Sunday, 5 November 2017

கவிதை முழுமையடையும் தருணம்
------------------------------------------------------------

- பேரா. அ. ராமசாமி



இப்போது வரும் கவிதைத்தொகுதிகளில் ஒன்றைக் கையில்கொடுத்து விமர்சனம் செய்யவேண்டும் அல்லது விளக்கிப்பேசவேண்டுமென்றால் திணறல் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. அந்தத் திணறல் காரணமாகவே தமிழின் முக்கியக் கவிகள் பலரைப்பற்றியும் எனது வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளாமல் தவிர்த்துக் / தவித்துக்கொண்டிருக்கிறேன். அனாரின் கவிதைகளின் தொகுதியும்சரி, தனித்தனிக் கவிதைகளும்சரி அந்தத் திணறலை ஏற்படுத்துவதில்லை.

அச்சில் ( தடம், நவம்பர், 2016 ) வந்திருக்கும் தனது கவிதையொன்றை அனார் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தக் கவிதையின் தலைப்பு,
" ஆழ்தொலைவின் பேய்மை"

’ நீயொரு மாறுதலற்ற நிழல்
நான் பகலை முந்திச்செல்லும் இரவு’

என்பதான இருமைக்குள் விரியும் படிமக் காட்சிகள் பிறன்மை(Other) யையும் தன்னிலை(Self)யையும் அடுக்கிக் காட்டுகின்றன.

பகலை முந்திச்செல்லும் இரவு எனத் தன்னை ( ) முன்னிலைப்படுத்திக்கொண்டு, பிறன்மையை ஆழ்தொலைவின் பேய்மையாக உருவகித்துக்கொண்டு உரையாடலை நிகழ்த்துகிறது. தனக்கும் அதற்குமான தூரம் வெகுதூரமாக இருந்தபோதிலும் தனது இருப்பு, 'வெம்புக்காட்டின் சுருள்களுக்குள்
நாகத்தின் சீற்றம்' மின்வெட்டு, கரைந்தபடி அலையும் ஒற்றைக்காகம், ஜொலிஜொலிப்பாக விரியும் அமிர்தத்தின் குடுவை எனச்சொல்கிறது. என்றாலும் கணத்தில் சூழும் பேய்மைகள், மரணத்தை நினைவூட்டும் அச்சமாகச் சூழ்கிறது என விரிகிறது.


கவிதைக்குள் இருக்கும் ‘சொல்லி’யின் தவிப்பும் நிலைப்பாடும் தனியொருவருக்குரியதாக இல்லாமல் பொதுநிலைக்குரியதாக ஆவதில், ஒவ்வொரு அகக்கவிதையும், பொதுநிலைக்கவிதையாக மாறிவிடும். அனாரின் இந்தக் கவிதை அதைத்துல்லியமாகச் செய்துகாட்டியிருக்கிறது.ஆணைச்சார்ந்து வாழும் பெண்மையாக மட்டுமல்லாமல், தனது படைப்பாற்றல், உற்பத்தித்திறன், பயணம் தரும் கொண்டாட்டத்தை அனுபவிக்கும் மனுசியாக உலகத்தின் பரப்பிற்குள் விரிக்கும் ஒரு பெண்ணைச் சூழும் பேய்ம்மைகள் பலவிதமானவை. அவற்றின்மீது அந்தப்பெண் கொள்ளும் கோபத்தின் ஆவேசத்தை, ஆவேசமான சொற்களைத்தவிர்த்து அதன் வீர்யம் குறையாத வேறுசொற்களால் நிரல்படுத்துவதில் அனார் கவனம் செலுத்துபவர். அந்த நிரல்படுத்தலில் தான் வாழும் நிலம்சார்ந்த காட்சிச்சித்திரங்களையும் தந்துவிடுவார். இந்தக்கவிதையிலும் அதை உறுதிசெய்திருக்கிறார். அச்சத்தின் சாயலும் பெருமிதத்தின் நிமிர்வுமெனக் கசியும் இந்தக் கவிதையில் ஒரு தமிழ்க்கவிதையின் அழகியலான முதல், கரு, உரி என்ற மூன்றும் சம அளவில் வெளிப்பட்டுள்ளது. அந்தச் சமநிலையில்தான் கவிதை முழுமையாகும். இந்தக் கவிதை அப்படியொரு முழுமையான கவிதை:


இனி முழுமையாக அந்தக் கவிதையைத் தருகிறேன்.


வெம்புக்காட்டின் சுருள்களுக்குள்
நாகத்தின் சீற்றமாக இருக்கிறேன்

மேகப்படைகள்
மழையை விரித்துக்கொண்டும்
சுருட்டிக்கொண்டும் இருந்தவேளை
மின்வெட்டாக….

சாம்பல் அந்திகளில் கரைந்தபடி
குறுக்கு மறுக்காக பறக்கும்
ஒற்றைக் காகத்தின் பரிதவிப்பாக
இரு மலை உச்சிகளின் நடுவே
விழும் பெருநீர்ப்பரப்பின் ஜொலி ஜொலிப்பு
குறைவான அமிர்தத்தின் குடுவை
கணத்தில் காணும் விபத்து

மரணத்தைக்கொண்டு நினைவூட்டும் அச்சம்

மிளகுக்கொடியின் அருகே பிறந்த
மலைப் பூனையின் வாசம்

பொங்கிவரும் நுரைத்துளிகளை 
காய்ந்துறையச் செய்யும்
நினைவுகளின் வறண்ட பள்ளங்களில்
தேங்கிய கானல்

மலையைச் சுற்றிப்போகும் குளம்
ஆழ் தொலைவில் 
பேய்த்தனமாய்ச் சிவந்து நீர்ச்சுடர்கள் மினுங்கும்
நீயொரு மாறுதலற்ற நிழல் 
நான் பகலை முந்திச்செல்லும் இரவு’


-------------------------------------------------------------

நன்றி :  பேரா. அ. ராமசாமி 


Thursday, 19 October 2017

பிரவாகத்தில் மிதக்கும் காட்சி அடுக்குகள்



- பேரா. பெருமாள்முருகன்

-----------------------------------------------------------------------------------------------------------

நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள், நான்கு தொகுப்புகள் எனத் தொடர்ந்து இயங்கிவரும் அனாரின் கவிதைகளைப் பற்றி மரபான முறையில் ‘அனாரின் கவிதை உலகம் இப்படியானது’ என ஒற்றைப் புள்ளியை மையமாக்கிக் கட்டுரை எழுதுவது இயலாத காரியம். அவர் கவிதைகளை வாசிக்க வாசிக்கப் ‘பிடிக்குள் அடங்காத பிரவாகம்’ என்னும் தொடர் எனக்குள் தோன்றியது. சொற்சிக்கனம், சொற்செறிவு எனக் கவிதைக்குரிய இலக்கணம் பற்றி முன்கூட்டி அமைத்துக்கொண்ட தீர்மானங்கள் யாவற்றையும் கலைத்துப் போட்டுவிட்டு அனாரின் கவிதைகளை அணுக வேண்டியிருக்கிறது. அவ்விலக்கண வரையறைகளுக்கு எதிராகச் சொன்னால் அனாரின் கவிதைகளைச் ‘சொற்பெருக்கு’ என்று சொல்ல வேண்டும். ‘மானுட மனதின் சொற்பெருக்கு இந்தக் கவிதைகளின் ஆதாரம்’ எனப் ‘பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்பின் பிற்குறிப்பு கூறுகிறது.

கவிதைத் தலைப்புகளும் ஓரிரு சொற்களுக்குள் அடங்குவதில்லை. ‘குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்’, ‘வண்ணத்துப்பூச்சியின் கனாக்காலக் கவிதை’, ‘இருப்பின் பின்னால் வாழ்வின் வெளி’, ‘பருவ காலங்களைச் சூடித் திரியும் கடற்கன்னி’ என விரிகின்றன அவை. ஓரிரு சொற்களுக்குள் அடங்கிய தலைப்புகள் அவரால் கட்டுப்படுத்தப்பட்டவை என்று தோன்றுகின்றன. ‘உனது பெயருக்கு வண்ணத்துபூச்சியென்றொரு அர்த்தமிருப்பது எவ்வளவு பொருத்தம்’ எனத் தொடங்கும் கவிதை தங்கு தடையில்லாமல் ‘உன் தந்திரத்தின் மாயம் அளவற்றது, உள்ளே பாடல் போல மிதக்கின்ற வண்ணத்துப் பூச்சி, வெளியே பிடித்துவைக்க முடியாத கனா’ என்றெல்லாம் விரிந்து பரவி ‘வண்ணத்துப்பூச்சியின் பிரம்மாண்டமான கனாக்காலக் கவிதை நானென்பதில் உனக்குச் சந்தேகமிருக்கிறதா இனியும்’ என முடிவென்று தோன்றாத வரிகளில் முட்டி மோதி நிற்கிறது. அனாரின் கவிதைகள் ‘முத்தாய்ப்பு முடிவு’ என்னும் இலக்கணத்தையும் ஓரளவு மீறுகின்றன. இன்னும் ஏதோ இருக்கிறது எனத் தேடினால் ஏமாற்றம் மிஞ்சும் வண்ணம் முடிந்து விடுகின்றன.

பிரவாகமும் சொற்பெருக்கும் படிப்படியாக நிதானம் பெறுவதே இயல்பு. ஆனால் அனாரின் ‘உடல் பச்சை வானம்’ தொகுப்பிலும் சரி இப்போது வெளிவந்திருக்கும் ‘பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்பிலும் சரி ஆற்றோட்டத்தைக் காண இயலவில்லை. இன்னும் பிரவாகம்தான். ஆனால் ஆற்றோட்டமாக்க அவர் முயன்றிருக்கிறார் என்பது தெரிகிறது. ‘கொக்கோ மரங்கள் பூக்கின்ற மலைமுகடுகளில் தேனீக்கள் ஒன்றையொன்று சுற்றி ஆனந்தத்தைக் கூட்டாக இரைகின்றன’ எனத் தொடங்கி விரிந்து செல்லும் கவிதை ‘இரவுத் தேன்கூடு நிரம்பியிருக்கிறது, கனவில் இருந்தபடி, முதலாவது நீலத்தேனைப் பருகிடும் தருணம், மலை நகர்ந்து போகிறது’ என சற்றே ஆசுவாசத்துடன் முடிகிறது. சிறிய தொடர்கள், பத்தி பிரித்தல், குறைந்த சொற்களில் தலைப்பு என தம் கவிதைகளுக்கு நிதான நடையைக் கொடுக்க முயல்கிறார் அவர். ஆனால் அவை முறுக்கிக்கொண்டும் உடைத்துக் கொண்டும் வெளிப்படுவதையே விரும்புகின்றன.

அனாரின் கவிதைகளைப் பல கோணங்களில் அணுகச் சாத்தியங்கள் உள்ளன. ஈழத்து வாழ்க்கைப் பின்னணி, காதல், இயற்கை, கவிதை காட்டும் ஆண்கள், பெண் உலகம், பெண்மொழி – இப்படிப் பல. பெண்ணைப் பற்றிய கவிதைகளில் நேரடித்தன்மை கொண்டவை, மறைமுகமானவை எனப் பகுத்துப் பார்க்கலாம். ‘பெண் பலி’, ‘நான் பெண்’ முதலியவை நேரடியானவை. பெண் உடலைப் பற்றி ‘என் முன் தான் நிகழ்கின்றது என் மீதான கொலை’ என்று எழுதுகிறார். ‘நான் பெண்’ கவிதையில் ‘எனக்கென்ன எல்லைகள் நான் இயற்கை, நான் பெண்’ எனப் பிரகடனம் செய்கிறார். ‘சுலைஹா’ போலப் பெண் பாத்திர நோக்குக் கவிதைகளும் உள்ளன. ‘மேலும் சில இரத்தக் குறிப்புகள்’ கவிதையும் நேரடியானதுதான். ஆனால் அதில் பிரகடனம் ஏதுமில்லை. அவ்விதம் பெண் நோக்கிலிருந்து எதையும் காணும் பார்வை கொண்ட மறைமுகக் கவிதைகளே முக்கியமானவை. இவ்விதம் ஒற்றைக்குள் அடங்காமல் பல்கி நிற்கும் தன்மை கொண்ட கவிதைகளின் ஒவ்வொரு வகைமை பற்றியும் விரிவாகப் பேசலாம்.

அனாரைப் பொருத்தவரை அனைத்துமே கவிப்பொருள்தான். எல்லாவற்றின் மீதும் பார்வை பதிந்து அவற்றைப் பற்றிய பார்வை ஒன்றை உருவாக்கிவிடுகிறது. அதனால்தான் காட்சி அடுக்குகள் நிரம்பிக் கிடக்கும் கவிதைகளாக இவை இருக்கின்றன. நிசப்தம் பற்றிப் பேசும் கவிதை ஒன்றில் எத்தனையோ காட்சிகள் கிடைக்கின்றன. மழைக்காடுகள், குளிர்ந்த ஆற்றங்கரை, நட்சத்திரங்கள், தீய்க்கும் கோடை, பள்ளத்தாக்குகள், முயல்கள், புல்வெளி, குளிர்கடல், மழைக்குரல், அறைகள், சிறுத்தையின் புள்ளிகள், முட்டைகளைப் பெருக்கும் ஆமை, கொலைவாள், தொங்கும் கயிறு, ஆலகால விசம் எனக் காட்சி அடுக்குகள். ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் இடையே பெரும் தாவல் இருக்கிறது. வாசக மனமும் அவ்விதம் தாவுகிற பயிற்சிக்குத் தயாராக வேண்டும்.

இந்தக் காட்சிகளுக்கிடையே ஒருமையை எதிர்பார்த்தால் பெரும் ஏமாற்றமே மிஞ்சும். இவை கவிதையில் பெறும் இடம், கவிதைக்கு இவை தரும் இடம் ஆகியவை குறித்த விவாதம் தேவை. அது ஒருபுறமிருக்கட்டும். இத்தனை காட்சிகள் பதிவாகும் விதத்தில் நவீன கவிதை எழுதப்படுவது ஒருவகையில் மகிழ்ச்சி தருகிறது. காட்சிப் பதிவுகளை மையப்படுத்திய தமிழ்க் கவிதை மரபின் இழை நவீன கவிதையில் அறுபட்டுவிட்டதோ என்னும் கேள்விக்கு ‘இல்லை’ எனச் சொல்லி அனாரின் கவிதைகளை முன்வைக்கலாம். காட்சி ஒருமை கொண்ட கவிதைகளையும் அனார் நிறையவே எழுதியுள்ளார். அவை கவிதை பழகிய மனதுக்கு ஆதர்சமாக அமைகின்றன.

‘புள்ளக்கூடு’ என்றொரு கவிதை. ‘கிழக்கிலங்கை கல்முனைப் பிரதேச முஸ்லிம் வீடுகளில் குளவி கூடு கட்டியிருந்தால் அதே வீட்டில் அல்லது அயலில் பெண் கருத்தரித்திருக்கிறாள் என நம்பும் வழக்கம் இருக்கிறது’ எனக் கவிதையின் அடிக்குறிப்பு கூறுகிறது. குளவி கூடு கட்டினால் அவ்வீட்டுப் பெண் கருத்தரிப்பாள் என்னும் நம்பிக்கை தமிழகத்திலும் உண்டு. வீட்டில் வந்து கட்டும் குளவிக்கூடு, குருவிக்கூடு ஆகியவற்றைக் கலைக்கும் வழக்கமும் இல்லை. அவ்வாறு கலைத்தால் அவ்வீட்டில் கலகம் உண்டாகும், பிள்ளைப்பேறு இருக்காது என்னும் நம்பிக்கைகள் உள்ளன. இந்நம்பிக்கையை மையமாக்கி கருக்கலைப்பு ஒன்றைப் பற்றிப் பேசுகிறது கவிதை. முரணுக்குக் குளவிக்கூடு பயன்படுகிறது. குளவிக்கூட்டுக்குத்தான் இன்னொரு பெயர் ‘புள்ளக்கூடு (பிள்ளைக்கூடு).’

வண்டுகள் வரிசையாகத் திரும்பி மடியில், கையில், தலைமுடியில், காதுகளில், தோளில், வயிற்றில் இறங்கும் காட்சி அடுக்கு. புண்ணைத் துளைத்து ஏறும் வண்டுகள். இங்கே வண்டுகள் இரைச்சலும் அருவருப்பும் தொந்தரவும் தருபவை. கருத்தரிப்பு எவ்விதம் நிகழ்ந்தது என்பதை உணர்த்தும் குறியீடாகக் கறுப்பு வண்டுகளைக் கொண்ட காட்சிகள் அமைந்து கவிதை ஒருமைக்கு உதவுகின்றன. இயல்பில் நிகழ்ந்த கருத்தரிப்பு அல்ல அது. புண்ணைத் துளைத்து ஏறிய வண்டுகளால் நேர்ந்த கருத்தரிப்பு அது. ஆகவே பலா, அன்னாசி, எள்ளு என ஏதேதோ தின்றும் பலமுறை மாடிப்படிகளில் ஏறி இறங்கியும் மூன்று நாட்களில் ஆறு மாத்திரை விழுங்கியும் கலைக்கப்படுகிறது. ‘எல்லாம் முடிந்துவிட்டது வெற்றிகரமாக.’ முரணை உணர்த்தும் கடைசிக் காட்சி இது: ‘கதவு மூலைக்குள் உள்ளது அப்படியே குளவிக்கூடு.’ இந்தக் காட்சியோடு முடிந்திருந்தால் கவிதை இன்னும் சிறந்திருக்கும். ஆனால் அடிக்குறிப்பில் வரும் விளக்கம் கவிதையின் இறுதியிலும் இவ்விதம் வந்து சேர்கிறது: ‘குளவி வட்டமாகக் கூடு கட்டினால் பெண் குழந்தை. நீளமாகப் பூரானின் வடிவில் அடுக்கி அடுக்கிக் கட்டினால் ஆண் குழந்தை.’

காட்சிகளில் பிரியமுடைய கவிஞருக்குப் பயணத்தில் ஈடுபாடு இருப்பது இயல்பு. ‘எனக்குக் கவிதை முகம்’ நூல் ‘மண்புழுவின் இரவு’ என்னும் கவிதையில் தொடங்குகிறது. அக்கவிதை மாலையில் தொடங்கி இரவில் நீளும் பயணம் ஒன்றை விவரிக்கிறது. இருந்த இடத்தில் இருந்தே செல்லும் பயணம். காட்சிகளால் நிரம்பும் பயணம். மழை ஈரம் காயாத தார்வீதியில் தொடங்கும் காட்சி, மாலை, அடரிருள், மல்லாந்து கிடக்கும் மலைகள், கூதல் காற்று, மணக்கும் நன்னாரி வேர் என விரிகிறது. ‘றபான்’ இசைக்கும் முதியவர், நிறுத்தி வைக்கப்பட்ட வைக்கோல் பொம்மைகள், அடி பெருத்த விருட்சங்கள், கரும்புக்காடு, மணல் பாதை, மஞ்சள் நிறப் பூனை, பிறை நிலா, நட்சத்திரம் என இன்னும் இன்னும் செல்கிறது.

ஒருவகையில் இந்தக் கவிதை சங்க இலக்கியப் பாடல் போன்று பிரிவில் துஞ்சாத பெண்ணின் இரவைப் பேசுவதுதான். ஆனால் காட்சிகள் பிரிவுத்துயரைப் போக்கிவிடுகின்றன. அதற்குக் காரணம் ‘இருளின் இருளுக்குள்ளே எவ்வளவு பிரகாசம் நீ, கூதல் காற்றுக் கற்றைகளில் நாசியில் நன்னாரி வேர் மணக்க மணக்க மிதந்து வரும்’ இணை பற்றிய காட்சித் தோற்றம்தான். அவ்விதம் தோன்றுவதால் எல்லாக் காட்சிகளும் இன்பமாகிவிடுகின்றன. ‘இந்தப் பொழுதை ஒரு பூக்கூடையாய்த் தூக்கி நடக்கின்றேன்’ என்று அதனால் சொல்ல முடிகிறது. ஆனால் தனிமையில் நீளும் இரவு அது. அந்தத் துயர் காட்சிகளில் படியாமல் பார்த்துக்கொள்கிறது கவிமனம். எனினும் கவிதையின் முடிவு துயரையே தருகின்றது. ‘நீளமான நூலாய் தெரிகின்றது இரவு, நான் தனித்த மண்புழு, சிறுகச் சிறுக நீளுகின்றேன், தொடர்ந்து நீளமான வெள்ளை நூல் தெரியும்வரை.’ வரப் போகும் பகலும் நீளம்தான். அது வெள்ளை நூல். அதுதான் வேறுபாடு.

காட்சிகளில் ஈடுபாடுள்ள கவிஞருக்கு இயற்கை மீது இருக்கும் அன்புக்கு அளவில்லை. எங்கெங்கும் இயற்கை கொட்டிக் கிடக்கிறது. இயற்கை எவ்விதமெல்லாம் அர்த்தப்படுகிறது, உருமாறுகிறது என்பதை அறிய அனாரின் கவிதைகளுக்குள் ஓர் உள்முகப் பயணம் நிகழ்த்தியாக வேண்டும். இயற்கையின் ஒவ்வொரு அம்சமும் மனிதரோடும் மனதோடும் அத்தனை நெருக்கமாக இருக்கின்றது. ‘கறிவேப்பிலை மரத்தில் அன்பைப் பழகுதல்’ என்னும் கவிதைக்குப் பொருள் வீட்டுக்குள் சமையலறையில் இருந்து ஜன்னல் வழியாகப் பார்த்தல் தெரியும் கறிவேப்பில்லை மரம். அது வெறும் மரமாகத் தெரியவில்லை. ‘அன்பின் பெருவிருட்சம்’ எனத் தெரிகிறது. அதனால்தான் அதை ‘எப்போதும் பார்த்துக்கொண்டிருக்க’ முடிகிறது. கறிவேப்பிலை மரம் என்னும் பெருவிருட்சம் காட்சியான பின் அதைச் சுற்றிச் சிறுகாட்சிகள் விரிகின்றன. அக்காட்சிகளில் வெளியாகும் மனோபாவங்கள் விதவிதமானவை.

அவ்வழியே செல்பவர்கள் அதை ஆராய்ந்து செல்கின்றனர். இலைகளைத் திருடுகின்றனர். கந்துகளை (கிளைகள்? குச்சிகள்?) முறிக்கின்றனர். பேராசை மிக்க வியாபாரி வருகிறான். எந்தவொரு இலையையும் விடாமல் உருவிச் செல்கிறான். ஆனால் மரம் துளிர்த்து அடர்ந்து செழித்துவிடுகிறது. எப்படி? ‘எதையுமே இழக்காத மாதிரி.’ செழித்த மரக் கந்துகளில் குருவிகள் புகுந்து பேசி விளையாடுகின்றன. அதன் காரணமாக மரத்தின் முகம் ஒளிர்கிறது. புது அழகுடன் மிளிர்கிறது. கறிவேப்பிலை மரத்தைக் கொண்டு அன்பை பழகும் வித்தையைக் கற்க முடியும் என்பது மாபெரும் தரிசனம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அனாரின் கவிதைகளை ஒற்றைக்குள் அடக்க இயலாது எனத் தொடங்கிய கட்டுரை ‘காட்சி அடுக்கு’ என்னும் ஒற்றைக்குள் தன்னையும் அறியாமல் நுழைந்துவிட்டது. எல்லாவற்றிலும் ஏதோ ஒரு பொதுமை இருக்கும் என்பதால் இது நிகழ்ந்ததா? எல்லாவற்றையும் ஏதொ ஒரு பொதுமைக்குள் அடக்கும் மனோபாவம் நமக்குள் இருக்கிறது என்பதால் இது நிகழ்ந்ததா? எப்படியாயினும் அனாரின் கவிதைகளை ‘பிரவாகத்தில் மிதக்கும் காட்சி அடுக்குகள்’ என்று சொல்லி முடிக்கின்றேன்.

-----------------------------------------------------------------------------------------------------------------

நன்றி -  அடவி - 2017 ஆத்மாநாம் விருது சிறப்பிதழ்



Thursday, 12 October 2017

கவிஞர் ஆத்மாநாம் விருது விழா - 2017

ஏற்புரை : - அனார்
-----------------------------------------------------------------------------------------------------------




// அற்புத மரங்களின் அணைப்பில்
நான் ஒரு காற்றாடி
வேப்பமரக் கிளைகளின் இடையே
நான் ஒரு சூரிய ரேகை

பப்பாளிச் செடிகளின் நடுவே
நான் ஒரு இனிமை
சடை சடையாய்த் தொங்கும் கொடிகளில்
நான் ஒரு நட்சத்திரம் //

இது ஆத்மாநாம் கவிதை.


தன்னிலை அழிந்த பைத்திய வெளியில் இரு எறும்புகள் ஒரே கோட்டில் ஏறு வரிசையாகவும் இறங்கு வரிசையாகவும் பயணிக்கையில் சில இடங்களில் சந்தித்துக்கொள்வதுண்டு. மிகச் சில கணங்களுக்கு நிதானித்து பின்னர் பயணிக்கும் அவ்வெறும்புகளைப் போன்றுதான் ஆத்மாநாம் கவிதைகளுக்குள் நான் பயணிக்கின்ற சந்தர்ப்பங்களில் ஏதோ ஒரு புள்ளியில் ஒத்த உணர்வுகள் சந்தித்துக் கொள்கின்றன. தமிழில் கவிதைகளில் தீவிர ஈடுபாடுகொண்ட யாரும் ஆத்மாநாமை அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.

சிவரமணியின் மரணம், சில்வியாபிளாத்தின் மரணம் அல்லது தங்கள் மரணத்தை தாங்களே நிகழ்த்திய அனைத்துக் கலைஞர்களின் மரணங்களும் அவ்வாறுதான், அவர்தம் கலைகளுக்குள்ளே அம்மரணம் தொடர்ந்து நிகழ்ந்தவாறே இருப்பது. ஆத்மாநாம் மறுபடி மறுபடி தன் கவிதைகளுக்குள் தன் மரணத்தை நிகழ்த்துகிறார்.... ஒரு அடர்த்தியான சாம்பல் நிறத்தில்.

//என்னை அழித்தாலும், என் எழுத்தை அழிக்க இயலாது // – என ஆத்மாநாம் கூறுகிறார். அவரது கருத்தியல் மனிதாபிமானம்தான். இயற்கையிடமிருந்தே அதற்கான நம்பிக்கையைப் பெறுகிறார். தீவிர மனப்போக்குகளுடன் அவர் கையாண்டுள்ள சொற்கள் மிகைப் பாவனைகள் அற்றவை. தத்துவச் செறிவும் எள்ளலும் சுயம்பற்றிய அதீதமான சிந்தனைகளும் அவருக்குள் இருந்திருக்கின்றது.

வலிமையான கவிதைகள் ஊறிவரும் அந்தமனம் மெல்லிய நூலிழைகளால் பின்னப்பட்டிருக்கிறது. மிகுந்த ஆற்றல் கொண்ட ஆத்மாநாம் எனும் கவிஞரின் பெயரால் வழங்கப்பட்ட இந்த விருதினை பரிபூரணமான முழுமனதுடன் பெற்றிருக்கிறேன். என்னைத் தேர்வு செய்த நடுவர்களுக்கும் ஆத்மாநாம் அறக்கட்டளை குழுவினருக்கும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

எனது மானசீகக் குருவைப்போன்று மரியாதைக்கும் என் பேரன்பிற்குமுரிய கவிஞர் சச்சிதானந்தன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன். அவர் கரங்களால் இவ்விருதைப் பெற்றிருப்பது மிக முக்கியமானதும் என்னுடைய கவிதைகளின் ஒவ்வொரு சொற்களும் பூரிப்படைகின்ற தருணமுமாகும். 




இன்று இவ்விடத்தில் நிற்பதற்கான ஏற்பாடுகளை வாழ்க்கை தயவு தாட்சண்யமின்றி எனக்கு வழங்கியிருக்கிறது. என்னுடைய ஒவ்வொரு பருவங்களிலும் நினைவு கூரத்தக்க எதிர்நீச்சலுக்கான சந்தர்ப்பங்கள் பல இருக்கின்றன. அவைதான் பின்னரும் உருவான அக புற நெருக்கீடுகளை எதிர்கொள்வதற்கான வலிமையை ஊட்டின என நான் திடமாக நம்புகின்றேன்.

அந்தப் பருவமே விளையாட்டாக இருந்தது. மதத்தை தொன்மங்களை பண்பாட்டை விளையாட்டாக தெரிந்து கொண்டேன். ஒரு முதிர்ந்த பெண் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிப்பாடிஎனது ஒரு காதிலும்... முதிர்ந்த ஆலிம் ஒருவர் குர்ஆனை ஓதி ஓதி இன்னொரு காதிலும் சொல்லித் தந்தார்கள். பின்னர்தான் அனைத்து விளையாட்டுக்களும் முடிவுக்கு வரும் வகையில்எங்கள் கிராமங்களை அச்சம் பீடிக்கத் தொடங்கியது. இரவில் பயம் .. பகலில் பதற்றம்... பீதிகொண்டு ஊரே திடீரென தலைகீழாக மாறியது. அவ்வளவு நிரந்தரமின்மையானநாட்களாகவும்.. ஆழமான வடுக்களை தந்த காலம் அதுவாகவும் இருந்தது.



ஊரடங்குச் சட்டம், துப்பாக்கி, கடத்தல், குண்டுவெடிப்பு, கப்பம், கொலை, மரணம், காணாமல் போதல் இப்படிப்பல அந்நியமான அறியப்படாத வார்த்தைகளை தெரிந்து கொள்ளத்தொடங்கினோம். கலவரத்தைக் காண்கிறேன்.... மரணங்களைக் காண்கிறேன்.... இரவும் பகலும் நிசப்தமாக மாறியதைக் காண்கிறேன்.... ஒருநாள் என் ஊருக்குள்ளே சுட்டுக்கொண்டுவரும் சிலரால் துரத்தப்பட்டு நீண்ட தூரம் ஓடுகிறேன். எனது தந்தை இவற்றைக் காரணம் காட்டி பாடசாலை செல்வதிலிருந்தும் என்னை நிறுத்திவிடுகிறார். எனக்கு அப்போது பதினைந்துவயதுஇ 10ஆம் வகுப்பில் இருந்தேன். பிறகென்ன வாழ்வும் பண்பாடும் சமூகக் கட்டுப்பாடுகளும் கலாச்சாரமும் அரசியலும் அறமும் நீதியும் ஒன்றுகூடி மூச்சுமுட்டுமளவிற்கு பாதுகாப்பாகஏற்கனவே பூட்டிவைக்கப்பட்ட பெண்களோடு நானும் மற்றொரு பெண்ணாக சேர்க்கப்பட்டிருந்தேன்.

அன்றைய நாள்களில் இறுகப் பிடித்திருந்த ஒரு வகை கனமான தனிமையை என்ன செய்வதென்றே தெரியவில்லை. கொய்யா மரத்துடன் முறைப்பாடுகளைச் சொல்லிக்கொண்டே ஊஞ்சல்ஆடும் பொழுது காற்றுக்கும் எனக்கும் என்றைக்குமான அபரிமிதமான ஒரு உடன்படிக்கையைச் செய்து கொண்டேன்.

எந்த ஒரு இலக்கியப் பரீட்சயமும் அப்போது இருக்கவில்லை. ஆனால் ஒரு இரவில் என் முதலாவது கவிதையை நானே எதிர்பாராமல் திடீரென எழுதினேன். வீட்டிலிருந்த ஒரேயொரு ஊடகசாதனமான சிறிய ரேடியோவில் நாங்கள் வழமையாகக் கேட்கும் முஸ்லீம் நிகழ்ச்சியில் அக்கவிதை ஒலிபரப்பானது. அக்கவிதையை ஒரு பெண் வாசித்தார். வேறு யாரின் காதிலும்விழமுன்னர் விழுந்தடித்து ஓடிப்போய் றேடியோவின் சத்தத்தைக் குறைத்து கன்னம் வைத்து என் கவிதையினை ரகசியமாகவே கேட்டேன். முதல் பாவத்தை அப்படித்தான் மூடி மறைத்தேன்.

அடுத்தடுத்து எழுதும் கவிதைகளை யாருமறியாமல் எனது தம்பிக்கு லஞ்சம் கொடுத்து தபாலில் அனுப்பிக் கொண்டிருந்தேன். சில வேளைகளில் முத்திரையொட்டுவதற்கு பணமிருக்காதுஇ ஏற்கனவே வந்த கடித உறைகளில் ஒட்டியிருக்கும் முத்திரையை கிழியாமல் பிரித்து சீல் இருக்கும் தடம் தெரியாமல் அழித்து மீண்டும் கடித உறைகளை ஒட்டி அனுப்பியஅனுபவங்களெல்லாம் ஒரு வகை சாகசமாகவே அன்றிருந்தன. போதுமான சிறகுகள் முளைத்துவிட்ட பறவை எப்படி பறக்காமல் இருக்கும்... என்னைப் பொறுத்தவரை மொழி ஒரு வகைச்சிறகு... கவிதை ஒரு வகைச் சுதந்திரம்... இப்படித்தான் நானும் பறக்கத் தொடங்கினேன்.

சமூகம் பலவிதமான இம்சைகளுக்குள் சிக்கியிருந்த கொந்தளிப்பான காலத்தில் நான் கவிதை எழுதத் தொடங்கி இருந்தேன். சொல்வதற்கு அதிகமிருந்தன. ஆனால் சொல்ல முடியாதஇறுக்கம் வெளியிலிருந்தது. இரண்டுக்கும் நடுவில் என்னுடைய இருப்பைக் கவிதையூடாக நிலை நிறுத்தத் தொடங்கினேன். நிராதரவும் அபாயங்களும் அச்சங்களும் பலவிதமாகத் தாக்கின.உயிர்இ உடல்இ மனம்இ இனம்இ அரசியல், மதம், பண்பாடு, நிலம், ஊர் எல்லாம் என்னைச் சுற்றி எரிந்தன. என்னுடைய வாழ்க்கை. அத்தம்விட்ட பெருவிரலுக்கும் பழம் விடுகிற சிறுவிரலுக்கும்இடையே இருந்த சந்தோசங்களிலிருந்தும் விளையாட்டுக்களிலிருந்தும் அன்றாட இயல்புகளிலிருந்தும் விலகி எதிர்பாராத அதிர்ச்சிகளோடு என் எதிர் நின்றது. அந்த பயங்கரமானஉண்மையின் வெம்மை தாளமுடியாது ஒதுங்க நான் சொற்களைத் தேடினேன். சொற்களுக்குள் என்னைப் புதைத்துக்கொள்ள முயன்றேன். யாருமறியாமல் காற்று என்னை எடுத்துச் சென்றுசொற்களின் மீது வைத்தது. நான் என்பது அப்போது ஒரு காயாத கண்ணீர்த் துளி. என் ஆன்மாவின் விழிப்புநிலை உண்மையின் வெம்மைக்கருகே எப்போதும் தவித்தது என்பதற்கானஆதாரமாகவே எனது கவிதைகள் இருக்கின்றன.

பெண் எழுதுவது அல்லது சிந்தனைத் தளத்தில் செயற்படத் தொடங்குவது சமூகத்தின் முன் ஏதோ ஒரு வகையில் அவளது தார்மீகக் குரலை எழுப்புவதெல்லாம் இலகுவான ஒன்றாகஎப்போதுமே இருந்ததில்லை. இங்கு முஸ்லீம் பெண் ஒருவரின் கலைச் செயற்பாடு இரண்டு மடங்கான எதிர்ப்புகளை எதர்நோக்க வேண்டியுள்ளது. அவளுக்கு மற்ற அனைத்தையும் விடஅவளுக்கு கற்பிக்கப்பட்ட மதம் அனுமதிக்கின்ற எல்லை கூடுதலான பொறுப்பாக இருக்கின்றது. ஏனெனில் அது தலைமுடியில் தொடங்கி கால் விரலில் முடிகிறது. எல்லா வகையானகட்டுப்பாடுகளுக்கும் உட்பட்ட நிலையில் கவிதைகள் எழுதுவது, முன்யோசனைகளோடும் கடும் கவனத்தோடும் செயற்பட வேண்டியிருக்கின்றது.

உயிரற்றுப்போவது, இறப்பினூடாக நிகழ்வது மாத்திரமல்ல. வாழும்போதே உயிரில்லாமல், உறைவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள, அதாவது வாழ்ந்தபடியே இறப்பதற்கான பல வாய்ப்புகளை சக மனிதர்களும், சமூகமும் வழங்குவார்கள் என்று ஒரு பெண் விரைவில் தெரிந்துகொண்டு விடுகிறாள்....... 

எழுதுவதால் ஒழுக்க ரீதியாக ஒரு பெண் தாக்கப்படுவதுபோல் ஆண்களுக்கு ஏற்படுவதில்லை. நான் பெண்ணாக இருப்பதன் காரணமாகவே சில கவிதைகளை எழுத முடிந்துள்ளது. இன்னும்சில கவிதைகளை எழுதவே முடியாது போயுள்ளது. ஒரு பெண் கவிதையைத் தேர்வு செய்வது தனது அரசியலையும் தேர்வு செய்வதாகும். நுண்ணுர்வுகளுடனும், சரி... தவறுகளுடனும்மறையவும் வெளிப்படவும் தனக்கென ஓர் மாய வெளியை கவிதைக்குள் உருவாக்குகிறாள். இங்கிருந்தபடியேதான் சுலைஹா கவிதையை எழுதினேன். பிளேட் கதையையும் எழுதினேன்.மேலும் சில இரத்தக் குறிப்புகளையும், பிச்சியையும், நான் பெண்ணையும், குறிஞ்சியின் தலைவியையும் எழுதினேன். 

கவிதையானது ஒரு பைத்தியச்சுவை. தெளிவான பாதையில் நேராகப் பயணிப்பவரை கவிதை போதையுறச் செய்கிறது... தடுமாறச் செய்கின்றது.... நான் போதையுற நொதித்துப்பொங்கும் சொற்களையே அருந்துவேன்.... சிறு எரிதணலுடன் புகையும் சொற்களையும் நான் அறிவேன்.

மேலும், கவிதைகளினால் ஒருவர் தனக்குள்ளே உருவாக்கக்கூடிய ரகசியப்புலம் மிக அந்தரங்கமானது.

எந்தவொரு கவிதைமனதிற்கும் கட்டாயங்களில்லை. நம்மை கட்டுப்படுத்தும் சமூகக் கட்டமைப்புக்கள் வரையறைகள் சட்டதிட்டங்களுக்கும், கலைத் தன்மைகளுக்கும் மத்தியில் பெரும்இடைவெளிகள் உள்ளன. இந்த இடைவெளியில்தான் கலையின் படைப்பூக்கம் செயற்படுகின்றது.


கனவை மட்டும் கொண்டதல்ல கவிதை. உண்மையை அல்லது அனுபவத்தை மட்டும் கொண்டதுமல்ல. புத்திக்கூர்மையினாலோ, அறிவுப் புலமையினாலோ, படிமங்களினாலோ, உருவகங்களினாலோ, திட்டமிட்டு தனிச் தனிச் சொற்களில் வெளிப்படுவதுமல்ல. அவரவர் கவிதை அவரவருக்கான மனம்.

நான் உணர்ந்ததெல்லாம் கவிதையில் எட்டிவிட்டேனா என்றால் இல்லை.. எட்டுவேனா என்றும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. அந்தப் பாதையில் நான் இன்னும் தூரம் பயணிக்கவேண்டும். பயணமே அதன் இலக்காகவும் இருக்கிறது. மறுபடி மறுபடி நான் கவிதையிடம் சென்றடைந்தது என் அக விடுதலையைப் பெற்றெடுக்கத்தான்.


இப்படி எனது எனது என்று பேசுகிறேனே இவ்வளவு எனதுகளுக்குப் பின்னாலும் ஒருவருடைய அர்ப்பணித்தல் மௌனமாக இருக்கின்றது. இதுவரையில் நான் எங்கேயும் அவரைப்பற்றி எழுதியதோ பேசியதோ இல்லை. என் திருமணத்தின் பின் எனது முதல் கவிதைத் தொகுப்பை தனது தனியான முயற்சியினால் ஒரு அன்புப் பரிசாக எனது கணவர் அஸீமே நூலாக்கிக் கொடுத்தார். அக்கவிதை நூல் அரச சாஹித்திய விருதைப்பெற்ற போது அந்த விருதினை கவிதைத் துறைக்கென பெறும் முதல் முஸ்லீம் பெண்ணாக நான் இருந்தேன். என் குடும்பத்தினரிடம் அவ்விருது மிக மாறுதலை ஏற்படுத்தியது. தீமையான செயலையல்ல ஏதோ நான் பெருமை தேடித் தருகின்ற ஒன்றைத் தான் செய்கிறேன் என அவ்விருது அவர்களுக்குச் சொல்லியது. இவ்விதமாகத்தான் அதன் பிறகு கிடைத்த விருதுகள் ஒவ்வொன்றும் எனது அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்திருக்கின்றன. அன்று அஸீம் திருமணம் முடித்த கையோடு அத்தொகுப்பை வெளிக்கொண்டுவராதிருந்தால் நான் தொடர்ந்து எழுதியிருக்க வாய்ப்பே இல்லை. எழுதுவதற்காக தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் வசதியையும் பக்கபலத்தையும் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த நிமிடம் வரை எனக்கு நேரும் சந்தோசங்களைப்போல பளிச்சொற்களையும் நண்பர்களைப்போல எதிரிகளையும் தோல்விகளைப்போல சவால்களையும் கசப்பான எதிர்வினைகளையும் அவரும் இணைந்தே சுமந்திருக்கிறார். 


கவிதை தரும் குழப்பமான மனநிலைகள்... அதன் திளைப்பும் மூட்டமான சோர்வும் உன்மத்தமான வலிகளும் என்னொருத்தியின் அக உலகுடன் சம்மந்தப்பட்டது. வெளிப்படையாக சுமப்பவர்கள் கணவனும் மகனுமே ஆகும்.

எழுதாதிருக்கும் சமயங்களில் என்னிடம் எழுதத் தொடங்கவில்லயைா என அக்கறையாகக் கேட்கின்ற ... இதுவரை எழுதிய ஒவ்வொரு கவிதைகளையும் தன் கைகளால் டைப்செய்து தந்துவிட்டு என் கைகளைக் குலுக்கி முத்தமிடுகின்ற, இரவு 2, 3 மணியானபோதும் குறைந்த வெளிச்சத்தில் வாசிக்கவோ எழுதவோ கூடாதென, பகல் போல் வெளிச்சத்தில் நான் எழுதிக்கொண்டிருக்க முகம் சுளிக்காமல் உறங்குகின்ற அந்த மகத்தான காதலை எப்படி கண்ணியப்படுத்துவது என எனக்குத் தெரியவில்லை. இந்தக் காதலுக்கு சமமான கவிதை ஒன்றையுமே இன்னும் நான் எழுதிவிடவில்லை. தீரா நன்றிக்கடனாக அது எஞ்சி நிற்கின்றது. 

என் கனவு மாளி்கையின் முற்றத்தில் கவிதைப்புறாக்களை வளர்க்கின்றேன். அவை கொறிக்கும் தானியங்களால் என் கூடை நிரம்பியுள்ளன. புறாக்கள் கோதுவதும் கொஞ்சுவதும் குறுகுறுப்பதும் பார்த்துப் பார்த்து அவைகள் மயங்கும்படி இசைக்கின்றேன். புறாக்களின் அரவணைப்பும் நெருக்கமும் மென் இறகுகளின் கதகதப்பும் தனிமையின் நிறங்களுக்குள் என்னைஅடைகாக்கின்றன. என் கனவுகளில் அவை இருக்கிறதென்றும் இல்லையென்றும் தோன்றுகின்றது. புறாக்கள் வேறெங்கும் திசைமாறிச் செல்வதில்லை. என்னுடைய கனவுகளின் ருசிக்குபழக்கப்பட்டிருக்கின்றன. அவை எங்கே எத்திசையில் செல்கின்றன? புதிய புறாக்களுடன் எப்போது திரும்புகின்றன? என்பதை கணிக்க முடியாது. மாயப் புறாக்கள் என்னிடம் வருவதுபோல்ஒருநாள் வராமலும் போகலாம். எதுவும் நிச்சயமில்லாதது....

எல்லையற்ற ஒன்றை எப்படி வரையறை செய்வது? அந்த விதமான அளவுகோலை முழுமையாக செயலிழக்கச் செய்வது கவிதை. இறப்பின் பின்னரும் பிறப்பின் முன்னரும் இருக்கக்கூடியஅரூப உயிராக....வாழ்வைப் போன்ற கேள்விக்கும் மரணத்தைப்போன்ற பதிலுக்குமிடையே கவிதையெனும் மெழுகுநதி குழைந்து அசைகிறது.

எழுதி எழுதி ஒன்றுமற்றுப் போய்விட வேண்டுமென்பதே என் ஆசை.

நிறைவாக மொழிபெயர்ப்புத் துறைக்கென இவ்விருதினைப் பெற்ற திரு. சத்தியமூர்த்தி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். குறிப்பாக சிறீனிவாசன் நடராஜன் அவர்கள் தன்னை சிறிதும் முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல் எல்லா விடயங்களையும் கரிசனத்துடனும் நேர்த்தியாகவும் கலைத்துவமாகவும் மேற்கொண்டிருந்தார், அவருக்கு என் அன்பையும் நன்றியையும் தெரிவிக்கிறேன். என் நண்பர்களுக்கும் சபையோர் அனைவருக்கும் நன்றியோடு என் கவிதையின் பேரன்பைத் தருகிறேன்.

நன்றி.

---------------------------------------------------------------------------------------------------------------------

Anar speech | அனார் | Poet Atmanam Awards 2017

https://www.youtube.com/watch?v=Mtu8Q9c9gcA
----------------------------------------------------------------------------------------------------------------------

( 30.09.2017 இல் சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்ற கவிஞர் ஆத்மாநாம் விருது விழா ஏற்புரை )










- அனார்


நம்பிக்கைகளுக்கும் அவநம்பிக்கைகளுக்குமிடையே கவிதைகளை அலையவிடுகிறோம்.

கவிஞர்களது மரணத்தின் பிறகான நினைவேந்தல் அவர்களது எழுதப்பட்ட கவிதைகளுக்கு ஏதோ ஒரு வகையான அடர்த்தியை ஏற்றிவிடுகின்றது.

வானம் நீலத்திலிருந்து வெண்மையை பிரித்தெடுப்பதற்கிடையில் அல்லது ஒரு அலையடித்து இன்னொரு அலை மேலுயர்வதற்கிடையில் கவிஞர் ரசூல் மரணித்திருந்தார். அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதே பெரும் திகைப்பாகிவிடுகிறது.


ரசூலின் சொற்களிலெல்லாம் சந்தண வாசமும் ரோசாப் பன்னீரும் மணக்கின்றன. அவரது கவிதைகளை நேசித்த அனைவரையுமே அவரது மரணம் மிகுந்த மனத்தாக்கத்தை ஏற்படுத்தியது. காலத்திற்குமான கவிதைகளை எழுதியவர். மரபார்ந்த வரலாற்றின் சம்பங்களோடும் காட்சிகளோடும் அவர் தன் கனவுகளை பிணைத்திருந்தார். ரசூலின் மொழி அவர் சொல்வதுபோல கருவண்டாய்ப் பறந்துபோகும் பிரபஞ்சவெளியில் சொற்களாக.

காலங்களின் தொலைவை மொழியால் கடந்துவிடும் வித்தையுடன் செயற்பட்டார். தமிழுக்கு கவிதைகளை இன்னொன்றாக மாற்றிக்கொடுத்தார். எதிர்காலத்தின் பசுந்தரையிலும் பாறைகளிலும் எதிரொலிக்கின்றது அவருடைய குரல்.

மதரீதியான அணுகுமுறைகளில் உள்ள பன்முகத்தன்மையின் சார்பாகவே ரசூல் அவர்கள் தனது பார்வையை முன் வைத்திருந்தார். அவருடைய ஆய்வுகளும் மிக விரிந்த பார்வையைக் கொண்டிருந்தவை. புனிதங்களைக் காப்பதன் கடமை தவறாத வரலாற்றின் தடத்தில் ஒருவழிப் பாதையில் நின்றபடி தனித்து தன் சொற்களின் கூர்மையால் கேள்விகளை எழுப்பியவர். அதனால் நன்கு சுடப்பட்ட மண்கலையம் போன்றதொரு மனம் ரசூலிடம் காணப்பட்டது.

கவிஞர் ரசூல் அவர்களிடம் நான் அவதானித்தது, தாய்மைகொண்ட பெண் மனதினை. அத்தோடு குழந்தையின் பார்வையிலிருந்து வரும் அப்பழுக்கற்ற கேள்விகளே, பாலினச் சமத்துவம்கொண்ட அவரது நிலைப்பாட்டை அனைத்துக்கு மேலாய் கலகத்தின் அறைகூவலாய் எழுந்த எதிர்க்குரலே. தன்னுடைய எழுத்தால் மரணத்தின் முகத்தை எல்லாப் பக்கங்களிலிருந்தும் வாசித்தவர் ரசூல். புனித தொன்மங்களுக்குள் இறந்துபோன சொற்களை கவிதைகளுக்குள் உயிரூற்றினார். வஞ்சிக்கப்பட்ட மனதிலிருந்து எழுந்த கவிதைகள் அவருடையவை. அநீதி இழைக்கப்பட்ட பக்கம் அவருடைய பேனா தலை தாழ்ந்திருந்தது. மரபிலிருந்து உருவான ரசூலின் விமர்சனப் பார்வை சமூகத்தின்முன் கருத்து ரீதியாக எதிர்கொள்ளப்பட வேண்டும். அவரது நூல்கள் பற்றி தொடர்ந்து உரையாடப்பட வேண்டும்.

அவருடைய செம்மண் மூடிய கஃப்ரின் மணல் அவருக்கு குளிர்ச்சியூட்டட்டும். எப்போதும் தணலாய் கனன்ற அவரது மொழி ரசூலின் உடலை நிழலாய்ப் போர்த்தியிருக்கட்டும்.


-------------------------------------------------------------------------------------------------------------

( 02.10.2017, சென்னையில் நடைபெற்ற ரசூலின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியது )

Wednesday, 9 August 2017



தேன் ஏன் மலைகளில் கூடு கட்டிக் கொள்கிறது…… 
----------------------------------------------------------------------------------------------------

-  அனார்





நினைவு சிந்தனை என்பதன் குறியீடாக “பான்ஸெ“ என்ற பூச்செடியை பிரஞ்சு மரபில் கூறுகின்றார்கள். நினைவுகளுக்கும் சிந்தனைக்கும் ஒரு பூச்செடியை குறியீடாக்கிப் பார்ப்பதன் அந்த மரபு எவ்வளவு துல்லியமும் மென்மையுமாகவிருக்கும் என்றொரு வியப்புப் தோன்றியது. ஏன் நம்முடைய நினைவுக்கும் சிந்தனைக்கும் இவ்விதமான ஒரு வாழ்வியல் குறியீட்டை கொண்டிருக்கவில்லையே என்ற சிறு வருத்தமும் ஏற்பட்டது. ஆனால் இறைவன் அவனது இயற்கை படைப்பாற்றலை குறியீட்டுச் சிந்தனைகளாக, அதன் அத்தாட்சிகளாக நம்முன் வைத்துள்ளான். அவ்வளவு வியாபகமானது அந்த ஆற்றல். மேலும் மனித இனமே இறைவனின் சிந்தனை வடிவமாகும். எவரும் நிராகரிக்க முடியாததோர் பேருண்மையாகும்.



“இலையில் தங்கிய துளிகள்“ எனும் உரைநடைக் கட்டுரைத் தொகுப்பின் மூலம், இன்ஷாப் இந்த வியாபித்தல்களை மனித நினைவுகளோடும் சிந்தனைகளோடும் அவரது ஆன்மாவின் பார்வைகளால் மொழியால் அவ்வப்போது சமூகத்திடம் பகிர்ந்து வருகிறார். 


தான் சந்தித்த அனுபவங்களை விபரிக்கின்ற அவருடைய மொழி, வாசிக்கின்ற அனைவரையும் ஊடுருவக்கூடியது. 

// ஒரு ரயிலைத் தவறவிடும்போது குற்றவுணர்ச்சி வந்துவிடுகிறது. அவ்வளவு வேதனையை அது ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் ரயிலைத் தவறவிட்டு தலையில் கைவைத்து மூச்சு வாங்குபவர்கள் நிறையப்பேர் இருக்கின்றனர் // 



// நாடுகளின் ஊடாகவும் நாகரீகங்களின் ஊடாகவும் தன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. மனித வாழ்வே ஒரு பயணம்தான் என்பதின் அன்றாட சாட்சியாக பூமிப்பரப்பின் முதுகில் ரயில் ஊர்ந்து கொண்டே இருக்கின்றது //

( காற்றில் கையசைத்து )

நாம் கவனிக்கத் தவறிய ஒரு முதியவரை மலையை பாடலை கவிதையை பிரிவை மரணத்தை இயற்கையை இலக்கியத்தை என தன்னில் தாக்கம் செலுத்திய ஏதோ ஒரு விடயத்தை நினைவூட்டுகின்றார். அதனூடாக நம்மை திரும்பிப் பார்க்க வைக்கின்றார். மேலும் அதன் வழியாக வாழ்வின் மூடப்பட்ட ஒரு ஜன்னலை அவரது எழுத்துக்கள் திறந்துவிடுகின்றன. உறைந்துபோயுள்ள மென் உணர்வுகளுக்கு வண்ணங்களை தடவுகிறார். நம்மை அசையும் உயிரோட்டமுள்ள நதியில் மிதக்கும்படி செய்கிறார். அவரது அவதானிப்புகளும் அறம் சார்ந்திருப்பவை. இன்ஷாபின் பேசுபொருள் மிக விரிவான நோக்கங்களைக் கொண்டிருக்கிறது. மென்மையான தொனி என்பது அவரது இயல்பும்கூட. தன்சூழலை நேசித்து அளவற்ற கரிசனையுடன் எழுத்துக்களில் பதிக்கின்றார்.





அவரவருக்கான விதிக்கப்பட்ட சுமைகள், தாம் விரும்பி ஏற்றுக்கொண்ட சுமைகள் என, நம் ஆடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பாரங்கள் எத்தனையோ வகையானது.



நம் ஆபரணங்களால் துன்பத்தின் வெடிப்புகள் தெரியாமல் அலங்கரித்தோம். உயர்தரமான மென் புன்னகையால், தலையசைவால் எதிரே கடக்கும் யாரையும் எனக்கெந்த கஸ்டமும் இல்லையே என நம்ப வைக்க நாம் செய்யும் பாவனைகள் பல….



வாழ்க்கை என்பது எப்போதுமே நேரான கோட்டில் தங்கு தடையற்று பயணிப்பதல்ல. அதற்கான சவால்கள் என்பது ஆன்மீக ரீதியாகவும் பெளதீக ரீதியாகவும் ஒவ்வொருவரும் எதிர்கொள்கின்றோம். அனுபவங்கள் அடைவுகள் என நன்மை தீமை உயர்வு தாழ்வு என அனைத்தும் இரண்டறக் கலந்திருப்பது. இரு நிலைகளுக்கிடையான போராட்டத்தை எதிர் கொள்கின்றவனாக மனிதன் இருக்கிறான். இங்கே எழுத்தாளனின் முக்கியமான பாத்திரம் அவன் ஒரு தீர்ப்பிடும் நீதிபதியாக இயங்கமுடிவதில்லை. அதாவது தெரிந்தும் தெரியாமலும் தவறிழைத்தவனுக்காக வாதிடுபவனாகவே பல சந்தர்ப்பங்களில் இருக்க முடியும்.



நம்மைச் சுற்றி இருப்பவர்களதும் நம்முடையதுமான அன்றாட வாழ்வு காயங்கள் அற்றதா.. துரோகங்கள் அற்றதா… தவறுகள் எதுவுமில்லாமல் மனிதருடைய வாழ்க்கை என்பது கழுவித்துடைத்த கண்ணாடிபோன்று பளிச்சென்று இருக்கிறதா அதனுள் மறைவான நிழல்கள் இல்லையா யாரும் கண்டுணராத வெடிப்புகள் இல்லையா.. ஆனால் நம்மில் அனேகர் உண்மைகளை எதிர்கொள்வதைவிட பாவனைகளின் தோற்றப்பாடுகளுக்கே முக்கியத்தவம் அளிக்கின்றோம். ஆக நமது மறுபக்கம் என்பதை நாமே கண்டுணர தயங்குகின்றவர்களாக இருக்கின்றோம். எனவே அழகை ஆனந்தங்களை பரவசங்களை வியப்பை காண்பதும் எழுதுவதும் ரசிப்பதும் மாத்திரம் ஒரு எழுத்தாளரின் தார்மீகப் பணியாகமாட்டாது. சமூகத்தின் உள்ளறன்களை அசைத்துப் பார்க்கும்விதம் எழுத்தாளன் செயற்பட வேண்டி நேர்கின்றது. தன்னை அர்ப்பணித்தல் என்பது அதுதான். சுயமுள்ள எழுத்தாளனின் உயிர்ப்பான தருணங்களை அவன் எப்போதும் கைவிடாதிருத்தல் வேண்டும். சமூகத்தை விழிப்புணர்வூட்டக்கூடிய கருத்துக்கள் இன்ஷாபின் கட்டுரைகளில் மென்மையான அணுகுதலோடு முன்வைக்கப்படுகின்றன.



// பரிசு எனும்போது தேனீர்க் கோப்பை, பீங்கான், கரண்டி என்பவற்றுக்கு அப்பால் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. // என்றும்..

// அடுத்தவனின் முதுகில் குத்துவதற்கே காத்திருக்கும் உலகில் அடுத்தவன் முதுகை தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கும் ஒரு வார்த்தைக்கு ஈடாக ஒரு பரிசை நாம் கண்டுகொள்ள முடியாது. கவலைகளால் நிரம்பி காலங்கடத்தும் ஒருவருக்கு மகிழ்ச்சியைப் பரிசளிக்க ஏன் எங்களால் முடிவதில்லை. // எனவும் - இரண்டிலும் நிம்மதி இல்லை, என்றொரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.





மேலும் அவர் தனது எழுத்துக்களால் சிந்தனைகளால் ஆழச்செல்ல வேண்டும். ஒரு மரத்தின் வெளித்தோற்றத்தை விமர்சிப்பதைவிடவும் தேவையானது அம்மரத்தின் ஆணிவேர்வரை பீடிக்கப்பட்டுள்ள அதன் நோய்க்கூறுகளை பற்றியும் கவனம் எடுப்பதாகும்.



இயற்கையை கொண்டாடுதல் எனும் நிலையி்ல் சில துளிகளை இந்நூலில் காணலாம். 

// பூமியின் சமநிலை குலையாமல் ஆப்புகளாக அவை எப்படி ஆக்கப்பட்டுள்ளன. எப்போது அவை இத்தனை பெரிதாய் வளர்ந்தன ஏன் இத்தனை மௌனத்துடன் இருக்கின்றன. தம் பள்ளத்தாக்குகளில் காவுகொண்ட உடல்களுக்கு என்னவானது. அதிசயப் பனிக்காற்று எங்கிருந்து உற்பத்தியாகின்றன. மலைகளை குடைந்து எப்படி மனிதர்கள் வாழ்ந்தார்கள், தேன் ஏன் மலைகளில் கூடு கட்டிக் கொள்கிறது? ஏன் அவை மேகத்தைப்போல நகர்வதில்லை. எல்லாக் கேள்விகளும் சிந்தனையின் அடர்ந்த காடுகளில் நம் கண்களை கட்டிவிட்டு விடுகின்றன. //

(மழையில் நனையும் மலை)



ஜாமியா நளீமியாவில் இருந்து கல்வியை முடித்து வந்த பின்னர். தமிழ் இலக்கியம் சார்ந்தும் கலை சிற்றிதழ்கள் சார்ந்தும் செயற்படுவது என்பது மிக முக்கியமானது. அந்த வகையில் இன்ஷாபின் இந்த இலக்கிய ஆர்வம் நிச்சயம் அவருடைய ஆற்றல்களை வெளிப்படுத்தும் திறனாகவே காணப்படுகிறது.



ஒருவரது மென்னுணர்வுகள் எவ்வளவு தூரம் மற்றமைகளின் மீது கனிவு கொள்ளவும் உணர்வுகளை மதித்து பாதுகாக்கும் பொறுப்புணர்ச்சியோடு செயற்படத் தூண்டுகின்றன என்பதை இன்ஸாபின் பல கட்டுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.



- மழையில் நனையும் மலை

- காற்றில் கையசைத்து

- இன்னும் கொடுக்காத பரிசு.

- கொண்டாடாத வாழ்க்கை

- பச்சை இலையின் கறுப்புநிறம், 

அவருடைய மொழியாலும் அனுவத்தினாலும் இது போன்ற செறிவான கட்டுரைகள் தொகுப்பில் காணப்படுகின்றன.. பிறப்பு மரணம் எனும் இரு கரைகளிடையே இளமை முதுமை ஆகிய பருவங்களின் மாயநதி அசைகின்றது. வசந்தங்களும் ரம்மியங்களும் அனலும் கோடையும் அந்தப் பயணத்தில் நிகழ்கின்றன. இன்ஷாப் ஒரு கணம் வியப்பிலாழ்ந்தபடியும் கேள்வி எழுப்பிய படியும் ஆதுரத்துடனும் தன் கலைமனதை சிதறவிட்டிருக்கின்றார். மெய்யாகவே அருடைய சமூக அக்கறை தான் இந்த எழுத்துக்கள். ஒரு எழுத்தாளனின் ஆற்றல்மிக்க முன்னெடுப்பு மற்றும் சமூகப்பணியும் இவ்விதமானதே. ஆன்மாவின் கண்களால் உற்றுநோக்கும் விதம் இன்னும் பல உண்மைகள் பேசப்பட வேண்டியுள்ளன. இன்ஷாப் தன்னை புதுப்பித்துக் கொண்டு வருபவர். ஓடுகின்ற நதிபோன்றவர். அவரது தார்மீகம் அவரது எழுத்துக்களில் சந்தேகமின்றிப் புலப்படுகின்றது.


--



Friday, 21 July 2017

காட்சிகளை கருவுக்குள் சிக்கவைக்கும் சாமர்த்தியம் அல்லது தரிசிப்பையே கருவாக்கிடும் ஆற்றல்....

---------------------------------------------------------------------------------------------------------------

- பரீட்சன் (வபா பாறூக்) - சாய்ந்தமருது





உலக மட்டத்தில் தமிழ் கவிதைகள் எந்தத் தரத்தை எட்டியுள்ளது என்பதை மாற்று மொழிக்கவிதைகளுடனான ஒப்பீடுகள் மூலமே ஓரளவு மதிப்பீடு செய்யலாம். இணையத்தின் உதவியால் பாரிய சிரமம் இல்லாமல் இந்த முயற்சியும் இலகுவாக்கப் பட்டுவிட்டது. அனேகமாக எல்லா மொழியிலும் எழுதப்படுகின்ற தரமான கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டு விடுகின்றன என்றே சொல்லலாம். இத்தகைய பதிவுகள் அனைத்தையும் ஒருவரால் படித்திட முடியாது என்பது உண்மையே. இது எல்லாத்துறை/பிரிவுகளுக்குமான பொதுவான யதார்த்தமே என்றாலும் ஆய்வு நோக்கில் தேடுகின்ற ஒருவரின் தேடல் சாதாரன துலாவலைக் கடந்து செல்லும் என்பதில் இரண்டாவது கருத்து இருக்காது.


கடந்த சில மாதங்களாக தமிழ் கவிதைகளின் உலக மட்டத்திலான நிலையை அறிந்து கொள்ளும் நோக்கில் மிக விசாலமான தேடலை மேற்க் கொண்டேன். அந்த முன்னெடுப்பில் ஒரு உண்மையை அறிய முடிந்தது. பொதுவாக என்று கூற முடியாவிட்டாலும் குறிப்பிட்ட சில தமிழ் படைப்புகளுகள் ஒப்பீட்டளவில் மிகவும் உச்சத்தில் இருக்கின்றது என்பது தான் உண்மை..

இந்தியாவை சேர்ந்த இளம் கவிஞர் நேஹா குமாரி ஆங்கில கவிதைகளுக்கு முற்றிலும் புதுமையான பெயரிடப்படாத வர்ணங்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார். இது தவிர இத்தாலிய, பிரெஞ்ச் மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப் பட்டுள்ள சில கவிதைகளை நோக்கின் அவை நுட்பமான படைப்புகளாய் இருந்தாலும் ஆச்சரியப்படத்தக்கதாகவோ முயன்றால் முடியாதனவாகவோ தென்படவில்லை அப்படைப்புகளில் செயற்கையான நுட்பவியல் முயற்சி பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்தக்கவிதைகளில் ஒன்றை படித்து முடித்தவுடன் படைப்பாளியான வாசகனுக்குஉடணடியாக ஒரு புதிய கவிதையை எழுதிவிடலாம் என்றோ, முன்னர் எழுதியிருந்த அல்லது கரு நிலையில் மனதில் இருக்கும் தனது கவிதை ஒன்றையோ சில நிமிடங்களில் நுட்பவியல் திருத்தத்துக்கு உட்படுத்தி புது வடிவொமொன்றை கொடுத்து விடுவதில் சிரமம் இருக்காது. தவிரவும் அத்தகைய கவிதைகள் கணிசமான அளவு தமிழில் எழுதப் படாமலும் இல்லை. குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில கவிஞர்கள் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டு வருகின்றனர் (கவிஞர்கள் என்று குறிப்பிடுவது அனைத்து பாலாரையுமே). புதிதாகவும் சில கவிஞர்கள் நுட்பச் செறிவான கவிதைகளை எழுதத் தொடங்கியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது ஆனாலும் உலகத்தரத்தில் உச்ச நிலைத் தமிழ் கவிதைகள் என்று கூறும் போது அது வெறுமனே எழுத்திலோ பாணியிலோ தனித்துவம் உடையதாக மட்டும் இருப்பது போதுமாகாது. மேலதிக பிரத்தியேக சிறப்புக்காரணமும் இருத்தல் அவசியம். அந்த வகையில் சர்வதேச விருதுகள் பெற்ற கவிஞர் அனாரின் கவிதைகள் சமகால கவிதைப் பரப்பில் மொழி/தேசங்கள் கடந்து முன்னிலையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது.


அனாரின் தனித்துவமான மொழிக் கையாழ்கை, கருத்தேர்வுகளுக்கு அப்பால் வியக்கத்தகு தரிசனப்பாங்கு ஒன்று சுழல்கின்றது. ஏழாம் நிலைத் தரிசனம் ஒன்று இயற்கைக் கொடையாக கிடைக்கப் பெற்றிருப்பதை அனாரின் கவிதைகள் சாட்சி சொல்கின்றன. தரிசிப்பின் வியாபிப்பும், அகத்தை புற வடிவுக்கு மாற்றலும் அந்தரங்கத்தை சர்வசாதாரணமாக பகிரங்க காட்சிமாற்றலுக்குட்படுத்துவதும் அனாரின் நுட்பங்களாயிருந்தாலும் ஏழாம் நிலைத் தரிசிப்பே அனாரின் அதிகமான கவிதைகளின் கருக் களமாக காணப்படுகின்றன. இத்தரிசிப்பு எல்லோரிலும் இயற்கையாக இருக்கும் அம்சமாயினும் அதன் பிரயோகிப்பும் நெறிப்படுத்தலும் தனி மனித ஈடுபடுத்தலுக்கும் ஏற்ற விதத்துக்கு இசைவடைய ஆரம்பித்ததால் சுவரில் தொங்கும் ஓவியத்தின் வர்ணங்களை இழை இழையாக பிரித்தெடுத்து இறுதியில் உருவமும் வர்ணமுமில்லாத ஓவியத்தை மடியில் வைத்து இசை கேட்பதெல்லாம் அனாரை பொறுத்தவரை நாளாந்த நிகழ்வுகளாக மாறி விடுவது விந்தையல்ல.


பயிற்றப்பட்ட வண்டில் மாடு உரசிடாமல் பக்குவமாய் குறும் ஒழுங்கைக்குள் சென்று திரும்புவது போல் அனாரின் தரிசனங்கள் புறத்தை உரசிடாமல் ஆழ்அகங்களை இயல்பாக தரிசிக்கப் பழகிக் கொண்டதால் அவாவின் கவிதைகளில் ஒரு ஏழாம் நிலைக் காட்சிகளையே நம்மாலும் காணமுடிகிறது. காட்சிகளை கருவுக்குள் சிக்கவைக்கும் சாமர்த்தியம் அல்லது தரிசிப்பையே கருவாக்கிடும் ஆற்றலும் பிரத்தியேக ஈடுபாட்டின் இலாபங்களாய் கிடைக்கப்பெற்றிருந்தாலும் அனாரின் அலாதியான மொழியீடு கவிதைகளை மொழி/தேசங்கள் கடந்த உச்ச நிலை படைப்புக்களாக  சமகாலத்தில் அடையாளப்படுத்துகின்றன.


இப்படியான உன்னதமான படைப்பாளி பிறந்த மண்ணில் வாழ்வதிலும் பெருமையே.


-
15.12.2015

Thursday, 27 April 2017

சாம்பல் பொம்மை
----------------------------------------------------------------------------------------------------------

- அனார்


“நினைவு கொள்வதுதான் மீட்சியின் ரகசியம்” பஹத் கூறியபோது...

“யார் சொன்னாங்க அப்படி’’ என்று மின்னா கேட்டாள்.

“அது யாரோ சொன்னதுதான். யூதப் பழமொழி. எங்கோ வாசித்த ஞாபகம்” என்றவன் மின்னாவின் கையிலிருந்த புத்தகப் பைகளை வாங்கிக்கொண்டான்.

“ஏதாவது சாப்பிடுறியா, இல்ல இன்னும் கொஞ்ச தூரம் நடந்திட்டே இருப்போமா” மின்னாவின் கண்களைக் கூர்ந்து பார்த்துக் கேட்டான்.

“நடக்கத்தானே வந்தோம். நடப்போம்” என்றவளிடம் “சரி, உனக்கு போதுமென்ற வரைக்கும்” என்றான். சிரித்துக்கொண்டே கடைகள் நிறைந்த தார்வீதியில் இறங்கி ஓரமாக நடந்தார்கள்.

பின்னிரவு என்பதால், பூட்டப்பட்ட ஒரு சில கடைகளின் கண்ணாடி வழியாகத் தெரிகின்ற அந்தப் பொம்மைகளைப் பார்த்தபடியே மின்னா கேட்டாள்,

“இந்த பொம்மைகளைப் பார்த்தால் உனக்கு என்ன தோணும்?”

“என்ன தோணனும், அழகா இருக்கும்”

“இப்ப பார்க்கும்போது யாரையோ எதிர்பார்த்துட்டு நிற்கிற மாதிரி தெரியுது.

வேறெதுவும் எனக்குத் தோணுவதில்லை. உனக்கு ஏதாவது தோணுதா என்ன?”

“நீ ஒரு பொம்மைப் பைத்தியமாச்சே” எனச் சீண்டிய பஹத்தை திரும்பிப் பார்த்து புன்னகையால் தாக்கினாள். அப்போது மின்னாவின் கூந்தல் சிறிது முகத்தை மூடியது. கோதிய விரல்கள் மட்டும் இருளின் நிழலில் ஏதோ மந்திரம் போன்று மின்னின.

“நான் பொம்மைகளைக் காதலிப்பவள்தான். பார் அதன் தனிமையிலுள்ள உக்கிரம் வேறெங்கும் இல்லை. இந்த இரவையும் வெறிச்சோடிப்போன வீதியையும் வெறித்தபடி அசையாமல் நிற்கின்றன. ஆனால் மனிதர்கள் யாரும் பொம்மைகளைப் பொருட்டாக மதிப்பதில்லை. பொருட்படுத்துவதுமில்லை.”

“நீ பொம்மைகளை எவ்வளவோ மதிப்பவள்தானே, அது எனக்குத் தெரியும். பொம்மைகளிடம் குழந்தை போல மாறிவிடுவாய்.”

“குழந்தைகள் அப்படியல்ல பஹத். குழந்தைகளுக்கு அவை பொம்மைகள் போலவே தோன்றுவதில்லை. அதனால்தான் பொம்மைகளுடன் குழந்தைகள் உரையாடு கின்றார்கள். மனிதர்களுடன் இருப்பதைக் காட்டிலும் மகிழ்ச்சியாக இருப்பது குழந்தைகள் பொம்மைகளோடு விளையாடும்போதுதான். நீ கவனித்ததில்லையா?”

தூரம் நடந்து வந்துவிட்டார்கள். இருள் சூழ்ந்து நிரம்பிய வீதியில் நடக்கின்றபோது விரைந்து இரைச்சலுடன் எதிர்ப்படும் வாகனங்களின் ஒளி முகத்தில் படும் போதெல்லாம் மின்னாவும் ஒரு பொம்மை போலவே தோன்றினாள்.

“நமது சுயங்களையே தொந்தரவுக்குள்ளாக்கும் வகையில் ஒருவர் மீது அதீத பிரியத்தை எது உருவாக்குகின்றது? அன்பு என்கிற விசித்திரமான பைத்தியக்காரத்தனமான உணர்வொன்றை நான் அறிந்ததில்லை. பைத்தியங்களால் உருவாக்கப்படும் எந்தப் பேரன்புமே பரிசுத்தமானதும் கேள்விகளற்றதுமாகின்றது. இரு வகைப் பிரிவுகள் அங்கு இருப்பதில்லை. பிரிவுகளுக்குள்ளாக, வகைப்படுத்தலும் கிடையாது. அத்தகைய ஒன்றுதான் பேரன்பான நேசம். வாழ்வின் சில பகுதிகளை முழு அர்த்தப்பாடும் கொண்டதாக நம்மை உணரச் செய்கிறது, பஹத்.”

“உன்னோடு நடப்பதன் இதம் இந்தக் காற்றின் தொடுகை மிதக்கும் பனிப்புகைக் குளிர். அற்புதமான இரவு இது”

“பேசுகிறாயா? இல்லை இது கவிதையா?” என மின்னா கேட்டுச் சிரித்ததைப் பார்த்தபடியே அவளது வலது கைவிரல்களைத் தனது கைகளால் கோத்துக்கொண்டான்.

“பேசுவதும் ஒருவகையில் மனதிலுள்ள பாதைகளால் நம் எண்ணங்கள் நடப்பதுபோலதான் இருக்கிறது. கண்ணுக்குத் தெரிந்த பாதைகளில் கால்களும் அறியப்படாத பாதைகளில் மனமும் நடக்கின்ற இந்த நடை அற்புதமானதுதான்” என்றான்.

“நீ சொல்வது சரியானது ஒரு வகையில். மனதுக்குள்ளாகவும் உலவுகின்றோம்.”

“அப்படியும்தான்...”

“மனம் திரும்பிப் பார்க்க விரும்புகின்றது. இருவரும் ஒரே சமயத்தில் இரு காலங்களில் நடப்பது போன்று இருக்கின்றது” என்றாள் மின்னா.

“வரும் வழியில் கண்ணாடி வழியே பார்த்த அந்த பொம்மையை வாங்க வேண்டும் பஹத்”

“அது சரி. இந்த வயதிலும் பொம்மைகளை வாங்கிவாங்கிச் சேர்ப்பது பற்றி யாரிடம் சொன்னாலும் சிரிப்பார்கள்” என்றான்.

“சிரிப்பது லேசானது. அதிலும் மற்றவர்களைப் பார்த்துச் சிரிப்பது அதைவிட லேசானது. யாருக்கும் தெரிவதில்லைதானே. உள்ளே என்ன நினைக்கின்றோம் என்பதெல்லாம் தெரிவதில்லை. பல சமயங்களில் நமக்கு நாமே அச்சம் தருகின்றவர்களாக மாறி விடுகின்றோம் பஹத்.”

“எனக்குத் தோன்றும், பொம்மைகளுக்குப் பசிப்பதில்லையா? அவைகள் அடம் பிடிப்பதே இல்லையா? நமக்கெல்லாம் விளையாடப் பொம்மைகள் தேவை என்பதை யார் முதலில் யோசித்திருப்பார்கள்? இப்படி...”

“என்ன நமக்கெல்லாமா!” என்ற பஹத்தின் கைகளைச் சற்றே கிள்ளினாள். நோவு தரும் அவனது பாவனையைப் பொருட்படுத்தாமல் “இவ்வளவு அதிர்ச்சி எதற்கு, நீ பொம்மைகளை விளையாடியதில்லையா?” என்றாள்.

“விளையாடி இருக்கிறேன்தான்” என்றான்.

“ஆனால் அது விளையாட்டு மட்டுமில்லை என்பது உனக்குத் தெரியுமா? அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும். கோழிக்குஞ்சு பொம்மை வச்சிருந்தேன். ரொம்பச் சின்னது. உள்ளங்கைக்குள்ள பொத்தலாம். அப்படிக் குட்டியானது. எங்க ஊர் கொடியேத்தப் பள்ளியில் மாமா வாங்கித் தந்தது. ஆனா அதை யாருமே விளையாடத் தரமாட்டாங்க. அலுமாரியில் ஒளிச்சிவச்சி பூட்டிடுவாங்க. வெள்ளித் திறப்பொன்றினால் முறுக்கித் தரையில் விட்டா கொக்கொக்கென கொத்தி குருணல் சாப்பிடும். தூரம் போகும் திரும்பி வரும் சிவப்புக் கோழி, அதற்கு மஞ்சள் சொண்டு. பார்க்க அவ்வளவு வடிவா இருக்கும்.”

“அதை ஏன் அலுமாரியில் வைப்பான்?”

“உடஞ்சிடக் கூடாது என்றுதான். நான் எங்கேயாவது விழுந்து காயம் வந்துட்டென்றால் இல்லாட்டி காய்ச்சல் என்றால் இருந்து விளையாடத் தருவாங்க. அதுக்காக நமக்கெல்லாம் அடிக்கடி காய்ச்சல் வருமா என்ன. பிறகது எங்குதான் போனதோ காணவே இல்ல. தேடித்தேடிப் பார்த்துட்டு விட்டுட்டேன்.”

“மின்னா, உனது கோழி செத்துவிட்டதோ என்னவோ?” என்றான் குறும்பாகச் சிரித்துக்கொண்டு.

“எந்த பொம்மையும் நோய் கண்டு மரணிப்பதில்லை. நாம்தான் கொன்று விடுகிறோம்” என்றாள்.

“மின்னா, நீ என்ன கவிதையா சொல்கிறாய்?” என்று என்னைக் கேட்டுவிட்டு, “நீதான் இப்போது கவிதை மாதிரிப் பேசுகிறாய்” என்ற பஹத்தைப் பார்த்தாள்.

“நாம் இருவரும் பேசுவது கவிதை மாதிரித்தானே இருக்கும்.’ கவிதை உணர்வுகள் பொம்மைகளோடான நேசிப்பை போலத்தான்” என பரவசமாகக் கூறினாள்.

“ஊரையே தாண்டி வந்துவிட்டோமோ இது வெசாக் காலமல்லவா? வீதி முழுக்கச் சந்தனக் கூடுகள், மரங்கள் எல்லாமே ஒளி விளக்குகளாய் மாறியிருக்கிறது. இரவையும் நிலவையும் பிரதானப்படுத்தி நடக்கும் இப்படியான சோடனைகள் எனக்கு விருப்பமானது. பாரேன் இரவில் தீப்பிழம்பு என ஒரு குதிரையை அலங்கரித்திருக்கிறார்கள். ஒளிபொருந்திய யானையும் குதிரையும் உலவும் இந்த இரவுக்குள் நாம் இருவரும் பொம்மைகளைப் போல மாறிவிட்டோமோ?’’ என்ற பஹத்தின் குரல் கொண்டாட்டமானதாக மாறியது.

“வெசாக் காலமென்றால் இந்த விகாரை வீதி நெடுக ஒளி வலைகளால் போர்த்தப்பட்டது போல இருக்கும். அங்கே தெரியும் வாவியில் மூன்று செந்தாமரைகள் நீருக்குமேல் வைத்திருப்பார்கள். வாவி இருட்டில் பெரிய செந்தாமரைகள் அற்புதமாகவிருக்கும். நீரின் இருள் மேலே கனன்று ஒளிரும் செந்தாமரைகள்” என்றான் பஹத்.

“அப்படியா! அழகாகச் சொல்கிறாய்” என்றாள் மின்னா.

“உன்மத்தமான தனிமைக்குள்ளாக நிற்பதுதான் பௌர்ணமி. அந்த நிலவோடு புத்தனுக்குள்ள பந்தம்தான் உலகின் பரிசுத்தமான அன்புணர்ச்சியென எனக்குத் தோன்றுவதுண்டு. குறைவதுமல்ல கூடுவதுமல்ல. முழுமையாக இருப்பது... தன்னிறைவானது நிலவொளி.”

அந்தக் குரல் கனிந்து மென்மையாகிக் கரைந்தது. அந்தத் தருணத்தில் ஏதோ கனவினை நினைவூட்டுவது போல.

திடீரென மின்னா சொன்னாள். “நேற்றிரவு தூக்கத்திலிருந்து எழும்பித் தண்ணீர் குடிக்க வந்தேனா? பிரிட்ஜின் மேலே எப்போதும் இருக்கும் என் கரடி பொம்மை கீழே விழுந்து கிடந்தது. அப்படி அதைப் பார்ப்பதற்குக் கடும் கஷ்டமாக இருந்தது. இரவு கொஞ்ச நேரம் வீட்டுக்குள்ளே அதை இடுப்பில் வைத்தபடி நடந்து கொண்டிருந்தேன், யாரின் கண்ணிலும் படாமல். இப்படிப் பல இரவுகளில் நடப்பதுண்டு. தனித்த கரடி பொம்மையும் நானும் நீண்ட நேரம் ஆளையாள் பார்த்தபடி இருப்போம். ஏன் எனக்கு இப்படித் தோணுகின்றது எனத் தெரியவில்லை பஹத். கிட்டத்தட்ட இதுவுமொரு பைத்தியத்தனம் என எண்ணுகிறாயா என்னைப் பார்த்து?”

“அப்படியில்லை. நீ பேசுவதைக் கேட்டுக்கொண்டே நீளும் வீதியைப் பார்த்தபடி நடப்பது ஒருவகை உணர்வுக் கலவைகளை என்னுள் உருவாக்குகின்றது மின்னா. உண்மைதான். நீ சொல்வது போன்றே இதுவும் ஒரு பைத்திய ருசி. யாருக்குள்ளும் இந்தப் பைத்தியத்தின் ருசி இருக்கும் தான்.”

“ஆனால் அவர்களுக்கே அது தெரிவதில்லை. உற்றுக் கவனிப்பதற்குக் கலைமனம் தேவைப்படுகின்றது. உன்னிடம் இவ்விதமான செயல்கள் இருக்கிறதா?”

“ம்.. ஒன்றிரண்டு சொல்லக்கூடியது. சிலது நான் பகிர்ந்துகொள்ள விரும்பாதது. மாலை வேளைகளில் தூங்கி எழும்பினால் எனக்கு அழ வேண்டும் போல் இருக்கும். மனம் அப்படியே ஒரு வகையாகக் கனிந்து கரையும். நிச்சயம் ஒரு ஆறுதலான சொல் அல்லது அணைப்பு முத்தம் ஏதாவது ஒன்று தேவைப்படும் அப்போது. இந்த இரவு என்பதே எல்லாத் திரைகளையும் விலக்கக் கூடியதுதான் இல்லையா? நம்மை நிர்வாணிகளாக்கக் கூடியதும்கூட” சொல்லி நிறுத்தினான் பஹத்.

“எனக்கு இரவின் தனித்த தார் வீதி பிடிக்கும். அதிலும் தாழ்ந்தும் உயர்ந்தும் போகும் நீண்ட வீதி. கொஞ்சம் தூறல் மழையிலோ பனியிலோ ஈரமாகி இருக்கின்ற வீதிகள் ஒருவகை வெறுமைக்குள் ஆழ்ந்துபோன அதன் கருமை இப்படி இப்படியாக. உனக்குத் தெரியுமா பஹத்? நீ இல்லாத சில நாட்களில் நான் வெறுப்பவர்களையும் நேசிக்கத் தொடங்கினேன். உனது அடையாளங்களை யாரிடமாவது தேடினேன். எவரிடமிருந்தாவது நான் கேட்டுணரும் உனது குரலின் ஒரு துணுக்கு ஒரு நாளுக்குப் போதுமானதாக இருந்தது. உனது நிறத்தை ஒத்த நிறத்தைக் காணும் உடலை வாஞ்சையுடன் கவனித்தேன். பின் கழுத்தும் மெல்லிய தாடி பரவிய கன்னங்களும் அதன் சாயல்கள் கொண்ட ஆண்களை அவசரமின்றிக் கடந்தேன். அந்தக் கணங்களில் உள்ளே பெய்யும் மழைத்தூறல் இதமாக இருந்தது. குளிர்ந்தது. உனக்கே தெரியாமல் உன் மீதான காதலில் திளைப்பது காமுறுவதன் வழியாக கிட்டாத ஆனந்தங்களை அடைவது வெளிப்படையான உறவின் ஆழத்தையும் உணர்வையும் ரகசிய எண்ணங்கள் வழியாக உன்னை அடைவதன் பேரின்பங்களையும் அடைந்தேன். பால் முற்றிய பருவங்களில் தலைசாயும் சோளகக் காடுகளின் கதிர்களைப் பசுந்தோல் விலகி மஞ்சள் தெரியத் தொடங்குவது போன்றே என் செயல்களும் தானாகப் பருவமடைந்துவிட்டன.

“நீ நீயாக இருந்த எல்லா நேரங்களிலும் நான் நானாக இல்லாமல் சமன் குலைந்தேன். உன்னை நான் விரும்புகின்றபடியான பொம்மையாக நினைப்பதுண்டு. அதையும் மீறி நீ எனும் செயலற்ற வடிவமாக உன்னை அணுகுவதற்கு அது வசதியானது. மோகம் காதல் துணை என்பதெல்லாம் எனக்கு மட்டுமேயான ரசனைகளால்தான் முழுமை பெறுகின்றது. அதற்கு உயிரும் சதையுமாகவிருக்கும் உன் உடம்பு அவசியமற்றது. அந்தரங்கத்தின் மிக அபூர்வ வெளிகளில் நாம் பொம்மைகளாக உலவுவதாகவே எனக்கு நம்ப முடிகின்றது. பொம்மைகளாக இருப்பது அச்சுறுத்தல் இல்லாதது. அங்கே முடிவுகளின் தீர்மானங்களின் அபத்தங்கள் எதுவும் இருப்பதில்லை. பொம்மைகளுக்குப் பொம்மைகளாக இருப்பதுதானே அர்த்த பூர்வமாகவிருக்கும்.”

“நிறுத்து மின்னா! நீ பேசுகிறாயா! உளறுகிறாயா! நீயேன் பொம்மையாக இருக்க வேண்டுமென விரும்புகிறாய்? அதில் ஏன் என்னையும் சேர்த்துக்கொள்கிறாய். நாம் மனிதர்கள். நீ பெண் நான் ஆண் நாம் ஒரு போதும் பொம்மைகளல்ல.”

“அதனால் என்ன இப்போது பஹத். மனிதர்கள் எனில் பொம்மைகளைவிட எந்த வகையில் மேம்பட்டு இருப்பவர்கள்? அவர்களுக்கு உயிர் இருப்பதாலா? அவர்களுக்கு அதிகாரம் இருப்பதாலா? அவர்களுக்கு பால்த் தன்மை இருப்பதாலா இல்லை அவர்கள் துரோகமும் யுத்தமும் கொலைகளும் அழிவுகளையும் அறிவைக் கொண்டு செய்வதாலா? இவர்கள்தான் மனிதர்கள் எனில் இதில் பெருமை கொள்வதற்கு என்ன இருக்கிறது. பொம்மையாக இருப்பதே மேலானதல்லவா? உனக்குத் தெரியாது பஹத். நீ என்னைப் போலவே பொம்மையாகிவிடு. உன்னுடன் நான் வாழ்வதற்கு நீ என்பதும் அவசியமற்றது. அதாவது நான் பொம்மையாக இருக்கும் பட்சத்தில். புரிகின்றதா பஹத்?”

“புரிகிறது மின்னா, நமது நடை ஒரு யுகத்தில் இருந்து இன்னொரு யுகத்திற்குச் செல்லக் கூடியது. உன் கால்கள் நடந்துநடந்து புதைந்து போயுள்ள ரகசியங்களை மிதித்துப் பிளந்துவிடுகின்றன மின்னா.”

“கால்களால் நடந்து ரகசியங்களைப் பிளப்பது படிமமான வார்த்தைதான். அப்படி ஒரு யுகத்திற்குப் போக முடியுமானால் என்னோடு பொம்மைகளை மட்டும்தான் எடுத்துச் செல்வேன் பஹத்.”

“நடந்தது போதுமென்றால் திரும்பலாமா? பனிக்காற்று குளிரத் தொடங்குகிறது” என்றான் பஹத்.

“சரி திரும்பி நடப்போம்” என்றாள்.

“நம்மைப்போல பொம்மைகள் தூரம் நடப்பதில்லை. பொம்மைகள் நடப்பது குறைவுதான். அவற்றின் கால்கள் என்பது தோற்றம் மாத்திரமே. கிட்டத்தட்ட பொய்க்கால்கள் மாதிரி. பொம்மையின் உடலில் அச்சுறுத்தக் கூடியதும் கால்கள்தான். நமது சௌகரியங்களுக்கு ஏற்றவாறு அவற்றின் கால்களை உறுதியற்றதாக வடிவமைத்து விடுகிறோம்.

“இப்படித்தான் இரு கால்களும் ஒட்டிய நிலையில் நிற்கும் பிளாஸ்டிக் பெண் பொம்மையொன்றுதான் நான் முதல்முதல் விளையாடியது. அதன் உடம்பு ரோஸ் நிறமானது, நீல நிறக் கண்கள். அன்று மிக மலிவான விலையாக இருந்திருக்கும். ஊரில் அப்போது சிறுவர்கள் விளையாட்டு பொம்மையை - ‘பாவப்பிள்ளை’ என்று தான் சொல்வது வழக்கம். மெல்லிய பாவப்பிள்ளை கிடைத்த பொழுதிலிருந்து என்னோடு ஒருபொழுதும் விலகாமல் பார்த்துக்கொண்டேன். உறங்குவது, குளிப்பது, சாப்பிடுவது என எல்லா நேரத்திலும் என்னுடனேயே இருக்கும். மீதி நேரம் ஜன்னல் கட்டில் நிறுத்திவைப்பேன், வெளியே புதினங்கள் பார்க்கட்டுமென்று. பாவம் கால்களைப் பிரித்து அதற்கு ஊன்றி நிற்க முடியாததால் அடிக்கடி கீழே விழுந்துவிடும் தெரியுமா...”

“பார்ப்பதற்குச் சிரித்த மாதிரித்தான் எப்பவும் இருக்கும். அதிகமான சிரிப்புமில்லை.. குறைஞ்ச சிரிப்புமில்லை... ஒரு நடுத்தரச் சிரிப்பு. நடுத்தரமானவர்கள் அப்படித்தான் சிரிக்க வேண்டும். அவர்களுக்கு அப்படித்தான் சிரிக்கவும் தெரியும் இல்லையா பஹத்? சிலநேரம் மனஸ்தாபங்கள் எனக்கும் பாவப்பிள்ளைக்கும் வரும்தான். அதெல்லாம் ஏன் என்றால் ஒழுங்காச் சாப்பிடுவதில்லை, ஒழுங்காகக் குளிப்பது இல்லை என்று வரும் கோபங்கள்.

ஒழுங்காய் இருப்பதன் மேலான பயங்களால் ஆனது எங்களின் சண்டை சச்சரவுகள். அதற்காகவெல்லாம் எனது குட்டிப் பாவப்பிள்ளை சிரிக்காமல் விட்டதில்லை பஹத்.”

“ம்.. சரி, அப்புறம் என்ன நடந்தது சொல்லேன்.... உன் பாவப்பிள்ளை கஷ்டம் தாங்காமல் ஓடிவிட்டதா என்ன?”

“அப்படி இல்லை பஹத். அதன் பிறகு நாளாகநாளாகப் பாவப்பிள்ளையின் கன்னம் கொஞ்சம் கறுத்து உதடும் வெடித்து குதிகாலிலும் சிறு ஓட்டை விழுந்து.... மண்ணுக்குள்ளேயும் புழுதிக்குள்ளேயும் கிடந்ததை நான் பார்த்தேன். ஸ்கூல் விட்டு வந்து சோப்போட்டுக் கழுவினாலும் ஊத்தை போவதில்லை. உம்மா அடிக்கடி அதைக் குப்பையோட போட்டுவிடுவாங்க எனக்குத் தெரியாமல். நான் பிறகு எப்படியோ தேடி எடுப்பேன். அன்றும் அப்படித்தான் என் பாவப்பிள்ளையை காணவில்லை.

வீடு முழுக்கத் தேடினேன். தேடித்தேடிப் பார்த்து வரும்போது, வீட்டின் பின்னுக்குக் கூட்டிவச்சி எரிச்ச சருகுக் குப்பைக்குள்ள கழுத்துவரை பத்தினமாதிரி என் பொம்மை கிடக்கு. ஓடிப்போய்ப் பார்த்தேன். மூக்கும் சிரிப்பும் அப்படியே இருக்கு. அதன் இரு கண் குழிகளாலேயும் புகை வந்தபடியே இருக்கு. நான் பார்த்தேன்.

என்னோட ‘அபோஷனான’ குழந்தையும், அந்த பொம்மையைப் போலதான் சாம்பல் நிறமாக இருந்தது தெரியுமா? அதிகமான சிரிப்புமில்லாம... குறைஞ்ச சிரிப்புமில்லாம... நடுத்தர சிரிப்போட.”

“இதோ தண்ணி குடி” என்றான் பஹத். சிப்ஸ் பக்கெட்டை உடைத்து அவளிடம் நீட்டினான். பேசித் தீர்க்கும் முடிவிலிருந்தாள் என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது. அந்த வெசாக் சோடனை வீதியிலிருந்து ஒளிர்ந்து கனலும் ஒரு பொம்மைதான் தன்னோடு வருகிறதா என ஒரு கணம் பஹத் அதிர்ந்தான்.

அந்தப் பாதை நெடுக அவர்களது தோற்றம், மிக நிதானமான நடை விபரிக்க முடியாத தொலைவுகளுக்குள் செல்லும் வழிகளுக்கூடாகத் தொடரும் பயணம் போன்றுமிருந்தது. நிர்ணயிக்கப்படா இலக்குகளுக்குச் செல்லும் நடையாக அவ்வளவு புதியதாக அந்த இரவு அவர்களுக்கு மாத்திரம் அனுமதித்த வீதியில் நடந்து கொண்டே இருந்தார்கள்.

---

நன்றி காலச்சுவடு - ஏப்ரல் 2017 இதழ்

Sunday, 19 February 2017

வரையறைகளுக்கு அப்பால்………
கனன்று ஒளிவிடும் அம்பையின் கதை எனும் நெருப்பு
--------------------------------------------------------------------------------------------------------------------------
- அனார்




ஆயிரத்தியொரு இரவுகள் எனும் அராபிய நெடுங்கதையை வெஞ்சினமும் அதிகாரமும் கொண்ட மன்னன் ஷெஹ்ரியாருக்கு அவனது மரண தண்டனை தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் பெண்களைக் காப்பாற்றும் பொறுப்போடு கதை சொல்லிக் கொண்டிருப்பாள் ஷெஹர் ஸாத் எனும் பெண். அவளுடைய கதைகள் தற்காப்புக் கேடயம் மட்டுமல்ல, அவளிடமிருந்த முதலும் கடைசியுமான ஆயுதமும்கூட. அவளது கதைகள் தான் வியூகமாக செயற்பட்டன. அங்கே எவருடைய சாணக்கியமும் உதவவில்லை. பெண்ணொருத்தி ஒவ்வொரு இரவும் முடிவற்ற கதையைச் சொல்லி சொல்லி இரவுகளை நிறுத்தி வைத்திருந்தாள். மரணத்தை நிறுத்தி வைத்திருந்தாள். கதைகள் மரணத்தை திரும்பிச் செல்ல வைப்பவையா? காலத்தை மொழியின் வலைக்குள் பிடித்துக்கொள்ளும் வல்லமை கதைகளுக்கு உண்டா? ஷெஹர் ஸாத் எனும் பெண் கதைகளாலான ஆயுதமாவாள். அம்பையின் ஆயுதமானது சுயமுள்ள பெண்ணின் ஆன்மாவிலானதாகும். தேடல்களாலும் உணர்ச்சிகளாலும் புடம் போடப்பட்ட ஆயுதம்.

என்னால் இந்தக் கடின உழைப்பாளியின் சிறுகதைகளை வாசித்து விளங்கிட முடியுமா என்னும் திகைப்பே ஆரம்பத்தில் தோன்றியது. உணர்ச்சி நிலைகளின் மொத்தக் கொதிப்பை அம்பை எங்கிருந்து பெற்றிருக்கக் கூடும்?. கால காலமாக நெருப்பெரியும் சமையலறை அடுப்புகளில் இருந்தா? சாமி அறையின் தீபங்களில் இருந்தா? வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருக்கும் பெண்ணின் வயிற்றில் இருந்துதானே எல்லாப் பெண்களும் பிறந்திருக்கின்றார்கள். அதனால் நெருப்பு, கொதிப்பு என்பது தன் தாய் வயிற்றிலிருந்தும் தாய் வீட்டிலிருந்தும் பெற்றுக் கொண்டதாக இருக்கலாம்.

சிறுகதைப்பரப்பில் அம்பையின் தனித்துவமான அடையாளமானது ஆழ வேரூன்றியதும் முன்னிலை வகிப்பதுமாக இருக்கின்றது. முன்னோடியான புனைகதையாளராகவும் ஆண் பெண் என்ற பிரிப்புகளுக்குள் நிற்காதவராகவும் எல்லைகள் வரையறைகள் அல்லது பேணப்பட்ட வழக்கங்களுக்கு அப்பாலுக்கு அப்பால் பயணித்தவராகவும் அம்பை தன்னை நிறுவ எழுத்துக்களினூடே தொடர்ந்து முயன்று வருபவர். காட்டின் இருளில் மெல்லக் கசியும் மூலிகை வாசனையை காற்று சிறுகச் சிறுக அவிழ்த்து விசிறுவதுபோல கதைகளின் வெளியில் அம்பை சலனங்களை தோற்றுவிக்கின்றார். ஒரு வகை இசைத் தன்மையான அந்த அலைகள் அவரது மொழியைத் தூக்கிப்பறக்கின்றன. நெகிழ்த்தியும் இறுக்கியும் பிணைந்தும் விலகியும் தோன்றி மறையும் ஈர அலைகளாக.

மனங்களின் உள்ளார்ந்த அடுக்குகளில் கீறப்பட்ட சுவரோவியங்களின் சிதிலங்களையும் தாண்டி கலைத்துவமான சித்திரங்களை ஊடுருவி நோக்கும் அவரது பார்வையை பாராட்டி வியப்பதா அல்லது வாசகருக்கும் அதனைப் புரியவைக்கும் அம்பையின் கலை மனதை வியப்பதா?

சொல்லாமல் சொன்னவற்றின் வெம்மையும் அந்தரத்தில் விடப்பட்ட மௌனவெளியின் குளிர்விறைப்பும் எம்மை நிச்சலனத்தின் முன் நிறுத்துகின்றன.

பெண்ணின் முழுப் பரிமானத்தையும் கதை சொல்பவரின் ஆழ்ந்த கலைத்துவ தரிசனங்களையும் வாழ்க்கையை பிரக்ஞையோடு எதிர்கொண்ட ஒற்றைப் பெண்னொருவரின் சாகசத்தையும் அனுபவங்களுக்கும் கற்பனைகளுக்கும் இடையே காணும் உருமாற்றங்களையும் அம்பையின் எழுத்துக்கள் நிகழ்த்துகின்றன.

பண்பாட்டின் கலாச்சார நிர்ப்பந்தங்கள் தொன்மமான ஆதிக்க திணிப்புகள் என்பன அம்பையின் கதைகளில் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன. வாசகர்களை பல்வேறு சமயங்களில் குற்றவுணர்ச்சிக்கு தள்ளுகின்றன. தொன்று தொட்டு முன்னெடுத்து வரும் பழக்கங்களை ஒடுக்குமுறைகளை சுக்குநூறாக உடைத்தெறிகின்றன.

அம்பை தன் சிறுகதைகளில் வலியுறுத்துவது தன் நம்பிக்ககையின் அடிப்படையிலான அற உணர்வே ஆகும். நன்மை, தீமை என்ற பிரிப்புகளற்ற இடத்தில் அம்பை தன் கதைகளோடு நிற்கிறார். அதுதான் அவரது பெருமிதம். தன்னை அதனூடாகவே எழுத்திற்கு அர்ப்பணித்திருப்பவர் அம்பை.

அம்பை பெண்ணை அதன் முழு அர்த்தத்தில் வெளிக்கொணருகின்ற அதே சமயத்தில் பெண்ணானவள் தன்சுயத்தை மீட்டு தக்க சமயத்தில் முடிவுகளை எட்டக்கூடிய ஆற்றலுள்ள பெண்களையும் அடையாளப்படுத்துகின்றார். அவரது கதைகளில் அவர் முன்வைக்கும் கேள்விகள் முக்கியமானவையாகும். பெண்கள் பற்றி இருந்த மதிப்பீடுகளை எழுத்தின் மூலமும் செயற்பாட்டின் மூலமும் மீள் நிர்ணயம் செய்கிறார். விரிவான சமுக மாற்றங்கள் இடம்பெற்ற இன்றைய காலத்திலும் ”அம்மா ஒரு கொலை செய்தாள்”, ”காவுநாள்” போன்ற கதைப்பெண்கள் நம் கண்முன்னே மாறுதலற்றும் ஒலிகளற்றும் நம்மருகிலேயே உள்ளனர். எழுத்தாளரின் நுணுக்கமான இந்தப்பின்னல் இணைப்பு அவரது சுயம் சார்ந்த ஆளுமையின்பாற்பட்டது.

கற்பு பற்றிய கற்பிதங்களும் கருத்து நிலைகளும் பால் தன்மை பற்றிய புரிதல் கொண்ட அம்பையின் கதைப் பெண்கள் கொண்டுள்ள தீர்மானங்கள் அன்றைய நாளில் எவ்வளவு சவால் மிகுந்ததாக இருந்திருக்கும். அம்பை தனது ஆரம்ப நாட்களில் அவர் பெண்ணாக இருப்பதற்காகவே மிகுந்த புறக்கணிப்புகளை எதிர்ப்புகளை எதிர் கொண்டிருப்பார் என்பதை பூரணமாக உணரமுடிகிறது.

”நிலவைத் தின்னும் பெண்” சிறுகதையில் அப்பெண் எதிர்கொள்ளும் காதலும் துரோகமும், பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான அனுபவப் பகுதியைக் காண்பிக்கின்றது. கதைநிகழும் கணமும் களமும் கண்முன்னே துல்லியமாகத் தெரியும் விதம் அந்நியோன்யமான உணர்வு மொழியில் எழுதியிருப்பார். மேலும் இக்கதையில் பெண் உடல்பற்றிப் பேசுகிறார். நுண்மையான பட்டு நூலிழைகளால் அங்கே பெண் உடலை பின்னுகிறாள். பழுக்கக் காச்சும் தீயின் கங்குளால் நமக்கும் அவ்வனல் வெம்மை தாவுகின்றபடியாக.

இவ்வளவு தூரம் பெண் உடலைத்திறந்து தரிசிக்க முடியுமா என அதிசயிக்க வைக்கின்ற வகையில், நிலவைத் தின்னும் சிறுகதையில் ஒரு முதிர்ந்த பெண் இளம் பெண்ணுக்கு எழுதும் கடிதத்தின் சிறு பகுதியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 

“அதனால் எல்லாவற்றையும் பிரி சகு. கலை – கலைஞர், இரவு – நிலவு, பகல் – சூரியன், ஒலி – இசை எல்லாவற்றையும் பிரி. எதற்குள் எதுவெனத் தெரியாமல் கலந்து கிடக்கும். அதைப் பிரிக்கும் போது அவை ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது தெரியும். பெண் – தாய்மை இதையும் பிரி. ஆமாம் அதையும். அவை பிரிக்க முடியாமல் இணைந்தவை என்னும் பிரமை இருக்கிறது. அதை உடை, அப்போதுதான் யதார்த்தத்தை’யும் தற்செயல் நிகழ்வையும் பிரிக்க முடியும். அனுபவத்தையும் வலியையும் பிரிக்க முடியும். இரண்டுக்கும் வேறு வேறு இலக்கணங்கள்”.

பெண் உடல் ஒரு ஆயுதம். அதே நேரம் ஒரு திறவுகோல் தான் எனும் புதையல் அங்குண்டு. முடிவற்ற விரிவும் புதிருமான சுழற்சியைக் கொண்டிருப்பது. கனவுக்குள் சுநதந்திரத்தை உருவாக்குதல் என்பதும் பின் கனவை வாழ்தலாகவும் பின்னும் அதனைக் கடந்து உயர சீறிப் பாய்கின்றவளாகவும் உடலே பெண்ணைப் பழக்குகின்றது. ’கைலாசம்” கதையில் வரும் பெண் கமலம் அற்புதமான பெண்மை நிறைந்தவள்.

“அவனை மணந்துகொண்டு இருபத்தைந்து ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் காதல் புரியவில்லை, கைலாசம் மோகம் புரிவது எளிது. காதல் அப்படியல்ல. பெண் – ஆண் உறவு மிகவும் சிக்கலானது. அதில்தான் எத்தனை நெருக்கம், எத்தனை விலகல்? எத்தனை மர்மம், எத்தனை வெளிப்படை? எத்தனை வன்முறை, எத்தனை மென்மை? எத்தனை இறுக்கம், எத்தனை குழைவு? எத்தனை ஆதுரம், எத்தனை ஆவேசம்? காதலிக்கும் நபரையே விசம் வைத்துக் கொல்லலாம் என்று ஆத்திரம் வருகிறது. தணிகிறது. பந்தம்போல் கட்டிப்போடுகிறது. கூடுபோல் ஆசுவாசம் தருகிறது. தகிக்கிறது. குளிர்விக்கிறது. என் உடலை ஒரு பிரதியாகப் பார்க்கும் போது, அது ஒரு நிலைத்த பிரதியாக இல்லை கைலாசம்“

பெண்ணுக்குரிய காமம் என்பது முதலில் முழுமையான கலைத்துவத்தைக் கோருவது. ஆண் பெண் உறவுச் சிக்கல்களில் உள்ளிருக்கும் சுயநலங்கள் தவறுகள் துரோகம் அதனால் விழையும் மனநெருக்கடிகள் விடுவிக்க முடியாதபடி ஏற்படும் நீண்டகால உளச்சிக்கல்கள் இந்தக் கதைகளில் அம்பை உணர்த்தும் இடங்கள் அவரை வித்தியாசப்படுத்துகின்றன. அம்பையின் நோக்கம் இத்தகைய போக்குகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதாகவோ தவிர்க்க முடியாமல் இவ்விதம் நேர்ந்துவிடும் அனுபவங்களை வெளிப்படுத்துவதாகவோ இருக்கின்றது என நாம் கருதமுடியும்.

”அம்மா ஒரு கொலைசெய்தாள்” – கதையை ஒரு ஆணினால் என்றைக்குமே எழுத முடியாது. பருவம் என்றால் என்ன என்ற கேள்வியை யோசிக்காத சிறுமிகள் இல்லை. அந்தக் கேள்வியில் இருந்துதான் சிறுமிகளின் குதூகலங்களின் மீது விழும் முதலாம் வெட்டுக்கள் தொடங்குகின்றன. சிறுமிகள் பெரிய மனுஷிகளாகிவிடுகின்ற பிற்பாடு தேவதைகள் போன்ற அம்மாக்கள் மனித அம்மாக்களாக ஆகிவிடுகின்றனர். காரணமற்ற குற்ற உணர்ச்சி தாழ்வுமனப்பான்மையில் உள்ளொடுங்குதல் நிர்ப்பந்தங்களுக்கும் கண்டிப்புகளுக்கும் ஆட்படத் தொடங்கிவிடும் நிலைக்கு பருவத்தின் ஆரம்பத்திலேயே பெண் தள்ளப்படுகிறாள் அதனையே இக்கதை வலுவாகப் பேசுகிறது. அம்பையின் பிற கதைகளில் இடம்பெறுகின்ற அம்மாக்கள் பெருமளவு மதிப்பிற்குரிய அம்மாக்களே. அதைவிடவும் வெகுசாதாரண அம்மாக்களும் இருக்கவே செய்கின்றனர். அவர்களது கதைகளை அம்பையைத் தொடர்ந்துவரும் இன்னொரு பெண் எழுதக்கூடும். 

பெண்கள் சார்ந்துள்ள தந்தையர் கணவன்மார் சகோதரர்கள் தோழமை பற்றிய கணிப்புகள் பல்வகையான மனித உறவு நிலைசார்ந்த சந்தர்ப்பங்களை சிறுகதைகளில் பிராதனப்படுத்துபவராக இருக்கிறார். மேலும் ஆணின் ஆதிக்கம் அரசியல் சுயநல எதிர் நடத்தைகள் பற்றியும் வாழ்வின் மேடு பள்ளங்களை தடுமாற்றங்களை துரோகத்தை தன் ஆன்மாவினால் ஆராய்கின்றார். பாத்திரங்களின் மனதிலிருந்து வாசிப்பவரின் மனதிற்கு கூடு பாய்வதான ஒரு மாயப்பரிமாற்றத்திக்கு உள்ளாகின்றோம். பெண் வாழ்வதற்கும் வாழ நினைப்பதற்கு இடையே ”முறிந்த சிறகுகள்” கதைக்குள் ஒருத்தி அல்லாடுகின்றாள். அவள் மீள முடியவில்லை என்றானபின் நம்மாலும் மீளமுடிவதுமில்லை.

அம்பையின் கதைக்களங்கள் பல்வேறு அம்சங்களோடு விரிவுடையன. அவரது பயணங்கள் அத்தகையதாக அமைந்துள்ளது. சவாலான பல விடயங்களையும் அதனூடாக அனுபவங்களையும் படிப்பினைகளையும் பயணங்கள் அவருக்குக் கொடுத்திருக்கின்றன. இத்துணிச்சல்மிக்க பயணங்கள் வேறு பெண்களுக்கு எளிதில் கிடைத்துவிட முடியாததுமாகும். அம்பை தன்னை தயார்படுத்திய நிலையில் வைத்திருக்கின்றார். அம்பையின் பயணங்கள் நாம் செல்லாத பயணங்களாகும். பெண் எழுத்தாளர்களுக்கு பயணங்கள் வாய்ப்பது மிக அரிதான ஒன்றாகவும் தமிழ்ச்சூழலில் காணப்படுகின்றது. அம்பை தன் தொடர்ச்சியான பயணத்தின் மூலம் ஏற்கனவே நிறுவப்பட்ட அனைத்து கட்டுமானங்களையும் தகர்த்தவர். அவரது தொகுப்புகளில் பயணம் பற்றிய கதைகளை தனியான வகைப்படுத்தலைக் கொண்டும் நோக்கலாம்.

பயணங்கள் பற்றி ”வற்றும் ஏரியின் மீன்கள்” சிறுகதையில் அம்பை குறிப்பிடுகிறார். “பயணங்கள் அவள் வாழ்க்கையின் குறியீடாகிவிட்டன. இலக்குள்ள பயணங்கள், நிர்ப்பந்தப் பயணங்கள், திட்டமிட்டு உருவாகாத பயணங்கள், திட்டங்களை உடைத்த பயணங்கள், சடங்காகிப்போன பயணங்கள் “ என விபரிக்கிறார்.

வீதிகள் சனநெரிசல் வாகன தரிப்பிடங்கள் சாரதிகள் ரயில் நிலையங்கள் நிலத்தின் காலநிலைகள் என கதையோட்டத்தோடு பிரதானப்படுத்துகின்றார். சாதாரண மனிதர்களிடம் ஏற்படும் உறவு நட்பு அனைத்தையும் பயணக் கதைகளில் அம்பை எழுதுகிறார். இயல்பாகவே அம்பையிடம் உள்ள அவதானம். ஒருவகை கரிசனம் பெண் சார்ந்தே இருக்கின்றது. ஒவ்வொரு கதைகளுடனும் உறவாடும் திறன் என்பது ஒரு ஆணுக்கு ஏற்படும் வாசிபனுபவத்தை ஒத்ததல்ல பெண்ணுக்கு நேரும் வாசிப்பு. வாசிப்பவரின் மன உணர்தலுக்கு எந்தளவான ஆற்றல் இருக்க முடியுமோ அவ்வளவிற்கு இக்கதைகளின் தனிமை வெளி, மௌனங்கள் இலக்கிய ஆற்றல் என்பனவற்றை. ஒருவர் உள்வாங்க முடியும். சில வேளை கதைகளின் விபரிப்பு அல்லது கதையளத்தல் சற்றுக் கூடிவிட்டது எனத் தோன்றினாலும் அது கதையின் ஆன்மாவை நட்டாற்றில் விட்டுச்செல்லவில்லை. 

”ஒரு இயக்கம் ஒரு கோப்பு சில கண்ணீர்த்துளிகள்” சிறுகதை முக்கியமான பதிவும் படைப்புமாகும் இக்கதையின் விபரிப்பும் மன உணர்வுகளும் கதை சொல்பவரினது மனச்சாட்ச்சியின் குரலும் “சதாத்ஹசன் மண்ட்டோ“ வைப் போன்றது.. ஸகீனாவின் அனுபவங்கள் உணர்த்தும் அரசியல் முக்கியமானது. கதையில் காலா என்பவரது முதிர்ந்த பாத்திரம் செல்வி சாரு என்கின்ற நபர்கள் என நீளமான இக்கதையில் பல கிளைக்கதைகளையும் இந்து முஸ்லிம் அரசியல் கலவரங்களின் பிரதிபலிப்பையும் இருமதங்களிடையே உருவாக்கப்பட்ட பிளவுகள் உக்கிரமான நிகழ்த்தப்பட்ட கலவரம் வலுவான சித்தரிப்புகளாக இருக்கின்றது.

““அது முஸ்லிம் அதைக் கொன்னுட்டேன்“ என ஒரு குழந்தை தன் பொம்மையை உடைத்துவிட்டுச் சொல்லும் என்கின்ற பகுதியும், “நான் பச்சைப்புடவை வாங்கியபோது, இந்த துலுக்கப் பச்சையை ஏன் வாங்கினாய்? என்று அம்மா கூறியது“ என வரும் பகுதியும் பல்லாயிரம் அர்த்தம் கொள்கின்றது.

இதே சிறுகதையில் அபூர்வமான மனிதராக வரும் காலாவிடம் கதைப்பெண் உரையாடும் ஒரு பகுதி இருக்கிறது. “சும்மா இருங்கள் காலா. உங்களைப் போன்றவர்கள் வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களை காந்தியுடன் கழித்து, சுதந்திரத்துக்காக உழைத்த உங்களைப் போன்றவர்கள், அதன் பின்பு ஏன் ஆசிரமங்களிலும், சிற்றுர்களிலும் முடங்கிக் கொண்டீர்கள்? அரசியல் லாபம் வேண்டாம் என்று ஏன் தீர்மானித்தீர்கள்? காந்திமேல் வைத்த பாதிப் பக்தியை நாட்டின் மேல் வைத்திருந்தால் நம் நாட்டு அரசியல் மாறி இருக்கும். யார் உங்களை இந்த தியாகம் செய்யச் சொன்னது ? 1942இல் இந்த வீதிகளில் நீங்கள் எல்லாம் பேட்டை ராணிகள்போல் ஊர்வலம் போனீர்கள். யாருக்கும் பயப்படாமல். நீங்கள் எங்களுக்குத் தந்திருப்பதெல்லாம் இந்த பிம்பங்களைத்தான். கொடியை உயர்த்தியபடி நீங்கள் போன ஊர்வலப் புகைப்படங்களை எத்தனை தடவை நாங்கள் பார்த்து புல்லரித்திருப்போம்? என் ஆத்திரத்தைக் கிளப்பாதீர்கள். நீங்களும் உங்கள் கதறும் ராட்டையும், காந்தியும் வெறும் சின்னமாகி விட்டீர்கள்“.

வன்முறைகளது ஒரு வகை முகமும், அதற்கு நட்பும் தோழமையும் உறவுகளும் பலியாகும் இடங்களும் அம்பை விபரித்துச் செல்லும் இடங்களில் நமது இயலாமையும் கரிய புகையாய் கவிகின்றது. போரும் கலவரங்களும் நசுக்குகின்ற அனைத்து நிலங்களுக்கும் மனித இனங்களுக்கும் பொருத்தப்பாடுகளைக் கொண்டுள்ளது இச்சிறுகதை.

இத்துடன் இணைந்ததாகவும் வேறு கோணங்களில் அம்பையின் உணர்வோட்டங்கள் பயணிக்கின்றன. ” பயணம் 20”, ”பயணம் 7” இந்தக் கதைகளும் கூட சிந்திக்கத்தக்க மத, இன முரன்பாடுகள் பற்றிய பக்கங்களை அடையாளப்படுத்துகின்றன.

இந்தத் தொகுப்பில் பல சிறந்த கதைகள் விடுபட்டுள்ளதற்கான. காரணம் எனக்கு கொடுக்கப்ட்ட நூலின் பக்க வரையறையாகும். அம்பையின் தொகுப்புகளான ”சிறகுகள் முறியும்”, ’வீட்டின் மூலையில் சமையல் அறை”, ”காட்டில் ஒரு மான்”, ”வற்றும் ஏரியின் மீன்கள்”, ”கறுப்புச் சிலந்தியுடன் ஒரு இரவு” – இவ் ஐந்து தொகுப்புகளிலிருந்தும் சிறுகதைகளை தேர்ந்திருக்கிறேன். அதாவது ”அடவி”, ”புனர், பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்”, ”கூடத்தில் துள்ளிய கன்றுக்குட்டி” என பல நல்ல சிறுகதைகளை இணைக்க முடியாமல் விடுபட்டுப்போனது தனிப்பட்ட வகையில் எனக்கு மிகுந்த கவலையைத் தருவன.. அவற்றை வாசகர்கள் தேடிப்படிக்க முடியும் இவ்வாறான சில கதைகள் விடுபட்ட நிலையில் அந்தேரி மேன்பாலத்தில் ஒரு சந்திப்பு என்ற தொகுப்பிலிருந்து கதையை தேர்வு செய்யாமல் தவிர்த்திருக்கிறேன்.

வேறொருவருக்கு அவரின் ரசனையின் அடிப்படையில் இத்தொகுப்பில் விடுபட்ட கதைகளில் சிறப்பான கதைகள் இருப்பதாகத் தோன்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்கின்றேன்.

தலை கீழாக உயரத்திலிருந்து வீழும் வாள் சிலரை குத்தி விடுகிறது. சிலரின் அருகே விழுகிறது. சிலர் தப்பி விடுகின்றனர். சிலருக்கு வெட்டுத் தழும்புகள் வாழ்க்கை அப்படிப்பட்ட கூரான வாள் எனில், அம்பையின் கதைகள் நமக்குத் தடுத்தாளத் தெரிந்திருக்க வேண்டுமென்பதையே வலியுறுத்துகின்றன.

அம்பை பரந்த நோக்கமும் கூர்மையான வெளிப்பாடும் வலுவான தீர்மானங்களும் கொண்டவர். அம்பையின் சிறுகதைகள் வாசிப்பவரை ஆழநேசித்து வலுப்படுத்தும் சக்தியை கொண்டிருக்கின்றன. ஷெஹர் ஸாத்தின் கதைகளைப்போல மரணத்தை நிறுத்தி வைக்கும்நிர்ப்பந்தங்களில் இருந்து எழுந்தவையல்ல. அம்பையின் கதைகள். பெண்ணானவள் கொல்லப்படுகின்ற ரணங்களிலிருந்து மீண்டெழுந்து சொல்லப்பட்டவை. பெருமிதம் கொள்ளத்தக்க தனித்துவமானவர். நிராகரிக்க முடியாதபடி தன்னை பரிபூரணமாக அர்ப்பணித்தவர். சமகாலத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் அம்பையின் மொழியானது எந்த இருட்டிலும் கனன்று ஒளிவிடும் உயிர் நெருப்பு…….

--

அம்பையின் “அம்மா ஒரு கொலை செய்தாள்“ நூலுக்கு எழுதிய முன்னுரை.

வெளியீடு - காலச்சுவடு