சுலைஹா
மேலும்.... உங்களுக்கு சொல்ல வேண்டும் என்றால்
அர்த்தங்களுக்கு வெளியே வளர்பவள் நான்
கல்லும் கல்லும் மோதிவரும்
நெருப்புப் பொறிகளால் உருவானவள்
இங்கிருந்தும் அங்கிருந்தும்
தாவுகின்ற மின்னொளி
கடந்தகால சாபங்களிலிருந்து மீண்டவளும்
எதிர்கால சவால்களை வென்றவளும் நானே
ஒட்டகங்களைப்போல்
மலைகளைக் கட்டி இழுத்துவரும் சூனியக்காரி
ஒளியை அணிந்திருப்பவள்
உப்புக் குவியலைப்போல் ஈரலிப்பானவள்
'இறுமாப்பு' என்னும் தாரகைகளாக
வீசியெறிந்திருக்கிறேன் என் பருவங்களை
கண்களிலிருந்து காதலை பொழியச் செய்பவள்
கனவுகள் காண ஏங்கும் கனவு நான்
என் உடல் செஞ்சாம்பல் குழம்பு
கத்திகளால்
கைகளையோ கனிகளையோ வெட்டிக்கொள்ளாதவள்
காதலால் கத்தியை உடைத்தவள்
நான் யூசுப்பைக் காதலிப்பவள்
சுலைஹா........
—
31 மே 2011
_____________________________________________________________________
_____________________________________________________________________
சுலைஹா : எகிப்து நாட்டின் அமைச்சர் ஒருவரின் மனைவி. யூசுப் எனப்படும் இறைத்தூதரை காதலித்தவர்.
2 comments:
She was of more than falling in love with Yusuf. She wanted to bed with him and tried.Later, threw him into very difficult position, when her husband came to know. It is more than, love, I could say. -best, munas
அனார் குறிஞ்சியின் தலைவியாய் அந்நிலப்பெண்ணின் ஓர்மந்தனை வேறொரு கோணத்தில் அணுகிய கவிதையொன்றை வாசித்தபோது அடைந்ததைப் போன்றே முதன்முதலில் காலம் சஞ்சிகையில் இக்கவிதையை படித்தபோது அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒருசேர உணர்ந்தேன்.
கலாசாரத்தோடு ஒன்றிய வரலாற்றுச் சம்பவமொன்றைப் ‘பெண்ணாக’ நின்று நோக்கியதோடு மட்டுமன்றி சுலைஹாவை மீள்கட்டமைப்பும் செய்திருக்கிறார்.
அர்த்தங்களுக்கு வெளியே வளர்பவள்
நான்.
அனாரின் இந்த அசாத்தியத் துணிச்சலை என்னவென்பது?
உப்புக் குவியலைப்போல் ஈரலிப்பானவள்.
ஆமாம்!
நீர்மயமாகும் கூறுகள் ஒன்றிக்கிடக்கும் உப்புக் குவியலுக்குள் ஈரலிப்புக்கு என்றுமே பஞ்சமில்லைதானே.
எவரும் விரும்பிரசிக்கத்தக்க அழகான வரிகள்.
பெரிதும், மரபும் துறைசார்ந்துமேயிருந்த என் வாசிப்பை கலைசார்ந்ததுமாய் விரிகையுறச் செய்ததில் அனாரின் கூர்மையும் வசீகரமும் செறிந்த கவிதைமொழிக்கும் பெரும்பங்குண்டு.
அனாரின் அரூபவண்ணத்துப்பூச்சிகள் நவீனப் பெருவெளி தாண்டியும் மெதுமெதுவாய் சிறகசைப்பதைப் பெரும் பிரமிப்போடு நோக்கியபடியேதான் இதைப் பதிவிடுகிறேன்.
கிண்ணியா எஸ்.பாயிஸா அலி.
Post a Comment