“சாய்ந்தமருதில் பெண்கெளுக்கென்றொரு இஸ்லாமிய அறிவூட்டலுக்கான தனியான பயிலும் இடம் எமக்கேன் இல்லை?”
- அனார்
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு நாட்டின் முழு வளர்ச்சியை தீர்மானிக்கின்ற வளங்களில், மிக வலுவான, இன்றியமையாத வளம் மனித வளமே ஆகும். மனித வளம் என்னும் போது அது ஆணையும், பெண்ணையும் சேர்த்தே குறிக்கின்றது. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் அறிவை பெருக்கமடையச் செய்ய, கல்வியூட்டல் வழிகளே முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதை காண்கிறோம்.
எந்தத் துறைகளாக இருந்தால் என்ன? அதன் அதன் துறைகளில் தெளிவான, முறையான அறிவை பெற்றிருப்பது என்பதுதான் அத்துறைகளில் ஈடுபடவும், முன்செல்லவும், பின் வெற்றியடையவும் ஏதுவாக அமைகின்றது என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை.
அடிப்படைத்தெளிவுடன் கூடிய கல்வியானது, சமூதாயத்தை மேம்படுத்துவதோடு, மேல்நிலைக்கும் கொண்டு செல்கின்றது. மேம்பட்ட சமூதாயங்களைக் கொண்ட நாடுதான் உண்மையில் பொன் விளையும் பூமி அல்லது அப்படி அழைக்கப்பட தகுதியானது எனலாம்.
இக்கட்டுரையை எழுதுவதன் நோக்கம், எமது பிரதேச சமூக குறைபாடொன்றை வெளிப்படுத்துவதினூடாக, எமது சமூதாயம் எதிர்காலத்தில் இவ்வுண்மையை விளங்கி செயல்பட தூண்ட வேண்டும் என்ற ஒரேநோக்கமாகும்.
கிழக்கு மாகாணத்தின் கிராமப்புறமான, பெரும்பாலும் நகரமாய் மாறிவிட்ட “சாய்ந்தமருது“ எனும் எமது ஊரில் நிவர்த்தி செய்யப்படவேண்டிய ஒரு சமூகப் பணியாக “பெண்களுக்கான இஸ்லாமிய அறிவூட்டலுக்கான தனியொரு பயிலுமிடம் அவசியமாகும். இஸ்லாமியக் கல்வியூட்டல், பிரத்தியோகமான பல தளங்களைக் கொண்ட விரிவான வாழ்வு முறையாகும். அதனை அடிப்படையிலிருந்து கற்றுக் கொள்வதற்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். ஒன்றுகூடி மதரீதியான கல்வியூட்டலையும் பயிற்சிகளையும் பெறுவதற்கான தனியிடம் ஒன்று இல்லாமை குறைபாடாகவும் அதே நேரம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் பாரபட்சமாகவும் கருதவேண்டியிருக்கிறது.
பாரம்பரியமான சாய்ந்தமருதில் அமைந்துள்ள பள்ளிவாசல்கள் 16க்கு மேற்பட்டவையாகும். ஆண்களுக்கான குர்ஆன் மத்ரசாக்களும் கணிசமாக உள்ளன. ஆனால் பெண்கள் சுயமாக இயங்கக் கூடிய ஒரு கட்டிடமோ அல்லது இருக்கின்ற பள்ளிவாசல் ஒன்றில் இத்தகைய பெண் அறிவூட்டலுக்கான சிறிய இடவசதி மற்றும் நூலக வசதியேனும் இதுவரை வழங்கப்படவில்லை.
குர்ஆன் மத்திரசா (ஓதப்பள்ளிகள்) என அழைக்கப்படும் வீடுகளில் பெண்களால் நடாத்தப்படும் குர்ஆனை மட்டும் ஓதிக் கொடுக்கப்படும் இடத்தை நான் கூறவில்லை (அங்கே குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பையோ கருத்துக்களின் விளக்கங்களையோ மாணவ, மாணவியருக்கு கற்றுக்கொடுக்கப்படுவதில்லை). இதுவரை பெண்களுக்கென்று இஸ்லாமிய கல்விக்கான எந்தவொரு நிலையான முயற்சியினையும் எவரும் வளர்த்து எடுத்திருக்கவில்லை என்பது மிகவும் துரதிஸ்டமே.
பல்வேறு குழுக்களும், சமூக செயற்பாட்டு நிலையங்களும் அமைந்துள்ள போதிலும், இத்தகைய பெண் சீர்திருத்தங்களுக்கான நடவடிக்கைகளை ஏற்படுத்தவில்லை. இது ஆழ்ந்த கவலையான சமூகப் பின்னடைவான விடயமாகும். ஆண்களுக்கான மத வழிகாட்டல் இடம் பெறுகின்ற அதே சமயம், பெண்களுக்கும் இவை சமமாக வழங்கப்படவேண்டும். ஏன் சிந்திக்காமல் இருக்கின்றார்கள் ? இனியும் இவ்விடயம் தொடர்பாக அக்கறை அற்றிருப்பது பெரும் தவறென்பதை நாம் ஒவ்வொரும் உணரவேண்டும். சமூகத்தின் நலன்விரும்பிகள் ஒத்துழைத்தால் இதைச் சாதிப்பது சுலபமே.
ஒரு தாயிடமிருந்தே பிள்ளைகளுக்கான முதல் கல்வி வழங்கப்படுகின்றது. எனவே பெண்களுக்கு மத அறிவு முழுமையாக வழங்கப்படுதல் அவசியமாகும். பெண்களுக்கென்று தனிப்பள்ளிவாசல் உடனடியாக்க் கிடைக்காவிட்டாலும் இருக்கின்ற பள்ளிவாசல் ஒன்றில் பெண்களுக்கென்று சிறிது நேரத்தை வழங்கலாம். பெண்கள் தம் ஆளுமைகளை வளர்த்துக் கொள்ளும் இடமாகவும் அவர் தம் தேவைகளை ஆலோசிக்கவும் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்கவும் இந்த வாய்ப்பு அவர்களுக்கு உதவும்.
வழிகேடுகள் அனாச்சாரங்கள் அர்த்தமற்ற வாழ்வு முறையென்பன உக்கிரமடையக் காரணம் அடிப்படை இஸ்லாமிய அறிவும் தெளிவும் இல்லாமையே. தாய்மைக் கல்வி மூலமே இச்சமூக எதிர்காலத்தை சரியான பாதையில் எடுத்துச் செல்லலாம். பெண்களைத் தவிர்த்துவிட்டு அவர்களுக்கு சிறப்பான முறையில் அறிவூட்டப்படாமல் பள்ளிவாசகள் பெருகவதன் மூலமோ புதிய புதிய மத்ரசாக்களை கட்டுவதன் மூலமோ எங்கள் சமூகத்தில் விழிப்புணர்வையும் எழுச்சியையும் ஏற்படுத்த இயலாது என்பது நிதர்சனமாகும்.
பாடசாலையில் போதிக்கப்படும் இஸ்லாமியப் பாடத்துடன் ஒரு பெண்ணிண் மார்க்க அறிவானது முடக்கப்படுகின்றது. ஒரு சில பெண்கள் வெளியூர்களுக்குச் சென்று மௌலவியாவாக பயின்று பட்டம் பெற்று வந்து அப்படியே பிறருக்கு அதனை பயிற்றுவிக்கக் கூடிய வாய்ப்பும் வசதிகளற்று முறையான திட்டங்களும்மற்று இருந்து விடுகின்றார்கள். பெண்களை இஸ்லாம் கல்வி பெறுமாறுதான் கூறுகின்றது. அதற்கொரு முடிவோ எல்லையோ கிடையாது. எங்கள் பெண் சிறார்களுக்கான அடிப்படை மார்க்க அறிவை புகட்டவும் அவர்கள் அவற்றை விருத்தி செய்து கொள்ளவும் முக்கியமாக அவர்களுக்கு பிரத்தியோக இடம் தேவை. 5வயது முதல் சிறுவர்களுக்கும் இளவயதினருக்கும் முதியோருக்கும் என தனித் தனியே அறிவூட்டல் வகுப்புகளாக இந்த விடயத்தை ஏற்படுத்தி நடத்தமுடியும். பெண் மௌலவிகள் பெண் ஆசிரியர்கள் முதிர்ந்த ஆலிம்களால் மார்க்க கல்வி அறிவு வழங்குவதன் அவசியம் பற்றிய ஒன்று கூடலும் கலந்துரையாடலும் பெற்றோர்களுக்கூடாக நடாத்தப்பட வேண்டும்.
சமூதாய பெரியவர்கள், அரசியல் பிரமுகர்கள், தற்போதைய ஊர் நிர்வாகிகள், இளைஞர் யுவதிகள் இஸ்லாமிய தஃவா குழுக்கள் ஏன் ஒவ்வொரு பெற்றோரும் இவ்விடயத்தை கவனத்தில் எடுக்க முன்வரவேண்டும். பெண்கள் இத்தகைய கல்வி அறிவை பெறுவதினூடாக சமூகம் பெரும் சீர்திருத்தம்பெறும் என்பதில் ஐயமில்லை. முழுநிறைவான முஸ்லீம் சமூகம் உருவாக வேண்டுமானால் பெண்ணுடைய நிரப்பப்படாத இந்த வெற்றிடம் நிரப்பப்பட வேண்டும். ஏனெனில் இது ஒவ்வொரு வீட்டிலுமுள்ள பெண்களுடைய தேவையுமாகும்.
பிற ஊர்களிலும் பார்க்க பெண்களின் மார்க்க கல்வி ஊட்டலில் சாய்ந்தமருது ஏன் ? மிக மிக பின் தங்கியிருக்கிறது? இச்சமூதாயத்தின் முன் கேள்வியை முதலில் முன் வைப்பதன் நோக்கம் நெடுங்காலமாக உண்ர்ந்து தீர்க்கப்படாத இவ்விடயத்துக்கு சாதகமான முயற்சிகளை முன்னெடுக்கும் துணிவு உடனடியாகத் சகலருக்கும் தோன்ற வேண்டும் என்பதே.
இதில் பெண்கள் காட்டக்கூடிய ஆர்வமும் அக்கறையும் ஊரை புதிய ஒளியுள்ளதாக மாற்றி பெண்களுடைய வாழ்வை அது அர்த்தம் நிறைந்ததாக மாற்றியமைக்கும் என்பது எனது உறுதியான எண்ணமாகும். நேர்த்தியும் ஒழுங்கும் கொண்ட பெண்கள் வாழ்வு சமூக சமைய ஒழுக்க மேன்மைகளுடன் சிறப்பாக அமைய இப்பணியை தொடக்கி வைக்க முன்வருவோர் உளரோ ?
( நன்றி - தினகரன் வாரமஞ்சரி, ஓக்டோபர் 10, 2010 )
-------------------------------------------------------------------------------------------------------------
1 comment:
நிச்சயமாக பெண்களுக்கென்ற திறந்த கல்லூரி ஒவ்வொரு ஊரிலும் நிறுவப்பட வேண்டும். அதனூடாக மார்க்கம் என்று குறுகியவட்டத்தினுள் நோக்காமல், பெண்களுக்கான ஆளுமை விருத்தி வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும்.
Post a Comment