முதலில் வார்த்தைகளை தின்றுவிடுகிறது மரணம்…
----------------------------------------------------------------------------------------------
- அனார்
வழியற்றவர்களின் பாதைகளிலும் பயணங்களிலும் விதிக்கப்பட்டிருக்கும் அனுபவங்களே வாழ்வாகும். மரணத்தின் பிறகும் இடமற்ற வெளியில் மிதக்கின்றது காலத்தின் அதிசயமாய்.
நிரந்தரமான ஏதோ பிணைப்பின் வழியாகவே ஒரு உறவு நம்மை இணைத்திருக்கின்றது.
மரணம் திடீரென நம்மை கையறு நிலையில் நிறுத்திவிடும்போது இந்த வாழ்வெனும் அபத்தங்களின் நோக்கத்தை விளங்கியும் விளாங்காமலும் ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.
இலக்கியம் தொடர்பான குறிப்பிடத்தக்க இந்த இருபது வருடங்களில் மிக முக்கியமான என் இலக்கியம் சார்ந்த நண்பர்களை மரணம் பிரித்துச் சென்றிருக்கிறது. அவர்கள் என் புலன்களுக்கு அப்பால் உள்ள ஒரு வெளியில் அமர்ந்திருக்கிறார்கள்.
ஓவியர் கருணாவுடனான தொடர்பை ஏற்படுத்தித் தந்தவர் கவிஞர். சேரன் அவர்கள்தான். என்னுடைய 'எனக்குக் கவிதை முகம்' கவிதைத்தொகுப்பிற்கு அட்டைப்பட ஓவியத்தை கருணா அவர்களே வரைந்து தந்திருந்தார். அப்போது மட்டுமல்ல எப்போதுமே அந்த அட்டைப்பட ஓவியம் மனதிற்கு நிறைவானதொரு நிகழ்வாகும். அந்த அழகான அட்டை ஓவியத்தை வரைந்ததற்காக கருணாவிடம் நன்றி தெரிவித்துப் பேசியபோது அவர் “நீங்கள் அதிஷ்டக்காராப் பெண், பிற தொகுப்புகளுக்கு இத்தனை அழகாய் அமையவில்லை. உங்கள் கவிதைகளுக்கு அப்படியொரு பொருத்தமும் அழகுமாய் அமைந்துவிட்டதில் ஏதோவொரு அதிஷ்டமிருப்பதாய் நினைக்கிறேன்“ என்றார். அவ்வார்த்தைகள் என்னை இன்னும் சந்தோசப்படுத்தின. அவர் கூறியது போலவே ’எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பு ஒரு அதிஷ்டமிக்க கவிதைத் தொகுப்பாகவே இருக்கிறது. அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் கருணாவும் நானும் உரையாடியிருக்கிறோம்.
2015 இல் நான் கனடா சென்ற போது, காலம் செல்வம் அவர்களுடன் தாய்வீடு ஆசிரியர் திலீப்குமார் அவர்களையும் ஓவியர் கருணா அவர்களையும் சந்தித்தேன். பின்னர் ஓவியர் கருணாவும், திலீப்குமார் அவர்களும் என்னையும் அஸீமையும் அழைத்துக்கொண்டு பல இடங்களைச் சுற்றிக் காட்டினார்கள். ஒவ்வொரு இடங்களைப்பற்றிய விளக்கங்களையும் மிக அர்த்தபூர்வமாக விளக்கிக்கொண்டே இருந்தார் கருணா. அழகான Toronto Music Garden முழுக்க கருணாவுடன் உரையாடியபடி நடந்த படியேயிருந்தோம். எங்களை நிறையப் புகைப்படம் எடுத்தார். நான் கூறினேன் “எப்பவும் ஒரு புகைப்படத்திற்கான நேர்த்தியான முகவடிவம் எனதில்லை. இன்று உங்களுக்கு ஒரு சோதனையான நாள்தான் கருணா” . அவர் சிரித்தபடியே பொறுமையாக அன்று மாலை வரை புகைப்படங்களை எடுத்துக்கொண்டே இருந்தார். ஓவியம் போன்றமைந்த சில புகைப்படங்கள் இன்றும் என்னிடம் உள்ளன. கனடா பயணம் முடியும் தறுவாயில் காலம் செல்வத்தின் வீட்டில் இரவு உணவுடன் உரையாடல் இடம்பெற்றது. அப்போது கருணா மனநெகிழ்ந்தபடி அவருடைய வாழ்வின் சில தருணங்களை உருக்கமாகப் பகிர்ந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரது அழுகை தீவிரமாக வெடித்தது. உணர்ச்சிகரமாக நீண்டு சென்ற அந்தநேரத்தில் அவருடைய சொற்கள் என்றுமே காயாத ஈரச் சுவர்போல பாசிபற்றிக் கொண்டிருக்கும் செங்கற்களைப்போல என்னுள் இருக்கின்றன.
சமீபமாக சென்ற வருடத்தில் (2018) மீண்டும் அவரே தொடர்பை ஏற்படுத்தினார். சில இளைய கலை ஆர்வமுள்ள நண்பர்களை இணைத்து இன நல்லுறவுக்கான கலை இலக்கிய விளிப்பூட்டல் நிகழ்வுகள் தொடர்பாக ஆலோசனைகளையும் திட்டங்களையும் பேசிக்கொண்டோம். கருணாவின் முயற்சியால் அவ்விதமான சில நிகழ்வுகள் நடந்தேறின. அதைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான விருப்பத்தினைக் கொண்டிருந்தார். அவருடைய நெருங்கிய நண்பர்களைப்போல் கருணாவை நான் ஆழமாக அறிந்திருக்கவில்லை. ஆனால் உண்மையான பரிவும் தோழமையும் பரஸ்பர மரியாதையையும் இருவரும் கொண்டிருந்தோம். சென்ற டிசம்பரில்(2018) அவர் இறுதியாப் பேசும் பொழுது அந்த உரையாடல் வெவ்வேறு நிகழ்வுகளும் திட்டங்களும் நட்புவட்டம் தொடர்பாகவும் மிகுந்த சந்தோசமான உணர்வுகளோடுமிருந்தது. எங்கள் உரையாடலில் 'ஆம்' என்பதற்கும் 'இல்லை' என்பதற்கும் நடுவில் கருணாவின் மரணம் மறைந்திருந்ததா என்பதை அன்று நான் அறிந்திருக்கவில்லை………………………
---------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி : தாய்வீடு, மார்ச் 2019 - ஓவியர் கருணா வின்சென்ற் சிறப்பிதழ்
http://thaiveedu.com/images/pdf/2019/spl/Karuna-Thaiveedu-March.pdf?fbclid=IwAR3uCBBrDLfd6wmhW_NON5P9YQ6BMw7gF9d8tVflBDra-9rld67xNYs9ANM