Monday, 17 October 2011

அம்பாரை மாவட்ட சமகாலக் கவிதைகளில் பெண் 

அனாரின் “எனக்குக் கவிதை முகம்" - ஓர் வாசிப்பு 


- எம். எம். சௌதியா 

(தமிழ் விஷேடதுறை, தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில்) 

---------------------------------------------------------------------------------------------------------

பெண் சமூகத்தின் உளத்துடிப்பு, சமூக அசைவுக்குகம் அவளுக்குமான தொடர்பு ஆழமானது. இருந்த போதிலும் பெண்ணிலை வாதம் ஏன் தோன்றியது, அது நாளுக்கு நாள் தீவிரமடைந்து செல்ல என்ன காரணம் என்ற வினாக்கள் ஒட்டுமொத்த சமூதாயத்தின் முன்னும் தொடர்ந்தும் எழுகின்ற வினாக்கள் இன்று தீவிரமடைந்து செல்லும் இப்பிரச்சினைக்கு பல வழிகளிலும் தீர்வு தேடிக் கொண்டிருக்கிறது, சமூகம். அவ்வழிகளுள் பெறுமதி மிக்க ஒரு வழிமுறையாகவே எழுத்துத் துறை குறிப்பாக கவிதைத் துறை காணப்படுகின்றது. 


பெண்ணை மையப்படுத்திய பல கவிதைத் தொகுதிகள் இக்காலத்தே வெளிவருகின்றன. அந்த அடிப்படையில் அம்பாரை மாவட்டத்தைப்பற்றிய தனியான அலசலில் குறிப்பிடத்தக்க ஒரு கவிஞராக அனார் காணப்படுகிறார். இவரும் ஒரு பெண் என்பது இங்கு சிறப்பான கவனத்திற்குரியதாக அமைகிறது. அனார் எனும் புனைப் பெயர் கொண்ட இவரது இயற்பெயர் இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம். கிழக்கிலங்கையில் சாய்ந்தமருதில் பிறந்தவர். “எனக்குக் கவிதை முகம்"  இவரது இரண்டாவது தொகுதி. 


அம்பாரை மாவட்ட சமகாலக் கவிதைகள், குறிப்பிடக் கூடியளவு பெண் பற்றிப் பேசுகின்றன என்று கருத முடியும். இவற்றுள்ளே ஒரு வித்தியாசமான பார்வையாக அனாரின் கவிதைகள் அமைந்துள்ளன. இவ்வகை வித்தியாசமான உணர்வு நிலைப்பட்ட பல கவிதைகளை இத்தொகுப்பினுள்ளே காணக்கிடக்கிறது. இவர் ஒரு பெண் என்ற ரீதியில் பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் பற்றியும், அவர்களுக்கெதிரான வன்முறைகள் பற்றியும் பேசும் போது இவரது பாடு பொருளும், மொழிக் கையாளுகையும், கவிதை ஏற்படுத்துகின்ற உணர்வு நிலையும், கோர்க்கப்பட்டுள்ள சொற்களும் கூர்மையான அர்த்தத்துடனும், புதுமையான சிந்தனைத் தொனியுடனும் ஓங்கி நிற்பதை இவரது கவிதைகளிற் காண முடிகிறது. 


இத்தொகுப்புள்ளே இடம் பெற்றுள்ள “அரசி" என்ற கவிதையை வாசிக்கும் போது எம்முள்ளே இத்தொனி உயர்ந்து ஒலிப்பதை எம்மால் உணர முடியும். 


“உன் கனவுகளில் 

நீ காண விரும்புகின்றபடியே 

நான் அரசி 

...................... 

அடிபணிய அல்ல 

கட்டளையிடப் பிறந்தவள் 

ஆணையிடுகிறேன் சூரியனுக்கு” 


என்று சூரியனுக்கு கட்டளையிட்டு மூதாட்டிகளின் பாரித்த பெருமூச்சுக்களை வருடி விடுமாறு பறவைகளை பணிக்கும் இப்பெண்ணரசி பெண்களுக்கெதிரான கொடுமைகளுக்கு முடிவு கட்ட தன் வாளை கூர் தீட்டுகிறாள். அப்போதுதான் சுயபலம் பொருந்திய தேவதைகளாக பெண்கள் மாறி பேரிகைகளாய் குலவையிட்டு விடுதலை பெறுகிறார்கள். இனி, 


“நான் 

நான் விரும்புகின்றபடியான பெண் 

நான் எனக்குள் வசிக்கும் அரசி"


என ஆசிரியர் பெண்ணின் சுதந்திரத்தை பெண்ணின் கையிலேயே ஒப்படைத்துவிடுகிறார். 


பொதுவாக எல்லாக் கவிஞர்களினதும் உணர்ச்சி, கற்பனைகளிலிருந்தும் வித்தியாசப்பட்டு நிற்கிறது. “பெண்பலி" என்ற கவிதை கவிஞர்கள் சந்தோசம் இழையோட உணர்ச்சி பூர்வமாக வர்ணிக்கும் ஆண், பெண் உறவுத் தருணத்தில் ஒரு பெண் பலிபீடம் ஏற்றப்படுகிறாள் என்பதாக அனாரின் நோக்கு அமைகிறது. இத்தருணம், ஒவ்வொரு பெண்ணும் ஆசைகளுடன் சேமிக்கும் கனவு என்றுகூட சொல்லலாம். ஆனாலும் சில பெண்களுக்கு அத்தருணம் பலிபீடமாக அமைகின்ற சூழலும் இச்சமூதாயத்தே இல்லாமலில்லை. இதனை மிக நுணுக்கமான முறையில் உரைக்கிறது இக்கவிதை. 


“அது போர்க்களம் 

................................ 

அது பலிபீடம் 

அது பெண்ணுடல் 

............................... 

என் முன்தான் நிகழ்கிறது 

என் மீதான கொலை"


உள்ளக் குமுறல், உளத்துடிப்பு இருபாலாருக்கும் ஒரே விதமானதுதான் என்றாலும் பெண்ணுடையது என்பதால் மரியாதை இருப்பதில்லை என்ற இக்கவிதைக் குரல் சமூகத்தில் காணப்படும் பல பெண்களின் முறைப்பாட்டுக் குரலே. 


இத்தொகுப்பில் இடம்பிடித்துள்ள “நான் பெண்" என்ற கவிதை பெண்ணின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எடுத்துரைப்பதாக அமைந்துள்ளதை உணர முடிகிறது. ஒரு பெண்ணானவள் உலகத்தின் மனித உயிர்களை தன் மடியேந்திய பின் தான் இந்தப்பூமி ஏந்த வைக்கிறாள். எல்லா மனிதர்களுக்கும் மூலமான பெண்ணின் மகத்துவத்தை பறைசாற்றுவதாக இக்கவிதை அர்த்தமிக்க சொற்கள் கோர்க்கப்பட்டு பின்னப்பட்டுள்ளமை சிறப்பு. 


“ஒரு காட்டாறு 

ஒரு பேரருவி 

ஓர் ஆழக்கடல் 

ஓர் அடை மழை 

நீர் நான்


உடல் காலம், உள்ளம் காற்று, கண்கள் நெருப்பு, நானே ஆகாயம், நானே அண்டம் ஆகையால் எனக்கென்ன எல்லைகள், 


நான் இயற்கை 

நான் பெண்"


என நிமிர்ந்து நிற்கிறாள். பாரதியின் புதுமைப் பெண்ணை ஞாபகப்படுத்திவிடுகிறது இக்கவிதைத்தொனி. வாசிக்கும் ஒவ்வொருவர் உணர்விலும் பெண்ணின் சிறப்பை கொட்டிவிடுவதாக அமையும் இக்கவிதையின் உணர்வுநிலை ஒவ்வொரு பெண்ணுக்கும் நிமிர்வைத் தருவதாக அமைகிறது. 


பெண்ணின் கனவுகள் புறக்கணிக்கப்படும் போதுதான் அவள் தாக்கப்படுகிறாள். கனவுகள் அவளது உரிமை. ஆனால் இன்றைய சமூகச் சூழலில் பல பெண்கள் தங்கள் கனவுகளை அடுப்புச் சாம்பலுக்குள் புதைத்து வாழ்கிறார்கள். இவ்வாறான பெண்களின் உள்ளக் குமுறல்களை இலகுவான மொழிநடையில் தீட்டிக் காட்டுவதாக “ அறைக்கு வெளியே அலையும் உறக்கம்" என்ற கவிதையை உணர முடிகிறது. இரவு, துணிகளை மடித்து அலுமாரியில் அடுக்கி வைத்தாயிற்று, அறை விளக்குகளை குறைத்தாயிற்று, மறக்காமல் இரு தலையணைகளையும் அருகருகே இணைத்தாயிற்று. இனி, 


“விசமேறிய இரவின் பானம் 

என் தாகத்தின் முன் உள்ளது. 

ருசிகள் ஊறிய கனவுகளுடன் 

என் உறக்கம் 

அறைக்கு வெளியே அலைகிறது"


இவ்வாறுதான் இன்று பல பெண்கள் தங்கள் திறமைகளை மறைத்தும் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 


சமூகத்தின் சாபக்கேடு சீதனம். அதனது எச்சம் முதிர் கன்னிகள். இச்சமூகப் பிரச்சினை பற்றி உள்ளடங்கிய ரீதியில் என்றாலும் தெளிவாகப் பேசுகிறது “பூக்க விரும்புகின்ற கவிதை" ஒரு கன்னியே “என்னை எடுத்துக்கொள்" என வேண்டுவதாக அமையும் இக்கவிதை முதிர் கன்னிகளின் உச்சக்கட்ட மனக் குமுறல்களின் பிரதிபலிப்பாக அமைகிறது. 


“மேகங்களுக்கு மேலேறிச் சென்று 

நிலவின் கதவைத் திறந்து 

எடுத்துக் கொள் 

கொஞ்சமும் குறையாமல் என்னை"


இவ்வாறு பரந்துபட்ட ரீதியில் அல்ல என்றாலும் முக்கியமான பல பெண்கள் சார் பிரச்சினைகளை பற்றிப் பேசுகின்ற அனைத்துக் கவிதைகளுக்குப் பின்னாலும் ஒரு தீவிர நிலையை உணர முடிகிறது. அனாரும் ஒரு பெண் என்ற ரீதியில் அவரால் உணர்வு ரீதியாக புரிந்து எழுத முடிந்திருக்கலாம். கற்பனை, உயர்ந்த குறிக்கோள், உண்மையான உணர்வுகள் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ள படைப்பான இக்கவிதைத் தொகுதி அம்பாரை மாவட்ட சமகால வெளியீடுகளில் கவனத்திற்குரியது. அதே நேரம் இவ்வாசிப்பு நேரிய அம்சங்களையே கவனயீர்ப்புச் செய்திருக்கிறது. எதிர் நிலை கருத்துக்களுக்கும் நிறையவே இடமிருக்கிறது. 


( மரங்கொத்தி – தமிழ்ச் சங்கம், தெ.கி.ப. , ஒலுவில், இலங்கை )

---------------------------------------------------------------------------------------------------------

அனாரின் “எனக்குக் கவிதை முகமும்“ 

கட்டவிழ்க்கப்பட்ட ஆண்களின் முகமும் 


- திசேரா (இலங்கை) 

------------------------------------------------------------------------------------------------------

“என் உலகமே 

துயர்களைத் தாங்கிய பாலைவனம் 

வாழத் துடிக்கும் நானோ 

விடியலை விழுங்கிய மலட்டு இரவுபோல் 

மௌனமாய் மல்லுக்கட்டுகிறேன்”

( ஊமைக்காவியம் – ஓவியம் வரையாத தூரிகை) 

ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் மட்டும் இருப்பதாய்த்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உள்ளுணர்வுகளும், நிறைவேறாத இலட்சியங்களும், இலக்குகளும், வெளிப்படுத்த நினைக்கும் மன ஆதங்கங்களும் ஒவ்வொருமுகமாய் பல முகங்களை தோற்றுவித்துக் கொண்டே இருக்கும். இதில் பல சூக்கும உலகில் சஞ்சரிப்பவை. 


மற்றவர் முகங்கள் (உணர்வு வெளிப்பாட்டுத்தளம்-முகம்) நோக்கப்படுதலை, அறிய முனைதலை பெரும்பாலு தவிர்த்துக் கொண்டே வருகிறோம். இதில் சில செளகர்யங்களும் இருக்கின்றன. மன உளைச்சல்களும், தாக்கங்களும் நம்மை பீடித்துவிடக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வாகக்சகூட இருக்கலாம். 


உணர்வில் இருந்துவிரியும் கவிதை முகம் பல உளைச்சலை எண்ண வியாபகத்தை இன்னமும் கூடுதலாக ஏற்படுத்திக் கொண்டே இருக்கக் கூடிய பல் படிமங்களைக் கொண்டிருக்கும். வெளிப்பாட்டு மொழி – சொல்லல் முறை பலதிசைப்பட்ட இயக்கத்தை தோற்றுவிக்கும். இத்தகைய மொழி நடையுடைய கவிதைகள் தனி இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வதுடன் வாசக மன உலகை வசீகரிப்புச் செய்யக் கூடியது. 


அனாரின் கவிதை முகம் தனிமையின் விரக்தியை வெளிக்காட்டி நின்றாலும், அத்தனிமை உணர்வு காலத்தைத் தாண்டிய ஒரு வெளியை உருவாக்கி இருக்கின்றது. இவை உண்டாக்கும் மன அதிர்வுகள் தொடர்ந்தும், ஒன்றிலிருந்து ஒன்றாக நீர்வட்ட அலைகளை உற்பத்தி செய்துகொண்டே செல்லக்கூடிய மொழியை தன்வசம் கொண்டிருப்பது ஈழத் தமிழ்க் கவிதைக்கான வீச்சம் ( சேரன் கூறுவதுபோல ). ஆண்மையச் சமூகம் பெண்களை விளிம்பு நிலைக்கு தள்ளி நிறுத்தி இருக்கின்றது. அவர்களின் இருப்பு-சூழல் உணர்வுகள் மறுவாசிப்புச் செய்யப்படாமல் அதனதன் நிலைகளில் கிடக்கின்றன. தமிழ்ச் சூழலுக்குள் அம்பையின் வருகையும் அதன் பின்னரான மாலதி மைத்ரி, குட்டிரேவதி, சல்மா, உமா மஹேஸ்வரி, லீனா மணிமேகலை, சுகிர்தராணி போன்றோரின் வருகைகள் தம் நிலைப்படுத்தலுக்கான போராட்ட களமாக கவிதை, புனைவுகள் மாறிவந்து கொண்டிருக்கும் நிலையில், ஈழம் அத்தகையதொரு பெண்ணியம் சார் போராட்ட இலக்கியங்களை முற்றாக எதிர்கொள்ளவில்லை. சில அமைப்புகள் மூலம் இவை செயல்வடிவத்துடன் முன்னெடுக்கப்பட்டாலும் பெண் வன்முறைக்கான பல பக்கங்கள் பார்க்கப்படாமலேயே கிடக்கின்றன. இப்பக்கங்கள் அருவருப்பான குரூரமானதாக இருப்பினும் அவர்களுக்கெதிரான ஒடுக்கு முறையும், ஒதுக்குமுறையும் உடைக்கப்பட வேண்டியது. 


சித்திரவதைகளும், சித்திரிப்புகளும், அழகுபடுத்தலும்-அவதானிப்பு, சிதைப்பு என உடல் பலதரப்பட்ட நிலைகளில் பிரதானப்படுத்தப்படுகின்றபோது பெண்ணுடலின் மீதான வன்முறையும், அவமானமும் பேசப்படுவதில் பயம் நிலவிக் கொண்டே இருக்கின்றது. 


அனாரின் “மேலும் சில இரத்தக் குறிப்புகள்” கவிதையில் மாத உதிரம் பற்றி பூடகமாக வரிகள் இடம்பெற்றதற்கே முஸ்லீம் ஆண் கவிஞர்கள் சிலர் வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்ததை தோழி ஒருத்தி சொன்னபோது அதிரவேண்டி இருந்தது. பிச்சி கவிதை பிரசுரமானபோது “சல்மா மாதிரியே அனாரும்” என்கிற ரீதியில் எத்தனை கதைகள் உலாவின -பெருவெளி. 


தீராநதி- ஏப்ரல் 2005 சுகிர்தராணியின் பேட்டி “நான் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் ஏதோ எழுதுகிறது என்று விட்டு விட்டவர்கள், ஊக்கப்படுத்தியவர்கள் இப்போது தடைவிதிக்கிறார்கள். எழுதுவதை நிறுத்திவிடச் சொல்லி தொடர்ந்து என் வீட்டில் வற்புறுத்தி வருகிறார்கள்”. இது தமிழ்ச் சூழலுக்குள் நிகழும் அடக்குமுறை. “ஆண் எழுதினால் அவனுடைய அனுபவமா எனக்கேட்பதில்லை பெண் எழுதினால்... லீனா மணிமேகலையின் பேட்டி.... 


இது புனைவுகளை விளங்காத-உணராத தன்மை. பெண் என்பவளை தோலுரித்துப் பார்க்கும் கூரிய பார்வையை, படைப்பை-உணர்வை புரிய பயன்படுத்துவதில்லை. இவ் அபத்தம் அனாரின் கவிதை முகத்துக்கும் நேர்ந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. கட்டவிழ்த்தல்-பிரதியை மறுவாசிப்புக்கு உட்படுத்தல் என புறம்பானதொரு தளத்தில் அணுகவும் முடியும். 


தனிமையின் சிந்தனையும் இருப்பை புரியப் பண்ணவேண்டிய தேவையும் சிறந்த வெளிப்பாட்டுத்தியை கொணரும் இத்தனிமை தன் சூழல் மையத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டதினாலும் விளிம்பு நிலைப்படுத்தப்பட்டதினாலும் இருக்கலாம். வேதனை-விரக்தி-புரியப்படாத உணர்வு. காதல் வெடித்து சிதறுகையில் பெருகும் குழம்பு, புறக்கணிக்கப்பட்ட மலையில் வீரியத்தை-வியாபகத்தை புரியச் செய்யும். தான் மட்டும் வளர்வதாய், வளர வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த மரத்தை-மனிதனை வேதனைப்படுத்தும் தனக்குள்ளேயே அவமானம் கொள்ளச் செய்யும். 


தனிமைதான் பலம், தனிமைதான் சிந்தனை, தனிமைதான் குழப்பம், தனிமைதான் எல்லாமும். அறிவின் பலமும் நம்மை-பிறவற்றை உணரப் பண்ணுவதும் அதுதான். இத்தனிமையின் முகம் பல நினைவலைகளை எழுப்பும். அதிலும் பெண்ணுக்கான இத்தன்மை ஆழ்மன உணர்வு தொடர்பிலான பல கற்களை நீருள் எறியும் ஒவ்வொரு கல்லும் எண்ணற்ற அலைகளை உருவாக்கும் தனிமை உயிரிக்கும் வாசகபுலத்துக்கும். இதைத் தான் கண்களும் முகமும் சித்திரிக்கும். 


“எவ்விதமாகவும் 

நான் தோன்றியிருக்கக் கூடும் 

உனக்கெதிரில் 

எவ்வேளையும் பிசகாமல் 

நீ இருக்கிறாய் என்முன் 

எப்போதும் இல்லாத ஒன்றென”


எவ்விதமாகவும் நான் தோன்றியிருக்கக் கூடும். அது அவரவர் உளநிலையை பொறுத்தது. இதையிதை இப்படித்தான் இப்படி மட்டுந்தான் பார்க்க வேண்டுமென்ற வரையறை இல்லை. இப்பார்வைப் புலத்தை அறிவும் எண்ணமும் சிந்தனை அனுபவம் ஒன்றிணைந்து தீர்மானிக்கும். 


பிச்சியும், மேலும் சில இரத்தக் குறிப்புகளும் பெண்ணுடலைப் பேசுதல் குறித்தான அதே பின்னணியில் நோக்கினால் அதைவிடச் சாட வேண்டிய துரும்புகள் தொகுப்பினுள்ளேயே கிடைத்திருக்கும். விலகி நிற்பவன், நிழலின் அலறல், ஒளியில்லாத இடங்கள் தங்கள் உடற் பற்றி பெண்கள் பேசக்கூடாதா ? அல்லது முஸ்லீம் பெண்கள் பேசக்கூடாதா ? புனிதம் பெண்களால் மட்டுந்தான் காப்பாற்றப்பட வேண்டுமா ? 


ஒரு முகம் வெளிப்படுத்தும் விடயங்கள் ஆயிரம். அழகு-காதல்-ஏக்கம்-காமம்-சிந்தனை-கவலை-ரசனை. இம்முக அழகியலை உணர சமாந்தரத் தன்மையுடன் பயணிக்கக்கூடிய அவற்றுடன் ஊடாடக்கூடிய முற் சொன்ன அறிவு-எண்ண-அனுபவ, சிந்தனைக் கூறுகள் பொருந்தியமைய வேண்டும். 


கவிதை முகத்தின் தனிமை எங்கும் அழைத்துச் செல்லும் எதையும் காட்டும் அது தனி உலகாக இங்கும். அங்கு 


“பாட்டம் பாட்டமாய் 

பெண்கள் குலவையிடும் ஓசை 

பெரும் பேரிகைகளாய் கேட்கின்றன 

நான் சாம்ராஜ்ஜியத்திலிருந்தபடியே 

கைகளிரண்டையும் 

மேலுயர்த்திக் கூவுகிறேன் 

நான் 

நான் விரும்புகின்ற படியான பெண் 

நான் எனக்குள் வசிக்கும் அரசி”



( தினக்குரல் – 04 மே 2008 )

------------------------------------------------------------------------------------------------------

Wednesday, 28 September 2011

“ஓவியம் வரையாத தூரிகை“ தொகுப்பிலிருந்து சில கவிதைகள் :
-----------------------------------------------------------------------------------------------------

ஓவியம்


ஒவ்வொரு வர்ணமாய்ப் பிரித்து
தரையில் கரைத்து
சிந்தும் ஓவியம் இது
இதன் இதயத்திலரும்பிய
கவிதைகளும் பாவப்பட்டவைதான்
வெறும் ஓவியத்தின் வாழ்வில்
என்ன அர்த்தமிருக்கமுடியும்
அசையமுடியாக் கைளும்
நகரமுடியாக் கால்களும்
பேசமுடியா உதடுகளும்
சந்தேகமே இல்லை
வாயில்லா ஜீவன்
ஆடாதசையாது
சுவரில் மாட்டப்பட்டிருந்தது
பல்லிகள் எச்சில் படுத்துவதையும் எதிர்க்காமல்
வருகிறவர்களுக்கென்ன
வரைந்தவனை
வாழ்த்திவிட்டுப் போகிறார்கள்
சட்டங்களால்
சிலுவையறையப்பட்டிருக்கும்
ஓவியத்தைப் பார்த்து
உண்மை தெரியாதவர்கள்
உயிரோவியம் என்றார்கள்

-----------------------------------------------------------------------------------------------------

யாருக்கும் கேட்பதேயில்லை


நிறுத்தாத சாட்டையின் விசையும்
ஓவியங்களின் பாடலும்
கேட்டபடியே தான் இருக்கின்றன
கடும் பாறைகளில் மோதி
ஓய்ந்து விடுகின்றது
ஆக்கிரமிப்பிலிருந்து
தப்பிச் செல்ல விரையும் அலைகள்
வாழ்க்கையின் நிழல்வரை
துயிலற்ற இருப்பின் பிண நெடி
மீட்சி பெறமுடியாக் காரிருளில்
இருண்ட சேற்றுப் பாதையைச் சமீபிக்கின்ற
அதிசயம் மிகு ஒளிச்சாரல்
இரட்சிக்குமென்ற ஆவலில்தான்
நால் திசைகளும்
திரும்பி மண்டியிட்டிருக்கின்றன
இருந்த போதிலும்
யாருக்கும் கேட்பதேயில்லை
துளைகள் அடைபட்ட
புல்லாங் குழலினுள்
செத்துக் கொண்டிருக்கிற கீதம்

-----------------------------------------------------------------------------------------------------

தாமரைக் குளத்துக் காதலி


உன் உள்ளங்கைக்குள் பொத்தும் 
தாமரைப் பூவின் அளவுதான் என் இதயம்              
குளிரில் கொடுகும் சிறு அணிற்பிள்ளை ஜீவன்
'சூ' என விரசுப்பட்டு(ம்)
நெல்மணி களவாடி
உனக்கு ஊட்ட
வரப்பில் வட்டமடிக்கும் சிட்டுக்குருவி நேசகி
உப்பு மூட்டை பிள்ளையென
உன் முதுகுச் சவாரிக்கேங்கும்
கனவுகளுக்குச் சொந்தக்காரி
கொச்சிக்காய் கடித்த உதடுகளாக
வாழ்க்கை எரிகையிலும்
உனக்காக பொறுத்திருக்கும் தனிமை எனது
தோளுரசிப் போகவும்
இறுக்கமாய் விரல் கோர்த்து
கரைகளை மிதிக்கவுமாய் ஆசை
மின்மினி வெளிச்சத்தில் விருந்து வைக்க
தூங்காமல் விழித்திருக்கும் தூக்கணாங் குருவி
நான்  தான்
உன் தூண்டிலில் மாட்டிய மான் குட்டி
நான் தான் நீ மயங்கி மூழ்கிய
உன் தாமரைக் குளத்துக் காதலி

-----------------------------------------------------------------------------------------------------

மலட்டுச் சித்திரங்கள்

பூக்களேயில்லாத சூன்ய வெளியில்
ஏன்  அலைகிறது இந்த வண்ணத்துப் பூச்சி
நிலவினில் உலர்ந்த கீதங்கள் பாதியில் அறுந்தன
வஸந்தங்கள் அழிந்து போன சுவடுகளில்
துளிர் விடுகின்றது கண்ணீர்
தழும்புகளைச் செதுக்கிடும் உளிகளின் சப்தங்களும்
கருநீல இருளிற் தெறித்து விழுகின்றது
ஆகாயத் தெருவினில்
வெறும் மலட்டுச் சித்திரங்களை
எழுதி எழுதித் தேய்கிறது
ஒரு வெண்ணிறப் பறவை
இரக்கமற்ற திசைகளின் மேல் தவறாமல் இயற்றப்படுகின்ற
வைகறை ஒவ்வொன்றும் பூசி வருகிறது
கண்விரிந்த வாழ்வின்
தீய்ந்து கருகும் அதே ஏக்கங்களை

-----------------------------------------------------------------------------------------------------

 ஓவியச் சிலந்திக் கூடு


ஒவ்வொரு நூலையும் நிறங்களாக்கி
சிரத்தையுடன் கீறிய கூடு
வாழ்வின் துடிப்புகளால்
வசித்தலுக்கான பிரயத்தனங்களால்
கால நூல் இழுத்து
கனவுச் சிலந்தி
காற்றில் கட்டியது
அது இரையின் தேடலினால்
வரைந்த பசியின் வலை
கண்ணீர்த் துளியிலிருந்து
பெருத்து விரிந்திட்ட முகம்
மௌனத் துயரினால் பூசி மெழுகப்பட்ட உதடுகள்
தன் இதயக் கற்பத்தில் தூரிகையைச் சுமந்தபடி
அபாயத்தை நோக்கி நகர்கிறது ஓவியச் சிலந்தி
அழிவுக்காகவே இட்ட அழகுக் கோலமது
ஏளனங்களாய் வர்ணங்களுக்குள் கரைந்தோடும்
அதன் வாழ்வின் பிம்பம்
மௌனச் சுமைக்குள்
ஜீவித வெடிப்புகளுக்கிடையில்
கூடு பின்னிய ஓவியச் சிலந்தி நானும்

-----------------------------------------------------------------------------------------------------

Monday, 5 September 2011

ஆதியில் விடுபட்ட கனவு, அனாரின் கவிதைகள் - ஒரு பார்வை



- தேன்மொழி (இந்தியா)
-------------------------------------------------------------------------------------------------------------

ஈழம் என்ற சொல் சங்க காலத்திலிருந்து தொடர்வது.  இன்று அதன் பொருள் திரிபடைந்து நிற்கிறது. ஈழம் என்றாலே போர்க்களம் என அர்த்தம் கொள்ளக் கூடியதாக அந்தச் சொல் ஆக்கப்பட்டுவிட்டது. வீரம் என்று அதைக் கொண்டாடுபவர்களும் சரி; துயரம் என்று அதைப்பற்றிப் புலம்புவர்களும் சரி அந்தச் சொல்லின் பொருளை ஒற்றைத் தன்மை கொண்டதாகத் தட்டையானதாகச் சுருக்கிக் கொச்சைப்படுத்திவிட்டார்கள்.அதனால்தான் ஈழப்போரின் இறுதிக்கணங்களில் கைக்குழந்தைகளோடு தவித்தப் பெண்களைப் பார்த்தபோது அவர்களின் முகம் சுளித்தது.’ இந்தச் சூழலிலும் எப்படி இவர்களால் பிள்ளை பெற்றுக்கொள்ள முடிகிறது? ‘ என அருவெறுப்போடு அந்தக் குரல்கள் வெளிப்பட்டன.

போர் விளையும் நிலங்களில் பெண்களின் இருப்புப் பன்முகத் தாக்குதலுக்கு உள்ளாகிறது.  போர் நிலத்தில் வாழும் பெண்கள் அதனால் சீரழிக்கப்பட்டதற்கு மட்டுமின்றி , போரைக் கண்டு நடுங்கி ஒடுங்கிவிடாமல் அதை எதிர்கொண்டார்கள் என்பதற்கும்  எழுது கோல் தாங்கிய விரல்களே சாட்சிகளாக இருக்கின்றன.போரின் உறைவாள் போர் மறந்து உறங்க, வெற்றிக் கொள்ளப்பட்ட மண் தேவைப்படுவதுபோலவே, அடிமைகொள்ளப்பட்ட பெண் உடல்களும்  தேவைப்பட்டன.  போரும் விடுதலையும் சமதள இணைக்கோடுகளாக பயணிக்கும் வேளையில், பெண்கள் போரிலிருந்தும், மரபின் ஒடுக்குதலிலிருந்தும், சுயக் கட்டுப்பாடுகளிலிருந்தும், ஆணின் அதிகாரப்பிடியிலிருந்தும், சமூகச் சிக்கல்களிலிருந்தும் விடுபட அவர்களுக்குக் கிடைத்த எதிராயுதம் எழுத்து மட்டுந்தான்.தம்மைத் தற்காத்துக்கொள்ளவும், தாம் பட்டக் காயங்களுக்கு மருந்திட்டுக்கொள்ளவுமான சூட்சுமத்தை எழுத்துக்குள் இருந்துதான் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.  போர் நிலத்திலும், அடிமைத் தனத்திலும் புரண்டழும் மனது, மழைக்கு வளைந்து நிற்கும் தாவரம். மழையின் நீரை இலை வடிய விடுவது போல் சோகங்களையும், துக்கங்களையும் வடியவிட்டு நிமிர்ந்த திடத்துடன் அது எழுந்து நிற்கிறது.  தன் மீதே தனக்கு அபரிமிதமான நம்பிக்கை எழும்போது மட்டும்தான் வழுக்கு நிலத்தில் காலூன்றல் சாத்தியமாகிறது.ஈழப் பெண் எழுத்துக்கள் போரின் அவலங்களையும்,அடிமையாய்ப் பூட்டப்படும் அருவெறுப்புகளையும் எழுதும் அதே நேரத்தில் சுயம் சார்ந்த விடுதலை மொழிகளையும் பதிவுசெய்துள்ளன.அவர்கள் ஒரே சமயத்தில் இருவிதமானப் போரை நடத்தியிருக்கிறார்கள். இன விடுதலைக்கான போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டிருந்தது மட்டுமின்றி தமது சுயத்தை மீட்பதற்கான இன்னொரு விடுதலைப் போராட்டத்தையும் அவர்கள் ஒருசேர நடத்தினார்கள். ஆயுதம் ஏந்திப் போரிட்ட யுத்தகளத்தில் பல பெண் போராளிகள் தமது உயிர்களை இழந்தனர். அதுபோலவே தமது அடையாளத்தை மீட்பதற்கான போரில் செல்வி, சிவரமணி முதலிய கவிஞர்கள் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள்.உணர்தலுக்கும், எதிர்த்தலுக்கும் இடையேயான கால இடைவெளியை ஈழத்துப் பெண் கவிஞர்களின் எழுத்துக்களில் நாம் காண முடியவில்லை. புலம்பலும், போராட்டமும் ஈழப் பெண் எழுத்துக்களில் ஒரே கால கட்டத்தில் நிகழ்ந்துள்ளன.இந்தப் பண்பை நாம் ஈழத்து ஆண் கவிஞர்களிடம் பார்க்க முடியவில்லை.எவ்வளவுதான் கவித்துவ ஆற்றல் பெற்றிருந்தாலும் ஈழத்து ஆண் கவிஞர்கள் இன்னொரு நிலையில் ஆணாதிக்கம் என்னும் ஒடுக்குமுறை மனோபாவத்தின் தாங்கிகளாகவே செயல்பட்டார்கள் என்று சொல்வது குற்றச்சாட்டு அல்ல.

1986-ல் வெளியான “சொல்லாத சேதிகள்” (பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்ப்பாணம்) அன்றைய பெண் கவிஞர்களின் சில கவிதைகளைத் தொகுத்து முன்வைத்தது.  அ .சங்கரி, சி.சிவரமணி, சன்மார்க்கா, உ.ஒளவை, செல்வி, மசுறா ஏ.மஜீட், பிரேமி, ஊர்வசி, மைத்ரேயி போன்றவர்களின் தோந்தெடுக்கப்பட்ட இருபத்து  நான்கு கவிதைகள் அத்தொகுப்பில் பிரசுரமாகியுள்ளன.  ” அவர்களின் பார்வையில் இரண்டு மார்புகள் நீண்ட கூந்தல் சிறிய இடை பருத்த தொடை இவைகளே உள்ளன” என்று கோபத்தோடு ஆணாதிக்க மனோபாவத்தைச் சாடும் அ.சங்கரியின் கவிதையோடு ஆரம்பிக்கும் அந்தத் தொகுப்பு, ‘ ' ' மனிதகுலத்தின் அரைப்பகுதியனராகியத் தம்மை மனிதம் அற்ப வெறும் இயந்திரங்களாகவும்,கருவிகளாகவும் கருதும் நிலை மாறவேண்டும்’என்ற நோக்கத்தோடு முன்வைக்கப்பட்டது.ஆனாலும் அதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கவிதைகள் பொதுவான பெண்ணியக் கவிதைகளின் தன்மையையே கொண்டிருந்தன . உ.ஒளவையும்,சன்மார்ககாவும் போர் குறித்த கொடுமைகளைத் துயரத்தில் நனைந்த சொற்களால் அதில் வரைந்துள்ளனர்.வேறுசிலர் நாட்டின், இனத்தின் விடுதலையை முன்னிலைப்படுத்தி எழுதியுள்ளார்கள்.ஒருசில கவிதைகளில் நாம் பெண்களின் தனித்துவத்தைத் தரிசிக்கமுடிகிறது.  ஊர்வசியின் இன்னும் வராதா சேதியில் ( பக்கம் 41)போர் நிகழும் காலத்திலும்கூடக் காதல் மனம் விழித்திருப்பதைப் பார்க்கிறோம்:

       

”புதிதாகப் பெயர்ந்த சோளகத்தில்

தெற்கிருந்து பூவாசம்

உன் வீட்டுப் பக்கம் தான்

எங்கேனும்

கோடை மழைக்கு காட்டுமல்லி

பூத்திருக்கும் ….”


இந்த வரிகள் ஈழப் பெண் எழுத்துக்களின் செழுமை மற்றும் வளர்ச்சியின் முன்னோடிக் குரலாக விளங்குகின்றன.  

அ.சங்கரியின், இடைவெளி என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில்:



”அக் காதலை,

முத்தமிட்டும்

நெற்றியை வருடியும்

உன்னிரு கைகளை

இறுகப் பற்றியும்

உணர்த்த விரும்பினேன் ” (பக்கம் 6)

என்ற வரிகளைப் படிக்கும்போது ஒரு முதிர்ச்சி தெரிகிறது. தனது காதலைத் தோழிக்கு மட்டுமே எடுத்துக் கூறி நின்ற சங்ககாலத் தலைவியிலிருந்து வேறுபட்டு இக்கவிதையின் ஊடாக வெளிப்படும் பெண், சமூகத்தின் முன்னால் சுய உணர்வோடு கூடிய மொழியில் காதலைத் துணிவோடுப் பேசுகிறாள்.

1983ஜூலைக் கலவரத்துக்குப் பிறகு வீரத்தையும், காதலையும், புலம்பலையும் ஒரு சேரப்  பேசிய ஈழத்துப்பெண் குரல்களின் தொடர்ச்சியாகத்தான் 2004 ல் “ஒவியம் வரையாத தூரிகை”  என்ற தொகுப்பில் வெளிப்பட்ட அனாரின் குரலைக் கேட்க முடிகிறது.  தன் விளக்கங்களாகவும், சுய இரக்க மொழியாகவும்,புலம்பல்களாகவும் அந்தத் தொகுப்பில் வெளிப்படும் அனாரை அன்றையக் காலக்கட்டத்தின் பொதுத் தளத்தில் வைத்துத்தான் பதிவு செய்ய முடிகிறது. சமகால ஈழத்துப் பெண் எழுத்துக்களின் உட்பிரிவுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படும் ஒரு தொகுப்பாகத்தான் இருக்கிறது ஓவியம் வரையாத தூரிகை.

சூரியனைப் பற்ற வைக்க
உன்னால் முடியாது … (பக்கம் 17)

உனது பணிப்பின் பேரில்
நான் பிறக்கவில்லை … (பக்கம் 54)



இறகுகளால் நெய்த
உன் பஞ்சுக் கூட்டுக்குள்
இந்த நெருப்பை வரவேற்காதே
……………………………..
பனித்துளிக் கோலம் போட
சூரியனால் முடியாது (பக்கம் 49)

என அந்தத் தொகுப்பில் வெளிப்படும் அனார்,

கல்லாய் மாறிய பூ
பாறையாய் இறுகிய காற்று
பனியாய் உறைந்த நீர்
என்ன செய்வது
நான்
விடுதலை அடைந்தவள்
உன்னால்
அந்த உச்சிக்கு
வர முடியாதே

(சொல்லாத சேதிகள் பக்கம் 8)

எனப் பகிரங்கப்படுத்தும் அ.சங்கரியின் தொடர்ச்சியாகத் தான் தென்படுகிறார்.

இயலாமை என்பது உனக்கும் உள்ளது, ஆளுமை என்பது எனக்கும் உரியது என அதிகாரத்தோடு உரத்து முழக்கமிடும் குரலைக் கீழ்க்கண்ட வரிகளில் நாம் காணும்போதுதான் அவரைப்பற்றிய நம்பிக்கைத் துளிர்விடுகிறது:



யாருமற்றதோர்

பாழ்வீட்டில் கண்ணீர் இழை எடுத்து

………………………………………

கனவுகள் சுரந்து

உறக்கத்தை மீறி வழிகிற

இரவுகள் என்னுடையவை (பக்கம் 51)




தழும்புகளைச் செதுக்கிடும்

உளிகளின் சப்தங்களும்

கரு நீல இருளிற் தெறித்து விழுகின்றது (பக்கம் 48)

எதார்த்தச் சிக்கலிலோ, எழுத்துச் சிக்கலிலோ, கருத்துச் சிக்கலிலோ தளைபடாமல், வெடித்துக்கிளம்பும் ஒரு புதிய குரலை அனாரின் அடுத்தத் தொகுப்பு நமக்குக் காட்டுகிறது. ’ஒவியம் வரையாத தூரிகை’யில் வெளிப்படாத அந்தக் குரல் அவரது இரண்டாவது தொகுப்பில் வெளிப்படுகிறது. விதைக்குள் உறைந்திருக்கும் விருட்சம் போல் வெளி வரக் காத்திருக்கும் ஒரு கவிதை மனத்தை இந்தத் தொகுப்பில் நாம் பார்க்கிறோம்.இத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் புனைவுகளற்ற அனாரின் எழுத்துக்கள் அவரது சாத்தியப்பாடுகள் குறித்தான எதிர்பார்ப்புகளைக் கூட்டுகின்றன.




சாபங்கள்

என் பூமியில் கொட்டும் மழை

சோகங்கள்

என் வானில் பரவும் வெயில் ( பக்கம் 38)

என்று, சோக மொழியில் அவர் சொன்ன போதும்,மழையானாலும், வெயிலானாலும் கூடு தேடாத பறவையைப் போன்றவள்தான் தானென்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார் அனார் .


இரு விழிகளைக் கொழுத்தி
உயிரூற்றி எழுதுகிறேன்
உயிரைக் கொழுத்தி வைத்து
நீ விழிகளால் வாசி
…………………………
சாமத்தின் பனித்தூவலில்
கவிதை கிடந்து
சுருளட்டும் புரளட்டும் விடு (வருந்(த்)துதல்)



ஓர் முத்தத்ததைப் பற்ற வை

எரிந்து போகட்டும் என் உயிர்க்காடு (தணல் நதி )


இந்தக் குரல் தமிழ்ச்சூழலில் முற்றிலும் புதுக்குரல் என்பதை ஒத்துக் கொள்வதில் நமக்குத் தயக்கம் இருக்கலாம்.  வேட்கையில் பூத்துக்கிடந்த சங்ககாலப் பெண் கவிகளின் தொடர்ச்சியான குரல்தான் இது என்று நம் புத்தி உரைக்கலாம்.ஆனால், வேட்கையும், மன்றாட்டமும், எதிர்பார்ப்பும், ஏக்கமும் கொண்ட சங்க காலப் பெண் மொழி வேட்கை மொழி மட்டுமே.  ஆனால் அனாரின் “ எனக்குக் கவிதை முகம்”  காட்டுவது ஆளுமையின் மொழிப்பரப்பில் எழுந்து நிற்கும் வேட்டை மொழி.

பாணணின் இசை உரக்க ஒலிக்க வேண்டுமா என்ன?  பாடுவதின் சுதந்திரம் பாணணின் கைகளில் இருக்கிறது.  அனாரின் படைப்புக்குள் தகித்துக் கொண்டிருக்கும் எழுத்துக்களின் சுதந்திரம்,  நம் எண்ணங்களைப் பின் தள்ளிவிட்டுக் காலத்தின் முன்போய் நிற்கிறது.  வேட்கை குறித்தத் தனது உணர்வுகளையும், தனது தேவைகளையும் முன் வைத்து மொழியப்பட்டது சங்கக்காலப் பெண் குரல்.   ஆனால் அனாரின் குரல் வேட்கையில் ஊறித் திளைத்து, வெற்றியின் பின் எழுந்து நிற்கும் மொழிதல்.மறைக்க விரும்பாத வேட்கையின் சித்திரங்களை மென்மையான மொழிகளால் எழுதிச் செல்லும் அனார் தற்காலப் பெண் கவிஞர்களில் முதலிடத்தில் நிற்கிறார்.


”உன் குரலுக்கு இன்று நீ
புரவிகளைப் பூட்ட வில்லையா
………………………………
அகோரப் பசி எடுக்கையில்
அந்தப்புரத்தின் அரசி
ஆர்வத்துடன் பருகும்
அனைத்து ருசிகளும் உள்ளதுதான்
உன்குரல் என்ற திராட்சை ரசம் ” (குரல் என்ற நதி)


அந்தப்புரத்தின் அரசிக்கு அரியணை அடங்கிக்கிடந்தது  வரலாறு.அகோரப் பசி எடுக்கையில் ஆதிவனத்தின் கனிகளைப் புசித்தவளாக ஆரம்பித்து அனைத்து ருசிகளும் உள்ளது தான் உன் குரல் என்ற திராட்சை ரசம் என்ற வார்ததைகளில் முடிக்கும்போது, தீராத வாழ்க்கையின் மெல்லியல்புகளை வெவ்வேறு சாயல்களில் நம்மோடு அனார்  பகிர்ந்து கொள்கிறார்.

'' வண்ணத்துப் பூச்சிகளின் பிரம்மாண்டமான,
கனாக்கால கவிதை நானென்பதில் ,
உனக்குச் சந்தேகமிருக்கிறதா இனியும் , ''


ஒரு துண்டு வானத்தைக் கைகளில் தருவது போல் சந்தேகம் மறுத்த தன் சுதந்திரத்ததை எழுதிச் செல்லும் இந்த வரிகள் கேள்விகளுக்குள் அடங்க மறுப்பவை.  ஆதியில் விடுபட்டக் கனவை, நிகழ்காலக் கவிதையாக்கிக் காலத்தில் நிரப்புவதென்பது பருவ காலங்களைச் சூடித்திரியும் இந்தக் கடற்கன்னிக்குச் சாத்தியப்பட்டிருக்கிறது.

“ என் தனிமையின் பெரும்பாரம்
ரத்தமாய் கசிகின்றது”


“ஓநாயின் வடிவத்திலிருக்கிறது தனிமை”

''வேட்டையாட்டப்பட இரையை
 சத்தமின்றி புசித்தபடியிருக்கும் அரூப மிருகம்”


போன்ற  படிமங்கள் தனிமையை , அதன் கொடுமையை நம்மிடம் தெரிவிக்கின்றன. தனிமையின் முகம் கொடூரமானது.  தனித்திருக்க விரும்புபவர்கள் உண்டு.  தனிமையில் இருக்க யாரும் விரும்புவதில்லை.  ஏனெனில் உயிர்களுக்கு அது இயலாதது.  தனிமையின் கோர முகம் பல வடிவங்களில் தன்னைத் திறந்து கொள்ளும்.  அதை எதிர் கொள்ள அசாத்திய உணர்வு வேண்டும்.  தனிமையின் பள்ளம் நிரப்பப்பட முடியாதது.  தனிமை அனாரின் மொழிகளில் வேட்டையாடப்பட்ட இரையை சத்தமின்றிப் புசித்தபடியிருக்கும் அரூப மிருகமாகிறது.  தனிமையின் அகோரத்தை வார்த்தைகளில் வடித்துக்காட்டிய அனார், அதிலிருந்து விடுபட்டப் பெண்ணாய்:

“ சாபத்தை உடைத்துப் பூத்திருக்கிறேன்”.
 “என் மீது கனவு போல் பெய்கின்றது உன் மழை”

என்னும் போது தனிமையின் போர்வை விலகிக் கொள்கிறது. பின்பு,

”மேகங்களுக்கு மேலேறிச் சென்று
நிலவின் கதவைத் திறந்து
எடுத்துக் கொள்
கொஞ்சமும் குறையாத என்னை ”(பூக்க விரும்புகின்ற கவிதை)

என்னும் வரிகளில் ஆளுமையின் இறுமாந்த குரலாக அது வெளிப்படுகிறது.

“  அவன் நிறங்களின் கடல் குடித்த பறவை நான்”.  என்ற உணர்வில், பக்தி மார்க்கத்தில் நின்று கடவுளைக் காதலால் கைது செய்து கட்டளைகள் பிறப்பித்துக் தன்னாளுகைக்குள் நிறுத்தி உன் ஆதியந்தம் எனதாகும் என்ற ஆண்டாளின் குரலைக் கேட்க முடிகிறது.


அனாரின் காதல் உணர்வுகள் பொதுப்படையானவை, ஆனால் அவரது காதல் மொழிகள் தனித்துவமானவை . நம் ஒவ்வொருவருக்குள்ளும் காதலை ஊற்றி எரிய விடுகிறார். அவருடைய காதல் ஓர் உயிருக்கானது என்பது பட்டாம் பூச்சிகளின் உலகத்தை உள்ளங்கைக்குள் மூடி வைப்பது போன்றதாகும்.  காதல் விரிந்து பரவும் விருட்ச நிழல்.  யார் வேண்டுமானாலும் அதற்குள் தன்னை அடைக்கலப்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் அனார்.

“ காற்றைத் தின்ன விடுகிறேன் என்னை “  (காற்றின் பிரவாகம்) என்ற அனாரின் ஆளுமைக் குரல்,”நான் பாடல் எனக்கு கவிதை முகம்” உடல் பச்சை வானம் “ என்று அறிமுக படுத்திக்கொள்ளும் இத் தொகுப்பில் சற்று அடங்கித் திரும்பவும் எதார்த்தத்துக்குத் திரும்புவதாக உள்ளது.  தாய்மை, கோரிக்கை,  சுய அடையாளம் என்பன போன்ற மொழிகளால் நிரம்பியுள்ளது “உடல் பச்சை வானம்” என்ற அவரது தொகுப்பு.  எனினும்,


“ பெண் உடல் பூண்ட முழு இயற்கை நான்
காற்றில் வசிப்பவன்
காலத்தை தோன்றச் செய்பவன்
இன்று என்னைத் தீண்டலாம் …..   (பக்கம் 27)
எனும் போது அனாரின் குறையாத ஆளுமையைக் காணமுடிகிறது.
            
’ திரும்பத் திரும்பக் கேட்கும் குரல்’எனவும், ’வெற்றுப் புலம்பல்கள் தான் பெண்ணியம்’ என்றும் பெண் கவிஞர்களின் எழுத்துகளை நிராகரிப்பவர்களிடத்தில் அனாரை முன்னிறுத்தி நாம் கேள்விகளைத் தொடுக்கலாம்.  காதல், அன்பு,  வாஞ்சை, வேட்கை என்பவற்றைக் காத்திரமாக வெளிப்படுத்தும் அனாரின் மொழியில், வலிகளையும், எதிர்ப்புகளையும், தன் இருப்பின் அடையாளத்தையும் இடையிடையே நாம் கேட்க முடிகிறது.  சமூகத்தில் நிராகரிப்பும், அவமதிப்பும், அடக்குமுறையும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாகப் பெண்களுக்கு அவை தவிர்க்கவே முடியாததாக இருக்கின்றன என்பதை அனாரின் கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன.  காதலின் அனுபவத்தை, அதன் இன்பியல்புகளைப் பாடிச் செல்லும் குறிஞ்சியின் தலைவிக்கும்கூட இந்தச் சமூகத்தின் ஒடுக்குதலை எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடி இருக்கவே செய்கிறது. 

நீ அறுவடை முடித்துத் திரும்புகின்றாய்
இன்னுமிருக்கின்றது விளைச்சல்  (பக்கம் 58)


இவ்வரிகள் காதல் பகிர்வின் வரிகளாகத் தோன்றினாலும், எடுக்க எடுக்கக் குறையாத பெண்ணிய இருப்பைப் பெண் ஆளுமைகளை முன் வைப்பவையாகவும் திகழ்கின்றன.


அனார் தற்காலச் சூழலில் செயல்படும் சக ஆளுமைகளிடமிருந்து தனித்து நிற்பதற்குச் சில காரணங்கள் உள்ளன.  முதலில், அவர் தன் மத அடையாளத்தை முன்னிறுத்திக் கவனத்தை ஈர்க்கவில்லை.  படைப்பின்மீது முழுமையான நம்பிக்கைகொண்டவராக அவர் உள்ளார்.  ஒரு படைப்பாளியின் நம்பிக்கை,  தன் படைப்பு சார்ந்த விஷயமாக மட்டுமே இருப்பதுதான் படைப்பின் உச்சம்.  மத, இன, வர்க்கச் சிக்கல்களையும், அதன் கோரல்களையும் எழுத்துக்களாக வெளிப்படுத்துதல் என்பது வேறு ஆனால் அவற்றையே தன்னை நோக்கிக் கவனத்தை ஈர்ப்பதற்கும், தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்குமானத் துருப்புச் சீட்டுகளாகப் பயன்படுத்திக்கொள்வதென்பது வேறு.நமது சூழல் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட தன்னலவாதிகளாலேயே நிரம்பியிருக்கிறது. அவர்களுக்கிடையே படைப்பை மட்டுமே தனது அடையாளமாக முன்வைக்கும் அனார் மகிழ்ச்சியளிக்கிறார்.  


பெண்ணியம் என்பது தன்னை நிறுவுவதாகவும், தன் இருப்பை அடையாளப் படுத்துவதாகவும், சமூக மற்றும் மரபின் வெற்றுக் கட்டுப்பாடுகளைத் தகர்ப்பதாகவும், ஆண்மையநிலைக் கூறுகளை எதிர்பதாகவும் மட்டுமே பலரால் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. “ ஒவியம் வரையாத தூரிகையில்”இந்தச் சூழலுக்குள் ஒன்றிப் போனவராகவே அனார் வெளிப்பட்டார். ஆனால் அதன்பிறகு வெளிவந்த மற்றைய இரண்டு தொகுதிகளிலும்  பெண்ணியம் கடந்து, தன் விடுதலையைத் தானே எழுதுவதாகவும், தன் சுதந்திரத்தைத் தானே நிறுவிக்கொள்வதாகவும், எல்லைகளற்ற ஆளுமையுடன் காதல் என்பதை வாழ்வாக்கி, அதில் திரண்டெழும் ஆற்றலை வெளிப்படுத்துவதாகவும் அனார் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்.இதைப் பெண்ணிய படைப்புச்செயல்பாட்டின் அடுத்த கட்டம் என்று சொல்வதில் தவறில்லை.


அனாரிடம் அடையாளப்படுத்தவேண்டிய இன்னுமொரு தனித்தன்மை அவர் தனது சூழலிலிருந்து தன்னை எப்படி விலக்கி வைத்துக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார் என்பதாகும். போரால் சிதைவுண்ட நிலத்தில் காதலைப்பாடவும், இன்னும் போரின் எச்சங்களாக மீந்து கிடக்கும் வாழ்வைக் கொண்டாடவும் வேண்டுமெனில் சூழலால் பாதிக்கப்படாத அதிதீவிர மனத்திட்பம் இருக்கவேண்டும்.அது அனாருக்கு வாய்த்திருக்கிறது. போரின் அவலங்களை எழுதவில்லையே என அவரைக் குற்றம் சாட்டுபவர்கள் இருப்பார்கள். ஆனால் அதுதான் அனாரின் பலமாக இருக்கிறது.வாழ்வின் உணர்வுகளைப் படிமங்களாக உருவாக்கிக்காட்டும் படைப்பாற்றல் அவரிடம் குவிந்துகிடக்கிறது, அது நம்மை வியக்க வைக்கிறது.  சூளையில் இட்டுப் பொசுக்கியபோதும் குளிர் நிலாவை வர்ணித்துக் கொண்டிருந்த திருநாவுக்கரசருக்கு ஈசன் அருள் அந்த மன உறுதியைத் தந்ததென்றால், அனாருக்கு படைப்பு மனமே அந்த ஆற்றலை அளித்திருக்கிறது.  ஆயிரம் போர்கள் நடந்தாலும், அவற்றைப் புறந்தள்ளிக் காதல் பேசும் வீரக்குடியின்  தொன்ம விழுதுகள் நாங்கள் என அனார் நிரூபிக்கிறார்.


சமகாலத் தமிழ் எழுத்துகளில் புதிய பரிமாணம் கொண்டதாகவும், நிராகரிக்கப்பட முடியாததாகவும், முக்கியத்துவும் வாய்ந்ததாகவும் இருக்கும் அனாரின் கவிதை வயலில் நாம் அறுவடை முடித்துத் திரும்பினாலும் இன்னும் மீதமிருக்கும் விளைச்சலே அனாரின் வெற்றி. 


( மணற்கேணி, பெண்ணியம் )
( 27.01.2011 அன்று தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை )
-------------------------------------------------------------------------------------------------------------
அனார் – குறிஞ்சியின் தலைவி


- குட்டி ரேவதி (இந்தியா)

-------------------------------------------------------------------------------------------------------------

பெண்ணின் குருதியைச் சடங்கார்த்தங்களுடன் பார்க்கும் நிலத்திலிருந்து பெண்ணின் ஓடும் குருதியைத் தன் ஆண்மையின் வெற்றியாய்ப்பார்க்கும் நிலத்தின் மொழியைப் பற்றி எழுதுதலும் பேசுதலும் எவ்வளவுக்குச் சாத்தியம் என்னும் சந்தேகத்துடன் தான் அனாரின் கவிதைகளைப் பற்றி எழுதத்தொடங்குகிறேன். தன் மொழியை, மாதாமாதம் ஓடும் குருதியாக்கிப் பார்க்கவில்லையெனில், பெண் தன் உடலையே காய்கறிகளையும் மாமிசத்தையும் வெட்டிக்கிழிப்பது போல் தான் கிழித்துக்கொள்ள நேரும். உடலின் வேட்கை அவ்வளவு! தன்னுள் கிளரும் மனோவேகத்தையும் ஹார்மோன்களின் இனிய வாசனை நிரம்பிய பூக்களையும் நிரப்பிய குருதி வெளிப்பட்டுத்தான் ஆகவேண்டும். மீண்டும் உடலை நிரப்பிக்கொள்ள இருக்கவே இருக்கிறது, மொழியின் பாடல்களோ குருதியின் உஷ்ணமோ! மொழியும் வேட்கையும் ஒன்று சேர முடியாத வாய்ப்புகளை எல்லாம், குருதி பாயும் நிலமாய் விரித்துக் கொண்டனர் கவிப்பெண்கள். ஆனால், அவள் அனுமதியின்றியே அவள் உடலிலிருந்து குருதியை சேற்றில் புரளும் ஆடையாக்கியவர்களுக்கு எப்படி மொழியைத் தருவது? சொற்களை அடுக்கி, எப்படி அதன் வெப்பத்தை உமிழ்வது? எப்படித் தன் உடலைக் காத்துக் கொள்வது? மூப்பும் பிணியுமான இயற்கையின் வாதைகளையும் மீறி தன் உடல் அனுபவிக்க நேர்ந்த வதைகளை மொழியின் வழியாகக் காத்துக்கொள்ளத் துணிந்ததன் பீறிடல் தான் இதுவென்று கொள்ளலாமா?


மேலும் சில இரத்தக்குறிப்புகள்


மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து
பழக்கப்பட்டிருந்தும்
குழந்தை விரலை அறுத்துக் கொண்டு
அலறி வருகையில்
நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகின்றேன்
இப்போது தான் முதல் தடவையாகக் காண்பது போன்று
‘இரத்தம்’ கருணையை, பரிதவிப்பினை
அவாவுகின்றது
இயலாமையை வெளிப்படுத்துகின்றது
வன் கலவி புரியப்பட்ட பெண்ணின் இரத்தம்
செத்த கொட்டுப் பூச்சியின் அருவருப்பூட்டும் இரத்தமாயும்
குமுறும் அவளுயிரின் பிசுபிசுத்த நிறமாயும்
குளிர்ந்து வழியக்கூடும்
கொல்லப்பட்ட குழந்தையின்
உடலிலிருந்து கொட்டுகின்றது இரத்தம்
மிக நிசப்தமாக
மிக குழந்தைத்தனமாக
களத்தில்
இரத்தம் அதிகம் சிந்தியவர்கள்
அதிக இரத்தத்தைச் சிந்த வைத்தவர்கள்
தலைவர்களால் கெளரவிக்கப்பட்டும்
பதவி உயர்த்தப்பட்டும் உள்ளார்கள்
சித்திரவதை முகாம்களின்
இரத்தக் கறை படிந்திருக்கும் சுவர்களில்
மன்றாடும் மனிதாத்மாவின் உணர்வுகள்
தண்டனைகளின் உக்கிரத்தில்
தெறித்துச் சிதறியிருக்கின்றன
வன்மத்தின் இரத்த வாடை
வேட்டையின் இரத்த நெடி
வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்
கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்
சாவின் தடயமாய்
என்னைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

என்றாலும், எப்பொழுதும் பெண்ணுக்கு இரத்தம் என்பது முதல் முறையாகக் காண நேர்ந்தது போல் தான் என்பது மானுடத்திற்கான பரிவு நிறைந்த இயல்பே. பலவகையான இரத்தக் குறிப்புகளை முன்வைத்து அவர் சாவின் தடயங்களைச் சென்று தொடுகிறார்.

வேட்கை என்பது தன்னுடல் பிறிதோர் உடலுடன் புணர்வதற்கான இச்சையை மட்டுமே சொல்வதன்று. பெண் உடலென்றாலே, பிறிதோர் உடலுடன் புணர்ந்தும், பிணைந்தும் இருக்கவேண்டுமென்ற அடிப்படையான நியதியையும் குலைப்பது. இதை, உடலை முற்றும் முழுதுமாய் ஒரு தனிப்பிரதியாக்கிக் களிப்பது என்று கொள்ளலாமா? ஆனால், பெண்ணின் வேட்கையும் வேட்கைக்கான முகவுரையும் எப்பொழுதும் பாலியல் சாயமேற்றப்பட்ட கறையுடையதாகப் பார்க்கப்பட்டிருப்பதை புரிந்துகொண்டால், இங்கு அனாரின் வேட்கையின் சொற்கள் வில்லேறிய அம்புகளாய்ப் பிறந்து வந்து நம்முடலில் பாய்வதன் அரசியலைப் புரிந்து கொள்ளமுடியும்.

அனாரின் முதல் கவிதைத் தொகுப்பான, ‘ஓவியம் வரையாத தூரிகை’ சில சம்பிரதாயத் தெறிப்புகளைக் கொண்டே வெளிவந்தது. பெண்கள் தங்கள் மனவெளியில் புறச்சூழலால் கட்டமைக்கப்பட்டிருக்கும் போலியான பிம்பங்களை மொழிவழிக் கசடாக்கி வெளியேற்றுவது தான் தொடக்கக்கட்டப் பணியாக இருந்திருக்கிறது. இந்தவொரு நிகழ்விலிருந்து, எந்தவொரு படைப்பாளியுமே தப்பித்ததில்லை. இது பொதுவிதி. தன் சுயத்தை வடிவுறச்செய்யும் பணியை, தொடரும் தம் எழுத்தின் இயக்கங்களால் தான் சாத்தியப்படுத்திக்கொண்டனர் என்பதால் தன் உடலிலிருந்து முதல் தொகுப்பின் வழியாகக் கசடை வெளியேற்றுவது என்பதை உலகப்பொது மறை என்றும் கொள்ளலாம். அனார், தன் முதல் தொகுப்பை, ஆண் இனத்தை எதிர்வெளியாக்கி சில முறையிடல்களாலும் அடக்கமான எதிர்ப்புகளாலும் கடந்திருக்கிறார்.

வேர்களில் எடுத்தவலி
வண்டுகளோடு குலாவும்
பூக்களுக்குப் புரிவதில்லை

என்பது போன்ற, சொற்தெறிப்புகள் அவருக்கு அவரே சமாதானம் தரவும் ஊக்கம் கொடுக்கவும் உதவியிருக்கலாம்.

தாமரைக்குளத்துக் காதலி


உன் உள்ளங்கைகள் பொத்தும்
தாமரைப்பூவின் அளவு தான்
என் இதயம்
குளிரில் கொடுகும்
சிறு அணிற்பிள்ளை ஜீவன்
’சூ’ என விரசுப்பட்டு(ம்)
நெல்மணி களவாடி
உனக்கு ஊட்ட
வரப்பில் வட்டமடிக்கும்
சிட்டுக்குருவி நேசகி
உப்புமூட்டை பிள்ளையென
உன் முதுகுச் சவாரிக்கேங்கும்
கனவுகளுக்குச் சொந்தக்காரி
கொச்சுக்காய் கடித்த உதடுகளாக
வாழ்க்கை எரிகையிலும்
உனக்காகப் பொறுத்திருக்கும்
தனிமை எனது
தோளுரசிப் போகவும்
இறுக்கமாய் விரல் கோர்த்து
கரைகளை மிதிக்கவுமாய் ஆசை
மின்மினி வெளிச்சத்தில்
விருந்து வைக்க
தூங்காமல் விழித்திருக்கும்
தூக்கணாங் குருவி
நான் தான்
தூண்டிலில் மாட்டிய
மான் குட்டி
நான் தான்
நீ மயங்கி மூழ்கிய
உன் தாமரைக் குளத்துக் காதலி

இக்கவிதையில், வடிவம் பெறும் தாமரைக்குளத்துக்காதலி, தன் குற்றச்சாட்டுகளை தரையிறங்கி அறிவிக்கும் சிறு பறவைகளாகத்தான் இருக்கிறார். ஆனால் அடுத்த கவிதையில் அந்த வானத்துப்பறவைகளையே பணிக்கிறார் பாருங்கள்!


அரசி

உன் கனவுகளில்
நீ காண விரும்புகின்றபடியே
நான் அரசி
அயல் நாட்டு மகாராஜாக்களின் அரியணைக்கு
சவால் விடும் பேரரசி
அடிபணிய அல்ல
கட்டளையிடப் பிறந்தவள்
ஆணையிடுகிறேன் மந்தைகளுக்கு
குகைகளிலிருந்து தப்பிச்செல்லுங்கள்
ஆணையிடுகிறேன் சூரியனுக்கு
ஒரு இனத்தையே விழுங்கிக்கொண்டிருக்கும்
சமையலறையின் பிளந்தவாயைப் பொசுக்கிவிடுமாறு
பெரும்மலைகளை நகர்த்தித் தளர்ந்துவிட்ட
மூதாட்டிகளின் பாரித்த பெருமூச்சுகளை
வருடிவிடுமாறு பறவைகளைப் பணிக்கிறேன்
ஒருத்தி சொல்கிறாள்
‘என்னிடமிருந்து தீர்வற்ற புலம்பல் கசப்பு’
இன்னொருத்தி கூறுகின்றாள்
‘குரலில் இறக்க முடியாச் சுமை’
இருண்டு வரும் பொழுதுகளில் நேர்ந்த
துஷ்பிரயோகங்களைக் காட்டுகிறாள் எளிய சிறுமி
நான் என்னுடைய வாளைக் கூர் தீட்டுகின்றேன்
சுயபலம் பொருந்திய தேவதைகள்
விடுதலை பெற்ற பரவச வாழ்வொன்றை
வென்றெடுத்ததாய் கொண்டாடுகிறார்கள்
பாட்டம்பாட்டமாய்
பெண்கள் குலவையிடும் ஓசை
பெரும்பேரிகைகளாய் கேட்கின்றன
நான் சாம்ராஜ்ஜியத்திலிருந்தபடியே
கைகளிரண்டையும்
மேலுயர்த்திக் கூவுகின்றேன்
நான்
நான் விரும்புகின்றபடியான பெண்
நான் எனக்குள் வசிக்கும் அரசி

இரண்டாவது கவிதையில் இவர் பயன்படுத்தியிருக்கும் தொனியின் பாய்ச்சல், அமானுஷ்யமான ஆழமும் அகலமும் கொண்ட மடுவைக் கடந்தது. தன் இருப்பை ஆணித்தரமாய் உறுதிசெய்யும் நெடிய தூண் போன்ற பிரமை இக்கவிதையின் பின்னே ஒளிந்திருக்கிறது. அகம், புறம் என்ற இருவகையான கவிதைப் பண்புகளையே சங்கப்பாடல்கள் நமக்குப் புகட்டியிருக்கின்றன. அகம் என்பது பெண் - ஆணின் காதல், இன்னபிற அந்தரங்க உறவுகளையும், புறம் என்பது ஆணின் போர்புறப்பாடுகளையும் வெற்றிகளையும் பறைசாற்றுவது. அகப்பாடல்கள், பெண்ணின் இருப்பு என்பது ஆணைச்சார்ந்ததாகவும், புறப்பாடல்கள், ஆணை மட்டுமே நிலைநாட்டுவதாகவும் இருக்கின்றன. ஆகவே, இவ்விடம், ‘சுயம்’ என்பதை ஒரு வகையாக, அதிலும் பெண்ணை முதன்மையாக, அடுத்து ஆணுக்கும் ஆகுவதாக நாம் கட்டமைக்கலாம், அனாரின் இந்தப் பாடல்கள் வழியாக என்று தோன்றுகிறது.

வேட்கை என்பது, தன் இச்சைகளைச் சொல்வதற்கான அவகாசத்தை மட்டுமே குறிப்பிடுவது அன்று. அது பெரும்பாலும், சமூகத்தின் அசந்தர்ப்பங்களையும், சந்தர்ப்பங்களையும் தனக்கு வாய்ப்பாக்கிக் கொள்பவர்களுக்குத் தன் வேட்கையை வெளிப்படுத்துவதும், அதை நிறைவேற்றிக் கொள்வதும் அதிகாரத்தை ஏதோ ஒரு வடிவில் தன் மொழியில், உடலில், பாலிமையாகச் சேமித்துவைத்திருப்பவர்களுக்குமானது. அது அவர்களுக்குச் சிரமமானதொரு செயலாக இருப்பதில்லை. ஆனால், தன் தனித்ததொரு வேட்கையை உலகின் பெண்களுக்கு எல்லாம் பொதுவாக்கி, அதிகாரக்கட்டமைப்புகளைக் குலைக்கும் கடப்பாறைகளாய் மொழியை இறக்கித் தகர்ப்பது என்பது உண்மையிலே ஒரு களப்பணியைப் போன்றே ஈடுபாடும் உழைப்பும் கோரும் செயல். இதற்கு, அதிகார இயங்கியலை நன்கு கற்றுணர்ந்த தெளிவும், மொழியின் அதிகார அமைப்புகளை ஆராயும் தெளிவும் வேண்டியதாயிருக்கிறது. அனாரின், நீரோடை போன்ற மொழியும், சிக்கலற்ற படிம அசைவுகளும், சொற்கள் உதிர்ந்து பொலபொலவென கொட்டாமல் அல்லது அறுந்து தொங்காமல், கவிதையின் அழகோடு சமைவதும், அதே போல ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டிருக்கும் கவிதைக் கட்டிடத்தின் செங்கற்களை உதிர்த்து புதிய ஒழுங்கைத் தைப்பதும் என இவரது செயலாக்கம் விரிகிறது. இந்த அனுபவத்தை உணர, நான் இங்கே எடுத்துக்காட்டும் சில கவிதைகளோடு முடிந்து விடாமல், அவரது முழுத்தொகுதியையும் வாசிக்கும் அனுபவத்திற்கும் அவகாசத்திற்கும் உங்களை அனுமதிக்கும் போது தான் வாய்க்கும் என்று நம்புகிறேன்.


தணல் நதி


மழைக்கு முன்னதாக
தூது வரும் குளிர்ந்த காற்றலைகளாய்
மெருகுடன் நெகிழ்ந்தன தாபங்கள்
விசித்திரமாய்
விசமத்துடன் உதட்டைக் கடித்து
நெளியும் இவ்விரவில்
ஓர் முத்தத்தைப் பற்ற வை
எரிந்து போகட்டும் என் உயிர்க்காடு
கண்ணீராய் காய்த்துக் கொட்டும்
இமைக்கந்துகளில்
தீயும் இக்கனவின் துயர்கள்
மேகங்களை
ஓட்டிச் செல்கின்ற காற்றிலெல்லாம்
இன்று இதே கசப்பும்
கசகசப்பும்
இந்தப் பேரலைகள்
இரைந்து கொண்டே இருக்குமோ
கடக்கவே முடியாமல்
என் முன் தொங்குகின்றது
தணல் நதியாய் இரவு.


எனக்குக் கவிதை முகம்


எல்லா மயக்கங்களுடனும்
மெல்ல
அதிர்கிறது இசை
படிக்கட்டுகளில் வழிந்தோடும் நீர்ச்சொரியலாய்
வறண்ட சுண்ணாம்புப்
பாதைகளில் மேற்கிளம்பும்
வெண்புழுதியில் மணக்கிறது
அவன் குதிரைக் குளம்பொலி
சாம்ராஜ்யங்களின்
அசைக்கமுடியாதக் கற்றூண்களை
பிடுங்கி ஒரு கையிலும்
போர்களை வெற்றி கொண்ட
வாள் மறு கையிலுமாய்
அதோ வருகிறான் மாவீரன்
இருபுறமும் பசுமரங்கள் மூடியிருக்க
மூடுபனி தழுவி நிற்கும்
சிறுத்து ஒடுங்கிய பாதையில்
என் கனவின் உள் புகுந்து
தாவுகின்றன இரண்டு முயல்கள்
விடிந்தும் விடியாத
இக்காலைக் குளிரில்
முகை வெடித்த பூக்களின் காதுகளுக்குள்
கோள் மூட்டுகின்றது
பெயர் தெரியா ஒரு காட்டுப்பூச்சி
அதனாலென்ன
எனக்குத் தெரியும்
அவன் வாள் உறைக்குள்
கனவை நிரப்புவது எப்படியென்று
எனக்குத் தெரியும்
மகத்துவம் மிகுந்த இசை
தீர்வதேயில்லை
நான் பாடல்
எனக்குக் கவிதை முகம்

இக்கவிதையில் தான் அனார், ஆணாதிக்க மனநிலையை வெல்லுகிறார். ‘எனக்குத்தெரியும் அவன் வாள் உறைக்குள் கனவை நிரப்புவது எப்படியென்று’ என்ற வரி வாள் உறைகள் மற்றும் கனவுகளின் முரணை நம் நினைவில் தீப்பிழம்பாய் எரியச்செய்கிறது. அதுமட்டுமன்றி, இவ்வரிகள் பெண்ணின் அடுத்தக்கட்ட இருப்பை நியாயப்படுத்துவது. ஆணின் சூழ்ச்சிகளை மெத்த அறிந்தப் பெண்ணின் மனநிலையை விரித்துக்காட்டும் வரிகளும் கூட. பொதுவாகவே இம்மாதிரியான கவிதைகளை எல்லா தற்காலப் பெண் கவிஞர்களின் மையக்கவிதையாகவும் நாம் காண முடிகிறது. ஆணின் உளவியலுக்கு பயிற்றுவிக்கப்படும் சூழ்ச்சிகளை, அறிதலைப் பெண் தன் விடுதலையின் முகாந்திரமாக்கும் கவிதைகள், சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கும் வரையறைகளுக்கும் இணங்கிவிட்ட சமூகத்தின் பிற பெண்களிடமிருந்து தன்னை உயர்த்திக்கொண்ட, வலிமைப்படுத்திக் கொண்ட கவிப்பெண்களின் அடையாளத்தை இவ்வெழுத்தில் பெறமுடிகிறது.

’வித்தைகள் நிகழ்த்தும் கடல்’, ‘குறிஞ்சியின் தலைவி’, மற்றும் ‘எல்லை வேலிகள்’ ஆகிய கவிதைகள் பெண்ணின் வேட்கையை கத்தி போல நெஞ்சில் இறக்குபவை. இதுவரையிலுமான உலகச் செவ்விலக்கியங்களிலும் கூட பதிவாயிருக்கும் கதாபாத்திரங்களின் வேட்கையை, அதற்கான தேவையை, வெளிப்பாடு நிகழ்த்தும் சமூக அசைவைப் பேசுபொருளாக்காமலேயே இலக்கிய நுகர்ச்சி என்பது கையாளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெண்களின் பிரதிகள் தம் பாலியல் வேட்கையை, இச்சையை, தேவையை கவிதை எனும் உரத்த மொழியில் வெளிப்படுத்துவது என்பது இன்னும் விவாதப் பொருளாகவே இல்லை என்றே சொல்லலாம். எல்லாவற்றிற்கும் மேல், அனார் தன் வேட்கையை வெளிப்படுத்தும் அழகும் அர்த்தமும் சிதறாத மொழி, நேரடியாக வாசகர்களை கவிதையின் வெளிக்குள்ளேயே இழுத்துச்செல்லும். மூன்றாவது தொகுதியான, ‘உடல் பச்சை வானம்’ திணைவெளிகளை ஆளும் பெண்ணின் மனத்தை கவிதையாக்கியிருக்கிறது. குறிஞ்சி, மருதம், கடல் என வேறு வேறு நிலவெளிகளில் தன் குரலை உரக்கக் கூவுகிறது. அடர்த்தியான மொழியும், மேன்மையான கற்பனையும் நம்மை உய்விக்க உதவும். அருகிருக்கும் உடலைப் போற்றவும் உதவும். மூன்று கவிதைகளைத் தந்திருக்கிறேன், அதன் அடுத்தடுத்த தீவிரத்தை வாசகர்கள் பெறுவதற்காக.


வித்தைகள் நிகழ்த்தும் கடல்

மயங்கி மயங்கிப் பொங்கும் கடல்
மெளனமாகவும் உரத்தும் பாய்கின்றது
மிரண்டு தெறித்தோடும் குதிரைகளென
அலைகள் துரத்தி வருகின்றன
உயரப்பறக்கிறது நுரைப்பறவை
சம்மணமிட்டு உயிர் இரையும் பாற்கடலை
உன் கண்களால் திருப்பிவிட எத்தனிக்கிறாய்
மாபெரும் கடலை
கண்கள் சவாலுக்கு இழுக்கின்றன
நினைவு வரைபடங்களின் வழிகளில்
ஏதோ ஓர் புதிர் விரைகின்றது
எதுவுமே நிகழமுடியாத இருட்டில்
யுத்தம் தொடங்கிவிட்டிருந்தது
நீ பாறைகளில் தெறித்தாய்
பாசியைத் தழுவினாய்
முழுவதுமான இழப்பிலும்
முழுவதுமான வெற்றியிலும் கடல்
கொந்தளிப்பது போல
ஓடிப்போய் கரையில் நின்று
வியர்த்து வழியும் காற்றை
மாயப்பொடியாக்கித் தூவினாய்
சேகரித்து வந்த நூறு பிறைகளையும்
கடலுக்குள் வீசி எறிகின்றேன்
எல்லாம் மறைகின்றன
கண்ணில் படாத ஒரு சாகச நிழலில்
ஸ்தம்பித்துப் போயிருந்த கடலில்
சிறு துண்டை வெட்டி உன் வாயுள் வைக்கிறேன்
நீ ‘பூப் போல’ என்கிறாய்
………………….
உப்புச் சுவையாய் இரு உடல்கள் மாறினோம்
அலைகளை எழுப்பிஎழுப்பிக் கடல் ஆகினோம்



குறிஞ்சியின் தலைவி


இரண்டு குன்றுகள்
அல்லது தளும்பும் மலைகள் தோன்ற
முலைகளுக்கு மேல் உயர்ந்து
அவள் முகம் சூரியனாக தகதகத்தது
இரண்டு விலா எலும்புகளால் படைக்கப்பட்டவள்
பச்சிலை வாடைவீசும் தேகத்தால்
இச்சையெனப் பெருக்கெடுத்தோடும்
மலையாற்றைப் பொன்னாக்குகிறாள்
வேட்டையின் இரத்தவீச்சத்தை உணர்ந்து
மலைச்சரிவின் பருந்துகள் தாழ்ந்து பறக்கின்றன
மரக்குற்றிகளால் உயர்த்திக் கட்டப்பட்ட
குடில்களில் படர்ந்த மிளகுப்பற்றை
மணம் கசியும் கறுவாச்செடி
கோப்பி பழங்களும் சிவந்திருந்தன
நடுகைக் காலத்தில் தானியவிதைகளை வீசுகிறாள்
சுட்ட கிழங்கின் மணத்தோடு
பறைகளுடன் மகுடிகளும் சேர்ந்து ஒலியெழுப்ப
ஆரம்பமாகின்றது சடங்கு
களிவெறி…கள் சுகம்…
மூட்டிய நெருப்பைச் சுற்றி வழிபாடு தொடங்கிற்று
வளர்ப்பு நாய்களும்…. பெட்டிப்பாம்புகளும்…
காத்துக்கிடக்கின்றன
மாய ஆவிகளை விரட்டி
பலிகொடுக்கும் விருந்துக்காக
தீர்ந்த கள்ளுச்சிரட்டைகளைத் தட்டி
விளையாடுகிற சிறுசுகள்
வாட்டிய சோளகக் கதிர்களை கடித்துத் தின்கின்றனர்
பிடிபட்டு வளையில் திமிறும் உடும்பை
கம்பினில் கட்டி… தீயிலிட்டு….
அதன் வெந்த இறைச்சியை மலைத்தேனில் தொட்டு
கணவன்மார்களுக்கு பரிமாறுகின்றாள் குறத்தி
தும்பி சிறகடிக்கும் கண்கள் விரித்து
இரவுச் சுரங்கத்தின் கறுப்புத்தங்கமென எழும்
தலைவியை மரியாதை செய்கின்றனர்
மலைத்தேன் அருந்தியவாறு இருப்பவளை
புணர்ச்சிக்கு அழைத்தவன் கூறுகின்றான்
‘போர் தேவதையின் கண்களாக உருண்ட
உன் முலைகளால்
குறிஞ்சி மலைகளையே அச்சுறுத்துகின்றாய்’
அவளது குரல்…. மலைகளில் சிதறி ஒலிக்கின்றது
’பெண் உடல் பூண்ட முழு இயற்கை நான்’
காற்றில் வசிப்பவன்
காலத்தைத் தோன்றச் செய்பவன்…
இன்றென்னைத் தீண்டலாம்


எல்லை வேலிகள்


எங்களுக்கிடையில்
இந்து மகா சமுத்திரம் இருந்தது
வழிநடையில் முகில் குவியல்கள்
எண்ணங்களின் குகைகள்…
அடுக்குகளாய் தீயெரியும் ஒளிக்காடு…
சூரியன் ஆட்சி முற்றிய வானம்
சந்திரன் ஆக்கிரமித்த சுரங்கப்பாதைகள்
வல்லரசுகளின் படையணிகள்
எல்லாம் இருந்தன
மலைகளை எல்லை வேலிகளாக
நாட்டியுள்ளனர்
காடுகள் நகர்ந்தபடி
எங்களைச் சுற்றி வளைத்து வழிமறிக்கின்றன
ஆனபோதிலும்
நான் அன்றவனை மூன்று முறை முத்தமிட்டேன்.


‘எல்லை வேலிகள்’ கவிதையை வாசிக்கும் போது, இந்துமகா சமுத்திரம், முகில் குவியல்கள், குகைகள், ஒளிக்காடு, வானம், சுரங்கப்பாதைகள், காடுகள் எல்லாம் அசைச்சித்திரங்களாகின்றனவா என்று பாருங்கள்!

நிறைவாக, எனக்கு மிகவும் பிடித்த கவிதையாக, ‘மண்புழுவின் இரவு’ கவிதையைச் சொல்லுவேன். இந்த உலகின் எந்த ஓர் உயிரிலும் தொக்கி நின்று அதன் குரலாக முழுமையும் நின்று ஒலித்து சவால் விடுக்கும் அனாரின் திறன் என்னை இக்கவிதையில் என்னையும் மண்புழுவாக்கியது!


மண்புழுவின் இரவு


மழை ஈரம் காயாத தார்வீதி
நிரம்பிய மாலை
இருள் அடர்ந்து இறுகி பிசாசுகளின் தோற்றங்களுடன்
மல்லாந்து கிடக்கும் மலைகளைக் கடந்து செல்கிறேன்
இருளின் இருளுக்குள்ளே
எவ்வளவு பிரகாசம் நீ
கூதல் காற்றுக் கற்றைகளில்
நாசியில் நன்னாரிவேர் மணக்க மணக்க
மிதந்து வருகின்றாய்
தூர அகன்ற வயல்களின் நடுவே
‘றபான்’ இசைக்கின்ற முதியவரின் கானலோவியம்
இரவை உடைக்கின்றது
மிருகங்களுக்குப் பயமூட்டுவதற்காக
நிறுத்தி வைக்கப்பட்ட வைக்கோற் பொம்மைகள்
அளவற்ற பயத்தில் தாமே நடுங்கிக் கொண்டு நிற்கின்றன
அடிபெருத்த விருட்சங்கள்
தம் கனத்த வாழ்நாளின் நெடுங்கதையை
இலைகளால் கீறும் காற்றை உராய்ந்து
கரும்புக்காட்டை நடுவகிடெனப் பிரிக்கும்
மணல்பாதையை எனக்கு முன் மஞ்சள்நிறப்பூனை
குறுக்கே பாய்ந்து கடக்கின்றது
நாடியில் அளவான மச்சமிருக்கும்
பெண்ணின் கீழ்உதடு பிறை நிலா
மிக அருகே பேரழகுடன் அந்நட்சத்திரம்
இந்தப்பொழுதை ஒரு பூக்கூடையாய் நிரப்பி
தூக்கி நடக்கின்றேன்
நீளமான நூலாய் தெரிகின்றது இரவு
நான் தனித்த மண்புழு
சிறுகச் சிறுக நீளுகின்றேன்
தொடர்ந்து நீளமான வெள்லை நூல் தெரியும் வரை


( கூடு - இலக்கியம் , ஜுன் 2011 )

http://koodu.thamizhstudio.com/thodargal_14_14.php

-------------------------------------------------------------------------------------------------------------