பொடுபொடுத்த தூத்தலாகிப் புழுதியின் ஆதிமணங்கிளர்த்தும்
பாமரப்பாடல்கள்
-----------------------------------------------------------------
- கிண்ணியா எஸ். பாயிஸா அலி
பாமரப்பாடல்கள்
-----------------------------------------------------------------
- கிண்ணியா எஸ். பாயிஸா அலி
கவிதையெனும்
செயற்பாட்டுக்கான எந்தக் கோட்பாடுகளும் இஸங்களும் தோன்றியிராத ஒரு காலகட்டத்தில்
எழுத்தின் வாசனையைக்கூட நுகர்ந்திராத பண்டைய நாட்டுப்புறச் சூழலில் வாழ்ந்து
மறைந்த அன்புள்ளங்களின் உணர்ச்சிப்புலப்பாடுகளே இம்மழைத்தூறல்கள்.
சாய்ந்தமருது
என்ற ஊரைச் சேர்ந்த அனார், தொண்ணூறுகளில் எழுத ஆரம்பித்தவர். இந்நாட்டார்பாடல்
தொகுப்போடு, “ஓவியம் வரையாத தூரிகை“, “எனக்குக் கவிதை முகம்“, “உடல் பச்சை வானம்” எனும் மூன்று கவிதைத் தொகுப்புகளுக்காகவும் அர்ப்பணிப்போடு உழைத்ததன்மூலம்
ஏராளமான தேசிய, சர்வதேச விருதுகளையும் வென்றிருப்பவர்.
கவிதை தவிர சிறுகதை முயற்சிகளிலும் ஆர்வங்காட்டி வருகின்றமையை அவரது ஓரிரு
சிறுகதைகளை வாசிக்கக் கிடைத்தன்மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. மேலும் சமூகம்,
இலக்கியம் சார்ந்த கட்டுரைகளையும் எழுதிவருகிறார். சர்வதேச அளவில் இவரது
எழுத்தானது தனக்கென்றொரு வாசகவட்டத்தை தக்க வைத்திருப்பதோடு திறனாய்வாளர்,
கல்வியியலாளர் கவனத்தையும் கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்து இலக்கிய சஞ்சிகைகளிலும் இந்திய, புலம்பெயர் சிறுசஞ்சிகைகளிலும்,
இணையதளங்களிலும் இவரது ஆக்கங்கள் உலாவருகின்றன. தனக்கான வலைப்பூவிலும் (இதமி)
இவரது ஆக்கங்கள் உலாவருகின்றன, மற்றும் முகநூலிலும் தனது கருத்துக்களை, கவிதைகளைத்
தொடர்ச்சியாய் பதிவிட்டுவருகிறார்.
நவீன கவிதைகளுக்குள்ளேயே தொடர்ச்சியாய் செயற்படும் அனாரின் நாட்டார்பாடல்
தொகுப்பு வெளியிடப்பட்டிருக்கிறது எனுஞ் செய்தியறிந்தபோது கொஞ்சம் வியப்பாகவும்
உடனடியாக வாசிக்கவேணுமெனும் ஆவலாகவும் இருந்தது. இந்தியப் பதிப்பக வெளியீடுகளை
அவசரமாகவெல்லாம் படித்துவிடமுடியாதே. ஆனாலும் எமது மரியாதைக்குரிய எழுத்தாளர்
எஸ்.எல்.எம். ஹனீபா அவர்கள் மூலமாக உடனடியாகவே வாசிக்கக் கிடைத்ததை நன்றியோடு
சொல்லிக்கொள்கிறேன். அழகிய வடிவமைப்பும் நுண்ணுணர்வோடு மிளிரும் புகைப்படங்களுமாய்
நேர்த்தியாக வந்திருக்கிறது இத்தெகுப்பு. பின்னிணைப்பாகத் தரப்பட்டிருக்கும்
துணைநூற்பட்டியல், கிராமியச் சொற்களுக்கான பொருள்விளக்கம் என்பன இன்னொரு
தேடலுக்கான புதிய கிளைகளாக விரிகின்றன.
‘ஒவ்வொரு சொல்லிலும் உள்ளுறைந்திருக்கும்
ஆன்மாவின் பச்சை, காதலின் அப்பளுக்கற்ற வாசனை ஆணினதும் பெண்ணினதும் கண்களில்
இருந்து தெறிக்கின்றது. அந்தக் கணத்தின் குரலில் இருந்த இசையின் உயிர்
ஒருபோதும் அழிவற்றது’ என்கிறார் அனார் இத்தொகுப்பிற்கான
தன்குறிப்பில்.
அனாரின்
எல்லாக் கவிதைக்குள்ளும் வற்றாத நீர்ச்சுனையாய் ஊறிக்கொண்டேயிருக்கும் காதலையும்
அழகியலையும் அவரின் கவிமனம் எங்கிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை என்னால்
இப்போதுதான் உணரமுடிகிறது.
உண்மைதான்
அனார் சொல்வதுபோல ‘இன்றைய உலகமயமாக்கல், அறிவுப்பெருக்கம்,
நாகரீகவளர்ச்சி, இலக்கிய மாற்றங்கள் அனைத்தையும் தாண்டி இன்றைக்கும்
இக்கவிகளிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ள ஏதோ ஒன்று நிச்சயம் இருக்கிறது. அதுதான்
நாமின்னும் அடையமுடியாத ஒன்றாகவும் உள்ளது’. அதை அடைவதற்கான பெருமுயற்சிதான் அனாரின்
கவிதைகளை எவரும் திரும்பிப்பார்க்க்க் கூடியளவுக்கு வசீகரப்படுத்தியிருக்கிறது
போலும்.
“நாட்டுப்புற
இயலானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ, எதைப் பயிற்சிபெற்றதோ
அவற்றைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும்“ என்கிறார் நாட்டாரியல்
பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர் எம்.எஸ். பினோஸா. இவரின் இக்கூற்றானது
நாட்டாரியல் இயல்புகளை வெகு அழகாகச் சித்தரிக்கின்றது.
கிராமிய
இலக்கியம். நாட்டாரிலக்கியம், பாமரப்பாடல்கள், எழுதாக்கவிதைகள், வாய்மொழி
இலக்கியம், நாட்டுப்பாடல்கள், மக்கள் மரபியல், சிற்றூரியல், பாமரர் இலக்கியம்,
பொதுப் புராணவியம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்நாட்டாரியலை ஆய்வுக்குரிய
இலக்கியமாக அனைத்துலகக் கல்விப் புலத்திற்குக் கொண்டுவந்த பெருமை “ஜேக்கப் கிரீம்“
என்ற மொழியியலாளரையே சாரும். ஐரோப்பியப் பாரம்பரியத்தில் ஜேர்மனியர்களே நாட்டாரிலக்கியத்துறையில்
கூடுதலான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றனர். முதன் முதலாகத் தமிழில் உள்ள
நாட்டுப்புற வழக்காறுகளைச் சேகரித்தவர் “பார்த்தலோமியுஸ் சீகன்பால்கு“ எனும் ஜேர்மனியரே
(நன்றி கூர்மதி) என்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.
தமிழ்ப்
பாரம்பரியத்தில் வழக்கிலிருந்துவரும் நாட்டாரியல் பண்புகள் சிந்துவெளிக்காலத்துப்
பண்பாட்டு விழுமியங்கள், கிராமிய சிறு தெய்வ வழிபாட்டுமுறைகள, சடங்குகள்.
நம்பிக்கைகள் என்பவற்றின் எச்சங்களாகவே
கொள்ளப்படுகிறது.
வாய்மொழியாகப்,
பாரம்பரியமாக வழங்கிவரும் நாட்டுப்புறப்பாடல்கள் அக்காலத்திலிருந்தே குடிமக்களால்
பாடப்பட்டு வந்திருப்பதைக் காணலாம். இதுபோல் பிறப்புமுதல் இறப்புவரையிலான எல்லாப்
பருவங்களுக்குமான பாடல்கள் நாட்டாரிலக்கியத்தில் காணக்கிடைக்கின்றன. பயன்பாட்டின்
அடிப்படையில் அவற்றை தாலாட்டுப்பாடல்கள், சிறுவர் பாடல்கள், தொழிற் பாடல்கள்,
காதற் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், கதை கூத்துப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள்
என வகைப்படுத்தலாம்.
இவ்வகையான
நாட்டார் பாடல்களிலும் ஊடுபாவாய் உள்ளோடியிருப்பது அன்புணர்வொன்றேதான். அந்த
அன்புணர்வுதான் காதலாகவும், கருணையாகவும், பாசமாகவும், பரிவாகவும் ஓர்மமாகவும் ஏன்
கோபமாகவும்ங்கூட வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இவற்றுள் காதல்
வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் தமது அன்புணர்ச்சியை சுய அனுபவங்கள்
சார்ந்த கருத்துக்களோடு வெளிப்படுத்தப்படுவதைக் காதற்பாடல்களாகக் கொள்ளலாம். அத்தோடு தொழிற் களங்களிலோ வண்டிப் பயணங்களிலோ
ஆண் பெண் இணைந்து பாடுவதுங்கூட காதற் பாடல்களே.
அனாரின்
பொடுபொடுத்த மழைத்தூத்தலின் குவியப் புள்ளியுங்கூடக் காதல்தான்.
குறவஞ்சிப்பாடல்களை நினைவூட்டுகிறது கவிகள் தொகுக்கப்பட்ட வடிவமுறை. 160 காதல்
பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில் நாட்டார்பாடல் தொகுப்போர் கவிஞராக
இருப்பதில் பெரும்பாலான ஆய்வாளருக்கு உடன்பாடிருப்பதில்லை. ஏனெனில் அவர்கள்
ஓசைக்கேற்பவோ அல்லது எதுகை மோனை கருதியோ தமக்கிசைவான சொற்களை இணைத்து அதன் மூலவடிவத்தை
மாற்றிவிடக் கூடுமென்பதால்தான். எனினும் “தான் இதைத் தொகுக்க முனைந்தவேளையில்
வடிவத்தை சிதைக்காமல் எளிமையாக அதன் முழுமையோடு தொகுப்பதில் தான் கவனமெடுத்ததாக
அனார் கூறுவது நம்பிக்கை தருகிறது.
நாட்டார் காதல்
பாடல்கள் உண்மையாகவே காதலர்களால்தான் பாடப்பட்டதா இல்லை பாவனையடிப்படையில்
ஏனையோரால் பாடப்பட்டதா எனும் ஐயம் எழாமலில்லை. பண்டைய கிராமிய வாழ்க்கைச் சூழலில்
காதலர் சந்தித்து இணைந்து கவிபாடி மகிழ்ந்திருக்கக்கூடும். அவர்தம் வாழவில்
இப்பாடல்கள் நேரடிப்பயனைத் தந்திருக்கக் கூடும். எனினும் காலச்சுழற்சி தந்த சமுதாய
வளர்ச்சியும் சூழல் மாற்றமும் சமூகக்கட்டுப்பாடுகளும் அடுத்துவந்த காலங்களில்
இவற்றைப் பாவனையடிப்படைக்கு உட்படுத்தயிருக்கலாம்.
அன்றைய
வாழ்க்கைமுறை, சமுதாயமரபுகள், தொழில்முறைகளை எவ்வித மாற்றமுமின்றி உட்பொருளாகக்
கொண்ட இப்பாடல்களில் இப்பிரதேசத்தின் அக்காலத்தைய மக்களால் பிரதான பரம்பரைத்
தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாயம், விலங்குவேளாண்மை, கடற்றொழில்,
கடல்வாணிபம், வியாபாரம், நெசவு, சிறுகைத்தொழில்கள் போன்றவற்றில் புளங்கும்
சொற்களோடு கூடிய மரபுரீதியான சொல்லாட்சிகளும் இயற்கையோடொன்றிய உவமைகளுமாய்
எளிமையோடு மிளிர்கின்றன இப்பாடல்கள். மொழிச்சிக்கலில்லா எளிமையும் அழகுணர்வுந்தானே
உலக மொழியனைத்திலுமுள்ள நாட்டாரியலின் சிறப்பியல்பு.
ஒரு நாட்டின்
இசைக்களஞ்சியமாகவும் இசைச் செல்வமாகவும் நாட்டார்பாடல்கள் கணிக்கப்படுகின்றன.
மேற்குலகைப் பொறுத்தவரையில் நவீன விஞ்ஞான, தொழிநுட்ப மருத்துவத் துறைகளில்
மேம்பட்டிருப்பதுபோலவே இசைத்துறைக்காவும் அதிக அக்கறையோடு உழைத்துவருகின்றனர்.
தமது நாட்டார்பாடல்களைக்கூட ஒலிப்பதிவுசெய்து அவற்றிற்கு ஒலிக்குறிமானமிட்டுப்
பேணிவருகின்றனர்.
எமது
நாட்டார்பாடல்களும் அதற்குரிய இசையோடு பதிவுசெய்யப்படவேண்டும். நாட்டார்
பாடல்களின் உயிர்ப்பே அதன் இசையமைதலில் தானே தங்கியுள்ளது.
இந்தவகையில்
“வெள்ளை முக்காடிட்ட அந்த முதிய பெண்ணுருவம் புகைபோல நெளிந்து காற்றில் கரைந்து
போனாலும் காற்றை நீவிப் படபடக்கின்ற அந்தக்குரலின் ஓசையைக் கூர்ந்து
கேட்கிறேன்...“ என்கிற கவிஞர் அனார்...
மிகுந்த
வனப்பான இந்த நிலப்பகுதியின் பாரம்பரிய வாழ்க்கை முறைமைகளில் சொற்பமானவற்றைக்
கண்கூடாகக்கண்ட, பெரும்பாலானவற்றை முதியோர்களிடமிருந்து செவிவழியாகக் கேட்டறிந்த
கடைசிப் பரம்பரையில் ஒருத்தி“ தானென நம்புகிற கவிஞர் அனார்... அவரின் சொந்த
மண்ணின் முதுசொமொன்றினற்கு உயிர்ப்பூட்டுவதற்குப் பொருத்தமான ஒருவரே. அத்தோடு
கிழக்கிலங்கைக்கும் இந்தியாவின் கேரளப் பிரதேசத்திற்குமிடையிலுள்ள பண்பாட்டு கலை
கலாசார ரீதியான ஒற்றுமைகள் தொடர்பில் ஏற்கனவே பேசப்பட்டிருக்கின்றது. இவ்விரு
பிரதேச நாட்டாரியல்கூட பல்வேறு சொற்கள் குறியீடுகள் வடிவங்களை பெருமளவில்
ஒத்திருக்கின்றன. இதுதொடர்பான ஆய்வுகள் கிழக்கிலங்கை நாட்டாரியலுக்குள் புதிய பார்வையைப்
படியவிடலாம். அத்தோடு ஏற்கனவே தொகுக்கபட்டிருக்கும் தாலாட்டு, ஒப்பாரி, கூத்து,
தொழில்பாடல்களும் புதிதாய் மறு பதிப்பிற்குள்ளாக்கப்படுவதும் காலத்தின்
தேவையாகும்.
இதயத்துணர்வுகளை
ஈர்த்தெடுக்கும் இவ்வாறான அழகிய கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்களைத் தொகுப்பாக்கித்
தந்திருக்கிறார் கவிஞர். அனார். மெல்ல மெல்ல மங்கி மறைந்து கொண்டிருக்கும் எமது
மண்ணின் முதுசொம்களிலொன்றுக்கு மீளவும் புதுப்பொலிவூட்டியிருக்கும் கவிஞர்
அனாருக்கும் இத்தொகுப்பை அழகுறப் பதிப்பித்த “க்ரியா“ வுக்கும் இம்மண் சார்பான என்
நன்றிகளும் வாழ்த்துக்களும்.
-------------------------------------------------------------------
நன்றி : காலம், இதழ் 42, July 2013
வெளியீடு :
க்ரியா
புதிய எண் 2, பழைய எண் 25
முதல் தளம், 17வது கிழக்குத் தெரு
காமராஜர் நகர், திருவான்மியூர்
சென்னை - 600 041
தொலைபேசி: 72999 05950
Email: creapublishers@gmail.com
Website: www.crea.in
புதிய எண் 2, பழைய எண் 25
முதல் தளம், 17வது கிழக்குத் தெரு
காமராஜர் நகர், திருவான்மியூர்
சென்னை - 600 041
தொலைபேசி: 72999 05950
Email: creapublishers@gmail.com
Website: www.crea.in