Saturday, 29 September 2012


மிதக்கும் வெண்ணிற இசை......
 -----------------------------------------------------------------------

- அனார்



ஒருவருடைய ஆன்மாவிற்குள் நுழைவதற்கு அறிவியல் கற்கை நெறிகளை பயின்று பாண்டித்தியம் அடைந்திருக்கத் தேவையில்லை. ஓர் இசையின்... கவிதையின்.... ஒளித்துவாரம் வழியாக எந்தவொரு உயிரின் ஆன்மாவிற்குள்ளும் நுழையலாம்... உயிரைத் தொட்டுத் திரும்பலாம் என்பது அனுபவத்தின் வழியாக நான் உணர்ந்த விடயம். புதிரான... அந்தரங்கமான... நுண்மையான... மிக மென்மையான செயற்பாடு இது.


அந்த ஒளியை சிலரின் கண்களில் பார்த்திருக்கிறேன்... சிலரின் சொற்களில் கேட்டிருக்கிறேன்.... மிகக் கணிசமான எழுத்தாளர்களின் படைப்புக்களில் கண்டிருக்கின்றேன். யாருடையதோ கனத்த மௌனத்திலும்.... எவருடையதோ இசையிலும்... அந்த ஒளியை உணர்ந்திருக்கிறேன். இசையின் ஒளியோடு வாழ்ந்து வருகின்ற நண்பர் ஷாஜியை அண்மையில் என் வீட்டில் சந்தித்தேன்.



கவிதையின் ஒளியால் இசையின் ஒளியை உணர முடிமென்பதால் இந்த சந்திப்பிற்கு அர்த்தமும் அழகும் மிகை இல்லாமல் இருந்தது. விளக்குகளை அணைத்துவிட்ட வீடு முழுக்க அனைவரின் நடுவேயும் ஷாஜியின் இசைஒளி மாத்திரமே ஒளிர்ந்து கொண்டிருந்தது. அன்றைய இரவின் பிரகாசத்தில்,  இசையின் நிழலில் கண்ணீர் துளிர்திருந்தது. ஜன்னல் கண்ணாடிகளில்... வெப்பத்தின் ஆவி படிந்திருந்தது. ஷாஜி கஸல், மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழிப்பாடல்களை பாடிக்காட்டுவதும்... கவிதைகளை மொழிபெயர்த்துச் சொன்னபடியும் உரையாடிக் கொண்டிருந்தார்.

இசையைப் பேசுவதன் இன்பமும்... இசையைப் பாடுவதன் துயரமும்... ஒன்றையொன்று முந்திக்கொண்டிருந்தன.

ஈர மணல்வெளியும்
கடல் அலைகளும்
சாம்பல் மேகங்களும்
தனியே கரையில் கிடக்கும் தோணியும்
உப்புக் கரிக்கும் காற்றும்
உணர்வைக் கருக்கும் காதலும்
நீலமும் வெண்மையும்
குன்றுகளும் நீண்ட பாதையும்
பொடுபொடுத்த மழையும் தனித் பனைமரமும்
குறுக்கே ஓடுகின்ற மயில்களும்
காதுகள் முளைத்துக் கேட்டிருந்தன

அன்று வெயிலும் இருந்தது
மழையும் இருந்தது
அபூர்வமான நாள்

இசையை நேசிப்பதானது.... இசைப்பவர்களின் குரல்களை, இசைபற்றி விபரிப்பவர்களை, இசைக்கருவியின் தனித்த ஓசைகளை என விரிந்து... வாழ்வே, இயற்கையே இசைதான் என வியக்கிறேன்.

இசை பற்றிய அறிவுபூர்வமான தெளிவுகளை அடைவதற்கும், நுணுக்கமான ரசனைக்குரிய வழிமுறைகளை நெருங்குவதற்கும் தமிழில் ஷாஜியின் கட்டுரைகள் உதவுகின்றன. அவருடைய கட்டுரைகள் இலக்கியப் படைப்பினைப் போன்றே முழுமையான தாக்கத்தை தருகின்றவை.

இதுவரை மூன்று தொகுப்புகள் தமிழுக்கு கிடைத்திருக்கின்றன. ரசனையாக மட்டுமன்றி பெரும் அனுபவமாக விரிந்துசெல்லும் திறன் மிக்க கட்டுரைகள் மூன்று தொகுப்புகளிலும் இருக்கின்றன. ஷாஜியின் மேன்மையான சிந்தனைகளோடு, ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும்  அவருடைய ஒவ்வொரு எழுத்துக்களிலும் காணலாம்.


அன்பின் மையத்தில் விலகாத புள்ளியாக... அவருடைய பணி இருக்கின்றது. உண்மையில் அனைத்தையும் அன்புதான் தொடங்கி வைக்கின்றது... இசை அதனை அழகாக்கி நிலைக்கச் செய்கின்றது.




Friday, 7 September 2012

அமைதியான தீச்சுடர் கவிஞர். சுகுமாரன்
--------------------------------------------------------------------------------------------------------

- அனார்



கவிஞர். சுகுமாரன் அவர்கள் மொழிபெயர்த்த அயல்மொழிச் சிறுகதைகள் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். 'லயோலா என்ற பெரும்பாம்பின் கதை' - இன்நூலின் அட்டை வடிவமைப்பைக் கண்டு ,கடந்த ஜனவரி சென்னை புத்தகச்சந்தையில் காலச்சுவடு அரங்கில் வாங்கியிருந்தேன். மிக நேர்த்தியான, இலக்கிய நூலுக்குரிய அட்டை வடிவமைப்புடன் இச்சிறுகதைத் தொகுப்பு இருந்தது. இவ்வளவு அழகான வடிவமைப்புடன் அமைந்த இந்நூலுக்குள் உள்ள சிறுதைகள்.... தமிழுக்கு அத்தனை புதியதாக எனக்குத் தோன்றுகிறது. 


விருந்து - என்ற கதையைப் படித்தபொழுது ஒரு கணம் முழுதுமாக நொறுங்கிப் போனேன். 

மேஜை மேஜை தான், மிகயீலின் இதயம் நின்றுவிட்டது, கருங்குறிப்புகள்...., இப்படியான கதைகளின் ஆழம்பற்றி சொல்வதற்கு முடியாதுள்ளது. 

உனக்கு விருப்பமென்றால் என்னை அழை - இக்கதையின் இயல்பான மொழி, அந்த மனிதர்கள், காதல், மனம்... கதை நிகழுவதை கண்ணாடியில் பார்ப்பதுபோல இருந்தது. அந்தக் காட்சிகளை மொழியில் வரைந்து தந்துள்ளனர். 

வீடு திரும்புதல் - கதைபோன்றதொரு கதையை எழுத வேண்டும்போல் எனக்குத் தோண்றியது. காலச்சுவடுக்கு நன்றி. 

சுகுமாரன் அவர்களின் இலக்கியப் பணிகள் பரந்து விரிந்த ஒன்று. இவ்விடத்தில் அவரது இலக்கிய வாழ்க்கைப் பணிகள் தொடர்பாக முழுமையாக எழுத இயலாது . இச்சிறுகதை நூலுக்கு முன்பு அவருடைய இன்னொரு மொழி பெயர்ப்பு நூலை நான் பல நூறு முறைகள் வாசித்திருக்கிறேன். என்றும் என்னுடைய மற்றொரு அங்கம் போன்றிருந்த அந்த நூலின் பெயர் 'பாப்போல நெரூதா கவிதைகள்' - உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருந்தது. 


சாம்பல் நிற அட்டை வடிவமைப்பில் இருந்த அந்த நூல் என்னுடைய தலையணைக்கருகில் எப்போதும் இருந்தது. சுகுமாரன் அவர்களது மனவெளி கவிதை உலகம் மிக நுண்மையாது. பன்முகம் வாய்ந்ததும், வெளிப்படையானதும் ஆகும். அதிக தடவைகள் அவருடன் பேசியிருந்தாலும் சென்ற ஜனவரியில் தான் நேரில் பேசுவதற்கு பல சந்தர்ப்பங்கள் வாய்த்தன. அந்த உரையாடல்கள் மிகுந்த பயனுள்ளவை. என்னுடைய எழுத்துக்களுக்கு நன்மைகள் சேர்ப்பவை. 

சுகுமாரன் அவர்களது தளும்பாத இலக்கியப் பணிகள்... மௌனத்திலும், அமைதியிலும் உருவாகின்றவை. ஒரு தீச்சுடரைப்போல் சத்தமின்றி ஒளிர்பவை. அந்த உயிர் எரிதல்.... அவருடைய ஒவ்வொரு எழுத்துக்களினதும் வெளிச்சம். 

நவீன இலக்கிய எழுத்து வடிவங்களை, அவருடைய தொகுப்புகள் அடையாளப்படுத்துகின்றன. அவரது கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கள் அனைத்தும் இதற்கு சாட்சியாகும். 

வேறு என்ன சொல்வது? 

நான் எப்படி பாராட்டுவது ?