Thursday, 13 December 2018

அனார் கவிதைகளில் இருத்தலியலும் உளவியல் வெளிப்பாடும் 
----------------------------------------------------------------------------------------------------- 

- முனைவர். அரங்க மல்லிகா











பாலியம் என்பது முரண் நிறைந்தது. சமூக இருத்தலில் ஆண்களின் குணநலமும் பெண்களின் குணநலமும் அவர்களுடைய சமூகக் கலாச்சார வேறுபாடுகளுடன் பேசப்படுகின்றன. 1955இல் பாலிய வேறுபாடு (Gender discrimination) பற்றிப் பேசத்தொடங்கிய காலகட்டத்தில் சமூகத்தோடு பேசப்பட்டாலும் மிக நெருக்கமாக இலக்கியத்தில் அது பிரதிபலிக்கத் தொடங்கியது. மொழி சமூக இயக்கத்தை அதிலுள்ள பாலிய வேறுபாட்டோடு கட்டமைத்திருக்கிறது. இதனைப் பெண் மொழி என அடையாளப்படுத்தப்படுவர் பெணியலாளர்கள் அரங்க மல்லிகா, பிரேமா. 

பெண்மொழி எழுத்துக்கள் ஈழத்தில் அதிகம் பெண் கவிஞர்களால் அறிமுகமாகி உள்ளன. அனார் கவிதைகள் போருக்கான பிற்காலச் சூழலை எழுதினாலும் அவருடைய கவிதைகள் இருளின் எதிர்வான மொழியை மையப்படுத்தி அதனூடே தனிமை சார்ந்த வாழ்வும் இரக்கமும் சுயச் சார்பைத் தீர்மானித்தலும் போர்க்காலச் சூழலை எதிர்கொண்ட மனநிலையிலிருந்து தன்னை ஒரு பட்டாம்பூச்சியாக வைத்துக்கொள்ள கவிதையைப் பயன்படுத்துவது மிகுந்த கவனத்திற்குரியதாக இருக்கிறது. 

'அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் 
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர் கொள்ளார் 
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின் 
வென்று எறி முரசின் வேந்தரெம் 
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே' புறம்.112) 

என்னும் பாடலில் பாரின் ஆட்சி, அதிகாரம், கொடை பண்பு உள்ளிட்டவைகளைப் பெருமையோடு பார்த்துக்கொண்டிருந்த நிலா இன்றைக்குப் பாரியின் குன்று தொலைந்து ஆட்சி அதிகாரம் இழந்து அவர்களுடைய மகளிர் தனிமைப்பட்டு தந்தை இழந்த துயரைத் தன்னிரக்கமாகப் பாடிய சங்கப் புறப் பாடலின் தொடர்ச்சியே தமிழ் ஈழ பெண்கவிஞர்கள் இன அழிப்பை அடையாளப் படுத்துவதோடு ஈழத் தமிழ் விடுதலை வேட்கையை முன்னெடுக்கவும் தன்னிலை மாந்தர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும் கவிதை மொழியைக் கைக்கொண்டுள்ளனர். இதனை விரிவாக இக்கட்டுரை விவாதிக்கிறது. 

2009க்குக் பிறகான இலங்கையில் வாழும் மக்களின் போர்க்கால மன அழுத்தத்தை இக்கட்டுரை அனார் கவிதைகளின் துணையுடன் விவாதிக்கின்றது. இந்தக் கட்டுரையில் பெண்களின் உடல் ஆரோக்கியம், குழந்தைகள், மகப்பேறு பெண்களின் நிலை, காப்பகப் பெண்கள், இராணுவத்தில் ஈடுபட்ட பெண்கள் குறித்தான பதிவை இலக்கியங்கள் எவ்வாறு பதிவாக்கியுள்ளன என்பதையும் பேசுகிறது. பிரதிகள் பெண்ணின் உளவியலை எவ்வாறு பிரதிபலிக்கிறது அவர்கள் போர்க்காலச் சூழலை எவ்வாறு கடந்து தங்கள் இருப்பை உலகுக்கு எடுத்துக்காட்டுகிறார்கள் என்பதையும் ஆய்வுக்குட்படுத்துகின்றது. 


ஆய்வு மூலச்சொற்கள் :

போர் முன்னும் பின்னும், மன அழுத்தம் – நிலமிழப்பு – தன்னிலை மீட்டெடுப்பு. 


அறிமுகம் :

2009 இலங்கை - ஈழப்போரின் வரலாற்றுக் காலம். சிங்கள அரசு – தமிழ் ஈழம் ஆகிய இரண்டு அமைப்புகளுக்கு இடையே மக்கள் குற்றவாளிகளாக நின்று உயிர் துறந்த வரலாறு, காலத்தின் கரைந்த வரலாறு. எங்கெல்லாம் போர் நடந்ததோ அங்கெல்லாம் பொதுமக்கள் – பெண்கள் – குழந்தைகள் மிகக் கொடூரமான முறையில் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக போரில் விடுதலை புலிகளின் அமைப்பில் ஆண்கள் இருந்ததால் கூடுதல் பொறுப்பு பெண்களுக்காக மாறியது. 


விவாதம் ( Discussions ) :

பெரும்பாலும் பெண்கள்தான் போரில் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஈழப்போரில் பாதிக்கப்பட்ட வீரர்கள் உளவியல் அடிப்படையிலும் பாதிப்பை எதிர்க்கொண்டனர். 

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் தேர்ச்சிப் பெறுவது என்பது இயலாததாகவே இருக்கின்றது. 2009க்குப் பிறகும் 70 ஆயிரம் மக்கள் இடப்பெயர்வு நடந்திருக்கிறது. தொடர் வன்முறை, சந்தேகத்தின் அடிப்படையில் சிறை, காணாமல் போன நிலை, கொலை ஆகியன தொடர்கதையாகின்றன. பாலியப் பாகுபாடு நிறையவே உள்ளது. 

போருக்குப் பிறகு ஆண்களுக்கு வேலை இல்லாதபோது பெண்கள் வெளியில் வேலைக்குச் சென்றனர். அதனால் அவர்கள் பல ஆண்களை வெளியில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஒரு பெண் வெளியில் வேலைக்குச் செல்கிறாள் என்றால் அவள் மீதான பார்வை மாறுகிறது. அதனால் குடும்பத்தில் முரண் ஏற்படுகிறது. குடும்பத்தில் அவர்களின் பங்களிப்பு குறைவதால் ஆண் – பெண் உறவுக்குள் மன அழுத்தம் ஏற்படுகிறது. 

பாலிய உறவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. உழைப்பினால் வரும் பொருளாதாரத் தற்சார்பினால் கணவனைச் சார்ந்து வாழ்வது குறைவதாக ஆண்கள் நினைக்கிறார்கள். அதனால் குடும்பத்தில் முரண் ஏற்படுகிறது. யாரெல்லாம் வன்முறைகளைச் சந்தித்தார்களோ அவர்கள் வன்முறையாளர்களாக மாறுவார்கள். அவர்களுக்கு மாற்று வழி இல்லை. 

ஆண்கள் வறுமையினால் குடிக்கு அடிமையாகிறார்கள். அதனால் வீட்டில் முரண்பாடு ஏற்படுகிறது. வறுமையும் மதுப்பழக்கமும், குடும்ப உறவின் முறிவிற்குக் காரணமாகிறது. வன்முறை மற்றும் பாலியல் வன்முறை இலங்கை போர்க்காலப் பாதிப்பு பகுதிகளில் நிறைய நடைபெற்றுள்ளன. இத்தகைய சூழலைப் பெண் கவிஞர்களின் கவிதைப் பிரதிகளில் காணமுடிகின்றது. 

போர் இலக்கியங்களில் கவிதைகளின் பங்கு அவதானிக்கத்தக்கது. மூன்றாம் அலை பெண்ணியம் தோன்றிய பிறகு பெண்கள் பன்னோக்குப் பார்வையோடு விவாதிக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியப் பரப்பில் இந்தப் பாய்ச்சல் அகவெளி மற்றும் புறவெளி சார்ந்த பெண்களுடைய இருப்பை ஒரு கலகக் குரலோடு பதிவுசெய்திருப்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக 1983 இலிருந்து 2009 வரையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்கால அரசியல் அதனூடே தமக்கான தேசத்தின் விடுதலையை அல்லது உரிமைகளை மீட்டெடுக்க இலக்கியங்களை ஓர் ஆவணமாகப் பதிவுசெய்துள்ளனர். அதன்மூலம் உரிமைகளை மீட்டெடுக்க இழந்த உயிர்களையும் உரிமைகளையும் பற்றிப் பாடவும் பிரிதிகளைப் பயன்படுத்தினர். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இரண்டாம் உலகப்போர்களின் தாக்கத்தில் எழுந்த இருத்தல் இயல் சிந்தனை என்பது தொடர்ந்து பல்வைறு நாடுகளில் ஏற்பட்ட பெரும்பாலான போர்களின் தாக்கத்தினால் ஆதிக்க சக்திகளை எதிர்த்து நின்று போராடும் பொழுது போரில் வெகுவாகு பாதிக்கப்படக் கூடிய சாதாரண மனிதர்களின் அவலங்களும் உணர்வுகளும் பிரதிகளைக் கணப்படுத்துகின்றன. 

இச்சூழலில் ஈழத்திலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் அனார் 90 களில் தொடங்கி இயங்கி வருபவர். அவருடைய படைப்புகளில் பெண்களின் அடக்குமுறையும் அதை எதிர்கொண்ட அரசியலும் போரில் பாதிக்கப்பட்ட மனச்சிதைவிருலிருந்து மீண்டு பெண்ணின் தனித்துவதை அடையாளப்படுத்தியதும் தன்னுடைய பிரதிகளில் உயிரோட்டமாக்கி இருக்கிறார் என்பதை இக்கட்டுரை பேசுகிறது. 


'இலையுதிர் காலம் இல்லாமலேயே 
உதிர்கின்றன உயர்திணை மரங்கள் 
தனிமை நிறைந்த பொழுதுகளிலிருந்து 
தப்பிக்கின்ற அல்லது தனிமையின் வெறுமையினைத் 
தனக்குள் இருந்து மாற்றமுனைந்த குரலை 
கவிதை மீதான ஆர்வத்திலிருந்து அறிந்துகொள்ளமுடிகிறது' 

ஆதி பொதுவுடைமைச் சமூகம் தொடங்கி அதிநவீன அறிவியல் சமூகம் வரை மனிதன் தன்னிலைப் பெற்று செயல்பட முனைகிறான். இது உலகப்போர்களின் பின்னால் எழுந்த புரட்சிகளின் விளைவாகும். அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுதல் விடுதலையின் மைய அரசியலாகும். இருத்தலியம் அத்தகைய சித்தாந்தத்தை மனித விடுதலை அடையாளமாக உணர்த்துகிறது. இயற்கையின் வழிதான் மனிதன் செயல்படுகிறான். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் மனிதன் வெறுமை அடைவதை தவ்தெஸ்கி எடுத்துக் கூறுகிறார். இவ்வுலக வாழ்வில் மரணம் ஒன்று மட்டுமே மாறாதது. இத்தகைய மரணமுறுதலைச் சொல்லாததை அதை பற்றிய நியதிகள், சட்டங்கள் வரையறுக்கப்பட்ட மெய்ம்மை கோட்பாடுகள் பொருளற்றவையாகும் என்பதை அனார் கவிதைப் பிரதிகளின் ஊடாக அறிந்துகொள்ளலாம். கடந்த கால வரலாறும் பண்பாடும் மனிதனை அவன் உணர்வு இல்லாமலேயே சிறைப்படுத்துகின்றன. அடிமைப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் மனிதன் அடிமைப்பட்டுக் கிடக்கின்றான். இவ்வடிமைத் தளைகளை உடைத்தெறிந்து தாமே தனக்கான உரிமைகளோடு வாழவேண்டும் என்று தன்னெழுச்சியாக போராட வேண்டும் என்று சார்த்தர் குறிப்பிடுகிறார். மனித இருப்பானது அவள் சுதந்திரத்தை அவளே சுதந்திரத்தைப் பெற்றிடும் நிலையில் முழுமை அடைகிறது என்கிறார். 


'காதலுக்குப் பின் 
தொழிலின் இறுதியில் 
உலகை விட்டுப் பிரிகையில் 
சாவுக்கும் அப்பால் 
முதலுக்கும் முடிவுக்கும் 
முன்னும் பின்னும் 
முழுவதுமாக 
பின்னிப் பிணைந்து 
இல்லாமல் இருப்பது 
தெரியாமல் தெரிவது 
சொல்லாமல் சொல்லிக்கொள்வது 
எல்லோரும் நினைப்பது 
யாவரையும் கடந்தது 
புலனுக்குப் புரியாதது 
பொருளுக்குச் சிக்காதது 
எஞ்சி நிற்பது 
அது அதுவே!' 

என்னும் நகுலனின் கவிதை புறவாழ்வைச் சுட்டுகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் தனிமை, விரக்தி, வெறுப்பு போன்ற உணர்வுகள் போர்க்காலச் சூழலில் இருந்து அதிகரித்திருக்கிறது. இத்தகைய மனநிலை இடப்பெயர்வு புலம்பெயர்வு ஆகிய நிலைகளில் கூடுதலாக மனநோய்க்கு ஆளாகக் கூடிய நெருக்கடியைத் தந்திருக்கிறது. அகதியாய் வாழும் வாழ்க்கைப் பற்றியும் நிலத்தோடும் நீரோடும் இயற்கையோடும் வாழ்ந்த வாழ்க்கை சிதைந்துபோன நிலையையும் இருள் நிறைந்த இரவுகளாகவே பகலும் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அனார். போர்க் கவிதைகள் வெறும் வார்த்தைகளால் கட்டப்படுபவை அல்ல. அதனுடன் வரலாறு கடத்தப்படுகிறது. 

மரணத்தை இங்கு நாங்கள் சர்வ சாதாரணமானதாக எடுத்துக்கொள்வதுபோல் உங்களையும் நினைக்க வைக்கவே விரும்புகிறேன். அப்படியான ஒரு நிலையை அடையும்போது நீங்கள் மரணத்தை எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். எது குறித்தும் உங்களுக்கு அதிர்ச்சியோ ஆச்சரியமோ இருக்காது. 

ஜோரி கிரஹாம். 


அனார் எல்லா விதமான இருத்தலியல் சார்ந்த கவிதைகளில் பதிந்திருந்தாலும், 

வீடு தனிமைக்குள் கேட்காத 
கதறலாய் இருக்கிறது 
மூச்சு திணறும் அளவு பூட்டிய அறையினுள் 
தனிமையின் புகைச்சல்... 

என்று கூறும் அவர் தனிமையைப் பேசியிருந்தாலும் அவருடைய ஆரம்பகாலக் கவிதைகளிலிருந்து தற்காலத்தில் எழுதும் கவிதைகளில் புறச்சூழலின் அடர்த்தி மாறுபடுகிறது. போரும் போர்ப் புகைச்சலும் தனிமனித உளவியலைப் பாதித்திருந்தாலும், 


'ஒரு காட்டாறு 
ஒரு பேரருவி 
ஓர் ஆழக்கடல் 
ஓர் அடைமழை 
நீர் நான் 

கரும்பாறை மலை 
பசும் வயல்வெளி 
ஒரு விதை 
ஒரு காடு 
நிலம் நான் 

உடல் காலம் 
உள்ளம் காற்று 
கண்கள் நெருப்பு 
நானே ஆகாயம் 
நானே அண்டம் 
எனக்கென்ன எல்லைகள் 

நான் இயற்கை 
நான் பெண்' 

என்று அவர் கூறுவதிலிருந்து மன அழுத்தத்தில் இருந்து விடுபட்ட ஒரு பெண்ணியக் குரலாகக் காணமுடிகிறது. இயல்பான வார்த்தைகளின் கோர்வையாக இருந்தாலும் அதன் படிமம் ஒரு பெண்ணைச் சுயம்புவாக்கி விருச்சம் அடையச் செய்கிறது. 

❖ எனக்குக் கவிதை முகம் (2007) 
❖ உடல் பச்சை வானம் (2009) 
❖ பெருங்கடல் போடுகிறேன் (2013) 

என்னும் கவிதைத் தொகுப்புகளின் ஊடாகத் தனது முகத்தைப் பிற கவிஞர்களில் இருந்து வேறுபடுத்திக்காட்டுகிறார். அவருடைய வரிகள் வாசிப்பவரின் உளவியலைக் கட்டுடைக்கின்றது. 

வாழ்வு சார்ந்த மன அழுத்தங்கள் போரில் சிந்திய இரத்தம் அது தந்த அச்சம் பெண்கள் பலிக்கொள்ளக் கூடிய அவலச் சூழல் எல்லாம் படிமமாகப் பேசப்பட்டிருந்தாலும் அவை நெருப்புப் பொரிகளாகவே இருக்கின்றன. 


நிறைவாக... 


❖ பெண்களின் சமூகப் பொருளாதார மேம்பாடு, குடும்பத்தில் தலைமை, மாதாந்திர உதவித்தொகை, விதவைகளுக்கு நிலம் சொந்தமாக வழங்கல் ஆகியவற்றில் அரசு கவனம், பாதிக்கப்பட்ட பகுதிகளில், பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கல் அழிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் இன அடையாளம் நிலப்பத்திரம் முதலியவற்றை உடனடியாகத் திருப்பித் தருதல் மன உடல் ஆரோக்கியம் காத்தல் அரசு முறை சாரா தொண்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்தல் நினைவுச் சின்னம் அமைத்தல் ஆகியன கவனத்தில் கொள்ளப்படவேண்டும். 


❖ அமைதிசார் கட்டமைப்பு திட்டம் அமலுக்கு வரவேண்டும், பாலியல் தொல்லைகளைக் கட்டுப்படுத்த உறுதி வழங்கவேண்டும், கிழக்கு மற்றும் வாக்குப்பகுதிகளில் தமிழ்ப்பெண் காவலர் நியமனம் தேவை. 


❖ சிறப்பு உயர் நீதிமன்றம் மூலமாக பாலியல் குற்றங்கள் விசாரணைக்குட்படுத்தவேண்டும். 


--------------------------------------------------------------------------------------------------------------------------

சென்னையில் 23.06.2018 இல் நடந்த ”புலம்பெயர்ந்தோர் / அயலகத் தமிழ் இலக்கியம்” பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை. 

நன்றி : 

முனைவர். அரங்க மல்லிகா
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
இயக்குநர், மகளிர் கல்வி மையம்
எத்திராஜ் மகளிர் கல்லூரி (த),
சென்னை.

Tuesday, 20 November 2018

வெளிச்சத்தின் குரல் : அனாரின் கவிதைகள்

By : Brinthan 
------------------------------------------------------------------------------------------------------------------------


தர்மினியின் இருள் மிதக்கும் பொய்கையை முன்னிறுத்தி எழுதிய குறிப்பில் அவரின் கவிதைகள் பற்றி இப்படி எழுதியிருக்கிறேன், ‘'இத்தொகுப்பில் இருக்கின்ற பெரும்பாலான கவிதைகள் இருளைப் பற்றியதாவே இருக்கின்றன. தலைக்கு மேலே செல்கள் சிதறிக்கொண்டிருக்க வளவிற்குள் நிலத்திற்கு கீழே வெட்டப்பட்டிருக்கின்ற பங்கர்களில் நாட்கணக்கில் ஒளிந்து வாழ்ந்த மக்கள் வெளிச்சம் படாத இடங்கள் மட்டும் தான் இருள் என்பதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். வீடுகளிற்குள் புகுந்து ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று வித்தியாசமே இல்லாமல் கொன்று குவித்துக்கொண்டிருக்கும் போது இளைஞர்களும் யுவதிகளும் திருட்டுத்தனமாக சொந்த நிலங்களை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடி ஒழிந்தார்கள் – இவர்களுக்கு இருள் என்பது இரவு மட்டுமல்ல. தஸ்தாவஸ்கி எழுதிய வாழ்க்கையின் இருட்டுப்பற்றிய கதைகள் அல்ல இவை. வாழ்க்கையே இருட்டாகிப் போன ஒரு இனத்தின் கதறல்கள்.'¹


இருளைப் பற்றியதும் தனிமையைப் பற்றியதும் இருத்தல் பற்றியதுமான கவிதைகளே எனக்குரியவை. என்னை எங்கு பிரதிபலித்துக்கொள்ளமுடியுமோ அங்கு இருப்பதை விரும்புகிறேன். இருட்டும் தனிமையும் எனக்கான சுதந்திரத்தைத் தருகின்றன. அதன் எல்லை மிகவும் விரிந்தது. வெளிச்சத்தில் ஒரு நடிகனாக மாறி கணத்துக்கொரு வேஷத்துடன் அலைகிறேன். இதனால் இருட்டைப் பற்றி எழுதியவற்றை வாசிக்கும் போது தானாகவே ஒன்றித்துப்போகிறேன். ஏதோ ஒரு கணத்தில் ஒரு சொல்லில் ஒரு இடைவெளியில் என்னைப் பொருத்திக்கொள்ள எத்தனிக்கிறேன்.


இருந்தும் எனக்கு அனாரின் கவிதைகள் பிடித்துப்போனது பெரும் ஆச்சரியம். இந்தக் கட்டுரை அதற்கான விடையினை தேடுவதாக அமைந்திருக்கும். ஈற்றில் கிடைக்காமலும் போகலாம்.


தர்மினி எப்படி இருளைப் பற்றிப் பாடுகிறாரோ – அப்படி – இருளின் எதிர் எல்லையில் நின்று வெளிச்சத்தைப் பற்றிப் பாடுகிறார் அனார். இருவரும் இரண்டு வெவ்வேறு நிலைகளில் நின்று தம்மை வெளிப்படுத்துகிறார்கள். இந்த நிலை ஒவ்வொருவரின் தனித்துவமான பார்வையிலிருந்து உருவாகின்றது. அனாரின் இருப்பு வெளிச்சத்தில் இருப்பதாகவே கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.


'உலகம் இருட்டிலும்
நான் மாத்திரம் பட்டப்பகலிலும்
பயணத்திலிருந்தேன்' ²


ஒளியிலிருந்து தனிமையையும் துக்கத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துகின்ற கவிதைகள் தமிழ்ச் சூழலில் மிகக்குறைவு. இருட்டிலிருந்துகொண்டு இவற்றை அணுகி வெளிப்படுத்துவதை விட வெளிச்சத்திலிருந்துகொண்டு வெளிப்படுத்தும் போது கவிதைகள் வேறு உருவத்தினைப் பெறுகின்றன. இது கவிதைகளை முக்கியத்துவப்படுத்த ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு கவிதைகளிலும் – அவை இருளைப் பற்றியதாக எழுதியிருந்தாலும் – வெளிச்சமும் தூய்மையும் விடாமல் பற்றிக்கொள்கின்றன. இந்த நிலையிலிருந்து வெளியேறவே அனார் எத்தனிக்கிறார். இறப்பு, தூக்குக்கயிறு, துக்கம் போன்ற இருண்மை நிறைந்த குறியீடுகள் கூட கவிதைகளில் இள நீல வர்ணத்திலிருக்கின்ற ஆகாயத்தின் கீழே நடந்தேறுகிறது. இருட்டை அண்மிக்கின்ற ஏதோ ஒரு கணத்தில் எல்லாம் தொலைந்துபோய் மீண்டும் ஒளிக்குள்ளேயே அவரைச் செலுத்துகின்றது பெயரறியாத சக்தி ஒன்று.


'இளநீல நீர் வர்ணத்தைத் தீட்டிய ஆகாயத்தின் கீழ்
தூக்குக் கயிறு '²


'அங்கே
மெழுகுதிரி எரிந்து முடிவதற்கு
இன்னும் சில நிமிடங்களிருந்தன'²


அனாரின் கவிதைகளில் நிலம் ஒன்றைப் பற்றிய குவியத்தன்மையை காணவில்லை. அல்லது ஒப்பீட்டளவில் குறைவாகவே அங்கங்கே தென்படுகின்றன. இதனால் அவரின் புறச்சூழல் கவிதைகளைக் கட்டமைக்கவில்லை. பொதுவாகவே படைப்பாளி ஒருவருக்கு தன் நிலம் சார்ந்த வரலாறு, தொன்மங்கள், நிகழ்வுகள், மனிதர்களில் ஏற்படுகின்ற ஈர்ப்பு அவரின் பிரதிகளில் வெளிப்படும். கவிதைகளில் தவிர்க்க முடியாமல் மறைமுகமாகவேனும் இயங்கிக்கொண்டிருக்கும். அனார் இவற்றிலிருந்து விலகி நிற்கிறார். சீனக் கவிஞர் சூ டிங் (Shu Ting) போல. சூ டிங்கின் பெரும்பாலான கவிதைகளில் பெயரளவோடு மண்ணையும் நாட்டையும் பற்றிய வெளிப்பாடுகள் வந்து மறையும். இருண்ட வானத்தில் மங்கிய நட்சத்திரங்கள் போல. அவை உடுக்களா கோள்களா என்று சந்தேகத்தை எழுப்பக்கூடியவை. அவரின் “The Singing Flower” என்ற நெடுங்கவிதை சிறந்த உதாரணம். ஆனால் அனார் தன் கவிதைகள் எங்கும் இயற்கையை அளவில்லாமல் கொண்டாடியிருக்கிறார். மரங்களையும், நிறங்களையும், மிருகங்களையும், பழங்களையும் அழுத்தமான உவமைகளாக கையாண்டிருக்கிறார்.


கவிதைகள் புனைவின் உச்ச எல்லை. தர்க்கம், அதர்க்கம் என்று எதையும் கருத்தில் கொள்ளாது. கவிஞருக்கு எது தர்க்கமோ, அதுவே கவிதையின் தர்க்கமும். கொலை ஒன்றினை நியாயப்படுத்துவதாகவும் வன்புணர்வு ஒன்றினை ஆதரிப்பதாகவும் அது இருக்கலாம். வாசகர் தனது தர்க்க நிலையிலிருந்து அக்கவிதையினை அணுகலாம். அது அவருக்கு உவகையாகவோ இயலாமையாகவோ இருக்கலாம். கவிதையொன்றிலிருந்து பெறுவதற்கு ஒன்றுமிருக்காது; இழப்பதற்கும் அழிவதற்கும் நிறைய இருக்கிறது. எப்போதும் கவிஞர்கள் புறச்சூழல் மீது மிகுந்த அவதானமாக இருப்பார்கள். ஒவ்வொரு அசைவுகளையும் நுணுக்கமாக அவதானிப்பார்கள். அவை அவர்களுக்குள் சேகரமாகிவிடும். உணர்வொன்றின் எல்லையில் நின்று கொட்டித்தீர்க்க வார்த்தைகள் இல்லாமல் போகவே சேகரிப்புக்கள் தகுந்தவாறு தம்மை ஒழுங்குபடுத்திக்கொண்டு கவிதையாக வெளியேறும். இந்த நிலையில் தர்க்கம் பற்றிய புரிதல்கள் இருக்காது. – இப்படி நடக்காமலும் போகலாம்.


'ஒட்டகங்களைப்போல
மலைகளைக் கட்டி இழுத்துவரும் சூனியக்காரி'²


'எட்டிப் பார்த்து
பின்வாங்கும்
தீக்கோழிப்பார்வை'²


அனாரின் இயற்கை பற்றிய நுண்ணிய அவதானிப்பு அவரின் கவிதைகளுக்கு பெரும் பலமாக இருக்கிறது. நிகழ்வுகளையும் உணர்வுகளையும் இலகுவாக இயற்கையோடு இணைத்துவிடுகிறார். இது படைப்பு வெளியிலிருந்து கவிதையினை உணர்வு வெளிக்கு கொணர்ந்து புரிதல்களை விரிவுபடுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் அனாரின் புனைவு எல்லை குறுகியது. கயிற்றில் இழுபடும் பட்டம் போல. அவரின் அலைச்சல்களும் தேவைகளும் குறுக்கமானவை. புனைவொன்றின் அசாத்திய எல்லைகளை வேண்டுமென்றே குறுக்கப்படுத்தி வைத்திருப்பதைப்போலவே உணர்கிறேன். அனார் கவிதைகளை எப்போதும் அவரின் கைகளை விட்டுப் போகாமல் பிடித்துவைத்திருக்கிறார்.


மானிட இயக்கம் பற்றி பலர் பலவகையாக தமது புரிதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவை எதை எமக்கு தந்தது என்பதிலிருந்து அர்த்தப்படுத்திவிட முடியாது. இதனை வெளிப்படுத்தியவர்களின் புரிதல் எப்படியானது என்பதை அறிந்துகொள்வதன் மூலம் எமக்கான புரிதலை செம்மைப்படுத்துவதே அர்த்தமுடையது. நகுலன் மானிட இயக்கத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்,


'யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.'


அனார் இதனை,

'வன்முறைக்காளானதும்
தோற்றுப்போனதும்
நிர்கதிகளானதும்
சரணடைந்ததும்
காட்டிக்கொடுக்கப்பட்டதும்
துடி துடிக்கக் கொல்லப்பட்டதும்
நம்பி வந்ததும்
சிறியதும் பெரியதும் என
இரைக் குவியல்களால்
நிரம்பியிருக்கிறது
மாபெரும் உணவு மேசை'² என்கிறார்.


அனாரின் இலக்கிய இருப்பு மிகவும் முக்கியமானதொன்று. எனக்குத்தெரிந்த பல இஸ்லாமிய சகோதரர்கள் அவரின் இருப்பை பலமாக எண்ணுகிறார்கள். அதன் மூலம் தம்மை வெளிப்படுத்த பலமான விசையளிக்கிறார்கள். அனாரின் தொடர்ந்த இருப்பு சிறந்த முன்னுதாரணமாக மாறிக்கொண்டுவருகின்ற இந்தச்சூழலில் 'அவர்களுடைய ஆனந்தத்தை ஈரம் சொட்டச் சொட்ட உருவாக்குகிறார்கள், எல்லையற்ற அதன் எல்லையை நிர்ணயிக்கிறார்கள்'.



பின்குறிப்புகள் :



2. இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட அனாரின் எல்லாக் கவிதைகளும் ” பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. மேலும் இந்தக் கட்டுரையும் பெருமளவு “பெருங்கடல் போடுகிறேன்” தொகுப்பை முன்வைத்தே எழுதப்பட்டிருக்கிறது.


----------------------------------------------------------------------------------------------------------------

நன்றி : 










Tuesday, 23 October 2018

போகன் கவிதைகள் : 
--------------------------------------------------------------------------------------
- அனார்

யாருக்காக நாம் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம்? நமக்காகத்தான் எழுதுகிறோம் என்றால், நமக்கே அதனை ஏன் திரும்பத் திரும்ப அழுத்திச் சொல்லவேண்டி இருக்கின்றது ? இன்னொருவருக்காக யாரும் கவிதைகள் எழுதுவதில்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இரண்டுபட்ட மனதை கொண்டுசென்று சொற்களாலான கூட்டை இளைத்து நிரந்தரமின்மையான அதை்திலும் இருந்து விடுதலையடைய முயலும் தொடர்ச்சியான செயற்பாடுதான் கவிதை.

கவிதை இன்னொரு உணர்ச்சியென நான் நினைக்கிறேன். அந்த உணர்ச்சிக்கு ஆண்பால் பெண்பால் அரசியல் தத்துவம் கோட்பாடு கலைத்தாகம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகும். போகன் சொல்கிறார்.

// அவர்கள் என்னை என் கவிதைகளுக்காகவே
விரும்புவதாகச் சொன்னார்கள்
எனது கூரிய நகைச்சுவை உணர்விற்காகவும்
கரி மசி போன்று இருண்ட இரவுகளில் அவர்கள்
எனது ஜோக்குகளை நினைத்துக் கொள்கிறார்களாம்
அவை அவர்களது பாலைவனங்கள் மீது
நீர் ஊற்றுக்கள்போல தாவிச் செல்கின்றன
நான் எப்படியோ
என்னை அறியாமல் ஒரு விண்மீனாக மாறியிருக்கிறேன் //


நான் எப்படியோ என்னையறியாமல் ஒரு விண்மீனாக மாறியிருக்கிறேன் எனச் சொல்கிறார் போகன். கவிஞர்கள் பெரும்பாலும் ஆகமுடியாத ஒன்றாய் ஆகிவிடவே விரும்புகின்றார்கள். வானமாக, கடலாக, காற்றாக, நிலவாக, பூவாகப், பூச்சியாக, காடாக, மலையாக என இன்னொன்றாக ஆகிவிடவேண்டுமென விரும்புகின்றார்கள் அல்லது தான் இன்னொன்றுதான் என நம்புகின்றார்கள். இன்னொன்றிற்கான தேவைதான் கவிதைகளை எழுத வைக்கின்றது. தான் காணும் கனவிற்கு பல்லாயிரம் நிறங்கள். எண்ணங்கள் தோன்றும் மனதிற்கு பலகோடித் திசைகள் என மறைவான சிறகுகளால் காலத்தின் மீது சொற்களைச் சிதறுகின்றன கவிதைகள். 

நம்முடைய மனதின் அந்தரங்கமான வசிப்பிடமாக கவிதையை தேர்ந்தெடுக்கின்றோம். போகனின் மற்றொரு கவிதையில்,

// என்னால் தீப்பந்தங்களைத் தூக்கிக்கொண்டு ஓடமுடியவில்லை
என்மீது எப்போதும் எனக்கொரு குமட்டல்
இருந்துகொண்டே இருக்கிறது
தீர்க்கதரிசிகளின் முடைநாற்றமடிக்கும் அங்கிகளை
வெறுக்கும் அதே தீவிரத்தோடு
அவர்களது மரணங்களின் மழைநீர்
பரிசுத்தத்தை விரும்புகிறேன்
மூக்குக் கண்ணாடியை தொலைத்துவிட்டுத் தேடுவது
எனது முக்கியமான வேலைகளில் ஒன்றாகவிருக்கிறது
ஒவ்வொரு முறை புனிதகுளத்தில் மூழ்கி எழுந்த பிறகும்
நான் மிக அழுக்கான செயலொன்றைச் செய்கிறேன்
என் வாழ்க்கை முழுக்கவே
இந்த இருமைகளால் கட்டப்பட்டிருக்கிறது
எனது ஆன்மா
இந்த இரு முனைகளுக்கிடையே
ஒரு சிற்றெறும்புபோல
அங்குமிங்கும் அலைகிறது //


வாழ்வின் இரு நிலைகள் மீதான பாசாங்கினை அபத்தங்களைக் உணர்ந்து அதன் மீதான தன்னுடைய உடன்பாடின்மைகளை வெளிப்படுத்துகின்ற போகனின் கவிதை இது.

அநாதரவு, துரோகம், வெறுமை, காமம், குற்றம், காதல் தனிமையென அத்தனை உணர்ச்சிகளாலும் நிரம்பிய மனதை நடைமுறையில் பொருந்திப்போன வாழ்விலிருந்தபடி சுமப்பதுதான் நவீன கவிதை கொண்டுள்ள நிர்ப்பந்தமாகும்.

அன்றாடச் சவால்கள் சூழ, புன்னகையும் கண்ணீரும் ஒன்றையொன்று உரசி, வாழ்வு புகைந்து கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்தெல்லாம் விலகி குறைந்தபட்சம் உடலை நகர்த்த இயலாத இடங்களுக்கு மனதை நகர்த்தி விடலாமென முயலுகின்றோம்.

போகனின் கவிதைகள் ஒரு சிரிப்பாக எள்ளலாக தோற்றம் காட்டலாம். ஆனால் அந்தச் சிரிப்பின் கண்கள் எங்கேனும் நாம் பைத்தியமாக எதிர்கொள்ளும் மனிதருடையதைப் போன்றிருக்கிறது.. அந்த எள்ளலின் உதடுகள் மதத்தினால், சமூகத்தினால், உறவுகளால் குற்றம் சாட்டப்படுகின்ற மற்றையதொரு மனிதருடையதாக இருக்கின்றது. போகனின் கவிதைகள் சிலவற்றை இந்த அடிப்படையில் புரிந்துகொண்டேன்.


// பாவத்தைச் செய்யும்போதுமட்டும்
உங்கள் உடல் எப்படி இவ்வளவு ஆற்றலுடையதாக மாறிவிடுகின்றது
உங்கள் கண்களில் ஒளி கூடிவிடுகின்றது //

என போகன் எழுப்புகின்ற இவ்விதமான கேள்விதான், அவரது நகைச்சுவை துணுக்குகளைவிட கவிதையில் முக்கியமான ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது. கவிதைக்கு அவர் செய்யும் நியாயம் அங்குதான் ஒளிர்ந்தும்… ஒழிந்துமிருப்பதாக நான் கருதுகிறேன்.


நமது ஆன்மாவின் ஜன்னலால் மனம் கவிதைக்குள் நுழைவதை தொலைவான மூட்டமான அக்கணங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு நத்தையின் ஊர்தலும் அதன் ஈரலிப்பும்கொண்ட மனம் கவிதைக்குள் மெல்ல மெல்ல ஊர்ந்துகொண்டே செல்வது. அதன் பயணமே அதன் இலக்காகும்.


ஆத்மாநாமின் ”இரவில் பேய்கள்” எனும் கவிதை ஒன்றோடு என் குறிப்பை நிறைவு செய்கிறேன்.


// குருட்டுக் கண்களைத்
திறந்து பார்த்தால்
இருட்டுத்தான்
பிரகாசமாய்த் தெரிகிறது
செவிட்டுச் செவிகளைக்
கூராக்கி முயற்சித்தால்
நிசப்தம்தான்
கூச்சலாய்க் கேட்கிறது
நுகராத நாசியை
நுழைத்துப் பார்த்தால்
சாக்கடை மணம்
சுகந்தமாய் இருக்கிறது
உருமாறிப் போனவன்
உடல் மாறி
மனம் மாறின பின் //



2018 ஆம் ஆண்டுக்கான ஆத்மாநாம் விருது பெறும் போகன் அவர்களுக்கு என மனமார்ந்த வாழ்த்துகள்.

( ஆத்மாநாம் அறக்கட்டளை வெளியிட்ட போகனின் படைப்புலகம் நூலுக்காக எழுதப்பட்ட சிறு குறிப்பு )

Wednesday, 23 May 2018

சொற்களின் தோகை

- எஸ். ராமகிருஷ்ணன் ( இந்தியா )


-------------------------------------------------------------------------------------------------------------------------

அனார் எனக்குப் பிடித்தமான கவிஞர். சூபி கவிதையுலகின் நவீன வடிவம் போன்றவை அவரது கவிதைகள். பெண் மனத்தின் ஆழ்தவிப்புகளை, மகிழ்ச்சியை, துயரை வெளிப்படுத்துகின்றன அவரது கவிதைகள்.

அனார் கிழக்கிலங்கையின் சாய்ந்த மருதுவில் வசித்துவருகிறார். சமகால தமிழ் கவிஞர்களில் மிக முக்கியமானவர். நான்கு கவிதை தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார்.

ஜின்னின் இரு தோகை கவிதைநூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.



அனாரின் கவிதைகள் அன்றாட வாழ்விலிருந்து தாவிப் பறப்பவை. அவர் புறஉலகின் நிகழ்வுகளை விடவும் அகவுலகின் தத்தளிப்புகளை, எழுச்சிகளையே அதிகம் எழுதுகிறார். அது ஒரு வகைத் தனித்துவமான வெளிப்பாடு.

அனாரின் வசீகரம் அவரது கவிதைமொழி. பூத்தையல் போல அத்தனை நுட்பமானது. உணர்ச்சிகளை அவர் வெளிப்படுத்தும் விதம் அபாரம். சங்கப் பெண்கவிஞர்களிடம் காணப்பட்ட காதலின் வெளிப்பாட்டினை நவீனமுறையில் அனார் வெளிப்படுத்துகிறார் என்றே சொல்வேன்.

ஆம். நிலமும் வானும் பொழுதும் மழையும் கடலும் காற்றும் இவரது கவிதைகளில் உணர்வுகளின் வெளிப்பாட்டுகளமாகவே விரிகின்றன.

••

எப்போது அனாரின் கவிதையை வாசிக்கத் துவங்கினாலும் உஸ்தாத் பிஸ்மில்லாகானின் ஷெனாய் போலத் துயரமும் சந்தோஷமும் ஒன்றுகலந்தே ஒலிக்கிறது. இக்கவிதைகளைத் தனிமையின் உன்னதப் பாடல்கள் என்றே கூறுவேன்.

சொற்களே மனிதர்களை ஒன்று சேர்க்கின்றன. பிரித்தும் வைக்கின்றன. சொல் ஒரு ஜின். அதன் தோகை முடிவற்றது. இஸ்லாம் சொல்லும் ஜின் என்பது தீயுரு. அது அரூபமானது. நெருப்பிலிருந்து உருவானது. அனாரின் ஜின்னோ காதலுற்றது. வசீகரமானது. அரூபமானது. நெருப்பு தான் அதன் தோகை.

சொற்களால் எந்தப் பிரம்மாண்டத்தையும் நகர்த்தமுடியும் என்பதே கவியின் கூற்று. அனார் தொடர்ந்து கடலைப் பாடுகிறவர். கடல் ஒரு படிமம். முடிவற்ற, கடக்கமுடியாத. அறியமுடிந்தும் முடியாமலும் போன அலைக்கழிப்பின் அடையாளம்.

அலைகளின் வழியாகத் தன்னைவெளிப்படுத்தும் கடலின் இயல்பை போன்றதே அனாரின் கவிதை வெளிப்பாடும்.

சொற்கள் வானளாவ விரியும் இரு தோகையெனக் கவிதையில் எழுச்சி கொள்வது காதலின் அற்புதம் என்றே சொல்வேன். இசையும் வண்ணங்களும் கதைகளும் இணைந்து உருவானவை அனாரின் கவிதைகள்.

••

ஜின்னின் இரு தோகைகள் என்ற கவிதையின் முதல் மூன்று வரிகளைக் கடக்கவே முடியவில்லை.

நெருப்பு அனாரின் விளையாட்டுப் பொருள். நெருப்பின் பல்வேறு வடிவங்களை அவரது கவிதைகளில் காணமுடிகிறது. சொல்லும் நெருப்பமாகவே மாறுகின்றன.

சொற்கள் பிரம்மாண்டமான கடலையும் ராட்சத மலையையும் அருகருகே நகர்த்துகின்றன என அனார் கூறுகிறார். நிஜம், சொல் வழியாக உருப்பெறும் போதும் உலகம் எடையற்றதாகிவிடுகிறது. மிருதுவாகிவிடுகிறது. சொல்லை கவிஞன் உருக்குகிறான். குழைக்கிறான். கடினப்படுத்துகிறான். சில வேளைகளில் மாயப் பொருளாக்கி பறக்க விடுகிறான்.

••

மெருகேறிய இரண்டு மென்சொற்கள்

மாபெரும் கடலையும்
ராட்சத மலையையும் அருகருகே நகர்த்துகின்றன
பொன்னொளிர் நீலக்கடல் வாசனை
விண்மீன்கள் மினுங்கும் மலையுச்சியின் காரிருள்
அவனும் அவளுமாகினர்
தன் பிரம்மாண்டத்தில்
புதையுண்ட இரு உடல்களைப்
பிரமித்தபடியே
வானவில்லென
அவர்கள் மேல்பட்டுகிடந்தன இரு சொற்கள்
அவளது தோளில்
அலைகள் ஆர்ப்பரித்தன
அருள்பாலிக்கும் தன்னிகரில்லாத ஆலிங்கனத்தில்
மலை அதைக் கேட்டிருந்தது
அதி ரகசியமான அவ்விரு சொற்களும்
ஜின்னின் இரு தோகையென
வானளாவ விரிந்துகொண்டன

••

இன்னொரு கவிதையில் சிறகுகள் மறதிக்கும் நினைவிற்குமான அடையாளமாகிறது.

மறப்பதற்கும் நினைப்பதற்குமான இரண்டு சிறகுகளால் பறக்கிறேன் என்ற வரியை வாசிக்கையில் ஒன்று போலத் தோன்றும் இரண்டு சிறகுகளில் எது மறதியின் சிறகு எது நினைவின் சிறகு என யோசித்துக் கொண்டிருந்தேன்.

••

உதிர்ந்து விழும் ரகசியத்திற்கும்
அள்ளிச் செல்லும் வாசனைக்குமிடையே
வண்ணத்துப்பூச்சி
நிறங்களின் நடனத்தைத் தொடங்கியது
என்ற கவிதைவரியின் வழியே

வண்ணத்துப்பூச்சியின் பறத்தலை நிறங்களின் நடனமாகக் காணுவது கவிதையின் தனிச்சிறப்பு.

ஒரு பெண்ணாகக் கட்டுபாடுகளும் வரம்புகளும் எல்லைகோடுகளும் நெருக்கடிகளும் கொண்ட சிறிய உலகிற்குள் வாழ்கிறேன் என்ற தவிப்பு அனாரின் கவிதைகள் முழுவதிலும் கேட்கிறது. கடலைப்போலத் தன்னியல்பாகச் சீறி வெளிப்பட விரும்பும் அவரது வேட்கையே சொற்களைத் துணைகொள்கின்றன. முடிவிலா காதலுற்ற மனதின் பித்தேறியதாக இக்கவிதைகள் இருக்கின்றன.

••

ஒன்றாகி எரியும் சுடர் என்ற கவிதை இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமானது

உன்பொருட்டு
அந்தப்பாடல் என்னைத் தழுவி கொண்டிருந்தது
உயர்ந்து செல்லும் புகைபோல
மிதக்கின்ற படிகளில்
உன்னோட
உயர உயர நடக்கிறேன்
என் கண்ணீர் திரண்ட திரையில்
உன் நெற்றியை முட்டிக் கொள்கிறாய்
இருண்மைகளின் நிர்கதிக்கு முன்னே
நீ எனும் ஒற்றைச்சுடர்
அணையாதிருந்தாய்
நிறுத்தப்பட்டு
மறுகணம் ஆரம்பிக்கும்
இரு தாளத்தின் சத்தங்களுக்கிடையே
நெடுங்காலம் உறங்கிப்போயிருந்தேன்


உணர்வுக்குள்ளே மலையும் வானமும்
பிரபஞ்ச வெளியுமுண்டு

என ஒரு கவிதையில் கூறுகிறார் அனார்.

இது அவரது எல்லாக் கவிதைகளுக்கும் பொருத்தமான வரி என்றே கூறுவேன்.

ஜின்னின் இரு தோகை அனாரின் அடுத்தகட்ட நகர்வை நோக்கிய அற்புதமான கவிதைகளைக் கொண்டிருக்கிறது.

வாழ்த்துகள் அனார்.

••

--------------------------------------------------------------------------------------------------------------
நன்றி : 

http://www.sramakrishnan.com/?p=7401

Tuesday, 13 March 2018


அனாருடைய  கவிதைகளில்  எதிர்ப்புக்  குரல்:  பெண்விடுதலை  நோக்கிய பார்வை.

By : A. Paunanthie & J. Rasanayagam ( University of Jaffna )
(5th International Symposium -2015 @ SEUSL  இல் வாசிக்கப்பட்ட கட்டுரை)
---------------------------------------------------------------------------------------------------------------

Abstract : 'அனாருடைய  கவிதைகளில்  எதிர்ப்புக்  குரல்  -  பெண்விடுதலை  நோக்கிய  பார்வை'  என்ற தலைப்பில்  இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுகின்றது.  அனார், கிழக்கிலங்கையிலுள்ள சாய்ந்தமருது என்னும்   ஊரில்   பிறந்தவர். இஸ்ஸத்   ரீஹானா   முஹம்மட்   அஸீம்   என்ற   இயற்பெயரையுடைய   இவர் அனார்  என்ற  பெயரோடு  கவிதைகளை  எழுதிவருகின்றார்.


இலங்கைத் தமிழ்ப் பெண் கவிஞர்களில் முக்கிய கணிப்பைப் பெற்றவராக அனார் விளங்குகின்றார். இதுவரை அவருடைய நான்கு கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றைவிட உதிரிகளாகவும் பல கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான பெண்களது எதிர்ப்புக்குரல் இலங்கைத்    தமிழ்    இலக்கியங்களில்              1980    களின் ஆரம்பத்திலிருந்து    வெளிப்படத்          தொடங்கியது. அந்தவகையில்'சொல்லாத    சேதிகள்'                கவிதைத்      தொகுதிவிதந்துரைக்கப்பட         வேண்டியதாகும்.


அனாருடைய கவிதைகளிலும் இந்த எதிர்ப்புக் குரல் ஒலிப்பதைக் காணலாம். அவருடைய கவிதைகளில் பெண் அடிமைத்தனத்தை நோக்கிய எதிர்ப்புக்குரல் விடுதலை சார்ந்து ஒலிப்பதைக் காணலாம். அனாருடைய கவிதைகளில் பெண் அடக்குமுறைகள் எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்றன என்பதையும் அவற்றுக்கு எதிரான குரல் எவ்வாறு ஒலிக்கின்றது என்பதையும் நோக்கும் அடிப்படையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுகின்றது.


இந்த ஆய்வின் மூலம் அனார் என்ற பெண் கவிஞர் தமிழ்க் கவிதையுலகில் பெறும் முக்கியத்துவத்தை அறிய முடிவதோடு அவரது கவிதைகளின் தனித்துவத்தையும் சிறப்பையும் அடையாளம் காணமுடியும். அனாருடைய கவிதைகள் பற்றிய ஆய்வுகள் சில வெளிவந்துள்ளபோதும் அவருடைய கவிதைகளில் விடுதலை நோக்கிய எதிர்ப்புக் குரல் எவ்வாறு வெளிப்படுகின்றது என்பது ஆய்வு செய்யப்படவில்லை. அந்த அடிப்படையில் இந்த ஆய்வு முக்கியத்துவமுடையதாக அமைகின்றது. இந்த எதிர்ப்புக் குரல், ஒட்டுமொத்தப் பெண்களின் குரலாக எவ்வாறு துலக்கம் பெறுகிறது என்பதும் இங்கு நோக்கப்படுகின்றது. அனாருடைய கவிதைகள் விவரண ஆய்வுமுறை மற்றும் பகுப்பாய்வுமுறை ஆகியவற்றினூடாக ஆய்வு செய்யப்படுகின்றன.


Keywords: எதிர்ப்புக்  குரல்,  பெண்ணடிமைத்தனம்,  பெண்விடுதலை  நோக்கிய  பார்வை

1.            ஆய்வு  அறிமுகம்:

இலங்கைத் தமிழ்க் கவிதை வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு கனதியான கணிப்பைப் பெற்றுள்ளது. 1980 களில் இலங்கையில் தீவிரமாகப் பரவத் தொடங்கிய பெண்ணியச் சிந்தனைகள் இலக்கியங்களில் பெண்கள் சார்ந்த கருத்துக்கள் வலுப்பெற ஏதுவாகின. அது மட்டுமின்றி               அக்காலப்    பகுதியில்    ஏற்பட்ட    தமிழ்    இயக்கங்களின்    போராட்டங்களும்    அதில் பெண்கள்இணைந்துகொண்டமையும்           பெண்களை விழிப்படையச்         செய்தன.  இந்நிலையில் இலங்கையில் தமிழ்ப் பெண்கள் தம்மை அடக்கியாள முற்படும் சக்திகளை நோக்கி எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தினர். இது விடுதலை உணர்வின் குரலாக ஒலிக்க ஆரம்பித்தது.


இக்குரல் இலங்கைத் தமிழ் இலக்கியங்களிலும் - குறிப்பாக கவிதைகளிலும் ஒலிக்கத் தவறவில்லை. பெண்களின் பிரச்சினைகள் பற்றி ஆண்கள் இலக்கியங்களில் வெளிப்படுத்துகின்ற நிலை மாறி பெண்கள் தமது பிரச்சினைகளைப் பற்றித் தாமே குரலெழுப்பத் தொடங்கினர். இதனால் முன்னரைக்காட்டிலும் 1980 களிலிருந்து இலக்கியங்களில் பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான குரல்கள் வலுக்கத் தொடங்கின.

அந்தவகையில் அனாருடைய கவிதைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கின்ற அனார் தன் கவிதைகளில் பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான குரலை எவ்வாறு பதிவுசெய்கிறார் என்பதை விமர்சன நோக்கில் ஆய்வு செய்வது அவசியமாகின்றது.

2.            ஆய்வுமுறையியல்:

             ஓவியம்  வரையாத  தூரிகை
             எனக்குக்  கவிதை  முகம்
             உடல்  பச்சை  வானம்
             பெருங்கடல்  போடுகிறேன்

ஆகிய நான்கு தொகுதிகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.


கவிதையில் இடம்பெறுகின்ற முக்கிய விடயங்கள் விவரண ஆய்வுமுறையிலும் பகுப்பாய்வு முறையிலும் ஆய்வு செய்யப்படுகின்றன. நான்கு தொகுதிகளிலும் உள்ள கவிதைகள் உள்ளடக்கத்தைக் கருத்திற்கொண்டு பகுப்பாய்வு செய்யப்படுவதோடு அவை பற்றிய விவரணங்களும் வியாக்கியானங்களும் முன்வைக்கப்படுகின்றன.

3.            இலக்கிய  மீளாய்வு:

அனாருடைய கவிதைகள் பற்றிய முழுமையான தனியான ஆய்வு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றே அறிய முடிகின்றது. அவருடைய ஒவ்வொரு கவிதைத் தொகுதிகளும் வெளிவருகின்றபோது வாசகர்களின் மனப்பதிவாக சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இலங்கைத் தமிழ்க் கவிதை சாரந்த வேறுசில கட்டுரைகளில் அனாரின் கவிதைகளும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. அவருடைய கவிதைத் தொகுதிகள் பற்றிப் பிரசுரமாகியுள்ள கட்டுரைகள் அவரது கவிதைகள் பற்றிய பொதுவான பார்வையையே வெளிப்படுத்த முற்படுவதை அவதானிக்கலாம்.



பெண்ணுக்கான யதார்த்தம் நிறைந்த கனவுகள், ஏக்கம், காதல், பீதி, தன்னம்பிக்கை போன்ற உணர்வுகளை மொழிபவையாக அனாருடைய கவிதைகள் உள்ளன. அவருடைய கவிதைகளில் பெண்  மொழி  சிறப்புற  மேலோங்கி  நிற்கின்றது  (வஸிம்  அக்ரம்,  2009).

காதல்,              அன்பு,   வாஞ்சை,   வேட்கை   என்பவற்றைக்   காத்திரமாக வெளிப்படுத்தும்   அனாரின் மொழியில் வலிகளையும் எதிர்ப்புக்களையும் தன் இருப்பின் அடையாளத்தையும் இடையிடையே கேட்க முடிகின்றது (தேன்மொழி, 2011). இந்தக் கட்டுரை அவருடைய முதல் இரு தொகுதிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

தலைவன் தலைவிக்கிடையேயான ஊடல், கூடல், களிப்பு போன்றவற்றையும் பெண்களுக்கெதிரான சமூக அடக்குமுறைகளையும் உள்நாட்டுப் போரின் உக்கிரங்களையும் அனாரின் உடல் பச்சைவானம், எனக்குக் கவிதை முகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் காணமுடிகின்றது (தாஜ், 2011).


உடல் பச்சை வானம் கவிதைத் தொகுதியின் உள்ளடக்கம் சமூகப் பிரச்சினைகளின் பதிவாக அமைந்துள்ளது (சௌரிராஜன், 2013)

இக்கட்டுரைகள் அனாரின் ஒன்று அல்லது இரண்டு கவிதைத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி அவரது கவிதைகளின் பாடுபொருள் பற்றிப் பொதுவாக நோக்குகின்றன. ஆனால், இந்த ஆய்வுக் கட்டுரை, இதுவரை வெளிவந்துள்ள அவரது நான்கு கவிதைத் தொகுதிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதோடு அவரது கவிதைகளில் பெண்விடுதலை நோக்கிய எதிர்ப்புக் குரல் எவ்வாறு வெளிப்படுகின்றது என்பது பற்றி மட்டுமே ஆய்வுசெய்கின்றது. இந்த வகையில் ஏனைய கட்டுரைகளிலிருந்து  இது வேறுபட்டு நிற்கின்றது.


4.            ஆய்வுப்  பெறுபேறுகளும்  வியாக்கியானங்களும்:

ஈழத்துத் தமிழ் கவிதையுலகில் அனார் முக்கியமான கணிப்பைப் பெறுகின்றார். அவருடைய கவிதைகளில் பெண்ணடக்குமுறையை எதிர்த்துக் கருத்துக்கள் ஒலிப்பதைக் காணலாம். அவை விடுதலையை அவாவி நிற்கின்ற குரல்களாகக் கேட்கின்றன.

குடும்ப அடக்குமுறை, பாலியல் சார்ந்த அடக்குமுறை, பாலியற் சுரண்டல், அதிகரித்த வேலைச்சுமை, உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமை, பெண்ணின் உடல்சார்ந்த இயலாமையைச் சாதகமாக்கிக்கொள்ளல் போன்ற பல விடயங்களை எதிர்த்து அனார் தனது கவிதைகளினூடாகக் குரல் கொடுக்கின்றார். அவரது குரலில் பெண்கள் விடுதலை பெறவேண்டும் என்ற அவா தொனிப்பதை உணரலாம். தனது நேரடி அனுபவங்களின் பேறாகவும் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்கின்ற வலிகளின், வதைகளின் துன்பத் தரிசிப்பைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாது வெளிப்படுகின்ற எதிர்ப்பலையாகவும் அவரது கவிதைகளை நோக்க முடிகின்றது.

பெண் விடுதலைசார்ந்த தனது உணர்வுக் கொதிப்புகளை அனார் தனது கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.


ஆண்களுக்கு அடிமைப்பட்டவர்களாக வாழ்வதை வெறுக்கும் உணர்வு அவரது கவிதைகளில் வெளிப்படுகின்றது. மாறாக பெண்கள் வெறும் தசைப் பிண்டங்களாக அல்லாமல் உளமும் உணர்வும் கொண்ட உன்னதப் பிறவிகளாக மதிக்கப்பட வேண்டும் என்ற அவா அவரது கவிதைகளில் தொனிக்கின்றது.

அவரது சில கவிதைகள், ஆணாதிக்கத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட முடியாத பெண்களின் வேதனைகளைப் பாடுவதோடு அவற்றிலிருந்து மீளமுடியாத அல்லது மீள வழிதேடாத பெண்களின் வேதனைகளைப் பதிவுசெய்கின்றன. தூண்டிலில் அகப்பட்ட மீனாக வேதனைகளை வெளிப்படுத்துவதோடு உயிர்வாழ்தலுக்காக ஆண்களின் அனுசரணையை அவாவி நிற்கும் கவிதைகளையும் காணமுடிகின்றது. வாழ்க்கைப் பிணைப்பிலிருந்து விடுபட முடியாது கட்டுண்டுபோன உணர்வுப் பதிவுகளாகச் சில கவிதைகள் அமைந்துள்ளன. ஆண்களை விட்டுத் தனித்து வாழ முடியாத ஒட்டுண்ணிகளாகப் பெண்களைப் பாடுகின்றார். காதல் வசப்பட்ட ஒரு பெண்ணின் மெல்லுணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஆண்களின் அபத்தத்தை வேதனையின் வெளிப்பாடாகத் தனது கவிதைகளில் அனார் பதிவுசெய்துள்ளார்.


'யவ்வனப்  பத்தியிலே
உன்  திறமைகளால்  உரசி
சுடர்  ஏற்றி  வைத்துப் போய்  விட்டாய்
என்  உயிர்த்திரி  உணர்வு  நெய்  வற்றி
நூர்ந்துவிட  முன்  வந்து
தூண்டிவிடு அல்லது
அணைத்துவிட்டுப் போ'

ஆண் ஒருவனின் அன்பிற் கட்டுண்டு சேர்ந்து வாழத்               துடிக்கும் பெண்ணின் ஆத்மாவை பிரதிபலித்து   நிற்பதாக   அவரது   'மௌனச்   சிலுவைகள்'  என்னும் கவிதை   அமைந்துள்ளது. சேர்ந்து வாழ்தல் வேட்கையின் உந்தல் பெண்ணிலை சார்ந்து வெளிப்படுவதில் ஆச்சரியமில்லை. ஆனாலும், இந்தக் கவிதையில், பெண்ணுக்கான இன்பத்தைக் கொடுக்க வல்லவனாக ஆண் ஒருவனைக் கற்பிதம் செய்வது பெண்விடுதலை நோக்கிய குரலாகக் கொள்ளப்பட முடியாதது.

'எனதன்ப
துன்பத்திற்காயும் மனத்தினை
நீ  நிழலாய்  மூடு'

என்று ஒரு பெண்ணின் குரலாக ஒலிக்கிறன அந்தக் கவிதை வரிகள். அன்பின் அடக்குமுறைக்குள் அகப்பட்டுக்கொண்டு அந்த ஆணிடம் ஆதரவு தேடும் அவலத்தையும் தாண்டி, பெண்ணடிமைத்தனத்தின் விலங்கினைத் தகர்த்தெறியும் எத்தனத்தில் வெளிப்படும் பல கவிதைகளையும் காணமுடிகின்றது.


பெண்கள் தமது வாழ்க்கைக்கு ஆணாதிக்க சக்திகளால் கற்பிக்கப்பட்ட இலட்சணங்களை ஏற்றுக்கொண்டு, போடப்பட்ட வேலிகளுக்குள் வலிகளைச் சுமந்துகொண்டு வாழ்வதை பிரக்ஞையற்றுப் பின்பற்றிக்கொண்டனர். ஆனால், பெண்விடுதலைக் கருத்துக்கள் வலிமைபெறத் தொடங்கியபோது விடுதலை பற்றிய உணர்வு ஏற்பட்டு அடக்குமுறைக்கு எதிரான உசாவல்கள் எழத்தொடங்கின. இதற்காகக் பெண்ணிய எழுத்தாளர்கள் பலரும் தமது எழுத்தாயுதத்தை கூர்மையோடு பயன்படுத்தினர். அனாரின் கவிதைகளிலும் இப்போக்கைத் தரிசிக்கலாம்.

'அந்தந்த  வயதில்
அவரவர்கள்  பொதிகளைச்
சுமக்கும்  கழுதைகளாக நாமிருந்தோம்

காலப்போக்கில்
பொதி மூட்டைகளாகிக்
 கூடவே சவாரி செய்யவும்
ஏறியமர்ந்தார்கள்

அவர்கள்  போட்ட  பாதையில்
அவர்கள்  நோக்கிய திசையில்
அவர்கள்  சுட்டுவிரல்
காட்டும் இலக்கில்
எம்மை இழுத்துப்  போனார்கள்

எப்போதும்
அப்படியே  இருக்கமாட்டோமா என்றுதான்
ஏக்கம்  அவர்களுக்கு

இப்புதிய கழுதைகளுக்கு
இது காலம் தந்த பாடம் அல்ல
காயம் தந்த ஞானம்'

என்று 'காயமே மருந்தாகி' என்ற கவிதையில் அனார் கூறுகின்ற விடயங்கள் எதிர்ப்புக்குரல் பெண்விடுதலை நோக்கிய பெண்ணியத் தளத்தின் ஆழத்திலிருந்து மேலெழுவதைக் காணலாம். பெண்களின் உரிமைகளைத் தமது கையிலெடுத்துக்கொண்ட ஆண்கள் அவர்களின் பேச்சுச்சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டு தமது நன்மைகளுக்குப் பலம் சேர்க்கும் பக்குவங்களையே அவர்களுக்குக் கற்பித்துக்கொண்டிருக்கின்றனர. சுகங்கள் அனைத்தையும் ஆண்களே அனுபவித்து விட்டு சுமைகளையும் வலிகளையும் தமக்குத் தந்துவிடுகின்றனர் என்று பெண்ணினத்தின் பிரதிநிதியாக நின்று எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றார். 'துஷ்பிரயோகம்' என்ற கவிதையில்,

'கஷ்டங்களை நான் சுமக்க
சுகங்களை நீ பெருக்கினாய்

அதற்காகவே
உனது வதை ஆலையில்
என்  வாழ்க்கை
சக்கை  பிழியப்பட்டு  வருகிறது

என் இனிய வரலாற்றை
ஓலங்களைக் கொண்டு
கண்ணீரைக்  கொண்டு  எழுதுவித்தாய்'

என்று  கூறுகின்ற  வரிகள்  அவரது  ஆன்மாவின்  குரலாக  ஒலிக்கின்றனது.

'யாருக்கும் கேட்பதேயில்லை', 'வன்மப்படுதல்', 'ஊமைக் காவியம்', 'ஓவியம் வரையாத தூரிகை' போன்ற கவிதைகளிலும் பெண்களது வாழ்வியலில் ஆண்கள் கொடுக்கும் அவலத்துக் எதிரான குரல் ஓங்கி ஒலிப்பதைக் கேட்க முடிகின்றது. பெண்களது பூப்பெய்தலின் பின்னர் உடலை மட்டும் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்ற ஆணாதிக்க சமுதாயம் உள்ளத்தையும் உணர்ச்சிகளையும் வளர விடாமல் செய்வதற்குக் கையாளும் தந்திரங்களை தகர்த்தெறிய  வேண்டும் என   அவர்   பாடுகின்றார்.   'மலட்டுச்   சித்திரங்கள்'  என்ற   கவிதையில்   சுகங்களற்ற, சூனிய வாழ்வை வெறுக்கும் பெண்களின் குரலாக ஒலிக்கிறார். இந்தவாழ்க்கையைப் பெண்களுக்குப் போதிக்கும் ஆணாதிக்க சக்திகளையும் அவற்றின் செயற்பாடுகளையும் வன்மத்தின்  வடிவங்களாகவே அவர்  பார்க்கின்றார்.

இந்தப் பின்னணியில் திருமணம்கூடப் பெண்கள் பலருக்கு துன்பம் மிகுந்த வாழ்க்கையைப் பிரசவித்திருக்கின்றது. மணப்பந்தலுக்கு அலங்கரிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படும் ஒரு பெண் ஆணை நோக்கிப் பேசும் நியாயக் குரலாக,'()ணப்பந்தல்' என்னும் கவிதை அமைந்துள்ளது. மணப்பெண்ணுக்குப் பிடித்தமானவையெல்லாம் நிராகரிக்கப்பட்டு ஆணின் அபிலாசைகள் அரங்கேற்றப்படுவதற்காக நடைபெறும் சடங்காகவே திருமணத்தை அந்தப் பெண் பார்க்கிறாள். வளையல்கள், வண்ணப்பூச்சுக்கள், ஆடம்பர ஆடை, மருதாணி, குதி உயர்ந்த செருப்பு என பலவற்றையும் நிராகரிக்கும் பெண் கண்மையை நிராகரிப்பதற்கு கூறும் காரணம் அனாரின் ஆத்மார்த்தமான எதிர்ப்புக் குரலாக அமைகின்றது.

'கண்ணுக்கு மையிடுகிறாயா
சற்றுப் பொறு
அதை நிறுத்து ஏனெனில்
எல்லா  நேரங்களிலும் (பெ)ண்
கண்ணீர்விடவேண்டிய  வஸ்து'


என்று கவிதைவரிகளில் அதை வெளிப்படுத்துகின்றார். முதிர் கன்னியாக இருந்து தவிக்கும் பெண் ஒருத்தியின் அவலக்குரலாகத் தொனிக்கும் 'அக்காவுக்குப் பறவைபோல சிரிப்பு' என்னும் கவிதை ஆண்களை முன்னிறுத்தி நியாயம் கேட்கும் எதிர்ப்புக் குரலாகவும் அமைகின்றது.

எந்த ஒரு அதிகாரமும் உலகில் நிலையாக இருந்ததில்லை என்பதால் ஆணாதிக்க அதிகாரமும் அதிக நாள் நிலைத்திருக்காது என்ற எச்சரிக்கையை அடக்குமுறையாளர்களை நோக்கி அனார் முன்வைக்கின்றார். 'வன்மப்படுதல்' என்ற கவிதை இங்கு குறிப்பிடத்தக்கது.

'சுற்றி  வளைத்து வேலிகட்டி
அதற்குள்  என்னைச்
சுவாசிக்கச்  சொல்வது  தான்
நீ  காட்டும்  சுதந்திரம்
.....................................................
நீ குற்றவாளியாக இருந்து கொண்டு
என்னைத் தண்டிக்கின்றாய்

நீ ஏவிய சூறாவளி
வெற்றிகரமாய் வீசி வீசி
என்  தேசத்தையே  நாசப்படுத்தலாம்

உலகில் ஒரே காலநிலை
ஒரே அதிகாரம்
நிலைத்திருப்பதில்லை என்பதை
நீ மறந்து விட்டாய்'

என்கின்ற குரல் அடக்கியாள முற்படும் ஆணாதிக்க சமுதாயத்தை நோக்கிய எச்சரிக்கையாகவே அமைகின்றது.


எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்கள் நிறைந்ததாக பெண்களது வாழ்க்கை அமைந்துவிடுகின்றது. பெண்கள் மென்மையான உணர்வுகளோடு வாழ்க்கைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால், ஆணாதிக்க சமூகத்திடமிருந்து அதைப் பெறமுடியாதபோது அவள் பொசுங்கிப்போய்விடுகின்றாள். மகிழ்ச்சியாக வாழ்தலுக்கான பாதைகள் வலுக்கட்டாயமாக அடைக்கப்படும் அவலத்தைப் பெண்கள் எதிர்க்கின்றார்கள் என்பதை 'காயங்கள்' என்னும் கவிதையில் விளக்கும் விதம் மிகவும் சிறப்பாக உள்ளது. பெண்ணொருத்தி தான் செல்லும் பாதையை விட்டு ஆணாதிக்க சமுதாயத்தை விலகி நிற்கச்சொல்லி எச்சரிக்கை செய்வதாகக் 'கோரிக்கை' என்ற கவிதையும் எதிர்ப்புக் குரலைக் கக்குகின்றது.


பெண்கள் சமூகத்திடம் எதிர்பார்த்துக் காத்திருப்பதை விடத் தாமே சுயேட்சையாக, சுதந்திரமாகச் செயற்பட வேண்டும். மற்றவர்களின் உடைமையாகப் பெண் தன்னைக் கருதிக்கொள்ளக் கூடாது போன்ற கருத்துக்களையும் தனது கவிதைகளினூடாக அனார் வலியுறுத்துகின்றார். புகழ்மொழிகளுக்குள் கட்டுண்டுபோகும் பெண்களின் அறியாமை இருள்போக்கும் கவிதைகளையும் அவர் பாடியுள்ளார். பெண் என்பவள் கொதிமலைபோல இருப்பவள். அந்தக் கொதிமலையில் கக்கும் நெருப்பை ஆண்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றவும் ஊதுபத்திகளைப் புகையவிடவும் பயன்படுத்தி சுகங்காணபதைக் கண்டு அனார் கொதித்தெழுகின்றார். இவ்வுணர்வை 'வெளியேற்றம்' என்ற கவிதையில் காணலாம். மௌனத்தை வரித்துக்கொண்டு வாழும் பெண்களின் சந்ததி காலாவதியாகிவிட்டது. விடுதலைபற்றிய தேடலுக்கான விடை ஆண்களிடமிருந்து கிடைக்கும் என்ற நிலையை விடுத்து பெண்களுக்குத் தமது வாழ்வைத் தாமே நிர்ணயிக்கும் தைரியம் அவசியமானது என்பதை வலியுறுத்துகின்றார்.


வாழ்க்கை     என்னும்   களத்தில்   பெண்கள்   தினமும்   வதைபடுகிறார்கள்.   துன்பத்தைச்   சுமந்து சுமந்து நொந்துபோகிறார்கள். எனினும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் எவருமில்லை. அந்த அவல வாழ்க்கை அவர்களைத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது. அதனை உடைத்தெறிந்து நித்தியமான விடுதலை வாழ்வைப் பெண் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அனாரின் எதிர்ப்புக் குரல் ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீது எதிரொலிக்கின்றது. வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் பெண்கள் முகவரியிழந்து போகாது தமது இருப்பை நிலைநாட்டப் பாடுபடவேண்டும். எவர் வரின் எதிர்த்துப் போராடும் இயல்பு வலுக்க வேண்டும் எனத் தனது கவிதைகளில் வலியுறுத்துகின்றார். 'பெண்பலி' என்ற கவிதையில் பெண்ணினத்தின் உணர்வுகள் கொல்லப்படுவது பற்றிய குரல் ஒரு சமுதாயத்தையே எதிர்த்து எழும் குரலாக அமைகின்றது.

ஒவ்வொரு பெண்ணும் அடிமைத்தனத்துக்கு எதிரான குரலை ஓங்கி ஒலிக்கச்செய்ய வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தன்னை அரசியாகப் பிரகடனப்படுத்திக்கொள்ள வேண்டும். தாம் விரும்பியபடி வாழும் உரிமையைப் பிரகடனப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது அனாரின் கொள்கையாகத் தொனிக்கின்றது.

'சாபத்தை உடைத்துப் பூத்திருக்கின்றேன்
மீளும் உரிமை கோரி
ஆற்றலை  உறுதி  செய்து
என் உள்ளம் திறந்துகொள்கின்றது
 பூமியில் முடிவற்ற பிரமாண்டமாய்'

என்ற கவிதை வரிகளில் பெண்கள் தமது சாபத்தை உடைத்தெறிந்து ஆற்றல்மிக்க சக்தியாக உலகில் மாறவேண்டும் என்று வலியுறுத்துகின்றார். இந்த வற்புறுத்தல் ஆணாத்திக்க சக்திகளை மிரட்டும்  எதிர்ப்புக்  குரலாக  அமைகின்றது.

பெண்ணின்              விருப்பற்ற           புணர்ச்சிக்கு                 எதிரான                குரல்களும் அனாருடைய கவிதைகளில் ஒலிக்கின்றன. விருப்பின்றி நடக்கும் கணவனுடனான புணர்ச்சிகூட அருவருப்பையும் வெறுப்பையும் பெண்களுக்குக் கொடுத்துவிடுகின்றது. மாற்றமுடியாத வலிகளையும், வருத்தத்தையும் கொடுத்துவிடுகின்றது. இந்நிலையில், அனாரின் கவிதைகளில், ஆணின் அதிகாரத் தோரணையில் நடைபெறும் புணர்ச்சிக்கு எதிரான குரல் கவிதைகளில். அந்தவகையில், 'அறைக்கு வெளியே அலையும் உறக்கம்', 'மாற்ற முடியாத வலி', 'வரு(ந்)த்துதல்', 'தண்ணீர்', 'சாபம்' போன்ற கவிதைகள் குறிப்பிடத்தக்கன. புணர்ச்சி வன்மத்தின் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் அனாரின் கவிதைகளில் 'மாபெரும் உணவுமேசை' என்பது முக்கியமானது.


'சில்லி  சோஸ்  ஊற்றப்பட்ட  தட்டுக்களில் யோனிகள்  பரிமாறப்பட்டன உடனுக்குடன்  வெட்டப்பட்ட  முலைகளும் விருந்தினரை  அதிகம்  கவர்ந்திருந்தன'  என்ற கவிதை வரிகளில் பெண்ணுக்கு எதிராகச் சமூகம் செய்யும் கொடுமைகளின் உச்சம் வெளிப்பட்டு நிற்பது மட்டுமல்லாமல் அதற்கு எதிராக அனைவரும் கிளர்ந்தெழ வேண்டும் என்ற எதிர்ப்புணர்வையும் ஏற்படுத்திவிடுகின்றன.

பெண்கள் பிள்ளைபெறும் இயந்திரங்களாக வாழ்வதை 'புள்ளக்கூடு' என்ற கவிதையினூடாக அனார் எதிர்க்கிறார். குடும்ப வாழ்க்கையோடு கட்டுண்டு விடுபட முடியாத வேதனையில் துடிக்கும் பெண்கள் தலையணையோடு அழுது தீர்க்க எத்தனிக்கின்றார்கள். பல பெண்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்த முடியாது மடிந்துபோகின்றார்கள். அந்த அவல வாழ்வுக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை.

'வெகு  காலமாக  ஒருத்தி
நிறங்களை  அழுவது  தொடர்பான
கடினமான  வேதனை  பற்றி
உங்களுக்கு எதுவும் தெரியாது என்றபோதிலும்
உங்களில் ஒருவரே
அதற்கு முழுப் பொறுப்பாளி என்பதையும்
தயவு செய்து ஞாபகம் வைத்திருங்கள்?'

என்ற கவிதை வரிகளில் பெண்ணடிமைத்தனத்தின் கோரத்தனங்களுக்கு சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார். அதற்குக் காரணமான ஒட்டுமொத்த சமுதாயத்தை எதிர்த்துக் குமுறுகின்றார்.

அனார், பெண்ணடக்குமுறைக்கு எதிரான தனது குரலை 'சுலைஹா' என்ற கவிதையில், தொன்மம் சார்ந்த உத்தியினூடாகப் பாடியுள்ளார். அனார், சுலைஹாவை விடுதலை வேட்கையுடை ஒட்டுமொத்தப் பெண்களின் பிரநிதியாக நிறுத்திப் பேச வைக்கின்றார்.

'கனவுகள்  காண  ஏங்கும்  கனவு  நான்
என்  உடல்  செஞ்சாம்பல்  குழம்பு
கத்திகளால்
கைகளையோ கனிகளையோ
 வெட்டிக்கொள்ளாதவள் '

என்று  அவள்  சுதந்திரத்தைச்  சுயபிரகடனம்  செய்கிறாள்.  பெண்ணுக்கு        எமது சமுதாயம்                போதித்திருக்கும் இலட்சணங்களைப் பொய்ப்பித்து, அடிமைத்தனத்தை உடைத்தெறிந்து, சக்தி மிக்கவளாக எழவேண்டியதன் அவசியத்தை அனார் வலியுறுத்துகின்றார். பெண்களை அடிமைகளாக எண்ணுபவர்களுக்கு எதிரான குரலாக ஒரு பெண் படைக்கப்படுகின்றாள்.  அவள்,

'ஒரு  காட்டாறு
ஒரு  பேரருவி
ஓர்  ஆழக்  கடல்
ஓர்  அடை  மழை
நீர்  நான்

கரும்  பாறை  மலை
....................................
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான்  பெண்'

என்று  வலிமையோடு  பிரவாகித்தெழுபவளாக  பெண்ணைக்  காட்டுகின்றார்.  பெண்களது வலிகளும் வேதனைகளும் பெண்கள் மீதான வன்மத்தின் வடுக்களும் அவற்றுக்கான காரணங்களும் மட்டுமின்றி அவற்றுக்கு எதிரான குரல்களும் அனாருடைய கவிதைகளில் ஓங்கி ஒலிப்பதைக் காணலாம். சமுதாயத்தின் பல்வேறு பிரச்சினைகளையும் பாடுபொருளாகக் கொண்டுள்ள அனார் பெண்ணடிமைத்தனத்தை எதிர்ப்பது தொடர்பாக அதிக கரிசனை கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. அந்தச் சமுதாய அக்கறையின் வெளிப்பாடாக அவரது எதிர்ப்புக் குரல்கள் வெளிப்பட்டு நிற்கின்றன.

இருள், இருட்டு. பாம்பு, சிவப்பு, மலை, பள்ளத்தாக்கு, போன்ற சொற்கள் அவரது கவிதைகளில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். பெண்ணுடலுடன் தொடர்புடைய குறியீடுகளாகவும் இவை கையாளப்பட்டுள்ளன. ஒற்றை வாசிப்பில் விளங்கிக்கொள்ள முடியாத பல படிமங்களையும் கையாண்டு பெண்ணடிமைத்தன எதிப்புக்குரலை வெளிப்படுத்துகின்றார். சில கவிதைகள் இருண்மை நிறைந்து உணர்வுத் தொற்றலை ஏற்படுத்துவதில் தொய்வினை உண்டாக்கிவிடுகின்றன என்பதும் மறுப்பதற்கில்லை. எனினும், அனாரினுடைய கவிதைகள் மொழி, மொழிதல், உள்ளடக்கம் என்ற அடிப்படையில் பலரதும் கணிப்பைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தவகையில் சங்கரி, சிவரமணி, ஒளவை, ஊர்வசி, சன்மார்க்கா, ஆழியாள், மைத்திரேயி, ரங்கா, மசூறா, .மஜீட், சுல்பிகா, பெண்ணியா, கெக்கிறாவ சுலைகா என்று நீண்டு செல்லும் இலங்கைப் பெண்கவிஞர்களின் பட்டியலில் அனார் தனக்கென ஒரு இடத்தைப் பதிவு செய்துள்ளார் என்பது வெளிப்படையானது.




5.            முடிவுரை:

இலங்கைத் முஸ்லிம்     தமிழ்ப்             பெண்கவிஞராக     விளங்குகின்ற அனார் தனது  கவிதைக் கொள்கை      காரணமாக  இன,   மத    வேறுபாடுகளைக் கடந்து    ஒடுக்கப்பட்ட       ஒரு                கூட்டத்தின் எதிர்ப்புக் குரலாக ஒலிக்கின்றார். பெண்ணடிமைத்தனச் சிந்தனைகள் ஆழ வேரூன்றிவிட்ட இலங்கை தமிழ், முஸ்லிம் சமூகத்தில் பெண்விடுதலை பற்றிய கருத்துக்கள் பேசப்பட்டாலும் அவை காத்திரமான நிலையைப் பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும். பெண் விடுதலை பற்றி ஆரம்பத்தில் ஆண்கள் பாடினாலும் பெண்கள் தமது பிரச்சினைகளைப் பற்றித் தாமே பாடத் தொடங்கிய பின்னரே எதிர்ப்புக் குரல்கள் வலுப்பெறத் தொடங்கின. கவிதைகளின் உள்ளடக்கம், எடுத்துரைப்பு முறை ஆகியன பற்றிய பல வாதப்பிரதிவாதங்கள் காணப்பட்டாலும், பெண்விடுதலையை நோக்கிய எதிர்ப்புக் குரல்களின் உள்ளடக்கம் காரணமாகவும் படிமம் போன்ற வெளிப்பாட்டு உத்தி, கையாளும் மொழி காரணமாகவும் தமிழ்க் கவிதையுலகில் அனார் தனக்கென ஒரு இடத்தைப் பதிவுசெய்துள்ளார் என்பது வெளிப்படையானது.


6.  உசாத்துணைகள்:

அனார். (2004), ஓவியம் வரையாத தூரிகை. மூன்றாவது மனிதன் வெளியீட்டகம: கொழும்பு.

அனார். (2007), எனக்குக் கவிதை முகம். காலச்சுவடு பதிப்பகம்: சென்னை.

அனார். (2009), உடல் பச்சை வானம். காலச்சுவடு பதிப்பகம்: சென்னை.

அனார். (2013), பெருங்கடல் போடுகிறேன். காலச்சுவடு பதிப்பகம்: சென்னை.

இந்திரன். (2001), கவிதையின் அரசியல். அலைகள் வெளியீட்டகம்: சென்னை.

முத்துச்சிதம்பரம், . (1999), பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும். தமிழ்ப் புத்தகாலயம்: சென்னை:

யோகராசா, செ. (2007), ஈழத்து நவீன கவிதை. குமரன் புத்தக இல்லம்: சென்னை.

வாசுகி, சி. ரூ அயோத்தி, சி. (2007), பன்முக நோக்கில் பெண்ணியப் பதிவுகள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்: சென்னை:

---