கனவுப்பெண் - கவிஞர் அனார் கவிதைகளை முன்வைத்து
--------------------------------------------------------------------------------------------------
- நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்)
ஈழத் தமிழின் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார்" - கவிஞர் சேரன்
"தன்னுடைய இருப்புக்கு எதிரான நிலவரங்களை விமர்சிக்கிற அனாரின் கவிதைகள் அந்த இருப்பை உன்னதமானதாகவே உணர்த்துகின்றன" - கவிஞர் சுகுமாரன்
கடந்த ஜனவரியில் இந்தியா வந்திருந்தபோது கவிஞர்கள் சிலர் தங்கள் தொகுப்புகளைக் கொடுத்தார்கள், வேறு சிலர் தங்கள் நாவல்களைக் கொடுத்தார்கள். இரு தரப்பு நண்பர்களுமே தங்கள் படைப்புகளை கொடுத்தபோது இவற்றைக்குறித்து எழுதவேண்டும் என்று கேட்கவில்லை, அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை. படைப்புகளை அளித்தவர்களில் சிலர் தபிழ்ப் படைப்புலகில் நன்கறியப்பட்டவர்கள்; மற்றவர்களும் தமது படைப்புகள் ஊடாக தொடர்ந்து கவனத்தைப் பெற்றுவருபவர்கள். புனைவுகளைக் குறித்து எனது கருத்துக்களை முன்வைப்பதில் சிக்கல்கள் இல்லை. கவிதைகளைக் குறித்து எழுதும்போது தயக்கம் வருகிறது. 'எனக்குத் தொழில் கவிதை' அல்ல. ஒரு காட்சியைக் கண்டு வியக்கவும், பிரமிக்கவும்; வாடவும், வருந்தவும்; அநீதிகண்டு துடிக்கவும், ஆவேசம்கொள்ளவும் செய்கிறோமெனில் நமக்குள்ளும் கவிதை இருக்கிறது. இக்குணங்கள் ஒரு கவிதையை ரசிப்பதற்கான முதற்படி. ஆனால் புறத்திலும் கவிஞர்களாக வாழ்கிறவர்கள் தங்கள் பரவசத்தை, உணர்ச்சியை வார்த்தைகளில் வடிக்கத் தெரிந்தவர்கள் தமது கண நேர உணர்ச்சி அனுபங்களை விசும்பலை, செறிவான பொருத்தமான வார்த்தைகொண்டு நிரந்தரப்படுத்த முடிந்தவர்கள். காணும்தோறும் மகிழ்ச்சியைத் தருகிற படச்சுருளைப் போல, அவர்கள் சமைக்கும் படிமங்கள் கவிதைகளை வாசிக்கும் தோறும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. எனினும் ஒரு கவிதையைப் புரிந்துகொள்ளவும், இதயத்தில் வாங்கிக்கொள்ளவும், உணர்வுதான் முக்கியம். இடைத்தரகனான அறிவையும், அறிவின் மொழிகளையும் (உவமை, உருவகம், படிமம், குறியீடு, தொன்மம் ஆகியவற்றை) மறந்து புலன்களால் அதாவது தொட்டும், முகர்ந்தும், சுவைத்தும் கவிதைகளை வாசிப்பது போதுமானது.
'பரிசில் வேண்டும் பாடாண் திணை' கவிஞர்கள், கடந்த காலத்தைப்போலவே இன்றும் இருக்கவே செய்கிறார்கள். 'காதல்' சொல்ல கவிதையெழுத வந்து, பிறகு காணாமற்போகிற காளான் கவிஞர்கள் வருடத்திற்கு ஆயிரம் பேராவது தேறுவார்கள். இப் பெருங்கூட்டத்திடை, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில குரல்கள் தனித்து ஒலிக்கின்றன. அக்குரல்கள் நம்மில் சிலரிடம் ஊமைக்குரலாக ஒலிப்பவைதாம். நம்மிடம் ஊமைக்குரலாக ஒலித்த குரல், தொழில்முறை கவிஞர்களிடம் கலைவடிவம் பெறுகிறது. இந்த உலகம் முரண்படுவோர்களால் கண்ட முன்னேற்றம். சமகால கவிஞர்கள் மண்ணில் காலூன்றி நிற்பவர்கள். ''கேழ்வரகில் நெய் வடிகிறது" என்றெல்லாம் எழுதி ஏமாற்ற முடியாது. என்பதை நன்கறிந்தவர்கள். இதற்கு முந்தைய பத்தியில் கூறியிருப்பதுபோல அறிவைக்குறைத்துக்கொண்டு உணர்ச்சிகளுக்கு சற்று கூடுதலாக இடமளிக்கும் இன்றைய கவிதைகளில் 'தனிமனிதன், சமூகம்' இரண்டும் மையப்பொருட்கள். அதிலும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளில் கட்டமைக்கபட்ட நமது சமூகத்தில், பெண்களுக்குச் சொல்ல நிறையவே இருக்கின்றன. மதங்களும், புராணங்களும் இதிகாசங்களும் -சங்கக் கவிதைகள் உட்பட தீட்டியுள்ள பெண்சித்திரங்கள் அவர்களுக்கு ஆதரவானவை அல்ல. அன்பானவள், அடக்கமானவள், குடும்பப்பெண், மகாலட்சுமி ( கவனியுங்கள் 'சரஸ்வதி' என்ற சொல்லை சாமர்த்தியமாக தவிர்த்திருக்கிறோம்) போன்ற கவர்பொருளுடனான தூண்டில்கள் நம்மிடம் அதிகம். அவளை மஞ்சள் குங்குமமிட்ட 'தொழுவ லட்சுமி'யாய் வைத்திருப்பதில் நமக்குப் பெருமிதம். வீட்டுப் பசுவென்றாலும் கொம்பைத் தற்காப்புக்கேனும் பயன்படுத்தாமலிருந்தால் எப்படி? தங்கள் கோபத்தைக் கைப்பிடி உப்பில் காட்டி கணவனைத் தண்டிக்கும் 'குடும்பப் பெண்'களின் தந்திரமும், கையெறி குண்டாக கவிதைகளைப் பயன்படுத்தும் படைப்பிலக்கிய பெண்களின் தார்மீக கோபமும் அவ்வகை கொம்புகள்தாம்.
அனாரின் கவிதை மொழி:
"பெருங்கடல் போடுகிறேன், உடல் பச்சை வானம், "எனக்குக் கவிதை முகம்" என்று மூன்று கவிதைத் தொகுப்புகளை கவிஞர் எனக்களித்திருந்தார். அனார் ஒருகவிஞர் என்பதும், இருபது ஆண்டுகால ஈழ யுத்ததின் சாட்சியாக இருந்த ஓர் இஸ்லாமியத் தமிழ் பெண் என்பதும், அனாருடைய கவிதைகள் பற்றிய சிற்சில அபிப்ராயங்களை உருவாக்கியிருந்தன. எதிர்பார்ப்பிற்கு மாறாக சமகால ஈழ கவிஞர்களிடமிருந்து மாறுட்ட பாடுபொருட்களை அவர் கவிதைகளில் காண முடிந்தது. அனாரின் கவிதைமொழிக்குள் பிரவேசித்ததும் எனக்குப் பாரதியாரின் "சோதிமிக்க நவ கவிதை' என்ற வரிதான் நினைவுக்கு வந்தது. உணர்வுகளை மீ எதார்த்த நிலையில் இத்தனைச் சுதந்திரமாக எழுத்துவடிவில் கொண்டுவர முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
நவீன கவிதையின் நெளிவு சுளிவுகளையும், கட்டுமானங்களையும் வண்ணங்களையும் புரிந்துகொண்ட பின்நவீனத்துவ கவிஞர். சிற்சில கவிதைகளில் அவை விழலுக்கு இறைத்த நீராகின்றன என்பதையும் இங்கே சுட்டத்தான் வேண்டும். கவிதைத் தொகுதிகள் முழுவதும் கவிஞர் சுகுமாரன் கூறுவதைப் போல, " படிமச் செறிவான கவிதை மொழியைப் பயன்படுத்துகிறார்". கற்பனையின் புதுமையும், சொற்களில் செழுமையும் அவரது கூடுதல் பலம்: "நிலை கொள்ளாது ஆடும்/ பொன் மிளிர்வுத் தூவல்களில் / ரயில் பட்டுப்புழுவைபோல நீளுகிறது." (போகும் ரயில்). "காரிருளில் பாய்ந்தோடும்/ கறுப்புக் குதிரையின் கண்களில்/ இறுகி மின்னுகின்றது என்னுடைய கண்ணீர்" ( கருமை). "இலைச்சுருட்டிச் செவ்வெறும்புகள்/ஆளும் மரமெங்கும்/ இனிப்பாய்க் கசியும்/ மரப்பிசின் ஒழுகி உறைந்து/ மணிச்சிற்பங்கள்/ காட்டிய வரிசைகள்" ( அரூபன்). இவற்றை வெறுமனே படிமங்களால் ஆன கவிதைகள், எனக் கடக்க மனம் இடம் கொடுப்பதில்லை. 'பெருங்கடல் போடுகிறேன்' தொகுப்பில் "சந்திர கிரகணத்தின் ஸர்ப்பம்" கவிதையில் இடம் பெறும் இவ்வரிகளை 'ஒரு சோறு' பதமாக எடுத்துக்கொண்டேன்:
".....நினைவுப் பந்தலின் கீழ்
காட்டு மல்லிகையின் வாசனை
ஸர்பத்தை வரவழைக்கிறது
மேனி மினுக்கத்தில்
தெளிவின் மென்மையில்
தாழம்பூ மண்டபம் விரிகிறது."
அவருடைய கவித்துவத்தை அளக்க கீழ்க்கண்ட வரிகளும் உதவும்:
"தத்திச்செல்லும் பிள்ளையின் பாதச்சுவடுகள்
நிலவு பொறுக்கியுண்ணும்
மிக இனிக்கின்ற உணவோ"
..................................
...................................
" என் பசுங்குருத்துச் சூரியன்
உதிக்க அதிகாலை இருள் நீங்கும்
உறங்க பொன்னந்தி பாய்விரிக்கும்" (நிலாக் குட்டி)
கனவுப்பெண்:
அனார் கவிதைகளின் பெண்குரல் கனவுகளுக்கு நெருக்கமானது "கனவுகள் காண ஏங்கும் கனவு நான்" (சுலைஹா); "கனவுகளின் பாளைகளில் சேரும் 'கள்' என பொங்கும் இவ்விரவை நீ கொஞ்சம் நான் கொஞ்சம் பிடிக்கலாம் நிறையும் வரை" (குடுவையில் நிறையும் இரவு); "படியும் கனவுப் பனி வெள்ளைக்கரு/ ஒளிரும் மென்தகிப்பு மஞ்சள் கரு என/ உருமாறியது மச்சம்" (மண்புழுவின் கண்); "இரவுத் தேன் கூடு நிரம்பியிருக்கிறது / கனவில் இருந்தபடி/ முதலாவது நீலத்தேனைப் பருகிடும் தருணம்/ மலை நகரந்து போகிறது. ( நீலத்தேன்); கனவின் துவாரங்கள் வழி/ சொட்டித் தேங்கிய/ காமக் கடல் அலைகள் பாய்கின்றது/ சிலந்தி வயிற்றினுள்" (பெண் சிலந்திப்பூச்சியின் வீடு); "கனவின் கத்திகள் பாய்ந்த கவிதையை/ ருசிக்கின்றோம் மிச்சம் வைக்காமல்" (குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்); " வாழ்வின் கனாக்காலம் முழுவதும்/ பருவங்கள் மாறி மாறி பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் (வண்னத்துப் பூச்சியின் கனாக்காலக் கவிதை); " முயலின் பளபளக்கும் கண்களாய்/ மிரட்சியுடன்/ உன்னை வெறித்தபடி இருக்கும் என் கனவு"(வெறித்தபடி இருக்கும் என்கனவு).
தனிமைப்படுத்தபட்ட பெண்ணின் ஏக்கமும் கனவுகளும் அனார் கவிதைகளில் மையப்பொருளாக இருக்கின்றன. திரும்பத் திரும்பத் தமது இருப்பை முன்னிறுத்தியும் சோர்வுறாத பெண் குரல் எல்லா கவிதைகளிலும் கேட்கிறது. காதலும் தேடலுமாக கழியும் பொழுது. அலைக்கழியும் வாழ்க்கை. மதத்தின் பேராலும் மரபுகள் பேராலும் பெண்களை விலங்கிட்டு இருட்டறைக்குள் வைத்திருக்கும் குருட்டு சமூகத்தைச் சேர்ந்த பெண் வெளிச்சத்திற்கு ஏங்குவது இயல்பு. கதவுகள் திறக்குமென்ற எதிர்பார்ப்பில்லை. சன்னல்கள் திறப்பதே போதுமானதுதான். இறை தூதரைகாதலித்த சுலைஹாவாக தம்மை கற்பிதம்செய்து மார்தட்டும் அப்பெண்ணுக்குள் "கடந்தகால சாபங்களை மீளவும் எதிர்கால சவால்களை வெல்லவும்" கனவுகள் இருக்கின்றன. ஆனால் நிஜத்தில் அவள் வாழ்க்கை வேறுவகையாக விதிக்கப்பட்டிருக்கிறது 'போகும் இரயில்' கவிதையும், 'கருமை' என்ற கவிதையும் ஓர் அப்பாவி பெண்ணின் கனவுக் குரலாக பொருமுகிறது. பட்டுப்புழுவைபோல என்ற உவமைக்கு ஆளாகும் இரயில், கவிதை முடிவில் ராட்த்சத பூரானென்கிற உவமை ஆகுபெயராக உருமாறி தரும் சோகம் கொடியது. கற்பனையில் கூட பெண்ணுக்கு வெளிச்சம் எட்டிவிடக்கூடாதென்பதுபோல அவளது நிஜம் குறுக்கிட்டு அக்கனவுகளைக் கலைத்துவிடுகிறது. கவிஞர் மொழியில் சொல்வதெனில் " கனவுக்குள்ளே முழு ஏமாற்றத்துடனும் முட்டி மோதுகிறேன்"(சுவர் ஓவியம்). இந்தப் பரிதாபக்குரலுக்கு, காலம் பெருமிதத்தைப் பூட்டுகிற தருணமும் வாய்க்கிறது.
"பெண் உடல் பூண்ட இயற்கை நான்
காற்றில் வசிப்பவன்
காலத்தைத் தோன்றச்செய்பவன்...
இன்றென்னைத் தீண்டலாம்" (குறிஞ்சியின் தலைவி -உடல் பச்சை வானம்)
என்ற வரிகளைப் படிக்கிறபோது அக்குரலை ஒரு பெண்ணியக் குரலாகத்தான் பார்க்க முடிந்தது. பெண்ணியம் என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானதல்ல. 'ஆண்' பாலின முத்திரையொன்றுபோதும் தாம் செலவாணியாக என நினைக்கும் அற்ப புத்திகொண்ட ஆணாதிக்கத்திற்கு எதிரானது. அனார் கவிதைகளில் பெண்குரல் பொலபொலவென்று கண்ணீர்விடுவதில்லை, மூக்கைச்சிந்துவதில்லை. காதல் வயப்படும்போது கூட "கத்திகளால் கைகளையோ கனிகளையோ வெட்டிக்கொள்ளாதவள், நான் யூசுப்பைக் காதலிப்பவள், சுலைஹா", என முழங்கக்கூடிய தைரியம் பெண்ணியத்திற்கு உரியது.
ஈழ யுத்தம் குறித்து அனார்:
அனார் தமது கவிதைள் ( கைவசம் இருக்கும் தொகுப்புகளின் அடிப்படையில்) ஈழ யுத்தத்தைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. சமகால ஈழக்கவிதைகளில் ஈழப்போரும் அதன் விளைவுகளும் அதிகம் இடம்பெற்றிருப்பதால் அவற்றை ஓர் அளவோடு கையாண்டிருக்கிறார். யுத்தத்தின் கோரங்கள் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றன, பூடக மொழிக்கு இடமில்லை. ஆனால் யுத்தத்தை பாடுகிற அனார் வேறு. காதலும் தேடலுமாக காலத்தைக் கழித்த கனவுப்பெண்குரலுக்குரிய கவிஞரல்ல இவர், யுத்தகளத்தை நேரில் கண்ட புறநானூற்று தாய். 'பெருங்கடல் போடுகிறேன்' தொகுப்பில் 'மாபெரும் உணவுமேசை' ஓர் உதாரணம்:
"சிசுக்களின் மூளையாலான
மிளகுரசம் (புதினா சேர்த்தது)
கண்ணாடிக் குவளைகளில் ஊற்றப்பட்டிருக்கிறது"
"......................................
கொல்லப்பட்டக் குழந்தையின்
உடலிலிருந்து கொட்டுகின்றது இரத்தம்
மிக நிசப்தமாக
மிக குழந்தைத் தனமாக" (மேலும் சில இரத்தக் குறிப்புகள்)
இறுதியாக கவிஞர் அனார் பற்றி எப்படி சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாம் என யோசித்தபோது, அவரது வரிகளே உதவிக்கு வந்தன.
"நான் பாடல் எனக்குக் கவிதை முகம்"
==
( காலச்சுவடு இதழ் 177, செப்டம்பர் 2014 )