நேர்காணல்

அனாருடனான நேர்காணல்கள்:

நேர்கண்டவர்: வாசுகி சிவக்குமார்

(13, 20, 27 ஏப்ரல், 2008 ஞாயிறு தினகரன் வாரமஞ்சரி) 
-------------------------------------------------------------------------------------------------------------

- திரும்பத் திரும்பப் படிக்கும்போது வேட்கையும் காதலும் மேலெழும் தனிமை, பதற்றம், பீதி நிறைந்த வாழ்வை நெருக்கமாகத் தரிசிக்;கும் கவிதைகள் உங்களுடையவை. உங்களை வடிவமைத்த சூழலும் அத்துணை அடக்குமுறைகளும் நெருக்குதல்களும் நிறைந்ததா?


என்னை வடிவமைத்த சூழலைப் பற்றி கூறுவதானால், எனது ஊர் சாய்ந்தமருது, வயலும் கடலும் சூழ்ந்த நிலம். மருத மரங்கள் நிறைந்த சாந்தமான ஊர் எனவும் குறிப்பிடலாம்.

நான் மிகவும் நேசிக்கும் எனது தந்தை, ஓய்வு பெற்ற மௌலவி ஆசிரியர். என்னுடைய தாய் தொழில் செய்யாவிடிலும், நிர்வாகத் திறன்மிக்க பெண் ஆளுமை. நான்கு பெண், நான்கு ஆண் பிள்ளைகளைக் கொண்ட பெரிய குடும்பத்தில், நான் மூன்றாவது பெண்.

இஸ்லாமியப் பாரம்பரியங்கள் வலுவாக அமைந்த குடும்பம். இலக்கியம் சார்ந்த அறிமுகங்களுடன் எவரும் இருக்கவில்லை. ஆயினும் எனது வீட்டில் இசை வளம் இருந்தது. அது அரபு மொழியுடன் இணைந்ததாக மாத்திரம் காணப்பட்டது.

எனது பிரதேசத்தில் 1990 காலகட்டமானது ஆழமான மனக்காயங்களை உண்டுபண்ணிய காலங்களாகும். கலவரங்களாலும், வன்முறைகளாலும் நிரம்பிய, பீதிநிறைந்த அந்நாட்களை பெரும் சாபம் நிறைந்தது என்று தான் சொல்ல முடியும். பல துயரச் சம்பவங்களை கண்டிருக்கின்றேன். அதன் மிக கணிசமான அனுபவங்களோடுதான் எனது இளமையை என்னால் நினைவு கூர முடியும்.

தவிர, 1991ஆம் ஆண்டு பாடசாலைக் கல்வியை இடைநிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. அதன் பிறகுதான் எனக்குள் தனிமை கவிந்தது எனலாம். பின்னர் எல்லாமே நெருக்குதல்களாகவே தோன்ற தொடங்கிவிட்டன. வெளியில் செல்லக் கிடைத்த ஒரே வாய்ப்பு பாடசாலை மாத்திரமே. அது பறிபோன துக்கம் இப்போதும் நெஞ்சுக்குள் பெரும் இழப்பாய் மீதமுள்ளது. இந்த நிலையில் தான், நான் எனக்குள்ளே பேசத் துவங்கினேன்.

வாழ்வின் காதலை, இருப்பின் வேட்கையை அவாவினேன். கவிதை அனைத்தையும் எனக்கு சாத்தியமாக்கியது. கவிதைக்குள் நான், என் விடுதலையை கண்டெடுத்தேன். அதன் மூலம் எனக்கான சுதந்திரத்தை அனுபவித்தேன்.

அன்றய போரின் நெருக்குதல்களாலும், பீதியாலும் உள்ளார்ந்த இறுக்கங்களாலும் தன்னிரக்கம் மிக்க தனிமையாலும், ஆக்கிரமிக்கப்பட்ட காலங்களை கடந்து வந்துவிட்டேன்.
என் அகவெளியை கவிதை மொழிகளால் விரித்து வைத்திருக்கின்றேன். அங்கே எனக்கான உலகம் எல்லாவித சாத்தியங்களாலும் ஆக்கப்பட்டிருக்கின்றது.

இன்றய என்னுடைய நாள் இவற்றிலிருந்தெல்லாம் வேறுபட்டும், அத்தகைய சூழல்களிருந்து பெரிதும் மாறுபட்டும் போய்விட்டது. அதை முழுக்கச் சாத்தியப்படுத்தியவர் எனது கணவராகும்.

இப்போது நான் வெறுமனே தனிமையை, இயலாமையை கட்டியழும் பெண்ணுமல்ல.


- பொதுவான பெண் கவிதைகள் ஒரே விஷயத்தையே திரும்பத் திரும்பப் பேச உங்கள் கவிதைகள் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருப்பதாகச் சொல்லலாமா?


நமது நாட்டில், 1980களின் காலகட்டத்தில் பெண் மொழியின் தனித்துவமான புதிய பாய்ச்சலாக சிவரமணி, செல்வி, ஊர்வசி, சங்கரி கவிதைகள் இருந்தன. பிறகு நீண்ட தேக்க நிலைதான் காணப்பட்டது.

கவிதைகள் எழுதும் பெண்கள் இருந்த போதிலும், தனித்துவமான பெண் மொழியின் வெளிப்பாடோ, பெண் அரசியலோ வெளிப்படும் வகையான எழுத்துக்கள் அரிதாகவே இருந்திருக்கின்றன.

ஒளவை, ஆகர்ஷயா, ஆழியாள் என சிலர் மிக ஆளுமையுடன் வெளிப்பட்டார்கள். அறிவு பூர்வமான ஆழியாளின் கவிதைகளில் பெண்மொழியின் தீவிரம் மிகுந்திருந்தது. இப்போதென்றால் பல பெண்கள் தனித் திறமைகளோடு இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இதில் குறிப்பிடத்தக்கவர் பெண்ணியா, வேறுசில புலம் பெயர்ந்த பெண் கவிஞர்களையும் கூற முடியும்.

2004 இல் வெளியான 'ஓவியம் வரையாத தூரிகை' என்ற, எனது முதல் தொகுதியின் பிற்பாடுதான் தீவிரமாகவும், அதிகமாகவும் புதிய மாற்றங்களோடும் எழுத தொடங்கினேன்.

பெண் மனவெளியை, அதன் வீரியமான எழுச்சியை, பொங்கும் பிரவாகத்தை என்னுள் உணரத் தொடங்கினேன். கவிதை நுன்ணுர்வுகளுடன் சம்மந்தப்பட்டது. அனுபவங்களுக்கூடாகவும், வாசிப்பு மற்றும் தேடல், புதிய சிந்தனைக்கு தூண்டப்படுதல் போன்றவற்றினாலும் நிகழ்வது. என்னுடைய கவிதைகள் தமக்கு அதிகபட்ச உரிமைகளை எடுத்துக்கொள்ள நான் எப்போதும் அனுமதிக்கிறேன்.

எனது கவிதைகளில் உணர்வின் குரலை, அழகின் பாடலை, வாழ்வின் ருசியை, மொழியின் கனவை அதன் உறையும் மௌனத்தை, நோவை பதிந்து வருகிறேன். மேலும் கூறினால், எதிர்ப்பின் வேறொரு வடிவமாக... கொண்டாட்டமானதாக, எல்லையற்றதாக கவிதையை வாழ்கிறேன்.

- பெண்மொழி, பெண்ணிய சிந்தனைகளுக்கான முக்கியத்துவத்துக்கு மத்தியிலும் பெண் உறுப்பு பற்றிய சொற் பிரயோகங்களைத் தாங்கிய கவிதைகள் அதிக கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகின்றனவே ?


இவ்விடயத்தில் காணப்படும் விமர்சனம் மற்றும் கண்டனங்கள் எமது எழுத்துச் சூழலில் குறைந்த அளவே உள்ளது.

தமிழ் நாட்டு பெண்ணிய எழுத்தாளர்களான சுகிர்தராணி, சல்மா, குட்டிரேவதி போன்றோர், இந்த விடயத்தை அதிகமதிகம் எதிர் கொண்டவர்கள். நான் நினைக்கிறேன், பெண் தன் உடலைக் கொண்டாடி எழுதுவது வேறு, பெண் உறுப்புகளை சுட்டி எழுதுவது வேறு.

ஆரம்பத்தில் பெண் மொழியை சாத்தியமாக்கிக் காட்டிய, காரைக்கால் அம்மையார், ஆண்டாள், அப்போதே பெண் உறுப்புகளை சுட்டி எழுதியவர்கள் தாம். எனவே இது ஒரு புது விடயம் அல்ல.

சிலர் நினைக்கிறார்கள், பெண் உறுப்பை எழுதிவிட்டால் அது பெண்ணியம் அல்லது நவீன கவிதையாகி விடும் என்று. போதிய புரிதல்கள் இல்லாமல் வெற்று வார்த்தைகளுக்கு நடுவே அதிர்ச்சிக்காக இதனைப் பாவிப்பதை நான் மறுக்கிறேன்.

சில கவிதைகளைப் பாhத்தால், புகைப்படம் எடுத்தது போன்று அப்பட்டமாக எழுதப்பட்டிருக்கும். புகைப்படம் எடுப்பதும், கவிதை எழுதுவதும் ஒன்றாகுமா ? கவிதைக்கான நேர்மை என்ற ஒன்றையாவது பேண வேண்டாமா ?

மாறாக, ஒரு முழுமையான கலைப்படைப்பில், அது கொண்டுள்ள முக்கியத்துவத்தின் அடிப்படையில், இது வேறொரு அர்த்த தளத்தை உருவாக்குகின்றது. அதிர்வையும் கலகத்தையும் உண்டுபண்ணுகின்றது. ஆழமான உணர்வுகளுடன், நுட்பமாக எழுதப்படுகின்ற பெண் அரசியல் சார்ந்த கவிதைகளில் எதார்த்தமாக வெளிப்படும் இந்தச் சொற்பிரயோகங்களை, மாற்றுக் குரலாக நான் கருதுகிறேன்.

எடுத்துக்காட்டாக, குட்டிரேவதி 'முலைகள்' கவிதையில்,

'துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர் துளிகளாய்
தேங்கிக் தளும்புகின்றன' என்று எழுதுவதை,

வன்கொடுமைக்கு எதிராக, சரிநிகரில் எழுதப்பட்ட கலாவின் 'கோணேஸ்வரிகள்' கவிதையை,

சல்மாவின் கவிதையை, நிராகரிப்பதற்கு முடியுமா ?

இன்று நவீன தமிழ் கவிதைகள் உலகக் கவிதைகளுக்கு இணையான வீச்சுடன் எழுதப்படுகின்றன.

பெண்கவிதையின் முன் வென்றெடுக்கப்பட வேண்டிய சவால்கள் இன்னுமுள்ளன. கவிஞர்களிடம் இதற்காக, சுய அழிப்பும் உழைப்பும், அறிவாற்றலும் இன்று தேவையானதாக உள்ளது.

கண்டனம், விமர்சனம் என்ற வன்முறையான கூச்சல்களுக்கு மத்தியில் தான், பெண் தன் குரலை வலிமையாக உயர்த்த வேண்டியிருக்கிறது.

சுயமும் தன்னம்பிக்கையுமுள்ள பெண்கள் போலித்தனமான அவலச் சத்தங்களை, கணக்கிலெடுப்பதுமில்லை !


- ஈழத்துப் பெண்களின் ஷபெயல் மணக்கும் பொழுதுகள்| தொகுப்பில் உங்கள் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இதில் சில ஆண் கவிஞர்களின் கவிதைகளும் இடம்பெற்றிருப்பது பற்றி....


ஆம், இது பற்றிய விமர்சனங்கள், விவாதங்கள் அண்மையில் இணையதளங்கள் வாயிலாகவும், இலக்கிய சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஊடாகவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாலதி மைத்ரியின் 'அணங்கு' சிற்றிதழை முக்கியமாகக் கூறமுடியும்.

ஏன் சில ஆண் கவிஞர்கள் பெண் பெயரை பாவித்து எழுதுகிறார்கள் ? ஏன் அவர்கள் வேறொரு ஆண்பெயரை பாவிப்பதில்லை ? அல்லது ஆண்இ பெண் அடையாளமற்று ஒரு பொதுப் பெயரில் எழுதக்கூடாது ? என்ற வினாக்களெல்லாம் நியாயமானவையே ....

எந்த அங்கீகாரத்தை நோக்கி அல்லது யாரைத் திருப்திக்குள்ளாக்க, பெண் பெயரை வைத்து எழுதுகின்றார்கள் ? அத்தகைய ஆண்களால் இது குறித்து தகுந்த விளக்கங்கள் வழங்கப்படவுமில்லை.

பெண்களோடு பெண்களாய் கலந்து, அவர்தம் உணர்வுகளை தம் உணர்வுகளாக உள்ளுணர்ந்து, பெண்களின் பாடுகளில் பங்கெடுத்துப் பார்க்கும் நல்லெண்ணத்திலோ என்னவோ! இத்தகைய நல்லெண்ணங்களோடு ஒரு சில ஆண்கள் கலைச்சேவை செய்கின்றனர்! இவர்களைப் பார்த்து நாம் என்ன சொல்வது ? அவர்களை அவர்களே உள்ளார்ந்து பார்ப்பார்களானால், மோசடியின் மற்றொரு முகம் தெளிவாகத் தெரியும்.


- பெண் எழுத்தை ஆண் எழுதுவதை நிராகரிக்கத்தான் வேண்டுமா?


ஆணாக இருந்து, பெண்களுக்கான விடுதலையை கருத்தில் கொண்டு, முற்போக்கான கருத்துக்களை வலியுறுத்தி எழுதியவர்கள் பெரியார், பாரதியார், பாரதிதாசன் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.

அண்மைக் காலத்தில், ரமேஸ் - பிரேம் கட்டுரைகள் கூட பெண்ணிய புரிதலுடன் முன்வைக்கப்படும் வலுவான நவீன கருத்தாடல்களாக அமைந்திருப்பவை. இதுபோன்ற தொடர்ச்சியை எவரும் குறைத்து மதிப்பிடமுடியாது. தன் ஆண் அடையாளத்தை முற்றாக மறைத்துக் கொண்டு பெண் பெயரில், பெண் வேடமிட்ட எழுத்துக்கள் நிராகரிக்கப்பட வேண்டியவையே. இருந்தபோதிலும் ஆமிரபாலி, ஒரு ஆணாக இருந்து, பெண் பெயரை பாவித்து எழுதியமைக்கும், ரங்கராஜன், சுஜாதாவாக மாறி பெண் பெயரில் எழுதியமைக்கும் வௌ;வேறு காரணங்கள், வௌ;வேறு நோக்கங்கள் இருந்திருக்கமுடியும் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.

தலித் எழுத்து, திருநங்கையர் எழுத்து, பெண்ணிய எழுத்து என்பதுபோல், ஆண் பெண்ணாக உணரும் எழுத்து, பெண் பெயரில் எழுதுகின்ற ஆண்களின் எழுத்து எனும் தெளிவான அடையாளத்துடன் தம் படைப்புக்களை வெளிப்படுத்த, அவர்கள் முன்வரவேண்டும். அவ்வெழுத்துக்களின் விழைவை வேறுபடுத்தும் வகையில், அதை ஒரு குழுவாக அல்லது தனிச் செயற்பாடாக வெளிப்படுத்துவது, பெண் எழுத்துக்களுக்குள் ஊடுருவல் செய்வதைவிட சிறந்தது என நினைக்கின்றேன்.

அன்றய கடுமையான ஆணாதிக்க காலத்தில், பெண் விடுதலைக்கான கருத்துக்களைச் சொன்ன பாரதியாருக்கோÆபெரியாருக்கோ பெண் பெயர் தேவைப்படவில்லை. பெருமளவில் அவர்கள் நடைமுறையில் செயற்படுத்திக் காட்டவும் தயக்கப்படவுமில்லை.

பெண் எழுத்தை இன்று எழுத வருகின்ற ஆண் எழுத்தாளர்களுக்கு, பெண் பெயரும் தேவைப்படுகின்றது !

பாரதியைப்போல, பெரியாரைப்போல வெளிப்படையாக தம்முடைய செயல்முறைகளை வைத்திருப்பவர்களாகவும் இவர்கள் இல்லை.


- அண்மையில் ஒரிஸாவில் இடம்பெற்ற இளம் கவிஞர்களுக்கான மாநாட்டில் பங்குபற்றியிருக்கின்றீர்கள். இது உங்கள் முதல்வெளிநாட்டுப் பயணமாகவும் இருந்திருக்கலாம். நீங்கள் மாநாட்டுக்குத் தெரிவு செய்யப்பட்டமை, இலக்கிய வட்டாரங்களில் அதற்கான ஆதரவு எப்படியிருந்தது?


கடந்த பெப்ரவரி 20, 2008 இல் சார்க் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இளம் கவிஞர்களுக்கான மாநாட்டில் கலந்து கொள்ள, கணவருடன் இந்தியா சென்றிருந்தேன். இலக்கிய ரீதியான முதல் வெளிநாட்டுப் பயணம் இதுதான்.

இலங்கையிலிருந்து, மூன்று கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அதில் தமிழ் கவிஞராக தேர்வு செய்யப்பட்டிருந்தது நான் மாத்திரமே.

புகழ்பெற்ற பழம்பெரும் பெண் நாவலாசிரியரும், எழுத்தாளருமான 'அஜித் கௌர்' என்வர் இவ்வமைப்பின் தலைவியாகவிருக்கிறார்.

இம்மாநாடு ஒரிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வர் என்ற இடத்தில் 22ஆம் திகதி ஆரம்பமாகி, தொடர்ந்து மூன்று நாட்களாக இடம்பெற்றன. மிகச் சிறந்த திட்டமிடல்களுடன் ஒவ்வொரு நாளையும் புதிய அனுபவங்களாக்கி இருந்தார்கள். இயற்கை அழகுகள் மாறாத ஒரிசா கலைஞர்களுக்கும், கலை வெளிப்பாட்டிற்கும் பொருத்தமான, அற்புதமான இடமாகும். வீடுகளைவிட, கோயில்களும், சிற்பங்களும் அங்கு நிறைந்திருந்தன.

மிகப் பிரசித்திபெற்ற பிரம்மாண்டமான 'சூரியக் கோயில்' கோணெக் எனும் இடத்தில் இருக்கின்றது. அதனுள் அமைக்கப்பட்ட கருங்கற் சிற்பங்களை பெரும் மலைப்புடன் பார்த்தேன். அந்த உவகையான சிலிர்ப்பான கணங்கள் அபூர்வமானது.

மேலும், 'கட்டக்' எனும் இடத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான 'ரவின்சா' பல்கலைக் கழகத்துக்கும் அழைத்துச் செல்லப்பட்டோம். அம்மாணவர்கள் முன்னிலையில் கவிதைகள் வாசித்தோம், கலந்துரையாடினோம். சுமார் 65 கவிஞர்கள் ஒன்று கூடியிருந்த இவ்விழாவில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிருந்தும் பல மொழிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் கவிஞர்கள் கலந்து கொண்டார்கள். ஏனைய நாடுகளில் இருந்து அழைக்கப்பட்ட 23 கவிஞர்கள் அடங்கலாக.

'பூரி' என்று அழைக்கப்படும் ஊர், பெரிதும் வித்தியாசமானது. அவர்களது கலாச்சார பண்பாடுகள், உணவு, வாழ்க்கை முறைகள் முற்றிலும் மாறுபட்டு காணப்பட்டது. இப்படி ... அனைத்து நாட்டுக் கவிஞர்களின் பாரம்பரியங்கள் ... அவர்களது மொழிகள் ... ஆப்கானிஸ்தான் கவிஞர்களின் கவிதைகள் தந்த அதிர்வுகள் ... இவ்விதமாக நிறய சொல்ல முடியும். அந்த புதிய நாட்கள் என்னைப் பொறுத்தவரை மிகுந்த பயனுள்ளதென்று தான் கூறுவேன்.

உங்கள் கேள்வியில், மாநாட்டுக்கு தெரிவு செய்யப்பட்டமை பற்றி கேட்டிருந்தீர்கள் .... இதில் பல சங்கடங்களை நான் எதிர்கொண்டேன்.

இலங்கையிலிருந்து மூன்று கவிஞர்கள் தெரிவாகியிருந்தோம். இதில் இரண்டு சிங்களமொழிக் கவிஞர்களும், தமிழ்மொழிக் கவிஞராக நானும். எங்கள் மூவருக்கும் ஒரேவிதமான அழைப்பையே சார்க் அமைப்பின் தெரிவுக்குழு அனுப்பியிருந்தது. அதில் எங்களுக்கான விமான டிக்கட்டை கலாசார அமைச்சின் ஊடாக பெறுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கமைய, இந்த அழைப்பின் பிரதியை வைத்து அமைச்சுக்கு ஒருமடலும் அனுப்பியிருந்தேன்.

இதன் பிறகு, இது பற்றி அறிவதற்காக அமைச்சை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'உங்களது மடல் எங்களுக்கு கிடைக்கவில்லை' என்றும், இது பற்றிப்பேச நேரில் வந்து சந்திக்குமாறும் கூறினார்கள். பின்னர் கொழும்பு சென்று, காலாசார அமைச்சின், வெளிநாட்டு கலாசார அலுவல்களுக்குப் பொறுப்பாக இருந்த, ஒரு பெண் அதிகாரியை சந்தித்தோம். அதற்கு அவர் 'இப்படி ஒரு நிகழ்விற்காக நாங்கள் விமான டிக்கட் இதுவரை வழங்கவில்லை' என்றும், இது பற்றி உங்கள் முஸ்லீம் கலாசார அமைச்சு உங்களை அடையாளப்படுத்தவில்லை என கூறியதோடு, எனது சொந்தப் பணத்தில் செல்லுமாறும் அப்பெண் எனக்கு ஆலோசனை தந்தார்.

இதுபற்றி எனது பிரதேச பிரதி அமைச்சருடன் பேசியிருக்கிறேன். முஸ்லீம் கலாசார அமைச்சின் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு கேட்டிருந்தோம். எல்லோருமே ' முன்பு இப்படி ஒரு நிகழ்வு நடக்காததனால், எனக்கு விமான டிக்கட் தர முடியாது என கலாசார அமைச்சு கூறுவதாக சொல்லிவிட்டனர்.

ஆனால், நான் இறுதியாக கலாச்சார அமைச்சில் இதுபற்றி மீண்டும் கதைத்துக் கொண்டிருக்கையிலேயே, எங்கள் கண் முன்னே அந்த இரண்டு சிங்களமொழிக் கவிஞர்களும், வெளிநாட்டு கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட விமான டிக்கட்டினை பெற்றுக்கொண்டு பெருமிதமாகவும், மகிழ்வுடனும் சென்றனர்.

நான் ஒரு தமிழ் மொழி எழுத்தாளர் என்பதாலா ? நான் ஒரு பெண் என்பதாலா ? அல்லது நான் முஸ்லீம் என்பதாலா ? அவர்கள் எனக்குரிய விமான டிக்கட்டை தரமறுத்தனர் !!

அப்பயணத்தை மேற்கொள்ள, பட்ட அவஸ்த்தைகள் என்னுள் வேறொரு அனுபவாமாக இருக்கிறது.

அடுத்து இலக்கிய வட்டாரங்களின் ஆதரவு பற்றி கேட்டிருந்தீர்கள் ! இலக்கிய வட்டாரங்களின் ஆதரவு என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏனெனில், எந்த இலக்கிய வட்டாரங்களோடும், என்னை நான் இணைத்துக் கொள்ளவில்லை. இவ்விடயத்தில் நன்றிக்கும் அப்பாற்பட்டதாக, மிகப் பெறுமதியானதாக நான் குறிப்பிட விரும்புவது, பேராசிரியர் எம். ஏ. நுஃமான், எழுத்தாளர் உமா வரதராஜன், கவிஞர். சேரன் இவர்களைத் தான்.

அதே போல் எனது கவிதைகளை ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து உதவியது ஆத்மா, சுமதி, சன்முகம் சிவலிங்கம், தவசஜிதரன் ஆகியோர். அத்தோடு ஹரி, அறபாத், எஸ்.எல்.எம். ஹனீபா, காலச்சுவடு கண்ணன், ரவிக்குமார் என அனைத்து நண்பர்களது ஆதரவும் அளவற்றது ... அதை நான் மதிக்கின்றேன்.


- உங்கள் கருத்துக்கள், கவிதைகள் மாநாட்டில் கவனிப்புப் பெற்றிருந்தனவா?


அங்கே உயர்மட்ட கலா பூர்வமான அம்மாநாட்டு அமர்வுகள், புதுவிதமான திட்டமிடல்களால், நவீனமான வகையிலும் பாரம்பரிய வெளிப்பாடுகள் கொண்டதான, இயற்கையான பண்பாட்டு அம்சங்களாகவும் கட்டமைக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வந்திருந்த கவிஞர்கள் அனைவரும், கல்விப் புலமைமிக்கவர்களாகவும், மேலதிக கலை ஆளுமை கொண்டவர்களாகவும் இருந்தனர். திரைப்படத்துறை, இசைத்துறை, நாட்டாரியல், நடனம் பத்திரிகைத்துறை இவ்விதம் ...

மாநாட்டின் முதல்நாள் இரவு விருந்துக்குப் பிறகு, நான் கவிதை வாசிப்தற்காக அழைக்கப்பட்டேன். 'மேலும் சில இரத்தக் குறிப்புகள்' என்ற கவிதையை வாசித்தேன். அது அங்கு அனைவரையம் பாதித்த ஒரு கவிதையாக இருந்தது. எனது கவிதைகளின் பிரதிகளை தத்தமது தாய் மொழியில் மொழியாக்கம் செய்யவும், அந்தந்த நாடுகளில் பிரசுரிக்கவும் என கவிஞர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டனர்.

எனது கவிதை மொழியில் வித்தியாசமான அழகும், ஆழமான கருத்தும் ஊன்றியிருப்பதாக பாராட்டினர். இந்தளவு பெரிய அங்கீகாரம் அங்கு வந்த, பிற கவிஞர்களுக்கு கிடைக்கவில்லை என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பங்களாதேஷ; பெண் கவிஞரும், குறுந்திரைப்பட இயக்குனருமான பர்ஹானா பேசும்போது 'தான் என்னைப் போன்ற பெண்ணாக வாழ விரும்புவதாக' கூறினார். இறுதி நாளன்று, இவ்வமைப்பின் பிரதம ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சந்ரபானு பட்நாயக் பேசும்போது ' என்னுடைய பங்களிப்பை, முக்கியத்துவம் வாய்ந்ததாக, தான் கருதுவதாக குறிப்பிட்டடார். இப்பயணத்தையிட்டு பூரண நிறைவோடும் மகிழ்வோடும் இருக்கிறேன்.


- குழுக்களாகப் பிரிந்து செயற்படுவது இலக்கியத்துறையில் அதிகளவு காணப்படுகின்றது. உங்கள் கவிதைச் செயற்பாடுகளை அவை பாதித்தனவா?


குழுக்களாக செயல்படுவது இலக்கிய உலகில் அவசியமான ஒன்றா ?அவசியமற்றதா ? என்பதை குழுக்களின் செயற்பாடுகளே தீர்மானிக்கின்றன. இலக்கிய குழு ஒன்று, சமூகத்தில் செலுத்தும் தாக்கத்தை, முக்கியத்துவத்தை, தவிர்க்க முடியாத செல்வாக்கை வைத்தே அக்குழுவின் உண்மைத் தன்மையை உணரலாம்.

பெரும்பாலான குழுக்கள் சாதித்த ஆக்கபூர்வமான விடயங்களை விட, கசப்பான, விரும்பத்தகாத விடயங்களை பட்டியலிடமுடியும். நம் மத்தியில் பக்குவமற்ற இலக்கியக் குழுக்கள் எழுவதும், மடிவதுமாக இருக்கின்றன. அதனால் தான் எனக்கு இதில் எப்போதுமே ஆர்வமில்லை.

மனித நுன் உணர்வுகளை, மனிதத்துவப் பண்புகளை புண்படுத்தாத, பாரபட்சமின்றி மதிக்கத்தெரிந்த குழுவாக யார் செயல்படுகின்றார்களோ, அத்தகைய குழுக்களோடு உடன்பாடு கொண்டவளாகவும், இதில் கரிசனமற்ற குழுக்களுடன் உடன்பட மறுப்பவளாகவும் இருக்கிறேன். இலக்கியக் குழுக்களை உருவாக்கும் ஆண்களோÆபெண்களோ யாராயினும் சிலர், குழுவின் கொள்கைகளை, விருப்பு வெறுப்புகளை படைப்பாளர்களின் முதுகில் சுமத்தவே முனைகின்றன. படைப்பாளருடைய சுயத்திற்கு மதிப்பளிக்கும் மனம் குழுக்களிடத்தில் இல்லை. இத்தகைய குழுக்களை திருப்திப் படுத்துவதோ மரசங்கள் செய்வதோ நமது வேலையல்ல.

எந்தக் குழுவிற்காகவும் நாம் கவிதைகள் எழுதமுடியாது. அதேபோல் எந்தக் குழுவாலும் ஒருவர் கவிதை எழுதுவதை தடுக்கவும் முடியாது. என்னுடைய கவிதை செயற்பாடுகள் ஏதேனுமொரு குழுவால் மிக மோசமான புறக்கணிப்பிற்கு ஆழாக்கப்படும் அதே சமயத்தில், இன்னொரு குழுவால் போற்றப்படவும், கொண்டாடப்படவும் செய்கின்றது. இவ்விரண்டு வினைகளுக்கும் நான் பொறுப்பற்ற போதிலும், எனக்கென்று ஒழுங்குகள், நெகிழ்வுத் தன்மைகள் இருக்கின்றன. அவற்றைத் தீர்மானிக்கின்றவளும் நானே.

எனது கவிதைச் செயற்பாடுகளை பாதிக்கின்ற நிகழ்வுகளை, உற்சாகமாக ஏற்றுக்கொள்கின்றவள் நான். அதனை உந்து சக்தியாக மாற்ற எனக்குத்தெரியும்.

-------------------------------------------------------------------------------------------------------------

நேர்கண்டவர்: பாயிசா அலி

( எங்கள் தேசம் - 2009  )
-------------------------------------------------------------------------------------------------------------

- உங்களுக்கு கவிதையின் மீதான ஆர்வம் ஏற்பட்டது எப்படி ? அது எப்போது ?


தனிமை நிறைந்த பொழுதுகளிலிருந்து தப்பிக்கின்ற அல்லது தனிமையின் வெறுமையை எனக்குள்ளே வேறொன்றாக மாற்ற முனைந்ததில் இருந்துதான் கவிதை மீதான ஆர்வம் தோன்றி இருக்கலாம். வெளியே இழந்தவற்றை உள்ளே கண்டெடுக்க முயன்றதன் விளைவு என்றும் கூறமுடியும்.

1991இல் 'தலாக்' என்ற எனது முதல் கவிதை வானொலி முஸ்லீம் சேவையின் கவிதைச்சரத்தில் ஒலிபரப்பாகியது. அதை அல்-அஸுமத் அவர்கள் தொகுத்து பின்னர் நூலாகவும்; வெளிக்கொண்டுவந்தார். ஆரம்பத்தில் 'இஸ்ஸத் ரீஹானா' என்ற எனது இயற்பெயரிலேயே எழுதிக் கொண்டிருந்தேன்.


- புதுக்கவிதை, நவீன கவிதை இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு பற்றி கூறமுடியுமா ?


எவை நவீன கவிதைகள் என்பது தொடர்பான சந்தேகங்கள் இன்னமும் இருப்பதையே இக்கேள்வி புலப்படுத்துகின்றது. 1960களின் பிறகு மரபிலிருந்து முற்றாக விலகி தமிழில் கவிதைகள் எழுதப்பட்டன. அதன்பிறகு 1971 - 1975 காலங்களில் அப்துல் றஃமான், மு. மேத்தா, இன்குலாப், வைரமுத்து போன்றவர்களது புதுக்கவிதைத் தொகுப்புக்களால் ஜனரஞ்சகப்பட்ட ஓர் அலை வீசியகாலம் உண்டு. இன்றும் வாரப்பத்திரிகைகளை இவ்விதமான வசன குறிப்புகள் கவிதைகளாக புளக்கத்தில் இருக்கின்றமையை அவதானிக்கலாம். மரபுக் கவிதைகளுக்குரிய வரைவிலக்கணங்கள், புதுக் கவிதைகளுக்கு பொருந்தாததுபோன்றே, புதுக்கவிதைகளுக்குரிய தன்மைகள்  நவீன கவிதைகளுக்கும் பொருந்தாது. நவீன கருத்தியல் நோக்கங்களுக்கு இட்டுச்செல்லும் முறைமைகளை கையாழ்வதன் தொடர்ச்சியில், மரபுரீதியாக வந்த கருத்துக்கள் வலுவிழந்துவிடுகின்றன. ஓர் கவிதையின் முக்கியத்துவம், அதன் வேறுபடும் அம்சம், வெளிப்பாட்டுமொழி, உள்ளார்ந்த பொருள் நுட்பம் போன்றவைகளே கவிதைகளில் நவீனத்தை தீர்மானிப்பவையாக இருக்கமுடியும் எனக்கருதுகிறேன்.

கவிதை என்கின்ற பொது அம்சத்தின் உருவ வித்தியாசங்கள் தொடர்பாக, நவீன கவிதைபற்றி என்னிடம் தனிப்பட்ட கணிப்பீடுகள் இல்லை. வடிவங்களை மீறிய அதன் கருத்துத்தளம், அதன் நுண்மையான கட்டமைப்பு போன்றவற்றிலேயே எனது ஆர்வம் உள்ளது. இந்தவகையில் நவீனத் தன்மையை உள்ளடக்கரீதியாகவே நான் அணுகுகின்றேன். எந்த ஒரு காலத்திலும் சரி 'கவி'யிடமுள்ள நவீன மனம்தான், நவீன கவிதையை படைக்கும். மனம் நவீனமடையாமல் கவிதைகளும் நவீனமடையமாட்டாது. நீங்கள் கேட்ட வேறுபாடுகளை இந்தப் புரிதல்களிலிருந்துதான் கண்டுணர முடியும் என நான் நினைக்கின்றேன்.


- உங்களது கவிதைகள் சர்வதேச பார்வையை ஈர்த்துள்ளமை முக்கியமானது. குறிப்பாக 'எனக்குக் கவிதை முகம்' என்ற உங்கள் தொகுப்புக்கு கிடைத்த வரவேற்பைப் பற்றிச்சொல்லுங்கள் ?


'எனக்குக் கவிதை முகம்' தொகுப்பிலுள்ள கவிதைகளின் தனித்தன்மையும் மொழியின் வசீகரமுமே அனைவரையும் ஈர்க்கக்கூடிய காரணம். சில முக்கிய கவிதைகள் அதில் உள்ளன. பெண் தோல்வியை பாடுகின்றவள், துயரமும் இழப்பும் பெண்ணியமும் மாத்திரமே பேசு பொருளாக இருக்க முடியும் என்ற கணிப்பீடுகளை என் கவிதைகள் மீறியிருக்கின்றன.

பேராசிரியர். எம்.ஏ. நுஃமான், கவிஞர் சேரன, ;காலச்சுவடு' ஆசிரியர் கண்ணன் போன்றவர்களுடைய அக்கறைகளும், எனது தொகுப்பிலுள்ள கவிதைகள் விசாலமான ஓர் உலகை எட்ட காரணமாக அமைந்தன.

இம்மாதம் (ஜுன் 2009இல்) இருவேறு இலக்கிய அமைப்புகளால் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கும் இலக்கிய ஆய்வரங்குகளில், தமிழ்நாட்டின் முக்கிய படைப்பாளர்களின் படைப்புகளோடு (கவிதை, சிறுகதை, நாவல்) 'எனக்குக் கவிதை முகம்' தொகுப்பும் ஆய்வுரைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.


- எனக்குக் கவிதை முகம் தொகுப்பில் இருக்கும் முதல் கவிதை 'மண்புழுவின் இரவு' எழுதிய அந்த அனுபவம் எப்படியிருந்தது?


இந்த தொகுப்பே எனக்கு முக்கியமான அனுபவமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு கவிதையிலும் நான் வாழ்ந்திருக்கிறேன். சந்தோசமான அனுபவங்களை இத்தொகுப்பினூடாக பெற்று வருகின்றேன். இந்தத் தொகுப்பில் முதல் கவிதைக்கான அனுபவம் பற்றி கேட்டீர்கள்... ஒரு நெடுந்தூரப் பயணத்தின் போது இது வாய்த்தது. இரவு நேரப் பயணம்; எல்லோரும் நித்திரையாகி கொண்டிருந்தார்கள். நான் ஜன்னலைத் திறந்து இரவையும் வானத்தையும் ரசித்துக்கொண்டே வந்தேன். தூங்கவே இல்லை மிக நீண்ட பிரயாணம் அது. அந்தப் பிரயாணம்தான் அந்தக் கவிதையின் அடித்தளம். ஷஇரவின் இருளுக்குள்ளே எவ்வளவு பிரகாசம்| என்று இறைவனை நோக்கி எழுதின வார்த்தையாகத்தான் அதை எழுதினேன். தவிரவும் அந்தக் கவிதையில் நமது மதம் சார்ந்த கூறுகளும் சில முஸ்லீம் கலாச்சாரத் தன்மைகளும் வெளிப்பட்டிருக்கும்.


- எப்படி ஒரு கவிதையை எழுதுகிறீர்கள்?


இதற்கு ஒரு முடிந்த முடிவு எனக்கில்லை என்றே கூறுவேன். பல சமயங்களில் முதல் சொல்தான் அந்தக் கவிதையையே தீர்மானிக்கிறது. ஆனால் அந்தச் சொல்லை எழுதுவதற்கு முன்னால் நம்முடைய உள் மனத்தில் அதுக்கான விஷயங்களெல்லாம் சேகரமாயிருக்கும். அது கனவாக அல்லது காட்சிகளாக அந்த விசயம் உள் மனத்தில் ஒவ்வொரு அடுக்குகளாக இருக்கும். ஒரு கட்டத்தில் கவிதையாக அதை எழுத வேண்டும் என்கிற கட்டம் வரும்போது, அவைகள் வார்த்தைகளாக வந்து விழும். அந்த வார்த்தைகள் வராத பட்சத்தில் அந்தக் கவிதையை நான் நிறைவு செய்ய மாட்டேன். ஒரு கவிதை நிறைவுபெற சில கணங்களோ, ஓரிரு மாதங்களோ எனக்குத் தேவைப்படுகின்றன.


- கவிதையில் ஏதேனும் திருத்தங்கள் அல்லது சில வார்த்தை மாற்றங்களை மேற்கொள்பவரா நீங்கள்?


நிச்சயமாக. கவிதை எழுதுவதிலும் தொழில்நுட்ப ரீதியாகச் சரிசெய்யவதிலும் நிறைய ஆர்வத்தோடும் விருப்பத்தோடும் செய்யக் கூடியவள் நான். ஒரு பிரதியிலேயே அதை முழுதாகச் செய்ய முடியாது. எனக்கு நானே சில சமயங்களில் சவாலாக இருப்பேன். எனக்குத் திருப்தி ஏற்படும்வரை அந்தக் கவிதையை நான் சரிசெய்து கொண்டும் திருத்தி எழுதிக்கொண்டும்தான் இருப்பேன். பல தடவைகள் அவ்வுணர்வை இசைத்து விடுபடலாமா அபிநயங்கள் செய்யலாமா வரைய முடியுமா என்றும் யோசிப்பேன். சில நேரம் மொழி வெறும் சூன்யமாகவும் இருக்கும்.


- சார்க் அமைப்புக்குழு ஏற்பாட்டில் சென்ற இந்தியப் பயணம் பற்றி கூறுங்கள் ?


சார்க் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இளம் கவிஞர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஒரிசா சென்றிருந்தேன். அது முழுக்க முழுக்கக் கலையுணர்வு சார்ந்த இடம். திரும்புகிற பக்கமெல்லாம் ஒரு விதமான கலையைத் தேக்கி வைத்திருக்கிறது. புராதன முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் மற்றும் பசுமையான இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டோம். பெண் ஆளுமையான கவிஞர். மனோரமா பிஸ்வால் வசிக்கின்ற நிலத்தைப் பார்த்ததும் ... அந்த நிகழ்வில் அவரை நேரில் பார்த்ததும் சிலிர்ப்பான அனுபவமே.

'தமிழை' உச்சரித்த ஒரே ஒரு நபராக நான் இருந்தேன். 3 நாள்கள் தொடராக அவ்விழா இடம்பெற்றது. பல்வேறு ருசிகளுடைய நவீன மற்றும் பாரம்பரியமான உணவு வகைகள் தரப்பட்டிருந்தன. 8 நாடுகளிலிருந்து வந்த கவிஞர்களுடன் கவிதைகள் வாசித்தேன். நமது படைப்புகளுக்கு வேறொரு நாட்டில் கிடைக்கின்ற வரவேற்பென்பது உற்சாகமூட்டக் கூடியதுதானே.



- இவ்விதமான பெருமிதங்களுக்குள்ளே விசேடமாக நீங்கள் குறிப்பிட விரும்புவது யாரை ?


எனது வெற்றிகளுக்குப் பின்னால் நிச்சயமாக ஓர் ஆண்தான் இருக்கிறார். எனது கணவர் அஸீமைத்தான் முதலில் கூறமுடியும். அவர்தான் எனது முதல் தொகுப்பை தன்கரங்களாலேயே தொகுத்து டைப்செய்து அச்சிட்டு எனக்கு பரிசளித்தார். எனக்கு அச்சங்களில்லாத ஒரு எழுத்து உலகம் சாத்தியமாகியது. அஸீமின் உன்னதமான மானுடப் பண்புதான் எனது அனைத்துப் பெருமிதங்களுக்கும் காரணமாகின்றது. தவிர அக்கறையம் நட்பும்மிக்க தோழமைகளின் ஊக்கமும் இதனுள் அடங்கும்.


- கவிதைகள் மூலம் சாதிக்க விரும்புவது என்ன ?


எனக்கென்று சில ஒழுங்குகளை தீர்மானங்களை கொண்டிருப்பவள் நான். சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எனது ஆரம்ப எழுத்து தொடங்கப்படவுமில்லை. முதலில் நான் எனக்கென்று தான் எழுதுகின்றேன். அவை சில வெற்றிகளை தந்திருக்கின்றன. இவற்றை சாதித்துவிட்டதாகக் கருதுவதுமில்லை.


- கவிதை மட்டும் தான் உங்களுக்கான வடிவமாக இருக்கின்றதா? நாவல், சிறுகதை என்று வேறு இலக்கிய வடிவங்களில் உங்களுக்கு ஆர்வமில்லையா ?


ஓரிரண்டு சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். நாவலோ சிறுகதையோ இனிமேல் எழுதுவேனா என்பது பற்றி திட்டமாக எனக்கு கூறமுடியாது. நாவல் வாசிப்பதும் சிறுகதை வாசிப்பதும் எனக்கு விருப்பமானதாகத்தான் இருக்கின்றன.


- முஸ்லீம் பெண் என்ற வகையில் உங்களது கவிதை பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளமை பெருமை தரக்கூடிய விடயமல்லவா ?


ஆண்டு 11 தமிழ் இலக்கியப் புத்தகத்தில் 'வன்மப்படுதல்' என்ற கவிதை இடம்பெற்றுள்ளது. மாணவர்களுக்கு நவீன கவிதைகளின் பரிச்சயத்தை ஏற்படுத்துவது மிகச் சிறப்பான நோக்கம்தான்.


- உங்கள் பிரதேசத்தில் பெண்களது கல்வி வளர்ச்சி பற்றி குறிப்பிடுங்கள் ?


எனது ஊரான சாய்ந்தமருது, தற்போது பெண்கள் கல்வியில் மிக சிறப்பான உயர்வடைந்து வருகின்றது. எல்லாப்பெண்களும் கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். எனது ஊரைப்பொறுத்தவரை நான் பெருமிதமாக மூன்று பெண்களை குறிப்பிட்டு கூறவிரும்புகிறேன். அதில் இலங்கையின் முதலாவது பயிற்ப்படட பெண் ஆசிரியை பாத்துமுத்து கலால்தீன், தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் முதலாவது முஸ்லீம் பெண் பல்கலைக்கழக வேந்தர். ஏ.எல்..என். மைமுனா இலங்கையின் முதலாவது முஸ்லீம் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி. இவ்விதமாக பெண்களைத் தந்தும் ஊக்குவிக்கக் கூடியதுமான ஊரில் பிறக்கும் வாய்ப்புக்கிடைத்தமை எனக்கும் பெருமிதம்தானே.


- உங்கள் முயற்சிக்கு தடையாக அமைந்த சந்தர்ப்பங்கள் உள்ளனவா ?


ஒரு பெண் என்பவள் தன்னுடைய வாழ்க்கையில் தடைகளையே அதிகம் சந்திக்கின்றாள். இதில் வியப்படைய எதுவுமில்லை. தடைகளுக்குள்ளேயும் இடர்களுக்குள்ளேயும் அவள் தனது கனவை வாழ்வது அல்லது வென்றுவிடுவது என்பதுதான் முக்கியம். ஓர் ஆளுமையுள்ள பெண் இவ்விதமான சந்தர்ப்பங்களினால் அதிகம் வலுவூட்டப்படுகின்றாள் என்பதே என்னுடைய கருத்தும் அனுபவமுமாகும்.

-------------------------------------------------------------------------------------------------------------

நேர்கண்டவர்: கோகிலவாணி

( மித்திரன் வார இதழ் - 2009 )
-------------------------------------------------------------------------------------------------------------


- உங்களைப் பற்றிய விபரத்தை எவ்வாறு முன்வைப்பீர்கள் ?


ஒருவித மாறுதல்களும் இல்லாமல் வழமையான கனவுகளைத் திரும்பத் திரும்பக் காண்பவர்களாக தம்முடைய பொழுதுகளை கழிக்கின்ற என் கிராமிய பெண்களிடையே, கனவுகளை வாழ்ந்து பார்ப்பதான கணங்களை கண்டடைகின்ற தேடலுடன் நான் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். 1991இல் எனது முதல் கவிதை 'கவிதைச்சரம்' என்ற வானொலி முஸ்லீம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது. ஆரம்ப காலங்களில் பத்திரிகை, சஞ்சிகைகளில் எழுதுவதில் சிரமங்களும் தடைகளுமிருந்தன. ஆனால் விரைவிலேயே நான் அதனைக் கடந்தேன்.


- கவிதை என்பது என்ன ?


இதுவொரு வசீகரமான ஆனால் பழைமையான கேள்வி, எனினும் இறுதியான ஓர் விடையினை வரையறுத்துக் கூறமுடியாது. காலத்துக்குக் காலம் அர்த்தங்கள் மாறுபடக் கூடியது. கவிதை என்பது, கவிதை என்கின்ற மொழி, வரி வடிவ அம்சத்துக்குள் மாத்திரம் சுருங்கியிருப்பதாக நான் கருதவில்லை. அவரவர் சிந்தனை, கொள்கை, இரசிப்புத் தன்மை, விரிந்த அகவெளி இலக்கியப் பரிச்சயம் போன்ற அம்சங்களால் இதனை விரிவாகவும் சுருக்கமாகவும், ஆழ்ந்தும் விளங்கிக்கொள்ள முடியும்.


- உங்களுடைய படைப்புக்கள் மற்ற கவிஞர்களில் இருந்தும் வேறுபட்டே காணப்படுகிறது. இவ்வாறு வித்தியாசமாக உங்களது படைப்புக்களை உருவாக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றியதற்கு காரணம் என்ன ?


நான் கவிதை எழுத தொடங்கிய காலம், சமூகம் பலவிதமான இம்சைகளுக்குள் சிக்கியிருந்த கொந்தளிப்பான காலமாகும். அப்போதய என்னுடைய கவிதைகளில் நவீன வெளிப்பாடுகள் பற்றிய பரிச்சயங்கள் குறைவாக இருந்தன. என்றபோதிலும் கருத்தியல் சாhர்ந்து பெருமளவு கவனம் இருந்துள்ளது. எனது முதல் தொகுப்பான 'ஓவியம் வரையாத தூரிகை'யில் உள்ள கவிதைகள் ஒருவகையான தன்மைகள் என்றால், 'எனக்குக் கவிதை முகம்' இரண்டாவது தொகுப்பு வேறொரு வகை உணர்வுத்தளத்தில் உருவானது. எனக்குக் கவிதை முகம் தொகுப்பில் உள்ள கவிதைகளும் அதன் பிறகு எழுதிய கவிதைகளும், தனித்தன்மையானதும் எனக்கென்ற அடையாளத்தை கொண்டிருப்பதுமாகும். இவ்விதமான வளர்ச்சிக்கு தனியான திட்டமிட்ட காரணங்களை தேட வேண்டியதில்லை. வாசிப்பும், அனுபவமும், முதிர்ச்சியும், உழைப்பும் படைப்பு மனதை தூண்டக் கூடியன. தன் நம்பிக்கையும், முயற்சியும் இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.


- உங்கள் படைப்பு மனம் கவிதைகளை முன்கூட்டியே திட்டமிடுகின்றதா ?


கவிதைகளைப் பொறுத்தவரை, முன்கூட்டி திட்டமிட்டு, எழுதமுடியும் எனத்தோன்றவில்லை. என் படைப்பு மனம் கூடுபாயும் தன்மை கொண்டது. அதற்கு மேலெழும் சிறகுகளும் இசைத் தன்மையும் வாய்த்திருக்கிறது. எழுதும் உணர்வு ஏற்படும் தருணம், ஏற்கனவே சேகரமாகியிருந்த காட்சி புலங்களுக்கூடே கவிதையின் பயணம் நடைபெறுகின்றது. எனக்குத் திருப்தியான கவிதைகள் இவ்வாறுதான் உருவாகின்றன. சூழ்நிலைகளின் நெருக்கடி மற்றும் நிர்பந்தங்களினால் கூட சில கவிதைகள் எழுதியதுண்டு.


- பெண் கவிஞர்களது படைப்புக்களில் பெண்ணியம் சார்ந்தே அதிகம் பார்க்கப்படுகின்றது, இது குறித்தும் உங்கள் மீதான விமர்சனங்கள் குறித்தும் கூறுங்கள் ?


பெண்ணியம் சார்ந்த எழுத்துக்களை மிகக் கணிசமான பெண்கள் வலுவான படைப்புக்களாக்கி இருக்கின்றனர். சிலர் இதனை ஒரு மோஸ்த்தராக நினைத்தும் எழுதுகின்றனர். ஒரு முழுமையான படைப்பாற்றலை வெளிக்கொணர வேண்டுமென்றால் ஒரே விடயத்தை, ஒரே விதத்தில் எழுதித் தேங்கிவிடக் கூடாது என நான் நினைக்கிறேன். உண்மையில் பெண்களின் எழுத்தில் பெண்ணியப் பார்வை என்பது தவிர்க்கமுடியாதது. ஏனெனில் நிச்சயமாக அதனை எழுதக் கூடியவர்களும் அவர்களே. இங்கே பார்க்கப்படுகின்ற விதம்குறித்து அல்லது விமர்சிக்கப்படும் விதம்குறித்து கூறுவதாக இருந்தால், நமது இலக்கியச் சூழலில் அறிவுபூர்வமற்ற சில எதிர்வினைகள் எனைநோக்கி வருகின்றன. அதே நேரம் எனது எழுத்துக்கள் தொடர்பாக கடினமான உடைக்க முடியாத ஒருவித மௌனமும் நிலவுகின்றது. இதன் இரண்டு விடயங்களின் பின் உள்ள அரசியல், ஒன்றையொன்று ஊட்டிவளர்க்கின்றது. பெருமளவு விமர்சனங்களைப் பொறுத்தவரை அதிகமாக எனது எழுத்துச் செயற்பாட்டிற்கு வலுவூட்டக்கூடியவையாகவே அமைந்திருக்கின்றது. நமது நாட்டின் மற்றும் தமிழ் நாட்டின் எழுத்தாளர் நண்பர்களுக்கு குறிப்பிடத்தக்க பங்கிருக்கின்றது. பெண்ணியம் சாந்து மட்டுமல்ல அதனைக் கடந்தும் பெண்களது படைப்புக்கள் எழுதப்பட்டுள்ளன. பெண் எழுத்து, ஆண் எழுத்து என்ற வித்தியாசங்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொருந்திப் போவதில்லை. எழுத்தாளர்கள் என்ற பொதுவான வகையில் வைத்து, சலுகையற்ற விமர்சனங்கள் வைக்கப்பட வேண்டும். இந்த வகையில் 1990 களுக்குப் பின் ஒரு அலையாக எழுதியவர்களில் இருந்து 2000 ஆண்டுகளில் மிக வலுவான தளங்களில் எழுதியும் வந்த, ஒரு தொகை எழுத்தாளர்கள் பற்றி எந்த ஒரு காத்திரமான பதிவுகளும் இதுவரை எழுதப்படவில்லை. விமர்;சனத்துறையி;ல் இதனை ஒரு மோசடியாகவே கருதவேண்டியுள்ளது.


- அனுபவங்கள் சார்ந்த படைப்புக்கள் வரவேற்கத்தக்கதா ? அனுபவங்கள் தான் படைப்புகளா ?


ஏன் அனுபவங்கள் சார்ந்த படைப்புக்கள் வரக்கூடாது ? எனது 'மேலும் சில இரத்தக் குறிப்புகள் கவிதை' முழுக்க அனுபவமே. அது எல்லாப் பெண்களின் ஓரக்கண்களையும் ஈரமாக்கியது. 'மண்புழுவின் இரவு', 'இரண்டு பெண்கள்' கவிதைகளும் அனுபங்கள் சார்ந்த படைப்புகளே. எழுத்துக்களில் உண்மை இருக்குமாயின், அது நிலைக்கக் கூடியது என்பது எனது கருத்து. இதற்கு சக எழுத்தாளர்களது படைப்புகளில் பல உதாரணங்களைச் சொல்லமுடியும். ஆயினும் அனுபவங்கள் மாத்திரமே ஒரு படைப்பை முழுமைப்படுத்திவிடுவதில்லை. உணர்வு, மொழி வளம், கற்பனை எல்லாம் சேர்ந்தே ஒரு படைப்பை முழுமையாக்கும். தீரா அழகு கொண்ட படைப்புகளெல்லாம் இவ்விதம்தான் உருவாகி இருக்கக்கூடும்.


- உங்களுக்கு வேறு எந்தத் துறைகளில் ஆர்வம் உள்ளது ?


எழுத்துத் துறையைப் பொறுத்தவரை, இரண்டொரு சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். ஆனால் எனக்கு அது சரியாக அமையவில்லை. எனக்கு உண்மையில் ஆர்வமுள்ள துறை 'இசை'. அதனைப் பயிலுகின்ற வாய்ப்புகள் கிடைக்காத போதிலும், கவிதைக்கு நிகரான பேராசை இசையில்தான் உள்ளது. இது வெறும் பாடல்களோடு மாத்திரம் சுருங்கிப்போன ரசனையல்ல, பாரம்பரியமான கருவி இசைகளோடும் மாற்று இசை வடிவங்களுடனும் சம்மந்தப்பட்டிருக்கின்ற ஓர் எல்லையற்ற ஆர்வம். எனது கவிதைகளுக்குள்ளே ஒருவித இசைத்தன்மை மறைந்திருக்கின்றது.


- உங்களுடைய அடுத்த கட்ட செயற்பாடு ?


எனது மூன்றாவது கவிதைத்தொகுப்பு அச்சில் இருக்கின்றது. இதைத் தவிர என்னிடம் திட்டங்கள் எவையுமில்லை. நான் நினைக்கவில்லை அடுத்த கட்டத்தைத் திட்டங்களின்படி செயற்பட்டு இயங்கமுடியும் என்று. மாறிவருகின்ற போக்குகளை எதிர்கொள்வதும், அதனூடே இந்த வாழ்வை வாழ்ந்து விடுவதும் தான் இப்போதய எனது நிலைப்பாடு.
-------------------------------------------------------------------------------------------------------------

நேர்கண்டவர்: ஐயப்பமாதவன், லோகநாதன்

( புதியபார்வை - இந்தியா, 1-15 ஜுலை' 2008 )
-------------------------------------------------------------------------------------------------------------

- முதல் முறையாக கவிதை எழுதணும் என்கிற உணர்வு, கவிதைக்கான எண்ணம் எப்படி வந்தது ? எதன் வழியாக அல்லது எதிலிருந்து எழுதுவதற்கான உந்துதலைப் பெற்றீர்கள் ?


அனார்: முதல்முறையாக என்று சொல்லும்போது ... இலங்கை வானொலியில் ஒரு முஸ்லிம் நிகழ்ச்சி 'கவிதைச்சரம்' எனும் பெயரில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் வானம், நிலவு என்பது போலச் சிறு சிறு தலைப்புகள் கொடுத்திருந்தார்கள். அதில் ஒன்று தலாக். தலாக் என்பதன் தமிழ்;ப்பதம் மணவிலக்கினைக் குறிப்பது. அந்தத் தலைப்பு என்னை மிகவும் பாதித்தது. கவிதை வடிவில் சாதாரணமாக எழுதினேன். அக்கவிதை அடுத்த நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது. நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். அதிலிருந்து தான் கவிதை எழுத ஆரம்பித்தேன் என்று சொல்ல வேண்டும். இனி படித்தது போதுமென்று நிறுத்திய நேரம், தனிமை நிறைய இருந்தது. மேலும் படிக்க வேண்டுமேன்ற ஆசையும் இருந்தது. ஆனால் அதற்கான சாத்தியமிருக்கவில்லை. அந்தச் சமயத்தில் தான் தனிமையில இருந்து மீள்ற விசயமா, எந்தவொரு விசயத்தையும் எழுதத் தொடங்கினேன்.


- அப்பொழுது உங்களது வாசிப்பு எப்படியிருந்தது ? வாசிக்கத் தொடங்கியிருந்தீர்களா ?


அனார் : விரிவான வாசிப்பெதுவும் ஆரம்பத்தில் இருக்கவே இல்லை. முதல் தொகுப்பு திருமணத்தின் பிறகுதான் வெளியானது ' ஓவியம் வரையாத தூரிகை' - மூன்றாவது மனிதன் வெளியீடு. அத்தொகுப்பை கணவருடன் நான் சவூதியில் இருந்தபோதுதான் தொகுத்தேன். அங்கு இருந்த காலத்தில் தான் அனேகமான தொடர்புகள் கிடைத்தன. ஆழியாள், எக்ஸில் விஜி, ஊடறு றன்ஞி என அது தொடர்ந்தது ... மூன்றாவது மனிதன், எக்ஸில், யாத்ரா, காலச்சுவடு இப்படியான சிற்றிதழ்களும், இணையம் வழியாக சில விடயங்களையும் படிக்க வாய்ப்பு கிடைத்தது. வாசிப்பினூடாக சிறந்த அனுபவம் வாய்த்தது. இவற்றிலிருந்து என்னை மெருகுபடுத்திக் கொண்டேன்.


- புத்தகங்கள் வாசிப்பதற்கு முன்பு எழுதிய கவிதைகளுக்கும், விசாலமாக வாசிக்கத் தொடங்கியதற்குப் பிறகு எழுதிய கவிதைகளுக்கும் வித்தியாசத்தை உங்களால் உணர முடிந்ததா?


அனார்: நிச்சயமாக ... மிகுந்த வித்தியாசம். உணர்வுகள் எவ்வளவு ஆழமானவையாக இருந்தாலும், எளிமையாக எழுதுவது பழக்கமாகியிருந்தது. முதல் தொகுப்பில் மேலோட்டமாகவும் எளிமையாகவும் தான் எழுதப்பட்டிருக்கும். கலைத்தன்மை, காத்திரமான அழகு, ஆளுமையான சொற்கள் இவையெல்லாம் அதில் பெரிதும் கவனமெடுக்கப்பட்டிருக்கவில்லை. எனக்குள்ளாகவே நான் கேள்வி கேட்கத் தொடங்கிய பிறகு, கவிதைக்குள்ளாக தனித்துவ அடையாளம் வேண்டுமென்று தோன்றியது. வாசிப்பினூடாகத்தான் இந்த மொழியைக் கண்டடைந்தேன். இன்னும் சொல்லப் போனால் அந்த மொழியினுடைய செறிவு, வாசிப்பு மனவெளி விசாலமாகி விடும்போது, மனதினுடைய உள்வெளி பரந்து விரிந்து புதியதொன்றாக மாறிவிட்டதென்றே சொல்லத் தோன்றுகிறது. அதற்குப் பிறகுதான் மொழியும் அதன் அழகும் வேறாயிற்று. தொடக்க காலத்தில் காத்திரமான இலக்கிய படைப்புகளை அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்தியதில் என். ஆத்மா என்ற நண்பரது பங்கு அதிகம் என நினைக்கிறேன்.


- பெயர் மாற்றி மாற்றி எழுதினேன் என்று சொன்னீர்கள். அதைப் பற்றி சுவாரஸ்யமான விஷயமிருந்தால் சொல்லுங்களேன்.


அனார்: எனது சொந்தப் பெயரில் தான் ஆரம்பத்தில் எழுதினேன் (இஸ்ஸத் ரீஹானா). வானொலியை தாண்டி சஞ்சிகைகள், பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்த பொழுது, வாப்பாவிற்கு சில சங்கடங்கள் வரத்தொடங்கின. அவர் ஒரு மௌலவி ஆசிரியராகவும், எங்கள் ஊர் பள்ளிவாசலின் தலைவருமாக இருந்ததினால். ஒவ்வொரு புனைபெயரும் சில மாதங்களுக்குத் தான் நீடிக்கும். பிறகு எப்படியோ அது நான் தான் என்று தெரிந்து விடும். திருப்பி வேறொரு பெயருக்கு போய்விடுவேன். இப்படி பல பெயர்களை வைத்து எழுதினேன்... இறுதியாக 'அனார்' என்ற பெயரையும் அதன் கவிதை வெளிப்பாட்டையும், ஒரு பெண் எழுத முடியாது என்று பலர் உறுதியாக நினைத்தார்கள். 'ஆண்' என்றால் எதையும் எப்படியும் எழுதலாம் என்று எண்ணியோ என்னவோ... என்னை யாரும் தொந்தரவு செய்யவில்லை.


- இப்பொழுது இலங்கையிலிருந்து எழுதக் கூடியவர்களின் கவிதைகள், அவற்றில் உங்களுக்கு இருக்கக் கூடிய நம்பிக்கை என்ன ?


அனார்: இலங்கையிலிருந்தபடியும், புலம் பெயர்ந்தும், இணையதளங்களுக்கூடாகவும் என்று இலங்கை தமிழ் இலக்கியச் செயற்பாடுகள் விரிவடைந்தும் சிதறியும் போய்விட்டது. அனைவரையும் உள்வாங்கிக்கொண்ட பிறகுதான் என்னால் சரியான ஒரு பதிலை கூறமுடியும். ஆய்வு ரீதியான அல்லது விமர்சன ரீதியான பதிலை உங்களுக்கு சொல்வதில் சிரமம் இருக்கின்றது. இப்பொழுது எழுதிக் கொண்டிருப்பவர்களில் 1990 காலகட்டத்தில் உருவானவர்களும், 2000ஆம் ஆண்டில் வந்த புதியவர்களும் கவிதை தொடர்ச்சியை பேணிவருகின்றனர். தீவிரத்தன்மை குறையாமலும் நவீன மொழியின் புதுமைகளோடு இப்போதும் எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர். சேரன் அவர்களை அடுத்து கருணாகரன், வாசுதேவன், ஆழியாள், திருமாவளவன், பா. அகிலன், ஆத்மா, றஸ்மி போன்ற கவிஞர்களையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் என்னுடைய சமகாலத்திலிருந்து கவிதை எழுதி வருபவர்களில் குறிப்பிடத் தக்கவர்களாக எஸ்போஸ், சித்தாந்தன், பஹீமா, பெண்ணியா, அலறி, நவாஸ்சௌபி, தவ சஜிதரன், பைசால் இப்படி பெயர்களை கூறமுடியும். இது தவிர மிகப் புதியவர்களில் எனக்கு மிகுந்த வியப்பையும், நம்பிக்கையளித்தவராக நான் அடையாளப்படுத்த விரும்பும் ஒரு பெயர் 'ஹரிகர சர்மா' இவர் வடக்கை சேர்ந்தவர் என்பதும் மாணவர் என்பதும் முக்கியமானது. ஹரியின் அறிவுச்செறிவும் சிந்தனைகளும் கவிதையின் நவீனமும் அற்புதமானது. அவரைப்பற்றிய விடயங்களும் அவரது இலக்கிய பங்களிப்புகளும் வெளிவரவேண்டும் என விரும்புகிறேன்.


- உங்களுடைய எழுத்துலகம், உங்கள் எழுத்துக்களை எப்படி அணுகியது ?


அனார்: நான் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருப்பதினால் சில விசயங்கள் மற்றவர்களுடைய கவனத்தைத் திருப்பியதாகத்தான் சொல்லவேண்டும். கட்டுப்பாடுகளுடைய சமூகத்திலிருந்து கொண்டு இப்படிக் காதலை, பெண்கள் தங்களுக்குள்ளாகவே இருக்க வேண்டியதாக எண்ணிக் கொண்டிருக்கும் மாதவிலக்கைப் பற்றியெல்லாம் பேசுவது பிறருக்கு எப்படி உவப்பானதாக இருக்கும் ? ஆணினுடைய விளைவுபற்றிப் பேசுவதும், காதலைக் கொண்டாடுவதும், என் 'பெண்' அடையாளத்தை பெருமைப்படுத்துவது எல்லாம் விமர்சனத்துக்கு வந்தன. அர்த்தமில்லாத விமர்சனங்களும் தெளிவான புரிதலுடனான விமர்சனங்களும் வந்தன. 'எனக்குக் கவிதை முகம்' கவிதைத் தொகுப்புக்கு கிடைத்த அங்கீகாரம் மிகச் சிறப்பானதும் தனித்துவமிக்கதாகவும் இருந்தது. நிச்சயமாக எனது இலக்கியச் சூழலில் அதிகம் பேசப்பட்ட பெண் நான். என்னை வலுவூட்டிக் கொண்டிருப்பதும் நேர்மையான விமர்சனங்கள் தான்.


- மற்றவர்கள் எல்லாம் சூழலின் வலியை, அன்றி சூழலின் இறுக்கத்தைப் பற்றித் தங்கள் கவிதைகளில் எழுதிக்கொண்டிருக்க, அதிலிருந்து விலகி இப்படிக் காதலைக் கொண்டாடுகின்ற கவிதைகளை எழுத வேண்டுமென்கிற மனநிலை எப்படி வந்தது?


அனார்: யுத்த காலச் சூழல் என்பது ஒரு நிரந்தரமான சூழல் எங்களது நாட்டிலே. எல்லோருமே எழுதியிருக்கிறார்கள் அந்தச் சூழல் பற்றி. எல்லாக் காலகட்டத்திலும் யுத்தத்தைப் பற்றிப் பேசுவதும் வலியை எழுதுவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதுவும் கவிதையில் இந்தப் பதிவுகள் அதிகம் என்றே நினைக்கிறேன். யுத்தம் நடக்கையிலே எல்லோருக்கும் இருக்கிற வலிதான் எனக்கும். ஆனால், எனக்கென்னவோ அதை உடனடியாகக் கவிதையாக்க முடிவதில்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு யுத்தம் ரணமாயிருக்கிறது, எழுத முடியாதளவுக்கு வலியாயிருக்கிறது. அதை உடனுக்குடன் எழுதக்கூடிய மனநிலை இல்லாததால் தான் அதை எழுதாமல் இருக்கிறேன். இருந்தாலும் யுத்தம் பற்றிய பெண்ணுடைய பார்வையாக வெளிப்பட்ட 'மேலும் சில இரத்தக் குறிப்புகள்' போன்று ஒரு சில கவிதைகள் எழுதி இருக்கிறேன். பேசுவதற்கு வேறு விடயங்கள் இருக்கும்போது, நான் என்னைக் கொண்டாடுவது, காதலைப் பேசுவது, சந்தோசமான விளைவுகளைப் பேசுவது என்று யுத்ததைத் தவிர எல்லாவற்றையும் கவிதைக்குள் கொண்டுவருதன் மூலம் அந்தப் போரின் மீதான எதிர்ப்பைத் தெரிவிக்கிறேன். இது ஒரு பலவீனமான காரணமாகவும் இருக்கக் கூடும். உளவியல் ரீதியாக இதை யோசித்தால் சில நுண்மையான விடைகளுக்கு வரமுடியும். நாங்கள் ஏன் வரண்டுபோன மொழியை அல்லது யுத்தத்தின் வலியை, ஓலத்தை, விரக்தியை, இழப்பை மாத்திரமே எழுத வேண்டும் ? கவிதை என்பது, அச்சமூட்டும் பயங்கரமான சூழலில் ... அதன் கனவுகளை வசீகரத்தை புதிர்தன்மையை கைவிட வேண்டும் என்னும் கட்டாயமில்லை என எண்ணுகிறேன்.


- கவிதை மட்டும் தான் உங்களுக்கான வடிவமாக இருக்கின்றதா? நாவல், சிறுகதை என்று வேறு இலக்கிய வடிவங்கள் மீதான உங்கள் பார்வை என்ன?


அனார்: சுவாரஸ்யமான விசயம் இது. சில சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். கவிதையில் எனக்கிருக்கிற பிடிப்பு, விருப்பம் சிறுகதை எழுதுகிற மொழியில் இல்லை. அதற்கான மொழி எனக்கு வசப்படவில்லையென்று தான் சொல்ல வேண்டும். ஆனால் ஓரிரண்டு சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். நாவலோ சிறுகதையோ இனிமேல் எழுதுவேனா என்பது பற்றி திட்டமாக எனக்கு கூறமுடியாது. நாவல் வாசிப்பதும் சிறுகதை வாசிப்பதும் எனக்கு விருப்பமானதாகத்தான் இருக்கின்றன. சிறுகதைகள் எழுதக்கூடிய இலங்கை எழுத்தாளர்களை நான் மிகவும் ரசித்து வாசிக்கிறேன். உமா வரதராஜன், எஸ்.எல்.எம். ஹனிபா, றன்சகுமார், ஓட்டமாவடி அறபாத், திசேரா, அம்ரிதா, நஸிறூதீன், மலர்ச்செல்வன், அ. முத்துலிங்கம் அதேபோல் தமிழ் நாட்டிலிருந்து எழுதுகின்ற அனைவரின் எழுத்துக்களையும்.


- ஒரு கவிதையை எழுதத் தொடங்குகிறீர்களே, இதுதான் இந்தக் கவிதையின் முதல்வரி என்று எண்ணத்தோடு தொடங்குகிறீர்களா? இல்லை ஒரு மையத்தைக் கொண்டு, இதுதான் கவிதையின் பிரதானப் புள்ளி என்று வைத்துக்கொண்டு எழுத ஆரம்பிப்பீர்களா? ஏதாவது ஒரு சொல்லில் தொடங்கி அந்தச் சொல்லே கவிதைக்குள் உங்களை இழுத்துக் கொண்டு போகும் வித்தையைச் செய்யுமா? எப்படி ஒரு கவிதையை எழுதுகிறீர்கள்?


அனார்: இதற்கு ஒரு முடிந்த முடிவு எனக்கில்லை என்றே கூறுவேன். பல சமயங்களில் முதல் சொல்தான் அந்தக் கவிதையையே தீர்மானிக்கிறது. ஆனால் அந்தச் சொல்லை எழுதுவதற்கு முன்னால் நம்முடைய உள் மனத்தில் அதுக்கான விஷயங்களெல்லாம் சேகரமாயிருக்கும். அது கனவாக அல்லது கற்பனையாக அல்லது ஒரு எதிர்பார்ப்பாக அந்த விசயம் உள் மனத்தில் ஒவ்வொரு அடுக்குகளாக இருக்கும். ஒரு கட்டத்தில் கவிதையாக அதை எழுத வேண்டும் என்கிற கட்டம் வரும்போது, அவைகள் வார்த்தைகளாக வந்து விழும். அந்த வார்த்தைகள் வராத பட்சத்தில் அந்தக் கவிதையை நான் நிறைவு செய்ய மாட்டேன். எனக்குத் தெரியாமலேயே எனக்குள் சேகரமாயிருக்கிற வார்த்தைகள் எல்லாம் அந்தக் கவிதைக்குள் வந்த பிறகே அந்தக் கவிதை நிறைவு பெறும். அதுவரை அந்தக் கவிதை நிறைவுறாமலேயே இருக்கும்.


- கவிதையை எழுதி முடிக்கிறீர்கள். அது நிறைவடைகிறது. அதை மீண்டும் வாசிக்கையில் திருத்தங்கள் ஏதுமில்லை. நிறைவாக இருக்கிறது, இதை இப்படியே விட்டுவிடலாம் என்றோ, சில வார்த்தைகளை நீக்கினால் அல்லது மாற்றினால் கவிதை நன்றாக இருக்குமென்றோ நினைப்பது போன்று நம்பிக்கைகள் உண்டா ?


அனார் : கண்டிப்பாக. கவிதை எழுதுவதிலும் தொழில்நுட்ப ரீதியாகச் சரிசெய்யவதிலும் நிறைய ஆர்வத்தோடும் விருப்பத்தோடும் செய்யக் கூடியவள் நான். ஒரு பிரதியிலேயே அதை முழுதாகச் செய்ய முடியாது. எனக்கு நானே சில சமயங்களில் சவாலாக இருப்பேன். எனக்குள்ளிருக்கும் உணர்வுகள் அப்படியே எழுத வரமாட்டா. அது எனக்குப் போராட்டமா இருக்கும். ஒரு நாள் தேவைப்படும். ஒரு கிழமை தேவைப்படும். அந்த உணர்வு வந்து சரியான வார்த்தைகளாக வந்து விழும்வரை அந்தக் கவிதையை நான் சரிசெய்து கொண்டும் திருத்தி எழுதிக்கொண்டும்தான் இருப்பேன். மொழியிடம் நான் தோற்றிருக்கிறேன். பல தடவைகள் அவ்வுணர்வை இசைத்து விடுபடலாமா அபிநயங்கள் செய்யலாமா வரைய முடியுமா என்றும் யோசிப்பேன். சில நேரம் மொழி ஒரு பிசாசு சில நேரம் மொழி வெறும் சூன்யம்.


- தமிழகத்திலிருக்கக் கூடிய படைப்பாளிகளின் எழுத்துக்கள் பற்றி...


அனார்: இங்குள்ள எழுத்தாளர்கள் கலைஞர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கின்றது. எவரும் இதனை குறைத்து மதிப்பிடமுடியாது. இங்கு எழுத்தாளர்கள் எழுத்தாளர்களாகவே இருக்கின்றார்கள். அவர்கள் தொழிலும் வாழ்வும் இலக்கியத்திற்குள்ளேயே இருக்கின்றது. தமது கலை இலக்கிய முயற்சிகளுக்காக அவர்கள் உழைக்கின்றார்கள். தேடலும் அர்ப்பணிப்பும் தமிழக எழுத்தாளர்களிடம் தீவிரமான இயக்கமும் நாங்கள் வியக்கின்ற விடயம். இவ்விதமான முழுநேர எழுத்தாளர்களாக எவரும் வாழமுடியாத நிலம் எங்களுடையது. அந்த சூழலில் படைப்பு மனதை பாதுகாப்பதே பெரிய போராட்டம். நாங்கள் மனதை பாதுகாக்க வேண்டும் வாழ்க்கையை பாதுகாக்கவேண்டும் என்கின்ற நெருக்கடியில் இலக்கியத்தையோ கலை ஆற்றலையோ எங்களோடே இழுத்துச் செல்வதற்கு சிரமப்படுகின்றோம். நாங்களே எங்களுக்கு அந்நியமாக்கப்படுகின்ற நிர்ப்பந்தமான நிலையினில் எங்கள் அகவெளியெங்கும் இழப்பை சகித்திருத்தல் என்ற உணர்வுக்கு எழுத்துச் செயற்பாடுகள் இரையாகிவிடுகின்றன. எங்கள் துன்பத்தை நெருங்கித்தொட முடியாத அவலத்தில் அச்சங்களால் துரத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இது தான் எங்கள் படைப்புலகம் சந்தித்துவருகின்ற நெருக்கடி. உச்சமான படைப்பை கொண்டுவர உயிரைவிட வேண்டிவரும் என்ற அச்சம் தமிழக படைப்பாளிகளுக்கு கிடையாது. அவர்களது எழுத்துக்கள் இலக்கிய உச்சங்களை தொட்டு கொண்டாடுகின்றன. தமிழகப் படைப்பாளர்கள் எங்களுக்கு ஆறுதலாக இருக்கின்றனர். நாங்கள் அவற்றை வாசித்து ஆசுவாசப்பட்டுக் கொள்வதும் அவர்களது எழுத்துக்களை மானசீகமாக வாழ்வதுமாக இருக்கின்றோம்.


- உங்களை எழுதத் தூண்டிய, உறுதுணையாக இருக்கிறவர்கள் குறித்து...


அனார்: வேறு யாரையும் சொல்வதைவிட என்னுடைய கணவரைத்தான் சொல்ல முடியும். என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பை தானே அச்சாக்கம் செய்து நூலாவதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்தவர் அவர் தான். அவர் எனக்கு அந்தளவுக்கு உறுதுணையாய் இருக்கிறார். நான் எழுதுவது மாத்திரம்தான், அதை கம்பியூட்டரில் டைப்செய்வதோ, மெயில் செய்வதோ அவர்தான். அது மட்டுமல்ல என் கவிதையின் முதல் ரசிகர். அவர் அதை சந்தோசமாக ஒரு குழந்தையைப் பார்ப்பது போல்தான் பார்ப்பார். எனக்குக் கிடைக்கிற சந்தோசத்தை விட அவருக்கு அதில் சந்தோசம் அதிகம். என்னை யாராவது பாராட்டினால் இன்னும் பலமடங்கு சந்தோசமடைவார். அவர் என்னை மிகவும் விரும்புகிறார். அதுதான் எல்லாவற்றுக்கும் காரணமென்று நினைக்கிறேன். எனக்காக தன்னை பூரணமாக அர்ப்பணித்த ஒரு தோழமைமிக்க துணை அவர்.


- இப்பொழுது வந்திருக்கின்ற கவிதைத் தொகுப்பு, அது தந்த அனுபவம், அதில் இருக்கும் முதல் கவிதை 'மண்புழுவின் இரவு' எழுதின நாட்கள் அந்த அனுபவம் எப்படியிருந்தது?


அனார்: இந்த தொகுப்பே எனக்கு முக்கியமான அனுபவமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு கவிதையிலும் நான் வாழ்ந்திருக்கிறேன். சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தெலுங்கிலும் பாரதி என்ற பெண் கவிஞர் மொழிபெயர்த்து பிரசுரித்திருக்கின்றார். சந்தோசமான அனுபவங்களை இத்தொகுப்பினூடாக பெற்று வருகின்றேன். இந்தத் தொகுப்பில் முதல் கவிதைக்கான அனுபவம் பற்றி கேட்டீர்கள்... ஒரு நெடுந்தூரப் பயணத்தின் போது இது வாய்த்தது. இரவு நேரப் பயணம் எங்கள் நாட்டுத் தலைநகரிலிருந்து எங்கள் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். அப்பொழுது எல்லோரும் நித்திரையாகி கொண்டிருந்தார்கள். நான் ஜன்னலைத் திறந்து இரவையும் வானத்தையும் ரசித்துக்கொண்டே வந்தேன். தூங்கவே இல்லை மிக நீண்ட பிரயாணம் அது. அந்தப் பிரயாணம்தான் அந்தக் கவிதையின் அடித்தளம். ஷஇரவின் இருளுக்குள்ளே எவ்வளவு பிரகாசம்| என்று இறைவனை நோக்கி எழுதின வார்த்தையாகத்தான் அதை எழுதினேன். தவிரவும் அந்தக் கவிதையில் என்னுடைய மதம் சார்ந்த கூறுகளும் சில முஸ்லீம் கலாச்சாரத் தன்மைகளும் வெளிப்பட்டிருக்கும்.


- உங்கள் தொகுப்பின் கடைசிக் கவிதையான கடற்கன்னி கவிதை பற்றி...


அனார்: சிறு வயதிலிருந்தே கடற்கன்னி மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது. எனக்கு ஆர்வமூட்டும் அதிசயப்பெண்ணாக கடற்கன்னி இருந்தாள். கடற்கன்னி பற்றிய அதீத கற்பனைகளுக்கு நான் வடிவம் கொடுத்து எனக்குள் உலவவிட்டிருந்தேன். நெடுங்காலமாக புதுமையான பேரழகான கடற்கன்னி ஒருத்தி எனக்குள் வசிக்கின்றாள். ஒரு சிறுமியின் பிரயாசையோடும் அதிசயத்தோடும் கடற்கன்னியின் கனவுகளோடிருந்தேன். ஒரு கட்டத்தில் நானே கடற்கன்னியாக மாறியதாக உணர்ந்தேன். அந்த உருமாற்றமும் கொண்டாடுதலும் தான் அந்தக்கவிதை.


- இன்னும் நல்ல கவிதைகளைப் படைக்க வேண்டும் என்ற உணர்வு உங்களிடம் இருக்கின்றதா?


அனார்: நிச்சயமாக.


- இதுதான் கவிதையில் High level என்று தோன்றியிருக்கிறதா?


அனார்: அப்படியில்லை. ஒரு கவிதை முழுமையாக இருப்பது அமைந்துவிடுவது மிகவும் அபூர்வமாகத்தான் நடக்கும். ஒரு கவிதை பூரணமாக நிறைவடைந்து விட்டது என்று நாம் திட்டவட்டமாக தீர்மானித்துவிட முடியாது. நமக்குத் திருப்தியாகயிருக்கிறது ஓரளவுக்கு இருக்கிறது என்றுதான் நினைக்க முடியும். நான் அப்படித்தான் நினைக்கிறேன். இனி வரும் கவிதைகள் இதைவிட அழகாகவும் வித்தியாசமான கருத்துகளையும் கொண்டுவர வேண்டுமென்று நினைக்கிறேன். அப்படியான யோசனைகளோடே இப்போது இருக்கிறேன்.


- உங்களோட இந்தியப் பயணம் பற்றி...


அனார்: சந்தோஷமான பயணம் இது. எப்பொழுதும் எங்களைப் பொறுத்தவரை பயணம் அவஸ்தை. நரக வேதனை என்றுதான் சொல்ல வேண்டும். எந்தப் பயணமும் சுமூகமாக இருக்கவே மாட்டா. நிறைய சிக்கல்கள், உருட்டல் மிரட்டல்களைக் கடந்துதான் நாங்கள் பயணத்தைச் செய்வோம். அப்படியான சூழலில் நாங்கள் சென்னைக்கு வந்ததிலிருந்து பிறகு ஒரிசா சென்றதுவரை பயணம் அமைதியாக இருந்தது. நீண்ட பயணம். இந்தப் பயணம் ஒரு கவிதை மாதிரி இருந்ததென்று சொல்லலாம். மற்றபடிக்கு இந்த நிலம் எனக்குப் புதிதாகவே தெரியவில்லை. இங்கே சந்திக்கிற மனிதர்களும் அப்படி. நீண்டகால நண்பர்களைத் திரும்பவும் சந்திப்பது போல இருந்தது எனக்கு.


- ஒரிசாவில் ஏற்பட்ட அனுபவம்.


அனார்: சார்க் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இளம் கவிஞர்களின் கவிதைத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஒரிசா சென்றிருந்தேன். அது முழுக்க முழுக்கக் கலையுணர்வு சார்ந்த இடம். திரும்புகிற பக்கமெல்லாம் ஒரு விதமான கலையைத் தேக்கி வைத்திருக்கிறது. கொணர்க் சூரிய கோயிலை பார்த்ததே பெரிய அனுபவமில்லையா ? சமணக் கோயில் மற்றும் வயல் நிலங்கள் இடைவிடாத ரயில் பயணம் அனைத்தும் எனக்கு புது அனுபவமே. பெண் ஆளுமையான மனோரமா பிஸ்வால் வசிக்கின்ற நிலத்தைப் பார்த்ததும் ... அந்த நிகழ்வில் அவரை நேரில் பார்த்ததும் சிலிர்ப்பான அனுபவமே.


- காலச்சுவடு பதிப்பகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட எழுத்தாளர் சந்திப்பில் நீங்களும், கவிஞர். சேரனும் கலந்து கொண்டது பற்றி ...


அனார்: காலச்சுவடு கண்ணன் அவர்கள் என்னை எழுத்தாளர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கோடு அந்த சந்திப்பை ஏற்படுத்தியிருந்தார். கவிஞர் சேரனும் அந்நிகழ்வில் கலந்து கொண்டார். எங்களுக்கு இரவு விருந்து வழங்கி மகிழ்வித்தார்கள். அங்கு மற்ற எழுத்தாளர்கள் மத்தியில் எங்களுக்கு கிடைத்த ஆதரவும் அன்பும் மறக்க முடியாதது. கலந்துரையாடினோம் கவிதைகள் வாசித்தோம் ... ரவிக்குமார் எனது கவிதைகள் பற்றி அங்கு பேசினார் அந்நிகழ்வில் குவளைக்கண்ணன், எம். யுவன், ரமணி, ஐய்யப்ப மாதவன், கூத்தலிங்கம், ரேவதி, கவிதா, சுகிர்தராணி என பலரும் கலந்து கொண்டனர்.

அதேபோல் சல்மா, எழுத்தாளர் இந்திரன் போன்றோர்களுடனும் சில மணித்தியாலங்கள் எனக்கு உரையாடக்கிடைத்தது. எழுத்தாளர்களை சந்திப்பது பேசுவது தன்னம்பிக்கை ஏற்படுகின்ற விடயம் தானே ? அது காலச்சுவடு நண்பர்கள் சந்திப்பில் நிறைவாகவே கிடைத்தது. இச்சந்தர்ப்பத்தில் நான் காலச்சுவடு கண்ணணுக்கும் கவிஞர். சேரனுக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவிக்கிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------

No comments: