Monday, 3 January 2011

கனவுகளும் இரத்தக் குறிப்புகளும் இன்னும் பலவும்:
அனாரின் கவிதை முகங்கள்



- சேரன் (கனடா)
-------------------------------------------------------------------------------------------------------------

நமது கவிதையின் முகங்கள் புதிய வண்ணங்களுடனும் சிறந்த படிமங்களுடனும் நிறைந்த அர்த்தச் செறிவோடும் பெருகி வருகின்றன. எதிர்ப்பு இலக்கியம், எதிர்ப்பின் கவிதை போன்ற குரல்கள் எழ ஆரம்பித்துக் கால் நூற்றாண்டு முடிந்து விட்டாலும் சமூக, அரசியல் சூழல் அடிப்படையில் மாற்றமடையாமல் உக்கிரமும், அவலமும், போரும், போரூடாக வாழ்வும் என்ற வகையில், தொடர்ந்தும் மானுடத்துக்குப் பாரிய சவால்களையும் கவிஞர்களுக்கு அறச் சிக்கல்களையும் எழுப்பி வருகிறது.

அனாரின் கவிதை மொழியில் சொல்வதானால் 'இருட்டைத் தின்று வளரும் கனவுகளும், இரத்தக் குறிப்புகளும், அளவற்ற பதற்றமும்' சூழ வாழ்க்கை நகர்கிறது. அந்த வாழ்க்கையையும் அது தொற்ற வைக்கிற சிக்கலான ஆனால் நுண்ணிய உணர்வுகளைத் தன்னுடைய ஆத்மாவின் சந்தம் பிசகாது 'உயிரூற்றி'ப் புதிய கவிதைப் படிமங்களாகச் செதுக்குகிறார் அனார்.

கிழக்கின் ஒரு சிற்றூரில்தான் அவரது வாழ்வு. எனினும் அவருடைய கவிதா உணர் நிலையும் பாடு பொருளும் சொற்புதுமையும் மொழி அழகும் அகன்ற மானுடத்தின் அனுபவங்களையும் வாழ்வியலையும் வசப்படுத்துகின்றன. அனாரின் கவிதைகளுடாகத் துலக்கமாகவும் கவித்துவமாகவும் வெளிப்படுகிற குரல், அனாரின் கவிதை ஒன்று பாடுவது போலவே, 'புரவிகள் பூட்டிய குரல்.'

ஈழத் தமிழின் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார். அவருடைய கவிதைகளைத் திருப்பித் திருப்பிப் படிக்கிறபோது வேட்கையும் காதலும் மேலெழுகின்றன. தனிமையும் காத்திருப்பும் எரித்தாலும் ஊடல் சுடர்விடுகிறது: பதற்றமும் பீதியும் சூழ்கின்றன: திசைகள் குழம்பித் தத்தளிக்கின்றன: 'கடக்க முடியாமல் தணல் முன்னால் தொங்குகிறது இரவு' அந்த இரவுக்குள் செல்வதற்கு 'உள் வெளியில் வியாபிக்கும் மாபெரும் ஒளியை' அவர் எங்களுக்கு ஆயுதமாகத் தருகிறார்.

உள்ளடங்கி இருந்தாலும் அனாருடைய கவிதைகள் தீட்டும் அரசியல் சித்திரம் மிகவும் முக்கியமானது. உரத்த தொனியும் உயரும் கோபமும் சீற்றமும் இல்லாமல் தெளிவாகவும் நளினமாகவும் அவர் சொல்கிறார்: வாள் உறைக்குள் கனவுகளை நிரப்புங்கள். சாத்தியமான வரிகள். இவற்றைச் சாத்தியமாக்குவதில் இலக்கியத்தின் பங்கு என்ன என்று ஒருவர் கேட்கமுடியும். இத்தகைய சாத்தியமான வரிகளை எழுப்புதல்தானே கவிதையின் பணி! அதைவிட வேறேதாவது பணி நமது கவிதைக்கு இன்று இருக்க முடியுமா!

சுயபலம் பொருந்திய தேவதைகள் விடுதலை பெற்ற பரவச வாழ்வொன்றை வென்றெடுப்பர் என்று உறுதியுடன் கூறுகிறார் அனார். அந்த உறுதியும் அதனோடு இணைந்ததாகக் கனவும் வேட்கையும் அழகும் அனாரின் கவிதை உலகத்தின் சிறப்பான வரைபடங்களாக உள்ளன. அந்த வரைபடங்களுக்கும் அவருக்கும் எல்லைகள் இல்லை. அத்தகைய எல்லைகள் சாத்தியமில்லை என்பதும் அனாருக்குத் தெரிந்திருப்பது அவருடைய கவிதாவாழ்வு பல்வேறு திசைகளிலும் பயணிக்கும் என்ற முற்குறிப்புகளை சுட்டிக் காட்டுகின்றன. அவருடைய ' தாகத்தின் முன் இருப்பது எது?' என்பது ஒரு பெரிய கவிதைக் கேள்வியாகும். அந்தக் கேள்விக்கு விடைகாணுகிற முடிவற்ற பயணமாக அனாரின் கவிதைகள் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.

கடந்த பல ஆண்டுகளாக ஈழத்துக் கவிதைத் துறையில் சில தீவிரமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவற்றுள் ஒன்றுதான் கிழக்கின் முஸ்லீம் பெண் கவிஞர்களின் தனித்துவமான எழுச்சி.இத்தகைய தனித்துவங்கள் மேல் எழுகிற போது ஆரம்பத்தில் இனத்துவ அனுபவங்களும், அவை வெளிப்படுத்துகிற இனத்துவ ஒடுக்கு முறையின் சித்தரிப்புகளும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும். பெண்களின் குரலாக இவை ஒலிக்கிற போது வேறு சிறப்பான நுண ; அரசியல் தளங்களும் அவைக்கு இருப்பது சாத்தியம். இவையனைத்தையும் திட்டமிட்டு வரன்முறையாக அளந்தளந்து பயன்படுத்தி இலக்கியத்தைத் தயாரித்துவிட முடியாது. வாழ்பனுபவங்களும் கவிதையும், அரசியல் நுண்ணுணர்வும், சிந்தனையும், துணிவும், கனவும் இயல்பாகவும் கூர்மையாகவும் ஒன்றிணைய வேண்டும். அத்தகைய நிலையில் நமது கவிதை பேரலைகளை எழுப்பவல்லது.

அனாரின் கவிதைகள் அனுபவச் சிறையையும் இனத்துவச் சிறையையும் தாண்டி விரிவும் பரவசமும் கொள்ளக் கூடியவை. 'சாவின் தடையமாய் இரத்தம் நமது வாழ்வைப் பின் தெடர்ந்தாலும்; - 'முத்தத்தின் ஒளித்துளி'யையும் கொண்டாடுகிறார் அவர்.

இயலாமையில் எழுதப் படாத கவிதைகள் அனாருடையவை. அவருக்கும் அவர் கவிதைக்குமான சமூக, அரசியல் சவால்கள் நமது இறுக்கமான சமூகக் கட்டமைப்பிலிருந்தும், பொறுமையற்ற, பொறுப்பற்ற அரசியலிலிருந்தும் பலமாக எழக் கூடும். அந்த நேரங்களில் அத்தகைய சவால்களை எதிர் கொள்ள தோழமையுடன் அவருடன் ஒத்தோடிகளாக பல கவிஞர்கள் இருப்பார்கள். நமது கவிதைகள் தரும் இன்னுமொரு முக்கியமான சேதியாகவும் இது இருக்கட்டும்.

(எனக்குக் கவிதை முகம் - 2007 )


-----------------------------------------------------------------------------------------------------------------------------------



No comments: