Sunday, 19 February 2017

வரையறைகளுக்கு அப்பால்………
கனன்று ஒளிவிடும் அம்பையின் கதை எனும் நெருப்பு
--------------------------------------------------------------------------------------------------------------------------
- அனார்




ஆயிரத்தியொரு இரவுகள் எனும் அராபிய நெடுங்கதையை வெஞ்சினமும் அதிகாரமும் கொண்ட மன்னன் ஷெஹ்ரியாருக்கு அவனது மரண தண்டனை தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் பெண்களைக் காப்பாற்றும் பொறுப்போடு கதை சொல்லிக் கொண்டிருப்பாள் ஷெஹர் ஸாத் எனும் பெண். அவளுடைய கதைகள் தற்காப்புக் கேடயம் மட்டுமல்ல, அவளிடமிருந்த முதலும் கடைசியுமான ஆயுதமும்கூட. அவளது கதைகள் தான் வியூகமாக செயற்பட்டன. அங்கே எவருடைய சாணக்கியமும் உதவவில்லை. பெண்ணொருத்தி ஒவ்வொரு இரவும் முடிவற்ற கதையைச் சொல்லி சொல்லி இரவுகளை நிறுத்தி வைத்திருந்தாள். மரணத்தை நிறுத்தி வைத்திருந்தாள். கதைகள் மரணத்தை திரும்பிச் செல்ல வைப்பவையா? காலத்தை மொழியின் வலைக்குள் பிடித்துக்கொள்ளும் வல்லமை கதைகளுக்கு உண்டா? ஷெஹர் ஸாத் எனும் பெண் கதைகளாலான ஆயுதமாவாள். அம்பையின் ஆயுதமானது சுயமுள்ள பெண்ணின் ஆன்மாவிலானதாகும். தேடல்களாலும் உணர்ச்சிகளாலும் புடம் போடப்பட்ட ஆயுதம்.

என்னால் இந்தக் கடின உழைப்பாளியின் சிறுகதைகளை வாசித்து விளங்கிட முடியுமா என்னும் திகைப்பே ஆரம்பத்தில் தோன்றியது. உணர்ச்சி நிலைகளின் மொத்தக் கொதிப்பை அம்பை எங்கிருந்து பெற்றிருக்கக் கூடும்?. கால காலமாக நெருப்பெரியும் சமையலறை அடுப்புகளில் இருந்தா? சாமி அறையின் தீபங்களில் இருந்தா? வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருக்கும் பெண்ணின் வயிற்றில் இருந்துதானே எல்லாப் பெண்களும் பிறந்திருக்கின்றார்கள். அதனால் நெருப்பு, கொதிப்பு என்பது தன் தாய் வயிற்றிலிருந்தும் தாய் வீட்டிலிருந்தும் பெற்றுக் கொண்டதாக இருக்கலாம்.

சிறுகதைப்பரப்பில் அம்பையின் தனித்துவமான அடையாளமானது ஆழ வேரூன்றியதும் முன்னிலை வகிப்பதுமாக இருக்கின்றது. முன்னோடியான புனைகதையாளராகவும் ஆண் பெண் என்ற பிரிப்புகளுக்குள் நிற்காதவராகவும் எல்லைகள் வரையறைகள் அல்லது பேணப்பட்ட வழக்கங்களுக்கு அப்பாலுக்கு அப்பால் பயணித்தவராகவும் அம்பை தன்னை நிறுவ எழுத்துக்களினூடே தொடர்ந்து முயன்று வருபவர். காட்டின் இருளில் மெல்லக் கசியும் மூலிகை வாசனையை காற்று சிறுகச் சிறுக அவிழ்த்து விசிறுவதுபோல கதைகளின் வெளியில் அம்பை சலனங்களை தோற்றுவிக்கின்றார். ஒரு வகை இசைத் தன்மையான அந்த அலைகள் அவரது மொழியைத் தூக்கிப்பறக்கின்றன. நெகிழ்த்தியும் இறுக்கியும் பிணைந்தும் விலகியும் தோன்றி மறையும் ஈர அலைகளாக.

மனங்களின் உள்ளார்ந்த அடுக்குகளில் கீறப்பட்ட சுவரோவியங்களின் சிதிலங்களையும் தாண்டி கலைத்துவமான சித்திரங்களை ஊடுருவி நோக்கும் அவரது பார்வையை பாராட்டி வியப்பதா அல்லது வாசகருக்கும் அதனைப் புரியவைக்கும் அம்பையின் கலை மனதை வியப்பதா?

சொல்லாமல் சொன்னவற்றின் வெம்மையும் அந்தரத்தில் விடப்பட்ட மௌனவெளியின் குளிர்விறைப்பும் எம்மை நிச்சலனத்தின் முன் நிறுத்துகின்றன.

பெண்ணின் முழுப் பரிமானத்தையும் கதை சொல்பவரின் ஆழ்ந்த கலைத்துவ தரிசனங்களையும் வாழ்க்கையை பிரக்ஞையோடு எதிர்கொண்ட ஒற்றைப் பெண்னொருவரின் சாகசத்தையும் அனுபவங்களுக்கும் கற்பனைகளுக்கும் இடையே காணும் உருமாற்றங்களையும் அம்பையின் எழுத்துக்கள் நிகழ்த்துகின்றன.

பண்பாட்டின் கலாச்சார நிர்ப்பந்தங்கள் தொன்மமான ஆதிக்க திணிப்புகள் என்பன அம்பையின் கதைகளில் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன. வாசகர்களை பல்வேறு சமயங்களில் குற்றவுணர்ச்சிக்கு தள்ளுகின்றன. தொன்று தொட்டு முன்னெடுத்து வரும் பழக்கங்களை ஒடுக்குமுறைகளை சுக்குநூறாக உடைத்தெறிகின்றன.

அம்பை தன் சிறுகதைகளில் வலியுறுத்துவது தன் நம்பிக்ககையின் அடிப்படையிலான அற உணர்வே ஆகும். நன்மை, தீமை என்ற பிரிப்புகளற்ற இடத்தில் அம்பை தன் கதைகளோடு நிற்கிறார். அதுதான் அவரது பெருமிதம். தன்னை அதனூடாகவே எழுத்திற்கு அர்ப்பணித்திருப்பவர் அம்பை.

அம்பை பெண்ணை அதன் முழு அர்த்தத்தில் வெளிக்கொணருகின்ற அதே சமயத்தில் பெண்ணானவள் தன்சுயத்தை மீட்டு தக்க சமயத்தில் முடிவுகளை எட்டக்கூடிய ஆற்றலுள்ள பெண்களையும் அடையாளப்படுத்துகின்றார். அவரது கதைகளில் அவர் முன்வைக்கும் கேள்விகள் முக்கியமானவையாகும். பெண்கள் பற்றி இருந்த மதிப்பீடுகளை எழுத்தின் மூலமும் செயற்பாட்டின் மூலமும் மீள் நிர்ணயம் செய்கிறார். விரிவான சமுக மாற்றங்கள் இடம்பெற்ற இன்றைய காலத்திலும் ”அம்மா ஒரு கொலை செய்தாள்”, ”காவுநாள்” போன்ற கதைப்பெண்கள் நம் கண்முன்னே மாறுதலற்றும் ஒலிகளற்றும் நம்மருகிலேயே உள்ளனர். எழுத்தாளரின் நுணுக்கமான இந்தப்பின்னல் இணைப்பு அவரது சுயம் சார்ந்த ஆளுமையின்பாற்பட்டது.

கற்பு பற்றிய கற்பிதங்களும் கருத்து நிலைகளும் பால் தன்மை பற்றிய புரிதல் கொண்ட அம்பையின் கதைப் பெண்கள் கொண்டுள்ள தீர்மானங்கள் அன்றைய நாளில் எவ்வளவு சவால் மிகுந்ததாக இருந்திருக்கும். அம்பை தனது ஆரம்ப நாட்களில் அவர் பெண்ணாக இருப்பதற்காகவே மிகுந்த புறக்கணிப்புகளை எதிர்ப்புகளை எதிர் கொண்டிருப்பார் என்பதை பூரணமாக உணரமுடிகிறது.

”நிலவைத் தின்னும் பெண்” சிறுகதையில் அப்பெண் எதிர்கொள்ளும் காதலும் துரோகமும், பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான அனுபவப் பகுதியைக் காண்பிக்கின்றது. கதைநிகழும் கணமும் களமும் கண்முன்னே துல்லியமாகத் தெரியும் விதம் அந்நியோன்யமான உணர்வு மொழியில் எழுதியிருப்பார். மேலும் இக்கதையில் பெண் உடல்பற்றிப் பேசுகிறார். நுண்மையான பட்டு நூலிழைகளால் அங்கே பெண் உடலை பின்னுகிறாள். பழுக்கக் காச்சும் தீயின் கங்குளால் நமக்கும் அவ்வனல் வெம்மை தாவுகின்றபடியாக.

இவ்வளவு தூரம் பெண் உடலைத்திறந்து தரிசிக்க முடியுமா என அதிசயிக்க வைக்கின்ற வகையில், நிலவைத் தின்னும் சிறுகதையில் ஒரு முதிர்ந்த பெண் இளம் பெண்ணுக்கு எழுதும் கடிதத்தின் சிறு பகுதியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 

“அதனால் எல்லாவற்றையும் பிரி சகு. கலை – கலைஞர், இரவு – நிலவு, பகல் – சூரியன், ஒலி – இசை எல்லாவற்றையும் பிரி. எதற்குள் எதுவெனத் தெரியாமல் கலந்து கிடக்கும். அதைப் பிரிக்கும் போது அவை ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது தெரியும். பெண் – தாய்மை இதையும் பிரி. ஆமாம் அதையும். அவை பிரிக்க முடியாமல் இணைந்தவை என்னும் பிரமை இருக்கிறது. அதை உடை, அப்போதுதான் யதார்த்தத்தை’யும் தற்செயல் நிகழ்வையும் பிரிக்க முடியும். அனுபவத்தையும் வலியையும் பிரிக்க முடியும். இரண்டுக்கும் வேறு வேறு இலக்கணங்கள்”.

பெண் உடல் ஒரு ஆயுதம். அதே நேரம் ஒரு திறவுகோல் தான் எனும் புதையல் அங்குண்டு. முடிவற்ற விரிவும் புதிருமான சுழற்சியைக் கொண்டிருப்பது. கனவுக்குள் சுநதந்திரத்தை உருவாக்குதல் என்பதும் பின் கனவை வாழ்தலாகவும் பின்னும் அதனைக் கடந்து உயர சீறிப் பாய்கின்றவளாகவும் உடலே பெண்ணைப் பழக்குகின்றது. ’கைலாசம்” கதையில் வரும் பெண் கமலம் அற்புதமான பெண்மை நிறைந்தவள்.

“அவனை மணந்துகொண்டு இருபத்தைந்து ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் காதல் புரியவில்லை, கைலாசம் மோகம் புரிவது எளிது. காதல் அப்படியல்ல. பெண் – ஆண் உறவு மிகவும் சிக்கலானது. அதில்தான் எத்தனை நெருக்கம், எத்தனை விலகல்? எத்தனை மர்மம், எத்தனை வெளிப்படை? எத்தனை வன்முறை, எத்தனை மென்மை? எத்தனை இறுக்கம், எத்தனை குழைவு? எத்தனை ஆதுரம், எத்தனை ஆவேசம்? காதலிக்கும் நபரையே விசம் வைத்துக் கொல்லலாம் என்று ஆத்திரம் வருகிறது. தணிகிறது. பந்தம்போல் கட்டிப்போடுகிறது. கூடுபோல் ஆசுவாசம் தருகிறது. தகிக்கிறது. குளிர்விக்கிறது. என் உடலை ஒரு பிரதியாகப் பார்க்கும் போது, அது ஒரு நிலைத்த பிரதியாக இல்லை கைலாசம்“

பெண்ணுக்குரிய காமம் என்பது முதலில் முழுமையான கலைத்துவத்தைக் கோருவது. ஆண் பெண் உறவுச் சிக்கல்களில் உள்ளிருக்கும் சுயநலங்கள் தவறுகள் துரோகம் அதனால் விழையும் மனநெருக்கடிகள் விடுவிக்க முடியாதபடி ஏற்படும் நீண்டகால உளச்சிக்கல்கள் இந்தக் கதைகளில் அம்பை உணர்த்தும் இடங்கள் அவரை வித்தியாசப்படுத்துகின்றன. அம்பையின் நோக்கம் இத்தகைய போக்குகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதாகவோ தவிர்க்க முடியாமல் இவ்விதம் நேர்ந்துவிடும் அனுபவங்களை வெளிப்படுத்துவதாகவோ இருக்கின்றது என நாம் கருதமுடியும்.

”அம்மா ஒரு கொலைசெய்தாள்” – கதையை ஒரு ஆணினால் என்றைக்குமே எழுத முடியாது. பருவம் என்றால் என்ன என்ற கேள்வியை யோசிக்காத சிறுமிகள் இல்லை. அந்தக் கேள்வியில் இருந்துதான் சிறுமிகளின் குதூகலங்களின் மீது விழும் முதலாம் வெட்டுக்கள் தொடங்குகின்றன. சிறுமிகள் பெரிய மனுஷிகளாகிவிடுகின்ற பிற்பாடு தேவதைகள் போன்ற அம்மாக்கள் மனித அம்மாக்களாக ஆகிவிடுகின்றனர். காரணமற்ற குற்ற உணர்ச்சி தாழ்வுமனப்பான்மையில் உள்ளொடுங்குதல் நிர்ப்பந்தங்களுக்கும் கண்டிப்புகளுக்கும் ஆட்படத் தொடங்கிவிடும் நிலைக்கு பருவத்தின் ஆரம்பத்திலேயே பெண் தள்ளப்படுகிறாள் அதனையே இக்கதை வலுவாகப் பேசுகிறது. அம்பையின் பிற கதைகளில் இடம்பெறுகின்ற அம்மாக்கள் பெருமளவு மதிப்பிற்குரிய அம்மாக்களே. அதைவிடவும் வெகுசாதாரண அம்மாக்களும் இருக்கவே செய்கின்றனர். அவர்களது கதைகளை அம்பையைத் தொடர்ந்துவரும் இன்னொரு பெண் எழுதக்கூடும். 

பெண்கள் சார்ந்துள்ள தந்தையர் கணவன்மார் சகோதரர்கள் தோழமை பற்றிய கணிப்புகள் பல்வகையான மனித உறவு நிலைசார்ந்த சந்தர்ப்பங்களை சிறுகதைகளில் பிராதனப்படுத்துபவராக இருக்கிறார். மேலும் ஆணின் ஆதிக்கம் அரசியல் சுயநல எதிர் நடத்தைகள் பற்றியும் வாழ்வின் மேடு பள்ளங்களை தடுமாற்றங்களை துரோகத்தை தன் ஆன்மாவினால் ஆராய்கின்றார். பாத்திரங்களின் மனதிலிருந்து வாசிப்பவரின் மனதிற்கு கூடு பாய்வதான ஒரு மாயப்பரிமாற்றத்திக்கு உள்ளாகின்றோம். பெண் வாழ்வதற்கும் வாழ நினைப்பதற்கு இடையே ”முறிந்த சிறகுகள்” கதைக்குள் ஒருத்தி அல்லாடுகின்றாள். அவள் மீள முடியவில்லை என்றானபின் நம்மாலும் மீளமுடிவதுமில்லை.

அம்பையின் கதைக்களங்கள் பல்வேறு அம்சங்களோடு விரிவுடையன. அவரது பயணங்கள் அத்தகையதாக அமைந்துள்ளது. சவாலான பல விடயங்களையும் அதனூடாக அனுபவங்களையும் படிப்பினைகளையும் பயணங்கள் அவருக்குக் கொடுத்திருக்கின்றன. இத்துணிச்சல்மிக்க பயணங்கள் வேறு பெண்களுக்கு எளிதில் கிடைத்துவிட முடியாததுமாகும். அம்பை தன்னை தயார்படுத்திய நிலையில் வைத்திருக்கின்றார். அம்பையின் பயணங்கள் நாம் செல்லாத பயணங்களாகும். பெண் எழுத்தாளர்களுக்கு பயணங்கள் வாய்ப்பது மிக அரிதான ஒன்றாகவும் தமிழ்ச்சூழலில் காணப்படுகின்றது. அம்பை தன் தொடர்ச்சியான பயணத்தின் மூலம் ஏற்கனவே நிறுவப்பட்ட அனைத்து கட்டுமானங்களையும் தகர்த்தவர். அவரது தொகுப்புகளில் பயணம் பற்றிய கதைகளை தனியான வகைப்படுத்தலைக் கொண்டும் நோக்கலாம்.

பயணங்கள் பற்றி ”வற்றும் ஏரியின் மீன்கள்” சிறுகதையில் அம்பை குறிப்பிடுகிறார். “பயணங்கள் அவள் வாழ்க்கையின் குறியீடாகிவிட்டன. இலக்குள்ள பயணங்கள், நிர்ப்பந்தப் பயணங்கள், திட்டமிட்டு உருவாகாத பயணங்கள், திட்டங்களை உடைத்த பயணங்கள், சடங்காகிப்போன பயணங்கள் “ என விபரிக்கிறார்.

வீதிகள் சனநெரிசல் வாகன தரிப்பிடங்கள் சாரதிகள் ரயில் நிலையங்கள் நிலத்தின் காலநிலைகள் என கதையோட்டத்தோடு பிரதானப்படுத்துகின்றார். சாதாரண மனிதர்களிடம் ஏற்படும் உறவு நட்பு அனைத்தையும் பயணக் கதைகளில் அம்பை எழுதுகிறார். இயல்பாகவே அம்பையிடம் உள்ள அவதானம். ஒருவகை கரிசனம் பெண் சார்ந்தே இருக்கின்றது. ஒவ்வொரு கதைகளுடனும் உறவாடும் திறன் என்பது ஒரு ஆணுக்கு ஏற்படும் வாசிபனுபவத்தை ஒத்ததல்ல பெண்ணுக்கு நேரும் வாசிப்பு. வாசிப்பவரின் மன உணர்தலுக்கு எந்தளவான ஆற்றல் இருக்க முடியுமோ அவ்வளவிற்கு இக்கதைகளின் தனிமை வெளி, மௌனங்கள் இலக்கிய ஆற்றல் என்பனவற்றை. ஒருவர் உள்வாங்க முடியும். சில வேளை கதைகளின் விபரிப்பு அல்லது கதையளத்தல் சற்றுக் கூடிவிட்டது எனத் தோன்றினாலும் அது கதையின் ஆன்மாவை நட்டாற்றில் விட்டுச்செல்லவில்லை. 

”ஒரு இயக்கம் ஒரு கோப்பு சில கண்ணீர்த்துளிகள்” சிறுகதை முக்கியமான பதிவும் படைப்புமாகும் இக்கதையின் விபரிப்பும் மன உணர்வுகளும் கதை சொல்பவரினது மனச்சாட்ச்சியின் குரலும் “சதாத்ஹசன் மண்ட்டோ“ வைப் போன்றது.. ஸகீனாவின் அனுபவங்கள் உணர்த்தும் அரசியல் முக்கியமானது. கதையில் காலா என்பவரது முதிர்ந்த பாத்திரம் செல்வி சாரு என்கின்ற நபர்கள் என நீளமான இக்கதையில் பல கிளைக்கதைகளையும் இந்து முஸ்லிம் அரசியல் கலவரங்களின் பிரதிபலிப்பையும் இருமதங்களிடையே உருவாக்கப்பட்ட பிளவுகள் உக்கிரமான நிகழ்த்தப்பட்ட கலவரம் வலுவான சித்தரிப்புகளாக இருக்கின்றது.

““அது முஸ்லிம் அதைக் கொன்னுட்டேன்“ என ஒரு குழந்தை தன் பொம்மையை உடைத்துவிட்டுச் சொல்லும் என்கின்ற பகுதியும், “நான் பச்சைப்புடவை வாங்கியபோது, இந்த துலுக்கப் பச்சையை ஏன் வாங்கினாய்? என்று அம்மா கூறியது“ என வரும் பகுதியும் பல்லாயிரம் அர்த்தம் கொள்கின்றது.

இதே சிறுகதையில் அபூர்வமான மனிதராக வரும் காலாவிடம் கதைப்பெண் உரையாடும் ஒரு பகுதி இருக்கிறது. “சும்மா இருங்கள் காலா. உங்களைப் போன்றவர்கள் வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களை காந்தியுடன் கழித்து, சுதந்திரத்துக்காக உழைத்த உங்களைப் போன்றவர்கள், அதன் பின்பு ஏன் ஆசிரமங்களிலும், சிற்றுர்களிலும் முடங்கிக் கொண்டீர்கள்? அரசியல் லாபம் வேண்டாம் என்று ஏன் தீர்மானித்தீர்கள்? காந்திமேல் வைத்த பாதிப் பக்தியை நாட்டின் மேல் வைத்திருந்தால் நம் நாட்டு அரசியல் மாறி இருக்கும். யார் உங்களை இந்த தியாகம் செய்யச் சொன்னது ? 1942இல் இந்த வீதிகளில் நீங்கள் எல்லாம் பேட்டை ராணிகள்போல் ஊர்வலம் போனீர்கள். யாருக்கும் பயப்படாமல். நீங்கள் எங்களுக்குத் தந்திருப்பதெல்லாம் இந்த பிம்பங்களைத்தான். கொடியை உயர்த்தியபடி நீங்கள் போன ஊர்வலப் புகைப்படங்களை எத்தனை தடவை நாங்கள் பார்த்து புல்லரித்திருப்போம்? என் ஆத்திரத்தைக் கிளப்பாதீர்கள். நீங்களும் உங்கள் கதறும் ராட்டையும், காந்தியும் வெறும் சின்னமாகி விட்டீர்கள்“.

வன்முறைகளது ஒரு வகை முகமும், அதற்கு நட்பும் தோழமையும் உறவுகளும் பலியாகும் இடங்களும் அம்பை விபரித்துச் செல்லும் இடங்களில் நமது இயலாமையும் கரிய புகையாய் கவிகின்றது. போரும் கலவரங்களும் நசுக்குகின்ற அனைத்து நிலங்களுக்கும் மனித இனங்களுக்கும் பொருத்தப்பாடுகளைக் கொண்டுள்ளது இச்சிறுகதை.

இத்துடன் இணைந்ததாகவும் வேறு கோணங்களில் அம்பையின் உணர்வோட்டங்கள் பயணிக்கின்றன. ” பயணம் 20”, ”பயணம் 7” இந்தக் கதைகளும் கூட சிந்திக்கத்தக்க மத, இன முரன்பாடுகள் பற்றிய பக்கங்களை அடையாளப்படுத்துகின்றன.

இந்தத் தொகுப்பில் பல சிறந்த கதைகள் விடுபட்டுள்ளதற்கான. காரணம் எனக்கு கொடுக்கப்ட்ட நூலின் பக்க வரையறையாகும். அம்பையின் தொகுப்புகளான ”சிறகுகள் முறியும்”, ’வீட்டின் மூலையில் சமையல் அறை”, ”காட்டில் ஒரு மான்”, ”வற்றும் ஏரியின் மீன்கள்”, ”கறுப்புச் சிலந்தியுடன் ஒரு இரவு” – இவ் ஐந்து தொகுப்புகளிலிருந்தும் சிறுகதைகளை தேர்ந்திருக்கிறேன். அதாவது ”அடவி”, ”புனர், பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்”, ”கூடத்தில் துள்ளிய கன்றுக்குட்டி” என பல நல்ல சிறுகதைகளை இணைக்க முடியாமல் விடுபட்டுப்போனது தனிப்பட்ட வகையில் எனக்கு மிகுந்த கவலையைத் தருவன.. அவற்றை வாசகர்கள் தேடிப்படிக்க முடியும் இவ்வாறான சில கதைகள் விடுபட்ட நிலையில் அந்தேரி மேன்பாலத்தில் ஒரு சந்திப்பு என்ற தொகுப்பிலிருந்து கதையை தேர்வு செய்யாமல் தவிர்த்திருக்கிறேன்.

வேறொருவருக்கு அவரின் ரசனையின் அடிப்படையில் இத்தொகுப்பில் விடுபட்ட கதைகளில் சிறப்பான கதைகள் இருப்பதாகத் தோன்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்கின்றேன்.

தலை கீழாக உயரத்திலிருந்து வீழும் வாள் சிலரை குத்தி விடுகிறது. சிலரின் அருகே விழுகிறது. சிலர் தப்பி விடுகின்றனர். சிலருக்கு வெட்டுத் தழும்புகள் வாழ்க்கை அப்படிப்பட்ட கூரான வாள் எனில், அம்பையின் கதைகள் நமக்குத் தடுத்தாளத் தெரிந்திருக்க வேண்டுமென்பதையே வலியுறுத்துகின்றன.

அம்பை பரந்த நோக்கமும் கூர்மையான வெளிப்பாடும் வலுவான தீர்மானங்களும் கொண்டவர். அம்பையின் சிறுகதைகள் வாசிப்பவரை ஆழநேசித்து வலுப்படுத்தும் சக்தியை கொண்டிருக்கின்றன. ஷெஹர் ஸாத்தின் கதைகளைப்போல மரணத்தை நிறுத்தி வைக்கும்நிர்ப்பந்தங்களில் இருந்து எழுந்தவையல்ல. அம்பையின் கதைகள். பெண்ணானவள் கொல்லப்படுகின்ற ரணங்களிலிருந்து மீண்டெழுந்து சொல்லப்பட்டவை. பெருமிதம் கொள்ளத்தக்க தனித்துவமானவர். நிராகரிக்க முடியாதபடி தன்னை பரிபூரணமாக அர்ப்பணித்தவர். சமகாலத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் அம்பையின் மொழியானது எந்த இருட்டிலும் கனன்று ஒளிவிடும் உயிர் நெருப்பு…….

--

அம்பையின் “அம்மா ஒரு கொலை செய்தாள்“ நூலுக்கு எழுதிய முன்னுரை.

வெளியீடு - காலச்சுவடு