Saturday, 29 September 2012


மிதக்கும் வெண்ணிற இசை......
 -----------------------------------------------------------------------

- அனார்



ஒருவருடைய ஆன்மாவிற்குள் நுழைவதற்கு அறிவியல் கற்கை நெறிகளை பயின்று பாண்டித்தியம் அடைந்திருக்கத் தேவையில்லை. ஓர் இசையின்... கவிதையின்.... ஒளித்துவாரம் வழியாக எந்தவொரு உயிரின் ஆன்மாவிற்குள்ளும் நுழையலாம்... உயிரைத் தொட்டுத் திரும்பலாம் என்பது அனுபவத்தின் வழியாக நான் உணர்ந்த விடயம். புதிரான... அந்தரங்கமான... நுண்மையான... மிக மென்மையான செயற்பாடு இது.


அந்த ஒளியை சிலரின் கண்களில் பார்த்திருக்கிறேன்... சிலரின் சொற்களில் கேட்டிருக்கிறேன்.... மிகக் கணிசமான எழுத்தாளர்களின் படைப்புக்களில் கண்டிருக்கின்றேன். யாருடையதோ கனத்த மௌனத்திலும்.... எவருடையதோ இசையிலும்... அந்த ஒளியை உணர்ந்திருக்கிறேன். இசையின் ஒளியோடு வாழ்ந்து வருகின்ற நண்பர் ஷாஜியை அண்மையில் என் வீட்டில் சந்தித்தேன்.



கவிதையின் ஒளியால் இசையின் ஒளியை உணர முடிமென்பதால் இந்த சந்திப்பிற்கு அர்த்தமும் அழகும் மிகை இல்லாமல் இருந்தது. விளக்குகளை அணைத்துவிட்ட வீடு முழுக்க அனைவரின் நடுவேயும் ஷாஜியின் இசைஒளி மாத்திரமே ஒளிர்ந்து கொண்டிருந்தது. அன்றைய இரவின் பிரகாசத்தில்,  இசையின் நிழலில் கண்ணீர் துளிர்திருந்தது. ஜன்னல் கண்ணாடிகளில்... வெப்பத்தின் ஆவி படிந்திருந்தது. ஷாஜி கஸல், மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழிப்பாடல்களை பாடிக்காட்டுவதும்... கவிதைகளை மொழிபெயர்த்துச் சொன்னபடியும் உரையாடிக் கொண்டிருந்தார்.

இசையைப் பேசுவதன் இன்பமும்... இசையைப் பாடுவதன் துயரமும்... ஒன்றையொன்று முந்திக்கொண்டிருந்தன.

ஈர மணல்வெளியும்
கடல் அலைகளும்
சாம்பல் மேகங்களும்
தனியே கரையில் கிடக்கும் தோணியும்
உப்புக் கரிக்கும் காற்றும்
உணர்வைக் கருக்கும் காதலும்
நீலமும் வெண்மையும்
குன்றுகளும் நீண்ட பாதையும்
பொடுபொடுத்த மழையும் தனித் பனைமரமும்
குறுக்கே ஓடுகின்ற மயில்களும்
காதுகள் முளைத்துக் கேட்டிருந்தன

அன்று வெயிலும் இருந்தது
மழையும் இருந்தது
அபூர்வமான நாள்

இசையை நேசிப்பதானது.... இசைப்பவர்களின் குரல்களை, இசைபற்றி விபரிப்பவர்களை, இசைக்கருவியின் தனித்த ஓசைகளை என விரிந்து... வாழ்வே, இயற்கையே இசைதான் என வியக்கிறேன்.

இசை பற்றிய அறிவுபூர்வமான தெளிவுகளை அடைவதற்கும், நுணுக்கமான ரசனைக்குரிய வழிமுறைகளை நெருங்குவதற்கும் தமிழில் ஷாஜியின் கட்டுரைகள் உதவுகின்றன. அவருடைய கட்டுரைகள் இலக்கியப் படைப்பினைப் போன்றே முழுமையான தாக்கத்தை தருகின்றவை.

இதுவரை மூன்று தொகுப்புகள் தமிழுக்கு கிடைத்திருக்கின்றன. ரசனையாக மட்டுமன்றி பெரும் அனுபவமாக விரிந்துசெல்லும் திறன் மிக்க கட்டுரைகள் மூன்று தொகுப்புகளிலும் இருக்கின்றன. ஷாஜியின் மேன்மையான சிந்தனைகளோடு, ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும்  அவருடைய ஒவ்வொரு எழுத்துக்களிலும் காணலாம்.


அன்பின் மையத்தில் விலகாத புள்ளியாக... அவருடைய பணி இருக்கின்றது. உண்மையில் அனைத்தையும் அன்புதான் தொடங்கி வைக்கின்றது... இசை அதனை அழகாக்கி நிலைக்கச் செய்கின்றது.




Friday, 7 September 2012

அமைதியான தீச்சுடர் கவிஞர். சுகுமாரன்
--------------------------------------------------------------------------------------------------------

- அனார்



கவிஞர். சுகுமாரன் அவர்கள் மொழிபெயர்த்த அயல்மொழிச் சிறுகதைகள் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். 'லயோலா என்ற பெரும்பாம்பின் கதை' - இன்நூலின் அட்டை வடிவமைப்பைக் கண்டு ,கடந்த ஜனவரி சென்னை புத்தகச்சந்தையில் காலச்சுவடு அரங்கில் வாங்கியிருந்தேன். மிக நேர்த்தியான, இலக்கிய நூலுக்குரிய அட்டை வடிவமைப்புடன் இச்சிறுகதைத் தொகுப்பு இருந்தது. இவ்வளவு அழகான வடிவமைப்புடன் அமைந்த இந்நூலுக்குள் உள்ள சிறுதைகள்.... தமிழுக்கு அத்தனை புதியதாக எனக்குத் தோன்றுகிறது. 


விருந்து - என்ற கதையைப் படித்தபொழுது ஒரு கணம் முழுதுமாக நொறுங்கிப் போனேன். 

மேஜை மேஜை தான், மிகயீலின் இதயம் நின்றுவிட்டது, கருங்குறிப்புகள்...., இப்படியான கதைகளின் ஆழம்பற்றி சொல்வதற்கு முடியாதுள்ளது. 

உனக்கு விருப்பமென்றால் என்னை அழை - இக்கதையின் இயல்பான மொழி, அந்த மனிதர்கள், காதல், மனம்... கதை நிகழுவதை கண்ணாடியில் பார்ப்பதுபோல இருந்தது. அந்தக் காட்சிகளை மொழியில் வரைந்து தந்துள்ளனர். 

வீடு திரும்புதல் - கதைபோன்றதொரு கதையை எழுத வேண்டும்போல் எனக்குத் தோண்றியது. காலச்சுவடுக்கு நன்றி. 

சுகுமாரன் அவர்களின் இலக்கியப் பணிகள் பரந்து விரிந்த ஒன்று. இவ்விடத்தில் அவரது இலக்கிய வாழ்க்கைப் பணிகள் தொடர்பாக முழுமையாக எழுத இயலாது . இச்சிறுகதை நூலுக்கு முன்பு அவருடைய இன்னொரு மொழி பெயர்ப்பு நூலை நான் பல நூறு முறைகள் வாசித்திருக்கிறேன். என்றும் என்னுடைய மற்றொரு அங்கம் போன்றிருந்த அந்த நூலின் பெயர் 'பாப்போல நெரூதா கவிதைகள்' - உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருந்தது. 


சாம்பல் நிற அட்டை வடிவமைப்பில் இருந்த அந்த நூல் என்னுடைய தலையணைக்கருகில் எப்போதும் இருந்தது. சுகுமாரன் அவர்களது மனவெளி கவிதை உலகம் மிக நுண்மையாது. பன்முகம் வாய்ந்ததும், வெளிப்படையானதும் ஆகும். அதிக தடவைகள் அவருடன் பேசியிருந்தாலும் சென்ற ஜனவரியில் தான் நேரில் பேசுவதற்கு பல சந்தர்ப்பங்கள் வாய்த்தன. அந்த உரையாடல்கள் மிகுந்த பயனுள்ளவை. என்னுடைய எழுத்துக்களுக்கு நன்மைகள் சேர்ப்பவை. 

சுகுமாரன் அவர்களது தளும்பாத இலக்கியப் பணிகள்... மௌனத்திலும், அமைதியிலும் உருவாகின்றவை. ஒரு தீச்சுடரைப்போல் சத்தமின்றி ஒளிர்பவை. அந்த உயிர் எரிதல்.... அவருடைய ஒவ்வொரு எழுத்துக்களினதும் வெளிச்சம். 

நவீன இலக்கிய எழுத்து வடிவங்களை, அவருடைய தொகுப்புகள் அடையாளப்படுத்துகின்றன. அவரது கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்கள் அனைத்தும் இதற்கு சாட்சியாகும். 

வேறு என்ன சொல்வது? 

நான் எப்படி பாராட்டுவது ? 



Wednesday, 25 July 2012

கொனாரக் சில நினைவுகள்.......
-------------------------------------------------------------------------------------------------







ஒரிசா சென்றேபோது கொனாரக் எனும் கோயிலை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார்கள். இந்தப்பயணத்தில் பல முக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒவ்வொன்றாக எழுதலாம் என நினைக்கிறேன். பெரும் பெண் கவிஞரான மனோரமா பிஷ்வால் அவர்களைச் சந்தித்ததும், பழம் பெரும் கவிஞரான சீதாகாந் மஹாபத்தராவுடன் இருநாள் இரயில் பயணம் செய்ததும் மறக்கமுடியாத நிகழ்வுகளாகும். சார்க் நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பிற மானிநிலங்களிலிருந்தும் பல கவிஞர்ள் கலந்துகொண்ட சிறப்பான ஒரு கலை நிகழ்வு.






சூரியக் கோயிலைப் பார்த்தபிறகு எழுதிய கவிதை இது:


சூரியக்கோயில்
_______________


முதுகினில் இறக்கை முளைத்த வனதேவதை
மெழுகுபோன்று முளைத்துவருகின்ற
தன் ஒற்றைக் கொம்புடன் தலையை நிமிர்த்திப் பார்க்கிறாள்

‘கொனாரக்’ அதிசயங்கள் விளையும் நிலம்

அளவற்ற வியப்புடன் ஸ்பரிசிக்கின்றாள்
அப்போது தொன்மையான அவளது ஆன்மா
கண்களில் எட்டி எட்டிப் பார்த்தது
சூரியக்கோயிலைத் தழுவி வீசும் ஆதிக்காற்றின் காதுகளுக்குள்
பேருணர்ச்சியைக் கூவினாள்
முதலும் கடைசியுமான வாழ்த்துகளைச்
சிற்பங்களுக்குச் செலுத்தினாள்

வசந்தகாலப் பனியில் உணர்வில் மூழ்கி
இன்னும் இறுகத் தழுவிக்கொண்டிருந்தன
இரண்டு பெண் சிற்பங்கள்

பிணைந்தது பிணைந்தவாறே கற்பனையிலிருக்கும்
திவ்யமான அந்தரங்க ஓசைகளைப் புதிதாய்க் கேட்டு
புலன்கள் பூரித்து நிரம்பிற்று
அமானுஸ்யப் பரிவாரங்கள் ஆட்சி செய்யும்
சுதந்திரசதுக்கத்தில்
கண் கோர்த்து... கைகோர்த்து...
கற்சிலைகள் பூரணத்தில் ததும்புகின்றன

செதுக்கப்பட்ட வடிவங்களில் ஒன்றில் விடுதலை
மற்றொன்றில் நித்யம் இன்னொன்றில் ஆற்றல்
தீர்க்கமாய், தெளிவாய் உயர்ந்து நிற்கிறது
சூரியக்கோயில்

வலப்புறமாக இரு யானைகளின் முதுகினில்
சிம்மங்கள் பூட்டிய தேர்
கம்பீரமாகக் காவல் புரிகின்றது
பனியில் உயிர் குளிர்ந்து
குதூகலத்தை அபிநயித்து
அருகருகே ஆதிச் சம்பாசணைகள் புரிகின்றன சிற்பங்கள்

உவகையும் சல்லாபமும் மிகுந்திருந்த
அபூர்வமான அனுபவம்
புராதனக் கலை மேன்மைகள் பொதிந்த அவ்விடம்
சூரியக் கிரணங்களில் முயங்கிப் பொலிகின்றது
அதி இயற்கையின் மாயக்கம்பளத்தில்
சிற்பங்களின் பொற்காலம் மறைவதேயில்லை

முதுகின் இறக்கையை உயர்த்தி மொய்க்கிறாள்
யாரும் ஏறாத கனவின் உச்சியை
அரூபமான பிரமாண்டத்தினுள்
கண்கூசும் புதையல்களைக் கண்டெடுக்கிறாள்

விலை மதிப்பற்ற அதிர்ஷ்டத்தை
பெரும் வல்லமையை... விடுதலையை...
தனது கனவின் மொழிகளில் விதைக்கின்றாள்

=

(அனார் – உடல் பச்சை வானம், காலச்சுவடு வெளியீடு)

_______________________________________________________________________________










இந்தியாவின் ஒரிஸ்ஸாவில் இருக்கும் சூரியக் கோயில் கொனாரக், இது கங்கைநதி தீரத்தில் அமைந்துள்ளது. இந்தக்கோயில் பலதடவைகள் படையெடுப்பால் சூறையாடப்பட்டு அதன் பல பாகங்கள் சிதிலமடைந்துவிட்டது. தவிர இயற்கையின் சீற்றத்தாலும் கடல் கொந்தளிப்பாலும் பாதிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இன்றைக்கும் பிரமாண்டமான அதிசயக் கலைவடிவமாக இக்கோயில் காணப்படுகின்றது.










பல வெளி நாட்டவர்களை ஈர்க்கின்ற அதன் கட்டடக்கலை அம்சங்கள் மிகச்சிறப்பு வாய்ந்தது. கலை நுட்பம் மிகுந்த சிற்பங்களும் வியப்படைய வைக்கின்றன. முதலாம் நரசிம்மதேவன் 13ம் நூற்றாண்டில் மிகவும் வித்தியாசமான முறையில் இதைக் கட்டினான். கற்கள் நடுவே இரும்புத்துண்டுகளின் இணைப்புக் கொடுத்துக்கட்டப்பட்டுள்ளது. சூரியன் ஏழு குதிரைகள் கொண்ட தேரில் பவனி வருகிறான். அந்தத் தேரின் 24 சக்கரங்களின் வேலைப்பாடு மனதைக்கவர்கின்றது. இந்த கோயிலில் விலங்குகள், பறவைகளின் சிலைகள் அதைத் தவிர பெண் சிற்பங்கள் எல்லாம் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. இக்கோயிலை யுனெஸ்கோ, உலகப் பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாத்து வருகின்றது.












Sunday, 24 June 2012

கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது விழா - 2012
-------------------------------------------------------------------------------------











மேலதிக தகவலுக்கு :

http://tamilliterarygarden.com/

Friday, 8 June 2012


என் அன்பு SLM
---------------------------------------------------------------------------------------------------



சிலந்தி அவ்வளவு மெல்லிய நூல் இழைகளால் தனக்கென ஒரு வலையைப் பின்னும். மறைப்புகள் இல்லாத கடினமில்லாத கண்ணாடி நூல் இழைகளால். அது தன்னளவில் மிக வலிமையான அழகான வலையாகவும் இருக்கும். 

SLM அவர்களின் ஆழ்ந்த அன்புவலை என்னைச்சுற்றிய கண்ணாடி இழைகளால் ஆனது. அவ்விழைகளால் எனது குடும்பமே பின்னப்பட்டிருக்கிறது. 

என்னுடைய வாழ்நாளில் மனநிறைவைத்தந்த அரிய தோழமைகளில் SLM அவர்களின் அன்பிற்கும் நட்பிற்கும் தனியொரு இடமும் மரியாதையும் உள்ளது. 

வாழ்வின் பண்புகளைப் புரிந்து கொள்வதன் வழியாக SLM மையும், SLM மைப் புரிந்துகொள்வதன் வழியாக வாழ்வின் பண்பாடுகளையும் புரிந்துகொண்டவள் நான். 

எனக்கு முன்பும் பின்னும் ஒரு பிசாசென தன் இரு தலைகளையும் விரித்து வாய்பிளந்து நிற்கிறது காலம். எனக்கு முன்னாலுள்ள பிசாசின் வாய்க்குள் விழுந்துவிட்டால், எனக்குத்தெரியும் அதன்பிறகு என்னுடைய கவிதைகள், கனவுகள், என்னுடைய மனிதர்கள், நட்பு, காதல் எதுவும் எஞ்சப்போவதில்லை. அதன்பிறகு நான் என்று எதுவுமில்லை. அந்தப்பிசாசின் தலை என்பக்கம் எப்போது திரும்புமோ நானறியேன். ஆனால் இப்பாதையில் ஓட்டமும் நடையுமாக என்னைக்கடந்துபோகும் ஓராயிரம் பேர்களை காண்கின்றேன். மிகச்சிலரை என் பாதையில் தடுத்து நிறுத்திக்கொள்கிறேன். பிறகெப்போதும் அவர்களை மறக்க விரும்பாதவளாக மாறிவிடுகின்றேன். 

வாழ்வு எவ்வளவு சவாலானது ! எத்தனை எளிமையானது ! புதிதாயும் அதிசயம் மிகுந்தும் இருப்பது ? இவற்றைக் காண்பதற்கும் உணர்வதற்கும் இதயத்தில் ஐந்தாவதாக மேலதிக அறையொன்று தேவைப்படுகின்றது. 

கலையுணர்ச்சி அன்பின் வலிமைதான் என்று நம்புகின்றவள் நான். அன்பு என்கின்ற அந்தப் பழைய பண்டம் இன்று யாருக்குத்தான் தேவை ?. அன்பே இயல்பாக, பழக்கமாக, நாகரீகமாக, உளவளமாக கொடுக்கவும் பெறவும் வேண்டிய கொடையாக நான் அறிந்து வைத்திருக்கிறேன். 

SLM ! 

நானும் நீங்களும் அண்மையில் உள்ள ஊர்களிலேயே வசிக்கின்றோம். ஆனால் உங்களை எனக்கு அறிமுகப்படுத்த ஆறேழு வருடங்களுக்குமுன் கனடாவிலிருந்து சேரன் வரவேண்டியிருந்தது. 

சேரனின் செல்போனிலிருந்துதான் முதல்முறையாக ஒரு இரவு என்னுடன் பேசினீர்கள். எனக்கு ஞாகமிருக்கிறது... 

“உன்னுடைய கவிதைகளை ரசிப்பதற்கு வேறொரு மனமும் அறிவும் வேணும்பிள்ள” என நீங்கள் கூறியது. 

என் அன்பு SLM ! இந்த வார்த்தைகளை இன்னும் நான் நம்புகின்றேன். பல சந்திப்புகளும் பயணங்களும் SLM என்ற கதைசொல்லியுடன் கழிந்திருக்கிறன. அவ்விதமான ஓர் இரவில் அஸீமும், நானும் நீங்களும் வீட்டுவாசலில் நிலவை நிறுத்தி வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தோம். ஊரே நிசப்தமான அன்று இரவு நீங்கள் சில பாடல்களைப் பாடிய படி பேசிக் கொண்டிருந்தீர்கள். அந்தப் பழைய பாடல்களை உண்மையில் மிக அருமையாகப் பாடினீர்கள். எனது விருப்பமாக ஸ்ரீனிவாசின் பாடல்களைப் பாடினீர்கள். ஆனால் அன்று தேர்ந்த பாடகனாய் மாறி “எசமான் பெத்த செல்வமே என் சின்ன எசமானே“ பாட்டை நீங்கள் பாடியபோது நிலவை மேகங்கள் மூடி சாம்பல் ஒளியுடன் மேகத்திடல்கள் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தன. பூங்காரமான நிலா வெளிச்சத்தில் அந்தப்பாடல் கண்ணீரென மிதந்தது. 

பனியும் ஒளியும் சொட்டிய மாவிலைகளின் கீழ் இன்றும் சில இரவுகளில் உங்கள் பாடல்கள் கேட்கின்றன. 

உங்களைப்பற்றிய நினைவுகள்..... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதம். ஊர்ப்பெண்களிடமும், ஆண்களிடமும், இளைஞர்களிடமும் இருப்பவை எண்ணிடலங்காதவை. எப்போதும் ரசிகர்களும், நண்பர்களும் தேன் கூட்டைச் சுற்றிய தேனீக்களைப்போல, உங்களைச்சுற்றியவாறு வருகின்றனர். சிரிப்பொலியும் லயித்துக்கிடக்கும் உங்கள் பேச்சும் பாரபட்சமின்றி இம்மண்ணில தொடர்கின்றது. 

மக்கத்துச்சால்வை ஹனீபா என்னும் புகழ்பெற்ற பெயரோ 

சிறுகதை எழுத்தாளர் 

சமூக அரசியல் விமர்சகர் என்ற முகமோ 

ஆற்றல் மிகுந்த மேடைப்பேச்சாளர் 

அற்புதமான கதைசொல்லி என்கின்ற படிமங்களோ அல்ல என் கண்களுக்குள் தோன்றுவது. 

விடிந்தும் விடியாத ஓர் அதிகாலையில் தேனும், பழங்களும் நிறைந்த உவப்பும் ருசியுமான உணவுவகைகளின் வாசனைகளோடு இரண்டு கைகளிலும் இரு பைகளுடன் என் வாசலில் கேட்கின்ற மிடுக்கான குரல். எனது மகன் உம்மாப்பா என அழைத்தபடி ஓடிவரும் ஆதரவும் பாசமும் அக்கறையும் நிறைந்த உருவம், 

SLM என்று நான் அழைக்கும் கனிவான உருவம்தான். 

சந்தேகமில்லாமல் அது என் அன்புத் தந்தையின் உருவம்தான்.


- அனார்