Saturday, 24 October 2020

ரைனா 
---------------------------------------------------------------------------------------------------------------


- அனார் 

இரண்டு நட்சத்திரங்களிடையே அவளுக்கொரு ஊஞ்சல் இருந்தது. தென் திசை வானின் கருநீல மென்பரப்பில் அவளுக்கே இன்னதென்று தெளிவாகத் தெரியாத ஒரு நீண்ட வால் வெள்ளியைப்போன்றது அவளது ஊஞ்சல். அவள் கண்விழித்தபடியே காணும் கனவுகளில் அந்த வால்வெள்ளியும் ஒன்றா அல்லது அது எப்போதும் தானாடும் ஊஞ்சல் விளையாட்டா. மரச்சிலாகைத் துவக்கால் விளையாட்டுக்குச்சுட மற்றவர் விழுந்து இறந்து கிடப்பதைப் போன்ற விளையாட்டா அது. அல்லது விக்கி விக்கி செத்து விழுந்த கோழிக்குஞ்சை உள்ளங்கைக்குள் வைத்துக் கொள்வதைப் போன்றதா. ரைனாவுக்கு நிகழும் போது மட்டும் அவை முழுமையான விளையாட்டாக அமைவதில்லை. அவளுக்கு வழங்கப்படும் அன்பில் பாதி குறைந்து போய்விடுகிறது. கணப்பொழுதில் சிதறி அழியும் பட்டாசைப்போல அனைத்தும் அவளுக்குள் மின்னி மறைந்தன. 

இவையனைத்தையும் மறந்து ஆற அமர காற்றில் பறக்கவும் நட்சத்திரங்களைப் பார்க்கவும் அலைந்து திரிந்த பறவையொன்று மரக்கிளையில் அமர்ந்து அமைதி காண்பதைப்போல ரைனா கிணற்றுக்கொட்டில் போய் அமர்ந்தாள். தேசி மரத்தின் கீழ் வெள்ளைப் பூக்கள் பவளக்கற்களைப் போன்று மின்னின. அவற்றின் பரிசுத்தமான துளிகளுக்குள் தெரியும் மென்னீல ஆகாயத்தை தனக்குரியதாக எண்ணிக்கொள்வாள். ஈர மணலிலிருந்து அவற்றை ஒவ்வொன்றாக பொறுக்கி உள்ளங்கைக்குள் சேர்த்துக்கொள்வாள். மெல்லிய ஈரமான இதழ்களின் குளிர்ச்சி அவளின் உள்ளங்கை வழி உயிரின் நிரம்பாத கிண்ணங்களை வந்தடையும். கிணற்றுக்கொட்டில் வரிசையாக வெள்ளைப்பூக்களை அடுக்கி ரைனா என எழுதினாள். அவை மிக நேர்த்தியாக கோர்க்கப்பட்ட மாலையொன்றைப்போல நெருக்கமாகவும் பொலிவாகவும் அவளின் பெயருக்குள் சேர்ந்துகொண்டன. எங்கிருந்தோ தோன்றி புறப்பட்டு வரும் மெல்லிய காற்றில் வெள்ளைப்பூக்கள் தம்முடலை சிலிர்த்து ரைனாவிற்கு நன்றி தெரிவித்தன. அவளின் கண்களுக்குள் வந்தடைத்த ஈரம் கண்ணீராய்த் திரண்டு நின்றன. நீரில் தெரியும் அவள் முகத்தைப் நேரம் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ரைனா. அவளின் முகம் கணத்திற்கு ஒரு கோணலாய் மாறிக்கொண்டேயிருந்தது. 

பட்டுப்போன கிணற்றின் உட்சுவரில் ஈரமூறி பாசி பிடித்த சீமெந்து பெயர்ந்த செங்கற்களின் சிறு துளைகளுக்குள்ளே பூரான்களையும் பல்லி முட்டைகளையும் காண்பாள். நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கும் செங்கற்கள் கூட காலத்தோடு சிதைந்து உருக்குலைந்துபோயிருந்தன. கிணற்று நீரினுள் கணத்திற்கொரு கோணலாய் அசையும் அவளின் முகத்தை நீண்டநேரம் பார்த்திருந்தபோதே திரண்டிருந்த கண்ணீர்த்துளிகள் ஒவ்வொன்றாய் உதிரத்தொடங்கின. அவளை அவளே பார்க்க முடியாதவாறு கண்ணீர்துளிகளால் கிணறு கலங்கியது. இரண்டு இனிப்புகளை வாங்கிச் சாப்பிட்டதை மறைத்ததற்காக ஐம்பது தோப்புக்கரணம் போடும் தண்டனையை இப்போது தான் ஏற்றிருந்தாள். இன்னும் வலுப்பெறாத அவளின் தொடைகள் வலித்தன. முழங்கால் கழன்று விட்டதாகவே அவள் நம்பினாள். அவளின் கால்விரல்களை குறுக்கமுடியாதளவு பலமிழந்திருந்தாள். அவளின் வாய்க்கூடாக இதயம் வெளிவந்துவிடுமளவு அழுத்தமாயிருந்தது. இது நம் வீடுதானா என்றிருந்தது. வீடுகள் சிலவேளைகளில் மந்திரங்களால் கட்டப்படுவதுமுண்டு என்று எப்போதோ கேட்டதை எண்ணி தனக்குள் இன்னும் பயந்துகொண்டாள். மந்திரங்களால் கட்டப்படும் வீடுகள் எப்போதும் இருட்டுக்குள்ளேயே இருக்கும் என்றும் அங்கிருக்கும் பெரியவர்களுக்கு கண்கள் தெரியாமலே போய்விடும் என்று நம்பினாள். கருமையான துணிகளால் கண்கள் கட்டப்பட்ட மனிதர்கள் வீட்டுக்குள் அலைவதையும் அவர்களின் கைகளில் அடித்தால் சுள்ளென்று வலிக்கும் நீளமான மெல்லிய தடிகளையும் காண்கிறாள். சரியாக தோப்புக்கரணம் போடுகிறாளா என எண்ணிக்கையைச் சரிபார்க்கும் சிரித்த உதடுகளும் இரக்கமற்ற கண்களும் அவளுக்குள்ளிருந்து கலைய மறுத்தன. அவளைப் பார்த்தபடியே நீரிலிருக்கும் முகத்தை கலைக்க விரும்பினாள். துலாக்காலை மெதுவாகப் பிடித்து கிணற்றினுள் வாளியை விட்டாள். அவளது முகம் ஒரு ஜெலி மீனைப்போல வாளிக்குள் பாய்ந்து விழுந்தது. தண்ணீர் அள்ளும்போது கிறீச் என்று சத்தமெழுப்பும் துலாக்கால் காதுகளைச் கூசச்செய்யவும் உடலை சிலிர்த்துக் கொண்டாள். அள்ளி மேலே எடுத்த போது ஜெலி மீன் காணாமல் போயிருந்தது. 

வயிறு நிறைய தண்ணீரைக்குடித்து முகத்தைக் கழுவி மிகுதித் தண்ணீரை இரு கால்களிலும் ஊற்றினாள். இனிமையான ஆயிரம் குளிர்ந்த கைகளைப் போல நீர்த்திவலைகள் அவளை அணைத்துக்கொண்டன. கிணற்றுக்கொட்டில் திரும்ப அமர்ந்தபோது இருண்டிருந்தது. இருட்டு அவளின் உடலை ஆற்றிக்கொண்டிருந்தது. இருட்டோடு அவளும் சிறுக சிறுக கலந்துபோய்க்கொண்டிருப்பதாக எண்ணினாள். நேரம் செல்ல வானம் தன் இரண்டு பிரகாசமான கண்களையும் திறந்தது. வானத்திற்கு மனிதர்களைப்போல நேர்த்தியான முகமில்லை, ஆனால் வசீகரமான இரண்டு கண்கள் உண்டு. ரைனா தன் கைகள் இரண்டையும் நட்சத்திரங்களை நோக்கி உயர்த்தினாள். அவளின் விரல்களை சுழற்றி நட்சத்திரங்களிற்கும் தனக்குமான கயிற்றை இறுக்கமாகப் பிடித்தாள். அவளின் விரல்கள் தொட்ட இடமெல்லாம் பொன்னிறமாக துகள்கள் உதிர்ந்து பறந்தன. ரைனாவின் ஊஞ்சல் கடல்கள் மலைகள் வயல்வெளிகள் அனைத்தும் தாண்டி ஆடுகின்றது. சிலநேரம் தாவுகிறது. சிலநேரம் நீந்துகிறது. இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையே பறப்பதைப் போல திசையற்று எடையற்று ஆடியது அவளது ஊஞ்சல் . 

00 

அடுத்த நாள் காலை மாம்பூக்களும் முருங்கம்பூக்களும் வாசல் மணல் முழுக்க விழுந்து கிடந்தன. இரவு பெய்திருந்த மழைக்குள் அவை கண் முழித்திருந்ததைப் போல ரைனாவைப் பார்த்தவுடன் திருதிருவென முழித்தன. மாதுளை அடியில் அவள் புதைத்து தவறாமல் நீரூற்றி வந்த நாணயம் ஒரு நாள் காசி மரமாக முளைக்குமென்றும் குலைகுலையாக காய்க்குமென்றும் நம்பியிருந்ததை மழை கழுவி விட்டிருந்தது அவளுக்கு ஏமாற்றம்தான். மழை அவளை ஏமாற்றுவது இதொன்றும் முதல் முறையல்ல. ஆனாலும் அவள் தன்னை சூழ்ந்திருந்தவற்றை விட தனக்கு மேலிருப்பவற்றை அதிகமாகவே நம்பினாள். மழையைப் போல உண்மையான இன்னொன்றை அவளால் காணவே முடியாது என்பதை அறிந்திருக்கும் அளவு அவள் வளர்ந்திருக்கவில்லை. வீட்டில் யாரோடும் கதைக்கப் பிடிக்காமல் வாசல்தாண்டி ரைனா மெதுவாக சல்காவின் உம்மம்மா வீட்டுக்கு வந்து விட்டாள். அவர்களின் வாசல் வளவு எப்போதும் புதிதாகவே இருக்கும். மழைக்குப் பின் மணல்கள் கரும்புச் சீனிபோல மினுங்கின. வெறுங்காலால் அவற்றை அமர்த்திக்கொண்டே நடப்பது அவளுக்குள் பூரிப்பை ஏற்படுத்தியது. மணலின் மீது அவளின் காலடிகள் ஏற்படுத்தியிருந்த பெரிய ஜம்புப் பழம் போன்ற அச்சுக்கள் என்றைக்குமே அழியக்கூடாது என்று உதடுகளை முணுமுணுத்துக்கொண்டே நடந்து சென்றாள். வெற்றிலைக்கொடிகள் பின்னிய கமுகு மரம், குரங்கு வால்ப்பூமரமென அவர்களது வாசல் நிறைந்திருந்தது. சல்கா தனது உம்மம்மா வீட்டிற்கு வந்ததிலிருந்து அவளோடு பேசுவதற்காக ரைனா அங்கு செல்வதுண்டு. 

திண்ணைப் படிக்கட்டிலிருந்து கோப்பி குடித்துக் கொண்டிருந்த சல்காவின் அருகே அமர்ந்தாள் ரைனா. சல்காவின் நிறம் இரண்டு நாள் வெயிலில் காய்ந்த பச்சைக் கோப்பி விதைகள்போல வெளிறி வாடி இருக்கும். வார்ந்து இழுக்கவே முடியாத சிக்கலான பற்றையைப்போன்ற சுருட்டை முடிகள் அவளுக்கு. அவளது நீண்ட முகத்தில் கண்களும் மூக்கும் வாயும் ஒன்றோடொன்று அத்தம் போட்டுக்கொண்டதைப்போல விலகி நிற்கும். மெலிந்து உயர்ந்திருந்த அவள் ஆயிரம் புதிர்களைக் கொண்ட பெருங்காடொன்றைப்போலத் தோன்றினாள். சல்கா எப்போதும் சுகமில்லாமல் சோர்ந்துபோய் படுத்திருப்பாள். சில வேளைகளில் டயரியை வைத்து எழுதிக்கொண்டிருப்பாள். ரைனா அவர்கள் வீட்டு மாமரத்து ஊஞ்சல் விளையாடப் போகும் போதெல்லாம் சல்கா அதில் எழுதிக் கொண்டிருப்பதை கண்டிருக்கிறாள். சிலநேரம் சல்கா அழுதபடியே எழுதுவாள். அதைப் பார்க்க ரைனாவிற்கு காடே பற்றி எரிவதுபோலிருக்கும். அவளினூடு பிறக்கும் அனல் ரைனாவிற்கு ஏதோவொரு வகையில் நெருக்கமானதாயிருந்தது. சல்காவிற்கு விருப்பம் என்பதனாலே ராபுள் மரத்தில் ஏறி கனிந்த ராபுள் பழங்களை ஆய்ந்து கொடுப்பாள். அணில் கடித்தவைகளை ரைனா எடுத்துச் சாப்பிடுவாள். அந்த நாவல்நிற குவிந்த உதடுகளை என்ன செய்தாவது விரித்து சிரிக்க வைத்துப் பார்ப்பதற்காக ரைனா ஒவ்வொருநாளும் முயன்று கொண்டிருந்தாள் ரைனா. 

கத்தி போல வளைந்த சொண்டுள்ள ஒரு பறவை வந்தமர்ந்தவுடன் ராபுள் மரக்கிளை சட்டென்றாடியது. அப்பறவை எழுப்பும் கனமான ஒலி யாரோ நோயில் முனகுவதைப்போல இருக்கும். அப்பறவையைப் பார்த்த படியே சல்கா கேட்டாள், 

"இரவு மழைபெய்த வாசல் மணலில் கோடுகீறி தெத்தி விளையாடினா நல்லா இருக்கும்தானே ரைனா... புழுதியே இருக்காது" 

"ஓம்... ஓம், நீங்கள் விளையாட ஏலுமெண்டா.. நான் கட்டங்களைக் கீறுவன்" என்று சத்தமாகக் கூறினாள் ரைனா. அவளது கண்கள் வியப்பில் பெரிய கூழாங்கற்களைப்போல விரிந்திருந்தது. 

”ஆசைதான்.. ஆனா கால்கள் வீங்கிப்போயிருக்கு.. இங்க பாரு", என்று சட்டையை உயர்த்திக் காட்டினாள். இரு கால்களும் பழுத்து இளமஞ்சலாகி வீங்கியிருந்தன. பாவம். 

"வீக்கம் குறைந்ததும் கட்டாயம் விளையாடுவோம்", என்றாள் ரைனா. சல்கா படியிலிருக்க ரைனா எதிரில் ஆடிய ஊஞ்சலில் தாவி ஏறி முன்னும் பின்னும் ஆடியபடி பேசினாள். 

"நீ உன் மத்தக் கூட்டாளி மார்களோடு போய் விளையாடு ரைனா." 

"இல்லை… இல்லை.. அவங்க யாரோடயும் நான் பேசிறதில்ல. இப்ப முந்தநாள் அத்தம் விட்டுட்டேன் அவங்களோட எல்லாம்" 

"என்ன சண்டை வந்திட்டுதா?" 

"ஓம்… கோணல்குட்டி விளையாடினமா… நான்தான் வெத்தி. அவக தோத்துட்டாக. அதுதான் சோலி காட்டிட்டு போய்ட்டாக." 

"அப்பிடியா… யாரோட விளையாடின?" 

"ரமிசோடயும் அன்வரோடயும் தான் விளையாடின." 

"நான் வெத்தியாகையும் ,வெண்டதுக்கு பாட்டம் வச்சேன்." 

"ரமீசுக்கு ஊ.. ஊ.. என்றும் பாட்டம் பாடி வரத் தெரியா. ஓட ஏலாம இளைக்கிறான்." 

"கொட்டான் அன்வர் ஸ்…ஸ்… என்று கொஞ்சத் தூரம்தான் ஓடிவந்த… இடையிலே மூச்சு விட்டுட்டான்" 

"திரும்ப நான் இரண்டாம் தரம் பாட்டம் வச்சேன்.. கோணலைத் தூக்கி குட்டிய பெலக்க அடிச்சனா.. கீரத் தண்டுட கடையத் தாண்டிப் போய் விழுந்துச்சி.. அவ்வளவு தூரமிருந்து இவடம்வரை பாட்டம் பாடணுமே.. 

சோலிக் காரணுகள் கோவிச்சிட்டு ஓடிட்டானுகள்.. அதுவும் எனக்கு ஏசிப்போட்டு.." என்று இரண்டு விரியாத செவ்வரத்தம் பூக்களைப்போன்ற இதழ்களை சுருட்டினால் ரைனா. 

"என்னன்டு ஏசினயாம் ரைனாக்கு..பட்டப்பெயர் சொல்லியா…" என்றாள் சல்கா. ரைனாவின் முக வாட்டமும் கண்களைச் சுருக்கி விரித்து சொல்கிற கதைகளும் சல்காவிற்கு புத்துணர்வாக இருந்தது. ரைனாவை விடவே மனசில்லாமல் பசியும் மறந்து கதையளந்தபடி இருந்தாள். 

"ரைனா உன்ட பட்டப்பெயர் என்ன" 

"யாருக்கும் நீங்க சொல்லக்கூடா.. பிறகு எல்லாரும் ஏசுவாக.." 

"சரி.. சரி.. நான் யாருட்டயும் சொல்லமாட்டேன். சத்தியமா.." 

"சின்னப்பள்ளிக்கு கைகாட்டுங்க…" 

"சரி காட்டிட்டேன்.." 

"பெரிய பள்ளிக்கும்…" 

"ம்.. காட்டிட்டன். சொல்லு ரைனா" 

ஊஞ்சலைவிட்டு குதித்து சல்காவின் அருகில் வந்து ஒரு தாயின் உடலை அணைக்கும் குழந்தையைப்போல தன்னுடைய கைகளிரண்டாலும் அவளின் கழுத்தை அணைத்து காதோடு உதடுகளைக் கோர்த்து படபடக்கும் தொனியில் "தொக்கச்சி, பொப்பி என்று ஏசின.." என்று கிசு கிசுத்தாள் ரைனா. 

"நீயும் அவங்களுக்கு மாறி ஏசுறதானே.." 

"மறுகா விடுவனா… மாறி ஏசினதான்..." 

"என்ன சொல்லி ஏசினாய்.." 

"செங்குரங்கு, குசிப்போத்தல், மூக்கோடிப் பேயனுகள் இப்படிக் கூடயா சொல்லி ஏசின..." 

"பாரு அவனுகள் ஒண்டுதான் சொன்ன.. நீ எத்தன பட்டப்பெயர் சொல்லி ஏசியிருக்க. அது நல்ல பழக்கமில்ல… ஏசக்கூடா… சரியா.. பாவம் தானே அவங்க.." 

"அப்ப நான் பாவமில்லையா… எனக்கு மட்டும் ஏசலாமா" என்ற ரைனாவை இன்னும் பக்கத்தில் இழுத்து சொக்குகளை செல்லமாகப் பிடித்துக்கிள்ளி "கூட்டாளிமாரெண்டா சண்டையும் தான் சமாதானமும்தான்" என்று சிரித்தபடி வெறுமையாக ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலில் ஏறினாள் சல்கா. படியிலிருந்து இறங்கிவந்து ரைனா சல்காவின் முதுகில் மெல்ல கைவைத்து ஊஞ்சலை ஆடாவிட்டாள். காலம் அவ்விருவரின் நடுவே அணைவதும் பிரிவதுமாக ஆடிக்கொண்டிருந்தது. ஒரு கணம் நித்தியமாயும் மறுகணமே நிலையற்றதாயும் காலம் ஊசலாடியது. 

"அன்வரோடயும் ரமீசோடயும் பழம்விடு சரியா.." 

"பிறகு விளையாடு... எவ்வளவு விளையாட முடியுமோ அவ்வளவு விளையாடு... இன்னும் கொஞ்சநாளானா உன்னயும் விளையாட விடமாட்டாங்க...." 

"ஏன் விடமாட்டாங்க.." 

"நீ பெரிய பிள்ளை ஆகிடுவேதானே. அப்படி நடந்தா ஆம்பளப் பிள்ளைகளோட கோணல்குட்டி, ஒளிச்சி விளையாடுறது ஒண்டும் விடமாட்டாங்க..." 

"குண்டடிச்சி விளையாட ஏலாதா.." என ரைனா கேட்டாள். 

"ஏலாதான்.. நீ குண்டும் விளையாடுவியா..", என்று கேட்டாள் சல்கா. இடையில் உம்மம்மா வந்து "காலையில் ரண்டுபேரும் ஒண்டுமே திங்கல்ல.. அப்படி என்ன கதையோ..? கதைக்கொட்டுகள்..", என்றபடி மாம்பழ கரையல் ஆளுக்கொரு கிண்ணத்தில் கொடுத்தார். ஆளை விழுங்கும் மஞ்சள் நிறத்திலிருந்தது மாம்பழக் கரைசல். பிறகு என்ன நடந்து என கேட்ட சல்காவிற்கு கரைசல் கைவிரலால் ஒழுக ஒழுக பிளிங்குண்டுகள் பற்றி சொல்லத்தொடங்கினாள் ரைனா. 

"ஓ.. அதிலும் நான் தான் இவனுகள வெல்லுற. ரெண்டு டின் நிறைய வெண்ட குண்டுகளை வச்சிருக்கேன். வடிவான பிளிங்குண்டுகள். யாருட்டயும் இல்லாத பச்சை பிளிங்குண்டுதான் என்ட கையான். அதலாதான் வெல்லுற நான். என்ட குறி தப்புறதே இல்ல. பயம் இங்க எல்லாருக்கும் தெரியுமா?" 

சிரித்தபடியே சல்கா, " உன்னோட எனக்கும் விளையாடனும்போலதான் இருக்கு. கல்லுச் சொட்டி விளையாடுவோமா?" எனக் கேட்டாள். ரைனா ஓடிப்போய் தேய்ந்த பத்து சிறு கற்களைக் கொண்டுவந்தாள். சல்காவுக்கு ஐந்தும் ரைனாவுக்கு ஐந்துமாகப் பிரித்துக் கொண்டார்கள். முதலாம் கட்டம் விளையாடியபோது ரைனா கேட்டாள்," நீங்க பெரிய பிள்ளையானதிற்கு புது உடுப்பு வாங்கித் தந்தாங்களா? ", "ஓம் உம்மாவும் பெரியம்மாவும் புது உடுப்பு வாங்கித்தந்த. சுத்துக் காப்பும் கண்ணாடிக் காப்பும் இப்பவும் வச்சிருக்கேன். ஏதோ எண்ணெய் பச்சை முட்டை என்று குடிக்கத் தருவாங்க. அதான் சரியான கரைச்சல். இடுப்புல உம்மம்மா புட்டால ஒத்தடம் தந்தா. ஏய் ரைனா உனக்கும் இதெல்லாம் நடக்கும் பாரேன்", என்றாள். ரைனாவின் முகம் வெக்கத்தில் மலர்ந்தது. இறுதிக் கட்டம் விளையாடும்பொழுது ஐந்து கற்களையும் தூக்கிப்போட்டு சிதறாமல்பிடிக்கும் கணம் சல்காவின் மேல் உதட்டில் பூனை மயிர்களுக்குள்ளால் வியர்வை கோர்த்திருந்ததைப் பார்த்தாள் ரைனா. மூக்கு நுனியிலும் துளிர்த்திருந்தன வியர்வை. மொத்தமாக கற்களை மேலே தூக்கிப்போட்டு திரும்ப அவைகளை கைகளுக்குள் சேர்த்தெடுக்கும் போது பூரிப்புடன் மூக்கிலும் நெற்றியிலும் ஏறு வெய்யில் பட்டு சல்காவின் வாய் திறந்து மூடியது. இத்தனை ரம்மியமாக பேரொளியாக ஒருபெண் ஒளிர முடியுமா என்றிருந்தது ரைனாவுக்கு. 

00 

சல்கா கொஞ்சத் தூரம் நடக்க வேண்டும் என்று சொன்னாள். ரைனாவுக்கு சந்தோசம். "மழை மூட்டமாக இருக்கே பரவாயில்லையா", எனக் கேட்டாள். "ம்.. புல்வெளிவரை பார்த்துட்டு வருவோம். கனநாளா நான் நடக்கவே இல்லை. சிறிது தூரம்தானே", என்றபடி இருவரும் நடந்தார்கள். புல்வெளியை ஒட்டிய தென்னந்தோப்புக்கள் எல்லைவேலிகளின்றி பரந்திருந்தன. கருமேகங்கள் நிறைந்திருந்த தொலைவான வானத்தில் மின்னல்கள் வெட்டி மறைந்தன. 

"மின்னல்களை நேரே பார்க்கக் கூடாது தெரியுமா ரைனா?" 

"ஏன் அது அழகாகத்தானே இருக்கு." 

"கண் பார்வையை பறிக்குமாம்.. நீயும் பார்க்காதே உம்மாதான் சொல்வா இதெல்லாம். இரவிலே எரிநட்சத்திரத்தையும் பார்க்கக் கூடாதாம். அது பூமியில் சைத்தான்கள் நடமாடும்போது அவர்களைத் துரத்த எறியப்படும் எரிகற்களாம்" என்று ரைனா சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர்கள் இருவரின் பார்வையும் அண்ணாந்து நூறு கொக்குகள் வெண்சிறகுகள் அசைத்து வருவதையும் விரித்து மடங்கி அவை மினுங்குவதை திகைப்பும் திளைப்புமாய்ப் பார்த்தார்கள். ஒரு கணம் அவை வானம் முழுதையும் மறைத்திருந்தது. 

"உனக்குத் தெரியுமா இந்தச் செடியை பிச்சி அதில வாற பால்பிசினை வச்சா மறு வரும்." , என்று ஒரு செடியின் இலைகளை பிடித்தவாறு கேட்டாள் சல்கா. 

"மெய்யாவா.." என்றாள் ரைனா. 

"நீ நல்ல வெள்ளையாய் இருக்க உன் உதட்டுமேல ஒரு மறு வச்சிவிடவா" 

"கொள்ளை ஆசைதான்... பைரோஸ் டீச்சருக்கும் அப்படித்தான் மறு ஒண்டு இருக்கு... வீட்ட ஆக்கள நினச்சா பயமா இருக்கே... இனிப்பு சாப்பிட்டதற்கே ஐம்பது தோப்புக்கரணம் போட்டாச்சி... உதட்டு மறு எப்படி வந்த என்று கேட்டா நான் என்ன சொல்வது? யாருக்கும் தெரியாத இடமாக தோளில் ஊசிபோட்ட தழும்புக்குக் கீழே வைங்க..." என்றாள் ரைனா. 

"அந்தச் செடியை நோண்டி கையில் வச்சிவிட்டு மேலே கொஞ்சம் மண்ணும் அப்பினாள் மூணுநாள்ல உனக்கு மறு வந்துடும்", என்றபடி சிரித்தாள் சல்கா. 

மண் துகள் காய்ந்ததும் சட்டையின் கொசுவத்தை இழுத்து மறைத்துக்கொண்டாள் ரைனா. 

மருதோன்றிச் செடிகளைச் சுற்றி நின்ற சிறுமிகள் தங்களது மடிகளுக்குள் இலைகளை உருவிச் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். தனது கைகள் இதுவரை மருதோண்டிபோட்டுச் சிவந்ததே இல்லை என மனதுக்குள் நினைத்தவள் சல்காவைப் பார்த்து " மருதோண்டி போடுறயா நீங்க" என்றாள் . 

"ஓம்.. பெருநாளுக்குத்தான் போடுற. வீட்டில் அரைச்சித்தர ஆளில்ல. இருந்தால் எப்பயுமே போட்டிருக்கலாம். இரவுபோட்ட மருதாணிக் கைகளை பெருநாள் அன்று விடியச்சாமம் கைய விரிச்சி பார்க்கிறதே கொண்டாட்டம்தான். வடிவாய் சிவந்துபோய் மணக்கும் கைகள். புதுக் கைகளால் பெருநாளின் இறைச்சிக் கறியும் மஞ்சள் சோறும் சாப்பிட அப்படி ருசியாய் இருக்கும் நாம இரண்டுபேரும் மருதோண்டி அரைச்சி போடத்தான் வேண்டும்", என்றாள் சல்கா. மின்னல்கள் நீளமாகவும் குறுக்காகவும் மின்னின. வானம் மழையை தனக்குள் இழுத்துவைத்திருந்தது. புற்களின் அசைவை கழிமண் புட்டியில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவை காற்றோடு தம்முடலையும் அசைத்து நாட்டியமாடுவதைப்போல ரைனாவிற்குத் தோன்றியது. அவர்களைக் கடந்து ஆடுகளை மேய்த்துச்செல்லும் சிறுவன் அதுவரை மெதுவாக பாடிய பாட்டை சத்தமாகப் பாடினான். அவனது கூர்மையான குரல் புற்களுக்கூடாக லாவகமாச்சென்று கடந்துபோன கொக்குகள் சிறகடிப்போடு இணைகிறது என்று எண்ணிக்கொண்டாள் ரைனா. 

"அவன் உன்னைத்தான் பார்த்து பாடுற" என்று சிரித்தாள் சல்கா. 

"அவன் பின்பக்க களிசனின் ரெண்டு ஓட்டைகள். அவனுக்கு பின்னுக்கும் கண்கள்.", என்றபடி இருவரும் நீண்ட நேரம் சிரித்துக்கொண்டே வயல்வெளிக்குள் தம்மை நிறைத்தனர். 

00 

வழமையைப்போல பின்னேரம் சல்காவைத் தேடிப்போனாள் ரைனா. ஊஞ்சள் வெறுமையாக ஆடியது. அது அந்தரத்தில் தொங்குவதைப்போல வித்தியாசமாக உணர்ந்தாள் அவள். வீட்டிற்குள் உம்மம்மா இருந்தார். " ரைனா உனக்குப் பேசிட்டு இருக்க இன்று சல்கா இல்லையே மகளே. காலையில் மயக்கம்போல இருக்கவும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போய் வச்சிருக்கோம். இரண்டு நாளில் தான் வருவா" என்று உம்மம்மா சொல்லும்போதே அவரின் பழுத்த கண்கள் நிரம்பியிருந்தன. சல்கா நேர்த்தியாக அணியும் உடுப்புகள் கொடியில் காய்ந்து கொண்டிருந்தன. அவை ஒவ்வொன்றுக்குள்ளும் விதம் விதமான உடல் மொழிகளோட சல்கா தன்னை அழைப்பதைப்போலவே உணர்ந்தாள். சல்காவின் உடுப்புகளை எடுத்து வைக்கவா என உம்மம்மாவிடம் தாழ்ந்த குரலில் கேட்டாள் ரைனா. எடுத்து வைத்துவிட்டு பின்னர் கொஞ்ச நேரம் ஊஞ்சல் விளையாடு கூடவே வீட்டையும் பார்த்துக்கொள் நான் தொழுது விட்டு வருகிறேன் என்றார். ஒவ்வொரு உடுப்பாக நிதானமாக சல்காவின் உடல்மொழியிலே எடுத்தாள். சல்காவிற்கு பிடித்த வெள்ளை நிற சோலை எடுத்து தன் கழுத்தோடு இறுகச் சுற்றினாள். அந்தத்துணி ரைனாவை தொட்ட கணம் தண்ணீரின் இதமென சிலிர்த்தது . உடுப்புகளை எடுத்த ரைனா சல்காவின் அறையில் பெட்டகத்தின் மேலே வைத்தாள். அருகே சல்காவின் டயரி இருந்தது. அது அவளின் கண்ணீரின் கனத்தோடு ரத்தமும் சதையுமுள்ள உயிரினமாக ரைனாக்குத் தோன்றியது. டயரியை மெதுவாக எடுத்து வந்து ஊஞ்சலில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கினாள். எப்போதும் போல வானம் மழைக்கான ஆயத்தங்களோடு ஆரவாரமாக இருக்க ஒரேயொரு மேகத்துண்டு மட்டும் ரைனாக்கு மேலே டயரியை வாசிக்கக் காத்திருந்தது. 

”பூக்களில் ரசிப்பதற்கு எனக்கு எதுவுமில்லை. அவை நிறங்களைத் துருத்திக்கொண்டு தேவைக்கதிகமான மென்மையைக் கொண்டிருக்கின்றன. தம்மை ஆடம்பரமாக பறை சாற்றிக் கொள்கின்றன. எனக்கு இலைகளின் மீதுதான் ஆசை. அவை தாமாக யாரையும் ஈர்த்தெடுப்பதில்லை. மழை பெய்த படி இருக்கையில் முருங்கை இலைகளைப் பார்ப்பது அவ்வளவு கொண்டாட்டமானது. உரத்த மழைக்குள்ளும் பொட்டுப்போல இலைகள் ஒவ்வொன்றும் அதை எதிர்கொள்ளும் பாங்கை கவனித்திருக்கிறீர்களா….? கொய்யா இலையை இரண்டாக கிழித்தால் வரும் வாசனை பூக்களின் வாசனையைவிட ஆத்மார்த்தமானது. வெய்யில் மிளிர்ந்து நிரம்பிப்பொங்கும் மாமரத்தின் அடர்ந்த இலைகள் வனம் தருகின்ற அனைத்தையும் தரும். ஒருவேளை கொய்யா இலையைப்போல் என் இதயமும் பச்சைநிறமானது தானோ … ” 

சில பக்கங்களைத் தாண்ட புகைப்படங்கள் இருந்தன. அதில் சல்காவின் சிறு வயதுப் புகைப்படமும் இன்னொன்றில் இரட்டைப்பின்னலோடு மெருன் கலர் சட்டையும் வெள்ளைத் தாவணியும்போட்டு வெட்கப்பட்டு நிற்கிற சல்காவின் புகைப்படமும் இருந்தது. அடுத்தடுத்த பக்கங்களில் புரிந்தும் புரியாமலும் எவ்வளவோ எழுதப்பட்டிருந்தது. சிலவற்றை சிவப்பு மையால் எழுதியிருந்தாள். 

” நான் வாழ்வதையே அருவருப்பாக உணர்கிறேன். அது ஒரு சொல்தான் சாகப்போதுமானது. ஆனால் அப்படி நேர்வதில்லை என்பதுதான் அவமானம்.” 

”அடிமையாக இருப்பதற்கு விசுவாசம் என்று பெயர். என் மீது அதிகாரம் செலுத்தியவர்கள் அன்பைச் செலுத்தவில்லை. இந்த அதிகாரத்தைத்தான் நான் அன்பென்று நம்பிக்கொண்டிருந்தேன்.” உம்மாவுக்கு 

” இன்றிரவு வழமையைவிட மோசமான வகையில் வாப்பா உம்மாவிற்கு அடித்தார். பைத்தியம்போல மிருகம்போல விடாமல்… உம்மா தாங்க முடியாமல் போட்ட சத்தத்தில் பக்கத்துவீட்டு பெரியப்பா வந்துதான் உம்மாவையும் என்னையும் அவர்கள் வீட்டுக்குக் கூட்டிவந்தார். அசிங்கமும் அவமானமும் நிறைந்த இரவு. பிறந்ததிலிருந்து இரவில அடிப்பதும் பகலில் சிரிப்பதுமென நரகம்போன்ற வீடு . நான் மௌத்தாகணும். எவ்வளவு கெதியா முடியுமோ அல்லாஹ் உன்னிடம் என்னை எடுத்துக்கொள்” 

ஒவ்வொரு பக்கமும் ரைனாவிற்குள் வலியாக உள்ளிறங்கியது. அவளைத் திறப்பது அத்தனை எளிதான விஷயம் அல்ல என்பதை உணரத்தொடங்கியிருந்தாள். மானுட வாழ்க்கையின் அத்தனை கீழ்மையும் அவளின் விரல்களுக்கூடாக தாள்களில் இறங்கியிருந்தன. சல்காவின் கண்களுக்குள் தெரியும் ஆழம் இத்தனை கொடியது என்று அவள் எண்ணியிருக்கவில்லை. இதற்கு மேலும் வாசிக்கும் தைரியத்தை அவள் இழந்திருந்தாள். டயரியை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு ஒரே ஓட்டமாக அவளுடைய கிணற்றடிக்கு வந்து சேர்ந்தாள். பாதையெங்கும் அந்த டயரி அவளை தனக்குள் இழுத்துக்கொண்டேயிருந்தது. கிணற்றுக்கொட்டில் அமர்ந்தபடி நீரை எட்டிப்பார்த்தாள். சலனமற்ற நீர்ப்பரப்பில் ரைனாவின் முகம் சல்காவினுடையதைப்போல தோன்றியது. அதுவரை பின்தொடர்ந்த அந்த ஒற்றைமேகம் நீர்ப்பரப்பை மூட ரைனாவிற்கு அழுகை முட்டியது. கண்கள் சிவக்க அழுதுகொண்டிருந்த அவள் மீது சாம்பல் நிற மேகம் மழையாய் இறங்கியது. 

00 

பாடசாலை விட்டதும் ஓடிவந்த ரைனா வீட்டுக்குப்போகாமல் உம்மம்மாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். ஊஞ்சலில் கால்களை நீட்டி சல்கா அமர்ந்திருந்தைக் கண்டதும் அவளுக்குள் ஈரமாக மூச்சிறங்கியது. சல்காவுக்கும் முகம் நிறைய சிரிப்பு. வா என அழைத்து தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டாள். 

எதுவும் பேசமாலிருந்த ரைனாவின் கலைந்திருந்த தலைமுடியை இரு கைகளாலும் அழைந்து வருடி திரும்பவும் சேர்த்துக் கட்டிவிட்டாள். சல்காவின் விரல்களில் இருந்த மென்மை வலியைச் சுகப்படுத்தும் மந்திரம்போல ரைனாவிற்கு தோண்றியது. 

"நாளை பின்னேரம் என்னை கொழும்புக்குக் கொண்டுபோகப் போவதாக வாப்பாவும் உம்மாவும் சொன்னார்கள்", என்றாள் சல்கா. விம்மலும் வெப்புசாரமுமாக ரைனாவிற்கு பேசுவதற்கு முடியவில்லை. 

சல்காவின் மடியில் முகம் புதைத்து அழுதாள். சல்கா முதுகைத் தடவிவிட்டாள். மென்மையாக அவளும் அழுதுகொண்டிருந்தாள். "இரவு நான் உங்களுடன் வந்து தூங்கட்டுமா". என ரைனா கேட்க , "சரி உனது வீட்டில் விடுவார்கள் என்றால் வா", என்றாள் சல்கா. 

இரவில் சல்காவுடன் உறங்குவதற்கு எப்படியோ அனுமதியைப்பெற்று ரைனா வந்துவிட்டாள். இருவரும் வாசல்படியில் இருக்க சல்காவின் கால் பாதத்தின் அருகே மணலில் ரைனா அமர்ந்து எதிரே வாழை மரங்களுக்கிடையே தெரிந்த நிலவை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அனைவரும் உறங்கிய பிறகு தொட்டிலில் உறங்கும் குழந்தையை தாய் ஆதூரமாக பார்த்து நிற்பதுபோல் நடுவானில் நிலா உறங்கும் ஊரையே உற்றுப் பார்த்தபடி நிற்கிறது. வாசல் மல்லிகை வாசம் காற்றுக்கு வந்து நாசியை தடவிச்செல்ல " எப்படி மணக்குது பார்த்தியா", என்றாள் சல்கா. உனக்கு பயமில்லையா என சல்கா கேட்க, இரவில் பேயா வரும் என ரைனா திரும்பக் கேட்டாள். வந்தாலும் வரும் என்று சிரித்தபடியே சொன்னாள் சல்கா. 

"எனக்குப் பேயைவிட கரப்பத்தான் பூச்சிக்கும் பல்லிக்கும்தான் பயம். பிறகு அந்த ரோட்டு சந்தியில நின்று கடைக்கும் போகாம மறித்து என்னைப் பிடிக்கவாற அந்த தாடிக்காரனுக்கும்." 

”ஓ… அவன்தானா பிள்ளை பிடிக்கிற தன்னாசி” என சல்கா கேட்டாள். 

"இல்ல இல்ல அவன் தன்னாசியில்ல .. ஆனா அவன் கடும் மோசம். " 

"ஏன் உனக்கு அவன் என்ன செய்த? " 

"எனக்கு ஒண்டுமில்ல ஆனா என்ட வகுப்பில இரண்டு மூணு பிள்ளைகள் பயந்து கதைப்பாங்க.. அவங்களயும் தனியப்போக விடாம துரத்தி பிடிக்கிறயாம்." 

"என்ன சொல்லிக் கூப்பிட்ட ரைனா அவன் ?" 

"அழகான ஸ்டீக்கர் இருக்கு.. கொப்பியில ஒட்டுறதுக்கு. வா தாறேன் என்று கூப்பிட்டான். நான் போகல்ல… " 

"இனி எப்பவும் யார் கூப்பிட்டாலும் தனியப் போகாதே சரியா… கவனமாக இரு… " 

"சரி.." 

"நீங்க கொழும்பு போனால் வர நாளாகுமா", என ரைனா கேட்டாள். 

"வருத்தம் சுகமானா கெதியா வருவேன்.. இல்லாட்டி கொஞ்சம் சுணங்கும்." 

" எங்கு போவிங்க உங்கட வீட்டயா.. " 

"இல்ல ரைனா. எனக்கு எனது வீட்டுக்கு போக விருப்பமில்ல.. அது ஒரு நரகம். அமைதியான இடம் தேவையென்றுதான் உம்மம்மா வீட்ட வந்திருக்கேன். இந்த நிலாவைப் பார்க்கிறது.. இந்தப் பழைய வீட்டுத் திண்ணை, ஊஞ்சல், நீ இது மட்டும் போதும் எனக்கு. அடுத்தமுறை நான் வந்தால், உனக்கு படிச்சித்தரணும் என்று நினைச்சிருக்கேன். வரும்போது உனக்காக என்ட சுத்துக்காப்பையும் கொண்டுவருவேன்." 

மௌனமாக நீண்டநேரம் இருந்தார்கள். சற்றுத் தொலைவில் கடல் இரையும் சத்தம் கேட்டபடி இருந்தது. 

"இந்த வருத்தம் சுகமாகாதா" 

"யாருக்குத் தெரியும்.. வருத்தங்கள் ஏன் வருகுது, உடம்புக்குள் என்ன நடக்குது … எப்ப சுகமாகும் என்று தெரியாது. அதைவிடு.. ஏதாவது பாடு.. கேட்போம்" 

"எனக்குத் தெரியாதே..", என ரைனா இழுக்க "கிணற்றடியில் குளிக்கும்போது அத்தனை சத்தமா பாடுவாய்தானே நீ… எனக்கு இங்கே கேட்கும்", என்றாள் சல்கா. "ஓம்.. அது உடுப்புக் கழுவுறண்டாத்தான் எனக்குப் பாட்டு வரும்", என்று சிரித்தாள் ரைனா. 

நேரமாச்சிது.. நாய்குரைக்கும் சத்தம் கேட்குது. நாம் இனி தூங்கலாம்" எனச் சொன்னாள் ரைனா. 

சல்கா தூங்காமல் சிம்மி லாம்பின் வெளிச்சத்தைக் குறைத்து வைத்து அந்த டயரியில் எழுதிக் கொண்டிருந்தாள். அவளின் கண்களை உற்றுப்பார்த்துக்கொண்டே உறங்கிப்போனாள் ரைனா. 

00 

பாடசாலைபோக முதல் உம்மாவிடம் வழமையாக கேட்கும் கேள்வியைக் கேட்டாள் ரைனா. 

"சல்கா இண்டக்கி வருவாவா ? உம்மா" 

"இல்லை மகள்…" 

"இண்டைக்கி நீ பாடசாலை போகவேண்டாம். நேற்றிரவு சல்கா கொழும்பில் மௌத்தாகிட்டா. இன்னாலில்லாஹ்…" 

"நீ குளிச்சிட்டு உடுப்ப மாத்து மௌத்தான வீட்டுக்கு போவம்..மையத்த இங்கதான் கொண்டாறாங்க..", என்றார் உம்மா. 

ரைனாவின் கால்கள் நடுங்கத் தொடங்கின. வயிறும் நெஞ்சும் ஏதோ செய்தது. காற்று நுரையீரலுக்குள் இறங்க மறுத்தது. அவளின் கிணற்றுக்கொட்டு கிணற்றுக்குள் தூர்ந்து விழுந்தது. விரல்களும் நகங்களும் ஏனோ அத்தனை உரமாக வலித்தன. அறைக்குள் ஓடிப்போய் அழுதுகொண்டே இருந்தாள். 

உச்சிப் பகல் பொழுது சொந்தங்களும் ஊரும் திரண்டிருக்க உம்மம்மாவின் வீட்டில் முன் அறையில் சல்கா மையத்தாக வைக்கப்பட்டிருந்தாள். ஆட்களுக்குள் நெருங்கி உம்மாவின் கையைப் பிடித்தபடி ரைனாவும் சல்காவைப் போய்ப் பார்த்தாள். ராபுள் கிளைகளுக்குள்ளால் விழுந்த வெய்யில் ஜன்னல் இடுக்கால் சல்காவின் நாடியிலும் கழுத்திலும் விழுந்தது. அந்த அழகான சிறிய நெற்றி சுருக்கமின்றி பரந்திருந்தது. குவிந்திருந்த அவளது உதடுகள் நாவல் நிறமாகியிருந்தது. மூடிய இமைகள் அசைய மாட்டாதா என ரைனா எண்ணினாள். சல்காவோடு ஊஞ்சல் ஆடியபடி இனி எப்போதும் பேசமுடியாதா என யோசித்தாள். அன்று போனவள் பல மாதங்களுக்குப் பிறகு இவ்விதம் திரும்புவாள் என்பதை நினைக்க நினைக்க ரைனாவுக்கு அதிர்ச்சியும் அழுகையுமாக இருந்தது. 

ரைனாவுக்கு வயிறும் இடுப்பும் நோவாக இருந்தது. ஒண்டுக்கு வாறமாதிரி… உடனே போகணும்போல உணர்வாகவும் ஈரம் பிசு பிசுக்கும் தொடைகளில் ஏதோ வித்தியாசமாய் இருந்தது. உம்மாவைக் காணவில்லை. வாசலை அடைத்தபடி நின்றிருந்த கூட்டத்தை விலக்கி வீட்டிற்கு தனியாக வந்து சேர்ந்தாள். ரைனா தன் முதல் இரத்தப்பெருக்கைப் பார்த்தாள். செய்வது தெரியாமல் உம்மா வரும்வரை காத்திருக்கலாம் என நினைத்துக்கொண்டே ஆடைகளை மாற்றிவிட்டு கிணற்றுக்கொட்டில் ஏறியிருந்தாள். சல்காவை குளிப்பாட்டும் பெண்களின் ஓசையும் ஒப்பாரிச் சத்தமும் வீதியே அதிரக் கேட்டுக் கொண்டிருந்தது. 

உம்மம்மாவின் வீட்டிலிருந்து வந்த அழுகை ஒலி கிணற்றுக்குள்ளும் உரத்துக்கேட்டது. கொஞ்ச நேரத்தில் சல்காவை வைத்த சந்தூக்கை தூக்கி வீதியால் எடுத்துச் சென்றார்கள். பன்னீர் மணக்க மணக்க சல்கா அதற்குள் மிதந்துகொண்டிருந்தாள். ஏதோ ஒரு ஞாபகத்தில் தன் வலது கை தோளில் இருந்த அந்த மறுவை ரைனா தொட்டுப்பார்த்தாள். வெண்மையின் மிருதுவான தசையில் அது கறுப்புப் புள்ளியாக பதிந்திருந்தது. கிணற்றை எட்டிப் பார்த்தபோது அது மரணத்தின் ஆழியாகி இதுவரை அறியாத பீதியும் இருட்டுமாக அவளுக்குத் தெரிந்தது. அந்தக்கிணறு எல்லா அழகையும் தொலைத்து ஒரு பிசாசின் வாய்போல ஆவென்று அவளை விழுங்கியது. 

0000

--------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி - காலச்சுவடு இதழ் 250, ஓக்டோபர் 2020

Tuesday, 28 April 2020


ஓர் ஈரத் துணியால் போர்த்திய விதைகள் :
"ஜின்னின் இரு தோகை"  - அனார்
---------------------------------------------------------------------------

- நபீல்

மண்ணிலிருந்து ஊர்ந்து வரும் நில உடலிகள் பல்வேறு ஒளிச் சிதறல்களில் கசிந்து நிறப் பிரிகைகளால் நிழல்களாக உடலின் அரூபங்களை மணல் முற்றங்களில் வரைந்து மனத்தில் கனவுத் தன்மைகளையும் மயக்க நிலைகளையும் படர்த்துவன;

காரிருளில் அசைந்து அசைந்து வரும் சிமிழ் விளக்குகளும் பற்றி எரியும் தீப்பந்தங்களும் இருள் கசியும் மணற் பரப்பில் சுழலும் வண்ண ஒளிகளில் காட்சி ரூபம் கொண்டு அழகு செய்கின்றன;

இப்போது அனாரின் கவிதையொன்றைப் படியுங்கள்:


ஒற்றை முத்தம்
---------------------------

களங்கமின்மையின் பளிங்கொளியாய்
மலையுச்சியில் சரிந்து கிடந்தாய்
பிரித்தெடுக்க முடியாதவாறு
பள்ளத்தாக்கின் கருங்குழிகளை
ஒளியால் பூசுகிறாய்

மரங்களின் இடைவெளிக்கூடாக விழுந்த
இறந்தகால வெட்கங்களின்
வெளிச்சத் தீற்றல்களைத்
திரும்ப நினைத்து நாணமுறுகிறேன்

என் விலாவிலிருந்தே கேட்கின்றன
நம் ரகசிய வெட்டுக் கிளிகளின் கீச்சிடுதல்கள்

மௌனம் உருவாக்கிய பாறைத் தழும்புகளை
ஊடறுத்துக் கொட்டும் அருவிக்குள்
என்றோ தந்து போன ஒற்றை முத்தம்
கூழாங்கற்களில் உருண்டு
உரசிச் சத்தமெழுப்புகின்றது

கற்களின் இடுக்குகளுக்குள்ளே
தாபத் திவலைகளின்
நீர் வளையங்களாகிறேன்

உன் கண்கள் ரகசியங்களுடன்
சுழலும் பொழுதெல்லாம்
இரவின் சதுப்பு நாணல்களுக்குள்
புதைக்கின்றன நட்சத்திரங்கள்


ஓர் ஆணும் பெண்ணுக்குமான ரகசிய வாழ்வின் ஆதாரமான சுழலியலின் நசிவை வீரியமிக்க ஒளி படர்ந்த கண்களுடாகக் காணும் மாற்றங்களையும் முனைப்பையும் மீளாக்கம் செய்கிறது கவிதை.

அனார் எனது பக்கத்து ஊர், நான் திருமணம் முடித்த வகையில் கைனத் தெரு அந்த வழியில் ஒரு தொப்புள் கொடி உறவும்தான்.

அவர் வாழ்ந்த மண், அதே கிராமம் எனக்கு ஒரு போதும் அந்நியமில்லாத - ஓர் ஈரத் துணியால் போர்த்தியவற்றுள்ளிருந்து, அவர் கவிதை விதைகள் முளைத்துத் நிமிர்வதை நான் நேரில் காண்பவன்.

அவர் கவிதைகளில் வரும் செம் மூதாய்க் கிழவிகளை, அவர் பார்த்த அதே தலைப்பிறையின் திசையை, பொன்னிற நத்தைகளின் சிலிர்ப்பை, அங்கு பெய்யும் மழையாடங்களை நானும் ஒரே நேரம் நின்று ரசிப்பவன்.

மூன்று நாளைக்கு ஒருமுறை காய்ச்சலோடு நடுங்கிக் கிடப்பாள். மனைவி சொல்லுவாள் "ரிஹானாவின் குரல் நடுங்குகிறது" என்று "காய்ச்சல் நிறத்துப் பெண்" என்று நானும் ஒரு கவிதை எழுதினேன்.

என் மகளின் அனார் மாமியுடனான பேரன்பு அலாதியானது. பழங்கள் என்றாலே சேகரிக்கும் விருப்பம் நிறைந்த இளம் பருவத்து நாட்கள் அவளுடையது.

அப்போதெல்லாம் இருள் பிரிவதற்கு முன்பே எழுந்து பல் துலக்கி முகம் கழுவிக் கொண்டு எங்கள் புறத்தி வளவில் நின்ற நறுபுளி மரத்தை நோக்கி ஓடுவாள், அவளின் தேடல் வேட்டையில் ஒரு சுரங்கைப் பழங்கள் கிடைக்கும்.

சரி பாதியை அனார் மாமிக்கென்று ஒதுக்கி வைப்பாள். அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்த என் மகளின் தோழிகள் அதனை பதுக்கிச் சென்று விட்டிருப்பார்கள். அனாருக்கு இது தெரியவே தெரியாது.

எனது மாமியும் அவரின் தாயாரும் இணை பிரியாத கூட்டாளிகள், அனாரின் இரண்டு பெண்கள் கவிதை இதுதானோ தெரியாது.


காலங்களைக் கண்களில் நிரப்பியவள்
----------------------------------------------------------------------

மெழுகுக் கனாத் தூண்களில் சாய்ந்திருக்கிறேன்
கண்களே தியான மண்டபம்
இமைகள் சுமந்தாடுகிற கடலின்
நீர் ஊஞ்சல்களில் தாவி ஆடுகிறோம்

பவளப் புற்றுகளின் ஆழத்தில்
நமது சொற்கள் இணைவின் இழைகளால்
நீந்துகின்ற நட்சத்திர மீன்களாகின்றன

கள்ளமும் தூய்மையும் கலந்த ருசி
விழிகளை அருந்துவதால்
விபரிப்புகளுக்குப் புலப்படாத
அடர் மஞ்சள் வெயிலில் தழும்பும்

மௌனத்துக்கும் உரையாடலுக்குமிடையே
பெறப்படாத முத்தங்கள்
நம் கண்கள்

அதிசயங்களை விட
மகத்தான ஒன்றின் அருகில்
மலைப்பூட்டக்கூடியதைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்
இச்சையில் உடல் கரைந்த பின்
மித மிஞ்சிய அதே கண்களால்


இந்தக் கவிதையில் ஒளிகள் இணைந்து ஓவியங்களாகின்றன. விரிந்து படர்ந்த பின்புலத்தில் நமது மன வெளியின் இருளில் அமர்ந்திருக்கும் இச்சைகளின் கனத்த பாய்ச்சல் பல்வேறுபட்ட படிமங்களைக் கிளர்த்துகின்றன.

"டேய் எப்படிடா இருக்க.." என்று பெயர் சொல்லி அழைத்தபடியே கூடத்துக்குள் வந்து தோளைத் தொட்டு இறுக்கிக் கொள்ளும் அன்பின் நெருக்கமான கவிதைகள் இத் தொகுப்பில் விளைந்துள்ளன.

வறுத்த நிலக்கடலையென்றால் அவருக்கு அதி பிரியம். நிறைய வாங்கி ஒரு டின்னில் அடைத்து வைத்துக் கொறித்துக் கொண்டிருப்பார்.

முன் வீட்டில் புறாக்களின் கூடொன்றிருக்கிறது; சிறு மழைத் தூறலுக்கு அவை தெற்கே வட்டமிட்டு வந்திறங்கும் நிலக் காட்சியை ஒரு நாள் என்னிடம் பகிர்ந்திருக்கிறார்.

கவிதைக்குள் மறையும் மழைக் காடுகள்
--------------------------------------------------------------------------

என் கவிதைகளுக்குள்
மழைக்காடுகள் புதைந்துள்ளன
தீப்பிழம்புகள் கொண்டவானம்
காட்டின் இருளில் புதைந்துள்ளது

தகிப்பும் மழையும்
ஆர்ப்பரிக்கின்ற காடு முழுக்க
மந்திரித்து விடப்பட்ட விலங்குகள்
உள் அழைக்கின்ற கண்களால்
பின்வாங்குகின்றன

மழையும் சுவையும்
காற்றின் ஆழ்ந்த பசியும்
சதுப்பு நிலத்தில் உலவுகின்றன
அங்கே
மேயும் கபில நிறக் குதிரை
தொழுவம் அடையும் நேரம்

மஞ்சள் அலறிப் பூக்களை
மடியில் சேர்த்தெடுப்பவள்
எஞ்சிய உன் கண் சிமிட்டலையும்
எடுத்துப்போகிறாள்

வெதுவெதுப்பான மழைக் காடாக உருக்கொள்கின்றன
என் கவிதைகள்

மழை சிணுசிணுக்கும்
மென்மையான இரவின் கீழே
உன்னைப் புதைத்துக்கொள்


அனாரின் கனவில் வந்து போகின்ற உருவங்களில் கருத்த நெடிய மனிதர்கள், கபில நிறக் குதிரைகள், ஆளரவமற்று ஒளியிழந்த வீதிகள், திரைச் சீலைகள் என என் வீட்டுக்கு வரும்போது ஒரு கதையில் சொல்லியிருந்தது இப்போது ஞாபகம் வருகிறது.

எப்போதாவது பொழுதடைந்த வேளையில்தான் அனாரைப் பார்த்துப் பேச முடியும், ஏனைய நேரங்களில் மூச்சிழுத்தபடியே அவசர அவசரமாகப் பேசி முடிப்பார், ஏனென்று கேட்டதற்கு வீட்டில் நிறையப்பேர் சகோதரங்கள் குழுமி விடுவதால் அவர்களுக்கு ஆக்கிக் காய்ச்சிப் போடும் வேலைகளுடன் நானும் மல்லுக்கட்டுகிறேன் என்பார். சில கவிதைகளில் இந்தக் காட்சிப் படிமங்களைத் தரிசிக்கலாம்.

என் முகத்தைப் பார்த்ததுமே பெருமூச்சோடு அவள் கண்கள் கலங்கிவிடும் காலங்களையும் நான் எதிர் கொண்டிருக்கிறேன். என்ன கவிதை எழுதினாலும், அவளும் பெண்தானே!

இரண்டு பேரும் இலக்கில்லாமல் காலாற நடந்து, எங்கெங்கோ திரிந்து விட்டு, கடைசியில் குளத்தங்கரையில் வந்து நிற்பதுபோல் கவலைகளைப் பகிர்வதும் மரங்களின் நிழல்கள் ஒரு நீர்ப் பரப்பில் தெளிவாக விழுவதும் காற்றின் சுழற்சியால் ஓர் இலை விழுந்து அந்த நிர்மூலத்தில் வட்டங்கள் நகர்வதும் இப்போதும் இருந்திருந்து நிகழ்வதுதான்.

பெண்
-----------

மழைக்கு முன்பே
காற்றுக் குளிர்ந்துவிடும்போது
இலைப் பச்சையாக மாறி விடுகிறேன்

அடி நிலத்தின் கீழ்
திரவியமாய் விளைகிறேன்

பித்தமேற்றும்
ஆர்ப்பரிக்கும் கடலின்
உப்பை விழுங்கிய ஆகாயம்

கனவும் விஷமுமான
மந்திரம் நான்

காலங்களின் மீது
அறைகூவல் விடுக்கும்
சொல் ஒன்றின்
இடதும் வலதுமாவேன்

என்னை
எங்கு ஒழித்து வைக்க முடியும்.


மற்றுமொரு முக்கிய போக்காக வெளிப்பட்ட அவரின் அகவெளிக் கவிதைகள் பிறருக்குக் கட்டுப்படாத மாறுபட்ட படைப்புலகமாக தென்படுகின்றன.

கடல், வண்ணத்துப் பூச்சி, குளம், பறவை, பூ, சிலந்தி, செடி கொடிகள், நட்சத்திரங்கள், எனப் பிரபஞ்சம் சார்ந்த படைப்புகளில் பிரதியாக்கம் செய்கின்றன.



பெண்களுக்கு ஜீவனுண்டு, மனம் உண்டு அவர்கள் செத்த மந்திரங்களல்லர், உயிருள்ள செடி கொடிகளைப் போலவுமல்லர் ஆத்மாவின் எல்லா ஓலங்களும் நிறைந்தவர்கள்தான்; அவர்களின் வலியை வேதனையை இப்படியும் சொல்லலாம் என்பதற்கு அனாரின் முதிர்ந்த கவிதைத் தொகுப்பாக "ஜின்னின் இரு தோகை"யை அவதானித்தேன்.