Tuesday, 23 October 2018

போகன் கவிதைகள் : 
--------------------------------------------------------------------------------------
- அனார்

யாருக்காக நாம் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம்? நமக்காகத்தான் எழுதுகிறோம் என்றால், நமக்கே அதனை ஏன் திரும்பத் திரும்ப அழுத்திச் சொல்லவேண்டி இருக்கின்றது ? இன்னொருவருக்காக யாரும் கவிதைகள் எழுதுவதில்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இரண்டுபட்ட மனதை கொண்டுசென்று சொற்களாலான கூட்டை இளைத்து நிரந்தரமின்மையான அதை்திலும் இருந்து விடுதலையடைய முயலும் தொடர்ச்சியான செயற்பாடுதான் கவிதை.

கவிதை இன்னொரு உணர்ச்சியென நான் நினைக்கிறேன். அந்த உணர்ச்சிக்கு ஆண்பால் பெண்பால் அரசியல் தத்துவம் கோட்பாடு கலைத்தாகம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகும். போகன் சொல்கிறார்.

// அவர்கள் என்னை என் கவிதைகளுக்காகவே
விரும்புவதாகச் சொன்னார்கள்
எனது கூரிய நகைச்சுவை உணர்விற்காகவும்
கரி மசி போன்று இருண்ட இரவுகளில் அவர்கள்
எனது ஜோக்குகளை நினைத்துக் கொள்கிறார்களாம்
அவை அவர்களது பாலைவனங்கள் மீது
நீர் ஊற்றுக்கள்போல தாவிச் செல்கின்றன
நான் எப்படியோ
என்னை அறியாமல் ஒரு விண்மீனாக மாறியிருக்கிறேன் //


நான் எப்படியோ என்னையறியாமல் ஒரு விண்மீனாக மாறியிருக்கிறேன் எனச் சொல்கிறார் போகன். கவிஞர்கள் பெரும்பாலும் ஆகமுடியாத ஒன்றாய் ஆகிவிடவே விரும்புகின்றார்கள். வானமாக, கடலாக, காற்றாக, நிலவாக, பூவாகப், பூச்சியாக, காடாக, மலையாக என இன்னொன்றாக ஆகிவிடவேண்டுமென விரும்புகின்றார்கள் அல்லது தான் இன்னொன்றுதான் என நம்புகின்றார்கள். இன்னொன்றிற்கான தேவைதான் கவிதைகளை எழுத வைக்கின்றது. தான் காணும் கனவிற்கு பல்லாயிரம் நிறங்கள். எண்ணங்கள் தோன்றும் மனதிற்கு பலகோடித் திசைகள் என மறைவான சிறகுகளால் காலத்தின் மீது சொற்களைச் சிதறுகின்றன கவிதைகள். 

நம்முடைய மனதின் அந்தரங்கமான வசிப்பிடமாக கவிதையை தேர்ந்தெடுக்கின்றோம். போகனின் மற்றொரு கவிதையில்,

// என்னால் தீப்பந்தங்களைத் தூக்கிக்கொண்டு ஓடமுடியவில்லை
என்மீது எப்போதும் எனக்கொரு குமட்டல்
இருந்துகொண்டே இருக்கிறது
தீர்க்கதரிசிகளின் முடைநாற்றமடிக்கும் அங்கிகளை
வெறுக்கும் அதே தீவிரத்தோடு
அவர்களது மரணங்களின் மழைநீர்
பரிசுத்தத்தை விரும்புகிறேன்
மூக்குக் கண்ணாடியை தொலைத்துவிட்டுத் தேடுவது
எனது முக்கியமான வேலைகளில் ஒன்றாகவிருக்கிறது
ஒவ்வொரு முறை புனிதகுளத்தில் மூழ்கி எழுந்த பிறகும்
நான் மிக அழுக்கான செயலொன்றைச் செய்கிறேன்
என் வாழ்க்கை முழுக்கவே
இந்த இருமைகளால் கட்டப்பட்டிருக்கிறது
எனது ஆன்மா
இந்த இரு முனைகளுக்கிடையே
ஒரு சிற்றெறும்புபோல
அங்குமிங்கும் அலைகிறது //


வாழ்வின் இரு நிலைகள் மீதான பாசாங்கினை அபத்தங்களைக் உணர்ந்து அதன் மீதான தன்னுடைய உடன்பாடின்மைகளை வெளிப்படுத்துகின்ற போகனின் கவிதை இது.

அநாதரவு, துரோகம், வெறுமை, காமம், குற்றம், காதல் தனிமையென அத்தனை உணர்ச்சிகளாலும் நிரம்பிய மனதை நடைமுறையில் பொருந்திப்போன வாழ்விலிருந்தபடி சுமப்பதுதான் நவீன கவிதை கொண்டுள்ள நிர்ப்பந்தமாகும்.

அன்றாடச் சவால்கள் சூழ, புன்னகையும் கண்ணீரும் ஒன்றையொன்று உரசி, வாழ்வு புகைந்து கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்தெல்லாம் விலகி குறைந்தபட்சம் உடலை நகர்த்த இயலாத இடங்களுக்கு மனதை நகர்த்தி விடலாமென முயலுகின்றோம்.

போகனின் கவிதைகள் ஒரு சிரிப்பாக எள்ளலாக தோற்றம் காட்டலாம். ஆனால் அந்தச் சிரிப்பின் கண்கள் எங்கேனும் நாம் பைத்தியமாக எதிர்கொள்ளும் மனிதருடையதைப் போன்றிருக்கிறது.. அந்த எள்ளலின் உதடுகள் மதத்தினால், சமூகத்தினால், உறவுகளால் குற்றம் சாட்டப்படுகின்ற மற்றையதொரு மனிதருடையதாக இருக்கின்றது. போகனின் கவிதைகள் சிலவற்றை இந்த அடிப்படையில் புரிந்துகொண்டேன்.


// பாவத்தைச் செய்யும்போதுமட்டும்
உங்கள் உடல் எப்படி இவ்வளவு ஆற்றலுடையதாக மாறிவிடுகின்றது
உங்கள் கண்களில் ஒளி கூடிவிடுகின்றது //

என போகன் எழுப்புகின்ற இவ்விதமான கேள்விதான், அவரது நகைச்சுவை துணுக்குகளைவிட கவிதையில் முக்கியமான ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது. கவிதைக்கு அவர் செய்யும் நியாயம் அங்குதான் ஒளிர்ந்தும்… ஒழிந்துமிருப்பதாக நான் கருதுகிறேன்.


நமது ஆன்மாவின் ஜன்னலால் மனம் கவிதைக்குள் நுழைவதை தொலைவான மூட்டமான அக்கணங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு நத்தையின் ஊர்தலும் அதன் ஈரலிப்பும்கொண்ட மனம் கவிதைக்குள் மெல்ல மெல்ல ஊர்ந்துகொண்டே செல்வது. அதன் பயணமே அதன் இலக்காகும்.


ஆத்மாநாமின் ”இரவில் பேய்கள்” எனும் கவிதை ஒன்றோடு என் குறிப்பை நிறைவு செய்கிறேன்.


// குருட்டுக் கண்களைத்
திறந்து பார்த்தால்
இருட்டுத்தான்
பிரகாசமாய்த் தெரிகிறது
செவிட்டுச் செவிகளைக்
கூராக்கி முயற்சித்தால்
நிசப்தம்தான்
கூச்சலாய்க் கேட்கிறது
நுகராத நாசியை
நுழைத்துப் பார்த்தால்
சாக்கடை மணம்
சுகந்தமாய் இருக்கிறது
உருமாறிப் போனவன்
உடல் மாறி
மனம் மாறின பின் //



2018 ஆம் ஆண்டுக்கான ஆத்மாநாம் விருது பெறும் போகன் அவர்களுக்கு என மனமார்ந்த வாழ்த்துகள்.

( ஆத்மாநாம் அறக்கட்டளை வெளியிட்ட போகனின் படைப்புலகம் நூலுக்காக எழுதப்பட்ட சிறு குறிப்பு )