சாம்பல் பொம்மை
----------------------------------------------------------------------------------------------------------
- அனார்
“நினைவு கொள்வதுதான் மீட்சியின் ரகசியம்” பஹத் கூறியபோது...
“யார் சொன்னாங்க அப்படி’’ என்று மின்னா கேட்டாள்.
“அது யாரோ சொன்னதுதான். யூதப் பழமொழி. எங்கோ வாசித்த ஞாபகம்” என்றவன் மின்னாவின் கையிலிருந்த புத்தகப் பைகளை வாங்கிக்கொண்டான்.
“ஏதாவது சாப்பிடுறியா, இல்ல இன்னும் கொஞ்ச தூரம் நடந்திட்டே இருப்போமா” மின்னாவின் கண்களைக் கூர்ந்து பார்த்துக் கேட்டான்.
“நடக்கத்தானே வந்தோம். நடப்போம்” என்றவளிடம் “சரி, உனக்கு போதுமென்ற வரைக்கும்” என்றான். சிரித்துக்கொண்டே கடைகள் நிறைந்த தார்வீதியில் இறங்கி ஓரமாக நடந்தார்கள்.
பின்னிரவு என்பதால், பூட்டப்பட்ட ஒரு சில கடைகளின் கண்ணாடி வழியாகத் தெரிகின்ற அந்தப் பொம்மைகளைப் பார்த்தபடியே மின்னா கேட்டாள்,
“இந்த பொம்மைகளைப் பார்த்தால் உனக்கு என்ன தோணும்?”
“என்ன தோணனும், அழகா இருக்கும்”
“இப்ப பார்க்கும்போது யாரையோ எதிர்பார்த்துட்டு நிற்கிற மாதிரி தெரியுது.
வேறெதுவும் எனக்குத் தோணுவதில்லை. உனக்கு ஏதாவது தோணுதா என்ன?”
“நீ ஒரு பொம்மைப் பைத்தியமாச்சே” எனச் சீண்டிய பஹத்தை திரும்பிப் பார்த்து புன்னகையால் தாக்கினாள். அப்போது மின்னாவின் கூந்தல் சிறிது முகத்தை மூடியது. கோதிய விரல்கள் மட்டும் இருளின் நிழலில் ஏதோ மந்திரம் போன்று மின்னின.
“நான் பொம்மைகளைக் காதலிப்பவள்தான். பார் அதன் தனிமையிலுள்ள உக்கிரம் வேறெங்கும் இல்லை. இந்த இரவையும் வெறிச்சோடிப்போன வீதியையும் வெறித்தபடி அசையாமல் நிற்கின்றன. ஆனால் மனிதர்கள் யாரும் பொம்மைகளைப் பொருட்டாக மதிப்பதில்லை. பொருட்படுத்துவதுமில்லை.”
“நீ பொம்மைகளை எவ்வளவோ மதிப்பவள்தானே, அது எனக்குத் தெரியும். பொம்மைகளிடம் குழந்தை போல மாறிவிடுவாய்.”
“குழந்தைகள் அப்படியல்ல பஹத். குழந்தைகளுக்கு அவை பொம்மைகள் போலவே தோன்றுவதில்லை. அதனால்தான் பொம்மைகளுடன் குழந்தைகள் உரையாடு கின்றார்கள். மனிதர்களுடன் இருப்பதைக் காட்டிலும் மகிழ்ச்சியாக இருப்பது குழந்தைகள் பொம்மைகளோடு விளையாடும்போதுதான். நீ கவனித்ததில்லையா?”
தூரம் நடந்து வந்துவிட்டார்கள். இருள் சூழ்ந்து நிரம்பிய வீதியில் நடக்கின்றபோது விரைந்து இரைச்சலுடன் எதிர்ப்படும் வாகனங்களின் ஒளி முகத்தில் படும் போதெல்லாம் மின்னாவும் ஒரு பொம்மை போலவே தோன்றினாள்.
“நமது சுயங்களையே தொந்தரவுக்குள்ளாக்கும் வகையில் ஒருவர் மீது அதீத பிரியத்தை எது உருவாக்குகின்றது? அன்பு என்கிற விசித்திரமான பைத்தியக்காரத்தனமான உணர்வொன்றை நான் அறிந்ததில்லை. பைத்தியங்களால் உருவாக்கப்படும் எந்தப் பேரன்புமே பரிசுத்தமானதும் கேள்விகளற்றதுமாகின்றது. இரு வகைப் பிரிவுகள் அங்கு இருப்பதில்லை. பிரிவுகளுக்குள்ளாக, வகைப்படுத்தலும் கிடையாது. அத்தகைய ஒன்றுதான் பேரன்பான நேசம். வாழ்வின் சில பகுதிகளை முழு அர்த்தப்பாடும் கொண்டதாக நம்மை உணரச் செய்கிறது, பஹத்.”
“உன்னோடு நடப்பதன் இதம் இந்தக் காற்றின் தொடுகை மிதக்கும் பனிப்புகைக் குளிர். அற்புதமான இரவு இது”
“பேசுகிறாயா? இல்லை இது கவிதையா?” என மின்னா கேட்டுச் சிரித்ததைப் பார்த்தபடியே அவளது வலது கைவிரல்களைத் தனது கைகளால் கோத்துக்கொண்டான்.
“பேசுவதும் ஒருவகையில் மனதிலுள்ள பாதைகளால் நம் எண்ணங்கள் நடப்பதுபோலதான் இருக்கிறது. கண்ணுக்குத் தெரிந்த பாதைகளில் கால்களும் அறியப்படாத பாதைகளில் மனமும் நடக்கின்ற இந்த நடை அற்புதமானதுதான்” என்றான்.
“நீ சொல்வது சரியானது ஒரு வகையில். மனதுக்குள்ளாகவும் உலவுகின்றோம்.”
“அப்படியும்தான்...”
“மனம் திரும்பிப் பார்க்க விரும்புகின்றது. இருவரும் ஒரே சமயத்தில் இரு காலங்களில் நடப்பது போன்று இருக்கின்றது” என்றாள் மின்னா.
“வரும் வழியில் கண்ணாடி வழியே பார்த்த அந்த பொம்மையை வாங்க வேண்டும் பஹத்”
“அது சரி. இந்த வயதிலும் பொம்மைகளை வாங்கிவாங்கிச் சேர்ப்பது பற்றி யாரிடம் சொன்னாலும் சிரிப்பார்கள்” என்றான்.
“சிரிப்பது லேசானது. அதிலும் மற்றவர்களைப் பார்த்துச் சிரிப்பது அதைவிட லேசானது. யாருக்கும் தெரிவதில்லைதானே. உள்ளே என்ன நினைக்கின்றோம் என்பதெல்லாம் தெரிவதில்லை. பல சமயங்களில் நமக்கு நாமே அச்சம் தருகின்றவர்களாக மாறி விடுகின்றோம் பஹத்.”
“எனக்குத் தோன்றும், பொம்மைகளுக்குப் பசிப்பதில்லையா? அவைகள் அடம் பிடிப்பதே இல்லையா? நமக்கெல்லாம் விளையாடப் பொம்மைகள் தேவை என்பதை யார் முதலில் யோசித்திருப்பார்கள்? இப்படி...”
“என்ன நமக்கெல்லாமா!” என்ற பஹத்தின் கைகளைச் சற்றே கிள்ளினாள். நோவு தரும் அவனது பாவனையைப் பொருட்படுத்தாமல் “இவ்வளவு அதிர்ச்சி எதற்கு, நீ பொம்மைகளை விளையாடியதில்லையா?” என்றாள்.
“விளையாடி இருக்கிறேன்தான்” என்றான்.
“ஆனால் அது விளையாட்டு மட்டுமில்லை என்பது உனக்குத் தெரியுமா? அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும். கோழிக்குஞ்சு பொம்மை வச்சிருந்தேன். ரொம்பச் சின்னது. உள்ளங்கைக்குள்ள பொத்தலாம். அப்படிக் குட்டியானது. எங்க ஊர் கொடியேத்தப் பள்ளியில் மாமா வாங்கித் தந்தது. ஆனா அதை யாருமே விளையாடத் தரமாட்டாங்க. அலுமாரியில் ஒளிச்சிவச்சி பூட்டிடுவாங்க. வெள்ளித் திறப்பொன்றினால் முறுக்கித் தரையில் விட்டா கொக்கொக்கென கொத்தி குருணல் சாப்பிடும். தூரம் போகும் திரும்பி வரும் சிவப்புக் கோழி, அதற்கு மஞ்சள் சொண்டு. பார்க்க அவ்வளவு வடிவா இருக்கும்.”
“அதை ஏன் அலுமாரியில் வைப்பான்?”
“உடஞ்சிடக் கூடாது என்றுதான். நான் எங்கேயாவது விழுந்து காயம் வந்துட்டென்றால் இல்லாட்டி காய்ச்சல் என்றால் இருந்து விளையாடத் தருவாங்க. அதுக்காக நமக்கெல்லாம் அடிக்கடி காய்ச்சல் வருமா என்ன. பிறகது எங்குதான் போனதோ காணவே இல்ல. தேடித்தேடிப் பார்த்துட்டு விட்டுட்டேன்.”
“மின்னா, உனது கோழி செத்துவிட்டதோ என்னவோ?” என்றான் குறும்பாகச் சிரித்துக்கொண்டு.
“எந்த பொம்மையும் நோய் கண்டு மரணிப்பதில்லை. நாம்தான் கொன்று விடுகிறோம்” என்றாள்.
“மின்னா, நீ என்ன கவிதையா சொல்கிறாய்?” என்று என்னைக் கேட்டுவிட்டு, “நீதான் இப்போது கவிதை மாதிரிப் பேசுகிறாய்” என்ற பஹத்தைப் பார்த்தாள்.
“நாம் இருவரும் பேசுவது கவிதை மாதிரித்தானே இருக்கும்.’ கவிதை உணர்வுகள் பொம்மைகளோடான நேசிப்பை போலத்தான்” என பரவசமாகக் கூறினாள்.
“ஊரையே தாண்டி வந்துவிட்டோமோ இது வெசாக் காலமல்லவா? வீதி முழுக்கச் சந்தனக் கூடுகள், மரங்கள் எல்லாமே ஒளி விளக்குகளாய் மாறியிருக்கிறது. இரவையும் நிலவையும் பிரதானப்படுத்தி நடக்கும் இப்படியான சோடனைகள் எனக்கு விருப்பமானது. பாரேன் இரவில் தீப்பிழம்பு என ஒரு குதிரையை அலங்கரித்திருக்கிறார்கள். ஒளிபொருந்திய யானையும் குதிரையும் உலவும் இந்த இரவுக்குள் நாம் இருவரும் பொம்மைகளைப் போல மாறிவிட்டோமோ?’’ என்ற பஹத்தின் குரல் கொண்டாட்டமானதாக மாறியது.
“வெசாக் காலமென்றால் இந்த விகாரை வீதி நெடுக ஒளி வலைகளால் போர்த்தப்பட்டது போல இருக்கும். அங்கே தெரியும் வாவியில் மூன்று செந்தாமரைகள் நீருக்குமேல் வைத்திருப்பார்கள். வாவி இருட்டில் பெரிய செந்தாமரைகள் அற்புதமாகவிருக்கும். நீரின் இருள் மேலே கனன்று ஒளிரும் செந்தாமரைகள்” என்றான் பஹத்.
“அப்படியா! அழகாகச் சொல்கிறாய்” என்றாள் மின்னா.
“உன்மத்தமான தனிமைக்குள்ளாக நிற்பதுதான் பௌர்ணமி. அந்த நிலவோடு புத்தனுக்குள்ள பந்தம்தான் உலகின் பரிசுத்தமான அன்புணர்ச்சியென எனக்குத் தோன்றுவதுண்டு. குறைவதுமல்ல கூடுவதுமல்ல. முழுமையாக இருப்பது... தன்னிறைவானது நிலவொளி.”
அந்தக் குரல் கனிந்து மென்மையாகிக் கரைந்தது. அந்தத் தருணத்தில் ஏதோ கனவினை நினைவூட்டுவது போல.
திடீரென மின்னா சொன்னாள். “நேற்றிரவு தூக்கத்திலிருந்து எழும்பித் தண்ணீர் குடிக்க வந்தேனா? பிரிட்ஜின் மேலே எப்போதும் இருக்கும் என் கரடி பொம்மை கீழே விழுந்து கிடந்தது. அப்படி அதைப் பார்ப்பதற்குக் கடும் கஷ்டமாக இருந்தது. இரவு கொஞ்ச நேரம் வீட்டுக்குள்ளே அதை இடுப்பில் வைத்தபடி நடந்து கொண்டிருந்தேன், யாரின் கண்ணிலும் படாமல். இப்படிப் பல இரவுகளில் நடப்பதுண்டு. தனித்த கரடி பொம்மையும் நானும் நீண்ட நேரம் ஆளையாள் பார்த்தபடி இருப்போம். ஏன் எனக்கு இப்படித் தோணுகின்றது எனத் தெரியவில்லை பஹத். கிட்டத்தட்ட இதுவுமொரு பைத்தியத்தனம் என எண்ணுகிறாயா என்னைப் பார்த்து?”
“அப்படியில்லை. நீ பேசுவதைக் கேட்டுக்கொண்டே நீளும் வீதியைப் பார்த்தபடி நடப்பது ஒருவகை உணர்வுக் கலவைகளை என்னுள் உருவாக்குகின்றது மின்னா. உண்மைதான். நீ சொல்வது போன்றே இதுவும் ஒரு பைத்திய ருசி. யாருக்குள்ளும் இந்தப் பைத்தியத்தின் ருசி இருக்கும் தான்.”
“ஆனால் அவர்களுக்கே அது தெரிவதில்லை. உற்றுக் கவனிப்பதற்குக் கலைமனம் தேவைப்படுகின்றது. உன்னிடம் இவ்விதமான செயல்கள் இருக்கிறதா?”
“ம்.. ஒன்றிரண்டு சொல்லக்கூடியது. சிலது நான் பகிர்ந்துகொள்ள விரும்பாதது. மாலை வேளைகளில் தூங்கி எழும்பினால் எனக்கு அழ வேண்டும் போல் இருக்கும். மனம் அப்படியே ஒரு வகையாகக் கனிந்து கரையும். நிச்சயம் ஒரு ஆறுதலான சொல் அல்லது அணைப்பு முத்தம் ஏதாவது ஒன்று தேவைப்படும் அப்போது. இந்த இரவு என்பதே எல்லாத் திரைகளையும் விலக்கக் கூடியதுதான் இல்லையா? நம்மை நிர்வாணிகளாக்கக் கூடியதும்கூட” சொல்லி நிறுத்தினான் பஹத்.
“எனக்கு இரவின் தனித்த தார் வீதி பிடிக்கும். அதிலும் தாழ்ந்தும் உயர்ந்தும் போகும் நீண்ட வீதி. கொஞ்சம் தூறல் மழையிலோ பனியிலோ ஈரமாகி இருக்கின்ற வீதிகள் ஒருவகை வெறுமைக்குள் ஆழ்ந்துபோன அதன் கருமை இப்படி இப்படியாக. உனக்குத் தெரியுமா பஹத்? நீ இல்லாத சில நாட்களில் நான் வெறுப்பவர்களையும் நேசிக்கத் தொடங்கினேன். உனது அடையாளங்களை யாரிடமாவது தேடினேன். எவரிடமிருந்தாவது நான் கேட்டுணரும் உனது குரலின் ஒரு துணுக்கு ஒரு நாளுக்குப் போதுமானதாக இருந்தது. உனது நிறத்தை ஒத்த நிறத்தைக் காணும் உடலை வாஞ்சையுடன் கவனித்தேன். பின் கழுத்தும் மெல்லிய தாடி பரவிய கன்னங்களும் அதன் சாயல்கள் கொண்ட ஆண்களை அவசரமின்றிக் கடந்தேன். அந்தக் கணங்களில் உள்ளே பெய்யும் மழைத்தூறல் இதமாக இருந்தது. குளிர்ந்தது. உனக்கே தெரியாமல் உன் மீதான காதலில் திளைப்பது காமுறுவதன் வழியாக கிட்டாத ஆனந்தங்களை அடைவது வெளிப்படையான உறவின் ஆழத்தையும் உணர்வையும் ரகசிய எண்ணங்கள் வழியாக உன்னை அடைவதன் பேரின்பங்களையும் அடைந்தேன். பால் முற்றிய பருவங்களில் தலைசாயும் சோளகக் காடுகளின் கதிர்களைப் பசுந்தோல் விலகி மஞ்சள் தெரியத் தொடங்குவது போன்றே என் செயல்களும் தானாகப் பருவமடைந்துவிட்டன.
“நீ நீயாக இருந்த எல்லா நேரங்களிலும் நான் நானாக இல்லாமல் சமன் குலைந்தேன். உன்னை நான் விரும்புகின்றபடியான பொம்மையாக நினைப்பதுண்டு. அதையும் மீறி நீ எனும் செயலற்ற வடிவமாக உன்னை அணுகுவதற்கு அது வசதியானது. மோகம் காதல் துணை என்பதெல்லாம் எனக்கு மட்டுமேயான ரசனைகளால்தான் முழுமை பெறுகின்றது. அதற்கு உயிரும் சதையுமாகவிருக்கும் உன் உடம்பு அவசியமற்றது. அந்தரங்கத்தின் மிக அபூர்வ வெளிகளில் நாம் பொம்மைகளாக உலவுவதாகவே எனக்கு நம்ப முடிகின்றது. பொம்மைகளாக இருப்பது அச்சுறுத்தல் இல்லாதது. அங்கே முடிவுகளின் தீர்மானங்களின் அபத்தங்கள் எதுவும் இருப்பதில்லை. பொம்மைகளுக்குப் பொம்மைகளாக இருப்பதுதானே அர்த்த பூர்வமாகவிருக்கும்.”
“நிறுத்து மின்னா! நீ பேசுகிறாயா! உளறுகிறாயா! நீயேன் பொம்மையாக இருக்க வேண்டுமென விரும்புகிறாய்? அதில் ஏன் என்னையும் சேர்த்துக்கொள்கிறாய். நாம் மனிதர்கள். நீ பெண் நான் ஆண் நாம் ஒரு போதும் பொம்மைகளல்ல.”
“அதனால் என்ன இப்போது பஹத். மனிதர்கள் எனில் பொம்மைகளைவிட எந்த வகையில் மேம்பட்டு இருப்பவர்கள்? அவர்களுக்கு உயிர் இருப்பதாலா? அவர்களுக்கு அதிகாரம் இருப்பதாலா? அவர்களுக்கு பால்த் தன்மை இருப்பதாலா இல்லை அவர்கள் துரோகமும் யுத்தமும் கொலைகளும் அழிவுகளையும் அறிவைக் கொண்டு செய்வதாலா? இவர்கள்தான் மனிதர்கள் எனில் இதில் பெருமை கொள்வதற்கு என்ன இருக்கிறது. பொம்மையாக இருப்பதே மேலானதல்லவா? உனக்குத் தெரியாது பஹத். நீ என்னைப் போலவே பொம்மையாகிவிடு. உன்னுடன் நான் வாழ்வதற்கு நீ என்பதும் அவசியமற்றது. அதாவது நான் பொம்மையாக இருக்கும் பட்சத்தில். புரிகின்றதா பஹத்?”
“புரிகிறது மின்னா, நமது நடை ஒரு யுகத்தில் இருந்து இன்னொரு யுகத்திற்குச் செல்லக் கூடியது. உன் கால்கள் நடந்துநடந்து புதைந்து போயுள்ள ரகசியங்களை மிதித்துப் பிளந்துவிடுகின்றன மின்னா.”
“கால்களால் நடந்து ரகசியங்களைப் பிளப்பது படிமமான வார்த்தைதான். அப்படி ஒரு யுகத்திற்குப் போக முடியுமானால் என்னோடு பொம்மைகளை மட்டும்தான் எடுத்துச் செல்வேன் பஹத்.”
“நடந்தது போதுமென்றால் திரும்பலாமா? பனிக்காற்று குளிரத் தொடங்குகிறது” என்றான் பஹத்.
“சரி திரும்பி நடப்போம்” என்றாள்.
“நம்மைப்போல பொம்மைகள் தூரம் நடப்பதில்லை. பொம்மைகள் நடப்பது குறைவுதான். அவற்றின் கால்கள் என்பது தோற்றம் மாத்திரமே. கிட்டத்தட்ட பொய்க்கால்கள் மாதிரி. பொம்மையின் உடலில் அச்சுறுத்தக் கூடியதும் கால்கள்தான். நமது சௌகரியங்களுக்கு ஏற்றவாறு அவற்றின் கால்களை உறுதியற்றதாக வடிவமைத்து விடுகிறோம்.
“இப்படித்தான் இரு கால்களும் ஒட்டிய நிலையில் நிற்கும் பிளாஸ்டிக் பெண் பொம்மையொன்றுதான் நான் முதல்முதல் விளையாடியது. அதன் உடம்பு ரோஸ் நிறமானது, நீல நிறக் கண்கள். அன்று மிக மலிவான விலையாக இருந்திருக்கும். ஊரில் அப்போது சிறுவர்கள் விளையாட்டு பொம்மையை - ‘பாவப்பிள்ளை’ என்று தான் சொல்வது வழக்கம். மெல்லிய பாவப்பிள்ளை கிடைத்த பொழுதிலிருந்து என்னோடு ஒருபொழுதும் விலகாமல் பார்த்துக்கொண்டேன். உறங்குவது, குளிப்பது, சாப்பிடுவது என எல்லா நேரத்திலும் என்னுடனேயே இருக்கும். மீதி நேரம் ஜன்னல் கட்டில் நிறுத்திவைப்பேன், வெளியே புதினங்கள் பார்க்கட்டுமென்று. பாவம் கால்களைப் பிரித்து அதற்கு ஊன்றி நிற்க முடியாததால் அடிக்கடி கீழே விழுந்துவிடும் தெரியுமா...”
“பார்ப்பதற்குச் சிரித்த மாதிரித்தான் எப்பவும் இருக்கும். அதிகமான சிரிப்புமில்லை.. குறைஞ்ச சிரிப்புமில்லை... ஒரு நடுத்தரச் சிரிப்பு. நடுத்தரமானவர்கள் அப்படித்தான் சிரிக்க வேண்டும். அவர்களுக்கு அப்படித்தான் சிரிக்கவும் தெரியும் இல்லையா பஹத்? சிலநேரம் மனஸ்தாபங்கள் எனக்கும் பாவப்பிள்ளைக்கும் வரும்தான். அதெல்லாம் ஏன் என்றால் ஒழுங்காச் சாப்பிடுவதில்லை, ஒழுங்காகக் குளிப்பது இல்லை என்று வரும் கோபங்கள்.
ஒழுங்காய் இருப்பதன் மேலான பயங்களால் ஆனது எங்களின் சண்டை சச்சரவுகள். அதற்காகவெல்லாம் எனது குட்டிப் பாவப்பிள்ளை சிரிக்காமல் விட்டதில்லை பஹத்.”
“ம்.. சரி, அப்புறம் என்ன நடந்தது சொல்லேன்.... உன் பாவப்பிள்ளை கஷ்டம் தாங்காமல் ஓடிவிட்டதா என்ன?”
“அப்படி இல்லை பஹத். அதன் பிறகு நாளாகநாளாகப் பாவப்பிள்ளையின் கன்னம் கொஞ்சம் கறுத்து உதடும் வெடித்து குதிகாலிலும் சிறு ஓட்டை விழுந்து.... மண்ணுக்குள்ளேயும் புழுதிக்குள்ளேயும் கிடந்ததை நான் பார்த்தேன். ஸ்கூல் விட்டு வந்து சோப்போட்டுக் கழுவினாலும் ஊத்தை போவதில்லை. உம்மா அடிக்கடி அதைக் குப்பையோட போட்டுவிடுவாங்க எனக்குத் தெரியாமல். நான் பிறகு எப்படியோ தேடி எடுப்பேன். அன்றும் அப்படித்தான் என் பாவப்பிள்ளையை காணவில்லை.
வீடு முழுக்கத் தேடினேன். தேடித்தேடிப் பார்த்து வரும்போது, வீட்டின் பின்னுக்குக் கூட்டிவச்சி எரிச்ச சருகுக் குப்பைக்குள்ள கழுத்துவரை பத்தினமாதிரி என் பொம்மை கிடக்கு. ஓடிப்போய்ப் பார்த்தேன். மூக்கும் சிரிப்பும் அப்படியே இருக்கு. அதன் இரு கண் குழிகளாலேயும் புகை வந்தபடியே இருக்கு. நான் பார்த்தேன்.
என்னோட ‘அபோஷனான’ குழந்தையும், அந்த பொம்மையைப் போலதான் சாம்பல் நிறமாக இருந்தது தெரியுமா? அதிகமான சிரிப்புமில்லாம... குறைஞ்ச சிரிப்புமில்லாம... நடுத்தர சிரிப்போட.”
“இதோ தண்ணி குடி” என்றான் பஹத். சிப்ஸ் பக்கெட்டை உடைத்து அவளிடம் நீட்டினான். பேசித் தீர்க்கும் முடிவிலிருந்தாள் என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது. அந்த வெசாக் சோடனை வீதியிலிருந்து ஒளிர்ந்து கனலும் ஒரு பொம்மைதான் தன்னோடு வருகிறதா என ஒரு கணம் பஹத் அதிர்ந்தான்.
அந்தப் பாதை நெடுக அவர்களது தோற்றம், மிக நிதானமான நடை விபரிக்க முடியாத தொலைவுகளுக்குள் செல்லும் வழிகளுக்கூடாகத் தொடரும் பயணம் போன்றுமிருந்தது. நிர்ணயிக்கப்படா இலக்குகளுக்குச் செல்லும் நடையாக அவ்வளவு புதியதாக அந்த இரவு அவர்களுக்கு மாத்திரம் அனுமதித்த வீதியில் நடந்து கொண்டே இருந்தார்கள்.
---
நன்றி காலச்சுவடு - ஏப்ரல் 2017 இதழ்
No comments:
Post a Comment