Thursday 29 September 2016

அனார் கவிதைகளில் இரட்டை  அரூபம்
-------------------------------------------------------------------------

- எஸ். சண்முகம்





1


ஒரு கவிதைப் பிரதி மொழியில் நிகழ்கிறது. அது நிகழும் மொழிவெளியானது, பிரதியின் விளிம்பில் உருக்கொள்கிறது. அவ்வாறு உருக்கொள்ளும்போது அதன் உள்ளுறை எவ்வாறு வடிவமடைகிறது என்பது நம்முன் எழுகிறது. கவிதைப் பிரதி நிகழ்ந்துவிட்ட அல்லது நிகழ்வதற்கு முன் உள்ளுறை என்பது கருக்கொள்கிறதா? ஒருவித நிச்சயமின்மையை துவக்கிவைக்கிறது. ஒரு மொழி சுழற்சியில் இது இயங்குகிறது. மேலும் தொடர் மொழி-சுழற்சியினுள் உள்ளுறை திரள்கிறது. இதனைச் சுற்றிப் பின்னப்படும் அல்லது கட்டமைந்து அவிழும் தொடர் செயல்பாட்டை கவிதையின் சொல்லுதல் அல்லது கவிதையாடல் எனலாம். இது இடையறாது தன்னை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. கவிதையாடலின் சேர்க்கையிலும், சேர்க்கையின்மையிலும் வாசிக்கும் மொழிச் செயல்பாட்டில் முன்தீர்மானமின்றி நிகழ்கிறது. உள்ளுறை கவிதையின் மொழிவுடலில் தோன்றி மறையும் ஒரு குருட்டுப் புள்ளியாகிறது. உள்ளுறையிலிருந்து கவிதை தனது பிரதி வடிவத்தை அடைகிறதா? அன்றி கவிதையாடலின் தொடர் - தொடர்பின்மையிலிருந்து கிளைக்கிறதா? என்பதுதான் கவிதையின் பிரதியாக்கம் குறித்த மர்ம முடிச்சு. இதனை அவிழ்க்க தேவையானது வடிவ அறிதல் மற்றும் மூடிய வாசிப்பு.
கவிதையை ஒரு வகைமையாகக் கொள்ளாமல் அதையொரு கவிதையாடல்களின் சேர்க்கையாகக் கொள்ளலாம். அது கோரும் வாசிப்பு என்பது சேர்க்கைகளை அவிழ்க்கும் செயல்பாடாகக் கொள்ளலாம். இந்த சேர்க்கையிலும் , அவிழ்த்தலிலும் உருவாகும் இணைவுப் புள்ளியை உள்ளுறை எனலாம். இப்புள்ளி பருண்மைக்குள் உறைந்துள்ள பருண்மையின்மையைச் சுட்டுகிறது. இது கவிதையாடல்களின் மூலம் எழும் ஒரு 'மாய-வெளி' பருண்மையான மொழிக்குறிகளால் கட்டமைக்கப்படும் புலனாகாப் புலமாக உள்ளுறை கவிதையில் வடிவம் கொள்கிறது. அது வாசிப்பின் நிகழ்விடமாக மாறுகிறது. பிரதியின் உள்ளும், வெளியுமாக இது இயங்குகிறது. முதல்கட்டமாக ஒரு கவிதைப் பிரதியை வாசிக்கும் தருணத்தில் கவிதையின் புறத்தே இருந்து துவங்கும் மொழிச் செயலானது கவிதையாடல்களின் நுண்ணிய முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே பயணிக்கிறது. கவிதையின் இறுதியில் உள்ளுறையின் புலத்திற்குள் நாம் பிரவேசிக்கிறோம். அதில் கிளைத்தெழும் படிமங்கள், குறியீடுகள் யாவுமே ஒரு கட்டத்தில் குறிப்பீட்டை துறந்துவிட்டு ' குறிப்பீடற்ற குறிகளாக உருமாறுகின்றன.
வடிவங்கள், வண்ணங்கள், ரூபங்கள் இவையனைத்துமே கவிதையாடல் கட்டமைக்கும் மனோ நிலையில் நிகழ்ந்து கரையும். கவிதை என்ற மொழிச் சட்டகத்துள் வடிவம் கொள்ளும் மற்றொரு சட்டகமாக உள்ளுறை இருக்கிறது. இவையிரண்டும் ஒன்றினுள் ஒன்றாக மொழிக்குள் தன்னை படைத்துக் கொள்கின்றன.
இவ்விரண்டையுமே அகப்படுத்தியுள்ளது கவிதைப்பிரதி. கவிதையாடலில் பிரதியும் உள்ளுறையும் ஒவ்வொன்றாகவும், தனியாகவும், இரண்டாகவும், ஒன்றினுள் ஒன்றாகவும் உள்ளன. ஒன்றை மற்றொன்று பதிலிப்படுத்திக் கொள்கிறது.

2
கவிஞர் அனாரின் கவிதைப் பிரதிகள் இயங்கும் புலங்கள் வெவ்வேறானவை. எந்த குறிப்பிட்ட ஒற்றைப் புள்ளியிலும் அனாரின் கவிதைகள் நிலைகொள்வதில்லை. தொடர்ச் சுழிப்பை தனது கவிதையாடலில் இவர் கைக்கொள்கிறார். பருண்மைக்கும், அரூபத்திற்கும் இடையேயான அபூர்வ ஊடாட்டத்தை அனாரின் மொழிப்பித்தம் வசப்படுத்துகிறது. பெரும்பாலும் விளிம்பின் முன்புறமான வெளியில் அது நிகழ்கிறது. கவிதைக்கு முற்றிலும் வெளியே அல்லாது முற்றிலும் உள்ளே இது இயங்குவது இல்லை. இவையிரண்டிர்க்கும் நடுவே அமையும் மொழிவெளியில் அனாரின் கவிதைகள் சஞ்சரிக்கின்றன. குறிப்பாகக் கீழ்வரும் கவிதை வரிகளில்
ஊறும் தன்மையாய்
கட்டுப்படாத தன்மையாய் பெருகி
என் நீருடல் நடனமிடுகிறது
கடவுளின் கனவென வடிவங்கள் வெவ்வேறு எடுத்து
.............................................................
........................................................
சுவையில் மதர்த்த நடனம்
மேன்மையின் திறவுகோலாகி
தன்னையே திறக்கின்றது.
-நீர்நடனம்-
(உடல் பச்சை வானம்)
திரட்சி கொள்ளாத நீரின் குறியீடாக இயங்கும் இக்கவிதையில் 'நீரின் உடல்' என்ற குறி மிகமுக்கியமானது. ஸ்திரமான வடிவமற்ற நீரை உடலென பாவிக்கும் கவிதையாடல் சற்றே வினோதமானது. இதில் திரவத்தின் அலைவுத் தன்மை உடலாக குறிப்பீடு செய்யப்படுகிறது. இதைச் சொல்லும் கவிதையின் அடுத்த வரிகளில் ஒரு புதிய கோர்வை உருவாகிறது. 'கடவுளின் கனவென வடிவங்கள்' எனும் வார்த்தைகளில் கடவுள், கனவு என்ற இரு அரூபங்களின் வடிவங்கள் வெவ்வேறாக உருக்கொள்வதாகச் சொல்லப்படுகிறது. அரூபம் பருண்மைப்படுவதை, கவிதையானது வடிவங்கள் எடுப்பதாகச் சொல்கிறது. இதை கூர்ந்து வாசித்தால் ஒருவகை 'இரட்டை அரூபம்' கவிதையில் செயல்படுவதைக் காணலாம். இதில் நீர், கடவுள், கனவு என்பவை ஒருவகையான பதிலிப்படுத்தும் கவிதைச் செயலாகிறது. நீரின் நடனம் - கடவுளின் கனவென கவிதைக்குள் ஒரு சூட்சுமமான இணைவை ஏற்படுத்துகிறது. மேலும் நீளும் இக்கவிதையின் முடிவில்
தன்னை நிகழ்த்துகிற மந்திர மண்டபத்தில்
சுவையில் மதர்த்த நடனம்
மேன்மையின் திறவுகோலாகி
தன்னையே திறக்கின்றது.
(நீர்நடனம் -  உடல் பச்சை வானம்)

இந்தக் கவிதையில் நிகழும் நீர்நடனம் என்பது தன்னையே திறத்தல் என்ற குறிப்பீட்டை அடைகிறது. இங்கு தன்னையே திறத்தல் எனும் உள்ளுறை கவிதையாடலின் உச்ச மொழி சுழற்சியில் திறத்தலை நிகழ்த்துகின்றது. இது பிரதியில் எங்கு நிகழ்கிறது என்ற வினாவிற்கு விடையாக பிரதிக்குள்ளேயே ஒரு வெளி கட்டமைக்கப்பட்டுள்ளது. அது தன்னையே நிகழ்த்துகிற மந்திர மண்டபம். தன்னை நிகழ்த்துகிற அல்லது திறக்கிற உள்ளுறையை ஒரு சேர்க்கைக்கு உள்ளாக்கும் மொழி நடனம்தான் நீர்நடனம்.
வண்ணங்கள் காண்புலத்திலும், உணர்புலத்திலும் ஊடாடுபவை. அதனை ஒரு குறிப்பிட்ட உடலியல் சார்ந்த வேட்கையுடன் தொடர்புப்படுத்துவதன் மூலமாக ஒரு குறியீடாகவும் ஆக்கலாம். உணர்வெழுச்சியின் உடலிய வெளிப்பாடாக முத்தம் நிகழ்கிறது. முத்தம் என்பதில் குறிப்பீடு வேட்கையின், உடலிய நிகழ்த்துதலைச் சுட்டுகிறது. அதனை வண்ணத்தைக் கொண்டோ அன்றி பல்வேறு உயிர்வடிவங்களைக் கொண்டோ இயற்கையின் வடிவங்களைக் கொண்டோ சுட்டலாம். முத்தம் என்பதை பன் - பொருண்மையின் ஊற்றாக மொழியாக்கும் அனாரின் இக்கவிதையை வாசிக்கலாம்.
முத்தம் விசித்திரமான
நீலப் பறவையாக அலைகிறது
--------------------------------------
முத்தம் தேவதை
நீல இருளின் நடு ஆகாயத்தில் எனது முத்தம்
முழுநிலா
---------------------------------------
முத்தம் கனவின் உண்மை
--------------------------------
மெல்லிய நீலத்துடன்
எரியத் தொடங்குகிறது நெருப்பு
--------------------------------
சதைகளாலான பெருகும் விருட்சத்தில்
பெயரிடமுடியாத கனி பழுத்திருக்கிறது.
-------------------------------------
மென் நீலமென தீராமல் படர்கிறது.
(நீல முத்தம்  -  உடல் பச்சை வானம்)
மேலே குறிப்பிட்டுள்ள நீல முத்தம் கவிதையில் முத்தம் என்பதை பன்மைக் குறிகளாக பிரதி பெருக்கிக் கொண்டே செல்கிறது. அதன் பண்பை மாறுதலுக்கு உட்படுத்தியபடியே கவிதையாடல் நீட்சி பெறுகிறது. 'முத்தம்' என்பதைச் சுற்றிப் பின்னப்படும் கவிதையாடல்கள் ஒரு சுழற்வட்டமாய் நகர்கிறது. ஒன்று மற்றொன்றை தன்னுள்ளே பின்னிப் பின்னிச் செல்கிறது.
முத்தம்,  பறவை , தேவதை , முழுநிலா , கனவின் உண்மை , உண்மையின் கனவு
இதில் கனவின் உண்மை - உண்மையின் கனவு என்பது கவிதையில் கனவாக மாற்றமடைகிறது. முத்தம் வண்ணமாகி எரியத் துவங்குகிறது. இறுதியாக கூர்மையான வாள் என்று பொருள் நிலையைப் பெறுகிறது.
கனவு,   நீலத்துடன் எரியத் துவங்கும் நெருப்பு , சதைகளாலான பெருகும் விருட்சம் , கூர்மையான வாள்
இக்கவிதையில் முத்தம் என்பது பல்வேறு படிமங்களாகவும் சொன்மைகளாகவும் மாறி இறுதியாக வண்ண நெருப்பாகி வாளாகிறது. முத்தத்திலிருந்து மொழிக் குறிகள் மூலமாக ஒரு விசிறிபோல் விரிவடைந்து கவிதை அதிசயமான குறிப்பீட்டு வெளியை அடைகிறது.
முன்னே நாம் வாசித்த நீலமுத்தம் என்ற அனாரின் கவிதையின் இரட்டைவடிவப் பிரதி ' நிசப்தத்தில் குளிரும் வார்த்தை ' ஏறக்குறைய இவ்விரு பிரதிகளும் கவித்துவ ஒப்புமை கொண்டவை. இந்த நிசப்தத்தைக் குறிக்கும் பிரதியும் நீலமுத்தம் போன்றே நீட்சி கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து துவங்கி சுழற்சி கொள்கிறது.
முத்தம் விசித்திரமான
நீலப்பறவையாக அலைகிறது.
--------------------------------
நமக்கிடையே மழைக் காடுகளென
நிசப்தம் வளர்கிறது.
---------------------------------
மழை - பறவையாய் - அலைகிறது
நிசப்தம் - மழைக் காடுகளென வளர்கிறது.
அலைகிறது,  வளர்கிறது,  என கவிதை மொழிகிறது.
.........................................................................................................
நிசப்தம்,  மழைக் காடுகளென
ஊமை முயல்கள்
பேசப்படாத வார்த்தையாய்
சிறுத்தையின் புள்ளிகள்
இவ்வாறு நிசப்தம் கவிதையின் பிந்தைய வரிகளில் தூக்குமேடை மேல் தொங்கும் கயிறு , ஆலகால விஷம் என பூரணமாகிறது.
கவிதையில் ஒருவனை அல்லது ஒருவனைக் குறிக்க வழமையாக பிரயோகிக்கும் வார்த்தைகளைத் தவிர்த்துவிட்டு; ஒரு புதிய குறியீட்டை கட்டமைக்கிறது அனாரின் ' நிறங்களாலனவைக் காத்திருக்கிறேன்'.  நிறத்திற்கு மனிதக் குறிப்பீடு உள்ளது. பெரும்பாலும் நிறம் என்ற வார்த்தை ஒருவரது சருமப் பொலிவைக் குறிக்கும். வண்ணம் என்பதிலுள்ள மனிதப் பண்பு, நிறத்தினில் பண்பு மாற்றம் கொள்கிறது. ஒருவனை பிறனிலிருந்து பெயர்த்தெடுத்து நிறங்களாலானவன் என்று குறிப்பீடு செய்வது ஒரு புதிய கவித்துவச் சாத்தியப்பாடு. கவிதைக்குள் பண்புகள் என்ற குறிப்பீடற்ற அல்லது முன் - அறியாதவன் ஒருவன் மீதுள்ள விழைவைக் கொணர்கிறது. முன் - அறியா என்பது ரகசியமாய் என்பதாய் மாற்றீடு செய்யப்படுகிறது.
அவன் நிறங்களாலானவன் என்பது
எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது
(யாருக்கும் தெரியாத ரகசியமாய்)

-------------------------------------

அவன் செருக்குமிகு கவிதைகள்
மாயலோகத்தின்
மொத்த நிறங்களையும் ஆள்கின்றன
-----------------------------------------
வர்ணங்களாகிவிடுகின்றன பிராத்தனைகள்
ஒரு மயில் தோகையின்
ஆனந்த வர்ணமெருகுடன்
------------------------------------------------
அவன் நிறங்களின் கடல் குடித்த பறவை நான்
மீன் குஞ்சுகளின்
அபூர்வ நிறங்களால் முத்தம் வரைந்து
----------------------------------------
என் இறுதிச் சொற்கள்
நிறங்களாலானவனைக் காத்திருக்கிறேன்.

(நிறங்களாலானவனைக் காத்திருக்கிறேன் - எனக்குக் கவிதை முகம்)
இங்கு ' நிறம் ' ஒரு குறியாக பிரதியெங்கும் விரவியுள்ளது. மனிதன் , மீன்குஞ்சுகள் , பறவை , இவை நிறங்களுடன் சுட்டப்படுகின்றன. அதேபோல் இப்பிரதியில் வரும் வினோத படிமம் அபூர்வ நிறங்களால் முத்தம் வரைந்து என்ற வரிகள் வருகிறது. முத்தம் இடுதல் என்பது வரைந்து என மாற்றீடு செய்யப்படுகின்றது. இதழ் தூரிகையாகி முத்தம் வரைந்திருக்கிறது. இது நிகழும் உருமாற்றங்களின் கவித்துவப் புலத்தை கவிதை ஓரிடத்தில் சொல்கிறது. ' மாய லோகத்தின் மொத்த நிறங்களையும் ஆள்கின்றன என்பதை வாசிக்கும்போது அது மாயலோகத்தில் நிகழ்த்தப்படுகிறது. காரணம் கழன்ற சுழற்சியை நாம் அனுபவிக்கும்படி செய்கிறது. இக்கவிதையில் ஒரு magical realm ஐப் பிரதிக்குள் புலப்படுத்துகிறது.
உணர்வு வெளியின் படபடப்பில் சஞ்சரிக்கும் மனதின் அசைவுகளை மிக நேர்த்தியாக  அனாரின் கவிதைகள் லயப்படுத்துகின்றன. இயற்கையில் உருவாகும் பருவமாற்றங்கள் போலும் கவிதைகளில் சாத்தியப்பாடுகள் அமைவுறுகின்றன. பருவம் ஒவ்வொன்றிலும் மாறும் வண்ணம் , வாசம் , காட்சிகள் போலவே அனாரின் கவிதையிலும் மாற்றங்கள் தன்னிச்சையாய் நிகழ்கின்றன. சில தருணங்களில் நமது தர்க்க அறிவின் எல்லையைத் தகர்க்கும்  விதமாக காட்சிகளில் தலைகீழாக்கம் சம்பவிக்கிறது. அது உணர்வுப் புலத்தை அதிரச் செய்கிறது. கவிதையாடல் ஒரு கதியில் நகர்ந்து சென்று சற்றே தலைகீழாகி எதிர்பாராத காட்சி சேர்க்கைகள் நிகழ்கின்றன. அதை செய்விக்கும் மொழிப்பித்தம் அனாரது  கவித்துவத்தின் பிராதனக் கூறாக உள்ளது. ஒருகணம் நாம் புலன் தப்பி மீண்டும் புலனடைகிறோம். அக்கணம் நாம் வரிசைக் கிரமமாக வாசித்ததின் ஒருபகுதியில் தலைகீழாக்கம் நிகழ்ந்துள்ளதை அறிய முடிகிறது.
உனது பெயருக்கு
வண்ணத்துப் பூச்சியென்றொரு அர்த்தமிருப்பது
எவ்வளவு பொருத்தம்
.........................................................
உணர்வெங்கும் குந்திச் சிறகடித்து திரியும் சாகசத்தை
வண்ணத்துப் பூச்சியாய் இல்லாது போனால்
எப்படி நிகழ்த்திக் காட்டுவாயெனக்கு
உன் தந்திரத்தின் மாயம் அளவற்றது
உள்ளே பாடல் போல் மிதக்கின்ற வண்ணத்துப்பூச்சி
வெளியே பிடித்துவைக்க முடியாத கனா.
.......................................................................
பைத்தியம் பிடித்திருக்கும் இந்நாட்களிலெல்லாம்
வண்ணத்துப் பூச்சியை மொய்க்கின்ற மலராக
பறந்து கொண்டேயிருக்கிறேன்.
.....................................................................
வண்ணத்துப்பூச்சியின் பிரம்மாண்டமான
கனாக்காலக் கவிதை நான் என்பதில்
உனக்குச் சந்தேகம் இருக்கிறதா இனியும்.

(வண்ணத்துப்பூச்சியின் கனாக்காலக் கவிதை -  எனக்குக் கவிதை முகம்)

அனாரின் இந்தக் கவிதையில் நிகழ்ந்திருக்கும் கவித்துவ தலைகீழாக்கம் இரண்டாகும்.
ஒன்று: உள்ளே- வண்ணத்துப்பூச்சி
இரண்டு: வெளியே பிடித்து வைக்க முடியாத கனா

இதில் கூர்ந்து நோக்கினால் புறத்தே உள்ள வண்ணத்துப்பூச்சி என்பது உள்ளே சிக்காத கனா எனப்படுகிறதுஇங்கு இரட்டை மாற்றம் நடக்கிறது. இங்கு இருவேறு சட்டகங்களாலான உள்ளே -வெளியே என்பதில் வைக்கப்படுகிறது. இதேபோல் வண்ணத்துப்பூச்சி - மலர் அடுத்ததாக மலர் - வண்ணத்துப்பூச்சி மொய்த்தல். பின்னர் கவிதையின் இறுதி வரிகளில் நான் என்பது தலைகீழாக்கமாக பிரதியின் அடுக்குகளில் எழுதப்பட்டுள்ளது.
கனவு நிலையில் கவிதையாக்கம் செய்யப்பட்ட அனாரின் மற்றொரு கவிதை.
வாசித்தலும் - எழுதுதலும் - கனவு கொள்வதும் கவிதையில் மறைந்துள்ள தன்னிலையை புறத்தே மீட்டெடுக்கும் மொழிவிழைவே கவிதையாக்கம். ' முகத்தை ஒரு தன்னிலையின் பருண்மைக் குறியீடாகக் கையாளும் தன்மை குறிப்பிடத் தகுந்தது. பிரதியில் இன்னொருவரால் காட்ட கேட்கும் வரிகள் ஒருவித படிவமாகிறது முகம் என்ற தன்னிலை. பிரதியில் பொதிந்துள்ள இரு நிலைகளுக்கிடையே ஒரு உரையாடலைத் துவக்கி, அதன் வழியே கவிதையாடலைக் கட்டமைக்கிறது அனாரின் இக்கவிதை.
நீ வரைந்து காட்டு
என் மறைந்துள்ள முகத்தை
நீ வரைந்து காட்டு
அடைய முடியாத அந்த இரவை
இன்னும் விரும்புகின்ற கவிதையை.
( பூக்க விரும்புகிற கவிதை -  எனக்குக் கவிதை முகம்)

இக்கவிதையில் மறைந்துள்ள தன் முகத்தை நீ என்ற கவிதையின் இன்னொரு நிலையினிடம் கேட்கும் கவிதைச்  சொல்லியின் 'குரல்' அல்லது 'தன்னிலை'; இந்த இருநிலைகளுக்கு இடையே விழும் கவிதையின் உள்ளார்ந்த முடிச்சு இறுதியில் அவிழ்கிறது. முகத்தை வரைந்து தனக்கே அடையாளப் படுத்த கேட்கும் குரல் அடுத்த வரியில் அடைய முடியாத 'இரவை' யும் விரும்புகிற 'கவிதையை' யும் வரையக் கோருகிறது. ஆழமாக இக்கவிதையை வாசித்தால் இதில் முகம் என்பது கவிதையாகவும்- மறைந்துள்ள என்பது 'இரவாக' வும் உருவகிக்கப் படுகிறது. அனாரின் கவிதை முகம் இக்கவிதை தானோ என யோசிக்கத் தோன்றுகிறது.

                                                 3

ஒரு தேவதைக் கதையை வாசிக்கும் போது கிடைக்கப் பெறும் அனுபவமும்- கவிதையை வாசிக்கும் அனுபவமும் வெவ்வேறானவை. ஆனால் அனாரின் ஒருசில கவிதைகளில் இவ்விரண்டும் இழையோடுவதை உணரலாம். புனைவின் விரிவில் கவித்துவத்தின் புதிர்மைகள் கவிதையெங்கிலும் விரவியிருக்க; அதில் வாசிப்பைத் தாண்டி ஏதோவொரு புதிர்மைக்கான விடையினைத் தேடுவது நிகழ்ந்துவிடுகிறது. பிரதியை காகிதத்தின் மேற்பரப்பில் ஒரு சித்திரமாகப் பார்க்கும் வினோதம் சில அபூர்வ தருணங்களில் நிகழ்ந்துவிடும். கவிதையின் வாசிப்பிலிருந்து அப்பால் அதனுள் மெய் நிகர் அதிசயங்களுடன் பரிமாற்றம் செய்துகொள்வதும் உண்டு. இயல்புக்கு மாறாக புனை உயிர்களுடன் பேசுவது. கவிதை சொல்லியின் குரலல்லாது இன்னும் பல குரல்களும் நம் செவிகளில் பேசிக் கொண்டிருக்கும். இதன் ஈர்ப்பான ஒரு தன்மை என்பது பிரதியில் கட்டமைக்கப்பட்ட புதிர்மைக்கான விடையை அந்தப் பிரதியிலேயே கண்டடைந்து விடுகிறது. ஒரு சிறு புனைவுலகை படைக்கும் கவிதைகளில் ஒன்று அனாரின் மகுடி
மாதுளையின் கனிந்த சிவப்பு
ஊறிவிழும் நம் சொற்களை
முத்துக்களின் வரிசையாக
மாதுளை அரணமனைக்குள்ளே அடுக்குகிறோம்.

முதிர்ந்த சிற்பி மாளிகைச் சுவர்களில்
இதே மாதுளைச் சாற்றினால்
நம் சொற்களுக்கு நிகரான ஓவியங்களை
வரைந்து போயிருப்பதை வியக்கிறோம்.

மாளிகை நிலவறை தீப்பந்தத்தைக் கையிலெடுத்து
நீ காண்பித்துச் செல்கின்ற
ரகசிய அதிசயங்களுக்கு
ஒவ்வொரு புலன்களையும் இழந்து
பிறகு ஓர் இரசத்துளியாய் எஞ்சுகிறேன்

அரண்மனைத் தோப்பு மாதுளை கொப்பில்
ஊஞ்சலாடும் கூண்டுக்கிளி
சிவந்த சொண்டின் கதவுகள் திறந்து
நம்மை உள் அழைக்கிறது

காற்றுப் பின்னிய நூலேணியைக் கடந்து
சமுத்திரத்திற்குள் குதித்தோம்

முட்டைகளைக் காவல் செய்யும்
நீர்ப்பாறைகளுக்கடியில்
மீன்கள் வண்ணங்களை உமிழ்ந்து
வால்களால் அடிக்கின்றன

சங்குகள் மினுங்கும் பாசிமணிகள்
நீர்செடிகளாய்ச் சூழ்ந்த பாதாளத்தில் நீந்தி

பவளக் குவியலருகே
மாபெரும் சிற்பியை உனக்காக திறக்கிறேன்

பிரபஞ்சத்தையே மூடி
இழுத்துவரும் வலையை
எனக்குப் பரிசளிப்பதாய் கூறுகிறாய்

------------------------------------------------

சிவந்த மின்மினிக் கூட்டங்களை
விபரித்துக் கொண்டே நடக்கிறாய்
அடிக்கடி சிவப்பு மீனை நினைவு கூர்கிறாய்
பிறகு
அரண்மனைக் கிளியை
தனியே விட்டுவிட்டதாகத் தத்தளிக்கிறாய்

கண்கள் தான் கிளி
கிளியின் கூடு மாதுளை
மாதுளைக்குள் என் சிவப்புச் செற்கள்
கண்களை மூடி
மிக அமைதியாகத் தூங்கு என்று
விலகிப் பறந்தேன்.

(மகுடி -  பெருங்கடல் போடுகிறேன்)
அனாரின் மகுடியில் உயிர்த்தெழும் புனைவு வெளியில் நிகழும் தேவதைக் கதையாக மகுடி கவிதை கட்டமைக்கப்பட்டுள்ளது. இப்புனைவுலகை நிர்மாணிக்கும் அல்லது வரையும் வண்ணமாக மாதுளைச் சிவப்பு, பவழத்தின் வண்ணம்,  சிவப்பு மின்மினி , சிவப்பு மீன் என செவ்வண்ணத்துள் உயிரிகளால் நிரம்பியுள்ளது. இவைகளைக் கொண்டு புதிர்த்தன்மை கவிதையாடலில் நூற்கப்படுகிறது. அவ்வப்போது விழிப்பு நிலைக்கு வந்தடையும் மகுடி கவிதை, கவிதையின் தொடர்ச்சியில் எழும் புதிர்மைகளுக்கு இறுதி வரிகளில் விடையளிக்கிறது.
கண்கள் தான் கிளி
கிளியின் கூடு மாதுளை
மாதுளைக்குள் என் சிவப்புச் சொற்கள்
பின்னர் கடைசியாகக் கண்மூடி
மிக அமைதியாகத் தூங்கு என்று
விலகிப் பறந்தேன்.
இக்கவிதையாடலிலிருந்து கவிதை  சொல்லியின் குரல் பிரிகிறது. இப்பிரதியின் குரலும் அதில் வரும் புனைவுயிரிகளுமாக சிவப்பு வண்ணத்தாலான தேவதைக் கதையாடலை பிரதிக்குள் உலவ விடுகிறார் அனார். அதில் வாசகன் உலவித் திரிந்த பின்னர் தூங்கும்படி சொல்லப்படுகிறது. நாம் ஒரு தேவதைக் கதையைக் கண்டதாகவும், கேட்டதாகவும் உணர்கிறோம்.
மேலே கண்ட கவிதையின் மாற்றுப் பிரதியாக அனாரின் 'பெருங்கடல் போடுகிறேன்' தொகுப்பிலுள்ள ' அவள் பறவைகள் வாழும் உடல் ' கவிதையில் மாற்றுப் பரிமாணமொன்று தென்படுகிறது.
அவளது மூக்கில் முளைத்திருந்த வால்வெள்ளியை
என்ன செய்வதென்று மணிக்கணக்காகப் பார்த்து நின்றான்.
..........................................................
பெயர் தெரியா வண்ணங்களுடன் அலையும்
சிறிதும் பெரிதுமான எண்ணற்ற அபூர்வப் பறவைகள்
.................................................................
அவள் பறவைகள் வாழும் உடல்
முதலில் பறவைகளை பழக வேண்டும்
.........................................................
தடாகத்தில் நீந்தும் தாராக்களை
ஒவ்வொன்றாகப் பிடித்து
நீர் சொட்டச் சொட்ட
புல்தரையில் விட்டபடி விளையாடுவது
அவனுக்கும்
அவளுக்கும் விருப்பமாகவிருந்தது.
இதில் குறிப்பீடற்று இருக்கும் வண்ணத்தை கவிதை சுட்டுகிறது. மேலும் எண்ணற்றப் பறவைகள் என நீள்கிறது. 'அவள்' என்பதை பறவைகளின் வாழும் உடல் என உருவகித்துச் சொல்லும் கவிதை.
துவக்கத்தில் அவளது மூக்கில் முளைத்த வால்வெள்ளியை என்பதிலேயே கவிதையின் இயங்குதளம் தேவதைக் கதையாடலுக்குள் நகர்ந்து விடுகிறது. முந்தைய கவிதை போன்ற ஒப்புமைகளை இது கொண்டிருக்கிறது. மகுடிக் கவிதையின் கடைசி வரிகளைப் போலவே இக்கவிதையிலும் உறைந்துள்ள உள்ளுறையாக அவள் என்பது உடலென பதிலியாகிறது. அவ்வுடல் என்பது பறவைகளது வாழுமிடம். கவிதையின் போக்கில் அவள் என்ற குறியை குறிப்பீடு செய்யும் பல சொற்சேர்க்கைகள் கையாளப்படுகின்றன. மொகலாய ஓவியம் இன்னும் இவையொத்தவை பிரதியெங்கும் புழங்குகின்றன. அவள் என்பதை மறைபொருளாய்ச் சுட்டிக் கட்டமைக்கப்படும் குறியீடுகளின் இயக்கத்தில் கவிதையாடல் தொடர்கிறது. அதாவது; முதலில் பறவைகளைப் பழக வேண்டும் எனச் சொல்லும்  எதிர்மறையான கவிதையாடல் அவனைப் பழக வேண்டும் என்கிறது.
தடாகத்தில் நீந்தும் தாராக்களை
ஒவ்வொன்றாகப் பிடித்து
நீர் சொட்டச் சொட்ட
புல்தரையில் விட்டபடி விளையாடுவது
அவனுக்கும்
அவளுக்கும் விருப்பமாகவிருந்தது.
4
அவ்வப்போது வாசிப்பின் விளிம்பிலிருந்து நம்மைக் காட்சி வெளிக்கும், இனமறியா அகவுணர்வின் வெளிக்கும் தனது நாதமார்ந்த வரிகளால் ஆட்டுவிக்கிறது அனாரின் கவிதைகள். வண்ணங்களில் நீந்துவது போலும் திரவத் திளைப்பில் ஆழ்த்தும் குறியீடுகள், படிமங்கள் அருகே வந்து நம்முடன் உறவாடுகின்றன. பின்னர் சட்டென குறிப்பீட்டைத் துறந்து 'குறிகளாக' மிதக்கின்றன. அனாரின் கவிதைகளில் தொடர்ச்சியாக சிவப்பு மற்றும் பச்சை வண்ணம் தன்னை வார்த்தைகளுக்குள் கூடுவிட்டு கூடுபாய்கின்றன. வண்ணங்களின் அனுபவ வெளியை  நமக்குத் திறக்கின்றன.
5
 நாகம் இவரது பிரதிகளில் சதாசர்வ காலமும் நெளிந்த வண்ணமாகவே உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட வேட்கையை மட்டுமே குறிப்பீடு செய்வதாகக் கொள்ளவியலாது. ஒருசில கவிதைகளில் குறியீடாகவும் சிலவற்றில் படிமமாகவும் இன்னபிறவற்றில் குறிப்பீடற்ற குறியாகவும் எஞ்சுகிறது. தனது வேட்கையின் அத்தனை அடுக்குகளையும், புலம்களையும் வண்ணத்தாலும், பறவையாலும், நாகங்களாலும் பிற வினோத காட்சியாகவும் நெய்து கொண்டே செல்கிறார்.
ஆங்காங்கே எளிதில் புலனாகாத நுண்வேறுபாடுகளைக் கையாண்டு பிரதியின் அடர்த்தியைக் கூட்டுகிறார். இயல்பிலிருந்து, மீ-இயல்பினுள் பாயும் இவரது கவிதைகள் அபூர்வமானவை. கவிதையாக்கத்தின் தொழில்நுட்பத்தை நன்கு வெளிப்படுத்தக் கூடிய கவிதை 'சிவப்பு நாகம்'
சிவப்பு வண்ணப் படிக்கட்டுகளில் வளைவில்
வெண்ணிறத் தூண்கள்
குகைவடிவில் இருந்த நீள் அறைக்குள்
குறைந்த ஒளியில் அமர்ந்திருக்கிறோம்.
ஆழ்ந்த நோவில்
சிவக்கும் திராட்சை உன் குரல்
மழையில் நடுங்குகின்ற
தனிச்சிவப்பான மாதுளைப் பூக்களின் துடிதுடிப்பு
சிறிது தூரம் நீந்திச் சென்று
பின் அமைதியாய் உடைகின்ற நீர்க்குமிழிகள்
நீ பாடிக் கொண்டிருந்தாய் காதலின் ரகசியத்தை
ஆடை பறந்து குடை விரிய
வெள்ளைக் காளான்கள் காற்றில் வளையமிட
'சூஃபிகள்' நடனத்தில் சுற்றுகின்றனர்
'கஃவ்வா ' கிண்ணங்களில் நிரம்பியுள்ளது
நீ பாடுவதை நிறுத்தவில்லை

வலியைத் துளைத்து வெளியேறும்
சிவப்புநிற நாகம்
நீ பாடி முடிக்கையில்
சூரியனில் இறங்கும்
(சிவப்பு நாகம் பெருங்கடல் போடுகிறேன்.)
இக்கவிதை அதி நுண்மையான இயக்கத்தைக் கொண்டிருக்கிறது.   ஒரு சூஃபியின் நடன சுழற்சியைப் போலவே கவிதையும் படர்கிறது. இதில் பாடுதல் அதன் உச்சத்தில் வலியை அடைதல் அடுத்ததாக அதிலிருந்து வெளியேறும் சிவப்பு நாகம் - பாடி முடிந்ததும் சூரியனில் இறங்கும் என்ற இடத்தை அனார் கூர்மையுடன் கவிதையாக்கியுள்ளார். இதில் பழகிவரும் சூஃபியின் நிலைகளை ஜாவித் நூர்பக்ஷின் பதத்தில் சொல்வதென்றால் ' சாமாஎனும் நிலையினில் பல்வேறு உணர்வுகளாலும் அனுபவங்களாலும் ' வஜ்த் ' என்ற மீ நிலையைக் குறிக்கிறது.
அதன் வகைமைகளில் இரண்டை இக்கவிதையுள் இனம் காணலாம். ஒன்று: தொலைந்து போனதைத் தேடி அடைவது
இரண்டுதுக்கத்தை கனலும் அசெளகரியத்துடன் வலியை அனுபவித்தல்.
அனாரின் சிவப்பு நாகம் இவ்விரு நிலைகளையும் கொண்டிருக்கிறது. முடிவில் சிவப்பு நிற நாகம் சூரியனில் இறங்குகிறது என்ற வரிகளில் வாசிப்பின் தர்க்கம் தகர்கிறதுஅறுதியிட்டு இதுதான் இதன் பொருண்மை என வரையறுக்க அனுமதிக்காத சிவப்பு நாகம் நம்மை பீடிக்கிறது. வலியின் அகத்திலிருந்து துளைத்து தன்னை வெளியேற்றிக் கொள்ளும் சிவப்பு நிற நாகம் நாமறியாமலே நம்முள் நழுவி இறங்குகிறது