Thursday 3 January 2019

பாடகியின் யானை 

-----------------------------------------------------------------------------------------------------------------------

- அனார் 




வாப்பாவின் நீலக்கூடை சைக்கிளில் முதன்முதல் பாடசாலைக்கு முன்னர் இறங்கி கண்களின் முன் விரிந்திருந்த வெண்ணிற பளிங்காலான மாளிகைகள் போலத் தெரிந்த கட்டடங்களைப் பார்த்ததும் இனம்புரியாத குளிர்ச்சி உள்ளங்கைகளிரண்டிலும் பரவியது. எங்கள் வீட்டின்முன் பரவியிருந்த குருத்துமணற் துணிக்கைகள் பாடசாலை வளவிலும் பரவியிருந்தது. வாப்பாவின் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன். என் கண்மட்டத்தில் நிறையக் கருவிழிகள் அலைந்துகொண்டிருந்தன. என்னைச்சுற்றி சிப்பிகள் அலைவதைப்போல வெண்ணிற உடையில் நிறையப்பேர் திரிந்தார்கள். அவர்கள் தேவதைகள் போல தூய்மையானவர்களாக இருந்ததைப் பார்த்தபோது இன்றிலிருந்து நானுமொரு தேவதையென்றும் நினைத்துக் கொண்டேன். வீட்டு முற்றத்துக் குருத்துமணலுக்குள் காலைப்புதைத்து நடப்பதைப்போல வாப்பாவின் கைகளை இறுகப்பிடித்தபடி குருத்துமணலுக்குள் காலைப்புதைத்து வேகமாக வெளியே உந்தினேன். மணற்துணிக்கைகள் நட்சத்திரக் கூட்டமொன்று விசிறிப் பறப்பதைப்போல தெறித்தன. 


பாடசாலை சென்ற முதல் நாளிலிருந்தே ஆசிரியர்களின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டேன். அவர்கள் மிகவும் நல்லவர்கள்; வாப்பா சொன்னது போலவோ ராத்தா சொன்னது போலவோ "படி" என்று சொன்னதே இல்லை. அவர்கள் மிகுந்த பக்குவத்துடன் தமது மடியில் தூக்கிவைத்து தேவதைக்கு தரும் மதிப்புடன் "பாட்டுப்படி" என்பார்கள். அதுவரை எனக்கு நானே பாடிக்கொள்ளும் முணுமுணுப்புகளெல்லாம் வெண்சுவர் நெடுகிலும் இசைக்கத்தொடங்கின. தேவதையின் பாடல்களை அவர்கள் பெரிதும் ரசித்தார்கள். அவர்களின் கண்களிரண்டும் கனிந்து என்மீது கவியும் அன்பு என்னை எப்போதும் பாடவைத்துக்கொண்டேயிருந்தது. காற்றின் குளிர்மையோடு பாடசாலையெங்கும் என் குரலும் நிறைந்தது. அவர்களின் மடியிலிருந்து இறங்கி இரு சிறகுகளை இடுப்பில் பொருத்திக்கொண்டு உடலை அசைத்துப் பாடும் பக்குவம் வரும்போது ஐந்தாம் வகுப்பிற்கு வந்துசேர்ந்தேன். இரண்டு பாடங்களை அப்போது அடியோடு வெறுத்தேன். ஒன்று கணிதம் மற்றையது சித்திரம். ஒரு நேர்கோட்டையோ முழுமையான வட்டத்தையோ சரியாக வரையத்தெரியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். நேர்கோடும் வட்டமும் தேவதைக்கெதற்கு? தேவதைகள் இசைக்கானவர்கள். உரோம இலக்கங்களிலிருந்து உடலும் தலையுமுள்ள பூதங்கள் வந்தன. அவற்றின் கோர வாயினால் தேவதைக்கனவுளையெல்லாம் ஒன்றொன்றாக தின்றுகொண்டிருந்தன. இப்போதும் அந்தநிலையில் பெரிய மாற்றங்கள் ஒன்றுமில்லை. நான் கனவுகளை உருவாக்கிக்கொண்டேயிருந்தேன். தொடர்ந்து சங்கீதம் படிக்க வாப்பாவிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் “நீ தலை கீழாக நின்றாலும் சரி, சித்திரப்பாடந்தான் எடுக்கவேணும், சங்கீதம் படிப்பது ஹறாம்“ என்றார். அவர் ஒவ்வொரு முறையும் அழுத்திச் சொல்லும்போது அப்பளிங்கு மாளிகைகள் தனித்து அழுதுகொண்டிருக்கின்ற சிறகுடைக்கப்பட்ட தேவதையின் மீது உடைந்துவிழுவதாக கனவு வரும். 


என் சித்திரக்கொப்பியில் அடர்ந்து வளர்ந்த பச்சை மரங்களும் கொத்தாக பூத்த ரோஜாக்களும் வண்ணத்துபூச்சிகளும் பச்சைக்கிளிகளும் ராத்தாவினால் நிறைந்திருந்தன. ராத்தா வரைந்த காட்டில் நான் ஒரு பட்டத்துடன் பாடிக்கொண்டே திரிந்தேன். யாருக்கும் தெரியாமல் காட்டின் எல்லாத்திக்கும் அலையும் தேவதையானேன். என் பாட்டில் காடு நிறம் பெற்றது. காட்டின் உடல் ராத்தா என்றாலும் மொழி நானாகினேன். 


வாப்பாவின் சொற்களின் கடுமைக்கு பயந்து சாந்தி டீச்சர் பலமுறை அழைத்தும் சங்கீத வகுப்புக்களுக்கு போகாமல் தவிர்த்தேன். சங்கீத அறைக்குள்ளிருந்து வரும் சாந்தி டீச்சரின் குரல் ரேடியோ பெட்டிக்குள்ளிருந்து வருவதைப்போல பயமாயிருக்கும். சங்கீத அறைக்கென இருக்கும் தனித்துவமான வாசனை என்றென்றும் எனக்குத் தெரியாமலே போனது. ஆனால் சாந்தி டீச்சர் என்னை விட்டபாடில்லை. பாடசாலை நிகழ்வுகளில் எல்லாம் என்னை இழுத்துக் கொண்டுபோய் நிறுத்தினார். எனக்குள் ஒவ்வொரு முறையும் குளிர்ந்த பனி ஊசிகளாக சந்தோசம் நிறைந்தது. அவை மேடையில் ஏற்படும் சிறுபயத்திலும் நடுக்கத்தில் கரைந்து இசையாய் உருகும். ஒரு பெரிய விழாவின் மேடையில் பழைய பாடலான “நீல வண்ணக் கண்ணனே உனது எண்ணமெல்லாம் நான் அறிவேன் கண்ணா என் கையைத் தொடாதே“ என்ற பாடலைப்பாடினேன். மதம் இனம் கடந்து இப்பாடல் எல்லோரையும் கவர்ந்தது. இசை பேதமற்றது. அதன் பிறகு வந்த காலங்களில் தமிழ் சினிமாப் பாடல் மெட்டுக்களில் மதவரிகளை இட்டு நிரப்பி பாடும் வழக்கம் வந்துவிட்டது. இசை பாட்டு மட்டுமல்ல என்றுணர்ந்தேன். இவையேதும் வீட்டிற்குத் தெரியாது. 


குருத்துமணல் மேல் இதழொன்று அவிழ்வதைப்போல காற்று சுருட்டும் அந்தநாள் அதிபர் அழகான சித்திரங்கள் வரைந்திருக்கும் கொப்பிகளை வாங்கிப் பார்த்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்தார். என்னுடைய கொப்பியும் அதிலிருந்தது. கண்காட்சி போட்டி ஒன்றுக்காக தேர்ந்தெடுத்த அனைவரும் ஒரு சித்திரத்தை வரைந்து கொண்டுவரும்படி கூறிச் சென்றுவிட்டார். கண்காட்சி என்பது பெருங்கனவாயிருந்தது. ஊர்க்காரர், பெரிய பெரிய அதிகாரிகள், நிறத்தாள்களாலான தோரணங்கள் என்று பாடசாலையே கொண்டாட்டமாயிருக்கும். கண்காட்சியில் ஏதேனும் பொருள் வைத்த எல்லோருமே புத்திசாலிகள். மனம் "ஒரு பாட்டுப்பாடு பாட்டுப்பாடு" என்று குறுகுறுத்தாலும் சித்திரந்தானே கேட்டார் அதிபர். 


ராத்தாவிடம் வீடு வந்ததும் வராததுமாக கண்காட்சிக்கு ஓவியம் வரைந்துதர வேண்டுமென்று கூறினேன். அவள் எப்போதும்போல கண்ணாடியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மனம் உருகிற்று, “கண்காட்சி என்றால் சும்மாவா, இப்ப நான் என்ன செய்ற?“ என்று அழுகையுடன் கேட்டேன். கண்ணாடி முன் நின்றால் யார் பேசினாலும் அவள் காதில் விழாது. நாளை எனது வேலை முடிய வேண்டுமென்றால் அவளது முகம் கண்ணாடியிலிருந்து விலகும்வரை பொறுமையுடன் இருக்கவேண்டும். யாரோ தொலைவில் போகிற ஒருவரை யாரெனத் தெரிந்துகொள்ள ஒருவர் கூர்ந்து பார்ப்பதுபோல் இருந்தது அவள் முகம். நெற்றிச்சுருக்கம் விழ தலையைச் சாய்த்துப் பார்க்கிறாள். கண்ணாடியைத்தான் பார்ப்பாளா இல்லை அங்கு அவளுக்கு வேறு உலகமெல்லாம் தெரியுமா. கண்ணாடியில் நான் பார்ப்பது வேறு, அவள் பார்ப்பது வேறு. அவளின் காடும் புல்லாங்குழலும் அங்குதானிருக்கின்றன. என் சித்திரக்கொப்பியில் வரைந்தது அவள் கண்ணாடிக்குள் வளர்த்த காடுதான் என்பதை அந்தக்கணம் புரிந்துகொண்டேன். அவளது உதடுகளின் பளபளப்பைப் பார்த்ததும் எனது நாக்கு தானாகவே எனது உதடுகளை ஈரமாக்கிக்கொள்ளும். காயக் காய ஈரமாக்குவது ஒரு கஸ்டமான வேலைதான். என்னதான் நான் மினக்கெட்டாலும் அவளது உதடுகள்போல ஈரச்சிவப்பும் மினுக்கமும் என் உதடுகளுக்கு வருவதில்லை. அவள் தோளில் சரியும் ஒரு துண்டுச் சுருள் முடியும் இரு காதுகளுடன் தொங்கும் முத்துக்கள்கொண்ட மின்னிகளும் அவள் வேண்டுமென்று எடுத்துவிடும் குட்டிக் கூந்தலின் சுருள்களும் அத்தனை அழகு. அது அதற்கென்று தனித் தனி கால அவகாசங்களும் உடல் மொழியும் அவளிடமிருந்து வெளிப்படும். ஒரு நிகழ்த்துக்கலை அவள். மணிக்கணக்காக அவளை பூரித்து பூரித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஒரு வழியாகத் திரும்பி ”என்ன வரையணும்” என அவள் கேட்டாள். அவள் காட்டுக்குள்ளிருந்து கருத்த பெரும் உடம்பு கொண்ட குன்றொன்றைப்போன்ற யானை பிளிறியது. அதுவும் எத்தனை இதமான இசை. உடனே யானைப் படம் என்றேன். “சரிவிடு, நான் வரைந்து தருவேன்“ என்றாள் எப்போதும்போல. யானைப் படம் ஒன்றுகூட வீட்டில் இல்லை. பக்கத்து வீடுகளிலும் இல்லை. உருவப்படங்கள் அனேகமாக எந்தவொரு வீட்டிலும் வைக்கமாட்டார்கள். எனவே “கடையில் ஓடிப்போய் தீப்பெட்டி ஒன்று வாங்கி வா, அதில் யானையின் படம் போட்டிருக்கு, பார்த்து நான் வடிவா உனக்கு வரைந்து தருகிறேன்“ என்றாள். நான் அளவற்ற சந்தோசத்துடன் பறந்து போய் யானை தீப்பெட்டி ஒன்றை வாங்கி வந்தேன். எனக்குத்தெரியும் அவள் கனவிலிருந்து யானை வரைபவள். ஆனால் அவள் கனவிலிருக்கும் எதுவொன்றை வரையவும் நீண்டகாலமெடுக்கும். முகத்தோடு முகம் பார்த்தபடி வரையப்பட்ட இரு யானைகள் அதில் தெரிந்தன. துலக்கமற்ற கோடுகளால் வரையப்பட்ட யானைகள் அவை. இரவு முழுக்க இருந்து ஒரே ஒரு காட்போட்டில் ரேசரால் அழித்து அழித்து வரைந்து முடித்திருந்தாள். காலையில் எழும்பியதும் ஓடிச்சென்று பார்த்தேன். “என்ன செப்பம் அந்த யானை“ கருநிற பெரிய யானை…. முதுகில் நடுவே நீள்சதுரமான சிவப்புக் கம்பளம்....கம்பளத்தின் ஓரங்களில் மஞ்சள் பூக்களால் வேலைப்பாடுகள். அதனிரு மூலைகளிலும் குஞ்சம் கட்டித் தொங்குகின்றன. ஆடம்பரமான அலங்காரம். வெள்ளைநிற காட்போர்டில் கறுப்பு யானை அவ்வளவு கம்பீரமாக நின்றது. ராத்தா காட்டிற்குள் இந்த யானையின் மேல் ஒரு இளவரசியாய் அலைவாள் போலும். எனக்கு பெருமை பிடிபடவில்லை. கூடவே மனதிற்குள் “நீயா வரைந்தாய்?" என்று கேட்டால் என்ன சொல்வது என்ற பயமும் எழுந்தது. தயங்கி தயங்கித்தான் ஆனாலும் வெளித்தெரியாதவாறு அதிபரிடம் கொண்டு சென்றேன். அவர் ஓவியத்தை விரித்துப்பார்த்துவிட்டு மகிழ்ச்சிபொங்க “நீங்கதான் கீறினீங்களா பிள்ள?“ என்றார். “ஆம் சேர்“ என சுத்தத் தமிழில் ஒரு பச்சப்பொய்யை கூறினேன். மற்ற ஓவியங்களோடு கண்காட்சிக்கு அனுப்பப்போகிறேன். தெரிவு செய்யப்பட்டால் நாளை உங்களை அழைத்துச் செல்வேன் என்றார். 


பாடசாலை விட்டு வந்ததும் ராத்தாவைத் தேடி ஓடினேன். அவள் கட்டிலில் ஏதோ ஒரு புத்தகத்துடன் சாய்ந்திருந்தாள். நான் அவளுடைய கால்களின் அருகே அமர்ந்து கொண்டேன். ஓ.. அவள் தான் என் மகாராணி.. நான் அவள் சேவகி என்பதுபோல பவ்வியமாக அமர்ந்துகொண்டேன். ஒன்றின் மேல் ஒன்று இறுகப் பின்னி மெல்ல அசைந்து கொண்டிருந்தன அவளுடைய கால்கள். ”யானைப் படத்தை அதிபரிடம் கொடுத்துவிட்டேன். அவர் வடிவாக இருக்கிறது என்று பாராட்டினார்" என்றேன். நீதான் கீறீன என்று அவருக்கு விளங்கிடுமோ என ஒரு பயம் என்றேன். பயப்படாமல் நீ போய் விளையாடு என்றாள். அடுத்த நாள் பாடசாலைக்குப் போனேன். எனது வகுப்பாசிரியரும் இன்னும் இரு சித்திரப்பாட ஆசிரியர்களும் கதைத்துக்கொண்டு என் வகுப்பிலேயே நின்றிருந்தார்கள். பதற்றமாக இருந்தது. வாப்பாவோடு முதல்நாள் பாடசாலைக்குப் போகும் போது குளிரத்தொடங்கிய உள்ளங்கைகள் முதன்முதலாய் அக்கணம் சுட்டது. காதிரண்டும் அடைத்தது போலிருந்தது. இன்னும் நான்கைந்து காலடிகளை வைக்கும்முன் பாடசாலை முடிந்து எல்லோரும் வீட்டிற்கு போய்விடக்கூடாதா? எதற்கும் ஒருமுறை சுவரைப்பார்த்துக்கொண்டேன். அது சுவர் தான். இரண்டு இறக்கைகளும் ஒடுங்கி போயிற்று. ராத்தா கீறின சித்திரம் என்று விளங்கிவிட்டதோ என, கடும் யோசனையோடு இருந்தபொழுது வகுப்பு டீச்சர் என்னை அழைத்தார் “இங்க வாங்க பிள்ள“. “சேர்ர மகள்தானே நீங்க?“. அதுக்கு ”ஆம் டீச்சர்” என்றேன். “யாரு அந்த யானைப் படத்த வரைஞ்சது…….. உண்மையைச் சொல்லுங்க…. " எனக் கேட்டதும் அழுகை பொத்துக்கொண்டு வந்தது. என்னையறியாமல் விம்மத்தொடங்கினேன். உடனே பதிலெதுவும் வரவில்லை. "வீட்டில யாரும் அதைப்பார்க்கவில்லையா" என்று இன்னொரு டீச்சர் கேட்டார். என் கண்கள் இருண்டன, வெண்ணிற சுவரெல்லாம் கறுத்தன. மணற்கடலில் மிதக்கும் தெப்பமொன்றில் நிற்பதைப்போல தோன்றிற்று. அப்போது அதிபரும் வந்துவிட்டார். சிரித்த முகத்துடன் சந்தோசமாக நடந்து வந்தார். “நமது ஸ்கூலில் இருந்து இரண்டு ஓவியங்கள் கண்காட்சிக்கு தெரிவாகி உள்ளன“ என்றார். “அந்த யானைப்பட ஓவியம் மூன்றாம் இடம் வந்திருக்கிறது!" என அவர் கூறியதும் எனக்கு நம்பமுடியவில்லை. “முதலாவதாக வரவேண்டிய ஓவியம் அது" என்றவர். என்னைப் பார்த்து "எல்லாவற்றையும் நன்றாக வரைந்த நீங்கள் யானைக்கு வால்வைக்க மறந்துவிட்டீர்களே" என்று சத்தமாகச் சிரித்தார். எல்லோரும் சிரித்தார்கள். யாருக்குத்தெரியும் ராத்தா ஏறிவரும் யானைக்கு வாலிருக்காது என்று. " உங்களுக்குத் தெரியுமா போட்டி நடுவர்கள் நீண்டநேரம் விவாதித்துவிட்டுதான் ஒரு முடிவுக்கு வந்தார்களாம். சிறு பிள்ளை வரைந்ததென்று அவர்கள் யாரும் முதலில் நம்பவே இல்லை. கடைசியாக ஒரு ஆசிரியர் சின்னப்பிள்ள வரைந்து என்பதாற்தான் யானைக்கு வால் வரையாமல் மறந்து போயிருக்கும்போல என்று கூறினார். அதனால் தான் மூன்றாம் இடம் கிடைத்திருக்கிறது, நாளை அதற்கான பரிசு உங்களுக்கு உண்டு" என்றவர். என் முதுகில் “கெட்டிக்காரப் பிள்ளை“ என தட்டிவிட்டுச் சென்றார். ஆசிரியைகள் வாழ்த்துச் சொன்னார்கள். தெப்பம் நீர் மாளிகையாயிற்று. சிறகுகளிரண்டும் பெருஞ்சக்தியோடு ஒரு முறை அடித்துக்கொண்டன. அல்லாஹ் தப்பினேன். கண்காட்சிக்குப் போனேன். அந்தப் புதிய பாடசாலையின் நீண்ட கூட்ட மண்டபத்தில் உயரமான சுவரில் மூன்றாம் இடம் என்று பெரிய எழுத்துக்களின் கீழ் எனது ஓவியம் ஒட்டப்பட்டிருந்தது. சுவர் முழுதும் கனவுகள் மிதந்துகொண்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் இதைப்போல ஒவ்வொரு காதைகளோடு என்னைப்பார்த்து சிரித்தன. ராத்தாவின் சிவப்புக்கம்பளம் விரித்த யானையை உற்றுப்பார்த்தேன் சுத்தமாக வால் இல்லை. 


----------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி : விகடன் தடம்  -  ஜனவரி 2019