காகத் தேவைப்படுகின்றது. நான் கவிதை எழுதுகிறபெண் என்பது வெளிப்படாமல் இருக்கத்தான் எனது சூழல் ஆசைப்படுகின்றது நிர்ப்பந்திக்கின்றது.

விமர்சன எதிர்ப்பும் பாராட்டும் அங்கீகாரமும் எனக்கு ஒரே சமயத்தில் கிடைத்துக்கொண்டிருந்தன. ஒன்றுக்கும் உதவாத எழுத்துக்களை எழுதும் தங்களை தாங்களே எழுத்தாளர்களாக எண்ணிச் செயற்படும் கிழக்கின் வட்டார எழுத்தாளர்கள் சிலருக்கு என்மீது கடும் கோபமும் காழ்ப்புணர்ச்சியும் இருந்ததன் காரணமாக பலவழிகளில் அசௌகரியமான நாகரீகமற்ற முறைகளில் எதிர்ப்புகளை காட்டினர். இன்றும் அது தொடர்கிறது. நானும் எனது அஸீமுமாக இணைந்தே இவற்றை எதிர்கொள்கிறோம்.

விமர்சனம் என்றால், அவதூறுகளை பரப்புதல் என்றாகிவிட்ட சூழலில் இவற்றை கடந்துவர வெற்றிகரமாக கையாளவும் பழகியிருக்கிறேன்.

இஸ்லாமிய பெண்படைப்பாளியாக சமூகத்தில் எப்படி தொடர்ந்து செயற்படுவது என்பதன் வரையறை எனக்கு தெளிவாகத் தெரியும் என்பதனால் குடும்பத்தில் ஒருவித சங்கடமும் இல்லை. என்னுடைய சமூதாயத்தில் என்னை சுட்டிக்காட்டி இன்னொரு புதிய பெண் எழுதமுற்படுவதை எவரும் தடுக்கக்கூடாது என்பதில் நான் கவனமாக செயற்படுகிறேன். சவால்மிக்க எடுத்துக்காட்டாக நான் இருக்கிறேன் என்பதே மகிழ்ச்சியான உண்மையுமாகும்.


05. இப்போது நீங்கள் இயங்குவதற்கான வெளி உங்களுக்கு உருவாகியுள்ளதா? அல்லது ஆரம்பகாலத்தில் நீங்கள் சந்தித்த தடைகள் இன்னும் தொடர்கின்றதா?


ஆம், தடைகளுக்கு எவ்வித பஞ்சமும் இல்லை. அது இரவு பகலாக இருக்கிறது. ஆணிடமிருந்தும் பெண்ணிடமிருந்தும் சக எழுத்தாளர்களிடமிருந்தும் யாரென்றே அறியாத, இலக்கியம் என்றால் என்ன என்றே அறியாத சமூகக் குற்றவாளிகளிடம் இருந்தும் நாளாந்தம் நான் எதிர்கொள்கிறேன். அதனை முடிவுக்கு கொண்டுவர நம்முடைய நேரம் காலத்தை கொடுத்து பிரயத்தனப்படத் தொடங்கினால் கவிதை மனம் செயற்படாது. எழுதும் மனநிலை எழுத்தாளருக்கு மிக முக்கியம்.

என்னுடைய எழுத்துவெளி மிக தெளிவான ஒன்றாக மாறியிருக்கிறது. நான் செயற்பட வேண்டிய மன அமைப்புதான் இனிமேலும் உறுதிப்படுத்த வேண்டும். தீர்க்கமும் தெளிவாகவும் தொடர்ந்து நான் செயற்படலாம் என்பதே எனது எதிர்பார்ப்பு.

எனக்கான எழுதும் செயற்படும் வெளி விசாலமாக ஆகியுள்ளது. இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும், திறந்த உரையாடல்களில் பங்குபெறவும் நான் விரும்பியவாறு செயற்படவும் முடிகின்றது. சில விட்டுக்கொடுப்புகளினூடே நான் முன்னேறிச் செல்கின்றேன் என்றே கருதுகிறேன்.


06. இஸ்லாமிய சமூகமும், மதவாதமும் பெண் எழுத்தாளர்களை எவ்வாறு நோக்குகின்றது? அவர்களுக்கு என்ன அங்கீகாரம் மற்றும் வெளியைத் தந்துள்ளது?


பொதுவாகவே மதத்திற்கும் மதவாதத்திற்கும் நிறய வேறுபாடுகளை நாம் உலகமெங்கும் காணலாம். இஸ்லாத்தைப் பொறுத்தவரைக்கும் பல்வேறு கொள்கைகள், பிரிவுகள் தோன்றிவிட்டன. எனவே எனக்குப்பிறகு 73 பிரிவினர் காணப்படுவார்கள் என்பதும், ஒரு தரப்பினரே உண்மையாளர்கள் என்பதும் முஹம்மது நபிகளின் வாக்காகும். இது தீர்வற்ற சர்ச்சையாக தொடரக்கூடியது.

இங்கே என்னுடைய வாழ்க்கை சூழலில், ஊரில் நாட்டில் கொள்கைசார்ந்து பலபிரிவுகளுடன் முஸ்லீம்கள் காணப்படுகின்றனர். எந்தப்பிரிவிலும் இணையாத சாதாரண முஸ்லீம்களும் உள்ளனர். பெண்களுக்கு இந்தப் பிரிவுகள் கொடுக்கும் நிர்ப்பந்தம் நெருக்கடி வெவ்வேறு வகையானது என்பதனை கண்கூடாக காண்கிறோம். இது இவ்வாறிருக்க பெண் எழுத்தாளர்களை எந்தப் பிரிவினருமே முற்று முழுதாக ஏற்பதில்லை. பாடசாலை தமிழ் இலக்கியத்தில் பெண் படைப்பாளர்கள் பற்றிய அறிமுகம், அவர்களுடைய படைப்புகளை இணைத்திருக்கிறார்கள். பெண்மொழிக்கட்டுரைகள், கவிதைகள் உள்ளடக்கபட்டிருக்கிறது. பாடசாலை மட்டத்தில் இதுவொரு நல்ல மாற்றமாகும். எங்கள் தமிழ் இலக்கியத்துறையில் பெண் எழுத்தாளர்களை, பெண் எழுத்தாளர்களே நோக்குவதில் அதிக வித்தியாசம் காணப்படுகையில், குழுக்களாகப் பிரிந்து எதிர் மனநிலையில் செயற்படுகையில் மதங்களை மட்டும் குறை சொல்வது எப்படி? மதரீதியான ஆண் சமுகம் இவ்விடயத்தை புரிந்துணர்வுடன் கையாளக்கூடும் என நாம் எதிர்பார்க்க முடியாதுதான். சமுதாயத்தின் பார்வையை மாற்றும்முகமாக ஆணும் பெண்ணுமாக இணைந்து தமது எழுத்துச் செயற்பாடுகளை முன்னெடுப்பதுதான் எதிர்காலத்தில் இலக்கிய உலகில் முஸ்லீம்பெண்களை உருவாக்க வழிகோலும் என நம்புகிறேன். பெண் எழுத்தாளருக்கான அங்கீகாரத்தையும் எழுதும் வெளியையும் இன்னும் முழுமையாக பெறவில்லை என்பதற்கு மதரீதியான கட்டுப்பாடுகள் மாத்திரமல்ல, ஆணாதிக்கப் போக்கும்தான் இதற்கு முழுக்காரணம் என நான் கூறவிரும்புகிறேன். உலகில் பலநாடுகளில் இலக்கியம், சினிமா, ஓவியம், இசை போன்ற துறைகளில் எழுத்தாளர்களை நாம் காணமுடியும். மிகுந்த தன்னிகரற்ற உயர்ந்த கலைஞர்களாக முஸ்லீம்கள் காணப்படுகின்றார்கள். பல உதாரணங்கள் நம்முன் உள்ளது. பெண்களும் அவ்விதமே. எங்களது இறுக்கமான சூழ்நிலைகள் ஒரு காரணம். ஆனால் சுயவிருப்பமுள்ள தேடலுள்ள பெண்கள் மத்தியில் கலைத்துறையில் ஆர்வம், விருப்பம் குறைவு எனும் காரணமும் உண்டு. அவர்கள் படித்தோமா, வேலைக்குப்போனாமா, திருமணம் முடித்தோமா, பிள்ளைகள், கணவர், குடும்பம், மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் பார்த்தோமா, உறங்கி எழுந்தோமா என அவர்கள் இருக்க விரும்புகிறார்கள். எழுத்தில் இயங்கும் பெண்கள் சார்ந்து பொதுக்கருத்தாகப் கூறப்படும் விடயங்கள் தீவிரமாக அவர்கள் செயற்படுவதைத் தடுக்கின்றது.


07. உங்கள் கவிதைகளின் சிறப்பு அவற்றின் மொழியிலும் படிமங்களிலும் உள்ளது. வாசிக்கும் போதெல்லாம் வியக்கவைக்கும் அந்த மொழியின் ஆளுமையை எப்படி பெற்றீர்கள்?


யாரும் ரகசியங்களின் முழுப்பரிமாணத்தை அறிந்துகொள்ளமுடியாது. அறிந்து கொள்ளக்கூடிய ஒன்றில் ஒரு ரகசியமும் ஒளிந்திருக்காது. என்னுடைய ரகசியங்கள் எனது கவிதைமொழியிலும் படிமங்களிலும் ஒளிந்திருக்கின்றன. அதனால் அது வசீகரமானதாக இருக்கின்றது போலும். எனது தனிமை, இயற்கையை சார்ந்திருக்கக்கூடியது. மேலும் நான் இறந்து போகாமல் இருப்பதற்காக நான் பெண்ணாகவே இருபப்தற்காக வாழ்வை தொட்டுணர்வதற்காக கவிதைகள் எழுதகிறேன். அந்தமொழி துயரும் வெறுமையும் கொண்டாட்டமும் காதலின் கொதிப்பும் கொண்டிருப்பது. மந்திரத் தன்மைகளும் பைத்தியமும் நிச்சலனமும் தொலைதலும் மெய்நிலையும் சூழ்ந்த மனதிலிருந்து வெளிப்படுகின்ற கவிதைகள் அவை என்றுமட்டும் சொல்லலாம். மேலும் என்னால் அதனை விபரிக்க முடியுமென்று தோன்றவில்லை.


08. ஈழத்தின் வன்முறையும் இன அழிப்பும் உங்கள் படைப்புகளை எவ்வாறு பாதித்துள்ளன? அவற்றை உங்கள் கவிதைகள் எப்படி உள்வாங்கி வெளிப்படுத்துகின்றன?


வன்முறையும், இனஅழிப்பும் பாதிக்காத எந்தவொரு எழுத்தாளரும் எங்கும் இருக்கமுடியாது. நான் பத்து வயதிலிருந்தே இந்தப் பிரச்சினைகளோடு கலந்திருந்தேன். கண்கூடாகக் கண்டும் அனுபவித்தும் இருக்கிறேன். ஆனால் அவற்றின் எல்லாச் சம்பவங்களையும் நான் எழுதிவிடவில்லை. ஒருவேளை அவை கவிதையாகமல் வேறு பதிவுகளில் இனிவரக்கூடும். ஆயினும் சில கவிதைகள் எழுதியிருக்கிறேன். மேலும் சில இரத்தக்குறிப்புகள் மிக அதிகமாகப் பேசப்பட்ட முக்கியமான கவிதையாகும்.

நேரடியாக முள்ளிவாய்க்கால் விடயங்களை பேசும் கவிதைதான் மாபெரும் உணவுமேசை. எனது அனைத்து தொகுப்புகளிலும் போர் சம்மந்தமான மக்கள் உணர்வுகளை பேசும் கவிதைகள் இருக்கின்றன. எந்தவொரு அனர்த்தமும் பேரழிவும் நிலைகுலையச் செய்பவைதான். அதை உடனடித் தயாரிப்புகளில் கவிதையாக்குவதில் பல மனத்தடைகள் எனக்கு உருவாகிவிடும். அந்தச் சமயத்தில் கவிதை எழுதுதல் ஒரு ஆடம்பரச் செயல்போல தோன்றுவதும் உண்டு. மனிதராய் இருப்பதிலேயே குற்ற உணர்வுக்கு ஆளாகின்ற போது எப்படி உடனடியாக எழுத முடியும்? பல தயக்கங்கள் இன்னும் எனக்குள் உள்ளது எழுதுவதற்கு. ஆனால் இன்று பல வழிகளில் இந்தவிடயங்களை எழுதிவருகின்றனர். அவர்கள் அனைவரிடமும் ஒரு உண்மை உண்டு. ஒரு அனுபவம் ஒரு கருத்து உண்டு. அவர்களது எழுத்துக்கள் அனைத்தின் மீது என் மரியாதையை வைத்திருக்கிறேன். வன்முறை தொடர்பான பதிவுகள் ஆழ்ந்த காயமும் இழப்பும் கண்டவர்களிமிருந்து தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருப்பதை தற்போது அதிகம் அவதானிக்கின்றேன். 


09. ஒரு தொகுப்பிற்கும் அடுத்த தொகுப்பிற்கும் இடையில் ஒரு படைப்பாளியாக நிகழும் மாற்றங்கள் என்ன ? அந்த மாற்றத்தில் இஸ்லாமிய சமூகமும் மதமும் தமிழ்ச் சமூகமும் படைப்புச்சூழலும் எப்படி பங்களிப்புச் செய்கின்றன?


தொகுப்புக்களுக்கிடையில் மாற்றங்கள் நிச்சயம் உண்டு. அது அத்தனை விரைவான சுலபமான ஒன்றுமல்ல. எனது முதலாவது தொகுப்பான ஓவியம் வரையாத தூரிகை வெளிவந்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அவை தொகுக்கப்படுவதற்காக எழுதப்பட்டவையல்ல. முழுக்க நம்பிக்கையற்ற குழப்பம் சூழ்ந்த மனநிலையிலிருந்து அக்கவிதைகளை எழுதினேன். ஒருவகையில் இறப்பதற்குமுன் எழுதிவைக்கப்படும் கடிதத்தை ஒத்தவைகள் அவை. அவநம்பிக்கையின் மொத்த வடிவமாக இருந்தது. அந்த கவிதைத் தொகுப்பிற்கு சாகித்திய பரிசு கிடைத்தது குடும்பத்தில் வேறு அணுகுமுறையை ஏற்படுத்தியது. யாருக்கும் தெரியாமல் எழுதி, யாருக்கும் தெரியாமல் அனுப்பி யாருக்கும் தெரியாமல் செயற்படும் சிரமங்கள் அதன் மூலம் விலகி இருந்தன.

இரண்டாவது தொகுப்பான எனக்குக் கவிதைமுகம் எனது அடையாளத்தை தனித்துவத்தை எனக்கான மொழியை கொண்டிருந்தது. தமிழ் இலக்கியச்சூழலில் கவன ஈர்ப்பை வழங்கியது. இந்தக் காலம்தான் இறுகச்சூழ்ந்த வாழ்வின் கருணையை கருணை இன்மையையும் முடிவற்ற துயரும் கொண்ட காலமாகும். எதிர்கொண்ட வக்கிரமான தடைகளையும் இம்சைகளையும் கடந்து கவிதைதான் எனக்கு எல்லாம் என்ற நிலையில் இருந்தபடியே அடுத்தடுத்த தொகுப்புகளை கொண்டுவந்தேன். உடல் பச்சைவானம், பெருங்கடல் போடுகிறேன் கவிதைத் தொகுப்புகள் காலச்சுவடில் வந்தன. எனது ஆர்வத்தின் சிறு முயற்சியால் நாட்டார்பாடல்களை பொடு பொடுத்த மழைத்தூத்தல் தொகுத்தேன். க்ரியா வெளியிட்டது.

நான் வாழும் சமூகத்திலிருந்தபடிதான் செயல்படுகின்றேன். அங்கிருந்துதான் எதிர்காலத்தையும் கடந்தகாலத்தையும் .இணைக்கின்றேன். எழுதும் பெண்கள் குறைவானவர்களாக இருந்தாலும் முஸ்லீம் ஆண் எழுத்தாளர்கள் நிறைந்தே காணப்படுகின்றனர். அவர்கள் மத்தியில் தொடர்ந்தும் செயற்படுவது அதில் ஓரளவு நீணடகாலத்தை கடந்து வந்திருப்பதுமே நிகழ்காலத்தில் எனக்குள்ள சவாலும் வெற்றியுமாகும்.


10. பெண் படைப்பாளிகளின் எழுத்துச் சுதந்திரம் குடும்பம் மற்றும் சமூகத்தின் அடக்கு முறைகளுக்கும் அதிர்வுகளுக்குமிடையேதான் உருக்கொள்கிறது. இஸ்லாமிய பெண்படைப்பாளிக்கு இன்னும் கூடுதல் நெருக்கடி தரும் சூழல் இது. அதனால் சுயதணிக்கை என்பது பெண்ணெழுத்தில் மிக நுண்மையாக இயங்கி ஆட்சி செய்கிறது. இந்த சுய தணிக்கை உங்கள் வெளிப்பாட்டை எப்படி பாதிக்கின்றது?


சுய தணிக்கையின்றித்தான் எழுதவிரும்புகிறேன். போர்க்கால அச்ச சூழலில் சுயதணிக்கை தேவையாக இருந்தது. பல்வேறு அரசியல் முரண்பாடுகளை தவிர்க்கும் பொருட்டே எழுத்தாளர்கள் சுயதணிக்கை செய்ய நேர்கின்றது. எழுத்தாளர்களது சுயநலம் சார்ந்து அது ஒருபோதும் இருப்பதில்லை. பல்வேறு நெருக்கடிகளை தவிர்க்கும் பொருட்டே சுய தணிக்கயைின் தேவை எழுகின்றது. என்போன்ற பெண் ஒருவர் எழுதும்போது என் முன்னுள்ள குடும்பம், சமூக கட்டுப்பாடுகள், அதன் பிறகு அரசியல் சூழல் என்பன சுய தணிக்கை மேற்கொள்ள காரணமாகின்றன.

தணிக்கையின்றிய வெளிப்பாட்டினால் பாதிப்பு ஏற்படுகின்றது தான். சுமை இறுக்கம் வெறுப்பு எழுத்தாளர்களை ஆழமாகப் பாதிக்கின்றது. அண்மையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துமிருக்கினறன. கவிதைகளில் முடிந்தவரை தணிக்கைகளை உடைத்து மீறிச் செல்லும் வழிகள் உள்ளன. நான் அதன் எல்லைகளை மொழியின் உதவியால் உடைத்து பல கவிதைகளை எழுதியிருக்கிறேன்.

புலம் பெயர் எழுத்துக்கள் இந்த விடயத்தில் மிகவும் விசாலமடைந்திருக்கின்றது. நான் அவதானித்த வகையில் எல்லைக்கோடுகளை எடுத்து வீசிய கலைஞர்களாக இங்குள்ள கலைஞர்களும் புதிய பழைய எழுத்தாளர்களும் காணப்படுகின்றனர். அங்கு நாங்கள் எந்த மௌனத்திற்குள் தொடர்ந்து குமைகின்றோமோ அதே மௌனங்கள் இங்கே அபரிமிதமான ஆற்றல்களாக வெளிப்பட்டுக்கொண்டு வருகின்றன. கவிதை, நாடகம், இசை, குறுந்திரைப்படம், நாவல், ஒவியம் புகைப்படம் சிறுகதை கூத்துவடிவங்கள் என வாழ்வதற்கான அர்த்தச் செயற்பாடுகளாக உயிருள்ளதாக மௌனங்கள் பல்வேறு வடிவங்கள் எடுத்து அசைகின்றன. இவற்றை அவதானிக்கையில் மிகுந்த சந்தோசமும் நம்பிக்கையும் ஏற்படுகின்றது.

--------------------------------------------------------------------------------------------------

கனடாவில் இருந்து வெளிவரும் தாய்வீடு பத்திரிகையில் இடம்பெற்ற எனது நேர்காணல்.

நேர்காணல் செய்த தோழி கீதாவுக்கும், அ்ன்பிற்குரிய நண்பர்கள், தாய்வீடு பத்திரிகை ஆசிரியர் திலீப் குமார், புகைப்படக் கலைஞர் கருணா மற்றும் காலம் செல்வம் ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

http://www.thaiveedu.com/publications/pdf/issues/jul-15.pdf