Friday, 6 February 2015


சொர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே பொழிகின்ற பனி : 

-----------------------------------------------------------------------------------------

- அனார்


நவீன உலக இலக்கியத்தின் பல்வகைமையான எழுத்துக்கள் இன்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. சமகாலத்தின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான ஜி.குப்புசாமி அவர்கள் தொடர்ச்சியாக உலக எழுத்தாளர்களின் நூல்களை மொழிபெயர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் ஓரான்பாமூக் அவர்களுடைய “என் பெயர் சிவப்பு, அதற்கடுத்து “பனி“ என்பன, ஜி.குப்புசாமி அவர்களின் கச்சிதமான மொழிபெயர்ப்பில் மிக நேர்த்தியாக காலச்சுவடு வெளியிட்டுள்ளது. அவ்வகையில் பனி மொழிபெயர்ப்பு, அனுபவ ஊற்றுக்களைத் திறந்துவிடுகிறது.

// அந்தக் கடவுள் நம்மிடையே இல்லை. அவர் வெளியே, வெற்றான இரவை, இருட்டில், நாதியற்ற இழிசினரின் இதயத்திற்குள் பெய்யும் பனியில் இருக்கிறார்.

கடவுளை நீயாகவே கண்டடையப் போகிறாய் என்றால், தாராளமாகச் செல். இருட்டுக்குள் நடந்து போ, பனியில் நனை, கடவுளின் அன்பை உனக்குள் நிரப்பிக்கொள்ள பனியை உபயோகப்படுத்திக்கொள் //

ஓரான்பாமூக் எழுதிய ஏழாவது நாவலும், முதலாவது அரசியல் நாவலுமான பனி துருக்கியில் இடம்பெற்ற தீவிர மாதச்சார்பானவர்களுக்கும், பொது மக்களுக்கும், மதச்சார்பின்மை அரசியல் குழுக்களுக்குமிடையேயான தொடர் மோதல்களை பேசுகின்றது. நவீன மதசார்பற்ற அரசின் சட்டமானது, துருக்கியில் பெண்கள் தலைமுடியை மூடும் அவசியமில்லை என கூறுகின்றது. பலவிதங்களில் அதிகாரத்தின் மூலம் நிர்ப்பந்திக்கின்றது. கல்லூரிகளிலும், பாடசாலைகளிலும் முக்காடு அணிந்து வரும் பெண்களை அரச நிர்வாகத்தினர் கல்வியைத் தொடர முடியாமல் நிறுத்திவிடுகின்றனர். பாமூக் தன்னுடைய நாவல்களில் துருக்கியின் மறைக்கபட்ட வரலாறு அதாவது ஆர்மேனியர்களை துருக்கிய நாடு கொன்றது பற்றி பேசியும் எழுதியும் வருகின்றவர். பனியை வாசிப்பதற்கு துருக்கியின் வரலாற்றுப்பின்புலத்தை தெரிந்துகொண்டிருப்பது கூடிய புரிதலைத் தரும்.

பெண்களை சமூதாயம் வைத்திருக்கும் இடத்திற்கும், சமூதாயத்தில் அவள் இருக்க விரும்புகின்ற இடத்திற்குமான இடைவெளி, இருண்மைகள் அபாயகரமானது. ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு இந்த அபாயம் தருகின்ற அச்சம் பல்வேறு தளங்களையும் புதிர் அடுக்குகளையும் கொண்டது. அவளுடைய மதம், தலைமுடியில் தொடங்கி கால்விரல்களில் முடிகின்றது. பனி நாவலில் துருக்கிய அரசாங்கம், பெண்கள் முக்காடு அணிவதைத் தடை செய்வதிலிருந்து பிரச்சினைகளும், பிளவுகளும், எதிர்ப்புகளும் எழுகின்றன. அரசியல் கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தை மூர்க்கமாக எதிர்க்கின்றனர். அதன் விளைவாக உள்நாட்டுக் கலவரங்கள், திட்டமிடப்பட்ட கொலைகள் நிகழ்கின்றன. மிக முக்கியமாக முக்காடு அணியும், தமது விருப்பம் உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டு அதிர்ச்சியுறும் பெண்கள், தற்காப்பு ஆயுதமாக தற்கொலையை கையாள்கின்றனர்.

நாவலின் கதையின் மையம், தீராததும் தீர்க்க முடியாததுமான மன அமைப்பிற்கும், மத அமைப்புகளுக்கும் நடுவே தொடரும் முரண்பாட்டைப் பேசுகின்றது.

மதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள விடயத்தை (முக்காட்டை) பேணுகின்ற பெண்கள், அதை தொடரமுடியாத நெருக்கடியான சூழலில், மதத்தினால் தடுக்கப்பட்ட ஒன்றை (தற்கொலையை) செய்ய முன்வருகின்றார்கள்.

// ஒரு பெண்ணுக்கு அவள் எதற்காகத் தற்கொலை செய்து கொள்கிறாள் என்பது துல்லியமாகத் தெரிந்தால், அவளுக்கான காரணங்களை அவளால் வெளிப்படையாகச் சொல்ல முடிந்தால், அவள் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய அவசியமே இருக்காது //. நாவலில் ஒரு உரையாடலில் இடம்பெறும் கடிஃபேவின் கூற்று இது.

உயிரற்றுப்போவது, இறப்பினூடாக நிகழ்வது மாத்திரமல்ல. வாழும்போதே உயிரில்லாமல், உறைவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள, அதாவது வாழ்ந்தபடியே இறப்பதற்கான பல வாய்ப்புகளை சக மனிதர்களும், சமூகமும் வழங்குவார்கள் என்று ஒரு பெண் விரைவில் தெரிந்துகொண்டு விடுகிறாள். அவள் எந்த உடையை அணிவது, எப்படி அணிவது, எதை அணியக்கூடாது என்பதெல்லாம் அதிகாரம் தீர்மானிக்கின்றது. சுயகௌரவத்தை நிலை நிறுத்துவதற்காக இளம்பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மதவாதிகளுக்கும் மத உரிமையை பறித்தெடுப்பவர்களுக்கும் அந்தப் பெண்களின் மரணத்தின் மொழி புரிவதில்லை. வேறு பொய்க்காரணங்களைப் புனைந்து பெண்களின் உயிர்த்தியாகத்தின் முழு அர்த்தத்தையும் சிதைக்கின்றனர். எல்லாமே தவறாகவும் எதுவுமே தவறில்லை எனக் கருதுவோர்க்கிடையில், கார்ஸ் நகரின் மனித உயிர்கள் ஒன்றுமற்றுப்போகின்றது.

தனி நபர்களின் வாழ்க்கையில் இறை நம்பிக்கை மீதான பற்றுதலும், அரசின் நிர்ப்பந்தங்களின் மீதான அச்சமும், பெற்றோர்களின் கையறு நிலையும் பாமூக்கின் மொழியில் வாசிக்கையில் துருக்கியை நம்முடைய அனுபவங்களுடன், அரசியல் நெருக்கடிகளுடன், முஸ்லீம் அடையாள பின்புலத்துடன் இணைத்துப்பார்க்க முடிகின்றது. பனியால் மூடுண்ட கார்ஸ் நகரம் மர்மங்களும் மரணங்களும் சூழ்ந்த நிலமாகியிருக்கிறது.

அரசியல் காரணங்களுக்காக நாடுகடத்தப்பட்டு, பனிரெண்டு வருடங்கள் ஜெர்மனியில் கழித்த கா என்னும் கவிஞன், முக்கியமான இரு நோக்கங்களுக்காகவும் வேறுசில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் கார்ஸ் நகரை நோக்கி வருகிறான். அது ஒரு பனிப்பொழிவின் காலமாகவிருக்கிறது. தற்கொலை செய்து கொள்ளும் கார்ஸ் நகரின் இளம் பெண்களைப்பற்றி ஆராய்ந்து எழுதுவதற்காக காவின் வருகை அமைந்துள்ளது.

காவின் நண்பன் இந்நாவலில், அந்தக் கவிஞனின் ஆத்மாவைப்போல தொடர்ந்து வருகிறான். காவின் கவிதை நூலை பல இடங்களில் தேடித்திரிகிறான். ஆனால் அந்நூல் அவனுக்கு கிடைப்பதில்லை. சில கடிதங்களும் வேறு குறிப்புகளும் காவின் நண்பனான ஓரானிடம் இருக்கின்றது. அவற்றில் ஒரு குறிப்பில் கா எழுதுகிறான் : // அடிபட்டிருக்கும் ஒரு விலங்கைப்போலவே என் வாழ்க்கை பூராவும் தொலைந்து போனவனாகவும், தனியானவனாகவுமே உணர்ந்து வந்திருக்கிறேன் //. இதுபோல், நாவலின் எந்தக்கட்டத்திலும் வெளிப்பட்டிருக்காத காவின் கவிதைகள் அரூபமான மனச்சித்திரங்களை உருவாக்குகின்றன.

நாவலாசிரியரின் நீதி, உணர்வுமொழி, கருணை எனப் பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. உருகாத பனிச்சிற்பம்போல கார்ஸ் நகரின் இருளில் செதுக்கப்பட்டிருக்கிறான் கா. அவன் எழுதிய கவிதைகள், அவனுடைய இபெக் மீதான காதல் உருவாக்கும் குருட்டுத்தனமான சந்தோசம், ஸ்திரமற்ற பற்றுதல், வெகுளித்தன்மை மற்றும் பொய்நம்பிக்கைள், அதீத கனவுகளுக்கான முக்கியத்துவம், மேலும் கவிதை எழுதக்கூடியவர்களிடம் காணப்படும் பைத்தியகாரத்தனமான காதலும் சேர்ந்து காவிடம் காணப்படுகிறது.

தந்தை சாகோதரியுடன் வசித்தபோதிலும், இபெக்கின் வாழ்வின் திசைகள் அவளை விரக்தியை நோக்கி கொண்டு செல்கின்றது. முற்போக்கான நடைமுறை வெளிப்பாடுகளில் தெரியும் துணிச்சல், உறுதி அனேக விடயங்களில் அகம் சார்ந்து பரிதாபத்திற்குரியதாகிவிடுகிறது. முக்காட்டை விலக்குவதும் சுய விருப்பத்தின்படி ஆடை அணிவதும், தனது துணையை தேர்ந்தெடுப்பது அல்லது விலக்கிக்கொள்வது என்பதற்கப்பால் அப்பெண் தனது வலிமையை பிரயோகிக்கவில்லை. இபெக் கார்ஸ் நகரின் பெண்மட்டுமல்ல அரசியல் சட்டதிட்டங்களால் அமுக்கப்பட்ட நிலத்தில் அகப்பட்டுள்ள உலகின் பொதுவான பெண்ணுமாகும். ஆனால் இபெக்கின் தங்கையான கடிஃபே புரட்சியாளராய் மூர்க்கமாக செயற்படக்கூடியவளாகவும் இருக்கிறாள். அவளுடைய தெரிவுகளை கண்டடைய உக்கிரமான குண இயல்புகள் துணை புரிகின்றன. பனி நாவலின் சாகச நாயகி கடிஃபே தனது கொள்கையின் சக்தியூற்றை ஆயுதமாகப் பிரயோகித்துப்பார்ப்பவள். இபெக் காதலெனும் ஆயுதத்தால் தன்னை திரும்பத் திரும்ப காயப்படுத்திக் கொள்கிறாள். நெருக்கடி மிக்க நிலத்தில் ஆனந்தமும் தப்பித்தலுமாக தற்காலிகமான மாற்றீடாய் காதல் இருக்கின்றது. மிகப்பெரும் தீர்க்க முடியா முரண்பாடுகளைக் கொண்ட வாழ்க்கையைப்போல சகோதரிகள் இருவரும் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கிடையே சிக்கிக் கொள்கிறார்கள். கடிஃபே நாவலின் இறுதியில் வரும் நாடகத்தில் பங்குபெறும் விதமும் அங்கே அவள் வைக்கும் வாதங்களும் மனச்சாட்சியை உலுக்கக்கூடியவை. ஓரிடத்தில் ஆண்களைப்பார்த்து அவள் கூறுவது : // உங்களை அச்சுறுத்துவது எனது அறிவுத்திறனல்ல. நான் சுய சிந்தனைகொண்ட பெண்ணாக இருப்பதால்தான் என்னைக் கண்டு பயப்படுகிறீர்கள்.... ஏனென்றால், நம்மூரில் ஆண்கள், பெண்களின் அறிவைக்கண்டு பயப்படுவதில்லை, சுதந்திரத்தைக் கண்டுதான் பயப்படுகிறார்கள்.... //.

பிற பெண்கள் பனி நாவலில், பனிப்புகார் என தெளிவற்ற உருவங்களாக தெரிகின்றனர். குளிரில் விறைத்து நடுங்கும் அவர்களுடைய குரல், நாவல் முழுக்க பிசாசைப்போல் அலைகிறது. முக்காடுகளால் மாத்திரமல்ல பனியாலும் அவர்கள் மறைக்கபட்டிருக்கின்றார்கள்.

நீலம் எனும் எதிர் நிலைப்பாத்திரமானது, சமூகத்தில் தன்னை முன்னிறுத்தும் விடயங்கள், மதக்கருத்துக்கள் ஒரு முகமாகவும், இபெக், கடிஃபே எனும் பெண்களுக்கு ஆணாதிக்க தன்மையும், துரோகமும் வெளிப்டும்முகமாகவும் அதே சமயம் இளைஞர்களுக்கு ஆதர்சமான தலைவனாகவும், தீவிரமாக காதலிக்கப்படுகின்றவனாகவும், சதிகளோடும், கொலைகளோடும் அரசிற்கு அச்சுறுத்தல்விடுக்கும் சக்தியாகவும் இருக்கிறான். இறுதியில் நீலம் சுடப்பட்டு மரணித்துவிடுகிறான். பெண்களின் தற்கொலைபற்றி அறிந்துகொள்ளவந்த காவும், சுடப்பட்டு மரணித்துவிடுகிறான். பெண்கள் தற்கொலை செய்து மரணிக்கின்றார்கள். தேனீர்க்கடையில் பேராசிரியர் கொலை செய்யப்படுகிறார். கடி.ஃபேயைக் காதலிக்கும் நசீம் கொல்லப்படுகிறான். கடிஃபே ஒரு கொலை செய்கிறாள். இவ்விதமான மரணங்கள் ஒரு தீர்வுக்காக நிகழ்வதில்லை. அதன் அர்த்தங்களும் வேறுவேறானவை. நாவல் மிகுந்த அந்தரங்கமான பார்வையோடு, இந்த மனிதப்பாத்திரங்களை நடமாட வைக்கின்றது. அந்த அரசியல் கொந்தளிப்பினூடே, குருதியோட்டத்தை உறையச் செய்யும் பனியின் குளிர்மை, நாவலின் நெடுகிலும் நிறைந்து காணப்படுகிறது. இறுதியான ஒரு விடையைக் கொண்டிராத கேள்விக்குறிகளாக பாமூக் மனிதப்பாத்திரங்களை நாவலில் காண்பிக்கிறார்.

பனி எனும் படிமம், கறுப்பு நாயின் உருவகம், காவினால் எழுதப்படும் கவிதைகள் என நாவலுக்குள் வெவ்வேறு உருவ நிழல்கள் அசைகின்றன. வெற்றிக்கும் தோல்விக்கும், சரிக்கும் தவறுக்குமான, வாழ்விற்கும் மரணத்திற்குமான இரு நிலைகளிடையே பனி தூபம்போல எங்கும் சூழ்கிறது. மனச்சாடச்சியின் வாதங்களாக, ஏக்கமாக, அச்சமாக, பின்னப்பட்டுள்ள பலரை பனி ஊடுருவிப் பிழிகிறது. அடிமைத்தனத்தின் நெருப்பிற்குள்ளே ஒளிரும் ஆணியென பெண்கள் தகிக்கின்றனர். பண்பாடுகள், இறை நம்பிக்கைகள், பெண் கல்வி, திருமணம், வாழ்க்கை, எதிர்காலம் அனைத்தையும் எப்படி சர்வதிகாரத்தின் கை நசுக்குகின்றது. மேலும் மனிதாபிமானமற்ற நாட்களை, அவர்கள் எதிர்கொள்வதன் வலி எத்தகையது என நாவல் கேள்விகள் எழுப்புகின்றது. சமூக அமைப்புகளும், தீவிர சிந்தனை கொண்டவர்களும் முன் தீர்மானங்களின்படி, பெண்களை வற்புறுத்தி அதிகாரம் செய்கிறார்கள். நிர்க்கதியும், கையறு நிலையும், அரசியலின் உளவியலையும், உளவியலின் அரசியலையும் தெளிவாக பனி முன் வைக்கின்றது. நிராசைகளும் துரோகமும் சூழ்ந்த அறையில் இபெக் இறுதியாக நின்றபடி பார்க்கும் ஜன்னலால், தன்னுடைய காதலன் நீலத்தை தன் மூச்சுக்குள் நிரப்பியவாறு கா மீதான நம்பிக்கையின் கடைசி நூலிழையை தவறவிடுகிறாள்.

ஓரான்பாமூக் அவர்களுடைய ஆளுமை சார்ந்தும், பனி நாவலின் கலைத் தன்மை சார்ந்தும், மனிதத்துவத்தின் மீதான நீதி, பிரயாசை, கேள்விகள், நுண்ணுணர்வு சார்ந்த அவதானிப்பு என பல விடயங்கள் உள்ளன. ஆழமான விருப்பங்கள், மனங்களின் கூக்குரல் கண்ணீரின் மொழியால் பல்வேறு உயிரூட்டமுள்ள நிறங்களால் வரையப்பட்டிருக்கின்றது. தெளிவான ஆனந்த நிலையை கொடுக்கக் கூடியவையாக அதன் யதார்த்தம் அமைந்திருக்கிறது.

எழுத்தாளர்கள் விஞ்ஞானியைப்போல் ஏதாவதொரு கண்டுபிடிப்பை விட்டுச்செல்வதில்லை. மாறாக அவர்கள் எழுதிய புத்தகங்களையே விட்டுச் செல்கின்றார்கள். பாமூக்கின் நாவலான பனிக்குள் பல கண்டுபிடிப்புக்களைக் காணமுடியும், தேடலுள்ள கூர்மையான வாசகனால்.

--------------------------------------------------------------------------------------------------

நன்றி : காலச்சுவடு, பெப்ரவரி 2015 


Friday, 30 January 2015



கனவுப்பெண் - கவிஞர் அனார் கவிதைகளை முன்வைத்து 

--------------------------------------------------------------------------------------------------

- நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்)



ஈழத் தமிழின் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார்" - கவிஞர் சேரன்

"தன்னுடைய இருப்புக்கு எதிரான நிலவரங்களை விமர்சிக்கிற அனாரின் கவிதைகள் அந்த இருப்பை உன்னதமானதாகவே உணர்த்துகின்றன" - கவிஞர் சுகுமாரன்

கடந்த ஜனவரியில் இந்தியா வந்திருந்தபோது கவிஞர்கள் சிலர் தங்கள் தொகுப்புகளைக் கொடுத்தார்கள், வேறு சிலர் தங்கள் நாவல்களைக் கொடுத்தார்கள். இரு தரப்பு நண்பர்களுமே தங்கள் படைப்புகளை கொடுத்தபோது இவற்றைக்குறித்து எழுதவேண்டும் என்று கேட்கவில்லை, அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை. படைப்புகளை அளித்தவர்களில் சிலர் தபிழ்ப் படைப்புலகில் நன்கறியப்பட்டவர்கள்; மற்றவர்களும் தமது படைப்புகள் ஊடாக தொடர்ந்து கவனத்தைப் பெற்றுவருபவர்கள். புனைவுகளைக் குறித்து எனது கருத்துக்களை முன்வைப்பதில் சிக்கல்கள் இல்லை. கவிதைகளைக் குறித்து எழுதும்போது தயக்கம் வருகிறது. 'எனக்குத் தொழில் கவிதை' அல்ல. ஒரு காட்சியைக் கண்டு வியக்கவும், பிரமிக்கவும்; வாடவும், வருந்தவும்; அநீதிகண்டு துடிக்கவும், ஆவேசம்கொள்ளவும் செய்கிறோமெனில் நமக்குள்ளும் கவிதை இருக்கிறது. இக்குணங்கள் ஒரு கவிதையை ரசிப்பதற்கான முதற்படி. ஆனால் புறத்திலும் கவிஞர்களாக வாழ்கிறவர்கள் தங்கள் பரவசத்தை, உணர்ச்சியை வார்த்தைகளில் வடிக்கத் தெரிந்தவர்கள் தமது கண நேர உணர்ச்சி அனுபங்களை விசும்பலை, செறிவான பொருத்தமான வார்த்தைகொண்டு நிரந்தரப்படுத்த முடிந்தவர்கள். காணும்தோறும் மகிழ்ச்சியைத் தருகிற படச்சுருளைப் போல, அவர்கள் சமைக்கும் படிமங்கள் கவிதைகளை வாசிக்கும் தோறும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. எனினும் ஒரு கவிதையைப் புரிந்துகொள்ளவும், இதயத்தில் வாங்கிக்கொள்ளவும், உணர்வுதான் முக்கியம். இடைத்தரகனான அறிவையும், அறிவின் மொழிகளையும் (உவமை, உருவகம், படிமம், குறியீடு, தொன்மம் ஆகியவற்றை) மறந்து புலன்களால் அதாவது தொட்டும், முகர்ந்தும், சுவைத்தும் கவிதைகளை வாசிப்பது போதுமானது.

'பரிசில் வேண்டும் பாடாண் திணை' கவிஞர்கள், கடந்த காலத்தைப்போலவே இன்றும் இருக்கவே செய்கிறார்கள். 'காதல்' சொல்ல கவிதையெழுத வந்து, பிறகு காணாமற்போகிற காளான் கவிஞர்கள் வருடத்திற்கு ஆயிரம் பேராவது தேறுவார்கள். இப் பெருங்கூட்டத்திடை, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில குரல்கள் தனித்து ஒலிக்கின்றன. அக்குரல்கள் நம்மில் சிலரிடம் ஊமைக்குரலாக ஒலிப்பவைதாம். நம்மிடம் ஊமைக்குரலாக ஒலித்த குரல், தொழில்முறை கவிஞர்களிடம் கலைவடிவம் பெறுகிறது. இந்த உலகம் முரண்படுவோர்களால் கண்ட முன்னேற்றம். சமகால கவிஞர்கள் மண்ணில் காலூன்றி நிற்பவர்கள். ''கேழ்வரகில் நெய் வடிகிறது" என்றெல்லாம் எழுதி ஏமாற்ற முடியாது. என்பதை நன்கறிந்தவர்கள். இதற்கு முந்தைய பத்தியில் கூறியிருப்பதுபோல அறிவைக்குறைத்துக்கொண்டு உணர்ச்சிகளுக்கு சற்று கூடுதலாக இடமளிக்கும் இன்றைய கவிதைகளில் 'தனிமனிதன், சமூகம்' இரண்டும் மையப்பொருட்கள். அதிலும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளில் கட்டமைக்கபட்ட நமது சமூகத்தில், பெண்களுக்குச் சொல்ல நிறையவே இருக்கின்றன. மதங்களும், புராணங்களும் இதிகாசங்களும் -சங்கக் கவிதைகள் உட்பட தீட்டியுள்ள பெண்சித்திரங்கள் அவர்களுக்கு ஆதரவானவை அல்ல. அன்பானவள், அடக்கமானவள், குடும்பப்பெண், மகாலட்சுமி ( கவனியுங்கள் 'சரஸ்வதி' என்ற சொல்லை சாமர்த்தியமாக தவிர்த்திருக்கிறோம்) போன்ற கவர்பொருளுடனான தூண்டில்கள் நம்மிடம் அதிகம். அவளை மஞ்சள் குங்குமமிட்ட 'தொழுவ லட்சுமி'யாய் வைத்திருப்பதில் நமக்குப் பெருமிதம். வீட்டுப் பசுவென்றாலும் கொம்பைத் தற்காப்புக்கேனும் பயன்படுத்தாமலிருந்தால் எப்படி? தங்கள் கோபத்தைக் கைப்பிடி உப்பில் காட்டி கணவனைத் தண்டிக்கும் 'குடும்பப் பெண்'களின் தந்திரமும், கையெறி குண்டாக கவிதைகளைப் பயன்படுத்தும் படைப்பிலக்கிய பெண்களின் தார்மீக கோபமும் அவ்வகை கொம்புகள்தாம்.

அனாரின் கவிதை மொழி:

"பெருங்கடல் போடுகிறேன், உடல் பச்சை வானம், "எனக்குக் கவிதை முகம்" என்று மூன்று கவிதைத் தொகுப்புகளை கவிஞர் எனக்களித்திருந்தார். அனார் ஒருகவிஞர் என்பதும், இருபது ஆண்டுகால ஈழ யுத்ததின் சாட்சியாக இருந்த ஓர் இஸ்லாமியத் தமிழ் பெண் என்பதும், அனாருடைய கவிதைகள் பற்றிய சிற்சில அபிப்ராயங்களை உருவாக்கியிருந்தன. எதிர்பார்ப்பிற்கு மாறாக சமகால ஈழ கவிஞர்களிடமிருந்து மாறுட்ட பாடுபொருட்களை அவர் கவிதைகளில் காண முடிந்தது. அனாரின் கவிதைமொழிக்குள் பிரவேசித்ததும் எனக்குப் பாரதியாரின் "சோதிமிக்க நவ கவிதை' என்ற வரிதான் நினைவுக்கு வந்தது. உணர்வுகளை மீ எதார்த்த நிலையில் இத்தனைச் சுதந்திரமாக எழுத்துவடிவில் கொண்டுவர முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.

நவீன கவிதையின் நெளிவு சுளிவுகளையும், கட்டுமானங்களையும் வண்ணங்களையும் புரிந்துகொண்ட பின்நவீனத்துவ கவிஞர். சிற்சில கவிதைகளில் அவை விழலுக்கு இறைத்த நீராகின்றன என்பதையும் இங்கே சுட்டத்தான் வேண்டும். கவிதைத் தொகுதிகள் முழுவதும் கவிஞர் சுகுமாரன் கூறுவதைப் போல, " படிமச் செறிவான கவிதை மொழியைப் பயன்படுத்துகிறார்". கற்பனையின் புதுமையும், சொற்களில் செழுமையும் அவரது கூடுதல் பலம்: "நிலை கொள்ளாது ஆடும்/ பொன் மிளிர்வுத் தூவல்களில் / ரயில் பட்டுப்புழுவைபோல நீளுகிறது." (போகும் ரயில்). "காரிருளில் பாய்ந்தோடும்/ கறுப்புக் குதிரையின் கண்களில்/ இறுகி மின்னுகின்றது என்னுடைய கண்ணீர்" ( கருமை). "இலைச்சுருட்டிச் செவ்வெறும்புகள்/ஆளும் மரமெங்கும்/ இனிப்பாய்க் கசியும்/ மரப்பிசின் ஒழுகி உறைந்து/ மணிச்சிற்பங்கள்/ காட்டிய வரிசைகள்" ( அரூபன்). இவற்றை வெறுமனே படிமங்களால் ஆன கவிதைகள், எனக் கடக்க மனம் இடம் கொடுப்பதில்லை. 'பெருங்கடல் போடுகிறேன்' தொகுப்பில் "சந்திர கிரகணத்தின் ஸர்ப்பம்" கவிதையில் இடம் பெறும் இவ்வரிகளை 'ஒரு சோறு' பதமாக எடுத்துக்கொண்டேன்:

".....நினைவுப் பந்தலின் கீழ் 
காட்டு மல்லிகையின் வாசனை
ஸர்பத்தை வரவழைக்கிறது
மேனி மினுக்கத்தில்
தெளிவின் மென்மையில் 
தாழம்பூ மண்டபம் விரிகிறது."

அவருடைய கவித்துவத்தை அளக்க கீழ்க்கண்ட வரிகளும் உதவும்:

"தத்திச்செல்லும் பிள்ளையின் பாதச்சுவடுகள்
நிலவு பொறுக்கியுண்ணும் 
மிக இனிக்கின்ற உணவோ" 
..................................
...................................

" என் பசுங்குருத்துச் சூரியன்
உதிக்க அதிகாலை இருள் நீங்கும்
உறங்க பொன்னந்தி பாய்விரிக்கும்" (நிலாக் குட்டி)


கனவுப்பெண்:

அனார் கவிதைகளின் பெண்குரல் கனவுகளுக்கு நெருக்கமானது "கனவுகள் காண ஏங்கும் கனவு நான்" (சுலைஹா); "கனவுகளின் பாளைகளில் சேரும் 'கள்' என பொங்கும் இவ்விரவை நீ கொஞ்சம் நான் கொஞ்சம் பிடிக்கலாம் நிறையும் வரை" (குடுவையில் நிறையும் இரவு); "படியும் கனவுப் பனி வெள்ளைக்கரு/ ஒளிரும் மென்தகிப்பு மஞ்சள் கரு என/ உருமாறியது மச்சம்" (மண்புழுவின் கண்); "இரவுத் தேன் கூடு நிரம்பியிருக்கிறது / கனவில் இருந்தபடி/ முதலாவது நீலத்தேனைப் பருகிடும் தருணம்/ மலை நகரந்து போகிறது. ( நீலத்தேன்); கனவின் துவாரங்கள் வழி/ சொட்டித் தேங்கிய/ காமக் கடல் அலைகள் பாய்கின்றது/ சிலந்தி வயிற்றினுள்" (பெண் சிலந்திப்பூச்சியின் வீடு); "கனவின் கத்திகள் பாய்ந்த கவிதையை/ ருசிக்கின்றோம் மிச்சம் வைக்காமல்" (குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்); " வாழ்வின் கனாக்காலம் முழுவதும்/ பருவங்கள் மாறி மாறி பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் (வண்னத்துப் பூச்சியின் கனாக்காலக் கவிதை); " முயலின் பளபளக்கும் கண்களாய்/ மிரட்சியுடன்/ உன்னை வெறித்தபடி இருக்கும் என் கனவு"(வெறித்தபடி இருக்கும் என்கனவு).

தனிமைப்படுத்தபட்ட பெண்ணின் ஏக்கமும் கனவுகளும் அனார் கவிதைகளில் மையப்பொருளாக இருக்கின்றன. திரும்பத் திரும்பத் தமது இருப்பை முன்னிறுத்தியும் சோர்வுறாத பெண் குரல் எல்லா கவிதைகளிலும் கேட்கிறது. காதலும் தேடலுமாக கழியும் பொழுது. அலைக்கழியும் வாழ்க்கை. மதத்தின் பேராலும் மரபுகள் பேராலும் பெண்களை விலங்கிட்டு இருட்டறைக்குள் வைத்திருக்கும் குருட்டு சமூகத்தைச் சேர்ந்த பெண் வெளிச்சத்திற்கு ஏங்குவது இயல்பு. கதவுகள் திறக்குமென்ற எதிர்பார்ப்பில்லை. சன்னல்கள் திறப்பதே போதுமானதுதான். இறை தூதரைகாதலித்த சுலைஹாவாக தம்மை கற்பிதம்செய்து மார்தட்டும் அப்பெண்ணுக்குள் "கடந்தகால சாபங்களை மீளவும் எதிர்கால சவால்களை வெல்லவும்" கனவுகள் இருக்கின்றன. ஆனால் நிஜத்தில் அவள் வாழ்க்கை வேறுவகையாக விதிக்கப்பட்டிருக்கிறது 'போகும் இரயில்' கவிதையும், 'கருமை' என்ற கவிதையும் ஓர் அப்பாவி பெண்ணின் கனவுக் குரலாக பொருமுகிறது. பட்டுப்புழுவைபோல என்ற உவமைக்கு ஆளாகும் இரயில், கவிதை முடிவில் ராட்த்சத பூரானென்கிற உவமை ஆகுபெயராக உருமாறி தரும் சோகம் கொடியது. கற்பனையில் கூட பெண்ணுக்கு வெளிச்சம் எட்டிவிடக்கூடாதென்பதுபோல அவளது நிஜம் குறுக்கிட்டு அக்கனவுகளைக் கலைத்துவிடுகிறது. கவிஞர் மொழியில் சொல்வதெனில் " கனவுக்குள்ளே முழு ஏமாற்றத்துடனும் முட்டி மோதுகிறேன்"(சுவர் ஓவியம்). இந்தப் பரிதாபக்குரலுக்கு, காலம் பெருமிதத்தைப் பூட்டுகிற தருணமும் வாய்க்கிறது.

"பெண் உடல் பூண்ட இயற்கை நான்
காற்றில் வசிப்பவன் 
காலத்தைத் தோன்றச்செய்பவன்...
இன்றென்னைத் தீண்டலாம்" (குறிஞ்சியின் தலைவி -உடல் பச்சை வானம்)

என்ற வரிகளைப் படிக்கிறபோது அக்குரலை ஒரு பெண்ணியக் குரலாகத்தான் பார்க்க முடிந்தது. பெண்ணியம் என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானதல்ல. 'ஆண்' பாலின முத்திரையொன்றுபோதும் தாம் செலவாணியாக என நினைக்கும் அற்ப புத்திகொண்ட ஆணாதிக்கத்திற்கு எதிரானது. அனார் கவிதைகளில் பெண்குரல் பொலபொலவென்று கண்ணீர்விடுவதில்லை, மூக்கைச்சிந்துவதில்லை. காதல் வயப்படும்போது கூட "கத்திகளால் கைகளையோ கனிகளையோ வெட்டிக்கொள்ளாதவள், நான் யூசுப்பைக் காதலிப்பவள், சுலைஹா", என முழங்கக்கூடிய தைரியம் பெண்ணியத்திற்கு உரியது.

ஈழ யுத்தம் குறித்து அனார்:

அனார் தமது கவிதைள் ( கைவசம் இருக்கும் தொகுப்புகளின் அடிப்படையில்) ஈழ யுத்தத்தைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. சமகால ஈழக்கவிதைகளில் ஈழப்போரும் அதன் விளைவுகளும் அதிகம் இடம்பெற்றிருப்பதால் அவற்றை ஓர் அளவோடு கையாண்டிருக்கிறார். யுத்தத்தின் கோரங்கள் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றன, பூடக மொழிக்கு இடமில்லை. ஆனால் யுத்தத்தை பாடுகிற அனார் வேறு. காதலும் தேடலுமாக காலத்தைக் கழித்த கனவுப்பெண்குரலுக்குரிய கவிஞரல்ல இவர், யுத்தகளத்தை நேரில் கண்ட புறநானூற்று தாய். 'பெருங்கடல் போடுகிறேன்' தொகுப்பில் 'மாபெரும் உணவுமேசை' ஓர் உதாரணம்:

"சிசுக்களின் மூளையாலான
மிளகுரசம் (புதினா சேர்த்தது) 
கண்ணாடிக் குவளைகளில் ஊற்றப்பட்டிருக்கிறது"

"......................................
கொல்லப்பட்டக் குழந்தையின்
உடலிலிருந்து கொட்டுகின்றது இரத்தம்
மிக நிசப்தமாக
மிக குழந்தைத் தனமாக" (மேலும் சில இரத்தக் குறிப்புகள்)

இறுதியாக கவிஞர் அனார் பற்றி எப்படி சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாம் என யோசித்தபோது, அவரது வரிகளே உதவிக்கு வந்தன.

"நான் பாடல் எனக்குக் கவிதை முகம்"

==

( காலச்சுவடு இதழ் 177, செப்டம்பர் 2014 )

Thursday, 5 June 2014



வெள்ளுறை பனியின் குருதி :

----------------------------------------------------------------------------------------------

- அனார் -




ஒரு பெண் ஏன் கவிதை எழுதுகின்றாள்? ஏன் அவள் தற்கொலை செய்கின்றாள்? என்ற கேள்விகளுக்கு என்ன பதில் கூறமுடியும்? இரண்டும் வேறு வேறல்ல என்பதே என் முன்னுள்ள ஒரே பதிலாகும்.

கவிதைகளை எழுதிவிட்டு ஒருவேளை அவள் தற்கொலை செய்யாதுவிட்டால், வாழ்க்கையில் பலவிதங்களில் அவள் கொல்லப்படுவதை தாங்கிக்கொள்ள நேரிடும். உயிரோடிருப்பதே அதிசயமாகிப்போன உலகில் வாழ்வதற்காக கவிதை எழுதவந்த, எழுதுகின்ற பெண்களின் அனுபவங்கள் பலவும் இவ்விதமானவையாக அமைந்திருக்கின்றன.

ஒரு பெண் தன்னை வெளிப்படுத்தவும் மறைத்துக்கொள்ளவும் கவிதையைத் தேர்ந்தெடுக்கிறாள். நடைப்பிணமாக வாழ்வதிலிருந்து தப்பிப்பிதற்காக தற்கொலை செய்கின்றாள். 

//மரணித்தல் ஒரு கலை 
மற்ற அனைத்தையும் போலவே
நான் அதை மிகச்சிறப்பாகச் செய்கிறேன்
நான் அதை நரகம் போல் செய்கிறேன்
நான் அதை நிஜம் போல் செய்கிறேன் 
இதற்காகவே பிறந்தவள் 
நான் எனவும் சொல்லலாம்
ஒரு அறைக்குள் செய்யுமளவிற்கு அது சுலபமானது
அதைச் செய்துவிட்டு அசைவற்று கிடக்குமளவிற்கு
அது சுலபமானது//

இன்னும் இறவாமல் துடித்துக்கொண்டிருக்கும் சில்வியா பிளாத்தின் கவிதைகளின் ஆன்மா முழுக்க, மனக்குலைவுகளால் நசிவுண்ட குளிர் பரவிய பனியின் குரல் கேட்கின்றது. இருண்மையான அநாதரவான அலைவுற்ற மனத்துடன் தனக்கொரு அரூபமான இடம்தேடி மிதந்து தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி சில்வியா பிளாத் எனக்கூறலாம்.

கவிதைக்கான முக்கியத்துவம் என்பது கவிஞருக்கான முக்கியத்துவமும் சேர்ந்ததுதான். எந்தக் காலகட்டத்திலும் தன்னை உருக்கிப்படைக்கும் எத்தகைய பெண் கவிஞர்களுக்கும், இது பொருந்தக்கூடியது. உலகின் பல்வேறு காலகட்டங்களில் பல பெண் கவிஞர்கள் தோன்றி மறைந்து போயிருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலமும் அவர்கள் முரண்பட்டு போராடி முன்னெடுத்த உரிமைகளும் எதிர்பார்ப்புகளும் சவால் மிகுந்ததாகவே அமைந்துள்ளது.

அன்பிலும் காதலிலும் அதீதத் தன்மையை விழைந்த ஒரு பெண், தன் அகமும் புறமும் ஆர்ப்பரிக்கின்ற சிந்தனை மற்றும் நம்பிக்கைகளில் குழம்பியவளாக இருந்தவாறு, எவ்விதம் கவிதைகளுக்குள் தெளிவான மொழியைச் செலுத்தினாள்? வலிமைமிக்க கூர்மையான கவிதைகளை எழுதினாள்? ஒரு கவிதைக்கும் அடுத்த கவிதைக்குமான காத்திருப்பின் இடைவெளியை ஊடறுத்துப்போகும் மின்வெட்டுக்கள் எத்தகையதாக இருந்திருக்கும்? 

“உறைந்த பனிப்பாளம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகிப் பல்லாயிரம் குளிர் ஊசிகள் பாதத்தைக் குத்துவதுபோன்ற அனுபவத்தை அவருடைய படைப்புத்தரும்“ என முன்னுரையில் கீதா கூறிப்பிடுகிறார்.

சில்வியா பிளாத்தின் கவிதைகளுக்குள் ஒருவர் உள்நுழைவது மிக வேறுபட்ட அனுபவத்தை நிச்சயம் தரும். கவிதை வாசிப்பதன் அனுபவம் மாத்திரமல்ல அது ஒரு பெண்ணை அவள் கண்களிலிருந்து உயிரின் வேர்வரை முழுமையாக தரிசிப்பது ஆகும்.

பரிபூரணமான காதலின் முன்பாக சரணடைந்து அவள் கழுத்து நெரிபட்டு வதைக்கப்பட்டாள். பல சமயங்களில் நெரிக்கின்ற அந்தக் கை அவளுடையதாகவே இருந்திருக்கின்றது. பிளாத்துடைய சொற்கள் கண்ணீருக்குள்ளே மீன்குஞ்சுகள் என நீந்துகின்றன. திடீரென அவளுடைய மனம் ஒரு பயங்கரமான மீனாகி அவளையே கடிக்கினறது.

//நான் வெள்ளி
துல்லியம்
எனக்கு முற்கற்பிதங்கள் இல்லை
அன்பினதும் வெறிப்பினதும் நீர்த்திரை கோர்க்காது
பார்ப்பதை உடனே அப்படியே விழுங்குகிறேன்
நான் கொடுமையானவள் இல்லை
உண்மையானவள் மட்டுமே
நான்கு கோணங்களுடையவள்
சிறிய கடவுளின் கண் 
எனக்கூறுகிறாள்//

முழு வாழ்வின் சாரத்தையும், வாழ்க்கையின் இடை நடுவிலேயே கண்டுகொண்ட துயரம், தீராத விரக்திக்குள் அவளைத் தள்ளி விடுகின்றன. மன இருளின் அமைதியின்மையால் உள்நொறுங்கி உடைந்த கண்ணாடிச் சில்லுகளில் தன் தசைகளை குத்திக்கொள்வதன் வலிமிக்க அனுபவங்கள். பிளாத்தின் நிகழ்காலத்திலேயே எதிர்காலமும் இறந்தகாலமும் விலகாமல் சுழன்று வருகின்றது. துவேசங்கள் ஏமாற்றங்கள் தோல்விகளால் நசுங்கிய பொழுதுகளை புராதனமான படிமங்களில் பொருத்தி எழுதியிருக்கின்றார். வஞ்சிக்கப்பட்ட இருதயத்திலிருந்து பீறிடும் சொற்கள் பெண் இயல்புகளால் புரிந்துகொள்ளப்பட வேண்டிய அவசியத்தை கோரிநிற்கின்றன.

//அடித்தட்டு எனக்குத்தெரியுமென்று
அவள் சொல்கிறாள்
என்னுடைய ஆணிவேரிலிருந்து 
எனக்குத் தெரியும்
அதற்குத்தான் நீ அஞ்சுகிறாய்
அஞ்சவில்லை நான் அங்கு இருந்திருக்கிறேன்//

சில்வியா பிளாத் வாழ்ந்த காலகட்டத்தின் அழுத்தங்கள், அவருடைய அகவெளியின் நெருக்கடிகள், பிளாத்தின் சிறுவயதில் ஏறபட்ட தந்தையின் இறப்பு கணவனின் புறக்கணிப்பை தொடர்ந்த பிரிவு, இரு வேறுவிதமான ஆழமான காயங்களாக அமைந்துவிட்டது. எப்பொழுதும் திருப்பிச்சேர்க்க முடியாதபடி எதனாலும் சரிசெய்யவே முடியாதபடி உள்ளுற நொறுங்கி நிலைகுலைவுக்கு ஆழான பெண் இவர். அந்தரங்கமான மனப் பதை பதைப்பிலிருந்து உதிரும் சொற்களால் தொன்மமான நினைவுகளுக்குள் உணர்வைச்செலுத்தி கவிதைகளை ஒரு காவியத் தன்மைக்குள் உலவ விடுகின்றாள். புராதனமான கற்சிலைகளின் கண்களுக்கு பார்வைகளை வழங்குகிறாள். மூடுபனியின் ஒளியற்ற ஒளியில் அக்கற்சிலையின் முகம் பின்னர் அவளுடைய முகமாகவே ஒளிர்கின்றது.

வாழ்க்கை மீது, மனிதர்கள் மீது, அன்பின் மீது நமக்குள்ள கேள்விகள் தன்மீதே தனக்குள்ள கேள்விகள்தான் சில்வியாப்பிளாத்தின் கவிதைகள். திருமணம், பாலியல் சார்ந்த பெண்நிலை உறவுகளுக்கிடையேயான முரண்கள், மகள் மனைவி தாய் பெண் எனும் தனித்தனி பன்முகமான நிலைகளை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

எக்காலகட்டத்திற்குமான பெண்ணெழுத்துக்கு பிளாத்தின் கவிதைகள் நிச்சயம் வலுவான புதிய எழுச்சிகளை உருவாக்கும். அனுபவத்திலிருந்தும் உண்மைகளிலிருந்தும் காயங்கள் நிரம்பிய கனவுகளிலிருந்தும் அவரது கவிதைகள் பிறந்துள்ளன. காலத்தையும் வரலாற்றையும் பழைமையையும் படிமங்களாக்கி தன்னுடைய கவிதைகளை நுட்பமான ஆற்றலுடன் எழுதியிருக்கிறார். வெறுமையின் உள்புகுந்து அவர் கண்டெடுக்கின்ற அனைத்துமே கவித்துவமானவை. மலையே தன்னை நகர்த்திச்செல்வதுபோல கனம் பொதிந்துள்ள அர்த்தங்கள் அவற்றிற்கு இருக்கின்றன. கவிதை எழுதுகின்ற பெண் ஆலகாலத்தை அருந்தி முழுவதும் நீலமாகிப் போய்விட்டவள். ஒன்று அவளாக மரணிக்க வேண்டும் அல்லது அவளைக் கொன்றுவிடுவார்கள். 

இந்நூலை கனடாவில் வசிக்கும் கீதா மொழிபெயர்த்திருக்கிறார். அழுத்தம் திருத்தமான விரிவான முன்னுரையானது இன்னொரு படைப்பாகவே அமைந்திருக்கிறது. கீதாவின் மொழிபெயர்ப்புகள் தெளிவும் தீர்க்கமும் உளப்பூர்வமானவையுமாக மொழிபெயர்க்கபட்டவை. இக்கவிதைகளை மொழிபெயர்ப்பதற்கான புலமை மட்டுமல்ல, நவீன கவிதையின் சுதந்திரமான மனத்தினைக் கொண்டிருப்பது கீதாவின் பலம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

(காலச்சுவடு 174 - 2014 June )

Sunday, 20 April 2014

புதிய வானம் புதிய சிறகுகள் :
சமகால இலங்கைப் பெண்ணியக் கவிதைகள் குறித்துச் சில பார்வைகள். 

- அனார்
------------------------------------------------------------------------------------------------------------------


அ. நானும் கவிதைகளும் 


சாய்ந்து எழுந்த விருட்சம்
வந்து செல்லுகின்ற மலைக்குன்று
தள்ளாடுகிற ஆகாயம்
இங்குமங்கும் ஓடியோடித் தேய்ந்த நிலா
ஊஞ்சலில் 
தலைகீழாகப் பார்க்கிறேன் உலகத்தை......


இறுக்கமாகப் பொத்திய கைகளிரண்டையும் தலைக்குமேல் உயர்த்தியபடி “சுடு சுடு மாம்பழம்“ எனப் பாடி விளையாடியவாறு மண்தரையில் கைகளை வைத்து விரிக்கும்போது என்னுடைய முதலாவது கவிதை பறந்து போயிருக்கக்கூடும் - கோப்பி மரத்திற்கும் மூங்கில் மரங்களுக்குமிடையே தேடிய சிவப்புநிறத் தும்பியைப் போல.


மழைபெய்து ஓய்ந்த ஈர மண்தரையில், தோழி கீறிய சதுர வடிவான கட்டங்களில், ஒற்றைக்காலால் நொண்டி விளையாடும்போது, எதிரே தெரிந்த சிறு கடலையும் பெருங்கடலையும் நான் தாண்டிய கணம்தான் கவிதையோ என்னவோ.

என் சிறுவயதில், ஓலைகளால் கூரைவேய்ந்ததும் களிமண்தரை மெழுகியதுமான சிறு குடிசைக்குள்ளிருந்த ஒரு மூதாட்டியின் அருகாமை கிடைத்தது. முக்காடிட்ட அம்முதிய பெண்மணி களிமண்தரையில், பன் பாயில் கால்களை நீட்டி அமர்ந்தபடி, எப்போதும் நாட்டுப்புறக்கவிகளை ஒவ்வொன்றாக பாடிக்கொண்டேயிருப்பார். அருகே செம்பு வட்டாவும் படிக்கமும் சிறிய வெற்றிலை உரலும், சிவப்புநிறச் சாயமூறிய பனைஓலை விசிறியும் ஒரு சுருட்டைத்தலைமுடி சிறுபெண்ணும், அந்திசாயும்வரை அவளருகே அசையாமல் அமர்ந்திருப்போம். வெற்றிலைபோட்ட இரத்தச் சிவப்பான நாக்கு, மேலும் கீழுமாக அசையக் காற்றில் மணக்கும் கவி இசையைக் கேட்டு மயங்கியிருப்பேன். பிறகு வந்த நாட்களில், சபைகளில் என்னை யாராவது கவிபாடும்படி கேட்டுக்கொண்டால், ஆர்வமேலீட்டால் மனனமாகியிருந்த அத்தனை நாட்டார் பாடல்களையும் மூச்சுவிடாமல் பாடிக்காட்டும் சிறுமியாக நானிருந்தேன்.

என்னுடைய முதலாவது கவிதை உணர்வுக்குக் கிடைத்த, முதலாவது தண்டனை விசித்திரமானது. நன்றாகப் பழுத்த மிளகாயை இரண்டாகப் பிளந்து, என் உதட்டில் வைத்துத் தேய்த்துவிட்டனர். கெட்ட வார்த்தை பேசுதல் அல்லது கெட்ட நடத்தைகளுக்கான சிறுவர் சிறுமியருக்கு வழங்கப்படும் தண்டனை இது. எனவே கவி பாடுவதும் கெட்ட பழக்கம் என்று அவர்கள் எனக்கு உணர்த்தினர். 

என்னுடைய ஊரான சாய்ந்தமருது கிழக்கிலங்கையில் உள்ளது. இன்று முற்றுமுழுதாக நகரமயமாகிவிட்ட முன்னாள் கிராமம் அது. ஊரின் கிழக்கே வங்காள விரிகுடாவும் மேற்கே வயற்பரப்பும் விரிந்து பரந்து கிடக்கின்றன. இந்த நிலப்பகுதியின் பாரம்பரிய வாழ்க்கை முறைமைகளில், சொற்பமானவற்றைக் கண்கூடாகக் கண்ட, பெரும்பாலானவற்றை முதியோர்களிடமிருந்து செவிவழியாகக் கேட்டறிந்த கடைசிப் பரம்பரை நான். கட்டுப்பாடுகள், பாரம்பரியப் பண்பாடுகள்மிக்க எனது குடும்பத்தில் ஆண்களால் ஏற்படுத்தப்பட்ட வலுவான சட்டதிட்டங்கள் பெண்களைப் பூட்டிய கதவுகளுக்குப் பின்னே வைத்திருந்தது. அத்தகைய உக்கிரமான நடைமுறைகளுக்கு உட்பட்ட ஆசிரியரும் எங்களூர் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவராகவும் (Chief Trustee) மற்றும் மார்க்கக் கல்வியை நன்கு பயின்ற உலமாவாகவும் இருந்த எனது தந்தை, எனது மூத்த இரு சகோதரிகளை பாடசாலைக்கல்வியை விட்டும் இடைநிறுத்தியதுபோலவே, பதினோராம் வகுப்புவரை மல்லுக்கட்டிப் பயின்ற என்னையும் இடைநிறுத்தினார். ஊரில் ஏற்பட்டிருந்த யுத்தநெருக்கடிகள், குழப்பமான சூழல், இன மோதல்கள் என்பன மேலதிகமான, வலுவான காரணிகளாக அவருக்கு இருந்தன.

என்னுடைய வாழ்க்கை. அத்தம்விட்ட பெருவிரலுக்கும் பழம் விடுகிற சிறுவிரலுக்கும் இடையே இருந்த சந்தோசங்களிலிருந்தும் விளையாட்டுக்களிலிருந்தும் அன்றாட இயல்புகளிலிருந்தும் தலைகீழாகி சாகசமானதாக எதிர்பாராத அதிர்ச்சிகளோடு என் எதிர் நின்றது. 

உண்மையில் மரணம் ஹெலிக்கொப்டரின் (Helicopter) இரைச்சலெனத் தென்னை மரங்களிடையே தாழ்ந்து, சுழன்று கொண்டிருந்தது. நிராதரவும் அபாயங்களும் அச்சங்களும் பலவிதமாகத் தாக்கின. உயிர், உடல், மனம், இனம், அரசியல், மதம், பண்பாடு, நிலம், ஊர் எல்லாம் என்னைச் சுற்றி எரிந்தன. சமையத்தில் அந்த நெருப்பு என்னில் தீக்காயங்களை ஏற்படுத்தியது. என்னுடைய இயலாமை, கையறுநிலை இரவின் ஆழமான பள்ளங்களைக் கண்ணீரால் நிரப்பியபடி வழிந்தோடியது. நான் என் உயிரின் நிறங்களைக் கரைத்துச் சிந்தி, ஓவியங்களாக வரைய முற்பட்டேன்.


ஒவ்வொரு வர்ணமாய்ப் பிரித்துத்
தரையில் கரைத்து
சிந்தும் ஓவியம் இது
இதன் இதயத்திலரும்பிய கவிதைகளும்
பாவப்பட்டவைதான்

வெறும் ஓவியத்தின் வாழ்வில் 
என்ன அர்த்தமிருக்க முடியும்
அசைய முடியாக் கைகளும்
நகர முடியாக் கால்களும்
பேச முடியா உதடுகளும்

சந்தேகமேயில்லை
வாயில்லா ஜீவன்
ஆடாதசையாது
சுவரில் மாட்டப்பட்டிருக்கிறது
பல்லிகள் எச்சில்படுத்துவதையும் எதிர்க்காமல்

வருகிறவர்களுக்கென்ன
வரைந்தவனை 
வாழ்த்திவிட்டுப் போகிறார்கள்
சட்டங்களால் சிலுவையறையப்பட்டிருக்கும்
ஓவியத்தைப் பார்த்து
உண்மை தெரியாதவர்கள்
உயிரோவியம் என்றார்கள்

(ஓவியம் - அனார்)


உண்மையில் அவசர அவசரமாக உயிர்விடப்போகிற ஒருத்தி விட்டுச் செல்வதற்கென எழுதிய இவ்விதமான பல கவிதைகள் என் முதல் தொகுப்பில் உள்ளன. திருட்டுக் காரியம் பண்ணும் பிரயத்தனங்களோடும், எனக்கிருந்த சவால்களோடும், இயலாமைகளோடும் எழுதத் தொடங்கியிருந்தேன். எனக்குள் சென்று என் ஆன்மா பேசியதை உற்றுக்கேட்பதற்கு எவரும் தயாராக இல்லாத சமயத்தில், நானே அதைக்கேட்க விரும்பினேன். மிக உன்னிப்பாக, கொஞ்சம் ஆதரவாக. என்னை வளர்த்தெடுக்கும் கனவுகளோடு, கவிதையுடன் ஆழ்ந்த உடன்பாட்டிற்கு வந்தேன். யுத்தம் காதலைப் போலவும், காதல் யுத்தத்தைப் போலவும் வீட்டிற்குள்ளும் வெளியேயும் அவ்வப்போது வெடித்துக் கொண்டிருந்தன.

எல்லாவிதக் கட்டாயத் திணிப்புகளிலிருந்தும் கல்வியோ காதலோ கிடையாத உலகத்திலிருந்தும் வெளியேற விரும்பினேன். யாரயேனும் இதற்காகத் தண்டிக்க வேண்டுமென நினைத்தேன். குறைந்தபட்சமாகக் கடவுளையேனும். ஆனால் சாகும் தருணங்களிலிருந்தெல்லாம் என்னை மீட்டெடுத்துக்கொண்டது கவிதை. ஆற்றில் இலக்கற்று மிதந்து செல்லும் இலையொன்றின் மீது விழுந்த எறும்பு, உயிர் தப்பிப் பிழைத்துக் கொண்டது. 


அன்று நான் உணர்ந்தேன்
எனக்குக் கவிதை முகம்
என் உடல் பச்சை வானம்
நான் பெண் என்பதையும்,..


ஒரு காட்டாறு
ஒரு பேரருவி
ஓர் ஆழக்கடல்
ஓர் அடைமழை
நீர் நான்

கரும் பாறை மலை
பசும் வயல்வெளி
ஒரு விதை
ஒரு காடு
நிலம் நான்

உடல் காலம்
உள்ளம் காற்று 
கண்கள் நெருப்பு

நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்

நான் இயற்கை
நான் பெண்

(நான் பெண் - அனார்)


நான் கவிதை எழுதத் தொடங்கிய நாட்கள், சமூகம் பலவிதமான இம்சைகளுக்குள் சிக்கியிருந்த கொந்தளிப்பான காலமாகும். சொல்வதற்கு அதிகமிருந்தன. ஆனால் சொல்ல முடியாத இறுக்கம் வெளியிலிருந்தது. இரண்டுக்கும் நடுவில் என்னுடைய இருப்பைக் கவிதையூடாக நிலை நிறுத்தத் தொடங்கினேன். என் குரல் தனிமையெனும் பாறையை ஊடறுத்தபடி ஒளியெனத் தெறித்தது. பெண் மனவெளியை, அதன் வீரியமான எழுச்சியை, பொங்கும் பிரவாகத்தை என்னுள் உணரத் தொடங்கினேன். கவிதை நுண்ணுர்வுகளுடன் சம்மந்தப்பட்டது. அனுபவங்களுக்கூடாகவும் வாசிப்பு, தேடல் போன்றவற்றினாலும் நிகழ்வது. உணர்வின் குரலை, அழகின் பாடலை, மொழியின் கனவை, அதன் உறையும் மௌனத்தை, நோவைப் பகிர்ந்து வருகிறேன். மேலும் கூறினால் என்னுடைய கவிதைகள் தமக்கு அதிகபட்ச உரிமைகளை எடுத்துக்கொள்ள எப்போதும் அனுமதிக்கிறேன். 

இவ்விதமே என்னை அபூர்வமானவளாய், வலிமையானவளாய் மாற்றியது கவிதை. என் அகவெளியைக் கவிதை என்னும் மந்திரப்பூச்சிகள் ஆள்கின்றன. அங்கே எனக்கான உலகம் எல்லாவித சாத்தியங்களாலும் ஆக்கப்பட்டிருக்கிறது. இன்று எனக்குத் தெரியும், வாளுறைக்குள் கனவுகளை நிரப்புவது எப்படி என்று. என்னுடைய ஆனந்தத்தை ஈரம் சொட்டச்சொட்ட உருவாக்குகின்றேன். எல்லையற்ற அதன் எல்லையை நிர்ணயிக்கிறேன். எனது ருசியின் முழுமையை முழுமையின் ருசிக்குப் பரிமாறுகிறேன்.


இரண்டு குன்றுகள்
அல்லது தளும்பும் மலைகள் போன்ற
முலைகளுக்கு மேல் உயர்ந்து
அவள் முகம் சூரியனாகத் தக தகத்தது

இரண்டு விலா எலும்புகளால் படைக்கப்பட்டவள்

பச்சிலை வாடைவீசும் தேகத்தால்
இச்சையெனப் பெருக்கெடுத்தோடும்
மலையாற்றைப் பொன்னாக்குகிறாள்

வேட்டையின் இரத்தவீச்சத்தை உணர்ந்து
மலைச்சரிவின் பருந்துகள் தாளப்பறக்கின்றன

மரக்குற்றிகளால் உயர்த்திக்கட்டப்பட்ட 
குடில்களில் படர்ந்த மிளகுப்பற்றை
மணம்கசியும் கறுவாச்செடி
கோப்பிப்பழங்களும் சிவந்திருந்தன

நடுகைக் காலத்தில் தானியவிதைகளை வீசுகிறாள்

சுட்டகிழங்கின் மணத்தோடு
பறைகளுடன் மகுடிகளும் சேர்ந்து ஒலியெழுப்ப
ஆரம்பமாகின்றது சடங்கு

களிவெறி... கள் சுகம்...
மூட்டிய நெருப்பைச்சுற்றி வழிபாடு தொடங்கிற்று

வளர்ப்பு நாய்களும்... பெட்டிப்பாம்புகளும்... காத்துக்கிடக்கின்றன
மாய ஆவிகளை விரட்டி
பலிகொடுக்கும் விருந்துக்காகத்

தீர்ந்த கள்ளுச்சிரட்டைகளைத் தட்டி
விளையாடுகிற சிறுசுகள்
வாட்டிய சோளகக்கதிர்களைக் கடித்துத்திரிகின்றனர்

பிடிபட்டு வளையில் திமிறும் உடும்பை
கம்பினில் கட்டி... தீயிலிட்டு...
அதன் வெந்த இறைச்சியை மலைத்தேனில் தொட்டுக் 
கணவன்மார்களுக்குப் பரிமாறுகின்றாள் குறத்தி

தும்பி சிறகடிக்கும் கண்கள்விரித்து
இரவுச் சுரங்கத்தின் கறுப்புத்தங்கமென எழும்
தலைவியை மரியாதை செய்கின்றனர்

மலைத்தேன் அருந்தியவாறு இருப்பவளைப்
புணர்ச்சிக்கு அழைத்தவன் கூறுகின்றான்
'போர் தேவதையின் கண்களாக உறுண்ட
உன் முலைகளால்
குறிஞ்சி மலைகளையே அச்சுறுத்துகின்றாய்'

அவளது குரல் ... மலைகளில் சிதறி ஒலிக்கின்றது

'பெண் உடல் பூண்ட முழு இயற்கை நான்'

காற்றில் வசிப்பவன் ...
காலத்தை தோன்றச் செய்வபன் ...
இன்றென்னைத் தீண்டலாம் !


(குறிஞ்சியின் தலைவி - அனார்)



ஆ. 


இலக்கிய உலகில் கலகம் செய்வதற்கு ஏற்ற வடிவம் கவிதை இலக்கியமே. ஏன்னென்றால் கவிதை, மொழியைப் பற்றிய மொழியாக இருக்கிறது. பெண்ணுக்குள் கிடக்கும் எல்லையில்லாக் கற்பனை வளத்தைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றல் மிக்கது. நனவிலி மனத்தோடு அங்கே கிடக்கும் அடக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான குறியீடுகளுக்கு மிகவும் நெருக்கமானது. மேலும் கவிதை எப்பொழுதும் அமுக்கப்பட்ட ஒரு குழுவின் ஒட்டுமொத்தக் குரலாகப் பதிவாகிறது. எனவே அமுக்கப்பட்ட பெண்ணும் தனக்கான மொழியை உருவாக்கிக்கொள்ள கவிதை வடிவே சிறந்த சாதனமென, கோராகப்லான் (Corakaplan), பெண்ணுக்கான மொழியை உருவாக்க வழி கூறுகிறார். கவிதைதான் காரண காரியம், பகுத்தறிவு, தர்க்கம் என்கின்ற முறையில் பெண்ணை மடக்கிப்போடும் ஆணாதிக்க மொழியைத் தகர்த்துக்கொண்டு எல்லை மீறிய அப்பாலுக்கு அப்பால் அழைத்துச் செல்லும். படைப்பாக்கத்தின் உச்சக்கட்ட சுவையை எட்டி நிற்கும். எனவே கலகம் செய்ய நினைக்கின்ற பெண் எழுத்தாளர்களுக்குக் கவிதை சிறந்த வடிவமென்ற கருத்தைப் பல பெண்ணியலாளர்கள் முன்வைக்கின்றனர்.

இலங்கை தமிழ் இலக்கியத்தின் தீவிரப் படைப்பிலக்கியத் தளங்களில் ஈடுபடுகின்ற பெண்களது பங்களிப்பானது பல்வேறு காரணிகளால் 80களிலும் அதன்பின்னர் அடுத்தடுத்த காலகட்டங்களில் வெவ்வேறு முக்கியத்துவங்களைக் கொண்டும் வெளிப்பட்டிருக்கின்றது. 80களில் உருவாகிய புதிய சமூக அரசியல் பிரக்ஞையின் முக்கிய கூறாக சிவரமணி, செல்வி, சங்கரி, ஊர்வசி, மைத்ரேயி போன்றவர்களுடைய கவிதைகளைக் காணலாம். அக்காலகட்டப் பிரச்சினைகள், பெண்ணிருப்பு, அரசியல் எழுச்சி மாற்றம், பெண்ணிய விடுதலை, போராட்ட நிலைகள் என்பனவற்றை அக்கவிதைகள் வெளிப்படுத்தின. தற்போது நிலவிவரும் சமகால நவீன பெண் கவிதையின் வளமான எதிர்காலத்தை அன்றைய கவிஞர்கள்தான் இத்தனை வலிமைமிக்க பாதையாக ஆக்கிக் கொடுத்தனர். 

1990கள் முதல் 2000 ஆண்டின் நடுப்பகுதிவரை பெண் கவிஞர்களின் பங்களிப்பானது செறிவும், வடிவச் செழுமையும் மாற்றுக் குரலும் கொண்டதாக, கருத்தாளமிக்க மொழி ஆளுமை பெற்று நவீன முகத்துடன் வளர்ச்சியடைந்தது. இலங்கைப் பெண் கவிஞர்களைப் பொறுத்தவரை இன்றியமையாத முக்கிய காலகட்டங்களாக இக்காலப்பகுதிகளைக் குறிக்க முடியும். 

சமகால இலங்கைப் பெண்ணியக் கவிதைகளை ஒற்றைத் தன்மையான குரலாக நாம் அடையாளப்படுத்திக் காண முடியாது. சமகாலம் என்பது கடந்த காலத்தின் பல நிலைப்பாடுகளிலிருந்து முற்றுமுழுதாக மாறி, வேறொன்றாக எம்முன் நிற்கின்றது.

இலங்கைப் பெண்கள் தம்முடைய நிலத்திலிருந்தபடியும் அதற்குள்ளேயே அகதிகளாக்கபட்டும் புலம்பெயர்ந்து உலகின் பல நாடுகளில் சிதறியும் காணப்படுகின்றனர். ஆணாதிக்கத்திற்கெதிராகவும் பாலியல் வன்முறைகள், குடும்ப வன்முறைகள், நூதன ஒடுக்குமுறை பற்றிய கேள்விகளையும் சுயநிர்ணயம், இடப்பெயர்வு, சமூக அரசியல், வாழ்தலின் நெருக்கடி என்பன போன்ற விடயங்களில் கூர்மையான முனைப்புடன் பல பெண் கவிஞர்கள் கவிதைகளைப் பதிவுசெய்து வருகிறார்கள். எப்போதும் மறுக்கப்பட்டுவரும் விடுதலை பற்றியும் சுதந்திரத்திற்கான வேட்கையினையும் தம்முடைய நிலம் சார்ந்தும் இனம், மதம், பண்பாடுகள் சார்ந்தும் அல்லது சாராமலும் அனுபவங்கள் தொடர்பாகவும் அவர்களுடைய கவிதைகளை ஆயுதமாக ஆக்குகின்றனர். அநீதி, அடக்குமுறை, வன்மப்படுதலுக்கு எதிரான அந்த ஆயுதம், அவர்களது உயிரும் தசைகளும் சிந்திய குருதியால் ஆக்கப்பட்டிருக்கிறது.

80களின் காலகட்ட அரசியல் சூழ்நிலையும் பெண்நிலைவாதம் தொடர்பான சிந்தனைகளும் உணரப்பட்டு வெளிப்பட்ட கவிதைகள் பற்றிப் பேசாமல், சமகாலத்திற்குள் நுழைய முடியாது. வாழ்வும் மரணமும் அன்று அருகருகே இருந்தன. பல சமயங்களில் இரண்டும் ஒன்றுபோலவும் இருந்தன. இரண்டுக்கும் நடுவே இயங்கிய அன்றைய உச்சமான பெண் கவிதைகள் அவை. அந்த வகையில் ‘சொல்லாத சேதிகள்’ தொகுப்பில் சிவரமணி எழுதிய ‘முனைப்பு’ எனும் கவிதை, 


பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன

என்னை 
மேகத்திற்குள்ளும்
மண்ணிற்குள்ளும்
மறைக்க எண்ணிய வேளையில்
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர்
அவர்களின்
குரோதம் நிறைந்த பார்வையும்
வஞ்சம் நிறைந்த சிரிப்பும்
என்னைச் சுட்டெரித்தன

எனது
ஆசைகள் இலட்சியங்கள்
சிதைக்கப்பட்டன
அவர்களின் மனம்
மகிழ்ச்சி கொண்டது
அவர்களின் பேரின்பம்
என் கண்ணீரில்தான்
இருக்கமுடியும்

(முனைப்பு – சிவரமணி)

‘அவர்கள் பார்வை’ எனும் கவிதையில் சங்கரி எழுதும்போது,

எனக்கு முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை 

அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை

பருத்த துடை
இவைகளே உள்ளன

சமையல் செய்தல்
படுக்கையை விரித்தல்
குழந்தை பெறுதல்
பணிந்து நடத்தல்

இவையே எனது கடமைகளாகும்

கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கும் அவர்கள்
எப்போதும் எனது உடலையே நோக்குவர்

கணவன் தொடக்கம்
கடைக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம்

(அவர்கள் பார்வை – சங்கரி)

இவர்களைப் போன்றே மற்றொரு ஆளுமைமிக்க பெண் கவிஞர் ஊர்வசி. அவரின் கவிதை என்பது அதன் மொழி நேர்த்தியாலும் கவிதைத் தன்மையான கனவுகளாலும் இயற்கையினைக் கொண்டாடுகிற காதலினாலும் வாசிப்பனுபவத்தையும் சிலிர்ப்பையும் அதிர்வுகளையும் தரக்கூடியது. பசுமையும் பரிவுமான அவரது ‘வேலி’ என்ற கவிதை மிகுந்த நினைவுத் துயரை எற்படுத்துகிறது.


நட்சத்திரப் பூக்களை
எண்ண முடியாமல்
மேலே கவிழ்ந்தபடி கூரை 
ஒட்டடைகள் படிந்து
கறுப்பாய்ப் போனது
கம்பி போட்ட சாளரம்கூட 
உயரமாய்
ஆனாலும் திறந்தபடி
அதனூடே காற்று
எப்பொழுதும்
மிகவும் இரகசியமாய்
உன்னிடம் என்னை 
அழைக்கிற காற்று

என்னைச் சூழவும் சுவர்கள்தான்
நச் நச் என்று 
ஓயாமல் கத்திக்கொண்டிருக்கிற
பல்லிகள் ஊர்கிற சுவர்கள்
அவையும் 
ஒட்டடைகள் படிந்து
எப்போதோ கறுத்துப்போனவை

உனக்காக நான்
தனிமையில் தோய்ந்தவளாய்
இங்கே காத்திருக்கிறேன்

பழைய பஞ்சாங்கங்களில்
புதிதாக 
நம்பிக்கை தருவதாய்
ஒரு சொல்லைத் தேடிப்பார்த்தபடி
எப்பொழுதுதான் என்னால்
நீ வசிக்கின்ற அந்த
திறந்த வெளிக்கு வர முடியும்

உன் இருப்பிடம்
இங்கிருந்து வெகு தொலைவோ
இரண்டு சிட்டுக்குருவிகளை
இங்கே அனுப்பேன்
அல்லது
இரண்டு வண்ணத்துப் பூச்சிகளையாவது

(வேலி - ஊர்வசி)

‘சொல்லாத சேதிகள்’ தொகுப்பில் கவிதைகள் எழுதிய பெண்களையும் ‘மரணத்துள் வாழ்வோம்’ தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பெண் கவிஞர்களின் கவிதைகளையும் இவ்விடத்தில் நினைவுகூர வேண்டும். 

‘எல்லை கடத்தல்’ எனும் கவிதைத் தொகுப்பிலிருந்து ஔவையின் ‘சுயம்’ என்ற கவிதையின் இறுதிப்பகுதி இவ்வாறமைகின்றது,


இப்போதுதான் என்னை மீட்டு
எடுத்திருக்கிறேன்
அடக்குமுறைக்குள்ளிருந்தும்
அச்சம் தரும் இருளிலிருந்தும்
உணர்வுகள் பிடுங்கி எறியப்பட்ட வாழ்விலிருந்தும்
என்னை மீட்டுள்ளேன்
ஒளியைப் பிறப்பித்தபடி செல்லும் சின்னஞ்சிறு
மின்மினிப் பூச்சியாய் என்னைக் கண்டு எடுத்துள்ளேன்
யாவருமறிய நிலவைப்போல இரவல் ஒளியில்
வாழ்தலில் உயிர்ப்பில்லை
சிறிய மின்மினியாய் சுயஒளியில் வாழ்தலே
இன்று சுகமென்றறிந்தேன்
பூவின் மலர்விலும் வாழ்வு உயிர்க்கின்றது
காற்றின் அசைவிலும் வாழ்வு விரிகிறது

(சுயம் – ஔவை)


1990களின் காலகட்டத்தில் புதிய சிந்தனைப் போக்குகளோடு பல பெண்கள் கவிதைத்துறையில் ஓர் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார்கள் எனத் திடமாகக் கூற முடியும். முஸ்லீம் பெண் கவிஞர்களின் தீவிரமான பங்களிப்பு நிகழ்ந்த காலமும் இதுவாகும். இக்காலப்பகுதியானது இன முரண்பாடுகள் அதிகரித்துக் கிழக்கிலும் வடக்கிலும் பல கசப்பான அழியாத வடுக்களையும் தோற்றுவித்தது. 1990 ஒக்டோபரில் யாழ்குடாநாட்டிலிருந்த முஸ்லீம்கள் வெளியேற்றபட்ட பின்னரான இவ்விடைவெளி, புதிய பல முஸ்லீம் கவிஞர்களையும் உருவாக்கியது.

பெண்மொழி, உடலரசியல், உடலைக் கொண்டாடுதல், போர்க்கால நெருக்கடிமிகுந்த அனுபவங்களை முனைப்போடு வெளிப்படுத்தியவர்களாகப் பல பெண்கள் கவிதைத் துறைக்குள் நுழைந்தனர். மைதிலி. ரேவதி, வினோதினி, ஆகர்ஷியா, சுல்பிகா, ஆழியாள், சுமதிரூபன், பெண்ணியா, ரஞ்சினி, தமிழ்நதி, பானுபாரதி, அனார், ஃபஹீமாஜஹான், உருத்திரா எனப் பல பெண்கள் தமக்கெனத் தனித்துவமான பாதையைக் கொண்டவர்களாக வெளிப்பட்டனர். இக்காலத்தில் இடம்பெற்ற முக்கிய அரசியல் சமூகத்தள மாற்றம், புலம்பெயர்தல், தமிழ்ப் போராட்டத்திற்கான ஆதரவுகளாகவும் எதிர்ப்புக்களாகவும் கவிதைகள் தோன்றின. புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து எழுதிய பெண்கள் எனவும் கிழக்கிலங்கையை மையப்டுத்திச் சில பெண் கவிஞர்களும் மலையகப் பெண்ணெழுத்துக்கள் என வேறு தளத்திலும் வடக்கிலிருந்தபடி போராளிப் பெண்கள் எழுதிய கவிதைகள் என இன்னொரு வகையும் பல பிரிவுகளில் கவனிக்கத்தக்கனவாகப் பெண்கள் தம் கவிதைகளைப் பதிவு செய்தனர். உணர்வுத் தளத்தில் பெண் எனும் இருப்பு மேலோங்கியும் அவரவர்க்கான வாழ்வு நிலைகள், கவிதைகளைத் தீர்மானிக்கின்றவையாகவும் 90களின் பெண் கவிதைகள் அமைந்திருந்தன. சுமார் நூறுபேர்களைத் தாண்டிய பெண் கவிஞர்களின் அனைத்துக் கவிதைகள் பற்றியும் ஒரு கட்டுரையில் எழுதிவிட முடியாது. இங்கு எனது கட்டுரையானது ஆய்வாளரின் பார்வையில் அல்லாமல் சக பெண் படைப்பாளி என்ற அடிப்படையில் சில எல்லைகளுக்குட்பட்டு எழுதப்பட்டிருக்கின்றது என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன். இந்தவகையில் 90களில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க பெண் கவிஞர்கள் சிலருடைய கவிதைகளை அவதானிக்கலாம்.

புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் ஆழியாளின் ‘உரத்துப் பேச’ தொகுப்பு காத்திரமான பெண் மொழியுடன் வெளிவந்தது. அத்தொகுப்பிலிருந்து ‘தேவைகள்’ என்ற கவிதையில் ஒரு பகுதி,

ஒற்றைக்கவள உணவுக்காய்
ஒரு பிஞ்சு உயிர் நான்கு ஐந்தாய்ப் பிரிந்து
பேயாய்த் திரியும் அவலம்
தெரியுமா உனக்கு
கோணிப்பையால் உடல்மூடி
வீதிக் குளிரில் முடங்கி நடுங்கும்
எம் குட்டி இளவரசிகளின் சின்னக்கைகளை 
அம்மா நீ அறிவாயா

தளிர்த்துக் கனியுமுன் வாடிக்கை ஆள் தேடி
தெருவெங்கும் அலையும்
என் பத்துவயதுத் தங்கைகளின்
வெம்பிய உடலங்கள் பற்றி
உனக்கேதும் தெரியுமா

(தேவைகள் – ஆழியாள்)

ஆழியாளின் மற்றொரு கவிதை ‘மன்னம்பேரிகள்’. பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களைக் குறித்து எழுதப்பட்ட கவிதை இது. இலங்கைக் கவிதை வரலாற்றில் குறிப்பாகப் பெண்ணிய அடையாளத்துடன் வெளிவந்த கவிதைகளுள் இக்கவிதையின் இடம் தனித்துவமானது. கோணேஸ்வரிகளுக்கும் மன்னம்பேரிகளுக்கும் நிகழ்ந்த கொடூரம் ஒவ்வொரு பெண்ணுடலின் மீதும் ஆழத் திணிக்கப்படும் அன்றாட நிகழ்வாக உள்ளதை இக்கவிதையில் குறிப்பிடுகிறார்.

அதன் கண்கள்
நான் அறியாததோர் 
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையும்
எனக்குள் உணர்த்திற்று

அழகி மன்னம்பேரிக்கும்
அவள் கோணேஸ்வரிக்கும்
புரிந்த வன்மொழியாகத்தான்
இது இருக்கும் என
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்

அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில்
நானும் அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையைப் புரிந்துகொண்டேன்

அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்

(மன்னம்பேரிகள் – ஆழியாள்)


வினோதினியின் சிறப்பான கவிதைத்தொகுப்பு ‘முகமூடி செய்பவள்’. தன்னுடைய காலத்தில், பெண்வாழ்வின் யதார்த்தத்தையும் மூடுபனியற்று துலங்கும் மொழியால் எழுதிவந்தவர். அவருடைய முகமூடி செய்பவள் கவிதையில், முகங்களையும் முகமூடிகளையும் மெல்லிய படிமமாக்கியுள்ளார்.


அவளது வீட்டின் சுவர்களெங்கும்
அவள் செய்யும் முகங்கள்.

தனது 
குருதியிலொரு துளி
மூச்சின் ஒற்றைத் துணுக்கு
மூப்புறுந் தசைத்திரள் சிறிது சேர்த்து
முகங்கள் செய்கிறாள்.

நடு நிசியில் பகலின் வெளிச்சத்தில்
எனது ஊரில்
எங்கோ ஓர் உயிர் இறக்கையிலும் 
மற்றொன்று பிறக்கையிலும்
யாரோ ஒருவர் கொல்லப்படுகையில்
கேள்வி கேட்கும் உரிமை தொலைத்து
அவர்கள் தலைகள் தாழ்கையில்
அவள் முகங்கள் செய்கிறாள்.

ஒரு பெண்ணின் காதல் மறுக்கப்படுகையில்
அவள் பலவந்தமாக இச்சிக்கப்படும்
பொழுதுகளில்
குழந்தைகள் பயந்து அழ மறக்கையில்
வெடிச்சத்தங்கள் பறவைகளின் கூடுகளை
உலுப்புகையில்
காரணமேதுமற்றுக் கடத்தப்பட்டவன் 
தன் வாழ்வு பற்றி அச்சமுறுகையில்
வீடொன்று ஆளற்றுத் தனிக்கையில்
கிராமமொன்று கைவிடப்படுகையில்
அங்கே நாயொன்று 
உணவின்றி அலைந்து உயிர்விடுங் கணத்தில்
பாலுந் தேனுங் குடிக்கும் எமது கடவுளர்
இல்லை எனத் திட்டப்படுகையில்
அவள் முகங்கள் செய்கிறாள்.

முகங்களின் மூச்சும்
மூடாத கண்களின் பார்வையும்
குழந்தைகளது என ஏமாந்து 
அவள் உயிரூட்டும் முகங்கள் எப்படியோ
அவளது கனவுகளைக் களவாடிவிடுகின்றன
அவ்வப்போது.

(முகமூடி செய்பவள் – வினோதினி)


‘மேலும் சில இரத்தக் குறிப்புகள்’ கவிதை பற்றி எழுத்தாளரும் பெண்ணியச் செயற்பாட்டாளருமான வ. கீதா குறிப்பிடும்போது, “பெண்மையை வரையறுக்கும் மாதாந்த இரத்தப்போக்கு வாடையும் வரலாற்றின் மீது படிந்துள்ள குருதிக்கறையை நினைவூட்டும் விபரீதத்தைக் கவிதையாக்கி, அகமும் புறமும் ஒன்றை மற்றொன்று ஊடுருவியுள்ள நிலையை, அரசியலுக்கு நூதனப்பொருள் வழங்கிப் பதிவு செய்கிறது“ என்கிறார்.


மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்துப்
பழக்கப்பட்டிருந்தும்
குழந்தை விரலை அறுத்துக்கொண்டு
அலறி வருகையில்
நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகின்றேன்
இப்போதுதான் முதல் தடவையாகக் காண்பதுபோன்று

‘இரத்தம்’ கருணையை, பரிதவிப்பினை
அவாவுகின்றது
இயலாமையை வெளிப்படுத்துகின்றது

வன்கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்
செத்த கொட்டுப் பூச்சியின் அருவருப்பூட்டும் இரத்தமாயும்
குமுறும் அவளுயிரின் பிசுபிசுத்த நிறமாயும்
குளிர்ந்து வழியக் கூடும்

கொல்லப்பட்ட குழந்தையின்
உடலிலிருந்து கொட்டுகின்றது இரத்தம்
மிக நிசப்தமாக
மிகக் குழந்தைத் தனமாக

களத்தில்
இரத்தம் அதிகம் சிந்தியவர்கள்
அதிக இரத்தத்தை சிந்த வைத்தவர்கள்
தலைவர்களால் கௌரவிக்கப்பட்டும்
பதவி உயர்த்தப்பட்டும் உள்ளார்கள்

சித்திரவதை முகாம்களின்
இரத்தக் கறைபடிந்திருக்கும் சுவர்களில்
மன்றாடும் மனிதாத்மாவின் உணர்வுகள்
தண்டனைகளின் உக்கிரத்தில்
தெறித்துச் சிதறியிருக்கின்றன

வன்மத்தின் இரத்த வாடை
வேட்டையின் இரத்த நெடி
வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்
கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்
சாவின் தடயமாய்
என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

(மேலும் சில இரத்தக் குறிப்புகள் – அனார்)


இனபேதமற்றுப் போர் மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சிதைத்து நிர்மூலமாக்கியது. மனித அவலங்களைத் தனித்துப் பேசிய போர்க்கால பெண் கவிதைகள் விரிவாகவும் வேறுபடுத்தியும் பார்க்கப்பட வேண்டியவை. இவற்றில் போராளிப்பெண்கள் தாங்கள் போராளிகளாகவும் கவிதை எழுதுபவர்களாகவும் இருந்து பதிவுசெய்த பல கவிதைகளையும் இணைக்க வேண்டும். ஓரளவு பெண் கவிஞர்கள் அனைவரினதும் கவிதைகளைக் காலத்திற்குக் காலம் சக பெண்ணியலாளர்கள் தொகுத்து வந்திருக்கின்றனர். 

2000ஆம் ஆண்டிற்குப் பின்னரும் சமகாலத்திலும் நம்பிக்கை தரும் கவிதைகளை எழுதுகின்ற பெண்கள் பலர் இருக்கின்றனர். அந்தவகையில் பிரதீபா, தான்யா, கற்பகம் யசோதரா, சலனி, ஸர்மிளா ஸெய்யத், பாயிஸா அலி, லறீனாஹக், சமீலா யூசுப்அலி, விஜயலட்சுமி என இன்னும் பலரைக் குறிப்பிட முடியும். இவர்களோடு 80, 90களில் எழுதத் தொடங்கிய குறிப்பிடத்தக்க பெண்கள் சிலர் இன்றும் கவிதைகள் எழுதி வருகின்றனர்.

கவிதை எழுதும் சுயமும் அந்தச் சுயத்தினூடாகக் கண்டெடுக்க விழையும் பெண் எனும் ஆளுமையை வளர்த்தெடுக்கவும் இன்றைய நவீன பெண் கவிதைகள் புதிய வடிவமெடுக்கின்றன. காதல், காமம், ஆண் பெண் உறவு, உடல் அரசியல் எனப் பிரத்தியேகமான பெண்மொழியை, சுயாதீனமும் விடுதலையும் கோரும் கவிதைகளாகவும் கட்டுப்பாடுகளிலிருந்து சுதந்திரம் பெறுதல், தெரிவுகளுக்கான சுதந்திரத்தை அடையும் நோக்கம், பாலியல் சமத்துவம், தனித்துவம், எதிர்ப்பு அரசியல் ஆகிய பெண்ணியத்தின் கூர்மையான பார்வைகளைத் தம்முடைய சமகாலக் கவிதைகளிலும் எழுதி வருகின்றனர். அவரவருக்கான அடையாளம், வித்தியாசமான கோட்பாட்டுரீதியான அணுகுமுறை என்பனவும் இன்றைய கவிதையின் பொருள்கள் சார்ந்து காண முடிகின்றது. ஆதிக்கக் குரல்களைக் கொண்டவர்களை எதிர்த்தபடியும் பெண் விடுதலைக்கான கலகக் குரலில் முழங்கியவாறு பெண் எனும் கர்வமும் கம்பீரமும் கொண்டவர்களாகவும் பெண் கவிஞர்கள் எழுதி வருகின்றனர்.

பொதுவாகவே பெண்கள் ஒரே விடயத்திற்காகவே கண்ணீர் சிந்துகிறார்கள், போராடுகிறார்கள், கனவு காண்கிறார்கள், கவிதை எழுதுகிறார்கள், அது அவர்களுடைய விடுதலையை முன்னிட்டேயாகும். நம்பிக்கையினை, தன்னுடைய மன உறுதியினை, சுயத்தை வலிமையாகப் பதிவுசெய்யும் பெண்ணியாவின் கவிதை இது.

இறுகிய பாறைகளினூடிருந்து
வீறு கொண்டதொரு புல்லாய் நிமிர்வேன்
கூவத்தான் முடியாதாயினும்
ஈனஸ்வரத்திலேனும்
என் பாடல்களை முனகியபடி
யார் முன்னும் பணிதலன்றி
எனது உணர்வுகளோடும் அவாக்களோடும்
எவ்வகை வாழவெனப் புரியாத இது
குழப்பமிகு வாழ்வேதானாயினும்
வாழ்வேன்
வாழ்வேன்
வாழ்வேன் நான்

(புத்துயிர்த்தல் - பெண்ணியா)

சமுதாய அக்கறையும் கரிசனமும் கொண்டு தன் பெண்ணிய வெளிப்பாட்டு மொழியோடு எழுதியவர் ஃபஹீமா ஜஹான். அவருடைய ‘பேறுகள் உனக்குமட்டுமல்ல’ கவிதையில் சிறு பகுதி,


போரிலும் பகையிலும்
முதல் பொருளாய்
அவளையே சூறையாடினாய்
அவளுக்கே துயரிழைத்தாய்
உன்னால் அனாதையாக்கப்பட்ட
குழந்தைகளை எல்லாம்
அவளிடமே ஒப்படைத்தாய்
தலைவனாகவும்
தேவனாகவும் நீ
தலை நிமிர்ந்து நடந்தாய்

(ஃபஹீமா ஜஹான் - பேறுகள் உனக்குமட்டுமல்ல)


ஃபஹீமாவின் மற்றொரு கவிதையில் பெண்ணுடல், மனம், அவளுடைய அனுபவங்கள், நசுக்கப்படும் உள்ளுணர்வு, அவருடைய புறவெளி என்பவற்றைப் பதிகிறார். 

அவளது தலைமீது
குருவிகள் தங்கிச்செல்லலாம்
அவளது தோள்மீதமர்ந்து கிளிகள் சத்தமிடலாம்
எனினும் 
பட்சிகளைப் பயங்காட்டவே
ஓங்கிய தடியொன்று அவளது
கரங்களில் தரப்பட்டிருக்கலாம்

யாருடைய விளைநிலமோ அது
விதிமுறைகள் வேறில்லை
அவள் காவல் புரிந்தாகவேண்டும்

யாருமற்ற அமைதியான இரவுகளில்
நிலவின் மெல்லிய கிரணங்கள்
அவளை விசாரிக்க வந்துபோகும்
அவள் அண்ணார்ந்து பார்த்ததேயில்லை
நட்சத்திரங்கள் 
திசைகளையும் வாழ்வின் திருப்பங்களையும்
ஓயாது சொல்லும்
அவள் காதுகொடுத்துக் கேட்டதேயில்லை
விடியலின் பூபாளம் அவளைச் சுற்றியே எழும்
அவள் வரவேற்றதேயில்லை

இவர்களின் விதிமுறைகள்
அவளை அசையவிட மாட்டாது

அவளைத் தாங்கி நின்ற பூமியே
அவளைப் பரிதாபமாய்ப் பார்த்திருந்த வானமே
அவளது மௌனமும் ஒரு நாள் வெடிக்குமா
குமுறுகின்ற எரிமலையாக
அதிரவைக்கும் இடிமுழக்கமாக

(ஃபஹீமா ஜஹான் – வயற்காட்டுக் காவற்காரி)


கவிதை அந்தரங்கமானது, நுட்பமானது, ஆழமானது. ஆனால் எவ்வளவு தூரம் மறைத்துப்பேச முடியும்? எவ்வளவு தூரம்தான் சத்தத்தை அடக்க முடியும்?

ஒவ்வொரு சமூகப்பெண்களும் எதிர்கொள்ளக்கூடிய சமூக சமைய நெருக்கடிகள், பிரச்சினைகள் பொதுவானதாகவும் பிரத்தியேகமானதாகவும் இருப்பது போன்றே முஸ்லீம் பெண் ஒருவர் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளிலும் கூடுதலான வேறுபாடுகள் காணப்படுகின்றன. இலக்கியத்துறையைப் பொறுத்தவரை திருமணத்தின் பிறகு தம்முடைய எழுத்துச் செயற்பாட்டைத் தீவிரமான தளத்தில் முன்னெடுப்பது அவளுக்குச் சாகவும் பிழைக்கவுமான போராட்டம் என்றுதான் கூற முடியும். அவள் எழுதுகின்ற கவிதையின் ஒவ்வொரு சொல்லையும் மதத்தோடு சேர்த்து அல்லது சந்தேகத்திற்குள்ளாக்கிக் கேள்வி எழுப்புகின்ற ஆண் எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. மிக நுட்பமான வலைப்பின்னல்களைப் பின்னி வைத்திருக்கின்ற சமுதாயத்தில் தன்னுடைய கவிதைகளை முன் வைப்பதற்கு மனவுறுதி இரண்டுமடங்காகத் தேவைப்படுகின்றது. மூன்று தெரிவுகள் அவள் முன்னுள்ளன. குடும்பத்தின் ஆதரவைப் பெற்றவாறு அவள் எழுத வேண்டும் அல்லது கணவனின் ஆதரவைப் பெற்றுக்கொண்டவளாக இல்லையென்றால் இவைகளை முற்றுமுழுதாக ஒதுக்கிவிட்டுத் தனித்து நின்று செயற்பட வேண்டும். இம்மூன்றையும் ஒருங்கிணைந்தபடி தன் இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபடுவது எத்தனை பெண்களைச் சாத்தியமாயிருக்கிறது? நான் கவிதை எழுதுகின்ற பெண் என்பது வெளிப்படாமல் இருக்கத்தான் எனது சூழல் ஆசைப்படுகிறது, நிர்ப்பந்திக்கிறது. ஒரு பெண்ணின் வளர்ச்சியில் எவ்விதமான தடைகளையெல்லாம் ஏற்படுத்த முடியுமோ அவற்றையெல்லாம் எவ்விதக் கூச்சமுமில்லாமல் ஏற்படுத்தச் சில ஆண்கள் தவறுவதுமில்லை.

முஸ்லீம்பெண் எனும் அடையாளத்தைப் பேணிக்கொண்டு கவிதை எழுதும் பெண்கள் தங்களுடைய சமுதாயத்தின் முன்பு எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள், மனநெருக்கடிகள் ஆழ்ந்த வலியைத் தரக்கூடியவை. கவிதை எழுதுகிற ஒரு முஸ்லீம் பெண் என்ற அடையாளத்திற்காக மாத்திரம் நேர்கொள்கின்ற இத்தகைய அசௌகரியங்களையும் தாக்குதல்களையும் பொறுத்தவர்களாகவே தொடர்ந்தும் கவிதைத்துறையில் ஈடுபட வேண்டியிருக்கிறது. நானும் பிற பெண்களும் சிக்கலான பல தருணங்களை, எதிப்புகளை அதிகம் எதிர்கொண்டே வருகின்றோம். ஆண்களுடைய ஆதிக்கமானது பெண் எழுத்துக்களின் குரல்வளையை நசுக்குவதற்கான முன்னெடுப்புக்களை இடைவிடாது மேற்கொள்கின்றது. உலகம், சமூகம், ஆதிக்கப்பண்பாடு, குடும்ப அமைப்பு, இவற்றில் எவை பெண்ணைப் புரிந்து வைத்திருக்கின்றன, அதுவும் நேர்மையான வகையில்? அவளுடைய இறுக்கமான மூடுண்ட வாழ்வினது சிறிய ஒளித்துவாரங்களுக்கூடாகத் தெரியும் அந்தச் சுதந்திரத்தை உணர்வதற்காகப் பெண் பலியாகும் இடங்கள்தான் எத்தனை? 

நுண்மையான பெண் மனத்தின் மென்ணுர்வுகள் காயப்படும் ஒரு தருணத்தை அஷ்ரபா நூர்தீன் ‘நானும் நீயும்’ கவிதையில் சொல்லும்விதம் எளிமையான, அதே சமயம் இன்றியமையாத பதிவுமாகும்,

நானும் நீயும் அருகருகிருந்து
பயணம் செய்கிறோம்
கறுப்புப் பர்தாவுக்குள் 
முகம் மறைத்தவளாய் நான்
எனினும் எனக்கு 
இவற்றின் மீது வெறுப்பில்லை
பால் அருந்தும் என் சிறு குழந்தை
மடியில் இருந்து வதைக்கிறது

பக்கத்தே மூத்தவனும்
அதற்கு மூத்தவளும்
காற்றுப்புகா நெரிசல்
நீ சுதந்திரமானவன் ஆண்
சிறகில்லையெனினும் நீ வான்வெளி மிதப்பாய் 
அக்கணம் உனக்கு 
மனைவியும் சிறுகுழந்தைகளும் இருக்காது

படகின் மேல்தளம் செல்வாய்
காற்றை முகர்வாய் களி்ப்புறுவாய்
சற்றே அலுக்கையில் இருக்கையிலும் அமர்வாய்
என்னருகில் ஓர் அந்நியனைப்போல
சிலவேளை எதிர்த்திசைப் பெண்களைக்கூட
நீ ரசித்த வண்ணம் பயணிக்கலாம்
அழகான நீலக்கடலும்
அதனைத் தொட்டுக்கொண்டு தெரிகின்ற வெண்நீலவானும்
சிறிய மலைக்குன்றுகளும்
துள்ளுகின்ற மீன்களும்
பார்ப்பதற்கு அழகாய் இருக்கும்

எனினும்
நான் முகத்திரை அகற்றிடில்
அந்நிய ஆடவன் பார்ர்திடல் கூடும்
அது ஹறாமானதென
எனது கணவனாகிய நீ தண்டிப்பாய்

(நானும் நீயும் - அஷ்ரபா நூர்தீன்)


மற்றொரு பெண்ணின் கவிதை......

இதோ
விலக்கப்படவேண்டிய
இலத்திரனியல் ஆப்பிள்களோடு
வரவேற்பறையில் உட்கார்ந்திருக்கிறான்
உறைநிலைச் சாத்தான்
அவன் காந்தக்கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டே
ஏக்கமாய் முன்னமர்ந்து கிடக்கின்றன
சில ஏவாள்குஞ்சுகள்
இன்னோர் வீசலுக்கான
ஆதிவிளைவுகள் மறந்து

(எஸ். பாயிசாஅலி )



பொய்மையும்
குரோதமும் அழியாத என் விழிகளைச்
சிந்திக்கிறேன
பல இரவுகளாக பல பகல்களாக
போராடி எனக்குள் வருந்தி அழுகிறேன்
என் பிரயத்தனம் முழுவதும்
பிரக்ஞை அற்ற என் சரீரத்தைக்
களைந்தெறிவது பற்றியது
நான் எண்ணுவது சாத்தியமாகின்
நதிகளின் கால்களில் நடந்தும்
கடல்களின் அடியில்
பாறைகளின் முகட்டில் படுத்தும்
மீன்கூட்டங்கள் கொத்தும்
பாசிகளில் குந்தி இளைப்பாறியும் திரிவேன்
கைகளுக்கு எட்டாத இன்பங்களை
கட்டப்படாத துயரங்களை சுமந்தலையும்
என்னை
அலைக்கழிக்கும்
சரீரம் துறக்கும் பகீரதத்தின் முடிவில்
நான்
கடவுள் நிலையை அடையக்கூடும்

(சிறகுமுளைத்த பெண்- ஸர்மிளா ஸெய்யித்)


வாழ்வில் பெண்ணுடைய உணர்வுகள் எத்தனை எளிய காரணங்களுக்காக எந்தப் பொறுப்புமற்றுப் புறக்கணிக்கப்டுகின்றன! இது மதம், பண்பாடு என்ற போர்வையில் பெண்ணை ஒடுக்கும் ஆணின் அதிகாரத்திணிப்பை வெளிப்படுத்துகிறது. இத்தகைய சுயவிசாரணைக்கு உள்ளாகும்பொழுது எற்படும் கோபம் பெண்ணை அந்நியப்பட்டு நிற்பவளாய் ஆக்குகின்றது. அனாரின் ‘பெண்பலி’ என்ற கவிதை,

அது போர்க்களம்
வசதியான பரிசோதனைக் கூடம்
வற்றாத களஞ்சியம்
நிரந்தர சிறைச் சாலை
அது பலிபீடம்
அது பெண் உடல்

உள்ளக் குமுறல் 
உயிர்த் துடிப்பு
இரு பாலாருக்கும் ஒரே விதமானது
எனினும்
பெண்ணுடையது என்பதனாலேயே 
எந்த மரியாதையும் இருப்பதில்லை அதற்கு
என் முன்தான் நிகழ்கின்றது
என் மீதான கொலை

(பெண்பலி – அனார்)

புலம்பெயர்ந்த இளம்தலைமுறைப் பெண் கவிஞர்களின் கவிதைகள், புலம்பெயர் வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் அன்னியப்பாடு, அடையளமிழத்தல், தனிமை, தாம் இழந்துவிட்ட மண்சார்ந்த, மரபுசார்ந்த வாழ்வு பற்றிய நினைவுகளையும் துயரங்களையும் இன வன்முறையால் இடம்பெறும் போரின் அவலங்களையும் வெளிப்படுத்துபவை. இக்கவிதைகள் யுத்த அவலங்களையும் ஒடுக்குமுறையின் வெவ்வேறு வடிவங்களையும் பேசுகின்றன. தான் வாழ்ந்த நிலத்தின் மீதான பிணைப்பையும் சொந்த இருப்பிடத்தை இழந்த நிலையையும் விடுதலை உணர்வையும் தாம் இழந்துவிட்ட அடையாளத்தைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டுகின்றன. அகதி நிலை புகலிட அனுபவம் அதனால் ஏற்பட்ட அந்நியப்பாடு, நிறவாதம் அவர்கள் எதிர்கொள்ளும் பண்பாட்டு முரண்கள் என்பன இக்கவிதைகளில் வெளிப்படுத்தப் படுகின்றன.

எலும்புக் குருத்தை ஊடறுக்கும் குளிரில்
வசந்தத்தை எரிர்பார்த்து
வெளிநாட்டு வாழ்வில் அள்ளுண்டு
சீட்டாட்டம் 
ஏமாற்று
போதைப்பொருட் கடத்தல்
பல்வேறாய்ப் பிளவுண்ட
குழுமோதல்கள்
குடி 
மேற்குலக யாத்திரிகத்தின்
விஸ்பரூபம்..........

(மைத்திரேயி)


வெள்ளிப்பனி படிர்ந்த
இலையுதிர்த்த நெடுமரங்கள்
பெருங்கட்டடச் சாலைகளில்
ஊசிப்பனித்துளிகள்
.............................................
மனிதம் எங்கே
நாளையும் இருப்பேனா
கேள்விக் குறிகளின்
பூதாகர நெரிசலால்

பனிச்சாரலில்
நடுங்கும் கூதலில்
நீண்டவரிசைகளில் நாம்
ஆயுட்தண்டனைக் கைதிகளாக
அகதியான குற்றத்திற்காக

(சந்தியா)

தூரத்தில் ஊளையிடுகிறது ஒரு விமானம்
தடித்த அங்கியின் கீழாகத்
துடித்துக்கொண்டிருக்கிற
உன் இதயம் பற்றி நான் அறிவேன்
.................................................
ஏதும் சொல்வதற்கில்லை
தொலைவில் உறுமல் இடுகின்ற
விமானத்தைத்தவிர
நிசப்தமானது இந்த இரவு

நண்பனே
என்னை நினைத்திருக்க
ஆயிரம் காரணங்கள் இருப்பதுபோல
உன்னை நினையாதிருக்கப்
பல்லாயிரம் காரணங்களாய்
என் வாழ்க்கை

(ஆகர்ஷியா)


எனது இயக்கம்
எனது ஆற்றல்
எனது சிந்தனை
எனது திறமை அனைத்தும்
எனக்கே இருக்கக் கூடியது
இவற்றை யாரிடமாவது இருந்து பெற்றிருந்தால்
நான் பெண்ணாக இருக்க முடியாது
நீங்கள் உருவாக்கிய பெண்மை
எனது அடையாளமல்ல
நான் பெண் பிறக்கும்போதே

(ரஞ்சினி)


மேலும் தமிழ்நதியின் ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்ற கவிதைத் தொகுதியிலிருந்து ‘இருப்பற்று அலையும் துயர்’ கவிதையின் பகுதி,

பூட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி
பசியோடு அலைந்துகொண்டிருக்கின்றனர்
வளர்ப்புப்பிராணிகள்
சோறுவைத்து அழைத்தாலும்
விழியுயர்த்திப் பார்த்துவிட்டுப் படுத்திருக்கும்
நாய்க்குட்டியிடம் எப்படிச் சொல்வது
திரும்பமாட்டாத எசமானர்கள் 
மற்றும் நெடியதும் கொடியதுமான போர் குறித்து

இந்தச் செங்கல்லுள் என் இரத்தம் ஓடுகிறது
இந்தக் கதவின் வழி
ஒவ்வொரு காலையும் துளிர்த்தது
கிணற்றில் பீறிட்ட முதல் ஊற்று
இளநீரின் சுவையொத்திருந்தது
மல்லிகையே உன்னை நான்
வாங்கிவரும்போது நீ சிறு தளிர்

இருப்பைச் சிறுபெட்டிக்குள் அடக்குகிறேன்
சிரிப்பை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறேன்
எந்தப் பெட்டிக்குள் எடுத்துப்போவது
எஞ்சிய மனிதரை
சொற்களற்றுப் புலம்புமிந்த வீட்டை
வேம்பை 
அது அள்ளியெறியும் காற்றை
காலுரசும் 
என் பட்டுப்பூனைக்குட்டிகளை

(இருப்பற்று அலையும் துயர் – தமிழ்நதி)


இவ்விதமான பல புகலிடப் பெண்கள் தம் வாழ்பனுபவங்களைப் பதிந்து வருகின்றனர். தொகுப்புகளிலும் சஞ்சிகைகளிலும் இணையதளங்களிலும் ஒரு தொகைப் புகலிடப் பெண் கவிஞர்கள் எழுதிவருவதைக் காண முடிகின்றது.

ஒரு ஆழமான காயத்திலிருந்து துளித்துளியாக, பொறுமையாகச் சொட்டும் குருதிபோல எழுதப்பட்ட கவிதைகள் பற்றி இன்னொரு பெண்ணாகவும் கவிதை எழுதுகின்ற ஒருத்தியாகவும் இருந்தபடி நான் பேசுவது மிகப்பெரும் வலியை மீள உணரச்செய்கின்றது. ஒரு விதமான திகைப்பை, துணுக்குறுதலை, வெப்பிசாரங்களை, மெல்லிய குறுகுறுப்பை, பச்சாதாபங்களைக் கிளறிவிட்டிருக்கிறது. துயரமும் கருணையும் கனவும் அன்பும் திளைத்தலும் வெடிப்பும் விரிசலும் ஆழமும் மாயமும் பெருக்கெடுப்பின் வியாபகமும் எனத் திக்குமுக்காடுமளவுக்குப் பெண் எனும் பிரவாகம் தூக்கி வீசப்பட முடியாத கேள்வியாய்ப் பூமியை மூடுகின்றது.

கவிதைகள் பற்றிப் பேசுவது என்பது என்ன? அது நமக்குப் புரியாத அந்நியமான பழக்கப்படாத ஒன்றைப் பற்றியதல்ல. அது புனிதமானதோ கைக்கெட்டாது அந்தரத்தில் பிடிபடாது தொங்கும் ஜாலமோ அல்ல. பெண் கவிதை இந்த வாழ்வையும் சமூகத்தையும் இயற்கையினையும் மனித அறம் பற்றியும் பேசுவதுதான். தேசம், இயற்கை, கலாச்சாரம், மனிதன் இவைகள் அனைத்தையும் புரிந்துகொள்ள விளைவதும் கவியொன்றைப் புரிந்துகொள்ள முயல்வதும் ஒரேவிதமானதுதான்.

புரிதலுக்கும் புரியாமைக்கும் நடுவில் மறைந்திருக்கும் நுண்ணுணர்வுகளை திளைப்பிற்கும், காயங்களிற்கும் நடுவேயான அனுபவத்தைக் கண்களுக்கும் உள்ளத்திற்குமான இசையைக் கேட்பது பற்றியே நான் பேச விரும்புகின்றேன். அதாவது பெண் என்பவள் நீருக்கடியே கொண்டு செல்லும் மொழி என்ற நெருப்பைப் பற்றி, ஒன்றுபோலவே தோன்றும் வெவ்வேறு நதிகள் பற்றியும்.

சமகாலத்தில் பெண் இலக்கியத்திற்கான புதிய மரபும் திறன்களும் நவீன மொழியில் உருவாகியுள்ளன. பெண்களுடைய சிந்தனைத்தளம், படைப்பின் கூறுகள், அவரவருக்கான அடையாளத்தை முன்னிலைப்படுத்துகின்றன. பிரத்தியேகமான குரலுடன் ஒவ்வொரு பெண்ணும் பேச முற்படுகின்றாள். தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் பெண்ணின் அடையாள மையம் சிதைக்கப்படும்போது பெண் கவிதையின் உள்முகத் தன்மை புதிய அடையாளத்தைப் பெற்றது. பெண் உடலின் அரசியலை, அகச்சமூக முரண்களை, ஒரு புதிய வெளியில் பெண் மொழிக் கவிதைகள் மிக வலுவாகத் தம்மை நிறுவியுள்ளன. ஒடுக்கப்பட்ட பெண் உடலுக்குள் கிளர்ச்சி, வேட்கை, வலி, கனவு, காயம், வதைகள் என்பனவற்றைச் சுமந்து பெண்ணுடலானது வாழ்வின் முன்னுள்ள களமாகவும் விளங்குகின்றது. அதேநேரம் தனித்துவமான உணர்வுகளை உருக்கமாகவும் உயிரோட்டமாகவும் சொல்கின்ற கவிதைகள் ஏராளமாக எழுதப்பட்டு வந்திருக்கின்றன. பெண் அரசியல் கவிதைகள் அவை கொண்டுள்ள முக்கியத்துவத்தின் அடிப்படையில் முழுமையான கலைப்படைப்பாகவும் மேலோங்கிக் காணப்படுகின்றன. இக்கட்டுரையானது அனைத்துப் பெண் கவிதைகளையும் உணர்வுத் தளத்தில் நின்றே அணுகியிருக்கின்றது. இலங்கைப் பெண் கவிதைகளின் உட்பிரிவுகளையும் காலமாற்றத்தின் நிகழ்வுகளையும் அரசியல் மாற்றங்களையும் வகைப்படுத்திப் பார்க்கின்றது. சார்பற்று இயங்கும் அவதானத்தோடு இக்கட்டுரையை அமைக்க முயன்றிருக்கிறேன்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான பெண்கவிதைகள் பற்றிய அவதானத்தில் பெண்களின் கவிதைகள் ஆறுதல் மொழியாக, மாபெரும் துயருக்கான கதறலாக, ஆன்மாவிற்குத் தேவைப்படும் சிகிச்சை மொழியாக எழுதப்பட்டிருக்கின்றதா? மிகப்பெரும் சமூக அவலத்தின் சாட்சிகளாய் அல்லது பாதிக்கப்பட்ட பெண் உடலின் மனதின் குரலாய் அந்த மண்ணிலிருந்து வெளிப்பட்டிருக்கின்றதா? நிசப்தமாக ஒளிந்திருக்கும் அந்த இருதயங்களிலிருந்து வெடித்துக்கிளம்பும் உண்மைகள் மானுட வரலாற்றின் வெளியில் உயிர்மொழியாய் உலவுகிறதா? இங்கு நாம் உரையாடிக்கொண்டிருக்கும் பொழுதில், தான் பெண் என்பதையே மறந்து அங்கு உறைந்துபோயிருக்கும் இன்னொரு பெண்ணின் கண்கள், அந்தக் கண்களிலிருக்கின்ற சூனியம், சாம்பல் சுழலாய் புகையாய் நம் புன்னகைகளின் மேல், கனவுகளின் மேல், பல்லாயிரம் பல்லாயிரம் கருகிய குரல்களின் தூசிப்படலங்களாக கவிவதாக உணர்கிறேன். எங்களிடம் இதற்கேதும் பதிலிருக்கின்றதா? இந்தக் கேள்வியை அனைத்துப் பெண் கவிஞர்களிடமும் முன் வைக்கின்றேன்.


இ.


1990க்கும் 2000 ஆண்டுகளின் பின்னர் இன்று வரையுமான இலங்கைளில் வெளிவந்த, பெண்களின் சில கவிதைத் தொகுப்புகள் பற்றிய விபரம் மேலதிகத் தகவல்களுக்காகத் தனியே தரப்படுகின்றன : 

வானதியின் கவிதைகள் (1990), பாரதியின் காதோடு சொல்லிவிடு (1992), கஸ்தூரியின் ஆக்கங்கள் (1992), சிவரமணி கவிதைகள் (1993), தூயவளின் நிமிர்வு (1993), சுல்பிகாவின் விலங்கிடப்பட்ட மானிடம் (1995), உயிர்த்தெழல் (2001), உரத்துப்பேசும் உள்மனம், செல்வி - சிவரமணி கவிதைகள் (1997), ஆதிலட்சுமி சிவகுமாரின் என் கவிதை (2000), ஒளவையின் எல்லை கடத்தல் (2000), ஆழியாளின் உரத்துப் பேச (2000), துவிதம் (2006), தர்மினியின் உதயத்தைத் தேடி (2002), மைதிலியின் இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள் (2003), லறினா ஹக்கின் வீசுக புயலே (2003), லுணுகலை ஹஸீனா புஹாரியின் மண்ணிழந்த வேர்கள் (2003), யோ.கார்த்திகாவின் ஆணிவேராகிடுமோ, அம்புலியின் மீண்டும் துடிக்கும் வசந்தம் (2004), ஈழவாணியின் சிதறல் (2004), தலைப்பு இழந்தவை, மைத்ரேயின் கல்லறை நெருஞ்சிகள் (2004), அனாரின் ஓவியம் வரையாத தூரிகை (2004), நளாயினி தாமரைச்செல்வனின் நங்கூரம் (2005), உயிர்த்தீ, சுதாகினி சுப்ரமணியத்தின் அடையாளம் (2005), றஞ்சனி கவிதைகள் (2005), எனக்குக் கவிதை முகம் (2007), தமிழ்நதியின் சூரியன் தனித்தலையும் பகல் (2007), வினோதினியின் முகமூடி செய்பவள் (2007), வி.கலைமகளின் முடிவில்லாப் பேச்சுக்கள் (2007), ஆகர்ஷியாவின் நம்மைப் பற்றிய கவிதை (2007), உடல் பச்சை வானம் (2009), பெருங்கடல் போடுகிறேன் (2013), ஃபஹீமா ஜஹானின் ஒரு கடல் நீரூற்றி (2007), அபராதி (2009), மலராவின் புதிய இலைகளால் ஆதல் (2009), ஆதித்துயர் (2010), பெண்ணியாவின் என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை! (2006), இது நதியின் நாள் (2008), அஷ்ரபா நூர்தீனின் ஆகக் குறைந்தபட்சம்...! (2012), ஸர்மிளா ஸெய்யித்தின் சிறகு முளைத்த பெண் (2012), எஸ்.பாயிஸா அலி கவிதைகள் (2012), மனோகரியின் மழுங்கடிக்கப்பட்ட அடையாளங்களும்(2013).


ஈ.

1980களுக்குப் பின் வெளிவந்த பல்வேறு இலங்கைப் பெண் கவிஞர்களின் குறிப்பிடத்தக்க தொகுப்புகள்: 

சொல்லாத சேதிகள் (1986), மறையாத மறுபாதி (1992), கனல் (1997), உயிர்வெளி (1999), எழுதாத உன் கவிதை (2001), வெளிப்படுத்தல் (2001), பெயல் மணக்கும் பொழுது (2007), மை (2007), இசை பிழியப்பட்ட வீணை (2007), ஒலிக்காத இளவேனில் (2009), பெயரிடாத நட்சத்திரங்கள் (2011), கவிதைகள் பேசட்டும் (2010) போன்றவற்றைக் கூறலாம்.

உ.

உசாத்துணை நூல்கள்:

துவிதம் (2006) 
பெயல் மணக்கும் பொழுது (2007)
பூவல் (உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012, கொழும்பு)
ஞானம் (ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ் – 2012, கொழும்பு)


---------------------------------------------------------------------------------------------------------------


2014 ஜனவரி -  கோயம்புத்தூரில் நடைபெற்ற தாயகம் கடந்த தமிழ்
மாநாட்டில் வாசிக்கபட்ட கட்டுரை.