Sunday, 19 May 2013

கவிதை முகம்

- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் (இந்தியா)

----------------------------------------------------------------------------------------------------------

இலங்கைக் கவிஞர் அனார் எழுதிய இரண்டாவது கவிதைத் தொகுதி “எனக்குக் கவிதை முகம்”. இதில் முப்பத்தொரு கவிதைகள் உள்ளன. இயற்கை, வன்முறை, பிரிவு, சுயம்பேசுதல், தத்துவம், காதல் என பாடுபொருள்கள் பல வகைப்படுகின்றன. இவரது மொழிநடை சற்றே முறுக்கேறி நிற்கிறது. புதுப்புது சொற்பிரயோகம் வியப்பளிக்கிறது. இதனாலேயே நல்ல கட்டமைப்பு கவிதைகளில் அமைந்து விடுகிறது. முதல் வாசிப்பில் பிடிபடாதவை, மீள்வாசிப்பில் நம்மைக் கவர்கின்றன. தன் சுதந்திரத்தை அளவோடு, அழகாய்ப் பயன்படுத்தும் அனார் நல்ல பல கவிதைகளுக்குச் சொந்தக்காரர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

“நான் பெண்” என்ற கவிதை முதலில் நகுலனை நினைவுபடுத்தி, பின் பாரதியாரை எண்ண வைக்கிறது.

கண்கள் நெருப்பு
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்

எனப் பெண்மை விஸ்வரூபம் காட்டுவது ரசிக்கத்தக்கது.

தாபம் பற்றி பேசும் “தணல் நதி” ஒரு நல்ல கவிதை.

விசமத்துடன் உதட்டைக் கடித்து
நெளியும் இவ்விரவில்
ஓர் முத்தத்தைப் பற்றவை

என்கிறார் கவிஞர்.

என் முன் தொங்குகிறது
தணல் நதியாய் இரவு

என்னும் போது ஓர் அழகான படிமம் அமைந்து விடுகிறது. மிகவும் தேர்ந்த சொற்கள் இக்கவிதையில் வந்து விழுந்துள்ளன.

மேகங்களை ஓட்டிச் செல்கிறது காற்று என்ற சொல்லாட்சி, லகானைக் கையில் பிடித்து மொழியை நடத்திச் செல்லும் அழகைக் காட்டுகிறது.

'குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்' சரியான கவிதை! “ஒரு வயல் வெளியளவு சொற்கள் இருந்தன என்னுள்” என்ற வரியின் ஆழ, அகல, உயரம் அசாதாரணமானவை. இது உருவாக்கும் அர்த்தவெளி பரந்துபட்டது. ஒரு மனிதக்குரல் இக்கவிதையில் ஆராதனை செய்யப்பட்டுள்ளது. அந்தக் குரலுக்குள் உட்கார்ந்து தவம் மேற்கொண்டிருக்கிறார் என்பது மிகையல்ல.

உன் குரலில் வைத்திருக்கிறாய்
முத்தங்களால் நிரம்பிய மாயப்புரம்

என்ற வரிகளில் அழகான படிமம் நம்மை மகிழ்விக்கிறது.

அனைத்து ருசிகளும் உள்ளதுதான்
உன் குரல் என்ற திராட்சை ரசம்

என்ற முத்தாய்ப்பு கவிதையை அதிக உயரத்துக்கு தூக்கிச் சென்றுவிட்டது. இத்தொகுப்பின் ஆகச் சிறந்த கவிதை என ஒன்றை மட்டும் குறிப்பிட முடியாது. ஆகவே இதுவும் ஓர் ஆகச் சிறந்த கவிதை என்பது என் துணிபு!

“மேலும் சில இரத்தக் குறிப்புகள்” என்ற கவிதை மனத்தை வருத்துகிறது. குழந்தை விரல் இரத்தம், பெண்ணின் இரத்தம், கொல்லப்பட்ட குழந்தையின் இரத்தம், வன்மத்தில் இரத்த வாடை, வேட்டையில் இரத்த நெடி எனப் பல வகையான இரத்தம் காண வேண்டியிருக்கிறது என்று ஆதங்கப்படுகிறார். “நிழலின் அலறல்” சிக்கலான வெளியீட்டு முறையில் அமைந்துள்ளது.

இழந்து விட்ட சொர்க்கத்தின்
சாபம் படிந்த மணல் திட்டுக்களில்
சபிக்கப்பட்ட தீர்ப்புகளாய்
எனதற்ற நீ
உனதற்ற நான்

என்ற முடிவில் முன் நிற்கிறது பிரிவு! இன்னும் தெளிவும், பத்தி பிரித்தலும் அமைந்தால் இக்கவிதை சென்று சேரும் வாசகர் வட்டம் பெரிதாகும்.

“காதலைக் கொல்லும் தேவை” அழுத்தமான காதல் கவிதை! வழக்கமான புதிய சிந்தனை, கவிதையின் இறுதியில் அற்புதமான படிமமாக அமைந்துள்ளது வண்ணத்துப்பூச்சி! என்ன மாதிரி வண்ணத்துப்பூச்சி தெரியுமா? முத்தம் கண்களாகவும், பெயர் சொல்லி அழைத்த கணங்கள் நிறங்களாகவும் கொண்டதொரு அபூர்வ வண்ணத்துப்பூச்சி!

காதலித்தவரை மணக்க முடியாமல் போகும் அனுபவம் பலருக்கும் பழக்கமானதுதான். அது போன்ற ஒரு சூழல் இக்கவிதையின் பாடுபொருளாகியுள்ளது.

உன் குரலின் இனிய ரகசியங்களை
சிரிப்பை
வானத்தில்
எறிந்து விட்டேன்

என்ற வரிகள் அப்படி ஒரு ஆசையை முன்வைக்கும் அதே நேரத்தில், அது சாத்தியமற்றது என்பதையும் சொல்லிவிடுகிறது. இக்கவிதையின் கட்டமைப்பு கவனத்தை ஈர்க்கிறது.

“பருவ காலங்களைச் சூடித்திரியும் கடற்கன்னி” என்ற கவிதையில் கதைத் தன்மை காணப்படுகிறது. “சிறுமிகளில் மடி கொள்ளாத வெண் சிப்பிகள்” அரிய யதார்த்தக் காட்சியாக உள்ளது. “மேகங்களை வேட்டையாடுகிறாள்” போன்ற புனைவுக் காட்சிகளும் இக்கவிதையில் இடம்பெற்றுள்ளன.

மின்னல்கள் கூக்குரலிட்டு கூவி வெடிப்பதெல்லாம்
கடற்கன்னியில் பெயரைத்தான்

என்பது நல்ல கற்பனை! இக்கவிதையை மீண்டும் மீண்டும் படித்தாலும் புதுமை மாறாமல் இருக்கிறது.

தலைப்புக் கவிதையான “எனக்குக் கவிதை முகம்” இருண்மையோடு காணப்படுகிறது. “அதோ வருகிறான் மாவீரன்…” என்னும் காட்சியும் அதைத் தொடரும் வரிகளும் தொடர்பில்லாமல் துண்டு துண்டாக நிற்பது போல் தெரிகின்றன. இரண்டு முயல்கள் என்னும் குறியீடு எதைக் குறிக்கிறது? “பெண் பலி” சமூக அவலத்தைச் சுட்டுகிறது. பெண்ணுரிமைக்கான குரல் பதிவாகியுள்ளது.

என் முன்தான் நிகழ்கிறது
என் மீதான கொலை!

என்னும் முத்தாய்ப்பு கவிதைக்கு வலிமையூட்டுகிறது.

தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்

என்ற பொருளாழமிக்க சினிமாப் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

“பிச்சி” ஒரு பாலியல் கவிதை. மறை பொருளாய், நாசூக்காக ஒரு கூடலைச் சொல்கிறது. பாணனின் இசை, மயக்க இழைகள், மாயத்திசை, கத்திகள் பய்ந்த கவிதை என எங்குதான் கிடைக்கின்றன இந்த சொல்லாடல்கள்?

வானம் பூனைக்குட்டியாகி
கடலை நக்குகிறது

என்ற கவிதையின் கடைசி வரிகள் தருகின்ற ஒரு பூதாகரமான படிமத்தை. “பசுமையின் உச்சமாகி நான் நிற்கிறேன்” என்ற வரி (கவிதை: “மின்னல்களைப் பரிசளிக்கும் மழை”) கவித்துவத்தை எல்லா சொற்களிலும் நிரப்பி, வாசகர்கள் முன் நீட்டுகிறது. இக்கவிதையின் தொடக்க வரிகள்,

மழையாய் பெய்து குளிர்ந்தன
எனக்குள் உன் பேச்சு

இந்த வரிகள்,

உன் பேச்சில்
மலர்களாய் தொடுக்கப்பட்டுள்ளன
எனக்கான ப்ரியங்கள்

என்ற கவிதை வரிகளை நினைவுபடுத்துகின்றன.

நிறைவாக, மொழி வளம் நன்கு கைவரப்பெற்றுள்ளது. சுயபாணி வலுவூட்டுகிறது. கலை நேர்த்தி பாராட்டுக்குரியது. கவிதைத் தலைப்புகள் அழகாக அமைந்துள்ளன. ரசமானவை! நல்ல மன நிறைவைத் தரும் தொகுப்பு.


----------------------------------------------------------------------------------------------------------

அம்ருதா ஏப்ரல் - 2013

No comments: