ஓர் ஈரத் துணியால் போர்த்திய விதைகள் :
"ஜின்னின் இரு தோகை" - அனார்
---------------------------------------------------------------------------
- நபீல்
---------------------------------------------------------------------------
- நபீல்
மண்ணிலிருந்து ஊர்ந்து வரும் நில உடலிகள் பல்வேறு ஒளிச் சிதறல்களில் கசிந்து நிறப் பிரிகைகளால் நிழல்களாக உடலின் அரூபங்களை மணல் முற்றங்களில் வரைந்து மனத்தில் கனவுத் தன்மைகளையும் மயக்க நிலைகளையும் படர்த்துவன;
காரிருளில் அசைந்து அசைந்து வரும் சிமிழ் விளக்குகளும் பற்றி எரியும் தீப்பந்தங்களும் இருள் கசியும் மணற் பரப்பில் சுழலும் வண்ண ஒளிகளில் காட்சி ரூபம் கொண்டு அழகு செய்கின்றன;
இப்போது அனாரின் கவிதையொன்றைப் படியுங்கள்:
ஒற்றை முத்தம்
---------------------------
களங்கமின்மையின் பளிங்கொளியாய்
மலையுச்சியில் சரிந்து கிடந்தாய்
பிரித்தெடுக்க முடியாதவாறு
பள்ளத்தாக்கின் கருங்குழிகளை
ஒளியால் பூசுகிறாய்
மரங்களின் இடைவெளிக்கூடாக விழுந்த
இறந்தகால வெட்கங்களின்
வெளிச்சத் தீற்றல்களைத்
திரும்ப நினைத்து நாணமுறுகிறேன்
என் விலாவிலிருந்தே கேட்கின்றன
நம் ரகசிய வெட்டுக் கிளிகளின் கீச்சிடுதல்கள்
மௌனம் உருவாக்கிய பாறைத் தழும்புகளை
ஊடறுத்துக் கொட்டும் அருவிக்குள்
என்றோ தந்து போன ஒற்றை முத்தம்
கூழாங்கற்களில் உருண்டு
உரசிச் சத்தமெழுப்புகின்றது
கற்களின் இடுக்குகளுக்குள்ளே
தாபத் திவலைகளின்
நீர் வளையங்களாகிறேன்
உன் கண்கள் ரகசியங்களுடன்
சுழலும் பொழுதெல்லாம்
இரவின் சதுப்பு நாணல்களுக்குள்
புதைக்கின்றன நட்சத்திரங்கள்
ஓர் ஆணும் பெண்ணுக்குமான ரகசிய வாழ்வின் ஆதாரமான சுழலியலின் நசிவை வீரியமிக்க ஒளி படர்ந்த கண்களுடாகக் காணும் மாற்றங்களையும் முனைப்பையும் மீளாக்கம் செய்கிறது கவிதை.
அனார் எனது பக்கத்து ஊர், நான் திருமணம் முடித்த வகையில் கைனத் தெரு அந்த வழியில் ஒரு தொப்புள் கொடி உறவும்தான்.
அவர் வாழ்ந்த மண், அதே கிராமம் எனக்கு ஒரு போதும் அந்நியமில்லாத - ஓர் ஈரத் துணியால் போர்த்தியவற்றுள்ளிருந்து, அவர் கவிதை விதைகள் முளைத்துத் நிமிர்வதை நான் நேரில் காண்பவன்.
அவர் கவிதைகளில் வரும் செம் மூதாய்க் கிழவிகளை, அவர் பார்த்த அதே தலைப்பிறையின் திசையை, பொன்னிற நத்தைகளின் சிலிர்ப்பை, அங்கு பெய்யும் மழையாடங்களை நானும் ஒரே நேரம் நின்று ரசிப்பவன்.
மூன்று நாளைக்கு ஒருமுறை காய்ச்சலோடு நடுங்கிக் கிடப்பாள். மனைவி சொல்லுவாள் "ரிஹானாவின் குரல் நடுங்குகிறது" என்று "காய்ச்சல் நிறத்துப் பெண்" என்று நானும் ஒரு கவிதை எழுதினேன்.
என் மகளின் அனார் மாமியுடனான பேரன்பு அலாதியானது. பழங்கள் என்றாலே சேகரிக்கும் விருப்பம் நிறைந்த இளம் பருவத்து நாட்கள் அவளுடையது.
அப்போதெல்லாம் இருள் பிரிவதற்கு முன்பே எழுந்து பல் துலக்கி முகம் கழுவிக் கொண்டு எங்கள் புறத்தி வளவில் நின்ற நறுபுளி மரத்தை நோக்கி ஓடுவாள், அவளின் தேடல் வேட்டையில் ஒரு சுரங்கைப் பழங்கள் கிடைக்கும்.
சரி பாதியை அனார் மாமிக்கென்று ஒதுக்கி வைப்பாள். அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்த என் மகளின் தோழிகள் அதனை பதுக்கிச் சென்று விட்டிருப்பார்கள். அனாருக்கு இது தெரியவே தெரியாது.
எனது மாமியும் அவரின் தாயாரும் இணை பிரியாத கூட்டாளிகள், அனாரின் இரண்டு பெண்கள் கவிதை இதுதானோ தெரியாது.
காலங்களைக் கண்களில் நிரப்பியவள்
----------------------------------------------------------------------
மெழுகுக் கனாத் தூண்களில் சாய்ந்திருக்கிறேன்
கண்களே தியான மண்டபம்
இமைகள் சுமந்தாடுகிற கடலின்
நீர் ஊஞ்சல்களில் தாவி ஆடுகிறோம்
பவளப் புற்றுகளின் ஆழத்தில்
நமது சொற்கள் இணைவின் இழைகளால்
நீந்துகின்ற நட்சத்திர மீன்களாகின்றன
கள்ளமும் தூய்மையும் கலந்த ருசி
விழிகளை அருந்துவதால்
விபரிப்புகளுக்குப் புலப்படாத
அடர் மஞ்சள் வெயிலில் தழும்பும்
மௌனத்துக்கும் உரையாடலுக்குமிடையே
பெறப்படாத முத்தங்கள்
நம் கண்கள்
அதிசயங்களை விட
மகத்தான ஒன்றின் அருகில்
மலைப்பூட்டக்கூடியதைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்
இச்சையில் உடல் கரைந்த பின்
மித மிஞ்சிய அதே கண்களால்
இந்தக் கவிதையில் ஒளிகள் இணைந்து ஓவியங்களாகின்றன. விரிந்து படர்ந்த பின்புலத்தில் நமது மன வெளியின் இருளில் அமர்ந்திருக்கும் இச்சைகளின் கனத்த பாய்ச்சல் பல்வேறுபட்ட படிமங்களைக் கிளர்த்துகின்றன.
"டேய் எப்படிடா இருக்க.." என்று பெயர் சொல்லி அழைத்தபடியே கூடத்துக்குள் வந்து தோளைத் தொட்டு இறுக்கிக் கொள்ளும் அன்பின் நெருக்கமான கவிதைகள் இத் தொகுப்பில் விளைந்துள்ளன.
வறுத்த நிலக்கடலையென்றால் அவருக்கு அதி பிரியம். நிறைய வாங்கி ஒரு டின்னில் அடைத்து வைத்துக் கொறித்துக் கொண்டிருப்பார்.
முன் வீட்டில் புறாக்களின் கூடொன்றிருக்கிறது; சிறு மழைத் தூறலுக்கு அவை தெற்கே வட்டமிட்டு வந்திறங்கும் நிலக் காட்சியை ஒரு நாள் என்னிடம் பகிர்ந்திருக்கிறார்.
கவிதைக்குள் மறையும் மழைக் காடுகள்
--------------------------------------------------------------------------
என் கவிதைகளுக்குள்
மழைக்காடுகள் புதைந்துள்ளன
தீப்பிழம்புகள் கொண்டவானம்
காட்டின் இருளில் புதைந்துள்ளது
தகிப்பும் மழையும்
ஆர்ப்பரிக்கின்ற காடு முழுக்க
மந்திரித்து விடப்பட்ட விலங்குகள்
உள் அழைக்கின்ற கண்களால்
பின்வாங்குகின்றன
மழையும் சுவையும்
காற்றின் ஆழ்ந்த பசியும்
சதுப்பு நிலத்தில் உலவுகின்றன
அங்கே
மேயும் கபில நிறக் குதிரை
தொழுவம் அடையும் நேரம்
மஞ்சள் அலறிப் பூக்களை
மடியில் சேர்த்தெடுப்பவள்
எஞ்சிய உன் கண் சிமிட்டலையும்
எடுத்துப்போகிறாள்
வெதுவெதுப்பான மழைக் காடாக உருக்கொள்கின்றன
என் கவிதைகள்
மழை சிணுசிணுக்கும்
மென்மையான இரவின் கீழே
உன்னைப் புதைத்துக்கொள்
அனாரின் கனவில் வந்து போகின்ற உருவங்களில் கருத்த நெடிய மனிதர்கள், கபில நிறக் குதிரைகள், ஆளரவமற்று ஒளியிழந்த வீதிகள், திரைச் சீலைகள் என என் வீட்டுக்கு வரும்போது ஒரு கதையில் சொல்லியிருந்தது இப்போது ஞாபகம் வருகிறது.
எப்போதாவது பொழுதடைந்த வேளையில்தான் அனாரைப் பார்த்துப் பேச முடியும், ஏனைய நேரங்களில் மூச்சிழுத்தபடியே அவசர அவசரமாகப் பேசி முடிப்பார், ஏனென்று கேட்டதற்கு வீட்டில் நிறையப்பேர் சகோதரங்கள் குழுமி விடுவதால் அவர்களுக்கு ஆக்கிக் காய்ச்சிப் போடும் வேலைகளுடன் நானும் மல்லுக்கட்டுகிறேன் என்பார். சில கவிதைகளில் இந்தக் காட்சிப் படிமங்களைத் தரிசிக்கலாம்.
என் முகத்தைப் பார்த்ததுமே பெருமூச்சோடு அவள் கண்கள் கலங்கிவிடும் காலங்களையும் நான் எதிர் கொண்டிருக்கிறேன். என்ன கவிதை எழுதினாலும், அவளும் பெண்தானே!
இரண்டு பேரும் இலக்கில்லாமல் காலாற நடந்து, எங்கெங்கோ திரிந்து விட்டு, கடைசியில் குளத்தங்கரையில் வந்து நிற்பதுபோல் கவலைகளைப் பகிர்வதும் மரங்களின் நிழல்கள் ஒரு நீர்ப் பரப்பில் தெளிவாக விழுவதும் காற்றின் சுழற்சியால் ஓர் இலை விழுந்து அந்த நிர்மூலத்தில் வட்டங்கள் நகர்வதும் இப்போதும் இருந்திருந்து நிகழ்வதுதான்.
பெண்
-----------
மழைக்கு முன்பே
காற்றுக் குளிர்ந்துவிடும்போது
இலைப் பச்சையாக மாறி விடுகிறேன்
அடி நிலத்தின் கீழ்
திரவியமாய் விளைகிறேன்
பித்தமேற்றும்
ஆர்ப்பரிக்கும் கடலின்
உப்பை விழுங்கிய ஆகாயம்
கனவும் விஷமுமான
மந்திரம் நான்
காலங்களின் மீது
அறைகூவல் விடுக்கும்
சொல் ஒன்றின்
இடதும் வலதுமாவேன்
என்னை
எங்கு ஒழித்து வைக்க முடியும்.
மற்றுமொரு முக்கிய போக்காக வெளிப்பட்ட அவரின் அகவெளிக் கவிதைகள் பிறருக்குக் கட்டுப்படாத மாறுபட்ட படைப்புலகமாக தென்படுகின்றன.
கடல், வண்ணத்துப் பூச்சி, குளம், பறவை, பூ, சிலந்தி, செடி கொடிகள், நட்சத்திரங்கள், எனப் பிரபஞ்சம் சார்ந்த படைப்புகளில் பிரதியாக்கம் செய்கின்றன.
பெண்களுக்கு ஜீவனுண்டு, மனம் உண்டு அவர்கள் செத்த மந்திரங்களல்லர், உயிருள்ள செடி கொடிகளைப் போலவுமல்லர் ஆத்மாவின் எல்லா ஓலங்களும் நிறைந்தவர்கள்தான்; அவர்களின் வலியை வேதனையை இப்படியும் சொல்லலாம் என்பதற்கு அனாரின் முதிர்ந்த கவிதைத் தொகுப்பாக "ஜின்னின் இரு தோகை"யை அவதானித்தேன்.