Monday, 5 September 2011

அனார் – குறிஞ்சியின் தலைவி


- குட்டி ரேவதி (இந்தியா)

-------------------------------------------------------------------------------------------------------------

பெண்ணின் குருதியைச் சடங்கார்த்தங்களுடன் பார்க்கும் நிலத்திலிருந்து பெண்ணின் ஓடும் குருதியைத் தன் ஆண்மையின் வெற்றியாய்ப்பார்க்கும் நிலத்தின் மொழியைப் பற்றி எழுதுதலும் பேசுதலும் எவ்வளவுக்குச் சாத்தியம் என்னும் சந்தேகத்துடன் தான் அனாரின் கவிதைகளைப் பற்றி எழுதத்தொடங்குகிறேன். தன் மொழியை, மாதாமாதம் ஓடும் குருதியாக்கிப் பார்க்கவில்லையெனில், பெண் தன் உடலையே காய்கறிகளையும் மாமிசத்தையும் வெட்டிக்கிழிப்பது போல் தான் கிழித்துக்கொள்ள நேரும். உடலின் வேட்கை அவ்வளவு! தன்னுள் கிளரும் மனோவேகத்தையும் ஹார்மோன்களின் இனிய வாசனை நிரம்பிய பூக்களையும் நிரப்பிய குருதி வெளிப்பட்டுத்தான் ஆகவேண்டும். மீண்டும் உடலை நிரப்பிக்கொள்ள இருக்கவே இருக்கிறது, மொழியின் பாடல்களோ குருதியின் உஷ்ணமோ! மொழியும் வேட்கையும் ஒன்று சேர முடியாத வாய்ப்புகளை எல்லாம், குருதி பாயும் நிலமாய் விரித்துக் கொண்டனர் கவிப்பெண்கள். ஆனால், அவள் அனுமதியின்றியே அவள் உடலிலிருந்து குருதியை சேற்றில் புரளும் ஆடையாக்கியவர்களுக்கு எப்படி மொழியைத் தருவது? சொற்களை அடுக்கி, எப்படி அதன் வெப்பத்தை உமிழ்வது? எப்படித் தன் உடலைக் காத்துக் கொள்வது? மூப்பும் பிணியுமான இயற்கையின் வாதைகளையும் மீறி தன் உடல் அனுபவிக்க நேர்ந்த வதைகளை மொழியின் வழியாகக் காத்துக்கொள்ளத் துணிந்ததன் பீறிடல் தான் இதுவென்று கொள்ளலாமா?


மேலும் சில இரத்தக்குறிப்புகள்


மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து
பழக்கப்பட்டிருந்தும்
குழந்தை விரலை அறுத்துக் கொண்டு
அலறி வருகையில்
நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகின்றேன்
இப்போது தான் முதல் தடவையாகக் காண்பது போன்று
‘இரத்தம்’ கருணையை, பரிதவிப்பினை
அவாவுகின்றது
இயலாமையை வெளிப்படுத்துகின்றது
வன் கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்
செத்த கொட்டுப் பூச்சியின் அருவருப்பூட்டும் இரத்தமாயும்
குமுறும் அவளுயிரின் பிசுபிசுத்த நிறமாயும்
குளிர்ந்து வழியக்கூடும்
கொல்லப்பட்ட குழந்தையின்
உடலிலிருந்து கொட்டுகின்றது இரத்தம்
மிக நிசப்தமாக
மிக குழந்தைத்தனமாக
களத்தில்
இரத்தம் அதிகம் சிந்தியவர்கள்
அதிக இரத்தத்தைச் சிந்த வைத்தவர்கள்
தலைவர்களால் கெளரவிக்கப்பட்டும்
பதவி உயர்த்தப்பட்டும் உள்ளார்கள்
சித்திரவதை முகாம்களின்
இரத்தக் கறை படிந்திருக்கும் சுவர்களில்
மன்றாடும் மனிதாத்மாவின் உணர்வுகள்
தண்டனைகளின் உக்கிரத்தில்
தெறித்துச் சிதறியிருக்கின்றன
வன்மத்தின் இரத்த வாடை
வேட்டையின் இரத்த நெடி
வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்
கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்
சாவின் தடயமாய்
என்னைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

என்றாலும், எப்பொழுதும் பெண்ணுக்கு இரத்தம் என்பது முதல் முறையாகக் காண நேர்ந்தது போல் தான் என்பது மானுடத்திற்கான பரிவு நிறைந்த இயல்பே. பலவகையான இரத்தக் குறிப்புகளை முன்வைத்து அவர் சாவின் தடயங்களைச் சென்று தொடுகிறார்.

வேட்கை என்பது தன்னுடல் பிறிதோர் உடலுடன் புணர்வதற்கான இச்சையை மட்டுமே சொல்வதன்று. பெண் உடலென்றாலே, பிறிதோர் உடலுடன் புணர்ந்தும், பிணைந்தும் இருக்கவேண்டுமென்ற அடிப்படையான நியதியையும் குலைப்பது. இதை, உடலை முற்றும் முழுதுமாய் ஒரு தனிப்பிரதியாக்கிக் களிப்பது என்று கொள்ளலாமா? ஆனால், பெண்ணின் வேட்கையும் வேட்கைக்கான முகவுரையும் எப்பொழுதும் பாலியல் சாயமேற்றப்பட்ட கறையுடையதாகப் பார்க்கப்பட்டிருப்பதை புரிந்துகொண்டால், இங்கு அனாரின் வேட்கையின் சொற்கள் வில்லேறிய அம்புகளாய்ப் பிறந்து வந்து நம்முடலில் பாய்வதன் அரசியலைப் புரிந்து கொள்ளமுடியும்.

அனாரின் முதல் கவிதைத் தொகுப்பான, ‘ஓவியம் வரையாத தூரிகை’ சில சம்பிரதாயத் தெறிப்புகளைக் கொண்டே வெளிவந்தது. பெண்கள் தங்கள் மனவெளியில் புறச்சூழலால் கட்டமைக்கப்பட்டிருக்கும் போலியான பிம்பங்களை மொழிவழிக் கசடாக்கி வெளியேற்றுவது தான் தொடக்கக்கட்டப் பணியாக இருந்திருக்கிறது. இந்தவொரு நிகழ்விலிருந்து, எந்தவொரு படைப்பாளியுமே தப்பித்ததில்லை. இது பொதுவிதி. தன் சுயத்தை வடிவுறச்செய்யும் பணியை, தொடரும் தம் எழுத்தின் இயக்கங்களால் தான் சாத்தியப்படுத்திக்கொண்டனர் என்பதால் தன் உடலிலிருந்து முதல் தொகுப்பின் வழியாகக் கசடை வெளியேற்றுவது என்பதை உலகப்பொது மறை என்றும் கொள்ளலாம். அனார், தன் முதல் தொகுப்பை, ஆண் இனத்தை எதிர்வெளியாக்கி சில முறையிடல்களாலும் அடக்கமான எதிர்ப்புகளாலும் கடந்திருக்கிறார்.

வேர்களில் எடுத்தவலி
வண்டுகளோடு குலாவும்
பூக்களுக்குப் புரிவதில்லை

என்பது போன்ற, சொற்தெறிப்புகள் அவருக்கு அவரே சமாதானம் தரவும் ஊக்கம் கொடுக்கவும் உதவியிருக்கலாம்.

தாமரைக்குளத்துக் காதலி


உன் உள்ளங்கைகள் பொத்தும்
தாமரைப்பூவின் அளவு தான்
என் இதயம்
குளிரில் கொடுகும்
சிறு அணிற்பிள்ளை ஜீவன்
’சூ’ என விரசுப்பட்டு(ம்)
நெல்மணி களவாடி
உனக்கு ஊட்ட
வரப்பில் வட்டமடிக்கும்
சிட்டுக்குருவி நேசகி
உப்புமூட்டை பிள்ளையென
உன் முதுகுச் சவாரிக்கேங்கும்
கனவுகளுக்குச் சொந்தக்காரி
கொச்சுக்காய் கடித்த உதடுகளாக
வாழ்க்கை எரிகையிலும்
உனக்காகப் பொறுத்திருக்கும்
தனிமை எனது
தோளுரசிப் போகவும்
இறுக்கமாய் விரல் கோர்த்து
கரைகளை மிதிக்கவுமாய் ஆசை
மின்மினி வெளிச்சத்தில்
விருந்து வைக்க
தூங்காமல் விழித்திருக்கும்
தூக்கணாங் குருவி
நான் தான்
தூண்டிலில் மாட்டிய
மான் குட்டி
நான் தான்
நீ மயங்கி மூழ்கிய
உன் தாமரைக் குளத்துக் காதலி

இக்கவிதையில், வடிவம் பெறும் தாமரைக்குளத்துக்காதலி, தன் குற்றச்சாட்டுகளை தரையிறங்கி அறிவிக்கும் சிறு பறவைகளாகத்தான் இருக்கிறார். ஆனால் அடுத்த கவிதையில் அந்த வானத்துப்பறவைகளையே பணிக்கிறார் பாருங்கள்!


அரசி

உன் கனவுகளில்
நீ காண விரும்புகின்றபடியே
நான் அரசி
அயல் நாட்டு மகாராஜாக்களின் அரியணைக்கு
சவால் விடும் பேரரசி
அடிபணிய அல்ல
கட்டளையிடப் பிறந்தவள்
ஆணையிடுகிறேன் மந்தைகளுக்கு
குகைகளிலிருந்து தப்பிச்செல்லுங்கள்
ஆணையிடுகிறேன் சூரியனுக்கு
ஒரு இனத்தையே விழுங்கிக்கொண்டிருக்கும்
சமையலறையின் பிளந்தவாயைப் பொசுக்கிவிடுமாறு
பெரும்மலைகளை நகர்த்தித் தளர்ந்துவிட்ட
மூதாட்டிகளின் பாரித்த பெருமூச்சுகளை
வருடிவிடுமாறு பறவைகளைப் பணிக்கிறேன்
ஒருத்தி சொல்கிறாள்
‘என்னிடமிருந்து தீர்வற்ற புலம்பல் கசப்பு’
இன்னொருத்தி கூறுகின்றாள்
‘குரலில் இறக்க முடியாச் சுமை’
இருண்டு வரும் பொழுதுகளில் நேர்ந்த
துஷ்பிரயோகங்களைக் காட்டுகிறாள் எளிய சிறுமி
நான் என்னுடைய வாளைக் கூர் தீட்டுகின்றேன்
சுயபலம் பொருந்திய தேவதைகள்
விடுதலை பெற்ற பரவச வாழ்வொன்றை
வென்றெடுத்ததாய் கொண்டாடுகிறார்கள்
பாட்டம்பாட்டமாய்
பெண்கள் குலவையிடும் ஓசை
பெரும்பேரிகைகளாய் கேட்கின்றன
நான் சாம்ராஜ்ஜியத்திலிருந்தபடியே
கைகளிரண்டையும்
மேலுயர்த்திக் கூவுகின்றேன்
நான்
நான் விரும்புகின்றபடியான பெண்
நான் எனக்குள் வசிக்கும் அரசி

இரண்டாவது கவிதையில் இவர் பயன்படுத்தியிருக்கும் தொனியின் பாய்ச்சல், அமானுஷ்யமான ஆழமும் அகலமும் கொண்ட மடுவைக் கடந்தது. தன் இருப்பை ஆணித்தரமாய் உறுதிசெய்யும் நெடிய தூண் போன்ற பிரமை இக்கவிதையின் பின்னே ஒளிந்திருக்கிறது. அகம், புறம் என்ற இருவகையான கவிதைப் பண்புகளையே சங்கப்பாடல்கள் நமக்குப் புகட்டியிருக்கின்றன. அகம் என்பது பெண் - ஆணின் காதல், இன்னபிற அந்தரங்க உறவுகளையும், புறம் என்பது ஆணின் போர்புறப்பாடுகளையும் வெற்றிகளையும் பறைசாற்றுவது. அகப்பாடல்கள், பெண்ணின் இருப்பு என்பது ஆணைச்சார்ந்ததாகவும், புறப்பாடல்கள், ஆணை மட்டுமே நிலைநாட்டுவதாகவும் இருக்கின்றன. ஆகவே, இவ்விடம், ‘சுயம்’ என்பதை ஒரு வகையாக, அதிலும் பெண்ணை முதன்மையாக, அடுத்து ஆணுக்கும் ஆகுவதாக நாம் கட்டமைக்கலாம், அனாரின் இந்தப் பாடல்கள் வழியாக என்று தோன்றுகிறது.

வேட்கை என்பது, தன் இச்சைகளைச் சொல்வதற்கான அவகாசத்தை மட்டுமே குறிப்பிடுவது அன்று. அது பெரும்பாலும், சமூகத்தின் அசந்தர்ப்பங்களையும், சந்தர்ப்பங்களையும் தனக்கு வாய்ப்பாக்கிக் கொள்பவர்களுக்குத் தன் வேட்கையை வெளிப்படுத்துவதும், அதை நிறைவேற்றிக் கொள்வதும் அதிகாரத்தை ஏதோ ஒரு வடிவில் தன் மொழியில், உடலில், பாலிமையாகச் சேமித்துவைத்திருப்பவர்களுக்குமானது. அது அவர்களுக்குச் சிரமமானதொரு செயலாக இருப்பதில்லை. ஆனால், தன் தனித்ததொரு வேட்கையை உலகின் பெண்களுக்கு எல்லாம் பொதுவாக்கி, அதிகாரக்கட்டமைப்புகளைக் குலைக்கும் கடப்பாறைகளாய் மொழியை இறக்கித் தகர்ப்பது என்பது உண்மையிலே ஒரு களப்பணியைப் போன்றே ஈடுபாடும் உழைப்பும் கோரும் செயல். இதற்கு, அதிகார இயங்கியலை நன்கு கற்றுணர்ந்த தெளிவும், மொழியின் அதிகார அமைப்புகளை ஆராயும் தெளிவும் வேண்டியதாயிருக்கிறது. அனாரின், நீரோடை போன்ற மொழியும், சிக்கலற்ற படிம அசைவுகளும், சொற்கள் உதிர்ந்து பொலபொலவென கொட்டாமல் அல்லது அறுந்து தொங்காமல், கவிதையின் அழகோடு சமைவதும், அதே போல ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டிருக்கும் கவிதைக் கட்டிடத்தின் செங்கற்களை உதிர்த்து புதிய ஒழுங்கைத் தைப்பதும் என இவரது செயலாக்கம் விரிகிறது. இந்த அனுபவத்தை உணர, நான் இங்கே எடுத்துக்காட்டும் சில கவிதைகளோடு முடிந்து விடாமல், அவரது முழுத்தொகுதியையும் வாசிக்கும் அனுபவத்திற்கும் அவகாசத்திற்கும் உங்களை அனுமதிக்கும் போது தான் வாய்க்கும் என்று நம்புகிறேன்.


தணல் நதி


மழைக்கு முன்னதாக
தூது வரும் குளிர்ந்த காற்றலைகளாய்
மெருகுடன் நெகிழ்ந்தன தாபங்கள்
விசித்திரமாய்
விசமத்துடன் உதட்டைக் கடித்து
நெளியும் இவ்விரவில்
ஓர் முத்தத்தைப் பற்ற வை
எரிந்து போகட்டும் என் உயிர்க்காடு
கண்ணீராய் காய்த்துக் கொட்டும்
இமைக்கந்துகளில்
தீயும் இக்கனவின் துயர்கள்
மேகங்களை
ஓட்டிச் செல்கின்ற காற்றிலெல்லாம்
இன்று இதே கசப்பும்
கசகசப்பும்
இந்தப் பேரலைகள்
இரைந்து கொண்டே இருக்குமோ
கடக்கவே முடியாமல்
என் முன் தொங்குகின்றது
தணல் நதியாய் இரவு.


எனக்குக் கவிதை முகம்


எல்லா மயக்கங்களுடனும்
மெல்ல
அதிர்கிறது இசை
படிக்கட்டுகளில் வழிந்தோடும் நீர்ச்சொரியலாய்
வறண்ட சுண்ணாம்புப்
பாதைகளில் மேற்கிளம்பும்
வெண்புழுதியில் மணக்கிறது
அவன் குதிரைக் குளம்பொலி
சாம்ராஜ்யங்களின்
அசைக்கமுடியாதக் கற்றூண்களை
பிடுங்கி ஒரு கையிலும்
போர்களை வெற்றி கொண்ட
வாள் மறு கையிலுமாய்
அதோ வருகிறான் மாவீரன்
இருபுறமும் பசுமரங்கள் மூடியிருக்க
மூடுபனி தழுவி நிற்கும்
சிறுத்து ஒடுங்கிய பாதையில்
என் கனவின் உள் புகுந்து
தாவுகின்றன இரண்டு முயல்கள்
விடிந்தும் விடியாத
இக்காலைக் குளிரில்
முகை வெடித்த பூக்களின் காதுகளுக்குள்
கோள் மூட்டுகின்றது
பெயர் தெரியா ஒரு காட்டுப்பூச்சி
அதனாலென்ன
எனக்குத் தெரியும்
அவன் வாள் உறைக்குள்
கனவை நிரப்புவது எப்படியென்று
எனக்குத் தெரியும்
மகத்துவம் மிகுந்த இசை
தீர்வதேயில்லை
நான் பாடல்
எனக்குக் கவிதை முகம்

இக்கவிதையில் தான் அனார், ஆணாதிக்க மனநிலையை வெல்லுகிறார். ‘எனக்குத்தெரியும் அவன் வாள் உறைக்குள் கனவை நிரப்புவது எப்படியென்று’ என்ற வரி வாள் உறைகள் மற்றும் கனவுகளின் முரணை நம் நினைவில் தீப்பிழம்பாய் எரியச்செய்கிறது. அதுமட்டுமன்றி, இவ்வரிகள் பெண்ணின் அடுத்தக்கட்ட இருப்பை நியாயப்படுத்துவது. ஆணின் சூழ்ச்சிகளை மெத்த அறிந்தப் பெண்ணின் மனநிலையை விரித்துக்காட்டும் வரிகளும் கூட. பொதுவாகவே இம்மாதிரியான கவிதைகளை எல்லா தற்காலப் பெண் கவிஞர்களின் மையக்கவிதையாகவும் நாம் காண முடிகிறது. ஆணின் உளவியலுக்கு பயிற்றுவிக்கப்படும் சூழ்ச்சிகளை, அறிதலைப் பெண் தன் விடுதலையின் முகாந்திரமாக்கும் கவிதைகள், சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கும் வரையறைகளுக்கும் இணங்கிவிட்ட சமூகத்தின் பிற பெண்களிடமிருந்து தன்னை உயர்த்திக்கொண்ட, வலிமைப்படுத்திக் கொண்ட கவிப்பெண்களின் அடையாளத்தை இவ்வெழுத்தில் பெறமுடிகிறது.

’வித்தைகள் நிகழ்த்தும் கடல்’, ‘குறிஞ்சியின் தலைவி’, மற்றும் ‘எல்லை வேலிகள்’ ஆகிய கவிதைகள் பெண்ணின் வேட்கையை கத்தி போல நெஞ்சில் இறக்குபவை. இதுவரையிலுமான உலகச் செவ்விலக்கியங்களிலும் கூட பதிவாயிருக்கும் கதாபாத்திரங்களின் வேட்கையை, அதற்கான தேவையை, வெளிப்பாடு நிகழ்த்தும் சமூக அசைவைப் பேசுபொருளாக்காமலேயே இலக்கிய நுகர்ச்சி என்பது கையாளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெண்களின் பிரதிகள் தம் பாலியல் வேட்கையை, இச்சையை, தேவையை கவிதை எனும் உரத்த மொழியில் வெளிப்படுத்துவது என்பது இன்னும் விவாதப் பொருளாகவே இல்லை என்றே சொல்லலாம். எல்லாவற்றிற்கும் மேல், அனார் தன் வேட்கையை வெளிப்படுத்தும் அழகும் அர்த்தமும் சிதறாத மொழி, நேரடியாக வாசகர்களை கவிதையின் வெளிக்குள்ளேயே இழுத்துச்செல்லும். மூன்றாவது தொகுதியான, ‘உடல் பச்சை வானம்’ திணைவெளிகளை ஆளும் பெண்ணின் மனத்தை கவிதையாக்கியிருக்கிறது. குறிஞ்சி, மருதம், கடல் என வேறு வேறு நிலவெளிகளில் தன் குரலை உரக்கக் கூவுகிறது. அடர்த்தியான மொழியும், மேன்மையான கற்பனையும் நம்மை உய்விக்க உதவும். அருகிருக்கும் உடலைப் போற்றவும் உதவும். மூன்று கவிதைகளைத் தந்திருக்கிறேன், அதன் அடுத்தடுத்த தீவிரத்தை வாசகர்கள் பெறுவதற்காக.


வித்தைகள் நிகழ்த்தும் கடல்

மயங்கி மயங்கிப் பொங்கும் கடல்
மெளனமாகவும் உரத்தும் பாய்கின்றது
மிரண்டு தெறித்தோடும் குதிரைகளென
அலைகள் துரத்தி வருகின்றன
உயரப்பறக்கிறது நுரைப்பறவை
சம்மணமிட்டு உயிர் இரையும் பாற்கடலை
உன் கண்களால் திருப்பிவிட எத்தனிக்கிறாய்
மாபெரும் கடலை
கண்கள் சவாலுக்கு இழுக்கின்றன
நினைவு வரைபடங்களின் வழிகளில்
ஏதோ ஓர் புதிர் விரைகின்றது
எதுவுமே நிகழமுடியாத இருட்டில்
யுத்தம் தொடங்கிவிட்டிருந்தது
நீ பாறைகளில் தெறித்தாய்
பாசியைத் தழுவினாய்
முழுவதுமான இழப்பிலும்
முழுவதுமான வெற்றியிலும் கடல்
கொந்தளிப்பது போல
ஓடிப்போய் கரையில் நின்று
வியர்த்து வழியும் காற்றை
மாயப்பொடியாக்கித் தூவினாய்
சேகரித்து வந்த நூறு பிறைகளையும்
கடலுக்குள் வீசி எறிகின்றேன்
எல்லாம் மறைகின்றன
கண்ணில் படாத ஒரு சாகச நிழலில்
ஸ்தம்பித்துப் போயிருந்த கடலில்
சிறு துண்டை வெட்டி உன் வாயுள் வைக்கிறேன்
நீ ‘பூப் போல’ என்கிறாய்
………………….
உப்புச் சுவையாய் இரு உடல்கள் மாறினோம்
அலைகளை எழுப்பிஎழுப்பிக் கடல் ஆகினோம்



குறிஞ்சியின் தலைவி


இரண்டு குன்றுகள்
அல்லது தளும்பும் மலைகள் தோன்ற
முலைகளுக்கு மேல் உயர்ந்து
அவள் முகம் சூரியனாக தகதகத்தது
இரண்டு விலா எலும்புகளால் படைக்கப்பட்டவள்
பச்சிலை வாடைவீசும் தேகத்தால்
இச்சையெனப் பெருக்கெடுத்தோடும்
மலையாற்றைப் பொன்னாக்குகிறாள்
வேட்டையின் இரத்தவீச்சத்தை உணர்ந்து
மலைச்சரிவின் பருந்துகள் தாழ்ந்து பறக்கின்றன
மரக்குற்றிகளால் உயர்த்திக் கட்டப்பட்ட
குடில்களில் படர்ந்த மிளகுப்பற்றை
மணம் கசியும் கறுவாச்செடி
கோப்பி பழங்களும் சிவந்திருந்தன
நடுகைக் காலத்தில் தானியவிதைகளை வீசுகிறாள்
சுட்ட கிழங்கின் மணத்தோடு
பறைகளுடன் மகுடிகளும் சேர்ந்து ஒலியெழுப்ப
ஆரம்பமாகின்றது சடங்கு
களிவெறி…கள் சுகம்…
மூட்டிய நெருப்பைச் சுற்றி வழிபாடு தொடங்கிற்று
வளர்ப்பு நாய்களும்…. பெட்டிப்பாம்புகளும்…
காத்துக்கிடக்கின்றன
மாய ஆவிகளை விரட்டி
பலிகொடுக்கும் விருந்துக்காக
தீர்ந்த கள்ளுச்சிரட்டைகளைத் தட்டி
விளையாடுகிற சிறுசுகள்
வாட்டிய சோளகக் கதிர்களை கடித்துத் தின்கின்றனர்
பிடிபட்டு வளையில் திமிறும் உடும்பை
கம்பினில் கட்டி… தீயிலிட்டு….
அதன் வெந்த இறைச்சியை மலைத்தேனில் தொட்டு
கணவன்மார்களுக்கு பரிமாறுகின்றாள் குறத்தி
தும்பி சிறகடிக்கும் கண்கள் விரித்து
இரவுச் சுரங்கத்தின் கறுப்புத்தங்கமென எழும்
தலைவியை மரியாதை செய்கின்றனர்
மலைத்தேன் அருந்தியவாறு இருப்பவளை
புணர்ச்சிக்கு அழைத்தவன் கூறுகின்றான்
‘போர் தேவதையின் கண்களாக உருண்ட
உன் முலைகளால்
குறிஞ்சி மலைகளையே அச்சுறுத்துகின்றாய்’
அவளது குரல்…. மலைகளில் சிதறி ஒலிக்கின்றது
’பெண் உடல் பூண்ட முழு இயற்கை நான்’
காற்றில் வசிப்பவன்
காலத்தைத் தோன்றச் செய்பவன்…
இன்றென்னைத் தீண்டலாம்


எல்லை வேலிகள்


எங்களுக்கிடையில்
இந்து மகா சமுத்திரம் இருந்தது
வழிநடையில் முகில் குவியல்கள்
எண்ணங்களின் குகைகள்…
அடுக்குகளாய் தீயெரியும் ஒளிக்காடு…
சூரியன் ஆட்சி முற்றிய வானம்
சந்திரன் ஆக்கிரமித்த சுரங்கப்பாதைகள்
வல்லரசுகளின் படையணிகள்
எல்லாம் இருந்தன
மலைகளை எல்லை வேலிகளாக
நாட்டியுள்ளனர்
காடுகள் நகர்ந்தபடி
எங்களைச் சுற்றி வளைத்து வழிமறிக்கின்றன
ஆனபோதிலும்
நான் அன்றவனை மூன்று முறை முத்தமிட்டேன்.


‘எல்லை வேலிகள்’ கவிதையை வாசிக்கும் போது, இந்துமகா சமுத்திரம், முகில் குவியல்கள், குகைகள், ஒளிக்காடு, வானம், சுரங்கப்பாதைகள், காடுகள் எல்லாம் அசைச்சித்திரங்களாகின்றனவா என்று பாருங்கள்!

நிறைவாக, எனக்கு மிகவும் பிடித்த கவிதையாக, ‘மண்புழுவின் இரவு’ கவிதையைச் சொல்லுவேன். இந்த உலகின் எந்த ஓர் உயிரிலும் தொக்கி நின்று அதன் குரலாக முழுமையும் நின்று ஒலித்து சவால் விடுக்கும் அனாரின் திறன் என்னை இக்கவிதையில் என்னையும் மண்புழுவாக்கியது!


மண்புழுவின் இரவு


மழை ஈரம் காயாத தார்வீதி
நிரம்பிய மாலை
இருள் அடர்ந்து இறுகி பிசாசுகளின் தோற்றங்களுடன்
மல்லாந்து கிடக்கும் மலைகளைக் கடந்து செல்கிறேன்
இருளின் இருளுக்குள்ளே
எவ்வளவு பிரகாசம் நீ
கூதல் காற்றுக் கற்றைகளில்
நாசியில் நன்னாரிவேர் மணக்க மணக்க
மிதந்து வருகின்றாய்
தூர அகன்ற வயல்களின் நடுவே
‘றபான்’ இசைக்கின்ற முதியவரின் கானலோவியம்
இரவை உடைக்கின்றது
மிருகங்களுக்குப் பயமூட்டுவதற்காக
நிறுத்தி வைக்கப்பட்ட வைக்கோற் பொம்மைகள்
அளவற்ற பயத்தில் தாமே நடுங்கிக் கொண்டு நிற்கின்றன
அடிபெருத்த விருட்சங்கள்
தம் கனத்த வாழ்நாளின் நெடுங்கதையை
இலைகளால் கீறும் காற்றை உராய்ந்து
கரும்புக்காட்டை நடுவகிடெனப் பிரிக்கும்
மணல்பாதையை எனக்கு முன் மஞ்சள்நிறப்பூனை
குறுக்கே பாய்ந்து கடக்கின்றது
நாடியில் அளவான மச்சமிருக்கும்
பெண்ணின் கீழ்உதடு பிறை நிலா
மிக அருகே பேரழகுடன் அந்நட்சத்திரம்
இந்தப்பொழுதை ஒரு பூக்கூடையாய் நிரப்பி
தூக்கி நடக்கின்றேன்
நீளமான நூலாய் தெரிகின்றது இரவு
நான் தனித்த மண்புழு
சிறுகச் சிறுக நீளுகின்றேன்
தொடர்ந்து நீளமான வெள்லை நூல் தெரியும் வரை


( கூடு - இலக்கியம் , ஜுன் 2011 )

http://koodu.thamizhstudio.com/thodargal_14_14.php

-------------------------------------------------------------------------------------------------------------

No comments: