Thursday, 19 October 2017

பிரவாகத்தில் மிதக்கும் காட்சி அடுக்குகள்



- பேரா. பெருமாள்முருகன்

-----------------------------------------------------------------------------------------------------------

நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள், நான்கு தொகுப்புகள் எனத் தொடர்ந்து இயங்கிவரும் அனாரின் கவிதைகளைப் பற்றி மரபான முறையில் ‘அனாரின் கவிதை உலகம் இப்படியானது’ என ஒற்றைப் புள்ளியை மையமாக்கிக் கட்டுரை எழுதுவது இயலாத காரியம். அவர் கவிதைகளை வாசிக்க வாசிக்கப் ‘பிடிக்குள் அடங்காத பிரவாகம்’ என்னும் தொடர் எனக்குள் தோன்றியது. சொற்சிக்கனம், சொற்செறிவு எனக் கவிதைக்குரிய இலக்கணம் பற்றி முன்கூட்டி அமைத்துக்கொண்ட தீர்மானங்கள் யாவற்றையும் கலைத்துப் போட்டுவிட்டு அனாரின் கவிதைகளை அணுக வேண்டியிருக்கிறது. அவ்விலக்கண வரையறைகளுக்கு எதிராகச் சொன்னால் அனாரின் கவிதைகளைச் ‘சொற்பெருக்கு’ என்று சொல்ல வேண்டும். ‘மானுட மனதின் சொற்பெருக்கு இந்தக் கவிதைகளின் ஆதாரம்’ எனப் ‘பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்பின் பிற்குறிப்பு கூறுகிறது.

கவிதைத் தலைப்புகளும் ஓரிரு சொற்களுக்குள் அடங்குவதில்லை. ‘குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்’, ‘வண்ணத்துப்பூச்சியின் கனாக்காலக் கவிதை’, ‘இருப்பின் பின்னால் வாழ்வின் வெளி’, ‘பருவ காலங்களைச் சூடித் திரியும் கடற்கன்னி’ என விரிகின்றன அவை. ஓரிரு சொற்களுக்குள் அடங்கிய தலைப்புகள் அவரால் கட்டுப்படுத்தப்பட்டவை என்று தோன்றுகின்றன. ‘உனது பெயருக்கு வண்ணத்துபூச்சியென்றொரு அர்த்தமிருப்பது எவ்வளவு பொருத்தம்’ எனத் தொடங்கும் கவிதை தங்கு தடையில்லாமல் ‘உன் தந்திரத்தின் மாயம் அளவற்றது, உள்ளே பாடல் போல மிதக்கின்ற வண்ணத்துப் பூச்சி, வெளியே பிடித்துவைக்க முடியாத கனா’ என்றெல்லாம் விரிந்து பரவி ‘வண்ணத்துப்பூச்சியின் பிரம்மாண்டமான கனாக்காலக் கவிதை நானென்பதில் உனக்குச் சந்தேகமிருக்கிறதா இனியும்’ என முடிவென்று தோன்றாத வரிகளில் முட்டி மோதி நிற்கிறது. அனாரின் கவிதைகள் ‘முத்தாய்ப்பு முடிவு’ என்னும் இலக்கணத்தையும் ஓரளவு மீறுகின்றன. இன்னும் ஏதோ இருக்கிறது எனத் தேடினால் ஏமாற்றம் மிஞ்சும் வண்ணம் முடிந்து விடுகின்றன.

பிரவாகமும் சொற்பெருக்கும் படிப்படியாக நிதானம் பெறுவதே இயல்பு. ஆனால் அனாரின் ‘உடல் பச்சை வானம்’ தொகுப்பிலும் சரி இப்போது வெளிவந்திருக்கும் ‘பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்பிலும் சரி ஆற்றோட்டத்தைக் காண இயலவில்லை. இன்னும் பிரவாகம்தான். ஆனால் ஆற்றோட்டமாக்க அவர் முயன்றிருக்கிறார் என்பது தெரிகிறது. ‘கொக்கோ மரங்கள் பூக்கின்ற மலைமுகடுகளில் தேனீக்கள் ஒன்றையொன்று சுற்றி ஆனந்தத்தைக் கூட்டாக இரைகின்றன’ எனத் தொடங்கி விரிந்து செல்லும் கவிதை ‘இரவுத் தேன்கூடு நிரம்பியிருக்கிறது, கனவில் இருந்தபடி, முதலாவது நீலத்தேனைப் பருகிடும் தருணம், மலை நகர்ந்து போகிறது’ என சற்றே ஆசுவாசத்துடன் முடிகிறது. சிறிய தொடர்கள், பத்தி பிரித்தல், குறைந்த சொற்களில் தலைப்பு என தம் கவிதைகளுக்கு நிதான நடையைக் கொடுக்க முயல்கிறார் அவர். ஆனால் அவை முறுக்கிக்கொண்டும் உடைத்துக் கொண்டும் வெளிப்படுவதையே விரும்புகின்றன.

அனாரின் கவிதைகளைப் பல கோணங்களில் அணுகச் சாத்தியங்கள் உள்ளன. ஈழத்து வாழ்க்கைப் பின்னணி, காதல், இயற்கை, கவிதை காட்டும் ஆண்கள், பெண் உலகம், பெண்மொழி – இப்படிப் பல. பெண்ணைப் பற்றிய கவிதைகளில் நேரடித்தன்மை கொண்டவை, மறைமுகமானவை எனப் பகுத்துப் பார்க்கலாம். ‘பெண் பலி’, ‘நான் பெண்’ முதலியவை நேரடியானவை. பெண் உடலைப் பற்றி ‘என் முன் தான் நிகழ்கின்றது என் மீதான கொலை’ என்று எழுதுகிறார். ‘நான் பெண்’ கவிதையில் ‘எனக்கென்ன எல்லைகள் நான் இயற்கை, நான் பெண்’ எனப் பிரகடனம் செய்கிறார். ‘சுலைஹா’ போலப் பெண் பாத்திர நோக்குக் கவிதைகளும் உள்ளன. ‘மேலும் சில இரத்தக் குறிப்புகள்’ கவிதையும் நேரடியானதுதான். ஆனால் அதில் பிரகடனம் ஏதுமில்லை. அவ்விதம் பெண் நோக்கிலிருந்து எதையும் காணும் பார்வை கொண்ட மறைமுகக் கவிதைகளே முக்கியமானவை. இவ்விதம் ஒற்றைக்குள் அடங்காமல் பல்கி நிற்கும் தன்மை கொண்ட கவிதைகளின் ஒவ்வொரு வகைமை பற்றியும் விரிவாகப் பேசலாம்.

அனாரைப் பொருத்தவரை அனைத்துமே கவிப்பொருள்தான். எல்லாவற்றின் மீதும் பார்வை பதிந்து அவற்றைப் பற்றிய பார்வை ஒன்றை உருவாக்கிவிடுகிறது. அதனால்தான் காட்சி அடுக்குகள் நிரம்பிக் கிடக்கும் கவிதைகளாக இவை இருக்கின்றன. நிசப்தம் பற்றிப் பேசும் கவிதை ஒன்றில் எத்தனையோ காட்சிகள் கிடைக்கின்றன. மழைக்காடுகள், குளிர்ந்த ஆற்றங்கரை, நட்சத்திரங்கள், தீய்க்கும் கோடை, பள்ளத்தாக்குகள், முயல்கள், புல்வெளி, குளிர்கடல், மழைக்குரல், அறைகள், சிறுத்தையின் புள்ளிகள், முட்டைகளைப் பெருக்கும் ஆமை, கொலைவாள், தொங்கும் கயிறு, ஆலகால விசம் எனக் காட்சி அடுக்குகள். ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் இடையே பெரும் தாவல் இருக்கிறது. வாசக மனமும் அவ்விதம் தாவுகிற பயிற்சிக்குத் தயாராக வேண்டும்.

இந்தக் காட்சிகளுக்கிடையே ஒருமையை எதிர்பார்த்தால் பெரும் ஏமாற்றமே மிஞ்சும். இவை கவிதையில் பெறும் இடம், கவிதைக்கு இவை தரும் இடம் ஆகியவை குறித்த விவாதம் தேவை. அது ஒருபுறமிருக்கட்டும். இத்தனை காட்சிகள் பதிவாகும் விதத்தில் நவீன கவிதை எழுதப்படுவது ஒருவகையில் மகிழ்ச்சி தருகிறது. காட்சிப் பதிவுகளை மையப்படுத்திய தமிழ்க் கவிதை மரபின் இழை நவீன கவிதையில் அறுபட்டுவிட்டதோ என்னும் கேள்விக்கு ‘இல்லை’ எனச் சொல்லி அனாரின் கவிதைகளை முன்வைக்கலாம். காட்சி ஒருமை கொண்ட கவிதைகளையும் அனார் நிறையவே எழுதியுள்ளார். அவை கவிதை பழகிய மனதுக்கு ஆதர்சமாக அமைகின்றன.

‘புள்ளக்கூடு’ என்றொரு கவிதை. ‘கிழக்கிலங்கை கல்முனைப் பிரதேச முஸ்லிம் வீடுகளில் குளவி கூடு கட்டியிருந்தால் அதே வீட்டில் அல்லது அயலில் பெண் கருத்தரித்திருக்கிறாள் என நம்பும் வழக்கம் இருக்கிறது’ எனக் கவிதையின் அடிக்குறிப்பு கூறுகிறது. குளவி கூடு கட்டினால் அவ்வீட்டுப் பெண் கருத்தரிப்பாள் என்னும் நம்பிக்கை தமிழகத்திலும் உண்டு. வீட்டில் வந்து கட்டும் குளவிக்கூடு, குருவிக்கூடு ஆகியவற்றைக் கலைக்கும் வழக்கமும் இல்லை. அவ்வாறு கலைத்தால் அவ்வீட்டில் கலகம் உண்டாகும், பிள்ளைப்பேறு இருக்காது என்னும் நம்பிக்கைகள் உள்ளன. இந்நம்பிக்கையை மையமாக்கி கருக்கலைப்பு ஒன்றைப் பற்றிப் பேசுகிறது கவிதை. முரணுக்குக் குளவிக்கூடு பயன்படுகிறது. குளவிக்கூட்டுக்குத்தான் இன்னொரு பெயர் ‘புள்ளக்கூடு (பிள்ளைக்கூடு).’

வண்டுகள் வரிசையாகத் திரும்பி மடியில், கையில், தலைமுடியில், காதுகளில், தோளில், வயிற்றில் இறங்கும் காட்சி அடுக்கு. புண்ணைத் துளைத்து ஏறும் வண்டுகள். இங்கே வண்டுகள் இரைச்சலும் அருவருப்பும் தொந்தரவும் தருபவை. கருத்தரிப்பு எவ்விதம் நிகழ்ந்தது என்பதை உணர்த்தும் குறியீடாகக் கறுப்பு வண்டுகளைக் கொண்ட காட்சிகள் அமைந்து கவிதை ஒருமைக்கு உதவுகின்றன. இயல்பில் நிகழ்ந்த கருத்தரிப்பு அல்ல அது. புண்ணைத் துளைத்து ஏறிய வண்டுகளால் நேர்ந்த கருத்தரிப்பு அது. ஆகவே பலா, அன்னாசி, எள்ளு என ஏதேதோ தின்றும் பலமுறை மாடிப்படிகளில் ஏறி இறங்கியும் மூன்று நாட்களில் ஆறு மாத்திரை விழுங்கியும் கலைக்கப்படுகிறது. ‘எல்லாம் முடிந்துவிட்டது வெற்றிகரமாக.’ முரணை உணர்த்தும் கடைசிக் காட்சி இது: ‘கதவு மூலைக்குள் உள்ளது அப்படியே குளவிக்கூடு.’ இந்தக் காட்சியோடு முடிந்திருந்தால் கவிதை இன்னும் சிறந்திருக்கும். ஆனால் அடிக்குறிப்பில் வரும் விளக்கம் கவிதையின் இறுதியிலும் இவ்விதம் வந்து சேர்கிறது: ‘குளவி வட்டமாகக் கூடு கட்டினால் பெண் குழந்தை. நீளமாகப் பூரானின் வடிவில் அடுக்கி அடுக்கிக் கட்டினால் ஆண் குழந்தை.’

காட்சிகளில் பிரியமுடைய கவிஞருக்குப் பயணத்தில் ஈடுபாடு இருப்பது இயல்பு. ‘எனக்குக் கவிதை முகம்’ நூல் ‘மண்புழுவின் இரவு’ என்னும் கவிதையில் தொடங்குகிறது. அக்கவிதை மாலையில் தொடங்கி இரவில் நீளும் பயணம் ஒன்றை விவரிக்கிறது. இருந்த இடத்தில் இருந்தே செல்லும் பயணம். காட்சிகளால் நிரம்பும் பயணம். மழை ஈரம் காயாத தார்வீதியில் தொடங்கும் காட்சி, மாலை, அடரிருள், மல்லாந்து கிடக்கும் மலைகள், கூதல் காற்று, மணக்கும் நன்னாரி வேர் என விரிகிறது. ‘றபான்’ இசைக்கும் முதியவர், நிறுத்தி வைக்கப்பட்ட வைக்கோல் பொம்மைகள், அடி பெருத்த விருட்சங்கள், கரும்புக்காடு, மணல் பாதை, மஞ்சள் நிறப் பூனை, பிறை நிலா, நட்சத்திரம் என இன்னும் இன்னும் செல்கிறது.

ஒருவகையில் இந்தக் கவிதை சங்க இலக்கியப் பாடல் போன்று பிரிவில் துஞ்சாத பெண்ணின் இரவைப் பேசுவதுதான். ஆனால் காட்சிகள் பிரிவுத்துயரைப் போக்கிவிடுகின்றன. அதற்குக் காரணம் ‘இருளின் இருளுக்குள்ளே எவ்வளவு பிரகாசம் நீ, கூதல் காற்றுக் கற்றைகளில் நாசியில் நன்னாரி வேர் மணக்க மணக்க மிதந்து வரும்’ இணை பற்றிய காட்சித் தோற்றம்தான். அவ்விதம் தோன்றுவதால் எல்லாக் காட்சிகளும் இன்பமாகிவிடுகின்றன. ‘இந்தப் பொழுதை ஒரு பூக்கூடையாய்த் தூக்கி நடக்கின்றேன்’ என்று அதனால் சொல்ல முடிகிறது. ஆனால் தனிமையில் நீளும் இரவு அது. அந்தத் துயர் காட்சிகளில் படியாமல் பார்த்துக்கொள்கிறது கவிமனம். எனினும் கவிதையின் முடிவு துயரையே தருகின்றது. ‘நீளமான நூலாய் தெரிகின்றது இரவு, நான் தனித்த மண்புழு, சிறுகச் சிறுக நீளுகின்றேன், தொடர்ந்து நீளமான வெள்ளை நூல் தெரியும்வரை.’ வரப் போகும் பகலும் நீளம்தான். அது வெள்ளை நூல். அதுதான் வேறுபாடு.

காட்சிகளில் ஈடுபாடுள்ள கவிஞருக்கு இயற்கை மீது இருக்கும் அன்புக்கு அளவில்லை. எங்கெங்கும் இயற்கை கொட்டிக் கிடக்கிறது. இயற்கை எவ்விதமெல்லாம் அர்த்தப்படுகிறது, உருமாறுகிறது என்பதை அறிய அனாரின் கவிதைகளுக்குள் ஓர் உள்முகப் பயணம் நிகழ்த்தியாக வேண்டும். இயற்கையின் ஒவ்வொரு அம்சமும் மனிதரோடும் மனதோடும் அத்தனை நெருக்கமாக இருக்கின்றது. ‘கறிவேப்பிலை மரத்தில் அன்பைப் பழகுதல்’ என்னும் கவிதைக்குப் பொருள் வீட்டுக்குள் சமையலறையில் இருந்து ஜன்னல் வழியாகப் பார்த்தல் தெரியும் கறிவேப்பில்லை மரம். அது வெறும் மரமாகத் தெரியவில்லை. ‘அன்பின் பெருவிருட்சம்’ எனத் தெரிகிறது. அதனால்தான் அதை ‘எப்போதும் பார்த்துக்கொண்டிருக்க’ முடிகிறது. கறிவேப்பிலை மரம் என்னும் பெருவிருட்சம் காட்சியான பின் அதைச் சுற்றிச் சிறுகாட்சிகள் விரிகின்றன. அக்காட்சிகளில் வெளியாகும் மனோபாவங்கள் விதவிதமானவை.

அவ்வழியே செல்பவர்கள் அதை ஆராய்ந்து செல்கின்றனர். இலைகளைத் திருடுகின்றனர். கந்துகளை (கிளைகள்? குச்சிகள்?) முறிக்கின்றனர். பேராசை மிக்க வியாபாரி வருகிறான். எந்தவொரு இலையையும் விடாமல் உருவிச் செல்கிறான். ஆனால் மரம் துளிர்த்து அடர்ந்து செழித்துவிடுகிறது. எப்படி? ‘எதையுமே இழக்காத மாதிரி.’ செழித்த மரக் கந்துகளில் குருவிகள் புகுந்து பேசி விளையாடுகின்றன. அதன் காரணமாக மரத்தின் முகம் ஒளிர்கிறது. புது அழகுடன் மிளிர்கிறது. கறிவேப்பிலை மரத்தைக் கொண்டு அன்பை பழகும் வித்தையைக் கற்க முடியும் என்பது மாபெரும் தரிசனம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அனாரின் கவிதைகளை ஒற்றைக்குள் அடக்க இயலாது எனத் தொடங்கிய கட்டுரை ‘காட்சி அடுக்கு’ என்னும் ஒற்றைக்குள் தன்னையும் அறியாமல் நுழைந்துவிட்டது. எல்லாவற்றிலும் ஏதோ ஒரு பொதுமை இருக்கும் என்பதால் இது நிகழ்ந்ததா? எல்லாவற்றையும் ஏதொ ஒரு பொதுமைக்குள் அடக்கும் மனோபாவம் நமக்குள் இருக்கிறது என்பதால் இது நிகழ்ந்ததா? எப்படியாயினும் அனாரின் கவிதைகளை ‘பிரவாகத்தில் மிதக்கும் காட்சி அடுக்குகள்’ என்று சொல்லி முடிக்கின்றேன்.

-----------------------------------------------------------------------------------------------------------------

நன்றி -  அடவி - 2017 ஆத்மாநாம் விருது சிறப்பிதழ்



Thursday, 12 October 2017

கவிஞர் ஆத்மாநாம் விருது விழா - 2017

ஏற்புரை : - அனார்
-----------------------------------------------------------------------------------------------------------




// அற்புத மரங்களின் அணைப்பில்
நான் ஒரு காற்றாடி
வேப்பமரக் கிளைகளின் இடையே
நான் ஒரு சூரிய ரேகை

பப்பாளிச் செடிகளின் நடுவே
நான் ஒரு இனிமை
சடை சடையாய்த் தொங்கும் கொடிகளில்
நான் ஒரு நட்சத்திரம் //

இது ஆத்மாநாம் கவிதை.


தன்னிலை அழிந்த பைத்திய வெளியில் இரு எறும்புகள் ஒரே கோட்டில் ஏறு வரிசையாகவும் இறங்கு வரிசையாகவும் பயணிக்கையில் சில இடங்களில் சந்தித்துக்கொள்வதுண்டு. மிகச் சில கணங்களுக்கு நிதானித்து பின்னர் பயணிக்கும் அவ்வெறும்புகளைப் போன்றுதான் ஆத்மாநாம் கவிதைகளுக்குள் நான் பயணிக்கின்ற சந்தர்ப்பங்களில் ஏதோ ஒரு புள்ளியில் ஒத்த உணர்வுகள் சந்தித்துக் கொள்கின்றன. தமிழில் கவிதைகளில் தீவிர ஈடுபாடுகொண்ட யாரும் ஆத்மாநாமை அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.

சிவரமணியின் மரணம், சில்வியாபிளாத்தின் மரணம் அல்லது தங்கள் மரணத்தை தாங்களே நிகழ்த்திய அனைத்துக் கலைஞர்களின் மரணங்களும் அவ்வாறுதான், அவர்தம் கலைகளுக்குள்ளே அம்மரணம் தொடர்ந்து நிகழ்ந்தவாறே இருப்பது. ஆத்மாநாம் மறுபடி மறுபடி தன் கவிதைகளுக்குள் தன் மரணத்தை நிகழ்த்துகிறார்.... ஒரு அடர்த்தியான சாம்பல் நிறத்தில்.

//என்னை அழித்தாலும், என் எழுத்தை அழிக்க இயலாது // – என ஆத்மாநாம் கூறுகிறார். அவரது கருத்தியல் மனிதாபிமானம்தான். இயற்கையிடமிருந்தே அதற்கான நம்பிக்கையைப் பெறுகிறார். தீவிர மனப்போக்குகளுடன் அவர் கையாண்டுள்ள சொற்கள் மிகைப் பாவனைகள் அற்றவை. தத்துவச் செறிவும் எள்ளலும் சுயம்பற்றிய அதீதமான சிந்தனைகளும் அவருக்குள் இருந்திருக்கின்றது.

வலிமையான கவிதைகள் ஊறிவரும் அந்தமனம் மெல்லிய நூலிழைகளால் பின்னப்பட்டிருக்கிறது. மிகுந்த ஆற்றல் கொண்ட ஆத்மாநாம் எனும் கவிஞரின் பெயரால் வழங்கப்பட்ட இந்த விருதினை பரிபூரணமான முழுமனதுடன் பெற்றிருக்கிறேன். என்னைத் தேர்வு செய்த நடுவர்களுக்கும் ஆத்மாநாம் அறக்கட்டளை குழுவினருக்கும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

எனது மானசீகக் குருவைப்போன்று மரியாதைக்கும் என் பேரன்பிற்குமுரிய கவிஞர் சச்சிதானந்தன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன். அவர் கரங்களால் இவ்விருதைப் பெற்றிருப்பது மிக முக்கியமானதும் என்னுடைய கவிதைகளின் ஒவ்வொரு சொற்களும் பூரிப்படைகின்ற தருணமுமாகும். 




இன்று இவ்விடத்தில் நிற்பதற்கான ஏற்பாடுகளை வாழ்க்கை தயவு தாட்சண்யமின்றி எனக்கு வழங்கியிருக்கிறது. என்னுடைய ஒவ்வொரு பருவங்களிலும் நினைவு கூரத்தக்க எதிர்நீச்சலுக்கான சந்தர்ப்பங்கள் பல இருக்கின்றன. அவைதான் பின்னரும் உருவான அக புற நெருக்கீடுகளை எதிர்கொள்வதற்கான வலிமையை ஊட்டின என நான் திடமாக நம்புகின்றேன்.

அந்தப் பருவமே விளையாட்டாக இருந்தது. மதத்தை தொன்மங்களை பண்பாட்டை விளையாட்டாக தெரிந்து கொண்டேன். ஒரு முதிர்ந்த பெண் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிப்பாடிஎனது ஒரு காதிலும்... முதிர்ந்த ஆலிம் ஒருவர் குர்ஆனை ஓதி ஓதி இன்னொரு காதிலும் சொல்லித் தந்தார்கள். பின்னர்தான் அனைத்து விளையாட்டுக்களும் முடிவுக்கு வரும் வகையில்எங்கள் கிராமங்களை அச்சம் பீடிக்கத் தொடங்கியது. இரவில் பயம் .. பகலில் பதற்றம்... பீதிகொண்டு ஊரே திடீரென தலைகீழாக மாறியது. அவ்வளவு நிரந்தரமின்மையானநாட்களாகவும்.. ஆழமான வடுக்களை தந்த காலம் அதுவாகவும் இருந்தது.



ஊரடங்குச் சட்டம், துப்பாக்கி, கடத்தல், குண்டுவெடிப்பு, கப்பம், கொலை, மரணம், காணாமல் போதல் இப்படிப்பல அந்நியமான அறியப்படாத வார்த்தைகளை தெரிந்து கொள்ளத்தொடங்கினோம். கலவரத்தைக் காண்கிறேன்.... மரணங்களைக் காண்கிறேன்.... இரவும் பகலும் நிசப்தமாக மாறியதைக் காண்கிறேன்.... ஒருநாள் என் ஊருக்குள்ளே சுட்டுக்கொண்டுவரும் சிலரால் துரத்தப்பட்டு நீண்ட தூரம் ஓடுகிறேன். எனது தந்தை இவற்றைக் காரணம் காட்டி பாடசாலை செல்வதிலிருந்தும் என்னை நிறுத்திவிடுகிறார். எனக்கு அப்போது பதினைந்துவயதுஇ 10ஆம் வகுப்பில் இருந்தேன். பிறகென்ன வாழ்வும் பண்பாடும் சமூகக் கட்டுப்பாடுகளும் கலாச்சாரமும் அரசியலும் அறமும் நீதியும் ஒன்றுகூடி மூச்சுமுட்டுமளவிற்கு பாதுகாப்பாகஏற்கனவே பூட்டிவைக்கப்பட்ட பெண்களோடு நானும் மற்றொரு பெண்ணாக சேர்க்கப்பட்டிருந்தேன்.

அன்றைய நாள்களில் இறுகப் பிடித்திருந்த ஒரு வகை கனமான தனிமையை என்ன செய்வதென்றே தெரியவில்லை. கொய்யா மரத்துடன் முறைப்பாடுகளைச் சொல்லிக்கொண்டே ஊஞ்சல்ஆடும் பொழுது காற்றுக்கும் எனக்கும் என்றைக்குமான அபரிமிதமான ஒரு உடன்படிக்கையைச் செய்து கொண்டேன்.

எந்த ஒரு இலக்கியப் பரீட்சயமும் அப்போது இருக்கவில்லை. ஆனால் ஒரு இரவில் என் முதலாவது கவிதையை நானே எதிர்பாராமல் திடீரென எழுதினேன். வீட்டிலிருந்த ஒரேயொரு ஊடகசாதனமான சிறிய ரேடியோவில் நாங்கள் வழமையாகக் கேட்கும் முஸ்லீம் நிகழ்ச்சியில் அக்கவிதை ஒலிபரப்பானது. அக்கவிதையை ஒரு பெண் வாசித்தார். வேறு யாரின் காதிலும்விழமுன்னர் விழுந்தடித்து ஓடிப்போய் றேடியோவின் சத்தத்தைக் குறைத்து கன்னம் வைத்து என் கவிதையினை ரகசியமாகவே கேட்டேன். முதல் பாவத்தை அப்படித்தான் மூடி மறைத்தேன்.

அடுத்தடுத்து எழுதும் கவிதைகளை யாருமறியாமல் எனது தம்பிக்கு லஞ்சம் கொடுத்து தபாலில் அனுப்பிக் கொண்டிருந்தேன். சில வேளைகளில் முத்திரையொட்டுவதற்கு பணமிருக்காதுஇ ஏற்கனவே வந்த கடித உறைகளில் ஒட்டியிருக்கும் முத்திரையை கிழியாமல் பிரித்து சீல் இருக்கும் தடம் தெரியாமல் அழித்து மீண்டும் கடித உறைகளை ஒட்டி அனுப்பியஅனுபவங்களெல்லாம் ஒரு வகை சாகசமாகவே அன்றிருந்தன. போதுமான சிறகுகள் முளைத்துவிட்ட பறவை எப்படி பறக்காமல் இருக்கும்... என்னைப் பொறுத்தவரை மொழி ஒரு வகைச்சிறகு... கவிதை ஒரு வகைச் சுதந்திரம்... இப்படித்தான் நானும் பறக்கத் தொடங்கினேன்.

சமூகம் பலவிதமான இம்சைகளுக்குள் சிக்கியிருந்த கொந்தளிப்பான காலத்தில் நான் கவிதை எழுதத் தொடங்கி இருந்தேன். சொல்வதற்கு அதிகமிருந்தன. ஆனால் சொல்ல முடியாதஇறுக்கம் வெளியிலிருந்தது. இரண்டுக்கும் நடுவில் என்னுடைய இருப்பைக் கவிதையூடாக நிலை நிறுத்தத் தொடங்கினேன். நிராதரவும் அபாயங்களும் அச்சங்களும் பலவிதமாகத் தாக்கின.உயிர்இ உடல்இ மனம்இ இனம்இ அரசியல், மதம், பண்பாடு, நிலம், ஊர் எல்லாம் என்னைச் சுற்றி எரிந்தன. என்னுடைய வாழ்க்கை. அத்தம்விட்ட பெருவிரலுக்கும் பழம் விடுகிற சிறுவிரலுக்கும்இடையே இருந்த சந்தோசங்களிலிருந்தும் விளையாட்டுக்களிலிருந்தும் அன்றாட இயல்புகளிலிருந்தும் விலகி எதிர்பாராத அதிர்ச்சிகளோடு என் எதிர் நின்றது. அந்த பயங்கரமானஉண்மையின் வெம்மை தாளமுடியாது ஒதுங்க நான் சொற்களைத் தேடினேன். சொற்களுக்குள் என்னைப் புதைத்துக்கொள்ள முயன்றேன். யாருமறியாமல் காற்று என்னை எடுத்துச் சென்றுசொற்களின் மீது வைத்தது. நான் என்பது அப்போது ஒரு காயாத கண்ணீர்த் துளி. என் ஆன்மாவின் விழிப்புநிலை உண்மையின் வெம்மைக்கருகே எப்போதும் தவித்தது என்பதற்கானஆதாரமாகவே எனது கவிதைகள் இருக்கின்றன.

பெண் எழுதுவது அல்லது சிந்தனைத் தளத்தில் செயற்படத் தொடங்குவது சமூகத்தின் முன் ஏதோ ஒரு வகையில் அவளது தார்மீகக் குரலை எழுப்புவதெல்லாம் இலகுவான ஒன்றாகஎப்போதுமே இருந்ததில்லை. இங்கு முஸ்லீம் பெண் ஒருவரின் கலைச் செயற்பாடு இரண்டு மடங்கான எதிர்ப்புகளை எதர்நோக்க வேண்டியுள்ளது. அவளுக்கு மற்ற அனைத்தையும் விடஅவளுக்கு கற்பிக்கப்பட்ட மதம் அனுமதிக்கின்ற எல்லை கூடுதலான பொறுப்பாக இருக்கின்றது. ஏனெனில் அது தலைமுடியில் தொடங்கி கால் விரலில் முடிகிறது. எல்லா வகையானகட்டுப்பாடுகளுக்கும் உட்பட்ட நிலையில் கவிதைகள் எழுதுவது, முன்யோசனைகளோடும் கடும் கவனத்தோடும் செயற்பட வேண்டியிருக்கின்றது.

உயிரற்றுப்போவது, இறப்பினூடாக நிகழ்வது மாத்திரமல்ல. வாழும்போதே உயிரில்லாமல், உறைவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள, அதாவது வாழ்ந்தபடியே இறப்பதற்கான பல வாய்ப்புகளை சக மனிதர்களும், சமூகமும் வழங்குவார்கள் என்று ஒரு பெண் விரைவில் தெரிந்துகொண்டு விடுகிறாள்....... 

எழுதுவதால் ஒழுக்க ரீதியாக ஒரு பெண் தாக்கப்படுவதுபோல் ஆண்களுக்கு ஏற்படுவதில்லை. நான் பெண்ணாக இருப்பதன் காரணமாகவே சில கவிதைகளை எழுத முடிந்துள்ளது. இன்னும்சில கவிதைகளை எழுதவே முடியாது போயுள்ளது. ஒரு பெண் கவிதையைத் தேர்வு செய்வது தனது அரசியலையும் தேர்வு செய்வதாகும். நுண்ணுர்வுகளுடனும், சரி... தவறுகளுடனும்மறையவும் வெளிப்படவும் தனக்கென ஓர் மாய வெளியை கவிதைக்குள் உருவாக்குகிறாள். இங்கிருந்தபடியேதான் சுலைஹா கவிதையை எழுதினேன். பிளேட் கதையையும் எழுதினேன்.மேலும் சில இரத்தக் குறிப்புகளையும், பிச்சியையும், நான் பெண்ணையும், குறிஞ்சியின் தலைவியையும் எழுதினேன். 

கவிதையானது ஒரு பைத்தியச்சுவை. தெளிவான பாதையில் நேராகப் பயணிப்பவரை கவிதை போதையுறச் செய்கிறது... தடுமாறச் செய்கின்றது.... நான் போதையுற நொதித்துப்பொங்கும் சொற்களையே அருந்துவேன்.... சிறு எரிதணலுடன் புகையும் சொற்களையும் நான் அறிவேன்.

மேலும், கவிதைகளினால் ஒருவர் தனக்குள்ளே உருவாக்கக்கூடிய ரகசியப்புலம் மிக அந்தரங்கமானது.

எந்தவொரு கவிதைமனதிற்கும் கட்டாயங்களில்லை. நம்மை கட்டுப்படுத்தும் சமூகக் கட்டமைப்புக்கள் வரையறைகள் சட்டதிட்டங்களுக்கும், கலைத் தன்மைகளுக்கும் மத்தியில் பெரும்இடைவெளிகள் உள்ளன. இந்த இடைவெளியில்தான் கலையின் படைப்பூக்கம் செயற்படுகின்றது.


கனவை மட்டும் கொண்டதல்ல கவிதை. உண்மையை அல்லது அனுபவத்தை மட்டும் கொண்டதுமல்ல. புத்திக்கூர்மையினாலோ, அறிவுப் புலமையினாலோ, படிமங்களினாலோ, உருவகங்களினாலோ, திட்டமிட்டு தனிச் தனிச் சொற்களில் வெளிப்படுவதுமல்ல. அவரவர் கவிதை அவரவருக்கான மனம்.

நான் உணர்ந்ததெல்லாம் கவிதையில் எட்டிவிட்டேனா என்றால் இல்லை.. எட்டுவேனா என்றும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. அந்தப் பாதையில் நான் இன்னும் தூரம் பயணிக்கவேண்டும். பயணமே அதன் இலக்காகவும் இருக்கிறது. மறுபடி மறுபடி நான் கவிதையிடம் சென்றடைந்தது என் அக விடுதலையைப் பெற்றெடுக்கத்தான்.


இப்படி எனது எனது என்று பேசுகிறேனே இவ்வளவு எனதுகளுக்குப் பின்னாலும் ஒருவருடைய அர்ப்பணித்தல் மௌனமாக இருக்கின்றது. இதுவரையில் நான் எங்கேயும் அவரைப்பற்றி எழுதியதோ பேசியதோ இல்லை. என் திருமணத்தின் பின் எனது முதல் கவிதைத் தொகுப்பை தனது தனியான முயற்சியினால் ஒரு அன்புப் பரிசாக எனது கணவர் அஸீமே நூலாக்கிக் கொடுத்தார். அக்கவிதை நூல் அரச சாஹித்திய விருதைப்பெற்ற போது அந்த விருதினை கவிதைத் துறைக்கென பெறும் முதல் முஸ்லீம் பெண்ணாக நான் இருந்தேன். என் குடும்பத்தினரிடம் அவ்விருது மிக மாறுதலை ஏற்படுத்தியது. தீமையான செயலையல்ல ஏதோ நான் பெருமை தேடித் தருகின்ற ஒன்றைத் தான் செய்கிறேன் என அவ்விருது அவர்களுக்குச் சொல்லியது. இவ்விதமாகத்தான் அதன் பிறகு கிடைத்த விருதுகள் ஒவ்வொன்றும் எனது அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்திருக்கின்றன. அன்று அஸீம் திருமணம் முடித்த கையோடு அத்தொகுப்பை வெளிக்கொண்டுவராதிருந்தால் நான் தொடர்ந்து எழுதியிருக்க வாய்ப்பே இல்லை. எழுதுவதற்காக தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் வசதியையும் பக்கபலத்தையும் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த நிமிடம் வரை எனக்கு நேரும் சந்தோசங்களைப்போல பளிச்சொற்களையும் நண்பர்களைப்போல எதிரிகளையும் தோல்விகளைப்போல சவால்களையும் கசப்பான எதிர்வினைகளையும் அவரும் இணைந்தே சுமந்திருக்கிறார். 


கவிதை தரும் குழப்பமான மனநிலைகள்... அதன் திளைப்பும் மூட்டமான சோர்வும் உன்மத்தமான வலிகளும் என்னொருத்தியின் அக உலகுடன் சம்மந்தப்பட்டது. வெளிப்படையாக சுமப்பவர்கள் கணவனும் மகனுமே ஆகும்.

எழுதாதிருக்கும் சமயங்களில் என்னிடம் எழுதத் தொடங்கவில்லயைா என அக்கறையாகக் கேட்கின்ற ... இதுவரை எழுதிய ஒவ்வொரு கவிதைகளையும் தன் கைகளால் டைப்செய்து தந்துவிட்டு என் கைகளைக் குலுக்கி முத்தமிடுகின்ற, இரவு 2, 3 மணியானபோதும் குறைந்த வெளிச்சத்தில் வாசிக்கவோ எழுதவோ கூடாதென, பகல் போல் வெளிச்சத்தில் நான் எழுதிக்கொண்டிருக்க முகம் சுளிக்காமல் உறங்குகின்ற அந்த மகத்தான காதலை எப்படி கண்ணியப்படுத்துவது என எனக்குத் தெரியவில்லை. இந்தக் காதலுக்கு சமமான கவிதை ஒன்றையுமே இன்னும் நான் எழுதிவிடவில்லை. தீரா நன்றிக்கடனாக அது எஞ்சி நிற்கின்றது. 

என் கனவு மாளி்கையின் முற்றத்தில் கவிதைப்புறாக்களை வளர்க்கின்றேன். அவை கொறிக்கும் தானியங்களால் என் கூடை நிரம்பியுள்ளன. புறாக்கள் கோதுவதும் கொஞ்சுவதும் குறுகுறுப்பதும் பார்த்துப் பார்த்து அவைகள் மயங்கும்படி இசைக்கின்றேன். புறாக்களின் அரவணைப்பும் நெருக்கமும் மென் இறகுகளின் கதகதப்பும் தனிமையின் நிறங்களுக்குள் என்னைஅடைகாக்கின்றன. என் கனவுகளில் அவை இருக்கிறதென்றும் இல்லையென்றும் தோன்றுகின்றது. புறாக்கள் வேறெங்கும் திசைமாறிச் செல்வதில்லை. என்னுடைய கனவுகளின் ருசிக்குபழக்கப்பட்டிருக்கின்றன. அவை எங்கே எத்திசையில் செல்கின்றன? புதிய புறாக்களுடன் எப்போது திரும்புகின்றன? என்பதை கணிக்க முடியாது. மாயப் புறாக்கள் என்னிடம் வருவதுபோல்ஒருநாள் வராமலும் போகலாம். எதுவும் நிச்சயமில்லாதது....

எல்லையற்ற ஒன்றை எப்படி வரையறை செய்வது? அந்த விதமான அளவுகோலை முழுமையாக செயலிழக்கச் செய்வது கவிதை. இறப்பின் பின்னரும் பிறப்பின் முன்னரும் இருக்கக்கூடியஅரூப உயிராக....வாழ்வைப் போன்ற கேள்விக்கும் மரணத்தைப்போன்ற பதிலுக்குமிடையே கவிதையெனும் மெழுகுநதி குழைந்து அசைகிறது.

எழுதி எழுதி ஒன்றுமற்றுப் போய்விட வேண்டுமென்பதே என் ஆசை.

நிறைவாக மொழிபெயர்ப்புத் துறைக்கென இவ்விருதினைப் பெற்ற திரு. சத்தியமூர்த்தி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். குறிப்பாக சிறீனிவாசன் நடராஜன் அவர்கள் தன்னை சிறிதும் முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல் எல்லா விடயங்களையும் கரிசனத்துடனும் நேர்த்தியாகவும் கலைத்துவமாகவும் மேற்கொண்டிருந்தார், அவருக்கு என் அன்பையும் நன்றியையும் தெரிவிக்கிறேன். என் நண்பர்களுக்கும் சபையோர் அனைவருக்கும் நன்றியோடு என் கவிதையின் பேரன்பைத் தருகிறேன்.

நன்றி.

---------------------------------------------------------------------------------------------------------------------

Anar speech | அனார் | Poet Atmanam Awards 2017

https://www.youtube.com/watch?v=Mtu8Q9c9gcA
----------------------------------------------------------------------------------------------------------------------

( 30.09.2017 இல் சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்ற கவிஞர் ஆத்மாநாம் விருது விழா ஏற்புரை )










- அனார்


நம்பிக்கைகளுக்கும் அவநம்பிக்கைகளுக்குமிடையே கவிதைகளை அலையவிடுகிறோம்.

கவிஞர்களது மரணத்தின் பிறகான நினைவேந்தல் அவர்களது எழுதப்பட்ட கவிதைகளுக்கு ஏதோ ஒரு வகையான அடர்த்தியை ஏற்றிவிடுகின்றது.

வானம் நீலத்திலிருந்து வெண்மையை பிரித்தெடுப்பதற்கிடையில் அல்லது ஒரு அலையடித்து இன்னொரு அலை மேலுயர்வதற்கிடையில் கவிஞர் ரசூல் மரணித்திருந்தார். அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதே பெரும் திகைப்பாகிவிடுகிறது.


ரசூலின் சொற்களிலெல்லாம் சந்தண வாசமும் ரோசாப் பன்னீரும் மணக்கின்றன. அவரது கவிதைகளை நேசித்த அனைவரையுமே அவரது மரணம் மிகுந்த மனத்தாக்கத்தை ஏற்படுத்தியது. காலத்திற்குமான கவிதைகளை எழுதியவர். மரபார்ந்த வரலாற்றின் சம்பங்களோடும் காட்சிகளோடும் அவர் தன் கனவுகளை பிணைத்திருந்தார். ரசூலின் மொழி அவர் சொல்வதுபோல கருவண்டாய்ப் பறந்துபோகும் பிரபஞ்சவெளியில் சொற்களாக.

காலங்களின் தொலைவை மொழியால் கடந்துவிடும் வித்தையுடன் செயற்பட்டார். தமிழுக்கு கவிதைகளை இன்னொன்றாக மாற்றிக்கொடுத்தார். எதிர்காலத்தின் பசுந்தரையிலும் பாறைகளிலும் எதிரொலிக்கின்றது அவருடைய குரல்.

மதரீதியான அணுகுமுறைகளில் உள்ள பன்முகத்தன்மையின் சார்பாகவே ரசூல் அவர்கள் தனது பார்வையை முன் வைத்திருந்தார். அவருடைய ஆய்வுகளும் மிக விரிந்த பார்வையைக் கொண்டிருந்தவை. புனிதங்களைக் காப்பதன் கடமை தவறாத வரலாற்றின் தடத்தில் ஒருவழிப் பாதையில் நின்றபடி தனித்து தன் சொற்களின் கூர்மையால் கேள்விகளை எழுப்பியவர். அதனால் நன்கு சுடப்பட்ட மண்கலையம் போன்றதொரு மனம் ரசூலிடம் காணப்பட்டது.

கவிஞர் ரசூல் அவர்களிடம் நான் அவதானித்தது, தாய்மைகொண்ட பெண் மனதினை. அத்தோடு குழந்தையின் பார்வையிலிருந்து வரும் அப்பழுக்கற்ற கேள்விகளே, பாலினச் சமத்துவம்கொண்ட அவரது நிலைப்பாட்டை அனைத்துக்கு மேலாய் கலகத்தின் அறைகூவலாய் எழுந்த எதிர்க்குரலே. தன்னுடைய எழுத்தால் மரணத்தின் முகத்தை எல்லாப் பக்கங்களிலிருந்தும் வாசித்தவர் ரசூல். புனித தொன்மங்களுக்குள் இறந்துபோன சொற்களை கவிதைகளுக்குள் உயிரூற்றினார். வஞ்சிக்கப்பட்ட மனதிலிருந்து எழுந்த கவிதைகள் அவருடையவை. அநீதி இழைக்கப்பட்ட பக்கம் அவருடைய பேனா தலை தாழ்ந்திருந்தது. மரபிலிருந்து உருவான ரசூலின் விமர்சனப் பார்வை சமூகத்தின்முன் கருத்து ரீதியாக எதிர்கொள்ளப்பட வேண்டும். அவரது நூல்கள் பற்றி தொடர்ந்து உரையாடப்பட வேண்டும்.

அவருடைய செம்மண் மூடிய கஃப்ரின் மணல் அவருக்கு குளிர்ச்சியூட்டட்டும். எப்போதும் தணலாய் கனன்ற அவரது மொழி ரசூலின் உடலை நிழலாய்ப் போர்த்தியிருக்கட்டும்.


-------------------------------------------------------------------------------------------------------------

( 02.10.2017, சென்னையில் நடைபெற்ற ரசூலின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியது )