Thursday, 26 April 2012

20.04. 2012 இல் மறைந்த கவிஞர். சண்முகம் சிவலிங்கம்(சசி) அவர்களின் நினைவாக, கனேடிய வானொலியில் (ctr24.com ) ஒலிபரப்பாகிய நிகழ்ச்சியில் பேராசிரியர். எம்.ஏ. நுஃமான், கவிஞர். சோலைக்கிளி, கவிஞர். சேரன், அனார் பங்குகொண்டு நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். 
--------------------------------------------------------------------------


அனாரின் ‘எனக்குக் கவிதை முகம்’ புத்தகம் குறித்து...

- இரவீந்திர பாரதி (இந்தியா)

-----------------------------------------------------------------------------------------------------------

இந்தப் பத்தாண்டுகளில் தமிழ்க்கவிதை புதிய ஒளியையும், வெளியையும் அடைந்திருக்கிறது. இதில் பெண் கவிஞர்களின் பங்களிப்பு கணிசமானது. ஒரு வகையில் இவர்களின் அதிரடி நுழைவால் நவீன தமிழ் இலக்கியத்தின் நோக்கிலும், போக்கிலும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது எனலாம். உடல் மொழி, பெண் அரசியல் என்று தங்களுக்கான மொழியையும் அரசியலையும் கட்டமைத்த போது, கலக்காரர்கள் கவிழ்த்துப் போடு பவர்கள் என்பது போன்ற கணைகள் இவர்கள் மீது வீசப்பட்டன. அவை இப்பொழுது முனை மழுங்கிய நிலையில், இவர்கள் அடுத்தக் கட்ட நகர்தலுக்கான உந்துதலில் முற்படுவதற்காக இருக்கிறார்கள். 

நுட்பமும், செறிவும் கொண்டு சொல்லுக்குள் புதிய சாரத்தை ஏற்றி வருவதை அவதானிக்க முடிகிறது. தமிழ்க் கவிதை உலகக் கவிதையாகவும் பரிமாணம் கொண்டிருப் பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் அவசியமாகும். உலக அளவில் கவிதையின் இருப்பை அவதானிக்கையில் ஈழத்தின் பங்களிப்பை யாராலும் ஒதுக்கிவிட முடியாது. ஈழக்கவிஞர்கள், மண்சார்ந்த கவிஞர்களாகவும், புலம் பெயர்ந்த கவிஞர் களாகவும் இருப்பதால் இருவகை அனுபவம் அவர்களின் படைப்புகளுக்குள் சேர்மானமாகின்றன. 

ஈழக்கவிஞர்களிலும், பெண் கவிஞர்களின் வருகையால் இலக்கியவானில் ஒளி கூடி வருகிறது. ஈழத்துப் பெண் கவிஞர்கள் இலக்கிய உலகை வெகுவாக அசைவுக்குள்ளாக்கி யிருப்பதையும் பார்க்கமுடிகிறது. 

போர்ச்சூழலும், போருக்குப் பின்னான இன்றைய சூழலும் துன்பங்களாலும், துயரங்களாலும் அமைந்தவை. தமிழகத்துத் தமிழர்களுக்கு ஏற்படாத கொடிய அனுபவங்கள் ஈழத்தமிழர் களுடையவை. போரிலும் கொடுமை, போருக்குப் பின்னரும் கொடுமை என்றால் அவர்தம் வாழ்வு எத்தகையதாக இருக்கும்: இருந்திருக்கும்? இந்த அனுபவங்களின் சாரம் அவர்களது படைப்புகளில் கசியாமல் இருக்க இயலுமோ? இத்தகைய அனுபவங்களிலேயே தமிழ் பேசும் முஸ்லீம்களின் துயரம் என்பது சொல்லுந்தர மன்று. தமிழ்பேசும் மக்கள் என்பதால் பேரின வாதக்கொடுமை ஒருபுறம் முஸ்லீம் என்பதால் சைவ இந்துத் தமிழர்களின் ஒதுக்கல் ஒருபுறம் என திரும்பும் பக்கமெல்லாம் துயரத்தின் கொடிய தாக்குதலுக்குள்ளான சூழலிலிருந்து முகிழ்த்த கவிதைகள் அனாருடையவை. 

அனாரின் கவி புதிது; அதன் முகம் புதிது. புதிய சொல்லாட்சி, புதிய மொழியாளுமை, ஆண்டாளின் கவிசொல்லும் பாணிகூட கைவருகிறது. களமும், மொழியப்படும் முறையும் தனித்துவமானது. நவீனத்தின் நவீனத்துவம் எனத்தகும் கவிதைகள் இந்தத் தொகுப்பு முழுக்க அணி வகுக்கின்றன. தானே கவிதையாகவும் சிறகடிக்க முடிகிறது அனாருக்கு. 

“வண்ணத்துப் பூச்சியின் பிரம்மாண்டமான
கனாக் காலக் கவிதை நானென்பதில்
உனக்குச் சந்தேகமிருக்கிறதா இனியும்?” 

இரத்தம் சிந்துதல் ஈழத்தமிழ் வாழ்வுக்குப் புதிதல்ல. ஒரு குழந்தையின் கைவிரல் தற்செயலாக அறுத்துக்கொண்டு அலறி வருகையில், விரல் சிந்தும் ரத்தத்துளிகள் இந்தக் காலத்தின் அளவிடமுடியாத பேரினவாத கொலைக்களத்தில் வன்கல்வியால் சிந்தும் ரத்தமாகவும் அநியாயமாகப் போரில் கொல்லப்படும் குழந்தையின் கொட்டும் இரத்தமாகவும் படுகிறது அனாருக்கு. 

“வன் கலவி புரியப்பட்ட பெண்ணின் ரத்தமாயும்
செத்தக் கொட்டுப் பூச்சியின் அருவருப்பூட்டும் ரத்தமாயும்
கொல்லப்பட்ட குழந்தையின் உடலி லிருந்து கொட்டுகின்றது இரத்தம்.” 

மிக நிசப்தமாக, குழந்தைத்தனமாக கவிதைகளில் நீரோட்டமாயும் மறை பொருளாயும் சமூக அரசியல் பார்வை செயல்படுவதையும் பார்க்கலாம். அரசி என்ற கவிதையில் 

“ஆணையிடுகிறேன் சூரியனுக்கு ஓர் இனத்தையே விழுங்கிக் கொண்டிருக்கும்
சமையலறையின் பிளந்தவாயை பொசுக்கி விடுமாறு” 

துன்பமும் துயரமும் மூடுபனிபோல் சூழ்ந்திருந்தாலும் வாழ்வின் மீதும் இயற்கையின் மீதும் கொள்ளும் ஆவல் கவிதையில் முகங்காட்டி நிற்பதை காணமுடிகிறது. 

“பாவனைகளோடு கொஞ்சிய முத்தம்
கண்களாகவும்
பெயர்சொல்லி அழைத்த கணங்கள்
நிறங்களாகவும் கொண்டொரு வண்ணத்துப்பூச்சி
நினைவெல்லாம்பறந்து திரிவதை
எப்படிச் சொல்லுவது
எனக்குச் சொல்லித்தா.” 

இயற்கையை எப்படி கவிதைப்படுத்துகிறார் பாருங்கள்... 

“நீண்டு உயர்ந்த மரங்களுக்கிடையில் 
விழுந்து முகம் பார்த்தேங்குகிற 
அந்திவெயில் துண்டங்களில்
என் தனிமையின் பெரும்பாரம்
கசிகின்றது.” 

இயற்கை மனித உயிருடன், வாழ்வுடன் எப்படி பிரிக்க முடியாமல் ஒன்றிவிடுகிறது என்பதைக் கவிதைக்கண் கொண்டுதான் பார்க்க முடியும் போல. இப்படி ஒரே சமயத்தில் துயரமும் வலியும் கூடி, நிழலும் வெயிலுமாக, இதம் பதமாக தமிழ்க் கவிதைக்கு மெருகேற்றிக் கொண்டிருக்கின்றன அனாரின் கவி வரிகள். 

அனாரின் எனக்குக் கவிதை முகம் (காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு) 


( கீற்று - 24.04.2012)





கனேடிய தமிழ் வானொலியில் (www.ctr24.com
ஒலிபரப்பாகிய நேர்காணல்.
--------------------------------------------------------------------------

Saturday, 7 April 2012

நாட்டுப்புறப் பாடகி


ஒரு வார்த்தைக்குள் ஒளித்துக்கொண்டேன்
நமது அந்தரங்கத்தை

கனிக்குள் புழுவாகி
அச்சொல் இனிப்பில் ஊறி நெளிகிறது

கனிகளைத் தராத ...... மௌன மரமாகி
நீ மரத்துப் போகத் தொடங்கிய நாளில்
அந்த வார்த்தை
பெரும் மலையாக மாறிவிட்டிருந்தது
இறுகவும் பாழ்படவும் தொடங்கியது

தனியே நாட்டுப்புறப் பாடலைப் பாடிக்கொண்டே
மலையைச் சுற்றத் தொடங்கினேன்

ஆன்மாவின் செவிகளுக்கு கேட்கின்ற
உன் மிருதுவான இசைக்கருவி
மௌனத்தின் உறுப்பாகிவிட்டதா

வனப்பறவைகளது தானியங்களால்
பசி தணிக்கிறேன்
எதிர்ப்படும் அபாய விலங்குகளின் கண்களில்
உன் இசையிலிருந்து மந்திரித்த
பொடிகளைத் தூவுகிறேன்

“பாலாய் கொதிக்கிறேனே ....
பச்சைபோல் வாடுறேனே ....
நெய்யாய் உருகுறேனே ....
உன் நினைவு வந்த நேரமெல்லாம் ....“

என் நாட்டுப்புறப் பாடல்
மலையில் எதிரொலித்து வீழ்கிறது




12 பெப்ரவரி 2012