அனார்: பச்சை வான உடலும் கவிதை முகமும்
- கநாசு.தாஜ் (இந்தியா)
‘கவியிடமுள்ள நவீன மனம்தான், நவீன கவிதையை படைக்கும்.' நவகவிதையின் அடிப்படை குறித்து துல்லியமான அபிப்ராயம் கொண்டிருக்கும் இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம் என்கிற 'அனார்' கிழக்கிலங்கை சாய்ந்தமருதுக்காரர். மதரீதியான பவித்திரங்கள் கூடிய மத்தியத்தர குடும்பம்! அவர்களது பகுதியில் இனக் கலவரம் சூடுபிடித்த காலகட்டத்தில், சமூகத்தில் நிலவிய அச்சம் காரணமாக உயர்நிலை பள்ளிப் படிப்பு மட்டும் என்கிற அளவில், படிப்பை முடித்துக் கொண்டு, வீட்டுக்குள் வளையவர வேண்டிய நிலை!
// வீடு தனிமைக்குள் கேட்காத/ கதறலாய் இருக்கிறது/ மூச்சுத் திணறுமளவு பூட்டிய அறையினுள்/ தனிமையின் புகைச்சல்// - தனிமையின் இருப்புக் குறித்த மனவேதனையை வேறொரு செய்தியினை கூறவந்த கவிதையொன்றில், கவிஞர் இப்படி குறிப்பிடும் சிரமத்தையொத்த சிரமத்தையும், மனசங்கடத்தையும் கலைய புதுக்கவிதை வாசிப்பெனத் தொடங்கி அதனோடு நேசமும் ஈடுபாடும் கொண்ட நாட்களில், தனக்குள்ளும் ஓர் கவிஞன் உயிர்ப்போடு இருப்பதை கண்டுணர்ந்து எழுத முனைகிறார். கவிதை எழுதத் தொடங்கும் யவரையும் போல யதார்த்த முனையிலிருந்தே தனது கவிதைகளை தொடங்கிய அவரின் இன்றைய கவிதைகள் வியக்கச் செய்யும் விசேசங்கள் கொண்டதாக இருக்கிறது!
// ஒரு காட்டாறு/ ஒரு பேரருவி/ ஓர் ஆழக் கடல்/ ஓர் அடை மழை/ நீர் நான்/ கரும் பாறை மலை/ பசும் வயல் வெளி/ ஒரு விதை/ ஒரு காடு/ நிலம் நான்/ உடல் காலம்/ உள்ளம் காற்று/ கண்கள் நெருப்பு/ நானே ஆகாயம்/ நானே அண்டம்/ எனக்கென்ன எல்லைகள்/ நான் இயற்கை/ நான் பெண். //
வலைப்பதிவொன்றில் 'நான் பெண்' என்கிற இந்தக் கவிதை, எதேச்சையாகக் கிட்ட, வாசித்த நாழியில் நிமிர்ந்து உட்கார்ந்தேன்! பெண்ணியத்திற்கு குரல் கொடுக்கும் எந்தவோர் மனமும் அந்த நாழிகையில் என் நிலை கொள்ளாமல் முடியாது! வார்த்தைகளின் அடுக்காக அது சொல்லப்பட்டிருந்தாலும், கனக்கும் அதன் படிமச்செறிவுகளின் வீச்சு கவனிக்கத் தக்கது. பெண் குறித்த கீர்த்திகளும் தீர்க்கங்களும் தைரியலட்சணத்தோடு சொல்லப்பட்டிருப்பது மேலும் குறிப்பிடத் தகுந்தது.
மென்மையின் அடையாளமாக பெண்களை கவிதைக்குள் உட்காரவைத்துப் பார்த்த காலம் மலையேறிவிட்டதென்றாலும், 'நான் பெண்' என்கிற இந்தக் கவிதை, பெண்கள் உணரும் சுயத்தின் எழுச்சியாக, உலகம் தழுவிய அவர்களது உள்ளத்துப் பிரகடனமாக, எவராலும் தவிர்க்க இயலாத நிஜத்தின் பதிவாக வீறுகொண்டிருப்பது நம்ப முடியாத நிஜம்! பெண்ணியம் பேசும் நம் பெண்கவிஞர்களின் கவிதைகளூடே இது புதிய தரிசனம்!
இந்தக் கவிதையை வாசித்ததற்கு பிறகான நாட்களில், 'யார் இந்த அனார்?' எனத் தேடி அவரது ஆக்கங்களைப் பெற்றேன். 'எனக்குக் கவிதை முகம்'(Sep-2007) / 'உடல் பச்சை வானம்'(Dec-2009) ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளில் அவர் சுழுவாய் சிக்க வாசித்தேன்! மொழியால், சிந்தையால், கலைநுட்ப முயற்சிகளால் மெருகூட்டப்பட்ட அவரது வார்த்தைகள் அந்த இரண்டு தொகுதிகளிலும் பச்சைப் பசேலென செழுமை கூடித் தெரிய, நான் கொண்ட இன்னுமான தரிசனங்களை சொல்லி மாளாது!
அவரது கவிதைகள், ஏனைய கவிதைகளின் வாசிப்பைப் போலவே முதல் வாசிப்பு அத்தனைக்கு எளிமையானதாக இல்லை. சரியாக குறிப்பிடணும் என்றால், கூடுதலாகவே சிரமம் தந்தது. கடல் தாண்டிய தமிழரான கவிஞர் அனாரின் கவிதைகளை உள்வாங்கிக் கொள்ள முன்தெளிவுகள் நிறைய வேண்டியிருந்தது. தவிர, நவகவிதைகளுக்கே உரிய திமிரான, திடமான முறுக்குகள் அத்தனையையும் வாசிப்பில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கவிதையின் படிமங்களை உள்வாங்கிக்கொள்ள சொல்லொன்னா நேரமும் பிடித்தது! அடுத்தடுத்த தீர்க்கமான வாசிப்பில், வரிக்குவரி மின்னிய வார்த்தைகளின் ஜாலங்களில் மனம் தத்தித்தத்தி தாவியது.
மறந்தும் நீங்கள், உடலை வானமாகவோ, வானத்தை பச்சையாகவோ கற்பனை செய்திருக்க முடியாது! ஆனால் பாருங்கள் கவிஞர் அனார், உடலை 'பச்சை வானம்' என்றிருக்கிறார்! யோசிக்கிற போது, உயிர்கொண்ட ஜீவராசிகளின் பருவம் தகிக்கும் உடல்கள் பச்சைவானம்தான்! அந்த இரண்டு தொகுதிகளில் உள்ள பெரும்பாலான கவிதைகள் 'பச்சை வான உடலை' மெய்ப்பிப்பதாகவே இருக்கிறது! உடல் கூற்றுப்படிக்கும், இயற்கைக்கு இசையவும் பருவம் படரவிடும் கிளர்ச்சிகளை, அது தரும் அனுபவ நெகிழ்ச்சிகளை கிஞ்சித்தும் மறைக்காமல் பதிவு கண்டிருக்கும் கவிஞரது துணிவு பாராட்டுக்குரியது!
இரவு/ பகல்/ குளிர்/ மழை/ கடல்/ ஒளி/ நிழல்/ கனவு/ மண் புழு/ வண்ணத்துப் பூச்சி/ தனிமை/ தகிப்பு/ தவிப்பு/ ஏக்கம்/ புலம்பல்/ பசலை மற்றும் சுயம் கொள்ளும் நம்பிக்கை, அவநம்பிக்கை என்பதான பற்பல குறியீடுகளின் வழியாக, படிமங்களின் ஊடாக அவர் நிகழ்த்தியிருக்கும் நுட்பக் கவிதைகளின் பயணம், வாசகனை அவனது நிலையிலிருந்து இன்னொரு தளத்திற்கு இட்டு செல்லக்கூடியதாக இருக்கிறது. அங்கே அவன் கண்டுணரும், தனது வசந்தகால நெகிழ்ச்சிகளின் வழியே, கவிஞரின் அனுபவப் பதிவை மறுக்க முடியாத சத்தியமென அறிவான்!
பரந்துபட்ட அளவில் காதலையும் காமத்தையும் கவிஞர் தன் கவிதைகளில் கையாண்டிருக்கிறார் என்றாலும், அவற்றை நேர்கோட்டில் அடிபிசகாது, எல்லை தாண்டாது நிகழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தகுந்தது. காதலித்து கைப்பிடித்தவனையே தன் கவிதைகளின் நாயகனாக உருவகப்படுத்தி, ரசம்சொட்டச் சொட்ட படைப்பு கண்டிருக்கும் நேர்த்தி கவனம் கொள்ளத்தக்கது. காதலையும் காமத்தையும் சளிக்கச் சளிக்க சொன்ன எத்தனையோ கவிஞர்களின் 'எல்லை தாண்டிய' கவிதைகள், நம் முகச்சுழிப்பில் விழுந்து மறைந்ததை இங்கே நாம் நினைவுகொள்ள கூடுமெனில், அனார் சாதித்திருக்கும் சுத்தத் தெளிவின் விசேசம் புரியும்!
*
'சுயபலம் பொருந்திய தேவதைகள் விடுதலை பெற்ற பரவச வாழ்வொன்றை அதனோடு இணைந்ததாக கனவும் வேட்கையும் அழகும் அனாரின் கவிதை உலகத்தின் சிறப்பான வரைப்படங்களாக உள்ளன.' -எனக்குக் கவிதை முகம் தொகுப்பின் முன்னுரையில், அனாரின் கவிதை உலகம் குறித்து கவிஞர் சேரன் இப்படியானதோர் உட்சப்பட்ச மதிப்பீட்டை பதிந்திருக்கிறார்! என்னுடைய பார்வையிலும், அனாரின் கவிதைகள் அத்தகைய பாராட்டுதலுக்குரியதே!
// நீ வரைந்து காட்டு/ என் மறைந்துள்ள முகத்தை/ நீ வரைந்து காட்டு/ அடைய முடியாத அந்த இரவை/ இன்னும் வெளிப்படாத கனவை/ பூக்க விரும்புகின்ற கவிதையை/ மலையடிவாரத்தே/ பசுந் தாவரங்களின் மத்தியில்/ இட்டு வைத்திருக்கும் பொன் முட்டையை/ கண்டெடுப்பதற்கான திசையினைச் சொல்லிக்கொடு பறவைக்கு/ அருவியின் மடியில்/ அபூர்வ ராகங்களுடன் புதைந்து போயுள்ள (எவராலும் பூரணமாக இசைக்க முடியாமற்போன)/ இசைக் கருவியை மூழ்கி எடு/ பொக்கிசங்களே உடலாகி/ நர்த்தனம் பெருகும் சிற்பம் ஒளிந்துள்ள/ பெருங்குகை வாயிலில் ஏற்றப்படாத சுடரை/ ஒளிர விடு/ மேகங்களுக்கு மேலேறி சென்று/ நிலவின் கதவைத் திறந்து/ எடுத்துக் கொள்/ கொஞ்சமும் குறையாத என்னை.//
'பூக்க விரும்புகின்ற கவிதை' தலைப்பின் கீழ் உள்ள கவிதையைத்தான் மேலே வாசித்தீர்கள். மீண்டும் ஒருமுறை அந்தக் கவிதையையும், அதன் தலைப்பையும் நீங்கள் வாசிக்கக் கூடுமெனில் கவிதையின் நேரடியான சுகந்தத்தில் திளைப்பீர்கள்! வேட்கை கொள்கிற கவிதைவயமான பெண் உடல், இன்னும் வெளிப்படாத மிஞ்சிய கனவோடான பாலியல் ஆசைகளை ஆற்றுப்படுத்த தனதானவனிடம் வைக்கும் கோரிக்கைப் பாங்கையும், 'நீ வரைந்து காட்டு/ என் மறைந்துள்ள முகத்தை' என்று தொடங்கி, கவிதையின் மொத்த வரிகள் தரும் அழுத்தத்தை கண்டுணரும் நாழியில், வேர் பிடித்திருக்கும் நம் உணர்வுகளும் சிலிர்க்கும். தப்புதல் இயலாது.
தலைவன் தலைவிக்கிடையேயான ஊடல், கூடல், களிப்பு, போன்ற பாலியல் ரசங்களை பேசிய சங்க காலத்துப் பாடல்களின் வரிகளுக்கு ஒப்பான, அல்லது அதனையும் விஞ்சும் வரிகளை, 'பிச்சி' கவிதை வரிகளில் காணுங்கள். தலைவனின் கூடல் குறித்த, வேட்கைகளின் தாபங்கள் குறித்த ஊடல்கள் அத்தனையும், உங்களை மீறி உங்களை மயக்கும்! அப்படியானதோர் மந்திரமொழியை பாரம்பரியத்திடமிருந்து கவிஞர் கற்றுத் தேர்ந்திருக்கிறாரோ என்கிற வியப்பும் ஒருசேர எழும்!
// கடல் திறக்கும் கள்ளச் சாவிகளென/ பத்து விரல்கள்/ நிலவு நனையும் உயரத்தில்/ தெறிக்கின்றது மா கடல்/ மரம் முழுக்க கனிகள் குலுங்கும்/ உச்சாணிக் கொம்பில்/ மயக்கி படமெடுத்தாடுகிறாய்/ பாரம்பரியம் கொண்டாடும் பாணனின் இசை/ புலன்களை ஸ்பரிசிக்கின்றது/ புற்றிலிருந்து வெளியாகின்றேன்/ காற்றின் அதிர்வுகளில் பளிச்சிடுகிற மயக்க இழைகள்/ விரிகின்றன ஒவ்வொன்றாய்/ குளிர்ந்து, இறுகப்பற்றி/ உதடுகள் தீட்டுகின்ற மாயத் திசையில்/ பனிப்பறவைகளின் குலாவுகை/ கனவின் கத்திகள் பாய்ந்த கவிதையை/ ருசிக்கின்றோம் மிச்சம் வைக்காமல்/ வானம் பூனைக் குட்டியாகி/ கடலை நக்குகின்றது.// காமம் கொள்ளும் உடம்பை வானமாகவும், வானத்தைப் பூனைக்குட்டியாகவும் உருவகப்படுத்தி, கடலளவான காமத்தை பூனைக்குட்டி நக்க முனைவதாக அவர் காட்டும் சித்திரம் அசாதாரணமானது.
காதல் கணவன்/ அவனோடான கூடல்/ அதன் உச்சம் என்பனவற்றை தீர பேசும், 'மின்னல்களைப் பரிசளிக்கும் மழை' கவிதையில் இருந்து சில வரிகள். // ஓயாத பரவசமாய்/ கோடை மழை/ பின் அடை மழை/ அளவீடுகளின்றித் திறந்துகிடக்கும் இடங்கள் எங்கிலும்/ பித்துப்பிடித்து பாட்டம் பாட்டமாய்/ மழை திட்டங்களுடன் வருகின்றது/ ஒவ்வொரு சொல்லாகப் பெய்கின்றது/ தாளமுடியாத ஓர் கணத்தில் எனக்கு/ மின்னல்களைப் பரிசளிக்கின்றது/ அது அதன் மீதே காதல்கொண்டிருக்கிறது/ எப்போதும் மழையின் வாடை உறைந்திருக்கும்/ ராஜவனமென/ பசுமையின் உச்சமாகி நான் நிற்கிறேன்/ வேர்களின் கீழ் வெள்ளம்/ இலைகளின் மேல் ஈரம்/ கனவுபோல பெய்கின்ற உன் மழை //
காதல் கொண்ட பெண், தன் காதலனை நினைத்து விசனம் கொள்வது ஒருவகை காதல் பெருக்கு அல்லது நோய்! தான்கொண்ட அத்தகைய அனுபவ யதார்த்தத்தை அனார் பதிவு செய்திருக்கும் வீச்சும், அந்த யுக்தியும் கனவின் பெருக்கே என்றாலும், இத்தகைய கற்பனை இன்னொரு கவிஞனுக்கு அத்தனை சீக்கிரம் தகையாது. மலரை வண்ணத்துப் பூச்சி வட்டமிடுவதைத்தான் நீங்களும் நானும் கண்டிருக்கிறோம். இங்கே வண்ணத்துப் பூச்சியை மலர் வட்டமிடுவதை 'வண்ணத்துப்பூச்சியின் கனாக்காலக் கவிதை' யில்.ரசியுங்கள். // உன் தந்திரத்தின் மாயம் அளவற்றது/ உள்ளே பாடல்போல மிதக்கின்ற வண்ணத்துப்பூச்சி/ வெளியே பிடித்துவைக்க முடியாத கனா/ பைத்தியம் பிடித்திருக்கும் இந்நாட்களிலெல்லாம்/ வண்ணத்துப்பூச்சியை மொய்க்கின்ற மலராக/ பறந்து கொண்டே யிருக்கிறேன்.//
கவிஞர், இந்தத் தொகுப்பில் வாழ்வுசார்ந்த மனவழுத்தங்களை, அதன் துயரங்களை, இம்சிக்கும் வலிகளை பேசவே இல்லையா? என்றால், பேசியிருக்கிறார். சகமனிதர்களின் இரத்தம் சிதறுபட, காணுமிடமெல்லாம் அதன் சுவடுகள் அச்சம் தர, நிகழ்ந்தேறிய அவர்களின் உள் நாட்டுப் போரைப் பேசும் 'மேலும் சில இரத்தக் குறிப்புகள்'/ இயற்கையோடு இழைந்த அழகிய கற்பனை வளங்களோடு கவிஞர் பதிந்திருக்கும் 'எட்ட முடியாத அண்மை'/ கலாச்சாரத்தை முன் வைத்து பெண் இரண்டாம் பட்ச பிரஜையாக கணக்கிடும் சமுதாயத்தின் மீதான கோபமாக 'பெண்பலி'/ வாழ்வில் பலவிதான நிலைகளை எதிர் கொள்ளும் பெண்களிடமிருந்து தன் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி, சமூக மாற்றத்தை காணப் பிறந்தவளாக தன்னை பிரகடனம் படுத்தும் 'அரசி' போன்ற கவிதைகள் இத்தொகுப்பில் இருந்தாலும், பருவம், காதல், உடல், வேட்கை, ஊடல், கூடல் பற்றியதான கவிதைகளின் தொகுப்பே 'எனக்குக் கவிதை முகம்'!
*
'எனக்குக் கவிதை முகம்' தொகுப்பில் உள்ள கவிதைகளின் வெளிப்பாட்டுக் கிளர்ச்சிகளை கடந்து வந்தக் கவிதைகளின் தொகுப்பாக 'உடல் பச்சை வானம்' ஏற்றம் பெற சிறப்பு கொள்கிறது. தவிர, அவரின் கவிச்செறிவின் முதிர்ச்சியும் கொண்டதான இத்தொகுப்பின் கவிதைகளை கவிஞரின் அடுத்தகட்டக் கவிதைகளாக கணிக்க முடியும்.
கருவுற்றிருந்தக் கால நினைவு/ தனது குட்டி பையன்/ மூத்த சகோதரி/ காதலுக்கு அருகான்மையிலிருந்த பரபுருஷன்/ யுத்தக் கேடுகள்/ பயணப்பட்ட மலைவாசஸ்தலங்கள்/ ரசித்த பௌத்த பீடங்கள்/ ரசம் சொட்டும் சிற்பங்களின் அழகென, புதியதள செய்திகள் பல கொண்ட கவிதைகள் இத்தொகுப்பில் தாராளப்பட்டிருக்கிறது!
இந்தத் தொகுப்பின், விசேசமான கவிதைத் தேர்வாக நான் காண்பது, வாழ்வை முன்வைத்து, தலைவி தலைவனிடம் கொள்ளும் கோபதாபக் கவிதைகளையே! அந்தக் கோபத்தாபங்கள், நயம் மிளிர கவிதைக்குள் பதிவாகி இருப்பது கவனிக்கத் தக்கதாகவே இருக்கிறது.
// நீ இவ்வளவு பனிக் காலத்தில்
என்னைத் தேடி வராதே
எல்லாமே குளிரில் ஒடுங்கி
இரத்த ஓட்டமற்றுவிட்ட பிறகு
நெருப்புப் பொறிகளை உருவாக்கும்விதம்
முத்தங்களைச் சொரிய முடியாது //
(உறைபனிக்காலம்)
*
// இசை பாறையாகிவிட்டது
காலம் நிசப்தமாகிவிட்டது
அன்பின் உணர்வுகளில்
தூறல் சொட்டும் குரலில்
மறைந்திருக்கிறது கொலைவாள்
நமக்கிடையே
தூக்குமேடைக்குமேல் தொங்கும் கயிறு
அல்லது
ஆலகால விசம் //
(நிசப்தத்தில் குளிரும் வார்த்தை)
*
// கண்ணில் படாத ஒரு சாகசநிழலில்
ஸ்தம்பித்துப் போயிருந்த கடலில்
சிறு துண்டை வெட்டி உன் வாயுள் வைக்கிறேன்
நீ 'பூப்போல' என்கிறாய்
..............................
உப்புச் சுவையாய் இரு உடல்கள் மாறினோம்
அலைகளை எழுப்பி எழுப்பிக் கடல் ஆகினோம் .//
(வித்தைகள் நிகழ்த்தும் கடல்)
*
// கனத்த பனிமூட்டம்
பாதையை மறித்து நிற்கிறது
தொலைவில் அந்த உருவம்
வந்துக் கொண்டிருக்கிறதா
போய்க்கொண்டிருக்கிறதா
எனத் தெளிவாகத் தெரியவில்லை //
(அழைப்புகள் வராத செல்போன்)
*
// கொதிநிலை விதிக்கப்பட்டிருக்கும்
எரிமலைநெருப்பு உங்கள் முன்
மெழுகுவர்த்திகளில் ஏற்றப்பட்டும்
ஊதுபத்திகளில் புகையவிடப்பட்டும்
அவமானத்துக்குள்ளாவதன் சித்திரவதை நான் //
(வெளியேற்றம்)
மேலே தந்திருக்கும் அத்தனைக் கவிதை வரிகளும் 'உடல் பச்சை வானம்' தொகுப்பின் ஐந்து பெரிய கவிதைகளிலிருந்து நறுக்கப்பட்ட வரிகள்! வாழ்வினூடான கசப்பான நிகழ்வுகளை அதன் வலியோடு மனசஞ்சலங்களோடு இக்கவிதைகளில் தீர பதிவு கண்டிருக்கிறார். அதன் நிதர்சனத்தை, உங்கள் பார்வைக்கு விரிக்கும் பொருட்டே அந்தச் சில கவிதைகளிலிருந்து இந்தச் சில வரிகள்! .
தாம்பத்தியத்தில் கொண்ட சலிப்பு குறித்து 'உறைபனிக்காலம்'த்திலும்/ தலைவியின் மனம் பாறையாக இறுக, மரண முனைக்கு வாழ்வு நகர்வதாக 'நிசப்தத்தில் குளிரும் வார்த்தை'யிலும்/ மீண்டும் கிளைத்த காதலையும் கூடலையும் முன் வைத்து, தலைவியும் தலைவனும் கூடி மகிழ்வதை 'வித்தைகள் நிகழ்த்தும் கடல்'லிலும் / கூடலுக்குப் பின் அவர்களிடையே துளிர்த்து வளர்ந்த மீண்டுமான அன்பு, தலைவிக்கு கேள்விக் குறியாவதை 'அழைப்புகள் வராத செல்போன்'னிலும்/ பாழ்பட்டுப்போனதாக தன் வாழ்வின் நிலைக்குறித்து தலைவி கொள்ளும் விசத்தின் கொதிநிலை, 'வெளியேற்றம்' கவிதை வரிகளிலும் நீங்கள் காணமுடியும். இதனையொட்டிய பூரணத்திற்கு மேற்குறிப்பிட்ட அந்த ஐந்து கவிதைகளையும் நீங்கள் தேடி வாசித்தறிவது சிறப்பாக இருக்கும்.
'உடல் பச்சை வானம்' தொகுப்பில் 'நிருபரின் அறிக்கை' என்கிற அரசியல் சார்ந்த கவிதையொன்று உண்டு. அதன் கட்டுமானம் புதிய கோணம் கொண்டது. கவிஞரின் புனைவு திறனில் இதுவோர் மையில்கல்! நிருபர் ஒருவர் தான்சார்ந்த பத்திரிகைக்கு தரும் அறிக்கையினை ஒத்த அந்தக் கவிதையின் செய்திகளும், அது வெளிப்படுத்தும் நயதெறிப்புகளும் அசாத்தியமானது. கீழே அந்தக் கவிதையில் இருந்து....
// இறந்தவனின் கண்கள் மூடியிருக்கின்றன/ அந்த கண்களின் இறுதி எதிரொலி/ எவருடைய ஆன்மாவிலும் மோதவில்லை/ மூங்கில் பற்றைக்குள் வீசப்பட்டவனை/ காற்றும் சூரியனும் அளைகின்றன... / இரண்டொரு இலைகள் விழுந்து அவனுக்கு/ இறுதி மரியாதை செய்கின்றது/ மர்ம மனிதன்/ கொலை புரிந்த களைப்பில்/ எங்கேனும் பீர் குடித்துக் கொண்டிருக்கலாம்/ அல்லது தலைவனுக்கு தகவல் சொல்ல/ sms செய்துகொண்டிருக்கலாம்/ முற்றாக பழுதுபட்ட 'இயந்திரம்' புகைவிடத் தொடங்கி/ தேசத்தின் முகம் இனங்காண முடியாதவாறு/ கரி அப்பிக்கிடக்கின்றது/ உயிரோடிருக்கின்றது குற்றம்/ உயிர் விட்டிருக்கின்றது நீதி/ நிலத்தில்... வாழ்க்கையில்.../ தன்னுடைய நம்பிக்கையில்... பிணம்/ உணர்வற்றுத்துக் கிடக்கிறது... //
நவீன தமிழ் இலக்கியத்தில் ஈடுப்பாடு காட்டும் ஈழ/ இலங்கை சார்ந்த விமர்சகர்களில் சிலர், அனாரின் கவிதைகளை சிறப்பாக வரவேற்று விமர்சனம் செய்திருக்கிறார்கள். ஆனாலும் பாருங்கள் கவிஞரின் அரசியல் சார்ந்த கவிதைகளுக்கே அவர்களது வரவேற்ப்பில் முன்னுரிமை அதிகம்! மேலும், கவிஞரின் அரசியல் கவிதைகளை தாங்கள் சார்ந்த கொள்கை நிலைப்பாட்டிற்கு நெருக்கமாகவும் வைத்துப் பார்க்கின்றார்கள்.
விமர்சனத்திற்கு நான் எடுத்துக் கொண்ட இரு கவிதைத் தொகுப்புகளிலும், கவிஞரின் அரசியல் சார்ந்தக் கவிதைகள் என்பது குறைவிலும் குறைவு! தவிர, எழுதப்பட்டிருக்கும் அந்த ரக கவிதைகளும் கூட, அமைப்பு சாரா நிலைப்பாட்டைக் கொண்ட கவிதைகளாகவே காண்கிறேன். ரத்தம்சிந்த அழிபடும் சக மானிதர்களின் உயிர்களுக்காக மனிதநேயம் கொண்ட இன்னொரு உயிர், கவிதையின் வழியே சஞ்சலம் கொள்கிறது. அவ்வளவுதான்! இங்கே ஈழ/ இலங்கை விமர்சகர்கள் பெரும்பாலும், கவிஞரது மதம் சார்ந்த பின்புலத்தையும், அவரது கிழக்கு இலங்கை சார்ந்த பின் புலத்தையும் கருத்தில் கொண்டு அவரது அரசியல் கவிதைகளை மதிப்பீடு செய்திருக்கின்றார்கள்! அப்படியாக மதிப்பீடு செய்வதென்பதற்கும், கவிதையை கவிதையாக விமர்சனம் செய்வதென்பற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
'எனக்குக் கவிதை முகம்'/ 'உடல் பச்சை வானம்' இவ்விரு தொகுப்புகளில் உள்ள கவிதைகளில் அவர் உபயோகிக்கும் குறியீட்டுச் சொற்கள், படிமங்கள், தேர்ந்த சில வார்த்தைகள், மற்றும் சில காட்சிகளும் கூட திரும்பத் திரும்ப வருவதாக இருக்கிறது. இருட்டு, இரவு என்கிற வார்த்தைப் பிரயோகம், படிமங்களாக நெடுகிலும் உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது. 'இரவை தின்னக் கொடுக்கும்' குறியீட்டின் ஆதிக்கமும், கவிஞர் தன்னை கவிதையாக உருவகப்படுத்தி உபயோகிக்கும் 'கவிதை' என்கிற வார்த்தையின் ஆளுமையும் அநியாயத்திற்கு அதிகம்!
கனவு யுக்திகள் மூலம் கதை எழுதுவதையோ, கவிதைகள் படைப்பதையோ தேர்ந்த இலக்கியவாதிகள் ஏற்பதில்லை. ஆரம்பகாலப் படைப்பாளிகளின் கையடக்க யுக்தியாக மட்டுமே அதனைப் பார்க்கிறார்கள். தரையில் கால்ப்பதிய நடக்கும் நடைதான்... நடை. யதார்த்தமும் அதுதான். கவிஞர் யோசிக்க வேண்டும். தவிர, இந்த இரண்டு கவிதைத் தொகுப்பிலும் ஆணாதிக்கத்தை சாடும் தேவையான சமூக நோக்குக் கொண்ட பெண்ணின் குரல் பெரிதாகப் பதிவாகவில்லை. சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க அராஜகம் கவிஞரின் அனுபவத்தில் இடரவில்லையோ என்னவோ!
அனாரின் ஆரம்பகாலக் கவிதைகளில், வானம், பூமி, கடல், காற்று, மழை, மின்னல், முன் இரவு, பின் இரவு, முன்பனி, பின்பனி, நட்சத்திரங்கள், இறுகிய பாறை என்பதான மஹா விரிவு கொண்ட குறியீடுகள் சர்வசாதாரணமாகப் புழங்கப்பட்டிருக்கிறது. புஞ்சையான மனிதச் செயல்பாடுகளுக்கு இத்தகைய பிரமாண்டங்களை குறியீடாக்குவது பற்றி கவிஞர் யோசிக்கணும். இப்படியான பிரமாண்ட வார்த்தைகளின் மொத்த குத்தகைக்காரரான சினிமாக் கவிஞர் வைரமுத்து வேறு கோபித்துக் கொள்வார்!
நல்ல கவிதைகள் என்பது இன்னும் எழுதப்படாத கவிதைகளே! என்பதாக ஒரு சொல் வழக்கு உண்டு. அத்தகைய கவிதைகளை எழுதும் எல்லா நுட்பமும், திறனும் கவிஞர் அனாருக்கு இருக்கிறது. நம்புகிறேன். அவரது முயற்சிகளுக்கும் பழுதில்லை. சாதிப்பார். வாழ்த்துக்கள்.