Thursday, 5 June 2014



வெள்ளுறை பனியின் குருதி :

----------------------------------------------------------------------------------------------

- அனார் -




ஒரு பெண் ஏன் கவிதை எழுதுகின்றாள்? ஏன் அவள் தற்கொலை செய்கின்றாள்? என்ற கேள்விகளுக்கு என்ன பதில் கூறமுடியும்? இரண்டும் வேறு வேறல்ல என்பதே என் முன்னுள்ள ஒரே பதிலாகும்.

கவிதைகளை எழுதிவிட்டு ஒருவேளை அவள் தற்கொலை செய்யாதுவிட்டால், வாழ்க்கையில் பலவிதங்களில் அவள் கொல்லப்படுவதை தாங்கிக்கொள்ள நேரிடும். உயிரோடிருப்பதே அதிசயமாகிப்போன உலகில் வாழ்வதற்காக கவிதை எழுதவந்த, எழுதுகின்ற பெண்களின் அனுபவங்கள் பலவும் இவ்விதமானவையாக அமைந்திருக்கின்றன.

ஒரு பெண் தன்னை வெளிப்படுத்தவும் மறைத்துக்கொள்ளவும் கவிதையைத் தேர்ந்தெடுக்கிறாள். நடைப்பிணமாக வாழ்வதிலிருந்து தப்பிப்பிதற்காக தற்கொலை செய்கின்றாள். 

//மரணித்தல் ஒரு கலை 
மற்ற அனைத்தையும் போலவே
நான் அதை மிகச்சிறப்பாகச் செய்கிறேன்
நான் அதை நரகம் போல் செய்கிறேன்
நான் அதை நிஜம் போல் செய்கிறேன் 
இதற்காகவே பிறந்தவள் 
நான் எனவும் சொல்லலாம்
ஒரு அறைக்குள் செய்யுமளவிற்கு அது சுலபமானது
அதைச் செய்துவிட்டு அசைவற்று கிடக்குமளவிற்கு
அது சுலபமானது//

இன்னும் இறவாமல் துடித்துக்கொண்டிருக்கும் சில்வியா பிளாத்தின் கவிதைகளின் ஆன்மா முழுக்க, மனக்குலைவுகளால் நசிவுண்ட குளிர் பரவிய பனியின் குரல் கேட்கின்றது. இருண்மையான அநாதரவான அலைவுற்ற மனத்துடன் தனக்கொரு அரூபமான இடம்தேடி மிதந்து தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி சில்வியா பிளாத் எனக்கூறலாம்.

கவிதைக்கான முக்கியத்துவம் என்பது கவிஞருக்கான முக்கியத்துவமும் சேர்ந்ததுதான். எந்தக் காலகட்டத்திலும் தன்னை உருக்கிப்படைக்கும் எத்தகைய பெண் கவிஞர்களுக்கும், இது பொருந்தக்கூடியது. உலகின் பல்வேறு காலகட்டங்களில் பல பெண் கவிஞர்கள் தோன்றி மறைந்து போயிருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலமும் அவர்கள் முரண்பட்டு போராடி முன்னெடுத்த உரிமைகளும் எதிர்பார்ப்புகளும் சவால் மிகுந்ததாகவே அமைந்துள்ளது.

அன்பிலும் காதலிலும் அதீதத் தன்மையை விழைந்த ஒரு பெண், தன் அகமும் புறமும் ஆர்ப்பரிக்கின்ற சிந்தனை மற்றும் நம்பிக்கைகளில் குழம்பியவளாக இருந்தவாறு, எவ்விதம் கவிதைகளுக்குள் தெளிவான மொழியைச் செலுத்தினாள்? வலிமைமிக்க கூர்மையான கவிதைகளை எழுதினாள்? ஒரு கவிதைக்கும் அடுத்த கவிதைக்குமான காத்திருப்பின் இடைவெளியை ஊடறுத்துப்போகும் மின்வெட்டுக்கள் எத்தகையதாக இருந்திருக்கும்? 

“உறைந்த பனிப்பாளம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகிப் பல்லாயிரம் குளிர் ஊசிகள் பாதத்தைக் குத்துவதுபோன்ற அனுபவத்தை அவருடைய படைப்புத்தரும்“ என முன்னுரையில் கீதா கூறிப்பிடுகிறார்.

சில்வியா பிளாத்தின் கவிதைகளுக்குள் ஒருவர் உள்நுழைவது மிக வேறுபட்ட அனுபவத்தை நிச்சயம் தரும். கவிதை வாசிப்பதன் அனுபவம் மாத்திரமல்ல அது ஒரு பெண்ணை அவள் கண்களிலிருந்து உயிரின் வேர்வரை முழுமையாக தரிசிப்பது ஆகும்.

பரிபூரணமான காதலின் முன்பாக சரணடைந்து அவள் கழுத்து நெரிபட்டு வதைக்கப்பட்டாள். பல சமயங்களில் நெரிக்கின்ற அந்தக் கை அவளுடையதாகவே இருந்திருக்கின்றது. பிளாத்துடைய சொற்கள் கண்ணீருக்குள்ளே மீன்குஞ்சுகள் என நீந்துகின்றன. திடீரென அவளுடைய மனம் ஒரு பயங்கரமான மீனாகி அவளையே கடிக்கினறது.

//நான் வெள்ளி
துல்லியம்
எனக்கு முற்கற்பிதங்கள் இல்லை
அன்பினதும் வெறிப்பினதும் நீர்த்திரை கோர்க்காது
பார்ப்பதை உடனே அப்படியே விழுங்குகிறேன்
நான் கொடுமையானவள் இல்லை
உண்மையானவள் மட்டுமே
நான்கு கோணங்களுடையவள்
சிறிய கடவுளின் கண் 
எனக்கூறுகிறாள்//

முழு வாழ்வின் சாரத்தையும், வாழ்க்கையின் இடை நடுவிலேயே கண்டுகொண்ட துயரம், தீராத விரக்திக்குள் அவளைத் தள்ளி விடுகின்றன. மன இருளின் அமைதியின்மையால் உள்நொறுங்கி உடைந்த கண்ணாடிச் சில்லுகளில் தன் தசைகளை குத்திக்கொள்வதன் வலிமிக்க அனுபவங்கள். பிளாத்தின் நிகழ்காலத்திலேயே எதிர்காலமும் இறந்தகாலமும் விலகாமல் சுழன்று வருகின்றது. துவேசங்கள் ஏமாற்றங்கள் தோல்விகளால் நசுங்கிய பொழுதுகளை புராதனமான படிமங்களில் பொருத்தி எழுதியிருக்கின்றார். வஞ்சிக்கப்பட்ட இருதயத்திலிருந்து பீறிடும் சொற்கள் பெண் இயல்புகளால் புரிந்துகொள்ளப்பட வேண்டிய அவசியத்தை கோரிநிற்கின்றன.

//அடித்தட்டு எனக்குத்தெரியுமென்று
அவள் சொல்கிறாள்
என்னுடைய ஆணிவேரிலிருந்து 
எனக்குத் தெரியும்
அதற்குத்தான் நீ அஞ்சுகிறாய்
அஞ்சவில்லை நான் அங்கு இருந்திருக்கிறேன்//

சில்வியா பிளாத் வாழ்ந்த காலகட்டத்தின் அழுத்தங்கள், அவருடைய அகவெளியின் நெருக்கடிகள், பிளாத்தின் சிறுவயதில் ஏறபட்ட தந்தையின் இறப்பு கணவனின் புறக்கணிப்பை தொடர்ந்த பிரிவு, இரு வேறுவிதமான ஆழமான காயங்களாக அமைந்துவிட்டது. எப்பொழுதும் திருப்பிச்சேர்க்க முடியாதபடி எதனாலும் சரிசெய்யவே முடியாதபடி உள்ளுற நொறுங்கி நிலைகுலைவுக்கு ஆழான பெண் இவர். அந்தரங்கமான மனப் பதை பதைப்பிலிருந்து உதிரும் சொற்களால் தொன்மமான நினைவுகளுக்குள் உணர்வைச்செலுத்தி கவிதைகளை ஒரு காவியத் தன்மைக்குள் உலவ விடுகின்றாள். புராதனமான கற்சிலைகளின் கண்களுக்கு பார்வைகளை வழங்குகிறாள். மூடுபனியின் ஒளியற்ற ஒளியில் அக்கற்சிலையின் முகம் பின்னர் அவளுடைய முகமாகவே ஒளிர்கின்றது.

வாழ்க்கை மீது, மனிதர்கள் மீது, அன்பின் மீது நமக்குள்ள கேள்விகள் தன்மீதே தனக்குள்ள கேள்விகள்தான் சில்வியாப்பிளாத்தின் கவிதைகள். திருமணம், பாலியல் சார்ந்த பெண்நிலை உறவுகளுக்கிடையேயான முரண்கள், மகள் மனைவி தாய் பெண் எனும் தனித்தனி பன்முகமான நிலைகளை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

எக்காலகட்டத்திற்குமான பெண்ணெழுத்துக்கு பிளாத்தின் கவிதைகள் நிச்சயம் வலுவான புதிய எழுச்சிகளை உருவாக்கும். அனுபவத்திலிருந்தும் உண்மைகளிலிருந்தும் காயங்கள் நிரம்பிய கனவுகளிலிருந்தும் அவரது கவிதைகள் பிறந்துள்ளன. காலத்தையும் வரலாற்றையும் பழைமையையும் படிமங்களாக்கி தன்னுடைய கவிதைகளை நுட்பமான ஆற்றலுடன் எழுதியிருக்கிறார். வெறுமையின் உள்புகுந்து அவர் கண்டெடுக்கின்ற அனைத்துமே கவித்துவமானவை. மலையே தன்னை நகர்த்திச்செல்வதுபோல கனம் பொதிந்துள்ள அர்த்தங்கள் அவற்றிற்கு இருக்கின்றன. கவிதை எழுதுகின்ற பெண் ஆலகாலத்தை அருந்தி முழுவதும் நீலமாகிப் போய்விட்டவள். ஒன்று அவளாக மரணிக்க வேண்டும் அல்லது அவளைக் கொன்றுவிடுவார்கள். 

இந்நூலை கனடாவில் வசிக்கும் கீதா மொழிபெயர்த்திருக்கிறார். அழுத்தம் திருத்தமான விரிவான முன்னுரையானது இன்னொரு படைப்பாகவே அமைந்திருக்கிறது. கீதாவின் மொழிபெயர்ப்புகள் தெளிவும் தீர்க்கமும் உளப்பூர்வமானவையுமாக மொழிபெயர்க்கபட்டவை. இக்கவிதைகளை மொழிபெயர்ப்பதற்கான புலமை மட்டுமல்ல, நவீன கவிதையின் சுதந்திரமான மனத்தினைக் கொண்டிருப்பது கீதாவின் பலம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

(காலச்சுவடு 174 - 2014 June )