Wednesday, 12 January 2011

மற்றமையின் கவிதைகள்



- குவளைக் கண்ணன் (இந்தியா)

-------------------------------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு கவிதையும் ஒரு உலகம். உள்ளே உள்ள இனந்தெரியாத உணர்வுகளை சொற்களைக் கொண்டு தனதேயான காட்சிகளால் காட்டுகிறது ஒவ்வொரு கவிதையும். சொற்களல்ல கவிதை. காட்டப்படும் காட்சிகளல்ல கவிதை. அவை அந்தக் குறிப்பிட்ட கவிதையின், குறிப்பிட்ட உலகின் காட்சிகள். கவிதையில் காட்டப்படும் காட்சிகள் ஒரே வண்ணப் பின்னணி கொண்டவையாகவும் இருக்கலாம், பல்வேறு வண்ணங்களின் பின்னணி கொண்டவையாகவும் இருக்கலாம். காட்சிகளின் வண்ணப் பின்னணியில் ஒற்றுமை இருக்கலாம், ஒற்றுமை இல்லாதிருக்கலாம். ஒவ்வொரு கவிதையிலும் சொற்களாலான காட்சிகளைக் கொண்ட ஒரு உலகினுள் நீங்கள் நுழைகிறீர்கள், அல்லது ஒரு உலகம் உங்களுக்குள் நுழைகிறது.முதல் வரியிலிருந்து கடைசி வரிவரை ஒரு பயணம். நீங்கள் கவிதைக்குள் பயணம் செய்கிறீர்கள் அல்லது கவிதை உங்களுக்குள் பயணம் செய்கிறது. இந்தப் பயணத்தின் முடிவில் நீங்கள் லேசான பதற்றத்தை உணர்கிறீர்கள். ஏதோ ஒரு காட்சியை நீங்கள் மீண்டும் பார்த்தாக வேண்டும். மீண்டும் ஒரு குறிப்பிட்ட வரிக்குப் போகிறீர்கள். மீண்டும் படிக்கும்போது அந்தக் குறிப்பிட்ட காட்சிகளில் உங்களுக்குப் பரிச்சயமான ஏதோவொன்று, உங்கள் சாயலில் ஏதோவொன்று இருக்கிறது. காட்சிகளைக் கொண்டு உணர்த்தப்பட்ட இனந்தெரியாத உணர்வுகள் இனங்கண்டு கொள்ளப்பட்டுவிட்டன. அல்லது இனந்தெரியாத உணர்வுகள் இனந்தெரியாத உணர்வுகளோடு கலந்து போய்விட்டன. கவிதையின் உலகம் உங்களுடைய உலகத்திலிருந்து பிரிக்க முடியாதபடி கலந்து போய்விட்டது.

இந்தத் தொகுப்பில் `அரசி' என்னும் தலைப்பில் உள்ள கவிதையைப் பார்ப்போம்:

உன் கனவுகளில் / நீ காண விரும்புகின்றபடியே / நான் அரசி / அயல் நாட்டு மகாராஜாக்களின் அரியணைக்கு / சவால் விடும் பேரரசி / அடிபணிய அல்ல / கட்டளையிடப் பிறந்தவள் / ஆணையிடுகிறேன் மந்தைகளுக்கு / குகைகளிலிருந்து தப்பிச் செல்லுங்கள் / ஆணையிடுகிறேன் சூரியனுக்கு /ஒரு இனத்தையே விழுங்கிக்கொண்டிருக்கும் / சமையலறையின் பிளந்த வாயைப் பொசுக்கிவிடுமாறு / பெரும் மலைகளை நகர்த்தித் தளர்ந்துவிட்ட / மூதாட்டிகளின் பாரித்த பெருமூச்சுகளை / வருடிவிடுமாறு பறவைகளைப் பணிக்கிறேன் / ஒருத்தி சொல்கின்றாள் / `என்னிடமிருப்பது தீர்வற்ற புலம்பல் கசப்பு' / இன்னொருத்தி கூறுகின்றாள் / `குரலில் இறக்க முடியாச் சுமை' / இருண்டு வரும் பொழுதுகளில் நேர்ந்த / துஷ்பிரயோகங்களைக் காட்டுகிறாள் எளிய சிறுமி / நான் என்னுடைய வாளைக் கூர் தீட்டுகின்றேன் / சுயபலம் பொருந்திய தேவதைகள் / விடுதலை பெற்ற பரவச வாழ்வொன்றை / வென்றெடுத்ததாய் கொண்டாடுகிறார்கள் / பாட்டம்பாட்டமாய் / பெண்கள் குலவையிடும் ஓசை / பெரும் பேரிகைகளாய் கேட்கின்றன / நான் சாம்ராஜ்ஜியத்திலிருந்தபடியே / கைகளிரண்டையும் / மேலுயர்த்திக் கூவுகின்றேன் / நான் / நான் விரும்புகின்றபடியான பெண் / நான் எனக்குள் வசிக்கும் அரசி.

இந்தக் கவிதையைப் படித்து முடித்தவுடன் தான் சரியென்று நினைப்பதைச் செய்கிற, அலட்சியமான, கட்டளைத் தொனியுள்ள, அதிகார பாவமுள்ள ஒரு பெண்ணின் முகம் எனக்குத் தோன்றுகிறது. இதுவரை என் வாழ்வில் நான் சந்தித்திருக்கும் இந்த வகையான பெண் முகங்கள் நினைவுக்கு வருகின்றன. சில ஆசிரியைகள், சில அக்காக்கள், சில சமயத்து அம்மா, சில சமயத்து தங்கை, இவர்கள் முகங்களும், உடலசைவுகளும் நினைவுக்கு வருகின்றன. இவர்களது உருவக் காட்சியோடு இந்தக் கவிதையிலிருந்து கிடைத்துள்ள பெண்ணுருவக் காட்சி ஒத்திசைகிறதா என்று பார்க்கிறேன். என்னிடம் ஏற்கெனவே உள்ள பெண்ணுருவங்களோடு இந்தக் கவிதையில் கிடைத்துள்ள பெண்ணுருவம் ஒத்திசைகிறதா என்று பார்க்கிறேன். இந்தக் கவிதையிலிருந்து கிடைத்துள்ள பெண்ணுருவத்துக்கு என் மனத்தில் உள்ள பெண்ணுருவங்களின் சாயல் உள்ளது. இந்த உருவங்கள் பெருமளவுக்கு ஒத்திசைகின்றன. ஆனாலும் பெருமளவுக்கு ஒத்திசையாமலும் உள்ளன. அடிப்படையாக ஏதோ குறைகிறது. எனது மனத்தில் உள்ள பெண்ணுருவங்களிடம் ஏதோ போதாமை உள்ளது. ஒரு பதற்றம் உருவாகிறது.

கவிதையை மீண்டும் வாசிக்கிறேன். நானும் எனது மனத்திலுள்ள பெண்ணை ராணிபோல், ராசாத்திபோல் வைத்துக்கொள்ளத்தான் விரும்புகிறேன். அயல்நாட்டு அரியணைக்கு சவால். பிரச்சனையில்லை, பேரரசி சவால் விடட்டும், கட்டளை இடட்டும். மந்தைகளுக்கு ஆணையிடுகிறார், மந்தைகளுக்குத்தானே, ஆணையிடட்டும். சமையலறையின் பிளந்த வாயைப் பொசுக்கச் சொல்லி சூரியனுக்கு ஆணை, சரிதான். மலைகளை நகர்த்தித் தளர்ந்துவிட்ட மூதாட்டிகளின் பெருமூச்சுகளை வருடித்தந்து ஆசுவாசப்படுத்த பறவைகளைப் பணிக்கிறார். முதியவர்களை ஆசுவாசப்படுத்த வேண்டும் சரிதான். பின்னர் பெண்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு எளிய சிறுமி தனக்கு நடந்த துஷ்பிரயோகத்தைக் காட்டுகிறாள், அரசி வாளைக் கூர் தீட்டுகிறாள், நறுக்க வேண்டியதுதான், வெட்ட வேண்டியதுதான். விடுதலை பெற்ற பரவச வாழ்வொன்றை வென்றுவிட்டதாக சுயபலம் பொருந்திய தேவதைகள் குழுக் குழுவாகச் சேர்ந்து குலவை இடுகிறார்கள். அவர்களது குலவை பெரும் பேரிகை ஒலியாகக் கேட்கிறது, அரசி சாம்ராஜ்ஜியத்தில் இருந்தபடியே கைகளை உயர்த்திக் கூவுகிறார், கூவட்டும். அரசி தன்னைப் பற்றிச் சொல்கிறார். அவர் தான் விரும்புகிறபடியான பெண், தனக்குள் வசிக்கும் அரசி. நல்லது கவிதை முடிந்துவிட்டது. வரி வரியாகப் படித்தாகிவிட்டது. கவிதை புரிந்துவிட்டது. ஆனால் எனது பதற்றம் குறையாதது மட்டுமல்ல, கூடியுள்ளது.
இந்தக் கவிதையில் புரியாது போகும் வரிகள் ஏதுமில்லை. ஆகவே இது புரியாததால் வரும் பதற்றமல்ல. அரசி யாருக்கெல்லாம் ஆணையிடுகிறாள்? மந்தைகளுக்கு, சூரியனுக்கு, பறவைகளுக்கு. அதிகாரம் என்று நாம் அறிந்துள்ளதில் இருந்து இவற்றுக்கு ஆணையிட முடியாது. இதுவரை அரசியல், அதிகாரம் என்று நாம் அறிந்துள்ளது முழுக்க முழுக்க ஆண் தன்மையானது. இந்த ஆண் தன்மையான அதிகாரத்தை முற்றாக நிராகரிக்கும் மற்றமையின் அதிகாரம், பெண்மையின் அதிகாரம் இந்தக் கவிதையில் வெளிப்பட்டுள்ளது. இதுதான் எனது மனத்தின் ஆண் தன்மையானதற்குப் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. என் மனத்திலுள்ள பெண்ணுருவங்கள் என் விருப்பத்தின்படி ஆனவை. எனது சில ஆசிரியைகளை, சில அக்காக்களை, சில சமயத்து அம்மாவை, சில சமயத்துத் தங்கையை எனக்குப் பிடித்த மாதிரி என் மனத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். அவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியல்ல. அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று எனக்குத் தெரியாது. நான் விரும்புகிறபடியான ஆணாக நான் இருப்பதுபோல், பெண்ணும்தான் விரும்புகிறபடியான பெண்ணாக இருக்கலாம் அல்லவா. எனது மற்றமை விடுதலை அடைந்தால்தானே நான் விடுதலை அடையலாம்.

இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் முழுக்க இரண்டு பெண்கள் வருகிறார்கள். எண்ணங்களை வைத்து நினைவும், மறதியும் நாளாந்தம் சூதாடுகிற ஒரு பெண். அவளுக்கு தேநீர்க் குவளைகள் கை தவறிப் போகின்றன. இவளுக்கு பகிர்ந்து கொள்ளாத மாலைப் பொழுது தோல்வியைத் தழுவுகிறது. இவளது வெறுமைக்குள் வெயிலடிக்கிறது ஒரு முத்தத்தைப் பற்ற வைத்து தனது உயிர்க்காட்டை எரிக்கச் சொல்லிக் கேட்கும் பெண். இவளது அறைக்கு வெளியே அலைகிறது உறக்கம். இவள் வருந்தி வருத்துபவள், இரவு தின்னும் இரையாக இருப்பவள். சுட்டு வலிக்கின்ற ரகசிய ஞாபகங்களோடு தனிமையும், வெறுமையுமாக, தாகமும் தாபமுமாக இருக்கும் ஒரு சாதாரணப் பெண்.

அனாரின் கவிதைகளில் வேறொரு பெண்ணும் வருகிறார். பெரும் பெண், `நான் பெண்' எனும் கவிதையில் எனக்கென்ன எல்லைகள் என்று கேட்கும் இந்தப் பெண்ணுக்கு காலமே உடல். இவரது உள்ளம் காற்று, கண்கள் நெருப்பு, ஆகாயமாகவும் அண்டமாகவும் இருப்பவர்.தாகமும், தாபமுமாகப் பதற்றத்துடன் உள்ள சாதாரணப் பெண்ணோடு இந்த அசாதாரணப் பெரும் பெண் எப்படி வந்தார்?`மேலும் சில இரத்தக் குறிப்புகள்' எனும் தலைப்புள்ள கவிதை, மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்துப் பழக்கப்பட்டிருந்தும், குழந்தை விரலை அறுத்துக்கொண்டு அலறி வரும்போது அதிர்ச்சியுற்றுப் பதறுவதில் தொடங்கி, பின்னர் வன்கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம், கொல்லப்பட்ட குழந்தையின் இரத்தம், சித்திரவதை முகாம்களின் இரத்தம்,வெறிபிடித்த தெருக்களின் இரத்தம், வன்ம வேட்டையின் இரத்தம் என்று போகிறது. இந்தக் கவிதையில் இரத்தம் கருணையையும், பரிதவிப்பையும் அவாவுவதாகச் சொல்லப்படுகிறது. இரத்தம் இயலாமையின் வெளிப்பாடு எனப்படுகிறது. குழந்தை சிந்திய இரத்தத்தைப் பார்த்துப் பதறும் பெண்ணுக்கு இரத்தம் சிந்தும் அனைவரும் குழந்தையாகிவிடுகிறார்கள். இப்படித் தன் குழந்தையிடம் இருந்து விரியும் கருணையும், அன்பும் அனைவர் மீதும் படர்கிறது. இப்படித் தன்னுடையதில் இருந்து தொடங்கும் அன்பு அனைவர் மீதும் கவியும்போது பேரன்பாகிறது. சாதாரணப் பெண் அரசியாகி, அசாதாரணப் பெரும் பெண்ணாகி இருக்கிறாள்.

பெரும் போராட்டத்துக்குப் பின்னும் அறிவு சென்று அடைய முடியாததை, கனவு அடைந்துவிடும். கனவில் கண நேரம் தெரிவதை, அன்பு நித்தியமாக அடைந்துவிடும். அன்பு சென்று அடைய வேண்டியதில்லை. அனைத்தும் வந்து அன்பை அடைந்துவிடும். ஓரிடம் உள்ள அன்பு ஒவ்வொருவரிடத்துக்குமாகப் பரவவேண்டும். அனாரின் கவிதைகளில் அன்பின் அபரிமிதம் அன்பைப் பேரன்பாக்கி சாதாரணப் பெண்ணை அசாதாரணப் பெண்ணாக்கி இருக்கிறது. சாதாரணத்தில் ஒரு அகரம் கூட்டினால் அசாதாரணம்தானே. இங்கே இது அன்பின் அகரம்.

(தீராநதி - மே 2009)

-------------------------------------------------------------------------------------------------------------

Saturday, 8 January 2011

Personal Poems of an Islamic Woman Poet


- K.S. SIVAKUMARAN (Srilanka)
----------------------------------------------------------------------------------------------


In Lankan Thamil Literature there are only a handful of women poets. Among them is a poet from Sainthamaruthu in the East. Her name is Issath Rehana Mohamed Azeem, but she is known in the literary circles as "Anar". Her first collection of poems titled Oaviyam Varaiatha Thoorikai (A Brush that couldn't Draw) won the Sahitya Award in and the North-East Provincial Ministry's Sahitya Award in 2005.


The present collection of 31 poems is titled Enakku Kavithai Muham (A Poetic Face is for Me) is published by the reputed by the publishers of selective writing –Kalachuvadu Publishers in Nagarcoil in Thamilnadu. The book is also available from the author at 542 B, Gaffoor Street, Sainthamaruthu -16. Anar is in the mid-thirties and has a family.


The poems in this collection were earlier published in Little Magazines and in one newspaper: Moontravathu Manithan (now defunct), Virakesari, Sari Nihar, Maruha, Pravaaham, Uyirmai, Dalit, Kunkumam, Oodaru, Vaiharai, Ulaga Thamil and Kaala Chuvadu. These journals are from Lanka, Thamilnadu and Europe.


A leading Lankan poet in Thamil and an academic (now in Toronto, Canada), R. Cheran, has written a foreword for this collection. As he says, Anar has brought in new faces to Lankan Thamil poetry. She is undoubtedly a very talented poet from the East. She is different from many other poets of her age in capturing her deep most inner feelings on scenes around her closed environment. Her Personal Poems are also an implicit commentary on the social issues of the country.


What is striking in her creations are her capacity to turn out entirely new ways of expressions and her mastery of the language and interpretation with newly-coined phrases. In that sense she has brought freshness to Lankan Thamil Contemporary Poetry.


I think Cheran has beautifully discerned the content of her poems and analyzed it. Readers in Thamil well may read it for their benefit. For my part, I shall only show how she manages the language in her pleasingly written poems. This I can do by rendering some of her lines into English. As we all know translation of poetry into another language is not easy and liable to be 'lost in translation'. However let's try – the easiest first.


Naan Penn (I am a Woman)



A Wild Stream
A Massive Waterfall
A Deep Sea
An Incessant Rain
I'm Water
Blackened Rocky Mountain
A Greenish Space of Field
A Seed
A Jungle
I'm Land
Body's Time
Heart Wind
Eyes Fire
I'm sky
I'm Universe
What Boundaries for Me
I'm Nature
I'm Woman


***


Thanal Nadhi (A River of Ember)



Strangely
Lusty feelings crawled polished
Like the waves of cool winds
That proceeds before the rain
Biting the lips mischievously
In this night that swirls around
Press a kiss (on me)
Let the jungle of life burn out
In between the eyelids
Teardrops gush out dryly
The burning embers of sorrow
This bitterness
In the wind driving the clouds
Would the tidal waves that slashes
Continue to roar and hassle
Unable to cross over
The night hangs before me
Like a river of ember


***


Araikku Veliyae Alaiyum Urakkam (Sleep wandering outside the Room)



Folding the clothes I
Arranged them in the wardrobe
Dimmed the room lights
Straightened the bedspread
Joined two pillows side by side
Wore a loose nightgown
Before my thirst stood the poisoned night's ale
My sleep wanders outside the room
With dreams of different tastes


***


Penn Bali (Woman Slaughter)



It's a Battle Front
A convenient Laboratory
Everlasting Storehouse
Permanent Prison
It's a Slaughter Slat
It's a Woman's Body
The heart weeps
The life pulse
Same for both genders
Yet, no respect because it is a woman's
Murdering me
Happens in front of me
***


Readers would have noticed that I had chosen only those poems that speak about the confinement of rural women in solitary boundaries. There is an implicit statement of feminist ideas without being feminist. But she had written about the horrors of war and the eluding peace as well.


In Thamil, her use of language is astonishingly fresh. And the treatment of the content is understandable when the poet is from an orthodox Islamic family. One congratulates her for outspoken reality as felt by the womankind.


I enjoyed reading her.


( Daily News - Artscope : June 11, 2008 )
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
'றபான்' இசைக்கின்ற முதியவரின் கானலோவியம் போன்றது 
அனாரின் கவிதை முகம்


- மாரி மகேந்திரன் (இலங்கை)
-------------------------------------------------------------------------------------------------------------

மண் புழுவின் இரவு, குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம், பிச்சி, இல்லாத ஒன்று, வண்ணத்துப்பூச்சியின் கனாக்காலக் கவிதை, மேலும் சில இரத்தக் குறிப்புகள், காற்றின் பிரகாசம், பகிர்ந்துகொள்ளாத மாலை, எட்ட முடியாத அண்மை, பெண்பலி, உரித்தில்லாத காட்டின் அரசன், அரசி, மின்னல்களைப் பரிசளிக்கும் மழை, காதலை கொல்லும் தேவை, வெயிலின் நிறம் தனிமை, மனமந்திரம், இருப்பின் பின்னால் வாழ்வின் வெளி, கோமாளியின் கேலிப்பாத்திரம், நிறங்களானவளைக் காத்திருக்கின்றேன், எனக்கு கவிதை முகம், நான் பெண், தணல் நதி, பூக்க விரும்புகின்ற கவிதை, அறைக்கு வெளியே அலையும் உறக்கம், மாற்ற முடியாத வலி, நிழலின் அலறல், வரு(ந்)துதல், வெறித்தப்படி இருக்கும் கனவு, ஒளியில்லாத இடங்கள், விலகி நிற்பவன், பருவ காலங்களைச் சூடித் திரியும் கடற்கன்னி. இது அனாரின் எனக்குக் கவிதைமுகம் தொகுப்பிலுள்ள 31 கவிதை குழந்தைகளின் கூட்டு மொத்த தலைப்புகள் 54 பக்கங்கள் விரயும் மனித வாழ்வின் நெளிவை மண் புழுவின் மொழியில் கிளறி கிளறி வாழ்வின் ருசியைப் தேடி அலைய செய்கின்றது. அனாரின் தொகுப்பை ஒரே நேரத்தில் அப்படி ஒன்றும் அவசரமாக படிக்க முடியவில்லை. முதல் கவிதை தரும் காட்சி படிமமும் அதன் விசாலமும் இத்தாலி திரை மேதையின் சினிமா பரடையசோவையும் விந்து நூலின் சாமர்த்தின் இருட்டில் விடியும் காமத்தின் தீராத வேதனையையும் ஞாபங்களில் கொப்பளிக்க வைக்கின்றது. மண் புழுவின் இரவில்.

'இந்த பொழுதை ஒரு பூக்கூடையாய் நிரப்பி தூக்கி நடக்கின்றேன்
நீளமான நூலாய் தெரிகின்றது இரவு
நான் தனித்த மண் புழு
சிறுகச் சிறுக நீளுகின்றேன்
தொடர்ந்து நீளமான வெள்ளை நூல் தெரியும் வரை

'அனாரின் மொழி வெறும் வார்த்தைகளோடு நின்று விடுவதில்லை உலக சினிமாவின் மிக உன்னதமான ருஸிய திரை மேதையின் தீராத திரைப்படிமத்தை இன்னும் தேடி திரிய செய்யும் அந்தரே தார்க்கோர்ஸ்கியின் கை வண்ணம் அனார் கவிதைகளை படிக்கப் படிக்க குகை மனநிலையில் ஒரு ஈமப் பிசாசை போல் மனத்தின் உள்ளடுக்கை ஊடுருவில் சென்று தைக்கின்றது. நமக்குள் கவிதைகள் ஊற்றையும் அது தூண்டிவிடுகிறது நல்ல படைப்பு படிப்பாளியையும் படைப்பாளியாக்கி விடும் என்பதுக்கு சினிமா மட்டுமல்ல மிகச் சிறந்த கவிதைகளுக்கும் இது பொருந்தி போவதை அனாரின் எனக்கும் கவிதைமுகம் தெரிவிக்கும் இன்னொரு முக்கியமான செய்தி.

'உனக்குள்ளேயே சுருங்கி கொள்வாயா
அமைதி வெளியே இருக்கிறது
அமைதியான நிழல் தான் உள்ளே இருக்கிறது'

என்ற ஐரீஸ் முர்டாச்சின் வரிகளுடன் அனார் கவிதைகளுடன் பின் தொடரும் போது வெளியும் இயற்கையும், காதலும் வெளியில் இல்லை எல்லாம் உள்ளேதான் ஒழிந்து கிடைக்கிறது. அன்பும் பரிவும் நேசமும் காதலும் தான் உள்ளே படிந்து கிடக்கும் பறவையின் கறுத்த சிறகை பிடித்து இழுத்து வருவது கவிதையின் அன்பு கரங்கள் தான். அமைதியும் சந்தோசத்தையும் மனித இருப்பின் மேல் நம்பிக்கை எனும் உடன்படிக்கையும் மெது மெதுவாக கற்பிதம் செய்வதோடு, இயற்கையும் பற்றிய பார்வையை அனாரின் மிக அற்புதமான படிமங்களையும் குறியீடுகளும் வாழ்க்கையை இவ்வளவு அந்நியோனியமாகவும்; ஏகாந்தமாகவும் காதலாகவும் பருகிவிட எப்படி இந்த அனாருக்கு மட்டும் முடிகின்றது. என்பதற்கான வியப்பும் என்னை விட்டப்பாடில்லை. முதன் முறையாக ஒரு கவிதை தொகுப்புக்கும் எனது மனதின் அமைதியின்மையோடும், நிறம் திரிந்த வண்ணத்தோடும் பகிர்தலின் மூலம் உள்ளே ஆழ்ந்து கிடக்கும் எனது முகத்தையும் தேடி விடலாம் என்பதற்கான உத்தரவாதத்தை 'இந்த எனக்கும் கவிதை முகம்' ஒரு புரிப்படாத மன வலுவை தருகின்றது. இதுவரையும் உயிர் எழுத்து பக்கத்தில் மட்டுமே இவரின் கவிதைகளை எப்போதாவது அவசரமாக படித்து திருப்பிய போது இப்போது தொகுப்பில் படிக்கும் போது நிறைய வித்தியாசம் தெரிகின்றது.

ஒரு பக்கம் நண்பர் ஆத்மாவின் தாளம் லயம் தீராத நேசம் பேசும் கவிதை குரலின் ஐ அலைவரிசையில் சப்தம் என் அடி மனசின் ஞாபங்களை அவரின் சோகம் ததும்பும் கவிதை வாசிப்பு நிஜமாகவே அனாரின் கவிதைகளில் படிக்கும் போது சட்டென்று மின்னியது.... பின்பு ஆத்மாவின் லயிப்பு தரும் குரலில் தேங்கியிருக்கும் பரிவை காதுகளில் ஞாபகங்கள் மனதில் தேக்கி வைத்திருக்கும் மகிழ்வுடன் எனக்குள் அனாரின் அன்பு மொழிகளின் குறிப்புகள் மீண்டும் மீண்டும் வாழ்வை இனி திரும்பி பார்க்க சொல்கின்றது.

'கறிவேப்பிலை பொறித்த எண்ணெய் மனம் பரவ
சினுங்கும் மணிகளின் இசையோடு
மாலையின் ருசியை கூட்டுகின்றான் கடலை வியாபாரி'

வாழ்வை இவ்வளவு நெருக்கமாக தரிசிக்கும் அனாரின் மற்றோரு கவிதையில் இந்த சமையலறையைப் பற்றிய பெண்ணின் மொழியில் கேட்பதற்கு என் அம்மாவின் காலம் தீராத சமையல் அறையில் செத்து தீர்ந்த எத்தனையோ பெண்களின் ஒட்டு மொத்த குரல் தான் நினைவுக்கு வருகின்றது. இந்திய சமையல் முறையை என்பதே ஒரு வகையான நிறைய வேலைப்பாடுகளுடன் பின்னப்பட்ட அவஸ்தை தான். ருசியைப் மட்டும் சுகிக்கும் மனித ருசிக்கு முன்பு காலம் காலமாக பெண்ணின் சவச்சாலை போல நம் சமையல் கூடாரங்கள் வெப்பமும்இ வியர்வையும் இருந்தாலும் அதில் பெண்ணை கட்டி வைக்கும் வகைகளுடன் பின்னப்பட்டதாக இருப்பதன் பிண்ணணியைப் நாம் ஏன் உணர்வதில்லைஇ காய்கறிகள் நறுக்கி சின்ன சின்ன விசயங்களில் ருசியைப் மட்டும் தேடும் நாவுக்கு பின்பு ஒரு ஆத்மாவின் ஓலம் மட்டும் பரிமாறும் போதும் கூட அந்த வெட்கை தெரிவதில்லை என்பது மட்டும் பெண்ணின் நேசபூர்வ அன்பை வெளிப்படுத்தும் ஒரு வகையான கை நேர்த்தி தான்.

'ஆணையிடுகின்றேன் சூரியனுக்கு
ஒரு இனத்தையை விழுங்கி கொண்டிருக்கும்
சமையலறையின் பிளந்தவாயைப் பொசுக்கிவிடுமாறு
பெரும் மலைகளை நகர்த்தி தளர்ந்துவிட்ட
மூதாட்டிகளின் பாரித்த பெரு மூச்சுகளை
வருடிவிடுமாறு பறவைகளை பணிக்கின்றேன்'

இந்த ஏக்கம் எனது அம்மாவின் வலிகளையும், நினைவுகளையும் அவரின் கஸ்டங்களையும் மனிதனாக என்னையும் யோசிக்க செய்வதோடு உண்பதற்கும் ருசிப்பதற்கும் மட்டும் தெரிந்த ஒரு ஆணாக இருப்பதில் தான் எத்தனை வகையான குற்றவுணர்வு எழுகின்றது. ஆணின் கீறல் விழுந்த இசை நாடாவில் இப்போதெல்லாம் நல்ல சங்கீதம் இது போன்ற மனம் தீராத முரண்களினால் முழுமையை தொலைத்துவிட்ட உடைந்த கண்ணாடியாக ஆண் ஆகிவிட்டதன் நூற்றாண்டில்இ கொஞ்சம் பெண்ணின் சமையல் கூடாரத்திலிருந்து அவளின் இதயத்தின் அழும் பக்கத்தையும்இ உழைக்கும் நம் தோட்டத் தொழிலாளி பெண்களின் கறுமை படிந்த உதிர்ந்த விரல்களையும் தேயிலை பறித்து, பறித்து ரத்த சாயத்தின் கொப்பளித்த உழைப்பை மட்டும் இந்த நாட்டுக்கு தந்த எழும்பு கூடுகளாய் போன நம் சகோதரிகளினது வாழ்வையும் நாம் சிறிது நேரம் நின்று நிதானித்து திரும்பி பார்ப்பதோடு, பாசம் அறுந்த வாழ்வின் மீட்டெடுக்கும் காலத்தோடு கை கோர்ப்போம்!

'ஆதி மந்திரமாய் உறைகின்றன
கடல் திறக்கும் கள்ளச் சாவிகளென
பத்து விரல்கள்
நிலவும் நனையும் உயரத்தில்
தெறிக்கின்றது மா கடல்
மரம் முழுக்கக் கனிகள் குலுங்கும்
உச்சாணிக் கொப்பில்
மயங்கி படமெடுத்தாடுகிறாய்
பாரம்பரியம் கொண்டாடும் பாணனின் இசை.......'

பிச்சி என்ற கவிதையின் ஊடறுந்து செல்லும் காதல் சங்கமத்தின் ஒரு பெண்ணின் மொழிகள் மிகவும் சுய தணிக்கையோடு தான் பாலியல் பற்றி பேசுவதற்கு சுவர்களில் முறைக்கும் கறுப்பு விழிகளுக்கு பயந்து அடக்கி வைக்கும் நமது தலைமுறையின் இறுதி நேரத்திலும் அனாரின் முழுமையைப் வெளியே தள்ள முடியாத அவஸ்தையைப் இந்த கவிதையின் சொற்களும் அனுபவமும் நம்மை திகைக்க வைப்பதோடு, தழிழக நவீன எழுத்தாளர் ஜே.பி. சாணக்கியாவின் பாலியல் பற்றிய சூனிய எழுத்தோடு அனாரின் ஓரிரு கவிதைகளும் இணையாக ஒப்பிட முடிவது ஏன் என்று தெரியவில்லை. இவரின் உள் அறைகளில் குவிந்து கிடக்கும் கொத்து கொத்தான அனுபவ மேடுகள் எதிர் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் போர் சுமையோடு வெடிகுண்டுகளுடனும் அதிர்வை அன்றாடம் வாழ்வாக உடையும் உளவியலோடு ஒரு சிறப்பான நாவலையும் நவீனத்தையும் அனாரினால் மட்டுமே படைக்க முடியும் என தோன்றுகிறது.

நான் முதலில் எழுதியது போல நவீன சினிமாவின் காட்சி படிவங்களில் தேக்கப்பட்ட பிரக்ஞையுடன் அனாரின் கவிதைகளின் காட்சிப் புலப்படும் தன்மையை நினைக்கும் போது இவர் ஏன் நவீன சினிமாவையும் தன் அனுபவத்தையும், ஆழத்தையும் பயன்படுத்தி வெளிப்படுத்த முனைய கூடாது என்பதற்கான கேள்விகளுடன் அனாரின் கவிதைகளை தொடர்ந்து படிக்கும் மனம் தீராத வாசிப்பு மட்டும் அடங்கவில்லை, அவரின் கவித்துவம், குழந்தை போன்ற உரையாடலும், அவரின் முகம் மட்டுமல்ல உணர்வுகளும் இதயமும் வாழ்வும் கூட கவிதை என்று தான் எனக்கு சொல்ல தோன்றுகின்றது. அவரை பற்றி அவர் கூறுவதில் ஒரு உண்மை புலப்படுகினறது.

நாம் சாம்ராஜ்ஜியத்தில் இருந்த படியே
கைகள் இரண்டையும்
மேல் உயர்த்தி கூவுகின்றேன்
நான்
நான் விரும்புகின்ற படியான பெண்
நான் எனக்குள் வசிக்கும் அரசி'

தன்னை பற்றிய உள்ளாந்த அந்த தீர்க்கமான உள்ளம் ஒரு சூபி மகானின் முதிர்ந்த இதயத்தைப்போல அது இன்று நமக்கு கவிதைகளை தந்தப்படி வாழ்வின் பல்வேறு பெண் கொள்ளும் பாத்திரங்களையும் சுமந்துகொண்டு அனாரின் இந்த தனித்துவமான தூரிகை வரையாது ஓவியத்தை போல மனதின் அடுக்களிலும் குழந்தைகளோடு அன்றாடம் வாழ்வில் பெண்கள் பங்கேற்கும் நிர்பந்தங்களோடும் சமையல் மற்றும் நேசபூர்வமான கலையின் உன்னதமான காதலோடும் நாம் அனாரின் கவிதைகளையும் இந்த அவசர யுகத்தில் தரிசிக்க முடிவதில் பேரானந்தம். அனாருக்கு தன் வாழ்வில் மேலும் தன்னை பற்றிய ஏகாந்த இயற்கையின் மீதும்இ சக உயிரின் மீதும் தான் கொண்டிருக்கும் நிறைய காதல்தான் மூலக்காரணம் என்பதை மட்டும் அவர் கவிதைகளின் இலகுவாக தரிசிக்கமுடிகின்றது. இதுதான் அனார் கிழக்கு மாகாணத்தில் மறக்க முடியாத மனசாட்சியானார். அலறி, ஓட்டமாவடி அரபாத் ஆத்மா போல இவரின் தனித்துவம் பெண்கவி என்பதனால் சிறிது மாறுப்பட்டது. அந்த மாறுப்பட்ட வாழ்வின் இருந்துதான் இவரின் நேசம் தமிழ் உலகம் முழுக்க தொடவேண்டும், அது தொட்டப்படி தான் இருக்கின்றது. இவரின் கவிதைகள் பிரெஞ்சு, ஆங்கிலம் சிங்களம் போன்ற மொழிகளில் மொழிபெயர்த்து ஒரு பரந்த தளத்தில் நம் தமிழக கவிதையாக அறிமுகம் செய்யவேண்டியதன் தேவை தீர்க்க முடியாதது. மலையாளத்திலும் அனாரின் கவிதைகள் மொழியாக்கம் செய்யப்படவேண்டும். தமிழில் எங்களுக்கும் இப்படி ஒரு கவி பிறந்திருக்கும் செய்தியை உலகிற்கு சொல்வதற்கு முயல வேண்டும். தமிழோடு மட்டும் அனாரின் கவிதை அனுபவம் தீர்ந்து விடுமா?

வாழ்வு அந்த அன்பு பெண் அனாருக்காக மட்டும் இத்தனை இரகசியங்களை எப்படியெல்லாம் திறந்து வைத்திருக்கின்றது? மொழியின் அழகிய வண்ணத்தை அனாரின் கவிதைகள் தன் வயிற்றில் சுமக்கும் சிசுவை போல சுமந்து எழுதுவதனால் தான் அன்பு பற்றி படரும் ஏக்கங்களையெல்லாம் அனாரின் கவிதை எப்படியோ ஒரு அன்பு மொழி தீராத தாயின் பரிவுடன் நம்மையும் அன்பில் மூழ்க வைக்கின்றது.

( வீரகேசரி - உயிர் எழுத்து மே 18, 2008 )


-----------------------------------------------------------------------------------------------------------------------------------
அனாரின் மனக்குகை ஓவியங்களை முன்னிறுத்தி சில குறிப்புகள்:





- ஓட்டமாவடி அறபாத் (இலங்கை)

-------------------------------------------------------------------------------------------------------------

கவிதையின் சாசுவதம் அதன் மொழியிலும் பாடும் திறனிலும் நித்யம் பெறுகின்றது. கவிதைக்கு வரைவிலக்கணமொன்றை வகுத்தளித்த பசுவய்யாவின் ஓர் கவிதை என் நிiனைவில் முட்டுகிறது.

'உன் கவிதையை நீ எழுது / எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்புகின்ற புரட்சி பற்றி எழுது / உன்னை ஏமாற்றும் போலிப்புரட்சியாளர்கள் பற்றி எழுது / சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது / நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது / எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப்பற்றி எழுது / எவரிடமும் அதைக்காட்ட முடியாமலிருக்கும் தத்தளிப்பைப்பற்றி எழுது / எழுது உன் கவிதையை நீ எழுது / அதற்கு உனக்கு வக்கில்லை என்றால் / ஒன்று செய் / என் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று / என்னைக்கேட்கமலேனும் இரு.' பசுவய்யா 107 கவிதைகள் பக் : 94. அனாரின் ஒட்டு மொத்த கவிதைகளையும் படிக்க நேர்கையில் ஏற்படும் மன அதிர்வின் லாகிரி அடங்க நாழிகை எடுக்கிறது. ஒடுங்கி அடங்கிப்புதைந்திருக்கும் பெண் மனத்தின் மனக்குகை ஓவியங்கள் கவிதை என்ற சட்டகத்தினுள் உயிருடன் ததும்பும் அற்புதத்தை அனாரின் கவிதைகள் நிகழ்த்திக்காட்டியிருக்கின்றன.

பெருகிப்பெருகிப்பாய்ந்தோடும் நதியின் சௌந்தர்ய லாவண்யங்கள் அவர் கவிதை என்ற மாயக்கண்ணாடியில் குமிழியிட்டு தெறிக்கின்ற பேரழகே அலாதி!

வரையறுக்கவியலா பிரபஞ்ச நியதிகளை மீறுவதில் அனாரின் கவிதைகள் ஜெயம் பெற்றுள்ளன. அர்த்தம் பொதிந்த வாழ்வின் வசந்தங்களை காவு கொண்ட இருளை வன்மத்துடன் துரத்த எத்தனிக்கும் கவிதை முகத்தில் வர்ணக்கனவுகளும் தீர்க்கமான தன்னம்பிக்கையும் மின்னித்தெறிக்கின்றன. அர்த்தச்செறிவுடனும் மொழியின் அற்புதத்திலும் விபரிக்கவியலா உணர்வோவியங்களை அவர் கவிதைகள் தீட்டுகின்றன.

ஆண்களால் காவு கொள்ளப்பட்ட பெண்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் எத்தனத்தில் அவர் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் 'மண் புழுவின் இரவில்' புலப்படுகிறது.

'நான் தனித்த மண் புழு / சிறுகச்சிறுக நீளுகிறேன் / தொடந்து நீளமாக வெள்ளை நூல் தெரியும் வரை..' பக்: 17 அனாரின் படிமங்கள் நம்மை திகைப்பூட்டுகின்றன. வெள்ளை நூல் - அதிகாலை, கறுப்பு நூல் - இரவு, இது நோன்பு கால அதிகாலை ஸஹர் உணவின் நேரத்தை கணிப்பிட அல் குர்ஆன் விளக்க விரும்பும் உவமானம். கவிதையின் அடித்தளத்தில் அனாருக்கு இது போன்ற படிமங்கள் எதேச்சையாக பொருந்தி வருவதை அவதானிக்க நேர்கிறது. இது தமிழ் கவிதைக்கு ஒரு புதிய பாய்ச்சலை நகர்த்தியுள்ளது.

'நடுகல்லென முது மரத்து அடி விளங்க / அதனருகே நீளத்துளிர் எறிந்து / காற்றில் சுகித்திருக்கு புதிதொன்று' என திருமாவளவன் பாடுவதைப்போல் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தனது இலட்சிய வேட்கையை பாடும் கவிதைகள் அனாரின் தொகுப்பில் மிகுந்திருக்கின்றன.

ஓலியை திராட்சை ரசமாய் அருந்தி முத்தங்களால் மாயப்புரங்களை நிருமாணிக்கும் அற்புதங்களை நிகழ்த்துகின்ற அதிசயம் கவிதைக்கு மட்டுமே வலாயப்பட்டது. தஸ்லீமா நஸ்ரின் அழையாத மணியில் உருகுவதைப்போல் அனார் குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம் கவிதை ஊடாக வெளிப்படுத்துகின்றார். உலகத்து மகளிரின் உணர்வுகள் ஒரு நேர் கோட்டில் வந்து சந்திப்பதை இங்கு அவதானிக்க முடிகிறது. கடல் திறக்கும் சாவிகள் பத்து விரல்கள் என்ற அனாரின் கற்பனையுள் வானம் பூனைக்குட்டியாகி கடலை நக்கும் அதிசம் நிகழ்கிறது.

அவர் பிச்சியாகி பருவகாலங்களை சூடித்திரியும் கடற்கன்னியாகி கவிதையை பெரும் அட்சய பாத்திரமாக்கி விடுகிறார். அள்ள அள்ளக்குறையா பெண்மனத்தின் மென்னுணர்வுக்கனவுகள் அனாரின் கவிதைகளில் சுதந்திரமாக பறக்கின்றன.

அனாரின் கவிதைகள் அதிகம் அழகியல் உணர்வு சார்ந்த தளத்தில் நின்று கணிப்புப்பெற்றாலும் உள்ளொடுங்கி அவர் பேசும் அரசியலும் ஓர்மம் மிக்கது. மேலும் சில இரத்தக்குறிப்புகள், கோமாளியின் கேலிப்பாத்திரம் போன்ற கவிதைகள் சம கால அரசியல் பம்பாத்துக்களையும் இரத்தம் தோய்ந்த வாழ்வியலையும் அழுத்தமாக பேசுகின்றன. கூத்தாடிகளான அரசியல்வாதிகளின் கேலிப்பாத்திரங்கள் நமது சூழலில் இன்னும் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. பெண்ணின் மாதாந்த உதிரம் குறித்து ஆரம்பிக்கும் கவிதையை ஓர் அவலமான தேசத்தின் இரத்தக்குறிப்புகளுடன் அனார் பொருத்தி முடித்திருக்கின்றார். ஓர் இஸ்லாமியப்பெண் இது குறித்து எழுதலாமா என்ற முட்டையில் மயிர் பிடுங்கும் விமர்சனப்பெருமக்களின் ஐயங்களுக்கு புனித குர்ஆனும் நபிகளாரின் வாழ்வியலும் பெண்ணின் மாதாந்த உதிரம் குறித்து வெளிப்படையாக பேசி ஒரு மருத்துவத்தெளிவை வழங்கியிருப்பதை படித்துப்பார்க்க வேண்டும் என சிபாரிசு செய்கின்றேன்.

அனாரின் கவிதைகள் அதிகம் கணிப்பைப்பெறுவதற்கு காரணம் அவர் கையாளும் கவிதை மொழியும் கவிதைகளின் உட்கிடக்கையில் படிந்திருக்கும் உணர்வுக்கதம்பங்களும்தான். சேரன் குறிப்பிடுவதைப்போல் 'திரும்பத்திரும்ப படிக்கிற போது வேட்கையும் காதலும் மேலெழுகின்றன. தனிமையும் காத்திருப்பும் எரித்தாலும் ஊடல் சுடர் விடுகிறது.'

மொழியின் அழகியலுக்கோர் அணிகலனாக நிறங்களாலானவனைக் காத்திருக்கிறேன், தணல் நதி, எனக்குக் கவிதை முகம், ஒளியில்லாத இடங்கள், பருவ காலங்களைச்சூடித்திரியும் கடற்கன்னி போன்ற கவிதைகளை குறிப்பிடலாம். சல்மாவின் பச்சை தேவதை, குட்டி ரேவதியின் ஓலம் போன்றவை பருவ காலங்களைச்சூடித்திரியும் கடற்கன்னியை நினைவூட்டுகின்றன.

'எமிலி டிக்கின்சனின் கண்ணாடியில் மிதக்கும் மிம்பம் தொகுப்பில் ஒரு கவிதை. வாளேந்திய ஒரு சொல் இருக்கிறது / ஆயுதமேந்திய ஒருவனை தாக்கக்கூடியதாய் / சட்டென ஊமையாகிறது / தனது கூரிய அசைகளை வீசியெறிந்து விட்டு'

அனாரும் எமிலி டிக்கின்சனைப்போல் மொழி என்ற கூரிய ஆயுதத்தால் கவிதையை எறிந்து விட்டு சலனமற்று காத்திருக்கின்றார்.

கனவு - இரவு - நிழல் மூன்று உணர்வுகளின் தளங்களும் மனித வாழ்வின் அர்த்தம் பொதிந்த நிச்சயமற்ற ஆனால் தவிர்க்க முடியாத அம்சங்களாகி விடுகின்றன. அனாரின் கவிதைகளில் மிகுதமாக இவைகளை காணமுடிகிறது. அனாரின் முதற்தொகுதி ஓவியம் வரையாத தூரிகை இலங்கை அரசின் சாஹித்ய மண்டலப்பரிசும், வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் இலக்கியப்பரிசும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனக்குக் கவிதை முகம் இவரின் இரண்டாவது தொகுதி காலச்சுவடு வெளியிட்டுள்ளது.


( தினகரன் வாரமஞ்சரி - கூராயுதம் ஜன 13, 2008 )


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

Friday, 7 January 2011

அனாரின் கவிதை முகம் :
பெண்ணுணர்வு சார் கவிதைகளின் வீச்சம்



- எல். வஸீம் அக்ரம் (இலங்கை)

-------------------------------------------------------------------------------------------------------------

ஈழத்து தமிழின் நவீன கவிதைகளுக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார், அனார். என்ற கவிஞர் சேரனின் குறிப்புகளில் இருந்து அனாரின் கவிதைகளுக்கான குறிப்பை பகிர முனைவோம்.

வழமைக்கு மாறான கவிதை மொழியை அடையாளம் காணும் போது அது நமக்கு வியப்பையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தும். இந்த வியப்பின் அத்திவாரம் ஈழத்து கவிதைப் பகைப்புலத்திற்கு முக்கியமான வளர்ச்சியை நிறுவிகிறது. இந்த நிறுவுகைகளுக்கு அனார் முக்கியத்துவமான படைப்பாளியாக பரிமாணம் தருகிறார். தனது முதலாவது கவிதை நூலுக்கு (ஓவியம் வரையாத தூரிகை) சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றதுடன் தமிழ்க் கவிதைப் புலத்தில் தனக்கான ஒரு கவிதை மொழியை ஓடவிட்டு வலம் வரும் இவர் கிழக்கிழங்கையின் கவிதைப் புலத்தில் முக்கிய விருட்ஷமாக வளர்கிறார். அனாரின் 'எனக்கு கவிதை முகம்' அவரது இரண்டாவது தொகுதியாகும்.

பெண்மொழி என்ற உணர்வுப் பகிர்வுக்கான களம் இன்று ஒரு முக்கிய வளர்ச்சியைக் கண்டு வருகிறது. அதிலும் கவிதை தனக்கான ஒரு தனித்துவமான வாசிப்பை ஏற்படுத்துகிறது. அண்மைக்கால கவிதைப் புலத்தில் சுல்பிகா, அனார், பஹிமா ஜஹான், கெகிராவ சஹானா, பெண்ணியா, கெகிராவ ஸூலைகா என்ற இஸ்லாமிய பெண் படைப்பாளிகளது பெண்ணியல் கருத்தியல்கள் அசாதாரண வீச்சை கொட்டி நிற்கின்றன. இவ்வொவ்வொரு படைப்பாளிகளது படைப்பின் சமூக கலாசார நாகரீக தாக்கங்கள் தொடர்பான நுட்பமான ஆய்வுகள் தனித்தனியாக செய்யப்படுமாயின் அதன் விளைவுகள் அபரீதமானதாக அமையும் என்பது எனது எதிர்வுகூறலாகும்.

இனி அனாரின் கவிதைகள் குறித்த ஒரு குறிப்புக்குள் நுழைவோம். அனாரின் கவிதை மொழி தனித்துவமானது. அவரது கவிதைப் பாடுபொருள்கள் ஏனைய தமிழ்க் கவிஞர்களின் மரபார்ந்த அல்லது தொடர் நிலைத் தாக்கங்களுக்கு அப்பாற்பட்டது. அதாவது நமது சூழில் எதிர்கொள்கின்ற அகப் புறக் காரணிகளுக்கு அப்பால் நின்று இது ஒரு மிகவும் நுண்ணிய உணர்வினதும், மிகவும் குறைந்த பரப்பில் அதீதம் நிறைந்த தன்னுணர்வுத் தன்மையானதுவாக அமைகின்றன.

குறிப்பாக பெண் என்ற அடிப்படைப் பால் கட்டமைப்பில் ஒரு புதுவிதமான உணர்வை மிகவும் வேட்கையும், காதல் நிறைந்ததுமான கவிதைகளைக் கொண்டு நிரப்புகிறார். கவிதைகளின் முதல் வாசிப்புப் புரிதலை இரண்டாவது வாசிப்புப்புரிதலிலிருந்து தனித்துக் காட்டுகிறது இவரது கவிதைகள். அதாவது கவிதையின் பேசுபொருள் விதம் இறுக்கமாக இருப்பதுடன் அதன் உணர்வுச் செறிவும் கவிதை நயமும் கவிதைகளுடன் எம்மை அந்த உணர்வுடன் அழைத்துச் செல்கிறது.

பெண் என்ற ஒரு மனித ஜீவி நீண்ட காலம் ஒரு வரலாற்றுப் போரின் விளைவாக இன்று தனது சுதந்திரத்தை அடைந்துள்ளாள். அது குறிப்பிடத்தக்க விகாரத்தின் விளைவாக இன்று ஒர அரசியலையே கட்டுவித்துவிட்டது என்ற மெய்யியலை அல்லது யதார்த்தைத்தை அனாரின் கவிதை முகம் நமக்குச் சொல்கிறது.

ஒரு பெண்ணுக்கான யதார்த்தம் நிறைந்த கனவுகள், காதல், ஏக்கம், பீதி, தன்நம்பிக்கை போன்ற உணர்வின் அத்தனை அம்சங்களுகம் இவரது கவிதைகளில் துலங்குகின்றன. ஓரிரண்டு கவிதைகள் வாசிப்பின் பொருள்கோடலை செம்மையாக தராவிட்டாலும் அனேக கவிதைகள் வியப்பான வரைவிலக்கணத்தைத் தருகின்றன. கவிதைகளுக்காக கவிதயினி சேமிக்கின்ற வசனங்கள் நமது காட்சிப் புலங்களுக்கு அப்பாலும் நீண்டு செல்வதுடன் இயற்கையின் ஒவ்வொரு அங்க அசைவையும் அதன் கவிதை நயத்துடன் எழுதுவது சிறப்பே. உதாரணமாக – 'பனிப்பாறைகளால் மூடுண்ட குளிர்ந்து விரைக்கச் செய்யுமோர் பெரு நீர்ப்பரப்பு அகோரப் பசி எடுக்கையில் அந்தப்புரத்தின் அரசி ....' என நீளும் கவிதை மொழியழகு இயற்கையின் அற்பங்களை, நுண்மைகளை விஞ்ஞான யுத்தியில் நமக்கு உயிராக்குகிறது கவிதை.

அனாரின் கவிதைகளில் கலவியுணர்வு அதீதமடைந்து தெரிவது அதி நவீனத்தவ சிந்தனையின் வெளிப்படாகிறது. குறிப்பாக சர்ரியலிசத்தின் அதி யதார்த்தவாதத்தின் உணர்வுகளை படம்பிடிக்க முனைகிறது. பிச்சி என்ற அனாரின் கவிதையை முதலில் மூன்றாவது மனிதன் இதழில் வாசித்த போது அதன் விளக்கத்தை அவரிடமே (கவிதையாயினியிடமே) கேட்டக வேண்டும் என்ற உணர்வைக் கோரியிருந்தது. பின்னர் அக்கவிதையை எனக்கு கவிதை முகம் என்ற தொகுதயினுடாக வாசிக்க முனையும் போது அக்கவிதை அந்தரங்கத்தின் மொழியை உரசுவது இயல்பாக்கியது. 'திருடனின் பார்வை, வீரனின் மிடுக்கு, உள்நுழைந்தது பாம்பு, உடல் வாசனை கமழும் அறைக் கண்ணாடியில் பாம்பின் கோடுகள் ...' என்ற கவிதையே இங்கு நான் மேலே சட்டிய விடயமாகிறது.

அனாரின் கவிதைகளில் தென்படும் அந்த வேட்கைசார்ந்த காதல் உணர்வு சாதாரண மனித யதார்த்தம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் அதன் பிம்பங்களை அனார் வரையும் போது கலாசார ரீதியாக எதிர்கொள்கின்ற சவால்கள் அதிகம். பெண்பலி, தணல் நதி, வெறித்தபடி இருக்கும் கனவு, பிச்சி, உள்ளிட்ட கவிதைகள் கலவி சார்ந்த உணர்வின் அனுபவ வெளிப்பாட்டை அதீத பெண்மொழியில் கவிதைகள் பேசிகின்றன. அனாரின் கவிதைகளில் முக்கியமான ஒரு விடயம் உண்டு. அதாவது பெண் என்ற உணர்வை அல்லது அது கொண்டு எழுகின்ற வீரியத்தைக் கவிதைகளின் அனேக இடங்கள் பறைசாற்றுகின்றன. நான் பெண், எனக்குக் கவிதை முகம், வண்ணாத்துப் பூச்சியின் கனாக்காலக் கவிதை, மேலும் சில இரத்தக் குறிப்புகள், அரசி, பெண்பலி, மாற்றமுடியாத வலி, அறைக்கு வெளியே அலையும் உறக்கம் என்பன இதில் முக்கியமானவை. அனாரின் கவிதை மொழியலகு சிறப்பானது. அதிலும் பெண்ணியக் கருத்துக்கள் மக்கியமானவை. அதே வேளை கவிதைகளின் கருத்தியல்கள் ஒரே விதமானவை. அனாருக்கு நமது கடந்த காலப் போரின் அனந்தமான விளைவுகள் எட்டாமல்போனது விசித்திரமானது. அனாரின் கவிதைப் புலம் ஒரு வீட்டின் எல்லைக்குள் மட்டும் நிழலாடுவதாக தோன்றுகிறது. அனாரின் கவிதைகள் குறைந்த வாசகர் தரத்தை எய்வதாகவே எமக்குப் படுகிறது. அது நமது நாட்டுத் தொடர் சிற்றிதழ்களிலும் வெளிவந்து சமூகத்தின் கண்களுக்கு புருவங்களை உயர்த்தப் பின்னுட்ட வேண்டும் என அனாரை இச்சந்தர்ப்பத்தில் வேண்டலாம்.


( மல்லிகை - ஆகஸ்ட் 2009 )


-----------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் விரும்புகிறபடியான பெண்



- கௌசல்யா (கனடா)
-------------------------------------------------------------------------------------------------------------

இந்த உணர்தலை, புரிதலை வரலாற்றிலும் நடைமுறையிலும் கண்டடையும் தன்நிலை பெண்ணிடத்தில் பரவலாவது முக்கியமாக இருக்கிறது. இதுவே ஒருத்திக்குள் முனைப்பாகக் கூடிய முதல் விடுதலையுணர்வு. இத்தகைய முத்தாய்ப்புகளும் அறிகுறிகளும் தமிழுலகில் பெண்ணிடத்தில் வெளிப்படத் தொடங்கிவிட்டன. அவள்கள் தாங்கள் விரும்புகிறபடியான பெண்ணாக, அதிகபட்சம் மனிதமாகக்கூட வாழ முடியாமற்போனதும், போகிறதுமே வரலாறு. எல்லா நிலையிலும் யார்யாரே விரும்புகிறபடியான பெண்ணாக இருத்தலே இருப்பாய் தொடர்கிறது. இந்நிலையிலேயே ஒருத்தி தன்னைத் தன்னிலையில் உணர்வதும், தன் உடல், உள இன்பதுன்பம் சார் உணர்வை, மொழியைக் கொண்டாடுவதும் அதைப் பொதுப்பரப்பில் உணர்த்த முற்படுவதும் அவளைப் போன்றவர்களின் விடுதலை நோக்கிய முனைப்பே. இன்று அதிகமாக வெளிவரும் எழுத்துக்களில் இவ்வாறே பெண்ணிலை அடையாளமாகிறது.

ஈழத்தின் (பண்டைய இலங்கைக்கு ஈழம் என்ற பெயர் இருந்திருப்பதால் இதை முழு நாட்டுக்குமான பெயராகவும் கொள்ளலாம்.) கவிதைப் போக்கில் பெண்கவிகளின் வீச்சு அதிகப்பட்டிருக்கும் காலமிது. அவற்றிற்கான முக்கியத்துவமும் பரிமாணங்களும் சூழலைப் போலவே தனித்துவமானவை. அவற்றுள்ளே சமகாலத்தில் எந்தச் சேதிகளையும் பல கோணங்களிலும் பரிணாமங்களிலும் கூறக்கூடிய கவிதைகள் அனாரிடம் கைவந்துள்ளன. 'எனக்குக் கவிதை முகம்' தொகுப்பினது வாசிப்பு கண்ணுக்குப் புலப்படாத காட்சிகளிலும் வெளிகளிலும் மிதக்கின்றது. இவை அண்டங்களையும் பருவகாலங்களையும் தாண்டியும் அமுங்கியும் படிமங்களாய் ஊடுபாய்கின்றன. பழக்கப்பட்ட மொழியும் படிமங்களும் ஆயினும் அவை கோர்பட்ட நேர்த்தி, சேதியின் மையப்புள்ளியை சுற்றி காட்சிகளாய் விரித்துச் செல்லும் கவிதைகள் பலதைத் தந்துள்ளது.

தனியொரு கவிதையுள்ளான வாசிப்பும் தொகுப்புக்குள்ளான வாசிப்புக்கும் தொடர்பு பல இடங்களில் முரணாகலாம். ஆனால் தொகுதியுள்ளான வாசிப்பின் மூலமே பொதுமைப்பாடான கூறுகளைக் கண்டடைய முடிகிறது. இதன்படி கவிஞரின் கனவுச் சூழல்சார் பதிவுகளே படிமங்களாயும், உணர்வுகளாயும் பரவியுள்ளன. அவற்றையும் வலிந்து கூறும் பாசாங்குத் தனம் அற்றவையாய் நிர்ப்பந்தமற்றவையாய் மிக இயல்பாய் 'வண்ணத்துப் பூச்சியின் பிரமாண்டமான கனாக்காலக் கவிதை' களாக்கியிருக்கிறார்.

நாளாந்தம் வன்முறைகளின் நாடாயிருக்கும் கவிஞரின் சூழலில் மானுடம் கனவுக்குமட்டும் உரியதோ? அன்றேல் நிகழ் சூழலின் கொடுந்தகிப்பிலுந்து தப்பும் விருப்பில் பிரக்ஞையற்ற பெரு வெளிகளிலும், காற்றிலும், காமத் தேடலிலும் கவிமனம் சஞ்சரிக்கிறதோ எனத் தோன்றுகிறது. ஏனெனில் நாளாந்த உயிர் வாதைகளின் அலறல்கள் பற்றி ஒரு கவிதை முழுவதுமாகப் பேசுகிறது. இன்றய நிலையில் பரிணாம வளர்ச்சியால் எந்த மாற்றத்தையும் காணாத வன்மம் நிறைந்துள்ளது மானுடவளர்ச்சி. விலங்குத் தனமே வாழ்வை ஏதோ ஓர் உயரத்திற்கு கொண்டு செல்கிறது. நேரடியான மனிதப் போர்களிலும் மறைமுகமான வணிகப் போர்களிலும் இதுவே சாத்தியப்பட்டிக்கிறது. இக்கொடுமைகளை பெண்ணுணர்வில் அணுகியிருக்கிறார் அனார்.

'இரத்தம் அதிகம் சிந்தியவர்கள்
அதிக இரத்தத்தைச் சிந்த வைத்தவர்கள்
தலைவர்களால் கௌரவிக்கப்பட்டும்
பதவி உயர்த்தப்பட்டும் உள்ளார்கள்'

இன்றைய ஈழ அரசியல் இதுவாயிருப்பினும் வேட்டை சமுதாயத்திலிருந்து அரசாட்சிக் காலங்களிலும் நவீன மக்களாட்சியிலும் கூட இதுவே நடைபாதை. ஒடுக்கப்படும் ஒரு மக்கள் கூட்டத்தின் பாதுகாப்பு, நலன், உரிமைகளுக்காக சிந்தப்படும் குருதிக்கு மானுட அறம் கூறும் சிறப்பும், வீரமும் மக்கள் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. அங்கு சிந்திய குருதி புனிதமாகவும் காட்டப்படுகிறது. கனடாவின் பல பாடசாலைகளுக்கு போர்த் தளபதிகளின் பெயர்கள் இடப்பட்டுள்ளமை நகைமுரண். மறுதலையாக ஒடுக்கும் அதிகார மையங்களின் எந்த வடிவத்திலான குருதி சிந்தலும், சிந்த வைக்கப்படலும் வன்மத்தின் இரத்த வாடையெனவும், வேட்டையின் இரத்த நெடியொடும் தெருக்களிலும் கல்லறைகளிலும் காய்ந்துள்ளன. இத்தொடர்ச்சிகளில் 'இரத்தம் கருணையை, பரிதவிப்பினை,' ஆதரவினை, மானுடத்தை உலகப் பொதுமையில் அவாவுகின்றது. வன்முறைக்குக் கூட அறமுளதோ எனும் கேள்வியைத் தவிர்க்கமுடியவில்லை. போராட்டங்களுக்கும்; புரட்சிகளுக்குமான அறன் என்பதும் பல நுண்ணரசியலை மூடிவிட வல்லதாயுள்ளது. இந்த வாதங்களுக்குள் இடறாமல் கண்ணில் படியும் வலியை அளவு மாறாது மௌனப் பிரார்த்தனையாக உட்கூவுகிறது கவிமனம். அவ்விரத்தம் சாவின் தடயமாய் அதிகார அரசியல்களால் வாதைகளில் பீறிடுவதைக் கடிந்து கொள்கிறது.
'பெண்' அடையாளம் சமூகத்தில் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளை இத்தொகுப்பும் பேசியிருக்கிறது. இக்கவிதைகள் ஓங்கிப் பதித்த காத்திரமான படிவுகள்.

பேசப் பேச தீரா முடிவிலியாய் நீண்டு தொடரும் பெண்ணொடுக்குமுறையின் கையறு நிலையின் யதார்த்தமாய்...

'என் முன்தான் நிகழ்கின்றது
என் மீதான கொலை'

நாளாந்தம் எத்தனை கொலைகளைத் தாண்டி நகர்கின்றன 'பெண்' அடையாளம் கொண்ட உயிரியின் பொழுதுகள். உடலால், உணர்வால், மொழியால்... என தன்மீதான தொலையைப் புரிந்தவர்களுக்கே பணிபுரிந்து அவர்களுடனேயே வாழ்வைத் தொலைக்கும் பேறு வேறு எந்த உயிரினங்களுக்கு வாய்த்துள்ளது? இது பற்றிய எந்தச் சுரணையும் மனித உறவுகளில் இல்லை. மனித உரிமை, முதலில் அடிப்படை உறவுத் தளங்களில் பேணப்பட வேண்டியதின் அவசியத்தை வசதியாய்க் கண்டுகொள்ளாது விடுகின்றோம்.;

'எவ்வேளையும் பிசகாமல்
நீ இருக்கிறாய் என்முன்
எப்போதும் இல்லாத ஒன்றென'

தன் இருப்பை நெருக்கலுக்குள்ளாக்கும் அதிகாரத்தை 'நீ இருந்தென்ன இல்லாவிட்டாலென்ன என்ன' என அஃறிணைப் பொருளாக அலட்சியப்படுத்துவதனூடு எதிர்ப்புக்களை பதிவாக்குகிறது இவ்வரிகள். ஒன்றுமே இல்லாத ஒன்றை ஒரேயொரு காரணத்தின் பொருட்டு பல பெண்களில் வாழ்வில் நிறுத்தியுள்ளது யதார்த்தம். என்னதான் சமரசங்களுக்கு உட்பட வாழநேரிடுனும் அலட்சியப்படுத்தல் மூலம் தன்வெளிக்குள் நெருங்கமுடியாதபடி எல்லை போட்டிருத்தலை நடைமுறையில் பல பெண்கள் கைக்கொள்கிறார்கள். உண்மையான புரிதலும் விருப்புமற்ற எந்த உறவுகளும் எல்லாக் காலங்களிலும் இல்லாத ஏதோ ஒன்றே.

உடலோ, உடமையோ, வலிகளோ
'பெண்ணுடையது என்பதனாலேயே
எந்த மரியாதையும் இருப்பதில்லை அதற்கு'

எந்தப் பிரயத்தனங்களும் இல்லாமல் இலகுவாகத் தூக்கியெறியும் இத்துணிச்சலுக்கு அவள் பெண் என்பதைத் தவிர அதிக காரணங்கள் தேவைப்படுவதில்லைப் பலருக்கு.

கணப்பொழுதுகள் ஒவ்வொன்றிலும் உறவுகளையும் அவர்சார் உடமைகளையும் பராமரித்துக் கொண்டிருக்கும் பெண்நிலை இறுதியில் எல்லாம் விலகிவிட்ட தனிமையை பெறுவதும் கூட அவர்களின் இருத்தல்கள் அவர்களுக்கானதல்ல என்பதே. வெளிப்படைக்கு வீடும் உறவுகளும் சூழலும் பெண் வெளிக்குரியனவாக அவளின் பிரசன்னத்தில் நிறைந்திருப்பனவாக காணப்படினும் அவற்றின் மீது உடமையாளராய் அல்லாது ஒரு பராமரிப்பாளருக்கு உள்ள உறவே காணப்படுகிறது. இறுதியில் தன்னிருப்பையும் வாழ்தலையும் தொலைத்த நிலையை இவ்வரிகள் சுட்டுகின்றன.

'தனிமையின் பள்ளத்தாக்கில் நானிருந்தேன்
காலங்களால் கைவிடப்பட்ட
ஒற்றைப் பட்டமரமாக'

அதிகாரம், வரையறுக்கப்பட்ட வெளி, வன்முறை, அவமதிப்பு இன்னபிறவாக தொடர் மனித உரிமை மீறல்களைப் பேசினும் காதலும் காத்திருத்தல்களும் குரலோசையை விதந்துரைத்தலுமான கவிதைகளுமே இத்தொகுப்பில் அதிகம். இது கவிதைச் சுதந்திரம் என்ற பொழுதிலும் கவிஞரின் இரண்டாவது தொகுப்பாயும் இருப்பதனால் பொருண்மைக் குறைவுடன் இன்னமும் வெள்ளி வீதியார், ஆண்டாள் நிலைகளைக் கடக்கவில்லையோ எனும் ஐயத்தைத் தோற்றுவிக்கின்றது. எனினும் ஒரு உயிரியின் வாழ்க்கை அன்றாடங்களில் வன்முறைகளிலும், பயத்திலும், கட்டளைகளுக்குள்ளுமான நிலையில் அதிலிருந்து தன்னை உயிர்ப்பிக்கும் கூறுகளை தன்விருப்பான வெளிகளில் கவிமனம் தேடியலைகிறது போலும்.

எந்தப்படைப்பாளியினதும் முதற்பதிவு அவரின் அண்மியசூழற் தாக்கமாயிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வகையில் பெண்படைப்பாளி அவர் வெளியில் தன்நெருக்கமான உறவினதும் வீடான உடன்சூழலையும் பதிவாக்குகிறார். அதுதான் படைப்பு நேர்மையும் அவசியமும் கூட. தன்நிலை பற்றிய தேடல் அங்கிருந்தே ஆரம்பிக்கிறது. ஆனால் அடுத்த பரப்பில் தேடலை முனைய வேண்டியது படைப்பு வெளியையும் இருப்பின் தேடலையும் கூட்டிச் செல்லும். இந்நிலையின் சாத்தியப்பாடும் தேவையானதே.

ஒவ்வொரு மொழியும் ஒரு இனக்குழுமத்தின் இரகசியங்களின் பூட்டுக்களிற்கான கடவுச்சொற்களாய் இருக்கின்றன. அவ்வழியில் பெண்மொழியும் அக்குழுமத்தின் வெளிப்பாடுகளை தமக்கேயான பார்வையில் பட்டறிவுகளையும் பயன்பாடுகளையும் மொழிகின்றன. ஆனால் அவர்களுலகிற்கு பரிச்சயமில்லாத குழுமம் அம்மொழிப்பயன்பாடும், அதன் தொனிப்பும் கூட எவ்வாறெல்லாம் இருத்தல் சிறப்பென்பதை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் அல்லது புகழ்;தல், இகழ்தல் நிலைகளில் தீர்மானிக்க முற்பட்டிருக்கின்றன. சுகிர்தராணி, குட்டிரேவதி, சல்மா போன்றவர்களின் வெளிப்படையான மொழிப்பாவனை ஏற்படுத்திய எரிச்சலும் அனாரின் 'பிச்சி' போன்ற கவிதைகள் 'மாதந் தவறாது இரத்தத்தைப் பார்த்து...' போன்ற வரிகள் ஏற்படுத்திய கோபங்களும் சாட்சியங்கள். இத்தொகுப்பின் முன்னுரையும் இதை வழிமொழிகிறது. 'உரத்த தொனியும் உயரும் கோபமும் சீற்றமும் இல்லாமல்...' நாசூக்காக வாளுறைக்குள் கனவுகளை நிரப்புவதை கிலாகிக்கிறது ஆண்மனம் (முன்னுரையில் சேரன்). ஆமாம், பெண் தன்னெதிர்ப்பை, ஆற்றாமையை, அழிவை எல்லாம் அமைதியான, கிசுகிசுப்பான தொனிகளில் வெளிக்காட்டினால் ஆண்மனம் எப்போதும் கிளர்ச்சியோடே இருக்கும். வரலாறு முழுவதும் இதுதானே கேட்கப்படுகிறது. தந்திரமான எதிர்ப்புக்கள் விரும்பப்பகின்றபோலும். அனாரின் மொழிக் கையாளுகையின் சிறப்பும் அத்தகையதொரு தளத்தைக் கொண்டுள்ளது. அது அவரின் கவிச்சிறப்பாயும் உள்ளது.

'இருப்பின் பின்னால் வாழ்வின் வெளி' எனும் கவிதை தன்னுரிமையான சுதந்திர வெளியை மொழியின் ஆட்சியால் பிரகடனப்படுத்துகிறது. 'காற்று' றோடு தொடர்புற்று மட்டும் பல முடிச்சுக்கள் இக்கவிதைகளில் விழுந்திருக்கின்றன. கவி காற்றைச் சூறையாடக் குறையாக 'காற்றின் பிரகாசத்தைக் கண்டேன்', 'காற்றைத் தின்னவிடுகிறேன்', 'காற்றில் வெளிப்படுமுன் பிம்பம்', காற்றிலிருந்து நீளும் நீர் விரல்கள்', காற்றின் முழுமயான அகங்காரம் நீ', காற்றின் முடிவற்ற அலட்சியம்' 'காற்றின் கிழிந்த ஓரங்கள்'... என காற்றின் பிரகாசம் பரவியுள்ளது.

மொத்தத்தில் எந்தக் கூறையும் கவிதையாக்கிடும் சூட்சுமம் அனாரின் மொழிக்குண்டு. பல கவிதைகள் சூக்குமத்தில் வெளியை, தனிமையின் இருப்பைக் கொள்ளும்வேளை, அதன் வரலாறு தூலத்தில் சடமாயும், உணர்வாயும் இடைவெளியற்ற எண்ணச் சந்தடிகளோடும் பொதிந்துள்ளது. மானிட உணர்தலை தூரத்தே விரிகின்ற வெளி ஒன்று வெட்டி ஓடுகிறது. கனாக்காலக் கவிதையாய் மட்டுமல்ல.

'நான் பாடல்
எனக்குக் கவிதை முகம்'

என்பது அனாருக்கு மட்டுமல்லாது இருப்பை வராலாற்றில் தேடிக்கொண்டிருக்கும் பல பெண்களுக்கான முகமாகவும் கவிதை உள்ளது.


( காலம் - மே 2009 )


-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஈழத்துப் பெண்களின் கவிதைப்புலத்தில் அனாரின் கவிதைகள்
 '
எனக்குக் கவிதை முகம்' தொகுப்பை முன்வைத்து





- நிலான் ஆகிருதியன் (இலங்கை)
-------------------------------------------------------------------------------------------------------------

ஈழத்துக் கவிதைகளின் பிரிநிலை அலகாக எண்பதுகளில் கிளைத்து விரிந்த பெண்களின் கவிதைகளுள்ளன. தீவிரமான பெண்ணிலைவாதச் சிந்தனைகளுடனும் பெண்மொழிப் பிரக்ஞையுடனும் கட்டமைக்கப்பபடும் பெண்களின் கவிதைகள் பொருளாலும் ஆழத்தாலும் தனித்த அடையாளத்தை நிலைநிறுத்தியுள்ளன. ஆண்மையச் சமூகத்தில் விளிம்பு நிலைக் கூறாக இருக்கும் பெண், கால காலமும் சட்டமிட்ப்பட்ட வாழ்க்கை முறைகளையும், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட அனுபவக் கூறுகளையும் பால்நிலைக் கற்பிதங்களையுமே தன் அடையாளங்களாகக் கொண்டிருந்தாள். இந்த வட்டச் சுழற்ச்சியின் மையத்தைத் தகர்த்துக் கொண்டு பெண்களின் படைப்புக்கள் மேற்கிளம்பியிருக்கின்றன.

வன்முறைகள் உக்கிரம் பெற்ற எண்பதுகளில் பல பெண்கள் கவிதை எழுதத் தொடங்கினர். இவர்களின் கவிதைகளில் வன்முறையின் ஆறாத காயங்கள் தீவிரமாக வெளிப்பட்டன. கைதுகள், காணாமல்போதல், வன்புணர்ச்சி, சித்திரவதை, விதவையாக்கப்படல் என நீளும் துயர்களின் வலிகளும் பெண்கள், ஆண்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளும் ஒடுக்கு முறைகளும் கவிதைகளின் பொருள்களாயின. நம்பிக்கையீனங்களும் நிச்சயமின்மைகளுமே பெரும்பான்மைக் கவிதைகளிலும் உள்ளோடிக் காணப்பட்டன.

ஊர்வசியின் இடையில் ஒரு நாள் என்ற கவிதை
'..................................................
விடியலில்
கருக்கல் கலைகிற பொழுதில்
எனக்கு கிடைத்த
தற்காலிக அமைதியில்
நான் உறங்கும் போது,
ஒரு முரட்டுத்தனமான
கதவுத் தட்டலுக்குச் செவிகள்
விழிக்கும்

.................................
பிறகு
கூந்தல் விழுந்து விழுகின்ற வரையில்
விசாரணை
என்னருகே அம்மாவும்
கூட்டிலிருந்து தவறி விழுந்துவிட்ட
ஒரு அணில் குஞ்சைப்போல

நீ போய் விட்டாய்
நாள் தொடர்கிறது.'

என முடிகின்றது. இக்கவிதை எண்பதுகளின் நெருக்கடி மிக்க சூழலை சித்தரிக்கின்றது. புதல்வர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதும் அதன்பின் நிகழுகின்ற ஏனையவர்களின் இருப்பின் நிச்சயமின்மைகளையும் தாய்மையின் ஏக்கத்தையும் பரிதவிப்பையும் இயல்பாக வெளிப்படுத்துகின்றது.

சிவரமணியின் 'யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்' என்ற கவிதை போர்க் காலங்களின் நெருக்கடியை இன்னொரு விதமாகக் காட்டுகின்றது.

'தும்பியின் இறக்கையைப்
பிய்த்து எறிவதும்
தடியையும் பொல்லையும்
துப்பாக்கியாக்கி
எதிரியாய் நினைத்து
நண்பனைக் கொல்வதும்
எமது சிறுவரின் விளையாட்டானது

யுத்த கால இரவுகளின்
நெருக்குதலில்
எங்கள் குழந்தைகள்
'வளர்ந்தவர் ஆயினர்'

சிவரமணி குழந்தைகளின் இயல்புகளினூடு யுத்தகாலத்தின் மோசமான தாக்கத்தை மொழிகின்றார். யுத்தம் குழந்தைகளின் இயல்புத்தனத்தைப் பறித்தெடுத்துவிட்டு அவர்களை வளர்ந்தவர்களாக்கும் முரணை எழுதுகின்றார்.

ஈழத்து பெண்களின் கவிதைகளின் மையமும் இயங்கு நிலையும் தொடரும் வன்முறைகளின் நீட்சியிலிருந்தே கட்டமைக்கப்படுகின்றன. எண்பதுகளில் தொடங்கி இன்று வரையிலுமாக இப்போக்கு தொடர்கின்றது.

இனமுரண்பாடுகளால் விளைந்த கொடூர வன்முறைகள் ஒருபுறமிருக்க பெண், பால் சார்ந்து குடும்பத்திலும் புழங்கும் இடங்களிலும் எதிர்கொள்ளும் நெருக்குதல்களும் ஒடுக்குமுறைகளும் தீவிரம் பெறுகின்றன. சங்கரியின் 'அவர்கள் பார்வையில்' என்ற கவிதை

'எனக்கு
முகமில்லை
இதயமுமில்லை
ஆத்மாவுமில்லை
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன'

என அமைகிறது. இக்கவிதை பெண் தனது பால் அடையாளம் சார்ந்து எதிர்கொள்ளும் வன்முறையை பதிவு செய்கின்றது. பெண்ணை போகப் பொருளாக ஆண்கள் பார்க்கும் நிலையை யதார்த்த பூர்வமாக சங்கரி காட்டுகின்றார்.

கல்யாணியின் 'நான் உயர்ந்தவன்' எனத் தொடங்கும் கவிதை, இந்த உலகம் ஆணுக்கே உரிதாக உள்ளதையும் 'ஆண்' என்ற அடையாளம் அவனைத் தவறுகளிலிருந்தும் குற்றங்களிலிருந்தும் விலக்கப்படுவதற்கு ஏதுவாக இருப்பதையும் மிகுந்த ஆதங்கத்துடன் எழுதுகின்றார்.

'நீ யார்?
வெறும் பெண்
இந்த விறைப்பைத் தீர்க்கப்
படைக்கப்பட்டவள்
நான்
உயர்வானவன்
உன்னதமானவன்
போற்றப்பட வேண்டியவன்
நான் ஆண்

கட்டுப்பாடுகள் அற்றவன்
சந்தோசமானவன்
என் ஆண் குறி
விறைக்கக் கூடியது'

என கவிதை நிறைவுறுகின்றது. கல்யாணி, ஆண் சமூகத் தடைகள் இல்லாதவனாக இருப்பதையும், பெண் அவனுக்காகவே படைக்கப்பட்டிருப்பதையும் தன்னை எதிர்ப்பால் நிலையில் உள்வாங்கிக் கொண்டு இக்கவிதையினை எழுதியுள்ளார். ஆண் எதிர்ப்பு நிலையின் தீவிரமான போக்கு இந்தக் கவிதையில் வெளிப்படுகின்றது.

தமிழகப்பெண் கவியான சுகீர்தராணியின் கவிதை ஒன்றை இவ்விடயத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமுடையதாக இருக்கும். அவரது 'இரவு மிருகம்' என்ற தொகுதியிலுள்ள 'யோனிகளின் வீரியம்' என்னும் கவிதை இவ்வாறு அமைகின்றது.

'பலகோடி ஆண்டுகள்
கழிந்தொரு பரிணாமத்தில்
உபயோகமற்று
உன் குறி மறைந்து போகும்
அக்கணத்தில் புரியும்
உன் சந்ததிகளுக்கு
எம் யோனிகளின் வீரியம்'

இந்தக் கவிதையின் வரிகள் ஆணாதிக்க சமூகத்திற்கு எதிரான வீரியமிக்க கவிதையாக வெளிப்படுகின்றது. சுகிர்தராணி பெண்ணுடலை காதலினதும் தாபத்தினதும் நிலைகளனாக மட்டும் காட்டாது எதிர்ப்பின் ஆயுதமாகவும் காட்டுகின்றார். பெண்ணின் மேலெழுகையையும், அவளது இருப்புசார் வலிமையையும் உணர்த்துகின்றார்.
ஆண்மையச் சமூகத்தில், பெண் தன் உடல் சார்ந்து குரல் எழுப்புவது தமிழ்க் கவிதைக்கு புது வகையிலான பரிமாணத்தை கொடுக்கின்றது. முலை, யோனி, காமம், தாபம், சுயபுணர்ச்சி, மாதவிடாய் என பெண்கள் கூறுவதற்கே மறுக்கப்பட்ட பெண்களுக்குரியதான வார்த்தைகள் பெண்களின் கவிதைகளில் தீவிர உணர்வுகளுடன் வெளிப்படுகின்றன.

பெண் மொழி என்பது பெண்ணுடலை கொண்டாடுதலோ ஆணுக்கெதிராக குரலெழுப்புவதோ மட்டுமல்ல பெண்ணின் இருப்பில் அர்த்தத்தையும் அவளின் எல்லையற்ற வெளியையும் கோரி நிற்கும் மொழிப்பிரக்ஞை. இந்தப் பிரக்ஞையுடனேயே சமகால ஈழப் பெண்களின் கவிதைகளை அணுக வேண்டும்.

அனார் சமகாலத்தில் கவிதைகள் எழுதும் முக்கியமானவர். இவரின் கவிதைகள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. முதற் தொகுதியான 'ஓவியம் வரையாத தூரிகை' மூன்றாவது மனிதன் (2004) வெளியீடாகவும் இரண்டாவது தொகுதியான 'எனக்குக் கவிதை முகம்' காலச்சுவடு (2007) வெளியீடாகவும் வந்துள்ளன.

அனாரின் 'எனக்குக் கவிதை முகம்' கவிதைத் தொகுதி அவரின் முதற் தொகுப்பிலிருந்து அவரை முதிர்ச்சி மிக்க கவிஞராகக் காட்டுகின்றது. மொழிக் கையாள்கையிலும் பொருட்செறிவிலும், உணர்த்துதலிலும் தனித்தன்மை பெற்றிருக்கின்றது. இத்தனித்துவமே இத்தொகுப்பு கவிதைகளின் மீதான ஈர்ப்புக்கு காரணமாகின்றது.


தொகுதியிலுள்ள முதற் கவிதையான 'மண்புழுவின் இரவு' என்ற கவிதை

'நீளமான நூலாய் தெரிகின்றது இரவு
நான் தனித்த மண்புழு
சிறுகச் சிறுக நீளுகின்றேன்
தொடர்ந்து நீளமான வெள்ளை நூல் தெரியும்வரை' என முடிகின்றது.

கவிதை பெண்ணின் உயிர்ப்பை அழகியல் சார்ந்த தருணங்களினூடாக கட்டுறுப்புச் செய்கின்றது. பெண்ணின் தவிப்பையும், அவாவையும் கூறுகின்றது எனினும் இக்கவிதையின் மேற்காட்டப்பட்டுள்ள இறுதி வரிகள், விடுதலையை அவாவி நிற்கும் பெண்மனப் பிரதிபலிப்பாக வெளிப்படுகின்றன. இரவை நீளமான நூலாகககாண்பதும்; பகலை நீளமான வெள்ளை நூலாகக் காண விளைவதும் புதுமுறை அனுபவத்தின் முகங்கள். பெண்ணை மண்புழுவாகக் காட்டுவது அனார் கையாளும் சமூக வாழ்வியல் சார் குறியீட்டு உத்திக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. மண்புழு விவசாயத்திற்கு உதவும் ஒரு உயிரியாகும். ஆயினும் அதனது அருவருப்பான தோற்றம் எல்லோராலும்; புறக்கணிக்கப்படுவதற்கு காரணமாகின்றது. இவ்வாறே சமூக முன்னேற்றத்திலும் அசைவியக்கத்திலும் பெண் பங்காளியாக இருக்கின்றாள். ஏனினும் 'ஆண்மை' என்ற சொல்லின் மாயப் புனைவுருவாக்கம் அவளை இரண்டாம் நிலையாக சிறுமைப்படுத்தும் போக்கை மிகவும் யதார்த்த பூர்வமாக அனார் வெளிப்படுத்துகின்றார்.

தொண்ணூறுகளின் பிற்கூற்றில் அனார் கவிதை எழுதத் தொடங்கியவர். அவரின் கவிதைகள் சிக்கலற்ற வெளிகளையும் புழங்கும் இடங்களையும் கோரி நிற்பவை, காதலை உன்னதமாகக் கொண்பாடுபவை, போரின் நெருக்கீடுகளையும் குறுக்கீடுகளையும் முகங்களாகக் காட்டுபவை. போர் என்பது அகத்திலும் புறத்திலும் நிகழும் போர். தீராத காதலும் தாபமும் கவிதைகளின் அடிச்சரடாக உள்ள போதும் அவற்றினடியாக மேற்கிளம்பும் எல்லையற்ற துயரமும் ஏக்கமும் தொடர்ந்து கொண்டிருப்பவை.

கனவின் இழைகளாலும் வர்ணங்களாலும் கட்டமைக்கப்பட்ட மொழி அனாருடையது. மெல்லிய கீற்றாகத் தெரியும் ஒளி அசைவையும் தன் வஸீகரமொழியின் சேர்க்கையால் வலுவூட்டுகின்றார். புறநிலை யதார்த்தத்தை மேவிய அகநிலைசார் அனுபவநெகிழ்ச்சியே அனாரின் அதிக கவிதைகளிலும் மேலோங்கியிருக்கிறது. அவரின் கவிதைகளின் புனைவு சார்ந்த வெளியின் உச்ச நிலை இயங்குதலானது கவிதையின் சாத்தியங்களை ஒவ்வொரு அலகுகளாகத் திறந்தபடியிருக்கினறன. காட்சிப்படிமங்களினூடாக மென்னுணர்வு சார்ந்த அனுபவங்களை விரித்துச்செல்கின்றன. இவ்வாறான முன்மொழிவுகளுடாகவே அனாரின் கவிதைகள் பற்றிய அனுபவவெளிக்குள் பிரவேசிக்க முடிகின்றது.

'பிச்சி' என்னும் கவிதை பாலுணர்வுப் பகிர்வு சார்ந்த கவிதையாகும். ஆணின் பாலியல் மேலாண்மையை உள்வாங்கிக்கொண்டு கவிதை விரிந்து செல்கிறது. இந்தக் கவிதையிலுள்ள

'அறைக் கண்ணாடியில் பாம்பின் கோடுகள்
ஆதி மந்திரமாய் உறைகின்றன'

'பாரம்பரியம் கொண்டாடும் பாணனின் இசை
புலன்களை ஸ்பரிசிக்கின்றது'

போன்ற வரிகளில் ஆதி மந்திரம் எது என்பதும் பாரம்பரியம் கொண்டாடும் பாணனின் இசை எது என்பதும் ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. ஆண்வழிச் சமூக அமைப்பில் ஆணே பெண்ணின் பாலுணர்வுகளையும் தீர்மானிப்பவனாகவும் இருக்கின்றான். ஆண் பெண்னை தன் மோகத்திற்கான பாத்திரமாக கையாளும் விதத்தை மேலுள்ள கவிதையின் வரிகள் புலப்படுத்துகின்றன. இது நீண்ட நெடுங்காலமாக பால்நிலை விதியாக தொடர்வதை ஆதிமந்திரம், பாரம்பரியம் கொண்டாடும் பாணனின் இசை போன்ற சொற்களில் வெளிப்படுகின்றது. இன்னொரு விதத்தில் ஆதிமந்திரம், இசை போன்றவை பெண்னை வசியப்படுத்தும் ஆண் தந்திரத்தை குறியீடாக உணர்த்துகின்றன. இதனை உறுதிசெய்வது போலவே

'கடல் திறக்கும் கள்ளச் சாவிகளென
பத்து விரல்கள்' என்னும் வரி அமைகின்றது.

இவ்வரிகளைத் தொடர்ந்து வரும்

'காற்றின் அதிர்வுகளில்
பளிச்சிடுகின்ற மயக்க இழைகள்
விரிகின்றன ஒவ்வொன்றாய்
குளிர்ந்து..................'.

என்கிற வரிகளும் வசியப்படுத்தலுக்கான வினையாற்றுதலை முன் நிறுத்துகின்றன.

அனார், தன் கவிதைகளில் சொற்களை உரிய விதத்தில் அர்த்தப் பாங்குடன் பயன்படுத்துகின்றார். இயற்கை அவரின் கவிதைகளில் புதுப்புது வகையிலாக அர்த்தம் கொள்கின்றது பெரும்பான்மைக் கவிதைகளும் இவ்வாறமைபவையே. இயுற்கையின் மாற்றங்களை, பருவமாற்றங்களை புதிர்களை, புதுமைகளை வாழ்வியற் கூறாக படிமமாக்குகின்றார். இது அனார் கருதும் அர்த்தங்களிலிருந்தும் வாசகனுக்கு மேலும் அர்த்தங்களை கண்டடைவதற்கான சாத்தியப்பாடுகளை ஏற்படுத்துகின்றன.

'நேர்த்தியாக வளர்க்கப்பட்ட புற்தரையில்
குருவிகள்
நீர்த்துளிகளில் ஜொலிக்கும் சூரியனைக் கொறிக்கின்றன.'
(எட்டமுடியாத அண்மை)

'பசுமையின் உச்சமாகி நான் நிற்கின்றேன்
வேர்களின் கீழ் வெள்ளம்
இலைகளின் மேல் ஈரம்
கனவு போல பெய்கின்ற உன்மழை'
(மின்னல்களைப் பரிசளிக்கும் மழை)

'விடிந்தும் விடியாத
இக்காலைக் குளிரில்
முகை வெடித்த பூக்களின் காதுகளுக்குள்
கோள் மூட்டுகின்றது
பெயர் தெரியாத ஒரு காட்டுப் பூச்சி'
(எனக்குக் கவிதை முகம்)

இவ்வாறு பல வரிகளில் இயற்கையைத் தன் கருத்தேற்றத்திற்கான கூறாக அனார் பயன்படுத்துகின்றார். வெறுமனே அழகியற் சொற்களாக இவ்வரிகள் இருக்காது பொருள் மிகுந்தவையாக முதன்மை பெறுகின்றன.

அனாரின் 'அரசி' என்ற கவிதையும் 'நான் பெண்' என்ற கவிதையும் பிற பல கவிதைகளிலிருந்தும் மாறுபடுபவை. இவை பெண்ணின் இருப்பின் அர்த்தத்தை நிறுவ விழைகின்றன. அரசி கவிதை 'குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்' என்ற கவிதையில் முன் நிறுத்தும் 'அந்தப்புரத்தின் அரசி'க்கு நேர்மாறானவளாக காட்டப்படுகின்றாள். அந்தப் புரத்தின் அரசி, குரல் என்னும் திராட்சை ரசத்தினால் கட்டுண்டு போகிறவளாக இருக்க 'அரசி' கவிதையில் வரும் அரசி பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிரான பிரகடனங்களை முன்மொழிபவளாகவும் தனது, 'பெண்' என்னும் அடையாளத்தை ஓங்கியறைந்து வெளிப்படுத்துகிறவளாகவும் இருக்கின்றாள்.

'உன் கனவுகளில்
நீ காண விரும்புகிறபடியே
நான் அரசி
அயல் நாட்டு மகாராஜாக்களின் அரியணைக்கு
சவால் விடும் பேரரசி
அடி பணிய அல்ல
கட்டளையிடப் பிறந்தவள்'
(அரசி)

ஏனத் தன் குரலை உயர்த்தும் போது ஆண்கள், பெண்களைக் காண விரும்பும் 'இல்லத்தரசி' என்ற பதத்தை கேள்விக்குட்படுத்துகின்றாள்;. தன்னைப் பேரரசியாகப் பிரகடனம் செய்கின்றாள். இக் கவிதையின் இறுதி வரிகள்

'கைகளிரண்டையும்
மேலுயர்த்திக் கூவுகின்றேன்
நான்
நான் விரும்புகிறபடியான பெண்
நான் எனக்குள் வசிக்கும் அரசி'

என முடிகின்றன. இவு;வரிகள் பெண்ணின் சமூக விடுதலைப் பிரகடனத்தை ஒலிக்கின்றன. ஆண்களால் பெண்களுக்கெனத் தீட்டி வைக்கப்பட்டிருக்கும் சட்டங்களை தகர்த்து ஒலிக்கும் குரல், தன்னைத் தீர்மானிக்கும் ஆதார சக்தியாக தன்னை வெளிப்படுத்துவது. சமூகத் தடைகள் மிக்க சமூகத்திலிருந்து வெளிப்படும் இக்குரல் ஆழ்ந்த கவனிப்பிற்குரியது. பர்தாக்களை விலத்தி நிமிரும் குரலாக வெளிப்படுகின்றது.
அரசி கவிதையின் இன்னொரு ஆக்கப் பிரதியாகவே'நான் பெண்' என்னும் கவிதையுள்ளது. இது பெண்ணை இயற்கையின் பேருருவாக காண்கின்றது.

ஒரு கட்டாறு
ஒரு பேரருவி
ஓர் ஆழக்கடல்
ஓர் அடைமழை
நீர் நான்
கரும் பாறை மலை
பசும் வயல் வெளி
ஒருவிதை
ஒரு காடு
நிலம் நான்
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான் பெண்'

(நான் பெண்)

இக்கவிதையில் இயற்கையின் அனைத்து வடிவமாகவும் அனார், பெண்ணைக் காண்கிறார். மனிதர்களால் விளங்கிக் கொள்ள முடியா புதிர் நிரம்பிய இயற்கையாக பெண்ணை பரிமாணம் கொள்ள வைக்கின்றார். இப்பரிமாணம் பெண், உலகின் உள்முகச் சக்தியாக எப்போதும் விளங்கும் விதத்தை கொள்வதாக அமைகின்றது.

இத்தொகுப்பிலுள்ள 'மேலும் சில இரத்தக் குறிப்புக்கள்' என்ற கவிதை ஏனைய கவிதைகளிலிருந்து தனித்துத் தெரிகின்றது. பிற கவிதைகளிற் பலவும் ஆண், பெண் எதிர்பால் உறவு நிலையை மையப்படுத்தியேயுள்ளன. ஆனால், இக்கவிதை தாய்மையின் அடித்தளத்திலிருந்து வளர்ந்து கோபுரமாகின்றது. வன்முறைகளின் வடுக்களை மானிடப் பெருந்துயராகக் காட்டுகின்றது.

கவிதையின் ஆரம்பவரி பெண்ணின் உடலியல் இயற்கையாக இருக்கும் மாதவிடாய் பற்றிய இயல்போடு தொடங்குகின்றது. மாதந்தோறும் குருதி காண்கின்ற போதும் குழந்தையின் விரலில் குருதி காணும் போது ஏற்படும் அதிர்ச்சியையும் வலியையும் தாங்கமுடியாத தாய்மையின் உணர்வு நிலையிலிருந்து காட்டுகின்ற போதும், இந்த உணர்வு நிலை தன்குழந்தை என்னும் நிலை கடந்து வன்முறையாலும் போராலும் இறக்கும், வலியுறும் உயிர்களுக்கான கருணையின் கண்ணீராகப் பீறிடுகின்றது.

அனாரின் பிற கவிதைகளில் இல்லாத துயரத்தின் வலியும், இயலாமையின் கண்ணீரும் மனக்குலைவின் சிதறல்களாய்த் தெறிக்கின்றன.

'வன்மத்தின் இரத்தவாடை
வேட்டையின் இரத்த நெடி
வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்
கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்
சாவின் தடயமாய்
என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது'

என முடியும் 'மேலும் சில இரத்தக்குறிப்புக்கள்' கவிதை தொடர்ந்து கொண்டிருக்கும் மனிதப் பேரவலத்தின் சாட்சியாக நிற்கின்றது. வன்கல்வி, சித்திரவதைகள் என்றாகிவிட்ட எமது காலத்தின் முகப் பிரதிபலிப்பாக இருக்கின்றது.

அனாரின் 'எனக்குக் கவிதை முகம்' தொகுப்பிலுள்ள பல கவிதைகளும் காதலை முன் நிறுத்துபவை. ஆண், பெண் உறவின் ஆதார ஊற்றாகக் காதலும் காமமும், தாபமும் கலந்து உருப்பெறும் கவிதைகள் என இவற்றை வரையறை செய்யமுடியும். ஆயினும் அனார் இருவகையாக தன் உணர்வுகளை காதல் சார்ந்த கவிதைகளில் வெளிப்படுத்துகின்றார். முதலாவது கேள்விகளோடு ஆணையும் அவனது காதலையும் எதிர்கொள்வது. இரண்டாவது, தனணுணர்வு நிலையில் குழைந்து ஆணையும் அவனது காதலையும் கேள்விகளற்று ஏற்றுக்கொள்வது. இவ்விரு தன்மைகளுடனும் வெளிப்படும் இக்கவிதைகளில் பெண்ணின் துயரையும் அவளது மறுக்க முடியா மேன்மையையும் பதிவு செய்கின்றார்.

அனாரின் சில கவிதைகள் ஒத்த அனுபவத்தின் வேறுவிதமான சாயல்களோடுள்ளன. ஒரு கவிதையை படிக்கும் போது இன்னொரு கவிதை நினைவில் வந்து வாசிப்புக்கு இடையூறை ஏற்படுத்துகின்றது. தொகுப்பிலுள்ள பல கவிதைகளும் காதலைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளமை இதற்குக் காரணமாக இருக்கலாம். ஏடுத்துக் காட்டாக தணல்நதி, வரு(ந்)த்துதல் ஆகிய இரு கவிதைகளையும் காட்டலாம். 'தணல் நதி' என்ற கவிதையின்

'ஓர் முத்தத்தைப் பற்ற வை
எரிந்து போகட்டும் என் உயர்க்காடு' என்னும் வரிகளும்

'குளித்து ஆறவிடு என்னை
குமுறட்டும் தனிமை
மங்கிப் போய்ச் சாகட்டும் பகல்'

என்னும் 'வரு(ந்)த்துதல்' கவிதையிலுள்ள வரிகளும் ஒத்த அனுபவத்தின் இருவேறான சொல்லடுக்கு முறையாகவேயுள்ளன.

தனிமையையும் ஆற்றாமையையும் எழுதிச் செல்லும் அனார், தன் அகநிலை அனுபவங்களின் திரட்சியாகவே தன் கவிதைகளைத் தருகின்றார். ஆவரின் கவிதைகளை ஒட்டு மொத்தமாகப் படிக்கும் போது வாசகனின் மனம் இன்னொரு மாற்றுப் பிரதியை கோரி நிற்கின்றது. இந்த மாற்றுப்பிரதி கவிதை சார்ந்த அனுபவமாக மட்டுமல்லாமல் வாசகனின் மனதில் எழும் கேள்விகளாகவும் உருக்கொள்கின்றது. கேள்விகளும் அதனோடு ஒட்டிய வாசிப்பு அனுபவமும் அனாரின் அக நிலைசார் அனுபவங்களுக்கு அப்பாலாக விரிந்து கிடக்கும் துயரங்களிலும் வலிகளிலும் தொங்கிக் கிடக்கின்றன.

மொத்தமாக முப்பத்து மூன்று கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை காதல் கவிதைகள் என பெருங்கூறாகவும், பெண்ணியப்பொருள்சார் கவிதைகளாகவும், வாழ்வியல்சார் இருப்பைப் பாடுபொருளாகக் கொண்ட கவிதைகள் எனவும் வகையீடு செய்ய முடியும். காதல் கவிதைகளிலும் பெண்ணியச் சிந்தனை உள்வாங்கப்பட்டுள்ள போதும், நான் பெண், அரசி, பெண்பலி போன்ற கவிதைகள் தனித்துவமானவை, நுண்ணாய்வுக்குட்படுத்த வேண்டிய இக்கவிதைகள் பெண்ணுடலின் மீதான ஆக்கிரமிப்பை கேள்விக்குட்படுத்துகின்றன. பெண்ணின் சுயாதீன இருப்;புக்காகக் குரல் எழுப்புகின்றன.

'மேலும் சில இரத்தக் குறிப்புகள்', 'எட்டமுடியாத அண்மை', 'வெயிலின் நிறம் தனிமை', 'கோமாளியின் கேலிப் பாத்திரம்', 'மாற்ற முடியாத வலி', 'வெறித்தபடி இருக்கும் கனவு', 'பருவ காலங்களைச் சூடித்திரியும் கடற்கன்னி' போன்ற கவிதைகள் பாடுபொருளின் வேறுபாடுகள் காரணமாக தனித்துத் தெரியும் கவிதைகளாகும்.

'எனக்குக் கவிதைமுகம்' தொகுதி அனாரின் கவிதா ஆளுமையை வெளிப்படுத்துன்கின்றது. சொற்தேர்விலும் படிமப்படுத்துதலிலும் அவருக்குள்ள தேர்ச்சியையும் நுண்ணுணர்வையும் அறியமுடிகின்றது. முன்னுரையில் சேரன் குறிப்பிடுவது போல'ஈழத் தமிழின் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கின்றார் அனார்', என்பது கவனிப்புக்குரிய கூற்றாகவேயுள்ளது.

( அம்பலம் - 2009 )


-----------------------------------------------------------------------------------------------------------------------------------
அனார் கவிதைகள்



- கருணாகரன் (இலங்கை)

-------------------------------------------------------------------------------------------------------------

துக்கமும் அலைச்சலும் நிரம்பிய நாட்களில் எதிர்பாராத விதமாக மகிழ்ச்சியைப் பகிர்வதற்கென்ற மாதிரியாக வந்திருந்தது அனார் கவிதைகள் (எனக்குக் கவிதை முகம்).

தபாலில் இந்தக்கவிதைத் தொகுப்பு வந்தபோது நாங்கள் மீண்டும் இடம் பெயர்ந்திருந்தோம். கடிதத்தை தருவதற்காக தபாற்காரர் எங்களைத் தேடியலைந்திருக்கிறார். இடம்பெயரிகளுக்கென்று எப்போதும் நிரந்தர முகவரி இருக்க முடியாது. பலஸ்தீனிலும் ஈராக்கிலும் ஆப்கானிலும் கொசோவாவிலும் எப்படி சனங்கள் கடிதங்களை பெறுகிறார்கள் என்று தெரியவில்லை. எப்போதும் ஓடவேண்டியிருக்கும் வாழ்க்கையில் நிற்பதற்கேது தருணம். தரிப்பதற்கேது இடம். அதனால் சில நாட்கள் பிந்தியே புத்தகத்தைப்பார்க்கக் கிடைத்தது.

போர் மீண்டும் மீண்டும் எங்களை விரட்டுகிறது. அது தொடர்ந்து விரட்டுகிறது. எந்தக்குற்றமும் செய்யாத எங்களை விட்டுத் துரத்துகிறது. முடிவில்லாத ஓட்டம். ஓடி, ஓடியே எனது காலம் போய்க்கழிந்து விட்டது. அனாரும் போரை எரிச்சலுறுகிறார். அவருக்குள் இருக்கும் காதல் பொங்கும் மனதை இந்தப்போர்ச் சூழல் கெடுத்துக் கரைத்து விடுகிறது. அவர் பெண்ணாக நின்று இதை உணர்கிறார். பெண் உணர்கையின் வழியாக அதை மொழிகிறார். இதில்தான் அவர் அதிக கவனத்தை பெறுகிறார். அனாரின் கவிதைகள் பெறுகின்ற இடமும் இதில்தான் சிறப்பாகிறது.

அனாரின் 'மேலும் சில இரத்தக் குறிப்புகள்' கவிதை மிகவும் அலைக்கழிப்பதாயிருக்கிறது. அந்தக் கவிதைக்குள் கசிந்து கொண்டிருக்கிற குருதி, வாசிப்பின் பின்னான தருணங்களில் 'சாவின் தடயமாய் என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருந்தது'. அக்கவிதையில் நிசப்தமாய் விசும்பிக்கொண்டிருக்கிற பெண்மையின் சுவடுகள் வன்முறைக்கெதிரான வலிமையான பிரதியியல் நடவடிக்கைகளாகும். ஈழத்திலிருந்து வன்முறை-வலி தொடர்பில் பெண்களால் எழுதப் பட்டவற்றுள் மிகவும் சிறந்த கவிதைப் பிரதி அதுவெனலாம்.

வித்தியாசங்களை உணர்தல் - அறிதல் (recognition of differences) - பெரும்பாலும் ஆண்மை, பெண்மை என்கிற dichotomyia - என்பதிலிருந்தே பெண்மைய அரசியலும் அதற்கான கவிதையியலும் (feminist politics and it 's poetics ) கட்டமைய முடியும். வித்தியாசங்களை உணர்தல், வெளிப்படுத்துதல் என்று வருகையில் அனார் முக்கியமானவர். தனது வித்தியாசத்தின் இருப்பை சாராம்சப்படுத்துதலினூடாகவே அவர் கட்டமைக்கிறார் (essentialising). ஆனாலும் கூட, ஆண் புனைவுக்கு எதிரான எதிர்ப்புனைவாய் குறித்த சாராம்சப் படுத்துதல் அமைந்துபோவதால், ஒரே சமயத்தில் அது சுமை நீக்குவதாகவும் அவசியமானதாகவும் இருக்கிறது (காண்க: ' மை' தொகுப்பிலுள்ள ' பருவகாலங்களைச் சூடித்திரியும் ' கவிதை) அனாரின் கவிதைப் பெண் ' விலகி நிற்பவள்' . அவள் சொல்கிறாள்:

'இன்னும்
இந்த ஒரே உலகத்திலேயேதான் இருக்கின்றன
எனக்கும் அவனுக்குமான
வெள்வேறு உலகங்கள் '
(பக்.24)

வன்முறையைப் பதிவு செய்கிற போதிலும் கூட அனார் ' பெண்ணிலைப் பட்ட' படிமங்களையே கையாள்வதை இங்கு குறிப்பிட வேண்டும். 'மேலும் சில இரத்தக் குறிப்புகள் ' கவிதையில் வருகிற மாத உதிரம் பற்றிய சங்கேதமே அக்கவிதையின் ' பெண்மை ' யை மீள்வலியுறுத்திக் கொண்டியங்குகிற ஒன்றாய் அமைகிறது.

தனது வித்தியாசங்களைக் கொண்டாட அவர் முயல்வது மகிழ்ச்சி தருகிற விடயம். பெண்ணிய அரசியலிலும் கவிதையியலும் 'கொண்டாட்டம் ' என்பது மிக அவசியமான ஆயுதம். ' நான் பாடல், எனக்குக் கவிதை முகம் ' என்றெழுதுகிறார் அனார்.

இவ்வாறு அனாரின் மேலும் சில இரத்தக்குறிப்புகள் கவிதையைப்பற்றியும் அவருடைய படைப்பியலைப்பற்றியும் சொல்கிறார்; ஹரிகரசர்மா. அந்த அளவுக்கு அனாரின் உணர்வுலகமும் அனுபவப்பரப்பும் நிகழ்காலத்தின் கொந்தளிப்பான நிலைமைகளால் காயமடைந்து கன்றியுள்ளது. பதற்றம் நிறைந்த நாட்களில் வாழும் கவி அனார். அவருடைய கவிதைகளிலும் இந்தப்பதற்றமுண்டு. நெருக்கடியுண்டு. வாழ்வு நசியும் துயருண்டு. அத்துடன் பெண்ணாயிருத்தலின் விளைவாகப் பெறும் அனுபவத்தையும் அவர் அவர் பகிர்கிறார், அதுவும் பெண் மொழியில்.

ஹரி சொல்வதைப்போல பெண்ணுடலைக் கொண்டாடுதல், பெண் நிலைப்பட்ட படிமங்களைக் கொள்ளுதல் என்பதிலிருந்தே இந்த படைப்பியக்கத்தின் வலிமை திரள்கிறது. பெண்ணுடலைக் கொண்டாடுதல், பெண் உணர்வைக் கொண்டாடுதல், பெண்மொழியைக் கொண்டாடுதல் என்று இந்த வலிமையின் விரிதளம் பெருகுகிறது. இங்கே பெண் தன்னைத்தானே அங்கீகரிக்கிறாள். தன்னைத்தானே நிறுவுகிறாள். தான் மேலெழுந்து வருகிறாள். அனாரின் பல கவிதைகளிலும் இந்த அம்சம் உள்ளது. அவருடைய பிரக்ஞையின் இயங்குதளம் அத்தகைய நிலையிலேயே உருவாகியுள்ளது. னார் பெண்கவி. அதிலும் முஸ்லிம் பெண்கவி. சிலவேளை இப்படி பெண்கவி என்று தனி அடையாளத்தை வைப்பது தவறாகவும் அனாவசியமாகவும் படுகிறது. சிலபோது அது தவிர்க்க முடியாது. கட்டாயம் என்றும் தோன்றுகிறது.

அப்படி வைத்து பார்ப்பதனூடகப் பலபுதிய பிரதேசங்களையும் ஆழ்நிலைகளையும் அறியலாம் என்றும் படுகிறது. அதேவேளை பெண்கவி என்று பிரிப்பதனூடாக சார்பு நிலை அணுகுமுறை ஏற்பட்டுவிடுமோ என்றும் படுகிறது.

இதுவே ஒரு தத்தளிப்புத்தான். தீராத தத்தளிப்பு. சமூக விலகல்களும் ஏற்றத்தாழ்வுகளும் உருவாக்கிய தவறுகளால் இப்போது இப்படி நாம் கிடந்து எல்லாவற்றுக்குமாக தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாவற்றுக்கும் அதிகாரமும் அதன் குருட்டுத்தனமுமே காரணமாக இருந்திருக்கின்றன.

பொதுவான வாழ்க்கை அமைப்பில் இன்னும் பெண் கடக்க வேண்டிய எல்லைகள் நிறையவுள்ள சூழலில் ஒரு பெண்கவியாக தொடர்ந்து இருப்பதில் பல பிரச்சினைகளுண்டு. அதிலும் முஸ்லிம் பெண்கவிக்கு அதைவிடவும் அதிக சவால்களுண்டு. இன்னும் சொன்னால் அறத்தின் வழியாகவும் சமூக அரசியல் ரீதியாகவும் இயங்க முனைந்தால் இந்த நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். அதிலும் போர்க்காலத்தில் படைப்பாளிகளுக்கு ஏற்படும் பெரும் பிரச்சினையே அறம் எழுப்பும் சவால்தான். இதையே அனாரின் கவிதைத் தொகுப்பான எனக்குக் கவிதை முகம் நூலின் முன்னுரையிலும் சேரன் சொல்கிறார்.

அனார் இந்தமாதிரியான பிரச்சினைகள், நெருக்கடிகள் எல்லாவற்றையும் எதிர்கொண்டே தன்னுடைய கவிதைகளை எழுதுகிறார். அனாரின் பிரதிகளிலும் அவருடைய உரையாடலிலும் இந்த நெருக்கடிகளின் தாக்கத்தையும் அதற்கெதிரான, மாற்றான அவருடைய நிலைப்பாட்டையும் புரிந்து கொள்ளலாம்.

இப்போது எனக்குக் கவிதை முகம் என்ற அவருடைய இரண்டாவது கவிதை நூல் வந்திருக்கிறது. முதல் தொகுதி ஓவியம் வரையாத தூரிகை 2004 இல் வெளியானது. இந்த இரண்டு தொகுதிகளின் பிரதிகளுக்குமிடையில் அனாரின் கவிதைமொழியில் நிறைய மாறுதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. சொல்முறை, உணர்முறை, அவருடைய பார்வை, கருத்து, மொழி எல்லாவற்றிலும் மாற்றங்களும் முதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தொடர் பயணத்தை நிகழ்த்தும் படைப்பாளிகளிடத்தில் எப்போதும் இத்தகைய படிமலர்ச்சியையும் முதிர்ச்சியையும் காணலாம்.

முதல் தொகுதியில் அவர் செய்கிற பிரகடனங்களை இரண்டாவது தொகுதியில் செய்யவில்லை. பதிலாக அவர் அருகிருந்தும் உள்ளிருந்தும் பேசுவதைப்போல தோன்றும் கவியாக்க முறைமையைக்கையாள்கிறார்.

ஆனால் அவருடைய அனுபவத்தில் திரண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்த பதிவுகளை அவர் விட்டுவிடவில்லை. அவற்றை இப்போது வெகு சாமர்த்தியமாகவும் இயல்பாகவும் பக்குவமாகவும் சொல்ல முனைகிறார். அமைதியொலிக்கும் கவிதைகளாக தமிழ்ப்பரப்பில் இந்தக்கவிதைகளைத் தரும் அனார் அவற்றினுள்ளே தனது தீவிரத்தை குறையாமல் பரிமாற்றுகிறார். அவருடைய அரசியல் மனித மேன்மை குறித்தது. அதற்கான அறத்தை வலியுறுத்துவது. அதைக் கோருவது. சிறு வட்டங்கள், வளையங்களுக்குள் சிக்கிவிடாதது. இது இன்றைய ஈழத்தமிழ்க் கவிதைப்பரப்பில் மிக அபூர்வமானது.

ஈழக்கவிதைப்பரப்பில் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார். அவருடைய கவிதைகளைத் திருப்பித்திருப்பிப் படிக்கிறபோது வேட்கையும் காதலும் மேலெழுகின்றன. தனிமையும் காத்திருப்பும் எரித்தாலும் ஊடல் சுடர்விடுகிறது. பதற்றமும் பீதியும் சூழ்கின்றன. திசைகள் குழம்பித்தத்தளிக்கின்றன. உள்ளடங்கியிருந்தாலும் அனாருடைய கவிதைகள் தீட்டும் அரசியற் சித்திரம் மிகவும் முக்கியமானது என்று சேரன் முன்னுரையில் குறிப்பிடுவது கவனத்திற்குரியது.

அனார் ஈழத்துக்கவிதைப்பரப்பில் தனித்துத் துலங்கும் ஒரு பிரகாசமான அடையாளமே. அவருடைய கவிதை மொழியும் மொழிபும் அசாதாரணமானது. கனிவு நிரம்பிய உணர்வும் மொழியும் மொழிபுமானது. மீள மீள வாசிக்கக் கோரும் ஈர்ப்பை அனார் ஏற்படுத்துகிறார். அவருடைய பிரதி வேறுபட்ட தளத்தில் உணச்சிப்பரிமாற்றங்களை நிகழ்த்த முனைகிறது.
ஈழத்தின் பெண் கவிதை வெளிப்பாடு பிரக்ஞை பூர்வமாக இயங்கத்தொடங்கி இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. சொல்லாத சேதிகளுக்குப்பின்னரான அல்லது அதன் தொடர்ச்சியான பெண் கவிக்குரலில் அனார் பெறுகிற இடம், அடையாளம் இந்தத் தொடர்ச்சியில் ஒரு முக்கிய புள்ளியாகவும் விலகித் தெரியும் தனித்த கோடாகவும் உள்ளது. மென் சொல் முறையில் தீவிர மன நிலையை ஏற்படுத்தும் இயல்பு கொண்ட கவியாக்கத்திறன் கொண்டவராக அனார் இருக்கிறார்.


ஒரு காட்டாறு
ஒரு பேரருவி
ஒரு ஆழக்கடல்
ஒரு அடை மழை
நீர் நான்
கரும் பாறை மலை
பசும் வயல் வெளி
ஒரு விதை
ஒரு காடு
நிலம் நான்
......
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான் பெண்
(நான் பெண்)

பெண்ணை அவர் பேரியற்கையின் அம்சங்களாகவே காணுகிறார். பெண்ணுடலும் பெண் மனமும் இந்த இயற்கையின் அம்சமே. அது எல்லையற்றது. விரிவும் ஆழமும் கூடியது. எல்லாக்காயங்களின் பின்னாலும் எல்லா அழிவுகளின் பின்னாலும் உயிர்ப்புடன் திரண்டெழுவது. பேராறாகவும் ஆழ் கடலாகவும் வெளியாகவும் காடாகவும் மலைப்பாறையாகவும் விதையாகவும் காயமாகவும் காற்றாகவும் நெருப்பாகவும் அவர் தன்னை உணர முடிகிறது.

ஒடுக்கப்பட்ட நாடுகளின் அல்லது ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கவிகள் எதிர்கொள்கிற சவால்கள் அனாருக்குமுண்டு. அதிலும் பெண்கவிகள் சந்திக்கின்ற அத்தனை வலிகளும் இடர்களும். அரசியல் ரீதியாக அவருடைய பார்வை பொது வரையறைக்குள்ளிருந்தாலும் உலகு தழுவிய, மானுட விடுதலை தழுவிய நேசமும் அக்கறையையும் இருக்கிறது. புதிய உலகத்தின் நுட்பமான வலையமைப்புகளையும் பொறிகளையும் அது பெண்களை இன்னொரு தளத்தில் சிறையிடுவது பற்றியும் அனார் அதிகம் பேசவில்லைத்தான். ஆனால், அவருக்குள்ள பிரச்சினைகளை அவர் சொல்லத்தயங்கவில்லை என்பது இங்கே முக்கியமானது.

வானவில் படிந்து உருகிக் கிடக்கும்
மலைகளின் தொன்மப் புதையல்களில்
மௌனம் குருதி சொட்ட ஒளிந்திருக்கிறேன்
......
பூங்கொத்துகளில் துளிர்த்துத் தேனூறும்
வண்ணத்துப் பூச்சியின் பிரமாண்டமான
கனாக்கால கவிதை நானென்பதில்
உனக்குச் சந்தேகமிருக்கிறதா இனியும்
(வண்ணத்துப் பூச்சியின் கனாக்காலக் கவிதை)

நாளாந்தம் எண்ணங்கள் வைத்து
நினைவும் மறதியும் ஆடுகிற சூதாட்டம்
கைதவறிச் சிதறிப்போகிற தேநீர்க் குவளை
தலைக்கு மேல் மிதந்து வருகிற பூச்சிறகு
அல்லது வெறும் அசைவற்ற ஒரு வெளி
எவ்விதமாகவும்
நான் தோன்றியிருக்கவும் கூடும்
உனக் கெதிரில்
எவ்வேளையும் பிசகாமல்
(இல்லாத ஒன்று)

பெண்ணின் இயல்பெழுச்சி ஆணினால் வரையறை செய்யப்படுவது அனாருக்கும் பிரச்சினையாகவே இருக்கிறது. அவர் அதனை மறுதலிக்கிறார். இத்தகைய மறுதலிப்பும் நிமிர்வும் நமது கவிதைப்பரப்பிலும் சமூகப்பரப்பிலும் இதற்கு முன்பே நிகழத் தொடங்கிவிட்டதுதான். ஆனால் அது இன்னும் சமூகத்தின் பொதுப்போக்காக பிரக்ஞை பூர்வமாகத் திரளவில்லை. பெண் சந்திக்கிற நெருக்கடிகளினதும் சவால்கள், பிரச்சினைகளினதும் தன்மைகள் அப்படியேதான் அநேகமாக இருக்கின்றன. ஆனால் அந்த வடிவம் மாறிவிட்டது. அதாவது இப்போதுள்ள பொது நிலைமைகளில் அறிவியலுக்கேற்ப நுட்பங்கள் அதிகரித்திருக்கின்றன. அவ்வளவுதான்.

மூன்றாமுலகின் பெண்படைப்பாளிகளுக்கு எப்போதும் பல பிரச்சினைகளுண்டு. அவர்கள் தங்களைச் சுற்றிய சூழலை எதிர் கொள்வதுடன் சர்வதேச ரீதியான அழுத்தங்கள் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. மூன்றாமுலகின் பண்பாட்டுச் சுமை அதாவது அது வளர்ச்சிக்கான தத்தளிப்பிலிருப்பதால், அதனால் எதையும் கடக்கவும் முடியாது எதனையும் ஏற்றுக் கொள்ளவும் முடியாது என்ற நிலையில், பெண்களே அந்தச் சுமையைக் காவ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஆண்கள் இதில் மிகவேகமாக மாற்றங்களின் பின்னோடும்போது பெண்ணுக்கு அந்தச்சந்தர்ப்பத்தை அந்தச் சமூகங்கள் கொடுப்பதில்லை. இந்த ஓர வஞ்சனை எந்தவகையான வெட்கமுமின்றி, கருணையுமின்றி ஆணாதிக்க உலகினால் தொடரப்படுகிறது. இதில் ஏற்படும் கொதிப்பு நிலையை அனார் துணிச்சலோடு முன்னீடாக்குகிறார். அவருடைய வாழ் களமான முஸ்லிம் சமுகத்தின் பிடிமானங்களைக்கடந்தும் அவருடைய உரையாடல் நிகழ்கிறது. இப்படி நிகழும்போது அவருடைய மொழி புது மொழியாக புதிய பிரதேசங்களைத் திறக்கிறது. இதில் அனாரின் சாவி நுட்பமானது. இதில் அனாரையும் விட சல்மா அதிக எல்லைகளில் விரிகிறார். அதுவும் பாலுறவு மற்றும் பாலுணர்வுத்தளத்திலும். அதிலும் அதிர்ச்சியும் வியப்பும் கவனமும் ஏற்படுகிற விதமாய். ஆனால் அனாரோ இன்னொரு புதிய தொடுகைப் பிரதேசத்தில் பயணிக்கிறார். ஒருவரின் பாதையில் இன்னொருவரும் பயணிக்க வேண்டும் என்பது இங்கே அர்த்தமில்லை. அவரவர்க்கான பயண வழிகளிலும் திசைகளிலும் அவரவர் செல்லும் சுதந்திரமுண்டு.

போரால் கட்டப்பட்ட அல்லது சுற்றிவளைக்கப்பட்ட வாழ்க்கையில் மனித அடையாளம் பெறுமதியற்றது. இந்த வருத்தம் எந்தப்படைப்பாளியையும் கொதிப்படைய வைக்கும். உலகின் சகல திசைகளிலும் நெருக்கடியான நிலைகளில் படைப்பாளிகள் மனித அடையாளத்துக்காகவும் இருப்புக்காகவும் தங்களின் குரலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் உண்மையான போராட்டமாக இருந்திருக்கிறது. அறத்தின் வழி நிற்பதற்காக அவர்கள் பெருத்த சவால்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். படைப்பாளியின் இயங்கு தளம் அப்படித்தான் இருக்கும். அறத்தை நிராகரித்து விட்டு அதிகாரத்துக்காக இயங்குவதென்பது அல்லது அதைச்சார்ந்து நிற்பது என்பது படைப்பாளி தன்னைத்தானே நிராகரிப்பதாகும். ஆகவே, இங்கே அனார் அறத்தை வலியுறுத்தியே தன்னை நிறுவுகிறார்.

அனாருடைய கவிமனம் அன்பும் பரிவும் நேசமும் கருணயும் நிரம்பியது. அவரிடம் வன்மனது இல்லை. அவருடைய மொழியிலும் மொழிபிலும் வன்னியல்பில்லை. ஆனால் தீர்மானங்களுண்டு. வலிமையுண்டு.

காற்றைத் தின்ன விடுகிறேன்
என்னை
என் கண்களை
குளிர்ந்த அதன் கன்னங்களை வருடினேன்
.....
(காற்றின் பிரகாசம்)

பேரியற்கையாக விரிந்திருக்கும் பூமியில் எல்லாவற்றையும் அவர் சிநேகம் கொள்ள முனைகிறார். அந்தச் சிநேகம் ஒரு பெருங்காதலாகப்பிரவாகிக்கிறது. அது மனிதரிடத்திலும்தான். இயற்கையினிடத்திலும்தான்.

அதனாலென்ன
அவன் வாள் உறைக்குள்
கனவை நிரப்புவது எப்படியென்று
எனக்குத் தெரியும்
மகத்துவம் மிகுந்த இசை
தீர்வதேயில்லை.
நான் பாடல்
எனக்குக் கவிதை முகம்

பெண்ணின் சேதி, பெண் அடையாளம் இயல்பான ஒன்றென்று உணர்த்தும் எளிய, நுட்பமான வரிகள் இவை. இதுவே அனார்.

எனக்குக் கவிதை முகம் அன்பூறும் சொற்களாலான நெகிழும் சித்திரங்களைக் கொண்டதொரு கவிதைத்தொகுதி. போரின் பேரோலங்களுக்கிடையில் அனார் எப்படி இத்தனை நெகிழ்ச்சியான மொழியைக் கொண்டிருக்கிறார் என்பது தீரா ஆச்சரியமே.


( சரிநிகர் - ஜன - பெப் 2008 )


-------------------------------------------------------------------------------------------------------------

Monday, 3 January 2011

கனவுகளும் இரத்தக் குறிப்புகளும் இன்னும் பலவும்:
அனாரின் கவிதை முகங்கள்



- சேரன் (கனடா)
-------------------------------------------------------------------------------------------------------------

நமது கவிதையின் முகங்கள் புதிய வண்ணங்களுடனும் சிறந்த படிமங்களுடனும் நிறைந்த அர்த்தச் செறிவோடும் பெருகி வருகின்றன. எதிர்ப்பு இலக்கியம், எதிர்ப்பின் கவிதை போன்ற குரல்கள் எழ ஆரம்பித்துக் கால் நூற்றாண்டு முடிந்து விட்டாலும் சமூக, அரசியல் சூழல் அடிப்படையில் மாற்றமடையாமல் உக்கிரமும், அவலமும், போரும், போரூடாக வாழ்வும் என்ற வகையில், தொடர்ந்தும் மானுடத்துக்குப் பாரிய சவால்களையும் கவிஞர்களுக்கு அறச் சிக்கல்களையும் எழுப்பி வருகிறது.

அனாரின் கவிதை மொழியில் சொல்வதானால் 'இருட்டைத் தின்று வளரும் கனவுகளும், இரத்தக் குறிப்புகளும், அளவற்ற பதற்றமும்' சூழ வாழ்க்கை நகர்கிறது. அந்த வாழ்க்கையையும் அது தொற்ற வைக்கிற சிக்கலான ஆனால் நுண்ணிய உணர்வுகளைத் தன்னுடைய ஆத்மாவின் சந்தம் பிசகாது 'உயிரூற்றி'ப் புதிய கவிதைப் படிமங்களாகச் செதுக்குகிறார் அனார்.

கிழக்கின் ஒரு சிற்றூரில்தான் அவரது வாழ்வு. எனினும் அவருடைய கவிதா உணர் நிலையும் பாடு பொருளும் சொற்புதுமையும் மொழி அழகும் அகன்ற மானுடத்தின் அனுபவங்களையும் வாழ்வியலையும் வசப்படுத்துகின்றன. அனாரின் கவிதைகளுடாகத் துலக்கமாகவும் கவித்துவமாகவும் வெளிப்படுகிற குரல், அனாரின் கவிதை ஒன்று பாடுவது போலவே, 'புரவிகள் பூட்டிய குரல்.'

ஈழத் தமிழின் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார். அவருடைய கவிதைகளைத் திருப்பித் திருப்பிப் படிக்கிறபோது வேட்கையும் காதலும் மேலெழுகின்றன. தனிமையும் காத்திருப்பும் எரித்தாலும் ஊடல் சுடர்விடுகிறது: பதற்றமும் பீதியும் சூழ்கின்றன: திசைகள் குழம்பித் தத்தளிக்கின்றன: 'கடக்க முடியாமல் தணல் முன்னால் தொங்குகிறது இரவு' அந்த இரவுக்குள் செல்வதற்கு 'உள் வெளியில் வியாபிக்கும் மாபெரும் ஒளியை' அவர் எங்களுக்கு ஆயுதமாகத் தருகிறார்.

உள்ளடங்கி இருந்தாலும் அனாருடைய கவிதைகள் தீட்டும் அரசியல் சித்திரம் மிகவும் முக்கியமானது. உரத்த தொனியும் உயரும் கோபமும் சீற்றமும் இல்லாமல் தெளிவாகவும் நளினமாகவும் அவர் சொல்கிறார்: வாள் உறைக்குள் கனவுகளை நிரப்புங்கள். சாத்தியமான வரிகள். இவற்றைச் சாத்தியமாக்குவதில் இலக்கியத்தின் பங்கு என்ன என்று ஒருவர் கேட்கமுடியும். இத்தகைய சாத்தியமான வரிகளை எழுப்புதல்தானே கவிதையின் பணி! அதைவிட வேறேதாவது பணி நமது கவிதைக்கு இன்று இருக்க முடியுமா!

சுயபலம் பொருந்திய தேவதைகள் விடுதலை பெற்ற பரவச வாழ்வொன்றை வென்றெடுப்பர் என்று உறுதியுடன் கூறுகிறார் அனார். அந்த உறுதியும் அதனோடு இணைந்ததாகக் கனவும் வேட்கையும் அழகும் அனாரின் கவிதை உலகத்தின் சிறப்பான வரைபடங்களாக உள்ளன. அந்த வரைபடங்களுக்கும் அவருக்கும் எல்லைகள் இல்லை. அத்தகைய எல்லைகள் சாத்தியமில்லை என்பதும் அனாருக்குத் தெரிந்திருப்பது அவருடைய கவிதாவாழ்வு பல்வேறு திசைகளிலும் பயணிக்கும் என்ற முற்குறிப்புகளை சுட்டிக் காட்டுகின்றன. அவருடைய ' தாகத்தின் முன் இருப்பது எது?' என்பது ஒரு பெரிய கவிதைக் கேள்வியாகும். அந்தக் கேள்விக்கு விடைகாணுகிற முடிவற்ற பயணமாக அனாரின் கவிதைகள் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.

கடந்த பல ஆண்டுகளாக ஈழத்துக் கவிதைத் துறையில் சில தீவிரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவற்றுள் ஒன்றுதான் கிழக்கின் முஸ்லீம் பெண் கவிஞர்களின் தனித்துவமான எழுச்சி.இத்தகைய தனித்துவங்கள் மேல் எழுகிற போது ஆரம்பத்தில் இனத்துவ அனுபவங்களும், அவை வெளிப்படுத்துகிற இனத்துவ ஒடுக்கு முறையின் சித்தரிப்புகளும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும். பெண்களின் குரலாக இவை ஒலிக்கிற போது வேறு சிறப்பான நுண ; அரசியல் தளங்களும் அவைக்கு இருப்பது சாத்தியம். இவையனைத்தையும் திட்டமிட்டு வரன்முறையாக அளந்தளந்து பயன்படுத்தி இலக்கியத்தைத் தயாரித்துவிட முடியாது. வாழ்பனுபவங்களும் கவிதையும், அரசியல் நுண்ணுணர்வும், சிந்தனையும், துணிவும், கனவும் இயல்பாகவும் கூர்மையாகவும் ஒன்றிணைய வேண்டும். அத்தகைய நிலையில் நமது கவிதை பேரலைகளை எழுப்பவல்லது.

அனாரின் கவிதைகள் அனுபவச் சிறையையும் இனத்துவச் சிறையையும் தாண்டி விரிவும் பரவசமும் கொள்ளக் கூடியவை. 'சாவின் தடையமாய் இரத்தம் நமது வாழ்வைப் பின் தெடர்ந்தாலும்; - 'முத்தத்தின் ஒளித்துளி'யையும் கொண்டாடுகிறார் அவர்.

இயலாமையில் எழுதப் படாத கவிதைகள் அனாருடையவை. அவருக்கும் அவர் கவிதைக்குமான சமூக, அரசியல் சவால்கள் நமது இறுக்கமான சமூகக் கட்டமைப்பிலிருந்தும், பொறுமையற்ற, பொறுப்பற்ற அரசியலிலிருந்தும் பலமாக எழக் கூடும். அந்த நேரங்களில் அத்தகைய சவால்களை எதிர் கொள்ள தோழமையுடன் அவருடன் ஒத்தோடிகளாக பல கவிஞர்கள் இருப்பார்கள். நமது கவிதைகள் தரும் இன்னுமொரு முக்கியமான சேதியாகவும் இது இருக்கட்டும்.

(எனக்குக் கவிதை முகம் - 2007 )


-----------------------------------------------------------------------------------------------------------------------------------



Sunday, 2 January 2011

படிமச் செறிவான கவிதை மொழி



- சுகுமாரன் (இந்தியா)
-------------------------------------------------------------------------------------------------------------

ஈழத்துச் சமகாலப் பெண்ணெழுத்தை அடையாளப்படுத்தும் முகங்களில் ஒன்று அனார். இந்தக் கவிதைகளைப் பெண்ணியக் கவிதைகள் என்று வகைப்படுத்த முடியுமா என்பதில் எனக்குத் தயக்கமிருக்கிறது. பெண்ணியம் என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாகப் பொருள்படுகிற கருத்தாக்கம். சொல்லும் வாய்களையும் உதடுகளையும் கேட்கும் காதுகளையும் பொறுத்து அது பொருள்படுகிறது. பெண்ணாக இருப்பதால் அனுபவிக்க நேரும் சமூகச் சிறுமைகளுக்கும் உடல்சார்ந்த புறக்கணிப்புகளுக்கும் பண்பாட்டுத் தரப்படுத்துதல்களுக்கும் மறுப்பான நிலை என்று தோராயமாகப் பொருள்கொள்ளலாம்.

பெண் காலங்காலமாக அவளுடைய உடல் சார்ந்தே மதிப்பிடப்படுகிறாள். இந்தப் பன்முகத்தன்மையில் அமைந்தவையல்ல 'எனக்குக் கவிதை முகம்' தொகுப்பிலுள்ள அனாரின் கவிதைகள். ஆனால் இந்தக் கவிதையாக்கத்தின் மையமாக உள்ள அனுபவங்கள் பெண்ணுக்குரியவை. 'பிச்சி' என்ற அனாரின் கவிதையை ஓர் ஆண்மனம் அனுமானிப்பது கடினம். இந்தக் கவிதைக்குப் பின்புலமாக உள்ள அனுபவம் இருபால் தன்மையுடையது. ஆனால் கவிதையனுபவமாக உருவாகியிருப்பது ஒரு பெண்ணின் உணர்வு நிலையிலிருந்துதான். இது வேறொரு அவதானிப்புக்கும் வழிகாட்டியது. பெண்நிலைக் கவிதையாக்கத்தில் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது பெண்ணெழுத்தின் உடல்தானே தவிர அவளுடைய உடலின் எழுத்தல்ல. இந்த உடலுக்குள் ஓர் ஆண்மனம் இயங்குவது இயற்கையாகவே அசாத்தியம். அனாரின் கவிதைகளைப் பொருட்படுத்திப் பேச வாய்ப்பளிப்பது இந்த அசாத்தியம்தான்.

இன்று கவிதையின் வகைகள் மாறியிருக்கின்றன. போக்குகள் மாறியிருக்கின்றன. வெளியாகும் கவிதைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. கவிதைக்கான பரப்பும் விரிவடைந்திருக்கிறது. கவிதையின் எல்லைக்குள் எல்லாவற்றுக்குமான இடமிருக்கிறது. கவிதையின் பேசு பொருட்களும் அபரிமிதமாக விரவியிருக்கின்றன. இவற்றிலிருந்து தன்னுடைய படைப்பியல் நோக்கங்களுக்கும் வாழ்வனுபவத்துக்கும் கூடுதல் பொருள் சேர்க்கக்கூடிய கவிதைகளை இனங் காணுவது கவிஞனுக்கும் வாசகனுக்கும் ஒரே சமயத்தில் அறைகூவலாகிறது. தன்னுடைய இருப்பை முன்வைக்கக் கூடிய கவிதைகளைக் கவிஞன் எழுதி ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தை இன்று கவிதை கோருகிறது. காலங்காலமாகக் கவிதை இந்த முன் நிபந்தனையை விதித்துக்கொண்டேதான் இருக்கிறது. அதை எதிர்கொள்ளும் மாற்றுமுறைகள்தாம் கவிதையை நிலைநிறுத்துகின்றன. இந்த மாற்றுமுறைகள் ஒவ்வொரு கவிஞனிடமும் ஒவ்வொன்றாக உருப்பெறுகின்றன.

அனாரிடம் அது ஒரே சமயத்தில் மொழிதலாகவும் முகமனாகவும் மாறுகின்றன. பெண்நிலையிலிருந்தே அனார் தன்னுடைய அனுபவங்களை முன்வைக்கிறார். அதற்கு இசைவான படிமச் செறிவான கவிதை மொழியைப் பயன்படுத்துகிறார். இது மொழிதல் சார்ந்தது. அனாரின் கவிதைகள் பெரும்பான்மையும் முன்னிலைப்படுத்தப்பட்ட ஒன்றை நோக்கியே மொழியப்படுபவை. அது அநேகமாக ஓர் ஆண் தன்னுடைய இருப்பைப் பொருட்படுத்தக் கோரும் இறைஞ்சுதலும் தன்னை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தும் வேட்கையும் தான் தவிர்க்கப்படும்போது எழும் சீற்றமும் பாராமுகமாக்கப்படும்போது ஏற்படும் ஊடலும் சக இருப்பு இல்லாதபோது உருவாகும் தனிமையும்தாம் அனாரின் கவிதைகளில் இடம்பெறும் பிரதான பேசுபொருட்கள். இதைக் காதலுணர்வு என்று மட்டுமாகச் சுருக்கி விட முடியாது என்றும் தோன்றுகிறது. இதே மனநிலையிலுள்ள உரிமை மறுக்கப்பட்ட இன்னொரு நபருக்கு இந்த உணர்வு வேறு அர்த்தங்கள் கொண்டதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இந்தத் தளமாற்றம் இதுவரை ஈழத்துக் கவிதைகளில் அரிதானதாக இருந்தது. அனுபவங்களை நேரடியாக முன்வைத்த கவிதைகளிலிருந்து சமகால ஈழத்துக் கவிதைகளை வேறுபடுத்தும் பொது அம்சமும் இதுவாக இருக்கலாம். இந்த அடிப்படையில்தான் அனாரை சமகால ஈழத்துக் கவிதையின் நவீன முகமாகப் பார்க்க முடிகிறது.

அனாரின் கவிதைகளில் இரண்டு மையங்கள் இருக்கின்றன. இரண்டும் ஒன்றுக்கொன்று முழுமைப்படுத்திக்கொள்ளும் மையங்கள். ஒரு பெண்ணிருப்பின் அனுபவங்களைக் கொண்ட மையம் ஒன்று. இதில் முதன்மையாக இயங்குவது காதலுணர்வு. ஆனால் இதன் தொனி நான் என்னவாக இருக்கிறேனோ அதுவாக ஏற்றுக்கொள் என்று வலியுறுத்துகிறது. அதைப் பொருட்படுத்தாத சகஜீவியின் நிலைப்பாட்டை விமர்சிப்பதாகவே அந்தத் தொனியும் இருக்கிறது. 'காதலைக் கொல்லும் தேவை' என்னும் கவிதை இந்த மனநிலையையும் தொனியையும் கொண்டிருக்கிறது.
காதலுணர்வின் பல கோணங்களைச் சொல்லும் அனாரின் கவிதைகளில் பெண்நிலை சார்ந்த விமர்சனம் மறைந்திருக்கிறது. இந்தக் கவிதைகளில் செயல்படும் நுட்பமான அரசியல் இது என்று வகைப்படுத்தலாம். இது கொடிபிடிக்கவோ முழக்கமிடவோ செய்வதில்லை. ஆனால் இந்த அரசியல் காலங்காலமாகக் கவிதையில் பயின்று வருகிறது. அனார் இன்னொரு காலத்தில் இன்னொரு பின்புலத்தில் இதைச் சொல்லுகிறார். இந்த நோக்கில் கவிதை என்றும் நிகழ்காலத்தின் ஊடகம் என்பதை வலியுறுத்தலாம்.

கவிதையில் அனார் கொண்டிருக்கும் இன்னொரு மையம் சமகால ஈழத்து அரசியல் சார்ந்தது. ஓர் இனத்தின் அடக்குமுறைக் கால அனுபவங்களிலிருந்து எழும் குமுறலைக்கொண்டிருக்கும் மையம் இது. இந்த மையத்தைச் சார்ந்த இரண்டு கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அவற்றில் பிற கவிதைகளில் தென்படும் ஈரக் கசிவைக் காண முடிவதில்லை. வெம்மையான வரிகளில் இயங்குகின்றன இந்தக் கவிதைகள். காதலிலும் யுத்தத்திலும் அதிகம் வதைக்கப்படுபவர்கள் பெண்கள் என்பது இந்த வெம்மைக்குக் காரணமாக இருக்கலாம். 'மேலும் சில இரத்தக் குறிப்புகள்' தீட்டிய வாளின் கூர்மையுடன் துலங்குகிறது. 'இரத்தத்தைச் சிந்தியவர்களையும் சிந்தவைத்தவர்களையும்' விமர்சிக்கிறது. அனார் வாழும் ஈழத்துப் பின்புலமின்றி இந்தக் கவிதை சாத்தியமாகியிராது. அதை மீறிய பொருத்தப்பாடும் கவிதையில் சாத்தியமாகியிருக்கிறது. தன்னிலையையும் சமூகத்தின் நிலையையும் ஒன்றாகக் கையாளும் 'பெண்பலி'யை அனார் கவிதைகளின் மொத்த இயல்பையும் அடையாளம் காட்டுகிற கவிதையாகக் கருதுகிறேன். 'அது போர்க்களம் / வசதியான பரி சோதனைக்கூடம் / வற்றாத களஞ்சியம் / நிரந்தரச் சிறைச்சாலை / அது பலிபீடம் / அது பெண்ணுடல் / உள்ளக் குமுறல் / உயிர்த்துடிப்பு / இருபாலருக்கும் ஒரே விதமானது எனினும் / பெண்ணுடையது என்பதனாலேயே / எந்த மரியாதையும் இருப்பதில்லை அதற்கு / என் முன்தான் நிகழ்கின்றது / என்மீதான கொலை'.

தன்னுடைய இருப்புக்கு எதிரான நிலவரங்களை விமர்சிக்கிற அனாரின் கவிதைகள் அந்த இருப்பை உன்னதமானதாகவே உணர்த்துகின்றன. இந்தச் சுதந்திரமான மனப்போக்குத் தான் இந்த விமர்சனங்களுக்கும் அடிப்படை.

2009 ஜூன் 27, 28
மதுரையில் நடைபெற்ற 'கடவு' கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

( காலச்சுவடு - ஓக்டோபர் 2009 )

-------------------------------------------------------------------------------------------------------------