Friday, 6 February 2015


சொர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே பொழிகின்ற பனி : 

-----------------------------------------------------------------------------------------

- அனார்


நவீன உலக இலக்கியத்தின் பல்வகைமையான எழுத்துக்கள் இன்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. சமகாலத்தின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான ஜி.குப்புசாமி அவர்கள் தொடர்ச்சியாக உலக எழுத்தாளர்களின் நூல்களை மொழிபெயர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் ஓரான்பாமூக் அவர்களுடைய “என் பெயர் சிவப்பு, அதற்கடுத்து “பனி“ என்பன, ஜி.குப்புசாமி அவர்களின் கச்சிதமான மொழிபெயர்ப்பில் மிக நேர்த்தியாக காலச்சுவடு வெளியிட்டுள்ளது. அவ்வகையில் பனி மொழிபெயர்ப்பு, அனுபவ ஊற்றுக்களைத் திறந்துவிடுகிறது.

// அந்தக் கடவுள் நம்மிடையே இல்லை. அவர் வெளியே, வெற்றான இரவை, இருட்டில், நாதியற்ற இழிசினரின் இதயத்திற்குள் பெய்யும் பனியில் இருக்கிறார்.

கடவுளை நீயாகவே கண்டடையப் போகிறாய் என்றால், தாராளமாகச் செல். இருட்டுக்குள் நடந்து போ, பனியில் நனை, கடவுளின் அன்பை உனக்குள் நிரப்பிக்கொள்ள பனியை உபயோகப்படுத்திக்கொள் //

ஓரான்பாமூக் எழுதிய ஏழாவது நாவலும், முதலாவது அரசியல் நாவலுமான பனி துருக்கியில் இடம்பெற்ற தீவிர மாதச்சார்பானவர்களுக்கும், பொது மக்களுக்கும், மதச்சார்பின்மை அரசியல் குழுக்களுக்குமிடையேயான தொடர் மோதல்களை பேசுகின்றது. நவீன மதசார்பற்ற அரசின் சட்டமானது, துருக்கியில் பெண்கள் தலைமுடியை மூடும் அவசியமில்லை என கூறுகின்றது. பலவிதங்களில் அதிகாரத்தின் மூலம் நிர்ப்பந்திக்கின்றது. கல்லூரிகளிலும், பாடசாலைகளிலும் முக்காடு அணிந்து வரும் பெண்களை அரச நிர்வாகத்தினர் கல்வியைத் தொடர முடியாமல் நிறுத்திவிடுகின்றனர். பாமூக் தன்னுடைய நாவல்களில் துருக்கியின் மறைக்கபட்ட வரலாறு அதாவது ஆர்மேனியர்களை துருக்கிய நாடு கொன்றது பற்றி பேசியும் எழுதியும் வருகின்றவர். பனியை வாசிப்பதற்கு துருக்கியின் வரலாற்றுப்பின்புலத்தை தெரிந்துகொண்டிருப்பது கூடிய புரிதலைத் தரும்.

பெண்களை சமூதாயம் வைத்திருக்கும் இடத்திற்கும், சமூதாயத்தில் அவள் இருக்க விரும்புகின்ற இடத்திற்குமான இடைவெளி, இருண்மைகள் அபாயகரமானது. ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு இந்த அபாயம் தருகின்ற அச்சம் பல்வேறு தளங்களையும் புதிர் அடுக்குகளையும் கொண்டது. அவளுடைய மதம், தலைமுடியில் தொடங்கி கால்விரல்களில் முடிகின்றது. பனி நாவலில் துருக்கிய அரசாங்கம், பெண்கள் முக்காடு அணிவதைத் தடை செய்வதிலிருந்து பிரச்சினைகளும், பிளவுகளும், எதிர்ப்புகளும் எழுகின்றன. அரசியல் கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தை மூர்க்கமாக எதிர்க்கின்றனர். அதன் விளைவாக உள்நாட்டுக் கலவரங்கள், திட்டமிடப்பட்ட கொலைகள் நிகழ்கின்றன. மிக முக்கியமாக முக்காடு அணியும், தமது விருப்பம் உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டு அதிர்ச்சியுறும் பெண்கள், தற்காப்பு ஆயுதமாக தற்கொலையை கையாள்கின்றனர்.

நாவலின் கதையின் மையம், தீராததும் தீர்க்க முடியாததுமான மன அமைப்பிற்கும், மத அமைப்புகளுக்கும் நடுவே தொடரும் முரண்பாட்டைப் பேசுகின்றது.

மதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள விடயத்தை (முக்காட்டை) பேணுகின்ற பெண்கள், அதை தொடரமுடியாத நெருக்கடியான சூழலில், மதத்தினால் தடுக்கப்பட்ட ஒன்றை (தற்கொலையை) செய்ய முன்வருகின்றார்கள்.

// ஒரு பெண்ணுக்கு அவள் எதற்காகத் தற்கொலை செய்து கொள்கிறாள் என்பது துல்லியமாகத் தெரிந்தால், அவளுக்கான காரணங்களை அவளால் வெளிப்படையாகச் சொல்ல முடிந்தால், அவள் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய அவசியமே இருக்காது //. நாவலில் ஒரு உரையாடலில் இடம்பெறும் கடிஃபேவின் கூற்று இது.

உயிரற்றுப்போவது, இறப்பினூடாக நிகழ்வது மாத்திரமல்ல. வாழும்போதே உயிரில்லாமல், உறைவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள, அதாவது வாழ்ந்தபடியே இறப்பதற்கான பல வாய்ப்புகளை சக மனிதர்களும், சமூகமும் வழங்குவார்கள் என்று ஒரு பெண் விரைவில் தெரிந்துகொண்டு விடுகிறாள். அவள் எந்த உடையை அணிவது, எப்படி அணிவது, எதை அணியக்கூடாது என்பதெல்லாம் அதிகாரம் தீர்மானிக்கின்றது. சுயகௌரவத்தை நிலை நிறுத்துவதற்காக இளம்பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மதவாதிகளுக்கும் மத உரிமையை பறித்தெடுப்பவர்களுக்கும் அந்தப் பெண்களின் மரணத்தின் மொழி புரிவதில்லை. வேறு பொய்க்காரணங்களைப் புனைந்து பெண்களின் உயிர்த்தியாகத்தின் முழு அர்த்தத்தையும் சிதைக்கின்றனர். எல்லாமே தவறாகவும் எதுவுமே தவறில்லை எனக் கருதுவோர்க்கிடையில், கார்ஸ் நகரின் மனித உயிர்கள் ஒன்றுமற்றுப்போகின்றது.

தனி நபர்களின் வாழ்க்கையில் இறை நம்பிக்கை மீதான பற்றுதலும், அரசின் நிர்ப்பந்தங்களின் மீதான அச்சமும், பெற்றோர்களின் கையறு நிலையும் பாமூக்கின் மொழியில் வாசிக்கையில் துருக்கியை நம்முடைய அனுபவங்களுடன், அரசியல் நெருக்கடிகளுடன், முஸ்லீம் அடையாள பின்புலத்துடன் இணைத்துப்பார்க்க முடிகின்றது. பனியால் மூடுண்ட கார்ஸ் நகரம் மர்மங்களும் மரணங்களும் சூழ்ந்த நிலமாகியிருக்கிறது.

அரசியல் காரணங்களுக்காக நாடுகடத்தப்பட்டு, பனிரெண்டு வருடங்கள் ஜெர்மனியில் கழித்த கா என்னும் கவிஞன், முக்கியமான இரு நோக்கங்களுக்காகவும் வேறுசில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் கார்ஸ் நகரை நோக்கி வருகிறான். அது ஒரு பனிப்பொழிவின் காலமாகவிருக்கிறது. தற்கொலை செய்து கொள்ளும் கார்ஸ் நகரின் இளம் பெண்களைப்பற்றி ஆராய்ந்து எழுதுவதற்காக காவின் வருகை அமைந்துள்ளது.

காவின் நண்பன் இந்நாவலில், அந்தக் கவிஞனின் ஆத்மாவைப்போல தொடர்ந்து வருகிறான். காவின் கவிதை நூலை பல இடங்களில் தேடித்திரிகிறான். ஆனால் அந்நூல் அவனுக்கு கிடைப்பதில்லை. சில கடிதங்களும் வேறு குறிப்புகளும் காவின் நண்பனான ஓரானிடம் இருக்கின்றது. அவற்றில் ஒரு குறிப்பில் கா எழுதுகிறான் : // அடிபட்டிருக்கும் ஒரு விலங்கைப்போலவே என் வாழ்க்கை பூராவும் தொலைந்து போனவனாகவும், தனியானவனாகவுமே உணர்ந்து வந்திருக்கிறேன் //. இதுபோல், நாவலின் எந்தக்கட்டத்திலும் வெளிப்பட்டிருக்காத காவின் கவிதைகள் அரூபமான மனச்சித்திரங்களை உருவாக்குகின்றன.

நாவலாசிரியரின் நீதி, உணர்வுமொழி, கருணை எனப் பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. உருகாத பனிச்சிற்பம்போல கார்ஸ் நகரின் இருளில் செதுக்கப்பட்டிருக்கிறான் கா. அவன் எழுதிய கவிதைகள், அவனுடைய இபெக் மீதான காதல் உருவாக்கும் குருட்டுத்தனமான சந்தோசம், ஸ்திரமற்ற பற்றுதல், வெகுளித்தன்மை மற்றும் பொய்நம்பிக்கைள், அதீத கனவுகளுக்கான முக்கியத்துவம், மேலும் கவிதை எழுதக்கூடியவர்களிடம் காணப்படும் பைத்தியகாரத்தனமான காதலும் சேர்ந்து காவிடம் காணப்படுகிறது.

தந்தை சாகோதரியுடன் வசித்தபோதிலும், இபெக்கின் வாழ்வின் திசைகள் அவளை விரக்தியை நோக்கி கொண்டு செல்கின்றது. முற்போக்கான நடைமுறை வெளிப்பாடுகளில் தெரியும் துணிச்சல், உறுதி அனேக விடயங்களில் அகம் சார்ந்து பரிதாபத்திற்குரியதாகிவிடுகிறது. முக்காட்டை விலக்குவதும் சுய விருப்பத்தின்படி ஆடை அணிவதும், தனது துணையை தேர்ந்தெடுப்பது அல்லது விலக்கிக்கொள்வது என்பதற்கப்பால் அப்பெண் தனது வலிமையை பிரயோகிக்கவில்லை. இபெக் கார்ஸ் நகரின் பெண்மட்டுமல்ல அரசியல் சட்டதிட்டங்களால் அமுக்கப்பட்ட நிலத்தில் அகப்பட்டுள்ள உலகின் பொதுவான பெண்ணுமாகும். ஆனால் இபெக்கின் தங்கையான கடிஃபே புரட்சியாளராய் மூர்க்கமாக செயற்படக்கூடியவளாகவும் இருக்கிறாள். அவளுடைய தெரிவுகளை கண்டடைய உக்கிரமான குண இயல்புகள் துணை புரிகின்றன. பனி நாவலின் சாகச நாயகி கடிஃபே தனது கொள்கையின் சக்தியூற்றை ஆயுதமாகப் பிரயோகித்துப்பார்ப்பவள். இபெக் காதலெனும் ஆயுதத்தால் தன்னை திரும்பத் திரும்ப காயப்படுத்திக் கொள்கிறாள். நெருக்கடி மிக்க நிலத்தில் ஆனந்தமும் தப்பித்தலுமாக தற்காலிகமான மாற்றீடாய் காதல் இருக்கின்றது. மிகப்பெரும் தீர்க்க முடியா முரண்பாடுகளைக் கொண்ட வாழ்க்கையைப்போல சகோதரிகள் இருவரும் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கிடையே சிக்கிக் கொள்கிறார்கள். கடிஃபே நாவலின் இறுதியில் வரும் நாடகத்தில் பங்குபெறும் விதமும் அங்கே அவள் வைக்கும் வாதங்களும் மனச்சாட்சியை உலுக்கக்கூடியவை. ஓரிடத்தில் ஆண்களைப்பார்த்து அவள் கூறுவது : // உங்களை அச்சுறுத்துவது எனது அறிவுத்திறனல்ல. நான் சுய சிந்தனைகொண்ட பெண்ணாக இருப்பதால்தான் என்னைக் கண்டு பயப்படுகிறீர்கள்.... ஏனென்றால், நம்மூரில் ஆண்கள், பெண்களின் அறிவைக்கண்டு பயப்படுவதில்லை, சுதந்திரத்தைக் கண்டுதான் பயப்படுகிறார்கள்.... //.

பிற பெண்கள் பனி நாவலில், பனிப்புகார் என தெளிவற்ற உருவங்களாக தெரிகின்றனர். குளிரில் விறைத்து நடுங்கும் அவர்களுடைய குரல், நாவல் முழுக்க பிசாசைப்போல் அலைகிறது. முக்காடுகளால் மாத்திரமல்ல பனியாலும் அவர்கள் மறைக்கபட்டிருக்கின்றார்கள்.

நீலம் எனும் எதிர் நிலைப்பாத்திரமானது, சமூகத்தில் தன்னை முன்னிறுத்தும் விடயங்கள், மதக்கருத்துக்கள் ஒரு முகமாகவும், இபெக், கடிஃபே எனும் பெண்களுக்கு ஆணாதிக்க தன்மையும், துரோகமும் வெளிப்டும்முகமாகவும் அதே சமயம் இளைஞர்களுக்கு ஆதர்சமான தலைவனாகவும், தீவிரமாக காதலிக்கப்படுகின்றவனாகவும், சதிகளோடும், கொலைகளோடும் அரசிற்கு அச்சுறுத்தல்விடுக்கும் சக்தியாகவும் இருக்கிறான். இறுதியில் நீலம் சுடப்பட்டு மரணித்துவிடுகிறான். பெண்களின் தற்கொலைபற்றி அறிந்துகொள்ளவந்த காவும், சுடப்பட்டு மரணித்துவிடுகிறான். பெண்கள் தற்கொலை செய்து மரணிக்கின்றார்கள். தேனீர்க்கடையில் பேராசிரியர் கொலை செய்யப்படுகிறார். கடி.ஃபேயைக் காதலிக்கும் நசீம் கொல்லப்படுகிறான். கடிஃபே ஒரு கொலை செய்கிறாள். இவ்விதமான மரணங்கள் ஒரு தீர்வுக்காக நிகழ்வதில்லை. அதன் அர்த்தங்களும் வேறுவேறானவை. நாவல் மிகுந்த அந்தரங்கமான பார்வையோடு, இந்த மனிதப்பாத்திரங்களை நடமாட வைக்கின்றது. அந்த அரசியல் கொந்தளிப்பினூடே, குருதியோட்டத்தை உறையச் செய்யும் பனியின் குளிர்மை, நாவலின் நெடுகிலும் நிறைந்து காணப்படுகிறது. இறுதியான ஒரு விடையைக் கொண்டிராத கேள்விக்குறிகளாக பாமூக் மனிதப்பாத்திரங்களை நாவலில் காண்பிக்கிறார்.

பனி எனும் படிமம், கறுப்பு நாயின் உருவகம், காவினால் எழுதப்படும் கவிதைகள் என நாவலுக்குள் வெவ்வேறு உருவ நிழல்கள் அசைகின்றன. வெற்றிக்கும் தோல்விக்கும், சரிக்கும் தவறுக்குமான, வாழ்விற்கும் மரணத்திற்குமான இரு நிலைகளிடையே பனி தூபம்போல எங்கும் சூழ்கிறது. மனச்சாடச்சியின் வாதங்களாக, ஏக்கமாக, அச்சமாக, பின்னப்பட்டுள்ள பலரை பனி ஊடுருவிப் பிழிகிறது. அடிமைத்தனத்தின் நெருப்பிற்குள்ளே ஒளிரும் ஆணியென பெண்கள் தகிக்கின்றனர். பண்பாடுகள், இறை நம்பிக்கைகள், பெண் கல்வி, திருமணம், வாழ்க்கை, எதிர்காலம் அனைத்தையும் எப்படி சர்வதிகாரத்தின் கை நசுக்குகின்றது. மேலும் மனிதாபிமானமற்ற நாட்களை, அவர்கள் எதிர்கொள்வதன் வலி எத்தகையது என நாவல் கேள்விகள் எழுப்புகின்றது. சமூக அமைப்புகளும், தீவிர சிந்தனை கொண்டவர்களும் முன் தீர்மானங்களின்படி, பெண்களை வற்புறுத்தி அதிகாரம் செய்கிறார்கள். நிர்க்கதியும், கையறு நிலையும், அரசியலின் உளவியலையும், உளவியலின் அரசியலையும் தெளிவாக பனி முன் வைக்கின்றது. நிராசைகளும் துரோகமும் சூழ்ந்த அறையில் இபெக் இறுதியாக நின்றபடி பார்க்கும் ஜன்னலால், தன்னுடைய காதலன் நீலத்தை தன் மூச்சுக்குள் நிரப்பியவாறு கா மீதான நம்பிக்கையின் கடைசி நூலிழையை தவறவிடுகிறாள்.

ஓரான்பாமூக் அவர்களுடைய ஆளுமை சார்ந்தும், பனி நாவலின் கலைத் தன்மை சார்ந்தும், மனிதத்துவத்தின் மீதான நீதி, பிரயாசை, கேள்விகள், நுண்ணுணர்வு சார்ந்த அவதானிப்பு என பல விடயங்கள் உள்ளன. ஆழமான விருப்பங்கள், மனங்களின் கூக்குரல் கண்ணீரின் மொழியால் பல்வேறு உயிரூட்டமுள்ள நிறங்களால் வரையப்பட்டிருக்கின்றது. தெளிவான ஆனந்த நிலையை கொடுக்கக் கூடியவையாக அதன் யதார்த்தம் அமைந்திருக்கிறது.

எழுத்தாளர்கள் விஞ்ஞானியைப்போல் ஏதாவதொரு கண்டுபிடிப்பை விட்டுச்செல்வதில்லை. மாறாக அவர்கள் எழுதிய புத்தகங்களையே விட்டுச் செல்கின்றார்கள். பாமூக்கின் நாவலான பனிக்குள் பல கண்டுபிடிப்புக்களைக் காணமுடியும், தேடலுள்ள கூர்மையான வாசகனால்.

--------------------------------------------------------------------------------------------------

நன்றி : காலச்சுவடு, பெப்ரவரி 2015