கட்டுரை


பரிணாமவியலின் புதிய நாயகன்.... கட்டுரையிலிருந்து ஒரு சிறு பகுதி


- எஸ். ராமகிருஷ்ணன்
------------------------------------------------------------------------------------------------

இரவெல்லாம் டாவ்கின்ஸ் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். பின்னிரவில் ஜப்பானின் ஏரியில் வசிக்கும் ஏகா என்ற தவளை நான் படித்துப் பார்க்க வேண்டும் என ஒரு கவிதையை அனுப்பியிருந்தது. ஈழத்தின் நவீன கவிஞர்களில் முக்கியமானவரான அனாரின் கவிதையது. நான் அனாரின் கவிதைத் தொகுப்பை வாசித்திருக்கிறேன். செறிவான கவித்துவ மொழியும்,  நுட்பமான அவதானிப்பும், தனித்துவமான அகக்குரலும் கொண்ட கவிதைகள் அவை.


மேலும் சில இரத்தக் குறிப்புகள்

மாதம் தவறாமல் இரத்தத்தைப்     பார்த்து பழக்கப்பட்டிருந்தும்
குழந்தை விரலை அறுத்துக்கொண்டு அலறி வருகையில்
நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகின்றேன்
இப்போது தான் முதல் தடவையாக    காண்பதுபோன்று
“இரத்தம்” கருணையை
பரிதவிப்பினை அவாவுகின்றது
இயலாமையை வெளிப்படுத்துகின்றது
வன் கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்
செத்த கொட்டுப் பூச்சியின்
அருவருப்பூட்டும் இரத்தமாயும்
குமுறும் அவளுயிரின் பிசுபிசுத்த நிறமாயும்
குளிர்ந்து வழியக்கூடும்
கொல்லப்பட்ட குழந்தையின்
உடலிலிருந்து கொட்டுகின்றது இரத்தம்
மிக நிசப்தமாக
மிக குழந்தைத்தனமாக
களத்தில்
இரத்தம் அதிகம் சிந்தியவர்கள்
அதிக இரத்தத்தை சிந்த   வைத்தவர்கள்
தலைவர்களால் கௌரவிக்கப்பட்டும்
பதவி உயர்த்தப்பட்டும் உள்ளார்கள்
சித்திரவதை முகாம்களின்
இரத்தக் கறைபடிந்திருக்கும் சுவர்களில்
மன்றாடும் மனிதாத்மாவின் உணர்வுகள்
தண்டனைகளின் உக்கிரத்தில்
தெறித்துச் சிதறியிருக்கின்றன
வன்மத்தின் இரத்த வாடை
வேட்டையின் இரத்த நெடி
வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்
கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக் கும் அதே இரத்தம்
சாவின் தடயமாய்
என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

கவிதையின் வழியே குருதி கசிந்து வந்து நம் கைகளில் படிவதை உணர முடிகிறது. ரத்தம் சிந்துதல் என்பது வெறும் உடல்செயல்பாடு மட்டுமில்லை. அது ஒரு சங்கேதம். ஒரு அந்தரங்க அனுபவம். அனுமதிக்கப்பட்ட வன்முறை.  குருதி எப்போதுமே எதையோ நினைவுபடுத்துகிறது. வரலாற்றில் படிந்த குருதிகள் காய்வதேயில்லை. சொற்களில் வழியும் குருதிகள் நம்மைக் குற்றவுணர்ச்சி கொள்ள வைக்கின்றன. அனார் கவிதையின் வெற்றியும் அதுவே.


( நன்றி - உயிர்மை, ஜுலை 2011 )

-------------------------------------------------------------------------------------------------------------

மறுபக்கத்தின் குரல்கள்


- ஜெயமோகன்
-------------------------------------------------------------------------------------------------------------

1992ல் ஒரு டெல்லி கருத்தரங்கில் யூ ஆர். அனந்தமூர்த்திபேசும்போது சொன்னார் ‘வரவேற்பறைகளில் இருந்து அறிக்கைகள்தான் வரமுடியும், இலக்கியம் சமையலறைகளில் இருந்தும் கொல்லைப்பக்கங்களில் இருந்தும்தான் வரும். மொத்த ஐரோப்பாவே மெல்லமெல்ல அதன் சமையலறையையும் கொல்லைப்பக்கத்தையும் இழந்துகொண்டிருக்கிறது. இங்கிலாந்து அதன் கொல்லையை இழந்தபின் அயர்லாந்தின் கொல்லையைவைத்து நெடுநாள் சமாளித்தது. இப்போது அதுவுமில்லை. இந்தியவின் கதை அதுவல்ல. நமது கொல்லைப்பக்கத்தை நாம் எட்டித்தான் பார்த்திருக்கிறோம். இன்னமும் உள்ளே நுழைந்து பார்க்கவில்லை’

நெடுநாள் என்னைக் கவர்ந்த கருத்தாக இருந்து வந்தது இது. பின்பு ஒரு கட்டுரையில் சுந்தர ராமசாமியும் ஏறத்தாழ இதே கருத்தைச் சொல்லியிருந்ததை வாசித்தேன். ’கூடத்தில் நாம் விசிறிமடிப்பு அங்கவஸ்திரங்களையும் வாங்கோ வாங்கோக்களையும் உருவாக்கி வைத்திருக்கிறோம், அதில் கலைஞனுக்கு என்ன அக்கறை இருக்க முடியும்’ என்று அவர் எழுதியிருந்தார் [ஜி.நாகராஜன் கதைகளுக்கு எழுதிய முன்னுரை] நம்முடைய வரவேற்பறைக்கு இன்னும் ஒரு தனித்தன்மை உண்டு. இங்கே நம்முடைய பொருட்கள் மிகமிகக் குறைவு. மேல்நாட்டுத்தலைவர்களின் காலண்டர்கள் தொங்கும் சுவர்கள் மேலைநாடுகளை போலிசெய்த வீட்டுப்பொருட்கள் மேலைநாடுகளில் இருந்து வந்த தொழில்நுட்பப்பொருட்களால் ஆனது அது.

நம்முடைய அரசியல் என்பது ஒரு வரவேற்பறை விவாதமே. அங்கிருந்து கட்டுரைகளும் துண்டுப்பிரசுரங்களுமே வரமுடியும், இலக்கியம் அல்ல. இலக்கியமாகவேண்டுமென்றால் அது கொல்லைக்குச் சென்றுசேரவேண்டும். நம்முடைய அரசியல் கவிதைகள் பெரும்பாலும் சுருக்கப்பட்ட துண்டுபிரசுரங்களோ விரிக்கப்பட்ட கோஷங்களோ மட்டுமே. அவற்றை இலக்கியம் என்று என்னால் ஒருபோதும் ஒத்துக்கொள்ள முடிந்ததில்லை.

இலக்கியத்தில் சொல்லப்படும் அரசியலைப்பற்றி ஆழமான அவநம்பிக்கையை நான் உருவாக்கிக்கொண்டது சுந்தர ராமசாமியின் வழியாகவே. ’இலக்கியத்தில் அரசியல் கூடாதா என்ற கேள்விக்கே இடமில்லை, அரசியல் இருக்கலாம், இருக்கும். ஆனால் இலக்கியத்தில் மிகமுக்கியமான ஒன்றுண்டு, அங்கே பிரக்ஞைபூர்வமாகச் சொல்லப்படும் எதுவும் நம்பகத்தன்மை இல்லாததே’ என்றார் சுந்தர ராமசாமி.

ஆம், மிக அந்தரங்கமான, நுட்பமான, ஆழமான ஒன்றை நேரடியாகச் சொல்லிவிடமுடியாது என்ற மானுடநிலையில் இருந்தே இலக்கியம் என்ற மொழிவடிவம் பிறவிகொண்டது.இலக்கியத்தின் அத்தனை உத்திகளும் அழகியல்சாத்தியங்களும் இந்த சிக்கலில் இருந்தே உருவாகின்றன. காதல் முதல் பிரபஞ்சப்பேருணர்வு வரை மரணபீதி முதல் அரசியல் வரை இலக்கியம் அதற்கே உரிய மறைமுகவழிகளினூடாகவே சொல்லவேண்டியிருக்கிறது.

இலக்கியத்தின் வழி சொல்வதல்ல, உணர்த்துவதே. நேற்று டேவிட் அட்டன்பரோவின் இயற்கை பற்றிய நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட பூச்சுயிரி [ஃபங்கஸ்] எறும்புவகை ஒன்றை பாதிப்பதை காட்டினார்கள். பூச்சுயிரி நேராக எறும்பின் மூளைக்குச் சென்றுவிடுகிறது. அதன்பின்பு அந்த எறும்பை அது செயல்படச்செய்கிறது. பூச்சுயிரி இனப்பெருக்கம் செய்ய என்னென்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் எறும்புசெய்கிறது. அதிகாலையில் மேயவரும் மாடுகளின் வயிற்றுக்குள் பூச்சுயிரியைச் செலுத்துவதற்காக எறும்பு புல்நுனியில் சென்று அமர்ந்திருப்பதைக் கண்டேன். இலக்கியத்தின் வழி அதுவே. அது வாசகனின் தர்க்க மனத்துடன் உரையாடுவதில்லை. அவனுடைய ஆழ்மனதுக்குள் சென்று அமர்ந்து வேலைசெய்கிறது அது.

ஈழக்கவிதைகள் மீதான என் அவநம்பிக்கையை மீண்டும் மீண்டும் பதிவுசெய்துகொண்டே இருக்கிறேன். காரணம் ஈழக்கவிதைகள் மிகப்பெரும்பாலும் வெற்று அரசியல்கூச்சல்கள்தான். அவை அவற்றை எழுதியவர் எவ்வாறாக தன்னைக் காட்டிக்கொள்ள விழைகிறார் என்பதற்கான சான்றுகள் மட்டுமே. அவை கூடத்தில் இருந்து வருபவைகூட அல்ல, தெருமேடைகளில் இருந்து எழுபவை. இந்த அவநம்பிக்கைக்கூற்று என் மீதான கசப்பை நண்பர்களிடம்கூட உருவாக்குகிறது. கவிதை எச்சில் தெறிக்க வெற்றுக் கோஷமிடுவதைக் காணும்போது ஓர் அருவருப்பே உருவாகிறது. அந்த கருவி அதற்கானது அல்ல என்றுதான் கூறவேண்டியிருக்கிறது.

ஆகவெதான் நான் ஈழப்பெண்கவிஞர்களை மேலும் கூர்ந்து கவனிக்கிறேன். அவர்களிடம் ஒரு கொல்லைப்பக்கம் சார்ந்த பார்வை இருக்கும் என்ற நம்பிக்கையில். பொதுவாக பெண்ணெழுத்து என்றாலே அது பெண்ணியம்தான் என ஆகிவிட்டிருக்கிறது. அந்த அரசியலுக்கான நிலைபாடுகளும் வாய்ப்பாடுகளும் இப்போது வகுக்கப்பட்டுவிட்டன. நிலைக்கட்டங்களில் சொற்களையும் படிமங்களையும் நிரப்பினால் போதும் என்ற நிலை வந்திருக்கிறது. அந்த பொறியில் சிக்காமல் தான் உணர்ந்தது எதுவோ அதை மட்டுமே உணர்த்த முயல்கிற, தன் அகத்துக்கு மட்டுமே கட்டுப்பட்ட குரல்களுக்காக எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன்

அவ்வகையில் என் கவனத்தைக் கவர்ந்த மூன்று பெண்கவிஞர்கள் ஆழியாள், அனார், பஹீமா ஜகான். மூவருக்குமான பொதுக்கூறுகள் என்றால் போர் மற்றும் இடம்பெயர்தலின் சூழலை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதே. மென்மையான நுட்பமான கவிமொழி அனுபவங்களுக்கு நேர்மையாக இருத்தல், வாசகனின் கற்பனையை நோக்கிப் பேசுதல் ஆகிய அம்சங்களில் இம்மூன்று கவிஞர்களும் எனக்கு முக்கியமானவர்களாகப் படுகிறார்கள்.

நெடுங்காலம் படிமங்களில் கவிதைகள் எழுதப்பட்டும்கூட அனார் கவிதைகளின் படிமங்கள் ஈர்க்கின்றன. அவை படிமங்களை இன்னொரு மொழிக்கட்டுமானத்தில் வைப்பதுதான் காரணம் என்று படுகிறது. உதாரணமாக தியாகம், அர்ப்பணம் ஆகியவற்றுக்கான படிமமாக மெழுகுவத்திகள் நெடுங்காலமாகவே சொல்லபப்ட்டுவருகின்றன. ஆனால் அவற்றை மௌனமான எரிமலைகளாக காண்பது முற்ற்லும் புதியது

கொதி நிலை விதிக்கப்பட்டிருக்கும்
எரிமலை நெருப்பு உங்கள் முன்
மெழுகுவர்த்திகளில் ஏற்றப்பட்டும்
ஊதுபத்தியில் புகையவிடப்பட்டும்
அவமானத்துக்குள்ளாவதன் சித்திரவதை நான்..

இந்த மொழியமைப்பு வழியாக வெளியாகும் மௌனஎரிமலையையே நான் பெண்ணியத்தின் அழகியல்பூர்வமான குரலாகக் கொள்வேன். இப்படிமம் வழியாக நான்செல்லக்கூடிய தூரம் மிக அதிகம் என்பதனால்.

அனாரின் இவ்வரிகளில் ஒலிப்பது தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முன்வைக்க முயலும் ஒரு மனம். பொதுவாக இந்த அம்சத்தை இந்தியப்பெண்கவிஞர்களின் ஆக்கங்களில் முழுக்க காணமுடிகிறது. ‘நான்....’ என்று அவை கூற முனைகின்றன. ஒன்று தன்னைப்பற்றிய ஒரு வரையறையை மறுப்பதாக அல்லது புதிய ஒரு வரைமுறையை உருவாக்கி அளிப்பதாக அவை அமைந்துள்ளன. அனாரின் வரிகளில் ஒரு வரையறை உள்ளதென்றால் ஆழியாளின் கவிதை வரிகளில் அவ்வரையறையை அழிக்கும் விழைவு

“வெகு இயல்பாய்
என் தடமழியும்
வள்ளம்
பதித்த நீர்ச் சுவடு போல
காற்றுக்
காவும்
மீன் வாசம் போல
கடற்கரைக் காலடியாய்
வெகு இயல்பாய்
என்; தடமழியும்
நாலு சுவருள்
ஒற்றப்படும்
மென் உதட்டு முத்தம் போலவும்
எட்டுக்கால் படும் ஒற்றைச் செருப்படி போலவும்.
வெகு இயல்பாய்
என் தடமழியும்
ஒளி விழுங்கின வானவில்லாய்.”

தன்னை முன்வைக்கும் அதேகுரலில் தன் இன்மையை முன்வைப்பதாகவும் பெண் கவிதைகள் ஒலிப்பதன் முரண்பாட்டை புரிந்துகொள்வது எளிதல்ல போலும். அனாரின் வரிகளில்

என்னுடைய வரிகளில்
என்னைத் தந்து முடிவதும் இல்லை
எடுக்கவும் முடிவதில்லை

என்று அந்த இயலாமை பதிவாகிறது.

ஒரு புரிதலுக்காக இவ்வாறு சொல்லிப்பார்க்கலாம். பெண்ணின் அடையாளம் என்பது இங்கே நேர்நிலைச் செயல்பாடுகள் வழியாக இயல்பாக உருவாகி வந்ததாக இல்லை. அது அவள்மேல் பல்லாயிரம் வருடத்துப் பண்பாட்டால் ஏற்றப்பட்டதாக உள்ளது. அவளுடைய உடலாக அல்ல உடையாகவே அவளுடைய சுயம் உள்ளது. ஆகவேதான் இது நானல்ல நானல்ல என்ற உணர்வு நமது பெண்கவிஞர்களின் குரலாக மீளமீள ஒலிக்கிறதுபோலும். தன் அடையாளத்தை மறுக்கும் பிறிதொன்றை நிறுவும் அடையளங்களுக்கு அப்பாற்பட்ட இன்மையை உணர்ந்து துணுக்குறும் மனநிலைகள் மாறி மாறி ஒரே கவிக்குரலில் ஒலிக்கின்றன.

இப்பெண்கவிகளுக்குள் உலவுகையில் மீண்டும் மீண்டும் என்னை உவகை கொள்ளச்செய்யும் அம்சம் இவை முழுக்கமுழுக்க கவிமொழியில் எழுதப்பட்டிருக்கின்றன என்பதே. கவிதையாக அக எழுச்சி பெறாத வெற்று வரிகள் நிகழ்வதே இல்லை. உண்மையான கவிஞரின் அகம் என்பது எந்தவிதமான செயற்கைக் கட்டுமானமும் இல்லாத காட்டுவெளி போன்றதென்று தோன்றுவதுண்டு

தூறலாய் சாரலாய்
பெரும் துளிகளாய் மாறித்
தன்னை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தது
அந்தி மழை

என்று பஹீமா ஜகானின் வரிகளை வாசிக்கும்போது அது உருவாக்கும் அர்த்தத்தின் தூண்டுதல் நிகழ்வதற்குள்ளேயே அச்சொல்லமைப்பு உருவாக்கும் ஒரு அக எழுச்சி நிகழ்ந்துவிடுகிறது. கவிதை நிகழ்வது அங்குதான், கருத்துப்பதிவு என்பது அதிலிருந்து விளையும் ஒரு இரண்டாம்கட்ட செயல்பாடுதான்

அதனாலென்ன
அவன் வாளுறைக்குள்
கனவை நிரப்புவது எப்படியென்று
எனக்குத் தெரியும்

என்று அனாரின் வரிகளில் அந்த கனவுத்தொழில்நுட்பத்தைக் காணமுடிகிறது. மிக எளிமையானது அந்த தொழில்நுட்பம். கவிஞனாகும் தருணம் அமையுமென்றால் கவிதை மிகமிக எளியது என்று ஒரு கட்டுரையில் தேவதேவன் சொல்கிறார். ஒரு குழந்தையின் மலர்ந்த விழிகளுடன் வாழ்க்கையை நோக்க முடிந்தால் கவிதை சொற்களில் இயல்பாக வந்தமைகிறது. பஹீமா ஜகானின் கவிதையில்

அசைந்து வரும் கரிய யானைகளைப்
பார்த்தவாறு
கைவிடப்பட்ட தனது கூட்டை எண்ணிக்
கண்ணீர் உகுத்திடலாயிற்று

என்று ஒரு குருவியின் தினத்தில் அந்தியின் வருகை யானைகளின் அசைவாகச் சொல்லபப்ட்டிருக்கிறது. அந்த எளிய குழந்தைநிலையே கவிதைகளின் பிறப்பிடம். கொள்கைகள் கோட்பாடுகள் அல்ல. அரசியலும் தத்துவமும் அல்ல.

பொதுவாக, இந்தியப்பெண்கவிஞர்களின் கவிதைகளில் காணும் ஒரு சிறப்பம்சத்தையும் இவர்களில் காண்கிறேன். என் அழகியல் நோக்கில் அதை ஓர் எதிர்மறை அம்சமாகவே எண்ணுவேன். ஆனால் கிட்டத்தட்ட அத்தனை கவிஞர்களிலும் இக்கூறு உள்ளது என்னும்போது அதன் வேர்களைப்பற்றியே யோசிக்கவேண்டியிருக்கிறது. அதை கவியுருவகம் [மெட்டஃபர்] எனலாம்.

கவிதையில் கவியுருவகங்களை பயன்படுத்துவது சற்று காலாவதியான விஷயம். எப்படி அணிகளும் உவமைகளும் ஒரு காலகட்டத்து அழகியலுடன் தொடர்புள்ளனவோ அதைப்போல. கவியுருவகங்கள் வாசகனுக்கு கற்பனைக்கான சாத்தியங்களைக் கொடுக்காமல் தங்களை அழுத்தமாக நிறுவிக்கொள்ளக்கூடியவை. ஆகவே அவற்றை கவிதை சென்ற கால்நூற்றாண்டுக்கும் மேலாக தவிர்த்தே வருகிறது. அவற்றுக்குப் பதிலாகத்தான் படிமங்கள் கவிமொழியாக ஆயின. கவியுருவகங்கள் நாவலுக்குரியவை என்றாயிற்று. நாவலில் தரிசனங்களை பல கோணங்களில் வளர்த்து பல தளங்களுடன் தொடர்புபடுத்தி முன்னெடுத்துச்செல்ல அவை உதவக்கூடியவை.

அள்ளிடும் தருணமெலாம்
மண்ணையும்
குறுணிக்கற்களையும்
அவள் கரங்களில்
எஞ்சவைத்து விட்டு
நெல் மணிகளோடு
நிலத்தில் ஒழுகிக் கொண்டிருந்தது காலம்

என்று பஹீமா ஜகானும்

ஓடிச் சுழித்து ஒன்றிணைந்தாடுகின்றன
தசையணிந்த நீர்ச் சுனைகள்

என்று அனாரும் இயல்பாகவே கவியுருவகங்களைப் பயன்படுத்துவதைக் காணலாம். சொல்லவந்ததை அழுத்த அடிக்கோடிட பெரிதாக்கிக் காட்ட இந்த கவியுருவகங்கள் அவர்களுக்கு தேவையாகின்றன போலும்.

சமகால ஈழக்கவிதையின் முக்கியமான குரல்களாக இவர்களை நான் காண்கிறேன். இச்சொற்களின் கவித்துவம் அளிக்கும் புத்துணர்ச்சியும் ஒளிவிடும் துயரமும் கவிதை என்ற வடிவத்தின் சாத்தியங்களை என்னுள் மீண்டும் புதுப்பித்தன. அரசியல் கூச்சல்கள் ஒலிக்கும் ஈழத்தின் திண்ணைகளுக்கு அப்பாலிருந்து மௌனம் கனத்த விம்மல்கள் போல, வீணையதிர்வுகள் போல இவை ஒலிக்கின்றன.


( நன்றி - காலம் :ஏப்ரல் - ஜுன் 2011 )

-------------------------------------------------------------------------------------------------------------

கொல்வோம் அரசனை 1 : செங்கோல் தரும் வலி


- குட்டி ரேவதி

-------------------------------------------------------------------------------------------------------------

அரசனின் உருவகங்கள் பூமியில் பெருகிக்கொண்டேயிருக்கின்றன. அவை ஏற்கெனவே இலங்கிய அரசர்களின் பிரதிகளாயோ அல்லது அந்த அரசர்களின் பிரதிகளை தோற்கடிக்கும் நகல்களாயோ துலக்கம் பெறுகின்றன. அரசர்களின் குணநலன்களைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் பெரிய வித்தியாசமிருப்பதில்லை.

வரலாற்றிலும் வாழ்க்கையிலும் அத்தகைய அரசர்களின் உருவகங்களைக் கண்டடையும் முயற்சியையும்இ அவற்றை விமர்சிக்கும் பண்பாடும்இ யதார்த்தம் மீறுகையில் அவ்வுருவகங்களைக் களையும் தீரமும் தேவைப்படுவதை புறந்தள்ள முடியாது. ஏனெனில் அரசர்கள் மாய்ந்தாலும் காலங்களுக்குப் பின்னும் அவர்களை அழிக்க முடிவதில்லை. அவர்களின் கொடுஞ்செயல்கள் உறக்கம் பெறுவதில்லை. பூமியின் அதிகார சட்டகத்தில் அரசர்கள் அறையப்பட்ட ஆணிகளாய் ஆகிவிடுகின்றனர்.

வரலாற்றில் முன்னோக்கி நகர்ந்தாலும் பின்னோக்கிச் சென்றாலும் அரசன் எனும் அதிகார பிம்பம் எங்கெங்கும் எதிரொளியாய் நெளிந்து கொண்டிருக்கும். அதிகாரப் பூர்வமான பேரரசுகள் எல்லாமே வீரத்தாலும் தந்திரத்தாலும் பலத்தாலும் வெல்லக்கூடிய ஓர் ஆணால் உருவாக்கப்பட்டதாகவே நமக்குக் கதைகளும் வரலாறுகளும் வழங்கப் படுகின்றன. அத்தகைய ஓர் ஆணே அரசன் எனப்படுகிறான். ஆனால் பேரரசின் எல்லா அறைகளிலும் பாதைகளிலும் மூலை முடுக்குகளிலும் வாசற்படிகளிலும் ஜன்னல் வெளிகளிலும் பெண்கள் இருந்து கொண்டே இருந்தனர் என்றாலும் அரசன் எனும் பிம்பமே காலந்தோறும் உருவாக்கப்பட்டதும் நிறுவப்பட்டதும். பின்னும் அத்தகைய பிம்பங்களுக்கு வார்ப்புகளாகிப் போவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

அரசன் எனப்படுவோன் இங்கே ஒரு நாட்டை சிற்றரசை பேரரசை ஆட்சி செய்வோனாக மட்டுமில்லை. பலவீனமான மக்கள் குழுமத்தை இன்னும் ஒடுக்கும் அதட்டி சிறுமைப்படுத்தும் ஒரு செங்கோலைக் கொண்டிருப்பவனாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவனுக்கு விதவிதமான எல்லைகள் உண்டு. ஒரு நாட்டின் பூகோளத்தின் வரவெல்லை மட்டுமேயன்றி ஒரு குறிப்பிட்ட பண்புக்கு இயங்கு சக்தியாக இருக்கும் மக்கள் குழுமமே கூட அவனது வரவெல்லை என்றாலும் அவன் செலுத்தும் ஆட்சி சாதாரண பலம் கொண்டதன்று. பல நிலைகளில் நோக்கும்போது ஒரு பெண்ணின் மனவெல்லை கூட அவன் பேராட்சி செய்ய வரைவெல்லையாகிவிடும்.

எனில் அரசன் என்போன் உருவாகும் அரசியலை மானுட வரலாற்றின் வழியாக ஊடுருவிக் கண்டடைய வேண்டியிருக்கிறது. அரசன் சார்ந்த சமூகத்தின் குற்றங்கள் எனப்படுபவை அரசனின் அன்றாட வழக்கங்களாயும் மக்களுக்கு அவை தண்டனைகளைப் பெற்றுத்தரும். குற்றவுணர்வை விடாது கிளறிக்கொண்டேயிருக்கும் அசம்பாவிதங்களாகவும் மாறிவிடுகின்றன. அரசனை வரையறுப்பதென்பது தடித்த சப்தங்களுடன் அதிரும் ஆதிக்கக் காலணிகள், எவரோடும் சமதையற்ற அரியணை, இயல்பான உடல் அசைவுகள் வெட்டி நீக்கப்பட்ட தோரணைகள். தலைக்குக் கனமேற்றும் கிரீடம், எல்லோரையும் பொம்மையைப் போல ஆட்டுவிக்கும் செங்கொல் இவற்றுடனான அதிகாரத்திற்கான விசையை உடலாகக் கொண்டிருக்கும் ஒரு மனித உயிர் என்பது.

இப்படியான அரசன் வரலாறு முழுமையும் ஓர் ஆணாகவே இருந்ததன் பொறாமையேதும் நமக்கில்லை. ஆனால் அவன் அதன் வழியாக செதுக்கிக்கொண்ட ஆண் எனும் சமூக உயிரி, ஆணாதிக்கம், அதிகாரம், அரசியல், ஆட்சியெல்லை என்பவை முற்றிலும் பெண்ணினத்துக்கும் நலிந்தோர்க்கும் ஒடுக்கப்பட்டோர்க்கும் எதிராக இருந்து கொண்டேயிருக்கிறது. அடிப்படையில் இப்படியான பேரரசுகளும் பேரரசர்களும் உருவாக பெண்களின் இரக்கமும் உழைப்பும் ஆற்றலும் மிகுந்த பேராசையுடன் குடிக்கப்பட்டிருக்கிறது. அரசர்களின் மறு உற்பத்திக்கு பெண்கள் தாதிகளாக இருக்கப் பணிக்கப்படுகின்றனர். ஆதிக்கம் செலுத்துவதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர். பேரரசின் விரிவாக்கங்களுக்கு பெண்களின் ஆளுமைகளைச் சிதைப்பது என்பது ஒரு தொற்று நோயாக இருந்து கொண்டேயிருக்கிறது.

இத்தகைய பேரரசு உருவாக்கத்தாலும் அவற்றின் விரிவாக்கத்தாலும் பல வருடங்களாகத் தொடர்ந்து ஒரே வேலையைச் செய்து கொண்டிருக்கும் ஒற்றைப் படித்தான பெண்களாக நமது மூதாதைப் பெண்கள் மாற வேண்டியிருந்தது. அது குறித்த அவமானத்தையும் ஆற்றாமையையும் சுமக்க வேண்டியிருந்தது. ஓர் அரசனின் மறு உற்பத்திப் பணிக்கெனவும் பாலியல் ஆதிக்கத்தை நிரூபிக்கவும் பெண்களைத் தொடர்ந்து வழங்குவது என்பது கூட அவனது பேரரசின் அதிகாரத்தை மறு உறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஒன்றே. 1788-ல் ஆஸ்திரேலியாவுக்கு கப்பலில் நாடு கடத்தப்பட்ட முன்னூற்றுக்கும் மேலான பெண்கைதிகள் கரையிறங்கும்போது அவர்கள் அனைவரும் ஆண்களின் நுகர்வுக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்படும் விபச்சாரிகளாகவே அணுகப்பட்டனர். அவர்கள் காலிறங்கிய காலனி முழுதும் ஒரு விபச்சார விடுதியாகவே மாறியது. பெண்ணின் விருப்பத்திற்கு எதிரான பாலியல் நடவடிக்கையை இங்கே நாம் விபச்சாரம் என்றே கூறுவோம். ஏற்கெனவே நாடு கடத்தப்பட்ட பெண்கைதிகள் என்ற நிலையிலும் விபச்சாரிகள் என்ற நிலையிலும் இரண்டடுக்கு அதிகார நசிவிற்கும் இழிவிற்கும் பெண்கள் உள்ளாவதை உணர இயலும்.

இவ்வாறு பெண் என்பவள் பேரரசனின் மனைவியாக இருந்தாலும் ஒரு கடைநிலை குடிமகனின் மனைவியாக இருந்தாலும் இரண்டு எதிரெதிர் அதிகார நிலையிலிருக்கும் ஆண்களுக்குமே பெண் என்பவள் கையகப்படுத்தப்படும் ஓர் உயிர்ப்பொருள். அதன் மீது தான் மேலதிகமான உரிமை கொள்ள முடியும் தனது அதிகாரத்தைச் செலுத்த முடியும் என்பதைத் தொடர்ந்து வேறுபட்ட சமூக உறவு நிலைகளை மேற்கொண்டு அதாவது தந்தை, கணவன், அதிகாரி, தலைவன், அரசன் என அதிகார நிர்வாகத்தை எடுத்துக் கொள்கிறான். ஓர் அரசன் என்போனும் தந்தை என்போனும் ஆணே என்றாலும் இருவருமே பெண் மீது செலுத்தும் அதிகார முறைகளும் அதன் தொழில் நுட்பமும் வேறு வேறானது என்பதை நாம் புரிந்து கொள்ளும் போது தான் முழுமையான சமூக மாற்றம் சாத்தியமாகும்.

பெண்ணினத்தை மிதமிஞ்சிய அளவுக்குப் போகிக்கும் பேரரசு வர்க்கமும் அவ்வினத்தின் மீது தமது அதிகாரக் குறியீடுகளாலும் ஆதிக்கக் கருவிகளாலும் வெறுப்பையும் உமிழ்ந்து கொண்டேயிருக்கின்றது. தனது பாலியல் நுகர்வுக்கும், இச்சைக்கும் பலியாகும் பெண்ணை வேசி என்று இழிவு அடையாளம் தருவதும் செவ்வியல் பெண் பிம்பங்களை அவர்கள் வாழ்ந்த காலங்களோடு தொடர்புப்படுத்தி நோக்காது தம் குடிப் பெண்கள் மீது திணிப்பதும் அரசனின் ஆதிக்க சூழ்ச்சிகளாக இருக்கின்றன. அந்த செவ்வியல் பெண்பிம்பங்களே மிகுதியும் போலிமைகளால், அரசனின் கற்பிதங்களால் செதுக்கப்பட்டவளாயிருப்பாள்.

இலங்கைக் கவிஞர் அனாரின் 'உரித்தில்லாத காட்டின் அரசன்' எனும் கவிதை அரசனின் கவர்ச்சியான பிம்பத்தையும் அதற்கு இரையாகும் பெண்ணின் பிம்பத்தையும் எதிர் வைத்துப் பேசுகிறது.

'மலைகளுக்கப்பால்
சூரியனுக்குப் பதிலாக நீ எழுந்து
வளர்கிறாய்
பனிமூடிய முகடுகளை
விலக்கி அமர்ந்திருக்கிறாய்
கடும் பச்சை நிற, சுருண்ட தலைகளுடன்
அடர்ந்திருக்கிறது என் காதல் காடு
காட்டின் அரசனாகப் பிரகடனப்படுத்தி
ஒளிர்வுக்கிரணங்களால் நுனி வேர்வரை ஊடுருவி
தழுவிச் சிலிர்க்க வைத்து ஆட்சி செய்கிறாய்
வளைந்த பாதைகளில் நதியைப் போல இறங்கி உருள்கிறேன்
உன்னிடம் இறக்கைகள் இருக்கின்றன
எல்லா இடுக்குகளிலும்
என்னைக் கவ்விப் பறக்கிறாய்
காடு முழுவதிலும் மேய்கின்றன
நம் கவிதைகள்
உள் நுழைந்தவனின்
பிரகாசமும் பாடலும்
ரகசியப் பூட்டுக்களை திறக்கின்றன
இனி
அரசன் கீறிவிட்ட காயங்கள்
என் காடெங்கும் பூப்பெய்யும்
கமழும் அஸ்தமனம் வரை'

இக்கவிதையில் பேசும் பெண்ணின் குரல் காதலால் கவ்வப்பட்ட பெண்ணினுடையது மட்டுமன்று. தன் மீது ஆளுகை செய்யும் ஆணின் கவர்ச்சியை இயற்கை மீது ஏற்றிக்கூறும் நுட்பமும் மிக்கது. இங்கு அரசன், தன்னை அரசனாகவே பிரகடனப்படுத்திக் கொள்வதோடு அத்தகைய ஆட்சிக்கான எல்லா அம்சங்களையும் கூட தன்னகத்தே கொண்டிருக்கிறான். 'கொல்வோம் அரசனை' என்ற இக்கட்டுரைப் பயணத்தில், நாம் சிக்குண்டுள்ள அரசனின் கொடுங்கனவுகளிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்ள தொடர்ந்து முயலலாம். ஏனெனில் நமது சமகாலமும் சமவாழ்வும் கூட அரசனின் பிம்பங்களால் சூறையாடப் பட்டிருக்கின்றன. மேலும் தனது வாரிசுகளை அப்பிம்பத்தின் வார்ப்புகளாகவும் ஆக்கிக் கொள்கிறான் அந்த அரசன்.

அரியணையைச் சூடேற்றுகின்றன அவனது பிட்டங்கள். அவனது சூதாட்டங்களில் இடையறாது வெட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன நமது கனவுகள். நலிந்த, ஆதிக்கச் சுமைகளுக்குக் கீழே அழுந்திய மனிதனை மரணப்படுக்கையில் உறங்கச் சொல்கின்றன அவனது அறிக்கைகள். அவனது செங்கோல் தரும் வலி அளவிலாதது.


( நன்றி - உன்னதம் :  பெப்ரவரி 2009 )

-------------------------------------------------------------------------------------------------------------


தீபச்செல்வனின் ஆய்வுக்கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:



3.1 அனார் அறிமுகம்

------------------------------------------------------------------------------------------------

ஈழத்தின் கிழக்கில் சாய்ந்தமருது என்ற சிற்றூரைச் சேர்ந்த ஷஹீட் ஆமினா உம்மா,  . . அப்துல் றஷாக் தம்பதிகளின் மகளான கவிஞர் அனார் 15.12.1974 இல் பிறந்தவர். இயற்பெயர் திருமதி. இஸ்ஸத் ரீஹானா எம். அஸீம். இவரது கணவரின் பெயர் . எம். அஸீம். இவருக்கு எம். . அபீஃபஷீத் என்ற மகன் ஒருவர் இருக்கிறார். 1991 ஆம் ஆண்டு 'தலாக்" என்ற கவிதை மூலம் இலக்கிய உலகுகிற்கு அறிமுகமானவர்இவரது முதலாவது கவிதைத் தொகுப்பான 'ஓவியம் வரையாத தூரிகை' என்ற பிரதி 2004 (31ஜனவரி)இல் மூன்றாவது மனிதன் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டது. இரண்டாவது தொகுப்பான 'எனக்குக் கவிதை முகம்பிரதி தமிழகத்தில் உள்ள காலச்சுவடு பதிப்பகத்தால் 2007(செப்டம்பர்)இல் வெளியிடப்பட்டது. அனாரின் மூன்றாவது தொகுப்பான 'உடல் பச்சை வானம்" என்ற பிரதி விரைவில் வெளிவர உள்ளது.

பாதி நகரமாயும் பாதி கிராமமாகவும் காணப்படுகிற சாய்ந்த மருது என்ற ஊரும் கல்விப் பொதுத்தராதரசாதாரணதரம் கற்க முடியாது வீட்டுக்குள் முடங்கியபொழுது ஏற்பட்ட தனிமையையும் தன்னை கவிதை எழுதத் தூண்டியதாக அனார் சொல்லுகிறார்.  'எனது ஊர் சாய்ந்தமருது, வயலும் கடலும் சூழ்ந்த நிலம். மருத மரங்கள் நிறைந்த சாந்தமான ஊர் எனவும் குறிப்பிடலாம். நான் மிகவும் நேசிக்கும் எனது தந்தை, ஓய்வு பெற்ற மௌலவி ஆசிரியர். என்னுடைய தாய் தொழில் செய்யாவிடிலும், நிர்வாகத் திறன்மிக்க பெண் ஆளுமை. நான்கு பெண், நான்கு ஆண் பிள்ளைகளைக் கொண்ட பெரிய குடும்பத்தில், நான் மூன்றாவது பெண். இஸ்லாமியப் பாரம்பரியங்கள் வலுவாக அமைந்த குடும்பம். இலக்கியம் சார்ந்த அறிமுகங்களுடன் எவரும் இருக்கவில்லை. ஆயினும் எனது வீட்டில் இசை வளம் இருந்தது. அது அரபு மொழியுடன் இணைந்ததாக மாத்திரம் காணப்பட்டது. எனது பிரதேசத்தில் 1990 காலகட்டமானது ஆழமான மனக்காயங்களை உண்டுபண்ணிய காலங்களாகும். கலவரங்களாலும் வன்முறைகளாலும் நிரம்பிய, பீதிநிறைந்த அந்நாட்களை பெரும் சாபம் நிறைந்தது என்று தான் சொல்ல முடியும். பல துயரச் சம்பவங்களை கண்டிருக்கின்றேன். அதன் மிகக் கணிசமான அனுபவங்களோடுதான் எனது இளமையை என்னால் நினைவு கூர முடியும்.

தவிர, 1991ஆம் ஆண்டு பாடசாலைக் கல்வியை இடைநிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. அதன் பிறகுதான் எனக்குள் தனிமை கவிந்தது எனலாம். பின்னர் எல்லாமே நெருக்குதல்களாகவே தோன்றத் தொடங்கிவிட்டன. வெளியில் செல்லக் கிடைத்த ஒரே வாய்ப்பு பாடசாலை மாத்திரமே. அது பறிபோன துக்கம் இப்போதும் நெஞ்சுக்குள் பெரும் இழப்பாய் மீதமுள்ளது. இந்த நிலையில் தான் நான் எனக்குள்ளே பேசத் துவங்கினேன். வாழ்வின் காதலை, இருப்பின் வேட்கையை அவாவினேன். கவிதை அனைத்தையும் எனக்கு சாத்தியமாக்கியது. கவிதைக்குள் நான், என் விடுதலையைக் கண்டெடுத்தேன். அதன் மூலம் எனக்கான சுதந்திரத்தை அனுபவித்தேன். அன்றைய போரின் நெருக்குதல்களாலும், பீதியாலும் உள்ளார்ந்த இறுக்கங்களாலும் தன்னிரக்கம் மிக்க தனிமையாலும் ஆக்கிரமிக்கப்பட்ட காலங்களை கடந்து வந்துவிட்டேன். என் அகவெளியை கவிதை மொழிகளால் விரித்து வைத்திருக்கின்றேன். அங்கே எனக்கான உலகம் எல்லாவித சாத்தியங்களாலும் ஆக்கப்பட்டிருக்கின்றது. இன்றைய என்னுடைய நாள் இவற்றிலிருந்தெல்லாம் வேறுபட்டும் அத்தகைய சூழல்களிருந்து பெரிதும் மாறுபட்டும் போய்விட்டது. அதை முழுக்கச் சாத்தியப்படுத்தியவர் எனது கணவராகும். இப்போது நான் வெறுமனே தனிமையை இயலாமையைக் கட்டியழும் பெண்ணுமல்ல' 1 என்று வாசுகியுடனான நேர்காணலில் குறிப்பிடுகிறார்.

மறுக்கப்பட்டவற்றைத் தனது கவிதைகளால் கண்டடைந்ததாகச் சொல்லுகிற அனார் அஸீமைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டபோது கிடைத்த வாழ்வு விடுதலையும் மகிழ்ச்சியும் பொருந்தியதாக நிறைவுடன் பகிருகிறார். அஸீமுடனான காதல் வாழ்வு என்பனவும் அதற்கு முன்பிருந்த அனாரின் வாழ்வுச் சூழலும் சமூகத்தின் நிலவரங்களும் அனாரின் கவிதைகளுக்கான மொழியையும் அனுபவத்தையும் படிமங்களையும் கொடுத்திருக்கிறது. இது பற்றி அனார் சொல்லுகிறபோது 'வேறு யாரையும் சொல்வதைவிட என்னுடைய கணவரைத்தான் சொல்ல முடியும். என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பை தானே அச்சாக்கம் செய்து நூலாவதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்தவர் அவர் தான். அவர் எனக்கு அந்தளவுக்கு உறுதுணையாய் இருக்கிறார். நான் எழுதுவது மாத்திரம்தான்  அதை கம்பியூட்டரில் டைப்செய்வதோ மெயில் செய்வதோ அவர்தான். அது மட்டுமல்ல என் கவிதையின்  முதல் ரசிகர். அவர் அதை சந்தோசமாக ஒரு குழந்தையைப் பார்ப்பது போல்தான் பார்ப்பார். எனக்குக் கிடைக்கிற சந்தோசத்தை விட அவருக்கு அதில் சந்தோசம் அதிகம். என்னை யாராவது பாராட்டினால் இன்னும் பலமடங்கு சந்தோசமடைவார். அவர் என்னை மிகவும் விரும்புகிறார். அதுதான் எல்லாவற்றுக்கும் காரணமென்று நினைக்கிறேன். எனக்காகத் தன்னைப் பூரணமாக அர்ப்பணித்த ஒரு தோழமைமிக்க துணை அவர்' 2 என்று நிறைவுடன் குறிப்பிடுகிறார்.

அனார் தீட்டும் அரசியல் நுண்தன்மையுடையது என்று 'எனக்குக் கவிதை முகம்' சேரன் குறிப்பிட்டுகிற சேரன் ' உள்ளடங்கி இருந்தாலும் அனாருடைய கவிதைகள் தீட்டும் அரசியல் சித்திரம் மிகவும் முக்கியமானது' 3 என்று கூறுகிறார். அனாரின் கவிதைகளில் அரசியலும் யுத்தம் பற்றிய அவலம் நிரம்யிய குரலும் வெளிப்படும் 'இரத்தம் பற்றிய மேலும் சில குறிப்புக்கள்' என்ற கவிதை மிக முக்கியமானது. இது குறித்து கருணாகரன் குறிப்பிடுகிறபோது 'அக்கவிதையில் நிசப்தமாய் விசும்பிக்கொண்டிருக்கிற பெண்மையின் சுவடுகள் வன்முறைக்கெதிரான வலிமையான பிரதியியல் நடவடிக்கைகளாகும். ஈழத்திலிருந்து வன்முறை-வலி தொடர்பில் பெண்களால் எழுதப் பட்டவற்றுள் மிகவும் சிறந்த கவிதைப் பிரதி அதுவெனலாம்' 4 என்று எழுதுகிறார். யுத்தம் குறித்து எழுதுவதிலிருந்து விலத்தி நின்று ஏன் காதல் கவிதைகளை அதிகம் எழுதுவதாக அய்யப்பமாதவனின் கேள்விக்கு 'எனக்கென்னவோ அதை உடனடியாகக் கவிதையாக்க முடிவதில்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு யுத்தம் ரணமாயிருக்கிறது எழுத முடியாதளவுக்கு வலியாயிருக்கிறது. அதை உடனுக்குடன் எழுதக்கூடிய மனநிலை இல்லாததால் தான் அதை எழுதாமல் இருக்கிறேன். இருந்தாலும் யுத்தம் பற்றிய பெண்ணுடைய பார்வையாக வெளிப்பட்ட 'மேலும் சில இரத்தக் குறிப்புகள்' போன்று ஒரு சில கவிதைகள் எழுதி இருக்கிறேன்' 5 என்று அனார்; பதிலளிக்கிறார்.


அனாரின் கவிதைகளின் பலம் அல்லது பெறுமானம் என்பது அவர் பாலியல் அல்லது பெண்மனத் தவிப்புகளை அதிகம் எழுதியிருப்பதுதான். முஸ்லீம் சமூகத்தில் இப்படி எழுதுகிறபோது அது அதிகம் கலாசாரப் பிரச்சினைகளை உண்டு பண்ணுகிற விடயமாகும். இது குறித்து ஓட்டமாவடி அறபாத் எழுதுகிறபோது 'ஓர் இஸ்லாமியப்பெண் இது குறித்து எழுதலாமா என்ற  முட்டையில் மயிர் பிடுங்கும் விமர்சனப் பெருமக்களின் ஐயங்களுக்கு புனித குர்ஆனும் நபிகளாரின் வாழ்வியலும் பெண்ணின் மாதாந்த உதிரம் குறித்து வெளிப்படையாகப் பேசி ஒரு மருத்துவத்தெளிவை வழங்கியிருப்பதை படித்துப்பார்க்க வேண்டும்' 6 என்று குறிப்பிட்டுள்ளார். அனாரும் இந்த விடயம் குறித்து பேசுகையில் 'கட்டுப்பாடுகளுடைய சமூகத்திலிருந்து கொண்டு இப்படிக் காதலை பெண்கள் தங்களுக்குள்ளாகவே இருக்க வேண்டியதாக எண்ணிக் கொண்டிருக்கும்  மாதவிலக்கைப் பற்றியெல்லாம்  பேசுவது பிறருக்கு எப்படி உவப்பானதாக இருக்கும்? ஆணினுடைய விளைவுபற்றிப் பேசுவதும் காதலைக் கொண்டாடுவதும் என் 'பெண்' அடையாளத்தைப் பெருமைப்படுத்துவது எல்லாம் விமர்சனத்துக்கு வந்தன' 7 என்று கூறுகிறார்.

இவரது எழுத்துக்களுக்கு பல்வேறு விருதுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. 1999 இல் இளைஞர் சேவைகள் மன்றமும், இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சும் இணைந்து நடாத்திய அகில இலங்கை ரீதியான கவிதைப் போட்டியில் இவரது கவிதை அகில இலங்கை ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் முதலாவது இடத்தை பெற்றதற்காக இவருக்கு ஜனாதிபதி விருதும் பாராட்டும் கிடைத்திருக்கிறது. 2002இல் முஸ்லீம் காலாசார அமைச்சின் அனுசரனையோடு நடத்தப்பட்ட உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் வைத்து இவருக்கு இளம் படைப்பாளிக்கான விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

2004இல் வெளிவந்த 'ஓவியம் வரையாத தூரிகை| என்ற கவிதைத் தொகுதி, இலங்கை அரசின் சாஹித்திய மண்டலப் பரிசினைப் பெற்றதுடன் 2005இல் வடக்கு - கிழக்கு மாகாண சபையும் அத்தொகுதியை சிறந்த நூலாகத் தேர்வு செய்திருந்தது இலக்கிய விருது வழங்கி இவரைக் கௌரவித்தது. கொழும்பு கம்பன் கழகம் நடாத்திய கவிக்கோ அப்துல்ரஃமான் அறக்கட்டளை   'மகரந்தச் சிறகு 2007' விருதுக்கான  கவிதைத் தேர்வில் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக இவருக்கு 2007ஆம் ஆண்டுக்கான 'மகரந்தச் சிறகு' விருதும் கௌரவமும் கிடைக்கப்பெற்றது. இலங்கையில் கவிதைத்துறையில் முதன் முதலில் அரச சாஹித்திய மண்டலப்பரிசு பெற்றுக்கொண்ட முஸ்லீம் பெண் கவிஞர் என்ற பெருமையை அனார் பெற்றிருக்கிறார்.

2008 இல் ஒரிஸா (இந்தியா) மாநில அரசினால் நடத்தப்பட்ட 'சார்க்| அமைப்பு நாடுகளைச் சேர்ந்த இளங் கவிஞர் மாநாட்டில் இலங்கையின் தமிழ்க் கவிஞர் சார்பில் இவர் மட்டுமே கலந்து கொண்டிருந்தார். அந்த அனுபவம் குறித்து பேசுகையில் 'மிகச் சிறந்த திட்டமிடல்களுடன் ஒவ்வொரு நாளையும் புதிய அனுபவங்களாக்கி இருந்தார்கள். இயற்கை அழகுகள் மாறாத ஒரிசா கலைஞர்களுக்கும் கலை வெளிப்பாட்டிற்கும் பொருத்தமான அற்புதமான இடமாகும். வீடுகளைவிட கோயில்களும் சிற்பங்களும் அங்கு நிறைந்திருந்தன. மிகப் பிரசித்திபெற்ற பிரம்மாண்டமான சூரியக் கோயில் 'கோணெக்' எனும் இடத்தில் இருக்கின்றது. அதனுள் அமைக்கப்பட்ட கருங்கற் சிற்பங்களை பெரும் மலைப்புடன் பார்த்தேன். அந்த உவகையான சிலிர்ப்பான கணங்கள் அபூர்வமானது. மேலும்,  'கட்டக்' எனும் இடத்தில் அமைந்துள்ள  மிகப் பழமையான 'ரவின்சா' பல்கலைக் கழகத்துக்கும் அழைத்துச் செல்லப்பட்டோம். அம்மாணவர்கள் முன்னிலையில் கவிதைகள் வாசித்தோம், கலந்துரையாடினோம். சுமார் 65 கவிஞர்கள் ஒன்று கூடியிருந்த இவ்விழாவில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிருந்தும் பல மொழிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் கவிஞர்கள் கலந்து கொண்டார்கள். ஏனைய நாடுகளில் இருந்து அழைக்கப்பட்ட 23 கவிஞர்கள் அடங்கலாக.' 8 என்று அந்த அனுபவத்தை அனார் பகிர்ந்து கொள்ளுகிறார்.

அனார் எழுதிய 'வன்மப்படுதல்| என்ற கவிதை இலங்கை அரசின் பாடத்திட்டத்தில் கல்விப்பொதுப்பத்திர சாதாரணதரம் - பதினொராம் ஆண்டு தமிழ் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அனாரின் கவிதைகள் பல்வேறு கவிதைத் தொகுதிகளிலும் இடம்பெற்றுள்ளன. 2006இல் வெளிவந்த 'இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துக் கவிதைகள்' என்ற பூபாலசிங்கம் புத்தகசாலையால் வெளியிடப்பட்ட தொகுப்பிலும்  2007 ஆம் ஆண்டில் வெளிவந்த 'பெயல் மணக்கும் பொழுது - ஈழத்து பெண் கவிஞர்கள்' என்ற மாற்று பதிப்பகம் வெளியிட்ட தொகுப்பிலும் 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த ஊடறு வெளியீடாக வந்த 'மை' தொகுப்பிலும் இவரின் கவிதைகள் இடம்பெறுகின்றன.

அனாரின் கவிதைகள் ஈழத்து - இலங்கை இதழ்கள் பத்திரிகைகளிலும் தமிழகத்து இதழ்களிலும் புலம்பெயர் இதழ்களிலும் இணையத்தளத்திலும் வெளியாகியுள்ளன. மூன்றாவது மனிதன் எக்ஸில் அமுது ஊடறு பெண்கள் சந்திப்புமலர் விபவி தினகரன் நிலம் யாத்ரா பெண் உயிரெழுத்து வீரகேசரி சரிநிகர் மறுகா உயிர்மை பிரவாகம் தலித் குங்குமம் ஊடறு காலச்சுவடு வைகறை உலகத் தமிழ் போன்ற பத்திரிகைகள் இதழ்கள் தனது கவிதைகளை வெளியிட்டுள்ளதாக அனார் நன்றி தெரிவித்திருக்கிறார்.

4.0 அனார் கவிதைகளின் உள்ளடக்கம் மற்றும் வெளிப்பாடு

அனாரின் கவிதைகள் தருகிற அனுபவங்கள் ஈழக்கவிதைகளில் மிகுந்த கனதியை ஏற்படுத்துகின்றன. அனாரின் கவிதைகள் தனிமையையும், காதலையும், வேட்கையையும் பாடுகின்றன. இவர் மனத்தின் முரண்பாடுகளையும் ஊடல்களையும் பாடுகிறார். பெண் பற்றிய பிரகடனங்களையும் பலத்தையும் உன்னதமாக வெளிப்படுத்துகிறார். தன்னை முழுக்க முழுக்க கொண்டாடுகிற அனாரின் கவிதைகள் வசீகரமான மொழியில் ஆழ்ந்த உணர்வுகளை சொல்லுகின்றன. அனாரின் கவிதைகள் நுண் அரசியலை உள்ளிருத்தி வைத்திருக்கின்றன. இந்த அலகில் எனது ஆய்வுக்குரிய கவிஞர்களில் ஒருவரான அனாரின் கவிதைகளின் உள்ளடக்கமும் கவிதை வெளிப்படுத்தல் முறையும் ஆராயப்படவிருக்கிறது.

4.1 அனார் கவிதைகள்

தனது வலியையும் மற்றவர்களின்; வலியையும் ஒன்றாக இணைத்து கவிஞர்கள் கவிதை பாடுகிறபோது அது முழுமையாக சமூகத்தின் வலியாக வெளிவருகிறது. அனாரின் கவிதைகள் முழுக்க முழுக்க தன் வலிகளால் சமூகத்தின் வலியைக் காண்பிக்கிறது. ஒரு பெண் எதிர்கொள்ளும் வலியையும் வாழ்வையும் கொண்டாட்டங்களையும் கொண்டிருக்கிறது. அனுபவச் செறிவு கொண்ட அனாரின் கவிதைகள் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. அனாரின் முதலாவது கவிதைத் தொகுப்பான 'ஓவியம் வரையாத தூரிகை' என்ற தொகுப்பு முதல் நிலை அனுபவங்களுடனும் முதல் நிலை மொழியுடனும் வந்திருக்க இரண்டாவதாக வந்திருக்கிற 'எனக்குக் கவிதை முகம்' தொகுப்பு மிகுந்த செறிவும் செழுமையும் கனதியும் கொண்டிருக்கிறது.

4.2 சிறுவயதின் தனிமை

அனாரின் 'ஓவியம் வரையாத தூரிகை' என்ற கவிதைத் தொகுப்பு ஒரு சிறுமியின் தனிமையைப்போல மிக அமைதியாக இருக்கிறது. சிறிய வயதில் கல்விப்பொதுத்தர சாhரண தரம் படிக்க முடியாது வீட்டுக்குள் முடங்கிய பொழுது கவிதைகளைத் துணைக்கழைத்த அனார் அன்றைய நாட்களின் தன் தனிமையையும் எரிச்சலையும் கவிதைகளில் பாடியிருக்கிறார். அந்த வயதில் அவரது கல்வி கற்கிற உரிமை மறுக்கப்பட்டது என்பது மிகக்கொடிய மீறலாகிறபோது அதை அவர் உணர்ந்து கொள்ளுகிறார். 'பெண்' பற்றியதும் 'சிறுமி' பற்றியதும் தான் வாழுகிற சமூகம் பற்றியதுமான போக்குகளும் நிபந்தனைகளும் தண்டனைகளும் அனாருக்கு  கவிதைகளையும் எழுச்சி உணர்வுகளையும் வழங்கியிருக்கின்றன. இந்தத் துடிப்பும் அந்தரிப்பும் ஏக்கமுமே அனாரின் தொடக்ககால கவிதைகளில் வெளிப்பட்டிருக்கின்றன.


'வனாந்தரத்து
விருட்சமொன்றில் குந்தி
வீரிட்டுப் பாடும்
தனித்த பறவையின்
பாட்டினில் கசியும் என் உணர்வு

வேர்களில் எடுத்த வலி
வண்டுகளோடு குலாவும்
பூக்களுக்குப் புரிவதில்லை
...
பொளர்ணமியைத்
தொலைத்து விட்டு
ஒற்றைச் சிறகும் தேய
நீந்தித் தேடுமொரு
தேய் பிறை நான்' 1


என்ற இந்தக் கவிதையின் வாயிலாக நெருப்பெரிந்துகொண்டிருக்கிற தனது தனிமையையும் அதை யாரும் புரிந்துகொள்ளாத அவலத்தையும் அதனால் விளைந்த தனது நிர்க்கதியையும் அனார் பாடுகிறார். இந்தத் தனிமை அவரின் பல கவிதைகளில் வெளிப்பட்டு நிற்கின்றன.


'...
கிழிசலாகிக் கிடக்கிற
ஆத்மாவை
குரூரமாய் தைக்கும்
என் ரத்த பந்தங்களின்
பிடிவாதப் பிடியில்
அவதிப்பட்டும்
சுயநலமாய்
தகனமிடப்பட்ட என்
நெடுங்காலச் சொப்பனத்தின்
உஷ்ணச் சூட்டினால்
உருகி உருகியும்
மனசு உயிர் வாழ்கிறது

என் உலகமே
துயர்களைத் தாங்கிய
பாலை வனம்
வாழத் துடிக்கும் நானோ
விடியலை விழுங்கிய
மலட்டு இரவு போல்
மௌனமாய்
மல்லுக்கட்டுகிறேன்' 2


இப்படி வெளிப்படுகிற அனாரின் துயர் மிகுந்த குரல் ஒரு கட்டத்தில் தீரம் பெறுகிறது. அவர் இழந்த உரிமைகளும், உலகம் பற்றி அவரிடமிருந்த கேள்விகளுமே அவரது முழுக் கவிதைகளையும் பிற்காலத்தில் நிகழ்த்துகின்றன. அவை பலத்தையும், கம்பீரத்தையும் கொடுக்கின்றன. ஒரு பெண்ணாய் சமூகத்திலிருந்த கட்டுப்பாடுகளையும் நிர்பந்தங்களையும் அவர் நுட்பமாக அறிந்துகொள்ளுகிறார். மீறமுடியாத அவரது வாழ்வுச் சூழல் மதக் கலாசாரங்களாலும் சமூகத்தின் பார்வைகளாலும் மிகவும் இறுக்கமாக இருக்கிறது. அதிகமதிகம் மீறல்கள் அங்கு நடக்கின்றன., அவை மறைக்கப்பட்டிருக்கின்றன என்ற அதிர்ச்சிகளை அனாரின் ஒரு சிறுமியின் உணர்வு சார்ந்த குமுறல்கள் கொண்ட கவிதைகள் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன.

4.3 இயற்கையைப் பாடுகிற பரவச நிலை

அனாரின் கவிதைகள் இயற்கையையே எப்பொழுதும் நாடிச் செல்லுகின்றன. பாறைகளிலும் மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் காற்றிலும் ஒளியிலும் மழையிலும் மனதைக் கொண்டு செல்லுகின்றன. இவருக்கு மிகுந்த வசமாகப் பாட வாய்த்த விடயங்களில் இயற்கையைப் பாடுகிற பாங்கு முக்கியமானதாயிருக்கிறது. 'எனக்குக் கவிதை முகம்' தொகுப்பிலுள்ள கவிதைகள் அநேகமானவை இயற்கையைப் பாடுகின்றன. எல்லையற்ற அண்ட வெளிகளில் சிறகுகளைப் பூட்டிப் பறந்து திரிகிறவராகத் தன்னைப் பாடுகிறார். தன்னையும் தனது தனிமைiயும் தன் துணையையும் தனது கவிதைகளையும் இயற்கை வெளியில் அவர் அழைத்துச் செல்லுகிறார். 'மின்னலைப் பரிசளிக்கும் மழை' என்ற இந்தக் கவிதை தருகிற அனுபவம் மிகுந்த இன்பம் கொண்டிருக்கிறது.


'...
ஓயாத பரவசமாய்
கோடை மழை
பின் அடை மழை
அளவீடுகளின்றித் திறந்து கிடக்கும் இடங்கள் எங்கிலும்
பித்துப் பிடித்து பாட்டம் பாட்டமாய்
மழை திட்டங்களுடன் வருகின்றது
ஒவ்வொரு சொல்லாகப் பெய்கின்றது
தாளமுடியாத ஓர் கணத்தில் எனக்கு
மின்னல்களை பரிசளிக்கின்றது
அது அதன் மீதே காதல்கொண்டிருக்கிறது
...' 3


மின்னல் அச்சம் தருவதாகவும் அதற்கு மனிதர்களும் அஞ்சிக் காதுகளைப் பொத்துவதாகவும் அறிந்த சமூகத்தில் மழை தனக்கு மின்னலைப் பரிசளிப்பதாக அனார் ரசிக்கிறார். இந்த பரவச நிலை என்பது இயற்கை பற்றிய தீவிரமான அனுபவத்தையும் ஈடுபாட்டையும் கொண்டிருக்கிறது. இயற்கையின் மற்றொரு சக்தியான காற்றை அனார் இப்படிப் பாடுகிறார்


'காற்றைத் தின்ன விடுகிறேன்
என்னை
என் கண்களை
குளிர்ந்த அதன் கன்னங்களை வருடினேன்
...
காற்றினுளிருந்து எடுத்த முத்தங்கள்
வெள்ளமாய் பெருக்கெடுத்திருக்கின்றன
காற்றிலிருந்து நீளும் நீர் விரல்கள்
முன்னறியாத ராகங்களை
இசைக்கிறதென் சதைகளில்
என் வீடு காற்றாக மாறிவி;ட்டது
...
உடல் பச்சை வானம்
முகம் நீல இரவு
நான் பார்த்தேன் காற்றின் பிரகாசத்தை
ஒரு மின்வெட்டுப் பொழுதில்' 4


காற்றுப் பற்றிய பாரதியின் கவிதை தருகிற ஆனந்தம் மாதிரி, அனார் காற்றை இன்னொரு வகையில் அனுபவிக்கிறார். காற்று அநேகமாக எல்லோருடைய கவிதைகளிலும் வருகின்றது. அது வெறும் காற்றாகவே வந்து செல்கிறது. அனாரின் கவிதையில் காற்றின் கன்னங்களை வருடுவதாகவும் அது முத்தங்களைப் பெருகச்செய்வதாகவும் மின்னலின் வெட்டு காற்றின் பிரகாசம் என்பதும் தமிழ்க் கவிதைக்கு புதிய அனுபவங்களாக இருக்கின்றன.

அடுத்து பருவ காலங்களைச் சூடித் திரிகிற கடற் கன்னி பற்றிய கவிதை அனாரின் இயற்கை மீது கொண்ட ஈடுபாட்டையும் இயற்கையைப் பெண்ணாகக் கொள்கிற அவரது மனதையையும் உணர முடிகிறது. கடலில் கடற்கன்னியின் பாடல் ஒலிப்பதாகவும் அவளின் வாசனை மாலுமிகளின் அறைகளில் வியாபிப்பதாகவும் சொல்லுகிறார். கடற்கன்னியின் அழகையையும் சக்தியையும் அபூர்வத்தையும் தொன்ம நிலையையும் பரவசமாக கொண்டு மனதில் கடற் கன்னியை உலவ விடுகிறார்.


'...
அபரிமிதமான ஆற்றலோடு தொடங்கும் பாடல்
இருகரைகளில் எதிரொலித்து
துறைமுகங்களைத் தாண்டி விழுவதை
அதிகாலை உறக்கம் கலைந்த படகோட்டி
மதுநெடியுடன் பிதற்றுகிறான்
கடற்கன்னியின் சொற்கள்
குறையாமல் விளைந்த வண்ணமிருக்கின்றன
...
தந்திரோபாயங்களைத் தோற்கடித்தபடியே
பருவ காலங்களை அருளும் கடற்கன்னி
ஒவ்வொரு கடலினிலும் நீந்திக்கொண்டே இருக்கிறாள்
பெருகும் தன் ஆற்றலின் பிரவாகத்தைப் பாடியபடி'  5




பெண்ணின் அபூர்வத்தையும் தந்திரங்களைத் தோற்கடிக்கும் ஆற்றலையும் இயற்கையை அருளும் வல்லமையையும் அனார் பாடுகிறார். இந்தக் கவிதையில் பரவிக்கிடக்கிற கடல் பற்றிய காட்சிகளும் சித்திரிப்புகளும் தருகிற உணர்வும் சித்திரமும் மிகுந்த ஆழமும் அழகும் கொண்டிருக்கிறது.


4.4 உடலையும் உணர்வையும் தன்னையும் கொண்டாடுகிற மனம்

நான் 'பெண்' என்கிற தன்னை முன்னிறுத்துகிற மனோநிலையும் தனதுடலையும் பாலுணர்வையும் காதலையும் வேட்கையையும் கொண்டாடுகிற அனாரின் கவிதைகள் இந்தத்தொகுப்பில் முக்கியம் பெறுகின்றன. தன்னை அனார் அடையாளபூர்வமாகவும் வெளிப்படையாகவும் இப்படியான கவிதைகளில் பிரகடனம் செய்கிறார். பெண் உடல் குறித்து பெண் பேசுவது மறுக்கப்பட்ட உலகத்தில் அனார் தன் உணர்வுகளை முழுமையாகப் பேசுகிறார். தன் உடலைக் கொண்டாடுகிறார். இது பற்றி சேரன் குறிப்பிடுகிறபோது '...திருப்பித் திருப்பிப் படிக்கிறபோது வேட்கைiயும் காதலும் மேலெழுகின்றன. தனிமையும் காத்திருப்பும் எரித்தாலும் ஊடல் சுடர் விடுகிறது...' 6 என்கிறார்.




'...
தளர்வான இரவு ஆடையை
அணிந்து கொண்டேன்
விசமேறிய இரவின் பானம்
என் தாகத்தின் முன் உள்ளது
ருசிகள் ஊறிய கனவுகளுடன்
என் உறக்கம்
அறைக்கு வெளியே அலைகிறது'  7


என்று தனது தாக நிலையினைப் பாடுகிறார். இரவு காதலையும் தாகங்களையும் சலிப்பையும் வேட்கையையும் கொண்டது. முரண்பாடுகளையும் ஊடல்களைக் கொண்டது. இயல்பான நெருக்கத்தையும் வேட்கை நிலைகளையும் பாலுணர்வையும் அனார் பாடுகிறார்.


'...
அருவியின் மடியில்
அபூர்வ ராகங்களுடன் புதைந்து போயுள்ள
(எவராலும் பூரணமாக இசைக்க முடியாமற்போன)
இசைக்கருவியை மூழ்கி எடு
பொக்கிசங்களே உடலாகி
நர்த்தனம் பெருங்குகை வாயிலில் ஏற்றப்படாத சுடரை
ஒளிர விடு
மேகங்களுக்கு மேலேறிச் சென்று
நிலவின் கதவைத் திறந்து
எடுத்துக் கொள்
கொஞ்சமும் குறையாத என்னை' 8


என்றும் உடலின் வேட்கை நிலையினை வெளிப்படுத்துகிறார். பாலுணர்வு சார்ந்த உணர்வெழுச்சி நிலைகளை எழுதுவது என்பது அனாரிற்கு மிகுந்த நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மத கலாசார விதிகள் இதற்கு தடைவிதிப்பதாயுள்ளன. ஆனால் அப்படியொரு சமூகத்தில் இருந்துகொண்டு, தன் பெண்மன ஏக்கங்களைச் சித்திரிப்பது அனாரின் கவிதைகளின் பலமாக உணரமுடிகிறது. இயற்கையுடன் தொடர்புபடுகிற பல கவிதைகளும் உடலை இயற்கையுடன் ஒப்பித்து கொண்டாடி மகிழ்ச்சி கொள்ளுகின்றன.

4.5 பெண் பற்றிய பிரகடனம்


நான் பெண் என்ற வலிமை கொண்ட பிரகடனங்களும் தனததிகாரத்தை வெளிப்படுத்துகிற குரலும் பூமி முதலிய இயற்கை, தான் என்ற வெளிப்பாடுகளும் மிகுந்த கனதியுடன் கவிதைகளில் வெளிப்படுகின்றன. தனது அடையாளத்தை முழுமைப்படுத்தும் இந்தக் கவிதைகள் சமூகத்தின் எழுச்சி நிலையையும் புரிதலையும் கோரி நிற்கின்றன.


'உன் கனவுகளில்
நீ காண விரும்புகின்றபடியே
நான் அரசி
அயல் நாட்டு மகாராஜாக்களின் அரியணைக்கு
சவால் விடும் பேரரசி
...
கைகளிரண்டையும்
மேலுயர்த்திக் கூவுகின்றேன்
நான்
நான் விரும்புகின்றபடியான பெண்
நான் எனக்குள் வசிக்கும் அரசி '  9


தனக்குள் ஒரு அரசி வசிப்பதாகவும் அப்படியே உணருவதாகவும் சொல்கிற அனார் சுயபலம் பொருந்திய தேவதைகள் விடுதலை பெற்றதாய் கொண்டாடுகிறார்கள் என்று மகிழ்ச்சி கொள்ளுகிறார். இதே மனநிலையுடன் 'பருவகாலங்களைச் சூடித் திரியும் கடற்கன்னி' என்ற கவிதையும் வெளிப்படுகிறது. கடற்கன்னி என்ற அபரீதமான இயற்கையை, அழகை தனக்குள் உள்ளெடுத்து சித்திரிக்கிறார்.


'... நள்ளிரவில் கடற்கன்னி
மேகங்களை வேட்டையாடுகிறாள்
அவற்றை வழுக்கும் பவளப்பாறைகளிடையே பதுக்கி வைத்து
ஜெலி மீன்களை ஏமாற்றுகிறாள்
...' 10


இந்தக் கவிதை எங்கும் அவளை வலிமையுள்ளவளாகவும் அபூர்வமானவளாகவும் எழுதுகிறார். அதன் மூலம் 'தான்' எனப்படுகிற பெண்ணை அவர் மிகவும் உன்னதமாக்குகிறார். 'எனக்குக் கவிதை முகம்' என்ற கவிதையில்


'...
எனக்குத் தெரியும்
அவன் வாள் உறைக்குள்
கனவை நிரப்புவது எப்படியென்று
எனக்குத் தெரியும்
மகத்துவம் மிகுந்த இசை
தீர்வதேயில்லை
நான் பாடல்
எனக்குக் கவிதை முகம்' 11


வாள் உறைக்குள் கனவை நிரப்புவேன் என்ற வலிமையும் நம்பிக்கையும் வெளிப்பட்டு நிற்கின்றன. மகத்துவம் நிறைந்த இசை தீர்வதில்லை என்றும் கூறுகிறார். வாழ்வின் ருசிகளை உன்னதமாக்குகிற வலிமை இருப்பதாக இந்தக் கவிதை உணர்த்துகின்றன. 'நான் பெண்' என்ற கவிதை அனார் குறித்து தருகிற செய்தியும் அனுபவமும் மிகுந்த முக்கியம் பெறுகிறது. தன்னையும் பொதுவாக பெண்னையும் அவர் பிரகடனம் செய்கிறார்.


'ஒரு காட்டாறு
ஒரு பேரருவி
ஓர் ஆழக் கடல்
ஓர் அடைமழை
நீர் நான்
கரும்பாறை மலை
பசும்வயல்வெளி
ஒரு விதை
ஒரு காடு
நிலம் நான்
உடல் காலம்
உள்ளம் காற்று
கண்கள் நெருப்பு
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான் பெண்'  12


இந்தக் கவிதை இந்த உலகம் முழுவற்றையும் பெண் உற்பத்தி செய்திருப்பதையும் ஆழ்வதையும் இயக்குவதையும் சொல்கிறது. பெண் குறித்து அனார் கொண்டிருக்கிற வலிமை என்பது முழு உலகத்திற்கும் மேலானது என்றே தோன்றுகிறது. உடல் காலம் என்றும் உள்ளம் காற்று என்றும் கண்கள் நெருப்பு என்றும் அவர் சொல்கிறார். இப்படி சொல்வது அனாரின் சக்தியை வெளிப்படுத்துகிறது.

4.6 ஆண் எதிர்ப்பு


ஆண்மனோபாவங்களை எதிர்க்கிற கவிதைகளும் அனாரிடத்தில் வெளிப்பட்டுள்ளன. 'ஓவியம் வரையாத தூரிகை' தொகுப்பில் இந்த எதிர்ப்புக் கவிதைகள் அதிகம் இருக்கின்றன. ஆனால் இந்த எதிர்ப்புணர்வு சார்ந்த கவிதைகள், எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் முற்பகுதியில் எழுதப்பட்ட பெண் கவிஞர்களின் கவிதைகளிலிருந்தும் பலவீனமானவையாக இருக்கின்றன. 'எனக்குக் கவிதை முகம்' தொகுப்பில் உள்ள கவிதைகள் மிகுந்த செறிவுடன் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக 'ஓவியம் வரையாத தூரிகை' தொகுப்பில் உள்ள


'...
உனக்குப் பொழுது போக்காகவும்
எனக்குப் போராட்டமாகவும்
போய்விட்டது
என் வாழ்க்கை
நீ கனவு காண்பதற்காக
என் கண்களை பறித்தாய்
நீ உலவி மகிழ்வதற்காக
என் கால்களை தடுத்தாய்
...'  13


என்ற கவிதை செறிவும் செழுமையும் குறைந்த நிலையில் தனது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகிறது. ஆனால் இந்தத் தொகுப்பில் சில கனதியான கவிதைகளும் இருக்கின்றன.

நல்ல கவிதைகளுக்கான அருந்தல்களும் சில நல்ல கவிதைகளும் 'ஓவியம் வரையாத தூரிகை' தொகுப்பில் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக 'யாருக்கும் கேட்பதேயில்லை' 'தாமரைக்குளத்து காதலி' 'சிசுவதை' 'ஓவியம்' 'ஊமைக்காவியம்' 'மலட்டுச் சித்திரங்கள்' போன்றவற்றைக் குறிப்பிடலாம். 'எனக்குக் கவிதை முகம்' தொகுப்பில் உள்ள கவிதைகள் ஆண் மனோபாவத்தை எதிர்க்கிற நிலையையும் வெறுப்பையும் பின்னர் ஊடலையும் வேட்கையையும் இணைத்துப் பேசுகிறது. முரண்பாடுகளும் நெருக்கமும் காதலும் வேட்கையும் அழுத்தமும் நிறைந்ததே உன்மையான வாழ்வு என்பதை அனாரின் இந்த மனவெளிக் கவிதைகள் சித்திரிக்கின்றன. பெண்பலி என்ற கவிதையில்


'அது போர்க்களம்
வசதியான பரிசோதனைக் கூடம்
வற்றாத களஞ்சியம்
நிரந்தர சிறைச்சாலை
அது பலிபீடம்
அது பெண் உடல்
உள்ளக் குமுறல்
உயிர்த்துடிப்பு
இருபாலாருக்கும் ஒரே விதமானது
எனினும் பெண் என்பதனாலேயே
எந்த மரியாதையும் இருப்பதில்லை அதற்கு
என் முன்தான் நிகழ்கின்றது
என்மீதான கொலை'  14


என்ற கவிதை பெண்ணை பலியிடுகிற சூழலைப் பேசுகிறது. அகத்திலும் புறத்திலும் நிகழ்கிற யுத்த களத்தையும் அங்கு எந்த மரியாதையுமின்றி பலி நிகழ்கிறது என்று அதிர்ச்சி தருகிற விதமாக கவிதை அமைந்திருக்கிறது. மன அழிவையும் புற அழிவையும் சொல்லுகிற இந்தக் கவிதை மிகுந்த கவனத்திற்குரியது.

'...
நான் கற்பனை செய்கிறேன்
இத் தருணங்களில்
உன் இதமான நெருக்கத்தை
பருகாது ஆறிய தேநீரிடம்
நாம் பகிர்ந்துகொள்ளாத
இம்மாலைப்பொழுது தோல்வியைத் தழுவுகின்றது' 15


என்று வருகிற 'பகிர்ந்து கொள்ளாத மாலை' கவிதை மண் வாசைன நிரம்பிய கிராமத்தில் பகிர்ந்து கொள்ளாது போன நெருக்கத்தையும் மாலைப் பொழுதைப் பற்றியும் நினைவு கொள்ளுகிறது. 'உரித்தில்லாத காட்டின் அரசன்' என்ற கவிதையில்


'...
காட்டின் அரசனாகப் பிரகடனப்படுத்தி
ஒளிர்வுக் கிரணங்களால்
நுனி வேர்வரை ஊடுருவி
தழுவிச் சிலிர்க்க வைத்து ஆட்சி செய்கிறாய்
...
உள் நுழைந்தவனின்
பிரகாசமும் பாடலும்
ரகசியப் பூட்டுக்களை
வெதுவெதுப்புடன் திறக்கின்றன
இனி
அரசன் கீறிவிட்ட காயங்கள்
என் காடெங்கும் பூப்பெய்யும்
கமழும் அஸ்தமனம் வரை' 16


என்று ஆணாதிக்கப் போக்கை இங்கு நடத்தப்படுகிற உரித்தில்லாதவனது ஆட்சியால், நடவடிக்கையால் தான் எதிர்கொள்ளுகிற மனத்துயர்களை பாடுகிறார். விலகிக்கொள்வதற்கு தயாராக இருக்கிற பெண்ணை இப்படி அனார் 'விலகி நிற்பவன்' என்ற கவிதையில் காட்டுகிறார்.


'...
கண்களிடமிருந்து பறித்தெடுத்த
ஒரு பிடிக் கனா
காதுகளிடமிருந்து பறிக்கப்பட்ட
ஒரு வெளி நிறைய இசை
என்னிடமிருக்கிறது
அவனில்லாத வாழ்வு நெடுகிலும் சுமந்தலைய
இன்னும்
இந்த ஒரே உலகத்திலேயேதான் இருக்கின்றன
எனக்கும் அவனுக்குமான
வௌ;வேறு உலகங்கள்'  17


இப்படி மனதை முறித்துக்கொள்ளுகிற விட்டு வெளியேறுகிற வெளிப்படுத்துகிற அனாரின் கவிதை அது முடியாமல் பிரிவதற்கான வழியை சொல்லும்படியும் கேட்கிறது. அவரின் 'காதலைக் கொள்ளும் தேவை' என்ற கவிதையில்


'...
பாவனைகளோடு கொஞ்சி முத்தம்
கண்களாகவும்
பெயர் சொல்லி அழைத்த கணங்கள்
நிற்ங்களாகவும் கொண்டதொரு வண்ணத்துப் பூச்சி
நினைவெல்லாம் பறந்து திரிவதை
எப்படிக் கொல்வது
எனக்குச் சொல்லித் தா' 18


என்று பிரிவதற்கு வழியற்று நிற்கிறது. முரண்பாடும் நெருக்கமும் கொண்ட உணர்வுகளால் உடலால் பின்னப்பட்ட உண்மையான வாழ்வை இவர் பேசுகிறார். 'நிறங்களாலானவனைக் காத்திருக்கிறேன்' எனவும் அவனின் குரல் 'குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்' எனவும் குறிப்பிடுகிறார். 'பூக்கவிரும்புகிற கவிதை'யாகவும் அனாரின் கவிதைகள் வேட்கையும் பரவசமும் கொள்ளுகின்றன.

4.7 போர் அரசியல் மற்றும் வன்முறை


அனாரின் கவிதைகள் மிகுந்த நுண்தன்மையுடன் அரசியலைப் பேசுகின்றன. யுத்தத்தையும் வன்முறையையும் பேசுகின்றன. முஸ்லீம் என்ற தன் இனத்தின் அடையாளங்களை உள்ளடக்கி வைத்திருக்கின்றன. 'மண்புழுவின் இரவு' என்ற கவிதை திருக்குரானில் உள்ள வசனங்களையும் முஸ்லீம் மக்கள் புழங்குகிற சில பொருட்களையும் இணைத்துக்கொண்டு செல்கிறது.


'...
'றபான்' இசைக்கின்ற முதியவரின் கானலோவியம்
இரவை உடைக்கின்றது
...
நீளமான நூலாய் தெரிகின்றது இரவு
நான் தனித்த மண்புழு
சிறுகச் சிறுக நீளுகிறேன்
தொடர்ந்து நீளமான வெள்ளை நூல் தெரியும் வரை' 19


தனது வேதத்தில் இருக்கிற வசனங்களைப் பேசுவதன் வாயிலாக தன் இனத்தின் அடையாளத்தை அவர் கோருகிறார்., வெளிப்படுத்துகிறார். அவரது கிராமியச் சூழலையும் வாழ்வையும் வாசனையையும் 'மண்புழுவின் இரவு' பேசுகிறது. 'மேலும் சில இரத்தக் குறிப்புக்கள்' என்ற கவிதை சாவின் தடயமாய்த் தொடருகிற இரத்தம் பற்றிப் பேசுகிறது. அதிர்ச்சியூட்டுகிற விதமாக இரத்தம் சிந்துகிற எல்லா நிகழ்வுகளையும் இந்தக் கவிதை வரிசைப்படுத்துகிறது. மிக உண்மையான இந்தக் குரூரம் சாபமாக தொடர்கிறதை அவர் காணுகிறார்.


'மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து
பழக்கப்பட்டும்
குழந்தை விரலை அறுத்துக்கொண்டு
அலறி வருகையில்
நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகிறேன்
இப்போதுதான் முதல் தடவையாகக் காண்பதுபோன்று
...
களத்தில்
இரத்தம் அதிகம் சிந்தியவர்கள்
அதிக இரத்தத்தைச் சிந்த வைத்தவர்கள்
தலைவர்களால் கௌரவிக்கப்பட்டும்
பதவி உயர்த்தப்பட்டும் உள்ளார்கள்
...
வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்
கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்
சாவின் தடயமாய்
என்னைப் பின்தொடர்ந்துகொண்டே இருக்கின்றது' 20


இந்தக் கவிதை இரத்தம் எடுக்கிற போர் குறித்தும் வன்முறை குறித்தும் பேசுகிறது. கருணையையும் அவாவி நிற்கிறது. அனாரின் கவிதைகளில் மிகுந்த கவனத்தை இந்தக் கவிதையும் பெறுகிறது. இரக்கமற்ற வகையில் பிழிந்தெடுக்கப்படுகிற பலியெடுக்கப்படுகிற எல்லா வகையான இரத்தம் எடுப்புக் குறித்தும் அவர் அச்சமடைகிறார். அது பெண்ணை சாவின் தடயமாக என்றும் தொடருகிறதாக பேசுகிறார்.

தமிழ் பேசுகிற மக்களின் அரசியல் கோமாளித்தனமானதாயிருக்கிறது என்று 'கோமாளியின் கேலிப்பாத்திரம்' என்ற கவிதையின் வாயிலாக தன் கருத்தை முன் வைக்கிறார். இந்தக் கோமாளித்தனம் முழுக்க உண்மையானதும் திருந்தாத சாபமானதுமாக தொடருகிறது. இந்த அரசியல் மக்களுக்கு ஆறுதலைத் தராது வாக்குகளையும் இரத்தத்தையும் உறிஞ்சுகிறது. அது தேசத்தின் செழுமையை தின்கிறது குழந்தைகளை காக்க வைத்து ஏமாற்றுகிறது. கோமாளியின் கேலியான பாத்திரமாக முடிகிறதாகவும் அனார் தன் கவிதையில் சொல்கிறார்.


'...
அவன் புரிகின்ற வித்தைகளோ
முடிவில்
கனவை விழுங்கி விடுகி;றன
விநோதம் கும்மாளம் இசை
ஓய்ந்த அரங்கில்
மாபெரும் மௌனம்
கிறுக்கனின் கேலிப்பத்திரமாக எஞ்சி விடுகின்றது' 21


தன் சமூகம் அரசியல் கோமாளிகளால் ஏமாற்றப்படுகிறதை ஒரு பெண்ணாக உணர்ந்தபடி சொல்லியிருக்கிறார். இந்த கேவலமான ஆட்டத்தையும் சுறண்டலையும் அவர் இந்தக் கவிதையில் சாடுகிறார். கேலி செய்கிறார்.

4.8 கவிதையின் வெளிப்பாடு


அனாரின் கவிதைகளின் மொழி மிகுந்த செறிவையும் செழுமைiயும் கொண்டிருக்கின்றன. 'அவரின் ஓவியம் வரையாத தூரிகை' தொகுப்பிலுள்ள கவிதைகளின் மொழியிலிருந்து எனக்குக் கவிதை முகம் தொகுப்பின் மொழி முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது. அனுபவத்திற்கும் கவிதைப் பொருளுக்கும் ஏற்ற மொழி இந்தக் கவிதைகளில் வசப்பட்டிருக்கின்றன. மிகவும் விரிந்த படிமங்களையும் கையாளுகிறார். கவிதையில் வருகிற படிமங்கள் காட்சிகள் எல்லாம் வாசகருக்குள் புகுந்துவிடுகின்றன. வானம் பூனைக்குட்டியாகி கடலை நக்குகிறது என்ற அவரது படிமம் போல வெளிச்சத்தை இருட்டை தின்று வளருகிறது கனவு எனவும் காற்றின் பிரகாசத்தை மின்வெட்டுப் பொழுதில் பார்த்தேன் எனவும் படிமங்களாக்ககுகிறார்.

புதிய சொற்களையும் கவிதைகளில் கையாண்டிருக்கிறார். புதிய சொற்களை இணைத்து புதிய தலைப்புக்களை உருவாக்கியிருக்கிறார். வாசிக்கத்தூண்டுகிற விதமாகவும் நிதானமாகவும் கவர்ச்சியானதாகவும் பொருத்தமாகவும் இந்த செழுமையான வேலைகளைச் செய்திருக்கிறார். முஸ்லீம் மற்றும் திருக்குரானில் வருகிற வசனங்களை சேர்த்திருக்கிறார். 'மண்புழுவின் இரவு' கவிதையில் குரானில் குறிப்பிடப்படுகிற சம்பவமும் 'றபான்' என்ற இசைக்கருவியை வாசிக்கிற முதியவர் என்ற சம்பவம் வருகிறது. கவிதைகளின் தொடக்கங்களும் முடிவுகளும் நேர்த்தியாக வந்திருக்கின்றன. வரி ஒழுங்குகள் அமைப்புக்கள் என்பன வாசிப்பதற்கு பொருத்தமான வகையிலிருக்கின்றன.

அனாரின் கவிதைகளின் மொழிதல் முறையையும் பொருளிடலையும் குறித்து சுகுமாரன் கூறுகிறபோது 'அனாரிடம் அது ஒரே சமயத்தில் மொழிதலாகவும் முகமனாகவும் மாறுகின்றன. பெண்நிலையிலிருந்தே அனார் தன்னுடைய அனுபவங்களை முன்வைக்கிறார். அதற்கு இசைவான படிமச் செறிவான கவிதை மொழியைப் பயன்படுத்துகிறார். இது மொழிதல் சார்ந்தது. அனாரின் கவிதைகள் பெரும்பான்மையும் முன்னிலைப்படுத்தப்பட்ட ஒன்றை நோக்கியே மொழியப்படுபவை. அது அநேகமாக ஓர் ஆண் தன்னுடைய இருப்பைப் பொருட்படுத்தக் கோரும் இறைஞ்சுதலும் தன்னை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தும் வேட்கையும் தான் தவிர்க்கப்படும்போது எழும் சீற்றமும் பாராமுகமாக்கப்படும்போது ஏற்படும் ஊடலும் சக இருப்பு இல்லாதபோது உருவாகும் தனிமையும்தாம் அனாரின் கவிதைகளில் இடம்பெறும் பிரதான பேசுபொருட்கள். இதைக் காதலுணர்வு என்று மட்டுமாகச் சுருக்கி விட முடியாது என்றும் தோன்றுகிறது. இதே மனநிலையிலுள்ள உரிமை மறுக்கப்பட்ட இன்னொரு நபருக்கு இந்த உணர்வு வேறு அர்த்தங்கள் கொண்டதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இந்தத் தளமாற்றம் இதுவரை ஈழத்துக் கவிதைகளில் அரிதானதாக இருந்தது. அனுபவங்களை நேரடியாக முன்வைத்த கவிதைகளிலிருந்து சமகால ஈழத்துக் கவிதைகளை வேறுபடுத்தும் பொது அம்சமும் இதுவாக இருக்கலாம். இந்த அடிப்படையில்தான் அனாரை சமகால ஈழத்துக் கவிதையின் நவீன முகமாகப் பார்க்க முடிகிறது' 22 என்று சொல்கிறார்.

உருவத்திலும் உள்ளடக்கத்திலும் நேர்த்தி கொண்ட அனாரின் கவிதைகள் ஈழத்துக் கவிதைக்கு புதிய முகம் ஒன்றைத் தருவாகவே இருக்கிறது. இதுவரையான ஈழத்துக் கவிதைகளில் அனாரின் கவிதைகள் பொருளிலும் மொழியிலும் வேறுபட்டு நிற்கின்றன. இயற்கை பற்றிய பேரனுபவங்களையும் உணர்வு நிலைகளையும் மிக இயல்பாகப் பாடுகிறார். கண்ணீரையும் மகிழ்ச்சியையும் கொண்டாடுபவையாகவும் இரத்தத்தையும் வன்முறையையும் கண்டு பதறுவதாகவும் அமைகிற அனாரின் கவிதைகள் ஈழத்துக்கவிதைகளில் தனித்துவமான இடத்தைப் பெறுகின்றன.
அடிக்குறிப்புக்கள்

01.    அனார் 2004 ஓவியம் வரையாத தூரிகைபக்கம் 1-2
02.    அனார் 2004 மேலது.. பக்கம் 33
03.    அனார் 2007 மேலது.. பக்கம் 31
04.    அனார் 2007 மேலது.. பக்கம் 24
05.    அனார் 2007 மேலது.. பக்கம் 54
06.    அனார் 2007 மேலது.. பக்கம் 46
07.    சேரன் 2007 முன்னுரைஎனக்குக் கவிதை முகம்பக்கம் 13
08.    அனார் 2007 மேலது.. பக்கம் 45
09.    அனார் 2007 மேலது.. பக்கம் 29
10.    அனார் 2007 மேலது.. பக்கம் 54
11.    அனார் 2007 மேலது.. பக்கம் 41
12.    அனார் 2007 மேலது.. பக்கம் 43
13.    அனார் 2004 மேலது.. பக்கம் 3
14.    அனார் 2007 மேலது.. பக்கம் 27
15.    அனார் 2007 மேலது.. பக்கம் 25
16.    அனார் 2007 மேலது.. பக்கம 28
17.    அனார் 2007 மேலது.. பக்கம் 52
18.    அனார் 2007 மேலது.. பக்கம் 32
19.    அனார் 2007 மேலது.. பக்கம் 17
20.    அனார் 2007 மேலது.. பக்கம் 22
21.    அனார் 2007 மேலது.. பக்கம் 37
22.   சுகுமாரன 2009 ஜூன் 27-28 மதுரையில் நடைபெற்ற 'கடவு' கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரைபிரதி வெளியீடு காலச்சுவடு இதழ் 177.


மதிப்பீடு

ஈழத்து நவீன இலக்கியத்தில் கவிதைகள் மிகுந்த கனதியான இடத்தை வகிக்கின்றன. ஈழத்துக் கவிதைகள் மனிதநேயத்தையும் வாழ்வுப் பசியையும் வெளிப்படுத்தி நிற்பவை. அந்தரத்தையும் அலைச்சலையும் மரணங்களால் வதையுறும் மக்களின் துக்கங்களாகவும் அகாலத்தின் தோல்விகளாயும் உறைந்து கிடக்கின்றன. புதிய வெளிகளையும் நம்பிக்கையையும் கோரி நிற்கின்றன. ஈழம் எப்பொழுதும் படையெடுப்புக்களுக்கும் அந்நியராட்சிகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறது.

அதனால் ஈழத்தில் எழுந்த கவிதைகள் இந்த வகையிலான போராட்டம் மிகுந்த நெருக்கடிகளால் வனையப்பட்ட சொற்களுக்குள்ளாகவே நிற்கின்றன. போரும் அவலமும் இனப்பிரச்சினையும் கவிஞர்களுக்கு அறச்சிக்கலை உருவாக்குகின்றன. ஈழத்தின் நவீன தமிழ்க் கவிதைகள் அதிகமாக இலங்கை- ஈழ இனப்பிரச்சினை முரண்பாடுகளையும் யுத்தத்தால் ஏற்பட்ட படையெடுப்புகளையும் இடப்பெயர் அவலங்களையும் மனித உரிமை மீறல்களையும் வெளிப்படுத்தி அழகான வாழ்வு பற்றிய கனவையே கோரி நிற்கின்றன. ஏமாற்றமும் மனச்சிதைவுகளையும் எதிர் கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலை நன்கு புரிந்து வைத்திருக்கிற அடிப்படையிலேயே அனார் மற்றும் பஹீமாஜஹான் கவிதைகளை மதிப்பிட வேண்டியிருக்கிறது.

ஈழத்தில் நடந்த போர் ஏற்படுத்திய நெருக்கடிகளால் பெண்கவிதைகளில் நிகழ்ந்த தாக்கங்கள் முழுக்க முழுக்க அறம் சார்ந்ததாகவே இருக்கின்றன. காதல் சார்ந்த கவிதைகள் பாலியல் உணர்வையும் மனமுரண்பாடுகளையும் பாலியல் மீறல்களையும் வேட்கைகளையும் பேசுகின்றன. ஈழப் பெண் கவிதைகள் முக்கியமாக யுத்தகாலத்தின் மீறல்களையும் பலிகளையும் எதிர்த்து மனிதநேயத்தை கோருகின்றன. யுத்தகளங்களின் காட்சிகளையும் அவற்றின் குரூரங்களையும் நேரடி அனுபவங்களாக தருகின்றனவை. குழந்தைகள் பெண்கள் மனிதர்கள் என்று அதிகாரத்தால் பலியிடப்பட்டு இழந்துபோன உலகத்திற்காக கனன்றுகொண்டிருப்பவை.

முழுஅளவில் இப்படியான தளத்திலேயே அனார் மற்றும் பஹீமாஜஹான் கவிதைகள் வெளிப்படுகின்றன. சமகாலத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்ற இந்தக் கவிஞர்கள் கவிதையின் பாடுபொருளிலும் மொழியிலும் கூர்மையும் ஆழமும் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். அனுபவவெளியில் அனாரின் கவிதைகள் ஒருவிதமாயும் பஹீமாஜஹானின் கவிதைகள் இன்னொரு விதமாயும் அமைந்திருக்கின்றன. ஈழத்தில் கேள்விக்குள்ளாக்கபடுகிற மனிதநேயம் என்ற விடயத்திலும் காதல் தவிப்பு நிலைகளிலும் இரண்டு கவிஞர்களது கவிதைக்குள் ஒற்றுமையிருந்தாலும் கிழக்கைச் சேர்ந்த அனாhரது வாழ்வும் வடமேல் மகாணத்தைச் சேர்ந்த பஹீமாஜஹானின் வாழ்வு அனுபவங்களும் வேறுபட்டு நின்கின்றன.

அனாரின் கவிதைகள் கூடுதலாக பெண் மனத்தின் தவிப்பு நிலைகளையே பேசுகின்றன. எமது சமூகத்தில் பெண்களுக்கு நிர்பந்திக்கப்படுகிற தனிமையும் உள்ளடைந்திருத்தலுமான வாழ்வே இரண்டு கவிஞர்களின் கவிதைகளையும் உருவாக்கியிருக்கின்றன. அந்தத் தனிமை சமூகம் மீதான அக்கறையாகவும் பெண்மீது நிகழ்த்தப்படுகிற நிர்பந்தங்கள் ஒடுக்குமுறைகளை உணர்வதாகவும் இந்தக் கவிஞர்களைப் பாதிக்கிறது. அனாரின் கவிதைகளில் உள்டைந்து வைக்கப்பட்ட பெண் எழுச்சி கொள்கிற நிலையை எட்டுகிறபோது யாராலும் தடுத்துவிட முடியாத வெளியை அவர் கொண்டு வருகிறார். இழந்த காலமும் அதன் ருசியும் அளவற்ற பரவசங்களை பாடுகிற மனநிலைக்கு அவரை கொண்டு செல்லுகிறது. அனார் பெண் குறித்த எல்லா விதமான பாhவைகளுக்கும் பதிலளிக்கிற விதம் வேறு விதமானது. தன்னைக் கொண்டாடுவதன் வாயிலாகவும் அல்லது பெண்ணைக் கொண்டாடுவதன் வாயிலாகவும் உற்பத்திக்கும் இயக்கத்துக்குமான சக்தியாக தான் எனப்படுகிற பெண்னை நிறுவுகிறார்.

அனாரின் கவிதைகள் பெண் குறித்து செய்யும் பிரகடனங்கள் ஈழத்து பெண்கவிதைகளில் மிகுந்த முக்கியத்தை பெறுகிறது. அவரது முதல் தொகுப்பான 'ஓவியம் வரையாத தூரிகை'யிலிருந்து 'எனக்குக் கவிதை முகம்' அவரின் செம்மையடைந்த மொழியையும் கூர்மையான பார்வையும் காண்பிக்கிறது. அனாரின் கவிதைகளுக்கும் தமிழகத்து பெண் கவிஞர்களான குட்டிரேவதி, சுகிர்தராணி, சல்மா, மாலதிமைத்திரி போன்றவர்களின் கவிதைகளுக்கும் இடையில் மிகுந்த ஒற்றுமைகள் காணப்படுகின்றன. நிறைய இடங்களில் அனாரின் கவிதைகள் குட்டிரேவதியை ஞாபகப்படுத்துகின்றன. வாசிப்பின் ஊடாகவும் அபிமானத்தின் வாயிலாகவும் அனாரிடம் இந்த தாக்கங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

அனாரது இரத்தம் பற்றிய கவிதை குருதி சிந்துகிற மனநிலையின் ஆழமான உணருதலாகவும் உலகம் குறித்த ஏக்கமாகவும் வந்திருக்கிறது. போரும் வன்முறையும் குருதி கொட்டிக்கொண்டிருக்கிற மண்ணின் கவிஞர் என்பதை அனாரின் இரத்தம் குறித்த கவிதையே காண்பிக்கிறது. சாவின் தடயமாக மனித குலத்தை தொடர்ந்து கொண்டிருக்கிற குருதி குறித்து அனார் தன் கவிதையில் பேசுகிறார். குழந்தைகள் குறித்தும் பெண்கள் குறித்தும் பொதுவாக மனிதர்கள் குறித்தும் குருதிக்காக பலியிடப்படுகிறதன் குரூரத்தை பேசுகிறார். முற்றிலும் தொலைந்த மனித உரிமைகள் குறித்த பெரு ஏக்கமாக அந்தக் கவிதை வெளிப்படுகிறது. இழந்த உலகத்தை கோருகிற கோபமும் இருக்கிற உலகத்தை கொண்டாடுகிற பரவசமும் என்று அனாரின் கவிதைகள் காதலிலும் ஊடலிலும் மகிழ்ச்சியிலும் ரசிப்பிலுமாக முழுமைபெறுகிறது.

தனது கிராமத்தினதும் மண்ணினதும் வாசனைகள் அனாரின் கவிதைகள் எங்கும் பரவிக்கிடக்கின்றன. தனது மக்களினது வாழ்வையும் தன் பண்பாட்டின் நடைமுறைகளையும் சமயத்தின் வசனங்களையும் கவிதைகளில் இணைத்துச்செல்லுகிறார். நுண் தன்மையுடன் அரசியல்மீதான விமர்சனங்களையும் முன்வைக்கிறார். அவை உள்ளுக்குள் பல்வேறு அர்த்தங்களை தருகிற சித்தாந்தங்களாக விரிகின்றன.

பஹீமாஜஹான் கவிதைகள் முழுக்க முழுக்க போரையே பாடுகின்றது. போர்ச் சூழலில் நிகழும் அவலங்களையும் இழப்பையும் மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரிவுகளையும் பாடுகின்றன. ஈழப் போராட்டம் சார்ந்த நெருக்கமான எண்ணத்தை வெளிப்படுத்துகிற பஹீமாஜஹான் தன் கவிதைகளின் வாயிலாக விடுதலை பொருந்திய வாழ்வை அவாவி நிற்கிறார். தமிழ் முஸ்லீம் சமூகங்களின் நெருக்கமான ஒளிபொருந்திய தேசத்தை கோருகிற பஹீமாஜஹான் கவிதைகள் போராடும் மனங்களின் எண்ணங்களையே அதிகம் பிரதிபலிக்கிறது. போராளிகளுடனான உரையாடல்களையும் கனவு பற்றிய நம்பிக்கையும் குளிர்ந்த இலட்சியமும் கொண்டிருக்கின்றன.

அம்மம்மாவினுடான உறவையும் அவரது நினைவையும் கொண்டாடும் பஹீமாஜஹான் கவிதைகள் அவரது அனுபவங்களிலிருந்தும் வாழ்வுக்குறிப்புக்களிலிருந்தும் எழுகின்றன. மலைகளின் மூதாட்டி என்று அவரை மிகப்பெரியளிவில் கொண்டாடுகிற பஹீமாஜஹான் தன் கவிதைகள் முழுவற்றுக்குமான மனிதநேயத்தையும் அனுபவத்தையும் அவரிடமிருந்தே பெற்றுத் தொடங்குகிறார். அதனால் சமூக அவலங்களை பார்த்த்து பெறுத்திருக்காதவராகவும் மனதாபிமானத்தை அவாவுவராகவும் இருக்கிறார். ஒரு சிறுமியின் துயர் கவிழ்ந்த தனிமையாயும் கட்டுப்பாடுகளையும் வரையறைகளையும் எல்லைகளையும் அகற்றி அவை குறித்து நேரடியான கேள்விகளை எழுப்புவராகவும் பஹீமாஜஹான் தன் கவிதைகளில் ஒலிக்கிறார்.

பஹீமாஜஹான் கவிதைகள் மிகுந்த எளிமையானவை. ஆழமான அனுபவமும் அழகும் கொண்டது. சிக்களற்ற படிமங்களையும் சாதாரணமான மொழியிலும் அமைந்திருப்பவை. சொல்லுகிற முறையில் தெளிவும் வசீகரமும் கொண்டது. போர் நிகழ்ந்த மண்ணுக்குரிய மொழியில் அமைந்திருக்கிறது அல்லது போர்க்கால இலக்கியத்திற்குரிய வகையில் அமைந்திருக்கிறது. அவகாசங்களற்ற வகையில் எழுந்திருக்கின்றன. மண்வாசனையும் இயற்கைமீதான ஈடுபாட்டையும் கொண்டிருக்கிறது. பஹீமாஜஹானின் கவிதைகள் ஈழத்துக்குரிய கவிதைகள் என்ற முழுமையான அடையாளங்களை கொண்டிருக்கிறது.

ஈழத்தின் வாழ்வையும் பேராட்டத்தையும் பெண்களின் நெருக்கடிகளையும் மனிதகுலத்திற்கு எதிரான நடவடிக்கைகளையும் பாடுவதன் வாயிலாக மிகுந்த கவனத்துக்கு உள்ளாகிய அனார் பஹீமாஜஹான் கவிதைகள் சமகால ஈழத்து கவிதைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதுடன் வரலாற்று பதிவாகவும் இருக்கிறது. கவிதைகளில் இரத்தமும் சதையுமான அனுபவங்களும் பெண் மொழிகளும் பெரியளவில் உறைந்துபோயிருக்கின்றன. ஈழ மக்களின் சொற்களாகவும் ஈழப் பெண்களின் சொற்களாகவும் மிகுந்த முக்கியத்துவம் கொண்டிருக்கின்றன. தமிழ் இலக்கியப் பரப்பில் இவர்கள் உரிய இடத்தில் இணைக்கப்பட வேண்டியவர்களாயிருக்கிறார்கள்.


(நன்றி - தீபச்செல்வன் )


-------------------------------------------------------------------------------------------------------------




No comments: